ரோஸலிண்ட் ஃப்ராங்க்ளின்- போட்டோ 51
லோகமாதேவி மார்ச் 22, 2026 No Comments
ரோஸலிண்ட் தனது ஸ்கர்ட் ஜிப்பை இன்றும் முழுமையாக போட முடியாததை ஆச்சரியத்துடன் பார்த்தாள். போன மாதம் அமெரிக்கா புறப்படுகையிலும் அப்படியேதான் இருந்தது. வயிறு கொஞ்சம் பெருத்திருக்கிறதோ என்று அவளுக்குச் சந்தேகமாக இருந்தது.
அமெரிக்காவில் இருந்த 3 வாரங்களுமே அடிவயிற்றில் அவ்வப்போது வலியும் இருந்தது. ஆனால் அங்கே சிறப்பு அழைப்பாளராகப் பல பல்கலைக்கழகங்களுக்கும் ஆய்வு நிறுவனங்களுக்கு செல்ல வேண்டி இருந்ததால் வலியைப் பொருட்படுத்தக் கூட அவளுக்கு நேரமில்லை. 1956-ம் ஆண்டின் கோடைக்காலம் தொடங்கியபோது அமெரிக்கா சென்ற ரோஸலிண்ட், கோடை முடியப் போகும் போது தான் லண்டனுக்கு திரும்பி இருந்தாள்.
ரோஸலிண்ட் TMV என்னும் புகையிலை மொசைக் நோயை உருவாக்கும் வைரஸின் வடிவமைப்பைக் கண்டறியும் ஆய்வின் உச்சகட்டத்தில் இருந்தார். அதன்பொருட்டு தான் அவர் அமெரிக்காவுக்கும் அழைக்கப்பட்டிருந்தார். ரோஸலிண்ட் பணியாற்றிய லண்டன் பல்கலைக்கழக ஆய்வு நிறுவனத்தில் அவரது ஆய்வு ஏறக்குறைய இறுதியை எட்டி இருந்தது.
அப்போதுதான் உயிரியல் ஆய்வில் மிக முக்கியமானதான DNA-வின் இரட்டைச்சுழல் அமைப்பைக் கண்டறிந்திருந்த ரோஸலிண்ட் அடுத்து TMV வைரஸின் வடிவமைப்பைக் கண்டறியும் ஆய்வில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அப்போது TMV கண்டுபிடிக்கப்பட்டு அது RNA மற்றும் புரதங்களால் ஆனது என்று மட்டும் அறியப்பட்டிருந்தது. ரோஸலிண்ட் புரதமும் RNA-வும் எப்படி அமைக்கப்பட்டுள்ளன என்று, தான் நிபுணத்துவம் கொண்டிருந்த X-ray Crystallography மூலம் கண்டறிந்து துல்லியமாக அதன் வடிவமைப்பைக் காட்டும் சில படங்களையும் எடுத்திருந்தார்.
TMV-யின் நடுவில் இருந்த RNA உள்ளீடற்ற ஒரு குழாய் என்றும், அதைச் சுற்றிலும் தனித்தனியே புரதங்கள் ஒரு உறை போலச் சூழ்ந்திருக்கின்றன என்பதையும், அனைத்து TMV வைரஸ்களும் ஒரே அளவில் இருந்ததையும் ரோஸலிண்ட் கண்டறிந்தார்.
அப்போதுதான் உருவாகியிருந்த Structural Virology துறையின் மிக அடிப்படையான பல உண்மைகளை வெளிப்படுத்தும் கண்டுபிடிப்பாக ரோஸலிண்டின் அந்தத் துல்லியமான தெளிவான புகையிலை வைரஸின் வடிவமைப்பு இருந்தது. அதைக் கொண்டே பிற வைரஸ்களின் வடிவமைப்பையும் மற்ற விஞ்ஞானிகள் அறிய முயன்றார்கள். இந்தக் கண்டுபிடிப்பின் பொருட்டு அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்ட ரோஸலிண்ட் உலகளவில் இந்தத் துறையின் முன்னணி விஞ்ஞானியாகப் போற்றப்பட்டார்.
அமெரிக்காவில் ஆய்வகங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் தொடர் உரையாற்றிய ரோஸலிண்டின் எக்ஸ்-ரே கிரிஸ்டலோகிராபி படங்களின் துல்லியத்தைப் பார்த்துப் பிற அமெரிக்க விஞ்ஞானிகள் வாயடைத்துப் போனார்கள். ரோஸலிண்டிற்கு அது ஒரு சுற்றுப்பயணம் மட்டுமல்ல, அந்த பயணத்தின் மூலம் உலகளாவிய ஒரு வைரஸ் வலைத்தொடர்பை விஞ்ஞானிகளிடையே அவர் உருவாக்க நினைத்திருந்தார். அமெரிக்காவின் முக்கிய விஞ்ஞானிகளான ரோம்லே வில்லியம்ஸ் மற்றும் பேரி கமோனர் ஆகியோருடன் நல்ல தொழில்ரீதியான தொடர்பை உருவாக்கிய பின்னரே ரோஸலிண்ட் லண்டன் திரும்பினார்.
இந்த வயிற்று வலி அவரைத் தொடர்ந்து ஈடுபாட்டுடன் பணியாற்ற விடாமல் செய்தது. ஆய்வகத்திலும் சில தோழர்கள் “அமெரிக்கா போய் குண்டாயிட்டியே இத்தனை சீக்கிரமா” என கிண்டல் பண்ணக்கூட தொடங்கிவிட்டார்கள். அடிவயிற்றின் அந்த வலி ரோஸலிண்டை அவள் ஆய்விலிருந்து தொடர்ந்து தொல்லை செய்தது. என்னவானாலும் இன்று மாலை தன் சிநேகிதியும் மருத்துவருமான மேர் (Mair Livingstone) என்கிற மேரியைப் பார்க்க முடிவு செய்தாள் ரோஸலிண்ட்.
டாக்டர் மேரியின் அறையில் விஷயத்தைச் சொன்ன ரோஸலிண்டைக் கிண்டலாகப் மேலும் கீழுமாகப் பார்த்த மேரி, “என்ன இது வயிறு மேடிட்டு இருக்கிறது? கர்ப்பமாக இருக்கிறாய் போலிருக்கிறதே?” என்றார். ரோஸலிண்ட் புன்னகைத்தபடியே, “கர்ப்பமாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் ஆனால் இல்லை, நீ என்னவென்று சரியாகப் பார்” என்றார். திரைக்குப் பின்னே ரோஸலிண்டை அழைத்துச்சென்று சோதித்த மேரியின் முகம் இறுகிக் கருத்துப்போனது. ரோஸலிண்டின் இரு சினைப்பைகளிலும் புற்றுநோய் உண்டாகி முற்றிப் பிற பாகங்களுக்கும் பரவி இருந்தது. ரோஸலிண்ட் அந்தச் செய்தியைத் திடமாகக் கேட்டுக்கொண்டார்.
ரோஸலிண்ட் டி.என்.ஏ-வின் கட்டமைப்பைக் கண்டறிய ஆயிரக்கணக்கான மணி நேரம் எக்ஸ்-ரே கதிர்வீச்சுகளுடன் பாதுகாப்பு உபகரணங்கள் அவ்வளவாக இல்லாத காலத்தில் மிக அதிகமாகப் பணியாற்றினார். நீண்ட கால கதிர்வீச்சு பாதிப்பு அவருக்கு புற்றுநோயை உருவாக்கி இருக்கலாம் என்றும், அவரது குடும்பத்தில் சிலருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததால், பரம்பரையாகத் தொடரும் மரபணு மாற்றங்களாலும் புற்று நோய் உருவாகி இருக்கலாம் என்று கருதப்பட்டது.
நோய் கண்டறியப்பட்டது செப்டம்பர் 1956-ல். அதன் பிறகான 18 மாதங்களுமே ரோஸலிண்டின் வாழ்க்கையில் பெரும் போராட்டக் காலமாகவே இருந்தது. அந்த மாதமே ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்து சினைப்பைகள் அகற்றப்பட்டன. அறுவை சிகிச்சை முடிந்ததுமே லண்டனில் இருந்த ஆய்வகத்துக்குச் சென்று தனது ஆய்வைத் தொடர்ந்தார் ரோஸலிண்ட். பின்னர் மீண்டும் பல சின்னச் சின்ன அறுவை சிகிச்சைகளும் அப்போதுதான் அறிமுகமாகி இருந்த சோதனை கீமோ தெரப்பிகளும் கதிர்வீச்சு சிகிச்சைகளும் அவருக்குத் தொடர்ந்து அளிக்கப்பட்டன. என்ன உடல்நிலையாக இருந்தாலும் ஆய்வகத்துக்குச் சென்று கொண்டே இருந்தார் ரோஸலிண்ட். ஒரு சில சமயங்களில் நண்பர்கள் அவரை தூக்கிக்கொண்டு போய்க்கூட ஆய்வகத்தில் சேர்த்தார்கள். அரிதாக நடமாட முடியாமல் போகும்போது மட்டும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வீட்டில் நேரம் செலவழித்தார். அப்போதும் அவரைச் சுற்றிலும் ஆய்வுக் குறிப்புகளும் வைரஸின் புகைப்படங்களுமே இருந்தன.
1957-ம் ஆண்டு ரோஸலிண்ட் உடல்நிலை மிக மோசமானது. ஆனால் அந்த ஆண்டுதான் அவர் மிக முக்கியமான ஆய்வுக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். அமெரிக்காவிலிருந்து அப்போது நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த தனது லண்டன் ஆய்வகத்திற்கு 10,000 டாலர் நிதித்தொகையும் வாங்கியிருந்தார். ரோஸலிண்டுடன் ஆரோன் க்ளக் ( Aaron Klug) மற்றும் ஜான் ஃபின்ச் (John Finch) ஆகியோரும் வைரஸ் வடிவமைப்பு ஆய்வில் ஈடுபட்டிருந்தார்கள். புகையிலை வைரஸுடன், போலியோ வைரஸ் ஆய்வையும் கையிலெடுத்துக்கொண்ட ரோஸலிண்ட், 1958-ல் ஐரோப்பாவில் Brussels-ல் நிகழவிருந்த உலகளாவிய அறிவியல் கண்காட்சியில் புகையிலை வைரஸின் ஐந்து அடி உயர மாதிரி உருவத்தை உருவாக்கி, பொதுமக்களுக்குக் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமி என்று மட்டும் அறிவியலாளர்களால் சொல்லப்பட்ட வைரஸின் அழகிய வடிவமைப்பைக் காட்ட மிகவும் முயன்று கொண்டிருந்தார்.
ஆனால் 1958-ல் ஆரம்பத்தில் அவரது நோய் மிகத் தீவிரமானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோஸலிண்ட் படுக்கையில் இருந்தபடியே ஆய்வுக்கான நிதி விண்ணப்பங்களையும் ஆய்வறிக்கைகளையும் அனுப்பிக் கொண்டிருந்தார்.
அத்தனை தீவிரமான ஈடுபாட்டுடன் பணியாற்றிய ரோஸலிண்டின் அறிவியல் சாதனைகள்தான் வரலாற்றில் வடிகட்டப்பட்டன.
1920 ஜூலை 25 அன்று லண்டன் நாட்டிங் ஹில் பகுதியில் , அரசியல் பலமும் செல்வச் செழிப்பும் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தார் ரோஸலிண்ட். தந்தை எல்லிஸ் (Ellis Franklin) ஒரு வங்கியில் பங்குதாரராகவும், ஆண்கள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் இருந்தார். மக்களுக்குச் சேவை செய்வதைத் தன் முதல் கடமையாகக் கொண்டவர் எல்லிஸ். ரோஸலிண்டின் அம்மா மூரியலும் (Muriel Waley) மிகச் செல்வாக்கான குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரும் சேவை மனப்பான்மை மிகுந்தவர். அவர்களது வீட்டில் போர் அகதிகளான இரண்டு யூதச்சிறுமிகள் ரோஸலிண்டுடனேயே வளர்ந்தார்கள்
மிகச் சிறிய குழந்தையாக இருக்கும் போதே ரோஸலிண்டடின் சிந்தனைத் திறன் மிக அதிகமாக இருப்பதை குடும்பத்தினர் கவனித்தார்கள். பொம்மைகளை வைத்து விளையாடுவது, கதைகள் கேட்பது ஆகியவற்றில் ரோஸலிண்ட் எந்த ஆர்வமும் காட்டவில்லை. புதிர்களை விடுவிப்பது மிகச் சிக்கலான கணித சூத்திரங்களை பல வடிவங்களில் எழுதி விடையைக் கொண்டுவருவது போன்றவற்றில்தான் ரோஸலிண்ட் ஆழ்ந்திருந்தாள். மேலும் கடவுள், மதம் ஆகிவற்றில் நம்பிக்கையற்றவராக இருந்தார். அவரது தாய் He என்று கடவுளைக் குறிப்பிடுகையில் எல்லாம் ’’..ஏன் she இல்லையா கடவுள்? எப்படி He என்று முடிவுக்கு வந்தாய்?…’’ என்று கேட்பாள்.
ரோஸலிண்டிற்கு 6 வயதாக இருக்கையில் அவரது அத்தை, “உனக்கு பொம்மைகள் வேண்டாம், கதைகளும் வேண்டாம், பிறகு என்னதான் வேண்டும்?” என்று கேட்டபோது, “எனக்குத் தேவை உண்மைகள்”(i need facts) என்றாள். அவர் தனது கணவரிடம் ரோஸலிண்டை ’alarmingly clever’ என்று ஒரு முறை குறிப்பிட்டார். தன்னை யாரும் ரோஸி என அழைப்பதை அனுமதிக்காமல், ரோஸலிண்ட் என்றே முழுமையாக தான் அழைக்கப்படவேண்டும் என்று கண்டிப்பாக கூறுவாள்.
நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட மரச்சாமான்கள் செய்யும் தச்சுவேலை, தையல்கலை மற்றும் கயிற்றில் மிகச் சிக்கலான முடிச்சுகள் போட்டு அவிழ்ப்பது ஆகிய கைவேலைகளையே மிகவும் விரும்பிச் செய்தாள் ரோஸலிண்ட். அவரது பள்ளிக்காலம் லண்டனின் St Paul’s Girls பள்ளியில் கழிந்தது. அங்கு மட்டும்தான் அக்காலத்தில் அறிவியலும் கணிதமும் ஆண்களின் பள்ளிக்கு இணையாகக் கற்றுக்கொடுக்கப்பட்டன. வேதியியல், இயற்பியல் மற்றும் லத்தீன மொழிப்பாடங்களில் யாரும் அருகே கூட வர முடியாத முன்னிலையில் இருந்த, 6 டிஸ்டிங்ஷன்களுடன் பள்ளிப்படிப்பை முடித்த ரோஸலிண்ட் தனது 15 வயதில் தான் ஒரு விஞ்ஞானி ஆகப்போவதாக முடிவெடுத்தாள் .ஃபிராங்க்ளின் குடும்பத்தினர் எல்லா விடுமுறைக்காலங்களிலும் ஆல்ப்ஸ் மற்றும் நார்வீஜிய மலைகளில் மலையேறுதலில் ஈடுபட்டார்கள். மலையேற்றத்தை மிகவும் விரும்பினார் ரோஸலிண்ட்.
1938-ல் ரோஸலிண்ட் கேம்பிரிட்ஜின் நியூஹாம் கல்லூரியில் முழு நிதி உதவியுடன் சிறப்புப் பாடமாக வேதியியலைக் கொண்டிருந்த இயற்கை அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்தார். இரண்டாம் உலகப்போர் சமயம் அது. அங்கிருந்து ரோஸலிண்ட் வீட்டிற்கு எழுதிய கடிதங்களில் தான் கேஸ் மாஸ்க் (Gas mask) அணிந்துகொண்டு வகுப்புகளுக்குச் செல்வதைக் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். அவரது ஆசிரியர்கள் அவளின் அதீத புத்திசாலித்தனத்தையும், கற்பித்தலில் சிறு தவறு இருந்தால் கூட அதைக் கண்டுபிடித்து வாதிட்டுச் சரி செய்பவள் என்பதையும் நினைவு கூர்கின்றனர்.
1941-ல் மிகச்சிறப்பாக ரோஸலிண்ட் பட்டப்படிப்பை முடித்தார். ஆனாலும் கேம்பிரிட்ஜ் 1948 வரை பெண்களுக்குப் பட்டம் அளிப்பதில்லை என்னும் விதியில் இயங்கிக்கொண்டிருந்ததால் ரோஸலிண்ட் பட்டம் வாங்கவில்லை. . ஆண்களுக்கு ஒரு மாபெரும் விழாவில் சான்றிதழ் அளித்த பல்கலைக்கழகம் அதே வகுப்பில் அமர்ந்து அதே காலத்தை படிப்பில் கழித்து ஆண்கள் எழுதிய அதே தேர்வை எழுதிய பெண்களுக்கு ஒரு காகிதத்தில் ’இவர்கள் இந்தப்படிப்பை முடித்தார்கள்’ என்று எழுதி முத்திரை வைத்து வீட்டுக்கு தபாலில் அனுப்புவார்கள்.
பட்டம் பெற்ற சான்றிதழ் இல்லாமலேயே அதே கேம்பிரிட்ஜில் ரோஸலிண்ட் முனைவர் பட்ட ஆய்வில் இணைந்தார். நிலக்கரி மற்றும் கார்பனின் நுண் வடிவமைப்பில் முனைவர் பட்ட ஆய்வை 1945-ல் முடித்தார்.
அவரது ஆய்வு முடிவுகள் போர்ச் சூழலில் gas mask உருவாக்குவதில் பெரும் பங்களிப்பாற்றின. முனைவர் என்னும் தகுதியுடன் ரோஸலிண்ட் 1947-ல் போர் ஓய்ந்த பின்னர் பாரிஸின் புகழ்பெற்ற “Labo” ஆய்வகத்தில் கிரிஸ்டலோகிராபியில் நிபுணரான ழாக் மெரிங்கிடம் (Jacques Mering) பணியாற்றினார். ழாக் மெரிங் ரோசலிண்டுக்கு X ray crystallography-ல் பயிற்சியளித்து பின்னாட்களில் அவர் DNA-வையும் வைரஸ்களையும் ‘பார்க்க’ உதவினார்.
ரோஸலிண்டுக்கு பாரிஸ் நாட்கள் பிடித்தமானவையாக இருந்தன. அந்த ஆய்வகத்தில் ஆண் பெண் வேறுபாடு இல்லாத சமத்துவம் நிலவியது. நீண்ட மதிய உணவு இடைவேளை, அவ்வப்போது நிகழ்ந்த மிக அறிவார்ந்த உரையாடல்கள் மற்றும் பிரெஞ்சு கலாச்சாரம் ஆகியவை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. வெகு சீக்கிரமே சரளமாகப் பிரெஞ்சு பேசக் கற்றுக்கொண்ட ரோஸலிண்ட், கூடவே சமையற்கலையிலும் நிபுணரானார். உணவுச் சுவையாளர் என்றே அறியப்படும் அளவுக்குப் பல்வேறு உணவுகளில் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.
தாவரவியலிலும் ஆர்வம் கொண்டிருந்த ரோஸலிண்ட் தாவரங்களின் வடிவங்களை ஆர்வமுடன் கவனித்து பல விதமான தாவரங்களையும் அவரது பயணங்களில் சேகரித்தார். புகைப்படக்கலையிலும் சங்கீதத்திலும் அவர் மிகுந்த ஆர்வமும் நிபுணத்துவமும் கொண்டிருந்தார்.
பாரிஸில் இருந்த ஆய்வகத்தை அவர் தனது சொந்த வீடாகவே கருதினார். மெரிங்கை ஒரு ஆசிரியராக மட்டுமல்லாமல், தனது மிக நெருங்கிய நண்பராகவும் கருதினார். அவர் மீது ரோஸலிண்டிற்கு வழிகாட்டி எனும் அபிமானத்தைக் காட்டிலும் கூடுதல் அன்பு இருந்தது. எனினும் அவரிடம் அவர் அதை வெளிக்காட்டவே இல்லை.
பாரீஸிலிருந்து வீட்டுக்கு எழுதிய பல கடிதங்களில் ’’மெரிங் ஒரு மேதை, சிக்கலான விஷயங்களை மிக எளிமையாக விளக்கும் திறன் கொண்டவர்” என்று ரோஸலிண்ட் வியந்து எழுதியுள்ளார். மெரிங்குடன் சேர்ந்து பாரிஸின் தெருக்களில் நடப்பதும், நீண்ட மதிய உணவு இடைவேளைகளில் அறிவியலைப் பற்றி விவாதிப்பதும் அவருக்குப் பிடித்தமான ஒன்றாக இருந்தது.
ஆனால் மெரிங் ஒரே நேரத்தில் பல பெண்களுடன் உறவில் இருந்தார். மெரிங்கின் இந்தத் தன்மையைக் கண்டு தான் மிகவும் வருத்தப்படுவதாக மற்றுமொரு கடிதத்தில் ரோஸலிண்ட் குறிப்பிட்டுள்ளார். அவர் மெரிங்கை நேசித்தார், ஆனால் அந்த அன்பு ஒருதலைக்காதலாகவே இருந்தது.
ரோஸலிண்ட் ஃப்ராங்க்ளின் 1951-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரான்சில் இருந்த மிகச்சிறந்த ஆய்வகத்தை விட்டுவிட்டு, தனது சொந்த நாடான இங்கிலாந்தில் அறிவியல் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பதற்காக லண்டனில் உள்ள கிங்ஸ் காலேஜில் சேர்ந்தார்.
ஆண்கள் மட்டுமே அறிவியல் உலகில் கால்பதிக்கவும், சாதிக்கவும் முடியும் என்னும் அடிப்படையில் இயங்கிய அந்த ஆய்வகச்சூழல் அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது. அங்கு அவருக்கு மெரிங் போன்ற ஒரு துணையும் கிடைக்கவில்லை, பாரிஸில் இருந்த அந்தச் சுதந்திரமும் இல்லை.
அவர் லண்டனில் இருந்து மெரிங்கிற்குப் பல கடிதங்களை எழுதினார். அதில் அறிவியலைப் பற்றிப் பேசினாலும், அவற்றுக்கிடையே பழைய நாட்களின் ஏக்கத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.
ரோஸலிண்ட் இறந்த செய்தி கேட்டபோது, மெரிங் மிகவும் உடைந்து போனார். “ரோஸலிண்ட் ஒரு சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, என் வாழ்வின் ஒரு பகுதி” என்று அவர் குறிப்பிட்டார்.
அவரது வாழ்வின் இறுதி ஆண்டுகளில், அமெரிக்க விஞ்ஞானியான டொனால்ட் காஸ்பருடன் அவருக்கு ஒரு நெருக்கமான நட்பு இருந்தது. தனது புற்றுநோய் சிகிச்சைகளின் போது காஸ்பருடன்தான் ரோஸலிண்ட் அதிக நேரத்தைச் செலவிட்டார். இவர்களுக்கிடையேயான உறவு காதலாக மாறியிருக்கலாம் ஆனால், அது முதிர்ச்சியடைவதற்குள் ரோஸலிண்டின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
அவர் கிங்ஸ் ஆய்வகத்தில் சேர்ந்தபோது, லண்டன் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அவருக்கு எக்ஸ்-ரே விளிம்பு விலகல் (X-ray diffraction) முறையைப் பயன்படுத்தி டி.என்.ஏ (DNA) இழைகளின் அமைப்பை ஆய்வு செய்யும் ஆய்வை மேற்கொள்ளச் சொல்லியது. அந்த ஆய்வகத்தின் துணை இயக்குநர் ஜான் ராண்டால், டி.என்.ஏ ஆராய்ச்சியை முழுமையாக ரோஸலிண்டிடம் ஒப்படைத்திருந்தார்.
ஆனால்,ரோஸலிண்ட் அங்கு பணியில் இணைந்த போது அங்கு ஏற்கனவே பணியாற்றி வந்த மாரிஸ் வில்கின்ஸ் (Maurice Wilkins), விடுமுறையில் சென்றிருந்தார். பாரீஸைப் போலல்லாமல் லண்டன் ஆய்வகம் ஆணகள் கோலோச்சும் இடமாக இருந்தது. பிற்பாடு மாரிஸ் பணியில் சேர்ந்த போது, புதிதாக வந்திருந்த ரோஸலிண்ட் தனக்குக் கீழ் வேலை செய்யும் ஒரு உதவியாளர் மட்டுமே என்று தவறாக நினைத்தார். ஏனெனில் அக்காலத்தில் தனித்து அப்படியான ஒரு முக்கியமான ஆய்வில் பெண்கள் யாரும் ஈடுபட்டிருக்கவில்லை.
இதுவே பிற்பாடு அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு அடிப்படையாக அமைந்தது. பாரிஸில் ரோஸலிண்டுக்குக் கிடைத்த அந்த சுதந்திரமும், மதிப்பும் லண்டனில் கிடைக்கவில்லை. ரோஸலிண்ட் அங்கு வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே (1951-1953) பணியாற்றினார். ஆனால் அந்த குறுகிய காலத்தில் அவர் செய்த ஆய்வுகள்தான் உயிரியல் வரலாற்றையே மாற்றியமைத்தன.
ரோஸலிண்ட் தனது DNA ஆய்வில் டி.என்.ஏ இழைகள் உலர்ந்த நிலையில் ஒரு மாதிரியாகவும், ஈரப்பதமான நிலையில் வேறு மாதிரியாகவும் இரண்டு வகைகளில் இருப்பதை கண்டறிந்தார் (A மற்றும் B).
‘A’ வடிவம்: உலர்ந்த நிலை (Dry form). ‘B’ வடிவம்: ஈரப்பதமான நிலை (Wet/Hydrated form). இதை அவர் கண்டறிந்த பிறகுதான், டி.என்.ஏ-வின் உண்மையான அமைப்பைத் அவரால் துல்லியமாகப் படம்பிடிக்க முடிந்தது
டி.என்.ஏ இழையை எக்ஸ்-ரே கதிர்கள் மூலம் 100 மணி நேரம் ஊடுருவச் செய்து இந்த இரு இழைகளின் அமைப்பை. 1952-ம் ஆண்டு மே மாதம், ரோஸலிண்ட் புகைப்படம் எடுத்து போட்டோ 51 என்று பெயரிட்டார்.
அந்தப் படத்தில் இருந்த ‘X’ வடிவம், டி.என்.ஏ ஒரு இரட்டைச் சுருள் (Double Helix) என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டியது. பாஸ்பேட் முதுகெலும்புகள் (Phosphate backbones) இழையின் வெளிப்புறத்தில் இருப்பதையும் அவர் அந்தப்புகைப்படத்தின் மூலம் உறுதி செய்தார்.
ரோஸலிண்ட் DNA வை வெறும் புகைப்படம் மட்டும் எடுக்கவில்லை, அந்தப் புகைப்படங்களில் உள்ள புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தை மிக நுணுக்கமாகக் கணக்கிட்டார். ஒரு சுருளின் நீளம் எவ்வளவு? இரண்டு இழைகளுக்கும் இடைப்பட்ட தூரம் என்ன? பாஸ்பேட் மூலக்கூறுகள் எங்கே அமைந்துள்ளன? இவை அனைத்தையும் அவர் கணித ரீதியாகத் தனது குறிப்பேடுகளில் பதிவு செய்திருந்தார்.
1953-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரோஸ்லிண்ட் தனது முடிவுகளை ஆய்வுக்கட்டுரையாக வெளியிடத் தயாராகிக் கொண்டிருந்தபோது ஒருநாள் விடுமுறையில் இருந்தார். அன்று அவரிடம் மாணவராக இருந்த ரேமண்ட் கோஸ்லிங், தாங்கள் எடுத்த மிகத் தெளிவான Photo 51 புகைப்படத்தை மாரிஸ் வில்கின்ஸிடம் ரோஸலிண்டின் அனுமதியின்றி காட்டினார். மாரிஸ் வில்கின்ஸ் அந்த ‘Photo 51’-ஐ அருகில் இருந்த ஆய்வகத்தில் அதே டி என் ஏ அமைப்பை கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்த ஜேம்ஸ் வாட்சனிடம் காட்டினார். அந்தப் படத்தை ஒரு வினாடி பார்த்த உடனேயே, “என் இதயம் படபடத்தது” என்று வாட்சன் பின்னாளில் தனது புத்தகத்தில் எழுதினார்.
வாட்சன் ஒரு எக்ஸ்-ரே நிபுணர் அல்ல, ஆனால் அந்தப் படத்தைப் பார்த்தவுடனேயே அதில் இருந்த ‘X’ வடிவம் டி.என்.ஏ ஒரு இரட்டைச் சுருள் என்பதை அவருக்கு உறுதிப்படுத்தியது.
ஆனால் புகைப்படம் மட்டும் போதாது, அதை மாதிரியாக (Model) மாற்ற துல்லியமான அளவீடுகள் தேவை. இங்குதான் இரண்டாவது அறிவுத்திருட்டு நடந்தது. ரோசாலிண்ட் தனது ஆய்வு முடிவுகளை ஒரு ரகசிய அறிக்கையாக மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் சமர்ப்பித்திருந்தார்.அந்த அறிக்கையில் டி.என்.ஏ இழைகளுக்கு இடையே உள்ள தூரம், அதன் வேதியியல் சமநிலை போன்ற ரோஸலிண்டின் இரண்டு ஆண்டு உழைப்பின் மொத்தத் தரவுகளும் இருந்தன. அந்த மருத்துவ கவுன்சில் கமிட்டியில் இருந்த மேக்ஸ் பெரூட்ஸ் (Max Perutz), அந்த அறிக்கையை வாட்சன் மற்றும் கிரிக் கேட்டுக்கொண்டதற்காக அவர்களிடம் ரகசியமாக வழங்கினார். இதைப் பயன்படுத்தித்தான் வாட்சன் மற்றும் கிரிக் தங்களது டி.என்.ஏ மாதிரியை உருவாக்கினர்.
டின என் ஏ வின் வடிவமைப்புக் குறித்து 1953, ஏப்ரல் 25 அன்று ‘நேச்சர்’ (Nature) இதழில் மூன்று கட்டுரைகள் அடுத்தடுத்து வெளியாகின: முதலாவதாக, வாட்சன் மற்றும் கிரிக்கின் கட்டுரை (டி.என்.ஏ மாதிரியைக் கண்டறிந்ததாக). இரண்டாவதாக, வில்கின்ஸின் கட்டுரை. மூன்றாவதாக, ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் மற்றும் கோஸ்லிங்கின் “Molecular Configuration in Sodium Thymonucleate” என்னும் கட்டுரை. இந்தக்கட்டுரையில் தான் ரோஸலிண்டின் போட்டோ 51 பிரசுரமானது.
வாட்சன் மற்றும் கிரிக் தங்கள் கட்டுரையில், ரோஸலிண்டின் தரவுகளைத் தாங்கள் பயன்படுத்தியதை வெளிப்படையாகச் சொல்லவில்லை. மாறாக, “வில்கின்ஸ் மற்றும் ரோஸலிண்ட் ஃபிராங்க்ளின் ஆகியோரின் பிரசுரிக்கப்படாத ஆய்வுமுடிவுகள் மூலம் தெரியவந்த பொதுவான அறிவுச் செய்திகளுக்கு கடன்பட்டிருக்கிறோம்” என்று மட்டும் கட்டுரையின் அடிக்குறிப்பில் எழுதினார்கள், இந்த அடிக்குறிப்பில் மிகக்கவனமாக பிரசுரிக்கப்படாத மற்றும் பொதுவான என்னும் இரு சொற்கள் பயனபடுத்தப்பட்டிருந்தன
“We are also indebted to Dr. R. E. Franklin and Dr. R. G. Gosling, for the knowledge of the general nature of the unpublished experimental results and ideas of the researchers at King’s College, London.”
இந்தக்கட்டுரைகளுக்குப்பிறகு உலகம் முழுவதும் டி என் ஏ வின் இரட்டைச்சுழல் அமைப்பை “வாட்சன் மற்றும் கிரிக் கண்டுபிடித்தனர், என்ற தவறான பிம்பம் உருவானது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, “The Double Helix” என்ற புத்தகத்தில் ரோஸலிண்டை மிகவும் ஏளனமாகச் சித்தரித்த ஜேம்ஸ் வாட்சன் அதே புத்தகத்தில் “அவருடைய தரவுகள் இல்லாமல் எங்களால் மாதிரியை உருவாக்கியிருக்க முடியாது” என்பதையும் ஒப்புக்கொண்டார். டி என் ஏ இரட்டைச்சுழல் அமைபை கண்டுபிடித்தற்காக நாட்சன் மற்றும் க்ரிக்குக்கு 1962-ல்நோபல் பரிசு வழங்கப்பட்டபோது ரோஸலிண்ட் இறந்து நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தது..
இந்த அறிவுத்திருட்டை ரோஸலிண்ட் பெரிதாக எடுதுக்கொள்லவே இல்ல டி என் ஏவின் அமைப்பை கூட்டாக கண்டுபிடித்தோம் என்றே அவர் எடுத்துக்கொண்டிருக்கக்கூடும் சொல்லப்போனால் அதன்பிற்கும் கூட க்ரிக்குடனும் அவரது மனைவி ஓடிலியுடனும் அவர் கொண்டிருந்த நட்பை தொடர்ந்தார் விடுமுறைக்கு அவர்களுடன் பயணம்கூட மேற்கொண்டார்.
நேச்சர் இதழில் கட்டுரை பிரசுரமான பின்னர் டி என் ஏ சர்ச்சையைக் குறித்து கொஞ்சமும் கவலைப்படாமல் அவர் இறப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை, 1958-ல் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸில் நடைபெறவிருந்த உலகஅறிவியல் கண்காட்சிக்காக புகையிலை மொசைக் வைரஸின் (TMV) பிரம்மாண்டமான 5 அடி உயர மாதிரியை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தார். மக்கள் வைரஸின் அமைப்பை எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதில் ரோஸலிண்ட் ஆர்வமாக இருந்தார்.
1958-ம் ஆண்டின் தொடக்கத்தில் புற்றுநோய் அவரது உடல் முழுவதும் பரவியது. ஏப்ரல் மாதம் அவர் லண்டனில் உள்ள ராயல் மார்ஸ்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையிலும் ஆராய்ச்சி: மருத்துவமனைப் படுக்கையில் இருந்தபோது கூட, அவர் தனது ஆய்வுக் கட்டுரைகளைத் திருத்திக்கொண்டும், தனது குழுவினருக்கு ஆலோசனைகளை வழங்கிக்கொண்டும் இருந்தார்.
1958, ஏப்ரல் 16 அன்று, தனது 37-வது வயதில் ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் உயிரிழந்தார். அவர் இறந்த அடுத்த நாள், அவர் உருவாக்கிய வைரஸ் மாதிரி உலகக் கண்காட்சியில் திறந்து வைக்கப்பட்டது. அவர் இறக்கும் போது, டி.என்.ஏ கண்டுபிடிப்பில் தனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தைப் பற்றி யாரிடமும் புகார் கூறவில்லை. அவரது உடல் வடமேற்கு லண்டனின் வில்லஸ்டன் யூத கல்லறைத்தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது கல்லறையில்:
IN MEMORY OF ROSALIND ELSIE FRANKLIN [Hebrew name] DEARLY LOVED ELDER DAUGHTER OF ELLIS AND MURIEL FRANKLIN 25TH JULY 1920 – 16TH APRIL 1958
SCIENTIST
HER RESEARCH AND DISCOVERIES ON VIRUSES REMAIN OF LASTING BENEFIT TO MANKIND
ரோஸலிண்ட் எல்சி ஃபிராங்க்ளின் நினைவாக!
எல்லிஸ் மற்றும் முரியல் ஃபிராங்க்ளின் அவர்களின் அன்பிற்குரிய மூத்த மகள்
25 ஜூலை 1920 – 16 ஏப்ரல் 1958
அறிவியலாளர்
வைரஸ்கள் குறித்த அவரது ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புகளும் மனிதகுலத்திற்கு நீடித்த நன்மைகளை வழங்கக்கூடியவை.
என்று பொறிக்கப்பட்டது.
கல்லறையில் அறிவியலாளர் என்று குறிப்பிடப்பட்டது, அந்தகாலத்தில் பெரும் கெளரவம் என்றாலும் வைரஸ்கள் குறித்த அவரது ஆய்வு குறிப்பிடப்பட்டிருக்கையில் ஏன் டி என் ஏ குறித்த எந்தத் தகவலும் அதில் இல்லை என்பது புதிராக இருக்கிறது.
ரோஸலிண்ட் ஃபிராங்க்ளின் டி.என்.ஏ ஆய்வுக்குப் பிறகு பிர்க்பெக் (Birkbeck) கல்லூரியில் மேற்கொண்ட வைரஸ் ஆய்வுகள், அவரை உலகளாவிய புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. அங்கு அவருக்கு உதவியாளராகவும், மிக நெருக்கமான நண்பராகவும் இருந்தவர் ஆரோன் கிளக் (Aaron Klug).
தனது இறுதி நாட்களில், ரோஸலிண்ட் போலியோ வைரஸின் கட்டமைப்பை ஆராயத் தொடங்கினார். இதுவே பிற்காலத்தில் அந்த வைரஸிற்கான தடுப்பு மருந்துகளை மேம்படுத்த உதவியது.
ஆரோன் கிளக், ரோஸலிண்டின் திறமையால் ஈர்க்கப்பட்டு அவருடன் இணைந்தவர். ரோஸலிண்டின் மறைவிற்குப் பிறகு, அவர் விட்டுச் சென்ற பணிகளை அவர் பெற்றுத்தந்த அமெரிக்க நிதியுதவியுடன் தொடர்ந்து முன்னெடுத்தார். 1982-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு ஆரோன் கிளக்கிற்கு வழங்கப்பட்டது. அப்போது அவர் தனது நோபல் பரிசு உரையில், “ரோஸலிண்ட் ஃபிராங்க்ளின் மட்டும் உயிருடன் இருந்திருந்தால், இன்று அவர் தான் இந்த இடத்தில் நின்றிருப்பார்” என்று கூறினார்.
வரலாறு சத்தமாகப் பேசுபவர்களையே கொண்டாடுகிறது; அதனால்தான் டி.என்.ஏ என்றாலே வாட்சன்-கிரிக் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால், அந்த இரட்டைச் சுருள் ஏணியின் ஒவ்வொரு படியையும் கண்டு பிடித்தவர் ரோஸலிண்ட் ஃபிராங்க்ளின். வாட்சனும் கிரிக்கும் ‘Photo 51’ அளித்த அளவீடுகளின் அடிப்படையில் ஒரு மாதிரியை (Model) மட்டும்தான் உருவாக்கினார்கள். பிற்பாடு உண்மை தெரிந்ததும் ரோஸலிண்டிற்கு “wronged heroine”, the “dark lady of DNA” the “forgotten heroine” a “feminist icon” the “Sylvia Plath ofindf molecular biology என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்டது,
எனவே, டி.என்.ஏ-வைக் கண்டறிந்தவர் ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் என்று பள்ளிப் பாடங்களிலிருந்தே ஆவணப்படுத்த வேண்டும். அப்படிச்செய்தால் மட்டுமே வருங்கால சந்ததியினருக்கு உண்மை தெரியும். இதுதான் நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி.
ரோஸலிண்ட் ஃப்ராங்க்ளின்- போட்டோ 51
By
ஏராளன் ·