'மரண ஆபத்து, வேடிக்கை தான்' : ஹாலிவுட் பெண் சண்டை கலைஞர் கிட்டி ஓ'நீல்
பட மூலாதாரம்,UPI/Bettmann Archive/Getty Images
கட்டுரை தகவல்
ஹிஸ்டரி'ஸ் டஃபஸ்ட் ஹீரோஸ்
பிபிசி ரேடியோ 4
13 டிசம்பர் 2025
அமெரிக்காவின் வெறிச்சோடிய பாலைவனத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் காது கேளாத ஓ'நீல் எனும் பெண் சண்டை கலைஞரால் உண்மையில் என்ன செய்ய முடியும் என்பதை உலகுக்கு உறுதியாக காட்டியது.
அவர் காது கேளாதவர் என்பது அவருக்கு தடையாக இருக்கும் என்ற தவறான கருத்துகளை முறியடித்ததோடு, பெண்களிடையே ரேஸிங் காரை அதிவேகமாக ஓட்டுவதில் மஞ்சள் நிற உடை அணிந்த அந்த சிறிய உருவம் துணிச்சலுடன் சவால் விடுத்து முந்தைய சாதனைகளை முறியடித்தது.
ஆனால், இது அசாத்தியமான சாகசங்களை மேற்கொள்ள தூண்டுதலாக அமைந்த ஓ'நீலின் தைரியம் மற்றும் தாங்குதிறனை விவரிக்கும் மற்றுமொரு அத்தியாயம்தான்.
ஹாலிவுட்டில் 1970களின் வாழ்நாள் சாதனையாளராக திகழ்ந்த ஓ'நீல் பல்வேறு முந்தைய சாதனைகளை முறியடித்த பெண் சண்டைப் பயிற்சி கலைஞராக இருந்தார். மேலும், இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொள்வதன் மூலம் காது கேளாத ஒருவரால் என்ன செய்ய முடியும் என்ற மற்றவர்களின் கற்பிதங்களை தன்னுடைய குழந்தை பருவத்தில் முறியடித்தார்.
காது கேட்க முடியாதவராக இருந்தபோதிலும், ஓ'நீல் சாகசங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதிலும் வேகம் மீதான தன் ஆர்வத்தை வெற்றிகரமான தொழிலாகவும் மாற்றுவதில் உறுதியானவராக இருந்தார். அக்காலகட்டத்தில், தொலைக்காட்சி திரைகளில் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தக்கூடிய ஆபத்தான சாகசங்களை நிகழ்த்திய மிகச் சில பெண்களில் இவரும் ஒருவர்.
மேலும் ஸ்டண்ட்ஸ் அன்லிமிடெட் எனும் ஹாலிவுட்டில் மிக சவாலான சண்டை காட்சிகள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்கும் குழுவில் இணைந்த முதல் பெண்ணும் இவரே. ஓ'நீலின் வாழ்க்கை குறித்து படம் ஒன்றும் வெளிவந்திருக்கிறது, மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. தவிர, அவருடைய சண்டைக் கலையை பிரதிபலிக்கும் வகையிலான பொம்மைகளும் உள்ளன.
பட மூலாதாரம்,Tom Nebbia / Getty Images
படக்குறிப்பு,தரையிலிருந்து 54 மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் ஹெலிகாப்டரிலுருந்து ஏர்பேகில் (airbag - காற்று நிரப்பப்பட்ட ஒரு மெத்தை போன்றது) குதிக்கத் தயாராகும் கிட்டி ஓ'நீல். அந்த ஏர்பேக் அந்த உயரத்திலிருந்து ஒரு தபால் தலை அளவிலேயே இருந்ததாக அவர் கூறினார்.
காது கேட்காது; ஆனாலும் தோல்வி இல்லை
டெக்சாஸில் 1946ம் ஆண்டில் கார்பஸ் க்ரிஸ்டியில் பிறந்தார் ஓ'நீல். ஐந்து மாத குழந்தையாக இருந்தபோது அவரின் உடல்நிலை மோசமானது, ஆபத்தான அளவில் உடலின் வெப்பநிலை உயர்ந்தது. அவருடைய அம்மா அவரின் உடலை சுற்றி ஐஸ் கட்டிகளை வைத்தார், அது அவருடைய உயிரை காப்பாற்றியது, ஆனால், கிட்டி வளரவளர அவர் பேச தொடங்கவே இல்லை, அப்போதுதான், அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காது கேட்கும் திறனை இழந்துவிட்டதை அவரின் பெற்றோர் அறிந்தனர்.
அவருடைய அம்மா பேட்சி ஓ'நீல் தன் மகளுக்கு சைகை மொழியை கற்பிக்க மறுத்துவிட்டார், அக்காலக்கட்டத்தில் அது சந்தேகத்துடனேயே பார்க்கப்பட்டது. ஆனால், தன் மகள் மற்றவர்களுடன் குறைவாக பார்க்கப்படக் கூடாது, அவர் பேச்சு மற்றும் தொடர்பியலை கற்க வேண்டும் என்பதில் பேட்சி ஓ'நீல் பிடிவாதமாக இருந்தார். எனவே, பேட்சி தன் மகளுக்கு வழக்கத்திற்கு மாறான உதட்டசைவுகளை கொண்டு என்ன சொல்கின்றனர் என்பதை புரிந்துகொள்ளும் லிப்-ரீடிங்கை கற்றுக்கொடுத்தார்.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,வொண்டர் வுமன் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குறிப்பிட்ட நடிகர்களுக்கு பதிலாக சண்டை காட்சிகளை நிகழ்த்துபவராக இருந்தார், ஹோட்டல் ஒன்றிலிருந்து குதிக்கும் அவரின் சண்டைக் காட்சிகளுள் ஒன்று.
"அவருடைய அம்மா கிட்டியின் கைகளை பிடித்து அவற்றை அவருடைய குரல் வளையின் மீது வைப்பார்," என்கிறார், ஓ'நீலின் மிக நெருங்கிய நண்பரும் சண்டைப் பயிற்சி கலைஞருமான கய் மைக்கேல்சன். "பின்னர், வார்த்தைகளை மிகவும் சத்தமாக, மெதுவாக திரும்பத் திரும்ப கூறுவார்."
பள்ளியில் கிட்டி கேலி செய்யப்பட்டபோது, அவர் கடுமையாக எதிர்த்து சண்டையிடுமாறு அவரின் தாயார் கூறுவார். பேட்சியின் திறன்களை அப்படியே கிட்டி செய்தார்.
"ஒவ்வொரு வார்த்தைகளின் அதிர்வுகளில் ஏற்படும் நுட்பமான மாற்றங்கள் மூலம் கிட்டி செல்லோ மற்றும் பியானோ வாசிக்கக் கற்றுக்கொள்வதில் ஈடுபட வைத்தார் அவரின் அம்மா," என்கிறார் தற்போது விளையாட்டு இணையதளமான ESPN-யின் துணை ஆசிரியரான எரிக்கா குட்மேன்-ஹூகே.
காரில் ரேடியோவில் ஒலிபரப்பாகும் பாடல்களை அதன் அதிர்வுகளை வைத்தே கிட்டி அடையாளம் காண்பார் என மைக்கேல்சன் நினைவுகூர்கிறார். தான் பீட்டிள்ஸ் இசைக்குழுவின் ரசிகர் என்றும், அக்குழுவின் இசை ஒலிபரப்பாகும்போது கிட்டி கூறியிருக்கிறார்.
பட மூலாதாரம்,CBS via Getty Images
படக்குறிப்பு,1970களில் ஒளிபரப்பான பெரும் வெற்றியடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியான வொண்டர் வுமனில் (Wonder Woman) நடித்த லிண்டா கார்ட்டரின் சண்டை காட்சிகளில் கிட்டி பதிலியாக(Dupe) நடித்தார்.
சண்டைப் பயிற்சியில் ஆரம்ப வாழ்க்கை
கிட்டிக்கு 11 வயது இருக்கும்போது விமான விபத்து ஒன்றில் அவருடைய தந்தை இறந்துவிட்டார், ஆனால் அவரின் லான்மோவரில் (lawnmower - தோட்டத்தில் உள்ள புல்லை வெட்டிவிடப் பயன்படுத்தப்படும் ஓர் வாகனம் போன்றது) குழந்தையாக வேகமாக பயணித்த சிலிர்ப்பனுபவத்தை அவர் மறக்கவேயில்லை.
வளர்ந்தபின்பு, அவர் டைவிங் போட்டிகளில் சிறந்து விளங்கினார்.
ஆனால், 1964ம் ஆண்டில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் சோதனைகளுக்கு சிறிது காலத்திற்கு முன்பு, அவரின் மணிக்கட்டு உடைந்துபோனது, மேலும் அவருக்கு முதுகெலும்பு மூளைக்காய்ச்சலும் (spinal meningitis) ஏற்பட்டது.
அதிலிருந்து குணமான பின்பு, அந்த விளையாட்டுக்கான ஆர்வத்தை தான் இழந்துவிட்டதாக அவருக்கு தோன்றியது.
தன் 16 வயதில் அம்மாவின் காரை ஓட்டத் தொடங்கிய உடனேயே, ஓ'நீல் ஸ்கைடைவிங், அதன்பின் வாட்டர்ஸ்கையிங் உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டினார், பெண்களிடையே அதுவரையிலான சாதனை வேகத்தை அவர் முறியடித்தார், மேலும் நாடுகளுக்கு இடையேயான கடினமான மற்றும் ஆபத்தான மோட்டார்பைக் போட்டிகளில் பங்கேற்றார், எல்லாவற்றிலும் ஒருபோதும் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை.
அவற்றிலிருந்த மரண ஆபத்து, வேடிக்கையின் ஒருபகுதியாக பார்க்கப்பட்டது.
ஒரு மோசமான விபத்தில் ஓ'நீல் மோட்டார் பைக்கின் கட்டுப்பாட்டை இழந்து, மோதி விபத்துக்குள்ளானார்.
இந்த விபத்தில் அவரின் ஒரு கை சக்கரத்தின் ஆரங்களில் சிக்கிக்கொண்டது, இதில் அவர் தன் ஒரு விரலை இழந்தார். இதைத் தாண்டியும் ஓ'நீல் தொடர்ந்து முன்னேறிச் செல்ல விரும்பியதாகவும், அவர் தன் கையுறையை அணிந்துகொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிள் மீது ஏறியதாகவும் அவரின் நண்பர்கள் நினைவுகூர்கின்றனர். இறுதியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு சமாதானம் செய்தனர்.
பட மூலாதாரம்,UPI/Bettmann Archive/Getty Images
படக்குறிப்பு,நெருப்பு தொடர்பான சண்டை காட்சிகள் உட்பட தான் செய்த சண்டைக் காட்சிகளில் 'எந்தவொரு பயத்தையும்' வெளிக்காட்டாதவர் ஓ'நீல் என அவரின் நண்பர்கள் கூறுகின்றனர்.
மற்றொரு சண்டைப் பயிற்சி கலைஞரான டஃபி ஹேம்பிள்டன் அந்த சமயத்தில் கிட்டியை மருத்துவமனைக்கு மட்டும் அழைத்துச் செல்லவில்லை, மாறாக கிட்டியின் வாழ்க்கையையே வேறு திசைக்குக் கொண்டு சென்றார். கிட்டியிடம் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான சண்டைக் காட்சிகள் தொடர்பாக கூறினார். அது தனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என ஓ'நீல் முடிவெடுத்தார்.
ஹேம்பிள்டன் ஓ'நீலின் முன்னாள் கணவர் ஆவார். பின்னர் ஓ'நீல் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.
தன்னுடைய விருப்ப புத்தகங்களான நார்மன் வின்சென்ட் பீலே எழுதிய தி பவர் ஆஃப் பாசிட்டிவ் திங்கிங் மற்றும் பைபிளுடன் ஆபத்துகளை எதிர்கொள்ள தயாராகி படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்தார். 1970களின் ஆரம்பத்தில் 'விக்' அணிந்த ஆண்கள் சண்டைக் காட்சிகளில் ஈடுபடுவது மிகவும் சாதாரணமானது, ஆனால் அந்த உலகம் மாற ஆரம்பித்தது.
காது கேளாமல் இருப்பது தடையாக இருக்கும் எனவும் அவர் "பெயரளவில்" மட்டுமே இத்துறையில் இருக்க முடியும் என்றும் மற்றவர்கள் கூறுவதை ஓ'நீல் கேட்க மறுத்தது அவருக்கு உதவியாக இருந்தது.
அதற்கு மாறாக, காது கேளாமல் இருப்பது அசாத்திய சக்தி என்றும் திரைப்பட துறை தன்னை சுற்றி சுழலும் போதும், தன் பணியின் மீது முற்றிலும் கவனமாக இருக்க முடியும் என்றும் ஓ'நீல் கூறினார்.
பிரபலமான சண்டைக் காட்சிகள்
வொண்டர் வுமன் தொலைக்காட்சி தொடர்களில் நடிகை லிண்டா கார்ட்டருடன் ஓ'நீல் தொடர்ந்து பணியாற்றியது மிகவும் பிரபலமாக இருந்தது, மேலும் அந்த நிகழ்ச்சிக்காக அதிகளவிலான சண்டைக் காட்சிகளை அவர் செய்தார். இதில் அவரின் தனித்துவமான உடையை அணிந்துகொண்டு ஹெலிகாப்டரிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் காட்சியும் அடங்கும்.
அதன் ஒரு இறுதிக்காட்சியில் கலிஃபோர்னியாவின் ஹோட்டல் ஒன்றிலிருந்து 120 அடியிலிருந்து குதித்தார். துல்லியமான கவனம் மற்றும் தைரியத்தைக் கோரும் இந்த சாகசம், ஓர் சாதனை வெற்றியாகும். அதுவொரு முக்கிய தருணமாக அமைந்தது. "ஆம், அவர் பெண்மையை பிரதிநிதித்துவப்படுத்தினார்... ஆனால், பெண் சக்தி என நாம் கருதுவதையும் அவர் பெண்மையுடன் இணைத்தார்," என குட்மேன்-ஹூகே கூறினார்.
பீப்பிள் (People) இதழுக்கு அச்சமயத்தில் பேட்டியளித்த ஓ'நீல், "நான் ஆண்களுடன் போட்டியிட முயற்சிக்கவில்லை. என்னால் செய்ய முடிந்ததை நான் செய்ய முயற்சிக்கிறேன்." என்றார்.
பட மூலாதாரம்,Glen Martin/The Denver Post via Getty Images
படக்குறிப்பு,முன்னாள் கணவர் ஹேம்பிள்டனுடன் கிட்டி ஓ'நீல், வங்கி அதிகாரியான ஹேம்பிள்டன் பின் சண்டைப் பயிற்சி கலைஞரானார்.
அதில் எதையும் ஓ'நீல் குறைவாகச் செய்யவில்லை.
தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக உடலில் தீயைப் பற்றவைத்துக்கொண்டு உயரத்திலிருந்து குதித்து மற்றொரு சாதனையை முறியடித்தார். மேலும், ஜெட் மூலம் இயங்கும் படகை மணிக்கு 443 கி.மீ வேகத்தில் இயக்கினார்.
"நான் அவருடன் நடக்கும்போது கூட அவர் என்னைவிட 10 அடிகள் முன்னே இருப்பார்," என மைக்கேல்சன் கூறுகிறார். அவர் தொடர்ந்து எல்லைகளை தாண்டிச் சென்று, வேகமாக செல்ல விரும்பினார் என தெரிகிறது.
பின்னர், அவர் தன்னுடைய அனைத்து லட்சியங்களையும் நிறைவேற்றுவதற்கான ஓரிடத்தைக் கண்டறிந்தார்.
எஸ்எம்ஐ மோட்டிவேட்டர் எனும் சோதனை முயற்சியிலான காரை இயக்க அவர் 1976ம் ஆண்டு அழைக்கப்பட்டார். ஹைட்ரஜன் பெராக்சைடு எஞ்சினால் இயக்கப்படும் அந்த கார், 48,000 குதிரைத்திறனை உற்பத்தி செய்யக்கூடியது. ஓ'நீல் காரை மணிக்கு 1,207 கிமீ (750 மைல்) வேகத்தில் இயக்கி, ஒலியின் வேகத்தை முறியடிக்க விரும்பினார்.
ஆனால், அதன் ஒருங்கிணைப்பாளர்களுடனான ஒப்பந்தத்தின்படி, ஓ'நீல் பெண்களின் முந்தைய சாதனை வேகமான மணிக்கு 483 கி.மீ என்ற வேகத்தை முறியடிக்க முயற்சிக்கலாம் என கூறப்பட்டது.
தனது சிறிய உடலில் மஞ்சள்நிற உடையை அணிந்துகொண்டார். அலுமினிய சக்கரங்கள் கொண்ட, ஊசி வடிவிலான காரை எடுத்துக்கொண்டு, அமெரிக்காவின் ஒரேகானில் உள்ள ஆல்வோர்ட் பாலைவனத்தில் மணிக்கு 988 கிமீ வேகத்தில் இயக்கி பெண்கள் மத்தியில் முந்தைய சாதனைகளை முறியடித்தார்.
பட மூலாதாரம்,Glen Martin/The Denver Post via Getty Images
படக்குறிப்பு,தன் வாழ்நாள் முழுவதும் எல்லைகளை கடந்து, கற்பிதங்களை பொய்யாக்கி பல சாதனைகளை புரிந்தார்.
அடுத்ததாக அவர் ஆண்களின் சாதனை வேகத்தை முறியடிக்க விரும்பினார், ஆனால் ஒரு பெண் அப்படி செய்வது ஏற்றதல்ல எனக்கூறி, சில ஸ்பான்சர்கள் அதைத் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது,
அதுகுறித்து அவர்கள் கருத்து கூற மறுத்துவிட்டனர், ஆனால் ஓ'நீலின் நெருங்கிய நண்பர்கள் கூறுகையில், வரலாறு முழுவதும் பெண்கள் எவ்வாறு பின்தங்கியிருந்தனர் என்பதைக் காட்டும் தருணமாக ஓ'நீல் அந்த தருணத்தை மனதளவில் குறித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
மைக்கேல்சன் உடனேயே ஓ'நீலுக்கு இழுவை பந்தயத்தில் மற்றொரு வாய்ப்பை வழங்கினார். அதைத்தொடர்ந்து, நீரில் வேகப்படகை இயக்குவதிலும் அவர் முந்தைய சாதனைகளை முறியடித்தார்.
"எந்த பயமும் இல்லாத ஒருவரை என் வாழ்க்கையில் இதற்கு முன்பு சந்தித்ததே இல்லை. ஓ'நீலுக்கு எந்த பயமும் இல்லை, என்றாலும் அது நல்ல விஷயம் அல்ல," என்கிறார் மைக்கேல்சன்.
எப்போதாவது மெதுவாக இயங்கியுள்ளாரா?
சாதனைகளை முறியடிப்பது, பல திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றிய பின்பு, தெற்கு டகோட்டாவில் உள்ள சிறு நகரத்தில் ஓய்வு வாழ்க்கையை கழித்தார்.
என்றாலும், வேகம் மீதான தன் காதலை அவர் இழக்கவே இல்லை எனக்கூறும் மைக்கேல்சன், பல ஆண்டுகள் கழித்தும்கூட ஒரு காரை உருவாக்குவதற்கான ஆர்வத்தை தொலைபேசி வாயிலாக அவர் வெளிப்படுத்தியதாக கூறுகிறார்.
72 வயதில் ஓ'நீல் உயிரிழந்தார். தரையில் பந்தய காரை வேகமாக இயக்குவதில் பெண்களில் இவரின் சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. "உண்மையிலேயே அவர் தான் வொண்டர் வுமன்," என்கிறார் மைக்கேல்சன்.
பிபிசி ரேடியோ 4-ல் வெளியான கிட்டி ஓ'நீல்: ஹாலிவுட்'ஸ் ரியல் வொண்டர் வுமன் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c364977lzzpo
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.