Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘‘மதுவினால் சுயநினைவிழந்த பெண்’ என்பதே என் பெயராகிப் போனது!’’ - பாலியல் தீண்டலுக்கு ஆளான பெண்ணின் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2015-ம் ஆண்டு ஜனவரி மாதம். அமெரிக்கா, ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பைக்கில் செல்லும்போது, அந்த இரவில், சுயநினைவின்றியும், ஆடைகள் பாதி அகற்றப்பட்டும் கிடந்த பெண்ணை, ஒருவன் பாலியல் தீண்டல் செய்துகொண்டிருப்பதைக் காண்கிறார்கள். அந்தப் பெண் மீட்கப்பட, தப்பி ஓட முயற்சித்த அந்த ஆண், 20 வயதான பிராக் ஆலன் டர்னர் என்று தெரியவருகிறது. வழக்குப் பதிவுசெய்யப்படுகிறது. டர்னர் ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்காக சிறை சென்றவன்.

இந்நிலையில், 2016, ஜூன் 2ம் தேதி இவ்வழக்கின் தீர்ப்பில், ‘கடுமையாக பாதிக்காத வண்ணம்’ டர்னருக்கு 6 மாத காலம் சிறை தண்டனை அளித்தார் நீதிபதி. ஆனால், அந்தத் துன்புறுத்தலால் தன் உடலும், மனமும் எவ்வளவு ‘கடுமையாகப் பாதிக்கப்பட்டது’ என்பதை மிகவும் உணர்வுப்பூர்வமாகவும் உண்மையாகவும் கடிதமாக எழுதி எடுத்து வந்திருந்த அந்தப் பெண், தீர்ப்பு நாளில் அதை அந்த நீதிபதியிடம் வாசித்துக் காட்டினார்.

தீர்ப்புக்கு மறுநாள், 7,200 வார்த்தைகள் கொண்ட அந்தக் கடிதம் இணையத்தில் வெளியிடப்பட, உலகம் முழுக்க அதிர்ச்சியும் உருக்கமுமாக வாசிக்கப்பட்டுவருகிறது அந்தப் பெண்ணின் எழுத்து.
கடிதம் இப்படி துவங்குகிறது...

“எந்தப் பிரச்னையும் இல்லையென்றால், நான் நேரடியாக சில விஷயங்களைக் கூற விரும்புகிறேன்.
நான் உனக்கு அறிமுகம் இல்லாதவள். ஆனால், என் உடலை நீ கீழ்த்தரமாகப் பயன்படுத்தியது, இன்று உன்னையும் என்னையும் இங்கு நிற்கவைத்திருக்கிறது.

girlmurderconcept5501.jpg

2015ம் வருடம் ஜனவரி 17ம் தேதி. வார இறுதியில் வீட்டுக்கு வந்திருந்த தங்கையுடன், செல்லமாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்த நிறைவான சனிக்கிழமை அது. அவள் தனது நண்பர்களுடன் பார்ட்டிக்குச் செல்லப் புறப்பட்டாள். நான் வீட்டில் இருந்து புத்தகங்கள் வாசிக்கலாம் என்று நினைத்தேன். தங்கை மறுநாள் ஊருக்குக் கிளம்ப இருந்ததால், அவளுடன் நேரம் செலவழிக்க ஆசைப்பட்டு, நானும் பார்ட்டிக்குக் கிளம்பினேன். என் தங்கை நான் அணிந்திருந்த நீளமான உடையைக் கிண்டலடித்தபடியே வர, இருவரும் மகிழ்ச்சியுடன் பார்ட்டி ஹாலில் நுழைந்தோம். நான் மது அருந்தினேன்.

அடுத்து எனக்கு நினைவில் இருப்பது, ஒரு மருத்துவமனையில் நான் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த தருணம்தான். கை மற்றும் தோள்களில் காய்ந்த ரத்தக்கறைகள். பேண்டேஜ்கள் ஒட்டப்பட்டு இருந்தன. என் தங்கையைக் காணவில்லை. அவளது நண்பர்களையும் காணவில்லை. ஒருவர் வந்து என்னிடம், ‘நீங்கள் தாக்கப்பட்டிருக்கிறீர்கள், அமைதியாக இருங்கள்’ என்றார். யாரோ என நினைத்து என்னிடம் பேசுகிறார் என்றே நினைத்தேன்.

சிறிது நேரம் கழித்து கழிவறைக்குச் சென்றபோது, நான் உள்ளாடை இல்லாது இருப்பதை உணர்ந்தேன். என்ன ஆயிற்று எனக்கு? என் உள்ளாடை எங்கே? சட்டென ஒரு கொடூரமான அமைதி என்னைப் பிடித்துக்கொண்ட அந்த நொடியை விவரிக்க இயலாது.

womenissue550111.jpg

வெளியே வந்தபோது, என்னைப் பல அறைகள் கடந்து அழைத்துச் சென்றார்கள். அப்போது என் கழுத்தில், முதுகில், கேசத்தில் பைன் மர முட்களும் மண்ணும் இருந்ததை உணர்ந்தேன். ‘என்ன ஆயிற்று எனக்கு?’ என்ற கேள்வி, இன்னும் அடர்த்தியான அச்சத்தை உள்ளுக்குள் இறக்கியது. சிறிது நேரத்தில், என் ஆடைகள் அகற்றப்பட்டு என் உடல் பரிசோதிக்கப்படுகிறது. என் உடலின் சிராய்ப்புகளை அவர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள். இப்போதும் எனக்கு என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. என் பெண் உறுப்பிலும், பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சில மணி நேரம் கழித்து, நான் குளிக்க அனுமதிக்கப்படுகிறேன். முழுக்கத் தண்ணீர் வழிய நின்ற அந்த கணத்தில், என் உடலுக்கு ஏதோ நேர்ந்திருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. ஓர் ஆடையைப்போல, அந்த உடலை அப்படியே மருத்துவமனையில் கழற்றிவீசிவிட்டு வெளியேறவிடமாட்டோமா என்று நெஞ்சு பதறுகிறது.

வெளியே வந்தபோது, ஆறுதலான அணைப்புகள் தந்து அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
‘‘பரிசோதனைகள் முடிந்தன. உங்களை ஒருவன் வன்புணர்ச்சிசெய்ய முற்பட்டிருக்கிறான். நீங்கள் இப்போது வீட்டுக்குச் செல்லலாம்.’’

womennewlight3001.jpgஇந்த சுருக்கமான, உயிர் உடைத்துப்போட்ட தகவலுடன் நான் எப்படி என் வாழ்க்கைக்குத் திரும்புவது?
பார்க்கிங்கில் கண்ணீரில் நமத்துப்போன முகத்துடன் நின்றிருந்த என் தங்கையைப் பார்த்தபோது, என்னைக் கிழித்த கேள்வி பற்றி மறந்து, அவள் வலியைக் குறைக்க நான் புன்னகைத்தேன். என் உடல் முழுக்க ஒளிந்திருந்த கீறல்கள், காயங்களும், என் பிறப்புறுப்பில் ஏற்பட்டுள்ள வலியும், அதைவிட அதிகமான என் மனவேதனையும் அவளுக்குத் தெரிய வேண்டாம். என் உள்ளாடை எங்கு கிடக்கிறது என்பது எனக்கே தெரியாது என்பதும், அவளுக்குத் தெரிய வேண்டாம்.

என் நண்பன் தொலைபேசியில் தொடர்புகொண்டான். முந்தைய நாள் இரவில், அவனை நான் அலைபேசியில் அழைத்ததில் ஏதோ பதற்றம் தெரிந்ததாகச் சொன்ன அவன், ‘நீ பத்திரமாக வீடுபோய் சேர்ந்தாயா?’ எனக் கேட்டான். ஆனால், அது எதுவுமே எனக்கு நினைவில் இல்லை. ‘பத்திரமாக இருக்கிறேன்’ என்று மட்டும் அவனுக்குப் பதிலளித்தேன்.

நண்பனிடமோ, என் பெற்றோரிடமோ, யாரிடமோ என்னவென்றே நான் அறியாத, எனக்கு நிகழ்ந்த அந்த துயரத்தையும், நான் அனுபவிக்கும் வேதனையையும் பற்றிப் பகிர்ந்துகொள்ளக்கூடாது என முடிவெடுத்தேன். என் மனதை சுத்தமாக்க நினைத்து நினைத்து, தோற்றுப் போனேன். உண்ண முடியவில்லை. உறக்கம் தொலைந்துபோனது. அடிக்கடி ஒரு தனிமையான இடம் தேடிச்சென்று கதறிக் கதறி அழுதேன்.

ஒருநாள், அலுவலகத்தில் அலைபேசியில் செய்திகள் படித்துக்கொண்டிருந்தேன். அந்த இரவில் எனக்கு என்ன நேர்ந்தது என்பதை, அந்தச் செய்தி எனக்குச் சொன்னது.

நான் சுயநினைவின்றி கிடந்திருக்கிறேன். கேசம் கசங்கியும், மேலாடைகள் இழுக்கப்பட்டும், கீழ் ஆடைகள் களையப்பட்டும், கால்கள் பிரிக்கப்பட்டும், அந்தரங்கமான அத்துமீறலுக்கு உட்பட்டும் கிடந்திருக்கிறேன் என்று, எனக்கு நேர்ந்த கொடுமையை உலகம் தெரிந்துகொண்ட அதே கணத்தில்தான் நானும் தெரிந்துகொண்டேன். இறுதி வாக்கியம்தான், என்னை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு உலுக்கியது. என் சம்மதத்துடன், எனக்குப் பிடித்திருந்ததால்தான் என்னை பாலியல் தீண்டல் செய்ததாகக் கூறியிருந்தான் அவன்.

அவன்?

யார் அவன்? எனக்கு யாரென்றே தெரியாத அவன். என் வாழ்வின் சந்தோஷம், நிம்மதி அனைத்தையும் தன் கீழ்த்தரமான செய்கையால் ஓர் இரவில் பறித்துபோட்ட அவனைப் பற்றி, ‘ஒலிம்பிக்குக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்க திறன்பெற்ற நீச்சல் வீரன்’ என்ற குறிப்பும் அந்தச் செய்தியில் இருந்தது. நான் அனுபவித்த பாலியல் கொடுமையின் கிராஃபிக் விளக்கங்கள் தரப்பட்ட அதே செய்தியில், அவன் நீச்சல் திறன் பற்றிய குறிப்பு. அதே செய்தியின் இன்னொரு பத்தி எனக்குத் தந்தது, என்னால் மன்னிக்க முடியாத அதிர்ச்சி.

girlrap60011.jpg

அவனைப் பொருத்தவரை, எனக்கு நிகழ்ந்ததை நான் விரும்பினேன் என்று, எனக்காகவும் அவனே பேசியிருந்தான். அதைப்படித்தபோது எனக்குள் கொதித்ததை, வார்த்தைகளில் சொல்ல முடியாது.
அன்றிரவு அந்தச் செய்தி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட, என் பெற்றோரிடம் அந்தப் பெண் நான்தான் என்றும், ஆனால் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும், அதிலிருந்து நான் மீண்டுவிட்டதாகவும் கூறினேன். 

இந்தக் கொடூரத்தை எனக்கு இழைத்தது யாரென்று தெரிந்துவிட்டது. தகுந்த ஆதாரங்களும் இருந்ததால் அவனுக்குத் தண்டனை கிடைப்பது உறுதி, இந்த வழக்கு விரைவில் முடிந்துவிடும் என்று நம்பினேன். ஆனால், அதிகப் பணம் கொடுத்து வழக்கறிஞர்களை அவன் அமர்த்தியிருந்தான். அவர்கள், மது அருந்தி இருந்ததால் நினைவற்று இருந்த என்னுடைய அந்த நிலையை அவர்களுக்கு சாதமாக்கிக்கிக்கொண்டு வாதாடினார்கள். அவன் வலுக்கட்டாயப்படுத்தி உடலுறவுக்கு முயற்சிக்கவில்லை, அது நானும் விரும்பி நடந்த நிகழ்வு என்று ஜோடித்தார்கள். மேலும், அவன் சூழ்நிலையின் குழப்பத்தில்தான் அதைச் செய்தான் என்பதை நிரூபிக்க பிரயத்தனப்பட்டார்கள். என் மீதும்தான் தவறு என்பதை ஒப்புக்கொள்ள வற்புறுத்தினார்கள். 

‘உன் வயது என்ன? உன் எடை என்ன? நீ அன்றைய தினம் என்ன சாப்பிட்டாய்? அன்று குடித்திருந்தாயா? எப்போது சிறுநீர் கழித்தாய்? யாருடன் சிறுநீர் கழித்தாய்? உன் காதலனோடு ஏற்கெனவே உடலுறவு கொண்டிருக்கிறாயா? உனக்கு வேறு என்ன நினைவிருக்கிறது?’  இவையெல்லாம் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள். என் குடும்பம், என் காதல், என் அலுவல் என்று எல்லா தளங்களிலும் என்னை அவமானப்படுத்தும் கேள்விகள். என்னை ஒரு குடிகாரப் பெண்ணாகச் சித்தரித்து, வழக்கை அவனுக்குச் சாதமாக்க உருவாக்கப்பட்ட கேள்விகள். 

womenrapprotest55031.jpg

என்னிடமும் கேள்விகள் உள்ளன. பிராக் என்ற பெயருடைய நீ, என் அனுமதியுடன், விருப்பத்துடன்தான் என்னை அணுகியதாகக் கூறியிருக்கிறாய். நான் சுயநினைவின்றி கீழே விழுந்துவிட்டதாகக் கூறியிருக்கிறாய். கீழே விழுந்த பெண்ணை, அதுவும் சுயநினைவின்றி இருக்கும் பெண்ணை தூக்கிவிட வேண்டுமே தவிர, நீ செய்ததுபோல உன் கேவலமான இச்சை தீர அவல் உடலில் விழுந்து, அவளை விழுங்க முயற்சித்திருக்கக் கூடாது.

இருவரும் குடித்திருந்ததால் இருவரும் நிதானம் இழந்திருந்தோம் என்று கூறியிருக்கிறாய். ஆம், இருவரும் குடித்திருந்தோம். குடிப்பழக்கம் தவறுதான், ஒத்துக்கொள்கிறேன். ஆனால், நான் குடித்தது மட்டுமே எனக்கு நிகழ்ந்த இந்த அநியாயத்துக்குக் காரணமல்ல. நீ குடித்திருந்தது, உன் கேவலமான செய்கையில் இருந்து தப்பிப்பதற்கான சாக்கும் அல்ல. இருவரும் குடித்திருந்தாலும், உனக்கும் எனக்குமான வித்தியாசம்... நான் குடித்ததனால் உன்னை நிர்வாணமாக்க முற்படவில்லை, உன்னை அருவருக்கத்தக்க வகையில் தொடவில்லை, என் விரல்கள் உன் உடலுக்கு கீழ்த்தரமான பாலியல் துன்புறுத்தல்  இழைக்கவில்லை.

girlrapleftttt1.jpgமேலும், குடிப்பழக்கம் வாழ்க்கையையே சிதைத்துவிடும் என உலகுக்குக் காட்ட இப்படி நடந்துகொண்டதாக குறிப்பிட்டிருக்கிறாய். உன் வாழ்வு மட்டுமா? என் வாழ்வும் சிதைந்துபோனது. நீ உன் சாதனைகள், பட்டங் களைத் தொலைத்துவிட்டதாகக் குமுறுகிறாய். நான் உள்ளே எவ்வளவு உருக்குலைந்து கிடக்கிறேன் தெரியுமா? என் மதிப்பு, என் அந்தரங்கம், என் சக்தி, என் நேரம், என் தன்னம்பிக்கை, என் குரல்... என் பெயர் உட்பட அனைத்தையும் இழந்து நிற்கிறேன். ‘மதுவினால் சுயநினைவிழந்த பெண்’... இப்படித்தான் என்னை செய்தித்தாள்கள் குறிப்பிடுகின்றன. இந்த ஓர் ஆண்டில் இதுவே என் அடையாளமாகிப்போனது. இதிலிருந்து என்னை நான் எப்படி மீட்பது? அதே சமயம் உன்னை, ‘அமெரிக்க நீச்சல் வீரர்’ என்று ஊடகம் குறிப்பிடுவதை, ஆற்றாமையும் கொதிப்புமாக கடந்துகொண்டிருக்கிறேன்.

அந்த இரவுக்கு முன்பு நான் வாழ்ந்த வாழ்க்கையை உன்னால் எனக்கு மீண்டும் அளிக்க இயலாது. என்னால் இரவில் வெளிச்சம் இல்லாமல் உறங்க முடியவில்லை. பல நாட்கள் என்னை யாரோ தொடுவதுபோல உணர்ந்து விழித்து எழுந்து, அந்த பயம் மீதி இரவின் தூக்கம் பறித்துக்கொள்ள, காலையில் 6 மணிக்கு வெளிச்சம் பார்த்ததும்தான் கண்கள் மூடுகிறேன். ஒரு காலத்தில் என் சுதந்திரத்தைப் பற்றி பெருமையாக பேசித்திரிந்த நான், இன்று என் நண்பன் இல்லாமல் எங்கும் செல்வதில்லை. உறங்கும்போதும் அவனுடைய பாதுகாப்பு தேவைப்படுகிறது.

நீ என் உலகத்தை எனக்கு அந்நியப்படுத்திவிட்டாய். ‘மதுவினால் சுயநினைவிழந்த பெண்’ என்பதை என் அடையாளமாக மாற்றிவிட்டாய். உன்னால் நான் உறங்காமல் தவித்த இரவுகளை திரும்பக்கொடுக்க முடியாது. ஸ்பரிசங்கள் எனக்குத் தரும் அச்சங்களை அகற்ற முடியாது. நான் அழுத, அழவிருக்கும் அழுகைக்கு பதில் சொல்ல முடியாது.

இந்தத் தருணத்தில், சிலருக்கு நன்றி கூற வேண்டும். அன்று காலை நான் எழுந்ததும் உணவு கொடுத்தவருக்கும், என்னை அமைதிப்படுத்தியவர்களுக்கும், என் இன்னொரு பாதியான என் தங்கைக்கும், என்னை முழுவதும் புரிந்துகொண்டு பலமாக நிற்கும் என் நண்பனுக்கும், என்னை முன் மதிப்பீடுகள் இன்றி விசாரித்த அதிகாரிகளுக்கும், என் வழக்கறிஞருக்கும், என்னைப் புரிந்துகொண்ட என் முதலாளிக்கும், என் வலியை பலமாக மாற்றிய என் பெற்றோருக்கும், எனக்குத் துணையாக நின்ற அனைவருக்கும்... நன்றி. குறிப்பாக அன்றிரவு என்னைக் காப்பாற்றிய முகம் தெரியாத அந்த இரு ஆண்களுக்கும் நன்றி.

இறுதியாக... உலகெங்கும் உள்ள பெண்களே, நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தனிமை உணரும் இரவுகளில், நீங்கள் சந்தேகிக்கப்படும் பொழுதுகளில், நான் உங்களுடன் இருக்கிறேன். உங்களை யார் சந்தேகப்பட்டாலும் போராடுங்கள். வழக்கின் இந்த ஒராண்டு காலம் நான் போராடியது, எனக்காக மட்டுமல்ல, நம் அனைவருக்காகவும்தான். நீங்களும் போராடுங்கள். தொடர்ந்து போராடுங்கள்.

womenissue55012.jpg

எழுத்தாளர் ஆன் லமோட், “கலங்கரை விளக்கம் எல்லா படகுகளுக்கும் அருகில் சென்று வெளிச்சம் தராது; ஓர் இடத்தில் இருந்துகொண்டே அனைத்துப் படகுகளையும் வழிநடத்தும்’’ என்று கூறியிருப்பார். என்னால் ஒவ்வொரு படகையும் காப்பாற்ற முடியாது என்றாலும், இன்றைய என் பேச்சால், ஒரு சிறு ஒளிக்கீற்று உங்கள் மனதில் ஊடுருவியிருக்கும். நீங்கள் ஊமையாக்கப்பட முடியாது என்று புரியவைத்திருக்கும். எங்கெங்கோ இருந்தாலும், நாம் அனைவரும் இணைகிறோம் என்பதற்கான ஆரம்ப நம்பிக்கையை இது ஏற்படுத்தியிருக்கும்.

நீங்கள் முக்கியமானவர்கள், கேள்விகளுக்கும் சந்தேகத்துக்கும் அப்பாற்பட்டு நீங்கள் அழகானவர்கள், தீண்டப்படக்கூடாதவர்கள், மரியாதைக்குரியவர்கள், மதிப்புமிக்கவர்கள், சக்தி வாய்ந்தவர்கள். உங்களிடம் இருந்து உங்கள் பலத்தை யாராலும் பறிக்க முடியாது.

எங்கெங்கிருக்கும் பெண்களுடனும், நான் இருக்கிறேன். நன்றி!’’

 

http://www.vikatan.com/news/coverstory/65053-powerful-letter-the-stanford-victim-to-herattacker.art?artfrm=news_most_read

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் வாசித்ததில் மனதை கல்ங்க வைத்த பதிவு இது...இணைப்பிற்கு நன்றி நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ரதி said:

அண்மையில் வாசித்ததில் மனதை கல்ங்க வைத்த பதிவு இது...இணைப்பிற்கு நன்றி நிழலி

நிழலிதான் பிழம்பா????? சொல்லவேயில்லை :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.