Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துக்கள் ட்ரம்பிற்காக...! இது வெற்று கோஷமா... இல்லை வெற்றி கோஷமா...?

Featured Replies

இந்துக்கள் ட்ரம்பிற்காக...! இது வெற்று கோஷமா... இல்லை வெற்றி கோஷமா...?

14628066_10202264120239907_921095291_n_1

நான் இந்துக்களின் ரசிகன்... இந்தியர்களின் ரசிகன்... பெரும் ரசிகன். நான் அதிபரானால், உங்களுக்கு வெள்ளை மாளிகையில் ஒரு நெருங்கிய நண்பன் இருப்பான். இந்தியர்கள், இந்துக்கள் அமெரிக்காவை வலுவாக்கினார்கள்... நாம் இருவரும் இணைந்து ட்ரம்ப் நிர்வாகத்தைக் கொண்டாடலம். இந்தியா இயற்கையான, அமெரிக்க கூட்டாளி... இந்திய அதிகாரத்துவத்தின் கொள்கையைச் சீர்த்திருத்திய மோடியுடன் வேலை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்... இஸ்லாமிய பயங்கரவாதத்தைச் சேர்ந்து முறியடிப்போம்... நம் இருவருக்கும் எதிர்காலத்தில் தனிச்சிறப்புடைய எதிர்காலம் இருக்கிறது.”

இதை யார் பேசி இருப்பார் என்று தெரிய, ஏன் பேசி இருப்பார் என்று புரிய பெரும் உலக அரசியல் அறிவெல்லாம் தேவையில்லை. முகநூலில் கணக்கு உள்ள ஒருவரே சொல்லிவிடுவார். ஆம்... நீங்கள் யூகித்தது சரிதான்... இது, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளாரான டொனால்ட் ட்ரம்ப்  பேசியதுதான். ஹிந்து குடியரசுக் கூட்டணி ஒருங்கிணைத்திருந்த கூட்டத்தில்,ஆயிரக்கணக்கில் குழுமியிருந்த இந்தியர்கள் மத்தியில் பேசியதுதான் இந்த உரை. அந்த 15 நிமிடங்களுக்குக் குறைவான உரையில் வரிக்கு வரி சற்றும் இடைவெளி இல்லாமல் இந்தியர்கள் மீது, இந்துக்கள் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இது தேர்தல் காலம். உலகம் முழுவதும் தேர்தல் என்றால் பொது விதிதானே...? மக்களைக் கவர வேண்டும். தேன் தடவிய வார்த்தைகளை முதலீடு செய்து மக்களின் வாக்கை அறுவடை செய்ய வேண்டும். அரவக்குறிச்சி தேர்தலாக இருந்தால் என்ன... அமெரிக்க தேர்தலாக இருந்தால் என்ன? எங்கும் மக்கள் மக்களாகவே இருக்கிறார்கள், அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளாகத்தானே இருக்கிறார்கள். இதில், ட்ரம்ப் மட்டும் என்ன விதிவிலக்கா? அமெரிக்க இந்தியர்களுக்கு வாக்கு இருக்கிறது. எதைச் செய்தாவது அதைக் கவர்ந்தாக வேண்டும். ட்ரம்ப், தன் வேலையைக் கொஞ்சமும் பிசகாமல் சரியாகத்தான் செய்திருக்கிறார். அவர் பேசியதில் எந்த வியப்போ, சந்தேகமோ இல்லை. ஆனால், ஏன் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ட்ரம்புக்காக ஏன் இத்தகைய மேடையை அமைத்துத் தர வேண்டும்?  ஏன் அவர் வெற்றிக்காக உழைக்க வேண்டும்?

அமெரிக்காவின் முற்போக்காளர்களும், அறிவார்ந்த சமூகமும் ட்ரம்ப்பின் அண்மைய உரைகளுக்காகக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொண்டிருக்கும்போது, ஏன் அமெரிக்க வாழ் இந்திய இந்துக்கள், தங்கள் ஆதரவைத் தர என்ன காரணம்? உண்மையில், இந்தியர்கள் ட்ரம்ப்பை நம்புகிறார்களா... தங்கள் வாழ்வை ரட்சிக்க வந்த ஒரு தூதனாக நினைக்கிறார்களா? ட்ரம்ப் வந்தால் மட்டும்தான், இந்திய - அமெரிக்க உறவு வலுப்படும் என்று கருகிறார்களா? ஏன் இத்தகைய பேராதரவைத் தெரிவிக்க வேண்டும்? உண்மையில், இதற்கு ட்ரம்ப் தகுதியானவரா...?

பேரதரவு ஒன்றும் இல்லை!

அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் வசிக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜெயபாலாஜி, “பேராதரவு என்ற பதமே தவறு. இந்தக் கூட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்கள், அந்த அரங்கத்தின் வெளியேயே கோஷம் போட்டனர்; துண்டறிக்கைகளை விநியோகித்தனர். அதனால் இந்திய இந்துக்கள் அனைவரும் அவர் அதிபராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று எண்ண வேண்டாம்.”

14627781_10202264159880898_1522251686_n_

மேலும் அவர், “ட்ரம்ப் இந்துக்களின் நண்பன் என்ற மாயயைத் திட்டமிட்டு ஏற்படுத்துகிறார்கள். அதில், உண்மை இருப்பதாகவும் நான் நினைக்கவில்லை. உண்மையில் அவரும், அவர் ஆதரவாளர்களும் இனவெறியர்களாகவே இருக்கிறார்கள். அமெரிக்காவில் பல தலைமுறைகளாக வாழும் கறுப்பினத்தவர்களையே அவர்கள் ஏற்றுக்கொள்ளாதபோது, போன தலைமுறையில் அங்கு போய் குடியேறிய இந்தியர்களை அவரகள் ஏற்றுக்கொள்வார் என நான் நினைக்கவில்லை” என்கிறார்.

ட்ரம்ப் இனப்பாகுபாட்டுடன் நடந்துகொள்பவர் என்ற பாலாஜியின் குற்றச்சாட்டிலும் உண்மை இல்லாமல் இல்லை. ஆம், ‘நியூயார்க் டைம்ஸ்’ ஒரு நீண்ட ஆய்வை மேற்கொண்டு, ஆரம்ப காலத்தில் ட்ரம்ப் எப்படித் தன் ரியல் எஸ்டேட் தொழிலில், கறுப்பின மக்களைப் புறக்கணித்து இருக்கிறார் என்று தரவுகளுடன் ஒரு நீண்ட செய்தியை வெளியிட்டு இருக்கிறது.

‘‘கறுப்பின மக்களை அவர் தொடக்கத்தில் எப்படிப் பார்த்தாரோ, அப்படித்தான் அவர் இந்தியர்களையும் பார்க்கிறார்’’ என்கிறார் அமெரிக்க வளர்ச்சி மையத்தின் தலைவர் நீரா டாண்டன். அண்மையில் அவர் எழுதிய ஒரு கட்டுரையில்,  “தீபாவளி வருகிறது. அது இருளை விரட்டி, ஒளியை ஏற்றும் பண்டிகை. அது போல், அமெரிக்க இந்தியர்கள் அனைவரும் ட்ரம்பை புறக்கணிக்க வேண்டும்” என்று கடுமையாக எழுதி இருக்கிறார்.  

தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட மனிதர் அவர்!

பஞ்சாபைப் பூர்வீகமாகக் கொண்ட சிகாக்கோவில் வசிக்கும் தொழில் அதிபர், ஹிந்து குடியரசுக் கூட்டணியின் நிறுவனர், ஷலாப் குமாரின் வாதம் வேறு விதமாக இருக்கிறது. இவர், டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் செலவுக்காக ஏறத்தாழ ஆறு கோடிக்கும் மேல் நிதியளித்தவர். அவர், “சமீப காலத்தில் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட மனிதர் டொனால்ட் ட்ரம்ப்தான். அவரின் எதிர்ப்பாளர்களை, அவரை திட்டமிட்டே மிகவும் மோசமாக சித்தரிக்கிறார்கள். ட்ரம்ப் குடியேறிகளுக்கு எதிரானவர் என்று என்றுமே சொன்னதில்லை. அவர் சட்டவிரோதமான குடியேற்றம்தான் தடுக்கப்படும்’ என்கிறார். இது சரியான வாதம்தானே...? சட்டத்தை மதிப்பவர்கள் நிச்சயம் இதற்காக அஞ்சமாட்டார்கள்.

14686655_10202264120439912_1407108549_n_

ஆசியாவில் சீனாவுக்குப் பதிலடிகொடுக்க, ட்ரம்ப் வணிகரீதியாக அமெரிக்க - இந்திய உறவை விரும்புகிறார். இதனால், ஓர் இந்தியனாக ட்ரம்பை நான் ஆதரிக்கிறேன். அதுபோல, கடந்த 45 ஆண்டு அமெரிக்க வரலாற்றில் மிகவும் வலிமையான மனிதர் அவர். தேசப் பாதுகாப்பில் அதிகம் அக்கறை செலுத்துகிறார். அதனால் ஒரு அமெரிக்கனாக, நான் அவரை ஆதரிக்கிறேன். நிச்சயம் ட்ரம்ப் வெற்றிபெறுவது இந்திய தேச நலன் மற்றும் இந்தியர்களின் நலனுக்கு நன்மை பயக்கும்’’ என்கிறார்.

14696789_10202264128160105_1013052616_n_ஆனால், நீரா டாண்டன், “அண்மையில் ட்ரம்புக்கு ஆதரவாக நடந்த பேரணியிலிருந்து, ஓர் அமெரிக்க வாழ் இந்தியர் வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பப்பட்டார். இதனை எப்படி எடுத்துக்கொள்வது? அமெரிக்க வாழ் இந்தியர்கள், அவருக்கு ஆதரவான பேரணியிலேயே இடம் இல்லை என்றால், அவர் ஆட்சியில் எப்படி அவர்களுக்கு இடம் இருக்கும்” என்று அர்த்தமான கேள்வியை எழுப்புகிறார்.

அமெரிக்காவில் சில ஆண்டுகள் வசித்த பாலசுப்பிரமணி, “அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் ஒரு வலிமையான பிரதமர் வேண்டும் என்று விரும்பினார்கள். அதனால், கடந்த தேர்தலின்போது மோடியை ஆதரித்து, சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பிரசாரம் செய்தார்கள். இவர்கள் யாரும் தீவிரமான மதவெறியர்கள் அல்ல... ஆனால், ட்ரம்பின் பிரசாரத்தை வடிமைப்பவர்கள், மோடிக்காக அமெரிக்க இந்தியர்கள் பிரசாரம் செய்ததைத் தவறாக எண்ணிவிட்டார்கள் என நினைக்கிறேன். அதனால், மதத்தை முதன்மைப்படுத்தி பிரசாரம் செய்கிறார்கள்.”

பின் எப்படி இவ்வளவு கூட்டம்...?

இந்தக் கூட்டத்தில் ஏறத்தாழ 5,000 பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள். ட்ரம்பின் எதிராளிகள் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். இது ஒன்றும் சாதாரண எண்ணிக்கை அல்ல. எப்படி இவ்வளவு கூட்டம் வந்தது, ஏன் இவ்வளவு கூட்டம் வந்தது....?

“நான் வந்தது பாலிவுட் நடிகர்களின் கலைநிகழ்ச்சியைப் பார்க்கத்தான் (நிகழ்வில் பிரபுதேவா, ஸ்ரேயா, ஆகியோரின் நடன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன). என்னைப்போலத்தான் பெரும்பாலானவர்கள் வந்து இருப்பார்கள் என நினைக்கிறேன்” என்கிறார்.
அவரே மேலும் தொடர்கிறார், “இதையெல்லாம் கடந்து ட்ரம்பும் சுவாரஸ்யமான மனிதர்தானே... அவர் பேச்சைக் கேட்க இவ்வளவு கூட்டம் வருவதில் என்ன ஆச்சர்யம்? வந்தவர்கள் எல்லாம் வாக்களிப்பார்களா என்ன...? பெரும்பாலானவர்களுக்கு வாக்குரிமையே கிடையாது. எனக்கும் இங்கு வாக்குரிமை இல்லை.”

14696798_10202264122279958_1800566970_n_

 

நியூயார்க்கில் வசிக்கும் மென்பொறியாளர் ஆர்.பாலாஜியும் இதையே வழிமொழிகிறார், “அமெரிக்காவில் இந்தியர்களின் மக்கள்தொகை ஒரு சதவிகிதத்துக்கும் கீழ். இங்கே வசிக்கிற பெரும்பாலானவர்களுக்கு வாக்குரிமை இல்லை. நான் இந்தியர்களின் வாக்கு, பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்று நம்பவில்லை” என்கிறார்.

அதே நேரம், இந்தியர்கள் மத்தியில் ட்ரம்புக்கு இருக்கும் பிரபல்யத்தையும் குறைத்து மதிப்பிடுவதற்கு இல்லை.   “ட்ரம்ப் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகட்டும். நான் அவரின் தீவிர ஆதரவாளன்தான். தீவிரவாதத்துக்கு எதிராக அவர் எடுத்து இருக்கும் நிலைக்காகவே அவரை ஆதரிக்கிறேன்” என்பது நியூ ஜெர்ஸியில் வசிக்கும் ரோகி ரெட்டி வாதம்.

முதல் பத்தியில் குறிபிட்டது போல், உலகம் முழுவதும் தேர்தல் ஒரு மாயவிளையாட்டு தான்... யார் என்ன எழுதினாலும், என்ன பேசினாலும்... மக்கள் எப்படி காய்நகர்த்துவார்கள் என்று நிச்சயம் யாராலும் அவ்வளவு துல்லியமாக கணிக்க முடியாது... 5000 அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒரு தலைவரை காண கூடி இருக்கிறார்கள் என்பதை  சாதரணமாக கடந்து செல்ல முடியாது. ஆனால், இது ட்ரம்பின் வெற்றிக்கு காய் கொடுக்குமா...? அவரை அரியணையில் அமர்த்துமா...?   வெற்றி பெற்றால் அமெரிக்க இந்துகளுக்கு கொடுத்த வாக்குறுதியை ட்ரம்ப் நிறைவேற்றுவாரா...?

பார்ப்போம். காலம் சுழன்றுக் கொண்டு இருக்கிறது! 

http://www.vikatan.com/news/coverstory/69881-hindus-for-trump--would-this-slogan-really-get-succeed-.art

  • கருத்துக்கள உறவுகள்

சிலநேரம் வெண்டாலும்..... எண்டு கூப்பிட்டு இந்தக் கூத்து காட்டினாலும்... ஒரு சிறுபான்மை வாக்கும் இவருக்கு விழாது.

இவரின்ற நாக்கு அப்படி....சனி ஏறிப் படுத்திட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Nathamuni said:

சிலநேரம் வெண்டாலும்..... எண்டு கூப்பிட்டு இந்தக் கூத்து காட்டினாலும்... ஒரு சிறுபான்மை வாக்கும் இவருக்கு விழாது.

இவரின்ற நாக்கு அப்படி....சனி ஏறிப் படுத்திட்டார்.

இந்தியர்கள் எப்பொழுதுமே இப்படித்தான்

தவறான வால்களை மட்டுமே தெரிவு செய்து தடவி வளர்த்துவிடுகிறார்கள்

பின்னர் தலையாலும் வாலாலும் அடிவாங்குகிறார்கள்

  • தொடங்கியவர்
ட்ரம்ப்பும் இந்து இந்தியர்களின் காதலும்

 

article_1476943082-dcf.jpgகனகலிங்கம் கோபிகிருஷ்ணா

இவ்வாண்டு நவம்பர் எட்டாம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல், அண்மைக்கால ஐக்கிய அமெரிக்க வரலாற்றில், குழப்பம் மிகுந்ததான தேர்தலாக மாறியிருக்கிறது என்று சொல்வது, அந்நிலையை முழுமையாக வெளிப்படுத்தாததாகவே அமையும். அந்தளவுக்கு, பாரிய குழப்பங்களையும் பதற்றத்தையும், இத்தேர்தல் ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், தான் போட்டியிடும் குடியரசுக் கட்சியையே இரண்டாகப் பிளந்துவிட்டார் என்று சொல்லுமளவுக்கு நிலைமை காணப்படுகிறது. 

ஆனால், இவற்றுக்கெல்லாம் மத்தியில், துணைக் கதையொன்று உருவாகி வருகிறது. இந்தியாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் வாழும் இந்தியர்களிடத்தில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு அதிகரித்துவரும் ஆதரவு தான் அது. அண்மைக்கால ஜனாதிபதித் தேர்தல்களோடு ஒப்பிடும் போது, வித்தியாசமான நிலையையே இது காட்டுகிறது. 

2008ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாகுவதற்காக பராக் ஒபாமா போட்டியிட்ட போது, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் பெருமளவிலான ஆதரவு, அவருக்கு இருந்தது. அது தவிர, இந்தியா, இலங்கை உள்ளிட்ட கீழைத்தேய நாடுகளில், ஒபாமாவை, வரவேற்கத்தகு மாற்றமாகக் கருதினர். இதற்கு, வெள்ளையர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் அமெரிக்க வரலாற்றில், கறுப்பின ஜனாதிபதியால் மாற்றம் கொண்டு வரப்படும் என்பதோடு, ஜனநாயகக் கட்சியினர், குடிவரவுக் கொள்கைகளில் இளக்கமான கொள்கையைக் கொண்டவர்கள் என்பதும் காரணமாக இருந்தது. நாட்டுக்குள் புதிதாக வேறு இனத்தவர்கள் வருவதை, குடியரசுக் கட்சியினர் பெரிதும் விரும்புவதில்லை. 

டொனால்ட் ட்ரம்ப்போ, வழக்கமான குடியரசுக் கட்சியினரை விட மிகவும் இறுக்கமான குடிவரவுக் கொள்கைகளைக் கொண்டவர். ஏனைய நாட்டவர்கள், அமெரிக்காவுக்குள் வரக்கூடாது என்பதை, வெளிப்படையாகவே கூறுமளவுக்கு அவரது பிரசாரம் அமைந்துள்ளது. வெள்ளையின ஆதிக்கத்தைப் பிரசாரப்படுத்தும் கிளான் போன்ற குழுக்களின் ஆதரவைப் பெற்றவராக, ட்ரம்ப் இருக்கிறார். அவரது ஆதரவாளர்களில் சுமார் 20 சதவீதத்தினர், அடிமைத்தனத்தை ஒழித்தமை தவறு என்கின்றனர். 

இவ்வாறானதொரு வேட்பாளரை, இந்தியாவைச் சேர்ந்த இந்துக்கள் எவ்வாறு ஆதரிக்க முடியும்? அதற்கான அடிப்படை தான் என்ன? 

இரு தரப்பினருமே, முஸ்லிம்களை வெறுப்பது தான் அந்தக் காரணம். 

இந்துக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட இந்தியாவில், குறிப்பிட்ட சதவீதமானவர்கள், சமாதானத்தை விரும்பும், ஒற்றுமையை விரும்பும், பல்வகைமையை விரும்பும் குழுவினராகவே இருக்கிறார்கள். ஆனால், இவர்களையெல்லாம் தாண்டி, கடும்போக்கு இந்துக்களும் அங்கு காணப்படுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ், சிவசேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளாகவும் இன்னும் பல இடங்களில் அங்கிகரிக்கப்படாத குழுக்களாகவோ அல்லது தனிநபர்களாகவே இணைந்து, இந்த வெறுப்புக் காணப்படுகிறது. 

தற்போது ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி, ஓர் இந்துத் தேசியவாதக் கட்சியாக இருப்பதால், இந்த முஸ்லிம் வெறுப்பை, அக்கட்சி மீதும் அதன் தலைவர் நரேந்திர மோடி மீதும் இலகுவாகப் போட்டுவிட்டுத் தப்பித்துவிடலாம். ஆனால், அக்கட்சி ஆட்சிக்கு வர முன்னரும் இவ்வெறுப்பு இருந்தது. அக்கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், அந்த வெறுப்பு அதிகரித்திருக்கிறது என்பதற்கான தரவுகள் எவையும் இல்லை. ஆகவே, இந்த வெறுப்பென்பது, இந்துக்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்திருக்கின்ற ஒன்று. 

இந்தியாவின் அயல் நாடான பாகிஸ்தான், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கின்ற நாடு என்பதோடு, இந்தியாவுக்குள் நடக்கும் பல்வேறுபட்ட தாக்குதல்களையும் அந்நாடு தான் ஊக்குவிக்கிறது என்ற குற்றச்சாட்டுக் காரணமாக எழுந்த வெறுப்பாக இது இருக்கலாம். இல்லாவிடில், இந்தியத் துணைக்கண்டத்தில் காலாகாலமாக இடம்பெற்ற முஸ்லிம் அரசர்களின் படையெடுப்புகள் பற்றிய வரலாற்றுக் காயங்களாக இருக்கலாம். காரணம் எதுவாக இருப்பினும், இந்த வெறுப்பென்பது உண்மையானது. 

மேற்கத்தேய அரசாங்கங்களின் தலைவர்களில், இஸ்லாம் அல்லது முஸ்லிம்கள் பற்றிய வெறுப்பை அல்லது விமர்சனத்தைக் கொண்ட பலரும், அவற்றை வெளியில் பரவலாக வெளிப்படுத்துவதில்லை. தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா கூட, அமெரிக்காவில் இடம்பெறும் தாக்குதல்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவால் நடத்தப்பட்டாலும், அதை “இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் விளைவு” என அழைப்பதில்லை என்பது, ட்ரம்ப் உள்ளிட்ட கடும்போக்குவாதிகளின் குற்றச்சாட்டு. ஆனால், வெளிவரும் உள்வீட்டுத் தகவல்களின் அடிப்படையில், “இஸ்லாமியப் பயங்கரவாதம்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினால், முஸ்லிம்கள் மீதான வெறுப்பு அதிகரித்துவிடும் என அஞ்சும் ஜனாதிபதி ஒபாமா, “இஸ்லாமுக்குள் பிரச்சினை இருக்கிறது. அம்மதத்தில் ஒரு தரப்பினர், மிகவும் கடும்போக்குவாதிகளாக மாறிவிட்டனர். ஆகவே, மதத்தைச் சீர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுங்கள்” என, சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்குத் தலைவர்களிடம், இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. 

இந்த நிலையில்தான், தான் ஜனாதிபதியானால், எந்தவொரு முஸ்லிமும் அமெரிக்காவுக்குள் வருவதற்குத் தடை விதிக்கப் போவதாக அறிவித்து, அதன் மூலம் தனது பிரசாரத்தைக் கொண்டு செல்லும் டொனால்ட் ட்ரம்ப்பை, தோழராகக் கருதுகிறார்கள் இந்த இந்துப் பிரிவினர். 

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், மெக்ஸிக்கர்கள், முஸ்லிம்கள், கறுப்பினத்தவர்கள், சீனர்கள் என்று, சிறுபான்மைத் தரப்பினர் அனைவரையும் கோபப்படுத்தியுள்ள ட்ரம்ப் தரப்பு, அண்மைக்காலமாக பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக, பெண்களின் ஆதரவையும் இழக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. அதனால் தான், இந்தியர்கள் மீதான கவனத்தை அதிகமாகத் திருப்பியுள்ளனர். இரண்டு பிரதான கட்சிகளுமே ஆதிக்கம் செலுத்தாத மாநிலங்களில், இந்தியர்களின் ஆதரவைப் பெறுவதன் மூலம் அவற்றைக் கைப்பற்றுவதற்கு, ட்ரம்ப் பிரசாரக் குழு திட்டமிடுகிறது. 

இதன் ஓர் அங்கமாக, “குடியரசுக் கட்சியின் இந்துக் கூட்டணி” என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சியொன்று இடம்பெற்றது. இதில், தென்னிந்தியாவில் பிரபல நடனக் கலைஞராக இருந்து, தற்போது வட இந்தியாவில் பிரபல இயக்குநராக மாறியிருக்கும் பிரபு தேவா, நடிகை ஸ்‌ரேயா, தெலுங்கின் முன்னணி நடிகர் ராம் சரன் உள்ளிட்ட நட்சத்திரக் குழாமொன்று, ஆடிப்பாடி மகிழ்வித்திருக்கிறது. காஷ்மிரிலும் பங்களாதேஷிலும் இடம்பெற்ற “இஸ்லாமியப் பயங்கரவாத நடவடிக்கைகளில்” பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு உதவுவதற்கான நிகழ்ச்சி என்றே இது விளம்பரப்படுத்தப்பட்டாலும், பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டவர், டொனால்ட் ட்ரம்ப். அதை அவர், தனது பிரசார மேடை போன்றே பயன்படுத்திக் கொண்டார். அத்தோடு, தேர்தலுக்கு மூன்று வாரங்கள் மாத்திரமே இருக்கின்ற நிலையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியின் நோக்கத்தைப் புரிந்து கொள்வதற்கு, அதிகப்படியான அறிவு தேவையில்லை. 

ஆக, இந்த இந்து - ட்ரம்ப் கூட்டணி, எதிர்காலத்தில் தொடருமா என்று கேட்டால், அதற்கான பதிலாக, உறுதியான எதையும் கூற முடியாதிருக்கிறது. முதலாவதாக, ட்ரம்ப் என்பவர் அரசியல்வாதி அல்லர். ஆகவே, இந்தத் தேர்தலில் தோல்வியுற்றால், தற்போது 70 வயதாகும் ட்ரம்ப், அனேகமாக 8 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியேற்படும். (அண்மைக்கால வரலாற்றில், அமெரிக்க ஜனாதிபதியொருவர், தனது முதற்பதவிக் காலத்துடன் விலகியமை அரிது. பலத்த விமர்சனங்களை எதிர்கொண்ட ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கூட, இரு தடவைகள் தெரிவுசெய்யப்பட்டார்). அவ்வாறான நிலையில், தனது 78 வயதில் ட்ரம்ப்பை ஏற்றுக் கொள்வதற்கு, அமெரிக்கா தயாராக இருக்குமா தெரியாது. எனவே, இத்தேர்தலில் தோல்வியுற்றால், தனது வணிக நடவடிக்கைகளிலேயே கவனத்தைச் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மறுபக்கமாக, இந்தத் தேர்தலில் எதிர்பாராதவிதமாக ட்ரம்ப் வெற்றிபெற்றால், இந்துக்களுக்கு (சிறுபான்மையினர்) அவர் ஆதவளிப்பாரா என்பது கேள்விக்குறியே. உண்மையிலேயே அவருக்கு இந்துக்கள் மீது விருப்பம் இருந்தாலும் கூட, அவருக்கு ஆதவளிப்பவர்களில் பெரும்பாலானோர், தனித்து வெள்ளையினத்தவர்களைக் கொண்ட அமெரிக்காவையே உருவாக்க விரும்புகின்றனர். ஆகவே, இந்துக்களினதோ அல்லது இந்தியர்களினதோ நலன்கள் பாதுகாக்கப்படுமென்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. 

முஸ்லிம் வெறுப்பு என்ற ஒற்றைக் காரணத்தைக் கொண்டு ஏற்பட்டிருக்கும் இந்தக் கூட்டணி, இந்துக்களுக்கு எந்தவித நன்மையையும் வழங்காது என்பதையே, நடைமுறை அறிவு சொல்கிறது. மாறாக, இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் காணப்படும் ஒருவிதமான பதற்றமான நிலைமையை மேலும் அதிகரிக்க, இந்தக் கூட்டணி வழிசமைக்கலாம் என்பது தான் கவலைக்குரியது.     

http://www.tamilmirror.lk/184355/ட-ரம-ப-ப-ம-இந-த-இந-த-யர-கள-ன-க-தல-ம-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.