Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் வெளிக்கிளம்பும் தொன்மை சான்றுகள் - பி.மாணிக்கவாசகம்

Featured Replies

மன்னாரில் வெளிக்கிளம்பும் தொன்மை சான்றுகள் - பி.மாணிக்கவாசகம்

 

 

மன்னாரில் வெளிக்கிளம்பும் தொன்மை சான்றுகள் -  பி.மாணிக்கவாசகம்



இலங்கையின் வரலாறு குறித்து பாட நூல்களில் பேசப்படுபவைக்கும். நாட்டின் பல இடங்களிலும் மண்ணில் புதையுண்டு கிடக்கின்ற தொன்மைச்சான்றுகளின் வரலாற்று ஆய்வுகளுக்கும் இடையே இடைவெளிகள் இருக்கின்றன என்பது வரலாற்று அகழ்வாய்வாளர்களின் கருத்தாகும். 



இதனை யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் புஸ்பரட்னம் மன்னார் கட்டுக்கரை குருவில்வான் பகுதியில் இடம்பெற்று வருகின்ற அகழ்வாராய்ச்சி தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கிக் கூறுகையில் தெரிவித்திருக்கின்றார்.



வடமாகாணத்தில் வன்னிப்பிரதேசம் மிகவும் தொன்மையான பகுதியாக ஆய்வாளர்களினால் தொல்லியல் சான்றுகளின் மூலம் கண்டறியப்பட்டிருக்கின்றன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வரலாற்று உண்மை வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

வரலாற்றுத்துறை பேராசிரியர் பரணவிதான, சுராந்தெரணியகல, செனவிரத்ன போன்றவர்கள் இந்த உண்மையை வெளிப்படுத்தியிருக்கின்றனர். குறிப்பாக கடந்த 1970 ஆம் ஆண்டு இரணைமடு பகுதியில் சுராந்தெரணியகல நடத்திய அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்ட கல் ஆயுதத் தொன்மைச் சான்றுகளின் அடிப்படையில், இற்றைக்கு ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதை விஞ்ஞானபூர்வமாக நிறுவியுள்ளதாக பேராசிரியர் புஸ்பரட்னம் கூறுகின்றார்.



இங்கு வாழ்ந்த மக்கள் இரணைமடுவில் மட்டுமல்லாமல், இரணைமடுவுக்கு வடக்கே வெற்றிலைக்கேணி, தெற்கே மாங்குளம் மற்றும் மேற்கே மன்னார் வரையிலும் ஒரு பரந்த பிரதேசத்தில் வாழ்க்கை நடத்தியதாகக் அந்த ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.



அந்த வகையில் மன்னார் கட்டுக்கரைக்குளத்தின் குளப்படுக்கையில் கற்கால மனிதர்களின் கல் ஆயுத அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாகவே தற்போதைய அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகின்றது.



இந்தப் பி;ரதேசத்தில் வாழ்ந்த மக்கள் தனித்துவமானவர்கள், தனித்துவமான தன்மை கொண்டவர்கள் என்பதைப் பல ஆய்வாளர்கள் தமது ஆய்வுகளின் மூலம் அறிந்து வியந்து குறி;ப்பிட்டிருக்கின்றார்கள்.



கட்டுக்கரைக் குளமானது இலங்கையின் தொன்மையான நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றாகவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும் கருதப்படுகின்றது.

அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து மன்னார் வளைகுடாவில் சென்று கடலுடன் கலக்கின்ற அருவியாற்றை இடை மறித்து அமைக்கப்பட்டுள்ள தேக்கம் என குறிக்கப்படுகின்ற அணைக்கட்டின் ஊடாக, அந்த ஆற்று நீர் திசை திருப்பட்டு பெரியதொரு வாய்க்காலின் ஊடாக கட்டுக்கரைக் குளத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது.



இந்தத் தேக்கம் அணைக்கட்டும் அதனூடாக கட்டுக்கரை குளத்திற்கு நீரைக் கொண்டு செல்கின்ற கால்வாயும் நவீன பொறியியலாளர்கள் விளங்கிக்கொள்ள முடியாத வகையில் மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

மன்னார் மாவட்டம் பண்டைக்காலத்தில் இருந்தே நெல் வேளாண்மைக்குப் பெயர் பெற்ற பிரதேசமாகத் திகழ்ந்திருக்கின்றது. அதன் அடையாளமாகவே இந்த கட்டுக்கரை குளம் திகழ்கின்றது. இந்த குளத்தின் மேன்மை காரணமாகவே மன்னார் மாவட்டம் அரிசிக் கிண்ணம் (சுiஉந டிழறட) என்ற சிறப்புப் பெயர் பெற்றிருக்கின்றது. 

அது மட்டுமன்றி, மன்னார் மாவட்டத்தின் தொன்மையான மாதோட்டம் துறைமுகம் வரலாற்றுக் காலத்தில் மிகவும் புகழ்பெற்ற துறைமுகமாகத் திகழ்ந்திருக்கின்றது. இந்தத் துறைமுகம் காரணமாகவும் மன்னார் மாவட்டம் பண்டைய காலத்திலேயே சிறப்புப் பெற்றிருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.



மாதோட்டை என்றும் மாதோட்டம் என்றும் மாஹோட்ட என்றும் அழைக்கப்பட்ட இந்தத் துறைமுகம் - பெரிய துறைமுகம் அல்லது பெருந் துறைமுகம் என்ற பொருளைக் கொண்டதாக சமஸ்கிருதத்தில் மாதீத்த என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் ஆய்வாளர்கள் பதிவு செய்திருக்கின்றார்கள்.

கிழக்கு ஆசியாவில் இருந்தும், மெடிட்டரேனியனில் இருந்தும் வர்த்தகர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தத் துறைமுகத்திற்கு வந்து சென்ற காரணத்தினால், இந்து சமுத்திரத்தின் முக்கியமான மிகப் பெரிய துறைமுகமாக மாதோட்டம் துறைமுகம் திகழ்ந்திருக்கின்றது.



இந்தத் துறைமுகத்தில் இருந்து அனுராதபுரத்தி;ற்கு நேரடியாக வீதித் தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததன் காரணமாக அனுராதபுரம் இராசதானியின் முக்கிய கடல் வழி வணிகம் உட்பட்ட தொடர்புகளுக்கான துறைமுகமாகவும் மாதோட்டம் துறைமுகம் திகழ்ந்திருக்கின்றது.

இந்தத் துறைமுககத்திற்கு சமாந்தரமாக கட்டுக்கரை குளமும் வரலாற்றில் சிறப்புப் பெற்று மன்னார் மாவட்டத்தை மேன்மைப்படுத்தியிருந்தது என்பது வரலாற்று ஆசிரியர்களின் முடிவாகும்.



கிறிஸ்துவுக்குப் பின் 455 தொடக்கம் 477 வரையில் ஆட்சி செய்ததாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தாதுசேனன் என்ற மௌரிய வம்சத்து மன்னனாலேயே கட்டுக்கரை குளம் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாற்று குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் இலங்கையை ஆட்சி செய்த நாகர்களினாலேயே இந்தக் குளம் நிர்மாணிக்கப்பட்டதாக வேறு சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இருந்த போதிலும், உண்மையாகவே கட்டுக்கரைக் குளத்தை நிர்மாணித்த மூலகர்த்தா யார் என்ற வரலாற்றுப் பதிவுகள் எதுவுமில்லை என்பது சில ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

இந்தப் பிரதேசத்தில் விவசாயத்தில் முன்னேறியிருந்த பெரும் எண்ணிக்கையான மக்கள் முன்னர் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதற்கான அடையாளங்களாக மாந்தை மற்றும் கட்டுக்கரைக்குளம் என்பவற்றில் காணப்படுகின்ற வரலாற்று எச்சங்கள் திகழ்கின்றன.

ஆகவே, இந்தப் பிரதேகத்தை உள்ளடக்கிய வன்னிப்பிரதேசத்தில் அந்தக் காலப்பகுதியில் வாழ்ந்த நாகர்களே கட்டுக்கரை குளத்தை நிர்மாணித்திருக்க வேண்டும் என்று முதலியார் சி.இராசநாயகம் தனது புராதன யாழ்ப்பாணம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கின்றார்.

கட்டுக்கரை குளம் நாகர் இன மக்களாலேயே கட்டப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறும் ஆய்வாளர்கள் பலரும் முதலியார் சி.இராசநாயகத்தின் கூற்றை ஆதாரமாக மேற்கோள் காட்டியிருக்கின்றனர்.

நாகர்குளம், நாகதீவு, சிறு நாகர்குளம் என்று நாகர்களின் பெயர்களைக் கொண்ட ஊர்கள் கட்டுக்கரை குளத்தை அண்மித்த பகுதிகளில் அமைந்திருப்பதையும் கட்டுக்கரை குளம் நாகர்களினாலேயே கட்டப்பட்டது என்பதற்கு சான்றாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

'நவீன பொறியியலாளர்கள் கூட கணித்து அறிந்து கொள்ள முடியாத வகையில் எமது மூதாதையர்கள், மிகவும் நுணுக்கமான முறைகளைக் கையாண்டு நீர்த்தேக்கங்களான குளங்களையும் அவற்றுக்கான கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களையும் அமைத்திருக்கின்றார்கள்.



'பதினெட்டாம் நூற்றாண்டில் ஒல்லாந்தர்கள் மற்றும் அவர்களின் சகாக்களாகிய ஆங்கிலேயர்களும்கூட கட்டுக்கரை குளத்தின் வடிவமைப்பு, அந்தக் குளத்திற்கு நீர் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தேக்கம் அணைக்கட்டு என்பவற்றின் தொழில்நுட்ப திறனைத் தெரிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்திருக்கின்றார்கள்.

'அதன் காரணமாகவே பராமரிப்பு குன்றியிருந்த இவற்றை அவர்களால் புனரமைக்க முடியாதிருந்தது' என்று புராதன இலங்கையின் நீர்ப்பிரபுக்கள் (Water Lords of Sri Lanka) என்ற நூலில் கலாநிதி ஆனந்த டபிள்யு.பி.குருகே குறிப்பிட்டிருப்பதையும் ஆய்வாளர்கள் மேற்கோள் காட்டியிருக்கின்றார்கள்.

இந்தப் பிரதேசத்தில் உள்ள நூற்றுக்கணக்கான குளங்களுக்கு தண்ணீரைத் தருகின்ற தாய்க்குளமாக கட்டுக்கரை குளம் திகழ்கின்றது என்று இந்தக் குளத்தின் கீழ் வேளாண்மை முயற்சியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறுகின்றார்கள்.

இத்தகைய பின்னணியில்தான் கட்டுக்கரை குளத்தின் குளப்படுக்கையில் குருவில்வான் பகுதியில் 1600 வருடங்களுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கன் என்பதற்கான சான்றுகள் பேராசிரியர் புஸ்பரட்னம் தலைமையில் யாழ் பல்கலைக்கழக தொல்லியல்துறை மாணவர்கள் மேற்கொண்டு வருகின்ற அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

பேராசிரியர் புஸ்பரட்னம் தலைமையிலான இந்த ஆய்வுக் குழுவினர் மாந்தையில் வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்த போதுதான், பல்கலைக்கழக மாணவன் கிருஷாந்தன் ஊடாக, மன்னாரைப் பூர்வீகமாகக் கொண்ட டேவிட் ஆசிரியர், மார்ச் மாதமளவில் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்.

அதனையடுத்தே, கட்டுக்கரை குருவில் வான் பகுதியில் கல் ஆயுதப் பாவனை இருந்தமைக்கான ஆதார அடையாளங்கள் காணப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து பேராசிரியர் புஸ்பரட்னம் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட பூர்வாங்க ஆய்வு நடவடிக்கைகளைத் தொடர்ந்து அந்தப்பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 

இதற்கு முன்னதாக, இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் பணியாற்றுவதற்காகவும், மேற்பார்வை செய்வதற்காகவும் வருகை தந்திருந்த சில வெளிநாட்டவர்கள், இங்கு பழங்கால நாணயங்கள் உள்ளிட்ட பொருட்களைக் கண்டெடுத்து கொண்டு சென்றதாகவும், அதேநேரம் சில இடங்களில் அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் போன்ற பொருட்களை சிறுவர்கள் கண்டெடுத்து விளையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் அவ்வாறு சிறுவர்கள் தமது விளையாட்டிற்குப் பயன்படுத்திய பொருட்களை எவரும் பாதுகாக்கவோ பத்திரப்படுத்தி வைக்கவோ இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அது மட்டுமல்லாமல் ஓரிடத்தில் பானையொன்றில் நாணயங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு, அது பலருடைய கைகளுக்கு மாறிச் சென்று பின்னர், சுவடே இல்லாமல் அது மறைந்து போய்விட்டதாகவும் ஊர்வாசிகள் தெரிவித்திருக்கி;ன்றனர்.

மூன்று இடங்களை அடையாளப்படுத்தி, மூன்று மீற்றர் நீள அகலம் கொண்ட மூன்று குழிகள் அமைத்து இங்கு அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வின் மூலம் புதிய வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.

பாளி இலக்கியங்களிலே, இலங்கையின் வடபகுதி, நாகதீபம் - நாக நாடு என்று அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றது. இந்தப் பிரதேசம் புவியியல் மற்றும் பண்பாட்டு ரீதியில் தனித்துவமாக  விளங்கியதாகவும் இங்கு நாகர்கள் வாழ்ந்ததாகவும் வரலாற்று ஆசிரியர்களினால் குறிப்பிடப்படுகின்றது.

'ஆயினும் ஐரோப்பியர் இலங்கையில் காலடி எடுத்து வைக்கும் வரையில் பாளி இலக்கியங்களில் புகைபடிந்ததொரு சித்திரமாகவே தனித்துவம் மிக்க நாகர்கள் வாழ்ந்த வடபகுதி காட்டப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் புதிய வெளிச்சத்தையும் புதிய பக்கத்தையும் கட்டுக்கரை குளப்; பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அகழ்வாய்வுகள் தோற்றுவிக்கும் என்பதற்கான ஆதாரங்கள் வெளிப்பட்டிருக்கின்றன' என்றார் பேராசிரியர் புஸ்பரட்னம்.

மாதோட்டம் துறைமுகத்தில் இருந்து அனுராதபுரத்தின் புராதன இராசதானிக்கு அமைக்கப்பட்டிருந்த வீதியின் ஓரத்தில் அமைந்திருந்ததாக் கருதப்படுகின்ற ஒரு நகரம் அல்லது குடியிருப்புக்களுக்கான அடையாளங்களே தற்போதைய அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த அகழ்வாராய்ச்சிக்கு மத்திய கலாசார நிதியம், தொல்லியல் மரபுரிமைப் பிரிவு, சுற்றுச் சூழல் பிரிவு ஆகியன யாழ் பல்கலைக்கழகத்தின்; பொறுப்பில் அனுசரணை வழங்கியிருக்கின்றன.

இந்த ஆய்வை, தொடர்ந்து மேற்கொள்வதற்கும், மன்னார் மாவட்டத்தின் மரபுரிமை நிலையங்களைப் பராமரிப்பதற்குமாக, இந்த மாவட்டத்திற்கென, மத்திய கலாசார நிதியம் அடுத்த ஆண்டுக்கென ஒரு மில்லியன் ரூபா நிதியொதுக்கியிருப்பதாக யாழ் மாவட்ட மத்திய கலாசார நிலைய அதிகாரி லக்ஸ்மன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் மரபுரிமை நிலையங்களைப் பாதுகாத்துப் பராமரிப்பதற்கும் ஆய்வுகளை மேற்கொள்வதற்குமாக மத்திய கலாசார நிதியம் 150 மில்லியன் ரூபா நிதியை அடுத்த ஆண்டுக்கென ஒதுக்கியிருக்கின்றது என்றும் லக்ஸ்மன் கூறினார்.

மன்னார் கட்டுக்கரை குளத்தின் அகழ்வாராய்ச்சியில் ஐயனார் வழிபாடு செய்யப்பட்ட இடம் அல்லது ஐயனார் கோவில் ஒன்று அமைந்திருந்தமைக்கான அடையாளங்கள் இந்த அகழ்வாய்வில் கிடைத்திருக்கின்றன.

'இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள யானைகள், காளைகள் போன்றவற்றிற்குக் கட்டுகின்ற மணிகள் இலங்கையின் எந்தப் பாகத்திலும் காணப்படாதவைகளாக இருக்கின்றன. ஐயானர் வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ள மதுரையில்கூட இந்த வகையான மணிகள் கண்டு 
பிடிக்கப்பட்டிருக்கவில்லை. அந்த வகையில் இந்தப் பிரதேசம் தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்ந்திருப்பது தெரியவந்திருக்கின்றது' என்றார் பேராசிரியர் புஸ்பரட்னம்.

சுட்ட மண்ணினால் ஆக்கப்பட்ட பலவகையான உருவங்கள், பாவனைப் பொருட்கள் என்பவற்றின் உடைந்த பாகங்களும் அரைகுறையிலான உருவ அமைப்புக்களும் இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த ஆதாரங்களின் மூலம் கற்காலத்து மனிதர்கள் இங்கு வாழ்ந்திருக்க வேண்டும் என்ற ஊகம் வலுப்பட்டிருக்கின்றது.

'மன்னார் மாவட்டத் தொல்லியல் நடவடிக்கைளுக்குப் பொறுப்பான அதிகாரி மணிமாறனால் இந்தப் பகுதியில் கல் ஆயுதங்கள் தொடர்பான சில எச்சங்கள், பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் கல் ஆயுதங்களுக்கு உரியவையாகக் காணப்படுகின்ற போதிலும், அவைகள் கண்டெக்கப்பட்ட இடங்களில் அகழ்ந்து மண்ணையும், மண் அடுக்குகளையும் ஆய்வு செய்து அவை உண்மையிலேயே கல் ஆயுதக காலத்தைச் சேர்ந்தவைகள்தானா என்பதை உறுதிப்படுத்த வேண்டியிருக்கின்றது' என்றார் பேராசிரியர் புஸ்பரட்னம்.

எனவே, தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள அகழ்வாய்வு நடவடிக்கையானது தொடர்ந்து, பரந்த அளவில் மேற்கொள்ள வேண்டி உள்ளது.

இங்கு ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள குழிகளில் ஓரளவு ஆழத்திற்கு மேல் தோண்டவோ அகழ்ந்து செல்லவோ முடியாதவாறு, தண்ணீர் ஊற்றெடுத்து தடையேற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதேநேரம் மாரி காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பதனால் மழை வீழ்ச்சி ஆரம்பித்தால் இங்கு அகழ்வாராய்ச்சி பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்க முடிடியாமல் போகக் கூடிய நிலைமையும் காணப்படுகின்றது.

மரபுரிமைச் சார்ந்த தொல்பொருட்கள், தொல்லியல் பொருட்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். முன்னோர்களின் வரலாற்றையும், வாழ்வியல் யும் அறிந்து அவற்றுக்கான அடையாளங்களைப் பேணி பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. எனவே, இது குறித்து இளம் சந்ததியினர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பிரிவு மாணவர்கள் இதற்காக பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளையும், அறிவூட்டும் செயற்பாடுகளையும் முன்னெடுத்திருக்கின்றனர்.

இதன் அடிப்படையில் மரபுரிமை நிலையங்களைக் கண்டுபிடித்து ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், அவற்றைப் பேணி பாதுகாப்பதற்கும் மன்னாரில் மாவட்ட நிலையம் ஒன்றை அமைத்து யாழ் பல்கலைக்கழக தொல்லியல் பிரவினரைப் பணியில் அமர்த்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் பேராசிரியர் புஸ்பரட்னம் தெரிவித்தார்.

இந்த வகையில் மரபுரிமைச் சார்ந்த தொல்லியல் சான்றுகள் நிறைந்த இடங்கள் வடபகுதியில் சிறந்த உல்லாசப் பயணிகளுக்கான மையங்களாகவும்,  இந்தப் ப்pரதேசத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் அடையாளங்கள், சான்றுகளைக் கொண்ட நிலையங்களாகவும் மாற்றம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136209/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

 

14390733_936698103128863_5817635809854675500_n.jpg?oh=4bebb5920a45cd0faa92dcff139ee90b&oe=586B6014&__gda__=1483579041_45536850d388edb9efb964fb84c0fa7e

14370129_936698093128864_2416156237278315567_n.jpg?oh=4c33f28ef874b5864e3362ef18bc1631&oe=58757B9A

14344743_936698106462196_1647723460986713006_n.jpg?oh=74fd6b97cde079224dfbea27014618b5&oe=5838075D&__gda__=1483588130_6040149b33cb7b9ab6d021acf83262af

 

14370011_936698139795526_8957282969686673083_n.jpg?oh=4221f64cd7a607841bc64ae288a30559&oe=58702588&__gda__=1483391714_426d096bc0f80141c097c23701b39f6e

14344289_936698146462192_5383004976166489748_n.jpg?oh=66b7086d2f1029041067afc39dabb78e&oe=5869EA7B&__gda__=1484590534_58dedf5ca0458f6341f2dbe489c8c28a

 

14440643_936698153128858_5574523022491508468_n.jpg?oh=6e7ae2a9aa23cf609c94d0fee1e2360a&oe=5881B47E&__gda__=1483823046_f1d6e6fa232663dc5bea6e0bc8f8d07c

14449842_936698223128851_2870332281072110687_n.jpg?oh=e8104cb86293befe1d11763552cb2a6c&oe=58860174&__gda__=1484874531_be5ca32e495b8f2af4cbb1ec04905431

14457293_936698279795512_4494985991612333046_n.jpg?oh=d5f75f935314c70955ac7e2ec9cc730a&oe=588608A4&__gda__=1483645902_7559406152f6455d1738cebaa7d73ad1

14449888_936698286462178_8642714284991451346_n.jpg?oh=0fb830d9307122f1a9068ef405b59edd&oe=586EBBF2&__gda__=1483625854_bd2134bb3e61d3953e55cb3fefaeb623

14446189_936698326462174_1595837255164734000_n.jpg?oh=34e224163726e1ceb012b2ae25e78c4a&oe=587B1972&__gda__=1484129784_2f73f622b6e3383111d6b4b44ab587d6

14322448_936698373128836_1201800388922877330_n.jpg?oh=4891a3de7d0e33933a38795f0f118007&oe=5864A9A4&__gda__=1483123477_a0ba89429f4a4315ebe3a38f15c2d3a8

14449765_936698226462184_1735302146422870199_n.jpg?oh=310a237ef2a675f1cd2cab0cee075bf9&oe=58390BAB

 

 

மன்னாரில் வெளிக்கிளம்பும் தொன்மை சான்றுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.