Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்

Featured Replies

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் கடந்த 1990.09.09 அன்று இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையே வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் 1990.09.09. அன்று நடைபெற்ற இனப்படுகொலை நினைவு நாள் நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்..

அவர்கள் மேலும் கூறுகையில்

26 வருடங்களாக எமது கிராமத்தில் நடைபெற்ற இந்த இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை. எமது உறவுகள் படுகொலை செய்த காரணத்தையும் அதற்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டிருந்தும், அது குறித்து கடந்த 26 ஆண்டுகளாக இலங்கையில் இருந்த எந்த அரசாங்கங்களும் விசாரணைகளை நடாத்தி, குற்றவாளிகளை தண்டிக்கவில்லை.

எனவே இனிமேலாவது இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தங்களுக்கான நீதி பெற்றுத்தரப்பட வேண்டும். நாங்கள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தை நம்புவதற்கு தயாராக இல்லை.

நிலைமாறு கால நீதிப்பொறிமுறைக்கு ஊடாக தங்களுக்கு சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறப்பு நீதிமன்றம் ஊடாக ஏற்கனவே கண்டறியப்பட்ட உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை ஒன்றை ஆரம்பித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டிக் கொடுப்பதுடன், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளையும் வழங்க வேண்டுமென சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக பாதிக்கப்பட்ட உறவுகள் தெரிவித்தனர்.

09.09.2016ம் அன்று வெள்ளிக்கிழமை சத்துருக்கொண்டான் படுகொலையின் 26வது ஆண்டு நினைவஞ்சலி நடைபெறவுள்ள நிலையில், அந்த அஞ்சலி நிகழ்வில் தாங்கள் இந்தப் படுகொலைகளுக்கான சர்வதேச விசாரணையை கோரவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

09-09-1990 அன்று சத்துருக்கொண்டான் போய்ஸ்டவுன் முகாமிற்கு கொண்டு சென்று படுகொலை செய்யப்பட்டவர்களில் தங்களது உறவுகள் 18 பேர் அடங்குவதாக சத்துருக்கொண்டானில் உள்ள கதிர்காமத்தம்பி தம்பிஐயா கூறுகின்றார்.

தனது பிள்ளைகள் உட்பட மாமா, மாமி, மச்சான், அண்ணன் தம்பி என மொத்தமாக 18 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சத்துருக்கொண்டானை சேர்ந்த சின்னத்தம்பி சின்னப்பிள்ளையின் குடும்ப சொந்தங்கள் 35 பேரும் இதில் படுகொலை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சத்துருக்கொண்டானைச் சேர்ந்த குழந்தைவடிவேல் என்பவர் கூறும்போது, தனது அம்மா, அப்பா, தங்கச்சி, அக்கா, அக்காவின் குழந்தைகள் மூன்று பேர் அம்மம்மா, அம்மப்பா, தம்பி, அண்ணன் என மொத்தமாக 10 பேர் படுகொலை செய்யப்பட்டதாக மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்தார்.

சத்துருக்கொண்டானில் உள்ள ஜெயானந்தி என்பவர் கூறும் போது, இந்த சம்பவத்தில் தனது அம்மா, அப்பா, தங்கச்சி ஆகிய மூவரும் படுகொலை செய்யப்பட்டதாக கூறினார்.

கொக்குவில் சந்தியில் உள்ள ஜோச் சுகந்தினி என்பவர் கூறும்போது இந்தச் சம்பவத்தில் தனது அம்மா, தங்கச்சி அம்மம்மா ஆகிய மூவரையும் கூட்டிச்சென்று இராணுவத்தினர் படுகொலை செய்துள்ளதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.


http://www.tamilwin.com/living/01/116945

  • தொடங்கியவர்

தமிழர்களை உலுக்கிய இனப்படுகொலை - இராணுவ முகாமிற்குள் நடந்தது என்ன?

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் 1990ம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 09ம் திகதி நடைபெற்ற படுகொலையே மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற மிகப் பெரிய மிகக்கொடூரமான படுகொலை என கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் நடைபெற்று 26 ஆண்டு கடந்துள்ள நிலையில் இச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாரும் இலங்கை அரசாங்கத்தினால் தண்டிக்கப்படவில்லை என்பதே அந்த மக்களின் ஆராதரணமாக உள்ளது.

நல்லிணக்கம் உண்மையை கண்டறிதல் போன்ற விடயப்பரப்பிற்குள் காலடி எடுத்துவைக்கும் நல்லாட்சி அரசாங்கமும் சர்வதேசமும் மட்டக்களப்பில் நடைபெற்ற இது போன்ற படுகொலைகளுக்கு பதிலளிக்காமல் அடுத்தகட்டத்திற்கு நகர்வதென்பது சர்வதேசத்திற்கான கண்துடைப்பாக அமையுமே தவிர அது நாட்டின் உண்மையான இன நல்லிணக்கத்திற்கு வழியமைத்துக் கொடுக்கப்போவதில்லை.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

மட்டக்களப்பை பொறுத்தமட்டில் 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் என்பது படுகொலைகளின் மாதமாகவே அமைந்துள்ளது.

திட்டமிட்டவகையில் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் என அனைவரையும் கண்மூடித்தனமாக சுட்டும் வெட்டியும் பாலியல்பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய சம்பவங்கள் மட்டக்களப்பு மக்களை பெரிதும் பாதித்துள்ளது.

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்களே தங்களது நூற்றுக்கணக்காண உறவுகளை படுகொலை செய்தனர் என்ற உண்மைகள் ஆதாரபூர்வமாக நிருபிக்கப்பட்டும் அந்த உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட்டும் அந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை இலங்கை அரசாங்கம் அப்போது தண்டனை வழங்காது காப்பாற்றியுள்ளதாகவும் தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கம் இவற்றிற்கு என்ன பதிலை சொல்லப்போகின்றது என்பதனை 26 வருடங்களுக்கு பின்னரும் எதிர்பார்த்து காத்திருப்பதாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சத்துருக்கொண்டானில் அன்று நடந்தது என்ன?- உயிர் தப்பியவரின் வாக்குமூலம்!

வடகிழக்கு பகுதிகளில் கே.பலகிட்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட காணாமல் போனோருக்கான விசாரணை ஆணைக்குழுவினால் 1997ம் ஆண்டு வெளியிடப்பட்ட இறுதி அறிக்கைகளில் பதிவு செய்யப்பட்ட சாட்சிகளின் பிரகாரம் அங்கு நடந்த சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன அதன் பிரகாரம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த தமிழர்கள் பலர் யுத்தம் கரணமாக மட்டக்களப்பு நகரிலும் இன்னும் பலர் படுவான்கரை பிரதேசங்களிலும் இடம்பெயர்ந்து இருந்துள்ளனர்.

1990ம் ஆண்டு ஒவ்வொரு கிராமத்திலும் “வெட்டுப்பாட்டி என்ற படையினர்” நடத்திய கொடூரமான கொலைகளுக்கு அஞ்சிய பொதுமக்கள் தமது இருப்பிடங்களை விட்டு சிதறியோடி பாதுகாப்புத்தேடி, பாடசாலைகள், ஆலயங்கள், பொதுக்கட்டடங்கள் என்பனவற்றில் கூட்டம், கூட்டமாக தஞ்சமடைந்திருந்தனர்.

இப்படி கூட்டம், கூட்டமாக இருந்தவர்களை ஒன்று சேர்த்து ஒரே இடத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளில் ஒன்றுதான் சத்துருக்கொண்டான் படுகொலையாகும்.

17-08-1990 அன்று வெட்டுப்பாட்டி என்ற அரச படையினர் சத்துருக்கொண்டான் என்ற கிராமத்திலுள்ள “போய்ஸ்டவுன்” என்ற முகாமிற்கு கெப்டன் திஸ்ஸவர்ணகுலசூரிய என்ற அதிகாரியின் தலைமையில் வந்திருந்தனர்.

இவர்கள் வந்த அன்றைய நாளிலேயே கொக்குவில் கிராமத்துக்குள் புகுந்து 24 பேரை பிடித்து வந்து மாரியம்மன் கோவில் சந்திக்கு கொண்டுவந்து அடித்து சித்திரவதை செய்தனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதில் மரியநேசம், சுப்பிரமணியன், தவராசா, குமாரசாமி ஆகிய நால்வரையும் அந்த இடத்திலே அடித்துக்கொன்றனர். பின் டயர் போட்டு எரித்தனர்.

இதனையடுத்து 08-09-1990 அன்று சத்துருக்கொண்டான் கொளனிக்குள் சீருடையுடன் சென்ற படையினர் அங்கே தென்னந் தோட்டத்தில் ஓலைமட்டை எடுத்துக்கொண்டிருந்த த.கணபதிப்பிள்ளை, இளையான் ஆகிய இருவரையும் அவர்கள் கொண்டு வந்த ஓலை மட்டையை போட்டு உயிருடன் எரித்துக் கொன்றனர்.

இந்த சம்பவங்கள் நடைபெற்றதை பின்னர் மிகவும் அச்சமடைந்த சத்துருக்கொண்டன் மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் இருந்த மக்கள் சிதறி ஓடினர்.

அநேகமானவர்கள் இடம் பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றனர். எஞ்சியவர்கள் பெரிய வீடுகளில் பயத்துடன் ஒன்றாகச் சேர்ந்து இருந்தனர்.

படுகொலையை நேரில் பார்த்தவரின் வாக்குமூலம்

இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு காயங்களுடன் தப்பித்துவந்த பிள்ளையாரடியைச் சேர்ந்த கந்தசாமி கிருஸ்ணகுமார் என்ற இளைஞர்; இராணுவ முகாமிற்குள் நடந்த படுகொலைகள் பற்றிய உண்மைகளை வெளியிட்டிருந்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அதன் பிரகாரம் 09-09-1990 அன்று பி.ப 5.30 மணியளவில் கெப்டன் திஸ்ஸ வர்ணகுலசூரியாவின் தலைமையில் சீருடை அணிந்த இராணுவத்தினர். சத்துருக்கொண்டான், பனிச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி ஆகிய கிராமங்களை சுற்றிவளைத்தனர்.

ஒரு பகுதியினர் மெயின்வீதி வழியாக பிள்ளையாரடிக் கிராமத்தை சுற்றிவளைத்தார்கள். மற்றையவர்கள் போய்ஸ்டவுன் முகாமிற்கு பின்புறமாக வந்து சத்துருக்கொண்டான் கொளனிப் பக்கமாகச் சென்று அங்கு ஒரு வீட்டிலிருந்த ராசா என்பவரையும் அவரின் மனைவி நேசம்மா,

நான்கு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வந்து பக்கத்து வீடுகளிலிருந்த கணபதிப்பிள்ளை குடும்பத்தினர்கள், அழகையா குடும்பத்தினர்கள், கதிர்காமத்தம்பி, கண்மணி குடும்பத்தினர்கள், நற்குணசிங்கம், மனைவி, சித்தி இவர்களின் மூன்று மாதக்குழந்தை அனைவரையும் அழைத்து “நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கத்தான் வந்துள்ளோம் உங்களுக்கான எல்லா உதவிகளையும் செய்வோம். எங்களுடன் வாருங்கள்” என அழைத்து வந்து பனிச்சையடிச் சந்தியில் இருக்க வைத்தனர்.

அதன் பின் பனிச்சையடி சந்திக்கு பக்கத்து வீட்டிலிருந்த கிருபைரெட்ணம் குடும்பம், பேரின்பம் குடும்பம் இவர்களின் வீட்டிலிருந்த மற்றைய குடும்பங்கள் என அங்கு தஞ்சமடைந்திருந்த சுமார் 40 பேரையும் சந்திக்கு கூட்டிவந்தனர்.

இதில் பேரின்பத்தின் மனைவி பரஞ்சோதியுடன் நந்தினி என்ற பிள்ளையும் இவர்களுடன் நடக்க முடியாத, முடமான, பேசமுடியாத ஊமைப்பிள்ளைகள் நால்வரும் இருந்தனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இவர்களை தூக்கி வர முடியாது எனக்கூற இவர்களை நாங்கள் முகாமிற்கு கொண்டுபோய் பாதுகாப்பு வழங்குவதுடன் சுகமாக்கியும் தருவோம் எனக்கூறி மற்றவர்களைத் தூக்கிவரும்படி இராணுவத்தினர் கூறினர்.

இவர்களின் நயவஞ்சகத்தினை அறியாத அப்பாவி மக்கள் அந்த வலது குறைந்த பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு வந்து சந்தியில் வைத்தனர்.

அதன் பின் பரமக்குட்டி என்பவரின் வீட்டில் ஒன்றாக இருந்த 20 குடும்பங்களைச் சேர்ந்த அத்தனை பேர்களையும் பனிச்சையடிச் சந்திக்கு கொண்டு வந்து அனைவரையும் ஒன்றாகச் சேர்த்தனர்.

இப்படிப் பனிச்சையடிச் சந்தியில் சேர்க்கப்பட்டவர்கள் கொக்குவில், பிள்ளையாரடியில் பிடிக்கப்பட்டவர்கள் என எல்லோரையும் கொத்துக்குளத்து மாரியம்மன் கோவில் சந்திக்கு கொண்டு வந்திருந்தனர்.

பின் அனைவரையும் கொண்டுசென்ற இராணுவத்தினர் மாலை 7.00 மணியளவில் போய்ஸ்டவுன் முகாமிற்குள் இருந்த ஒரு பெரிய கட்டிடத்திற்குள்; (முன்னர் அரிசி ஆலை இருந்த கட்டிடத்தில்) 63 குடும்பங்களைச் சேர்ந்த 177 பேரையும் ஒன்றாக அடைத்தனர்.

இப்படி ஒன்றாக இருட்டுக் கட்டடத்துக்குள் அடைத்த பின்னர் அனைவரும் பயமும் பீதியும், நடுக்கமும் ஏற்பட்டு அழத்தொடங்கினர்.

ஒவ்வொரு குடும்பத்தினர்களும் அவர்களின் சொந்த உறவுகளை கட்டிப்பிடித்து முனுமுனுத்தவாறு அழுதனர். எல்லோரும் கடவுளே எங்களைக் காப்பாத்து என கடவுளை வேண்டினர். இவர்களை அடைத்த படையினர் தமது சீருடைகளைக் கழட்டி வைத்துவிட்டு மது அருந்தத் தொடங்கினர்.

எல்லோரும் குடித்துவிட்டு வாள், கத்தி என்பவற்றை எடுத்து பூட்டிய கதவைத் திறந்தனர். இவர்களை இருட்டில் அரைகுறையாகக் கண்ட மக்கள் அழத்தொடங்கினர்.

இவர்களில் மூவரை வெளியே எடுத்தனர். இவர்களை நாங்கள் விசாரிக்க வேண்டும், இது மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது, இப்படி விசாரிக்கும் போது நாங்கள் அடித்தால் மற்றவர்கள் சத்தம் போடக்கூடாது என அனைவரின் கண்களையும் கட்டினர்.

குமார் வயது 27, ஜீவானந்தம் வயது 33, கிருஸ்ணகுமார் வயது 22 ஆகிய மூவரையும் முகாமின் பின்பக்கமாக கொண்டு சென்று, சித்திரவதை செய்தனர், கத்தியால் குத்திக் கொன்றனர். இதில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாக இராணுவத்தினர் கருதிய கிருஸ்ணகுமார் என்பவரின்; இரு கண்களுமே படுகாயத்துடன் இந்த கொடூரக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தன.

பின்னர் வயது முதிர்ந்த ஆண்களை எடுத்து ஒவ்வொருவராக இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்றனர். கால்களையும், தலைகளையும் வெட்டி அங்கே ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த பெரிய குழியில் போட்டனர்.

இதன்பின் வயது போன பெண்களைக் கொண்டுவந்து கம்பியாலும், பொல்லாலும் அடித்துக் கொண்டு குழியிலே போட்டனர். அடுத்து திருமணம் முடித்த அனைத்து ஆண்களையும் கண்களைக் கட்டிக் கொண்டு வந்து கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றனர். இவ்வாறே திருமணமான பெண்களையும் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். பின் இளைஞர்களைக் கண்களைக்கட்டிக் கொண்டு வந்து கையையும், கால்களையும் வெட்டி அவர்கள் துடிக்கும் காட்சியைப் பார்த்து மகிழ்ந்தனர்.

அவர்களை பல துண்டுகளாக துண்டாடி கொன்று குழியிலே போட்டனர். பின் சிறுவர்களையும், குழந்தைகளையும் கொண்டு வந்து சாய்ந்து கிடந்த முந்திரிகை மரத்தில் ஒவ்வொருவராக படுக்க வைத்து இரண்டு துண்டுகளாக வெட்டி குழியிலே போட்டனர்.

குழந்தைகயைக் கால்களால் மிதித்தும், கழுத்தைத் திருகியும் கொன்றனர். அவர்கள் பேசமுடியாத ஊமையாக இருந்த, நடக்கமுடியாது முடமாக இருந்த அந்த வலது குறைந்த 4 பிள்ளைகளையும் விட்டுவைக்கவில்லை. அவர்களை முந்திரிகை மரத்தில் போட்டு துண்டு துண்டாக வெட்டிக் கொன்றனர்.

25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர் அப்பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர்.

பின் சிறிது நேரம் ஓய்வெடுத்து பின் எஞ்சியிருந்த இளம் யுவதிகளையும் வெளியே எடுத்து அவர்களை நிர்வாணமாக்கி காட்டு மிராண்டித்தனமாக மனித நேயமுள்ளவர்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநாகரீகமான முறையில் அவர்களை சின்னாபின்னப்படுத்தி அவர்களின் அங்கங்களை வெட்டி சித்திரவதை செய்து கொன்றனர்.

இவர்கள் சத்தமாக கூக்குரலிட அவர்களின் வாய்களில் கறுப்புச் சீலையை திணித்தனர். அவர்களை அரைகுறை உயிருடன் குழியிலே கொண்டுபோய் போட்டனர். இப்படி அனைவரையும் ஒரே குழியில் ஒன்றாகக் குவித்தனர். அந்த குழி குற்றுயிரும் குறைஉயிருமாக கிடந்த உடல்களால் நிறைந்திருந்தது.

இதன் பினனர் பெற்றோல் மண்ணெண்ணை என்பவற்றை உடல்கள் மேல் ஊற்றினர். எரிபொருள் போதாமையால் இன்னும் எடுப்பதற்காக வெளியில் சிலர் சென்றனர். மற்றவர்கள் களைப்பிலும் மதுபோதை மயக்கத்துடன் படுத்திருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தைப் பார்த்து இறந்தவனைப் போல் சடலங்களுடன் அந்த காட்சிகளை பார்த்து படுத்துக்கொண்டிருந்த கிருஸ்ணகுமார் என்பவர் மெதுவாக அந்த இடத்தைவிட்டு வெளியேறி பத்தைக்குள் மறைந்துகொண்டார்.

எரிபொருளுடன் வந்தவர்கள் இரத்தம் வடிய வெளியே சென்ற கிருஸ்ணகுமாரின் இரத்த அடையாளத்தை கண்டு அந்தவழியே தேடியுள்ளனர். இருந்தும் இராணுவத்தினர் மதுபோதையில் இருந்ததால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

கிருஸ்ணகுமார் ஒழித்திருந்து மேலும் நடக்கும் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். கொண்டுவந்த பெற்றோலையும் திரும்ப ஊத்தி அனைவரையும் ஒன்றாக எரித்தனர். எங்கும் ஒரே புகைமண்டலமாக காட்சியளித்தது. உடல்களும் மண்டையோடுகளும் வெடிக்கும் சத்தந்தான் கேட்டன.

இதன் பின் இரவு 2.00 மணியளவில் கிருஸ்ணகுமார் தவண்டு வந்து ஒருவீட்டிற்கு வந்து பின் சிலரின் உதவியுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார்.

இவர் தப்பிவந்து வைத்தியசாலையில் இருப்பதை அறிந்த இராணுவத்தினர் வைத்தியசாலையை முற்றுகையிட்டு தேடினர்.

கிருஸ்ணகுமாரை அமெரிக்க மிசன் பாதர் மூலம் காப்பாற்றிய சமாதானக்குழுவினர் பின்னர் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ததுடன் அவரை ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் சாட்சிசொல்லவைத்தனர்.

அன்றைய தினம் முகாமில் எரிக்கப்பட்ட அப்பாவி பொது மக்களின் உடல்கள் இரண்டு நாட்களாக எரிக்கப்பட்ட பின் அடையாளம் தெரியாமல் மறைக்கப்பட்டன.

இதில் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 23பேரும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் 18பேரும், 50 வயதிற்கு கீழ்ப்பட்ட திருமணமான ஆண்கள் 13பேரும், 50 வயதிற்கு கீழ்ப்பட்ட திருமணமான பெண்கள் 33பேரும், 25 வயதிற்கு கீழ்ப்பட்ட திருமணமாகாத ஆண்கள் 16பேரும் 25 வயதிற்கு கீழ்ப்பட்ட திருமணமாகாத பெண்கள் 23பேரும் 10 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள் 20பேரும், 10 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுமிகள் 21பேரும், வாய்பேசமுடியாத, ஊனமுற்ற குழந்தைகள் 04பேரும், கர்ப்பிணித் தாய்மார்கள் 02பேரும் என மொத்தமாக 63 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 177பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

17-08-1990 கொல்லப்பட்டவர்கள் 04பேர், 08-09-1990 கொல்லப்பட்டவர்கள் 02பேர், 02-04-1991 கொல்லப்பட்ட 03பேர் என சத்துருக்கொண்டானில் மொத்தமாக 186 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கான விபரம் கிடைத்துள்ளன.

குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள்

தப்பிவந்த கிருஸ்ணகுமாரின் மூலமாக வெளிவந்த பல தகவல்களின் அடிப்படையில் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புக்கள் சத்துருக்கொண்டான் இராணுவ முகாமிற்கு சென்று நடந்த சம்பவத்தை முகாமிற்கு பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரியிடம் வினாவியிருந்தனர்.

இதற்கு அந்த இராணுவ அதிகாரி கூறியதாவது “இங்கு நாங்கள் யாரையும் கொண்டுவரவுமில்லை. அவ்வாறான சம்பவம் ஏதும் இங்கு இடம்பெறவுமில்லை” என்பதே அவர்களின் பதிலாக அமைந்தது.

இந்த சத்துருக்கொண்டான் படுகொலையை தலைமைதாங்கி நடாத்தியது போய்ஸ்டவுன் இராணுவ முகாமில் கடமையாற்றிய கப்டன் காமினி வர்ணகுலசூரிய, கப்டன் கெரத், விஜயநாயக்க மற்றும் இதற்கான கட்டளை அதிகாரியாக இருந்த கேணல் பெசி பெனாண்டோ ஆகியோரே இக் கொலைகளுக்கான முக்கிய சூத்திரதாரிகளாக ஜனாதிபதி ஆணைக்குழுவால் இனம் காணப்பட்டனர்.

நீதி விசாரணை இலங்கை அரசாங்கத்தினால், இப்படுகொலைச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தவென இரு விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.

ஓய்வுபெற்ற நீதிபதியான கே.பாலகிட்ணர் அவர்கள் இவ்விசாரணைகளை நடத்தவென அக்காலத்தில் ஆட்சியிலிருந்த பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டார்.

இச்சம்பவத்தை விசாரணை செய்த நீதிபதியின் அறிக்கைப்படி 27 வயதான மோகன சுந்தரி எனும் தாயும் அவரது 3 மாதக்குழந்தையும் படையினரால் "மண்ணா" கத்திகளால் சாகும்வரை குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் எனவும். அத்தோடு 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கும் குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டுள்ளனர்.

நீதிபதி தனது அறிக்கையில் படுகொலை நிகழ்ந்ததற்கான வலுவான சாட்சியங்கள் இருப்பதாகவும் குற்றவாளிகளுக்கெதிரான கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஜனாதிபதியை வேண்டிக்கொண்டார்.

இதுவரை இவ்வாறான சட்ட நடவடிக்கைகளோ, காவல்துறை விசாரணைகளோ மேற்கொள்ளப்பட்டதாக தகவலெதுவும் இல்லை. அவர்கள் இலங்கையின் நீதிமன்றங்களினால் தண்டிக்கப்படவில்லை சம்பவம் நடந்து இன்று 26 ஆண்டுகளாகியும் இக்கொலைக்கான நீதி வழங்கப்படவில்லை.

26 வருடங்களுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகள்

26 ஆண்டுகளுக்கு பின்னர் சம்பவம் நடந்த சத்துருக்கொண்டான் பிரதேசத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தபோது அங்கு தங்களது உறவுகளை பறிகொடுத்த சொந்தங்கள் இன்றும் இலங்கை அரசாங்க படைகள் மீது மிகுந்த கோபத்துடன் 26 வருடங்களாக நீதி கிடைக்காததால் அனைத்து விசாரணைகளிலும் நம்பிக்கையற்று இருப்பதை அறியக்கூடியதாக இருந்தது.

சத்துருக்கொண்டானில் திரும்பிய பக்கமெல்லாம் இந்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களே இருக்கின்றன.

ஒவ்வொரு குடும்பத்திலும் அரைவாசிக்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதால் அவர்களால் இந்த பாதிப்பில் இருந்து இன்றுவரை வெளிவரமுடியாதவர்களாக உள்ளனர்.

பொருளாதாரம், பாதுகாப்பு, உறவுமுறைகள், சமூகம் என அனைத்திலும் பின்தங்கியவர்களாக தங்களுக்கான நீதியோ சரியான இழப்பீடுகளோ கிடைக்காத ஆதங்கத்தில் இன்றும் அந்தக் கிராம மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

கொத்துக் கொத்தாக உறவுகளை பறிகொடுத்த குடும்பம்

09-09-1990 அன்று சத்துருக்கொண்டான் போய்ஸ்டவுன் முகாமிற்கு கொண்டு சென்று படுகொலை செய்யப்பட்டவர்களில் தங்களது உறவுகள் 18 பேர் அடங்குவதாக சத்துருக்கொண்டானில் உள்ள கதிர்காமத்தம்பி தம்பிஐயா கூறுகின்றார்.

தனது பிள்ளைகள் உட்பட மாமா, மாமி, மச்சான்,அண்ணன் தம்பி என மொத்தமாக 18 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சத்துருக்கொண்டானை சேர்ந்த சின்னத்தம்பி சின்னப்பிள்ளையின் குடும்ப சொந்தங்கள் 35 பேரும் இதில் படுகொலை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சத்துருக்கொண்டானைச் சேர்ந்த குழந்தைவடிவேல் என்பவர் கூறும்போது தனது அம்மா அப்பா தங்கச்சி அக்கா அக்காவின் குழந்தைகள் மூன்றுபேர் அம்மம்மா அம்மப்பா தம்பி அண்ணன் என மொத்தமாக 10 பேர் படுகொலை செய்யப்பட்டதாக மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்தார்.

சத்துருக்கொண்டானில் உள்ள ஜெயாநந்தி என்பவர் கூறும் போது இந்த சம்பவத்தில் தனது அம்மா, அப்பா, தங்கச்சி ஆகிய மூவரும் படுகொலை செய்யப்பட்டதாக கூறினார்.

கொக்குவில் சந்தியில் உள்ள ஜோச் சுகந்தினி என்பவர் கூறும்போது இந்தச் சம்பவத்தில் தனது அம்மா, தங்கச்சி, அம்மம்மா ஆகிய மூவரையும் கூட்டிச்சென்று இராணுவத்தினர் படுகொலை செய்துள்ளதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை

இவ்வாறு தங்களது சொந்தங்களை இழந்த உறவுகள் பலர் 26 ஆண்டுகளுக்கு பின்னரும் தங்களது உறவுகளை நினைவு கூற நல்லாட்சி அரசாங்கம் அனுமதிப்பதில்லை எனவும் கடந்த வருடம் மிகுந்த கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே தாங்கள் தங்களது உறவுகளை நினைவு கூர்ந்ததாகவும் இந்தவருடமாவது தங்களை சுதந்திரமாக எமது உறவுகளை நினைவு கூற அரசாங்கம் அனுமதி வழங்கவேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

அத்துடன் தமது உறவுகள் படுகொலைசெய்த அதற்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டிருந்தும். அது குறித்து கடந்த 26 ஆண்டுகளாக இலங்கையில் இருந்த எந்த அரசாங்கங்களும் விசாரணைகளை நடாத்தி குற்றவாளிகளை தண்டிக்கவில்லை எனவே இனிமேலாவது இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தங்களுக்கான நீதி பெற்றுத்தரப்படவேண்டும்.

நாங்கள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தை நம்புவதற்கு தயாராக இல்லை நிலைமாறு கால நீதிப்பொறிமுறைக்கு ஊடாக தங்களுக்கு சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறப்பு நீதிமன்றம் ஊடாக ஏற்கனவே கண்டறியப்பட்ட உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை ஒன்றை ஆரம்பித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டிக் கொடுப்பதுடன் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளையும் வழங்கவேண்டுமென சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக பாதிக்கப்பட்ட உறவுகள் தெரிவித்தனர்.

09.09.2016ம் அன்று வெள்ளிக்கிழமை சத்துரக்கொண்டான் படுகொலையின் 26 வது ஆண்டு நினைவஞ்சலி நடைபெறவுள்ள நிலையில் அந்த அஞ்சலி நிகழ்வில் தாங்கள் இந்தப் படுகொலைகளுக்கான சர்வதேச விசாரணையை கோரவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilwin.com/security/01/116922

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாமே அவலங்கள். 

கோமாவில் இருந்து பினாத்துவது போல் இன்றும் புலிகளையே வசைபாடிக்கொண்டிருப்பவர்களுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் கும்பலை கேட்டால்.. அப்படி ஒன்றே நடக்கல்லை என்று சொல்லுங்கள். ஆனால்.. யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்களின் வெளியேற்றம் மட்டும் இனச்சுத்திகரிப்புன்னு கூசாமல் சொல்லுவினம். tw_angry:

காத்தான்குடி சம்பவத்துக்கு கண்ணீரா வடிப்பினம். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.