Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருப்பழகி கன்னடத்துப் பைங்கிளி - சரோஜாதேவி

Featured Replies

சரோஜா தேவி: 15. சாந்துப் பொட்டு...!

 


மலையாள சினிமாவில் மட்டும் சரோஜாதேவி நடித்தது கிடையாது.

‘அந்தக் காலத்தில் மலையாளச் சித்திரங்களில் நடிகைகள் முண்டு எனப்படும் துண்டு மட்டும் அணிந்து நடிப்பார்கள். ஏராளமான அழைப்புகள் எனக்குக் கேரளத்தில் இருந்து வந்தன. நான் அவ்வாறு வெறும் முண்டுடன் நடிக்கச் சம்மதிக்கவில்லை. ’ -சரோஜாதேவி.

தனது இயல்பு, சுவை, விருப்பம் ஆகியன பற்றி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சரோ கூறியவை-

‘கூந்தலுக்கு என்ன எண்ணை தேய்த்துக் குளிப்பீர்கள்? ’

‘விளக்கெண்ணை உபயோகிப்பேன். அது உடம்புக்கு ரொம்பக் குளிர்ச்சி! ’

‘உங்கள் அழகின் ரகசியம் என்ன? ’

‘ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்!’

‘முகத்திற்கு ஏதாவது அழகுக் குறிப்பு?’

‘அய்யோ, ஒன்றும் இல்லையே. நான் பழங்கால ஸ்டைலில் மஞ்சள் பூசித்தான் குளிப்பேன்.’

‘கூந்தலைப் பாதுகாக்க, முட்டை போல ஏதாவது? ’

‘அய்யயோ, ரொம்ப நாற்றம் எடுக்குமே’

‘உடலை எப்படி இவ்வளவு கச்சிதமாக வைத்திருக்கிறீர்கள்! ’

‘சின்ன விஷயத்துக்கெல்லாம் ஓஹோன்னு சந்தோஷப்பட்டு நான் உப்ப மாட்டேன். சின்ன துக்கத்தைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் உருகிப்போய் விடுவேன்.

சாப்பாட்டு விஷயத்திலிருந்து எல்லாவற்றிலுமே நான் ரொம்ப ‘லைட்’ தான். உடற்பயிற்சி எதுவும் நான் செய்வது கிடையாது. நடுவில் கொஞ்சம் பத்தியமாகச் சாப்பிட்டு வந்தேன். இப்போது அதுவும் இல்லை. ’

‘வெளியே போகும் போது மேக் அப் செய்து கொள்வீர்களா? ’

saro_1.jpg 

‘நான் வெளியே போனால்தானே? விழாக்களிலெல்லாம் அதிகம் கலந்து கொள்ள மாட்டேன். சினிமா பார்க்க வேண்டுமென்றால், வீட்டில் போட்டுப் பார்ப்பேன். ’

பிடித்தவை - 1. மல்லிகைப்பூ 2. மாம்பழம் 3.உதட்டுச் சாயம் 4.வெண்மை நிறச் சேலைகள் 5. கறுப்புச் சாந்து போட்டு.

இளம் வயதிலிருந்து எந்த வண்ணத்தில் புடைவை கட்டிக்கொண்டாலும், நெற்றியில் கறுப்புச் சாந்து வைத்துக் கொள்வது வழக்கம்.

6. சேலை வாங்க - ‘நல்லி’யில் புடவை எடுப்பது பிடிக்கும்

7. கடவுள் - குழந்தையிலிருந்து என் இஷ்ட தெய்வம் அனுமன்.

பிடிக்காதவை - பாகற்காய், ஜலதோஷம், அயல் நாட்டுச் சேலைகள். வெளி நாடுகளுக்குச் சென்று பாரின் புடைவைகளை வாங்கி வருவது.

8. பயம் - பாம்புகள் குறிப்பாக மலைப்பாம்பு

‘நாடோடி மன்னன் படத்தில் நான் ஒரு மலைப்பாம்புடன் கட்டிப் புரண்டு நடிக்க வேண்டும். அப்படி நடிக்கையில் நிஜமாகவே மலைப்பாம்பு என்னைச் சுற்றி இறுக்கியது. மூச்சுத் திணறத் தொடங்கியதும் பயத்தில் மயங்கி விழுந்து விட்டேன்.

கண் விழித்ததும் எம்.ஜி.ஆர். முகத்தில் சோடா தெளித்து, என்னை எழுப்பி விட்டு எதிரே கவலையோடு நிற்பது புரிந்தது.

ஒரு வித படபடப்பும், நடுக்கமும் விடாமல் என்னைத் துரத்த, எம்.ஜி.ஆர். அருகிலிருந்து தைரியம் அளித்ததால் நடிக்க முடிந்தது.

அதன் பிறகு நாகங்களுடன் நடிப்பது என்றாலே எனக்குப் பயம். பல படங்களில் பாம்புடன் நடிக்க வாய்ப்பு வந்த போதும் அதைத் தவிர்த்து விட்டேன். ஒரு கோடி கொடுத்தாலும் பாம்போடு நடிக்க மாட்டேன். ’

அபிமான நடிகைகள் - எப்போதும் பத்மினி. வைஜெயந்திமாலா, மற்றும் தேவதாஸில் ‘பார்வதியாக’ பரவசப்படுத்திய சாவித்ரி, இந்தி அனார்கலியில் பிரமாதமாக நடித்த பீனாராய்,

ஏங்கிய வேடம்- 1. கை கொடுத்த தெய்வம் - சாவித்ரி நடித்த கோகிலா கேரக்டர், 2.கற்பகம் - கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்னிடம் கால்ஷீட் கேட்ட போது நான் நான்கு மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். என்னால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. என் தோழி கே.ஆர். விஜயா, ‘கற்பகமாக’ அறிமுகமானதில் சந்தோஷப் பட்டேன்.

3. இதயக்கமலம் - கே.ஆர். விஜயாவுக்குப் புகழ் தந்த ‘கமலா- விமலா’,

4. குமுதம் - சவுகார் ஜானகி ஏற்ற பார்வையிழந்த பெண் வேடம்

5. தில் அப்னா அவுர் பிரீத்பாய் - மீனாகுமாரி, 6. சவுண்ட் ஆஃப் மியூசிக் - ஜூலி ஆண்ட்ரூஸ்.

நினைவில் நிற்கும் படக்காட்சிகள் - 1. ‘அன்பேவா’ என்று காதலியின் பிரிவில் எம்.ஜி.ஆர். உருக்கமாகப் பாடுவது

2. கர்ணனில் வரும் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாட்டு சீன்

3. கல்யாணப் பரிசு சினிமாவில் ‘என்னை மறந்துட்டு என் அக்கா கீதாவை நீங்க கல்யாணம் பண்ணிக்குங்கன்னு ஹீரோ பாஸ்கர் கிட்டே நான் சொல்லும் போது, காதல் மன்னன் ஜெமினி கணேசன், ‘வசந்தி’ன்னு அலறுவது.

சிரிப்பு - என் அம்மா தமிழ் பேசும் போது வருவது.

மகிழ்ச்சி - கணவருடன் சினிமாவுக்குப் போவது... பெங்களூருவுக்கு விமானம் ஏறியவுடன் ஏற்படுவது.

Saroja Devi with her husband.jpg 

மறக்க முடியாதவர்கள் -- ஜவஹர்லால் நேருவும் என் இனிய தமிழ் ரசிகர்களும் !

இரண்டாவது உலகப்படவிழாவில் என்னைப் பார்த்ததும் பாரதப் பிரதமர் நேரு, நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்...! என்று வியந்து கூறியது.

லட்சியம் - நல்ல நடிகை என்று எப்படிப் பெயர் வாங்கினேனோ, அது போல குடும்ப வாழ்க்கையிலும் நல்ல மனைவி என்ற பெயரைக் கடைசி வரையில் காப்பாற்றுவது.

விரத நாள் - திங்கட்கிழமை.

----------------

சினிமா நடிகைதானே தனது இமேஜூக்காக புகழுக்காக, சரோ ஏதோ கூறியுள்ளார் என வாசகர்கள் யாரேனும் நினைத்தால் அது தவறு.

விரதங்களை அனுஷ்டிப்பதில் சரோ எத்தகையவர் என்பதற்கு எம்.ஜி.ஆரே சாட்சி.

நான் ஆணையிட்டால் படத்தில் ‘உயர உயரப் போகிறேன் நீயும் வா’ என்கிறப் பாடல் காட்சி. பகல் இரவு பாராமல் நடைபெற்றது.

அன்று சனிக்கிழமை. சரோ அனுமனுக்காக உபவாசம் இருந்தார். எம்.ஜி.ஆர். வீட்டிலிருந்து கமகமக்கும் பிரியாணி வந்தது. எம்.ஜி.ஆர்., சரோவை சாப்பிடக் கூப்பிட்டார்.

சரோ அதைத் தீண்ட மறுத்துத் தன் நிலைமையை எடுத்துச் சொன்னார். நாள் முழுவதும் சரோ உண்ணாத வருத்தம் வள்ளலுக்கு.

இரவு பன்னிரெண்டு மணி தாண்டியதும் எம்.ஜி.ஆர். மீண்டும் சரோவை வற்புறுத்தினார்.

‘சரோஜா... இப்ப நீ தயங்காம பிரியாணி சாப்பிடலாமே. சனிக்கிழமை முடிஞ்சு போச்சே... ’ என்றார்.

சரோ ஜோதிட சாஸ்திரத்தில் பற்றும் நம்பிக்கையும் உடையவர்.

‘இங்கிலீஷ் காலண்டர் கணக்குப் படி உங்களுக்கு சனிக்கிழமை முடிஞ்சிருக்கலாம். ஆனா நம்ம ஊரு வழக்கத்துல சூரியோதயத்துல இருந்து தான் ஒரு நாள் ஆரம்பமாகும்.

அதனால எனக்கு இப்பவும் பிரியாணி வேண்டாம்’ என்றார்.

எம்.ஜி.ஆருக்கு அன்றைய தினம் ஏமாற்றமே ஏற்பட்டது.

சரோவின் சிநேகிதி ‘திருமதி சுசிலா பத்மநாபன்’. தன் நட்சத்திரத் தோழி குறித்துத் திரை இதழ் ஒன்றில் எழுதியதிலிருந்து சில பகுதிகள் -

சினிமாவில் எனக்கு முதலில் நெருக்கமானவர் வைஜெயந்திமாலா. வஞ்சிக்கோட்டை வாலிபன் ஷூட்டிங்கில் என்னை அடிக்கடி பார்த்த ஜெமினி கணேசன், சாவித்ரியை அறிமுகப்படுத்தி வைத்தார். நானும் சாவித்ரியும் சீக்கிரத்தில் நெருங்கிப் பழகினோம்.

நடிகையர் திலகத்தின் ‘ஆயிரம் ரூபாய்’ ஷூட்டிங் வாஹினி ஸ்டுடியோவில். என் உறவினர்களுடன் சென்றேன். அப்போது சாவித்ரி என்னிடம்,

‘பக்கத்தில் இருவர் உள்ளம் படப்பிடிப்பு. சிவாஜி அண்ணனும் -சரோஜாதேவியும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதையும் பார்த்துவிட்டுப் போங்கள்... ’ என்றார். சரோ நடிப்பதை நேரில் பார்க்க எனக்கும் ஆர்வம் அதிகமானது.

சிவாஜி சார் எங்களை வரவேற்று சரோஜாதேவியிடம் அழைத்துச் சென்றார். முதல் சந்திப்பில் சரோ என்னிடம் ஏதும் பேசவில்லை. சின்ன சுந்தரப் புன்னகையோடு சரி. சரோ பற்றி ஏற்கனவே பல அவதூறான தகவல்கள் பரவியிருந்தன.

கர்வி! எளிதில் யாரையும் அணுக விடாதவர். பிறரை மதிக்கத் தெரியாதவர் என்றெல்லாம் பலவாறாகப் பேசினர். ஏனோ அவை நினைவில் வந்தன.

இரண்டாவது சந்திப்பு எதிர்பாராதது. அதே வாஹினியில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் தெலுங்கு சினிமா செட்டுக்கு, என்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது சாட்சாத் சரோஜாதேவியே!

ஏப்ரல் 1966. ராஜ்கபூர் - வைஜெயந்திமாலா இணைந்து நடித்த ‘சங்கம்’ இந்தி சினிமாவின் சிறப்புக் காட்சி. அங்கு சரோவை மூன்றாவது முறையாகச் சந்தித்தேன். வைஜெயந்தியைப் போல் சரோ தேர்வு செய்யும் புடைவை, நகைகள் எல்லாம் கலா ரசனையில் ஒன்றை ஒன்று மிஞ்சக் கூடியவை.

BSDVMIRONGATE1.jpg 

சரோ நடித்த ‘ரகசியம்’ தெலுங்குப் படத்தில் பல கோணங்களில் ‘அம்ரபாலி’ வைஜெயந்தி போல் காட்சி அளித்தார்.

சரோவுக்குப் பிடித்த வண்ணங்கள் வெள்ளை, நீலம், ரோஸ். சரோவிடமுள்ள வெண்ணிறச் சேலைகளைக் கணக்கெடுக்க முடியாது.

வெகு நாள்கள் கழித்தே எனக்கு சரோவைப் புரிந்து கொள்ள முடிந்தது. தாயாரிடம் இவருக்கு இருக்கும் எல்லையற்ற அன்பு ஒருவித மூட நம்பிக்கையாகக் கூட சிலருக்குத் தென்படலாம். அம்மாவுக்கு அடங்கிய பெண், சரோவின் தோழிகளைக் கூட ருத்ரம்மாவே தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறுவார்.

தாயின் பரிபூரண சம்மதத்துடன் மட்டுமே சரோ மற்றக் கலைஞர்களிடத்தில் நட்பு பாராட்ட முடியும்! அம்மா கிழித்த கோட்டைத் தாண்ட சரோவும் விரும்பியதே கிடையாது.

ஒரு பட முதலாளி தன் அன்னையைப் பற்றிச் சற்று மதிப்பு குறைவாகப் பேச முற்பட்ட சமயம், உடனே ‘பத்துப் படங்கள் கிடைத்தாலும் அவை பெற்றத் தாய்க்குச் சமமாக முடியுமா ? ’ என்று கேட்டவர்! எதையும் தைரியத்துடன் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசுபவர்.

‘அர்த்த புஷ்டியாகவும் சிநேக பாவத்துடனும் சரோவுக்குப் பேசத் தெரிந்ததைப் போல வேறு எந்த நடிகைக்கும் பேசத் தெரியாது. என்று என்னால் திட்டமாகக் கூற முடியும்!

சரோவின் கேள்வி ஞானம் வியக்கத்தக்கது. இவரது முடிவுகள் நீண்ட காலம் யோசித்து, நிதானமாகச் செய்யப்பட்டவை. பல அரிய கருத்துகளை மனத்தில் தேக்கிச் சந்தர்ப்பம் அறிந்து அதை வெளியிடவும் தயங்குவது கிடையாது.

சரோவின் நடிப்பு சூடு பிடிக்கையில் ஒரு தீர்க்கதரிசி போல்,

‘என்னுடைய பெயரை சரோஜாதேவி எடுப்பார்... ’ என்று கூறினார் நாட்டியப் பேரோளி பத்மினி.

அவர் என்னிடம் இவ்வாறு சொன்னது சீக்கிரத்திலேயே பலித்தது.

இவ்வளவு எளிதில் ஒரு வருடப் பழக்கத்தில் (1966- -1967) இருபது ஆண்டுகளின் சிநேக பந்தம் எங்களுக்குள் ஏற்பட்டு விட்டது. ’

‘சரோ- ருத்ரம்மா தொப்புள் கொடி பந்தம் குறித்து சிநேகிதி சுசிலா பத்மநாபன் எழுதிய ஒவ்வொரு சொல்லும் அக்மார்க் நிஜம்’! அதை சரோவே ஒரு பேட்டியில் சுட்டிக்காட்டி உள்ளார்.

‘என் தாயார் மிகவும் கண்டிப்பானவர். திருமணத்துக்கு முன், அவர் அனுமதி இன்றி நான் எங்கும் போக முடியாது.

‘ஒரு நாள் அம்மா வீட்டில் இல்லாத போது, தோழி சுசிலாவுடன் சென்னை மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்குப் படம் பார்க்கப் போய் விட்டேன்.

ஒரு நடிகை தியேட்டருக்குப் போவது என்பது மிகவும் தொந்தரவானது. ரசிகர்கள் பார்த்தால் அது மிகுந்த தொல்லையில் கொண்டு விட்டுவிடும்.

அம்மா வீடு திரும்பியதும், நான் சுசிலாவுடன் சினிமாவுக்குப் போயிருப்பதை தெரிந்து கொண்டார். ஆத்திரம் அடைந்த அவர், நேராக தியேட்டருக்கு வந்தார். மேனஜரிடம் கூறி,

‘சுசிலா உடனே மேனஜர் அறைக்கு வரவும்’ என்று ஸ்லைடு போட உத்தரவிட்டார்.

அதைப் பார்த்ததும் நாங்கள் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தோம். அம்மா சுசிலாவிடம் ஏதும் பேசாது என்னை தர தரவென்று இழுத்துச் சென்று விட்டார்.

எனக்கு ரொம்பவும் அவமானமாகப் போயிற்று!

உயிர்த் தோழியிடம் சொல்லி விடை பெற்றுக் கொள்ள முடியாத வருத்தம் என்னை வாட்டியது. அடக்க முடியாத கோபத்தில் என் தாயுடன் சண்டை போட்டேன்.

ஆனால் சுசிலா, நடந்ததை மறந்து எப்போதும் போல் சகஜமாகப் பழகினார். இன்று வரை எங்கள் நட்பு தொடர்கிறது. ’ - சரோஜாதேவி.

கற்பனைகளை விடவும் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறும் களம் மானுட வாழ்வு. துடிக்கத் துடிக்க புரட்சி நடிகர் சுடப்பட்டத் துயர நிகழ்வின் எதிரொலி..!

சரோவின் நட்சத்திர டைரியில் அன்று ஒரு திடுக்கிடும் தினம். காவல் துறை விசாரணை வளையத்தில் கன்னடத்துப் பைங்கிளி சரோவும் சிக்கிக் கொண்டார்.

‘எம்.ஜி.ஆர். சுடப்பட்ட போது ஐதராபாத்ல நாகேஸ்வர ராவோட ‘ரகஸ்யம்’ படத்துல நடிச்சிக்கிட்டிருந்தேன். திரும்பி மெட்ராஸ் வந்தப்போ ஏர்போர்ட்லருந்து போலீஸ் என்னை ‘ஃபாலோ’ பண்ணுனாங்க.

டி.ஐ. ஜி. பரமகுரு எங்க வீட்டுக்கு வந்து என்னை சந்திச்சிக் கேட்டாரு.

‘எம்.ஜி.ஆர். நடிச்ச எல்லாப் படத்துலயும் நீங்கதான் அவர் பக்கத்துலயே எப்பவும் இருந்திருக்கீங்க. அதனால உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும்.

பெற்றால்தான் பிள்ளையா படத்துல...

saro.jpg 

‘அவன் என் எதிரி, அதனால்தான் எதிர்ல வெச்சிருக்கேன்’ னு எம்.ஆர். ராதா உங்ககிட்டே ஒரு சீன்ல சொல்றாரே, அப்படின்னா எம்.ஜி.ஆர்., எம்.ஆர். ராதாவுக்கு எதிரியா இருந்தாரா? அதைப் பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா சொல்லுங்கன்னு கேட்டாரு.

அதுக்கு நான் சொன்னேன்: ‘அது கதைக்காக எழுதின வசனம். அதை ராதா அண்ணன் பேசுனாரு. ஒரு படத்துல ‘பாவி’ ‘துரோகி’ன்னு வசனம் பேசுனா, அவங்க உண்மையிலேயே அப்படித்தான்னு அர்த்தமா?ன்னு பதிலுக்குக் கேட்டேன்.

பரமகுரு அதோட என்னை விடலே, மேற்கொண்டு என்னென்னமோ கேட்டாரு. எனக்கு இந்த போலீஸ், கோர்ட்டுன்னாலே எப்பவும் பயம்.

கொஞ்சம் இருங்கன்னு சொல்லிட்டு மாடிக்குப் போய் என் வக்கீல் வி.பி. ராமனுக்கு போன் பண்ணுனேன். எம்.ஜி.ஆருக்கும் அவர் வக்கீல்.

டி.ஜி. பி. பரமகுரு கேட்டதைப் பத்தி வி.பி. ராமன் கிட்டே சொன்னேன்.

‘அவங்க அப்படித்தான் கேப்பாங்க, நீங்க ஒண்ணும் பயப்பட வேணாம். கோர்ட்டு விசாரணைன்னு வந்தா அப்போ நான் பார்த்துக்கிறேன்... என்றார் ராமன் சார். அதுக்குப் பிறகே நிம்மதி அடைஞ்சேன். ’ - சரோஜாதேவி.

http://www.dinamani.com

  • Replies 53
  • Views 24.2k
  • Created
  • Last Reply

சரோஜா தேவி: 16. சரோ நல்ல பொண்ணு...!

 

 

ஜனவரி 7. சரோவின் பிறந்த நாள்! அன்றைய கோலிவுட்டின் கோலாகலத் திருவிழா! சரோ வசித்த அடையாறு காந்தி நகர் வீட்டில் கேளிக்கையும் கும்மாளமும் அமர்க்களப்படும் என்று நினைத்தால் அது தவறு.

பிறந்த தினத்தில் ஆண்டு தோறும் ‘சத்திய நாராயண பூஜை’ செய்வது சரோவின் வழக்கம். சத்தியநாராயண ஸ்வாமிக்கும் சரோ பிறப்புக்கும் என்ன சம்பந்தம்?

அதற்கானத் தொடர்பை சரோ தெளிவுப்படுத்தியுள்ளார்.

‘ நிறைமாத கர்ப்பிணி அம்மா. அன்று பயங்கர வயிற்று வலியால் அவதிப்பட்டார். அப்பா வழக்கம் போல் அலுவலகத்தில். பாட்டனாரைத் தவிர, பெரியவர்கள் வேறு யாரும் உதவிக்குக் கிடையாது.

தாய் துடிதுடிப்பதைப் பார்த்துச் சிறுமிகளான சகோதரிகள் பயத்தில் அழுதனர். தாத்தா பேத்திகளை சமாதானம் செய்வாரா... அம்மாவைக் கவனிப்பாரா...?

பக்கத்து வீட்டில் அன்றைக்கு சத்திய நாராயண விரதம்.

ஆராதனையெல்லாம் முடிந்ததும் ஸ்வாமிக்குப் படைத்த நைவேத்யத்தை அம்மாவிடம் கொடுத்து,

‘கடவுளின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு இந்தப் பிரசாதத்தை முதலில் சாப்பிடு ருத்ரம்மா. சத்திய நாராயணன் அருளால் உன் வலி படிப்படியாகக் குறையும். சுகப்பிரசவம் ஆகும்’ என்று ஆறுதல்படுத்தினார்கள்.

அவர்கள் சொன்னது பலித்தது. கொஞ்ச நேரத்தில் வலி மாயமாகி விட்டது. அம்மாவுக்கும் சத்திய நாராயண ஸ்வாமி மீது அபார பக்தி உண்டானது. அதற்கு மறு நாள் நான் பிறந்தேன். அதனாலேயே ஆண்டு தோறும் என் பிறந்த நாளில் சத்திய நாராயண பூஜை கொண்டாடப்படுகிறது. ’- சரோஜாதேவி.

saro_1.jpg 

எம்.ஜி.ஆர்., சாண்டோ சின்னப்பா தேவர், எம்.ஆர். ராதா மூவரும் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொள்வார்கள்.

சரோவின் இல்லத்துக்குள் நுழையும் போதே,

‘அம்மா... சரோஜா... ’ என்று வாயாரத் தன் ஸ்டைலில் கூப்பிடுவார் எம்.ஆர். ராதா. அடுத்த நொடிகளில் அவர் பாதங்களில் விழுந்து ஆசி பெறுவது சரோவின் அனிச்சையான செயல்.

தன் வீட்டு விசேஷம் போல் சரோ பிறந்த வைபவத்தில்,

‘வாப்பா... ராமச்சந்திரா...! ’ என்று எம்.ஜி.ஆரையும் எதிர் கொண்டு அழைப்பார் நடிகவேள்.

சரோஜாவின் தாயார் ருத்ரம்மாவிடம்,

‘உம் பொண்ணை நல்லா வளர்த்து வெச்சிருக்கே. உடம்பு நிறைய துணி போட்டு வர்ற நடிகை யாருன்னா... அது நம்ம சரோஜாதான்! என்னா அழகு! ரொம்ப சந்தோஷமா இருக்கு.! ’ என்பார்.

எம்.ஆர்.ராதா உளமாற வாழ்த்துகையில் ருத்ரம்மாவின் பெற்ற வயிறு மண் பானைத் தண்ணீராக ஜில்லிட்டுப் போகும்!

தன் மகன்களிடம் ராதா சொன்னது-

‘அடேய், எல்லா நடிகைங்க போட்டோவையும் மறைச்சு மறைச்சு வெச்சுப் பார்க்காதீங்கடா...! சரோஜாதேவி போட்டோவை மட்டும் வெச்சுக்கோங்க. சரோ நல்ல பொண்ணு! ’

தனக்கான ஹீரோவை சிபாரிசு செய்யும் பொறுப்பும் சரோவை நாடி வந்தது.

‘1960ல் முக்தா பிலிம்ஸை ஆரம்பித்தேன். முதன் முதலில் ‘பனித்திரை’ படத்தைத் தயாரித்து நான் டைரக்ட் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. அது முழுக்க முழுக்க ஹீரோயின் சப்ஜெக்ட். சரோஜாதேவி நாயகி என்று முடிவானது.

தொடக்கத்தில் சிவாஜி கணேசன் நடிக்க ஒப்புக்கொண்டார். பிஸியான ஷெட்யூலால் அவரால் கால்ஷீட் தர முடியவில்லை.

வேறு சில பிரபல ஹீரோக்களும் முதலில் சம்மதித்து, சரோஜாவுக்கு மட்டுமே ஸ்கோப் உள்ள கதை என்பதால் பின்பு மறுத்து விட்டனர்.

சரோஜாதேவி, நடந்தவற்றை ஜெமினி கணேசனிடம் எடுத்துச் சொல்லி, அவரை நடிக்க ஏற்பாடு செய்து கொடுத்தார். முக்தா பிலிம்ஸில் தொடர்ந்து மூன்று படங்களில் ஜெமினி நாயகனாக நடிக்க, சரோஜாதேவியே முதல் காரணம். ’ - முக்தா சீனிவாசன்.

ஸ்டுடியோ முதலாளிகள் போட்டி போட்டுக் கொண்டு சரோவுக்கு வழங்கிய சலுகைகளும் ஊதியமும் உச்ச நட்சத்திரங்களின் புருவத்தை உயர்த்தின.

‘நான் விதியின் குழந்தை. பிறந்தது மாட்டுத் தொழுவத்தில். வயலும் தோட்டமுமே என் உலகம். வெங்காயம், உருளைக் கிழங்கு ஏற்றுமதியில் ஈடுபட்டேன். நான் முதலில் கட்டடம் கட்டும் போது கோடம்பாக்கத்தில் சாலைகள் கூட இல்லை. ’ எங்க வீட்டுப் பிள்ளையைத் தயாரித்த நாகிரெட்டியின் உழைப்பாளி வாழ்வின் முதல் அத்தியாயத்தின் தொடக்க வரிகள் அவை.

என்.டி. ராமாராவ் - ஜமுனா நடித்த ராமூடு பீமுடு தெலுங்கு கறுப்பு வெள்ளைப் படத்தின் தமிழ் வடிவம் எங்க வீட்டுப் பிள்ளை. நாகிரெட்டியின் தயாரிப்பு.

சாவித்ரியை ஆஸ்தான நாயகியாகக் கொண்டு, தமிழிலும், தெலுங்கிலும் தொடர்ந்து வசூலைக் குவித்த படங்களை வழங்கியவர் நாகிரெட்டி. ‘மனிதன் மாறவில்லை’ படத்துக்குப் பிறகு நாகிரெட்டியும் சரோவுக்கு மாறினார்.

தெலுங்கில் என்.டி.ராமாராவ்- சரோ ஜோடியாக நடிக்க, ஜெகதலபிரதாபன் வெற்றிச் சித்திரத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்தது. தமிழிலும் அது டப் செய்யப்பட்டு 1963 தீபாவளிக்கு ரிலிசானது.

‘நாகிரெட்டியின் விஜயா- வாஹினி நிறுவனம் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் எடுக்கும் போது நான் ரொம்பவே பிஸியா இருந்தேன். ஆனாலும் அவங்க என்னை வற்புறுத்தினாங்க.

ஒரு நாள் அதிகாலை. நாங்கள் கண் விழித்து எழுந்து வெளியில் வந்த போது வீட்டு வாசலில், ஒரு ஹெரால்டு கார் நின்று கொண்டிருந்தது. காரில் தெரிந்த தயாரிப்பாளர் நாகிரெட்டியைப் பார்த்ததும், எனது அம்மா கடும் அதிர்ச்சி அடைந்து,

‘நீங்கள் இப்படிச் செய்யலாமா...வந்த உடனேயே காலிங் பெல்லை அடித்து இருக்கலாமே...? ’ என்றார் தவிப்புடன்.

பொழுது விடிவதற்குள் சென்றால் மட்டுமே, ஹீரோ -ஹீரோயின்களை வீட்டில் பிடிக்க முடியும். இல்லாவிட்டால் மற்ற கம்பெனிளிகளின் படப்பிடிப்பில் சந்திக்க நேரும். அது வேலைக்கு ஆகாது. அதனால் நாகிரெட்டி விடியலுக்கு முன்னரே வந்து காத்திருந்தார்.

1.jpg 

‘நீங்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருப்பீர்கள். உங்களைத் தொல்லைப் படுத்த வேண்டாம் என்று நினைத்தேன். எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் நடிக்க சரோஜாவை ஒப்பந்தம் செய்ய வந்திருக்கிறேன்.எவ்வளவு சம்பளம் வேணும்னாலும் தர்றோம். நீ தாம்மா நடிக்கணும்னு மனப்பூர்வமா சொன்னார். அவர் கேட்டுக் கொண்டவாறே குறுகிய காலத்தில் நடித்துக் கொடுத்தேன். ’ சரோஜாதேவி.

நாகிரெட்டியின் கணிப்பு மிகச் சரியே என நிருபித்தது எங்க வீட்டுப் பிள்ளையின் ஈடு இணையற்ற வெற்றி!

‘1965 பொங்கலுக்கு வெளியாகி, சரோவுக்கு ராசியான ஏழாம் எண்ணில் வரும் ஜூலை மாதத்தில், ஏழாம் தேதி ( ஜூலை -7) அன்று தமிழ் நாட்டில் ஏழு தியேட்டர்களில், 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம்! ’ என்கிற அழியாப் பெருமையைப் பெற்றது எங்க வீட்டுப் பிள்ளை!

சென்னையில் காசினோ, பிராட்வே, மேகலா என்று மூன்று தியேட்டர்களிலும், மதுரை, திருச்சி, கோவை, தஞ்சை என நான்கு நகரங்களிலும் ஆக மொத்தம் ஏழு இடங்களில் ஆறு மாதங்களைக் கடந்து பரபரப்பாக ஓடியது.

1977 ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராகப் பதவியேற்ற காலம் வரையில், சிவாஜி கணேசனாலும் முறியடிக்க முடியாத சாதனைச் சரித்திரம் படைத்தது!

எங்க வீட்டுப் பிள்ளை கொண்டாட்டத்தில் சரோவைப் பார்க்க முண்டியடித்தனர் ரசிகர்கள். தள்ளுமுள்ளு நடந்ததில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது.

எங்க வீட்டுப் பிள்ளை குறித்த பிரமிப்பு பாமரர்களுக்கு மட்டுமல்ல. சரோவுக்குள்ளும் என்றும் நிரந்தரம்.

‘எங்க வீட்டுப் பிள்ளை படத்தை ரொம்பவே பிரம்மாண்டமாக எடுத்துக் கொண்டிருந்தார்கள். விஜயா ஸ்டுடியோவின் எட்டாவது ஃப்ளோரில் ஷாப்பிங் சென்டர் அமைக்க அப்போதே எட்டு லட்சம் செலவு ஆனதாம்.

நான் காரில் கடை வீதிக்கு வருவேன். இறங்கி சாலையில் நடக்கும் போது என் ஹேண்ட் பேக் கை ஒருவன் பிடுங்கிக் கொண்டு ஓடுவான்.

நான் திருடன் திருடன் எனக் கத்த எம்.ஜி.ஆர். ஓடி வந்து உதவுவார்.

படப்பிடிப்புக்காக போடப்பட்ட அரங்கில் ஒரு நாள் இரவு திடீரென தீ பிடித்துக் கொண்டது.

உடனே நாகிரெட்டி அய்யாவுக்குத் தகவல் போய்ச் சேர்ந்தது. அய்யாவோ கொஞ்சம் கூடப் பதற்றம் அடையாமல்,

‘என் தொழிலாளர்கள் ரொம்ப நல்லவர்கள். அவர்களே முன் நின்று கவனித்து நெருப்பை அணைத்து விடுவார்கள்’ என்றாராம்.

அய்யாவின் வார்த்தைக்கு எத்தனை வலு என்பதை நேரில் பார்த்த போது புரிந்தது.

ஃப்ளோரின் உச்சியில் சக தொழிலாளர்கள், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் காக்கி யூனிபார்மில் தகிக்கும் அனலுக்கிடையே நெருப்பை அணைத்துக் கொண்டிருந்தவர் யார் தெரியுமா...?

நாகிரெட்டியின் மகன் வேணு!

அதற்குள் விஷயம் தெரிந்து ராமாவரம் தோட்டத்தில் இருந்து சின்னவர் கூட வந்திருந்தார்.

வசதி வாய்ப்பிருந்தும் தன்னைத் தானே எளிமைப் படுத்திக் கொண்ட முதலாளிகளால் அன்றைய திரை உலகம் ஆரோக்கியமாக இருந்தது.- சரோஜா தேவி.

‘வேட்டைக்காரன்’ விவகாரத்தில் விளைந்த கருத்து வேறுபாடு பனித்துளி போல் கரைந்தது. தேவர் - சரோ இடையேயான தோழமை எப்போதும் போல் நீடித்தது.

engha veetu pillai.png 

‘எங்க வீட்டுப் பிள்ளை படத்தைப் பார்த்து விட்டு சரோஜாவைப் புகழ்ந்து பேச நினைத்தேன்.

‘பாவாடை தாவணி போட்டுக் கொள்ளாமல், புடைவை கட்டிக் கொண்டு நடிக்கும் பொழுதுதான் அழகாக இருக்கிறீர்கள். இப்படியே நடிக்கவும்’ என்று சரோஜாவைப் பாராட்ட எண்ணி, அரை குறை ஆங்கிலத்தில் நான் அவரிடம்,

‘ரிமூவ் தி பாவாடை. டேக் தி புடைவை. ஐ லைக் யூ வெரி மச்! ’ என்று சொல்லி விட்டேன்.

நான் அப்படிச் சொன்னதும் சரோஜாதேவி வெட்கப்பட்டுக் கொண்டு நாற்காலியிலிருந்து எழுந்து போய் விட்டார்.

அருகில் இருந்தவர் நான் பேசியதில் தொனித்தத் தவறான அர்த்தத்தை, எடுத்துக்கூறி விளக்கியதும் மிகவும் வருந்தினேன். அன்றிலிருந்து சரோஜாவிடம் ஆங்கிலத்தில் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்.’ -சாண்டோ சின்னப்பா தேவர். பட்சிராஜா ஸ்டுடியோ உரிமையாளர் ஸ்ரீராமுலு நாயுடு தனது ‘கல்யாணியின் கணவன்’ பட டைட்டிலில் ‘அபிமான நட்சத்திரம் சரோஜாதேவி! ’ என்று சில நிமிடங்களுக்குத் தனித்துக் காட்டினார்.

கல்யாணியின் கணவன் சினிமாவில் ஒலித்த டூயட் ‘எனது ராஜ சபையிலே ஒரே கொண்டாட்டம்’ அதில் சரோவின் உச்ச நட்சத்திர அந்தஸ்தை அழகாக உணர்த்தியிருப்பார் கண்ணதாசன்.

‘சிவாஜி கணேசன் - சரோஜாதேவி ஆரம்ப சீன்களில் சரோவின் சேட்டைகள் திருப்திகரத்துக்குக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றன.

சரோஜாதேவி சிவாஜியை எம்.ஜி.ஆராகவே பாவித்து, நம் கவலைகளை மறக்க அடிக்கிறார்...! ’என்று குமுதம் விமர்சனம் திரையில் சரோவின் சரஸங்களைக் கொண்டாடி மகிழ்ந்து மலர் மகுடம் சூட்டியது.

அன்பே வா. சரோவின் வாழ்க்கையில் மறக்க முடியாத வண்ணச்சித்திரம். ஏவி.எம்., சிவாஜி பிலிம்ஸ், சரவணா பிலிம்ஸ், நாகிரெட்டியின் விஜயா நிறுவனம், டி.ஆர். ராமண்ணாவின் ஆர்.ஆர். பிக்சர்ஸ் என ஏகப்பட்ட சினிமா கம்பெனிகள் தயாரித்த முதல் கலர் படத்தில் சரோவே கதாநாயகி!

சரோவைத் தவிர வேறு எவரையும் தங்களின் ராசியான ஸ்டாராக நினைத்துப் பார்த்தது இல்லை அன்றைய எஜமானர்கள்.

ஊட்டியில் அன்பே வா அவுட்டோர் ஷுட்டிங். அங்கு நடந்த நிகழ்வு சரோவைப் பட அதிபர்கள் ஏன் கொண்டாடினார்கள் என்பதை விளக்கும்.

பேசும் படம் ஆசிரியர் பதிவு செய்துள்ள சம்பவத்திலிருந்து-

‘ஊட்டிக்கு நானும் ஏவி.எம். குமரனும் போய்ச் சேர்ந்த மறுநாள், எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் வந்தார்கள்.

சரோஜாதேவி, ‘ஊட்டியிலே தாசப்பிரகாஷ் ஓட்டல் என்னுடைய பர்மனெண்ட் வீடு மாதிரி ஆயிடுச்சி. வருஷா வருஷம் ஏதாவது ஒரு ஷூட்டிங்குக்கு இங்கே வந்து விடுவேன். என்னைப் பொறுத்த வரையில் இந்தக் குளிர் எல்லாம் எனக்குப் பழக்கப்பட்டுவிட்டது. ’ என்று சொன்னார்.

அதற்கேற்ப அவர் பிரதி தினமும் மாலை சுமார் ஆறு மணிக்கு நடனப் பெண்கள் படை சூழ, கீழே உள்ள கோயிலுக்கு நடந்தே போய் பூஜை செய்து விட்டு வருவார்.

ஒருநாள் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆருடன், நான், ஏவி.எம். குமரன், ஏவி.எம். சரவணன் ஆகியோர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தோம்.தேங்காய் பழத்தட்டு, சாமி பிரசாதத்துடன் எங்கள் அறைக்குள் நுழைந்தார் சரோஜாதேவி.

புரட்சி நடிகர், சரோஜாதேவியைப் பார்த்து, ‘தினமும் கோயிலுக்குப் போய் என்ன வேண்டிப்பீங்க...? ’ என்று கேட்டார்.

enga-veetu-pillai-songs-free-download-e1368281672807.jpg 

‘நல்லா வெயிலடிக்கணும். தெனமும் ஷூட்டிங் ஒழுங்கா நடக்கணும். சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு நாங்களெல்லாம் பத்திரமா திரும்ப ஊருக்குப் போக அருள் புரியணும்!’னு கடவுள் கிட்டே பிரார்த்தனை செஞ்சிட்டு வரேன்’ என்றார் சரோஜாதேவி. ’

சரோவின் வெற்றிக்கான ரகசியம் தொழில் பக்தியும்- கடுமையான உழைப்பும் தவிர வேறில்லை.

சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்ய அனைத்து பிரபல ஸ்டுடியோ அதிபர்களும் முண்டியடித்தனர். ஏனோ சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் மாத்திரம் சரோ நடித்தது கிடையாது.சரோவின் காஸ்ட்யூமர் எம்.ஏ. ரெஹ்மான். பத்திரிகை ஒன்றில் அளித்த பேட்டியிலிருந்து,‘ சரோஜாதேவிக்குப் பிடித்தது க்ளோஸ் நெக், போட் நெட் வைத்த இரு மாடல் ப்ளவுஸ்கள். ஸ்லீவ்லெஸ் எனப்படும் கையில்லா ரவிக்கையை அவர் அணிந்ததே கிடையாது.தைக்கப்படும் ஆடைகள் உடலை ஒட்டி அமைய வேண்டும். ஃபிட்டிங் சற்று மிகையான கவர்ச்சியுடன் அமைந்து விட்டால், அதைத் தொட மாட்டார்.

சினிமாவில் பயன்படுத்தும் ஜாக்கெட்டுகள் போல் சொந்த உபயோகத்துக்கும் சேர்த்துத் தைக்கச் சொல்லி சில நடிகைகள் கேட்பது உண்டு. சரோஜாதேவி அவ்வாறு செய்ததில்லை.அம்மாவுக்கு நான் தனிப்பட்ட முறையில் தைத்துக் கொடுத்த ரவிக்கைகள் ஆயிரத்தைத் தாண்டும். சரோஜாதேவி வீட்டுக் கண்ணாடி பீரோக்களில் ஆயிரக் கணக்கான வண்ண வண்ணச் சேலைகள் கண்களுக்கு விருந்தளிக்கும். ’

-------

1969 கோடையில் உலகச் சுற்றுலா சென்று வந்தார் சரோ. திரும்பி வருகையில் தன்னை என்றும் மறக்க முடியாதபடி, எம்.ஏ. ரெஹ்மானுக்கு ஓர் அபூர்வ பரிசை வழங்கினார்.

அது கட்டை விரல் அளவே உள்ள சின்னஞ்சிறு பெட்டி. அதன் உள்ளே இருந்தவை ஒரு சிறிய ஊசி. இரு குண்டூசிகள். மூன்று பித்தளைப் பின்கள். தையற்கலைஞர்கள் விரலில் மாட்டிக் கொள்ளும் அங்குஸ்தான். மூன்று ஜதை வர்ண நூல்களைச் சுற்றி வைக்கக் கூடிய உருளை.

http://www.dinamani.com

சரோஜா தேவி: 17. பல்லாண்டு வாழ்க!

 

 

 
1996. செப்டம்பர் 20. நேரு விளையாட்டு அரங்கம். சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் சிறந்த கலைஞர்களுக்கான 17ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!
‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெற வந்திருந்தவர் சரோஜாதேவி. அதனை அபிநய சரஸ்வதிக்கு வழங்கியவர் நடிகர் திலகம்.
கணேசனும்- சரோவும் தங்களை மறந்து ‘இருவர் உள்ளம்’ காலத்துக்கே போய் ஆனந்தத்தில் கட்டித் தழுவிக் கொண்டனர்.
கைகளில் பொன்னாடையோடு வெட்கிச் சிரித்தவாறு தலை குனிந்து நின்றார் - சிறப்பு விருந்தினர் சென்னை நகர மேயர் மு.க. ஸ்டாலின்.
அதை வண்ணப்புகைப்படமாக வெளியிட்டு ‘பாந்தமான காட்சி!’ என்று வர்ணித்தது தினமணி நாளிதழ்.
இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் சின்னத்திரைகளில் சரோஜாதேவியை நடிக்க அழைத்தார்கள். மறுப்பேதும் சொல்லாமல் ‘கங்கா யமுனா சரஸ்வதி சங்கமம்’ தொலைக்காட்சித் தொடரில் ‘வழக்கறிஞர் பவானி சங்கர்’ வேடத்தில் வலம் வந்தார் சரோ.
ஆகஸ்ட் 23. 2006. சென்னை ஆல்பட் தியேட்டர். அரங்கு நிறைந்த மாலைக் காட்சியால் மூச்சுத் திணறியது. நாடோடி மன்னன் படப் பதாகைகள் புதுப் பொலிவுடன் சுற்றிலும் அலங்கரித்தன.
 
மாபெரும் வெற்றிச் சித்திரமான நாடோடி மன்னனின் 49வது ஆண்டு துவக்க விழா! ஆகஸ்டு 4 முதல் மீண்டும் நாடோடி மன்னனின் அட்டகாசம் தமிழகத்தில் ஆரம்பமாகி இருந்தது.
மக்கள் திலகத்துடன் திரையில் மகிழ்ச்சியூட்டியத் திரையுலக ஜோடிகள் சரோஜாதேவி, பத்மினி, எம்.என். ராஜம், ராஜ சுலோசனா, ராஜஸ்ரீ, வெண்ணிற ஆடை நிர்மலா, மஞ்சுளா, மற்றும் சச்சு ஆகியோரும் மக்களோடு மக்களாக நாடோடி மன்னன் படம் பார்த்த மறக்க முடியாத வைபவம் அரங்கேறியது.
‘உங்களுக்கு சரோஜாதேவி என்றாலே எம்.ஜி.ஆரின் ஞாபகம் வரும். எம்.ஜி.ஆர். சாகவில்லை. நம் இதயங்களில் இருக்கிறார்.
ஆனாலும் நம் கண் முன்பே அவர் இல்லையே என்கிற கவலை எனக்கும் உள்ளது. எம்.ஜி.ஆர். இங்கே எங்கேயாவது நின்று நம்மைப் பார்த்துக் கொண்டு இருப்பார்.

07-1452189895-sarojadevi-250-20062008.jp
பிறந்தால் எம்.ஜி.ஆர். போல் பிறக்க வேண்டும். வாழ்ந்தால் எம்.ஜி.ஆர். போல் வாழ வேண்டும். அவர் ஒழுங்காக வாழ்ந்தார். என் கடைசி மூச்சு இருக்கும் வரையில் தமிழக மக்களையும் எம்.ஜி.ஆரையும் மறக்க மாட்டேன்.
நெஞ்சம் நெகிழச் செய்யும் சரோஜாதேவியின் பேச்சைக் கேட்டு வாத்தியார் ரசிகர்கள் ஒரு கணம் கண்களில் நீர் மல்க நின்றார்கள்.
7.1.2007. சரோவின் பிறந்த நாளில் கூடுதல் விசேஷம். சரோஜாதேவியின் கலைச்சேவையைப் பாராட்டி, பெங்களூரு பல்கலைக்கழகம் அபிநய சரஸ்வதிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.
சர்வகலாசாலையின் 42வது பட்டமளிப்பு விழாவில் கர்நாடக மாநில கவர்னர் டி.என். சதுர்வேதியிடமிருந்து தனக்கான விருதினை நேரில் பெற்றுக் கொண்டார் சரோஜாதேவி.
2008. சரோவின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டு. மத்திய அரசு சரோவுக்கு ‘வாழ் நாள் சாதனையாளர் விருது’ வழங்கியது. அவ்வுயரிய கவுரவத்தைப் பெற்ற ஒரே தென்னிந்திய நடிகை சரோ !
2008 செப்டம்பர் 2. செவ்வாய்க்கிழமை. டெல்லியில் நடைபெற்ற கோலாகல விழாவில் சரோவுக்கு அப்பரிசை அளித்தவர் பாரத நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் என்பது கூடுதல் சிறப்பு!
சரோவுடன் அன்று வாழ்நாள் சாதனையாளர்களாகப் போற்றப்பட்ட மற்ற இருவர், இந்தியத் திரை உலகின் ஜாம்பவான்கள் திலீப் குமார், லதா மங்கேஷ்கர்.
பத்து லட்சம் ரூபாய் ரொக்கமும் பாராட்டுப் பத்திரமும் சாதனைக் கலைஞர்களுக்குக் கிடைத்தது.
2008. அக்டோபர் 1. புதன்கிழமை. மாலை ஆறு மணி. சென்னை அண்ணா அறிவாலயம். கலைஞர் அரங்கம். முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் தலைமையில் நடிகர் திலகத்தின் 80வது பிறந்த நாள் விழா!
‘சிவாஜி - பிரபு அறக்கட்டளை’ சார்பில் சரோஜாதேவிக்கு ‘சிவாஜி விருது’ வழங்கிச் சிறப்பித்தார் முதல்வர் கலைஞர். சரோவுடன் ஆரூர்தாஸ், கே.ஆர். விஜயா, சச்சு உள்ளிட்டோரும் பரிசு பெற்றனர்.
‘திருவாங்கூர் சகோதரிகள் லலிதா - பத்மினி- ராகினி’ ஆகியோரது உருவம் பதித்த சிறப்புத் தபால் உறையும் வெளியிடப்பட்டது.
2008. அக்டோபர் 3. வாழ்நாள் சாதனையாளர் மற்றும் ‘சிவாஜி விருது’ பெற்றதற்காக சரோ தனது நட்சத்திரத் தோழிகளுக்கு விருந்து வழங்கிக் கொண்டாடினார்.
 
சிவாஜி குடும்பத்தினருடன் எஸ். எஸ். ஆர்., அஞ்சலிதேவி, வைஜெயந்திமாலா, எஸ்.வரலட்சுமி, எம்.என். ராஜம், ராஜசுலோசனா, விஜயகுமாரி, மனோரமா, சச்சு, சாரதா, மஞ்சுளா, ராதிகா, சுஹாசினி, குட்டி பத்மினி, சிவகுமார், விஜயகுமார், ஒய்.ஜி. மகேந்திரன், சரத்குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.
மிகவும் உணர்ச்சிவசப்பட்டு உருக்கமாக சரோ உரையாடியதிலிருந்து-
‘என்னுடன் நடித்த நடிகர் நடிகைகள் அனைவரையும் சந்தித்துப் பேச ஆசைப்பட்டேன். அதற்காகவே இந்த விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தேன்.
‘நீங்கள் அழைக்கும் அனைவரும் வருவார்களா...?’ என்று சிவகுமார் சந்தேகமாக என்னிடம் கேட்டார்.
‘என் மீது எல்லாருமே பாசமாக இருப்பார்கள். அதனால் அத்தனை பேரும் நிச்சயமாக வருவார்கள் என்றேன். நான் எதிர்பார்த்தபடி அனைவரும் வந்து விட்டார்கள்.
எங்க அக்கா வைஜெயந்திமாலா வந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.
என் தோழி விஜயகுமாரி... அவளும் நானும் எப்பப் பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருப்போம்.வர மாட்டேன் என்று சொல்லிவிட்டு சர்ப்ரைஸாக வந்து நிற்கிறாள்.
எம்.ஜி.ஆர். இல்லத்தில் இருந்து யாரும் வரவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். லதாவும், நிம்மியும் வந்து என்னை சந்தோஷப்படுத்தி விட்டார்கள்.
சிவாஜி குடும்பத்தினரை நான் அழைக்காமலே வந்து விடுவார்கள். அவர்கள் வீட்டில் நானும் ஒருத்தி. ராம்குமார், தேன்மொழி, பிரபு- புனிதா, வந்ததில் சந்தோஷம்.
என் ஹீரோ எஸ்.எஸ். ஆர். ஆலயமணி படத்தில் ‘கண்ணான கண்ணனுக்கு அவசரமா...?’ பாடலில் என்னுடன் நடித்தவர் வந்திருக்கிறார். அவருக்கு என் நன்றி!
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்பவே இந்த நிமிடமே என் உயிர் பிரிந்தால் சந்தோஷப்படுவேன்.’
------------------

பொன்விழா கடந்தும் பிரமாதமாகத் தொடர்கிறது சரோவின் கலையுலக வாழ்வு! எக்காலத்திலும் அதில் எந்தவொரு கிசுகிசுவையும் எவரும் சொல்ல முடியாதபடி அரிதானப் புகழைச் சம்பாதித்தவர் சரோ!
2008 ஜனவரி 28. சரோஜாதேவி குறித்து எதிர்பாராமல் எழுந்த அவதூறு, சரோவையும் கோடிக்கணக்கான அபிநய சரஸ்வதியின் அபிமானிகளையும் ஒரே நேரத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஜனவரி 30 புதன்கிழமை - நாளிதழ்களில் வெளியான செய்தித் தொகுப்பின் சில பகுதிகள்:

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ். எம். கிருஷ்ணா. அவரது அமைச்சரவையில் கல்வி மந்திரி - எச். விஸ்வநாத்.
விஸ்வநாத் எழுதிய நூல் ‘ஹள்ளி ஹக்கிய ஹாடு’. கிராமத்துக் குயிலின் கீதம்! என்று தமிழில் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
விஸ்வநாத்தின் ‘மலரும் நினைவுகளில்’ விவகாரம் எழுந்தது.
‘ஒரு முறை நானும் முதல்வர் கிருஷ்ணாவும் ஒன்றாகப் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது ஒரு தினசரி,
‘மாண்டியா எம்.பி. தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சரோஜாதேவி நிறுத்தப்படுவார்... ’என்ற செய்தியை வெளியிட்டு இருந்தது.
‘என்னங்க... பத்திரிகைகாரர்கள் இப்படி எழுதியிருக்கிறார்கள்... மக்கள் என்ன சொல்வார்களோ...? ’ என்று என்னிடம் கேட்டார் முதல்வர்.
அப்போது எனக்குப் பழைய கதைகள் ஞாபகத்தில் தைத்தன.
‘நடிகை சரோஜாதேவியும் இளம் தலைவர் எஸ். எம். கிருஷ்ணாவும் காதல் வலையில் சிக்கி இருந்தார்கள்’ என்று சுவாரஸ்யமாக முன்பு பேசப்பட்டு வந்ததை நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.


‘சார்... என்ன ஆனாலும் கிருஷ்ணா அவருடைய பழைய நண்பரை மறக்க முடியாது. மாண்டியாவில் அந்த அம்மாவுக்கே டிக்கெட் கொடுப்பார்..., என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்’ என்றேன்.


அதைக் கேட்டு சிரித்த எஸ். எம். கிருஷ்ணா சந்தோஷமாக,
‘பாருங்கள் விஸ்வநாத், நாம் அப்படி யாரையும் மறந்து விடக் கூடாது அல்லவா...? ’ என்று கேட்டார்.


ஜனவரி 28 - திங்கட்கிழமை. புத்தக வெளியீட்டு விழா மைசூரில் நடைபெற ஏற்பாடுகள் தயாரானது.


எஸ். எம். கிருஷ்ணாவின் தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டதால் அந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. மறு நாள் ஜனவரி 29ல் நூல் விற்பனைக்கு வந்தது.
விஸ்வநாத் எழுதிய ‘ஹள்ளி ஹக்கிய ஹாடு’ சரோவை ரொம்பவே ரணப்படுத்தியது.


‘சரோஜாதேவி ஆவேசம்! ’ என்றத் தலைப்பில், அவரது பேட்டியைப் பத்திரிகைகள் பாரா பிரித்து பிரசுரித்தன.
‘எஸ். எம். கிருஷ்ணாவைப் பற்றி எழுதுகையில், என்னைப் பற்றி விஸ்வநாத் குறிப்பிட்டு இருப்பதை அறிந்து நான் பெரிதும் வேதனை அடைந்தேன்.
விஸ்வநாத் தனது சுயசரிதையில், தன்னைப் பற்றி மட்டுமே எழுத வேண்டும். அடுத்தவரைப் பற்றி எழுதும் உரிமை அவருக்கு மட்டும் இல்லை யாருக்குமே கிடையாது.
எத்தனையோ நடிகைகள் அரசியலில் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் விட்டு விட்டு என்னை, என் பெயரை ஏன் விஸ்வநாத் குறிப்பிட்டார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
பெண்ணைப் பற்றி குறிப்பாக ஒரு நடிகையைப் பற்றி இப்படிச் சிறுமைப்படுத்தும் விதத்தில் பேசுவது அவமானகரமாக உள்ளது.
‘எஸ். எம். கிருஷ்ணாவைத் தனிப்பட்ட முறையில் உங்களுக்குத் தெரியுமா...?’ ‘எஸ். எம். கிருஷ்ணா பற்றி நான் பேசத் தயாரில்லை... ’ என்று ஆவேசமாகக் கூறினார் சரோஜாதேவி.


எஸ். எம். கிருஷ்ணாவின் மனைவி பிரேமா,‘எங்கள் திருமணத்துக்கு முன்பு சரோஜாதேவிக்கும், என் கணவர் கிருஷ்ணாவுக்கும் திருமணப்பேச்சு நடைபெற்றது நிஜம். அது எல்லாருக்கும் தெரிந்த செய்தி. இத்தனை வருடங்கள் கழித்து, இப்போது அதனை எழுத வேண்டிய அவசியம் என்ன வந்தது என்பது தெரியவில்லை. ’


தம்பி எஸ். எம். சங்கர் கூறியவை-
‘சரோஜாதேவி எங்கள் தூரத்து உறவினர். அண்ணனுடன் கல்யாண பேச்சு வந்தது. எங்கள் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. ’
--------------

2011 - பிப்ரவரி 13 ஞாயிறு மாலை. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கோலாகல விழா.

‘நான் 6வது முறையாக முதல் அமைச்சராக வந்தால் 125 கலைஞர்களுக்கு அல்ல, 225 பேருக்கு விருதுகள் வழங்கப்படும்’என்று ‘கலைமாமணி’ வழங்கும் விழாவில் அறிவித்தார் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி. அன்று ஆர்யா, அனுஷ்கா, தமன்னா, ஆகிய இளைய தலைமுறைப் பிரபல நட்சத்திரங்களுடன் சேர்ந்து, தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றம் அளித்த கலைமாமணி விருதைப் பெற்றுக் கொண்டவர்களில் ‘அபிநய சரஸ்வதி சரோஜாதேவியும்’ மிக முக்கியமானவர்!

‘திரையுலக சகாக்களான புரட்சித்தலைவரும் - புரட்சித்தலைவியும் இத்தனை ஆண்டுகள் தமிழக முதல்வர்களாக இருந்தும், சரோஜாதேவிக்கு இதுவரையில் கலைமாமணி கொடுக்காமலா இருந்தார்கள்..! ’ என்று வியப்பில் புருவத்தை உயர்த்தினார்கள் பொது மக்கள்.
காலம் கடந்தாவது சரோவுக்குக் கலைமாமணி கிடைத்ததே என்று அபிநய சரஸ்வதியின் ரசிகர்கள் மகிழ்ந்திருப்பார்கள். கலைமாமணி என்கிற கவுரவம் பெறாமலே, எம்.ஜி. சக்கரபாணி, தேவிகா போன்ற எத்தனையோ நடிப்புக் கருவூலங்கள் இயற்கை எய்தி விட்டார்கள்.
2015 டிசம்பர் முதல் வாரம்.
வரலாறு காணாத இடை விடாத மழை சென்னையைப் புரட்டிப் போட்டது. வள்ளல் எம்.ஜி.ஆர். வாழ்ந்த ராமாபுரம் இல்லமும் அதில் சிதறுண்டது. புரட்சித்தலைவர் பயன் படுத்திய ஏராளமான பொருள்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
‘பொன்மனச் செம்மலின் ரசிகர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தாலும் போதும். வாத்தியாரின் வீட்டைப் புதிதாகச் செய்து விடலாம்’ என்று சரோஜாதேவி ஓர் அறிக்கை வெளியிட்டார்.
‘அ. தி.மு.க.வே மக்கள் திலகத்தின் குடிலை சீர்ப்படுத்த ஏற்பாடுகள் செய்யும்’ என்று தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
2016 ஜனவரி 7. வியாழக்கிழமை. சரோஜாதேவி தனது பிறந்த நாள் அன்று சென்னைக்கு விசேஷ விஜயம் செய்தார்.
 
வெள்ள நிவாரண நிதிக்காக நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம், சிவகுமார் முன்னிலையில் ஐந்து லட்ச ரூபாய் வழங்கினார்.இன்னும் இரண்டே ஆண்டுகளில் சரோவுக்காக இனிய சதாபிஷேகம் காத்திருக்கிறது!
எத்தனையோ நிலவுப் பாடல்களுக்கு உயிரூட்டியது சரோவின் உற்சாக நடிப்பு. அபிநய சரஸ்வதி ஆயிரம் பிறை காணும் திருநாள் அவசியம் விரைவில் வரட்டும். சரோ பல்லாண்டு வாழட்டும்!
 

http://www.dinamani.com

  • கருத்துக்கள உறவுகள்

அபிநய சரஸ்வதி பற்றிய அருமையான பகிர்வு.... நன்றி நவீனன்....!! tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.