Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ஒரு சமரசமான சில விட்டுக் கொடுப்புகளுடன் கூடிய அரசியலமைப்பே ஈற்றில் எமக்கு கிடைக்கும்"

Featured Replies

"ஒரு சமரசமான சில விட்டுக் கொடுப்புகளுடன் கூடிய அரசியலமைப்பே ஈற்றில் எமக்கு கிடைக்கும்"

 

நடராஜா குருபரனின் நேர்காணலில், கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரட்ண:-

 GTBC.Fm விழுதுகள் நிகழ்ச்சிக்காக கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்னவை நடராஜா குருபரன் அங்கிலத்தில் கண்ட நேர்காணலின் தமிழ் வடிவம்:-

குருபரன்: முதலில் நான் ஒரு பொதுவான கேள்வியுடன் நேர்காணலை ஆரம்பிக்கின்றேன். நீங்கள் இலங்கையின் அரசியலமைப்பு தொடர்பில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர். இந்த நவீன உலகின் தேவைக்கேற்றாற் போல அமைய, எவ்வாறான சவால்களை இலங்கையின் அரசியலமைப்பு முகம் கொடுக்கின்றது. இலங்கையில் உள் நாட்டுச் சிக்கல்களாக இனச்சிக்கல் மற்றும் மனித உரிமை குறித்த விடையங்கள் காணப்படுகின்றது. தற்போதைய அரசியலமைப்பில் இவற்றை எல்லாம் தீர்க்கக் கூடிய விடையங்கள் உள்ளடங்கியுள்ளன என நீங்கள் நினைக்கின்றீர்களா?

ஜெயம்பதி: இந்தச் சிக்கல்களை தீர்ப்பதற்கு தற்போதைய அரசியலமைப்பினால் சாதகமான எதிர்வினைகளை ஆற்ற முடியவில்லை. அதனாலே தான் எமக்கு புதிய அரசியலமைப்பு தேவைப்படுகின்றது. புதிய அரசிலமைப்பு என்பது மட்டுமல்ல, நவீன அரசியலமைப்பே எமக்குத் தேவைப்படுகின்றது. இறந்தகாலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் பதிலளிப்பதோடு, எதிர்காலத்தை குறித்தும் நாம் பார்க்க வேண்டும்.   எதிர்காலம் குறித்து பார்ப்பது என்பது வெற்றுப்பார்வையல்ல. எதிர்காலம் குறித்த பார்வையுடன் நாம் இதனைத் திட்டமிடல் வேண்டும். எவ்வாறான சிக்கல்கள் எதிர்காலத்திலும் தொடரும் என்பது குறித்துப் பார்க்க வேண்டும். ஆகவே வெறுமனே அரசியலமைப்பு என்றில்லாமல், எதிகாலத்திற்குமான அரசியலமைப்பாக இருக்க வேண்டும்.

குருபரன்: இலங்கையினுடைய அரசியலமைப்பின் வரலாற்றினை நாம் பார்த்தால், அதாவது 1931 இல் ஏற்படுத்தப்பட்ட டொனமூர் அரசியலமைப்பிலிருந்து இன்றுவரை, அரசியலமைப்பில் பல்வேறு மற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களுக்கான முயற்சிகள் கட்சிகளின் நலன் சார்ந்து அல்லது அரசின் நலன் சார்ந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

ஜெயம்பதி: 1931 இலிருந்து 1948 வரை பிரித்தானியாவே அரசியலமைப்பை எமக்கு தந்தது. எமது அரசியலமைப்பை நாம் உருவாக்கவில்லை. எமக்கும் தமக்கும் நன்மை பயக்கும் என அவர்கள் நினைத்த அரசியலமைப்பை, அவர்கள் எமக்குத் தந்தார்கள். 1947 இல் நாம் சுதந்திரம் அடையும் தறுவாயில் இருந்த போது, எமக்கு நன்மை பயக்கும் என அவர்கள் நினைத்த அரசியலமைப்பை எமக்குக் கொடுத்தார்கள். அதில் எமக்குத் தெரிவுகள் இருக்கவில்லை. அது கொடுக்கப்பட்ட அரசியமைப்பு. அது உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு அல்ல. 1972 இல் எமக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் அதுவும் தவற விடப்பட்டது. 1972 இல் அரசியலமைப்பு குறித்த விவாதங்களை நீங்கள் பார்த்தால் தெளிவாக புரியும் விடையம் யாதெனில், அந்த அரசியலமைப்பு, ஐக்கிய முன்னணியால் திணிக்கப்பட்டது. 1978 இல் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு ஐக்கிய தேசிய கட்சியினால் திணிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று முதன் முதலாக எமக்கான அரசியலமைப்பை நாம் உருவாக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மற்றையவர்களிடம் இருந்து பெறும் அரசியலமைப்பாக இல்லாமல், அனைத்துக் கட்சிகளினதும் பங்களிப்புடன் எமக்கான அரசியலமைப்பை நாம் உருவாக்கும் நல்லதொரு சந்தர்ப்பமாக இது அமைகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கோ தனிப் பெரும்பான்மை இப்போது இல்லை. ஆனால், இருவரும் இணைந்து பணியாற்றுவதனால் ஒரு பெரும்பான்மையை அவர்கள் பெற்றிருக்கின்றார்கள். இந்தப் பெரும்பான்மை, அரசாங்கம் அமைப்பதற்கானதே. ஆனல் அவர்களுக்கு முன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை. மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்  பெறுவதற்கு அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகளில் தங்கியிருக்க வேண்டியுள்ளது.

ஆகவே, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பொன்னான சந்தர்ப்பம் இதுவாகும். ஆனால் இதில் சில சமரசங்கள் நடக்கும். ஏனெனில், எவருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை. எவருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாதது நல்ல விடையம் தான். இன்னொரு பக்கத்தில், இவ்வாறான சமநிலை காணப்படுவதால், ஒரு சமரசமான சில விட்டுக்கொடுப்புகளுடன் கூடிய அரசியலமைப்பே ஈற்றில் எமக்கு கிடைக்கும். ஒவ்வொருவரது பார்வைக்கும் ஏற்றாற் போலான மிகச் சிறந்த அரசியலமைப்பை அடைய முடியாது. உங்களது பார்வைக்கு மிகச் சிறந்ததாக கருதும் ஒரு அரசியலமைப்பு உங்களிற்கு கிடைக்காது. தற்போதைய சூழலிற்கமைவான சிறந்த அரசியலமைப்பே உங்களிற்கு கிடைக்கும். இது குறித்து நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

குருபரன்: 1947 இல், சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான சில காப்பீடுகளை உள்ளடக்கி இருந்த சோல்பரி அரசியலமைப்பிற்கு எதிராக வலுவான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கலாநிதி.என்.எம்.பெரேரா மற்றும் கலாநிதி.கொல்வின்.ஆர்.டி.சில்வா உள்ளடங்கலான அரசியல் தலைவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டன. இது குறித்து தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் கணக்கெடுக்கப்படவில்லை. இது இடதுசாரிகளின் வரலாற்றுத் தவறு இல்லையா?

ஜெயம்பதி: நீங்கள் சோல்பரி அரசியலமைப்பின் 29 வது சரத்தைக் குறிப்பிடுகிறீர்கள். இந்த 29 ஆவது சரத்து சிறுபான்மையினருக்கான உரிமைகளுக்கான காப்பீடாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது அவ்வாறான காப்பீடாக இருந்ததா என்றால் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசாங்கம் மலையகத் தமிழரின் வாக்குரிமையைப் பறித்த போது (ஜி.ஜி.பொன்னம்பலமும் அதற்கு ஆதரவழித்தார்), 29 ஆவது சரத்து மலையகத் தமிழர்களிற்கு உதவியாக இருக்கவில்லை. இந்த 29 ஆவது சரத்து வழங்கிய காப்பீடு உச்ச நீதிமின்றிலேயோ அல்லது பரிஸ் சபையிலேயோ மலையகத் தமிழர்களிற்கு உதவி புரியவில்லை.

ஆனால், 1972 அரசியலமைப்பில் சிறுபான்மையினரிற்கான பாதுகாப்பு இல்லை என கூறுவது தவறானது. அதில் பாகுபாடுகளிற்கு எதிரான விடையங்கள் உண்டு. ஆனால், நிறைவேற்றப்பட்டதன் பின்னரான நீதித்துறை பரிசீலனை அதில் காணப்படவில்லை. நிறைவேற்றப்பட்ட பின்னர் அதில் எதுவும் செய்ய முடியாது. அத்துடன், ஏற்கனவே இருந்த அடிப்படை உரிமைகளை மீறக்கூடிய விடையங்களும் அதில் தொடர்ந்தன. அவ்வாறு, தனிச் சிங்களச் சட்டம் தொடர்ந்தது. இது தான் 1972 அரசியலமைப்பில் உள்ள சிக்கல். உரிமைகள் என்பது குடிமக்களுக்கு உரியதாக இருக்க வேண்டுமே தவிர குழுக்களிற்கு உரியதாக இருக்க கூடாது. ஆனால் சோல்பரியின் 29 ஆவது சரத்து குழுக்களுக்கானதாக இருக்கின்றது.

குருபரன்: ஆரம்பத்தில் இலங்கையின் சிறுபான்மையினர் இனப்பாகுபாடின்றி இடதுசாரிகளில் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால் வாசுதேவ நாணயக்கார உள்ளடங்கலாக அனேகமாக எல்லா இடதுசாரித் தலைவர்களும் சிங்கள பேரினவாத கருத்தியலுக்குள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வீழ்ந்து விட்டார்கள். ஒரு இடதுசாரியாக நீங்கள் இதனை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

தற்போது மறுபடியும் தமிழ்ப் புத்திசீவிகள் மிதவாத சிங்கள இடதுசாரிகளை நம்பத் தொடங்கி யிருக்கிறார்கள். சிறுபான்மையினர் மீண்டும் இந்த இடதுசாரிகளால் ஏமாற்றப்பட வாய்ப்பிருக்கின்றதா?

ஜெயம்பதி: கடந்த காலத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினுடனான எமது கூட்டு எமது நிலைப்பாட்டில் தாக்கம் செலுத்தியிருந்தது என்பது உண்மை. அதே நேரம் நீங்களும் சில விடையங்களை விளங்கிக்கொள்ள வேண்டும். பிரஜா உரிமைகள் சட்டத்தில் நாங்கள் மிகத் தெளிவான நிலைப்பாட்டை எடுத்த போது, உங்களது தமிழ்த் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் அதில் அரச ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். ஆனால், நாங்கள் அந்த விடையத்தில் அரசிற்கு எதிராக வாக்களித்தோம். ஆனால், இதனால் நடந்தது என்னவென்றால், தெற்கில் நாம் ஆதரவை இழந்தமை தான். தமிழர்கள் எங்களுக்கு ஆதரவாக நடந்துகொள்ளவே இல்லை என்ற உண்மையையும் நீங்கள் எற்றுக்கொண்டேயாக வேண்டும். தமிழர்கள் இரண்டு வலதுசாரித் தமிழ்க் கட்சிகளுக்கே தொடர்ந்து ஆதரவழித்தனர். சமஸ்டிக்கட்சிக்கும் தமிழ்க் காங்கிரசிற்குமே தமிழர்கள் அந்த நேரத்தில் ஆதரவளித்தனர்.

பெரும்பாடுபட்டு கந்தையா மட்டுமே 1956 இல் பருத்தித்துறையில் வெற்றி பெற்றார். முதலில் நாங்கள் பல ஆதரவுகளைச் செய்தோம். 1956 இற்குப் பின்னர் நாம் இதனால் தெற்கில் ஆதரவை இழந்த பின்னர் எமது நிலைப்பாட்டை மாற்ற வேண்டியதாயிற்று. ஏனெனில் வடக்கில் எமக்கு ஆதரவு இன்மையே ஏலவே காணப்பட்டது. தமிழர்கள் இரண்டு வலதுசாரித் தமிழ்க் கட்சிகளுக்குமே தொடர்ந்து ஆதரவளித்து வந்தனர். இந்த விடையத்தையும் நீங்கள் கருத்திலெடுக்க வேண்டும். ஆனால், இன்று இடதுசாரிகள் சிறுபன்மையினரின் உரிமைகள் விடையத்தில் மிக மிகத் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கின்றார்கள். இது தொடர்பில், ஆரம்பத்தில் மொழிச் சிக்கல்கள் குறித்தே இடதுசாரிகள் கருத்திலெடுத்தார்கள். அதனாலேயே, 1950, 1960 களில் வெளிவந்த இடதுசாரிப் படைப்புகளில், அதிகாரப் பரவலாக்கம் குறித்துப் பெரிதும் பேசப்படவில்லை. ஆனால் 1975, 1976 களிலிருந்து பார்த்தால் தெரியும், இது அரச அதிகாரம் தொடர்பான சிக்கலே தவிர மொழிச் சிக்கல் மட்டுமல்ல என்பதை இடதுசாரிகள் விளங்கிக் கொண்டனர். 

1976, 1977 களில் லெஸ்லி குணவர்த்தன இது குறித்து எழுதியுள்ளார். எல்லா மட்டங்களிலும் அதாவது கிராம மட்டங்களில் பிரஜா சபைகளை நிறுவுதல், பிரஜா சபைகள் ஒன்றாகுமிடமாக மாவட்ட சபைகளை நிறுவுதல். இவ்வாறு மாநில சபைகளை நிறுவுவதன் ஊடாக அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டுமென ஆலோசனை கூறியுள்ளார். 1982, 1983 களில் நடந்த அனைத்துக் கட்சி மாநாட்டில் கலாநிதி.கொல்வின்.ஆர்.டி.சில்வா இது பற்றித் தெளிவுபடுத்தியிருந்தார். இப்போது அரசமைப்பு என்பது அவசியமாகின்றது. சுதந்திரக் கட்சியினுடனான எமது கூட்டில் சில வேறுபட்ட அனுபவங்கள் கிடைத்தாலும், பின்னர் அதாவது 1982 இற்குப் பின்னர் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் மிகத் தெளிவான நிலைப்பாட்டிலே நாம் உள்ளோம். அதிகாரங்களை பகிர்வதே முக்கியமானது. இந்தச் சிக்கல் வெறும் மொழிச் சிக்கல் இல்லை என்பதே எனதும் லங்கா சம சமாஜ கட்சியிலுள்ள பெரும்பாலானோரினதும் நிலைப்பாடு ஆகும்.

 

குருபரன்: புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் நீங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றீர்கள். முக்கிய சில சிங்கள பேரினவாதிகள் இந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஒவ்வொரு சொல்லிலும் கவனம் செலுத்துகின்றனர். அவர்கள் ஒரு குறைந்தபட்ச அரசியலமைப்புப் பாதுகாப்பைக் கூட சிறுபான்மையினருக்கு கொடுப்பதற்கு தயாராக இல்லை. நீங்கள் எப்படி இந்தச் சவால்களை சமாளிக்கப் போகின்றீர்கள்?

ஜெயம்பதி: தீவிரப் போக்குக் கொண்டோர் எப்போதும் இருப்பார்கள். எந்தவொரு தீர்வினையும் எதிர்க்கும் கருத்துக் கொண்ட சிங்களத் தீவிரப் போக்குக் கொண்டோர் சிலர் தெற்கில் இருக்கின்றார்கள். பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தின் மூலம் கொடுக்கப்பட்ட விடையங்களைக் கூட திருப்பப் பெற வேண்டும் என்ற கருத்துடையோரும் அவர்களில் இருக்கின்றார்கள். அதிர்ஸ்டவசமாக, சனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் றனில் ஆகியோர் இந்தத் தீவிரப் போக்காளர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. அவர்கள் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளார்கள். அந்த நிலைப்பாடு தொடரும் என நான் நம்புகின்றேன். தீவிரப் போக்குள்ளவர்கள் எப்போதும் கூச்சலிட்டுக்கொண்டு தான் இருப்பார்கள். நீங்கள் இன்னொன்றையும் மறக்கக் கூடாது. வடக்கிலும் தீவிரப்போக்குள்ள தமிழர்கள் இருக்கின்றார்கள். அவர்களைப் பொறுத்தவரை தீர்வு எட்டக் கூடாது. ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் தற்போது குறைவாகத் தான் உள்ளார்கள். கடந்த ஞாயிறுக்கிழமை நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன். யாழ்ப்பாண மேலாளர் கருத்துக் களத்தில் உரையாற்றியிருந்தேன். சிவில் சமூகப் பிரதிநிதிகளும் புத்திசீவிகளும் அங்கு வந்திருந்தனர். அது மிக மிக நல்லதொரு கலந்துரையாடலாக அமைந்திருந்தது. உண்மையில், கடுமையான பல சொல்லாடல்களை அந்தக் கலந்துரையாடலில் எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.   நான் அவர்களுக்கு சொன்னேன். எங்களால் மிகச் சிறந்த அரசியலமைப்பை உருவாக்க முடியாது. ஆனால், தற்போதைய சூழலிற்கேற்ற சிறந்த அரசியலமைப்பை உருவாக்க நாம் முயற்ச்சிப்போம். நாம் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படுவோம். அத்துடன், தெற்கிலுள்ள தீவிரப்போக்காளர்களுக்கு உதவும் வகையிலான நிலைப்பாட்டை வடக்கிலுள்ளவர்கள் எடுக்கக் கூடாது என்றும் கேட்டிருந்தேன். இருபக்கத் தீவிரப்போக்குகளும் ஒன்றையொன்று வளர்க்கும். சிங்களத் தீவிரப்போக்கு தமிழ்த்  தீவிரப்போக்குகளை ஊட்டி வளர்க்கும். அதே போல் தமிழ்த் தீவிரப்போக்கு சிங்களத் தீவிரப்போக்கை ஊட்டி வளர்க்கும். அதற்குள் விழுந்து விடக் கூடாது என்றும் அவர்களைக் கேட்டிருந்தேன். தீர்வு விடையத்தில் சொற்றொடர்களை மட்டும் பெரிதாகத் தூக்கிப் பிடிக்கக்கூடாது என்றும் சொல்லியிருந்தேன். அதாவது ஒற்றையாட்சி, சமஸ்டி, ஒன்றிணைந்த ஆட்சி,...இவ்வாறாக. எமக்கு அரசியலமைப்பின் உள்ளடக்கம் என்னவென்பதே முக்கியமனது என்றும் சொல்லியிருந்தேன்.  எமக்கு ஏறக்குறைய முப்பது வருட அனுபவம் இந்த அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் உள்ளது. இந்த அனுபவங்கள் வாயிலாக நாம் எவ்வாறானதொரு அரசியலமைப்பை உருவாக்கப் போகின்றோம் என்று பார்க்க வேண்டும். அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப் பட வேண்டும். அரசாங்கம்  வலது கையால் கொடுத்த அதிகாரங்களை இடது கையால் மீள எடுக்கத்தக்கவாறான முன் ஏற்பாடுகள் எதுவும் அரசியலமைப்பில் இல்லாதவாறு இருக்க வேண்டும். அதிகாரப் பகிர்ந்தளிப்பை தொடர்ச்சியாகப் பாதுகாக்கக் கூடியவாறான சிறப்பு ஏற்பாடுகள் அரசியலமைப்பில் இடம்பெற வேண்டும். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அந்த கலந்துரையாடல் எனக்கு பெரு மகிழ்வைக் கொடுத்தது. அதில் கலந்து கொண்ட பெருவாரியான புத்திசீவிகள் சிங்கள கடும்போக்குவாதிகள் தொடர்பில் ஏற்படக்கூடிய இடைஞ்சல்கள் என்பன பற்றி எல்லாம் தெளிவாகப் புரிந்து கொள்கின்றார்கள். அவர்கள் நடைமுறையில் உள்ள சிக்கல்களை தெளிவாகப் புரிந்து கொள்கின்றார்கள்.

 

குருபரன்: முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் மாற்றம் ஒன்றைச் செய்தார். ஆகவே, பேரினவாதிகள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றால், அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்யக் கூடியதாக இருக்கின்றது. இதனைத் தடுப்பதற்கு, பாராளுமன்றத்தினாலோ அல்லது நீதிமன்றினாலோ நீக்க முடியாதவாறு சிறுபான்மையினரது சில அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பில் நிரந்தரமாக இடம்பெற வேண்டுமென நீங்கள் நினைக்கின்றீர்களா?

இது சாத்தியமாகுமா? உதாரணமாக 1987 இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில், வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு இருந்தது. பின்னர் உச்ச நீதிமன்றத்தால் அது இல்லாமல் ஆக்கப்பட்டது.

ஜெயம்பதி:  ராஜபக்ச ஒருபோதும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறவில்லை. 2009 தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அவர் பெறவில்லை. 2010 இல், வெகுமதிகளை கொடுத்து உறுப்பினர்களை மயக்கி அவர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அவர் வாங்கினார். ஆகவே அது உண்மையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையாக இருக்கவில்லை. ஆனால் உங்களது கேள்வி எனக்குப் புரிகின்றது. இதில் ஆபத்து என்னவெனில் இவ்வாறு மீண்டும் நடைபெறலாம் என்பது தான். எனவே இதற்கான காப்புகளை நாம் செய்ய வேண்டும். மாகாணங்களின் சம்மதம் இல்லாமல், மாற்றங்களைச் செய்யமுடியாதவாறான ஏற்பாடுகளை நாம் கண்டறிய வேண்டும். இதைப் பல வழிகளில் செய்யலாம். முதலாவதாக, மாற்றங்களைச் செய்வதாயின் பாராளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஒவ்வொரு மாகாணத்திலும் இருந்து பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்றவாறான ஏற்பாட்டைச் செய்யலாம். இல்லை எனில் இரண்டாவதாக இன்னொரு வழி உள்ளது. அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான விடையங்களில் மாற்றத்தை செய்வதானால், ஒன்பது மாகாணங்களினதும் ஆதரவைப் பெற வேண்டும் என்றவாறான ஏற்பாட்டைச் செய்யலாம். இதில் இரண்டாவது வழிமுறையில், பெருவாரியான மாநிலங்களின் பிரதிநிதித்துவம் காணப்படுகின்றது. அரசியலமைப்பின் பரிந்துரைப்படி இன்னும் சிலர் சனாதிபதியால் நியமிக்கப்பட்டாலும் நல்லது. போதுமானளவு பிரதிநிதித்துவம் இல்லாத வேடுவர், ஆதிவாசிகள் போன்றோரின் நலன்களுக்கும் இடமளிக்கக் கூடியதாக குறிப்பாக இதைச் செய்யலாம். மலையகத் தமிழர்கள் இந்த அரசியலமைப்பில் கருத்தில் கொள்ளப்படுகின்றார்கள். நாங்கள் இந்த அரசியலமைப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வோம். அப்படிச் செய்தால் எந்தச் சிக்கலும் இருக்காது. வடக்கு-கிழக்கு இணைப்பைப் பற்றிக் கருதுவோமாயின், பதின்மூன்றாம் திருத்தச் சட்டம் வெறுமனே வடக்கு-கிழக்கு இணைப்பைப் பற்றிப் பேசவில்லை. அது மாகாணங்களின் சாத்தியமான இணைப்பைப் பற்றியே பேசுகின்றது. பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தில் மாகாணங்களின் சாத்தியமான இணைப்பைப் பற்றித் தொடர்வதில் எனக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை. ஆனால், அது அந்தக் குறிப்பிட்ட மாகாணத்தில் உள்ள மக்களின் சம்மதத்துடன் நடக்க வேண்டும். நீங்கள் மாகாணங்களை வலுக்கட்டாயமாக இணைக்க முடியாது. அது சனநாயக நடைமுறையாக இருக்க வேண்டும். மக்களின் சம்மதத்துடன் தான் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டும்.

 

குருபரன்: இனங்களிற்கிடையிலான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக, எவ்வாறான முதன்மைச் செயல்களை அல்லது முயற்சிகளை நீங்கள் மேற்கொண்டிருக்கின்றீர்கள்?

ஜெயம்பதி:  நீங்கள் என்பது யாரைக் கருதுகின்றது?

குருபரன்: அரசாங்கத்தை

இந்த இனங்களிற்கிடையிலான நல்லிணக்கம் என்ற வசந்தமானது கிராமங்களிலிருந்தும் விகாரைகளிலிருந்துமே தொடங்க வேண்டும். உள்ளூர் சமூக அலகுகளுக்கு இந்த விடையத்தில் முக்கிய பங்கு உண்டு. ஆனால், எனது அவதானிப்பின் படி,

இந்த இனங்களிற்கிடையிலான நல்லிணக்கம் என்பது, சில உயரடுக்கில் உள்ளவர்களுக்கும் புத்திசீவிகள் எனப்படும் சிலருக்கும் நிதி அடிப்படையிலான நன்மை பயக்கும் ஒன்றாகவே இருக்கின்றது. இதனை நீங்கள் மறுக்கின்றீர்களா?

ஜெயம்பதி:  இனங்களிற்கிடையிலான நல்லிணக்கம் என்பது சிலருக்கு நிதி நன்மை பயக்கும் விடையமாகவோ அல்லது வணிகமாகவோ இருக்கலாம். ஆனால், அரசாங்கம் இந்த விடையத்தில் மிகத் தெளிவாக இருக்கின்றது. இன நல்லிணக்க விடையத்தில் இந்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. எனவே தான் சருவதேச சமூகமானது இந்த அரசாங்கத்திற்கு சாதகமாகச் செயற்படுகின்றது. சனாதிபதியினதும் பிரதமரினதும் வெளிநாட்டுப் பயணங்களின் போது வெளிநாட்டுத் தலைவர்கள் நல்ல வரவேற்பளித்தர்கள். இதில் இடதுசாரிகளின் நிலைப்பாடு என்னவெனில், நல்லிணக்கம் என்பது வெறுமனே நல்ல உறவினை ஏற்படுத்துவது என்பதல்ல. நல்ல உறவினை ஏற்படுத்துவதோடு, அரசியலமைப்பையும் மாற்ற வேண்டும். அப்போது தான் நல்லிணக்கம் சாத்தியமாகும். வடக்கும் கிழக்கும் அபிவிருத்தி அடைந்தால் போதும் நல்லிணக்கம் ஏற்பட்டு விடும் என சிலர் நினைக்கின்றார்கள். அப்படி ஒருபோதும் நல்லிணக்கம் ஏற்படாது. அதனுடன் சேர்ந்து அரசியல் தீர்வும் தேவை. வடக்கிற்கான அபிவிருத்தி கொழும்பில் இருந்து இயக்கப்படக் கூடாது. அது வடக்கு மக்களின் பங்களிப்புடனான அபிவிருத்தியாக இருக்க வேண்டும். அதாவது, அது வடக்கினால் இயக்கப்படும் வடக்கிற்கான அபிவிருத்தியாக இருக்க வேண்டும். 

 

குருபரன்: நான் சொல்வது சரியெனில், நீங்கள் முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கவிற்கு ஆலோசகராக இருந்துள்ளீர்கள்.

ஜெயம்பதி:  இல்லை. இல்லை. நான் அவரது ஆலோசகராக இருக்கவில்லை. அவரது அரசாங்கத்திற்கான ஆலோசகராக இருந்துள்ளேன். ஆனால் மகிந்த ராஜபக்ச ஆட்சியில், அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பான அமைச்சின் ஆலோசகராக இருந்துள்ளேன். பின்னர் 2008 இல் நான் அதிலிருந்து பணி விலகினேன். ஏனெனில், மகிந்த ஆக்கபூர்வமாக எந்த விடையத்தையும் செய்யவில்லை. பின்னர், நான் தற்போது பாராளுமன்றத்திற்கு நுழைய முன்பு, தற்போ தைய சனாதிபதிக்கான ஆலோசகராக இருந்தேன்.

 

குருபரன்: விடுதலைப் புலிகள் மட்டும் தான் அரசியல் தீர்வு விடையத்தில் தவறிழைத்தார்கள் என நீங்கள் நினைக்கின்றீர்களா? எவ்வகையான தவறுகளை அரசாங்கங்கள் இழைத்தன? இடதுசாரிகளின் நெஞ்சிலிருந்து இதற்கான பதில் கிடைத்தால் நான் மகிழ்வடைவேன்.

ஜெயம்பதி:  பாரிய தவறுகள் தெற்கினாலும் இழைக்கப்பட்டுள்ளது. தெற்கிலுள்ள கடும் போக்குவாதிகளின் அழுத்தங்களால், பண்டா- செல்வா ஒப்பந்தம் மற்றும் டட்லி- செல்வா ஒப்பந்தம் போன்ற நல்ல வாய்ப்புக்கள் தவறவிடப்பட்டுள்ளன. பின்னர் 1972 இல் பெரிய ஒரு வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளது. சித்தார்த்தனின் தந்தை திரு. தர்மலிங்கம் அப்போது பேசும் போது சொன்னார்...

"உங்களால் சமஸ்டியை எற்றுக்கொள்ள முடியாது எனில் ஒற்றையாட்சியை விட்டுக் கொடுக்க முடியாது எனில், நீங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்திருந்த அதாவது கச்சேரிகளை இல்லாமலாக்கி அதற்குப் பதிலாக தெரிந்தெடுக்கப்படும் மாவட்டக் குழுக்களை அதாவது மாவட்ட சபைகளை ஏன் உங்களால் நிறுவ முடியாது ?"

இந்த விடையத்தில் அப்போதய அரசாங்கம் சாதகமாக நடந்திருந்தால், இலங்கையின் வரலாறு வேறாக இருந்திருக்கும். இந்த மாவட்ட சபையை தமிழர்கள் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும், சமஸ்டிக் கோரிக்கையைக் கைவிட்டு இருக்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. மொழி தொடர்பான சிக்கல்களுக்கான சில உடன்படிக்கைகளுடன் இதுவும் முதல் படியாகவேனும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், இலங்கையின் வரலாறு வேறானதாக இருந்திருக்கும். 1987 இல், தெற்கு அதிகாரங்களைப் பகிர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், தமிழர்கள் பக்கத்திலிருந்து, TULF மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாமல் மாபெரும் தவறிழைத்தது. அவர்கள் அதனை இப்போது உணர்ந்திருக்கின்றார்கள் என நான் நினைக்கின்றேன். அரசியல் தீர்வு விடையத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் அக்கறை கொண்டிருக்கவில்லை. எதைக் கொடுத்தாலும் அவர்கள் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். சந்திரிக்காவின் தீர்வுப்பொதி, ரணில் முன்வைத்த தீர்வு மற்றும் மெய்நிகர் சமஸ்டித் தீர்வு (Virtual Federal Solution அதாவது ஒஸ்லோவில்) என்பன எல்லாமே அவர்களால் ஏற்றுக்கொள்ள மறுக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் தமிழ் மக்களிற்குப் பாரிய அநீதியை இழைத்துள்ளனர் என நான் நினைக்கின்றேன்.

கடந்த தசாப்தங்களின் அனுபவங்களிலிருந்து, சிக்கல்கள் கலாச்சாரங்களை மூலமாக கொண்டன என்று நான் நினைக்கின்றேன். இனச் சிக்கல் தீர்க்கப்படாது என்ற அவநம்பிக்கை பாரிய தடையாக உள்ளது. அரசியலமைப்பை மாற்றுவதன் மூலம் மட்டும் அடித்தட்டுத் தீர்வை அடைய முடியாது. இதனை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா? அடித்தட்டுத் தீர்வை (Grassroots solutions) நாம் எப்படி எட்ட முடியும்?

ஜெயம்பதி: அடித்தட்டு தீர்வு (Grassroots solutions)என்று நீங்கள் எதனைக் கருதுகின்றீர்கள் என எனக்குப் புரியவில்லை. ஆனால் சிக்கலின் அடிப்படை என்பது அரசியலமைப்பு தொடர்பானதே. அரச அதிகாரங்களை பகிர்ந்தளிக்காத வரையில் இந்த இனச் சிக்கல் தீர்க்கப்பட முடியாது. அதனுடன் சேர்ந்து, இனங்களிடையிலான ஊடாடல், கலாச்சார உறவுகள் போன்றனவும் வளர்க்கப்பட வேண்டும். நாங்கள் எங்களது சொந்த அடையாளங்களை வைத்திருப்பதுடன், இலங்கையர் என்ற அடையாளத்தையும் வளர்க்க வேண்டும்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133202/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.