Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை படைப்புகள்

Featured Replies

கடலோடி கழுகு
---------------------------
சூர்யா
--------------
கடலும் கடல் சார்ந்த இடம் பரத நிலப்பரப்பு என தமிழ் இலக்கியங்கள் கூறுகிறது.அந்த நிலப்பரப்பின் சொந்தக்காரர்கள் பரதவர் என அழைக்கப்பட்னர். இங்கு உப்பும் மீனும் பிரபலம்.தமிழகத்தின் கடலோர பகுதி அது. இராமேஸ்வரம் என அழைக்கப்படும் பகுதி.

அன்று சாதாரண நாளாகவே பொழுது விடிந்திருந்தது.”ச்சே என்ன வாழ்க்கைடா” என்ற வார்த்தைகளோடு அவன் தன் குலத்தொழிலுக்கு புறப்பட்டான் கடல் அன்னையை வணங்கிவிட்டு. வாலிபன் அவன்..அதே ராமேஸ்வரத்தில் அவன் ஊரில் அதிகம் படித்தவன் அவன் தான்.அதாவது நாலாம் வகுப்பு.அவனை அனைவரும் மைக்கேல் என அழைப்பர்.கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது ஒவ்வொரு மீன் பிடி பயணத்தின் போதும். ஆனாலும் அவன் பின்வாங்கியதில்லை. தினமும் கடல்க்கு மீன் பிடிக்க செல்வது அவன் பழக்கம் . மீன்களுக்கு அவன் வலைகளுக்கு மாட்டால் தப்பிச்செல்வது பழக்கம்.வருமானம் பெரிதாக இல்லை ஆனால் அவன் தன் தொழிலை விட்டதில்லை.

கோடைக்கால மீன்பிடிதடைகால அறிவிப்பு.அதற்கு முன் நடந்த கதை அதிகம் .இந்தியாவின் கால்களில் தொங்கிகொண்டிருப்பது போன்று உலக வரைபடத்தில் இருக்கும் தேசம் இலங்கை.அங்கு தமிழர்களுக்கு எதிரான இனவெறியும், இந்திய பெருங்கடலே என் அப்பன்வீட்டு சொத்து என எண்ணும் சிங்கள இனத்தவர் மிகுதியாய் ஆக்கிரமித்திருந்த தேசம்.அதுபோல தான் மகாஇந்திய சாம்ராஜ்யத்தின் கடல் எல்லையை மதிக்காமல் எல்லைதாண்டி வந்து இந்திய தேசத்தின் பிரஜையை சுட்டுக்கொன்றும்,கைது செய்தும் அறிவிக்கப்படாத யுத்தத்தை தொடர்ந்து வரும் தேசம் அது.இது நிலை ராமேஸ்வரத்திலும் இருந்தது.தமிழக அரசியல் நிலையோ ஏதோ ஐ.நா சபை மாதிரி தீர்மானங்களும் காரசார விவாதங்களும்,தத்தம் ஆதாயங்களுக்காக இந்த பிரச்சினையை பயன்படுத்தி கொண்டன.

தினசரி ஏதாவது ஒரு செய்தியாவது மீனவர் கைது பற்றி இருந்தே ஆகும்.மீன்பிடி தடைக்காலம் மட்டும் யாரும் கடலுக்கு செல்லாமல் இருப்பதால் கைது இருக்காது. மற்றபடி மீன்பிடி தடைக்காலம் நீக்கப்பட்டதும் சிங்கள கடற்படையினருக்கும் கைது செய்ய போடப்பட்ட தடைக்காலம் நீக்கப்பட்டதாக அர்த்தம்.
மைக்கேல் செய்தி தாள் படிப்பதுண்டு.அங்கு சாலையோர டீக்கடைகளில் உள்ள 

பிரான்சிஸ்,டேவிட்,மிலிட்டிரிகாரர் அல்போன்ஸ் ஆகியோர் தான் அவரது தோழர்களும் பட்டிமன்ற பேச்சாளர்கள். பிரான்சிஸ் ஒரு கடலோர பொதுவுடமை காரன்.சற்று உலக அரசியல் பற்றி அறிந்தவன்.டேவிட் ஒரு முற்றிலும் துறந்த ஞானி போல பேசுவர்.ஒரு தத்துவ ஞானி.போதைக்காரர்.கண்ணதாசன் பாடல்களை சதா கேட்டுக்கொண்டுஇருப்பார்.மிலிட்டிரிகாரர் அல்போன்ஸ் போர்வீரர். நாட்டுக்காக பாக்கிஸ்தானிக்கு எதிராக போரில் போரிட்டு ஈடுபட்டு ஒய்வு பெற்றவர்.கொஞ்சம் இல்லை நிறையவே முரடர்.எப்போதும் வேலையில்லாத ஒய்வு நேரங்களில் மேரி டீஸ்டாலில் ஒரு பட்டிமன்றத்தையும் இங்கிருந்து கொண்டே காசில்லாமல் இலவசமாக ஐ.நா சபைக்கு ஆலோசனை வழங்குபவர்கள் இவர்கள்.

மைக்கேலுக்கு ஒரு விரோதி உண்டு அவள் பெயர் ஆச்சரியமாக இருக்கிறதா அவள் பெயர் மகதலினா. ஏனெனில் ஆண்களின் வெறுப்பை சம்பாதிக்க தெரியாதவன் மைக்கேல். மேலும் அவன் ஒரு அழகன்.சிறுவயதில் இருந்தே மைக்கேல் மீது மகதலினாவுக்கு ஒரு கண்.அதாவது ஒரு அழகிய கிராமத்து காதல்.கண்ணால் பேசிவிடுவாள் அவள் ஆனால் அவன் பேசி கண்ணைமூடிவிடுவான்.கேட்டால் காதல் என்பால் அவள்.அவனோ ஒன்னும் இல்லை தூரப்போ என்பான்.காதலின் ஏமாற்றம் பகையாய் மாறுவதில் சந்தேகம் இல்லை.அது போலத்தான் மகதலினா வாழ்க்கையும்.அவள் வெறுப்பு பகைமையை அவன் அடுத்த இளம் பெண்களிடம் பேசும் போது 

வெளிப்படுத்தினாள்.ஆனால் இறைவன் என்பவன் விசித்திரமான ஒரு விலங்கு என்பதை நிருபிக்க அங்கு காலம் ஒரு கணக்கு போட்டது.மகதலினா ஒரு கடலோர அழகி. அழகிய கண்கள்.அவள் கண்சிமிட்டல் மின்னல்கள் வெட்டுவதைபோலவும்,அவள் உதடுகள் ஒரு தேன்சிந்தும் வளைகுடா போல அழகாக பார்ப்பவரை சுண்டியிழுத்துவிடும் அழகு.இடையோ வளைந்த வில் போல பார்ப்பவர்களின் மீது அம்பை ஏய்து கொண்டே செல்லும். அவள் நடை ஒரு அழகு.அவள் உடை இத்தனை அழகையும் புதையலை மூடுவது போல இருக்கும். இப்படி வர்ணிக்கும்படியான அழகு தேவதை.யாருக்கு தான் காதல் வராது அவள் மீது.ஆனால் மைக்கேலுக்கு இதில் விருப்பம் இல்லை.மகதலினாவுக்கு அவன் மீது விருப்பம் உண்டு.

பிரான்சிஸ் ஒர் இளைஞன் . பொதுவுடமைக்காரன்.உலகம் அறிந்தவன்.அவனுக்கும் காதலில் விருப்பம் உண்டு.ஒரு வேளை பிரான்சிஸ்ன் வைரமுத்து காதல் கவிதைகளை படிக்கும் ஆர்வத்தால் காதலில் விருப்பம் வந்திருக்கலாம்.பிரான்சிஸ் மகதலினாவை ஒருதலையாக காதலித்து வந்தான்.ஏனெனில் ஒரு தலைஉள்ள அனைவருக்கும் வருமல்லவா இந்த ஒரு தலைக்காதல்.பொறாமை வளர்ந்தது நண்பர்களான மைக்கேல் மற்றும் பிரான்சிஸ் இடையே.ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே சும்மாவா சொன்னாங்க.ஒரு நாள் டீக்கடையில் காரசார விவாதம் காதல் திருமணங்களால் வன்முறை ஏற்படுகிறது ஏன் என்பது. இதில் வாக்குவாதம் முற்றி வழக்கு போல மைக்கேல் பெண்களை இழிவுபடுத்தி பேச,அதாவது மகதலினாவை பற்றி தவறாக பேச கைகலப்பானது.இது மகதலினாவுக்கு தெரிய வர அவள் மனவருத்தத்தில் மைக்கேலை மறப்பதாக நடித்தாள்.உயிர்நண்பர்கள் பகைவர்களாக மிலிட்டரிகாரர் அல்போன்ஸ் சமாதானபடுத்த முயற்சி செய்து தோல்வியில் முடிவு பெற பகைமை தொடர்ந்தது.

இருவரும் வெவ்வேறு பாதைகளை தேர்ந்தெடுக்க மைக்கேல் பிரான்சிஸின் கொள்கையை எதிர்ப்பதென முடிவெடுத்தான்.ஏனெனில் பிரான்சிஸ் ஒரு பொதுவுடமை வாதி.அவனுக்கு எதிராக இருக்க முதலாளித்துவ வாதியாக அவனுக்கு எதிராக இருக்க முதலாளித்துவ வாதியாக மாறினான்.அந்த ஊரில் ஒரு சிறு பனிப்போரே நடத்தினர்.இதில் மகதலினா,அல்போன்ஸ் நடுநிலைமை வகித்தனர்.எப்போதுமே பொதுவுடமைவாதியிடம் வேகம்,மூர்க்ககுணம் அதிகமாக இருக்கும்.அன்று மீன்பிடி தடைகால இறுதி நாள்.மைக்கேல்க்கு அங்கு இருந்த அகதிகள் முகாமில் இருந்த சில அமெரிக்க நண்பர்களின் நட்பு கிடைத்தது.அவர்கள் இந்தியாவை வேவுபார்க்கவந்த சி.ஐ.ஏ உளவாளிகள்.அவர்கள் தமிழகத்தில் அதாவது இலங்கைக்கு அருகாமை பகுதியில் பொதுவுடமைவாதத்தை வீழ்த்த வந்தவர்கள்.அவர்கள் மைக்கேலின் பொதுவுடமை வெறுப்பை பயன்படுத்தி தங்கள் வேலையை செய்ய முடிவு செய்தனர்.ஆனால் அதே நேரம் பிரான்சிஸ் தமிழகத்தில் உள்ள பொதுவுடமை இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தான்.ஆனால் அவன் தன் மீன்பிடித்தொழிலை விடவில்லை.இரு கொலைமுயற்சி அவனுக்கு எதிராக.ஆனால் அவன் அதில் இருந்து மீண்டிருந்தான்.

அமெரிக்க உளவுத்துறை பிரான்சிஸ்ஐ கொலைசெய்ய முடிவு செய்திருந்தது.அதற்கு மைக்கேலை பகடைக்காயாக பயன்படுத்த திட்டம் தீட்டிருந்தது.மைக்கேலுக்கு சி.ஐ.ஏ உறுப்பினர் அட்டை வழங்கி அவனுக்கு பணம் அளித்தது.மீன் பிடி தடை காலம் முடிவடைந்தது.காலையில் கதிரவன் மீனவர்களை வரவேற்றான் கடலுக்கு வரும்படி.மைக்கேலுக்கு மீன்பிடிக்கும் ஆசையில்லை ஆனால் கடலுக்கு செல்ல ஆயத்தமானான் பிரான்சிஸ்ஸை வீழ்த்தி பொதுவுடமை வேரை அறுக்க. ஆனால் பிரான்சிஸ்ஸோ கண்முழுவதும் மீன்களை பற்றிய கனவு.இருவரும் கடலுக்கு புறப்பட்டனர்.ஆனால் மகதலினாவுக்கு புரிந்து போனது மைக்கேல் மாறிவிட்டான்.காதல் அழிக்க இயலாததது.அவள் மனதில் இருந்தது அவனை நீக்க இயலவில்லை என.இருவரும் கடலுக்கு சென்றனர் நவீன படகேறி. நடுகடலில் சி.ஐ.ஏ. திட்டப்படி பிரான்சிஸ்ஸை கொல்ல முயன்ற வேளையில்,அங்கு தடைகாலம் நீங்கியதால் சிங்கள ராணுவம் எல்லோரையும் கைது செய்யதது.அவர்களை செய்த சோதனையில் மைக்கேல் ஒரு உளவாளி என கண்டறிந்தனர்.இலங்கையில் மெல்ல சீனா தன் ஆதிக்கத்தை நுழைதந்துகொண்டிருந்த நேரம் இந்த உளவு விவகாரம் சீன-இந்திய-அமெரிக்க உறவில் ஒரு நிழல்பாதிப்பை நுழைத்தது.அன்றில் இருந்து மைக்கேல் உலகம் அறியும் உளவாளியாகவும்,தேச துரோகியாகவும் அறியப்பட்டான்.மைக்கேலை தவிர அனைவரையும் இலங்கையில் இருந்த மீட்டது.மைக்கேல் தன் சிறைவாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் தொடர்வதாகவேண்டியாயிற்று.

எங்கோ இருந்து வந்த இளைஞன் உலகம் பேசும் உளவாளிகள் வரிசையில் இடம்பெற்றான்.தன் முன்னாள் காதலனை எண்ணி மகதலினா,கடலோரம் பறக்கும் கழுகுகளை பார்த்து கண்ணீர் சிந்தி கொண்டிருந்தாள்.அந்த கடலோரம் எங்கும் பொதுவுடமை கொடி மைக்கேலின் வீழ்சியில் ஆர்பரித்து கடலோர கழுகளை பார்த்து சுடர் விட்டு பறந்து கொண்டிருந்தது மகதலினாவின் கண்ணீருடன்.

நன்றி ;திண்னை 

விலை போகும் நம்பிக்கை
-----------------
வே.ம.அருச்சுணன்
-------------------------

அன்று காலை முதலே அருளினிக்குக் காலும் ஓடல கையும் ஓடல.சம்பாத்தியத்தின்இறுதி நாளை எட்டிவிட்டோமே என்ற எண்ணம் நெஞ்சுக் குழியில் ஆழமாக இறங்கிஅவரை நிதானமிழக்கச் செய்துக்கொண்டிருந்தது.

மதியம் உணவு வேளை நெருங்கியும் அந்த எண்ணம் தனியாமல் ஆர்பரிக்கும் கடல்அலையாய் மனதில் அலைமோதியது.இன்னும் அரை நாள் பொழுது மட்டுமே எஞ்சியுள்ளதுஎன்று கவலை நெற்றிப் பொட்டில் தெரித்துக் கொண்டிருந்த வலி விலைவாசி போலஏறிக்கொண்டிருந்தது. உற்சாகத்தை தொலைத்தவராய்த் தளர்ந்த நடையோடுதோழியுடன் உணவு விடுதிக்குச் செல்கிறார் அருளினி.

“இருபது வயசில இந்த கம்பனியில நீங்க வேலைக்குச் சேர்ந்திங்க அக்கா….”“ஆமா….வள்ளி. இந்தக் கம்பெனியில நாற்பது வருசமா வேலைசெஞ்சிட்டேன்.பள்ளிப் படிப்பு முடிஞ்சக் கையோட குமரியா வேலையில சேர்ந்த
நான்,இன்றைக்கு அறுபது வயசு ஆன கிழவியா இந்தக் கம்பெனியே விட்டுவீட்டுக்குப் போகப்போறேன்” மனதுக்குள் மலையாய்க் கூடு கட்டியிருந்தகவலைகள் எல்லாம் ஒரு நொடியில் பறந்தது போல் வாய்விட்டு சிரிக்கிறார்அருளினி.

அருளினியுடன் மதிய உணவருந்தி கொண்டிருந்த வள்ளி அருளினி நகைச்சுவையுடன்பேசுவதைக் கேட்டு கடகட வென்று சிரிக்கிறாள்.அந்த தொழிற்சாலை உணவகத்தில்பல வருடங்களாக அவர்கள் இருவரும் ஒன்றாய் அமர்ந்து உணவு உண்ணும்வழக்கத்தைக் கொண்டவர்கள்.அவர்கள் இருவருக்குமிடையில் ஐந்து வயது
வித்தியாசம். வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் அருளினியைத் தம் உடன் பிறந்தஅக்காவாக எண்ணிப் பழகி வருபவள் வள்ளி.

“அக்கா….நாளையிலிருந்து அதிகாலையிலேயே படுக்கையைவிட்டு நீங்கஅரக்கப்பரக்க எழ வேண்டிய அவசியமில்ல. ஆறவமர அமைதியா எழலாம். உங்களுக்குரொம்ப விருப்பமான நாசிலெமாவை ருசிச்சி…ருசிச்சிச் சாப்பிடலாம்…..!”“அட….நீ போ வள்ளி…..! என்ன இருந்தாலும்…..நாளு பேரோட இப்படி ஒன்னா
உட்கார்ந்து கலகலப்பா பேசிச் சிரிச்சு, விதவிதமான உணவுகள ஒவ்வொரு நாளும்சாப்பிடுறது மகிழ்ச்சி இருக்கே…. அந்த மகிழ்ச்சி வீட்டுலத் தன்னந்தனியாசாப்பிடும் போது கிடைக்குமா?” கவலையுடன் கூறுகிறார் அருளினி.“ம்….நீங்க சொல்றது உண்மைதான்…….!அதற்காக அறுபது வயச தாண்டியும்இதே கம்பெனியிலே நீங்க வேலை செய்யலாமுனு சொல்ல வர்ரிங்களா….?” எதையும்மறைத்துப் பேசும் வழக்கம் இல்லாத வள்ளி தம் மனதில் பட்டதைப் பட்டனக்கூறுகிறாள்.

“இது நாள் வரையிலும் மாடா உழைச்சுத் துரும்பா போனது போதுமுனுநினைக்கிறேன் வள்ளி…..! கடவுள் புண்ணியத்தால, உடல் ஆரோக்கியத்தோடஇதுநாள் வரையிலும் எந்தப் பிரச்சனையுமில்லாம வேலை செஞ்சது போதும்….!இருக்கிற நல்ல பேரோட சோறு போட்ட கம்பெனியவிட்டுப் போயிடுறதுதான்நல்லதுன்னு நினைக்கிறேன் வள்ளி!” உணர்ச்சியுடன் அருளினி கூறுவதைஅமைதியுடன் கேட்கிறாள் வள்ளி.

“உங்க நினைப்பு சரியானது.அக்கா….நான் கேட்கிறேனு என்னை தப்பாநினைக்காதிங்க” தயங்கினாள் வள்ளி.

“இதுதானே வேண்டாங்கிறது.உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதாவள்ளி…..?அக்கா தவறா நினைக்க மாட்டேன்…..! நீ….கேட்க நினைக்கிறதத்தாராளமா கேளு…..! வள்ளி நாம இரண்டு பேரும் ஒரு வயிற்றுலப்பிறக்கலன்னாலும் நாம இரண்டு பேரும் உடன் பிறக்காத அக்கா தங்கச்சிங்கதான்”“அப்படிச் சொல்லுங்க அக்கா…..இப்பதான் என் மனசே நிறைஞ்சிருக்கு.எனக்குக் கூடப்பிறந்த அக்கா இல்லாதக் குறையத் தீர்த்து வைக்க வந்தபுண்ணியவதியாச்சே நீங்க. அக்கா….உங்க பணி ஓய்வுக்குப் பிறகு ….நீங்கயாரோடத் தங்கப்போறீங்க….?”

“என்ன வள்ளி நீ தெரியாமத்தான் கேட்கிறியா….? நான் ஆசையோடு வளர்த்துவர்ர அக்காள் மகள் சீதனாவோடுதான் தங்கப் போறேன்!” மகிழ்ச்சியோடுகூறுகிறார் அருளினி.

இருபது ஆண்டுகளுக்கு முன்,அக்காளும் அவர் கணவரும் மோட்டார் விபத்தில்காலமான பிறகு,அனாதையாகிப்போன சீதனாவை வளர்க்கும் பொறுப்பினை அருளினிஏற்றுக் கொண்டார்.சீதனாவுக்கு அப்போது ஐந்து வயது இருக்கும்.இந்தஉலகத்துல அவருக்கிருந்த ஒரு இரத்த உறவு அக்காதான்.அவரும் விபத்துல
இறந்த போது அருளினி நொறுங்கிப் போனார். வாழ்வு இருண்டு போனதாக எண்ணினார்.தனது அக்காளுக்குச் செய்யும் கைமாறாக எண்ணி அன்று முதல் சீதனாவைப்பாசத்தைக் கொட்டி வளர்க்கத் தொடங்கினார். சீதனாதான் அருளினிக்குஉலகமாகிவிட்டது. தனது திருமணத்தைக்கூட அவர் நினைத்துப் பார்க்காமல்
கண்ணும் கருத்துமாக சீதனாவை வளர்ப்பதிலேயே காலத்தைக் கரையவிட்ட மகராசி
அருளினி அக்கானு வள்ளிதான் பெருமையாகப் பேசுவாள்.

சீதனா பல்கலைக்கழத்துலப் பட்டம் பெற்ற காட்சியை அவளது பெற்றோர்கள்பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையேனு என்ற கவலையினால் அருளினிதுயரமடைந்தார். எந்தக் குறையுமில்லாமல்,கல்விக்கான செலவுகளையெல்லாம் தானேஏற்றுக்கொண்டு,சீதனாவுக்கு எந்த கல்விக்கடன்களையும் வைக்காமல்
பட்டதாரியாக உயர்த்திக்காட்டியதில் மகிழ்ச்சி அடைந்தார்.தற்போது தனியார்நிறுவனமொன்றில் உயர் அதிகாரியாகப் பணியாற்றுகிறாள்; கைநிறைய வருமானம்.“அக்கா….உங்க நல்ல மனசுக்கு….எந்த குறையுமில்லாம கடவுள் நல்லபடியாவைச்சிருப்பாரு. நீங்க நினைச்ச மாதிரி சீதனாவோடு சந்தோசமா
இருங்கக்கா.கடைசி காலம் வரை அன்போடு வளர்த்த சீதனா உங்களக் கண் கலங்காமக்
காப்பாற்றுவா….!” வள்ளி உணர்சியுடன் கூறுகிறாள்.

“நான் வணங்கும் ஆத்தா, உன்னோட உருவத்துல நேர்ல வந்து சொன்ன அருள் வாக்குபோல இருக்கு….! உன்னோட வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் வள்ளி!” அருள்வந்தவர் போல் ஒரு கணம் சிலையாகிப் போகிறார் அருளினி.மறுகணம் வள்ளியின்நெற்றியில் முத்தமிடுகிறார்.

ஒன்றாய் அமர்ந்து இருவரும் மதிய உணவு உண்ணும் இறுதி நாள் அதுவென்றுஇருவர் மனதிலும் உதித்திருக்க வேண்டும்.இருவர் முகத்திலும் ஒருவிதஇறுக்கம் பளிச்சிடவே செய்தது. எனினும் அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல்இருவரும் அமைதியுடன் உணவருந்தி கொண்டிருக்கின்றனர்.அணையை உடைத்துக்
கொண்டு பாயவிருக்கும் நீரைப்போல் இருவர் விழியோரங்களிலும் கண்ணீர்
ததும்பி நிற்கிறது.அப்போது,கண்டினில் ஒலிபெருக்கி ஒலிக்கிறது.அங்கு உணவருந்தி கொண்டிருந்த
அனைவரும் இடம் பெறப்போகும் அறிவிப்பைக் கவனமுடன்
கேட்கின்றனர்.அந்நிறுவனத்தின் நிர்வாகி டத்தோ செல்வாதான் ஆங்கிலத்திலும்
தமிழிலும் பேசினார்.

“இன்று, வேலையிலிருந்து ஓய்வு பெறும் அருளினி அவர்கள், இந்த தொழிற்சாலைதொடங்கிய போது வேலையில் சேர்ந்தவர்.அவர் கடந்த நாற்பது வருடங்களாகநேர்மையாகப் பணியாற்றிய அவருக்கு நிர்வாகம் பாராட்டும் நன்றியும்தெரிவித்துக் கொள்கிறது. அதே வேளை அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டும்வகையில் அவருக்கு நினைவு பரிசும் பத்தாயிரம் ரிங்கிட்டு சன்மானமும்வழங்கப்படுகிறது” இந்த அறிவிப்பைக் கேட்டு உணவருந்தி கொண்டிருந்த பலர்உணர்ச்சி பொங்க அருளினிக்குப் பாராட்டுத்தெரிவிக்கின்றனர்.

“அக்கா….கம்பெனியே உங்க சேவைக்கு அங்கிகாரம் கொடுத்திருக்கு.உங்களுக்கு என் வாழ்த்துகள்” அருளினியைக் கட்டிப்பிடித்துக் கன்னத்தில்முத்தமிடுகிறாள் வள்ளி.அருளினியைச்சுற்றி சிறு கூட்டமே கூடிவிடுகிறது.இந்நிகழ்வை அருளினி சற்றும் எதிர்பார்க்கவில்லை. பலரது வாழ்த்துகள்திடுதிப்புனு வந்து சேர்ந்ததில் அவர் திக்குமுக்காடிப் போகிறார்.நிர்வாகம் தம்மை பெருமைப் படுத்தியது கண்டு அருளினி ஆனந்தக் கண்ணீர்வடிக்கிறார்.பின்னர் விசும்பத்தொடங்குகிறார்.

“அக்கா….ஏன் அழுவிரீங்க….?” வள்ளி ஆறுதல் படுத்துகிறாள்.“ஒரு பெரிய குடும்பத்தை விட்டுப் பிரிந்து,நாளை முதல் வீட்டில இருக்கவேண்டுமே என்று நினைக்கும் போதே கவலையா இருக்கு வள்ளி….”அருளினிக்குத்
துக்கம் தொண்டையை அடைத்துக் கொள்கிறது. கண்களில் கட்டி நின்ற கண்ணீரைச்சிரமத்தோடு அடக்கிக் கொள்கிறார்.

“அக்கா….நீங்க நினைச்சா கொமூட்டர்ல ஏறி அரை மணி நேரத்தில கம்பெனியிலஎங்கள வந்துப் பார்க்கலாம்.நினைச்ச மாத்திரத்துல கைபேசியில எங்களோடுபேசலாம்,வாட்சாப்பு மூலமா எங்களுக்கு விபரம் சொல்லலாம்.எதுக்கு வீணாமனசப்போட்டு குழப்பிக்கிறீங்க…..நான் இருக்கேன் தினமும் உங்களோட
பேசரேன்,கண்ணீரைத் தொடைங்க கவலைய விடுங்க….வாழ்க்கை மகிழ்ச்சியாவாழத்தான்…” குட்டிதன்னம்பிக்கை உரையை ஆற்றி முடிக்கிறாள் வள்ளி.அவளது உரையைக்கேட்டு அருளினி அக்கா முகம் மலர்ந்தது வள்ளிக்குப்பெருமையாகைப் போகிறது.

மாலையில் வேலை முடிந்ததற்கான சைரன் ஒலி வேகமாகஒலிக்கிறது.நூற்றுக்கணக்கான பணியாளர்கள் தத்தம் இல்லம் நோக்கி மிகுந்தஆவலுடன் புறப்படுகின்றனர்.ஆனால்,அருளினி மட்டும் தளர்ந்த நடையுடன் நடந்து
செல்கிறார்.கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தம் சொந்த நிறுவனமாய் நினைத்துஇனிதாய்ப் பணிபுரிந்த நிறுவனத்தைவிட்டு இன்றுடன் விடை பெற்றுச் செல்வதைஎண்ணும் போது அவரையும் அறியாமல் மனம் சஞ்சலம் அடைகிறது.இதுநாள் வரையிலும் தாம் பணியாற்றிய தொழிற்சாலையில் நாளை முதல் அதன்
வாசலில் கூட கால் வைக்க முடியாது என்ற எண்ணம் மனதில் துளிர்த்த போதுகவலையின் வாட்டம் முகத்தில் வட்டமிடுகிறது.அந்த நிறுவனத்துக்கும்தனக்குமுள்ள உறவு இன்று முதல் முற்றாய் அறுபடுவதை எண்ணிப்
பார்க்கிறார்.தாம் நேசித்த வேலையகத்தை விட்டுப் பிரிவது அவருக்குப்பெரும் துயரமாக இருந்தது. அவரையும் மீறி கண்களில் கண்ணீர்.

மனச்சுமையோடு வீடு செல்ல அருளினி சாலையைக் கடக்கிறார். அவரோடு பலரும்சாலையைக் கடக்கின்றனர்.எல்லாரும் சாலையை விரைவாக கடக்கும்வேளையில்,அருளனி மட்டும் சாலையை மெதுவாக கடக்கிறார்.“ஓய்….வீட்டுல சொல்லிட்டு வந்தாச்சா……?” மோட்டோரில் வேகமாக வந்தஇளைஞன் ஒருவன் அருளினியை நோக்கிக் காட்டுக் கத்தாகக் கத்திவிட்டுப்பறக்கிறான் முகமூடி அணிந்த அந்த இளைஞன்.

“நீங்க வாங்கக்கா…..அவன் கிடக்கிறான் அராத்தல் பிடிச்சவன்….. மெதுவாபோனாதான் என்ன? இவனெல்லாம் உருபடியா வீடு போய் சேரமாட்டானுங்க….!”கோபத்தில் வாய்க்கு வந்தபடி கரித்துக் கொட்டினால் வள்ளி. அதர்ச்சியில்அருளியின் உடம்பே ஆடிப்போய்விடுகிறது.அதர்ச்சியில் அவர் உடல்
நடுங்குகிறது.அருளினியை அணைத்தபடி பாதுகாப்பாகச் சாலையைக் கடக்கஉதவுகிறாள் வள்ளி.

பத்து நிமிட நடைக்குப் பின் கொமூட்டர் இரயில் பயணம் வழக்கம் போல்தொடங்குகிறது.“அக்கா…வாங்க இங்க உட்காருங்க….”வள்ளி வழக்கம் போல்இடம் பிடித்துக் கொடுக்கிறாள்.இருவரும் வசதியாக அமர்ந்து கொள்கின்றனர்.கொமூட்டர் வசதி வந்த பிறகு அருளினிக்கு வேலைக்கு வந்து போகும் போக்கு
வரத்து சிரமமில்லாமல் போய்விட்டது.பஸ்சில் பயணிக்கும் போதெல்லாம் பட்டசிரமங்கள் சொல்லிமாளாது.நெரிசலில் கால் கடுக்க நின்று கொண்டு பயணம்செய்திருக்கிறார்.இன்று குளுகுளு அறையில் நவீனமான இருக்கைகளில் அமர்ந்துபயணம் செய்வது நிம்மதியைத் தந்தது.அரை மணி நேர பயணம் என்றாலும்
அலுப்பில்லா நிம்மதியான பயணத்தை அனுபவிக்கும் போதெல்லாம் அரசாங்கம்மக்களுக்காக ஏற்படுத்தித் தந்ததுள்ள வசதிகளுக்காக மனதுக்குள் நன்றிசொல்ல அருளினி ஒருநாளும் தவறுவதில்லை.

வள்ளி தனது இருப்பிடம் வந்ததும் இறங்கிக் கொள்கிறாள்.அருளினி அடுத்த சிலநிமிட துரித பயணத்துக்குப் பின் இறங்கிக் கொள்கிறார். தனது பயத்தைத்தொடங்கும் முன்பே பயணம் செய்த கொமூட்டர் சில வினாடிக்குள் அங்கிருந்துபுறப்பட்டுவிடுகிறது. அங்கு ஒரே அமைதி நிலவுகிறது. சில நிமிடங்களில்பயணிகள் அனைவரும் காணாமல் போய்விடுகின்றனர்.அருளினி தம் வீட்டை நோக்கி நடக்கிறார்.ஐந்து நிமிட நேரத்தில் அருளினி
வீட்டை அடைந்துவிடுவார்.வீட்டை அடைவதற்குள் அருளியின் உள்ளத்தில் பல்வேறுசிந்தனை மலர்கள் பூக்கின்றன.தம்மை வரவேற்க சீதனா வாசலில் விழி வைத்துக்காத்துக் கொண்டிருப்பாள்.அவள் இருக்கும் வரையில் தமக்கு என்ன கவலை.தமக்குக் கிடைத்த பரிசுகளை அவளிடம் கொடுத்தாள் மிகவும் மகிழ்வாள்.சிந்தனை முடிவதற்குள் வீட்டை அடைகிறார்.அவர் கண்கள் வாசலை நோக்கிப்பாய்கிறது.தாம் ஆவலோடு எதிர்பார்த்த சீதனா அங்கு இல்லாதது கண்டுவியப்படைகிறார்.உள்ளே ஏதும் வேலையாக இருப்பாள்.தம்மை ஆசுவாசப்படுத்திக்
கொண்டு வாசலை அடைகிறார்.வாசல் கதவு பூட்டப்பட்டிருந்தது. வேலை முடிந்துஇன்னும் வீடு வரவில்லையோ? இது நாள் வரையிலும் ஒரு நாள் கூட அவள் தாமதமாகவீடு திரும்பியதில்லையே? இன்று அவளுக்கு என்ன ஆச்சு? அவருக்கு ஒரேகுழப்பமாக இருந்தது.

பூட்டைத்திறந்து வீட்டிற்குள் செல்கிறார்.தனது வாசிப்பிற்காக வரவேற்புஅறையில் போடப்பட்டிருந்த சிறிய மேசை மீது வெள்ளைத் தாள் ஒன்று
வைக்கப்பட்டிருந்தது.அருளினி அதை எடுத்து பதற்றமுடன் வாசிக்கிறார்.“சித்தி…. நான் விரும்பியவரோடு வாழ்வதற்காக வெளிநாடு
செல்கிறேன்…..இனி என்னைத் தேடவேண்டாம், கூட் பை ! ”முற்றும்

நன்றி ;திண்ணை

  • தொடங்கியவர்

தாண்டுதல்
--------------
சுப்ரபாரதிமணியன்
---------------
“இந்த உலகத்திலே மொதல்ல மனுசங்க மட்டுந்தா இருந்திருக்காங்க”
“என்ன கதையா”
“சின்னக் கதையா“
“குட்டிக் கதையா“
“குட்டிகளைப் பத்தின கதையல்ல……..சொல்லட்டுமா”
“சொல்லுங்க..குட்டிகளனு யாரும் வந்திடக்கூடாது”

“இந்த உலகத்திலே மொதல்ல மனுசங்க மட்டுந்தா இருந்திருக்காங்க. எல்லாருக்கும் ரொம்பவும் போர் அடிச்சுப் போச்சு. மனுசங்க மூஞ்சிய மனுசங்களே எத்தனை நாளைக்குப் பார்க்கிறது? வேற வழியில்லாம கடவுளைப் பார்த்திருக்காங்க. அவர் போர் அடிச்சுட்டுனு பிராணிகள், விலங்குகள்னு படச்சிருக்கார். அப்புறம் ஏரி, குளம், அப்புறம் மரங்கள் செடி கொடின்னு அப்புறம் பூக்கள் மல்லி……”“மல்லிகையா மல்லிகைக்கு அவ்வளவு முக்கியத்துவமா”
“மல்லிகா”
“உம்”
“மல்லிகாவைப் படச்சிருக்கார்”
“என்ன ஐஸ் வெக்கரதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா”

வெட்கத்தால் முகம் சிவந்திருந்தது மல்லிகாவிற்கு வீரக்குமாரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கம்பளிப் பூச்சியாய் அவன் மீசை உட்கார்ந்திருந்தது. இடது கன்னத்து மச்சம் பளபளத்துக் கொண்டிருந்தது, கண் புருவத்திலிருந்து ஒரு மயிர் நீண்டதாய் தொங்கியது. அவன் மெல்ல அதை இழுக்க சாய்ந்தான் வீரக்குமார் “அய்யே வலிக்குது”
“பேர்லதா வீரக்குமார். இந்த மயிரை இழுத்ததுக்கே அய்யோவா?”

“என் வீரத்தை எங்க காட்டனும்கறே மல்லிகா”

“காம்பவுண்ட் சுவரை எட்டிக் குதிக்கறதிலதா காமிக்கிறீங்க.. போதும். செரியா.”

வீரக்குமாரின் வீட்டிலிருந்து நூறடியில் புகைவண்டி நிலைய காம்பவுண்ட் சுவர் ஆரம்பிக்கும். அது புகைவண்டி இருப்புப் பாதையை ஒட்டி ஒரு கிலோ மீட்டருக்கு நீண்டிருக்கும். புகைவண்டி நிலையத்திற்கு போக வேண்டுமென்றால் காம்பவுண்ட் சுவரையொட்டி ஒரு கிலோ மீட்டர் நடந்து போக வேண்டும். பல வருடங்களாய் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு போகிறவன். காலை நேரத்தில் அவசர கதியில் கிளம்புகிறவனுக்கு காம்பவுண்ட் சுவர் பெரிய தடையாக இருந்தது. வீட்டிலிருந்து வெளியில் வந்ததும் வலது பக்கத்தில் ஒரு வேப்பமரம் அதன் வேர்கள் காம்பவுண்ட் சுவரை ஊடுருவிக் கொண்டு நின்றிருந்தது. அதன் கிளையொன்றைப் பிடித்து காம்பவுண்ட் சுவற்றின் மேல் ஏறி உட்கார்வான். பின் எம்பிக் குதிப்பான். வேப்பமரம் பெருத்துக் கொண்டே போனபோது அதை வெட்டிவிட்டார்கள். அதன் அடிப்பாகம் மட்டும் தலையை மண்ணுள் புதைந்திருக்கிற மனிதனைப் போல நின்றிருந்தது. வேப்ப மரத்தை வெட்ட விட்டிருக்கக் கூடாது என்று நினைத்தான்.

 அதனடியில் சிறிய கல்லை  நட்டு இரண்டு நாள் குங்குமம் தெளித்திருந்தால் சிறு தெய்வம் ஆகியிருக்கும். வாரம் இரண்டு முழப் பூவை உதிர்த்துவிட்டுப் போனால் நிரந்தரமாகியிருக்கும். முனியப்பனோ அங்காளம்மாளோ ஏதாவது பெயர் வைத்திருக்கலாம். வேப்பமரமும் நிரந்தரமாயிருக்கும். நழுவவிட்டு விட்டோமே என்றிருந்தது வீரக்குமாருக்கு.

காலை புகைவண்டி நேரத்தில் ஒரு கிலோ மீட்டர் சுற்றிப் போவது அவனுக்கு அவஸ்தையாக இருந்தது. வேப்பமரத்தின் அடிப்பகுதியில் கால்களை வைத்து எம்பியபோது சட்டென காம்பவுண்ட் சுவரின் மேல் அவன் உடம்பு, உட்கார்ந்து கொண்டது ஒருமுறை. அது எதேச்சையாக நடந்தது போலிருந்தது. அதற்குப் பின் அப்படி எம்பி காம்பவுண்ட் சுவரின் மேல் உட்கார முடியவில்லை.

திருப்பூருக்குப் பேருந்தில் கிளம்பிப் போவதென்பது பெரிய அவஸ்தையாக இருந்தது அவனுக்கு. வஞ்சிபாளையம், மங்கலம், கருவம்பாளையம் கடந்து பேருந்தில் தடக்தடக்கென்று உடம்பை இம்சைப் படுத்திக் கொண்டு போவதில் அலுப்பிருந்தது. பேருந்து நெரிசல் வேறு மூச்சு திணற வைத்தது. திருப்பூரின் குப்பையும், சாயக் கழிவும், அசுத்தமும் இன்னமும் மூச்சடைக்க வைக்கும் பனியன் கம்பெனியில் பேட்லாக் ஸ்டூலில் உட்கார்ந்தால்தான் ஆசுவாசம் பிறக்கும் அவனுக்கு.

அவனின் அம்மா கல்யாணப் பேச்சை எடுக்கிற போதெல்லாம் எரிச்சலடைவான். “ஏண்டா எரிச்சல் படறே. வார்ரவ ஒரு டி.வி.எஸ்ஸோ, பைக்கோ வாங்கிட்டு வரமாட்டாளா”
“வர்ரவகிட்ட எதுக்குக் கேட்டுட்டு. நானே சம்பாதிச்சு வாங்கிக்கிறேன்”
“சம்பாதிக்கிற வரைக்கும் என்ன பண்ணப் போறே”

இரட்டைச் சக்கர வாகனம் வாங்குவதை விட காம்பவுண்ட் சுவரைக் கடப்பதுதான் அவனின் அப்போதைய லட்சியமாயிருந்தது. பள்ளியில் விளையாட்டில் அக்கறையில்லாதவன் ஓட்டப் பந்தயமோ, உயரந்தாண்டுதலோ மனசில் இருந்திருந்தால் காம்பவுண்ட் சுவரைக் கடப்பது சுலபம். பேட்லாக் மிஷின் முன்னால் உட்கார்ந்து பனியன் தைக்கிற நேரம் தவிர மற்ற நேரங்களில் பனியன் கம்பெனி இளம் பெண்கள் அவனை இம்சித்ததை விட காம்பவுண்ட் சுவர்தான் இம்சித்துக் கொண்டிருந்தது.
ஒருநாள் வீட்டிலிருந்து சற்றே வேகமாகக் கிளம்பியவன் ஓட்டமெடுக்க ஆரம்பித்தான். காம்பவுண்ட் சுவரின் வலது பக்க மூலையிலிருந்து கால்களை எம்பி காம்பவுண்ட் சுவரைத் தாண்டிவிட்டான். அவனுக்கு மலைப்பாக இருந்தது. எப்படித் தாண்டினோம் என்று ஆச்சரியப்பட்டபடியே பனியன் கம்பெனிக்குப் புகைவண்டி பிடித்துப் போனான். பிறகு தினந்தோறும் உடற்பயிற்சி போல வேகமெடுப்பதும், ஓடுவதும், காம்பவுண்ட் சுவரை அந்த வேகத்திலேயெ கடப்பதும் சாதாரணமாகிவிட்டது. தாண்டுவது வெகுவாக இருக்கட்டும் என்று “பவர் ஷு” ஒன்றையும் வாங்கிக் கொண்டான்.கொஞ்சம் வயிறு கனமில்லாமல் இருந்தால் சுலபமாயிற்று.

பனியன் கம்பெனி வேலைக்கு காலையில் கிளம்பும்போது   அம்மா வருவதைத் தவிர்ப்பான். “என்னடா வர்ரேன்னு சொன்னாக்கூட விறுவிறுன்னு போயிர்ரே”
“டிரெயினைப் பிடிக்க வேண்டாமாம்மா”
“வேற யாரையாச்சும் பாக்கணுமா, சைகை காட்டணுமா, பேசணுமா”
“நீதா ஆள் பிடிச்சுத் தரணும்”
“ச்சீ..பேச்சைப் பாரு”
 
அவன் அம்மாவும் ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தாள். புகைவண்டி நிலையத்திலிருந்து அடுத்த வீதியில் அவளை ஏற்றிச் செல்ல மில்லின் ஒரு சிறப்புப் பேருந்து வரும்.
“எப்படிம்மா உன்னை அந்த பஸ்ல ஏத்திக்கிறாங்க”

“ஏண்டா”
“சின்ன வயதில் பொண்ணுகளை சுமங்கலித் திட்டமுன்னு சொல்லி ஏத்திட்டுப் போறாங்க. அஞ்சு வருசம் வேலை செய், உங்க கல்யாணத்துக்கு முப்பதாயிரம் தர்ரமுன்னு கூட்டிட்டுப் போறாங்க, நீயும் அந்த மில்லுல வேலை செய்யற… உனக்கும் முப்பதாயிரம் கெடைக்குமா”
“சும்மா இருடா…. அது சுமங்கலிகளுக்கு”

அம்மாவை துன்புறுத்தி விட்டோமோ என்றிருக்கும் அவனுக்கு ஏதோ பேசுவதாக நினைத்துக் கொண்டு, அம்மாவை துன்புறுத்தி விடுவதாகத் தோன்றும். அப்பா மட்டும் இருந்திருந்தால், ” சுமங்கலி “ பேருந்தில் அவள் வேலைக்குப் போகும் அவசியம் இருந்திருக்காது.
ஒருநாள் அவனைப் பின் தொடர்ந்து வந்த அம்மா அவன் காம்பவுண்ட் சுவரைத் தாண்டிப் புகைவண்டி இருப்புப் பாதைக்குப் போவதைப் பார்த்தாள். அதிர்ந்து போய்விட்டவளுக்கு உடம்பெல்லாம் வியர்த்தது. அன்று மாலை உடம்பு சுகமில்லையென்று சீக்கிரமே மில்லிலிருந்து வந்துவிட்டாள். இப்படி காம்பவுண்ட் சுவரைத் தாண்டிக் குதிக்கிற வீரகுமாரை எந்த சிரமமும்  இல்லாமல் முழுசாய் பார்க்க முடியுமா என்ற பயத்தினாலேயே வீட்டிற்கு வந்துவிட்டாள்.

“என்னடா எத்தனை நாளா இந்தப் பழக்கம்”
“என்னமா………. என்ன கண்டுபிடிச்சிட்டியா………எந்த பிரண்டும் இல்லம்மா, கேர்ல்ஸ் கூட”
“அதெல்லா இல்லடா….. காம்பவுண்ட் சுவற்றை எட்டிக் குதிச்சு தாண்டிப் போறது”
“ரொம்ப நாளா நடக்குதம்மா”
“எப்படிடா”

“பழகிருச்சும்மா…..பயப்படாத”
“ஐய்யோ….பாத்தப்போ திக்குன்னு இருந்துச்சு. விசுக்குன்னு தாண்டிப் போயிட்டே இருந்தே”
“பழகிட்டம்மா”
“இதுக்காகவே உனக்கு ஒரு வண்டி வாங்கிக் குடுத்துரணும்”
“நீங்க காம்பவுண்ட் சுவத்தைத் தாண்டிப் போனதை நானும் இரண்டு மூணுதரம் பார்த்த ஞாபகம். என்னவோ பொண்ணுகளக் கவர் பண்றதுக்குக் குதிக்கிறீங்கன்னு நெனச்சேன். கொரங்கு தாவிப் போனது மாதிரி இருந்திச்சு”
“அப்பவே கொரங்குன்னு முடிவு பண்ணிட்டியா”

“இப்பவுந்தா……நாலு வீதித் தள்ளித்தானே, அப்புறம் என்னைப் பொண்ண பாக்க வந்தப்போ காம்பவுண்ட் சுவரைத் தாண்டி குரங்கென்ன நாலு வீதி தள்ளி வந்திருக்கன்னு நெனச்சேன். சிரிப்பா இருந்துச்சு அப்படி வெரசலா காம்பவுண்ட் சுவரைத் தாண்டிப் போகாட்டி என்ன.. போயி ரயில்வே ஷ்டேசன் கூட்டத்தில் கலந்துர்ணுமா”
“உன்னைக் கூட மொதல் மொதலா விநோதமான எடத்திலதா பாத்தேன். பெரியாஸ்பத்திரியில”
“ஆமாமா”

“பெரியாஸ்பத்திரியில மார்ச்சுவரி ரூமுக்கு முன்னால உட்கார்ந்திருந்தீங்க, என்னமோ ரொம்பவும் பழகினமாதிரி என்ன இங்க உட்கார்ந்துன்னு சட்டுன்னு கேட்டுட்டேன்”
“ஆமா நானும் சட்டுனு திரும்பிப் பாத்தா, பிணவறைன்னு போர்டு தொங்குது. பயமாப் போச்சு. பெரியாஸ்பத்திரியில கூட்டம். ஒரே க்யூ மயம். எங்காச்சும் நெழல்லே உக்காரணும்னு ஒதுங்கினேன். நீங்க சொன்னப்புறம்தான் தெரிஞ்சுது. அது மார்ச்சுவரி கட்டிடம்னு”
“என்ன உங்களுக்கு மார்ச்சுவரி கட்டடம்னா பயமா”

“ரொம்ப பயம். அந்தக் கூட்டத்தைக் கண்டாவே ஓடி ஒளிஞ்சுக்குவேன். திருவிழாக் கூட்டத்தில் ஒரு தரம், சந்தைக் கூட்டத்தில் ஒரு தரம்ன்னு தொலைஞ்சு போயிட்டேன். ஒரு தரம் திருப்பூர் பெருமாள் கோவில் தேர்த் திருவிழாவுல எங்கப்பாவை விட்டுட்டு யாரோ ஆம்பளை ஒருத்தர் கையைப் புடுச்சுட்டு நடந்துட்டிருக்கேன். தெரிஞ்சதும் பகீர்ன்னு பயம் வந்தது. வீர்ன்னு அலறிட்டேன். ரயில்வே ஸ்டேசன்ல காலையில பனியன் கம்பெனிக்குப் போற கூட்டத்தைப் பாத்த பயமா இருக்கும். நீங்க எப்படித்தா அந்தக் கூட்டத்தில் போறீங்களோ”

“உங்கக் கல்யாணத்துக்குக் கூட்டம் வருமே…. அதப் பாத்துட்டு ஒளிஞ்சிருவீங்களோ, மாப்பிள்ளைக் கோலத்தில் என்ன உக்கார வெச்சிட்டுத் தவிக்க வுட்டுறாதீங்க.. காம்பவுண்ட் சுவத்தைத் தாண்டறதில் ஒரு திரில். திருப்பூருக்குப் போற டிரென் கூட்டத்தில் நசுங்கறது ஒரு திரில், அப்புறம் திருப்பூர் போயி குப்பையில, ஜனங்க நெரிசல்ல நடமாடறதும் திரில்தா….”

இலவச அரசாங்க வண்ணத் தொலைக்காட்சி இருட்டாய் சும்மா பார்துக்கொண்டிருந்தது. தொலைக்காட்சி கண்ணாடியில் மல்லிகா உருவம் வந்து வந்து போனது. குளித்து முடித்து தலையை லகுவாக்கிக் கட்டியிருந்தாள். தலைமயிரிலிருந்து நீர் சொட்டி பின் ஜாக்கெட்டை நனைத்திருந்தது.
“என்ன உடுமலைக்காரியை வெச்சுட்டு அரட்டை……..”
“ஒண்ணுமில்ல…. திலகவதிகிட்டே சட்டுன்னு  மனசுல வந்ததைச் சொல்லிட்டு இருந்தேன்”
“திலகவதிக்கென்ன திருமூர்த்திமலை தண்ணியும், உடுமலை குளுகுளுமாக நெலச்சு நிக்கறவளாச்சே, கௌம்பு. திலகதி…. ஞாயிற்றுக்கிழமை வேலை எவ்வளவோ  கெடக்குது. இவருக்கென்ன அசடு வழிய எதாச்சும் சொல்லிட்டிருப்பாரு….”  திலகவதி முன்புறம் போட்டிருந்த சடையை லாவகமாக பின்புறம் தள்ளி விட்டபடி பவித்ராவின் கன்னத்தைக் கிள்ளி விட்டுக் கிளம்பினாள். பவித்ரா வலி தாங்காது போல் வலியால் உஸ்ஸென்றாள். “கொழந்தையைக் கிள்ளறது உனக்குக் கெட்ட பழக்கம். எத்தனை தரம் சொல்றது….” திலகவதி முகத்தைக் கோணலாக்கிக் கொண்டு பவித்ராவிற்குக் கையசைத்துக் கிளம்பினாள்.

“திலகவதிகிட்ட என்ன சொல்லிக்கிட்டிருந்தீங்க……”
“உங்கிட்ட சொல்ல வேண்டாமுன்னுதா”
“சின்னதா கவிதை மாதிரி ஒரு ஸ்பார்க் மனசில வந்தது. அதுதா.“
“என்ன”
“மூத்திரப் புரையைப் பெண்கள் கடக்கும் போது அதன் நாற்றம் உணர்வதில்லை நான். இதில் மூத்திரப் புரைன்னா என்னன்னு திலகவதி கேட்டிருந்தா,…..”
“பெரிய கவிதைதா……. எங்கிருந்து புடுச்சீங்க”
“டைரியைப் புரட்டினான். நான் எழுதுனது இருந்துச்சு”
“அவளுக்கு புரிஞ்சுதாமா”
“அதுக்குள்ளதா நீ வந்துட்டியே, செரி உனக்கொண்ணு”

“கதையல்லா வேண்டா. சின்னதா துணுக்கு மாதிரி ஏதாச்சும் சொல்லுங்க. இட்லிக்கு மாவு கலக்கிட்டு இருக்கேன். கதை எல்லாம் வேண்டாம். இப்பதா கதையெல்லாம் அரை நிமிசக் கதை, கால்பக்கக் கதைன்னு ஆயிப்போச்சு. துணுக்கா சொல்லுங்க. நேத்திக்கு தொட்டிச் செடி ஒன்னு காமிச்சான். அது வளர்வதற்கு நிழல் தேவையாமா? இருட்டிலே ராத்திரியிலே ஒளி வீசும்னு சொன்னான். அதுக்கு பேர் கேட்டேன். நீங்களே ஒன்னு வெச்சுக்கோங்கன்னான். நான் மல்லி…..”

“மல்லிகா” என்றால் மழலைக் குரலில் பவித்ரா. “போதும் போதும் ஐஸ் வெச்சது போதும். தலைக்குக் குளிச்சதே ஜிவ்வுன்னு இருக்கு. இதுல நீங்க வேற ஐஸ் வெச்சுட்டு, உங்களுக்குக் காலையிலே இட்லிக்கு தக்காளி குறுமாவும் மத்தியானம் சாப்பாட்டிற்கு நெத்திலி மீன் கொழம்பும் வெச்சுத் தரேன். ஐஸ் வெக்கத்தேவையில்ல. நெத்திலி மீனுக்கு பையை எடுத்துட்டுக் கிளம்புங்க.”

“மீன் மார்க்கெட்டுக்குப் போகணும்னா அலுப்பா இருக்கு. ரயில்வே ஸ்டேசனை கடந்துதான் போகணும். ரயில்வே காம்பவுண்டு சுவத்தைத் தாண்டு போறது கிண்டலா சவாலா எப்படி வேணுமின்னாலும் வெச்சுக்கங்க. கல்யாணத்திற்கு முந்தி பனியன் கம்பெனிக்குப் போக டெய்லி காம்பவுண்டு சுவத்தைத் தாண்டித்தானே போயிட்டிருந்தீங்க. கல்யாணத்துக்கு அப்புறம் நீதானே காம்பவுண்ட்டை தாண்டறதெல்லாம் வேண்டா. எதுக்கு ரிஸ்க்குன்னு தடா போட்டே. மீறவே முடியல. எனக்கு எதுக்குச் சிரமம். தாண்டரதுல பேலன்சு தப்பி விழுந்து கைகால் முறிஞ்சிறுமுன்னு பயம். அடி மனசுல வந்துருச்சு. பிரசவத்துக்கு நீ போயிருந்தப்போ, காம்பவுண்டு சுவத்தை தாண்டிடனும்னு நெனப்பேன். தாண்டரதில உள்ளுர பயம்தான்.”
“இன்னிக்கு முயற்சி பண்றது”

“கொழந்தையை வச்சிட்டு சீண்டிப் பாக்கறயா”
“தாண்டப்பா” என்றாள் பவித்ரா.
“வேண்டாம்மா கைகால் முறிஞ்சு நான் கெடந்தா நீ அழுவியே. அதப்பாத்து எனக்கும் அழுகை வந்திரும்”
மீன் வாங்கப் பையை எடுத்துக் கொண்டு கிளம்பியவன், வாசலில் வந்து நின்று புகைவண்டிப் பாதை காம்பவுண்டு சுவரைப் பார்த்தான். அது நீளமாகி  ரொம்ப உயரத்திற்கு வளர்ந்து விட்டது போலிருந்தது.

நன்றி ;திண்ணை 
 

  • தொடங்கியவர்

ராசி
-------------
எஸ்ஸார்சி
------------
.அவனக்கு அலுவலத்துப்பணியில் சமுத்திரகுப்பம் மாற்றல்.முதுகுன்ற நகரத்திலிருந்து ஒரு மணி பேருந்தில் பயணிக்க அந்த சமுத்திரகுப்பம் போய்ச்சேரலாம்.முதுகுன்ற நகரில் அவன் ஒரு வீடு சொந்தமாகக்கட்டி அதனில்தானே குடியிருந்தான். பணி இடம் மாற்றல் ஆக அவன் முதுகுன்ற வீட்டை வாடகைக்கு விடவேண்டும்.வீடு வாடகைக்கு -அடைப்பில் ‘வெஜ்’ என வெள்ளைத்தாளில் ஸ்கெச் பேனா கொண்டு எழுதி காம்பவுண்ட் சுவரில் ஒட்டினான்.மறக்காமல் தன் தொலைபேசி எண்ணையும் அதனில் எழுதி வைத்துவிட்டுத்தான் சமுத்திரகுப்பம் சென்றான்.

அவன் அலுவலகத்தொலைபேசி எண்ணை எழுதி உடன் பி பி என்றும் போட்டிருந்தான். பி பி இது இப்போதைய செல் பெசி ஜனங்களுக்கு விளங்காதுதான். தொலைபேசி சாம்ராஜ்ஜியத்தில் கைபேசி பிறப்பதற்கு முன் என்கிற காலம் ஒன்று இருந்தது. அப்போதெல்லாம் பி பி கால் பேசும் இனம் ஒன்று உண்டு.

ஒரு சிலர் போனில் அவனிடம் வாடகைக்கு விடும் அந்த வீடு பற்றி விசாரித்தார்கள். அந்த முதுகுன்றத்து வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொள்ள எனக்கு உனக்கு என போட்டி போட்டுக்கொண்டு யாரும் வந்துவிடவில்லை. ஒரு வீடு யாரும் குடி இருந்தால் மட்டுமே வீடாக இருக்கிறது.அது சும்மா பூட்டிக்கிடக்க வாடகை மட்டுமா இழப்பு.
அவன் மனைவி சைவ உண்வு சாப்பிடுவோரை மட்டுமே அந்த வீட்டில் குடி வைக்க வேண்டும் என அடம் பிடித்தாள். யாரும் அப்படி வரத்தானே இல்லை.

திடீரென ஒரு நாள் முதுகுன்ற நகரில் அவன் வீட்டுக்குப்பின்புறம் குடியிருப்பவரின் பையன் சமுத்திரகுப்பம் வந்தான். அவன் வேலை பார்க்கும் டெலிபோன் அலுவலகத்துக்கு நேராக வந்து ‘வீடு வாடகைக்கு வேண்டும்’ என்றான்.

‘யாருக்கு’
‘என் நண்பர் ஒருவருக்கு’ வந்தவன் பதில் சொன்னான்.
வீீடு பூட்டிக்கிடப்பதில் என்ன பிரயோசனம் என்று எண்ணி ‘ நீங்கள் சொன்னால் சரிதான்’ என்று முடித்தான்.அட்வான்ஸ் தொகையொன்று கை மாறியது. ஏதோ தொகை. அவன் தயாராக வைத்திருந்த முதுகுன்ற வீட்டுச் சாவியை அவனிடம் ஒப்படைத்தான்.

‘மாதம் ஆயிரம் வாடகை’ சொல்லியாயிற்று.
ஆயிரமே பெரியதொகைதான். சிறியது வீடுதானே..ஒரு வழியாக முதுகுன்ற வீட்டை வாடகைக்கு விடுவது என்கிற பிரச்சனை முடிவுக்கு வந்தது.மனம் லேசாக சந்தோஷப்பட்டது.மனைவிக்கு போன் போட்டான்.’வாடகைக்கு வர்ர ஆளு சைவமான்னு கேட்டிங்களா’ அவள் கேள்வி வைத்தாள்.’சைவமாதான் இருக்கும். இல்லாகாட்டி நமக்கு தெரிஞ்ச ஒரு பையன் நம்மகிட்ட அந்த மனுஷனை வாடகைக்குன்னு கொண்டு வந்து விடுவானா’ அவன் சமாளித்தான்.அவள் அமைதி ஆனாள்.

இரண்டு வாரம் சென்றது.அவன் விடுமுறைத்தினதன்று முதுகுன்றம் புறப்பட்டான். அவன் வீட்டையும் வீட்டில் குடியிருப்பவரையும் பார்த்துவரலாம் என்பதாக யோசனை.முதுகுன்ற நகரில் பேருந்தை விட்டு இருந்து இறங்கினான். வாடகைக்கு விட்ட அந்த வீடு முதுகுன்றம் புற நகரில் இருந்தது. அவன் பைய நடந்தான்.தன் வீட்டு வாசலில் நாற்காலிபோட்டுக்கொண்டு ஒரு பெரியவர் உறங்கிக்கொண்டிருந்தார்.ஒரு பெண் புழுங்கல் அரிசியை கும்பலாகக்கொட்டி அதனை முறத்தால் கிளறியபடியே இருந்தாள்.

‘சார் நான்தான் வீட்டு சொந்தக்காரன் வந்துருக்கன்’ அவன் கொஞ்சம் உரத்துக்குரலில் ஆரம்பித்தான்.’யாரு அது வூட்டுக்காரரு’ அந்தப்பெரியவர் ஆரம்பித்தார்.
‘நீங்க குடியிருக்குற வீட்டுக்கு சொந்தகாரரு’
‘அப்படியா எம் மருமொவள கூப்பிடறேன்.இதுல எனக்கு சோலி என்னா இருக்கு’
மருமகள் வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்தாள்.

‘யாரு யாரு’
‘நாங்கதான் வீட்டுக்கு சொந்தக்காரங்க’
‘வாங்க வாங்க சரியான நேரத்துக்கு தான் வந்துருக்கீங்க. வூட்டு உள்ள இருக்குற முனிசிபாலிடி கொழாயில தண்ணி வருல.தெருவுல பூமிவுள்ளாற போற மெயின் கொழாயிக்கு நேரா பள்ளம் எடுக்கணும். ஒரு துண்டு குழாய் போட்டு இழுத்துடணும். நம்ம வூட்டு வாசல்ல ஒரு தொட்டியும் கட்டுணும்’
‘இது என்னா புது சேதி’
. வீட்டு சொந்தக்காரரைப் பார்த்த உடனே இப்படியுமா ஆரம்பித்துவிடுவார்கள் அவனுக்குச் சங்கடமாக இருந்தது..
‘ஒண்ணும் புது சேதி இல்லே. தண்ணி வரவேண்டிய போர்சுல வருல. வர்ர அந்த தண்ணியும் வூட்டுக்கு உள்ள ஏறமாட்டேங்குது.அதான் குழி வெட்டி கொஞ்சம் வேல செயிணும் ஒரு தொட்டி கட்டணும்.அது உள்ளார அந்த தண்ணி உழுவுணும். அதுல சின்னதா ஒரு மோட்டார் போட்டு அத வூட்டு கொண்டாறணும்.வேல இருக்கு’
‘இப்பதான நீங்க வந்து பதினைஞ்சி நாளு ஆவுது’
‘அதுக்குன்னு தண்ணி இல்லாம என்னா செய்யிறது’
‘ரொம்ப செலவு வரும்போல’ அவன் அச்சத்தோடு சொன்னான். அவனுக்கு எரிச்சலாகவும் வந்தது.அமைதியாகவே இருந்தான்.

‘ஒண்ணும் பெரிய விஷயம் இல்லே.நேரா பீச்ச கை வாட்டமா தார் ரோட்டே பொனீங்கன்னா ஒரு எண்ணெ மில்லு வரும். வெங்கடேஸ்வரா ஆயில் மில்லுன்னு நெனைக்கிறேன்.பக்கத்துல தனலச்சுமி ரைசு மில்லு அதுக்கு பக்கத்துல சிமெண்டி தொட்டி செய்யுற கடை.அந்த ஓனரு.இந்த வேலய எல்லாம் காண்டிராக்டா எடுத்து செய்யுறாரு.ஒரு எட்டு போங்க பேசுங்க.காசு என்னா ஆவும் அது அது எவ்விடம்னு தெரிஞ்சிகிட்டு வந்துடுங்க’
‘அவுரு இந்த தெருவுல இது மாதிரி வேல செஞ்சி இருக்குறாரா?’
;ஓ ரைட்டா இதே தெருவுல மூணு பேரு வூட்டுல இந்த வேல பாத்து இருக்குறாரு.வூட்டுக்கு பதினைஞ்சி ரூவா வாங்குனாருன்னு கேள்வி’

‘என்னம்மா சொல்றீங்க ஒரு ஆயிர ரூவா வாடகைக்கு வந்துட்டு இப்ப பதினைஞ்சி ஆயிரம் செலவு சொல்றீங்க’
‘வொங்க வூடு நீங்க செய்யுறீங்க.தண்ணி முக்கியமில்ல ஒரு குடுத்தனகார பொம்பள தண்ணி இல்லாம என்ன செய்வா”.

‘காசி குடுக்குணுமுல்ல’

‘குடுக்குறதுதான் அப்புறம் என்ன செய்யுவே’ அதட்டலாய்ச்சொன்னாள். .
அவன் நேராகப்புறப்பட்டு அந்த சிமென்ட் காங்கிரீட் செய்யும் கடைக்குச்சென்றான்.தொட்டிகள் சின்னதும் பெரியதுமாக அங்கங்கே நின்று கொண்டு இருந்தன.பாத் ரூமுக்குள் வைக்கப்படும் ஜன்னல் ஜாலிகள் அடுக்கப்பட்டுக்கிக்கிடந்தன.என்றோ செய்த அண்ணா சிலையொன்று கேட்பாரற்றுக்கிடந்தது.
‘சாருக்கு என்ன வேணும்’

அறுபது தாண்டிய ஒருவர் கைலி கட்டிக்கொண்டு மர நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
‘நானு சமுத்திர குப்பத்திலிருந்து வர்ரன் என் வீடு இங்க திருவள்ளுவர் நகர் மூணாவது தெருவுல இருக்கு. வீட்டுல இருக்குற முனிசிபாலிடி குழாய்ல வர்ர தண்ணி வீட்டுக்குள்ள ஏறமாட்டேங்குது. நீங்க அந்த வேலயா காண்ட்றாக்டா செய்யுறதா சொன்னாங்க அதான் வந்தன்’

‘சொல்லுங்க உங்க தெருவுல மூணு வூட்டுல செஞ்சி குடுத்துருக்கன். நீங்க பாருங்க. நம்மகிட்டவேல சுத்தமா இருக்கும்.வூட்டுக்கு பதினஞ்சி ஆயிரம் வாங்க்றன்.சாரு நீங்க எங்க வேல செய்யுறீீங்க’
‘நானு சமுத்திரகுப்பத்துல இருக்கன்.கணக்கு அதிகாரியா வேல பாக்குறன்’
‘எதுல’
‘டெலிபோன்ல’
‘கெடக்கு வுடுங்க. நம்ம காரியத்த பாக்குலாம்.போலிசோ இல்ல தாலுக்கா ஆபிசோன்னு பாத்தன்.’
‘ அட்வான்சா அய்யாயிரம் தர்ரேன் வச்சிகினு வேலய ஆரம்பிங்க.பாக்கி பத்தும் உங்களுக்கு கரெக்டா வந்துபுடும்’
‘ உங்க வூடு எங்கன்னு சாரு சொன்னிங்க’

திருவள்ளுவர் நகர் மூணாவது தெருவுன்னு சொன்னேனே. வூட்டு நெம்பரு 9. போஸ்டாபீசு இருக்குற தெருவு’
‘ஆமாம் அந்த வூட்டுல இப்பதான் வீராணம் ஏரி மீனுவ விக்குற ஒரு ஆசாமி குடிவந்தாரு’
‘அப்படியா சொல்றீங்க. வீட்டு வாசல்ல கூட ஒரு பெரியவரு படுத்துகிணு இருந்தாரு’
‘ஆம் அதே வூடுதான். மீனு காரரு இந்நேரம் வீராணம்.ஏரிக்கரைக்கு போயி இருப்பாரு.சரக்கு புடிச்சாரணுமே.ஆமாம் சாரு. அந்த வூட்டு பொன்ண ஒரு பையன் காதலிச்சான் அவன் பெரிய சாதிக்காரன்னு கேழ்வி.. பையன் வூட்டுல கல்யாணத்துக்கு ஒத்துகுல.ஆனா ஆசைப்பட்ட பொண்ண அவன் வுடுலயே. கட்டிகினான். நல்ல பையன்.பட்னமோ பம்பாயோ பூட்டான்’
‘யாரு அந்த பையன் சாரு’

‘அந்த வூட்டுக்கு பின்னாடி வூட்டுக்காரன் சாரு அவனும் அவன் தகப்பனுக்கு ஒரே பையன்.’
‘அது கெடக்கு வுடுங்க நமக்கு எதுக்கு ஊரு கதை. என் வூட்டுல கொழாயில தண்ணி சுகுறா வர்ராமாதிரி உங்க வேல இருக்குணும். நானு கெளம்புறேன் என்ன’
அவன் தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். போஸ்டாபீஸ் தெருவில் அவன் வீட்டுக்கு நேராக பெரிய மீன் கூடை கட்டிய சைக்கிள் நின்றது. வீட்டிலிருந்து ஒரு நடுத்தர வயது ஆசாமி தெருவுக்கு வந்தார்.
‘வாங்க சாரு நீங்க வந்தீங்கன்னு என் வூட்டுக்காரி சொன்னாங்க எனக்கு ரொம்ப. சந்தோஷோம்’
‘ நீங்க தான் குடியிருக்குறதா’ அவனிடம் கேட்டு முடித்தான்..
துளசி மாடமும் பாரிஜாத ச்செடியும் தோட்டத்தில் வைத்து விட்டுப்போனது காணவில்லை.மனம் சற்று அவனுக்குக் கனத்துப்போனது.

‘ மொட்டை மாடியில் ஏறிப்பார்த்தான். எப்போதும் அது அவனுக்கு பழக்கம்தான். உப்பில் தோய்ந்த மீன்கள் மொட்டைமாடி தரைமுழுவதும் விரவி க்காய்ந்துகொன்டிருந்தன. அவனுக்கு வயிறு குமட்டிக்கொண்டு வந்தது. மாடிப்படியிலேயே நின்று பார்த்துவிட்டு கீழ் இறங்கினான்.
‘சும்மா சொல்லக்கூடதுங்க வுங்க வூடு நல்ல ராசியான வூடுதான். எம் பொண்ணுக்கு இந்த வூட்டுக்கு வந்த ஒரு வாரத்துலயே கல்யாணம் முடிஞ்சி போச்சி. மாப்பிளதம்பி வூடும் தே இருக்குதே பின் வூீடு. பையனும் நல்ல பையன் உங்களுக்கு தெரிஞ்சிம் இருக்கும்.’ மீன் கூடையை இறுக்கி கட்டிக்கொண்டே அவனிடம் சொல்லிக்கொண்டார்.

‘கெளம்பறேன் நேரம் ஆவுது’ என்றான் அவன்.
‘முனிசிபாலிடி தண்ணி வூட்டு க்குள்ள வர்ரதுக்கு ஏற்பாடு பண்ணி அட்வான்சும் நீங்க சொன்ன அதே ஆளுகிட்ட கொடுத்து இருக்கன். சாய்ந்திரமா வேலை ஆரம்பிக்க ஆளுங்க வரும்’
‘அதாங்க ரைட்டு. போனமா வேல முடிஞ்சிதான்னு இருக்குணும். உங்களை எனக்கு ரெம்ப ரெம்ப புடிச்சிருக்குது சாரு’ மீன்காரரின் மனைவி சொல்லி நிறுத்தினாள்.யாரும் அவனைப்புகழ்ந்துவிட்டால் அப்புறம் கொஞ்சம் அழகு கூடித்தான் தெரிகிறார்கள்.

வீட்டு வாசலில் இருந்த பெரியவர் ‘புதுசா வந்த சரக்குல வீராணம் ஏரி வாளைவ இருந்தா குடுத்தனுப்புலாம். சமுத்திரகுப்பத்துலயும் மீனுவ இருக்குதுன்னு சொன்னாலும் ஏரி மீனுவ எண்ணைக்கும் ராச வம்ஷம்’ என்றார்.
யாருக்குமே ஏனோ இது காதில் விழவில்லை..
‘ வீட்டுக்கு குடி இருக்க வர்ரவங்க சைவமான்னு கேட்டு அத மொதல்ல தெரிஞ்சிகணும் அப்புறமா அந்த அடவான்சை வாங்கணும்னு’ அவன் மனைவி என்றோ சொன்னது கொஞ்சம் நினைவுக்கு வந்தது. …

நன்றி திண்ணை 

  • தொடங்கியவர்

காலணி அலமாரி
-------------------
யூசுப் ராவுத்தர் ரஜித்
-------------------
அது என்ன காலணி அலமாரி? தமிழிலேயே சொல்லிவிடுகிறேன் ‘ஷூ ரேக்’. வீட்டில் கட்டில், சாப்பாட்டு மேசை, சோபா என்பதுபோல் காலணி அலமாரி ஒரு முக்கியப் பொருளாகிவிட்டது. சிங்கப்பூரில் 2015ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரப்படி ஒரு நபருக்கு 5 காலணிகள். ஒவ்வொருவரும் ஓர் ஆண்டுக்கு தொலைக்கும் காலணிகள் குறைந்தது 2. இந்தப் புள்ளிவிபரங்கள் எந்த இணையதளத்தில் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. உங்களிடம் இருப்பது எத்தனை காலணிகள்? இந்த ஆண்டு நீங்கள் தொலைத்த காலணிகள் எத்தனை? உங்கள் வீட்டில் மொத்தம் எத்தனை காலணிகள்? ஒன்றும் அவசரமில்லை. நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். யோசிக்கும்போதே இந்தப் புள்ளிவிபரம் உண்மைதான் என்பது உங்களுக்குப் புரியும். 100வெள்ளிக் காலணி கூட அன்றாடப் பொருளாகிவிட்டது. அதை வெளியே எப்படி வைப்பது?

7 ஆண்டுகளுக்கு முன் ஒரு மரச்சாமான்களுக்கான பொருட்காட்சியில் ஒரு காலணி அலமாரி வாங்கினேன். 6 அடிக் கட்டிலைக் கூட நகர்த்திவிடலாம். இந்தக் காலணி அலமாரியை தனியாக ஒருவர் நகர்த்திவிடமுடியாது. அடிப்பக்கம் அப்படியே பச்சென்று 5 அடிக்கு இரண்டடி அளவில் தரையோடு தரையாக ஒட்டிக் கிடக்கிறது. மாதம் ஒரு முறை இதை நகர்த்தி ஈரத்தூரிகையால் சுத்தம் செய்வது என் வாடிக்கை. ஒருவர் அதை ஒருக்களித்துப் பிடித்துக் கொள்ள வேண்டும். அம்மாடியோவ்! எங்கிருநதுதான் வந்ததோ இத்னை மூக்குப்பொடித் தூசும் பஞ்சுத்தூசும். இதை சுத்தம் செய்யுமுன் என் மகனை வெளியே போகச் சொல்லவேண்டும். அவனுக்கு தூசு ஒவ்வாமை. தும்ம ஆரம்பித்தால் சர்வசாதாரணமாக செஞ்சுரி போட்டுவிடுவான்.
 
நானும் மூக்கில் ஒரு துணியைக் கட்டிக்கொள்வேன். பிறகு எதிர்ப்பக்கத்தை ஒருக்களித்து விட்டுப்போன மூக்குப் பொடியையும் அகற்ற வேண்டும். ஒரு வழியாக சுத்தம் செய்துவிட்டால் உங்கள் கணக்கில் யாரோ 1000 வெள்ளியை மாற்றிவிட்டதுபோல ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அந்த மகிழ்ச்சியிலேயே அந்த நாள் இனிக்கும். பணிஓய்வு என்பது மனிதர்களுக்கு மட்டும்தானா? எங்களுக்கில்லையா? என்று அந்த அலமாரி கேட்பதுபோல் இருக்கிறது. அதிலுள்ள இழுவறைகள் சிக்குகிறது. சிலசமயம் இழுக்கவே வராது. அதில்தான் 35 காலுரைகளை வைக்கவேண்டும். கதவுகளை நிரந்தரமாக மூடவே முடியாது. திறந்துதான் கிடக்கும். அதை சிரமப்பட்டு மூடினாலும் இழுவறைகளை சுத்தமாக இழுக்கவே முடியாது. உள்ளே உள்ள தட்டுக்கள் அலைகள் போலாகி காலணி வைக்கும்போதெல்லாம் அதை ஊஞ்சலாட்டிவிட்டுத்தான் ஓய்கிறது. சரி. அந்த அலமாரிக்கு ஓய்வு கொடுத்துத்தான் ஆகவேண்டும். வெளியே போட்டுவிடுவோம். யாராவது எடுத்துக் கொள்வார்கள். நம் வீட்டில் ஏழாண்டுகளாக ஒட்டி உறவாடிய ஒரு பொருளை அனாதையாக வெளியே தூக்கிப் போடுவதில் உள்ள வலி கொடுமையானது. ஏழாண்டுகளாக வீட்டில் இருந்து பட்டுப்போய்விட்ட ஒரு கருவேப்பிலைத் தொட்டியை மின்தூக்கியின் கீழ்தளத்தில் வைத்துவிட்டு அந்த நாள் முழுதும் யாருக்குமே தெரியாமல் அழுதிருக்கிறேன். இந்த வலிகளெல்லாம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத தாகிவிட்டது.
‘பாக்கியா ஃபர்னிச்சர்’ என்று ஒரு நிறுவனம். புதிய ஒரு அலமாரியை வாங்க அங்கு சென்றேன். நான்காம் மாடியில் படுக்கைப் பிரிவுக்கு அருகாமையில் என்றார்கள். யானைத்தந்த நிறத்தில் ஒரு அலமாரி இரண்டு கால்களில் நிற்கிறது. முதுகுப் பகுதியை சுவற்றோடு சேர்த்து ‘போல்ட்’ போட வேண்டுமாம். மூன்று அறைகள். திறந்தால் 120 டிகிரி சுழன்று ‘எனக்குள் எதையாவது வை’ என்று கெஞ்சுகிறது. பிறகு மூடிவிட்டால் பொத்திக்கொண்டு சிரிக்கிறது. என்ன அருமையான தொழில்நுட்ப வளர்ச்சி. விலை 300 வெள்ளியாம். சரி. 

வாங்கிவிடவேண்டியதுதான். எங்கு தேடியும் விற்பனையாளர்களைக் காணமுடியவில்லை. வெகு நேரத்துக்குப் பிறகு ஒரு சீருடை விற்பனையாளர் கண்ணில் பட்டார். இந்தக் காலணி அலமாரி வேண்டும். பில் தர முடியுமா? என்றேன். ‘அந்த அலமாரியின் மேற்பகுதியில் தகவல் பதிவுகள் இருக்கும். அதை அப்படியே புகைப்படம் எடுத்து வாருங்கள். நான் அங்கே வரமுடியாது.’ என்றார். மீண்டும் வந்து புகைப்படம் எடுத்துச் சென்றேன். பதிவுகளை கணினியில் தட்டினார். ஏ4 அளவில் ஒரு பட்டியல் பொதக்கென்று விழுந்தது. எடுத்துக்கொண்டு முதல்மாடியில் இருக்கும் காசாளரிடம் சென்றேன். காசைச் செலுத்திவிட்டு வீட்டுக்கு அனுப்பி பொருத்தித் தரும் பிரிவுக்குச் சென்றேன். தகவல்களை தட்டினார். ‘109 வெள்ளி ஆகும். அதைச் செலுத்துங்கள். இன்று தேதி 11. 21ஆம் தேதி மாலை 2 மணியிலிருந்து 6 மணிக்குள் வந்து பொருத்தித் தருவார்கள். வருவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன் எங்கள் ஆட்கள் உங்களுக்கு தொலைபேசுவார்கள்.’ என்றார். ஏழாண்டுகள் பொறுத்தாகிவிட்டது. இன்னும் 10 நாட்கள் தானே. அந்த 21ஆம் தேதி காலை எனக்கு பல்மருத்துவரோடு சந்திப்பு இருக்கிறது. பல்லில் ஆணி அடிப்பது போன்ற வலி ஒரு மாதமாக. ஆனாலும் பரவாயில்லை. இவர் மாலையில்தானே வருகிறார். அதற்குள் பல்லைப் பிடுங்கிவிடலாம்.. ‘சரி’ என்றேன்.

21ஆம் தேதி காலை 10 மணி. பல் மருத்துவமனை. வரிசை எண் எடுத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேன். தொலைபேசி அழைத்தது. எடுத்தேன். பாக்யாவிலிருந்து அழைக்கிறார்கள். ‘காலை 11 மணிக்கு எங்கள் ஆட்கள் வருகிறார்கள். வீட்டில்தானே இருக்கிறீர்கள்?’ என்றார். என்ன செய்வது? நான்தான் போகவேண்டும். அவரிடமே திரும்பக் கேட்டேன். ‘மாலை என்றுதானே சொன்னீர்கள். நான் வெளியே இருக்கிறேன். வீட்டில் யாரும் இல்லையே’ என்றேன். ‘ஓ. அப்படியானால் அடுத்த வாரம்தான் வருவார்கள்.’ என்றார். இன்னும் ஒரு வாரமா. பல் மருத்துவரைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ‘நான் வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். வரச் சொல்லுங்கள்.’ என்றேன்.

நான் வீடுவந்து அடுத்த 20 நிமிடங்களில் அவர்கள் வந்துவிட்டார்கள். சப்பையான செவ்வக அட்டைப் பெட்டிகள் சில மட்டும் இருந்தன. சரசரவென்று கிழித்தார்கள். பிரித்தார்கள். கொத்து மறை ஆணிகளும் சில மரத்துண்டுகளும் வந்து விழுந்தன. பின் பலகையைப் பொருத்த சுவற்றில் ‘போல்ட்’ துளை போடப்பட்டது. 20 நிமிடத்தில் அந்த யானைத்தந்த அலமாரி சுவற்றில் நச்சென்று பொருத்தப்பட்டு ‘என்ன சேதி? சௌக்கியமா?’ என்றது. ‘போய்வருகிறோம் பாஸ்’ என்று சொல்லிக்கொண்டு அந்த ஆட்கள் வெளியேறினார்கள். அந்த ‘பாஸ்’ என்ற வார்த்தை என் தலையில் பனிக்கட்டிகளை இறக்கியது. அந்த அலமாரியின் மேல் அறையைத் திறந்தேன். 120 டிகிரி சுழன்று திறந்து ‘ம். சீக்கிரம் உன் காலணியை வை’ என்றது. ஒரு காலணியை வைத்தேன். மூடினேன். பிறகு மீண்டும் திறந்தேன். ஒரு மறை ஆணி கழன்று உள்ளேயே விழுந்து இடமும் வலமுமாய் சுற்றியது. ‘என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை’. அந்த ஆணியை எடுத்து அந்தத் துளையில் பொருத்திப் பார்த்தேன். அது சாவகாசமாய் உள்ளே போய் உட்கார்ந்துகொண்டது. வெளியே இழுத்தேன் வந்துவிட்டது. திருப்புளியே தேவையில்லாமல் அந்தத் துளை நிரந்தரத் துவாரமாய் ஆணிககு பிடிமானமே இல்லாமல் போய்விட்டது. பாக்யாவை அழைத்தேன். இந்த விபரத்தை எப்படிச் சொல்வது? நான் இப்படிச் சொன்னேன். ‘உங்கள் ஆட்கள் சரியாகப் பொருத்தவில்லை. சில ஆணிகள் கழன்று விழுந்துவிட்டன’ என்று . ‘சரி. இன்றைக்கு தேதி 21. 23ஆம் தேதி மாலை 4 மணியிலிருந்து 7 மணிக்குள் வருவார்கள்’ என்றார். அன்று 7 மணிக்கு ஒரு கூட்டம் நான் அவசியம் போக வேண்டும். 7 மணிக்குள் அவர்கள் முடித்துவிட்டாலும் நாம் கூட்டத்துக்குப் போய்விடலாம். ‘சரி’ என்றேன்.

23ஆம் தேதி. 7 மணி ஆகியும் ஒரு அழைப்பும் இல்லை. தொலைபேசி அழைக்கவே இல்லை. தொலைபேசியை திறந்து திறந்து பைத்தியம் போல் பார்க்கிறேன். அவர்கள் வருவதுபோல் தெரியவில்லை. நான் கூட்டத்துக்கு கிளம்பினேன். பாதி வழியில் அழைப்பு. ‘நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம். இன்னும் 10 நிமிடத்தில் அங்கு இருப்போம்.’ என்றார்கள். உடனே வீட்டுக்குத் திரும்பினேன். கூட்டத்துக்கு போகாவிட்டாலும் பரவாயில்லை. தலைவரிடம் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். 10 நிமிடத்தில் வந்துவிட்டார்கள். அந்த ஆணியைப் பொருத்த மின்னியக்க திருப்புளியை எடுத்தார். ‘அது தேவையில்லை. அது தானாகவே உள்ளே போய் வெளியே வருகிறது’ என்றேன். ‘அட! ஆமாம். இந்த உருப்படி வீணாகிவிட்டது. நான் வீட்டுக்கு அனுப்பும் பிரிவிலும் வாடிக்கையாளர் பிரிவிலும் தெரிவித்து விடுகிறேன். இன்னும் சில நாளில் இதேபோல் வெறொரு காலணி அலமாரியுடன் வருகிறோம்.’ என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்.

அன்று இரவு முழுவதும் காலணி அலமாரி கனவுதான். பெரிய அலமாரிகள் நிற்கிறது. ஆடுகிறது. விழுந்து உடைகிறது. மீண்டும் எழுகிறது. ஒரு காலணி வைத்தவுடன் மீண்டும் விழுகிறது. சே! ஒரு செருப்பு அலமாரி என்ன பாடுபடுத்துகிறது. ஒரு வழியாக விடிந்தது. அத்தனை பட்டியல்களையும் அள்ளிக்கொண்டு பாக்யாவுக்கு ஓடினேன். தகவலைச் சொன்னேன். ‘எனக்கு இந்த அலமாரியே வேண்டாம். 100 கிராம் எடையுள்ள காலணிகளுக்குத்தான் இது சரியாக வரும். என் மகனின் காலணிகள் ஒவ்வொன்றும் 1 கிலோ’ என்றேன். ‘சரி. அமருங்கள். பெரிய அதிகாரியை கேட்டுவிட்டு வருகிறேன். பொருளை மாற்ற அவர்தான் அனுமதிக்க வேண்டும்’ என்றார். அமர்ந்தேன். கனவுகளால் கிழிக்கப்பட்டு தூக்கம் இழந்ததால் ஒரு குட்டித்தூக்கம் போட்டேன்.

 வந்து எழுப்பினார். ‘அதிகாரி ஒப்புக் கொண்டுவிட்டார். நீங்கள் வெறொரு பொருளைப் பாருங்கள். இந்த அட்டையைக் காண்பியுங்கள். நீங்கள் செலுத்திய வெள்ளியைக் கழித்துக் கொள்வார்கள்.’ என்றார். அதே நான்காம் மாடி. அநதக் கட்டில் பிரிவுக்கு விரைந்தேன். அந்த யானைத்தந்த அலமாரி அதே இடத்தில் இருந்தது. பார்க்கும்போதே குமட்டியது. மூன்று அறைகள் நேராக இழுத்து மூடுவதுபோல் ஒரு சாதாரண அலமாரி இருந்தது. போல்ட் சமாச்சாரமெல்லாம் தேவையில்லை. ஒவவொரு அறையும் 3 அடிக்கு 2 அடி என்று விசாலமாக இருந்தது. அது துணிமணிகள் வைக்கும் அலமாரியாம். காலணி வைத்தாலென்ன? காலணி அலமாரி என்று இருப்பது எல்லாமே சுழன்று வந்து உயிரை வாங்குகிறது. அதற்கு இது தேவலாமே. சரி. வாங்கினேன். அனுப்பும் பிரிவுக்கு வந்தேன். ‘யோசித்துக் கொள்ளுங்கள். வெறு மாற்றமில்லையே?’ என்றார். ‘மாற்றமில்லை. இதைப் பொருத்துவது சிரமமா? இல்லையென்றால் நானே எடுத்துக்கொண்டு போய்விடுகிறேனே.’ என்றேன். ‘தாராளமாக.ஒரு தொடக்கப்பள்ளி மாணவன் கூட பொருத்திவிடுவான்’ என்றார். இனிமேல் நாம் பொருத்திக் கேட்கக் கூடாது என்பதற்காகவே அப்படிச் சொன்னாரோ? ஆனாலும் அன்று பல் மருத்துவரைப் பார்க்கமுடியாமல் போனது இன்னும் வலித்துக்கொண்டே இருக்கிறது. அவர்கள் அழைப்புக்காக காத்துக்கொண்டிருக்க நமக்கென்ன தலைவிதியா? அவரிடம் பொருத்தித் தரக் கேட்பதும் அவமானம்தான்.

எடுத்துக்கொண்டு வீடு வந்தேன். என் ஆயுதப் பெட்டியை எடுத்து விரித்து வைத்தேன். அட்டைப் பெட்டிகளை மிக எச்சரிக்கையுடன் பிரித்தேன். ஏகப்பட்ட பலகைகள் இரும்புச் சட்டங்கள், மறை ஆணிகள், மரத்துண்டுகள். ‘அட சண்டாளா! இதையா தொடக்கப்பள்ளி மாணவன் பொருத்தமுடியும்’ என்றான். அதில் ஒரு விளக்கப் புத்தகமும் இருந்தது. ஏதோ தேர்வு எழுதுவதுபோல வரிவிடாமல் படித்தேன். ஒவ்வொரு மறை ஆணியாய் பார்த்துப் பார்த்துப் பொருத்தினேன். மின்திருப்புளி இல்லை. கைத்திருப்புளிதான். நல்ல வேளை. போல்ட் இல்லை.

எல்லாம் ஒருவழியாக முடிந்த பின்னும் 10 மறை ஆணிகள், சில மரத்துண்டுகள் கிடக்கின்றன். இது என்ன உபரியா? அலமாரியை லேசாக அசைத்துப் பார்த்தேன். கால்களை மட்டும் ஊன்றிக்கொண்டு பக்கவாட்டிலும் முன்பின்னும் ஆடுகிறது. ‘கொஞ்சம் கூடத் தள்ளினாலும் விழுந்துவிடுவேன்’ என்று எச்சரித்தது. பாக்யாவை அழைத்தேன். ‘பொருளை நாங்கள் அனுப்பினால்தான் ஆளனுப்ப முடியும். நீஙகளே எடுத்துச் சென்றதால் உங்களுக்குத் தெரிந்த தச்சரை வைத்து சரிசெய்து கொள்ளுங்கள்’ என்றார். எனக்கு புரிந்துவிட்டது. இது திட்டமிட்ட சதி. இந்தப் பிரச்சினை எப்படித்தான் முடியப்போகிறதோ?

எனக்குத் தெரிந்த ஒரு தச்சர் இருக்கிறார். அவரிடம் சேதியைச் சொன்னேன். ‘அவர்களிடமே சொன்னால் அவர்களே ஆளனுப்புவார்களே’ என்று யாருக்குமே தெரியாத யோசனையைச் சொன்னார். நான் கொதித்தேன். ‘அவர்களை அழைக்க முடியுமென்றால் உன்னை ஏண்டா அழைக்கிறேன்’ என்ற வார்த்தைகள் உதடுவரை வந்து ஓசைப்படாமல் வெளியேறிவிட்டது. கோபித்து வார்த்தைகளை கொட்டிவிடக்கூடாது. சிரித்தபடியே அவரிடம் சொன்னேன். ‘நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும். என் வீட்டை நீங்கள் புதுப்பபித்துக் கொடுத்ததை என்னால் மறக்கவே முடியாது’ என்று பனிக்கட்டிகளை அவர் தலையில் இறக்கினேன். ‘ ஹி ஹி ஹி… எல்லாம் சரிதான். உங்கள் இடத்துக்கு வந்தால் வண்டியை நிறுத்துவது பெரும் பிரச்சினை. நான் வண்டி இல்லாமல் வேறு வேலையாக அந்தப் பக்கம் வரும்போது தெரிவிக்கிறேன். நீங்கள் வீட்டில் இருங்கள் என்றார். அந்தப் பல் மருத்துவர் ஏனோ ஞாபகத்துக்கு வந்தார். என்ன செய்வது? ‘சரி’ என்றேன். 

அவருடைய தொலைபேசி அழைப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த அலமாரியில் யாரும் கை வைக்க வேண்டாம் என்று வீட்டில் எல்லாரையும் எச்சரித்தேன். எல்லாரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். மூன்று நாட்கள் கழித்து அந்தத் தச்சர் அழைத்தார். எழுதிக்கொள்ளுங்கள் என்று முகவரியைத் தந்தார். இவர் முகவரி நமக்கெதற்கு? பிறகு சொன்னார். ‘அந்த அலமாரியை என் வீட்டுக்குக் கொண்டு வத்து விடுங்கள். எனக்கு நேரம் கிடைக்கும்போது முடித்து வைக்கிறேன். பிறகு நீங்கள் தூக்கிக்கொண்டு செல்லலாம் என்றார். இதைச் சொல்லவா இவருக்கு மூன்று நாள் தேவைப்பட்டது. எல்லாரும் பேசிவைத்துக் கொண்டே செய்வது போல இருக்கிறது. நான் ஒரு தப்பும் செய்யவில்லையே. ஒரு காலணி அலமாரி வாங்க நினைத்தது தவறா? அப்படியே மீண்டும் பிரித்து ஒரு வாகனத்தை தேடுவதா அல்லது வேறு ஒரு தச்சரைப் பார்ப்பதா?

அந்த அலமாரி இன்னும் என் வீட்டில் அப்படியேதான் இருக்கிறது. யாரும் பக்கத்தில் போய்விடாதபடி ஒரு சிவப்புக் கயிறும் கட்டிவைத்திருக்கிறேன். இப்போதெல்லாம் சந்திப்பவர்களிடம் நான் முதலில் கேட்பது ‘உங்களுக்கு தச்சர் யாரையாவது தெரியுமா?’ என்பதுதான். எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரு முடிவு உண்டு. அது எப்போது என்பதுதான் பிரச்சினையே.

நன்றி ;திண்ணை 
யூசுப் ராவுத்தர் ரஜித்

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனையும் முத்தான கதைகள்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.