Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் ஊர் மரடோனா "வெள்ளை"

Featured Replies

kidukuveli_vellai_01.jpg

அது யாழ்.மத்திய கல்லூரி மைதானம். குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகத்துக்கும் ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகத்துக்கும் இடையிலான உதைபாந்தாட்டப் போட்டி. அதில் ஒரு கணம், ஊரெழு கோல் காப்பாளர் நெல்சன் பந்தை அடிக்கிறார். உயர்ந்து வருகிறது, வலது கரையாக நிற்கும் அந்த வீரனை நோக்கி. அவரும் முன்னாலே ஓடுகிறார்.பந்தும் மேலால் வந்து கொண்டு இருக்கிறது. அது தரையைத் தொட முன்னர் அந்த வீரன் மிகத்துல்லியமாக கணித்து பந்திற்கு ஓங்கி உதைக்கிறார். பந்து வேகமாக எதிரணியின் ‘கோல்க்’ கம்பம் நோக்கிச் செல்கிறது. கோல் காப்பாளரால் அந்தப் பந்தைப் பிடிக்கவோ/தடுக்கவோ முடியாது. ஆனால் பந்து கம்பத்தை தொட்டு வெளியே செல்கிறது. ஆம் இப்படி அடிக்கடி தனது தனித்துவமான ஆட்டங்களால் எங்கள் மனதில் ஆழப்பதிந்த பெயர்தான் ‘வெள்ளை’. தர்மகுலநாதன் அவரது இயற்பெயர். 

கிடுகுவேலி:வணக்கம் வெள்ளையண்ணை.
வெள்ளை :வணக்கம் சொல்லுங்கோ..
கிடுகுவேலி : இப்ப உங்களோட கதைக்கலாமோ?
வெள்ளை : ம்ம்ம் கதைக்கலாம...ஆனால் பின்னேரம் ஒரு 'மட்ச்' இருக்கு கென்றிசோட....
கிடுகுவேலி : நீங்களும் விளையாடுறீங்களோ?
வெள்ளை : (ஒரு சின்ன சிரிப்புடன்...).ம்ம்ம் சும்மா விளையாடுறனான்....!!

வெள்ளை பற்றிய தகவல்களை சேகரிக்க வேண்டும் என்று அவரோடு தொடர்பு கொண்ட போது நடந்த உரையாடல் இது. வயது 50 ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்னமும் ஆடின கால் அடங்க மறுத்து காலில் ‘பூட்ஸ்’ போட்டுக் கொண்டு களத்தில். என்னால் நம்பவே முடியவில்லை. சிறுபராயத்தில் நான் பார்த்து பார்த்து பிரமித்த ஒரு விளையாட்டு வீரன். அந்த நாடு முழுவதும் போற்றியிருக்க வேண்டிய ஒரு மகத்தான சாதனை வீரன். ஆனால் அங்கிருந்த அசாதரண சூழல்களும், குடும்ப நிலையும் ஒரு குறிக்கப்பட்ட பிரதேசத்துக்குள்ளேயே அவரை முடக்கி விட்டது.

இதனை நான் வெறும் வார்த்தைக் கோலங்களுக்காக சொல்லவில்லை. யாழ் மண்ணில் வாழ்ந்து காற்பந்தாட்டப் போட்டிகளை நேசித்தவர்கள் அனைவரும் இதனை நன்கு அறிவர்.

 

kidukuveli_vellai+(4).JPG

போட்டிக்கு முன் தன்னம்பிக்கையுடன் காத்திருக்கிறார்


நெஞ்சை நிமிர்த்திய தோற்றம். நெடிய உருவம். நல்ல ஆகிருதி. கட்டுக்குலையாத தேகம். மாநிறம். இவையெல்லாம் அந்தநாட்களில் நான் கண்ட "வெள்ளை" இனது தனித்துவமான அடையாளங்கள். இப்போதெல்லாம் தொலைக்காட்சியூடாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் மெஸ்ஸி, ரொனால்டோ, ரூனி எல்லோரையும் அறியும் முன்னர் எமக்கெல்லாம் சுப்பர் கீரோ என்றால் அது வெள்ளைதான். எங்கள் மண் நன்கறிந்த ஒரு ஒப்பற்ற வீரன். வேகம், விவேகம், லாவகம், எல்லாம் ஒருங்கே வரப்பெற்றவர்.

அந்த நாட்களை எண்ணிப்பார்க்கிறேன். காலையில் எழுந்ததும் 'உதயன்' பத்திரிகையின் கடைசிப்பக்கத்தில் வரும் செய்தியான "இன்றைய ஆட்டங்கள்" பகுதிக்கே கண்கள் செல்லும். அதிலே ஊரெழு றோயல் எதிர் -------- என்று கண்டால் ஏனோ தெரியவில்லை மனதுக்குள் பூரிப்புத்தான். மாலையில் நடைபெறும் ரியுசன், அது எந்த வகுப்பாக இருந்தாலும், அல்லது யாருடைய வகுப்பாக இருந்தாலும் கவலைப்படாமல் 'கட்' அடித்து செல்வது என்று அப்போதே முடிவாகிவிடும். எதிரணி எது என்பது கூட கவலையில்லை. சும்மா சாக்குப் போக்குச் சொல்லி அம்மாவிடம் 20ரூபா வாங்கி மைதானத்துக்குச் சென்று அந்த வீரனின் விளையாட்டை காண்பதில் அவ்வளவு சந்தோசம் இருந்தது. அதுதான் அதியுச்ச மகிழ்வான நேரம் எமக்கு.

வெள்ளை ஊரெழுவில் பிறந்து, வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்திலும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலும் கல்வி கற்றார். கல்வி கற்கின்ற போதே பாடசாலை அணிக்காக விளையாடியவர். பாடசாலை அணி பல வெற்றிகள் பெறுவதற்கு காரணமாயிருந்தார். 16 வயதை எட்டியதும் கல்லூரி அணி என்பதைத் தாண்டி கழக அணிக்குள்ளும் கால் வைக்கத் தொடங்கிவிட்டார். அது அவருடைய தந்தையார் மற்றும் சிலரால் ஆரம்பிக்கப்பட்ட றோயல் விளையாட்டுக் கழகம்தான். சிறுவயதிலேயே அனைவரையும் தன்பக்கம் ஈர்த்துவிட்டார். அன்று தொடங்கிய வெள்ளையின் ‘உதைபந்தாட்ட இராச்சியம்’ இன்றும் தொடர்கிறது என்றால் அது மிகையல்ல. இதில் இருந்து வெள்ளையின் விளையாட்டின் அர்ப்பணிப்பையும் தனிமனித ஒழுக்கத்தையும் நாம் உணர்ந்து கொள்ளலாம். "றோயல் வெள்ளை" பற்றிக் கதைக்காமல் அந்தக் காலப்பகுதியில் காற்பந்தாட்டத்தை கதைக்க முடியாது.

kidukuveli_vellai+(5).jpg

வெற்றிக்கோப்பையோடு..வெள்ளை

வெள்ளைக்கு பெரும் ரசிகர் பட்டாளம். மற்ற அணி ரசிகர்கள் எல்லாம் தமது அணி விளையாடாத போது வெள்ளையின் விளையாட்டை காண வருவர். உண்மையில் அவர் ஒரு நாயகனாகவே வலம் வந்தவர். அன்று றோயலுக்குப் போட்டி என்றால், மாலையில் அவரை ஒருவர் (கூடுதலாக பாலா அண்ணை - ஊரெழு நண்பர்களுக்கு தெரியும்)மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வருவார். வெள்ளை மைதானத்துக்குள் வந்து விட்டால் ஒரு சிறிய சலசலப்பு. அவரின் வயது முதிர்ந்த ரசிகர்களின் "தம்பி என்ன மாதிரி" என்ற கேள்வியில் நிறைய இருக்கும். குசலம் விசாரிப்பது போலவும் அமையும். அன்றைய போட்டி எப்படி இருக்கப் போகிறது என்றும் அமையும். அவர் மேல் ரசிகர்கள் அவ்வளவு பாசமாகவும் விசுவாசமாகவும் இருப்பார்கள்.

kidukuveli_vellai+(7).jpg

 வெள்ளை விளையாடினால் எதிரணிக்கு கலக்கமே. எந்தக் கோல் காப்பாளருக்கு எப்படி அடிக்க வேண்டும் என்ற வித்தை நன்கு தெரிந்தவர். அப்போது மிகச்சிறந்த காப்பாளர்களாக பல்கலைகழக அணி அருளும் பாடும்மீன் ரவியும் இருந்தார்கள். ஆனால் அவர்களையும் உச்சி கோல் அடிக்கும் உத்தி வெள்ளைக்கு நன்றாகத் தெரியும். 

வெள்ளை அணியும் மேற்சட்டை (ஜேர்சி) எண் 10. அந்தக்காலம் தொட்டு 10ம் இலக்கம் என்பது உதைபந்தாட்டத்தில் ஒரு 'மஜிக்' இலக்கம். பீலே முதல் மரடோனா..ஏன் இன்றைய மெசி வரை 10ம் இலக்கத்துடனேயே மைதானத்துக்குள் வலம் வருகிறார்கள். அன்று யாழ் மண்ணிலும் இந்தக் கலாசாரம் தொடர்ந்தது. சிறந்த பிரபல வீரர்கள் 10ம் இலக்க மேற்சட்டையே அணிந்திருந்தனர். குருநகர் பாடும்மீன் கொலின், நாவாந்துறை சென்.மேரிஸ் பவுணன், பாஷையூர் சென்.அன்ரனீஸ் றோய் (பெரிய), இளவாலை சென்.கென்றீஸ் ஜெயக்குமார், மயிலங்காடு ஞானமுருகன் சிந்து, பல்கலைக்கழக அணியில் நேசன், என் இந்தப்பட்டியல் நீளும்.

இன்னும் தொழில் முறையாக விளையாடும் எந்த விளையாட்டும் யாழ்ப்பாணத்திற்கு வரவில்லை. சிறிலங்காவின் தெற்கு பகுதியான கொழும்புவில் இருந்தாலும், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இல்லை என்றே சொல்லலாம். எனவே இவர்கள் அனைவரும் பகலிலே தமது அன்றாட வாழ்வாதாரத்துக்கான உழைப்பில் ஈடுபட வேன்டும். மாலையில் கிடைக்கின்ற நேரத்தில் பயிற்சி எடுக்க வேன்டும்.  அப்போதெல்லாம் பயிற்றுவிப்பாளர்களோ, அணிக்கான முகாமையாளர்களோ இல்லை (இப்போதும் அப்படியே). அவர்கள் விளையாடுவதற்கு மைதானம் இருப்பதே பெரிய விடயம். பெரிய அளவில் பயிற்சி என்றில்லை. சும்மா இரண்டு அணிகளாக பிரித்து விட்டு விளையாடுவது. அவ்வளவே, அது தான் அவர்களின் பயிற்சி. இப்படியெல்லாம், குடும்பத்தை பார்த்து, உழைத்து, போதிய பயிற்சி இல்லாமல் விளையாடிய போதும் அவர்களுடைய விளையாட்டில் ஒரு நளினமும் ஈர்ப்புத்தன்மையும் இருந்தது. அநேக மக்கள் அந்தப் போட்டிகளை எல்லாம் மனதார பார்த்து ரசித்தார்கள். குருநகர், பாசையூர், நாவந்துறை வீரர்கள் இரவில் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது. காலையில் அதனை யாருக்கும் விற்று விட்டு, பகலில் தூங்குவது. மாலையில் விளையாட்டு. கடலுக்கு போனவர் திரும்பி வருவரா? மாட்டாரா? என்றிருந்த காலம். இப்படித்தான் வெள்ளையும் ஒரு மரக்கறி வியாபாரி. மதியத்தோடு வீடு வந்து ஓய்வெடுத்துவிட்டு மாலையில் பயிற்சி. 

ஒரு உதைபந்தாட்ட வீரன் தனித்துவமாக மிளிர வேண்டுமெனில் அவரிடம் தனிப்பட்ட முறையில் நிறைய திறமைகள் வேண்டும். அணியோடு ஒத்து விளையாடுகின்ற பக்குவம் வேண்டும். வெள்ளை இவற்றிற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. ஆனால் இவை தவிர்த்து வெள்ளை களத்திலே ஒரு நல்ல மனிதர். வெள்ளை தப்பான ஆட்டம் ஆடுவது அரிது என்றே சொல்லாம். ஏனைய வீரர்கள் (றோயல் அணி) வெள்ளைக்குப் பயம். யாராவது தப்பான ஆட்டம் ஆடினால், அல்லது நடுவரோடு வாய்த்தகறாறில் ஈடுபட்டால் ‘டேய் விசிலுக்கு விளையாடுங்கடா. சரி-பிழை வெளியால நிக்கிற சனத்துக்குத் தெரியும்’ என தனது வீரர்களுக்குச் சொல்லி உற்சாகப்படுத்துவார். எதிர் அணி வீரர்களோடு முரண்படும் இடம் வரும்போதெல்லாம் தனது அணிவீரர்களை சமாளித்து, ரசிகர்களின் ஆர்ப்பரிப்பை அடக்கி போட்டி தொடர்ந்து நடக்கக்கூடியவாறு செய்துவிடுவார். இதுதான் வெள்ளையிடம் ஏனைய அணிவீரர்களும் ரசிகர்களும் மரியாதை வைக்கக் காரணம். 

kidukuveli_vellai+(6).jpg
சக வீரர்களுடனும் ரசிகர்களுடனும்

இதுவரை வெள்ளை சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட கோல்களை அடித்திருப்பார். இதனை அவரும் உறுதிப்படுத்துகிறார். தனது வாழ்நாளில் இதுவரை ஆயிரம் கோல்கள் அடித்தவரை எமது தேசம் எப்படி கௌரவித்திருக்க வேண்டும்? மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட வீரர். இவரது ஆரம்பகாலத்தில் ஒரு போட்டியில், யங்றோயல் அணி 2-0 என்று முன்னனியில் இருந்தது. போட்டியில் வெள்ளை விளையாடவில்லை. இடதுகாற் பெருவிரல் நகம் விழுந்ததே காரணம். போட்டி முடிவடைய 5 நிமிடங்கள் இருந்தது. வெள்ளையின் கால்கள் துடித்தது ஏதாவது செய்ய வேண்டும் என. உள்ளே இறங்கத் தயாரான போது, ஏனையவர்கள் தடுத்தார்கள். நீயும் விளையாடித் தோற்றோம் எனச் சொல்வார்கள். ஆனால் வெள்ளை உள்ளே இறங்கிவிட்டார். இறங்கிய உடனேயே படுசாதுரியமாகவும் வேகமாகவும் ஒரு கோலைப் போட்டார். ஆனால் அடுத்த நிமிடத்தில் மீண்டும் யங்றோயல் அணி ஒரு கோலைப் போட 3-1. றோயல் அணியின் தோல்வி உறுதி என நினைத்திருந்த வேளை வெள்ளையின் மின்னல் வேக ஆட்டம் வெளிப்பட்டது. தனது சகல திறமைகளையும் ஒருங்கே குவித்து ஆட்டம் முடிவடைவதற்குள் 2 கோல்களையும் போட்டார். 3-3 இப்போது. பின்னர் ‘பெனால்டி’ உதை மூலம் றோயல் வென்றது. இதுதான் வெள்ளை. இப்படித்தான் வெள்ளை எல்லோர் மனதிலும் வீற்றிருக்கிறார். 

உதைபந்தாட்டத்தில் ‘ஸ்லிப்’ அடிப்பது என்பது ஒரு கலை. ஆனால் எப்படியோ தெரியாது, எந்த அணிவீரர்களாலும் வெள்ளைக்கு ‘ஸ்லிப்’ அடிக்க முடிவதில்லை. பாடும்மீன் கழகத்தில் விசயன் அல்லது சிலிப்பன் ( ‘ஸ்லிப்’ அடிப்பதால் அந்தப் பெயர்) கூட வெள்ளையை வீழ்த்தியது இல்லை. மிக லாவகமாக பாய்ந்து சென்று விடுவார். நீங்கள் கோல் அடிக்கச் சிரம்ப்பட்ட கோல்காப்பாளர் யார் என்றால், பாடும்மீன் ரவி, முன்னர் இருந்த முஸ்லீம் லீக் முனாஸ் என்பவர்களைச் சொல்கிறார். உங்கள் காலத்தில் விளையாடிய உங்களைக் கவர்ந்த சிறந்தவீரர்கள் யார் என்றால்..மெலிதாகப் புன்னகைத்து, நிறையப் பேர் இருக்கிறார்கள் என்கிறார் அடக்கத்தோடு. பழகுவதற்கு பண்பானவர். போட்டிகள் பற்றிய அவரது கதையை கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவர் சொல்லும் விதம் “ஹைலைட்ஸ்” பார்ப்பது போல இருக்கும். 

kidukuveli_vellai+(8).jpg
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வெற்றிக் கோப்பைகள்

இன்றும் தன்னால் ஆன பணியை உதைபந்தாட்டத்துக்கு செய்து வருகிறார். தனது மூன்று மகன்களை முன் வரிசையில் ஆடவிட்டு களத்தில் பின்வரிசை வீரராக வெள்ளை இன்றும் விளையாடுகிறார். றோயல் பல வெற்றிக் கோப்பைகளை வென்றிருக்கிறது. அவை இன்றும் அவருடைய வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அனைத்தும் 1996 இற்குப் பின்னர் கிடைத்தவை. காலத்தின் ஒரு கோலமான இடப்பெயர்வு வெள்ளையையும் பாதித்தது. அவரது நிழற்படங்கள், அவர் பற்றிய பத்திரிகைச் செய்திகள், கட்டுரைகள் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டார். 

இளம் வீரர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்டால், அதே அடக்கமான புன்னகையுடன், ‘நான் என்ன சொல்ல...ஆனால் விசிலுக்கு விளையாட வேண்டும். ஒழுக்கமாக இருக்க வேண்டும். எதிரணி வீரர்களோடு வாக்குவாதத்திலோ, கைகலப்பிலோ ஈடுபடக்கூடாது. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க நீண்ட பயிற்சி அவசியம்’ எனச் சொல்கிறார். அண்மையில் ஒருநாளில் மூன்று போட்டிகள் விளையாட வேண்டியிருந்ததாம். எல்லா வீரர்களும் களைத்திருக்க தன்னால் ஓரளவு தாக்குப் பிடிக்கக்கூடியதாக இருந்தது என கொஞ்சம் பெருமையோடே சொல்கிறார் 1963 இல் பிறந்து 48வயதான வெள்ளை. இதுதான் வெள்ளையின் யாரும் அறிய முடியா இரகசியம்.

வெள்ளை பற்றி எதிரணியில் விளையாடியவர்கள் நிறையச் சொல்வார்கள். அண்மையில் ஒருவரைக் கேட்ட போது பொறாமையாக இருக்கிறது, இந்த வயதிலும் விளையாடுகிறாரே என்றார். அவரும் ஒரு சிறந்த வீரராக இருந்தாலும் மனம் திறந்து வெள்ளையைப் பாராட்டினார். அதுதான் வெள்ளை.

வெள்ளை பற்றி நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம். ஏன் அவர் தொடர்பாக ஒரு ஆவணப்படம் கூட எடுக்கலாம். படித்தவர் முதல் பாமரர் வரை எவர் எல்லாம் உதைபந்தாட்டத்துக்கு ரசிகரோ அவர்கள் எல்லாம் வெள்ளைக்கும் ரசிகரே. அவரது இயற்பெயரை இரசிகர்கள் மறந்திருப்பார்கள். ஆனால் ‘வெள்ளை’ என்கின்ற பெயரை மறக்கவோ யாழ்ப்பாண உதைபந்தாட்ட வரலாற்றில் இருந்து மறைக்கவோ முடியாது. 

நன்றி : வினோ, சிவகரன், சிவரதன் (தகவல் சேகரிப்பில் உதவியவர்கள்)

http://www.kidukuveli.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்து மரடோனாவுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

50 வயதிலும்....  இன்னும், உதை பந்தாட்டத்தில்  வீரனாக திகழ்ந்து, சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் வெள்ளையை....
இளைய வயதில், பயன் படுத்தி இருந்தால்.... உலக உதை  பந்தாட்ட வீரனாக வந்திருக்கக் கூடும். 
ஹ்ம்.... இப்படி பல திறமையானவர்கள், உலகிற்கு  தமது திறமையை காட்ட  முடியாமல், உள்ளூரிலேயே முடங்கி விடுவது கவலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.