Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்சொல்லும் கதைகள் மல்லாவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் 48 வருடங்களின் முன்னம் தீர்க்க தரிசனம்போல எழுதிய பாலி ஆறு கவிதை,  ஊர்சொல்லும் கதைகள் மல்லாவி என்கிற கட்டுரையோடு பிரசுரிக்கப் பட்டுள்ளது என இலங்கையில் இருந்து ஒரு நண்பர் தொலஒபேசியில் தெரிவித்தார்.  வேறோரு ந ண்பர் அதன் இணைய முக வரி அனுப்பினார்.

மிக முக்கியமான கட்டுரை. எனது முதல் கவிதையாக அடையாளப் படுத்தப் படுகிற கவிதையும் மிகவும் முக்கியமான கவிதை.

கட்டுரையையும் கவிதையையும்  உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஊர்சொல்லும் கதைகள் மல்லாவி

- சிக்மலிங்கம் றெஜினோல்ட்

“NGO க்களின் நகரம்” என்று ஒரு காலம் வர்ணிக்கப்பட்டது மல்லாவி. அது 1990 களின் பிற்பகுதி. அல்லது சந்திரிகா குமாரதுங்கவின் யுத்தகாலம். வன்னியில் சின்னஞ்சிறிய குடியேற்றக் கிராமமாக இருந்த இடம் திடீரென, mallavi-1ஐ.நாவின் கொடி பறக்கும் இடமாகியதென்றால், யார்தான் ஆச்சரியப்படமாட்டார்கள்! ஐநாவின் கொடி மட்டுமல்ல, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் கொடி தொடக்கம், உலகத்தின் பெரும்பாலான தொண்டு நிறுவனங்களின் கொடிகள் வரையில் ஏராளம் கொடிகள் மல்லாவியில் பறந்தாடின. அவற்றின் அலுவலகங்களும் உலகத்தின் பல இனத்தையும் சேர்ந்த பணியாளர்களுமாக மல்லாவி புதியதொரு  தோற்றத்தை எடுத்தது. இதைப்பார்த்த ஒரு நண்பர் சொன்னார், “மல்லாவி இப்போது NGO க்களின் நகரமாகி விட்டது. உள்ளுர் வீடுகள் எல்லாம் வெளிநாட்டுக்காரர்களால் நிரப்பப்படுகின்றன. சொந்தக் கிராமத்து ஆட்களும் சொந்த நாட்டுக்காரரும் கொட்டில்களிலும் குடிசைகளிலும் உண்டு, குடித்து, உறங்குகிறார்கள். வெளியாட்கள் வீடுகளில் காலாட்டிக்கொண்டு சொகுசாக இருக்கிறார்கள்“ என்று. எல்லாத்துக்கும் காசுதான் காரணம். காசுக்காகவே தங்களுடைய சொந்த வீடுகளை என். ஜீ. ஓக்களுக்குக் கொடுத்து விட்டு எல்லோரும் தோட்டங்களிலும் வயற்காடுகளிலும் உள்ள குடிசைகளில் கிரகப்பிரவேசம் செய்தார்கள்.

மல்லாவியில் இப்படித் திடீரெனத் தொண்டுநிறுவனங்கள் குவியக்காரணம், கிளிநொச்சியை நோக்கிய படையெடுப்பே. இதனால் கிளிநொச்சியில் இயங்கிய தொண்டு நிறுவனங்கள் அத்தனையும் இடம்பெயர்ந்து மல்லாவிக்கே சென்றிருந்தன. அப்படிச் சென்ற தொண்டு நிறுவனங்களுக்கு பணிமனைகள் அமைப்பதற்கு இடம் தேவை. ஆனால், அதற்குரியமாதிரி அங்கே வீடுகளோ, பெரிய கட்டிடங்களோ இல்லை. குடியேற்றக்கிராமத்தில் பெரிய ஏற்பாடுகளையும் அதிக வசதிகளையும் எதிர்ப்பார்க்க முடியாது. அதுவும் வன்னியில். ஆனால், அதை விட்டாலும் வேறு வழியில்லை. எனவே, இருக்கின்ற வீடுகளை எடுத்து, அவற்றின் பக்கமெல்லாம் பத்திகளை இறக்கிப்பெருப்பித்து, ஒருவாறு தங்களுக்கேற்ற மாதிரி வசதிகளைச் செய்து கொண்டார்கள்.

1995 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய படைகள்,  வன்னியை ஊடறுக்கும் பெரும் சமர்களை செய்து கொண்டிருந்தன. பிறகு 1996 யுலையில் கிளிநொச்சியைக் கைப்பற்றின. படைகளின் வெற்றி, சந்திரிகா அரசாங்கத்தை போருக்கு ஊக்கப்படுத்தியது. தொடர்ந்து ஜெயசிக்குறுவை சந்திரிகா ஆரம்பித்தார். அதுவே மல்லாவியிலும் புதுக்குடியிருப்பிலும் அக்கராயன் – ஸ்கந்தபுரத்திலுமாக மூன்று மையங்களை உருவாக்கியது. இதில் புதுக்குடியிருப்பு புலிகளின் மையமாக இருந்தது. மல்லாவி என்.ஜீ.ஓக்களின் மையம். ஸ்கந்தபுரம் சனங்களின் மையம். எல்லா இடங்களிலும் சனங்களும் இருந்தாலும் இந்த மாதிரி ஒரு ஒழுங்குதான் அப்போது வன்னியிலிருந்தது.

நெல் விதைப்புப் போக, புலவுகளில் உழுந்தையும் எள்ளையும் விதைத்தும் அறுத்தும் கொண்டிருந்த சனங்களுக்கு என். ஜீ. ஓக்களும் வெள்ளை, கறுப்பு, பிரவுண் என்று கலர் கலராக மனிதர்களும் ஊருக்குள் வந்தால் எப்பிடியிருக்கும்? கொஞ்சநாள் சனங்களுக்கு வேடிக்கையும் புதினமும். பிறகு எல்லாமே வழமையாகி விட்டன. என்றாலும் பெரும்பாலான வெள்ளையர்கள் மல்லாவியை மாலாவி என்றே சொன்னார்கள். மாலாவி இல்லை. மல்லாவி என்று எப்படித்தான் சொல்லிக் கொடுத்தாலும் அவர்கள் மாலாவி என்றே சொல்லித்தொலைத்தார்கள். மாலாவி என்றொரு நாடு ஆபிரிக்கக்கண்டத்திலிருக்கிறது என்று கூட ஒரு நண்பர் எடுத்துச் சொல்லிப் பார்த்தார். “ஓ.. அப்படியா.. இதுவும் ஆபிரிக்காதானே“ என்றிருக்கிறார் அந்த வெள்ளையர். அவர்களைப் பொறுத்தவரை வெயிலும் வெக்கையும் கறுப்பும் என்றால் ஆபரிக்காதான். இப்படி ஆயிரம் கூத்துகள்.mallavi-2

யுத்தம் கடுமையா நடந்து கொண்டிருந்தது. பொருளாதாரத்தடையால் சனங்கள் சாப்பாட்டுக்கே கஸ்ரப்பட்டார்கள். நிவாரணப்பொருட்கள் மட்டும்தான் வாழ்வாதாரமாக இருந்த நாட்கள் அது. ஆனால், வன்னிக்கு வருகிற பொருட்கள் வன்னியிலுள்ள சனங்களுக்குப் போதாது. உள்ளுரில் விவசாயமும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. உரமும் மருந்தும் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இருந்ததால், விவசாயத்தைத் தேவையான அளவுக்குச் செய்ய முடியேல்ல. உழுந்தும் நெல்லும் விளைகிற புலவுகளில் பட்டினியும் பஞ்சமும் விளைந்தது. ஒரு கட்டத்தில் சனங்கள், பொருளாதாரத் தடையை நீக்குங்கள் என்று சொல்லி, ஐ. நா பணிமனையின் முன்னே அடையாளப்போராட்டத்தை நடத்தத் தொடங்கினார்கள். இந்தப் போராட்டம் 200 நாட்களுக்கும் மேலாகச் சுழற்சி முறையில் நடந்தது. ஆனால், சந்திரிகாவுக்கு சனங்களின் சாப்பாட்டுப்பிரச்சினையை விட, படை நடவடிக்கைதான் முக்கியமாக இருந்தது. சனங்கள் போராட்டம் நடத்திக் களைத்ததுதான் மிச்சம்.

அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பேச்சுவார்த்தைச் சூழலை உருவாக்கியது நோர்வே அரசு. அதுக்காகப் புலிகள் மல்லாவியில் ஒரு புதிய ஏற்பாட்டைச் செய்தனர். பொருத்தமான இடத்தில் வீடொன்றை எடுத்து, அதை விரிவாக்கினார்கள். அங்கே தங்குமிடம், தங்குவோருக்குச் சமையற்காரர்கள், காவல் ஏற்பாடுகள், சந்திப்பிடம் எனப் பலவும் ஏற்பாடு செய்யப்பட்டது. பேச்சுகளுக்காக என்று வெளியிலிருந்து வரும் ஹெலிகொப்ரர்கள் இறங்குவதற்கான இடமும் பார்த்து, ஹெலி இறங்குகிற இடத்தில் அடையாளமும் இடப்பட்டாயிற்று. ஏறக்குறைய இனிப்பேச்சுகள் ஆரம்பிக்கப்படுவதற்கான நாள் குறிப்பது மட்டும்தான் பாக்கி என்றிருந்தது. என்ன நடந்ததோ தெரியாது. ஏற்பாடுகள் எல்லாம் குழம்பி விட்டன. பேச்சுகளுக்காகத் தயார்ப்படுத்திய அந்த வீட்டைப் புலிகள் பிறகு தங்களுடைய சந்திப்புகளுக்காகவும் பிறகு போராளிகளை இணைத்துக்கொள்வதற்காகவும் பயன்படுத்தினார்கள். அதாவது சமாதான ஏற்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட ஓரிடம் போருக்காகப் பயன்படுத்தப்பட வேண்டியதாயிற்று.

இந்த வீட்டிலிருந்து சரியாக நான்கு கிலோ மீற்றர் தொலைவிலிருந்தது, வடகாடு. அங்கேதான் இருந்தது, கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் வீடு. ஆனால் ஜெயபாலன் அப்போது அங்கே இருக்கவில்லை. அப்போது அங்கே அவருடைய அம்மாவும் அப்பாவும் இருந்தனர். அருகிலே ஐ.நாவின் துணை நிறுவனமொன்றிருந்தது. வடகாட்டுக்கு மேற்கே இருந்தது வவுனிக்குளம். சோழ மன்னர்கள் ஒரு காலம் கட்டிய குளம் என்று சொல்லப்படும் இந்தக் குளத்தையே, பின்னர் கடந்த நூற்றாண்டில் பெருப்பித்துக்கட்டி, வவுனிக்குளம், மல்லாவி, துணுக்காய் குடியேற்றத்திட்டங்களைச் செய்தது அரசாங்கம். யாழ்ப்பாணத்தவர்களே இந்தப் பகுதிகளில் குடியேறினார்கள். அதிலும் கூடுதலானவர்கள் நெடுந்தீவைச் சேர்ந்தவர்கள். மல்லாவிக்கு வந்த நெடுந்தீவு வாசிகள், ஊரிலிருந்து மாடுகளையும் ஆடுகளையும் கடல் வழியாக படகுகளில் கொண்டு வந்து சேர்த்தனர். பட்டிகள் பெருகின.  காடறியாதவர்களெல்லாம், காட்டில் நம்பர் 01 வேட்டைக்காரரானார்கள். தேன் எடுக்கவும் உடும்பு பிடிக்கவும் பன்றி சுடவும் பழகினார்கள். மான் இறைச்சியும் மரை வத்தலும் யாழ்ப்பாணத்துக்கும் தீவுக்கும் போனது. குடியேறியவர்கள் மல்லாவியிலும் துணுக்காயிலும் வவுனிக்குளத்திலும் ஒட்டங்குளத்திலும் உழுந்து போட்டார்கள். மிளகாய்க் கன்றுகளை நட்டனர். எள் விதைத்தனர். சும்மா சொல்லக்கூடாது, எல்லோருக்கும் கைகுடுத்தது உழுந்தும் எள்ளும். மல்லாவியின் முதலாவது எழுச்சி என்பது உழுந்தினால் உண்டானதே. மல்லாவி, துணுக்காய் என்றால் உழுந்து என்றொரு அடையாளம் ஒரு காலம் இருந்தது. உழுந்தைக்கொள்வனவாகக் கட்டி, மல்லாவியின் அடையாமாக மாறியது பிள்ளையார் ஸ்ரோர்ஸ்.

ஆனால், எல்லாத்துக்கும் உயிர்நாடி பாலியாறுதான். பாலியாற்றுத் தண்ணீரைத் தேக்கியே வவுனிக்குளம் கட்டப்பட்டது. வவுனிக்குளத்தை வைத்தே மல்லாவி, வவுனிக்குளம், அனிஞ்சியன் குளம், யோகபுரம், ஒட்டங்குளம், துணுக்காய், எள்ளறுத்த காடு, தேறாங்கண்டல் எல்லாம் உருவாகின. இந்தப் பாலியாறுதான் ஜெயபாலனின் முதலாவது காதலி. “பாலியாறு நகர்கிறது..“ என்று 1968 இலேயே எழுதினார் ஜெயபாலன்.

அங்கும் இங்குமாய்
இடையிடையே வயல் வெளியில்
உழவு நடக்கிறது
இயந்திரங்கள் ஆங்காங்கு
இயங்கு கின்ற ஓசை
இருந்தாலும்
எங்கும் ஒரே அமைதி

ஏது மொரு ஆர்ப்பாட்டம்
இல்லாமல் முன் நோக்கி
பாலி ஆறு நகர்கிறது.
ஆங்காங்கே நாணல்
அடங்காமல் காற்றோடு
இரகசியம் பேசி
ஏதேதோ சலசலக்கும்.
எண்ணற்ற வகைப் பறவை
எழுப்பும் சங்கீதங்கள்.
துள்ளி விழுந்து
'துழும்' என்னும் வரால்மீன்கள்.

என்றாலும் அமைதியை
ஏதோ பராமரிக்கும்
அந்த வளைவை அடுத்து
கருங்கல் மறைப்பில் 
அடர்ந்துள்ள நாணல் அருகே
மணற் கரையில் இரு மருங்கும்
ஓங்கி முகடு கட்டி
ஒளி வடிக்கும்
மருத மர நிழலில்
எங்கள் கிராமத்து
எழில் மிகுந்த சிறு பெண்கள்
அக்குவேறு ஆணிவேறாய்
ஊரின் புதினங்கள்
ஒவ்வொன்றாய் ஆராய்ந்து
சிரித்து 
கேலி செய்து
சினந்து
வாய்ச் சண்டை யிட்டு
துவைத்து
நீராடிக் களிக்கின்றார்.

ஆனாலும் 
அமைதியாய்ப்
பாலி ஆறு நகர்கிறது

அந் நாளில்
பண்டார வன்னியனின்* 
படை நடந்த அடிச் சுவடு
இந்நாளும் இம்மணலில்
இருக்கவே செய்யும்
அவன்
தங்கி இளைப்பாறி
தானைத் தலைவருடன்
தாக்கு தலைத் திட்டமிட்டு
புழுதி படிந்திருந்த
கால்கள் கழுவி
கைகளினால் நீரருந்தி
வெள்ளையர்கள் பின் வாங்கும்
வெற்றிகளின் நிம்மதியில்
சந்றே கண்ணயர்ந்த
தரை மீது அதே மருது
இன்றும் நிழல் பரப்பும்
அந்த வளைவுக்கு அப்பால்
அதே மறைப்பில்
இன்னும் குளிக்கின்றார்
எங்களது ஊர்ப் பெண்கள்

ஏது மொரு
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
பாலி ஆறு நகர்கிறது.

1968

பிறகு இந்தப் பாலியாற்றை வைத்தே நிலாந்தனும் வன்னி மான்மியத்தை எழுதினார். அப்போது நிலாந்தனும் மல்லாவியில்தானிருந்தார். ஏறக்குறைய சந்திரிகாவின் படைகள் வன்னியைக் கைப்பற்றுவதற்காகப் போர் செய்து கொண்டிருந்த 1996, 97, 98, 99 ஆம் ஆண்டுகளில். அங்கிருந்தே “யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே“, “வன்னிமான்மியம்“ இரண்டும் வெளியாகின. நிலாந்தனுடைய பிள்ளையார் ஓவியங்களும் மல்லாவியில்தான் உருவாகின. அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு, வளவை வளவன் போன்றவர்களும் மல்லாவியில்தானிருந்தனர். அது மல்லாவியின் செழிப்பான காலம். வாழ்வும் வளமும் செழிப்பில்லாதிருந்தாலும் சனப்புழக்கத்தால் ஊர் விளங்கியது.

மல்லாவி புதிய குடியேற்றம்தான், ஆனால், மல்லாவியைச் சுற்றியிருக்கும் பனங்காமம், பாண்டியன்குளம் மாந்தை, தென்னியன்குளம், நட்டான்கண்டல், வலைஞன்கட்டு எல்லாம் பழைய குடியிருப்புகள். அதிலும் பனங்காமம் தனியொரு ராஜ்ஜியப்பிரிவாகவே இருந்திருக்கிறது. கைலைவன்னியன் கடைசியாக ஆண்ட இடம் என்பார்கள். இன்னும் அங்கே பழைய தொல் எச்சங்கள் அங்குமிங்குமாக உள்ளன. தவபாலனும் நானும் இந்தத் தொல்லடையாளங்களைத் தேடி, காடுகளுக்குள்ளால் நடந்திருக்கிறோம். கருங்கற் தூண்களும் சிதைந்த கட்டிடங்களின் அடித்தளங்களுமாக, புராதனக் காட்சிகளை மனதில் விரிக்கும். காட்டு வழியே தென்மேற்கில் நடந்தால், மடு. மேற்கே மாந்தை. பனங்காமத்தைப்போலத்தான் தென்னியன்குளமும். தென்னியன் என்ற மன்னனால் கட்டப்பட்ட குளத்தை மையமாகக் கொண்டே அங்குள்ள குடியிருப்பு உள்ளதென்பது ஐதீகம்.

எங்கள் ஊரில் இருந்து சாமிநாதன் என்றொருவர் துணுக்காயில் காணி கிடைத்துப்போயிருந்தார். அவரிடம் போனபோதே மல்லாவி எனக்கு அறிமுகம். பிறகு, தில்லையண்ணை என்கிற தில்லைநாதன் அறிமுகமானார். அவரிடம் போகத்தொடங்கி, அப்பிடியே பலரோடும் பழகி, மல்லாவியும் பழகியது. தில்லையண்ணை ஒரு போராளியாக இருந்தார். அது 1980 கள். அதற்குப்பிறகு அவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் சில காலம் இருந்தார். தமிழ்ச்சனங்களுக்கு எதிராக கொழும்பின் தீர்மானங்கள் நீடிக்க, தன்னுடைய சகாக்களோடு தில்லைநாதனும்  இணைந்து பதவியைத் துறந்தார். போராளி என்றால் எதையும் இழக்கவும் துயரங்களையும் இழப்புகளையும் ஏற்கவும் தயாராக இருக்க வேணும் என்பார் தில்லையண்ணை. அவர் சொன்னமாதிரியே, ஒரு நாள் அவரை ஈ.என்.எல்.எவ்.டி இயக்கத்தின் ஆட்கள் கிளிநொச்சியில் வைத்துக் கொல்ல முயன்றனர். படுகாயமடைந்த நிலையில் உயிருக்காகப் போராடி, மிக அபுர்வமாக மீண்டார் தில்லையண்ணை. ஆனாலும் அவருடைய நினைவுகள் எளிதில் மீளவில்லை. அதற்கு நீண்டகாலம் சென்றது.

இதே மல்லாவியில்தான் இப்போது கனடாவில் இருக்கும் பிரதீபா, தான்யா, கற்சுறா என்ற கவிஞர்களும் பிறந்து வளர்ந்தார்கள். கற்சுறாவின் பெரும்பாலான கவிதைகள் மல்லாவியை மையமாகக் கொண்டவையே. அதிலும் கற்சுறாவின் “அல்லது யேசுவில் அறையப்பட்ட சிலுவை“ என்ற கவிதைத்தொகுதியை அவர் சமர்ப்பணம் செய்திருந்தது, 1989 இல் மல்லாவியில் கொலையுண்ட பாடசாலை மாணாவி யமுனா பாக்கியநாதனுக்கே. கற்சுறா மட்டுமல்ல, கணன்சுவாமியும் மல்லாவிப் பேர்வழிதான். இன்னுமொருவரையும் இங்கே சொல்ல வேணும், இப்போது திரைக்கலைஞனாக எழுந்து வரும் மதிசுதாவும் மல்லாவியில் ஒரு காலம் இருந்தவரே.

எல்லாவற்றுக்கும் அப்பால் எனக்கு மல்லாவில் இருக்கிற ஒரு உற்ற உறவு, சந்திரன்தான். ஆயிரம் மாடுகளின் அரசன். ஆயிரம் நாமமுடைய அகிலாண்டேஸ்வரி இந்த உலகத்தை அருள்பாலிக்கிறாளோ இலலையோ, ஆயிரம் மாடுகளை வைத்திருக்கும் சந்திரனால் இந்த உலகம் உய்கிறது என்று சொல்வேன். காடும் மாடும் வேட்டையும் வேளாண்மையும் களிப்பும் கொண்டாட்டமுமான உலகம் அது.

http://thenee.com/291016/291016.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.