Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு: ஜெ. அதிரடி! - பின்னணி என்ன?

Featured Replies

நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு: ஜெ. அதிரடி! - பின்னணி என்ன?

 

சென்னை: அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் நீக்கப்படுவதாக முதலமைச்சரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

sampath%20600.jpg

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையியில், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.

பதவி பறிப்பு ஏன்?

 நாஞ்சில் சம்பத் பதவி பறிப்புக்கு, அவர் தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக அளித்த சில பதில்களே காரணமாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

இன்று காலை புதிய தலைமுறை செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின்போது, வெள்ளம் பாதித்த நிலையிலும், அதிமுக பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடைபெற்றதே என்ற கேள்விக்கு, சாவு வீட்டுக்காக கல்யாணங்கள் நடக்காமலா இருக்கிறது என்று அலட்சியமாக பதில் சொன்னார் நாஞ்சில் சம்பத்.

இந்நிலையில், இன்று தந்தி தொலைக்காட்சி கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சிக்காக, ரங்கராஜ் பாண்டே கேள்விகளுக்கு, நாஞ்சில் சம்பத் பதில் கொடுத்துள்ளார். அதன் ப்ரமோ வீடியோ அத்தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்த டிவியிலும், நாஞ்சில் கூறிய பதில்கள் சர்ச்சைக்குறியதாக உள்ளது.

பெருவெள்ளம் புரட்டி போட்ட பிறகு பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக, கொண்டாட்டமாக நடக்கும்போது சரியா என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே என்று கேள்விக்கு நாஞ்சில் சம்பத், 'எறும்புகள் சாகிறது என்பதற்காக யானை நடக்காம இருக்க முடியுமா' என்று பதில் சொல்லும் காட்சியும் காண்பிக்கப்படுகிறது. இதே கேள்விக்கான பதில்தான் அதுவா என்பது இரவு நிகழ்ச்சி பார்க்கும்போதுதான் தெரியும் என்றாலும், இக்கேள்விக்கு இப்பதிலைத்தான் அவர் அளித்திருப்பார் என்ற எண்ணத்தில் நெட்டிசன்கள் இப்போதே ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

வெள்ளத்தில் உயிரிழந்த 500 பேரை ஏன் கண்டுகொள்ளவில்லை, அதிமுக பொதுக்குழுவில் அதுதொடர்பாக ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை? என்ற கேள்விக்கு, தேவையில்லை, நிறைவேற்றவில்லை என்று நாஞ்சில் பதிலளிப்பது போல காட்சி ஒளிபரப்பாகிறது.

இந்தப் பேட்டிகள் உண்டாக்கிய கசப்பு உணர்வுகள் பரவுவதற்கு முன்னரே, அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாஞ்சில் சம்பத் பதவியைப் பறித்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது!

http://www.vikatan.com/news/tamilnadu/57130-nanjil-sampath-dropped-from-party-post-jayalalith.art

  • தொடங்கியவர்

நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு: ஜெயலலிதாவுக்கு 3 கேள்விகள்!

 

jaya%20nanjil%20250.jpgபேச்சுதான் அரசியலுக்கு மூலதனம். 'பேசிப்பேசியே ஆட்சியை பிடித்தார்கள்' என திராவிடர் இயக்கத்தை சொல்வார்கள். ஆனால் இன்று மேடைப்பேச்சு சுவாரஸ்யம் இழந்து விட்டது.

இதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது பல மணி நேரம் காத்திருந்து மேடைப்பேச்சை ரசித்து கேட்ட தலைமுறை இப்போது ஓய்ந்து விட்டது. மற்றொன்று கொள்கையை பற்றி பேசிய மேடைகள் எல்லாம் இப்போது கட்சித்தலைமையை வரம்புக்கு மீறி புகழ்வது, எதிர்கட்சிகளை அளவு கடந்து விமர்சிப்பதுமாக மாறி விட்டது. தமிழகத்தில் பேச இப்போது ஆட்களில்லை. இருக்கும் சிலரும் கட்சியின் உத்தரவுக்கிணங்க (?) பேச வேண்டி இருப்பதால் அவர்களில் பேச்சு சுவாரஸ்யம் இழந்து விட்டது.

நாவை சுழற்றி பேசியவர்கள் எல்லாம் இப்போது எதை பேசுவது என தெரியாமல் தத்தளிக்கும் நிலைதான் இன்று உள்ளது. அதில் ஒருவர்தான் நாஞ்சில் சம்பத். அபாரமான பேச்சாற்றலுக்கு சொந்தமானவர். பெரும்பாலும் கட்சி விட்டு கட்சி மாறும் பேச்சாளர்கள்,  தங்கள் சுயத்தை இழந்து விடுகிறார்கள். எந்த பேச்சால் பெரும்பாலானோரால் கவரப்பட்டாரோ அதே பேச்சால் இப்போது கட்சி பதவியை இழந்து, அவமானப்பட்டு நிற்கிறார் நாஞ்சில் சம்பத்.

'மதிமுகவில் நாஞ்சில் சம்பத்'

அரசியலில் பின்னால் நடக்கப்போகும் மாற்றங்களை முன்கூட்டியே அறிவிக்க கூடியவர்களாக கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்கள் இருப்பார்கள். தங்களால் வெளிப்படையாக சொல்ல முடியாததை, கட்சியின் நம்பிக்கையான இரண்டாம் கட்டத்தலைவர்கள் மூலமாகத்தான் கட்சித்தலைவர்கள் வெளிப்படுத்துவார்கள். அப்படி ஒருவர்தான் நாஞ்சில் சம்பத். ம.தி.மு.க.வில் இருந்த போது வைகோவின் போர்வாள் என புகழப்பட்டவர், கட்சியில் வைகோவுக்கு அடுத்தபடியாக அபாரமான பேச்சாற்றலுடன் வலம் வந்தவர் நாஞ்சில் சம்பத். நெருக்கடியான நேரங்களில் கட்சி எடுக்க கூடிய முடிவுகளை முன்கூட்டியே தெளிவுபடுத்துபவராகவும் அவர் இருந்திருக்கிறார்.

2006 சட்டமன்ற தேர்தல் நேரம் அது. தி.மு.க.வுடன் கூட்டணி என அறிவித்து, கலைஞரை முதல்வராக்குவோம் என்ற முழக்கத்துடன் இருந்தது ம.தி.மு.க. அப்போது அ.தி.மு.க.வின் கூட்டணி கதவுகள் திறந்திருப்பதாக அறிவித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. மதிமுகவோடு உறவு வைத்துக் கொள்ள, வைகோவின் கைது படலம் தடையாக இருக்கக் கூடாது என்று வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தார் காளிமுத்து.

nanjil%20sampath%20550%203.jpg

'அதிமுக உடன் கூட்டு என்பதை முதலில் அறிவித்தவர்'

அந்த நேரத்தில் காளிமுத்துவின் அழைப்புக்கு நன்றி சொல்லி பேசியதோடு, தி.மு.க.வுக்கு தனது பேச்சின் மூலம் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார் நாஞ்சில் சம்பத். "மதிமுகவை அலட்சியப்படுத்திவிட்டு இனி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.  வைகோ கை காட்டுபவர்தான் அடுத்த முதல்வர், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மதிமுகதான் எதிர்க்கட்சியாக அமரும், மதிமுகவுக்கு அதற்குரிய கெளரவம் கொடுக்காவிட்டால் தனித்துப் போட்டியிட நாங்கள் முட்டாள்கள் இல்லை, அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிடுவோம்" என அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து முதலில் பேசியது நாஞ்சில் சம்பத்தான்.

நாஞ்சில் சம்பத்தின் பேச்சுக்கு தி.மு.க. கண்டனம் தெரிவிக்க, அதற்கு வைகோ வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் அடுத்த சில நாட்களில் நாஞ்சில் சம்பத் பேசியபடியே போயஸ் கார்டனுக்கு சென்று அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்தது ம.தி.மு.க. "நேற்று வரை தி.மு.க.வில் இருந்து கூட்டணி பேச்சு நடத்திக்கொண்டே, அ.தி.மு.க.விலும் கூட்டணி பேச்சை நடத்தியிருக்கிறார்" என வைகோ மீது விமர்சனங்கள் வந்து விழுந்தபோது அதையும் தன் பேச்சால் சமாளித்தவர் நாஞ்சில் சம்பத்.

nanjil%20vaiko%20250.jpg"மு.க.முத்துவை முன்னிலைப்படுத்த எம்.ஜி.ஆரை நீக்கினார்கள். மு.க.ஸ்டாலினை முன்னிலைப்படுத்த வைகோவை வெளியேற்றினார்கள். இரண்டு இயக்கமும் ஒரே நோக்கத்துக்காக துவங்கப்பட்டவை. ஒரே நோக்கத்துக்காக துவங்கப்பட்ட இரு இயக்கங்கள் ஒன்றிணைவதில் என்ன தவறு இருக்கிறது?" என நாஞ்சில் சம்பத் எழுப்பிய கேள்விகள்தான் அதிமுக உடனான கூட்டணியை நியாயப்படுத்தியது. அதன் பின்னர் வைகோவின் பேச்சைப்போல் நாஞ்சில் சம்பத்தின் பேச்சை கவனிக்கத்துவங்கினர் அரசியல் விமர்சகர்கள்.

'நெருக்கடியை பேச்சால் சமாளித்த சம்பத்'

ம.தி.மு.க.வுக்கு அது ஒரு சோதனை காலம். கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அடுத்தடுத்து கட்சி மாறிய சூழலில், மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்தது ம.தி.மு.க. கட்சியின் எதிர்காலம் அவ்வளவுதான் என விமர்சனங்கள் முன்வந்தபோது தன் பேச்சால் சமாளித்தவர் நாஞ்சில் சம்பத். "கலசங்கள் விழுவதால் கோபுரங்கள் சாயப்போவதில்லை. கலசங்கள் கீழே விழத்தான் செய்யும். ம.தி.மு.க. ஒரு வெண்கலப்பானை. கீழே விழும். சத்தம் கேட்கும். ஆனால் உடையாது. கண்ணப்பன் போனார். அவர் வைகோவை விட சீனியர் பொலிட்டீசியன். அவர் கட்சியை விட்டு போகையில், அவருக்கு 40 ஆண்டுகாலம் காரோட்டிய கந்தனூர் கருப்பையா என்பவர் போகவில்லை. அதேபோல கண்ணப்பனை சார்ந்திருந்த ஆலாம்பாளையம் கிளைக்கழகத்தின் செயலாளர் போகவில்லை. செஞ்சி ராமச்சந்திரனும் போனார். ஒரு பாதிப்பும் இல்லை. ஆகவே எங்கள் கட்சியில் இருந்து யார் போனாலும் அவர்கள் அகதிகள் பட்டியலில் போய் சிக்கிக்கொள்கிறார்களே தவிர அரசியலில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.

ம.தி.மு.க. என்பது தேன். தேன் தானும் கெடாது. தன்னை சார்ந்து இருப்பவர்களையும் கெட விடாது. இந்த இயக்கத்தில் இருந்தால் மரியாதை. அதை விட்டு போனால் அவமரியாதை என்பதை வரலாறு பல பேருக்கு கற்பித்து கொடுத்துள்ளது. ஆகவே எங்கள் கட்சி ஒரு முடிவை எடுப்பதை ஏற்க முடியாதவர்கள், பதவி நல விரும்பிகள், ஆதாயத்தை நாடுபவர்கள் கட்சிக்கு துரோகம் செய்தால் அவர்கள் காணாமல் போவார்களே தவிர கட்சியின் கட்டுமானத்தில் ஒரு கல்லை கூட பெயர்க்க முடியாது," இப்படி நாஞ்சில் சம்பத் மேடைக்கு மேடை பேசிய பேச்சு, ம.தி.மு.க. தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்தது. நாஞ்சில் சம்பத்தின் பேச்சு கட்சிக்காரர்களை கட்டிப்போட்டது.

'கலைஞருக்கு வைகோ... வைகோவுக்கு சம்பத்...'

தொடர் தோல்விகளால் தி.மு.க. தொண்டர்கள் சோர்வுற்ற எம்.ஜி.ஆர் ஆட்சி காலம் அது. அ.தி.மு.க.வின் தலைவர்கள் ஒரு கோஷத்தை திரும்ப திரும்ப சொன்னார்கள். 'கருவாடு மீனாகாது. கறந்த பால் மடியேறாது. கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது' என்பதுதான் அது. அதற்கு பதில் சொன்னவர் கருணாநிதியின் போர்வாளாக இருந்த வைகோ. 'எங்கள் தலைவன் வெற்றிகளை இழந்திருக்கலாம். ஆனால் களம் காண்பதை நிறுத்தி விடவில்லை' என வைகோ பேசிய பேச்சு தி.மு.க. தொண்டர்களுக்கு உற்சாகம் கொடுத்தது போல, ம.தி.மு.க. தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்தது நாஞ்சில் சம்பத்தின் பேச்சுதான்.

jaya%20nanjil%20550%202.jpg

ம.தி.மு.க.வில் தான் நினைத்ததை எல்லாம் பேசும் வல்லமை பெற்றவராக இருந்தார் நாஞ்சில் சம்பத். 2006 தேர்தலின்போது, அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்பதை நாஞ்சில் சம்பத் பேசியது ஒன்றே அதற்கு சாட்சி. அதற்கு வைகோ மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டாரே தவிர, நாஞ்சில் சம்பத் மீது கட்சி நடவடிக்கை பாயவில்லை. ஆனால் ம.தி.மு.க.வில் இருந்து வெளியேறி அவர் அ.தி.மு.க.வில் சேர்ந்த பின்னர் அவருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், நெருக்கடிகளும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அதன் உச்சம்தான் கட்சி பதவி நீக்கம்.

'பேச்சாளர்களை பற்றி கவலைப்படாத அதிமுக'

பொதுவாக பேச்சாளர்கள், கட்சியின் நடவடிக்கை குறித்து முழுமையாக அறிந்திருப்பார்கள். கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை பேச்சாளர்களுக்கு கட்சித்தலைமை தெளிவாக விளக்கும். நெருக்கடியான சூழலில் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும், மக்களுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதை தெளிவாக கட்சித்தலைமை சொல்லும். சில நேரங்களில் பயிற்சி பட்டறைகளை கூட நடத்தும். பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதை பின்பற்றுவதில்லை. பேச்சாளர்களைப்பற்றி கவலைப்படாத கட்சி அ.தி.மு.க. கட்சி பொதுக்குழுவில் கூட யாரும் பேச அனுமதிக்காத கட்சியாகத்தான் அ.தி.மு.க. இருக்கிறது.

jaya%20nanjil%20lefttt.jpgகூட்டணி குறித்து தேவைக்கேற்ப முடிவு செய்வோம் என ஜெயலலிதா பேசியதோடு சரி. ஜெயலலிதா எதை நினைத்து அதை பேசினார் என்பது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாருக்கும் தெரியாது. இந்த சூழலில் பேச்சாளார்கள் என்ன முடிவெடுப்பார்கள்? மக்களிடம் எதை கொண்டு சேர்ப்பார்கள். கட்சித்தலைமையை புகழ்வதும், எதிர்கட்சிகளை எல்லை மீறி திட்டித்தீர்ப்பதும்தான் பேச்சாளர்களின் வேலை என நினைப்பதுதான் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம்.

'பாவம்... நாஞ்சில் சம்பத் என்ன செய்வார்?'

நாஞ்சில் சம்பத் நீக்கப்பட்ட விவகாரத்துக்கு வருவோம். நாஞ்சில் சம்பத் நீக்கப்பட்டதற்கு சொல்லப்படும் ஒற்றை காரணம் தொலைக்காட்சி பேட்டிதான். இரு தொலைக்காட்சிக்கு ஒரே நேரத்தில் பேட்டியளித்த நாஞ்சில் சம்பத், அதில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள்தான் காரணம். பேட்டியில் 3 சர்ச்சைகள் எழுந்தன. ஒன்று தமிழக முதல்வர் குறித்து அவர் தெரிவித்த கருத்து. இரண்டாவது அ.தி.மு.க. கூட்டணி அமைக்க கூடும் என்ற கட்சிகளை திட்டித்தீர்த்தது. மூன்றாவது ஏற்கனவே அ.தி.மு.க. மீது கோபத்தில் இருக்கும் மக்களை மேலும் கோபப்படுத்தும் வகையில் பேசியது.

முதலாவது முதல்வர் ஜெயலலிதா குறித்து நாஞ்சில் சம்பத் சொன்ன கருத்துகளை பார்ப்போம். நாஞ்சில் சம்பத்திடம், வெள்ள பாதிப்புகளை பார்க்க தமிழக முதல்வர் ஜெயலலிதா வரவில்லையே என கேட்டதற்கு, 'ஆம் முதல்வர் மக்களை நேரில் சந்திக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். சந்திக்க முடியவில்லை என்றால் என்ன செய்ய முடியும். அவரால் முடியும்போது சந்தித்தார்கள். இப்போது சந்திக்க முடியவில்லை" என பதிலளித்திருந்தார். இதில் என்ன பொய் இருக்கிறது?

மற்றொரு தொலைக்காட்சி பேட்டியில், ஏன் ஜெயலலிதாவை வரவேற்க இவ்வளவு ஆடம்பரம் என்ற கேள்விக்கு பதிலளித்த சம்பத், "அத்திப்பூ பூப்பதை போல எப்போதாவது வரும் ஜெயலலிதாவை கட்சியினர் ஆர்வம் காரணமாக ஆடம்பரமாக வரவேற்கிறார்கள்' எனசொல்லியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிலிலும் உண்மை இல்லை என சொல்லி விட முடியாது.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஜெயலலிதா சந்தித்திருந்தால், அடிக்கடி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை ஜெயலலிதா நிகழ்த்தி இருந்தால் இந்த கேள்வியே எழுந்திருக்காது.

jaya%20nanjil%20550%2033.jpg

'கோபப்பட வேண்டியது சம்பத் மீது மட்டுமல்ல'

இரண்டாவது பாரதிய ஜனதா, ம.தி.மு.க., இடதுசாரிகள் போன்ற கட்சிகளை விமர்சித்தது. இந்த கட்சிகள் யாவும் அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்கின்றன. மறுபுறம் அ.தி.மு.க. யாருடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளது என்ற விவரம் முக்கிய நிர்வாகிகளுக்கு கூட தெரிய வாய்ப்பில்லை. இந்த சூழலில் கட்சியின் பேச்சாளராக தங்களை கடுமையாக விமர்சிக்கும் கட்சிக்கு பதிலடி கொடுக்கும் கடமையைதான் நாஞ்சில் சம்பத் செய்திருக்கிறார். யாருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை முதலில் தெளிவுபடுத்தியிருந்தால், நாஞ்சில் சம்பத் கவனமாக இருந்திருக்க கூடும். ஆனால் அந்தக்கட்சியில்தான் அந்த உரிமை யாருக்கும் கிடையாதே. அவரென்ன செய்வார்...பாவம்!

மூன்றாவது மக்களைப்பற்றி பேசியது. வெள்ளம் பாதித்த நிலையிலும், அதிமுக பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடைபெற்றதே என்ற கேள்விக்கு, ஒரு வீட்டில் இழவு விழுந்து விட்டது என்பதற்காக, இன்னொரு வீட்டில் கல்யாணம் நடக்காமல் இருக்குமா? யானைகள் நடக்கும் போது சில எறும்புகள் சாகத்தான் செய்யும் என்பன போன்ற பதில்கள் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்பதுதான் அது.

நேரடியாக நாஞ்சில் சம்பத் இந்த பதில்களை சொல்லவில்லை. ஆனால் எப்படியோ சமாளிக்க முயன்று, தோற்றுபோன தருவாயில்தான் இந்த பதிலை நாஞ்சில் சம்பத் உச்சரித்தார். சென்னையில் பெரு வெள்ளம் நிகழ்ந்து ஒரு மாதம் கூட முடியாத நிலையில், அங்கு மிக பிரம்மாண்டமாய் பொதுக்குழுவை நடத்தியது தான் இதற்கெல்லாம் காரணம். எனவே கோபப்பட வேண்டியது நாஞ்சில் சம்பத் மீது மட்டுமல்ல.

jaya%20nanjil%20550%204.jpg

'கட்சிகள் விரும்புவதில்லை'

வெள்ள பாதிப்பின் போது மக்களை நேரில் சென்று சந்தித்திருந்தால்... யாருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு, யாரை எல்லாம் சேர்த்துக்கொள்ளலாம் என்பதை கொள்கை பரப்பு செயலாளர்களுக்காவது தெரிவித்திருந்தால்...பொதுக்குழுவை குறைந்த பட்சம் விமரிசையாக நடத்தாமல் எளிமையாகவாவது நடத்தியிருந்தால், சர்ச்சைக்குரிய இந்த 3 கேள்விகளுக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது. பதில்களும் சர்ச்சைக்குரியதாகியிருக்காது. ஆக அந்த 3 கேள்விகள் ஜெயலலிதாவுக்குரியது!

அரசியல் பற்றி பேசும்போது பிழைகள் கூடாது என்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் பிழைகளுடன் பேசவே அரசியல் தலைவர்கள் விரும்புகிறார்கள். ஒரு காலத்தில் நாக்கு பிறழாமல், ஒரு சொல் கூட மாறாமல், சொற்களை செதுக்கும் வல்லமை வாய்ந்தவராய் இருந்தார் நாஞ்சில் சம்பத். ஆனால் இப்போது அவர் அப்படியில்லை என்பது உண்மை. ஆனால் அதற்கு அவர் மட்டும் காரணமல்ல. எந்த பேச்சும் இதயத்தில் இருந்து வரும்போதுதான், மக்களை ஈர்க்கும் என்பார்கள். ஆனால் இப்போது இதயத்தில் இருந்து எந்த பேச்சாளர்களும் பேசுவதில்லை. காரணம் எந்த கட்சித்தலைமையும் அதை விரும்புவதில்லை.

http://www.vikatan.com/news/coverstory/57192-questions-against-jayallitha--nanjil-sampath.art

  • கருத்துக்கள உறவுகள்

மதிமுகவை தம்பக்கம் இழுக்க இவரைக் கழட்டிவிட்டதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. அது உண்மையாக இருந்தால் திருமா கட்சி நடுத்தெருவில்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.