Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்து சிறுகதைகள்

Featured Replies

கூடுகள் சிதைந்தபோது.........
----------------------                                    
கோடை வெயில் அனலாய்க் கொதித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது விசிறி விட்டுப்போன காற்றில் மட்டும் லேசாய் ஈரப்பதன். வீட்டுக்குள் இருக்க அலுப்பாய் இருக்க இந்தப் பூங்காவில் வந்து அமர்ந்துகொண்டேன். எவ்வளவு நேரம்தான் அந்த நான்கு சுவர்களையும் பார்த்துக்கொண்டிருப்பது.....? கண்தொடும் தூரத்தில் பள்ளிச்   சிறுவர்கள் ஊஞ்சலாடிக்கொண்டு இருக்கிறார்கள். சற்றுத் தூரத்தில் இரண்டு இளவட்டங்கள் நெருக்கமாய் அமர்ந்து, கைகளைப் பிணைத்தபடி உலகையே மறந்து இருக்கின்றனர். அந்த மரத்திற்கு கீழ் அமர்ந்திருக்கும் சீனநாட்டுச் சோடி ஒவ்வொருநாளும் இதே நேரத்திற்கு இங்கே வந்து அமர்ந்து விடுகிறார்கள். அந்த வயது முதிர்ந்த ஆப்கான் கிழவனும், மொட்டாக்கணிந்த அவன் மனைவியும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். என்ன சந்தோசமான வாழ்க்கை! திருப்தி எல்லா முகங்களிலும் பிரதிபலிக்கின்றன. எல்லோரும் சந்தோசமாய்.... நிம்மதியாய்..... மகிழ்ச்சியாய்.....

நான் மட்டும்......?

நான் மட்டும் ஏன் இப்படி...?

உள்ளும் புறமும் ஏதோ அனல் என்னைச் சுட்டெரிப்பதாய் நெளிகிறேன்.

தனிமை...!

வெறுமை....!

நெஞ்சிலே கனம்...!

தேசந்தாண்டி வந்தாலும் இன்னும் அந்த அச்ச உணர்வுகள் என்னைவிட்டு விலகவில்லை. கனவிலும் நனவிலும் கரிய பிசாசுகள் என்னை துரத்துவதாய் ஏதோ பிரமை. 'ஓடு... ஓடு...' என்று ஏதோ ஒரு குரல் என்னை உந்தித்தள்ளுகிறது. மண்டைக்குள் வண்டு குடையுமாப்போல், ஏதோ வாகனம் ஓடுமாப்போல் சதா அதிர்வுகள்.....

கடந்து போன பலரும் தன்னந்தனியாய் உட்கார்ந்திருந்த என்னை ஒருவிதமாய்ப் பார்த்துவிட்டு நகர்ந்தனர். என் நெஞ்சுக்குள் வெடித்துச் சிதறும் ரணங்களின் வலிகள் அவர்களுக்கு எங்கே புரியப்போகிறது. சரியாக வாரப்படாத முடி..... சவரம் செய்யப்படாத முகம்.... கசங்கிப்போன உடை..... கையில் சிகரெட்டு..... நானா இது....? எனக்கே நம்பமுடியவில்லை!

அதுசரி. காலையில சாப்பிட்டனானோ......?

வெளிக்கிடேக்கை கதவை சரியாக பூட்டினனானோ......?

அது இருக்கட்டும்.

ம்.... என்ர வீடு எங்க இருக்குது?

'சீ.... நான் இங்க வந்திருக்கக் கூடாது.'

'நான் இங்க வந்திருக்கக் கூடாது'

என்னுள் வெறுப்பு மண்டுகிறது. புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை எறியத்தான் பார்த்தேன். அந்தச் சிறுமி மட்டும் என் குறுக்கே ஓடிவராமல் இருந்தால். பத்திரமாக சிகரெட்டுத் துண்டைக் கொண்டுபோய் அணைத்துவிட்டு மரநிழலில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு நடக்கிறேன்.

எங்கே போகிறேன்.....? 

என் கால்கள் நடக்கச் சொல்கின்றன.

நான் நடக்கிறேன்.

எவ்வளவு தூரம்......? எத்தனை மைல்.....?

நடக்க நான் தயார். இப்படி நடந்தே ஊர்கள் கடந்துவந்த அகதித் தமிழன் நான்.

சந்தடியற்று நீண்டுகிடக்கிறது அந்த வீதி. ஒன்றிரண்டு கார்கள் ஓசைபடாமல் ஊர்ந்து செல்கின்றன. குடிமனைகள் தெருவின் இருமருங்கும் நெருக்கமாக அமைந்திருக்கின்றன. எல்லா வீடுகளும் ஒரே மாதிரியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. எதிலும் என் மனம் ஒட்ட மறுக்கிறது. தெருவின் ஓரமாய் பாதசாரிகள் நடப்பதற்காகப் போடப்பட்டிருந்த சீமெந்துத் தரையில் என் வெறும் கால்கள் தம்போக்கில் நடக்கின்றன.

'ஓ செருப்பு அணியக்கூட மறந்து போனேனோ..!

எனக்குள் நானே சிரித்துக்கொள்கிறேன்.

என் மேலாடையின் வியர்வை நாற்றம் எனக்கே அருவருப்பாக இருக்கிறது.

'இன்றைக்காவது போய்க் குளிக்கவேணும்'

ரோட்டைக் கடந்து மறுபக்கம் செல்ல நினைக்கிறேன். ஏதே சிறு சத்தம் என்னை தலைநிமிர வைக்கிறது.

அந்தக் கார் திடீர் என்று 'பிரேக்' போட்டு நிற்கிறது. பிறகு கொஞ்சம் பின்னுக்கு எடுத்து, கொஞ்சம் விலத்தி, பிறகு வேகமாக முன் நகர்கிறது. நடுவீதியில் ஏதோவொன்று வேகமாக அசைவதாய் தெரிகிறது. என் கண்கள் அந்த இடத்தில் நிலைக்குத்தி நிற்கின்றன. படபடவென்று இறக்கையை அடிக்கிறது ஒரு சிறு குருவி.

வெறிச்சோடிக்கிடக்கும் தெருவின் நடுவுக்கு என்னையும் அறியாமல் வந்துவிடுகிறேன்.

முதுகில் கருமையும்;, வயிற்றுப்புறம் இளமஞ்சளுமாய் அந்தக் குருவி துடிதுடிக்கிறது. இன்னொரு குருவி, அதன் ஜோடியாக இருக்க வேண்டும் இந்தக் குருவியைத் தவிப்புடன் சுற்றிச் சுற்றி நடக்கிறது. விழுந்து கிடக்கும் குருவியோ தன் சிறிய செட்டைகளை படபடவென்று அடிக்கிறது. தலையை இரண்டொரு முறை தூக்கிப் பார்த்துவிட்டு அப்படியே தொப்பென்று சரிய இறந்துபோகிறது. அதன் உடல் நசிந்துபோய், மேல் இறகு பிய்ந்துபோய்க் கிடக்கிறது. லேசாக இரத்தம் கசிகிறது.

குருவியை அடித்துவிட்டுக் கார் தன் போக்கில் போய் விட்டது.

'கண் மண் தெரியாமல் ஓட்டுறான். விசரன்..... இவன் எங்க போய் பிரளப்போறானோ.....' என் உதடுகள் முணுமுணுக்கின்றன.

ஜோடிக் குருவியால் தன் இணையின் பிரிவைத் தாங்க முடியவில்லை. தன் இறகுகளை விரித்து விரித்துக் காட்டி அதைத் தன்னுடன் பறந்து வருமாறு அழைக்கிறது. இழப்பை உணர்ந்து வேதனையுடன் இரண்டடி தூரம் பறப்பதும் திருப்பி வந்து இறந்து கிடக்கும் தன் ஜோடியை அலகாற் தொட்டுப் பார்த்துச் சத்தம் போடுவதுமாக அந்தரிக்கிறது. அங்குமிங்கும் பார்த்து தலையை ஆட்டியபடி நடக்கிறது.

தூரத்தில் இன்னுமொரு கார் வருகிறது. அது வருகின்ற வேகத்தில், அதன் சக்கரங்களுக்குள் அகப்பட்டு இறந்து கிடக்கும் சிறுகுருவியின் உடல் மேலும் சிதைந்து சின்னாபின்னமாகப் போகிறதே...! என் நெஞ்சு பதறுகிறது. என்னைப் போலவே அந்தக் குருவியும் பரிதவிக்கிறது. அச்சிறுகுருவியால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தன் ஜோடியை விட்டுப் போக மனமில்லாமல் அருகில் இருந்த மரத்தில் அமர்வதுவும், பின் தன் ஜோடியின் அருகில் போய் அமர்ந்து கொள்வதுவுமாக அதன் நிலை இருக்கிறது.

நான் அவசரமானேன். தெருவோரமாய் கிடந்த கடதாசி அட்டையை எடுத்துக்கொண்டு இறந்துகிடந்த குருவியை நெருங்கினேன். என் இதயம் வெடித்துவிடும் போல இருந்தது. இரத்தமும் சதையுமாய் ஏதேதோ நினைவுகள்; என் மனதைச் சூழ்ந்துகொள்கின்றன. மரக்கிளையில் அமர்ந்தபடி  அந்தக்குருவி என் செயலைக் கண்டதும் பயத்துடன் ஆரவாரிக்கிறது. ஒரு பூவைப் போல அந்தக் குருவியை மெதுவாகத் தூக்கியெடுத்து அட்டைப் பெட்டியில் கிடத்தினேன். என் விழிகள் நீரைச் சொரிந்து கன்னங்களில் வழிந்தோடுகிறது. இரு கைகளிலும் தூக்கி, முகத்திற்கு அருகே கொண்டு வந்து அந்தக் குருவியைப் பார்க்கிறேன்.

'இப்பிடித்தான் என்ர சசியும்......'

என் ஆன்மாவுக்குள் அடக்க முடியாத வேதனை. குலுங்கிக் குலுங்கி அழுகிறேன்.

இழப்பின் வலி அறிந்தவன் நான்.

குருவியின் இழப்பில் என் இழப்பின் வேதனை!!  எவ்வளவு நேரம் அப்படியே நடுத்தெருவில் அமர்ந்திருந்து அழுதேனோ தெரியவில்லை.  

என்னை விலத்திக் கொண்டு அந்தக் கார் மெதுவாக முன்னகர்கிறது. அதில் அமர்ந்திருந்த வெள்ளையின வயோதிபர் மென்முறுவலுடன், சிறு வியப்புமாய் என்னை அங்கீகரித்துத் தலையசைத்துவிட்டுப் போவது தெரிந்தது.

ஒரு குழந்தையைப் போல பத்திரமாக அந்தக் குருவியை எடுத்து தெருவோரமாய் நின்றிருந்த மரத்தடியில் வைத்துவிட்டு அப்பால் நடக்கிறேன். அதன் இணை என்னை நன்றிப் பெருக்கோடு பார்க்கிறது.

 நடந்து நடந்து என் கால்கள் வலிக்கின்றன. அதைவிட என் மனம் வலிக்கிறதே.

அது இறக்க முடியாத சுமை. என் உயிரை அணுவணுவாய்க் கொல்லும் வேதனை. கனவிலும், நினைவிலும் சதா அந்த நிழல் விம்பங்கள். என் நினைவுகளைச் சுமந்தவள், என் கனவுகளின் உருவாக கருவான என் குழந்தை, இருவரையும் இழந்த நடைபிணம் நான்.

'நான் இங்க வந்திருக்கவே கூடாது...'

'நான் விசரன்..... நான் பைத்தியக்காரன்......' ஓலமிடும் என் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் வேகவேகமாக நடக்கிறேன்.

'ஐயோ அம்மா எனக்கு பயமாயிருக்குதம்மா. என்னைக் கட்டிப்பிடியுங்கோ அம்மா' மூத்தக்காவின் நான்கு வயது மகன் கயன் அனுங்குவது இப்போதும் என் காதுகளில் கேட்கிறது. நாலாபுறமும் குண்டுச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. அக்கா மகனை அள்ளியெடுத்து அணைத்துக்கொள்கிறா. கயன் அவள் மார்போடு ஒட்டிக்கொள்கிறான். அவன் உடல் பயத்தில் நடுங்குகிறது. கண்கள் குழிவிழுந்து, எலும்பும் தோலுமாய் கயன்....

'தம்பி இனி இங்க இருக்கேலாது போல இருக்குது. சனமெல்லாம் வெளிக்கிடுதுகள். நாங்களும் அங்கால போவம்.  எல்லாத்தையும் இழந்திட்டம். இனி இதுகளையும் இழக்க ஏலாது. பார் பொடியன் பயத்தில நடுங்கிற நடுக்கத்தை' என்கிறா மூத்தக்கா.

 

இரணைமடுவில இருந்து வெளிக்கிட்டு இது மூன்றாவது இடம். சனத்தோட சனமா அள்ளுப்பட்டுப் போய்க்கொண்டிருக்கிறம். எங்கட இடப்பெயர்வுக்கு ஒரு முடிவு இல்ல. எனக்கு சசியை நினைச்சால் தான் பயமும், கவலையும். சசிக்கு இப்ப ஏழு மாதம். வயிறு நல்லா வெளியில தெரியுது. அவளைப் பார்க்க எனக்கு நெஞ்சு பகீர் எண்டு இருக்கும். அவள் சுகம் பெலமாகப் பிள்ளையப் பெத்தெடுக்க வேணும் என்றதுதான் என்ர பிரார்த்தனையாக இருந்தது.

'அவளால வரிசையில நிக்க ஏலுமா?'

நான்தான் பாணோ, பருப்போ வரிசையில நிண்டு என்னென்டாலும் அவளுக்கு வாங்கிக்குடுக்கிறது.

'எத்தினைநாள் நான் சாப்பிட்டிட்டன் எண்டு பொய் சொல்லி அவளச் சாப்பிடப் பண்ணியிருப்பன்'

கலியாணங்கட்டி  ரெண்டு வருஷத்துக்குப் பிறகுதான் சசிக்கு வயித்தில குழந்தை தங்கினது. அந்த செய்தி கேட்ட சந்தோசம் நீடிக்காமல் இந்த நாட்டுப் பிரச்சினையும் தொடங்கிற்றுது.  அந்த நாள்த் தொடக்கம் ஆன சாப்பாடு கூட இல்லை. பயம்... பசி.... பட்டினியோட.... பிள்ளை எப்பிடி பிறக்கப் போகுதோ எண்டு சில நேரங்களில யோசிக்க பயமாகத்தான் இருந்துது.

ஒவ்வொருக்காலும் அவளப் பத்திரமா பங்கருக்குள்ள இறக்கி, ஏத்தி.....

எப்பிடி இருக்க வேண்டியவள். நாரி நோ, முதுகு நோ எண்டுகொண்டு அந்த வெறும் தரையிலயும், மண்புழுதீக்கையும் படுத்தெழும்பேக்க எனக்கு செத்திரலாம் போல இருக்கும். அவளும்தான் எலும்பும் தோலுமாய்.... ஆன சாப்பாடு கூட இல்லாமல்.....

எத்தினை இரவுகளை அவள் பங்கருக்குள்ளயே கழிச்சிருக்கிறாள். குண்டுக்குப் பயப்படுகிறத விட அவளுக்குப் பாம்பு, பூச்சியளுக்குத்தான் கூடப் பயம்.

ஆனால் கடைசியில.....

 

அடுத்தநாள் ஆமிக்காரங்கள் நாங்க இருந்த முள்ளிவாய்க்கால் பகுதியைச் சுத்திவளைச்சுட்டாங்கள். அக்கா வெளிக்கிடுவம் எண்டு சொல்லியும் யோசிச்சுக்கொண்டிருந்தது எவ்வளவு பிழையெண்டு அப்பதான் தெரிஞ்சுது. பீரங்கி, பல்குழல்.... பத்தாததுக்கு பிளேனுகளும் விட்டுவைக்க இல்லை. இந்தத் தாக்குதல் கடைசித் தாக்குதலாம் என்று எல்லாரும் கதைக்கினம். சனம் காடு கரம்பையளுக்குள்ளாலயும், கடல் பக்கத்தாலயும் வெளியேறப் போறதாய்க் கதைச்சவை. சனத்தோட சனமா நாங்களும் வெளிக்கிட்டம்.

சசிக்கு நடக்க ஏலாமல் இருந்துது. எனக்கு சில நேரம் கோபம் கூட வந்தது. இந்தப் பயங்கரத்தைத் தாண்டினால் காணும் எண்டு இருந்துது எனக்கு.

'கெதியா நடவப்பா. இன்னும் கொஞ்சத் தூரம்தான்' எண்டு அவளை அவசரப்படுத்தினேன். குண்டுகள் நாங்க வந்த பாதைகளில் எல்லாம் விழுந்து வெடிச்சுது. செத்தவெ சாக மிச்சமான ஆக்கள் நடந்துகொண்டிருந்தம்.

'ஐயோ... என்ர பிள்ளை. என்ர பிள்ளை...' திடீரென்று பின்னால வந்துகொண்டிருந்த அக்கா கத்திக் குழறினா. அக்காவின்ர கையில இருந்து ரெத்தம் வடிஞ்சுது. அவா கயனைத் தூக்கிக்கொண்டு வந்தவா. கயனுக்கு மண்டையில காயம்பட்டிருந்துது. நான் சசியின்ர கையில இருந்த உர 'பாக்'கில இருந்து ஒரு சீலையக் கிழிச்சு கயனுக்கு கட்டுப்போட்டன். 

'சசி நீ இதுகளைப் பார்க்கக்கூடாது. அங்கால போ'; மெல்லிய குரலில நான்தான் சொன்னன். அவள் விறைத்துப் போய் பார்த்துக்கொண்டு நின்றாள். தலை இல்லாத முண்டங்கள், கை கால் இழந்த உடல்கள் என்று எத்தினையக் கடந்து அவள் வந்துட்டாள். இதென்ன பெரிசா.....!!!

கட்டியிருந்த துணியையும் மீறிக்கொண்டு கயனுடைய தலையில இருந்து இரத்தம் வந்துகொண்டிருக்குது. கயன் அப்பவும் மயக்கமாகத்தான் கிடக்கிறான். பேச்சு மூச்சில்லை. அக்கா மயங்கி விழுந்திட்டா. கொஞ்ச நேரத்தால தானே கண்ணை முழிச்சிட்டா.

 

'வவுனியாவுக்குள்ள போயிட்டால் பிள்ளைக்கு ஏதாவது மருந்துபோடலாம்' யாரோ சொல்ல அத்தான் கயனைத் தூக்கிக்கொண்டு வேகவேகமாக நடந்தார். அக்காவும் அவருக்குப் பின்னால ஓடினா.

துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கிட்டவாகக் கேட்குது. ரெண்டுபக்கமும் சரியான சண்டை நடக்கிறமாதிரி சத்தம் கேக்குது. சனத்தோட சனமா நாங்களும் நடந்தம். சசியும் மூச்சிரைக்க நடந்து வந்தாள். நடக்க ஏலாமல் கஷ;டப்பட்ட சசியைப் பத்திரமா பிடிச்சுக்கொண்டு நடந்ததில நான் அக்காவையளையும் தவறவிட்டுட்டன்.

கண் எட்டுற தூரத்தில மண் மூடை அடுக்கியிருக்கிறது தெரிஞ்சுது. அது கடந்தால் அங்கால ஆமியின்;ர 'காம்ப்'தான் என்டு யாரோ சொன்னது கேட்டுது. சசியின்ர முகத்திலும் கொஞ்சம் தெம்பு வந்தமாதிரித் தெரிந்தது. நேரமும் இருட்டிக்கொண்டு வந்துது. என்ன பாம்பு, பூச்சி எங்க கிடக்குதோ தெரியாது. நான்; புதர்களை விலக்கிக்;கொண்டு சசிக்கு முன்னால நடக்கிறன். அப்பத்தான் அந்த இடிமாதிரிப் பெரிய சத்தம்....

நான் ஒரு புதருக்குள்ள விழுந்துகிடந்தன். எனக்குக் கையில காயம் பட்டு ரெத்தம் ஓடிக்கொண்டிருந்துது. கண்ணைத் திறக்க முடியாமல் கண்ணுக்குள் மண்ணும், தூசியுமாய்.... புழுதி மண்டலம் அடங்க சில நிமிசங்கள் எடுத்துது. அழுகுரல்களும், ஓலமும் தான்.....

'சசி.....'

'என்ர சசி....' நெஞ்சு பதைபதைக்க சசியைத் தேடினேன்.

சசி ஒரு தென்னைமரத்தோடு குப்புறக்கிடந்தாள். அவள் கிடந்த தோரணை....?

'ஐயோ சசி....!'

'ஓம் என்ர சசி செத்துப்போயிட்டாள்'

'என்ர சசி என்னை விட்டுட்டுப் போயிட்டாள்...'

'சசியோட சேர்ந்து வயித்தில இருந்த பிள்ளையும்........'

 

சன்னங்கள் அவளின்ர கழுத்து, நெஞ்சு, வயிறு என்று எல்லா இடங்களிலையும் துளைச்சிருந்துது. அவளின்ர ஒரு கால்ல முழங்கால் மட்டும்தான் இருந்துது. ஒரே இரத்தவெள்ளம்.

'ஐயோ சசி... என்ர சசி....'

'நான் என்ர சசிக்காக அழவா? இல்ல வயித்திலயே அழிஞ்சுபோச்சுதே அந்த என்ர குழந்தைக்காக அழவா.....?' முகத்திலயும்;, தலையிலயும் அடிச்சுக்கொண்டு அழுகிறன்.

'டொக்டர் ஆம்பிளைப் பிள்ளை என்டு சொன்னவர்...'

'நான் கண்ட கனவெல்லாம் அழிஞ்சுபோச்சுது. எனக்கினி ஆரு.....'

ஆறுதல்ப்படுத்த யாருமில்லாமல் பைத்தியக்காரனைப் போல கொஞ்சநேரம் அவளை என்ர மடியில போட்டுக்கொண்டு இருந்தன். என்ர காயத்தின்ர வலியோ, அதில இருந்து ரெத்தம் வடிகிறதோ எனக்கு தெரியேல்ல.

'எவளின்ர மடியில என்ர உயிர் போகவேணும் என்டு நினைச்சனோ, இன்றைக்கு  அவள் பிணமா என்ர மடியில.....'

துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் இப்ப இன்னும் கிட்டத்தில கேட்குது.

ஆட்கள் ஏதோ சொல்லிக்கொண்டு போகினம். என்ர காதில எதுவுமே விழேல்ல. குண்டுகள் விழுந்து வெடிச்சுப் புழுதி கிளம்புது. சன்னச் சிதறல்கள் நெருப்புப் பொறிகளாத்; தெறிக்குது. துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கிட்டவாய்க் கேட்குது. நாய், நரியளின்ர ஊளைச் சத்தங்களும் தூரத்தில கேட்குது.

'தம்பி அழுதுகொண்டிருக்க இப்ப நேரமில்ல. எழும்புங்க தம்பி' யாரோ ஒரு வயதானவர்  என்னை நெருங்கி என்ர நிலமையைப் பார்க்கிறார். என்ர கைக்காயத்தைப் பார்த்து தன்ர இத்துப்போன சாரத்தின்ர ஒரு மூலையைக் கிழிச்சுக் கட்டுப்போடுறார்.

 

'என்ர ஆருயிர் மனைவி.... அவளை இப்படியே போட்டுவிட்டு எப்படி வரஏலும். ஏழுமாதக் குழந்தை அவள் வயிற்றுக்குள்ளேயே கருகிப்பேச்சுது. இவையள் இல்லாமல் நான் மட்டும் இருந்து என்ன செய்யப்போறன்....?'

கிழவர் எங்கேயோ இருந்து ஒரு தகரத் துண்டைக் கொண்டு வாறார்.

'தம்பி இதால கிடங்கைக் கிண்டு......' என்றபடி அவர் வேகமாக அந்த தகரத் துண்டால மண்ணை கிளறுறார். எனக்குள்ள ஒரு வேகம்... அவரிட்ட இருந்து  அதைப் பிடுங்கி வேகவேகமாக மண்ணைக் கிளறுறேன். காய்ந்து வறண்ட நிலம் அவ்வளவு லேசில் குழியைத் தோண்டமுடியேல்லை. கிழவனும் ஏதோ தடியை முறிச்சு தன்ர பங்குக்கு நிலத்தை குத்தி எனக்கு உதவுறார்.

துவக்குச் சூட்டுச் சத்தம் இப்ப நல்லாக் கிட்டக் கேட்குது. சனம் விழுந்தடிச்சு ஓடுதுகள். ஆமிக்காரங்கள் ஏதோ கத்திக் கதைக்கிற சத்தம் கூடக் கேக்குது. வாகனங்களின்ர உறுமலும் கேட்குது. சனங்கள் என்னையும் கிழவனையும் பார்த்து புறுபுறுத்துக்கொண்டு போகினம்.

'அவையளுக்காக என்ர மனுசியின்ரயும்;, பிள்ளையின்டயும் உடம்பை நாய், நரி தின்னவும், காக்காய் கொத்தவும் இப்பிடியே போட்டிட்டு வரேலுமே?'

அதுக்குள்ள எரிகுண்டொன்று எங்களுக்கு அருகில் விழுந்து வெடிக்குது. ஒரு குடும்பம், இரண்டு, மூன்று குழந்தைகள் என்ர கண்ணுக்கு முன்னாலேயே எரிஞ்சு துடிதுடிக்கியினம். அதைப் பார்த்ததும் என்ர உடம்பெல்லாம் பதறத் தொடங்கிற்றுது. மரண பயம் என்னைப் பிடிச்சுட்டுது. அந்தக் கோரச் சாவைப் பார்த்ததும் எனக்கு எல்லாமே மறந்து போனது. எப்பிடியாவது ஓடித்தப்பவேணும். எனக்கு உடம்பெல்லாம் பதறத் தொடங்குது. கிழவனையும் இழுத்துக்கொண்டு நான் ஓடுறன்.

உடம்பைக் குறுக்கியும், குனிந்தபடியும், ஊர்ந்தும், தவழ்ந்தும் அந்த சென்ரிபொயின்ட்டை நெருங்கி விட்டம். சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம்..... என்ர கையைப் பிடிச்சிருந்த கிழவரினர் கைபிடி நழுவிப்போச்சுது. அவர் விழுந்துட்டார். நான் மற்ற சனத்தோட சேர்ந்து கைகளை மேல தூக்கிக்கொண்டு நடக்கிறன். இராணுவம் அப்பிடியே எங்களச் சுத்திவளைச்சுது. ஏதேதோ விசாரணைகளுக்குப் பிறகு எஞ்சியிருந்த எங்களை தங்களின்ர வாகனங்களில ஏத்திக்கொண்டு  முகாமுக்கு கொண்டுவந்தவை.

அங்கதான் பெரியக்காவைப் பார்த்தன். தலையில் காயம்பட்டிருந்த கயனும் இறந்து போய் அத்தான்தான்; வழியில ஒரு பாழுங்கிணத்துக்குள்ள அவனை தூக்கிப் போட்டுட்டு வந்தவராம்.

'நரியள் குதறாமல் என்ர மகன் பத்திரமா இருப்பான்..' அத்தான்  தலையில் கைவைத்தபடி திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கிறார்;. சசியின்ர செய்தி கேட்டதும் அக்காவால அழக்கூட முடியேல்லை. யாருக்காக அழுகிறது? எதை நினைச்சு அழுகிறது எண்டு தெரியேல்ல.

பிறகு முகாம் வாழ்க்கை, விசாரணைகள் எண்டு தொடர, அக்காதான் முகாமுக்கு வெளியில போய் என்னை வெளிநாட்டுக்கு அனுப்ப வேணும் எண்டு காரியங்களைச் செய்தவா. என்ர அம்மாவும், பெரியண்ணன் குடும்பம், சின்னக்கா குடும்பம், தங்கச்சி எல்லாரும் இங்க கனடாவிலதானே இருக்கினம்.

'ஆரு இருந்தென்ன என்ர சசியும்... பிள்ளையும் எனக்கில்லையே.....'

மூத்தக்கா தான் என்னை சின்னன்னில இருந்து வளர்த்தவா. என்னில சரியான பாசம்.

'நான் பெத்த பிள்ளையத் தான் இழந்திட்டன். உன்னையும் இழக்க என்னால ஏலாது' எண்டு என்னோட பிடிவாதமா நிண்டு என்னை இங்க அனுப்பிவைச்சது அவாதான்.

என்ர மனம் முழுக்க அந்த முள்ளிவாய்க்கால் காட்டுக்குள்ள தான் சுத்திக்கொண்டு இருக்குது.

'என்ர சசி.... என்ர பிள்ளை...'

'இவ்வளவு காலமும் எனக்குச் சோறு போட்டுத் தாய்க்கு தாயாய் இருந்து என்னைப் பார்த்தவள். அவளின்ர உடம்ப நல்ல விதத்தில அடக்கம் செய்யக் கூட என்னால முடியேல்லையே...'

'பாவி...'

'நான் பாவி.... மகா பாவி. அந்தக் குழந்தைய கையில வைச்சுக் கொஞ்சத் தான் ஏலாமல் போச்சு. கடைசியா நாய் நரியள் தான்...'

'ஐயோ... நினைச்சால் எனக்குப் பைத்தியம் தான் பிடிக்குது'

'நான் ஏன் இங்க வந்தன். நான் சுயநலக்காரன், எனக்கு என்ர உயிர்தான் பெரிசாப்போச்சுது.... சீ.... நான் விசரன்...'

'நான் விசரன்...'

என் கால்கள் வலியெடுக்கின்றன. நான் நடக்கிறேன்.

நடந்துகொண்டே இருக்கிறேன்.

 

( 'ஞானம்' சஞ்சிகை நடாத்திய, புலோலியூர் க. சதாசிவம்; ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் முதலாம் பரிசு பெற்ற கதை)

ஞானம்
உயிரோசை, 
 

அசோகன் கொழும்பில இருக்கிறான்...
-------------------------
தேவமுகுந்தன்
------------------------
வீடு குழம்பிப்போயிருந்தது. முதலாவது அறையை ஒதுக்கி சேந்தனின் குடும்பத்திற்குக் கொடுத்ததில், இவனது குடும்பத்தவர் எல்லோரும் இரண்டாவது அறையையே பயன்படுத்த வேண்டியிருந்தது.
இப்போது இரண்டாவது அறையிலிருக்கும் சாமான்களை எடுத்து முதலாவது அறைக்குள் அடுக்க வேண்டியுள்ளது. இனி இரண்டாவது அறையைத் துப்பரவாக்க வேண்டும். 

குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய முதுகு உளைந்தது. வியர்த்துக் கொட்டியது. அவர்களை ஊருக்கு அனுப்ப அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து இரத்மலானை விமான நிலைத்திற்குச் சென்றிருந்தான். இப்போது நித்திரை தூக்கியடிக்கின்றது. வருடாந்தம் சுமார் பத்துப் பன்னிரண்டுதரம் இப்படிப்பட்ட வேலைவந்து சேர்ந்து விடுகின்றன. மகனும் மகளும் பாடசாலைகளிலிருந்து இரண்டு மணிக்குப் பின்புதான் வருவார்கள். மனைவி வர ஐந்து மணியாகும். இந்த வேலைகளை முடித்து பத்தரைக்கு முன்பு அலுவலகத்துக்கு போய்ச் சேர்ந்தால் 'ஷோர்ட் லீ'விலை சமாளிக்கலாம். இல்லாவிட்டால் அரைநாள் லீவு போடவேண்டியிருக்கும். லீவுகள் முடிந்து கொண்டிருக்கின்றன.

வந்தவர்களை விமான நிலையத்திலிருந்து கூட்டிவர ஒருநாளும், அவர்களுடன் வங்கி, பொலிஸ் நிலையம், கடைகள் என்று திரிய இன்னொரு நாளுமாய் இரண்டு நாட்கள் 'லீ;'வெடுத்தாயிற்று. இன்னும் இரண்டு வாரத்தால் அவர்கள் திரும்பி வரும்போது, கூட்டித்திரியவும் கட்டுநாயக்காவுக்குப் போகவுமாய்; இருநாட்கள் லீவு எடுக்க வேண்டி வரலாம்.
...

அவனது வீடு ஊரிலோ வெளிநாடுகளிலோ இல்லாமல் இடையில் கொழும்பில் இருப்பதனாற்தான் இந்தச் சிக்கல். இரண்டு அறைகளையும் கூடத்தையும் சமையல் அறையையும் கொண்ட இந்த வாடகை வீட்டில் வேறு ஆட்கள் தங்குவதென்பது சிரமம்தான். பிள்ளைகளின் படிப்புக் குழம்பும். இவனது எழுத்து வேலைகள் வாசிப்புக்கள் குழம்பிப் போகும். தனிப்பட்ட சுதந்திரம் தொலைத்தவர்களாக இவர்கள் நான்குபேரும் அந்த நாட்களில் உணர்வார்கள்.

வருபவர்களை பொலீஸில் பதிவு செய்வதற்காய் அவர்களையும் வீட்டுச் சொந்தக்கார பெரேராக் கிழவனையும் கூட்டிக் கொண்டு பொலீஸ் நிலையத்திற்கு அலைய வேண்டும். பெரேராக் கிழவன் முகம் சுழிப்பான், புறுபுறுப்பான். அந்த மாத வாடகையைச் செலுத்தும் போது இரண்டாயிரமோ மூவாயிரமோ கூடுதாலாக அவனுக்கு கொடுக்க வேண்டியிருக்கும். அடுத்த மாதப் பட்டியல்கள், நீர் அளவீட்டுமானியும் மின்சார அளவீட்டுமானியும் சிக்கன எல்லைகளைத் தாண்டிச் சுற்றியிருப்பதைத் சுட்டிக் காட்டும். தொலைபேசிக் கட்டணம் உயர்திருக்கும். அடுத்த மாதச் செலவுகள் கையைக்கடிக்கும்.

இவற்றை தவிர்க்கவே அசோகன் முயற்சிக்கிறான். ஆனால் தவிர்க்க முடியாமல் தடுமாறுகிறான். வெளிநாடுகளில் இருக்கும் இவனது-மனைவியினது நெருங்கிய உறவினர்கள்-சிறுவயதில் ஒன்றாய்ப் படித்த- விளையாடிய நண்பர்கள் எந்தவொரு தொடர்புமற்று இருப்பார்கள். இலங்கைக்கு வருவதற்கு ஓரிரு வாரத்திற்கு முன்பு திடீரென தொலைபேசியில் அன்பொழுகத் கதைக்கத் தொடங்கி பின்னர் தாங்கள் இலங்கைக்கு வரும் தினம், விமானத்தின் இலக்கம் என்பவற்றைக் கொடுத்து கட்டுநாயக்காவில் வந்து தங்களைக் கூப்பிடும்படி கூறுவார்கள்.
...

மகனின் புத்தக மேசையை இழுத்து வந்து முதலாவது அறைக்குள் வைத்தவன், புத்தகங்களை அள்ளிக் கொண்டுவந்து அதில் குவித்தான். இனி மகளின் மேசையை இழுத்து வரவேண்டும். பாடசாலைகளில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக்களில் ஆசிரியர்கள்;, பிள்ளைகள் வீட்டுவேலைகளை ஒழுங்காகச் செய்து வருவதில்லை- வீட்டில் படித்துக் கொண்டு வருவதில்லை என இவனிடம் முறைப்பாடுகள் செய்வார்கள். இவனால் பிள்ளைகளைக் கண்டிக்க முடிவதில்லை. தனது வீட்டில் படிக்கும் சூழல்; இல்லையென்பதை ஆசிரியர்களிடம் சொல்ல இவனுக்கு வெட்கமாக இருக்கின்றது.

வருபவர்கள், தங்களுடன் இவர்கள் முழுநேரமும் இருந்து கதைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் வீட்டில் இருக்கும்போது, மகனோ மகளோ தங்கள் வீட்டுப் பாடங்களைச் செய்வதற்காகப் புத்தகம் கொப்பிகளை எடுத்தால், 'இவரின் மகனுக்கு பெரிய லெவல் எங்களோடை சேருறான் இல்லை. எந்த நேரமும் புத்தகங்களோடை இருக்கிறான்.' என்றோ 'மகளுக்கு தான்தான் பெரிய படிப்புப் படிக்கிறா என்ற நினைப்பு, எங்களைக் கணக்கெடுக்கிறா இல்லை' என்றோ ஊரிலுள்ள உறவினர்களுக்கு சொல்வார்கள்.

'இஞ்சத்தைப் படிப்பு 'ஸ்ராண்டட்' காணாது. அங்கை என்றால்.............' என்று தங்கள் பெருமைகளை வீட்டுப்பாடம் செய்ய கொப்பியையும் பேனாவையும் எடுக்கும் பிள்ளைகளிடம் விளக்கத் தொடங்குவார்கள். பிள்ளைகள் கொப்பி, புத்தகங்களை மூடிவைத்து விட்டு கொட்டாவி விட்டபடி அவர்களின் அலட்டல்களைக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்க இவனுக்குத் தர்ம சங்கடமாயிருக்கும்.
...

சாப்பாட்டு மீதிகள், சிகரெட் அடிக்கட்டைகள், ரொபி மேலுறைகள்... என குப்பைகள் அறையினுள்ளே பரவியிருந்தன. அடிக்கடி கனடா நாட்டின் சுத்தத்தையும் அங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்களையும் பெருமைபொங்கக் கதைக்கும் அவர்களுக்கு கழிவுப் பொருட்களை குப்பைக் கூடைக்குள் இடவேண்டுமென்ற அடிப்படைப் பண்பு கூட இல்லாதது இவனுக்கு ஆச்சரியமாயுள்ளது.

இவனது குடும்பத்தவர் கொதித்தாறிய குழாய் நீரையே வழமையாகப் பருகுவார்கள். அந்த நீர் சுத்தமானதல்ல என்று சேந்தன் ஆட்கள் கருதியதால் இவன் போத்தலில் அடைக்கப்பட்ட 'மினரல் வோட்டர்' வாங்கி வைத்திருந்தான். அப்படியெல்லாம் சுத்தம் பார்த்தவர்களின் குப்பைகளை அள்ளி பெரிய கறுப்பு நிற பொலித்தீன் பையில் இட்டுக்கட்டி வெளிவாசலில் வைத்தவன், ஈரத் துணியால்; நிலத்தைச் துடைக்கத் தொடங்கினான்.

இவனது வீட்டிலுள்ளோர் வீட்டுக்குள்; காலணிகள் அணிவதில்லை. ஆனால் வெளிநாடுகளில் இருந்து வருவோர் குளியலறை, மலகூடம், சமையல் அறையென வீடு முழுதும் இறப்பர் செருப்புக்களை அணிந்தபடி திரிவார்கள். அவர்களுக்கு ஒன்றும் சொல்ல முடியாது.
...

கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் பிரதான பாதை மூடப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் வசிப்போர்;, கொழும்புக்கு வந்து 'கிளியரன்ஸ்',விமானப் பயணச் சீட்டு என்பவற்றைப் பெற்றே யாழ்ப்பாணம் செல்ல வேண்டியுள்ளது. இதற்காக அவர்கள் கொழும்பில் ஒருவாரமளவில் தங்க வேண்டியுள்ளது. அவர்களிடம் இருக்கும் வசதிக்கு பெரிய நட்சத்திர விடுதிகளில் கூடத் தங்கலாம். ஆனால் உறவினர், நண்பர்கள் வீடுகளிலேயே தங்குகின்றனர். கொழும்பில் தங்கள் தேவைகளுக்காக பல கூட்டிச் செல்ல நண்பர்கள், உறவினர்களை அழைக்க இது வசதியெனக் கருதகிறார்கள்.
...

சேந்தன் இவனது உறவினன். தூரத்து உறவுவழியில் சகோதரன் முறை. சமவயதினன். உறவினன் என்பதிலும் பார்க்க இருவரும் நண்பர்களாகவே பழகியிருக்கிறார்கள். சிறுவயதில் ஒன்றாக விளையாடித் திரிந்தவர்கள்.

சேந்தன் பத்தாம் வகுப்புக் கடைசியில் கனடா போனதன் பின்னர் அவனுக்கும் இவனுக்கும் தொடர்பறுந்து போயிருந்தது. பதினெட்டு வருடங்களாக எந்தத் தொடர்புமில்லாதிருந்த சேந்தன், திடீரென தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் அடுத்த வாரம் குடும்பத்துடன் இலங்கை வருவதாகவும் தங்களை கட்டுநாயக்காவுக்கு வந்து கூட்டிச் செல்லுமாறும் கூறி விபரங்களைக் கூறிபோது இவனால் மறுக்க முடியவில்லை.

இந்த வீட்டில் மேலதிகமாக ஒருவரை தங்க வைப்பதே சிரமமாயுள்ள போது நால்வரைக் கொண்ட சேந்தனின் குடும்பத்தினரை தங்க ஒத்துக் கொண்டது தவறெனப் புரிகின்றது. ஆனால் மறுத்திருந்தால், அசோகன் இப்ப மாறிப் போய்விட்டான் என்று சேந்தன் பலரிடம் சொல்லித் திரியலாம்.


அவனின் குடும்பம் வந்து நின்ற நாட்களில் பிள்ளைகளுக்கு தவணைப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பரீட்சைகளுக்கு ஆயத்தப்படுத்த பிள்ளைகள் சிரமப்பட்டதை இவன் அவதானித்திருந்தான். வந்தவர்கள் நடுக்கூடத்தில் இருந்து தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகரித்து விட்டு கத்திக் கும்மாளமிட்டார்கள்.

சேந்தனின் குடும்பத்தவர்களுடன் புறக்கோட்டைக்குச் சென்றிருந்தான். சேந்தனும் மனைவியும் ஒவ்வொரு பொருளையும் வாங்குவதற்கு பேரம்பேசியது இவனுக்கு ஆச்சரிமாயிருந்தது.
சேந்தன் சிறுவனாக இருந்த காலத்தில் கொழும்பில் தொழில் புரிந்த தகப்பன் வங்கியொன்றில் அவனின் பெயரில் சிறுவர் சேமிப்புக் கணக்கொன்றை ஆரம்பித்திருந்தார். அந்தக் கணக்கை மூடி பணத்தை மீளப் பெற வேண்டுமென சேந்தன் இவனைக் கூட்டிக் கொண்டு கொட்டாஞ்சேனையில் இருந்த அந்த வங்கிக் கிளைக்கு வெள்ளவத்தையில் இருந்து பஸ்ஸில் சென்றான்.

தொடர்ச்சியாக பல வருடங்களாக நடவடிக்கைகள் ஏதுமற்றிருந்த அந்தக் கணக்கு அரசின் புதிய சட்டதிட்டங்களின்படி மூடப்பட்டு பணம் மத்திய வங்கிக்கு அனுப்பப்பட்டிருந்தது. அசோகன் வங்கி முகாமையாளருடன் கதைத்துப் பார்த்தான். அவர் இவனுக்கு புதிய சட்டதிட்டங்களை தெளிவாக விளக்கினார். ஆனால் சேந்தன் முகாமையாளரை ஏசியபடி வந்து, இவனை மத்திய வங்கிக்கு வருமாறு கூப்பிட்டான். அங்கு சென்றாலும் இந்த பணத்தை பெறமுடியாது என்பது இவனுக்குப் புரிந்தது. ஆனால் சேந்தன் இவனை விடுவதாயில்லை. இருவரும் அங்கு போய் அலைந்ததுதான் மிச்சம்.
...

யாழ்ப்பாணம் சென்று திரும்பியவர்கள் சற்றுக் கறுத்திருந்தார்கள். பிள்ளைகளில் வாட்டம் தெரிந்தது. யாழ்ப்பாணக் காலநிலை ஒத்துவராமல் பிள்ளைகளுக்கு வருத்தம் வந்ததாகச் சேந்தன் சொன்னான். அந்த வெக்கைக்குள்ளை எப்படித்தான் மனிஷர் சீவிக்கிறார்களோ என ஆச்சரியப்பட்டுக் கதைத்தான்.

இரண்டாம் தவணை விடுமுறை ஆரம்பித்திருந்ததால் அசோகனின் பிள்ளைகளும் சேந்தன் குடும்பத்தினருடன் காலையில் தெகிவளை மிருகக் காட்சிச்சாலைக்குச் சென்றிருந்தனர். மாலையில் அவர்களுடன் பொருட்கள் வாங்க பல கடைகளுக்கு அலைய வேண்டியிருந்தது.


யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு வந்த - கொழும்பில் வாங்கிய பொருட்களை சேந்தன் சூட்கேஸ்களில் அடுக்கிக் கொண்டிருந்தான். அவர்களது விமானம் அடுத்தநாள் காலையில் புறப்படவிருந்தது.
...

அதிகாலையில் கட்டுநாயக்கா விமான நிலைத்துக்குச் சென்று சேந்தனின் குடும்பத்தவர்களை வழினுப்பிவிட்டு வந்தான். இனி, அவர்கள் கனடா போய்ச் சேர்ந்ததை அறிவிக்க ஒருமுறை தொலைபேசி எடுக்கக்கூடும். பிறகு அடுத்தமுறை இலங்கைக்கு வருவதற்கு ஓரிரு வாரங்கள் முன்னதாக கட்டாயம் அழைப்பு எடுப்பார்கள்.


இப்போது வீட்டைச் சுத்தம் செய்ய பாடசாலை விடுமுறையில் நிற்கும் பிள்ளைகள் அசோகனுக்கு உதவினர்.

தொலைபேசி ஒலித்தது. சேந்தனின் அம்மா-இவனுக்கு தூரத்துப் பெரியம்மா கதைத்தார். சேந்தனாக்களை விமான நிலையத்துக்கு கூட்டிச் சென்ற விபரங்களை முதலில் விசாரித்து அறிந்தவர், .

'...அசோகன், நீ வடிவாக சேந்தன் ஆட்களைக் கவனிக்கேலையாம். கனகாலமாய் கொழும்பிலை இருக்கிறனி நினைத்திருந்தால் அவன்ரை 'பாங்' கணக்கை மூட உதவிசெய்திருக்கலாமாம். உன்ரை பெண்சாதி பிள்ளைகள் அதுகளோடை வடிவாய்ச் சேரேலையாம். சொந்தக்காரன் அசோகன் கொழும்பில இருக்கிறான் என்றுதானே உன்னைத் தேடி அதுகள் வருகுதுகள்....' என்று தொடர்ந்து
'மார்கழியிலை இளையவன் வசந்தன், குடும்பத்தோடை லண்டனிலிருந்து வாறான். அதுகளை ஒருக்கா கவனமாய் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி விடு ராசா' என்று முடித்தார்.

நீயே நிழலென்று
----------------
ஸ்ரீரஞ்சனி
-----------------
தொலைபேசி ஒலிப்பிய மணிச்சத்தம் கேட்டதும் மீன் வெட்டிக் கொண்டிருந்த கையை அவசரமாகக் கழுவி விட்டு, அது தீபாவாகத் தானிருக்கும் என்று ஆர்வத்துடன் ஓடிச் செல்கிறேன் நான். ஆனால் அது வழமையாக வரும் மாதாந்த கிறிஸ்தவ ஆராதனை பற்றிய பிரச்சாரத்துக்கான மின்கணிணி அழைப்பு என தொலைபேசி இலக்கத்தைப் பார்த்ததும் புரிகிறது. எனக்குத் தேவையற்ற அந்தச் செய்தி தொலைபேசியில் பதியப்படாமல் இருப்பதற்காக றிசீவரைத் தூக்கி மீண்டும் வைத்து, வந்த லைனைக் கட் பண்ணி விட்டு மீண்டும் குசினிக்குள் போகிறேன். இருந்தாலும் அவள் சொன்ன மாதிரி எப்படியும் இன்று போன் பன்ணுவாள் என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இருக்கவில்லை.
அந்த நினைவைத் தொடர்ந்து தீபா பல்கலைக்கழகம் போக முன் சினேகிதர்களுடன் காம்பிங்க்குப் போன போது. எதிர்பாராமல் வந்து மனதில் நிறைவை ஏற்படுத்திய அவளின் கோல் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.

'மம், கௌ டிட் யுவர் அப்பொயின்ற்மேன்ற் கோ?'
'ஏ, பிள்ளைக்கு எப்பிடி ஞாபகம் வந்தது? எங்கையிருந்து போன் எடுக்கிறாய்?'
'இங்கையிருக்கிற ஒரு கடையிலிலை இருந்து போன் பண்ணுறன். என்ன நடந்தது எண்டு கேக்கிறதுக்காண்டியும், உங்களோடை கதைக்கிறதுக்காண்டியும் ஒரு மூண்டு மைல் தூரம் ஓடி வந்தனான.;'
'ஓ மை பேபி, ற் வாஸ் ஒகே. அவ்வளவு தூரம் தனிய ஓடி வந்தனியே?'
'யேஸ், ஐ லவ் யு, என்ன நடந்தது எண்டு எனக்கு தெரியோணும் போலிருந்தது.'
'அம்மாவுக்கு டே சேஜறி நடந்த போது ஆறு வயசுக் குட்டியாய் இருந்த போதே கெற் வெல் காட் செய்து கொண்டு வந்தவள் எல்லே என்ரை பிள்ளை,' மனசு சிலிர்த்துக் கொள்கிறது. உண்மையிலேயே அவளுக்கு என்னில் அத்தனை பாசம் தான்.

ஏதாவது சாப்பிடக் கொடுத்தால், 'நல்லா இருக்குது, தாங்ஸ். நீங்கள் சாப்பிட்டியனியளே?' என பாராட்டும் கரிசனையுமாக கேட்பாள். வீட்டில் நிற்கும் பொழுதுகளில் 'அம்மா நான் சாப்பாடு செய்யப் போறன், உங்களுக்கு நூடில்ஸ் சாப்பிட வேணும் போலிருக்கா அல்லது ஏதாவது சான்ட்விச் செய்யட்டா?' என்பாள். 'கடைக்கு நீங்கள் மட்டும் போக வேண்டாம். நானும் வருகிறேன் போட்டு வந்து கோம் வேக் செய்யலாம். ஐ டோன்ற் வான்ற் யு பி எலோன்,' பிடிவாதாமாய்ச் சொல்வாள்.
அப்படி அவள் என்னுடன் ஒட்டிக்கொண்டு இருந்ததால் தான் இப்ப இப்படி இருக்கும் தனிமையைத் தாங்க முடியவில்லை என்ற நிதர்சனத்தில் மனது மிக வலிக்கிறது.

கலியாணம் செய்து ஐந்து வருடங்களாகியும் கர்ப்பம் தங்கவில்லை. அதற்காகப் பல வேண்டுதல்கள், ஆயிரம் பரிசோதனைகள், அதை விட மற்றவர்களின் கேள்விகள், குடையல்கள் என்று இருந்த போது எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்குமாய்ப் போல் எதிர்பாராத ஆச்சரியமாய் தீபா என் வயிற்றில் வந்த போது எனக்கு வந்த ஆனந்தம் அளவிட முடியாதது.

அன்றிலிருந்து வேலையைக் கலியாணம் கட்டியினியளோ, என்னைக் கட்டினியளோ என அவரிடம் போட்ட சண்டைகளுக்கும் கூட முற்றுப்புள்ளி வந்தது. அவளை என் கைகளில் வாங்கிய கணத்திலிருந்து அவரைக் காணவில்லை என தவித்து, ஏங்கிப் பின்னர் அந்தக் காத்திருப்பு எரிச்சலைத் தர அவருடன் பிரச்சனைப்பட்ட பொழுதுகள் போய் அவர் வீட்டுக்கு பிந்தி வந்தால் நல்லம் என மனம் எண்ணும் அளவுக்கு தீபாவுடன் என் வாழ்க்கை ஐக்கியமாய்ப் போய் விட்டது.
காலையில் பாடசாலைக்குப் போய் மாலை 2 மணிக்கு வீட்டுக்கு வந்த பின் இரவு படுக்கும் வரை அவளுடன் விளையாடுவதில் எனக்கு நேரம் எப்படி போவது என்றே தெரிவதில்லை.
பின்னர் அவளுக்கு மூன்று வயதான போது விஸ்வருபம் எடுத்த நாட்டுப் பிரச்சனை எம்மை நாட்டை விட்டுத் துரத்தி கனடாவில் தஞ்சம் கேட்க வைத்தது. அங்கு செய்த தொழிலை இங்கு தேட வேண்டுமானல் மேலும் படிக்க வேண்டும் என்று ஆன போது விடியவெள்ளன நித்திரையில் பிள்ளையை இழுத்துக் கொண்டு போய் பிள்ளைகள் காப்பகத்தில் விட்டுவிட்டு அதற்காகப் படிக்க போவதையோ அல்லது வேறு வேலைக்கு ஓடுவதையோ என்னால் கற்பனை பண்ணிப் பார்க்கவும் முடியவில்லை.
'ஒரு பிள்ளை தானே நான் வீட்டில் இருக்கிறேன் நீங்கள் உழைத்தால் போதும்' என கணவனிடம் சம்மதம் வாங்கிக் கொண்டேன்.
ஒருநாள் நாங்கள் இருந்த தொடர் மாடிக்கட்டிடத்தின் முன் இருந்த நூலகத்துக்குப் போய் 'மூன்று வயதுப் பிள்ளையை உள்ளே கூட்டி கொண்டு வரலாமோ' என நான் அசட்டுத்தனமாய்க் கேட்கிறேன். அந்த நூலகர் பிள்ளையின் பெயரில் 'லைபிரரிக் காட்' கூட எடுக்கலாம் என கனடாவில் பிள்ளைகளுக்கும் இலக்கியத்துக்கும் கொடுக்கப்ப்டும் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டுகிறார். பிறகென்ன எங்கள் பொழுதுகள் அங்கு ஆனந்தமாய்க் கழிகின்றன.

தீபா பாலர் வகுப்பை ஆரம்பித்த போது பெரிய கதைப் புத்தகங்கள் வாசிக்குமளவுக்கு அவளின் வாசிப்புத்திறன் விஸ்தரித்திருந்தது. அப்போது அந்தப் பாடசாலையில் ஆரம்பித்த ஒரு பரீட்சார்த்த வாசிப்புப் பயிற்சியின் வெற்றியைப் பற்றி மற்றவர்களுக்கும் அறிவிப்பதற்கு அவர்கள் செய்த விளம்பரத்தில் an immigrant child in JK can read chapter books without any hesitance என வருகிறது. இதனால் அவளின் கெட்டித்தனம் செய்தியாக, பல பெற்றோர் என்னை ஒரு வெற்றியாளராகப் பார்க்கின்றனர். எப்படி நான் அவளைப் படிப்பிக்கிறேன், தங்கள் பிள்ளைகளுக்கு தாம் எப்படி உதவலாம் என என்னைப் பல விசாரணைகள் செய்கின்றனர். நானும் புளகாங்கித்துப் போகிறேன். அவளின் வெற்றி மட்டும் என் வாழ்வுக்குப் போதுமானது என மனம் நிரம்பி விடுகிறது.

முதலாம் வகுப்பில் அவளுக்கும் மட்டும் அவளின் ஆசிரியர் பிரத்தியேகமாய் கொடுத்த project ல் Red Panda பற்றி எழுத அவள் முடிவெடுக்கிறாள். நூலகரிடம் போய் Red Panda பற்றிய புத்தகங்கள் அங்கு இருக்குமா என அவரின் மின்கணிணியில் உள்ள பதிவுகளில் தேடிப் பார்த்துச் சொல்ல முடியுமா எனக் கேட்கிறோம்.

அவர் ஒரு குறித்த இலக்கத்தைத் தந்து அந்த இலக்கத்தின் கீழ் தான் Red Panda சம்பந்தமான எல்லாப் புத்தகங்களும் இருக்கும் என்கிறார். அதற்குத் தீபா Red Panda ஒரு Panda இல்லை,' எனச் சொன்ன போது அவருக்கே அது செய்தியாக இருக்கிறது. அவளின் அறிவில் அவர் வியந்து போகிறார்.

 'தீபா, உனக்கு எப்படித் தெரியும்? ரீச்சர் சொன்னவவா?' என ஆவலுடனும் பெருமையுடனும் கேட்கிறேன்.

'இல்லை ரீவியிலை பார்த்தனான்,' என்கிறாள். இப்படி அவளின் அறிவை, ஞாபகசக்தியை, புத்திக் கூர்மையைப் பார்த்து வியந்த சந்தர்ப்பங்கள் ஏராளம். அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் பதில் தேடி நான் ஆராய்ந்த பொழுதுகள் கணக்கில் அடங்காதவை. அவளின் பாசமும் கெட்டித்தனமும், அமைதியான சுபாபமும் இவளைப் பிள்ளையாகப் பெற நான் என்ன புண்ணியம் செய்தேன் என எப்போதும் என்னைக் கண் மல்க வைக்கும். அவளின் சான்றிதள்களையும் தேர்ச்சித்தாள்களையும் வங்கியில் பாதுகாப்பான இடத்தில் வைத்து அதுவே எமது சொத்தாக மனம் மகிழ்கிறோம்.

ஒவ்வொரு முறையும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு முடிந்து வந்த பின் ஆசிரியர் அவளைப்; பற்றிச் சொல்லிப் பாராட்டியவை யாவும் பல தடவைகள் மீள மனதில் ஓடி ஒரு இனம் புரியா மகிழ்வைக் கொண்டு வரும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் Science centre, museum என்று அவளுடன் போவதும் நாள் முழுக்க அங்கு கழிப்பதும் எமது வாடிக்கையாகின. கோடை விடுமுறை வந்து விட்டால் Wonderland, Ontario Place, strawberry picking, camping என்று போய் நானும் அவளுடன் என்னை மறந்து மகிழ்வது தான் எமது வாழ்க்கையாகிறது. போதாதற்கு piano வகுப்புக்கள் swimming பயிற்சிகள் என்று எப்போதுமே ஓட்டம் தான்.

பின்னர் அவள் வளர்ந்த பின் 'கை உளையுது, கால் உளையுது, சோம்பலாயிருக்குது' என நான் சொன்ன பொழுதுகளில் என் உடல் வலுவைப் பேண, என்னை இழுத்துக் கொண்டு வீட்டைச் சுற்றிச் சுற்றி அவள் ஓடிய ஓட்டங்கள்... இப்படிப் பல நினைவுகள் மாறி மாறி வந்து கண்ணீரை கொட்ட வைத்துக் கொண்டிருந்தன.

மருத்துவக்கல்லூரியில் அவள் விசேட சித்தியடைந்து மேற்படிப்புக்காக புலமைப்பரிசில் கிடைத்து அமெரிக்காவுக்குப் போய் பத்து மாதங்கள் ஆகிவிட்டன. எனக்கு இன்னமும் அதை ஏற்கும் மனப்பக்குவம் வரவில்லை. அது மட்டுமன்றி மன அழுத்தம் என்று குளிசை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குப் வந்து விட்டேன்.

சென்ற முறை இது பற்றிக் கவுன்சிலருடன் கதைத்தவை நினைவுக்கு வருகின்றன. 'சரி! உங்களுக்கே உங்கடை பிரச்சனை விளங்குது. பிள்ளைக்காக வாழ்ந்து போட்டு இப்ப இப்படி இருக்கிறது எந்த வித நோக்கமும் இல்லாத வாழ்வு எண்டு நீங்கள் நினைக்கிறியள். அது உங்களுக்கு சலிப்பை, ஏமாற்றத்தைத் தருது.'

'ஓம்! நீங்கள் சொன்ன மாதிரி தொண்டர் வேலைக்கு போறனான். ஆனாலும் அது பெரிசாய் உதவேல்லை,' மீண்டும் கண்ணீர் தடைசெய்ய முடியாமல் ஓடுகிறது.

'இந்த விரக்தியிலிருந்து வெறுமையிலிருந்து மீள என்ன செய்யலாம் எண்டு நீங்கள் நினைக்கிறீர்கள்?'

மௌனமாய் இருக்கிறேன்.

கவுன்சிலரே தொடர்கிறார், 'ம், உங்கடை மனம் நிறைஞ்சு போற மாதிரி ஏதாவது ஒண்டோடை ஒட்டிப் போகவேணும். மகளோடை போய் இருந்தால் நல்லம் எண்டு நினைக்கிறியளோ, அதுக்கு வழி இருக்குதோ அல்லது இங்கை உங்களுக்கு எண்டு ஒரு வாழ்வை உருவாக்கப் பாருங்கோ. எதையும் யோசியாமல் மனம் லயித்து செய்யக்கூடியதாய் ஏதாவது படிக்கலாம் அல்லது வேலை செய்யலாம். ஏன் ஒரு பிள்ளையைத் தத்தெடுத்து கூட வளர்க்கலாம். இந்த மன நெருக்கீட்டிலிருந்து இருந்து வெளியேற வேணும் இல்லையா? யோசித்துப் பாருங்கோ. அடுத்த முறை வரும் போது ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாய்க் கதைப்பம்,'

அப்படி கவுன்சிலர் சொன்னது பற்றி யோசித்துப் பாக்கிறேன்.

பல்கலைக்கழகத்திற்கு போன பின் தானே தன் வேலை எல்லாம் செய்யப் பழகி, என்னில் தங்காமல் வாழ தீபா பழகிக்கொண்டாள். நான் விடிய எழும்பி சாப்பிட்டிட்டியா, சாப்பாடு எடுத்தியா எண்டு கேட்டால், சில வேளைகளில் அவளுக்கு எரிச்சல் கூட வந்திருக்கிறது. அப்பவெல்லாம் அவளின் மற்றவர்களில் தங்கியிராத தன்மையைப் பற்றி மகிழாமல், 'என் தேவையை நாடுகிறாள் இல்லையே என்று கவலைப்பட்டிருக்கிறேன';. இப்ப என்னில் ஒரு பகுதியை இழந்தது போல் என்ன செய்வதெனறு தெரியாமல் குழம்பிப் போய் நிற்கிறேன், அவளின் அசைவை எப்போ என் கருப்பையில் நான் உணர்ந்தேனோ அன்றிலிருந்து நான் அம்மாவாக மட்டுமே இருந்திருக்கிறேன்.
என்னைப் பற்றி எந்த நினைவும் இல்லாமல், எனக்கென ஒரு அடையாளமும் இ;ல்லாமல,; வெறும் தீபாவின் அம்மாவாக மட்டுமா வாழ்ந்ததால் தான் எனக்கென ஒரு இலக்கு இல்லாது என் வாழ்க்கைப் படகு ஆட்டம் காண்கிறது என்பது புரிகிறது. வாழ்க்கை பல பக்கங்களைக் கொண்டது எல்லாவற்றிலும் ஒரு சமநிலையான அணுகுமுறை இருந்திருக்க வேண்டும் என்பதும் விளங்குகிறது.

மீண்டும் தொலைபேசி மணி ஒலிக்கிறது.
அது தீபா தான்.
'அம்மா எப்படியிருக்கிறீங்கள்?' அவளின் குரல் என் காதுகளில் தேனாய் ஒலிக்கிறது. 'நல்லாய் இருக்கிறன். நீ எப்படி இருக்கிறாய்?' குரலில் மனம் நிறைந்த மகிழ்வுடன் கேட்கிறேன்.

'ஒவ்வொரு முறையும் நான் கதைக்கேக்கை நீங்கள் அழுகிறது, பிறகு அதை நினைச்சு நான் கவலைப்படுகிறது பற்றியெல்லாம் யோசித்துப் பாத்தன். அப்பாவும் தன்ரை வேலையை விட்டுவிட்டு இங்கே வரமாட்டன் என்கிறார். நீங்களும் அவரை விட்டுவிட்டு எப்படி வாறது என்று யோசிக்கிறியள். என்ரை படிப்பு முடிய இன்னும் 2 வருஷம் இருக்குது. அது தான் அப்பாவோடை கதைச்சுப் பாத்தன். இங்கை ஆறு மாசம், உங்கை ஆறு மாசம் நீங்கள் இருக்கலாம் எண்டு அவர் ஒத்துக்கொண்டிட்டார,;'
மிகச் சந்தோஷமாகச் சொல்கிறாள் அவள்.

'தீபாக்குஞ்சு, நான் உன்னை எவ்வளவு மனக்கஷ்டப்படுத்திப் போட்டனெண்டு விளங்குது. அப்பாவுக்கு சமைச்சுச் சாப்பிட்டுப் பழக்கமில்லை. சாப்பாட்டுக்கு என்னிலை தங்கியிருந்து அவருக்குப் பழகிப் போச்சுது. அங்கை நான் வந்தால் பிறகு அதைப் பற்றி வேறை கவலைப்பட வேணும், அதோடை நீயும் நான் தனிய இருக்கிறன் எண்டு நேரத்துக்கு வீட்டை வர வேணுமே எண்டு பரிதவிப்பாய். அதை விட அப்படி இரண்டு வருஷத்திலை படிப்பு முடிஞ்சதும் நீ அவசரப்பட்டு இங்கை ஓடி வர வேணும் எண்டுமில்லை.'

'அம்மா, அப்ப என்ன தான் செய்யலாம் என்றியள்.'

'நானும் யோசித்துப் பார்த்தனான். இவ்வளவு நாளும் நான் என்னை வளர்க்கேல்லை இப்ப இந்தச் சந்தர்ப்பத்தைப் பாவிச்சு அதைச் செய்வம் எண்டு நினைக்கிறன். அதாலை இனி என்னைப் பற்றிக் கவலைப்படாதை.'

'அம்மா உண்மையாகவா சொல்லுறியள்? எனக்காண்டிச் சொல்லேல்லைத் தானே? நீங்கள் உங்களுக்காண்டி வாழ வேணும் எண்டு நான் எவ்வளவு ஆசைப்பட்டனான்,' அவளின் குரலில் மகிழ்ச்சி கொப்பளிக்கிறது.

'ஓம், நான் இனி எனக்கெண்டு ஒரு வாழ்வை வாழுவம் எண்டு யோசிக்கிறன். அடுத்த முறை கதைக்கேக்கை ஒரு சப்பிரைஸ் உனக்குக் கிடைக்கும். இப்ப சொல்லு உன்ரை லைவ்வைப் பற்றி. மோகன் என்னவாம், படிச்சு முடிச்ச பிறகு தான் கலியாணம் எண்டதுக்கு சம்மதமாமோ? இல்லாட்டில் கட்டிப்போட்டும் படிக்கலாம் தானே! யோசித்துப்பார். அம்மாவுக்கு எல்லாம் சம்மதம் தான். இது உன்ரை வாழ்வு. உனக்குப் பிடிச்ச மாதிரி நீ முடிவு செய். மற்றவையைப் பற்றி அதிகம் போசிக்காதை,'
மனதார அவளுக்கு அதைச் சொல்லும் போது அதை எனக்கு நானே சொல்வது மாதிரியும் என் காதினுள் அது ஒலிக்கிறது.

ஆலமரம்
----------------
தாளையடி சபாரத்தினம்
-----------------
அவளுடைய மூதாதைகள் 'அவளுக்கு' என்று வைத்து விட்டுப் போனது அந்த ஆலமரம் ஒன்றைத்தான். அந்த உடைந்த சட்டி, விளிம்பில்லாத பானை, அடுப்பாக உபயோகிக்கும் மூன்று கற்கள், தென்னம்பாளை – யாவும் அவளாகத் தேடிக்கொண்டவை. அவள் அறிந்தமட்டில் அவளுக்கு இன பந்துகள் யாருமிருப்பதாகத் தெரியவில்லை. எலும்பினாலும், தோலினாலும் மாத்திரமே ஆக்கப்பட்டது போன்ற ஒரு நாய்தான் அவளுடைய பந்து: உயிருக்குயிரான காவலாளியுங்கூட....

காலையில் எழுந்தவுடன் தென்னப்பாளையினால் அம்மரத்தைச் சுற்றி நன்றாகச் சுத்தம் செய்வாள். அருகே இருக்கும் நீரோடைக்குச் சென்று பானையில் நீர்கொண்டு வந்து தான் கூட்டிய இடங்கட்குத் தெளிப்பாள். பின் பழைய  சோறு ஏதாவது இருந்தால் தானுமுண்டு தன் நாய்க்கும் கொடுப்பாள். பொழுது நன்றாகப் புலர்ந்ததும், அந்த உடைந்த சட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு பிச்சைக்குப் புறப்படுவாள். போகும்போது தன் நாயை வாத்சலயத்தோடு தடவிவிட்டுச் செல்வாள். அதுவும் தன் வாலைக் குழைத்து இருதயபூர்வமான நன்றியைக் கண்கள் மூலம் தெரிவிக்கும்.

தெருத் தெருவாக அலைவாள் - மூலை முடுக்கெல்லாம் போவாள் - யாராவது இரங்கி ஏதாவது உணவு கொடுத்தால், அதைப் பத்திரமாக உண்ணாமல் வைத்துக் கொள்வாள். 'ஏன் சாப்பிடாமல் கொண்டு போகிறாய்?' என்று கேட்டால் 'நடக்கமுடியாத ஒரு கிழவனுக்குக் கொண்டு போகிறேன்' என்று கூறுவாள். அவள் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு ஏங்கியிருக்கும் அந்த நாயின் அருமை அவளுக்கல்லவோ தெரியும். ஆலமரத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கந்தல்களையும் மற்றப் பொருட்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் காவலாளி அல்லவா அது.

சுமார் இரண்டு மூன்று மணிக்குத் தன் இருப்பிடம் நோக்கி விரைந்து செல்வாள். அவளுக்கு முன்னால் அவளுடைய உள்ளம் பறந்துகொண்டிருக்கும். தூரத்தில் வரும் பொழுதே கரிய முகில் கூட்டத்தைப்போல ஆலமிலைகளின் கூட்டம் காட்சியளிக்கும். அவளுடைய உருவங் கண்ணிற்பட்டதும் தாயைக் கண்டவுடன் துள்ளிக்குதித்தோடும் பசுக் கன்றைப்போல் அந்த நாய் ஓடிச்சென்று அவளைத் சுற்றி சுற்றி வாலைக் குழைக்கும். அவளும் அன்போடு அதைத் தடவிக் கொடுப்பாள்.

ஆலமரத்தின் கிழே உட்கார்ந்ததும் அவளுடைய களைப்பெல்லாம் மாயமாய் மறைந்துவிடும். கொண்டு வந்ததை நாயோடு பகிர்ந்து உண்பாள். சிறிது நேரம் சென்றபின் பக்கத்திலுள்ள நீரோடைக்குச் சென்று குளிப்பாள். சுமார் ஆறு, ஏழு மணியளவில் அரிசி இருந்தாற்சோறாக்குவாள். இதற்கிடையில் அவளுடைய நண்பர்கள் - காகங்கள், குயில்கள் முதலியன – கா, கூ என்று ஆரவாரித்துத் தாங்கள் வந்திருப்பதை அவளுக்குத்  தெரிவிப்பார்கள். எல்லோருமுறங்கியபின் அவளும் அந்த வேரில் தன் தலையைச் சாய்ப்பாள். அந்த ஆலம்வேர்தான் அவளுடைய தலையனை. அவளுடைய குருட்டுத் தாத்தா உறங்கியதும் அதே வேரில் தலைவைத்துத்தான். சீமேந்தால் மெழுகப்பட்ட கவரைப்போல அந்தவேர் அழுத்தமாக இருந்தது.

அன்றும் அவள் அதே வேரில் தான் தலைவைத்துக் கொண்டு நிம்மதியாகத் தூங்கினாள். அந்தநாயும் அவளின் காலடியில் தூங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு பயங்கரமான கனவு கண்டு துடித்து எழுந்தாள். வாய் என்னவோ கூறி உளறியது. மரத்தைச்சுற்றி ஒருமுறை வந்தாள். அப்பொழுதும் அவளுக்குத் திருப்தி உண்டாகவில்லை. நன்றாக ஒருமுறை அண்ணாந்து பார்த்தாள். மரம் மரமாகத்தானிருந்தது. அது முறிந்து வீழ்ந்து விடவில்லை. கண்டது வெறும் கனவாக இருந்தாலும் அவளுடைய உள்ளத்தில் சகிக்கமுடியாத வேதனை குடி கொண்டது. பொங்கி வரும் கண்ணீரை அடக்கினாள்: ஆனால் அடக்கமுடியவில்லை. அருகே கவலை தேங்கிய முகத்தோடு நின்ற நாயை அருகிழுத்து அணைத்துக்கொண்டாள். அதுவும் தன்னுடைய நாவால் அவளுடைய கரத்தை நக்கியது. இரவுமுழுவதும் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

பொழுது புலாந்ததும் வழக்கம்போல் சட்டியைக் கையில் எடுத்துக்;கொண்டு புறப்பட்டாள். அவளுடைய மனம் சஞ்சலப்பட்டது. தான் கண்ட பயங்கரமான கனவை ஒருமுறை நினைத்துப் பார்த்தாள். ஒருவேளை உண்மையில் அப்படி நடந்தால்..... நினைக்கவே அவளுடல் நடுங்கியது. கால்கள் செல்ல மறுத்தன. எத்தனை நாட்களுக்குப் போகமலிருக்க முடியும்? ஒருநாள் பிச்சைக்குச் செல்லாவிட்டால் அவளுடைய கதி என்ன? அவளையே நம்பிக் கொண்டிருக்கும் நாயின் கதிதான் என்ன? மனக்கலக்கத்தோடு புறப்பட்டாள். மரத்திலிருந்து இரண்டு மூன்று பனித்துளிகள் அவள்மேல் வீழ்ந்தன. பரிதாபத்தோடு அண்ணாந்து பார்த்தாள். மறுபடியும் பனித்துளிகள் வீழ்ந்தன. அவள் அதைக் கேவலம் பனித்துளிகளாக நினைக்கவில்லை. 'நிராதரவாக என்னை விட்டுப் போகிறாயா' என்று அந்த ஆலமரங்கதறிப் பெருக்குங் கண்ணீர்தான் அத்துளிகள் என்று நினைத்தாள். அவள் கண்களும் நீரைச் சொரிந்தன.

அவள் பிச்சைக்குச் சென்றுவிட்டாள். ஆனால் மனம் மட்டும் நிம்மதியாயில்லை.  வழக்கத்திற்கு விரோதமாகப் பன்னிரண்டு மணிக்கே இருப்பிடத்தை நோக்கி நடந்தாள். எல்லோருங் கூட்டங் கூட்டமாக நின்று எதையோபற்றி ஆனந்தத்தோடு பேசிக்கொண்டு நின்றார்கள். அதை என்னவென்றறிய அவளுக்குமாசைதான், ஆனால் அவர்களிடம் சென்று அறியக்கூடிய தகுதி அவளுக்கு இல்லை. அவ்வழியால் வந்த ஒரு சிறுமியிடம் விசாரித்தபொழுது, 'எங்கள் கிராமத்திற்கு றெயில் பாதைபோடப்போகிறார்களாம். இன்னுமிரண்டு, மாசத்துள் றெயில் ஓட ஆரம்பித்துவிடும் என்று அப்பா சொன்னார்' என்றாள் சிறுமி.

றெயில் வந்தாலென்ன?, ஆகாயக்கப்பல் வந்தாலென்ன? பிச்சைக்காரியாகிய அவளுக்கு இரண்டுஞ்சரிதானே? இருப்பிடத்தை நோக்கி அவள் விரைவாக நடந்தாள்.

'இதென்னடா சனியன்! வேலைசெய்ய விடமாட்டேனென்கிறதே' என்றானொருவன். ஆங்கில உடையில் நின்ற எஞ்சினியரின் கைத்துப்பாக்கி 'டுமீல்' என்ற சத்தத்தோடு வெடித்தது. இவ்வளவு நேரமும் மரத்தைச் சுற்றிச்சுற்றித் தன் எஜமானியின் பொருட்களுக்காகப் போராடிய அந்த நாய் மண்ணிற் சாய்ந்தது.

சுமார் கால் மைல் தூரத்தில் வரும்பொழுதே தென்படும் ஆலமரம் இன்று வெகு சமீபத்தில் வந்ததும் அவள் கண்ணுக்குப் புலப்படவில்லை. ஆலமரம் இருந்த இடம் ஒரே வெளியாக இருந்தது. இரவு கண்டகனவு அவள் ஞாபகத்திற்கு வந்தது. கையிலிருந்த சட்டி 'தடா'லென்று வீழ்ந்தது. மரத்தடியை நோக்கி ஓடினாள். அவளுடைய சாமான்கள் ஒரு பக்கத்தில் எறியப்பட்டுக் கிடந்தது. இன்னொரு பக்கத்தில் அவளுடைய நாய் உயிரற்றுக் கிடந்தது. மறுபக்கம் திரும்பினாள். மாறி மாறி விழும் கோடாரிக்கொத்தைத் தாங்க மாட்டாமல் தவிக்கும் மரத்திலிருந்து உதிரம் பெருகுவது போலிருந்தது அதிலிருந்து வடிந்த பால், 'ஐயோ' என்றலறிக்கொண்டு ஓடிப்போய் வீழ்ந்தாள். திடீரென்று ஒரு கோடாரிக் கொத்து அவளுடைய தலையில் வீழ்ந்தது. எல்லோருந் திகைத்துப்போய் நின்றார்கள். வெண்ணிறரத்தமும் செவ்விரத்தமும் கலந்து அடிமரத்தைக் கழுவிக்கொண்டன.

  • தொடங்கியவர்

மீன்கள்
--------------
தெளிவத்தை ஜோசப்

தீப்பெட்டியின் உரசலைத் தொடர்ந்து விளக்கும் கையுமாய் நின்று கொண்டிருந்த மனைவியைக் கண்டதும் பதறிப்போனான்.

மதுவின் போதையும் மற்ற மற்ற மயக்கங்களும் உயிர்நாடியில் விழுந்த அடியால் ஓடிப்போக குப்பி விளக்கின் கொஞ்ச வெளிச்சத்தில் நிலைமையைப் புரிந்து கொண்டவன் யாரையும் நிமிர்ந்து பார்க்கும் திராணியற்று கிள்ளிய கொழுந்தாய் தலை தொங்கிப் போய் உட்கார்ந்திருந்தான்.

வெலவெலத்துப் போய் குனிற்த தலை நிமிராமல் ஒரு வினாடி உட்கார்ந்து இருந்தவனுக்கு கழிந்துவிட்ட அந்த ஒரு வினாடியே ஒரு யுகமாகத்தோன்ற வெறும் தொண்டைக்குள் காற்றை விழுங்கியபடி விருட்டென்று எழுந்தான்.

எழுந்த பிறகு மறுபடியும் குனிற்து தனது போர்வையை எடுப்பதன் மூலம் இக்கட்டான அந்த இடத்தில் இன்னொரு வினாடி இருக்க நேரிடுமே என்ற உழைவில், கம்பளியை எடுத்துக்கொண்டே எழுந்தவன், அதை இழுத்துத் தோளில் எறிந்தவாறு வெளியே நடந்து இஸ்தோப்பின் இருட்டில் அமர்ந்துகொண்டான்.

தூண்தூணாய் நிற்கும் மரங்களிடையே தூரத்தில் தெரியும் மலைச்சரிவுகள் கருப்பு வண்ணத்தால் தீட்டி மாட்டிய ஓவியங்கள் போல் தெரிகிறது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கும்மென்று கிடந்த கறுப்பையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தவன் இருட்டிய உலகின் அத்தனை அந்தகாரத்தையும் விட தன் மனதின் அந்தகாரம் அதிகமானதாக தனக்கே தெரிவதை உணர்ந்து அதன் கனம் தாளாது தனிமையாக அமர்ந்திருக்கும் அந்த நேரத்திலும் தலையைக் கவிழ்த்துக் கொள்கிறான்.

ஆனால் மனதின் இருட்கனத்தால் தானாகவே கவிழ்ந்துவிடும் தலையை எந்த அணையைக் கொண்டு நிமிர்த்தி வைப்பது?

'கசமுச'வென்று உள்ளே ஏதோ பேச்சு கேட்கிறது.

ஊயர்ந்த தோளிடை தொங்கும் தலையை ஒரு சிறிதும் உயர்த்தாது மிகவும் சிரமத்துடன் பக்கவாட்டில் திரும்பி ஓரக்கண்ணால் உள்ளே பார்க்கிறான்.

ஒருக்களித்திருக்கும் கதவினூடாக உள்ளே இருக்கும் வெளிச்சம் கோடாக நீளுவதிலிருந்து உள்ளே இன்னும் நிலைமை சீரடைந்து அமைதியாகவில்லை என்பதைப் புரிந்து கொண்டவன் உள்ளேயிருந்து யாராவது ஒருவர் தன்முன்னால் எந்த வினாடியும் வந்து நிற்கலாம் என்ற பயத்தில் அப்போதைக்குத் தப்பிக்கொண்டாலே போதும் என்ற அவசரத்தில் இஸ்தோப்பிலிருந்து இறங்கி இருளில் நடந்தான்.

லயத்துக்கோடியில் கிடந்த நாய் அரவம் கேட்டு குரைக்க வாயெடுத்து அவனை இன்னாரென்று கண்டு கொண்டு குரைப்பை ஏப்பமாகவோ ஊளையாகவோ மாற்றிச் சமாளித்து கொட்டாவியுடன் முன் காலை நீட்டி சோம்பல் முறித்து விட்டு வாலை ஆட்டியபடி மீண்டும் சுருட்டிக்கொண்டது.

எங்கோ உச்சியிலிருந்து ஓடிவந்து இரண்டு பாறைகளுக்ளகிடையில் விழுந்தோடும் நீர்வீழ்ச்சி எழுப்பும் 'சோ' எனும் பேரிரைச்சலை தவிர்த்து முழுத்தோட்டமுமே இருட்டைப் போர்த்திக் கொண்டு குறட்டை விட்டது.

இரவு பதினொரு மணி பயங்கரத் தனிமையில் இந்த நாற்பத்தெட்டு வயதிலும் உருவத்தில் குனிவோ நடையில் தளர்ச்சியோ இல்லாமல் எங்கே போகின்றோம் என்ற கட்டுப்பாடற்ற ஏதேட்சையுடன் நடந்து கொண்டிருந்தவன் முகத்தில் பாய்ந்து கண்ணை மயங்கச் செய்த 'டோர்ச்' லைட்டின் ஒளியால் நின்றான்.

என்ன பெரியப்பா 'இந்த ராவுலே...' உரப்பட்டிக் காவல் செய்பவன்தான் லைட்டும் கையுமாய் நின்றான்.

'தூக்கம் வரல்லேடாப்பா.... ஒரே புளுக்கமாக் கெடந்திச்சு. அதுதான் இப்பிடிக் காத்தாட...'

புளுக்கம் மனதில் என்பதைப் புரிந்து கொள்ளாதவனாக 'இப்படி இந்த உரப்பட்டி விறாந்தையில் படுத்துக்கிறேன். காத்தோட்டமாக இருக்கும்' என்கிறான்.

தூக்கம் தாங்காமல் கண் மயங்கும் வேளைகளில் ஒரு வாய் தேநீர் சுடவைத்து ஊற்றிக் கொள்வதற்கும் குளிர் தாங்காமல் பல்லடிபடும் வேளையில் நெருப்புப் போட்டுக் குளிர் காய்வதற்குமாக விறாந்தை மூலையில் காவல்காரர்கள் போட்டு வைத்திருக்கும் கரி பிடித்த மூன்று கற்களில் ஒன்றை இழுத்து விரிக்கும் போர்வையில் ஒரு முனையை அதன்மேல் போட்டு கரியை மறைத்து அந்த உயரத்தில் தலையை வைத்து மல்லாந்து படுத்துக்கொண்டான்.

தேயிலைத் தளிர்களில் மிதந்து வரும் காற்று திறந்த வெளியில் கிடக்கும் உடலைத் தழுவி ஓடுகையில் எத்தனையோ சுகமாகவும் லேசாகவும் தான் இருக்கிறது. என்றாலும் உள்ளம் பாரமாகவும் சூடாகவும் இருக்கையில் எப்படி நித்திரை வரும்.

சினிமாப்பாட்டொன்றை சீட்டியில் ஒலித்தபடி லைற்றை வீசிக்கொண்டபடி உரக்காம்பிராவின் மறு முனைக்கு நடந்தான் காவல்காரன்.

வீட்டில் நிகழ்ந்து விட்ட அசம்பாவிதத்திற்கு முழுமுதற்காரணமும் தான் தானென்றாலும் தன்பக்கம் ஏதாவது நியாயம் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்வதற்காக நடந்து விட்டதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பார்க்கிறான்.

கசப்பானதுதான்! ஆனால் கட்டாயம் நினைவுபடுத்திக் கொள்ளவும் வேண்டியிருக்கிறது.

எத்தனை அசிங்கமானது எல்லாம் நடந்து விடுகிறது....!

இரவு பத்துமணிக்குப் பிறகு நாட்டிலிருந்து திரும்பியவன் மெதுவாகக் கதவைத் திறந்து மூடிவிட்டு இருளுடன் இருளாக கதவடியில் ஒரு வினாடி நின்று கண்களை பழக்கப்படுத்திக் கொண்டான்.

கம்பளிக்குள்ளும் சேலைக்குள்ளுமாக சுருட்டிக் கொண்ட உருவங்கள் இருட்டில் லேசாக தெரியத் தொடங்கின.

நாட்டிலிருந்து வந்திருக்கும் மயக்கத்ததுடன் இருட்டில் காலை உயர்த்தி முதலில் கிடந்த உருவத்தை தாண்டியபடி 'அதோ அதுதான் அவ' என்று மனதிற்குள் முனகிக் கொண்டான்.

அவனுடைய கணிப்புத் தவறிவிட்டது. 'அது மகள் இந்தப் புள்ளை எப்பிடி சேச்சே...' என்று எச்சிலை விழுங்கிக் கொண்டவன் அருவருப்பான அந்த எண்ணங்களை வெட்டித் துண்டாக்கிக் கொண்டான்.

அந்த ஆறு காம்பிரா லயத்தின் மூன்றாவது காம்பிராவுக்குள் அவன் பிரவேசம் செய்து ஏறத்தாழ இருபது வருடம் இருக்கும். அப்போது அவனுடைய மனைவியும் மூன்று பிள்ளைகளுமாக ஐந்து பேர்களுக்கு அந்த ஒரு காம்பிரா போதுமானதாக இருந்தது.

நான்கு சுவர் உள்ள அந்த சதுரத்துக்குள் அடுப்பைப் போட்டு 'இது குசினி' என்று ஒரு பகுதியை ஒதுக்கிவிட்டு மிஞ்சியிருக்கும் முக்கால் அறைக்குள் மூன்று பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு அவைகள்கண்டும் காணாமலும் சம்சாரம் பண்ணி இன்னும் மூன்றைப் பெற்றுக்கொண்டது வரை எல்லாம் அந்த ஒரே காம்பிராதான்.

அவனும் எத்தனையோ தடவை ஆபீசுக்குப்போய் துரையிடம் காலில் விழாக் குறையாகக் கெஞ்சியும் சண்டைபோட்டும் பார்த்து விட்டான் தனக்கு இன்னொரு காம்பிரா வேண்டுமென்று.

பகல் வேளைகளில் வீடு இருக்கிறதா இல்லையா என்ற பிரச்சினையே கிடையாது. எல்லாத்தொல்லைகளும் இரவில்தான். அத்தனையையும் படுக்கவைத்தாக வேண்டுமே! கைகால் முளைத்து விட்ட பிள்ளைகள் என்றாலும், இடநெருக்கடி என்று வெளியே எங்கயாவது போய் சுருட்டிக்கொள்ளும். முளைக்கும் மீசையை நாசுக்காக நீவிவிட்டபடி படுக்கையும் தானுமாக நடந்துவிடுகிறானே மூத்த பையன். 'நண்பனுடன் படுத்துக் கொள்ளுகிறேன்.' ஏன்று அதே போல் இந்தச் சின்னஞ் சிறுசுகள் எங்கே போகும்?

வீடு வளரவில்லை என்பதற்காக பிள்ளைகளும் வளராமல் இருந்துவிடுவார்களா? அதுவும் பெண் பிள்ளைகள்!

'பெண் வளர்ச்சி பேய் வளர்ச்சி என்பார்கள்' பார்த்துக்கொண்டிருக்கும் போதே வளர்ந்து விடுவார்கள்.

இவன் வீட்டிலும் இரண்டு வளர்ந்துபோய் இருக்கின்றதே. அது எங்கே போய் படுத்துக்கொள்ளும்.

மூத்த பையனைத் தவிர மற்றது அத்தனையும் அந்த முக்கால் அறைக்குள் 'ஒண்ணடிமண்ணடியாக' உருள வேண்டியதுதான். இந்த லயப்பிரச்சனை பெரும் தலை வேதனையாக உனருமாறிக்கொண்டு வருகிறது என்று கண்டவுடன் துரை  நைசாக நழுவிக்கொண்டார்.

யார் யார் எந்தெந்த லயத்தில் இருக்கிறார்கள்? ஒரு காம்பிராவில் எத்தனை பேர்? பேண் எத்தனை ஆண் எத்தனை? என்பது போன்ற விபரங்களை காட்டும் 'லயத்துச் செக்ரோலை' தூக்கிப் பெரிய கங்காணியிடம் கொடுத்துவிட்டார்.

தொழிலாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை உள்ளவராகத்தான் இருந்தாக வேண்டும் கங்காணி என்பவர். தொழிலாளரின் நலனில்தான் இருக்கிறது அவருடைய நல்வாழ்வு.

துரையிடம் இல்லாத ஒரு பயம், துரையிடம் காட்டாத ஒரு மதிப்பு, துரைக்குக் காட்டாத ஒரு ஒத்துழைப்பு பெரிய கங்காணியாகப்பட்டவருக்கு உண்டு என்பது துரையின் நம்பிக்கை. ஆகவே நெருக்கடி மிக்கதான இந்த வீட்டுப் பிரச்சனையை அவரிடம் நீட்டிவிட்டு ஒதுங்கிக்கொண்ட துரை சாமர்த்தியசாலிதான். தனக்கு லயம் போதாது என்பவர்கள் துரையிடம் போவார்கள். துரை பெரிய கங்காணியிடம் அனுப்புவார். துரை பெரிய கங்காணியிடம் அனுப்புவார். கங்காணி அவர்களை விசாரித்து பெயர்களை எழுதிக்கொண்டு லயம் ஏதாவது காலியானால் இல்லாட்டி புது லயம் கட்டினால் உனக்குச் சொல்கிறேன் 'போ' என்பார்.

'என் வீட்டில் ரெண்டு கொமரோட இன்னும் ஆறுபேர் இருக்கோமுங்க' என்று கூறிக்கொண்டு நின்ற இவனையும் பெரியகங்காணிகிட்டே போ' என்றார் துரை.

'அவங்ககிட்ட ஏன் நான் போவனும், துரை நீங்க இருக்கீங்க தகப்பன் மாதிரி, நீங்க பார்த்து காம்புரா ஒழுங்கு செய்யுங்க' என்று ஆபீசில் சத்தம் போட்டாலும் படி இறங்கியதும் நேராகப் பெரிய கங்காணியிடம் போகவும் தவறவில்லை.

'போ பார்ப்போம்' என்று கூறி வைத்தார் பெரிய கங்காணி. வுரப்பிரசாதம் போல் அவனுக்கு காவல் வேலை கிடைத்தது.

ஆதன் பிறகு உரப்பட்டி, புது மலை, ஆயுதக் காம்பிரா என்று எங்காவது இராப்பொழுதை போக்கி விடுவான். வீட்டுப்பிரச்சனை அவ்வளவாகத் தோன்றவில்லை.

தூன் ஒருங்கிக் கொள்வதால் மட்டும் தீர்ந்துவிடும் தொந்தரவு இல்லையே குடும்பத் தொந்தரவு! அது தொடர்ந்து கொண்டே இருந்தது.

மனைவியின் நச்சரிப்புத் தாளாத போதெல்லாம் துரையிடம் போலான். துரை 'கங்காணியிடம் போ' என்பார். கடபுடா என்று கத்திவிட்டு திரும்பி வருவான்.

அவன் படியேறும் போதே துரை மனதிற்குள் சிரித்துக் கொள்வார். 'சலாங்கையா' என்று ஜன்னலிடம் வரும்போதே 'கங்காணிகிட்டே போ' என்று கூறிவிடுவார். ஒரு தடவை அவன் வேறு எதற்காகவோ வந்து நின்று 'சலாங்க' என்றபோது 'கங்காணிகிட்டே போ' என்று துரை கூற 'நான் லயத்துக்கு வரலிங்க' என்று அவன் தலையைச் சொறிய துரை கிளார்க் அவன் மூவருமே சிரித்து விட்டனர். தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலாமல்.

அவன் ஆபீசுக்கு வந்தால் லயம் கேட்கத்தான் வருவான் என்பதும் லயம் கேட்டால் 'கங்காணிகிட்டே போ' என்றுதான் துரை கூறுவார் என்பதும், அந்தளவுக்கு துரைக்கும் அவனுக்கும் தெளிவான ஒன்றாகிவிட்டது.

அவனுக்கு கிடைத்திருந்த காவல் வேலையும் நின்று விட்டது. மறுபடியும் அவன் நேரடியாகப் பிரச்சினைக்குள்  அகப்பட்டுக் கொண்டான், அதன் விளைவு,

அடுத்தநாள் அந்தி நேரத்தில் பெரிய கங்காணி வீட்டுக்குப் போனான்.

'ஏன் தொரை கிட்ட போவலியா?' பெரிய கங்காணி குத்தலாகக் கேட்டார்.

'அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க?' அவன் குழைந்தான்.

'இல்லை ஐயா நேரே ஆபீசுக்குப் போய் துரைகிட்டத்தானே கம்பிளேன் பண்ணுவீக அதுதான் கேட்டேன்.' அவனுக்கு விளங்கிவிட்டது ஐயா அவனை அடையாளம் பண்ணித்தான் வைத்திருக்கிறார் என்பது. புதிதாகக் கட்டியப த்துக் காம்புராவில் தனக்கு ஒரு காம்புரா கிடைக்காமல் போனதற்கும் அவ்வப்போதும் காலியாகும் பழைய காம்புராக்களும் தன்னை ஒதுக்கி விட்டதற்கும் இந்த அடையாளம் தான் காரணமோ...!

சாமிக்கு ரெண்டுன்னா பூசாரிக்கு நாலு தேங்காய் ஒடைக்கணும் போலிருக்கே! என்று புழுங்கியபடி ஐயாதான் ஒதவி செய்யணும் என்று காலில் விழாத குறையாகக் கூறிவிட்டு நடந்தான். 'என்னா இந்த நேரத்தில் கங்காணி வீட்டுப் பக்கம்....'

'அதையேன் கேட்கிறே நானும் தான் நாளாய்ப் பொழுதாய் நாய் கணக்கா அலைஞ்சு பார்க்கிறேன் ஒரு காம்புராவிற்கு. மனுசன் அசையுறாப்பிலே காணாமே. பார்ப்போமிங்கிறாரு நாமும் பார்த்துக்கிட்டிருக்க வேண்டியது தான்.'

'லயம் ஏதும் காலியானால் இன்னொருத்தனுக்குப் போயிறுது..... அதைத்தானே சொல்லவாரே...'

'பின்னே என்னாங்கிறேன்...'

'லேய் சும்மா கத்தாதறேலே... வெறுங் கையி மொழம் போடுமா... ஒரு காம்புராவிலே ஏழைட்டை அடைச்சுக்கிட்டு கஸ்டப்படுகிறதை விட கங்காணிக்கு ஒரு போத்தல் சாராயத்தை வாங்கிக் கொடுத்திட்டா என்னா கெட்டுப்புடுது... என்ன கொறைஞ்சுப்புடுது.

ஒரு போத்தல் சாராயத்தை வாங்கித் தொலைத்து விடுவதால் ஒன்றும் குறைந்து விடாது என்பது அவனுக்குத் தெரியும். ஏன் கொடுக்க வேண்டும் என்ற வீம்பில்தான் இத்தனைநாளும் இருந்தான்.

ஆனால் இப்போது...!

 'எந்த எளவைக் கொடுத்தாவது ஒரு காம்பிரா கேட்டாகணும். முனம் முனகிக் கொள்கிறது'

'அந்தக் கொய்யாமரத்தடியிலே அப்பவே ஒரு குடிசை போட்டேன்....'

முனதை அவன் அடக்கப்பார்த்தாலும் நடந்து விட்ட கசப்பான நிகழ்ச்சிக்கான காரண காரியங்களை சுற்றியே அது ஓடுகிறது.

லயம் கேட்டு ஏமாந்த ஆரம்ப நாட்களிலேயே தனது வீட்டுக்கு முன்னால் உள்ள தோட்டத்தில் நிற்கும் கொய்யாமரத்தடியில் ஒரு சிறு குடிசை போடத் தொடங்கினான். மூலைக்கொன்றாக நான்கு மரங்களை ஊன்றி நாணல் வசிச்சுகளைப் பிடித்து வரிச்சு மறைய மண்ணைக் குழைத்து ஒரு பக்கம் அறைந்தும் ஆயிற்று. வேலிக்கு வெளியே லயத்தை ஒட்டி நிற்கும் ஈரப்பலாமர நிழலில் நின்றபடி முளைத்தெழும் குடிசையையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த பெரிய கங்காணி தலையை ஆட்டிக்கொண்டார்.

என்னடாலே அது குடிசை... வீடு கட்றீகளோ இன்னைக்கு நீ கட்டிக்காட்டு நாளைக்கு ஒருத்தன் நாளான்னைக்கு ஒருத்தன்னு அத்னைபேரும் குடுசை போட தொவங்கிறுவானுக. ஓனனக்குத்தான் வீட்டுக்கு முன்னுக்கு தோட்டம் இருக்கு. தோட்டத்திலே போட்டுக்கிறே. தோட்டம் இல்லாதவன் என்னா செய்வான். ராவோடராவா பத்து தேயிலையை புடுங்கிப்புட்டு அதிலை போட்டுக்குவான் வொளங்குதா.... அதனாலே இந்தக் குடிசை விவகாரமே வேண்டாம். ஆபீசு கீபீசுன்னு...தொரையருதி போறதுக்குங் காட்டியும் மருவாதியாய் சொல்கிறேன். இப்பவே போய் உடைச்சு போட்டுரு. இல்லை....'

தன் அழைப்புக்கிணங்க வந்து தனக்கு முன்னால் குன்றிப்போய் நிற்பவனை ஏசிப்பயம் காட்டி அனுப்பியதுடன். அடுத்த நாள் அந்தப் பக்கமாக நடந்து குடிசை உடைந்திருக்கிறதா இல்லையா என்பதையும் செக் பண்ணிக்கொண்டார். கொய்யாமரத்தடியில் குடிசைக்குப் பதில் குட்டிச் சுவர் மட்டுமே நின்றது.

இத்தனை மன உழைச்சல்களிலேயும் எந்த எளவைக் கொடுத்தாவது என்ற எண்ணத்துடன் எப்படியோ தூங்கிப்போனான்.

ஆம்... தூக்கம் என்பது மனிதனுக்கு ஒரு வரப்பிரசாதம்தான்!

தேயிலைக் குச்சியால் பல்லைத் தேய்த்துத் துப்பிவிட்டு ஜில்லென்று ஓடும் ஆற்று நீரில் முகத்தைக் கழுவிக் கொண்டு பெரட்டுக்களத்தை அடைந்தான்.

மற்ற நாட்களில் என்றால் கை வாளியில் சுடுதண்ணீர் காத்துக்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் இன்று?

விரித்துப்படுத்திருந்த துப்பட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு, தன் வீட்டுப் பெண்கள் துண்டு வாங்க வரும்;போது எங்கே தன்னைப் பார்த்துவிடுவார்களோ என்ற பயத்தில் சற்று மறைவாக நின்றுகொண்டிருந்தான்.

'எப்ப காம்பிரா விட்டுப்போறே...?'

'வீடெல்லாம் சரி... இன்னொரு நாலு நாள்லே..' பின் வரிசையில் பேச்சுக் குரலால் திரும்பிப் பார்த்தவனுக்கு விஷயம் பிடிபட்டுக்கொண்டது.

தோட்டத்திற்கே பழைய ஆளான பண்டா லயத்தைக் காலி செய்துவிட்டு நாட்டில் சொந்தமாகக் கட்டியுள்ள வீட்டிற்கு குடிபெயருகிறான்.

இவனுக்கு செய்தி இனித்தது.

'காலியாகும் இந்தக் காம்பிராவை எப்படியாவது அமுக்கிக்கிறணும்.... எந்த இளவைக் கொடுத்தாவது...'  என்ற எண்ணத்துடன் அன்றே பெரியவரைக் கண்டு தனக்குள்ள கஷ்டங்களைக் கூறி ஒரு பாட்டம் அழுதுவிட்டு ஐயாவுக்கு சந்தோசம் செய்வது பற்றியும் இலேசாக இழையோட்டிவிட்டு 'சரி பயப்படாதே...' என்ற பெரியவரின் உத்தரவாதத்துடன் வெளியேறியவன், ஒரு வெள்ளையை வாங்கிக் கொண்டு வந்து தயாராய் வைத்துக்கொண்டான். வீடு காலியானதும் சென்று ஐயாவைக் கண்டு கொள்ள.

காலியாகப் போகும் காம்பிராவுக்கு முழுமூச்சாக இவனும் அடிபோடுகிறான் என்பது 'எப்ப காம்பிரா விட்டுப்போறே' என்று பண்டாவைக் கேட்டுக்கொண்டேயிருந்த இன்னொருவனுக்கு சுக்கென்றது. முந்திக்கொண்டான்.

ஒரு வெள்ளையை வாங்கி வீட்டில் வைத்துக்கொண்டு இவன் இருக்க இரண்டை வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்து ஐயாவைப் பார்த்தும் விட்டான் அவன்.

எவ்வளவு சிறிய மீனாக இருந்தாலும் தன்னிலும் சிறியதை விழுங்கத்தானே செய்கிறது!

இரண்டு வெள்ளையைக் கண்டதும் ஐயா அசந்தே விட்டார். 'காம்பிரா உனக்குத்தான்டா' என்று கையடித்துக் கொடுத்தவர் 'அவனுக்கும் தரேன்னோமே' என்று ஒரு விநாடி குழம்பி உடனே சுதாகரித்துக்கொண்டு 'பண்டா லயம் விட்டுப் போற அண்ணிக்கு கட்டாயம் வா' என்று கூறி அவனை அனுப்பிவைத்தார்.

பண்டா குடிபெயரும் தினம்! சந்தோசத்தை ஒரு பேப்பரில் சுற்றி கமக்கட்டில் இடுக்கிக்கொண்டு ஐயா வீட்டுள் நுழைந்தவன் அங்கு வேறுமொருவன் இருப்பதைக் கண்டு சற்றுத் தயங்கினான்.

யாரு...? அட நீயா...? வுh வா. என்னா கையிலே பார்சல்....?

'ஒண்ணுமில்லைங்க என்று மழுப்பியவனை விடாமல் இழுத்துப் பிடித்தார் கங்காணி.

புண்டா காலியாக்கிறான்லே காம்புரா அதை இவனுக்குத்தான் குடுக்கப் போறேன்... என்று மற்றரிடம் கூறியவர், இவன் பக்கம் திரும்பி 'என்னப்பா என்னமோ வைச்சிருக்காப்போலே இருக்கு. கேட்டா ஒண்ணுமில்லேங்கிறா. கொண்டாயேன் பார்ப்போம்....' ஏன்று அதை இழுத்துப் பிரிக்கிறார்.

வெள்ளைப் போத்தல் வெளியெ வருகிறது!

ஐயாவின் முகம் ஏன் இப்படிக் கோரமாக மாறவேண்டும். குழம்பிப்போய் நிற்பவனைக் கோபமாகப் பார்த்து ஐயா கத்துகிறார்.

'லயம் வாங்குறத்துக்கு லஞ்சம் கொண்டாந்தியோ... இந்தாப்பா நீ சாக்கி....' என்று போத்தலை உயரத் தூக்கி மற்றவனிடம் காட்டிவிட்டு 'இந்தாடா நீயே கொண்டு போ. ஒனக்கு லயம் கெடயாது ஒண்ணும் கெடயாது ஓடிப்போ... படவா... அதோட நாளைக்கு காலையிலே ஆபீசுக்கு வந்துடு. நீயும்தாம்பா... நல்ல வேளை நீ இருந்தே.' பெரிய கங்காணி மூச்சுவிடாது கத்தினார்.

வேலவெலத்துப் போனவன் நடுங்கும் கால்களுடன் வெளியே நடந்தான்.

  • தொடங்கியவர்

நவகண்டம்
----------------
ரஞ்சகுமார்
---------------
நான் உங்களுக்கு ஒரு காதல் கதையைச் சொல்லப்போகிறேன். காதலும் வீரமும் செறிந்தது பழந்தமிழர் வாழ்க்கை என்ற பெருமை எங்களுக்கு உண்டு. நேற்றுவரை வாழ்ந்து வீழ்ந்தவர்கள் எல்லோரும் என்னைப் பொறுத்தவரை பழந்தமிழர்களே. இந்தக் கதையின் வீரம் மிக்க நாயகன் கொல்லப்பட்டு ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே அவனும் பழந்தமிழன் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.

'முப்பது ஆண்டுகள்' என்னும் இந்தக் கணக்கு மிக முக்கியமானது. முப்பது ஆண்டுகள் ஏறத்தாழ ஒரு தலைமுறைக் காலம் எனப்படுகிறது. தற்காலத் தமிழர்களில் ஆயிரக்கணக்கானோர் முப்பது ஆண்டுகளுக்குள் தம்மைத் தாமே கொன்றுவிடுகிறார்கள். அல்லது பிறரால் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். அத்துடன் தமிழர்களின் விடுதலைப் போரை அக்குவேறு ஆணி வேறாய் அலசுபவர்கள் 'முப்பது ஆண்டுக் கால' சாதனைகளையும் வேதனைகளையும் புட்டுப்புட்டு வைக்கிறார்கள்.

அதைவிட முக்கியமானது; இந்த வீரநாயகன் கொல்லப்படும்போது அவனுக்கு முப்பது வயது நிறைந்திருந்தது. ஆகவே மேலும் முப்பது ஆண்டுகளை இந்தக் கதை கொண்டிருக்கிறது. அதாவது அறுபது ஆண்டுக் கால வரலாற்றினூடாக நாம் பயணம் செய்யப்போகிறோம். இந்த அழகிய சிறு மரகதத் தீவின் வரலாற்றை அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து எழுதுபவர்கள், 'அறுபது ஆண்டுக் காலம்' என்பதற்கு மிகுந்த அழுத்தம் கொடுத்து ஆராய்வார்கள்.

அறுபது ஆண்டுகளுக்குச் சற்று முன்னராக எமக்குச் சுதந்திரம் கிடைத்ததாம். அதுவும் வெள்ளைக்காரன் பாரத மாதாவுக்குச் சுதந்திரம் கொடுக்கும்போது பக்கத்திலிருக்கும் இந்தச் சுண்டைக்காய் நாட்டுக்கும் வஞ்சகம் செய்யாமல் அதிலே கொஞ்சம் கிள்ளிக் கொடுத்துவிட்டுப் போனானாம்.
எம் வீரநாயகன் பள்ளிக்கூடத்தில் தன் சரித்திர ஆசிரியரைக் கேட்ட ஒரு 'மோட்டுக் கேள்வியை' இப்போது உங்களிடம் சொல்ல வேண்டும். சுதந்திரமடைந்த நாட்டில் பிறந்த ஒருவனுக்குக் கேள்வி கேட்பதிலும் அதற்குரிய மிகச் சரியான பதிலைப் பெற்றுக்கொள்வதிலும் உள்ள பற்றுறுதியைத் தெரிந்துகொள்ளும் உரிமையை நீங்கள் மறுக்கமாட்டீர்கள்.

'சேர்….. அப்ப மற்ற வளமாப் பார்த்தால் இந்தியாவைப் பிடிச்ச படியால்தான் எங்கடை நாட்டையும் வெள்ளைக்காரங்கள் பிடிச்சவங்களோ?''

இப்போது உள்ள விஷயம் தெரிந்த அரசியல் அறிஞர்கள் போல அப்போது எவரும் இருக்கவில்லை. புவிசார் அரசியல் போன்ற புத்திஜீவித்தனமான பெரிய பெரிய விஷயங்கள் ஒருவருக்கும் புரியாத காலம் அது.

காந்தி சுட்டுக் கொலைசெய்யப்பட்டுச் சரியாகப் பத்து ஆண்டுகள் கழிந்திருந்தன.

'ரகுபதி ராகவ ராஜாராம்...' என்னும் உருக்கமான பாடல் ஆகாஷ வாணியில் அடிக்கடி ஒலிபரப்பான காலம்…..
நேருவும் இந்திரா பிரியதர்சினியும் எமது நாட்டுக்கு விஜயம் செய்து சில ஆண்டுகள் கழிந்திருந்த காலம்.

இந்தியா என்றாலே எல்லோருக்கும் பக்தி, மரியாதை, ஒரு 'இது'...

எனினும் நமது வீரநாயகன் சரித்திர ஆசிரியருக்கு அஹிம்சையில் நம்பிக்கை குறைவு என்பதை அந்தக் கேள்வியைக் கேட்டதன் மூலம் ஐயந்திரிபறப் புரிந்துகொண்டான். அந்தப் புரிதல் அவனை 'வன்முறையை வன்முறையால்தான் எதிர்கொள்ள வேண்டும்' என்ற தர்க்கரீதியான அடுத்த தளத்துக்கு இட்டுச்சென்றது. அப்போது அவனுக்கு வயது பத்து.

அந்தப் புரிதலுக்கு அவனை இட்டுச்சென்றதில் அவனுடன் கூடப்படித்த ஒரு பெண்ணுக்கும் அவளது சிரிப்புக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு. நம் வீரநாயகன் சரித்திர ஆசிரியரைக் கேள்வி கேட்ட பொழுதும் அவர் அவனுக்குப் புளியம் மிளாறால் பதிலிறுக்கும் போதும் பதிலுக்கு அவன் அவர் வயிற்றில் தலையால் மோதிவிட்டு வகுப்பறையைவிட்டு வெளியே பாய்ந்தபோதும் 'களுக்' என அவள் நளினமாகச் சிரித்தாள்.

பெண்கள் எப்போது எதற்குச் சிரிப்பார்கள், எப்போது எதற்கு அழுவார்கள் என்று யாருக்குத்தான் தெரியும்?

இந்த இடத்தில் நமது வீரநாயகனையும், 'களுக்' என்று நளினமாகச் சிரித்த அந்தப் பெண்ணையும் முறைப்படி அறிமுகம் செய்துகொள்வது நல்லது.

அவன் பெயர் சிவஞான சோதிலிங்கம். பள்ளிக்கூடத்திலிருந்து சரியாக ஐந்து வீடுகளுக்கு அப்பால் அவனது வீடு இருந்தது. கற்கள் துருத்தித் தெரியும் தார் கரைந்து போயிருக்கிற ரோடு முழங்கைத் திரும்பல் வடிவில் அவனது வீட்டைச் சுற்றிக்கொண்டு போகும். ரோட்டில் போகும் எவருக்கும் அழகான சிமெந்துத் தூண்கள் சில, ஓட்டுக்கூரையை ஏந்துவது தெரியும். சிறிய, இரண்டறைக் கல் வீடு. கொஞ்சம் விசாலமான விறாந்தை, வளவைச் சுற்றி எப்போதும் சிதிலமடைந்திருக்கும் கிடுகு வேலி.

அவளது பெயர் நாகராணி. சிவஞான சோதிலிங்கத்தின் வீட்டிலிருந்து சரியாகப் பதினைந்து வீடுகளுக்கு அப்பால் அவளது குளுமையான வீடு இருந்தது. அவள் வீட்டுக்குப் போவதற்கு மரங்கள் வரிசையாக நிழல் தரும் ஒடுங்கிய ஒழுங்கைக்குள் திரும்ப வேண்டும். பாதங்கள் புதையும்வண்ணம் சொரசொரவென்ற மணல் நிறைந்திருக்கிற அந்த ஒழுங்கையில் எப்போது பார்த்தாலும் இரட்டை வரிகளாக மாட்டுவண்டி போன சுவடு தெரியும். அடுத்தடுத்து அமைந்திருந்த மூன்று பனை ஓலைக் குடிசைகள் சேர்ந்ததுதான் அவளது வீடு. பெரிய வளவின் முற்றம் முழுவதும் நிறைந்திருக்கும் மணல், ஒழுங்காக அழகாகப் பனை ஓலைகளால் அடைக்கப்பட்டிருக்கும் வேலி.

எல்லா ஊர்களையும் போலவே இங்கும் ஒழுங்கைகள் எல்லாம் தார் ரோட்டில் போய் ஏறுகின்றன. ரோடு மர்மமான வளைவு நெளிவுகளுடன் போய் ஒரு நாற்சந்தியில் கலக்கிறது. அந்த நாற்சந்தியில் பஸ் நிலையம், பஸ் நிலையத்தின் சந்தடியில் காதைப் பொத்திக்கொண்டு கூசி நிற்கும் சின்னஞ்சிறு கடைகள், பஸ் நிலையத்திலிருந்து நான்கு புறமும் புறப்பட்டுப் போகும் தார் ரோடுகளின் இரு மருங்கும் நெருக்கியடித்துக்கொண்டு வரிசை வரிசையாக மேலும் கடைகள், தினமும் கூடும் கலகலப்பான சந்தை, பெற்றோல் ஷெட், அதிகாரப் பரவலாக்கலின் அடையாளச் சின்னங்களான பொலிஸ் நிலையம், தபால் கந்தோர், பட்டின சபைக் கட்டடம், கூட்டுறவுச் சங்கக் கடை, இத்யாதி.
இந்தக் கதைக்கு அவசியம் என்பதால் நாகராணிக்கு இரண்டு தம்பிகள் இருந்தார்கள் என்பதையும் இங்கே சொல்லிவிட வேண்டும்.

அவர்களும் அந்தப் பள்ளிக் கூடத்தில்தான் படித்தார்கள். அவர்கள் மட்டுமல்ல இந்த ஊரில் பிறந்த அனைவரும் படித்த பள்ளிக்கூடம் அது. ஊரவர் எல்லோரது செவிகளிலும் அந்தப் பள்ளிக்கூடத்தின் மணியோசை ஆயுள் முழுக்க நிறைந்திருக்கும். இரும்புத் தண்டவாளத் துண்டு ஒன்றில் சிறிய தடித்த இரும்பு உலக்கையால் 'கண கண கண' என்று வெகுதூரத்துக்குக் கேட்கும்வண்ணம் யாராவது ஓங்கி அடிப்பார்கள்.

எல்லா ஊர்களையும் போலவே இந்த ஊரிலும் நிறையக் கோயில்கள். ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமான ஓசை பெருக்கும் காண்டாமணிகள். கோயில் மணி ஓசைகளுக்கும் பள்ளிக்கூட மணியோசைகளுக்கும் இடையே வாழ்க்கை அழகாகவும் அமைதியாகவும் ஓடிச் சென்றுகொண்டிருந்த காலம் அது.

ஒழுங்கைகளில் தோன்றி தார் ரோடு வழியாக ஓடிச் செல்லும் வாழ்க்கை. நாற்சந்தியில் நின்று ஒரு பெருமூச்சு எறிந்துவிட்டு, ஊரைப் பிரிந்து, பஸ் ஏறிக் கொழும்புக்குப் போய்க்கொண்டிருந்த காலம் அது.

கொஞ்ச காலத்துக்குப் பிறகு இந்த மணியோசைகளுடன் சோதியின் சைக்கிள் மணியின் ஓசையும் சேர்ந்துகொண்டது. பள்ளிக்கூடத்தையும் பெண்களையும் தாண்டிச் செல்லும்போது 'கிணிங் கிணிங்' எனத் தவறாமல் மணி அடிப்பது சோதியின் வழக்கம்.

ஆனால் 'சோதியின் சைக்கிள்' என்பது அடையாளமும் மரியாதையும் கருதிச் சொல்லப்படும் வார்த்தை. அந்தச் சைக்கிளின் உண்மையான சொந்தக்காரன் யார் என்பது சோதிக்குக்கூடத் தெரியாது. 'அடோ' என்று மட்டும் தமிழில் பேசத் தெரிந்த போலிஸ்காரர்களுக்கும் தெரியாது. யாராவது சோதிக்கு எதிராகப் போலிஸில் முறைப்பாடு செய்யத் துணிவார்களா?

சந்தியில் நிற்பாட்டியிருக்கும் எந்தவொரு சைக்கிளையும் கேட்டுக் கேள்வியற்று ஓட்டிச் சென்றுவிடுகிற 'ஏகப் பிரதிநிதித்துவ' உரிமையை சோதி பெற்றுக்கொண்டு நிறைய நாட்கள் ஆயிற்று.

அவனது டெரிலீன் சேர்ட்டின் பொக்கெற்றில் எப்போதும் வெளியே தெரியும்படி பண நோட்டுக்கள் இருக்கும். சந்தைக்குத் தமது விளை பொருட்களை விற்க வந்தவர்கள், ரியூட்டரிகளுக்குப் படிக்கவென வந்து சந்தியில் நின்று அரட்டையடித்த மாணவர்கள், வெளியூரிலிருந்து வந்தவர்கள். யாரோ தனியாக அவனிடம் மாட்டிக்கொண்டார்கள் என்பது அதன் பொருள்.

சோதியைப் போல இன்னும் இரண்டு மூன்று பேர் இருந்தார்கள். அடிக்கடி அவர்களுக்கிடையே சந்தியில் சண்டை நடக்கும். பெரும்பாலும் சோதி வென்றுவிடுவான். ஆனாலும் அவன் தோற்றுப்போன சில சந்தர்ப்பங்களும் உண்டு. அவற்றில் இரண்டு இந்தக் கதைக்கு மிகவும் முக்கியமானவை.

பள்ளிக்கூட வெளிவாசலை ஒட்டினாற்போலச் சற்றுத் தள்ளிப் பொதுத் தண்ணீர்க் குழாய் இருக்கிறது. சோதிக்குக் குளித்து முழுகுவதில் மிகவும் விருப்பம். சண்டை போடாத சமயத்தையும் சாராய வெறி தலைக்கேறாத சந்தர்ப்பங்களையும் தவிர மிகுதி நேரங்களில் எல்லாம் மிகுந்த சுத்தமாகவும் அமைதியாகவும் காணப்படுவான். அவன் எவருடனும் பேசுவது கிடையாது. அவனுக்கு உற்ற நண்பர்கள் என எவரும் இல்லை.

பல நாட்களில் பள்ளிக்கூடம் தொடங்கும் சமயத்தில் அந்தக் குழாயில் இரண்டு வாளிகளை மாறி மாறி வைத்துத் தண்ணீர் நிரப்பித் தலையில் ஊற்றி ஊற்றி நெடுநேரம் முழுகிக்கொண்டிருப்பான். இடையில் சிறு வெள்ளைத் துண்டு. கட்டுமஸ்தான உறுதியான உடல் முழுவதும் மெல்ல வழிகின்ற முத்து முத்தான தண்ணீர்த் திவலைகள், செழுமையான சோப்பு நுரை, நெடுநேரம் பச்சைத் தண்ணீரில் நீராடுவதனால் சிவந்துபோகும் கண்கள், 'கர்ரர்' எனக் காறி உமிழும் ஓசை என சோதி கோலாகலமாக நீராடுவான். அழுக்குப் போகவென உடலை அழுத்தித் தேய்ப்பான். ஒரு காலைத் தூக்கி குழாயின் மீது வசதியாக வைத்துக்கொண்டு ஆபாசம் வெளித் தெரியத் தெரியத் தேய்ப்பான். ஆனாலும் பெண் பிள்ளைகள் வரும் சமயம் பார்த்து அவனது கால்களில் அழுக்கு அதிகரித்துவிடுவதுதான் விசித்திரம்!

ஒரு நாள் அவன் தன்னை மறந்து நீராடியபோது 'சடார்..' என்று பெல்ட்டினால் ஒரு அடி விழுந்தது. அவன் சுதாரிப்பதற்குள் தொடர்ந்து அடிகள். சோதி வாளிகளைத் தூக்கிக்கொண்டு ஓடியவாறே திரும்பிப் பார்த்தான். கோபத்தால் உடல் முழுவதும் சிவந்து பதற, பாம்பெனக் கையில் பெல்ட் நெளிய, ருத்ர மூர்த்தியாய் இங்க்லீஷ் சேர் நின்றுகொண்டிருந்தார்.

ஆனாலும் மோதலில் ஈடுபட்ட தரப்புகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதும் விருந்துபசாரங்களில் ஈடுபடுவதும் வழக்கம் என்ற உலக நியதிப்படி சில நாட்களின் பின்னர், மாலை மயங்கும் நேரத்தில் சந்தியில் ஒரு கச்சேரி நடந்தது!

இங்க்லீஷ் சேர் கை தட்டித் தட்டி உற்சாகப்படுத்த, சோதி ஆனந்த நடனம் ஆடினான். ஒரு கையால் சாறனை தொடை தெரிய உயர்த்திப் பிடித்தபடி, கைகளால் தாளலயத்துடன் சொடக்குப் போட்டபடி, பிருஷ்டத்தை நெளித்து நெளித்து ஆடினான். இரண்டு பேருக்கும் கண்மண் தெரியாத வெறி. இறுதியில் இங்க்லீஷ் சேர் தனது சேர்ட்டைக் கழற்றி வானில் வீசிக் கச்சேரியை நிறைவு செய்தார்.

இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் ஊர் இளைஞர்களுக்கு ஆதர்ஸ புருஷர்களாய் விளங்கிய காலம் அது. பள்ளிக்கூடத்துக்கு முன்னே பரந்திருந்த சிறு வயல்வெளியில் ஒரே சமயத்தில் நான்கைந்து குழுக்கள் அக்கம் பக்கமாக, காலையிலிருந்து பொழுது மங்கும்வரை கிரிக்கெட் விளையாடும்.

சோதிக்குப் பொதுக் குழாயில் நீராடும் 'அடிப்படை உரிமை' மறுக்கப்பட்ட பின்னர் அவன் வயல்வெளிக்குப் பின்னால் இருந்த தோட்டக் கிணறுகளில் நீராடத் தலைப்பட்டான். நீராடும் நேரத்தையும் மாலை நேரமாக மாற்றியமைத்தான். கிரிக்கெட் விளையாடுபவர்களை அவன் கண்டுகொள்வதே இல்லை. கிறீஸிற்குள் புகுந்து திமிர்த்தனமாக நடந்துபோவான்.

ஒரு நாள் அவன் நீராடித் திரும்புகையில் ஒரு பெரிய மண்ணாங் கட்டி விசையாக வந்து அவன் முதுகில் விழுந்தது.

'ஆரடா அவன். .?'

எதிரி ஒருவனாக இருந்தால் சோதி பின்வாங்குபவனல்ல. ஆனால் எட்டுப் பத்து கிரிக்கெட் துடுப்புகளும் ஸ்டம்ப்புகளாக பாவனை செய்யப்பட்ட டசின் கணக்கான பொல்லுகளும் ஏந்தியபடி ஏராளமான இளைஞர்கள் அவனை நோக்கி உறுதியாக, ஆனால் மெதுவாக முன்னேறிச் சுற்றி வளைத்துத் தாக்குதல் தொடுக்க ஆயத்தமாவதைக் கண்டான். எதிரி ஆட்பலம், ஆயுத பலம் ஆகியவற்றில் அபரிமித மேலாண்மையுடன், அவனுக்குச் சாதகமான கள முனைகளில் முன்னேறும்போதுதான் வெற்றிகரமாக இழப்புகளின்றிப் பின்வாங்க வேண்டும் என்ற அடிப்படை இராணுவ அறிவுகூட அற்றவனல்ல சோதி...!

எனவே வாளியைத் தூக்கிக் கொண்டு ஓடத் தொடங்கினான். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடி ரோடில் ஏறினான். மாலை வெயில் மஞ்சளாக விழுந்துகொண்டிருந்தது. அப்போது நாகராணி எதிரே வந்து கொண்டிருந்தாள். மஞ்சள் வெயிலில் மினுங்கியபடி தேவதைபோல மெல்ல ஆடி அசைந்து நடந்து வந்து கொண்டிருந்த நாகராணி, இந்தத் தடவையும் அவனைப் பார்த்து 'களுக்' என நளினமாகச் சிரித்தாள். அது மட்டுமல்லாமல் பரந்த நெஞ்சு விம்மி விரிய மூச்சு வாங்கிக்கொண்டிருந்த அவனை ஆசை பொங்க ஓரக் கண்ணால் பார்த்தாள்.

அதற்குப் பிறகு ஊரில் வதந்திகள் பலவாறாகப் பல்கிப் பெருகின. சோதி நாகராணி வீட்டு ஒழுங்கைக்குள்ளே அடிக்கடி சைக்கிளில் திரிகிறான் என்றும் அவளது வீட்டுக்கு முன்னால் நடுநிசி வேளைகளிலும் சைக்கிள் மணி கிண்கிணி நாதமெனக் கேட்கின்றதென்றும் அவர்களை ஒன்றாக அங்கே கண்டதாகவும் இங்கே கண்டதாகவும் . . .

உண்மையாகவே ஊரார் அவர்களை ஒன்றாகக் கண்டபோது கண்திருஷ்டி பட்டுவிடும்போல இருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் சோதி வைத்திருந்த சைக்கிள் புத்தம் புதிதாய்ப் பற்பல அலங்காரங்களுடன் மிளிர்ந்தது. சைக்கிள் பாரில் அவளை ஏற்றிவைத்துக்கொண்டு தங்கரதம் போல ஊர்கோலம் போவதென அவன் மெதுவாக சைக்கிள் ஓட்டிக்கொண்டு திரிந்தான். ஆனால் இப்போது சைக்கிள் மணியை அடிப்பது நாகராணிதான்.

'கிணிங்.. கிணிங்...'

யார் அதிக அழகு, அவனா அல்லது அவளா? என 'கிணிங்.. கிணிங்..' என்று சைக்கிள் மணி அடிக்கடி ஊரைக் கேட்டது.

பள்ளிச் சிறுவர்கள் அவர்களது சைக்கிளின் பின்னே ஓடினார்கள். துணிச்சலானவர்கள் சைக்கிளைத் தொடவும் அவர்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் 'கிளுகிளு' வெனச் சிரிக்கவும் செய்தார்கள்.

கடைசியில் ஒரு நாள் சோதி சிறுவன் ஒருவனைக் காலால் எற்றி உதைத்து விழவைத்தான்.

நாய் வாலை யாராவது நிமிர்த்த முடியுமா?

இன்பம் தந்த சைக்கிள் சவாரிகள் எல்லாம் சில நாட்களில் மறைந்துவிட்டன. நாகராணிக்கு சோதியிடம் அடிமேல் அடிவாங்கி அலுக்க சோதிக்கும் அவளை அடித்து அடித்து அலுத்துப் போய்விட்டது. யாருக்காவது தொடர்ந்து ஒரு பெண்ணை அடித்துக்கொண்டே இருக்க முடியுமா? எனவே நாகராணியின் தம்பிகள் சோதியின் தாக்குதலுக்குத் தோதான இலக்குகள் ஆனார்கள்.

ஆனால் அந்தப் பையன்களுக்கு நேருக்கு நேர் மோதும் பாரம்பரியப் போர் முறைகளில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. நவீன இரசாயன ஆயுதங்களைப் பாவிக்க முடி வெடுத்தார்கள். பள்ளிக்கூட ஆய்வுக் கூடத்தில் செறிவான நைத்திரிக் அமிலம் பல காலமாக உபயோகிக்கப்படாமல் எதற்கு இருக்கிறதாம்?
குறி பிசகாத பின்னிரவு நேரத் தாக்குதல்.
சோதியை வைத்தியசாலைக்குக் கொண்டுபோனது நாகராணிதான். என்ன இருந்தாலும் கட்டிய கணவனல்லவா? சலவைச் சவர்க்காரத்தின் மணமும் சுவையும் உடைய ஆஸ்பத்திரிச் சோற்றை விழுங்கிக் கொண்டு பல மாத காலம் சோதி படுத்தபடுக்கையாகக் கிடந்தான்.

சோதி வெளியே வந்தபோது ஊர் அவனைக் கண்டு மேலும் பயந்தது. குழந்தைகள் கனவிலும் அவனது கோர முகத்தைக் கண்டு வீரிட்டு அலறினார்கள்.

ஆனால் சோதியும் ஊரைக் கண்டு பயந்தான்.

ஊர் மிகவும் மாறியிருந்தது.

அவனுடன் சண்டைபிடித்தவர்கள் சிலர் சமூக விரோதிகளாகக் குற்றம் சுமத்தப்பட்டு, சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டுவிட்டார்கள். எஞ்சியவர்கள் இயக்கங்களில் சேர்ந்து கண்காணாத இடங்களுக்குப் போய்விட்டார்கள்.

அப்படிப் போனவர்களில் ஒருவன்தான் சோதியைக் கொன்றான்.

நாகராணி வீட்டுக்குப் போகும் ஒழுங்கைக்கு ரோடிலிருந்து திரும்பும் திருப்பத்தில் அவனது முண்டம் கிடந்தது. சற்றுத் தள்ளி மணலில் தனது கோர முகத்தைப் புதைத்த படி தலையும் கிடந்தது. தொடர்ந்து பல மணிநேரத்துக்குக் கொளு கொளுத்த தடித்த இரத்தம் வடிந்து மணலில் கலந்தது. தொடர்ந்து பல நாட்களுக்கு அந்த இடத்தில் ஈக்கள் கணமணவென மொய்த்துக்கொண்டிருந்தன.

மகாபாரதம் நிகழ்த்திய பெரும் குருஷேத்திரத்திற்குக் களப்பலி கொடுக்கப்பட்ட அரவானைப் போல, ஊரின் முதல் நவகண்டமாக சோதியின் தலை கொய்யப்பட்டபோது அவனுக்கு ஏறத்தாழ முப்பது வயதாகியிருந்தது.

னீ
அதற்குப் பிறகு முப்பது வருடங்களாக நடந்தவை புதிதாக வேறு ஒன்றுமில்லை. ஏறத்தாழ எல்லாமே இதுவரை கூறியவற்றின் விஸ்வரூபங்கள்தாம் என ஒரு வரியில் சொல்லிவிடலாம்.

வரலாற்றில் ஒரு தலைமுறைக் காலத்தைச் சுற்றி முடித்துவிட்டு வந்திருக்கிறோம்.

பல வருடங்களுக்குப் பிறகு கொழும்பிலிருந்து வரும் பஸ்கள் நேரடியாகச் சந்திக்கு வருகின்றன. அதில் வருபவர்களும் பல வருடங்களுக்குப் பின்னரே வருகின்றார்கள்.

சிலர் அதிகாரம் செலுத்தவும் பலர் ஆளப்படவும் அப்படியாக வரும் ஒருவர் கொஞ்சம் துணுக்குற நேரிடலாம்.

அதிகாரப் பரவலாக்கலின் தவிர்க்க முடியாத அடையாளச் சின்னங்கள் எல்லாவற்றுக்கும் காவலாகப் பல காவலரண்கள் இருக்கின்றன. பஸ் நிலையம் கொஞ்சம் கிழடுதட்டிப்போய் இருக்கிறது.

அங்கே சோதியைப் போன்ற பலர் உருவாகிவிட்டிருப்பதைக் காணலாம். அவர்கள் வெறியில் நடனமாடவும் கூடும். ஒரே ஒரு வித்தியாசம். இப்போ கைதட்டி உற்சாகப்படுத்துவது ஊரின் ஆசிரியர் ஒருவரல்ல. மாறாக காவலரண்களிலிருந்து சில பைலாப் பாடல்கள் கேட்கக்கூடும்.
சந்தியிலிருந்து பள்ளிக்கூடத்துக்குப் போகும் ரோடில் போடப்பட்டிருந்த தார் முழுவதும் வீணே சிந்தப்பட்ட குருதியைப் போல வழிந்து ஓடிவிட்டது. கற்கள் வெளியே தள்ளித் தெரிகின்றன.

ரோடில் செல்லும் பலருக்கு அந்தக் கற்களில் இரத்தம் பல ஆண்டுகளாகப் படிந்திருப்பதான பிரமை தோன்றக்கூடும்.

நாகராணியின் வீட்டுக்குப் போகும் ஒழுங்கையில் சன நடமாட்டமே இல்லை. வேலிகளும் கூரைகளும் இற்றுப்போய்ப் பாறி விழுந்துவிட்ட வீட்டில் ஒரு வயதான பெண் தனக்குத்தானே பேன் பார்த்துக்கொண்டிருக்கிறாள். தனியே அலகையைப் போல வாழ்கிறாள். அவளது தம்பிகள் வெளிநாட்டுக்கு எனப் பயணம் போனார்களாம். பிறகு தொடர்பே இல்லை. என்னவானார்களென யாருக்கும் தெரியாது.

அவளுக்குச் சிலவேளைகளில் சித்தம் கலங்கிவிடும் என்கிறார்கள். அவ்வேளைகளில் தன் காதலனைக் கொன்றவர்களை அவள் மண் அள்ளித் தூற்றுவதாகச் சொல்கிறார்கள்.

வேறு ஏதாவது சொல்ல மறந்துவிட்டேனா?

ஆம், சோதியின் வீடு இருந்த இடத்தில் இப்போ ஒன்றுமே இல்லை. ஒரு சிறிய குப்பை மேடும் சில கற்களும் மட்டுமே இருக்கின்றன. வெடிபொருட்கள் ஏதாவது இருக்கலாம் என்ற அச்சத்தில் எவரும் கிட்ட நெருங்குவதில்லை.

சோதியின் வீடு மட்டுல்ல, பல வீடுகள் அப்படித்தான், சுடலை போல இருக்கின்றன.

அங்கெல்லாம் காற்று மட்டும் மாளாத துயரத்துடன் ஊளையிடுகிறது.

.......................................................................................................................

குறிப்பு: நவகண்டம் - பழங்காலத்தில் முதல் களப்பலி கொடுக்கப்படுப வரின் துண்டிக்கப்பட்ட தலை.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சிறந்த கதைகள் , கொஞ்சம் கனதியானதும் கூட....!

பகிர்வுக்கு நன்றி இனியவன்...!

  • தொடங்கியவர்
On 12/27/2015 at 1:07 AM, suvy said:

எல்லாம் சிறந்த கதைகள் , கொஞ்சம் கனதியானதும் கூட....!

பகிர்வுக்கு நன்றி இனியவன்...!

நீங்கள் சொலவது முற்றிலும் சரி . இந்த கதைகள் சுமார் 15 வருடங்களுக்கு முன்னார் எழுதபட்டவை . தொடர்ந்து வாசிக்கும்போது .இன்றைய எதிர் கட்சி தலைவர் எழுதிய கதையும் வருகிறது என நினைக்கிறன் . "கொத்தமல்லி தண்ணி ' என்ற கதை . எனவே இவை பழைய பதிவுகள் . புதிய கதைகள்தேடி 
இன்னுமொரு திரியில் ஆரம்பிப்பேன் 


நன்றி நன்றி 

  • தொடங்கியவர்

கொத்தமல்லிக்குடிநீர்
------------------------------------
இரா.சம்பந்தன்

------------------------------------

அம்மா! பிள்ளைகள் படுத்திருக்கினம். நான் போட்டு வாறன். பரிமளம் ஆச்சி எழுந்து உட்காருவதற்குள் அறைக் கதவைச் சாத்திவிட்டு மகள் போய்விட்டாள். ஆச்சிக்கு இன்றைக்கும் சுகமில்லைத் தான். போன கிழமை பேரப்பிள்ளைகளோடு கடற்கரைக் குளிரில் உலாவினதாக்கும் ஆச்சிக்கு நெஞ்சுத்தடிமன் ஆக்கிப் போட்டுது. சனியும் ஞாயிறும் ஒரே தலை அம்மல். மண்டையிடி. சாப்பாடு மனமில்லை. எழுந்து நடக்க உலாஞ்சியது.

இராத்திரிப் படம் பார்த்துக்கொண்டு இருந்த போது தொடர்ந்து நாலைந்து தடவைகள் இருமியதற்காக என்னம்மா படம் பார்க்க விடமாட்டீங்களா? போய் அறைக்குள்ளே இருந்து இருமுங்கோவன் என்று பட்டும்படாமலும் சிரித்துக் கொண்டு சொன்ன மகளை எண்ணி மனதுள் வேதனைப் பட்டுக்கொண்டு ஒரு தைனோலோடு படுத்த ஆச்சிக்கு இரவு முழுவதும் நித்திரை வரவில்லை. தொண்டைக்குள்ளே யாரோ கோழிச்செட்டையாலே தடவின மாதிரி ஏதோ ஊர்ந்து ஒரு கண் நித்திரை கொள்ள விடாமல் ஒரே புகைச்சல்.


இரவு முழுவதும் தான்பட்ட பாட்டைப் பார்த்து மகள் எழுந்து வந்து என்னம்மா செய்யுது? சுடுதண்ணீர் வைத்துத் தரட்டோ என்று கேட்பாள் என்று எண்ணி ஏமாறுவதற்கு ஆச்சி கனடாவுக்கு வந்த புதிதல்ல. அம்மாவுக்கு அனுதாபம் காட்டி என்ன ஏதென்று விசாரித்தால் பிறகு தான் நின்றுதானே பிள்ளைகளைப் பார்க்க வேணும் என்ற நினைப்போடு பொன்சர் பண்ணிக் கூப்பிட்டது வேறு என்னத்துக்கு என்ற எண்ணமும் சில வேளைகளில் இருக்கலாம் என்று நினைத்து ஆச்சியும் ஒன்றையும் பெரிது படுத்துவதில்லை. ஆனால் இன்றைக்கு இரண்டு பிள்ளைகளையும் விட்டுப் போட்டு மனுசனும் மனுசியும் வேலைக்குப் போவினம் என்று ஆச்சி கனவிலும் எண்ணி இருக்கவில்லை.

ஒருமுறையல்ல விடிய ஒருமுறை மத்தியானம் இரண்டு முறை பின்னேரம் ஒருக்கால் என்றும் பெரியதை ஒருகையில்; பிடித்துக் கொண்டும் சிறியதை இடுப்பிலே சுமந்து கொண்டும் பள்ளிக்கூடத்துக்கும் வீட்டுக்கும் நாயாக அலையும் வாழ்க்கைக்கு வருத்தத்தைக் காரணம் காட்டி இன்றைக்கு லீவு தருவார்கள் என்று எண்ணியிருந்த ஆச்சிக்கு உண்மையில் ஏமாற்றமாகத் தான் இருந்தது.

தலையைக் கூட்டி முடிந்து கொண்டு கட்டிலை விட்டு இறங்கி ஒரு அடி வைக்கவில்லை. பித்தமாக்கும் வயிற்றைப் புரட்டியது. தற்செயலாக சத்தி வந்தாலும் என்று நினைத்து நேற்றே எடுத்துத் தலகணிக்குக் கீழே ஒளிச்சு வைத்திருந்த பொலித்தீன் பையை எடுத்து முகத்துக்குக் கிட்டப் பிடித்து ஆவென்று வாயைத் திறந்த போது தான் சின்னன் அதுதான் பேத்தி அஜி தொட்டிலுக்குள்ளே கிடந்து சரசரத்துச் சிணுங்கியது. ஓடியாறேன் குஞ்சு என்று சொல்லு முன்பே அம்மம்மா தங்கச்சியைத் தூக்குங்கோ என்று படுக்க விடுகுதில்லை என்று கத்தினான் பேரன்.

ஆச்சிக்கு வந்த சத்தியும் நின்று விட்டது. நெஞ்சைத் தடவிக்கொண்டு குழந்தையையும் தூக்கித் தோளில் அணைத்தபடியே பால்வைக்கப் போன ஆச்சிக்கு பால் காச்சும் கிண்ணத்தை அடுப்பில் வைத்த போதுதான் ஒருநாள் பால் பொங்கி அடுப்புக்குள்ளே ஊற்றுப்பட்டதுக்காக மகளிடம் வாங்கிய ஏச்சு ஞாபகத்துக்கு வந்தது. என்ன உயிர் போற வேலை இருந்தாலும் பால் அடுப்பிலே வைத்தால் பக்கத்திலே நில்லுங்கோ அம்மா! கொஞ்சம் சத்தம் போட்டுத்தான் பிள்ளை சொன்னவள். சொன்ன விசயம் நியாயமானது தான் என்றாலும் சொன்ன விதம் இருக்கே அது ஒரு மாதிரித்தான். என்றாலும் பிள்ளைப்பாசம் ஆச்சி பொறுத்துக் கொண்டாள்.

குழந்தையைக் கழுவித் துடைத்து உடுப்பு மாற்றி ஒரு விசுக்கோத்தும் எடுத்துப் பாலோடு கொடுத்து இருத்திவிட்டு மூன்று நான்கு தடவைகள் அடுப்புக்கு மேலே கையை வைத்துப் பார்த்தாள் ஆச்சி. சூடு குறையத் தொடங்கி விட்டது. அடுப்பு நிற்பாட்டியதை உறுதி செய்து கொண்டு இரண்டு துண்டு பாணுக்குச் சூடுகாட்டி பட்டரும் பூசி மூத்த பொடிக்கு கோப்பியும் ஊத்தி வைத்துவிட்டு மேலே போனாள்.
ஏழரை மணிக்கு எழுப்பியம்மா வெளிக்கிடுத்திச் சாப்பாடு கொடுத்துப் போட்டு எட்டுமணிக்கு வெளியாலே கூட்டிக் கொண்டு இறங்கினீங்கள் என்றால் அவசரப்படாமல் போகலாம் என்று ஒருமுறை மகள் விளங்கப்படுத்தினவள். அப்படிப் பார்த்தால் இன்னும் நிறைய நேரம் இருக்குத்தான். ஆனால் பொடியன் எழும்பி முகத்தைக் கழுவிப்போட்டுத் தங்கச்சியாரை ஒரு ஐந்து நிமிடம் பார்த்தால் தானே மற்ற அலுவல்களையும் பார்க்கலாம். வீடு கூட்டுவது சுவாமி கும்பிடுவது சமைப்பது சாப்பிடுவது போன்ற வேலைகளைக் குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு செய்தாலும் குழந்தையையும் வைத்துக்கொண்டு செய்ய முடியாத ஒருசில வேலைகளும் உண்டு.

ஆச்சிக்கு இப்பவும் வயிற்றுக்குள் என்னவோ செய்தது. ஒருமுறை இருந்து பார்க்கலாம் தான் .பெட்டையை இறக்கி விட்டால் பேயடிச்சதைப் போல குழறும். பிறகு ஆத்தேலாது. அதுக்குப் பயந்து ஆச்சி அடக்கிக் கொண்டுதான் இருக்கிறாள்.

தம்பி குஞ்சு எழும்பு மோனை! பள்ளிக்கூடத்துக்குப் போகவேணுமல்லோ. என்னை விடுங்கோ அம்மம்மா. அப்படிச் சொல்லக்கூடாது ராசா. எழும்பு அப்பு! நான் பிள்ளைக்கு பாண் பட்டர் எல்லாம் பூசி வைச்சிருக்கிறன். எனக்கு பாண் வேண்டாம் அம்மம்மா. சூப் தான் வேணும். இனிச் சூப்பு காய்ச்ச நேரமல்லோ போய்விடும். அம்மா பாண் தானே குடுக்கச் சொன்னவள்? நேற்றும் சூப்புத்தானே குடிச்சது. நான் பிள்ளைக்கு இரவு காய்ச்சித் தாறன். அம்மம்மா எனக்குச் சூப் தான் வேணும். ஒரு சொல்வழி கேளாத பிள்ளை எழும்பிவா காச்சித் தாறன்.

சூப்பு என்றதும் தான் பரிமளம் ஆச்சிக்கு சடாசு அண்ணரின் மணியம் பெண்சாதி போனிலே சொன்னது நினைவுக்கு வந்தது. பரிமளம் அக்கா ஒரு சிறங்கை கொத்தமல்லி நாலைந்து மிளகு கொஞ்ச வெந்தயம் இரண்டு பல்லு உள்ளி கடுக சீரகம் எல்லாவற்றையும் இலேசாக வறுத்து எடுத்து கோப்பிக் கிறைண்டர் இருக்கல்லோ அதிலே போட்டு இரண்டு தரம் அரைத்துப் போட்டு தண்ணியைக் கொதிக்க வைத்து அவித்துக் குடி. துடிமன் தலைச்சுற்று எல்லாம் ஒரு நாளிலே பறக்கும் கண்டியோ. ஆதை விட்டுப் போட்டு இங்கே ஒன்றும் செய்ய மாட்டாய் அக்கா என்று சொன்னது. இன்றைக்கு அதையும் ஒருக்கால் செய்து குடித்துப் பார்க்க வேணும். இந்தப் பொல்லாத இருமல் ஒன்றுக்கம் நிக்குதில்லையே ஆச்சி நினைத்துக் கொண்டாள்.

எல்லாம் சரிதான். ஆச்சிக்கு கிரைண்டர் போடத் தெரியாது. சுpன்னக் கோப்பிக் கிரைண்டர் என்றால் சுகம். முகளிடம் இருக்கும் கிரைண்டர் வேறு மாதிரி. பெரிசு. மகள் போட்டுவிட உழுந்து அப்படி அரைத்துத் தான் ஆச்சிக்கப் பழக்கம். பொடியன் பள்ளிக்கூடம் போவதற்கு முதல் கேட்டு வைத்துக் கொண்டால் கொண்டுபோய் விட்டுப்போட்டு வந்து செய்து குடிக்கலாம்.

எடதம்பீ! மோனே! இந்தக் கிரைண்டர் எப்படிப் போடுறது என்று சொல்லு ராசா.
அம்மம்மா இங்கே பாருங்கோ இந்த வயரைப் பிளக்கிலே இப்படிக் குடுங்கோ. பிறகு எதைக் கிரைண்ட் பண்ணப் போறியளோ அதைப் போட்டு மூடியாலே மூடிப்போட்டு இப்படி அமத்துங்கோ இப்ப வேலை செய்யுதல்லோ
சரிசரி நீ சாப்பிட்டுப் போட்டு இறங்கு. நான் பிறகு வந்து செய்யுறன். அம்மாடி உனக்கு சூப்பு ஆறட்டும் அண்ணாவை விட்டுப் போட்டு வந்து குடிப்பம்.
ஆச்சி முகம் கழுவிக்கொண்டு வெளியாலே இறங்கிய பொது எட்டுமணி. அம்மா பள்ளிக்கூட வாசலிலே விட்டுப் போட்டு உள்ளே போறானோ என்று பார்த்துப் போட்டுத் தான் நீங்கள் வரவேணும். தற்செயலாக இவன் வாசலிலே நின்று ஏமலாந்த ஆராவது பிடிச்சுக்கொண்டு போய்விடுவான்கள் கவனம் என்ன? மகள் முதல் நாளே சொன்னவள். பேரன் உள்ளே போக ஆச்சி திரும்பி நடந்தாள். குடிநீர் வெறும் வயிற்றிலே குடிச்சால்தான் நல்லது என்று ஆச்சி இன்னமும் தேத்தண்ணீர் கூடக் குடிக்கவில்லை. பொடியைப் பதினொன்றரைக்குப் போய் கூப்பிடுவதற்குள் குடிநீரும் அவிச்சு பாத்திரங்களும் கழுவி கறியளும் வைக்க நேரம் காணுமா? காணும் காணும் ஆச்சி தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.
குழந்தைக்கு சூப்பைக் கொடுத்து முடித்து விளையாட இருத்திவிட்டு ஆச்சி ஒரு சிறங்கை கொத்தமல்லியை எடுத்து மிளகு சீரகத்தோடு இரண்டு செத்தல் மிளகாயும் சேர்த்து வறுத்தாள். புதுச் செத்தல் ஆக்கும். சூடு பட்டவுடன் மிளகாய் புகைச்சூழ்ந்து இருமியது. ஆச்சி எல்லாவற்றையும் இறக்கி ஆறவிட்டாள். கிரைண்டரிலே போட்டுப் பேரன் சொன்னது போல அமர்த்தினாள். கிரைண்டர் வேலை செய்யவில்லை. ஆச்சிக்குப் பெருத்த ஏமாற்றமாகப் போய்விட்டது. அரைக்காட்டில் என்ன முழுசாகப் போட்டு அவிச்சுக் குடிப்பம் என்றுதான் ஆச்சி முதலில் எண்ணினாள். ஏதற்கும் பொடியன் இன்னும் ஒன்று ஒன்றரை மணித்தியாலத்திலே வந்திடும் கேட்போம் என்று நினைத்தவளாக மற்ற வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள்.
குடிநீர் பொருட்களை அப்படியே கிரைண்டரோடு தள்ளிவைத்து விட்டு பாத்திரங்களைக் கழுவினாள் ஆச்சி. அதற்குள் பேத்தி அஜி அவித்து அரித்து பக்குவப்படுத்தி வைத்த மா வாளிக்குள் அரிசியை அள்ளிக் கொட்டி விட்டது. ஆச்சிக்கு இன்னொரு வேலை கூடி விட்டது. இங்கே விடு பிள்ளை என்று அரிசி அளவு பேணியைப் பறித்ததும் குழந்தை அழத் தொடங்கியது.
ஆச்சி நேரத்தைப் பார்த்தாள். இன்னும் பத்து மணி ஆகவில்லை.பத்து மணிக்குத்தான் மகள் முதல் டெலிபோன் எடுக்கிறவள். அவள் போன் எடுக்கும் போது குழந்தை அழுதால் பிள்ளையை என்ன செய்யுறியள் என்றுதான் முதலில் கேட்பாள். அந்தக் கேள்விக்குப் பயந்து குழந்தையைப் பத்து மணிக்கு அழ விடுவதில்லை ஆச்சி.

ஆச்சி பார்த்தாள். இன்றைக்கு என்ன சமைப்பது? மருமகனுக்கு கத்தரிக்காய் பிடிக்காது. தக்காளிப்பழம் கிரந்தியாம். உருளைக்கிழங்கு சாப்பிட வேண்டாம் என்று டாக்டர் சொன்னவராம். முருக்கங்காய்க் கறி வைக்கலாம். கீரை காச்சலாம். கோழிக்கால் இருக்குத்தான். ஒரு முறை சமைத்து வைத்ததற்கு கொம்மா ஏன் தெரியாத வேலைக்கெல்லாம் போறவ? இதை எப்படித் தின்னுறது? என்று மருமகன் சத்தம் போட்டது ஆச்சியின் காதிலும் விழுந்து விட்டது. அதற்குப் பிறகு ஆச்சி அந்த வேலைக்கெல்லாம் போவதில்லை.
முன்பெல்லாம் பன்னிரண்டு மணிக்கு முன்பே ஆச்சி சமைத்துப் போடுவாள். ஆனால் வேலையாலே வந்து சாப்பிட சோறு காய்ந்து போகுது என்று மருமகன் மகளுக்குச் சொல்லி மகள் தனக்குச் சொன்ன பிறகு ஆச்சி கறிகளை மத்தியானமும் சோற்றை மூன்று மணிக்குப் பிறகும்தான் போடுறவள். ஆனால் ஆச்சிக்கு வேளைக்கப் பசிக்கும். அதனால் அனேகமாக முதல் நாள் மிஞ்சும் சோற்றைச் சூடாக்கி ஆச்சி சாப்பிட்டு விடுவாள். பேரனுக்கும் சிலவேளை அதுதான்.
ஆச்சி திரும்பவும் முகம் கழுவப் போனாள். பிள்ளைகளின் உடுப்பு மகளின் உடுப்பு என்று எல்லாமே மூன்று நாட்களாக வாளிக்குள் கிடந்து புளித்து மணத்தது. அவளாலே ஏலாது என்றாலும் ஒருவரும் திரும்பிப் பார்க்காத அவற்றை தானும் அலம்பிப் போடாமல் வர மனதுக்கு ஒரு மாதிரியாய் கிடந்தது. எல்லாவற்றையும் துவைத்துப் பிழிந்து குளியலறைக் கம்பியிலே காயப் போட்டுவிட்டு நிலத்திலே குனிந்து தண்ணீh சொட்டு விழுகிறதா என்று பார்த்தாள் ஆச்சி. தண்ணீர் சொட்டுப் போடும் இடங்களில் பழந்துணிகளை விரித்து விட்டு முகம் கழுவிக் கொண்டு சுவாமிப் படத்துக்கு முன்னால் வந்தாள்.

முருகா! என்ரை பிள்ளை மருமகன் பேரப்பிள்ளைகள் எல்லாரும் நல்லாக இருக்க வேணும். ஒரு நோய் நொடி வரப்படாது. விபூதியை அள்ளிப் பூசிக் கொண்டு நேரத்தைப் பார்த்தாள். பத்து மணி. இப்ப போன் வரும்.


கலோ அம்மா என்ன செய்யுறியள்? இருக்கிறன் பிள்ளை. அஜி என்ன செய்யிறாள்? விளையாடுறாள்! வடிவாகச் சாப்பிட்டவளோ? அவள் எங்கே மோனை சாப்பிடுகிறது. தமையனுக்குக் காச்சின சூப்பிலே கொஞ்சம் குடிச்சாள். இதைச் சொல்வதற்குள் ஆச்சி மூன்று முறை இருமியிருப்பாள். டெலிபோனிலே கேட்டிருக்கும். மன ஆறுதலுக்காவது ஒரு வார்த்தை! ஆச்சிக்கும் கவலைதான். சரியம்மா நேரமாகுது. நான் பிறகு எடுக்கிறன். ஆச்சி போனை வைத்தாள். தேத்தண்ணீர் ஊற்றிக் குடித்தாள். குடிநீர் குடித்தால் சுகமாக இருக்கும். அதற்குக் கொடுப்பனவு இல்லைப் போலும்.

ஆச்சி பேரனுக்கு மிளகாய் போடாமல் பால்கறி ஒன்று வைத்தாள். நேரம் பதினொரு மணி. அவளுக்கு மனதிலே சந்தோசம். பன்னிரண்டு மணிக்குப் பொடியனைக் கூட்டிக்கொண்டு வந்து சாப்பாடு கொடுக்கும் போது எப்படியும் இந்தக் குடிநீர்ப் பிரச்சனையைப் பார்த்துப் போட வேணும். ஆச்சி சேலையை உடுத்தாள். வெளியாலே மழைக் குணமாய்க் கிடந்தது. குழந்தைக்குக் கம்பளி உடுப்புப் போட்டுக் கட்டினாள். வீட்டைப் பூட்டிக்கொண்டு இறங்கினாள்.

பொடியனைத் திரும்பவும் கொண்டுபோய் விட்டுப் போட்டு வரும் போது தெரு மூலையில் காயிதம் பார்க்க வேணும். இல்லாவிட்டால் இன்றைக்கு கடிதமும் பார்க்க நேரமில்லாமல் மணித்தியாலக் கணக்கிலே போன் கதைச்சு இருக்கிறியள் போலக்கிடக்குது என்று சொல்லி மகள் சிரிக்கும் போது சரியான கவலையாக இருக்கும். தெரிந்தவர்கள் எடுக்கும் டெலிபோன்களே வயது முதிர்ந்த சனங்களுக்கு ஆறுதலான விசயம் என்பதை இந்தப் பிள்ளையும் உணரும் ஒரு நாள் வருந்தானே ஆச்சி நினைத்துக் கொள்வாள்.


பள்ளிக்கூடம் விடமுன்பே போய் ஆச்சி ஐந்து பத்து நிமிடங்கள் காத்துக் கொண்டு நிற்பது வழக்கம். அப்படி நிற்கும் போது சில தமிழ்ச் சனங்கள் பேரப்பிள்ளைகளைக் கூப்பிட வருவார்கள். அவர்களின் நடை உடை பாவனையைப் பார்க்கும் போதும் கதைகளைக் கேட்கும் போதும் தான் கொத்தடிமையோ என்ற எண்ணம் கூட ஆச்சிக்கு ஏற்படுவதுண்டு.

வந்த புதிதிலே விசயம் தெரியாமல் ஆச்சியும் கொஞ்சம் முரண்டு பிடித்தவள் தான். சத்தமாகக் கதைத்தவள் தான். அதற்காக மாதக் கணக்கிலே மகள் கதைக்காமல் இருந்ததும் மருமகன் காசு கொடுத்துப் பிள்ளைகளைப் பக்கத்து வீட்டிலே பார்க்க விட்டதும் ஆச்சிக்குப் பெரிய துன்பமாகப் போய் விட்டது. எல்லாவற்றையும் விடப் பேரப்பிள்ளைகளைத் தன்னுடன் கதைக்க விடாமல் தடுத்து வைத்திருந்த அந்த நாட்களை இன்றைக்கு நினைத்தாலும் ஆச்சிக்குத் தேகமெல்லாம் நடுங்கும்.

இப்போதெல்லாம் ஆச்சி அவர்கள் சொல்லுவதை மட்டும் செய்துவிட்டு இருந்து விடுவாள்.
மோனே! கிரைண்டர் வேலை செய்யேல்லையடா! பேரன் சாப்பிடும் வரை பொறுமையாக இருந்த ஆச்சி சொன்னாள். கையைத் துடைத்துக் கொண்டு கிரைண்டரை என்னவோ செய்யும் பேரனை ஆசையோடு பார்த்தாள்.

அம்மம்மா! நீங்கள் கிரேஸி. சுவிச்சைப் போட்டால் தானே பவர் வரும். கிச்சின் லைட்டைப் போடுங்கோ. இப்ப பாருங்கோ கிரைண்டரிலும் சிவப்பு லைட் எரியுதல்லோ இனி வேலை செய்யும் அம்மம்மா!

எட கடவுளே நான் அதை யோசிக்கவில்லை அப்பு. பகலிலே லைட்டு எரிஞ்சால் கொம்மா பேசுவாள் என்று பயந்து நான் தான் நிப்பாட்டினனான். பிறகு மறந்து போனன். உப்பிடித்தான் சில வேளை கேத்திலையும் வைத்துப்போட்டு இருந்து கொதிக்குது கொதிக்குது என்று இருந்து ஏமாறுறது.

அம்மம்மா! நான் கிரைண்ட் பண்ணித் தரட்டோ? குஞ்சு! பிள்ளைக்கு மிளகாய் கண்ணெரியும். தும்மும்! நீ விடு ராசா நான் உன்னைக் கொண்டுபோய் விட்டுப்போட்டு வந்து செய்யுறன்.

ஆச்சி பள்ளிக்கூடத்தில் இருந்து ஓட்டமும் நடையுமாக வந்தாள். வரும் போதே குழந்தை வழியில் நித்திரையாகி விட்டது. மெதுவாகக் கொண்டுபோய் மேலே கிடத்திவிட்டு பூனை போல இறங்கி வந்தாள். அடுப்பிலே தண்ணீரைக் கொதிக்க வைத்தாள். சிறிது உப்பும் போட்டாள். கிரைண்டரை இழுத்து இடக்கையால் வயிற்றோடு அணைத்துக் கொண்டு வலது கையால் மூடியைப் போட்டு அழுத்தினாள். சத்தத்துக்குப் பிள்ளை எழும்பி விடுகிறதோ தெரியாது. அது வேலை செய்யவில்லை. கிரைண்டர் தட்டுப்பட்டு மின் தொடர்பை இழந்திருந்து.


மூடியை எல்லாப் பக்கத்துக்கும் திருப்பிப் பார்த்தாள் ஆச்சி. ஒரு பலனும் இல்லை. கிடக்கட்டும். தற்செயலாக உடைந்தாலும் அது பிறகு கரைச்சல் பிடிச்ச வேலையாகப் போய்விடும். பொடியனே வரட்டுக்கும்.

ஆச்சி குக்கரைக் கழுவி அரிசி போட்டாள். அடுப்பை நிறுத்திவிட்டு நிலமெல்லாம் கூட்டி அள்ளினாள். குழந்தை அஜி சிதற அடித்திருந்த விளையாட்டுச் சாமான்களை எல்லாம் பொறுக்கி ஒழுங்கு படுத்தினாள். இரவு புட்டு அவிக்கத் தேங்காய் திருவி வைத்தாள். குழந்தை எழுந்து விட்டது. சாப்பாடு தீத்தினாள். ஆச்சிக்கும் பசிப்பது போல இருந்தது. என்றாலும் பொடியனும் வரட்டும் என்று நினைத்துக் கொண்டாள். மூன்றேகால் ஆனது. ஆச்சி திரும்பவும் பள்ளிக்கூடத்துக்கு இறங்கினாள்.

தம்பீ! நான் இன்னமும் குடிநீர் வைத்துக் குடிக்கவில்லை ராசா! அம்மம்மாவுக்கு நீ ஒருக்கால் அரைத்துத் தா தம்பி!


வாங்கோ அம்மம்மா நான் கிரைண்ட் பண்ணித் தாறன். நீங்கள் இன்னமும் ஒன்றும் சாப்பிடல்லையா? பசிக்கலையா? உங்களுக்கு காச்சலா? அம்மான்ரை டாக்டரிட்ரை பஸ்சிலே போவமா? வாறீங்களா?
கேள்விகளாகவே கேட்டுக்கொண்டு பக்கத்தில் நடந்துவந்த பேரனின் தலையைத் தடவினாள் ஆச்சி. நீ எங்களின்ரை அடி மோனை! அதுதான் உனக்கும் சரியான இரக்க குணம் ராசா! உன்னைப் போலத்தான் செத்துப்போன அப்பப்பாவும்! ஆருக்காவது வருத்தம் துன்பம் என்றால் மனுசன் உயிரை விட்டுப்போடும். அந்தாளின்ரை ஞாபகத்துக்கு நீ இருக்கிற படியால் தான் இந்த வீட்டிலே எனக்கு இன்னமும் பைத்தியம் பிடிக்காமல் இருக்குது.

அம்மம்மா அழுகிறியளா? ஏன் தலை இடிக்குதா? இல்லைக்குஞ்சு நீ நட!
ஆச்சி திரும்பவும் அடுப்பைப் போட்டாள். பேரன் அரைத்துத் தந்த குடிநீர்ப் பொடியை பழைய பேப்பரில் கொட்டினாள். தேயிலை வடியையும் தேடி எடுத்தாள். ஒரு கிண்ணத்தில் பழப்புளியையும் ஊறவிட்டாள். கிரைண்டரை ஈரத்துணியாலே துடைத்து மூடியையும் கழுவி வைத்தாள். கொதிக்கும் தண்ணீரில் அரைத்தெடுத்தவற்றைக் கொட்ட இருந்த சமயம் அம்மம்மா ஓடிவாங்கோ அஜியின்ரை ஒரு தோட்டைக் காணவில்லை என்றான் பேரன்.

ஆச்சிக்கு வருத்தம் எங்கு போனதோ தெரியவில்லை. அடுப்பை நீறுத்திவிட்டு ஓடி வந்தாள். வலக்காதுத் தோட்டைக் காணவில்லை. ஆச்சிக்குத் தேகம் நடுங்கியது. குழந்தையின் உடுப்பெல்லாம் கழட்டி உதறிப்பார்த்தாள். தனது தாவணிச் சேலை மடி எல்லாம் உதறிப் பார்த்தாள். இல்லை.

வீட்டிலே விழுந்துதோ வெளியிலே விழுந்துதோ கடவுளே நான் எங்கே தேட? வுந்து ஏசப் போறாளே. இன்றைக்கு வேலைக்குப் போன காசு அநியாயமாகப் போட்டுது என்று சொல்லப் போறாளே! நான் எங்கே போய்த் தேட? குட்டில் தொட்டில் கட்டிவைத்த குப்பை எல்லாம் கிளறி ஆச்சி ஏமாந்து விட்டாள். ஆச்சிக்கு வியர்த்தது. முகம் கழுவின போது பைப்புக்குள்ளே விழுந்துதோ தெரியவில்லையே!

மூன்று தடவைகள் ஆச்சி பள்ளிக்கூடத்துக்கும் வீட்டுக்கும் நடந்து பார்த்தாள். கிடைக்கவில்லை. ஆச்சிக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. எவ்வளவு கவனமாகப் பார்த்தும் கடைசியிலே இப்படி ஒரு குறை கேட்க வேண்டியதாயப் போட்டுது. என்ரை தலை விதி! பேசினால் பேசட்டும். வீட்டு வாசலிலே குழந்தையை வைத்துக்கொண்டு இருந்தாள்.

ஏனம்மா உதிலே இருக்கிறியள்?
என்னைப் பேசாதே பிள்ளை. இதின்ரை ஒரு காதுத் தோடு எங்கையோ விழுந்து போச்சுது மோனை. எல்லா இடமும் தேடிக் களைத்துப்போய் இதிலே இருக்கிறன்.

அது தொலையேல்லை. நான் தான் கழட்டி வைச்சனான். உங்களுக்கச் சொல்ல மறந்து போனன்.

நான் குடிநீர் வைக்க வெளிக்கிட்டுப் போட்டு தோட்டைக் காணவில்லை என்று நீ வந்து பேசப் போறாய் என்ற பயத்திலே இதிலே குந்திக்கொண்டு இருக்கிறன்.

உங்கே மல்லி ஒன்றும் அவிக்க வேண்டாம். மல்லி மணம் ஒரு கிழமை சென்றாலும் போகாது. பிறகு மனுசன் என்னோடைதான் கத்தும்.

ஆச்சி ஒன்றும் பேசவில்லை. பரிமளம்! நீ இங்கே வாம்மா! எனக்குப் பக்கத்திலே வா! என்று ஆகாயத்தில் இருந்து விசுவலிங்க அப்பு அவர்தான் பரிமளம் ஆச்சியின் கணவர் கூப்பிடுவது மட்டும் ஆச்சிக்குக் கேட்கின்றது.

நன்றி ;ஈழத்து கதை தளம்

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா கொமடியா ஒரு கதை எழுதுவம் என்டு இரண்டு மூன்டு நாளா மண்டைக்குள்ள உருவேத்தி வைச்சிருந்தன்... இந்தக் கொத்தமல்லிக் குடிநீரைப் படித்ததும் எல்லாம்  கடல் மணலில் கட்டிய மண்வீடு மாதிரி பொல பொலவென உதிர்ந்து போச்சு....!

என்ன நேர்த்தியான கதையமைப்பு , வைத்த கண் எடுக்க முடியவில்லை....!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.