Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஹங்கிப்* பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹங்கிப்* பெண்


ஹெலன் ஃபோர்ப்ஸ்

தமிழில் : கொற்றவை

சமயலறை கடிகாரத்தில் ஐந்து மணி அடித்தது. சிமெண்ட் தரை வேயப்பட்ட சலவையறையில், களைப்பாய் இருந்த அந்த சலவைக்காரப் பெண் தன் தோள்களை வளைத்து, உடம்பை முறுக்கி எழுந்தாள், துணிகள் மீது தண்ணீர் தெளித்து வழக்கமான தனது பணியோடு அன்றைய நாளையும் தொடங்கினாள். கடைசி ஈரத் துணியை மடித்து துணிக் கூடைக்குள் வைத்து அடுக்கி முடித்ததும் ஒரு அகலமான துருக்கித் துண்டால் கூடையை மூடி மேஜையின் கீழ் தள்ளிவிட்டு, மேல்மாடிக்குச் சென்றாள்.

அன்றைய தினக் கூலியைக் கொடுக்க திருமதி. அட்வுட் காத்திருந்தார்; சிறந்த வீட்டுப் பராமரிப்பாளரான அவர் தான் நியமித்த ஒவ்வொரு பணியாளருக்கும் தன் கையால் கூலி கொடுப்பதை தன் கடமையாகக் கொண்டிருந்தார். பணியாளர்களின் நிலைமையையும், அவர்களின் தேவையையும் தெரிந்துகொள்வதற்கான ஒரு திறவுகோலாக, ஒரு அந்தரங்க தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பாக அவர் தைக் கருதினார்.

“இஸ்திரி போட நாளை நீ வந்துவிடுவாய்தானே ஆனி!” நம்பிக்கை தொனிக்கும் குரலில் கேட்டார்.

“ஆம்.” என்று சொல்லிக் கொண்டே திருமதி. அட்வுட்டின் நீளும் கைகளிலிருந்து பணத்தை பிடுங்கியது அந்தக் கட்டையான விரல்கள்.

அட்வுட்டின் புன்முறுவலைக் காணக்கூட அப்பெண் தனது கண்களை உயர்த்தவில்லை, அவளது தோழமையான தொனியை இவளது காதுகள் கேட்கவில்லை. அப்படியே திரும்பி வெடுக்கென ஓடுவதுபோல் ஓடினாள் அப்பெண். தனது தோள்களைச் சுற்றி சால்வையை போர்த்தி, கழுத்தைச் சுற்றி முடிச்சு போட்டாள், பிரிவுபச்சார வார்த்தைகள் ஏதும் சொல்லாமல் வீட்டின் பின் கதவைத் திறந்து பனிபடர்ந்த இரவுக்குள் நடந்து சென்றாள்.934746_10152570184935575_1968681438325238458_n

ஜன்னோலரம் நின்றபடி அந்த அசிங்கமான உருவம் குந்தி உட்கார்ந்து, குதித்து இறங்கி அந்த முட்டுச் சந்துக்குள் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தார் திருமதி அட்வுட். மழை நனைத்த புற்களின் மேல் பட்டு ஈரமாகி இருந்த அந்தப் பெண்மணியின் வெளுத்துப் போன அரைப்பாவாடையில் அவள் இனத்துக்கேயுறிய ஏதோ ஒரு உணர்ச்சியற்ற தன்மை வெளிப்பட்டது.

ஒரு அனுதாபப் பிணைப்பை ஏற்படுத்த முனைந்த திருமதி. அட்வுட்டின் அனைத்து முயற்சிகளையும் அந்த ஜந்து திணறடித்தது. பிரிட்ஜெட்டுகளும், மேகிக்களும், தங்களது எஜமானியின் ஆலோசனைகளால், அதனைத் தொடர்ந்த அவரது உதவிகளால் பலமுறை பயன் பெற்றுள்ளனர். ஆனால் ஆனி ஸோர்ஸா, இந்த மத்திய ஐரோப்பியப் பெண், இதுவரை அட்வுட் தன் அனுபவத்தில் கண்டிராதவளாய் இருந்தாள். இந்த உணர்ச்சியற்ற கொழுத்த ஜந்துவின் ஆழ் மனதைத் தொடுவது சாத்தியமற்றதாக இருந்தது, இந்த சுய-ஒழுங்கு இயந்திரம் திங்கள் செய்வாய்களில் தவறாமல் சமயலறைக் கதவின் வாசலில் டான் என்று வந்து நின்றுவிடுகிறது, ஏதோ ஒரு தெரியாத இடத்திலிருந்து வரும் அது, நாள் முழுதும் எந்தப் புகாரும் இன்றி அதேவேளை மகிழ்ச்சியுமின்றி வேலை செய்து செல்கிறது.

விவசாயிகள் மாலை வீடு திரும்புவது போல், ஆனி ஸோர்ஸா கால்நடையாகவே வீட்டிற்குத் திரும்பினாள். ஈரமான நடைபாதையில் தத்தி தத்தி அவள் நடந்து செல்கையில் கார்களின் வெளிச்சம் அவளை மோதிச் சென்றது. இருப்பினும், அவற்றில் ஒன்றை நிறுத்தி சவாரி கேட்கலாம் என்று அவளுக்குத் தோன்றவில்லை. உள்ளே ஊடுருவும் குளிர்ந்த பனியினாலும், தூறலினாலும் நடுங்கியபடியே, ஈர மண்ணை கிளறியபடி நிலத்தில் ஊன்றிய பார்வையுடன், கடிவாளம் கட்டப்பட்ட குதிரை ஒன்று பொழுது சாய காலிப் பெட்டியை லாயத்துக்கு இழுத்துச் செல்வது போல் சென்றாள்.

நகரத்தின் வணிகப் பகுதிக்கும், நவநாகரீக குடியிருப்புப் பகுதிக்கும் இடையிலான ஒரு பிரதான நேர்வழிப் பாதையில் இருக்கும் மாபெரும் தரிசு நிலப் பாதையின் ஒரு மூலையில் இருக்கும் இரண்டு அடுக்குமாடிக் குடிசியின் மேல் தளத்தில் அவளது வீடு இருந்தது. வண்ணம் தீட்டப்படாத அந்தக் குடிலுக்குப் பின்பகுதியில், திபெத்தின் மலைப்பகுதிகளில் தரிசாக நிற்கும் மலைகளைப் போல் குன்றொன்று செங்குத்தாக எழுந்திருந்தது, ஆனால் நம் கண்களை ஏமாற்றும் விதத்தில் அந்த மலைகளுக்குக் கீழ் பாதி மறைந்தபடி ஒரு ஆறு ஓடியது. அந்த வெறுமைக்கு மகுடம் சூட்டும் வகையில், அந்த வீட்டின் இருபுறமும் கண்கூசும் விளம்பரங்கள் நிறைந்த பெரிய மோசமான விளம்பரப் பலகைகள், முட்டுக் கொடுக்கும் வகையில் நிறுத்தப்பட்டிருந்தது. சொல்லப் போனால், அந்தக் கொடூர பலகையினால்தான் அக்குடில் தாக்குப்பிடித்து நின்றது, அது இல்லையென்றால் அத்தனை பழமையான, இடிந்து விழும் நிலையில் இருக்கும் அக்குடில் எப்போதோ தரைமட்டமாகி இருக்கும்.

வீட்டை அடைந்ததும் ஆனி தனது குழந்தைகளைக் கேட்டு கீழ்தளத்தில் இருந்த திருமதி டாபோல்ஸ்கியின் வீட்டிற்குச் சென்றாள். அவளைக் கண்டதும் குழந்தைகள் குதூகலித்தன, ஆனால் அவளோ தன் குழந்தைகளுக்கு முத்தமிடக் கூடத் தெம்பின்றி இருந்தாள். இளைய குட்டியை இடுப்பில் ஏந்தி, மூத்ததை முன்னுக்கு தள்ளியபடி இருட்டில் படிகளேறி தனது குடியிருப்புக்குச் சென்றாள்.

இப்போது அவளது நாளின் இறுதிக் கடமைகள் தொடங்கின. அறையின் பாதியை ஆக்கிரமித்திருந்த ஒரு படுக்கையில் குழந்தையைக் கிடத்திவிட்டு, இரவு உணவு தயாரிக்கச் சென்றாள். இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை குட்டி ஆனிக்கு அனுபவம் போதித்திருந்தது. தனது தாயின் கண்மூடித்தனமானப் பரபரப்பிலிருந்து மறைவாக, ஒரு மேஜைக்கு கீழிருந்த ஒரு பெட்டியின் மேல் அமர்ந்து விரல் சூப்பியபடி ஆறுதல் அடைந்தாள் குட்டி ஆனி.

ஒருவழியாக எல்லாம் தயாராகி முடிந்தது.

குழந்தைக்கே முன்னுரிமை. தனது கோப்பையில் பால் ஊற்றப்படுவதை படுக்கையிலிருந்தபடி கண்ட அவன் ஒரு கூண்டுக் காப்பாளன் ஒலி எழுப்புவது போல் எழுப்பினான். அவ்வளவு பசி அவனுக்கு.

கதவின் மீது ஒரு பலமான அடி விழுந்ததில், கைப்பிடி அதிர்ந்தது. பாலை மீண்டும் அடுப்பின்மேல் வைத்து தட்டுவது யாரென்று பார்க்க ஆனி வாசலுக்கு ஓடினாள்.

கதவைத் திறந்தபடி ஆனியை பின்னுக்குத் தள்ளி ஒரு காவல்காரர் அறைக்குள் நுழைந்தார்.

“நீ இங்குதான் இருக்கிறாய், இல்லையா”, என்றபடி அந்த அறையை பலமாக நோட்டம் விட்ட அவன் அலமாரிக் கதவை வேகமாகத் திறந்தான் “உன் கணவன் எங்கே?”

மற்ற எல்லா நேரங்களிலும் மெதுவாக சிந்தித்து ஆங்கிலம் பேச முடிந்த ஆனிக்கு அப்போது ஒரு வார்த்தையும் தெளிவாக வரவில்லை. அவள் முணுமுணுத்த சொற்கள் அக்காவலருக்கு ஏதோ பண்டய எகிப்திய மொழி போல் இருந்திருக்கும்.

“உன் கணவன் எங்கே!”

“என் கணவர் இங்கு இல்லை. எனக்குத் தெரியாது.”

“அப்படியா, சரி அதான் நீ இருக்கிறாயே. ம்ம்.. உன் குல்லாவை போட்டுக்கொண்டு என்னோடு கிளம்பு”

“உங்களுக்கு என்ன வேண்டும்!” என்றாள் ஆனி. பின்னர் நடித்தவளாக, “நான் இரவு நேரங்களில் வேலை செய்ய மாட்டேன்.”

கோபத்தில் உருமினான் அவன். “ஹ! பாருங்கள்! இவளுக்கு வேலை தர வந்திருக்கிறேன் என்று நினைக்கிறாள் இவள்!”

“உங்களுக்கு என்ன வேண்டும்?” கவலையுடன் மீண்டும் கேட்டாள்.

“உனக்குத் தெரியாதா என்ன? ஒரு கிழவனுடனான உனது தொடர்பு எல்லாம் தெரிந்துவிட்டது. சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கும் அவருடைய மச்சினன் உங்களைக் கையும் களவுமாகப் பிடித்திருக்கிறான். உனது பாதுகாப்பிற்காக சொல்கிறேன், அடுத்தமுறை ஓர் உண்மையான கணவனை அமைத்துக்கொள்ள வழிபார்.”

அவனது பேச்சில் உள்ள பொருள் புரிந்தவளாக. “அவர் என் கணவர்” என்று கோபத்துடன் சீறினாள். “பாதிரியார்—”

“ம்ம்ம் அது போதும்! வா என்னுடன்!” என்று அவள் கை பிடித்து இழுத்துச் சென்றான்.

அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்று கையைத் திருகிய ஆனி, “என் குழந்தைகள்! அவர்களுக்கு இன்னும் உணவுகூட கொடுக்கவில்லை

சிறிது நேரம் கழித்து போகலாமா.”

அவன் கர்ஜித்தான். “வா என்று நான் சொன்னால் வா என்றுதான் பொருள்! உனக்காக இரவு முழுக்க என்னால் இங்கு காத்திருக்க முடியாது. ம்ம்.. குழந்தைகளை விட்டு விட்டுக் கிளம்பு.”

குட்டிப் பையன் வீல் வீல் என்று இதுவரை அலறிக்கொண்டே இருந்தபோதிலும், குட்டி ஆனி அமைதியாக, நடப்பதை பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அழுவது பயன்தராது என்பது அவளுக்குத் தெரியும்; தம்பி பால் குடித்து முடிக்கும்வரை தனக்கு எதுவும் கிடைக்காது என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் தனது தாய் மாடிப்படி நோக்கி தள்ளப்படுவதைக் கண்டபோது இருவருக்கும் இன்றிறவு உணவு கிடையாது என்பதை உணர்ந்துகொண்டாள், குழந்தையின் அழுகையையே தோற்கடிக்கும் அளவுக்கு பயங்கரமாக அலறினாள்.

“அய்யோ! என் குழந்தைகள், எனது குழந்தைகள்!” என அத்தாய் மீண்டும் மீண்டும் அழுதாள். “என் குழந்தைகள் உணவின்றி தவிக்குமே, அய்யோ!”

ரோந்து வாகனம் பாறைகளில் உருண்டு ஓட, அவள், “ஒரு நிமிடம் அனுமதியுங்கள், என் வீட்டிற்கு செல்ல ஒரே ஒரு நிமிடம், தயவு செய்து!” என ஓயாமல் கெஞ்சினாள்.

இனியும் அது சாத்தியமில்லை என்பதை காவல் நிலையம் வரும் வரை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரவு முழுவதும் தனது படுக்கையின் முனையில் அமர்ந்தபடி “அய்யோ, என் குழந்தைகள், என் குழந்தைகள்!” என்று துக்கத்தில் உழன்றபடியே புலம்பிக்கொண்டிருந்தாள்.

ஏதோ மறைவிடத்திலிருந்து அவள் கணவன் கண்டுபிடிக்கப்பட்டான், வழக்கு விசாரனைக்கு வந்தது. ஸோர்ஸா ஐரோப்பாவில் இருந்த தனது மனைவியையும், குடும்பத்தையும் விட்டுவிட்டு வந்துவிட்டார் என்பதை சீற்றத்தில் இருந்த மச்சினன் நிரூபித்தார், ஆனால் அதற்கு ஆனி எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது என்பதால் சிறு எச்சரிக்கையோடு, ஆலோசனைகள் வழங்கப்பட்டது. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு ஆனி விடுதலை செய்யப்பட்டாள்.

ஆனால் ஆனியோ குழந்தைகளைக் காணப் போகிறோம் என்னும் சிந்தனையில் மூழ்கிப் போயிருந்தாள். பெண் வார்டனிடம் தன் பிரச்சினைகளை விளக்க முற்பட்டாள், அரைகுறை ஆங்கிலத்தில் பேசியதால் அவளால் எதையும் புரியவைக்க முடியவில்லை.

“ஆம்! நீ உன் குழந்தைகளை விட்டுவிட்டு வந்தாய். பின்னே, ஜெயிலுக்கு குழந்தைகளையுமா அழைத்து வரமுடியும்?”

அதன் பிறகு காத்திருப்பதைத் தவிர ஆனியால் எதையும் செய்ய முடியவில்லை. ஒருவேளை, திருமதி. டாபோல்ஸ்கி குழந்தைகளை கவனித்திருப்பாள்; நீண்ட நேரம் ஏன் குழந்தைகள் அழுகின்றன என்பதைக் காண வந்திருப்பாள். ஆனால் திருமதி. டாபோல்ஸ்கியோ வயதானவள், சிறிது நேரத்திலேயே பாவம் களைப்பாகி விடுவாள். குழந்தைகளோடு அவள் என்னதான் செய்வாள்?
நிலக்கரி புழுதியும், பனி மூட்டமும் நிறைந்த அந்த நகரத்தில், இரவு மிக நீளமானது, சில வேளைகளில் காலைப் பொழுதுகளில்கூட இருள் நீடிக்கும். 11 மணி அளவில் தெருவிளக்கின் ஒளியில் ஆனி வீட்டை நோக்கி நடந்தாள். சிறையில் இருந்த நாட்களில் சேமித்து வைத்த சக்தியை எல்லாம் சேர்த்து, சாலை விதிகள் பற்றி எந்தக் கவலையும் இன்றி ஆட்களைத் தள்ளிக் கொண்டு நேர்கோட்டில் நடந்தாள். குதிரை ஓட்டுனர் ஒருவன் அவள் தலைக்கு மேலான உயரத்தில் குதிரைகளை இழுத்துச் சென்றான். தங்கள் குதிகால்களை நடைமேடை கற்களுக்கு நடுவில் ஊன்றி, தங்கள் எடையை பின்னுக்குத் தள்ளியடி கழைக்கூத்தாடிகள் போல் ஏதோ செய்து கனமான தள்ளுவண்டியை இளைஞர்கள் இழுக்க, வண்டியிலிருந்த தானியங்கி இயந்திரம் திடீரென திரும்ப, மயிரிழையில் ஆனி தப்பினாள்.

திருமதி. டாபோல்ஸ்கியின் வீட்டு வாசலில் மூச்சிறைக்க வந்து நின்றாள் ஆனி; சிறிது ஆசுவாசமாகி, கதவைத் தட்டாமலேயே உள்ளே சென்றாள்.

பதறி அடித்துக்கொண்டு தன் மார்பைப் பிடித்தபடி எழுந்தார் திருமதி. டாபோல்ஸ்கி, அவள் கையில் இருந்த உருளையும், கத்திரியும் தெரித்து தரையில் விழுந்தது. “அறிவிருக்கா உனக்கு, என்னை இப்படி பயமுறுத்துகிறாயே? இத்தனை நாள் எங்கிருந்தாய், துஷ்டப் பெண்ணே?”

“என் குழந்தைகள்! எங்கே அவை”

“ஆஹா! உனக்கென்ன அக்கறை? அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் தகுதிகூட உனக்கில்லையடி. அவர்கள் இங்கு இல்லை.”

“அப்படியென்றால் மாடியில்”. அவள் என்ன சொல்கிறாள் என்று திருமதி. டாபோல்ஸ்கி ஊகிக்கும் முன்னர் அரக்கப் பரக்க தள்ளியபடி ஓடினாள் ஆனி.

கீழிருந்த அறைபோல மேல் அறையும் காலியாக இருந்தது. மீண்டும் திருமதி. டாபோல்ஸ்கியிடம் வந்தாள். “அவர்கள் எங்கே?” அலுப்பும், பயமும், பதட்டமும் கலந்து வெளிரிப் போயிருந்த முகத்திலிருந்த அடர் கண்கள் விரியக் கேட்டாள்

“அவர்களை ஏன் விட்டுவிட்டு சென்றாய்?” ஆனி நடந்ததை சொல்லி முடிக்கும் வரை வாய் திறப்பதில்லை என்பதில் உறுதியாயிருந்தாள் அப்பெண்மணி. ஆனி நடந்ததைச் சொன்னதும் நடந்தவற்றுக்கு ஆனிதான் பொறுப்பு என்றுரைக்கும் வகையில் மெல்ல அதேவேளை கண்டிப்போடு சொல்லத் தொடங்கினாள்.

ரோந்து வாகனம் வந்தபோது, தனக்கு இரவு உணவு வாங்க திருமதி. டாபோல்ஸ்கி தெருமுனைக்குச் சென்றிருந்தாள். அவள் வருவதற்கு முன்னரே தெரு அடங்கிவிட்டிருந்தது. அவள் வந்தபோது குழந்தைகள் அழும் சத்தம் கேட்டபோதும் என்ன பிரச்சினை என்று கேட்க முடியாத அளவுக்கு அவளுக்கு வேலை இருந்தது. சாப்பிடும்போது, அழுகைச் சத்தம் குறித்து டாபோல்ஸ்கியின் கணவர் புகார் செய்தார். தூக்கம் வந்துவிட்டால் தம் குழந்தைகள் எப்படி அழும் என்பதை அவருக்கு அவள் நினைவூட்டினாள். கொஞ்சம் கொஞ்சமாக வீடு அமைதியானது.

நடுராத்திரியில், குழந்தைகளின் ஓலம் கேட்டு விழித்தெழுந்தாள்; தாயின் காலடியோசை கேட்காதது அவளுக்கு சற்று விநோதமாக இருந்தது. படுக்கையில் எழுந்தமர்ந்து முழங்கை மீது சாய்ந்தவாறு என்னவாக இருக்கும் என்று யோசிப்பதற்குள் குழந்தையின் சத்தம் ஓய்ந்துவிட்டது. அழுகை உடைந்து விம்மலாக மாறி ஓய்ந்தது. குட்டி ஆனியின் அழுகையோ மெல்ல மெல்ல குறைந்து அமைதியானது.

அடுத்தநாள் அதிகாலை திருமதி. டாபோல்ஸ்கி மாடிக்குச் சென்றாள்; ஆனிக்கு ஏதோ உடம்பு சரியில்லை, உதவி தேவைப்படும் என்று உறுதியாகக் கருதினாள். கதவு திறந்திருக்கவே உள்ளே சென்றாள்.

குட்டி ஆனி தரையில் கிடந்தாள். படுக்கையின் மேல் தலையணைகளுக்கு நடுவே குழந்தை இறந்து கிடந்தது. அண்டை வீட்டார் எப்போதும் ஹங்கிகளைத் தாழ்வாகவே பார்ப்பார்கள். அதனால் டாபோல்ஸ்கியோடு யாரும் எதுவும் பேசவில்லை, திருமதி. ஸோர்ஸாவுக்கு என்ன நடந்தது என்பது பற்றி அறியவும் விரும்பவில்லை. நாழிகள் கழிந்தன, நாட்கள் கழிந்தன, பயம் நேர்மையான கோபமாக மாறியது; வலிய ஒதுங்கியிருப்பதே அவர்களை விலக்கி வைக்க காரணம் என நினைத்தார்கள். மூன்றாம் நாள் அனைவருக்கும் தகவல் சொல்லி அனுப்பினார் தாபோல்ஸ்கி, அனைவரும் சேர்ந்து குழந்தையை எடுத்துச் சென்றனர்; கேள்விகளைத் தவிர்க்க அது தனது பேரக் குழந்தை என்று சொல்லி இருந்தார். தனது சால்வையின் ஒரத்தில் குட்டி ஆனியை சுற்றி எடுத்து, ஒரு தொண்டு நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றாள் திருமதி. டாபோல்ஸ்கி.

அவ்வளவுதான். அந்த மோசமான கதையை மென்மையாகக் கூற திருமதி. டாபோல்ஸ்கி எந்த முயற்சியும் எடுக்கவில்லை, எந்த ஒரு அனுதாபமும் இன்றி பேசி முடித்து அந்தத் தாய் என்ன செய்யப் போகிறாள் என்று ஆர்வமாகப் பார்த்தாள்.

அன்றைய தினம் மாலை, திருமதி. அட்வுட் தனது குழப்பத்தை தன் கணவரிடம் கூறிக்கொண்டிருந்தாள். “இல்லை,” என்றாள் அவள், “அந்த இஸ்திரிக்காரப் பெண்ணிடம் நான் தோழமையாக இருக்க முயற்சித்தாலும், எனக்கு ஒரே பதில்தான் கிடைக்கும்.”

“பின் ஏன் அலட்டிக் கொள்கிறாய்! அவளை நீ புரிந்துகொள்ள முடியாது, ஏனென்றால் அவளிடம் புரிந்துகொள்ள ஏதுமில்லை. இந்த ஹங்கிகளே அப்படித்தான்; ஒரு மரக்கட்டையில் இருக்கும் புடைப்பைப் போல்தான் ஒரு ஹங்கிக்குள் இருக்கும் உணர்ச்சி.”

“ஆனால் அவள் ஒரு நல்ல சலவைக்காரி.”

“சந்தேகமில்லை. அதுதானே அவள் வேலை. இங்கு வேலை செய்யத்தானே ஹங்கிகள் வரவழைக்கப்படுகின்றனர்; அவர்கள் வெறும் அரை மனிதர்கள்.”

திருமதி. டாபோல்ஸ்கி கவனிக்க, ஆனி அமைதியாக உட்கார்ந்திருந்தாள். ஆனிக்கு ஏதும் புரியவில்லை போலும். திருமதி. டாபோல்ஸ்கிக்கு சொல்ல மேலும் ஏதுமில்லை என்பதை அவள் உணர்ந்தபோது, எழுந்து வெளியே சென்றாள். தனது அண்டை வீட்டுப் பெண்ணின் மனதில் என்ன ஓடுகிறது என்பதை உணர்ந்த திருமதி. டாபோல்ஸ்கி உடனே ஆணியில் மாட்டியிருந்த சால்வையை எடுத்துக் கொண்டு பின்தொடர்ந்தாள். அவ்விஷயத்தில் இருவரும் ஒரேமாதிதான் சிந்தித்திருக்கிறார்கள், பேச்சின் இடத்தை செயல் எடுத்துக்கொண்டது. கிரிம்ஸ் மலை வழியாக டோவர் தெருவுக்கும், தற்காலிக இல்லத்திற்கும் செல்லும் அந்த ஆபத்தான படிகளில் இருவரும் ஒன்றாக ஏறினார்கள்.

குட்டி ஆனியை திருப்பிக் கொடுத்தபோது, அந்தத் தாய் அவளை இறுக்கி அணைத்தாள். அவளை இனி ஒரு நொடிகூட கீழே இறக்க முடியாது என்பது போல் அணைத்தாள், ஆனால் அந்த அமைப்பைத் தாண்டி சென்றதும், குழந்தையை திருமதி. டாபோல்ஸ்கியிடம் கொடுத்துவிட்டாள்.

“எடுத்துக்கொள்ளுங்கள்,” என்றாள், “திருமதி. அட்வுட்டிடம் நான் வேலைக்குச் செல்கிறேன்.” பாதி நடையும் பாதி ஓட்டமுமாகச் சென்றாள்.

திருமதி. அட்வுட் எவ்வளவு கருணையாளர் என்பதை அறியாவிட்டாலும், இதுவரை தான் பணிபுரிந்த எஜமானர்களைக் காட்டிலும் அவள் மிகவும் நியயமானவள், பரிவு மிக்கவள் என்பதை ஆனி அறிவாள். இப்போது இந்தத் துன்பத்திற்கு நடுவே அவள் ஆனியின் பிரச்சினைக்கு செவி மடுத்தாள்.
“என்ன! உனக்கு உடம்பு சரியில்லையா?” என்றார் திருமதி. அட்வுட்

“இல்லை. நான் சிறையிலிருந்தேன்.”

“சிறைக்கா” என்றலறிணாள் அப்பெண். “கடவுளே!”

ஆனி குறுக்கிட்டாள். என்ன நடந்தது என்பதை சொல்லும் எண்ணம் அவளுக்கு இல்லை; தன் சிறைவாசத்தினால் விளைந்த பயன் மட்டுமே அவளுக்கு அப்போது முக்கியமானதாக இருந்தது. துன்பம் அநீதியை முழுமையாக விஞ்சியது. “என் குழந்தை இறந்துவிட்டது” திருமதி. அட்வுட்டின் முன்பு அழுதுவிடக்கூடாது என்று மரியாதை நிமித்தமாக தனது முகத்தை இறுக்கமாக வைத்திருந்தாள்.

முந்தைய தினம் அவளது கணவனின் பேச்சை நினைவுகூர்ந்தவள், ஆனியின் இந்தப் பேச்சைக் கேட்டதும், திருமதி அட்வுட் கொடுரமான குரலில் கேட்டார் “உன் குழந்தையை நீ கொன்று விட்டாயா?”

“ஆம்!” சுவற்றின் மீது சாய்ந்து தன் முகத்தை மூடிக் கொண்டாள் ஆனி. பிறகு துணிவும், கோபமும் ஒன்றாக எழ “இல்லை! அந்த காவல்காரன்!” என்றாள்.

துண்டு துண்டான விளக்கங்கள், துணுக்குகள், முட்டாள்தனமான பயங்கரங்களின் குறிப்புகளைக் கேட்ட திருமதி. அட்வுட் அனைத்தும் இட்டுகட்டிய பொய் என்று கடுப்பானாள்; அத்தகைய கொடூரங்கள் நடக்க வாய்ப்பே இல்லை. இறுதியில், அவள் “இதற்கு மேல் நீ எதுவும் சொல்ல வேண்டாம். நீ பொய் சொல்கிறாய்.”

ஆனியின் மங்கலான முகத்தில் இருந்த கனமானக் கோடுகள் விசித்திரமாக அசைந்தன, குட்டி மூக்கும், பரந்த நாசித் துவாரம் கொண்ட அந்த முகம் காண்பதற்கு ஒரு மனிதக் குரங்கை போன்று இருந்தது. அவளின் இருப்பே அங்கு அருவருப்பூடுவதாக இருந்தது.

தனது முகத்தைத் திருப்பிக்கொண்டு, திருமதி. அட்வுட் தொடர்ந்தார் “கடந்த வாரம் என்னை ஏமாற்றிவிட்டு சென்ற உன்னை நான் எப்படி நம்புவது? ஈரத் துணிகளை அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டாய். இந்நேரம் எல்லாம் பாழாகி இருக்கும்.”

“இனி அப்படி நடக்காது.”

“அதை நான் எப்படி நம்புவது? உனக்கு வேலை தேவை, அது கிடைக்கவில்லை என்றால் வருந்துகிறேன். ஆனால் உனக்கு மீண்டும் வேலை கொடுப்பதை என்னால் கற்பனை செய்தும் பார்க்க முடியாது.” என்றவள், இன்னும் இறுக்கமாக “சிறைக்கு சென்ற எவரையும் நான் எனது வீட்டில் பணிக்கமர்த்த மாட்டேன்.”

“தவறு செய்தது எனது கணவர், நானில்லை!”

அது விரக்தியின் ஓலம், ஆனால் திருமதி. அட்வுட்டால் அதை உணரமுடியவில்லை.

“முழுதும் உன் கணவரின் தவறுதானா என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. இந்த நாட்டில் இதுபோன்ற கொடுமைகள் நடப்பதில்லை, இதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை; நான் ஏற்கணவே வேறொருவரை நியமித்துவிட்டேன்.” கொல்லைப்புற கதவு இழுத்து அறையப்பட்டது. ஆனி வீதிக்குத் தள்ளப்பட்டாள்.

அன்று மாலை “நான் உனக்கு முன்னரே சொன்னேன்,” என்றார் திரு. அட்வுட் “இந்த ஹங்கிகள் விலங்குகள்.”

திருமதி. அட்வுட் பெருமூச்சுடன் கூறினாள், “நீங்கள் சொன்னது சரிதான்.”

மூலம்: Marxists.org

* ஹங்கி (Hunky) – என்பது மத்திய ஐரோப்பாவைச் சேர்ந்த மக்களைக் குறிக்கும் ஒரு தரக்குறைவான சொல்லாகக் கருதப்படுகிறது, குறிப்பாக ஹங்கேறிய இன மக்களை குறிக்கும் ஒரு இனவாத சொல்.

பகிர்வுக்கு நன்றி நுணாவிலான். மனதைப் பிழிந்திருந்தது கதை. எழுத்து நடை சிறுவயதில் வாசித்த ரஸிய (மொழி பெயர்ப்பு) புத்தகங்களின் வாடை.

Edited by ஜீவன் சிவா
தவறான கேள்வி - நீக்கப்பட்டுள்ளது

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நாமெல்லோருமே ஒரு வகையில் திருமதி அட்வுட் போலத்தான்...., எதையுமே முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் அரைகுறையாகக் கேட்டு மிகுதியை கற்பணையால் நிரப்பிக் கொண்டு கடந்துபோய் விடுகிறோம்....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.