Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலம் உண்மையைக் காட்டும் கண்ணாடி

Featured Replies

காலம் உண்மையைக் காட்டும் கண்ணாடி
காலம் உண்மையைக் காட்டும் கண்ணாடி

அரசியல் பின்னணி எதுவுமின்றி, 1972 ஆம் ஆண்டின் அரசமைப் பின்கீழ் பிரதமர் பதவிக்கும், 1978 ஆம் ஆண்டின் அரசமைப்பின்கீழ் ஜனாதிபதிப் பதவிக்கும் நாட்டு மக்களது வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் இருவர் மட்டுமே. அவர்கள் ஆர்.பிரேமதாச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரே. பிரேமதாசவின் தந்தையார் எந்தவித அரசியல் தொடர்புகளும் இல்லாத, மத்திய கொழும்புப் பகுதியின் சாதாரணமானதொரு மனிதர். மைத்திரிபால சிறிசேனவின் தந்தையார் ஒரு விவசாயி. மைத்திரிபாலவின் இரத்த உருத்துள்ள உறவினர்கள் எவரும்கூட அரசியலில் ஈடுபட்டதில்லை. டட்லி சேனநாயக்கவுக்கு விசுவாசமாக உழைத்ததன் மூலமே பிரேமதாசவால்  தமது சொந்த இடமான வாழைத்தோட்டத்திலிருந்து அந்தவேளையில் கொள்ளுப் பிட்டியிலிருந்த ஐ.தே.கட்சியின் தலைமையகத்துக்குள் பிரவேசிக்க முடிந்தது. அதேபோன்று சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு விசுவாசம் காட்டியதன் மூலமே, மைத்திரிபால சிறிசேனவால் பொலனறுவையிலிருந்து வந்து டார்லி றோட்டில் இருந்த சுதந்திரக்கட்சித் தலைமையகத்துக்குள் காலடி வைக்க முடிந்தது. பிரேமதாச அரசியலில் ஆர்வம் காட்டிச் செயற்பட்டு வந்த  ஆரம்ப காலகட்டத்தில் அவர் மெலிந்த உடல் வாகு கொண்டவராக இருந்து வந்தார். தோற்றத்தில் கவர்ச்சி கொண்ட ஒருவராக இல்லாதிருந்த போதிலும், கவர்ச்சிகரமானதொரு பேச்சாளராக அவர் மக்கள் மத்தியில் கணிக்கப்பட்டார். தமது இந்தப் பேச்சாற்றல் காரணமாகவே அந்த வேளையில் டட்லி சேனநாயக்கவின் அவதானிப்புக்கு உட்பட்ட பிரேமதாச, படிப்படியாக ஐ.தே.கட்சிக் கூட்டங்களில் முக்கிய பேச்சாளராகி கட்சியில் முன்னிலை பெற முடிந்தது. 1988 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் பிரேமதாச வெற்றிபெற பக்கபலமாக அமைந்தது, அவரது தர்க்க ரீதியாக அரசியல் விவாதங்களிலும், பரப்புரைகளிலும், அவர் முன்வைத்த கருத்துக்கள் பொதுமக்களது மனங்களில் ஆழப்பதிய நேர்ந்தமையே ஆகும்.

அந்த வகையில் ஆரம்பத்தில் தமது பேச்சாற்றல் மூலம் மைத்திரிபால, சிறிமாவோவின் கவனத்தைக் கவர்ந்ததாகக் கூற இயலாவிட்டாலும், தமது விசுவாசமான பணிமூலம் சிறிமாவோவின் கவனத்தைக் கவர்ந்து சுதந்திரக் கட்சியில் படிப்படியாக அவரால் முன் னிலை பெறமுடிந்ததெனக் கூறுவதில் தப்பேதுமில்லை. ஆயினும், கடந்த ஜனாதிபதித் தேர்தல் வேளையில் அவர் பொதுவேட்பாளராக நியமனம் பெற்றதையடுத்து மகிந்த தரப்பினர்கள் முன்னெடுத்த நியாயமற்ற செயற்பாடுகளை, பக்கச்சார்பான அரசியல் நடவடிக்கைகளை தமது அனுபவம் காரணமாக வாய்த்த திறமையை வெளிப்படுத்தி, நாட்டு மக்களது கவனத்துக்குப் புட்டுப்புட்டு வைத்தமையும், அவரது தேர்தல் வெற்றிக்கு மிகப்பெரியதொரு பக்கத்துணையாக அமைந்ததெனலாம்.

அந்த வகையில், காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவுக்கும், இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே குணவியல்பு ரீதியில் நெருங்கிய ஒற்றுமை உண்டு. இதனாலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் சஜித் பிரேமதாச உரையாற்றிய வேளைகளில் மைத்திரிபால எனது தந்தையாரைப் போன்றதொரு ஆடம்பரமற்ற மனிதரெனக் குறிப்பிட்டு வந்திருந்தார்.

""ஊடகவியலாளர்கள் காணாமற்போகச் செய்யப்படும் கலாசாரத்தை நான் தடுத்து நிறுத் தியுள்ளேன். அதேவேளை, என்னை நீங்கள் அரசியல் ரீதியில் காணாமற்போகச் செய்து விடவேண்டாம்'', என ஜனாதிபதி மைத்திரிபால அண்மையில் பத்திரிகை ஊடகவியலாளர்களது கூட்டமொன்றில் கருத்து வெளிப்படுத்தியிருந்தார். அதேபோன்று தாம் படுகொலை செய்யப்படுவதற்கு முன்தினம் தமது கடைசிக்கூட்ட உரையில் ""என்னை வேண்டுமானால் கொலை செய்யுங்கள். ஆனால் நான் மிகுந்த சிரமப்பட்டு உருவாக்கிக் கொண்டுள்ள எனது மதிப்பு மரியாதையைக் கெடுத்து விடாதீர்கள்'' என கண்களில் நீர் பனிக்க பிரேமதாச வேண்டிக்கொண்டார்.  அந்தவகையில் பிரேமதாச மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால ஆகிய இருவரும் தத்தமது கெளரவம்  குறித்து அதீத அக்கறை காட்டியமை தெளிவாகப் புலப்படுகிறது. அந்தவேளையில் பிரேமதாசவை பத்திரிகை ஊடகங்கள் கடுமையாகத் தாக்கி விமர்சித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. அதே சமயம் பத்திரிகை ஊடகங்கள் தம்மைக் கடுமையாக விமர்சிப்பதைப் பொறுத்துக் கொள்ள இயலாது, ""பத்திரிகை ஊடகங்கள் என்னை அரசியலில் இருந்து அகற்றச் சதி செய்கின்றன. நான் அரசியல் பின்னணி கொண்டிராததாலேயே என்னையும் எனது குடும்பத்தினரையும் பத்திரிகைகள் தாக்கி விமர்சிக்கின்றனபோலும். அதன்மூலம் என்னை அரசியலில் இருந்து அகற்றிவிட இயலாது. நான் பிரபல்யமில்லாததொரு குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வந்தவன். ஆதலால் என்னால் எத்தகைய விமர்சனங்களையும் தாங்கிக் கொள்ள இயலும். பத்திரிகைகளின் விமர்சனங்கள் மேன்மேலும் எனது சக்தியை அதிகரிக்க வைக்கும்'' என்று பிரேமதாச பத்தி ரிகைகளுக்குச் சவால்விடவும் பின்னிற்கவில்லை.

பிரேமதாச ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலகட்டத்தில் இளைஞர், யுவதிகள் காணாமற் போகும் செய்திகள் தினமும் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டன. அவற்றை அரசே திட்டமிட்டு மேற்கொள்வதாகவும் பத்திரிகைகள் விமர்சித்தன. இராணுவ உயர்மட்ட அதிகாரி டென்சில் கொப்பேகடுவ வடபகுதியில் வைத்து விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டபோதிலும், அந்தப் படுகொலைச் சம்பவத்தி லும், கடற்படைத் தளபதி கிளான்சி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் அரசின் பின்னணிக் கரங்கள்  இருப்பதாக பத்திரிகைகள் சந்தேகம் வெளியிட்டிருந்தன. கடைசியில் அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் படுகொலையிலும் அரசுக்குத் தொடர்பு  இருப்பதாகப் பத்திரிகைகள் விமர்சித்திருந்தன. இவை யாவும் அரசின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி பிரேமதாசவின் கெளரவத்தைச் சீர்குலைப்பதாகவே கொள்ளப்பட்டன.

அவை மட்டுமன்றி, சுங்கத் திணைக்களத்தால் வரி விதிவிலக்கின் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட சொகுசுக் கட்டிலில் பிரேமதாச படுத்துறங்குவதாக  பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டு பிரேமதாசவுக்கு அவமரியாதை ஏற்படுத்தி வந்தன. ஆனால் பிரேமதாச படுகொலை செய்யப்பட்டதன்  பின்னரே, உண்மையில் அவர் எத்தகைய ஆடம்பரமற்ற வாழ்க்கை முறையை மேற்கொண்டிருந்தார் என்பதைப் பொதுமக்கள் அவரது "சுவரிதய' வீட்டில் நேரில் கண்டு உணர்ந்து கொண்டனர். பிரேமதாச தமது ஜனாதிபதிப் பதவியைப் பயன்படுத்தி சுகபோக வாழ்க்கை மேற்கொள்வதாகவும், நாடாளுமன்றத்தில் பேயாட்டம் போடுவதாகவும் கடுமையாக விமர்சித்து, அவரது நற்பெயருக்கு முடிந்த அளவுக்குக் களங்கம் கற்பிக்கும் விதத்தில் அந்தவேளையில் பத்திரிகைகள் திட்டமிட்டுச் செயற்பட்டன.

இவ்விதம் பிரேமதாச மீது குற்றம் சுமத்தி விமர்சித்த பத்திரிகைகள், மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக  வலய ஊழியர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில்  பொலிஸாரின் துப்பாக்கிப்பிரயோகத்தில் இளைஞரொருவர் உயிரிழந்த செய்திக்கு முக்கியத்துவம் வழங்காது அதனைப் பத்திரிகையின் ஒரு மூலையில் சாதாரண செய்தியொன்றாகக் காட்டிப் பிரசுரித்திருந்தன. 

பிரேமதாசவின் மகன் சஜித் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்திய பத்திரிகைகள், மகிந்தவின் மகன் நாமல், சட்டக்கல்லூரிப் பரீட்சை எழுதிய விதம் குறித்து ஒரு வசனமேனும் எழுதியதில்லை. மகிந்தவின் மற்றொரு மகனான யோஷித, கடற்படையில் இணைந்த கையோடு வெளிநாட்டுப் பயிற்சிக்காக வெளிநாடு சென்றமை குறித்து ஒரு வசனமேனும்  எழுதியதில்லை. மகிந்தவின் இளைய மகனது சற்றலைற் விவகாரம் குறித்து எதுவும் எழுதியதில்லை. பிரேமதாசவின் மனைவி ஹேமா பாஸ்கெட் பந்து விளையாடியமை குறித்து பெரிதுபடுத்தி விமர்சித்த பத்திரிகைகள் மகிந்தவின் மனைவி ஷிராந்தியின் செயற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியதில்லை. மகிந்தவின் வீழ்ச்சிக்குப் பின்னரே பத்திரிகைகள் மீண்டும் இத்தகைய விமர்சனங்களை மேற்கொள்ள ஆரம்பித்தன. மகிந்த பரம்பரை ரீதியாக அரசியலுக்கு வந்தவர் என்பதே இதற்கான காரணம். ஹம்பாந்தோட்டையில் பிரபல குடும்பத்தைச் சேர்ந்தவரென்பதால் அந்தக் காலம் முதலே பத்திரிகை உரிமையாளர்களது நண்பராக மகிந்த இருந்தமையே அவரோ அவரது குடும்பத்தினரோ பத்திரிகைகளின் விமர்சனத்துக்கு உட்படாது தப்பித்துக் கொண்டமைக்கான காரணமாகும். பிரேமதாச அத்தகைய பிரபல்யமான குடும்பத்தைச் சேர்ந்தவரல்ல. 

இன்றைய ஜனாதிபதியான மைத்திரிபாலகூட அத்தகைய குடும்பப் பின்னணி கொண்டவரே. ஜனாதிபதி மாளிகையில் குடியேறாமல் முன்னாள் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க வசித்த வீட்டை மைத்திரி புனரமைத்து தாம் அங்கு வசிக்கத் தீர்மானித்தபோது, அதற்காகச் செலவிடப்படவுள்ள பணத்தொகை குறித்துக் கணக்குக் காட்டி விமர்சித்த பத்திரிகைகள், முன்னர் மகிந்த தம்மிஷ்டப்படி ஜனாதிபதி மாளிகையைப் புனரமைத்த வேளையிலும், அலரிமாளிகையில் கோடிக்கணக்கான பணச் செலவில் புதிய கட்டடங்களை உருவாக்கிய வேளையிலும் தமக்கு அவை பற்றி எதுவுமே தெரியாது என்ற விதத்தில் செயற்பட்டன.

தேர்தலில் தோல்வியுற்ற சுதந்திரக் கட்சி வேட்பாளர்கள் பலரை தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துள் இணைத்துக்கொள்ள மைத்திரிபால எடுத்த முடிவை ஜனநாயக விரோதச் செயற்பாடென விமர்சித்த இந்தப் பத்திரிகைகள், 2004ஆம் ஆண்டின் பொதுத் தேர்தல் வேளையில் அமெரிக்காவில் இருந்த டலஸ் மற்றும் பசில் ராஜபக்சவை தேசியப்பட்டியலின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கிய மகிந்தவின் செயற்பாட்டை விமர்சிப்பதைத் தவிர்த்துக் கொண்டன. தேர்தலில் வெற்றியீட்டிய சரத்பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மகிந்த பறித்த போது இந்தப் பத்திரிகைகள் அது தொடர்பாக ஓர் ஆசிரிய தலையங்கம் தானும் எழுதத் தவறின.

மகிந்த கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து அலரிமாளிகையை முற்றுமுழுதாக மாற்றிய மைத்து நவீனப்படுத்தியதை, நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள முடிந்தது, மகிந்த ஜனாதி பதித் தேர்தலில் தோல்விகண்டு வெளியேறியதையடுத்து ரணில் அலரி மாளிகைக்குள் ஊடகவியலாளர்களை அனுமதித்த வேளையிலேயே ஆகும். மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் அரசின் பிரபலஸ்தராகவும், சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவுமிருந்த மைத்திரிபாலவை அந்தவேளையில் பத்திரிகைகள் நடத்திய விதத்துக்கும், இன்று நடத்தும் விதத்துக்கும் வேறுபாடு இல்லையெனக் கூறி விட இயலாது.

"ஏன் என்னை இவ்வளவு தூரம் விமர்சிக்கின்றீர்கள்? என்னைப் போன்ற அமைதியான மனிதரை இவ்விதம் விமர்சித்து ஊறுபடுத்த வேண்டாம். பின்னொரு சமயம் அதனை நீங்கள் உணர்வீர்கள்'' என மைத்திரிபால தம்மைச் சந்தித்த ஊடக பிரதானிகளிடம் மனவேதனையோடு தெரிவித்திருந்தார். மைத்திரிபாலவின் குறித்த கருத்தின் பொருளடக்கம் பிரேமதாசவின் கடைசிக் கருத்து வெளிப்பாடான என்னை வேண்டுமானால்  கொல்லுங்கள். ஆனால் நான் மிகுந்த சிரமத்துடன் உருவாக்கிக் கொண்ட எனது கெளரவத்தை அழித்தொழித்து விடாதீர்கள் என்ற வாக்கியங்களை அர்த்தப்படுத்தும் ஒன்றாகும்.

பிரேமதாச படுகாலை செய்யப்பட்டதன் பின்னர், குறிப்பிட்டதொரு கால இடைவெளிக் குப் பின்னர், பிரேமதாசவை முன்னர் கடுமையாக விமர்சித்து எழுதிய ஊடகவியலாளரொருவர் ஒருசமயம் சஜித் பிரேமதாசவைச் சந்திக்க நேர்ந்தது. "நாங்கள் உங்களது தந்தையார் பிரேமதாசவைக் கடுமையாகத் தாக்கி விமர்சித்தமை பெருந் தவறானதொன்று. அவர் போன்ற அரசுத் தலைவரொருவர் இனி ஒரு போதும் தோன்றப்போவதில்லை'' என்று அந்த ஊடகவியலாளர் சஜித்திடம் வருத்தப்பட்டிருந் தார். அந்த வகையில் என்னைத் தாக்கி விமர்சித்து அரசியலில் நாசப்படுத்திவிட்டு பின்னர் அதற்காக நீங்கள் வருத்தப்படுவீர்கள் என இன்று மைத்திரிபாலவும் ஊடகங்களுக்கு சொல்லாமல் சொல்லி உணர்த்துகிறார் என்றே கருத வேண்டியுள்ளது. இதனாலேயே காலம் உண்மையைக் காட்டுமொரு கண்ணாடி என்று கற்றறிந்தோர் சொல்லி வைத்தனரோ தெரியவில்லை.

http://onlineuthayan.com/article/51

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.