Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலம் நல்லது!

Featured Replies

  • தொடங்கியவர்

முழங்கால் சுளுக்கு, வீக்கம், வலி... கைகொடுக்கும் வீட்டு வைத்தியம்! #HealthTips

மது மொத்த உடலையும் தாங்கிப்பிடித்துக்கொண்டிருப்பது நம் கால்கள். அதிலும் முக்கியமானது முழங்கால். சில நேரங்களில், காலையே வெட்டி எடுத்துவிடலாமா என்கிற அளவுக்குக்கூட அதில் வலி ஏற்படுவதுண்டு. முழங்காலில் ஏற்படும் எல்லா வலிகளுக்கும் வீட்டு வைத்தியத்தில் தீர்வுகாண முடியாது. என்றாலும், சுளுக்கு, வீக்கம், வலி போன்ற சிறிய பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியும். அந்த வழிமுறைகள் என்னென்ன? பார்க்கலாம்...

முழங்கால்

ஐஸ் ஒத்தடம்
நான்கு அல்லது ஐந்து ஐஸ் கட்டிகளை ஒரு துண்டில் கட்டி, வலியுள்ள இடத்தில் 10 - 15 நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுக்கலாம். இருபது நிமிடங்களுக்கு மேல் இதை செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் தோலில் பாதிப்புகள் ஏற்படும். ஒரு நாளைக்கு இரண்டு தடவை வலியும் வீக்கமும் குறையும் வரை இந்த ஒத்தடத்தைக் கொடுக்கலாம். சூடான நீரில் துண்டை நனைத்து ஒத்தடம் கொடுப்பதும் பயன் தரும். 

ஆலிவ் ஆயில் மசாஜ்
மூன்று அல்லது நான்கு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயிலை வலியுள்ள இடத்தில் தடவி, 10 -15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யலாம். இதை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை செய்துவந்தால், முழங்கால் வலி குறையும். 

காலை உயர்த்தி வைத்தல் 
வலியுள்ள காலை சோஃபா அல்லது தலையணை மீது முடிந்த வரை உயர்த்தி வைத்திருக்கலாம். இது வீக்கம், வலியைக் குறைக்கும்.

இஞ்சி

இஞ்சி

தினமும் இஞ்சி டீ குடிப்பது முழங்காலுக்கு நல்லது. வீக்கம் மற்றும் மூட்டு வாதத்துக்கும் இது மருந்தாக அமையும். 

மஞ்சள் பால்

மஞ்சள் பால்

இரண்டு கப் பாலில் ஒரு  டீஸ்பூன் நொறுக்கிய பாதாம், வால்நட் பவுடர், சிறிது மஞ்சள் தூள் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளவும்.  இது அளவில் பாதியாகும் வரை காய்ச்சவும். இதை தினமும் குடித்துவர, கால் மூட்டுகள் உறுதியாகும்; முழங்கால் வலி குறையும். 

பப்பாளி விதை டீ

பப்பாளி விதை

சிறிது பப்பாளி விதைகளைப் போதுமான அளவு நீரில் போட்டு, எட்டு முதல் பத்து நிமிடங்கள் கொதிக்கவைக்கவும். பின்னர், இதில் சிறிது டீத்தூளைக் கலந்து மேலும் இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்கவைக்கவும். இதை வடிகட்டி, இதனுடன் ஒரு டீஸ்பூன் தேன், சிறிது கருமிளகுப் பொடி சேர்த்துக் குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்துவர, முழங்கால் வலி குறையும்.

அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தை ஜூஸ் ஆக்காமல் அப்படியே சாப்பிட்டுவந்தால், முழங்கால் வலி குறையும். 

கேரட்

கேரட்

கேரட், முழங்கால் மூட்டுவலிக்கு மிகச்சிறந்த மருந்து. இது சீன மருத்துவ முறைகளில் காலங்காலமாக பயன்படுத்தப்படுவது. இரண்டு கேரட்களை சிறு துண்டுகளாக அரிந்து எலுமிச்சைச் சாற்றில் கலந்து குடிக்கலாம். 

வெந்தயம்

வெந்தயம்

இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை இரவிலேயே நீரில் ஊறவைத்துவிட வேண்டும். காலையில் இந்த நீரைச் சாப்பிட்டுவர, முழங்கால் மூட்டுப் பிரச்னைகள் குணமாகும். வெந்தயத்தைத் தண்ணீரில் கலந்து பேஸ்ட்போலச் செய்து அதை வலியுள்ள இடத்தில் பூசலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வெங்காயம்
வெங்காயத்தில் சல்ஃபர் உள்ளது. இது வலியைக் குறைக்க உதவும். வீக்கம், கட்டிகளுக்கு எதிராகச் செயல்படும். வெங்காயம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். 

பருப்புக்கீரை

பருப்புக்கீரை

பருப்புக்கீரையை வேகவைத்து, அரைத்து சாறாக்கிக்கொள்ள வேண்டும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். முழங்கால் வலி குறைய இது உதவும்.

தண்ணீர்

தண்ணீர்

தண்ணீர் நமது உடலுக்கு அத்தியாவசியத் தேவை. இது முழங்கால் வலியைக் குறைக்க உதவும்.  நமது மூட்டுப் பகுதியில் வழுவழுப்பான உள் உறைப் பகுதி (Lining) இருக்கும். இதை கார்டிலேஜ் (Cartilage) என்கிறோம். தண்ணீர் கார்டிலேஜை மென்மையாக்கும். மூட்டுப் பகுதிகளில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி , தேவையான சத்துகளை  மூட்டுப் பகுதிகளுக்குக் கடத்தும். முழங்கால் மூட்டிலுள்ள நச்சுப்பொருட்களையும் தண்ணீர் வெளியேற்றும். 

மக்னீசியம்
மக்னீசியம், நமது தசை மற்றும் நரம்பை ஓய்வாக உணரச் செய்யும். வலியைக் குறைக்கும். கீரை வகைகள், பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் வகைகள், பீன்ஸ் போன்றவற்றில் மக்னீசியம் உள்ளது. இது முழங்கால் வலியை முழுமையாகக் குறைக்கும். 

எடை
உடல் எடை மிகவும் அதிகமாக இருந்தால், மூட்டுகளில் அழுத்தம் ஏற்பட்டு முழங்கால் வலி வரும்.  சரியான சரிவிகித உணவுகளைச் சாப்பிட்டு உடற்பயிற்சி செய்தால் எடை கட்டுக்குள் இருக்கும். கால் வலியும் குறையும். 

பொருத்தமான ஷூ
சரியான அளவில், பொருத்தமான ஷூ, செருப்பு போன்றவற்றை அணிவது கால் வலியிலிருந்து பாதுகாப்பு தரும். ஷூ வாங்கும்போது உள்ளே இருக்கும் பஞ்சு போன்ற பொருள் வசதியாக இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். அதேபோல் ஒரு இன்ச்சைவிடப் பெரிய ஹீல் வைத்த ஷூ, செருப்பு வாங்கக் கூடாது.

நாம் உட்காரும் முறைகூட கால்வலிக்குக் காரணமாக இருக்கலாம்.  திடீரென ஒரு நாள் நம்மை அறியாமல் உட்காரும் முறையை மாற்றினால், கால்வலி  குணமாகும் ஆச்சர்யம் நிகழலாம். வீக்கம், வலி போன்றவற்றுக்கான காரணங்கள் தெரிந்தால், இந்த வீட்டு வைத்திய வழிமுறைகள் நிச்சயம் பலன் கொடுக்கும். மற்றபடி, நீண்ட நாட்களாகத் தொடரும் வலி, கடுமையான வலிகளுக்கு மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வதே சிறந்தது. 

http://www.vikatan.com/news/health/84295-home-remedies-for-knee-pain-swelling-and-sprain.html

  • Replies 475
  • Views 141.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஸ்டார் ஹோட்டல் முதல் தெருமுனை வரை கிடைக்கும் ஃப்ரைடு ரைஸ்... சாப்பிடலாமா... கூடாதா?! #HealthAlert

து தெருக் கடையோ, ஃபைவ் ஸ்டார் உணவகமோ தவிர்க்கமுடியாத ஓர் உணவாகிவிட்டது ஃபிரைடு ரைஸ். சிக்கன், மட்டன், கோபி, மஷ்ரூம், பனீர், முட்டை... என நீள்கிற இந்த வறுத்த உணவு (சாதம்) பலருக்குப் பிடித்த, பலர் அன்றாடம் சாப்பிடுகிற ஒன்று. எளிமையான செய்முறை, எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும் என்கிற வசதி, சாப்பிடும்போது கிடைக்கும் அலாதிச் சுவை மற்றும் திருப்தியான உணர்வு ஆகியவை இதன் பக்கம் பெரும்பாலானவர்களைத் திரும்ப வைத்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை. தொட்டுக்கொள்ள கொஞ்சம் டொமட்டோ அல்லது சில்லி சாஸ் போதுமானது; கூடுதலாக பனீர் மசாலாவோ, சிக்கன், மட்டன் உள்ளிட்ட கிரேவியோ இருந்தால், விருந்துக்குச் சமமானது ஃப்ரைடு ரைஸ்! 

ஃப்ரைடு ரைஸ்

ஒரு ரோட்டோரக் கடையில் எப்படி ஃப்ரைடு ரைஸ் தயாரிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போதே சிலருக்கு நாக்கில் சுவை ஊற ஆரம்பித்துவிடும். பெரிய கடாயில் சிறிது எண்ணெய்விட்டு, குடமிளகாய், பீன்ஸ், கேரட் காய்கறிகளைப் போட்டு லேசாக வதக்குவார்கள். பிறகு மிளகு, மிளகாய், உப்பு, மசாலா எனப் பொடி வகைகள். அத்துடன் சாதம் சேர்த்துக் கிளறும்போது எல்லாம் ஒன்றோடு ஒன்று கலப்பதற்கு ஏற்ப அடுப்பின் தீயை, கூட்டியும் குறைத்தும் ஜாலம் செய்வார்  சமைப்பவர். கடைசியாக, கடாயோடு சேர்த்துத் தூக்கி, ஒரு குலுக்குக் குலுக்குவார். `ஃப்ரைடு ரைஸ் தயார்’ என அர்த்தம்.  

ஃப்ரைடுரைஸ்

சிறிதளவு வேகவைத்த சாதம், உப்பு, கொஞ்சம் காய்கறிகள் இருந்தால் போதும், வாணலியில் காய்கறிகள், சாதம், உப்பு என ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்தெடுத்து நாமே ஃப்ரைடு ரைஸ் தயாரித்துவிடலாம். காய்கறிகளுக்குப் பதிலாக இறைச்சியும் சேர்க்கலாம். நளபாகச் சமையலுக்குப் பேர்போன நமக்கு இது ஒன்றும் புதிய விஷயமல்ல. புளியோதரை, எலுமிச்சை சாதம்போல, காய்கறிகளை சாதத்தோடு சேர்த்து வறுத்து இதையும் நம் முன்னோர்கள் முயன்று பார்த்திருப்பார்கள்தான். ஆனாலும், இன்றைக்கு உலகம் முழுக்க முட்டுச் சந்தில்கூடக் கிடைக்கும் ஃப்ரைடு ரைஸுக்கு சொந்தம் கொண்டாடுபவர்கள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய மக்களே. குறிப்பாக, சீனா, ஜப்பான், கொரிய நாட்டு சமையல் முறையில் இருந்து உருவாகிவந்தது ஃப்ரைடு ரைஸ்.  

ஃப்ரைடு ரைஸ்

மீந்து, ஆறிப்போன உணவைச் சாப்பிட முடியாத சீனர்கள், கண்டுபிடித்ததுதான் ஃப்ரைடு ரைஸ் என்பவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வெரைட்டி; ஆனால், செய்முறை என்னவோ கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதுதான். முக்கியமான சேர்மானம் வேகவைத்த சாதம். சைவப் பிரியர்கள் காய்கறிகளைச் சேர்த்தும், அசைவப் பிரியர்கள் முட்டை தொடங்கி, மட்டன் வரை சேர்த்தும் ஃப்ரைடு ரைஸ் தயாரிக்கிறார்கள். இந்தோனேஷியா, தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான்... என பல நாடுகளில் ஆழமாக வேர் பதித்து வளர்ந்து நிற்கிறது இந்த உணவு. என்ன... இதில் சேர்க்கப்படும் வாசனைப் பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்களில் மட்டும்தான் சின்னச் சின்ன வேறுபாடு இருக்கும். 

அதேபோல ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்துவமான வகை இதில் உண்டு. சீனாவில் `யாங்ச்சௌ’ (Yangzhou fried rice) வெகு பிரபலம். இதில் சாதத்துடன் முட்டை, இறால், வெங்காயம், வெள்ளரி, காய்கறிகள் எல்லாவற்றையும் போட்டுத் தயாரிக்கிறார்கள். மீன் சூப்போடு இதைச் சாப்பிடுவது அபார ருசி என்பது சீனர்களின் கருத்து. இதேபோல ஜப்பானில் `சாஹான்’ (Chahan), கொரியாவில் `போக்கியம் பேப்’ (Bokkeum-bap), தாய்லாந்தில் `காவோ பாட்’ (Khao phad), சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேஷியா மூன்றுக்கும் பொதுவான `நாசி கோரெங் (Nasi goreng)... என ஒவ்வொரு நாட்டுக்கும் பிரத்யேகமான ஃப்ரைடு ரைஸ் வகைகள் உள்ளன. சீனாவின் செஷ்வான் (Szechwan) சமையல் முறை தொடங்கி உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவியிருக்கும் இதன் வகைகளின் பெயர்கள், செய்முறைகள், உள்ளிடப்படும் பொருள்கள் அத்தனையும் ஆச்சர்யம் தருபவை. 

ஃப்ரைடுரைஸ்

சீனாவில் கி.பி.589-618-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உருவானதுதான் ஒரிஜினல் என்பவர்களும் இருக்கிறார்கள். பத்மினி டயட்டீசியன்அங்கிருந்துதான் தென்கிழக்கு ஆசியா முழுமைக்கும் பரவியதாம். சூயி (Sui) ஆட்சிக்காலத்தில் இது தயாரிக்கப்பட்டது. `யாங்க்சௌ’ என்கிற ஊரின் பெயரிலேயே இது அழைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சீனர்கள் தயாரித்த ஃப்ரைடு ரைஸ் எந்த பக்கவிளைவுகளையும் நம் உடலுக்கு ஏற்படுத்தாதது; ஆரோக்கியமானது; மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டது என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனாலும், நம் தெருவில் இருக்கும் குட்டி ஹோட்டல் வரை வந்துவிட்ட இது நம் உடலுக்கு, நம் வாழ்வியல் முறைக்கு ஏற்றதுதானா? பதில் சொல்கிறார் டயட்டீஷியன் பத்மினி... 

“ஃப்ரைடு ரைஸ் எளிதாகச் செய்யக்கூடிய ஓர் சீன வகை உணவு. இது நம் உடல்நலத்தை பல்வேறு வழிகளில் பாதிக்கக்கூடியதும்கூட. இதில் சேர்க்கப்படும் எண்ணெய், நம் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்யும். இதில் உள்ள அதிகப்படியான எண்ணெய், வயிற்றைப் பாதித்து, அதிக ஆசிட் உருவாக வழிவகுக்கும். இது, குடலுக்குப் பிரச்னையை ஏற்படுத்தும். இதில் உள்ள எம்.எஸ்.ஜி (MSG-Monosodium glutamate) தலைவலியை வரவழைக்கக்கூடியது. இந்த எண்ணெய் சேர்த்த உணவு வயிற்றைக் காலியாக்காமல் நீண்ட நேரம் தங்கியிருப்பதால், வயிற்று உப்புசம் ஏற்படும். 

ஃப்ரைடுரைஸ்

ஃப்ரைடு ரைஸை அதிகம் சாப்பிட்டால், இதில் சேர்க்கப்படும் அதிக அளவிலான உப்பு, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த உயர் ரத்த அழுத்தம் பல இதய நோய்கள் ஏற்பட வழியமைத்துக் கொடுத்துவிடும். இதய நோய்கள் இருப்பவர்கள், இந்த உணவைத் தவிர்ப்பதே நல்லது. அரிசியில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் இருக்கிறது. அதிகப் பசியோடு இருக்கும்போது ஃப்ரைடு ரைஸ் சாப்பிட்டால், அந்த அரிசியின் மூலமாக உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுத்து, உடல்பருமன் வரை கொண்டுபோய் விட்டுவிடும். அதோடு சிக்கன், மட்டன் என இறைச்சி சேர்ந்தது என்றால், எண்ணெய் அதிகம் சேர்ந்திருக்கும். அதிலும் பயன்படுத்தப்படும் பிராய்லர் கோழி, ஆட்டிறைச்சி எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என்பதிலும், உத்தரவாதம் இல்லை. எனவே, ஃப்ரைடு ரைஸ் சாப்பிட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டால், குறைவான எண்ணெய் ஊற்றி, வீட்டிலேயே செய்து சாப்பிடுவது நல்லது’’ என்கிறார் பத்மினி.   

ஆக, ஹோட்டல்களிலும், இதற்கான பிரத்யேகக் கடைகளிலும் எந்த எண்ணெயை ஊற்றுகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை திரும்பத் திரும்பப் பயன்படுத்திய எண்ணெய் என்றால், அது நம் உடலுக்கு அதிக கொலஸ்ட்ரால் சேர்ப்பது உள்பட, எத்தனையோ உடல் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். இறைச்சியாகட்டும், காய்கறியாகட்டும்... அவற்றின் சுத்தம் குறித்து நமக்கு எதுவும் தெரியாது. முக்கியமாக, நம் ஊரில் இதில் சேர்க்கப்படும் வினிகர், அஜினோமோட்டோ போன்றவை நம் உடலுக்கு ஏற்றவை அல்ல. ஆசைப்படுகிற குழந்தைகளுக்கு ஃப்ரைடு ரைஸ்கூட கொடுக்கவில்லை என்றால் எப்படி? கொடுக்கலாம்... வாரத்துக்கு ஒருமுறை... சுகாதாரமான முறையில் வீட்டில் தயாரித்து! நம் ஆரோக்கியம் எல்லாவற்றையும்விட முக்கியம் அல்லவா!

http://www.vikatan.com/news/health/84347-is-fried-rice-healthy-for-us.html

  • தொடங்கியவர்

குழந்தைக்கு கருவிலேயே பாடம்... நல்வழிப்படுத்த உதவும் தியான் பேபி தெரபி!

கருவில் இருக்கும்போதே குழந்தைக்கு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்க முடியுமா? `நிச்சயம் முடியும்’ என அடித்துச் சொல்கிறார் மனநல மருத்துவர் கல்யாணி. அதற்கு வழிகாட்டுகிறது அவருடைய `தியான் பேபி தெரபி’ என்கிற பெற்றோருக்கான கல்வி! நம் இதிகாசத்திலும், புராணத்திலும் கேட்ட விஷயம்தான். மகாபாரதத்தில், கருவில் இருக்கும் குழந்தை அபிமன்யூ `சக்கரவியூகம்’ பற்றிக் கேட்கிறான். அதை குருஷேத்திரப் போரில் பயன்படுத்துகிறான். தாயின் வயிற்றில் இருக்கும்போது, நாரதர் சொல்லச் சொல்ல `ஓம் நமோ நாராயணாய’ என்கிற மந்திரம் பிரகலாதனுக்குள் பதிந்துபோகிறது. பின்னாளில் சிறந்த விஷ்ணு பக்தனாக மாற அதுவே காரணமாகிறது. கதை என்கிற அளவில் சரி... யதார்த்தத்தில்? 

தியான் பேபி

``நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே... என்கிற பாடல் சொல்வது உண்மையே. ஒரு குழந்தை ஞானி ஆவதும், நாட்டை ஆள்வதும் அம்மாவின் கைகளில்தான் இருக்கிறது. குழந்தையின் அறிவை கூர்மையாக்க உதவுவதற்குத்தான் `தியான் பேபி தெரபி’. நான் ஒரு மனநல மருத்துவராக என் பணியைத் தொடங்கிய ஆரம்பகாலத்தில் என்னிடம் நிறைய நோயாளிகள் வருவார்கள். அவர்களில் சிலர் மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போன்ற தீய பழக்கங்களுக்கும் ஆளாகியிருப்பார்கள். சிலருக்கு கவுன்சலிங் கொடுத்தாலே குணமாகிவிடும். சிலர் எவ்வளவு முயற்சி செய்தாலும், `பழக்கத்தை விட முடியவில்லை’ என்ற பதிலையே தருவார்கள். எனவே, `நல்ல விஷயங்களை, பழக்கங்களை சிறு வயதிலிருந்தே சொல்லிக் கொடுப்பதுதான் சிறந்தது’ என்கிற முடிவுக்கு வந்தேன். சில பள்ளிகளுக்கும் சென்றேன். அப்போதுதான் ஓர் உண்மை புரிந்தது, இதுவும் தாமதமான செயல் என்று. பள்ளியிலேயே சில மாணவர்களுக்கு தீய பழக்கங்களின் மேலான ஈடுபாடு வந்துவிட்டிருந்தது. அப்போதுதான் ஒரு மனிதன் உன்னதமானவனாக, சிறந்தவனாக வாழ்க்கையில் பிரகாசிக்க என்ன செய்யலாம் என யோசிக்கத் தொடங்கினேன். அதுதான் கருவிலேயே போதிக்கலாம் என்று என்னை திசை திருப்பி ஆராயவைத்தது. அதன் விளைவாக உருவானதுதான் 'தியான் பேபி' என்ற சிகிச்சை. கடந்த பதினைந்து வருடங்களாக இதை நடைமுறைப்படுத்தி வருகிறோம்’’ என்கிறார் கல்யாணி.
               
கல்யாணிஒரு பெண் கருவுற்ற நான்காம் மாதத்தில் தொடங்குகிறது இந்தச் சிகிச்சை. ஒன்பதாம் மாதம் வரை, ஒவ்வொரு மாதமும் தவறாமல் சிகிச்சைக்கு வர வேண்டும். சிகிச்சையும் மிக எளிதானதே! முதலில் டாக்டர் கல்யாணி, வந்திருக்கும் அத்தனைபேருக்கும் பொதுவான சில விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார். பிறகு, தம்பதியரை ஒவ்வொரு ஜோடியாக ஒரு தனி அறைக்கு அழைத்துப் போகிறார். இருள் சூழ்ந்திருக்கும் அறையில், பின்னணியில் மெல்லிய இசை ஒலிக்கிறது. வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் அப்பாவையும் அம்மாவையும் பேசச் சொல்கிறார். அவரும் பேசுகிறார். நல்ல விஷயங்கள், லட்சியங்கள், ஆசைகள், கனவுகள், கதைகள்... என கருவிலிருக்கும் குழந்தையோடு ஆத்மார்த்தமாக விரிகிறது பேச்சு.

``கணவன் மனைவி இருவரும் கலந்துகொண்டால், அவர்கள் இருவரின் பண்புகளும் மனநிலையும் ஆசைகளும் குழந்தைக்கும் வந்து சேரும். ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொருவிதமான தெரப்பி தருகிறோம். அது ஒவ்வொரு குழந்தையின் நரம்பு வளர்ச்சியைப் பொறுத்து மாறுபடும். அரை மணி நேர பேச்சுக்குப் பிறகு அரை மணி நேரம் தியானம் போன்ற பயிற்சியையும் தருகிறோம்’’ என்கிற கல்யாணி, ஒவ்வொரு மாதமும் அளிக்கப்படும் சிகிச்சையின் தன்மைகளை விவரிக்கிறார்.
               
``நான்காம் மாதம்தான் குழந்தை ஓசைகளையெல்லாம் கேட்கத் தொடங்கியிருக்கும். முக்கியமாக தாய், தந்தையின் குரல்களை குழந்தையின் மனதில் பதியவைக்கவும், பிற நல்ல ஒலிகளைக் கேட்க வைப்பதுமே இந்த மாதத்தின் சிகிச்சை. 
         
ஐந்தாம் மாதத்தில் குழந்தையின் இருதயம், நுரையீரல் போன்ற முக்கியமான உறுப்புகள் வளர்ச்சியடைய ஆரம்பித்திருக்கும். அந்த மாதத்தில் வழங்கப்படும் சிகிச்சை, உறுப்புகளின் முழுமையான வளர்ச்சிக்கு வித்திடும். எங்கள் தெரபியை எடுத்துக்கொள்ளாத குழந்தைகளும் முழுமையாகத்தான் பிறப்பார்கள். இருந்தாலும் எங்கள் சிகிச்சைக்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளின் சக்திகளும் மனநலன்களும் மேம்பட்ட நிலையில் இருக்கும்

குழந்தை

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் போராடி, உச்சத்தை அடைவதில் உணர்வு உறுப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த உணர்வுகளுக்கு உதவும் உறுப்புகளுக்குப் பயன் தரும் வகையில் செய்யப்படுவதே ஆறாம் மாத தெரபி. அதாவது, இது குழந்தையின் ஐ.க்யூ (Intelligence Quotient) வளர்வதற்கான காலகட்டம் என்பதால், எப்படி நம் குழந்தையை மேம்பட்டவளாக / மேம்பட்டவனாக வளர்க்கப் போகிறோம் என்பதற்கான தெரபி இந்த மாதத்தில் செய்யப்படும்.

ஐ.க்யூ-வைத் தொடர்ந்து இ.க்யூ (Emotional Quotient) விரிவடைய வாய்ப்புக் கொடுப்பது குழந்தை கருவில் இருக்கும் ஏழாம் மாதம். எந்த இடத்தில், எப்படிச் செயல்பட வேண்டும் என்ற சிந்தனையும் குணமும்கொண்டவர்கள் மிகவும் குறைவு. மேலும் குழந்தை, தான் எதிர்காலத்தில் எந்தத் துறைக்குச் செல்லப் போகிறோம் என்பதையும் இந்தக் காலகட்டத்தில்தான் கனவுகளாகக் காண ஆரம்பிக்கும். அதற்கு உதவுவதற்காகச் செய்யப்படுவது ஏழாம் மாத சிகிச்சை.

எட்டாம் மாதத்தில் செய்யப்படும் தெரபி, குழந்தையின் எஸ்.க்யூ (Spiritual Quotient) மேன்மையடையச் செய்யப்படுவது. ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்களையும் செயலாகச் செய்யத் தூண்டுவது இந்த சிகிச்சை

ஒன்பதாம் மாதத்தில் அனைத்துவிதமான பயங்களும் குழந்தைக்குத் தொற்றிக்கொள்ளும் காலம். குழந்தையைப் பெற்றெடுக்கத் தாய்க்கும், வெளி உலகத்துக்கு வரவிருக்கும் சிசுவுக்கு உத்வேகமும் கொடுப்பது இந்த சிகிச்சை. தாய், சேய் இருவரையும் மனதளவில் உறுதியாக்குவதே இதன் நோக்கம்.

`தியான் பேபி’ தெரபி மூலம் பிறந்த குழந்தைகள் உடல் அளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கின்றனர். மற்ற குழந்தைகளைவிட ஒரு படி உயர்ந்து இருக்கின்றனர் என்பதே இதன் அறிவுபூர்வமான ஆராய்ச்சியின் முடிவு’’ என்கிறார் மருத்துவர் கல்யாணி. 

சிகிச்சைக்கான கட்டணம் மிகக் குறைவு. அதோடு, கருவிலிருக்கும் குழந்தை, அம்மாவின் இதயத் துடிப்பை, குரலை, நல்ல இசையைக் கேட்பது பிற்காலத்தில் குழந்தைக்கு நல்ல பலன்களைத் தரும் என்பது அறிவியல்பூர்வமாக அறியப்பட்ட உண்மை. அதேபோல, ஒரு மந்திரத்தை அல்லது கதையைத் திரும்பத் திரும்பக் கேட்பதும் குழந்தையின் கவனித்தல் திறனை, கற்றுக்கொள்ளும் ஆற்றலை வளர்க்கும் என்பதும் உண்மையே. குழந்தைக்கும் தாய்க்குமான தொப்புள்கொடி உறவு கருவிலேயே பலம் பெற்றால் நல்லதுதானே!

http://www.vikatan.com/news/health/84616-lessons-for-fetus-good-guidance-will-be-given-by-dhiyan-baby-therapy.html

  • தொடங்கியவர்

ரத்தசோகை நீங்க, உடல் எடை அதிகரிக்க உதவும் உலர் திராட்சை! #HealthTips

குழந்தைகளோ, பெரியவர்களோ... கிஸ்மிஸ் பழத்தைப் பார்த்துவிட்டால், இரண்டு மூன்றையாவது எடுத்து வாயில் போடாமல் நகர மாட்டார்கள். பார்த்தவுடனேயே சாப்பிடத் தூண்டும் ஈர்ப்பு அதற்கு உண்டு. உலர் திராட்சையைத்தான் `கிஸ்மிஸ் பழம்’ என்கிறோம். அபாரமான பல சத்துக்களைக்கொண்டிருக்கும் உலர்திராட்சை, நம் ஆரோக்கியத்துக்கு வழங்கும் பலன்கள் எக்கச்சக்கம். அவற்றைப் பற்றி விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் வாலந்தீனா குரைசி... 

உலர் திராட்சை

* ஃபிரெஷ்ஷான திராட்சைப் பழங்களை நன்கு காயவைத்து, உலர்திராட்சை ஆக்குகிறார்கள். நான்கு டன் திராட்சைப் பழங்களை உலரவைத்தால், ஒரு டன் உலர்திராட்சைகள் கிடைக்கும். தண்ணீர் எல்லாம் வற்றிவிடும் இப்படி உலரவைப்பதன் மூலமாக, இதில் இருந்து நமக்கு ஏராளமான நார்ச்சத்துக்கள் கிடைக்கும்.

* திராட்சையுடன் ஒப்பிடும்போது உலர் திராட்சையில் அதைவிட ஏராளமான சத்துக்களும் பலன்களும் இருக்கின்றன. உதாரணமாக, 100 கிராம் உலர்திராட்சையில் 299 கலோரிகள் உள்ளன. நாம் ஒரு வேளை சாப்பிடும் உணவின் அளவில் இருக்கும் கலோரிகளை, 100 கிராம் உலர் திராட்சையைச் சாப்பிட்டாலே பெற முடியும்.

* இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் அளவு திராட்சையைவிட அதிகம். இது, புற்றுநோய் மற்றும் இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கும். 100 கிராம் உலர்திராட்சையில் 23 சதவிகிதம் இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், முடி உதிர்வு பிரச்னை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக, பெண்களுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். பெண்கள் உலர்திராட்சையை தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக்கொண்டால், மாதவிடாய்க் கால வலி நீங்கும்; ஆரோக்கியம் கூடும்; ரத்தசோகை போன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம். 

உலர்ந்த திராட்சை

* இரும்புச்சத்து இதில் அதிகம் உள்ளதால், உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தாராளமாக இதைச் சாப்பிடலாம். .தினமும் உலர்திராட்சையை சிறிதளவு சாப்பிடுபவர்களின் உடல் எடை வெகு விரைவில் அதிகரிக்கும்.

* வெயில் காலம் தொடங்கிவிட்டால், சிலருக்கு முகத்தில் கொப்புளங்கள் வரும். அவர்கள் இதைச் சாப்பிட்டால், கொப்பளங்கள், கட்டிகள் நீங்கும்; தோல் நோய்களில் இருந்தும் நம்மை காத்துக்கொள்ள முடியும்; முகமும் பொலிவு பெறும்.

* இதில் வைட்டமின் ஏ சத்து இருப்பதால், கண்களுக்கு நல்ல பலன்களைத் தரும். கண்ணாடி அணிந்திருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், பார்வைக்குறைபாடு நீங்கும்; பார்வைத்திறன் மேம்படும்.

* உலர்திராட்சையில் பொட்டாசியம் சத்தும் அதிகமாக இருக்கிறது. உடலில் இருக்கும் தசைகள் சுருங்கி விரிந்து, நரம்புகள் தூண்டப்படுவதற்கும் இதயத் துடிப்பை சீராக வைத்திருப்பதற்கும் பொட்டாசியம் சத்து தேவை. உலர்திராட்சையை சாப்பிடுவதால், நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் பொட்டாசியம் சத்து பரவும்; நல்ல பலன் தரும்.

* சர்க்கரை நோயாளிகளும் உலர்திராட்சையை தாராளமாகச் சாப்பிடலாம். இதில் நார்ச்சத்தும் இருப்பதால், உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவக்கூடியது.

ஏராளமான பலன்களை அள்ளித்தரும் உலர் திராட்சை எல்லோரும் சாப்பிட ஏற்றது. 

http://www.vikatan.com/news/health/84608-amazing-benefits-and-uses-of-dry-grapes.html

  • தொடங்கியவர்

சிக்கலோ சிக்கல் இடியாப்பம்... உடலுக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாது! #HealthyFood

‘இடியாப்பேம்ம்ம்ம்...’ அநேகமாக இந்தக் குரல் ஒலிக்காத தமிழகத்தின் பெருநகரங்களே இன்றைக்கு இல்லை என்று சொல்லிவிடலாம். குரலைக் கேட்டவுடனேயே, சைக்கிள் கேரியரில் வைத்துக் கட்டப்பட்ட பெரிய பாத்திரம் நம் கண்களுக்குத் தெரியும். சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம் போன்ற நகரங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் இப்படி வீடு வீடாகப் போய் இடியாப்பம் விற்கிறவர்கள் அதிகம். உணவுத் துறையில் வளர்ந்துவரும் முக்கியமான தொழிலாக உருவெடுத்துவிட்டது இடியாப்ப விற்பனை. இது ஒரு வகையில் நல்லதும்கூட. பீட்சா, பர்கர், நூடுல்ஸ் மோகத்தின் பிடியில் இருந்து கொஞ்சம் தமிழர்களாவது தப்பித்திருக்கிறார்கள் என்பதற்கான சாட்சியம்! உண்மையில் சிக்கல் நிறைந்த இடியாப்பம்... உடலுக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாது!

இடியாப்பம்

சங்க காலத்திலேயே இடியாப்பம் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. `சூடாமணி நிகண்’டில் இது பற்றிய குறிப்பு இருக்கிறது. `இடி’ என்றால் நெல்லில் இருந்து தயாராகும் மாவு, அதில் செய்யப்படும் அப்பம் என்பது இதன் பொருள். இந்திய உணவு வரலாற்று ஆசிரியர் கே.டி.அச்சயா (K.T.Achaya), முதலாம் நூற்றாண்டிலேயே இடியாப்பம் இந்தியாவில் இருந்தது என்று தன் `தி ஸ்டோரி ஆஃப் அவர் ஃபுட்’ நூலில் குறிப்பிட்டிருக்கிறார். தமிழில் `நூல்புட்டு’, கன்னடத்தில் `நூபுட்’, மலேஷியாவில் `புட்டுமாயம்’... என அழைக்கப்படும் இடியாப்பம் இலங்கை வரை பிரபலமான ஓர் உணவு.  கடலோரப் பகுதிகளிலும், நகரத் தெருக்களிலும் தெரு வியாபாரிகள் கூவிக் கூவி விற்ற அரிய உணவு. `பெரும்பானாற்றுப்படை’, `சிலப்பதிகாரம்’, `மதுரைக்காஞ்சி’ போன்ற தமிழ் இலக்கியங்களில் எல்லாம் இதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. 

வரலாற்று ஆசிரியர்கள் சிலர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் டச்சுக்காரர்களின் வருகைக்குப் பின்னர்தான் இடியாப்பம் தென்னிந்தியாவில் நுழைந்தது என்றும் கூறியிருக்கிறார்கள். ஆனால், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடியாது போர்ச்சுகீசியர்களின் வருகை என்பது இந்தியாவில் 1498-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் நிகழ்ந்தது. ஆனால், அதற்கு முன்னரே இது இங்கே புழக்கத்தில் இருந்ததாக நம் இலக்கியத்தில் குறிப்புகள் உள்ளன. அதோடு இடியாப்பம் செய்ய மூங்கில் தட்டுகள் பயன்படுத்தப்படும். ஆனால், மூங்கிலைக்கொண்டு செய்யப்படும் சமையல் முறை ஐரோப்பாவுக்கு அறிமுகமானது 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான். அதுவும் ஜப்பான் மற்றும் சீன நாட்டினரால்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே, போர்ச்சுக்கீசியர்கள்தான் இதை தென்னிந்தியாவுக்குக் கொண்டு வந்தார்கள் என்பது உறுதி இல்லை. டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்தவர்கள்! அதோடு அவர்களின் செய்முறைக்கும் நம் முறைக்கும் எத்தனையோவிதங்களில் வேறுபாடு இருக்கின்றன.

சேவை

சுத்தமான அரிசி மாவில் உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து வேக வைத்து, இடியாப்ப அச்சில் பிழிந்து எடுத்து அவித்தால் இடியாப்பம்! தேங்காய்ப் பால், பால், மீன் குழம்பு, பாயா இவற்றுடன் சாப்பிட அபாரச் சுவை! கேரளாவில் கொண்டைக்கடலையை கிரேவியாக்கி, அதனுடன் சேர்த்துச் சாப்பிடும் பழக்கம் உண்டு. இது, எளிய, ஆரோக்கியமான காலை உணவு. இடியாப்பத்தை உதிர்த்து, உப்புமாவாக்கலாம். நம் ஊரில் `சேவை’ என்று சொல்வார்கள். இதைக்கொண்டு எலுமிச்சை, தக்காளி, புளி என விதவிதமாக `சேவை’ செய்து ருசிக்கலாம். இடியாப்பத்தில் பிரியாணி செய்பவர்கள்கூட உண்டு. தினை, வரகரிசி, சோளம், கம்பு, கேழ்வரகு என சிறுதானியங்களில் செய்து ருசி பார்க்கும் அளவுக்கு இடியாப்பத்தின் மகத்துவம் இன்றைக்கு அனைவரும் உணர்ந்த ஒன்றாகிவிட்டது. 

இன்றைக்கு தமிழ்நாட்டில் இடியாப்பம் பெரும்பாலான ஹோட்டல்களில் கிடைக்கின்றது. ஆனால், அத்தனை உணவகங்களும் தாங்களே இதைத் தயாரிப்பதில்லை. இதற்கு தனி ஆள் போட வேண்டும்; செலவும் கூடுதல் என்பதால், மொத்தமாகத் தயாரிக்கும் இடங்களில் வாங்குகிறார்கள். உணவகங்களுக்கு இடியாப்ப சப்ளைக்கென தனியாக தொழிலே நடைபெறுகிறது. மொத்த மொத்தமாக தயாரித்து, விற்கிறார்கள். திண்டுக்கல், மணப்பாறை பகுதியில் இருந்து வந்தவர்கள்தான் இந்தத் தொழிலில் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள்தான் தெரு வியாபாரிகளுக்கும் இடியாப்பத்தை விற்பனைக்குக் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் இடியாப்ப சிறுதொழில் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அரசின் கடன் வசதிகூட பெறலாம். இதைத் தயாரிக்க மெஷினகள் வந்துவிட்டன. 

இடியாப்பம் தயாரிக்கும் இயந்திரம்! 

 

 

 

 

 

இடியாப்பத்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்னென்ன... விளக்குகிறார் டயட்டீஷியன் பத்மினி... டயட்டீஷியன் பத்மினி

“இடியாப்பம், குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றது. எளிதாக செரிமானம் ஆகக்கூடியது. ஒரு இடியாப்பத்தில் சராசரியாக 45 கலோரிகள், 0.27 கிராம் கொழுப்பு, 9.68 கிராம் கார்போஹைட்ரேட், 0.72 கிராம் புரோட்டீன் ஆகியவை உள்ளன. ஆயுர்வேத மருத்துவமுறையில், இது வாதத்தையும் பித்தத்தையும் சமநிலையில் வைத்திருக்கும் என்கிறார்கள். இதை இளஞ்சூடாக சாப்பிடுவது நல்லது. இதில் நமக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரோட்டீன், இரும்புச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து அனைத்தும் உள்ளன. எனவே, உடலைக் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். எண்ணெய் சேர்க்காத, ஆவியில் வேகவைத்துச் செய்யப்படுவது என்பதால், வயிற்றுக்கு எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது. நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, நோயின் தன்மைக்கேற்ப இடியாப்பம் செய்து, மற்றவற்றுடன் கலந்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்க ஏற்ற உணவு. 

ஜுரம் - இடியாப்பத்தை இளஞ்சூடான நீருடன் கொடுக்கலாம். 
வயிற்றுப்போக்கு - மோர் மற்றும் கல் உப்புடன் சேர்த்துத் தரலாம்.
பசியின்மை - எலுமிச்சை சேவை, தக்காளி சேவை என செய்து கொடுக்கலாம். 
வயிற்றுக்கோளாறுகள் - எலுமிச்சை சேவையாக கல் உப்பு போட்ட மோருடன் தரலாம். 
கர்ப்பிணிகள் - இத்துடன் தேங்காய்ப்பால், பால், நெய், நாட்டுச்சர்க்கரை, டிரைஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் சேர்த்துக் கொடுக்கலாம். 

 

இடியாப்ப உணவு

அரிசியைத் தவிர்த்துவிட்டு,  சிறுதானியங்கள் மற்றும் கோதுமையில்கூட இதைச் செய்யலாம். பலன்கள் அதிகமாகக் கிடைக்கும். 
உதாரணமாக, கோதுமை இடியாப்பத்தின் பலன்கள்... 

இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால், சீரான செரிமானத்துக்கு உதவுகிறது; கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்; இதய நோய்களுக்கான அபாயத்தை வெகுவாகக் குறைக்கும்; உடல் எடை கூடுவதைத் தவிர்க்கும்; சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு நல்லது; கோதுமை, சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மைகொண்டது, இதில் உள்ள வைட்டமின் இ சருமத்துக்கு நல்லது. இதேபோல சிறுதானியங்களில் இதைச் செய்தால் அதிகப் பலன்களைப் பெறலாம்’’ என்கிறார் பத்மினி. 

ஆக, இடியாப்பம் நல்லது. என்ன... வெளியில் வாங்கும்போது இது, சுத்தமானதுதானா, ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்பட்டதுதானா என்பது தெரியாது. எளிதான செய்முறை. ஒருமுறை கற்றுக்கொண்டால் நாமே வீட்டில் தயாரிக்கலாம். ஆரோக்கியம் காக்கலாம்!

http://www.vikatan.com/news/health/84692-idiyappam-does-not-harm-our-health.html

  • தொடங்கியவர்

முதுகு வலி... கழுத்து வலி... மூட்டு வலி... விரட்டியடிக்கும் ஃபுட் மசாஜ்! #FootMassage

`ஏ.. கொலுசே.. நீ அவள் பாதம் தொட்டதால் என் கவிதைக்கும் கருவானாய்...'. அழகான கவிதை வரி இது.
அனிச்சப் பூவும் அன்னப் பறவையின் மெல்லிய இறகும்தான் உலகிலேயே மிக மெல்லியவை. அவை பட்டால்கூட அவள் பாதங்கள் நெருஞ்சிமுள் தைத்தது போலப் புண்பட்டு ரத்தம் வடிக்குமாம்... பெண்களின் பாதங்களை இப்படி மிகைப்படுத்தி எழுதுபவர்களும் உண்டு.
மொத்தத்தில் பூக்களோடு ஒப்பிடும் அளவு மென்மையானவை பாதங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. பாதங்களை மென்மையாக வைத்துக் கொள்வதில் நமக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். அத்தகைய பாதங்களை மென்மைத் தன்மையோடு உடல் பாதிப்புகளுக்கு தீர்வாகவும் பயன்படுத்த முடியும் என்றால் அதனை மேற்கொள்ள நாம் சிந்திக்கவே மாட்டோம். அப்படி நாம் செய்கின்ற ஃபுட் மசாஜ் என்ற பாதத்துக்கு அழுத்தம் கொடுக்கும் சிகிச்சை முறை பற்றி நம்மிடையே விளக்கமாகப் பகிர்ந்து கொள்கிறார், யோகா மற்றும் இயற்கை மருத்துவர் ராஜா.

மசாஜ்

பாதங்கள் பல நரம்புகள் சந்திக்கும் ஓர் இடம். ஒவ்வொரு நரம்பும் ஒவ்வொரு உறுப்புடனும் சம்பந்தப்பட்டவை. எனவே அந்தந்த நரம்புகளுக்கு அழுத்தம் கொடுத்து ரத்த ஓட்டத்தை சீராக்குவதன்மூலம் வலி மற்றும் நோய்களுக்கு தீர்வு காண முடியும். முதலில் பாதங்களை இளஞ்சூடான நீரைக் கொண்டு கழுவி, ஒவ்வொரு காலாக சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே, ஒரு காலில் சிகிச்சை அளிக்கும்போது சருமம் வறண்டு போய்விடாமல் இருக்க மறுகாலில் துணியைக் கொண்டு இறுக்கமாகக் கட்டிக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் பாதங்களில் இருக்கும் நரம்புகளுக்கு கைவிரல்கள் மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மூட்டு மசாஜ்

மன அழுத்தம், ரத்த அழுத்தம், முதுகு வலி, கால் வலி, கழுத்து வலி, மூட்டு வலி என உடலின் எந்தப் பகுதியில் வலி ஏற்பட்டாலும், அதற்கு பாத அழுத்த சிகிச்சை தீர்வாக அமையும்.

கழுத்து மசாஜ்

பாத அழுத்த சிகிச்சையானது நமது முன்னோரால் பின்பற்றப்பட்ட ஒரு அற்புதமான சிகிச்சை முறை. இது இக்கால கட்டத்தில் அறிவியல்ரீதியாக இயற்கை மருத்துவ முறையில் சில உடல் மற்றும் மனரீதியான உபாதைகளை எளிய முறையில் தீர்க்கும் துணை சிகிச்சையாக பயன்படுகிறது. இந்த சிகிச்சையானது பயிற்சி பெற்ற மருத்துவர் மற்றும் மருத்துவ உதவியாளரின் உதவியுடன் நம் பாதத்தில் உள்ள தானியங்கிரீதியான புள்ளிகளை (Refloxology point) அழுத்தி உடலின் உள்ளுறுப்புகளின் செயல்களைத் தூண்டும் முறையாகும்.

நமது உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் முடிவடையும் இடம் உள்ளங்கை, உள்ளங்கால். உள்ளங்காலில் நாம் கொடுக்கும் சரியான மற்றும் சீரான அழுத்தமானது அந்த நரம்புகள் செல்லும் பகுதியில் உள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டையும் சீராக்குகிறது. அது மட்டுமல்லாமல் மூளையில் சுரக்கும் மகிழ்ச்சி இயக்கு நீர் (Happy Hormone Endorphin) தேவையான அளவு சுரக்க உதவுகிறது. இதனால் மனஅழுத்தத்தால் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு தீர்வு ஏற்பட உதவுகிறது.

 

பாத அழுத்த சிகிச்சைமுறை பற்றிப் பார்ப்போமா...

அழுத்துதல்:
நமது கை விரல்களைக் கொண்டு அனைத்து உள்ளங்கால் பகுதியிலும் அழுத்தவும்.

தேய்த்தல் :
சிறிது எண்ணெய் அல்லது மூலிகை எண்ணெயைக் கொண்டு பாதம் முழுவதும் சற்று ஆழமாகத் தேய்த்து விடவும்.

கால் மசாஜ்

வருடுதல்:
நமது பாதத்தை மொத்த கைகளைக்கொண்டோ அல்லது உள்ளங்கையாலோ வருடி விடவும்.

கணுக்கால் பயிற்சி:
இடது மற்றும் வலது புறமாக சாய்த்தல்.
கடிகாரம் மற்றும் எதிர்க் கடிகார திசையில் சுழற்றுதல்.

பயன்கள்:
பாத அழுத்த சிகிச்சை அளிப்பதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது தூக்கத்தைத் தூண்டுவதோடு வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. மேலும், மன அழுத்தத்தைக் குறைப்பது, ரத்த அழுத்தத்தை சீராக்குவது, ஹார்மோன் பிரச்னைகளைத் தீர்ப்பது போன்ற செயல்களைச் செய்கிறது. முக்கியமாக, கர்ப்பிணிப் பெண்களின் கால்களில் உள்ள இறுக்கத்தைக் குறைக்கிறது, இந்த பாத அழுத்த சிகிச்சை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, மன அழுத்தம், தலைவலி, உடல் வலி, அசதி, ஆண்மைக்குறைவு, சர்க்கரை நோய் போன்றவற்றில் இருந்து விடுதலை அளிக்கிறது.

கால்கள் மசாஜ்

பயன்கள் பல தந்தாலும் இந்தச் சிகிச்சையை சிலர் மேற்கொள்வது ஏற்புடையதல்ல. அதாவது, காய்ச்சல், ரத்தக் கசிவுடைய காயம் இருப்பவர்கள், அறுவை சிகிச்சைக்கான காரணிகள் உள்ளவர்கள் மற்றும் தாயின் வயிற்றில் கரு உண்டாகி மூன்று மாதங்கள் முடிவடையாதவர்களும் இந்தச் சிகிச்சையை மேற்கொள்ளக் கூடாது. பாத வெடிப்பு, கால் ஆணி, ரத்த நாள அடைப்பு உள்ளவர்களும் பாத அழுத்தச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டாம்.

இந்த சிகிச்சைகளை காலையிலோ அல்லது மாலையிலோ எப்போது மேற்கொண்டாலும் வெறும் வயிற்றில்தான் செய்ய வேண்டும். அப்போதுதான் சிகிச்சையின் முழு பலனையும் நாம் பெற முடியும்.

http://www.vikatan.com/news/health/84527-foot-massage-cures-back-pain-neck-pain-and-joint-pain.html

  • தொடங்கியவர்

சர்க்கரைநோய்க்கு மருந்து... சிறுநீரகக் கற்களைத் தடுக்கும்... வாழவைக்கும் வாழைத்தண்டு சாறு!

வாழை மரத்தின் எந்தப் பாகத்தையும் வீண் என்று நம்மால் ஒதுக்கிவிட முடியாது. பழத்திலிருந்து நார் வரை வாழை தரக்கூடிய பயன்கள் ஏராளம். வாழை மரத்தின் தண்டு பொரியல், கூட்டு செய்து சாப்பிடப் பயன்படுவது. ஆனால், வாழைத்தண்டை ஜூஸாக்கிக் குடித்தால், பலன்கள் அதிகமாகக் கிடைக்கும். சிறுநீரகக்கோளாறுகளுக்கு பரவலாகப் பரிந்துரைக்கப்படும் முக்கியமான உணவு. அது மட்டும் அல்ல... இன்னும் எண்ணற்றப் பலன்களை வாரிக் கொடுக்கக்கூடியது வாழைத்தண்டு சாறு. அவை என்னென்ன? பார்க்கலாமா? 

வாழைத்தண்டு சாறு

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்!
உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழைத்தண்டு சாறு நல்ல மருந்து. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவும்.

ரத்தசோகையை குணப்படுத்தும்!
வாழைத்தண்டு சாறில் இரும்பு மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அதிக அளவில் உள்ளன. இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். எனவே, வாழைத்தண்டு சாற்றைத் தொடர்ந்து குடித்துவர ரத்தசோகை குணமாகும்.

சிறுநீரகப் பாதையை தூய்மைப்படுத்தும்!
சிறுநீரகப்பாதையில் உள்ள தொற்றுகளை நீக்கி, சிறுநீரகப் பாதையை சுத்தமாக்கும். வாரத்துக்கு மூன்று முறை இதன் சாற்றைக் குடித்துவந்தால், சிறுநீரகப்பாதையில் உள்ள தொற்று (Urinary Tract Infections) நீங்கும்.

சர்க்கரைநோய்க்கு மருந்து!
இது இன்சுலினை மேம்படுத்த உதவுவதால், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. இதன் சாற்றை வடிகட்டாமல் குடித்தால், நார்சத்து அதிகமாகக் கிடைக்கும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதைத் தடுக்கும். 

வாழைத்தண்டு

நெஞ்செரிச்சலைப் போக்கும்!
அமிலத்தன்மையால் (Acidity) அடிக்கடி பாதிக்கப்படுபவர்களுக்கு இது நல்ல தீர்வு தரும். நெஞ்செரிச்சல், நெஞ்சு உறுத்துவது போல் இருப்பது போன்ற பிரச்னைகளுக்கு இது சிறந்த மருந்து. 

வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கும்!
சிறிது இஞ்சியை வாழைத்தண்டு சாற்றுடன் சேர்த்து குடித்துவர, வயிற்றில் உள்ள கொழுப்பு குறையும். இது செரிமானத்தை எளிதாக்கும். வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும். இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் ஒன்று அல்லது இரண்டு கப் சாற்றைக் குடித்தால் வயிறு நிரம்பிவிடும். சீக்கிரத்தில் பசி எடுக்காது.

மலச்சிக்கலைப் போக்கும்!
இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும். மலச்சிக்கலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம். 

சிறுநீரகக்கற்களைத் தடுக்கும்!
வாழைத்தண்டு சாற்றுடன், எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடிக்கலாம். வாழைத்தண்டில் பொட்டாசியம் உள்ளது. எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இவை இரண்டும் இணைந்து சிறுநீரகத்தில் கால்சியம் கற்கள் உருவாவதைத் தடுக்கும். 

வாழைத்தண்டுகள்

எடையைக் குறைக்கும்!
தொடர்ந்து இதன் சாற்றைக் குடித்துவந்தால், உடல் எடை குறையும். சர்க்கரை மற்றும் கொழுப்பு உடனடியாக ரத்தத்தில் கலப்பதை இதன் சாறு தடுக்கும். கொழுப்பை உடலில் இருந்து நீக்கவும் உதவும். வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும்.
நச்சுப்பொருட்களை வெளியேற்றும்!

இது சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும். நச்சுப்பொருட்களை உடலில் இருந்து வெளியேற்ற உதவும். வாழைத்தண்டு சாற்றில் ஏலக்காய் தூளைப் போட்டு குடிப்பதும் சிறுநீரகக்கல் வராமல் தடுக்கும். 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!
இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது.  வாரத்துக்கு மூன்று முறை இதை அருந்திவர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

வாழைத்தண்டு சாற்றை அப்படியே குடிப்பது கொஞ்சம் கடினமான காரியம்தான். அப்படிக் குடிக்க முடியாதவர்கள் அதனுடன் மோர், ஆப்பிள் ஜூஸ் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்கலாம். ஆனால், இவ்வளவு பயன்களைகொண்டிருக்கும் வாழைத்தண்டு எல்லோருமே கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாத ஒன்று. மருந்து, மாத்திரைகளோடு வாழ்வதை தவிர்க்க வாழைத்தண்டு  சாறு உதவும்.

http://www.vikatan.com/news/health/84790-health-benefits-of-banana-stem-juice.html

  • தொடங்கியவர்

வெளிர் மஞ்சள்... அடர் மஞ்சள்... வெண்மை... சிறுநீரின் நிறம் உணர்த்தும் உடல்நலம்!

கேட்பதற்கு வேடிக்கையாகத் தோன்றலாம்... `நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது என்ன செய்வீர்கள்?’ சிலர், மோட்டுவளையை அல்லது வேறு எங்காவது பார்த்துக்கொண்டிருப்பார்கள். வேறு சிலரோ, காதில் மொபைல்போனை வைத்தபடி பேசிக்கொண்டிருப்பார்கள்; இன்னும் சிலர் பல யோசனைகளில் ஆழ்ந்துபோயிருப்பார்கள்; பிறகு..? ஃப்ளஷ் செய்துவிட்டுக் கிளம்பிப் போய்விடுவார்கள். இதில், பெரும்பாலானோர் கவனிக்கத் தவறும் ஒரு விஷயம்... சிறுநீரின் நிறம். இதன் நிறத்தை வைத்துக்கூட நம் ஆரோக்கியத்தின் நிலையை அறிந்துகொள்ள முடியும். இது, வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பது நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கான அடையாளம். சிறுநீர் வேறு நிறங்களில் இருப்பது, பல்வேறு நோய்கள் இருப்பதற்கான அல்லது ஏற்படுவதற்கான அறிகுறிகள். அவை என்னென்ன? 

சிறுநீர்

வெண்மை
சிறுநீர் மிகவும் வெண்மையாக, தெளிவாக இருந்தால், நாம் அதிக அளவில் தண்ணீர் குடிக்கிறோம் என்று அர்த்தம். நம் உடல் செயல்படுவதற்கான அத்தியாவசியத் தேவை தண்ணீர். அதே நேரத்தில், மிக அதிக அளவில் தண்ணீர் குடிப்பதும் சரி அல்ல. சிறுநீர் வழியாக தேவையற்ற உப்பை வெளியேற்றும் உடலின் செயல்பாட்டை இது சிரமத்துக்கு உள்ளாக்கும். அதிக அளவில் நீர் சேரும்போது, உடலில் தண்ணீர்-சோடியம் சமநிலையின்மை ஏற்படும்.

நீர் குடித்தல்
 

அதிக அளவு நீரைக் குடிப்பதால், தொடர்ந்து வெண்மையாக சிறுநீர் வெளியேறுவது `ஓவர் ஹைட்ரேஷன்’ (Over hydration)எனப்படும். இந்தப் பிரச்னை இருந்தால் குமட்டல், வாந்தி, தலைவலி, மனக்குழப்பம் போன்ற அறிகுறிகள் தென்படும். உரிய சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளாவிட்டால் கோமா வரை செல்லக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. 

அடர் மஞ்சள்
சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், `உடலில் போதிய அளவுக்கு நீர் உள்ளது, நலமாக இருக்கிறோம்’ என்று பொருள். ஆனால், தேனைப் போன்ற அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், போதிய அளவுக்கு நீர் எடுத்துக்கொள்ளவில்லை என்று பொருள். தாகம் எடுக்கும்போதெல்லாம் தண்ணீர் குடிப்பதும், சிறுநீரை அதிக நேரம் அடக்கிவைக்காமல் வெளியேற்றுவதுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை சிறுநீர் வழியாகத்தான் வெளியேற்றுகிறோம். அதிக நேரம் அடக்கி வைத்திருந்தால், புதிய நச்சுகள் உடலில் சேர்வதோடு பழைய நச்சுகளையும் வெளியேற்ற முடியாமல் போய்விடும்.

பழுப்பு ( Brown)
சிறுநீர் பழுப்பு நிறத்தில் இருந்தால், அது நீரிழப்பு (Dehydration) பிரச்னை இருப்பதைக் குறிக்கிறது. கல்லீரலில் பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், சிறுநீர் பழுப்பு நிறத்தில் வெளியேறும்.

சிவப்பு

பீட்ரூட்

சிறுநீர் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் வெளியேறினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில வேளைகளில் நாம் சாப்பிட்ட உணவும் இதற்குக் காரணமாக இருக்கலாம். பீட்ரூட், கேரட் மாதிரியான உணவுகளை அதிகமாகச் சாப்பிடும்போது சிறுநீர் சிவப்பாக வெளியேறும். ஆனால், இந்த மாதிரியான உணவுகளைச் சாப்பிடாத நேரத்திலும் சிறுநீர் சிவப்பாக வெளியேறினால், சிறுநீரில் ரத்தம் இருக்க வாய்ப்பு உண்டு. சிறுநீரில் கல், சிறுநீரகப் பாதைத் தொற்று, சிறுநீரகப் புற்றுநோய் போன்றவை இருந்தால் சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறும். 

நீலம் அல்லது பச்சை
தோல் அல்லது நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய போர்ஃபைரியா (Porphyria) நோய் இருந்தால், சிறுநீர்  நீலம் அல்லது பச்சை நிறத்தில் வெளியேறும். இது பெரும்பாலும் பரம்பரையாக வரக்கூடிய நோய். குழந்தைகளுக்கு பரம்பரையாக வரக்கூடிய ஹைப்பர்கால்சீமியா (Hypercalcaemia) பிரச்னை இருந்தாலும், சிறுநீர் இந்த நிறத்தில் வெளியேறும்.  ரத்தத்தில் கால்சியத்தின் அளவு அதிகமாக இருப்பது `ஹைப்பர்கால்சீமியா’ எனப்படுகிறது. 

ஆரஞ்சு

குறைவான நீர்

சரியாகத் தண்ணீர் குடிப்பதில்லை என்று அர்த்தம். இது கல்லீரல் மற்றும் பித்த நாள பிரச்னைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். நிறச் சாயங்கள் சேர்க்கப்பட்ட உணவைச் சாப்பிடாலும் இப்படி நிகழும். 

நுரை
சிறுநீர் நுரையாக வெளியேறுவது நமது உணவில் புரதம் அதிகமாக இருப்பதைக் குறிக்கும். சிறுநீரகப் பிரச்னைகளும் இதற்கு காரணமாக அமையும். எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல், மிகச் சாதாரணமாகவும் இப்படி நிகழ வாய்ப்பு உண்டு. ஆனால், இந்தப் பிரச்னை அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதுதான் நல்லது.

சிறுநீர் வெளிர் மஞ்சளைத் தவிர வேறு நிறங்களில் தொடர்ச்சியாக பல நாட்களுக்கு வெளியேறினால், உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். நோய்கள் குணமாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளும் மருந்துகளும் சிறுநீர் நிறம் மாறக் காரணமாக இருக்கலாம். அதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். 

http://www.vikatan.com/news/health/84951-urine-colour-reveals-diseases.html

  • தொடங்கியவர்

மாத்திரை வேண்டாம்... பக்கவிளைவுகள் இல்லை! தூக்கம் வரவழைக்கும் `4-7-8’ டெக்னிக்!


தூக்கம் என்பது வரம்.`நிம்மதியான நித்திரை கொண்டவன் பாக்கியசாலி’ என்பார்கள். லட்சக்கணக்கான ரூபாயைக் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காதது இயற்கையான தூக்கம். முன்பெல்லாம் நாற்பது வயதைத் தாண்டியவர்கள் மட்டும்தான் தூக்கம் வராமல் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு, `இன்சோம்னியா’ எனப்படும் தூக்கமின்மை பிரச்னையால் இளைஞர்கள்கூட அவதிப்படுகிறார்கள். 

தூக்கமின்மை பிரச்னைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. உறங்கச் செல்வதற்கு முன்னர் தொழில்நுட்பக் கருவிகளை உபயோகிப்பது, பதற்றம், நடந்ததைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பது,எதிர்காலத்தைப் பற்றிய கவலை, பொறுப்புகள் அதிகமாகும்போது ஏற்படும் மன உளைச்சல், பணிச்சுமை போன்ற மனரீதியான பிரச்னைகளே இதற்குக் காரணங்கள். ஆனால், ஒருவருக்கு சரியான தூக்கம் இல்லாவிட்டாலும், அவர் மனஅழுத்தத்துக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில்கொள்ளவும். ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு மணி நேரங்கள் ஆழ்ந்து தூங்கவேண்டியது ஒவ்வொருவருக்கும் அவசியம். அதுவும் இரவு பத்து மணி முதல் காலை 6 மணி வரை தூங்குவது, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியைத் தரக்கூடியது.

தூக்கம்


சரி... இப்போதைய பரபரப்பான வாழ்வியல் முறையில் தூக்க மாத்திரைகளை உட்கொள்ளாமல், இயற்கையான முறையில் ஆழ்ந்து தூங்குவதற்கு வழி இருக்கிறதா? இருக்கிறது. `4 - 7 - 8’ என்ற மூச்சுப்பயிற்சி நுட்பத்தை சில மேற்கத்திய நாடுகளில் பரிந்துரைக்கிறார்கள். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு மருத்துவர் ஆண்ட்ரூ வீய்ல் (Andrew Weil) என்னும் விஞ்ஞானியால்  அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் எளிமையான வழி. 


4 - 7 - 8 மூச்சுப்பயிற்சி நுட்பம்:


* இந்தப் பயிற்சியை செய்வதற்கு முன்னர் வாய் வழியாக உங்கள் மூச்சை `வுஷ் வுஷ்ஷ்...’ என்னும் சத்தத்தை எழுப்பி வெளியேற்ற வேண்டும்.

* முதலாவதாக , வாயைத் திறக்காமல் மூக்கின் வழியாக 1, 2, 3 ,4 என (நான்கு எண்கள்-4) மனதில் எண்ணியபடியே மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.

* இரண்டாவதாக 1, 2 ,3 ,4, 5 ,6 ,7 என (ஏழு எண்கள்-7) மனதில் எண்ணியபடியே மூச்சை அடக்க வேண்டும்.

* இறுதியாக ஒன்று முதல் எட்டு வரை (எட்டு எண்கள்-8) மனதில் எண்ணியபடியே மூச்சை வெளியேற்ற  வேண்டும். மூச்சை வெளியேற்றும்போது, மூச்சை உள்ளிழுக்கும் நேரத்தைவிட இரண்டு மடங்கு அதிக நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தூக்கம்


பலன்கள்...

மூச்சை உள்ளிழுப்பதற்கும் வெளியேற்றுவதற்கும் எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதைவிட அதன்  4 -7 -8 என்னும் எண்ணிக்கையே முக்கியமாகும். மன உளைச்சல் அதிகமாக இருக்கும்போது, நரம்பு மண்டலங்கள் வழக்கத்தைவிட அதிகமாகத் தூண்டப்படும். இதனால் உணர்வுகள் சமநிலை அடையாமல் தூக்கமின்மை உண்டாகும். இந்தப் பயிற்சியை செய்வதால், நுரையீரலுக்குத் தேவையான ஆக்ஸிஜன்  அதிக அளவில் கிடைக்கும். இதனால் நரம்பு மண்டலம் தளர்வடைவதோடு, மனமும் அமைதி பெறும்.
இது தூக்கத்துக்கான வழி மட்டுமல்ல; பதற்றம் அடையும்போதும் , மன உளைச்சலின் போதும் அமைதியடைய நாம் செய்யக்கூடிய ஓர் எளிமையான வழிதான். இந்தப் பயிற்சியை நாள் ஒன்றுக்கு இரு முறை என இரண்டு மாதங்களுக்குத் தொடர்ந்து செய்யுங்கள். 60 நொடிகளில்  தூக்கம் நம்மைத் தொற்றிக்கொள்ளும்.


இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தால், உங்களால் உங்கள் உடலுடன் எளிதாகத் தொடர்புகொள்ளவும், தொடர்பில் இருக்கவும் முடியும். இந்தப் பயிற்சி, அன்றாட வாழ்வில் எழும் எண்ண ஓட்டங்களைக் குறைத்து, நம்மைத் தளர்வாக வைத்திருக்க உதவும். இது நம் நாட்டின் பாரம்பர்யமான பயிற்சியான பிராணாயாமத்தில் இருந்து எடுக்கப்பட்டு, எளிமையாக்கப்பட்ட ஒன்றுதான் என்பதை டாக்டர் ஆண்ட்ரூ வீல்ஸே கூறியிருக்கிறார். பிறகென்ன... `4-7-8’ பயிற்சியை  இன்றே ஆரம்பித்துவிடலாம்!

http://www.vikatan.com/news/health/85154-easy-technique-for-sleep-the-4-7-8-breathing-exercise.html

  • தொடங்கியவர்

விக்கல்... தும்மல்... கொட்டாவி... உடல் சொல்லும் நற்செய்திகள்!

ம் முகத்துக்கு நேராக மிக வேகமாக யாராவது கையைக் கொண்டுவரும்போது என்ன நடக்கும்? நாம் சுதாரித்து நகர்ந்துகொள்ளவோம் அல்லது அடிபடுவோம். அடிபட்ட ஒருவரிடம் அது எப்படி நிகழ்ந்தது என்று கேட்டால், முழுமையாக அவருக்கு சொல்லத் தெரியாது. ஏனென்றால், அந்தக் கணத்தில் கண்கள் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதுவாகவே மூடியிருக்கும். கொட்டாவிவிட்டுக்கொண்டே இருந்ததற்காக ஆசிரியர் உங்களை வகுப்புக்கு வெளியே அனுப்பி இருக்கலாம். ஆனால், கொட்டாவிவிட்டது உங்கள் தவறல்ல; உண்மையில், அதைச் செய்தது நீங்களே அல்ல. மூளை தன்னைப் பாதுகாத்துக்கொள்ளத்தான் கொட்டாவிவிட்டது. இப்படி நமது உடல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள நம்மை அறியாமலேயே செய்யும் காரியங்கள் பல. அவை... 

மயிர்க்கூச்செரிதல்

மயிர்க்கூச்செரிதல்
விலங்குகள் சண்டையிடும்போது அவற்றின் உடலில் உள்ள முடிகள் நீட்டிக்கொண்டு (சிலிர்த்து) நிற்கும்.  இதனால் அவற்றின் தோற்றம் இயல்பான அளவைவிடப் பெரியதாகவும், வலிமையானதாகவும் தெரியும். இப்படி மயிர்க்கூச்செரிந்து நிற்பது உடலில் காயங்கள் அதிகமாக ஏற்படாமல் அவற்றுக்குப் பாதுகாப்பளிக்கும். 

மனிதனும் விலங்குகள் கூட்டத்தை சேர்ந்தவன்தான். அவனுக்கும் இதே மாதிரி தோற்றம் மாறுகிற அளவுக்கு ஆரம்பத்தில் அதிகமான முடி இருந்ததும் உண்மை. மனிதர்கள் சண்டைகளைக் குறைத்துக்கொண்டு நாகரிக வாழ்க்கை வாழ ஆரம்பித்ததும், அவன் உடலில் உள்ள தேவையற்ற முடிகள் உதிர ஆரம்பித்தன. ஆனால், நமது உள்ளுணர்வின் காரணமாக மிகப் பரபரப்பான சண்டைக்காட்சியைப் பார்க்கும்போதோ, பேய்ப் படம் பார்க்கும்போதோ. விளையாட்டுப் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்கும்போதோ நமக்கு அனிச்சையாக மயிர்க்கூச்செரியலாம். 

மயிர்கூச்செரிதல் நமது உடலில் வெப்ப இழப்பைத் தடுக்கும்; அதோடு, குளிர்காலங்களில் நமது உடலை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ளவும் உதவும். 

கொட்டாவி

கொட்டாவி
மிகவும் போர் அடிக்கும் வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது, ஒரு மொக்கைப் படத்தை பார்க்கிறபோது, நாள் முழுக்க ஒரே ஆசிரியர் பாடம் நடத்தும்போது நம்மை அறியாமலேயே கொட்டாவி வந்துவிடும். மூளைக்கு அதிக ஆக்ஸிஜனை அனுப்புவதற்காகத்தான் உடல் இப்படிச் செய்கிறது என்பதில் உண்மையில்லை. மூளை அதிகம் சூடாகும்போது கொட்டாவி வரும். இதன் மூலமாக, மூளை தன்னை இயல்புநிலைக்கு மாற்றிக்கொள்கிறது. வெப்ப மாற்றங்கள் நிகழும் பகுதியில் இருந்தாலும், கொட்டாவி வரும். நாள் முழுக்க வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்ததும், வாயைத் திறந்து, சொடக்குப் போட்டு இதை நாமே அடக்க முயன்றிருப்போம். கவனித்து இருக்கிறீர்களா? அதற்குக் காரணம் இதுதான். 

விக்கல்

விக்கல்
ஓர் உணவுவிடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நண்பர்களுக்குள் சண்டை வந்துவிடுகிறது. அடித்துக்கொள்ளும் அளவுக்குச் சண்டை முற்றிவிடுகிறது. அப்போது திடீரென்று உங்களுக்கு விக்கல் வந்தால் எப்படி இருக்கும்? `எங்க சண்டையைப் பார்த்தா உனக்கு நக்கலா இருக்கா?’ என்று திட்டுவார்கள் நண்பர்கள். ஆனால், நீங்கள் மிக வேகமாகச் சாப்பிடுகிறீர்கள் என உணர்த்தத்தான் உடல் விக்கலை வெளிப்படுத்துகிறது. `இந்த இடத்திலிருந்து கிளம்பினால்தான் சண்டை முடியும்’ என்ற நல்லெண்ணத்தில் நீங்கள் அவ்வளவு வேகமாகச் சாப்பிடுகிறீர்கள் என உங்கள் நண்பர்களுக்குத் தெரியாமல் போவதுதான்  துரதிர்ஷ்டம்.

திடீர் விழிப்பு
அடித்துப்போட்ட மாதிரி தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று அதிர்ச்சி அடைந்த மாதிரி சத்தத்தை எழுப்பியபடி எழுகிறீர்கள். சுற்றும் முற்றும் பார்க்கிறீர்கள். கொஞ்ச நேரத்துக்கு என்ன நடந்ததென்று உங்களுக்குப் புரியவில்லை. இந்த மாதிரி உங்களுக்கு நிகழ்ந்தது உண்டா/ அப்படி உணர்ந்திருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி!

மூளை, நம்மை மரணத்தில் இருந்து காப்பாற்றத்தான் இப்படிச் செய்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?  நாம் தூங்கும்போது நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு போன்றவை குறைந்திருக்கும். தசைகளின் இயக்கம் குறைவாகி, அவை ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். இதன் காரணமாக நாம் இறந்துவிட்டதாக உடல் மூளைக்கு சிக்னல் அனுப்பும். நாம் இன்னும் இறக்கவில்லை என்பதை உணர்ந்துகொள்ளும் மூளை சுதாரித்துக்கொண்டு நம்மை எழுப்பிவிடும்.

தோல் சுருக்கம்

விரல்களில் தோல் சுருக்கம்!
தண்ணீரில் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் கையை முக்கி வைத்துவிட்டு எடுத்துப் பார்த்தால், விரல்களில் உள்ள தோல் சுருங்கிப்போயிருக்கும். ஆறு, ஏரி அல்லது நீச்சல் குளத்தில் நீண்ட நேரம் ஆட்டம் போட்டுவிட்டு வெளியே வரும்போது, இந்தச் சுருக்கங்களை நீங்கள் கவனித்து இருக்கலாம். `கை விரல்களின் அழகு போய்விட்டதே..!’ என்று வருத்தப்பட்டு இருக்கலாம். ஈரமான கையால் ஒரு பொருளைத் தொடும்போது, அது நழுவிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தச் சுருக்கங்களை உடல் உருவாக்குவதால்தான் எந்தப் பொருளையும் நன்றாக பற்றிப் பிடித்துக்கொள்ள நம்மால் முடிகிறது. 

தும்மல்

தும்மல்
பாக்டீரியா, அலர்ஜியை ஏற்படுத்தும் பொருள்கள், தூசுக்கள் போன்றவை மூக்குக்குள் செல்லும்போது நம்மை அறியாமலேயே தும்மல் வந்துவிடும். பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்களை ஆரம்பத்திலேயே ஒழித்துக்கட்டிவிட உடல் செய்யும் நல்ல நடவடிக்கை இது.

சோம்பல் முறித்தல்

சோம்பல் முறித்தல்!
இரவில் நாம் தூங்கியவுடன் நமது தசைகள் ஓய்வு எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். காலையில் சோம்பல் முறிப்பதன் மூலம் உடல் இந்தத் தசைகளையும் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடுகிறது.  சோர்வாக இருக்கும்போதும் நாம் சோம்பல் முறிப்போம்.  இதனால் தசைகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, அவை சுறுசுறுப்பாகும்.

உடல்தான் தனக்குள் எவ்வளவு அதிசயங்களை ஒளித்து வைத்திருக்கிறது! விக்கல், தும்மல், கொட்டாவி போன்றவை இயல்பானவை. அவற்றை யாராலும் தடுக்க முடியாது என்பதை நாம் உணர வேண்டும். இதை உணர்ந்துகொண்டால் இன்னொருவர் கொட்டாவி விடும்போது நமக்குக் கோபம் வராது. மாறாக, அதிலிருக்கும் `இயற்கை’ என்கிற ஆச்சர்யம்தான் கண்முன் தெரியும்!

http://www.vikatan.com/news/health/85060-defence-mechanisms-of-body.html

  • தொடங்கியவர்

இதய நோய் கவனம்! அலட்சியப்படுத்தக்கூடாத அறிகுறிகள்! #HeartAlert

லகிலேயே மிக அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவது இந்தியாவில்தான்’ என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) சமீபத்திய அறிக்கை ஒன்று. 2016-ம் ஆண்டு வெளியான ஒரு புள்ளிவிவரப்படி, ஒவ்வொரு 33 விநாடிகளுக்கும் இந்தியாவில் ஒருவர் மாரடைப்புக்கு ஆளாகி இறந்து போகிறார். உண்மையில், மாரடைப்பு தவிர்க்கக்கூடியதே! இதய நோய்களுக்கான அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியக்கூடியவை. ஆனால், அவற்றைச் சரியாக அடையாளம் காணாததாலும் அல்லது அலட்சியப் படுத்துவதாலும்தான் பலரும் இதயக் கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள். அந்த அறிகுறிகளை சரியான நேரத்தில் கவனித்து, முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் நாம் தப்பித்துவிடலாம். என்னென்ன அறிகுறிகள் அவை? பார்ப்போம்...

இதயம் உள்புறம்

உறங்குவதில் சிரமம்!

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நேராகப் படுக்கையில் படுத்திருக்கும்போது தூங்குவதற்குக் கடினமாக உணர்வார்கள். நுரையீரலில் கோத்திருக்கும் அதிகப்படியான நீர், புவியீர்ப்பால் கீழ்நோக்கி இழுக்கப்படும். பிறகு அந்த நீர் நுரையீரல்களுக்கு இடையே அதிகமாகப் பரவும். இதனால் தூங்குவது கடினமாக இருக்கும். இதற்காக தூக்க மாத்திரைகள் உட்கொள்ள ஆரம்பித்தால், நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும். 

வேகமாக எடை அதிகரித்தல்!

சாதாரணமாக ஒரு மனிதனுக்கு நிகழாத அளவுக்கு மிக வேகமாக எடை கூடும். இதயத்தில் நீர் கோத்தல் அல்லது இதய அடைப்பு போன்றவற்றால் இப்படி எடை அதிகரிக்கும். ரத்தக்குழாய்களில் கோத்துள்ள நீர், சுற்றியுள்ள திசுக்களிலும் சேர்ந்து எடை அதிகரிக்கும் வாய்ப்பைக் கூட்டும்.

கால் வீக்கம்

கால், பாதம் போன்ற இடங்களில் நீர் கோத்துக்கொள்ளும். இதனால் அந்த இடங்கள் வீக்கமடையும். இதன் காரணமாக, நரம்புகள் நம் வயதுக்கு ஏற்றபடி ஒத்துழைக்காது, வேலை செய்யாது. 

அடிவயிறு வீக்கம்

அடிவயிற்றில்  நீர் கோத்துக்கொள்ளும். கல்லீரலிலும், செரிமானத் தடத்திலும் ஏற்பட்டிருக்கும் அடைப்பு காரணமாக கடுமையான வலி ஏற்படும். இதற்கு நாம் உட்கொள்ளும் அதிகமான அளவு உப்புக்கூட காரணமாக இருக்கலாம்.

இருமல்

நுரையீரலில் ஏற்பட்டுள்ள அடைப்பு, தொடர்ச்சியான இருமலை ஏற்படுத்தும். இருமல் கடுமையாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதேபோல் மூச்சுவிடும்போது விசில் அடிப்பது போன்ற ஒலி கேட்கும். 

இதயத்தின் மாதிரி படம்

சளி

நுரையீரலில் கோத்திருக்கும் நீர், சளியை ஏற்படுத்தும். சளி நுரைபோல இளஞ் சிவப்பு நிறத்தில் மாறும்.  இது மூச்சுவிடுவதைப் பாதிக்கும்.  

சோர்வு

இதயச் செயலிழப்பு அல்லது இதயம் தொடர்பான கோளாறுகள் உள்ளவர்கள் அதிகக் களைப்பாகவும் சோர்வாகவும் உணர்வார்கள். இதயத்தின் திறன் குறைவாக இருப்பதால், இதயத்தில் இருந்து ரத்தம் சரியாகப் பிற பகுதிகளுக்குச் செல்ல இயலாத நிலை ஏற்படும். இதனால்தான் கடுமையான சோர்வு பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படுகிறது.

குமட்டல் மற்றும் பசியின்மை

கல்லீரல் மற்றும் குடல் பகுதிகளைச் சுற்றிக் கோத்திருக்கும் நீர், செரிமான மண்டலத்தை பாதிக்கும். இதனால் குமட்டல், பசியின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும். 

தலைச்சுற்றல்

இதய நோய்க்கு ஆளானவர்களின் இதயம், ரத்தத்தை உடல் முழுமைக்கும் அனுப்ப இயலாத நிலையில் இருக்கும். குறிப்பிட்ட நேரத்துக்குள் போதுமான அளவிலான ரத்தம் மூளைக்குக் கிடைக்காவிட்டால், தலைசுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படும்.  

மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல் ஏற்படுவது இதய நோய்க்கான பொதுவான அறிகுறி. மிக எளிதான வேலைகளைச் செய்யும்போதுகூட மூச்சுத்திணறல் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 

வியர்த்தல்

எந்தவொரு காரணமும் இல்லாமல் கடுமையாக வியர்த்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். ஒருவேளை இது, மாரடைப்பபுக்கான அறிகுறியாக இருக்கலாம். 

இதய நலன்

 

இதய வலி

இதயம் அடிக்கடி வலிக்கும். இந்த வலி கை, கழுத்து, கன்னம், முதுகு, பல் போன்ற மற்ற பகுதிகளுக்கும் பரவும். உடற்பயிற்சி செய்யும்போதோ, பதற்றமாக இருக்கும்போதோ இந்த வலிகள் வரும்.

சீரற்ற இதயத்துடிப்பு

இதயத்துடிப்பு சீரில்லாமல் இருப்பது இதயநோய்க்கான அறிகுறி. வழக்கத்துக்கு மாறாக, மிக வேகமாகவோ அல்லது மிக மெதுவாகவோ இதயம் துடிக்கும். 

தோல் நிற மாற்றம்

ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதால் தோல் நீல நிறமாக மாறும். இதற்கு ‘சயனோஸிஸ்’ (Cyanosis) என்று பெயர். இது, அரிதாகச் சிலருக்கு ஏற்படலாம்.

வருமுன் காப்பதே எப்போதும் சிறந்தது. இதய நோய்கள் தாக்குவதற்கு முன்னரே சிகிச்சை எடுத்துக்கொண்டால், நீண்ட நாள்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாழலாம். ஆனால், அறிகுறிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், பாதிப்புகள் முற்றிவிடும். ‘இதயநோய்’ என்ற பிரமாண்டமான யானை வருவதற்கு முன்னதாகவே மணியோசையாக வரும் இந்த அறிகுறிகளை கவனிக்க வேண்டும். உரிய சிசிச்சையை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது இதயத்தை இதமாக வைத்திருக்கும்; வலுவாக்கும்! 

http://www.vikatan.com/news/health/85282-never-ignore-these-symptoms-of-heart-trouble.html

  • தொடங்கியவர்

சிக்கன், வெங்காயம், முந்திரி பக்கோடா... அளவோடு இருந்தால் ஆரோக்கியம்!⁠⁠⁠⁠

சித்து ரசித்து மனிதன் உருவாக்கிய எத்தனையோ சுவையான உணவு வகைகள் உலகில் இருக்கின்றன. போகிற போக்கில் மனிதன் தயாரித்த பக்கோடா, சுவைகளின் உன்னதம்... ருசிகளில் அதிருசி! இதன் சிறப்பம்சமே, நினைத்தவுடன் செய்துவிடக்கூடிய எளிமையான செய்முறைதான். தமிழ்நாட்டு நொறுக்குத்தீனிகளில் முதல் 10 இடங்களில் நிச்சயம் இதற்கு இடம் உண்டு. சுடச்சுட சின்ன பிளேட் பக்கோடா வாங்கிச் சாப்பிட்டு, சூடாக டீ குடிக்கும் சுகானுபவத்துக்கு ஈடு இணை வேறொன்று இல்லை. மொறு மொறு சுவை, கடித்தவுடன் தொண்டைக்குள் இறங்கும் மெத்தென்ற பதம்... இவைதான் பல தலைமுறை தாண்டியும் இன்றைக்கும் பலரை பக்கோடா ரசிகர்களாக்கிப் பாடாகப்படுத்திக்கொண்டிருக்கிறது.

பக்கோடா

சிக்கன், மட்டன், கீரை, வெங்காயம், முந்திரி, சேமியா, வெண்டைக்காய், பனீர், பாகற்காய், வெண்டைக்காய், பச்சைப்பட்டாணி, காலிஃப்ளவர், மஷ்ரூம்... என நீள்கிற பக்கோடா வகைகள் நிச்சயம் பெருமூச்சுவிட வைக்கும். பின்னே... அத்தனையையும் ஒரே நேரத்தில் ஒரு பிடி பிடிக்க முடியாதல்லவா? வகைகள் எத்தனையோ இருந்தாலும், பக்கோடாவின் ஆதார செய்முறை ஒன்றுதான். வெங்காய பக்கோடா செய்கிறோம் என வைத்துக்கொள்வோம். ஒரு கப் கடலை மாவு, கால் கப் அரிசி மாவு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் 2 கப், பச்சைமிளகாய் 2, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, ஒரு சிட்டிகை சமையல் சோடா, தேவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம். எல்லாம் கலந்து பக்கோடா மாவு பதத்துக்கு வந்ததும், வாணலியில் எண்ணெயைக் காய வைத்து பொரித்தெடுக்க வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி ஒவ்வொரு வகைக்கும் சின்னச் சின்ன மாறுதல்கள் இருக்கும். இதன் செய்முறை எத்தனையோ பேருக்கு அத்துப்படி. இவ்வளவு ஏன்... பக்கோடா குழம்பு வைக்கிற அளவுக்கு முன்னேற்றம் அடைந்துவிட்டோம் நாம்! 

பக்கோடா

வட இந்தியாவில் இதன் பெயர் `பகோரா’. சமஸ்கிருதத்தில் `பக்வாவடா’ (Pakvavata) என்று சொல்லப்படுவதுதான் `பகோரா’ ஆனது என்கிறார்கள். இன்னும் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் நாடுகளில் `பகோடி’ (Pakodi), `பொனகோ’ (Ponako) என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சீனாவில் `பக்கோடா’ (Pakoda). நேபாளத்தில் `பக்காவ்டா’ (Pakauda). மகாராஷ்டிரா, கர்நாடகா என பல மாநிலங்களில் பிரபலமாகிவிட்டது இந்த அட்டகாச நொறுக்குத்தீனி... தெற்கு ஆசியாவின் தெருவோரக் கடைகளில் புகழ்பெற்ற நொறுக்குத்தீனி. தெற்கு ஆசியாவைத் தாண்டி வேறு சில பகுதிகளிலும் பக்கோடாவின் கொடி பறக்கிறது. இங்கிலாந்தில், முக்கியமாக ஸ்காட்லாந்தில் `பக்கோரா கறி’ (Pakora Curry) என்ற பக்கோடாவைப் போலவே ஒரு நொறுக்குத்தீனியைச் செய்து சாப்பிடுகிறார்களாம். தென்னாப்பிரிக்காவில் வாழும் கேப் மலாய்ஸ் (Cape Malays) இன முஸ்லிம் மக்கள் செய்யும் நொறுக்குத்தீனி `தால்ட்ஜீஸ்’ (Dhaltjies) இதே ரகம் என்கிறார்கள். இஃப்தார் விருந்து, திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற இம்மக்களின் வைபவங்களில் தால்ட்ஜீஸ் தவறாமல் இடம் பிடித்திருக்கும். இன்னும் ஆஃப்கானிஸ்தான், சீனா, சோமாலியா போன்ற நாடுகளில் பல சமையலறைகளில் இது முக்கியமான ரெசிப்பியாக இருக்கிறது. தொட்டுக்கொள்ள எதுவும் தேவைப்படாத அற்புதமான ரெசிப்பி!

நம் ஊர் ஸ்வீட் ஸ்டால்களில் கண்ணில்படுகிற மாதிரி வைக்கப்பட்டிருக்கும் ஒரே நொறுக்குத்தீனி பக்கோடாதா. காராச்சேவு, மிக்ஸர், ஓமப்பொடி, காராபூந்தி, முறுக்கு போன்ற அயிட்டங்கள் கண்ணாடிப் பெட்டிகளிலும், பாத்திரங்களிலும் அடைபட்டுக் கிடந்தாலும், பளிச்சென்று நம் பார்வைக்குத் தெரிவது பக்கோடாவாகத்தான் இருக்கும். `அண்ணே... சூடாப் போட்டதுண்ணே!’ என்று சொல்லி ஒரு துண்டை எடுத்து நீட்டி நம்மை ஈர்க்கும் கடைக்காரர்களும் இருக்கிறார்கள். தமிழகத்தின் பல டீக்கடைகளில் மாலை நேரத்தில் கூட்டம் அதிகரிப்பது பக்கோடாவின் பொருட்டாகத்தான் இருக்கும். தனியாக இதற்கென கடைகளும் உண்டு. தென் தமிழகத்தில், திடீரென விருந்தினர் வந்துவிட்டால், `முக்குக் கடையில கால் கிலோ பக்கோடா வாங்கிட்டு வாலேய்...’ என சிறுவர்களை ஏவுவதெல்லாம் இன்றைக்கும் நடக்கிற நிகழ்வு. 

முந்திரி பக்கோடா

சென்னையில் மாலை நேர ரோட்டுக் கடைகளில், `சிக்கன் பக்கோடா’ கடைகளின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அங்கேயே நின்று, சுடச்சுடப் பொரித்துக் கொடுப்பதை வாங்கி, கண்ணில் நீர் வர, காரமாகச் சாப்பிட்டு, சிலாகித்துப் போகிறவர்கள் அநேகம்பேர். மாலை ஆறு மணி வாக்கில் சூடுபிடிக்கும் வியாபாரம், இரவு 11 மணி வரை நீளும். சில நட்சத்திர விடுதிகளில் ஆர்டர் கொடுத்த பிறகு, சுடச்சுடப் பொரித்துக் கொடுப்பதும் உண்டு. மொத்தத்தில் இளஞ்சூட்டில் பக்கோடா சாப்பிடுவது பேரானந்தம். சூடாகச் சாப்பிடாமல், சில மணி நேரங்கள் வைத்திருந்தாலும், இதன் சுவையோ மொறுமொறுப்புத் தன்மையோ மாறுவதில்லை என்பது இதன் சிறப்பு. இதை விரும்பிச் சாப்பிடுவது மாதிரி நடித்ததாலேயே காதர் என்கிற நடிகருக்கு `பக்கோடா காதர்’ என பெயர் வந்ததாம். ஆக, தமிழ் சினிமா வரலாற்றிலும் இதற்கு இடம் உண்டு. 

பக்கோடா ஆரோக்கியமான நொறுக்குத்தீனிதானா? விளக்குகிறார் டயட்டீஷியன் பத்மினி...  

    டயட்டீஷியன் பத்மினி“ `பக்கோடாவைக் கொடுத்து மாமியாரின் கோபத்தைக்கூட மருமகளால் மட்டுப்படுத்த முடியும்’ என வடநாட்டில் ஒரு வழக்குத்தொடர் உண்டு. அந்த அளவுக்கு ருசியான நொறுக்குத்தீனி இது. இதைச் சாப்பிடுவது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும்; நல்ல கொலஸ்ட்ராலைக் கூட்டும். உடல்பருமனுக்கு வழிவகுக்கும். ஆறு சிறு துண்டு பக்கோடாக்களில் 212 கலோரிகள், கொழுப்பு 16 கிராம், நார்ச்சத்து 3 கிராம், புரோட்டீன் 4 கிராம், கார்போஹைட்ரேட் 15 கிராம், சோடியம் 407 மி.கி ஆகியவை உள்ளன. மற்றபடி உடலுக்கு நன்மை செய்யும் வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம் ஆகியவை அதிகம் இல்லை. 

எண்ணெயில் பொரித்து எடுப்பது மட்டும்தான் பக்கோடாவின் முக்கியப் பிரச்னை. இதை வீட்டிலேயே செய்வதாக இருந்தால்கூட, அதிக எண்ணெயில் பொரித்தெடுப்பது உடலுக்கு தீமை தரக்கூடியதே. அதிக அளவில் எண்ணெய் உணவுகளை சாப்பிடுவது எப்பொழுதுமே வயிற்றுக்கு நல்லதல்ல. கடைகள், ஹோட்டல்களில் விற்கப்படும் பக்கோடா நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல. மிக எளிதாக ஈர்த்துவிடும் இதன் ருசி, ஒருவரை மேலும் மேலும் சாப்பிடத் தூண்டக் கூடியது. எனவே, இதை விரும்பிச் சாப்பிடும் ஒருவர் அளவாகச் சாப்பிட வேண்டும் என நினைத்தாலும் அது முடியாது. ஆக, நன்கு பொரிக்கப்பட்ட, எண்ணெயில் ஊறிய பக்கோடாவை அடிக்கடி சாப்பிடுவது நம் ஆரோக்கியத்தைச் சீர்கெட வைக்கும். இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு. இதன் மேல் தீராக் காதல் உள்ளவர்கள் எப்போதாவது வீட்டில் செய்து சாப்பிடுவது நல்லது’’ என்கிறார் பத்மினி.

ஓட்ஸ் பக்கோடா

நம்மில் பெரும்பாலானோர் பக்கோடாவை நாம் வீட்டில் செய்து சாப்பிடுவதில்லை என்பதே உண்மை. கடைகளில்தான் வாங்கிச் சாப்பிடுகிறோம். கடைகளில் இதைப் பொரிக்க என்ன எண்ணெய் பயன்படுத்துகிறார்கள், எத்தனை முறை திரும்பத் திரும்பப் பொரித்தெடுக்கிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. சிக்கன், மட்டனில் செய்தது என்றால் அந்த இறைச்சி சுத்தமானதுதானா என்று யோசிக்கவேண்டியிருக்கிறது. எண்ணெயில் பொரிக்கப்பட்ட வெளி உணவுகள் நம் உடல்நலத்துக்குக் கொண்டு வந்து சேர்க்கும் பிரச்னைகள் கொஞ்சநஞ்சமல்ல. உயர் ரத்த அழுத்தம் தொடங்கி மாரடைப்பு வரை பல பெரிய நோய்கள் ஏற்படவும் இது காரணமாகிவிடும். பண்டிகைகள், விசேஷங்கள் என்றில்லை... ஆசைப்படும்போது நாமே செய்து, கொஞ்சமாகச் சாப்பிடுவதுதான் நம் ஆரோக்கியத்துக்கு நல்லது!

http://www.vikatan.com/news/health/85171-is-pakoda-healthy-for-us.html

  • தொடங்கியவர்

பட்டாணி... காளான்... கேழ்வரகு... உடலை வலுவாக்கும் புரத உணவுகள்!

அன்றாடம் நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு உட்கொள்ளும் உணவில் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துகளில் ஒன்றாகப் புரதச்சத்துக் கருதப்படுகிறது. புரதச்சத்து என்றதும் அனைவரது பார்வையும் அசைவ உணவுகளின் பக்கமே திரும்பும். குறிப்பாக முட்டை, மீன் போன்றவற்றில் புரதம் நிறைந்துள்ளதால், பெரும்பாலானோர் அவற்றைச் சாப்பிடச் சொல்வார்கள். ஆனால் சைவப்பிரியர்களுக்கு அவற்றைப் பார்த்தாலே வாந்தி எடுக்கும். நீங்கள் சைவப்பிரியராக இருந்தால், இதோ உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய புரதம் நிறைந்த சைவ உணவுப்பொருட்களை இங்கே பார்ப்போம். 

புரத உணவுகள் - பட்டாணி

1. பட்டாணி (Peas) 

புரதம் நிறைந்த உணவுகளில் பட்டாணி மிக முக்கியமானது. இதில் புரதச்சத்து மட்டுமன்றி வைட்டமின் சத்தும் நிறைந்துள்ளது. பட்டாணியைக் காய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்தோ, சூப்பாகவோ செய்து சாப்பிடலாம். 

 

2. கீரை (Spinach) 

புரதச்சத்து நிறைந்த உணவுகள் பட்டியலில் பட்டாணிக்கு அடுத்தபடியாக இருப்பது கீரை. நம் வீடுகளின் அருகில் எளிமையாகக் கிடைக்கும் ஒரு உணவு கீரை. கீரையில் பலவகை உண்டு. அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, வல்லாரைக்கீரை என இதன் பட்டியல் நீளும். இந்தக் கீரை வகைகளை வதக்கி நம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கீரையில் புரதச்சத்து மட்டுமின்றி வைட்டமின் போன்ற மற்ற சத்துக்களும் உள்ளன. 

கீரை

3. சோயா பீன்ஸ் 

தாவர வகைகளில் சோயா பீன்ஸில்தான் அளவுக்கு அதிகமான புரதச்சத்து உள்ளது. உணவு வகைகளில் பொரியல், கூட்டுச் செய்யும்போதெல்லாம் சிறிது சோயாவை சேர்த்துக் கொள்ளலாம். ஏதேனும் ஒரு வடிவத்தில் சோயாவை வாரத்தில் 2 முறை நம் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. சோயாவை நேரடியாக உபயோகிக்க விரும்பாதவர்கள், 1 கிலோ கோதுமை மாவுக்கு 100 கிராம் சோயா வீதம் சேர்த்து அரைத்து உபயோகிக்கலாம். 

 

4. புரோக்கோலி (Broccoli) 

முட்டைகோஸ் குடும்பத்தைச் சேர்ந்த புரோக்கோலி, புரதச்சத்து நிறைந்தது. இதில் புரதச்சத்து மட்டுமன்றி வைட்டமின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இதை வேகவைத்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சூப்பில் சேர்த்தும் உண்ணலாம். 

 

5. முளை கட்டிய தானியங்கள் (Sprouts) 

புரதச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும் என்றால் அனைவருக்கும் பரிந்துரைக்கும் அடுத்த ஒரு உணவுப்பொருள் இந்த முளை கட்டிய தானியங்கள். முதல்நாளில் கடலை, பயறு போன்றவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து, அடுத்த நாள் விதையில் முளைக்குருத்து வந்ததும் அதை எடுத்து சாப்பிட வேண்டும். இதை அப்படியே சாப்பிடலாம்; சமைக்கவேண்டிய தேவை இல்லை. இது புரதச்சத்து தருவதோடு உடல் எடையைப் பராமரிக்கவும் உதவக்கூடியது. 

முளை கட்டிய தானியங்கள்

6. காளான் (Mushroom) 

புரதச்சத்து நிறைந்த உணவுகள் வரிசையில் காளானும் உண்டு. காளானை வேகவைத்தோ, சூப்பாகச் செய்தோ சாப்பிடலாம். சுவை நிறைந்த காளானில் புரதச்சத்து மட்டுமன்றி உடலுக்குத் தேவையான பல ஊட்டசத்துகள் நிறைந்துள்ளன. அத்துடன் உடலில் கொழுப்பு சேரும் ஆபத்தையும் குறைக்கக்கூடியது. 

7. சோளம் (Corn) 

சோளம், புரதச்சத்து நிறைந்த ஒரு பொருள். மிகவும் சுவையான உணவுப்பொருளான இதை வேகவைத்து நேரடி உணவாக எடுத்துக்கொள்ளலாம். இதில் புரதம் மட்டுமன்றி நார்ச்சத்தும் மிகுந்துள்ளது. 

8. நிலக்கடலை 

முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் நிலக்கடலையில் உள்ளது. இது நமது உடலுக்குத் தேவையான அதிகமான சத்துகளைத் தரும்.. எலும்புகளுக்குப் பலம் தரக்கூடிய கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் நிலக்கடலையில் உள்ளன. 

கேழ்வரகு

9. கேழ்வரகு 

கேழ்வரகில் உள்ள புரதச்சத்துப் பாலில் உள்ள புரதச் சத்துக்குச் சமமாகும். ஆகவே பால் ஒத்துக்கொள்ளாதவர்கள் கேழ்வரகுக் கஞ்சி சாப்பிடலாம். கோதுமையில் உள்ள க்ளூட்டன் என்னும் பசை வகைப் புரதம் போலக் கேழ்வரகில் இல்லை. ஆகவே க்ளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் கேழ்வரகை உணவில் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். 

10. உளுந்து 

மிகவும் சத்தான பருப்பு உளுந்து. பூப்பெய்தும்போதும், பிரசவத்தின்போதும் பெண்களுக்கு உளுந்து அதிகமாகக் கொடுப்பார்கள். கர்ப்பப்பைக்குத் தேவையான புரதச்சத்து உளுந்தில் அதிகமாக இருப்பதே காரணமாகும். 

http://www.vikatan.com/news/health/85296-delicious-foods-that-are-high-in-protein.html

  • தொடங்கியவர்

எடை குறைக்கும் பேலியோ டயட்... சாப்பிடவேண்டியவை, கூடாதவை! #HealthTips

கற்கால உணவுகளை  அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது பேலியோ டயட். இதை ‘பேலியோலித்திக் டயட்’ (Paleolithic diet) என்றும் ‘கற்கால டயட்’ என்றும் அழைக்கிறார்கள். இந்த டயட்டில் காய்கறிகள், நட்ஸ், வேர்கள், இறைச்சி (ஈரல், மூளை) ஆகியவை அடங்கும். இதில் இடம்பெறாதவை பால் சார்ந்த உணவுகள், தானியங்கள், சர்க்கரை, பருப்பு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், உப்பு, காபி மற்றும் மது. `பேலியோ டயட், உடல் சுகாதாரத்தை மேம்படுத்தும்’ என்று கூறப்படுகிறது. இந்த டயட்டை மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு தொடங்குவது சிறந்தது. இந்த டயட்டில் எதைச் சாப்பிடலாம், தவிர்க்கலாம், இது அள்ளித்தரும் நன்மைகள் அத்தனையையும் சற்று விரிவாகப் பார்க்கலாம். 

பேலியோ டயட்

நன்மைகள்

* இந்த டயட் சுத்தமானது. நாம் வழக்கமாகச் சேர்க்கும் செயற்கை சேர்க்கைகளான பிரிசர்வேட்டிவ்ஸ், செயற்கை சுவையூட்டிகள் ஆகியவை இதில் தவிர்க்கப்படுகின்றன.

* ஃபிரெஷ்ஷான காய்கறிகளைச் சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். செடிகளில் உள்ள ஆன்டி-இன்ஃப்ளேமேட்டரி (Anti- inflammatory) என்னும் நன்மை தரும் பொருள் நமக்குக் கிடைக்கும்.

* `ரெட் மீட்’ எனப்படும் ஆடு மற்றும் மாட்டு இறைச்சி உண்பதால், உடலில் அதிக அளவில் இரும்புச்சத்து சேரும். 

* அதிக அளவில் புரதம் மற்றும் நல்ல கொழுப்புச்சத்து சாப்பிடுவதால் திருப்தியான உணர்வு ஏற்படும்

* குறைந்த உணவு வகைகளை உண்பதால், உடல் எடை குறையும். 

* பேலியோ வகை வாழ்க்கை முறை இன்சுலின் சுரப்பைத் தூண்டி, சர்க்கரைநோய் வராமல் தவிர்க்கும். சர்க்கரைநோய் இருப்பவர்களுக்கு அது தீவிரம் அடையாமல் பார்த்துக்கொள்ளும். 

* இந்த டயட்டை பின்பற்றுபவர்களுக்கு புற்றுநோய், சர்க்கரை மற்றும் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

பேலியோ டயட் உணவுகள்

உணவுகள்... 

* கேரட், கீரை, புரோக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கத்திரிக்காய், பச்சை வெங்காயம் மற்றும் குடமிளகாய் போன்ற காய்கறிகள். 

* அவகேடோ, லெமன்

* கோழி முட்டை மற்றும் வாத்து முட்டை. 

* பாதாம் பருப்பு, பூசணி விதை, சூரியகாந்தி விதை, வால்நட்ஸ், மற்றும் முந்திரி.

* சத்தான எண்ணெய்களான ஆலிவ் எண்ணெய், அவகேடோ எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் ஆளி விதை எண்ணெய்.

* தாவரம் உண்ணும் விலங்கு-பறவைகளின் இறைச்சிகளான கோழி இறைச்சி, வான்கோழி இறைச்சி, பன்றி இறைச்சி, இறால், முயல் கறி, ஆட்டு இறைச்சி, ஈமு கோழி இறைச்சி, வாத்து இறைச்சி மற்றும் காடை  இறைச்சி. 

* கடல்வாழ் உயிரினிங்களான மத்தி மீன், வாளை மீன், நண்டு, இறால், சிப்பி மீன் போன்றவை.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

பேலியோ டயட்டில் தவிர்க்கவேண்டிய உணவுகள்... 

* பால் சார்ந்த உணவுகளான சீஸ், தயிர், வெண்ணெய், ஐஸ்க்ரீம், இனிப்பு பதார்த்தங்கள். 

* பழச்சாறு வகைகளான ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், மாம்பழ ஜூஸ்

* பிரெட், ஓட்ஸ், தானியங்கள், கோதுமை மற்றும் சோளம்.

* சோயாபீன்ஸ், பட்டாணி, வேர்க்கடலை.  

* இயற்கை இனிப்பூட்டிகள். 

* உப்பு பதார்த்தங்கள். 

* ஸ்நாக்ஸ் வகைகளான சிப்ஸ், பிஸ்கெட்ஸ். 

* ஊட்டச்சத்து பானங்கள். 

* மது.

* இனிப்பு மிட்டாய் வகைகள்.

உடல் எடை குறைப்பும்

பேலியோ டயட்டும் உடல் எடை குறைப்பும்!

* ஒவ்வொரு முறையும் அதிக அளவில் புரதமும் நல்ல கொழுப்பும் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். 

* கலோரி அளவைக் குறைப்பதற்காக உணவின் அளவைக் குறைத்துக்கொள்ளக் கூடாது. 

* ஒவ்வொரு வேளையும் குறைந்தபட்சம் ஒரு தாவரவகை உணவை உட்கொள்வது சிறந்தது. அதிக அளவில் ஃபிரெஷ்ஷான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

* பட்டினி கிடப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில், உணவின் அளவைக் குறைக்காமலேயே நம்மால் உடல் எடையைக் குறைக்க முடியும். 

* உடல் செயல்பாட்டை அதிகரிக்க உங்களுக்குப் பிடித்த பயிற்சியை (நடைப்பயிற்சி, ஏரோபிக்ஸ் பயிற்சி போன்ற ஏதேனும் ஒன்று) தேர்ந்தெடுத்து அதை தினசரி தவறாமல் செய்யவும்.

* அதிக அளவில் இறைச்சி மற்றும் காய்கறிகளைச் சாப்பிட்டவும்.

பேலியோ டயட்டின் மாதிரி மெனு

காலை உணவு -  முட்டை நான்கு 

மத்திய உணவு - சிக்கன் சூப், பன்றி இறைச்சி சூப் அல்லது மாட்டு இறைச்சி சூப் மற்றும் வறுத்த காய்கறிகள் அல்லது வறுத்த இறைச்சி.    

மாலை சிற்றுண்டி - சாலட்  சிறிய கப்.    

இரவு உணவு - ஸ்டஃப்டு குடமிளகாய் அல்லது சிக்கன் ஃபிங்கர்ஸ்.   

 

உடல் எடை குறைப்பு

ஸ்பெஷல் ரெசிபி

சிக்கன் ஃபிங்கர்ஸ்

தேவையானவை:

சிக்கன் - 5௦௦ கி, வெங்காயம் மற்றும் பூண்டு அரைத்த விழுது  - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் மற்றும் சீரகத்தூள்  -1/2 டீஸ்பூன், குடமிளகாய் - 3, பாதாம் பருப்பு மாவு -  7 பாதாம் பருப்புகளை அரைத்தது, துருவிய தேங்காய் - 3/4 கப், தக்காளி, அவகேடோ, பொரித்த புரோக்கோலி - அலங்கரிக்கத் தேவையான அளவு, தேன் மற்றும் கடுகு விழுது - 1 டீஸ்பூன், எலுமிச்சை -  3, முட்டை - 1, மிளகுத் தூள் – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் -  பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பூண்டு விழுது, சீரகத் தூள், காய்ந்த மிளகாய் தூள், உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்தக் கலவையில் சிக்கனை கீற்றுகளாக நறுக்கியதையும் குடமிளகாய் கீற்றுகளாக நறுக்கியதையும் சேர்த்து, நன்றாகப் பிரட்டி சில நிமிடம் ஊற வைக்கவும். மற்றோரு பாத்திரத்தில் முட்டையை நன்றாக நுரைத்து வரும்படி அடித்து வைத்துக்கொள்ளவும். 
மற்றொரு பாத்திரத்தில் துருவிய தேங்காய், பாதாம் பருப்பு மாவு இரண்டையும் கலந்து வைத்துக்கொள்ளவும்.  ஊறவைத்த சிக்கன், குடமிளகாய் துண்டுகளை முட்டையில் தோய்த்து எடுத்து பின் பாதாம் பருப்பு மாவு மற்றும் தேங்காய்த் துருவல் இருக்கும் கலவையிலும் தோய்த்து சூடான எண்ணையில் பொரித்து எடுத்துக்கொள்ளவும். இதை தக்காளி அவகேடோ மற்றும் வறுத்த புரோக்கோலி ஆகியவற்றால் அலங்கரிக்கவும். தேன் மற்றும் கடுகு விழுதை நன்கு கலந்து, சாஸ் போலச் செய்து சிக்கனோடு சேர்த்து சுவைத்து மகிழவும்.

http://www.vikatan.com/news/health/85318-paleo-diet-helps-reduce-weight-what-can-be-included.html

  • தொடங்கியவர்

கஞ்சி... ஆகாரம் மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் ஆதாரம்! #HealthTips

‘வயசான காலத்துல ஒரு வாய் கஞ்சி ஊத்த வக்கில்லை’, `ஒரு வாய் கஞ்சிக்கு வழி இருக்கா சொல்லு’... என விரிகிற சொற்றொடர்கள் எல்லாமே ஆழ்ந்த பொருள்கொண்டவை. அதுதான் மனித வாழ்வின் ஆதாரம் என்பதை அப்பட்டமாக உணர்த்துபவை. மனிதன் உயிர்வாழ ஐந்து நட்சத்திர விடுதி சாப்பாடோ, விருந்தோ தேவையில்லை; உணவாக ஒரு கலையம் கஞ்சி போதும். கஞ்சி, உயிர் காக்கும் ஆகாரம் மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் ஆதாரம் என்பதே மருத்துவம் உணர்த்தும் உண்மை! 

கஞ்சி

‘இன்றைக்கு சர்க்கரைநோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் ஓட்ஸ் கஞ்சி ஆகட்டும்... அரிசி, நொய், பார்லி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, கொள்ளு, உளுந்து ஆகியவற்றில் தயாரிக்கப்படுவதாகட்டும்... அனைத்துமே ஒவ்வொருவிதத்தில் நமக்கு நன்மை தரக்கூடியது’ என்கிறார்கள் மருத்துவர்கள். எளிமையான செய்முறை; தண்ணீரில் அல்லது பாலில்கூட இதைத் தயாரிக்கலாம்; எளிதாக செரிமானம் ஆகக்கூடியது. தனியாகத் தயாரிக்கப்படுவது தவிர, சாதம் வடித்ததேகூட ஆரோக்கியமானது; நம் உடலுக்கு பலம் தருவது. 

பழைய ‘விக்கிரமாதித்தன் கதை’யில் ஒரு சம்பவம் விவரிக்கப்பட்டிருக்கும். நாள்கணக்கில் பட்டினி கிடந்த ஒருவனுக்குச் சாப்பாடு கொடுக்க வேண்டும். அவனால் வாயைத் திறந்து சாப்பிடக்கூட முடியாது. உடல் அவ்வளவு பலவீனம் அடைந்திருக்கும். சோற்றை வடித்த கஞ்சியில் கொஞ்சம் சாதத்தைப் போட்டு, நெய் ஊற்றி அதை ஒரு துணியில் முடிவார்கள். அந்தத் துணியால் அவன் உடல் முழுக்க ஒத்தடம் கொடுப்பார்கள். அப்படி ஒத்தடம் கொடுக்கக் கொடுக்க அவனுக்கு பலம் வந்துவிடும். சிறிது நேரத்தில் எழுந்து உட்கார்ந்துவிடுவான். இது வெறும் கதை அல்ல... இதன் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் எழுதிய யதார்த்தம். 

கொள்ளில்...

நம் பாரம்பர்யத்தில் மட்டும் அல்ல, மேற்கத்திய நாடுகளிலும் விவசாயிகளின் முக்கிய உணவாக இது இருந்திருக்கிறது; இருக்கிறது. பண்டைய கிரேக்க நாட்டிலும் இதுதான் எளியோர்களின் முக்கிய உணவு. வறுத்த இறைச்சி என்பதெல்லாம், விருந்தில் பெருந்தனக்காரர்களுக்கும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பரிமாறப்படும் ஒன்று. ரொட்டி என்பதேகூட நகரங்களில் மட்டும் சாப்பிடப்படும் ஆடம்பர உணவாகத்தான் கருதப்பட்டிருக்கிறது. மாயா, ஆஸ்டெக் நாகரிகங்களில்கூட கஞ்சி பிரதான உணவாக இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 

இதை வெறுமனே அப்படியே குடிக்கலாம்; தொட்டுக்கொள்ள பச்சைமிளகாய், வெங்காயம், ஊறுகாய், கருவாட்டுத்துண்டு இருந்தால் அமர்க்களம். சீனாவிலும் பாரம்பர்ய உணவாக கஞ்சி பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவருகிறது. சீனர்களின் வரலாற்று ஆவணமான `புக் ஆஃப் சோவ்’ (The Book of Zhou), நூலில் `முதன்முதலில் சிறுதானியத்தில் கஞ்சி தயாரித்தது அரசர் ஹுவாங் டி (Huang Di)' என்கிற குறிப்பு இருக்கிறது. பிரபல எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ், தன்னுடைய `ஆலிவர் ட்விஸ்ட்’ (Oliver Twist) நாவலில் வறுமையின் அடையாளமாகக் கஞ்சியை சித்தரித்திருப்பார். ஆனால், மென்மையான சத்துள்ள இந்த உணவு, மேல்தட்டு மக்களையும் வசியப்படுத்தியிருக்கிறது. 

தமிழ்நாட்டில் கஞ்சி... கேரளாவிலும் கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் கிட்டத்தட்ட இதே பெயரில் அழைக்கிறார்கள். மற்றபடி ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பெயர்... வங்காளத்தில் `ஜாவு’ (Jaou), ஒடிசாவில் பகல் பாத் (Pakhal Bhat). ஆசிய நாடுகளில் வெவ்வேறு பெயர்கள்... பர்மியர்களுக்கு `ஹ்சான் ப்யோக்’ (Hsan Pyok), போர்ச்சுகீசியர்களுக்கு `கேன்ஜா’ (Canja),  தாய்லாந்துகாரர்களுக்கு `காவோ டோம்’ (Khao Tom), ஜப்பானியர்களுக்கு `காயு’... நீள்கிற கஞ்சியின் பெயர்களுக்கு முடிவே இல்லை. இந்தோனேஷியா, கொரியா, பிலிப்பைன்ஸ், லாவோஸ், போர்ச்சுக்கல், இலங்கை, சிங்கப்பூர், துருக்கி... என கஞ்சி இல்லாத தேசமே இல்லை. ஏனென்றால், இது மனிதனின் ஆதி உணவு... ஆதார உணவு. 

அரிசியில்...

இரண்டு நாள் சோறில்லாத ஒருவனுக்கு ஒரு குவளை கம்மங்கஞ்சி சோர்வு நீக்கி, சுறுசுறுப்பு தரும் அற்புத உணவு. இன்றைக்கும் தமிழ்நாட்டு கிராமங்களில் பருவம் வந்த பெண்களுக்கு உளுந்தங்கஞ்சியைக் கொடுக்கும் பழக்கம் உண்டு. இது பெண்ணின் மாதவிடாயைச் சீராக்கும்; இடுப்பு எலும்புகளுக்கு பலம் கொடுக்கும். காய்ச்சல் வந்த நோயாளிகளுக்கு `கஞ்சி மட்டும் கொடுங்க...’ எனப் பரிந்துரைக்கும் டாக்டர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். பாலூட்ட இயலாத தாய்மார்கள் குழந்தைகளுக்குக் கலக்கிக் கொடுக்கும் பல சத்து மாவுகள், கஞ்சியின் இன்னொரு வடிவம்தான். ஆனால், அதுவும்கூட குழந்தைகளுக்கு சத்தில்லாத வெறும் உணவு என்ற வகையில்தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்து இந்தக் கலவைகளில் கிடைப்பதில்லை. வறுமை பாதித்தப் பகுதிகளில் அரசும் அதிகாரிகளும் கடைசி கடைசியாக இறங்கி வந்து செய்கிற வேலை... கஞ்சித்தொட்டி திறப்பது! இது பல இடங்களில் மக்களின் வயிற்றை நிறைத்துவிடுகிறது; பல விஷயங்களை மறந்துபோகவோ ஒத்திப்போடவோ வைத்துவிடுகிறது என்பது யதார்த்தமே! பத்மினி

கஞ்சியின் தரும் ஆரோக்கியப் பலன்களைப் பட்டியலிடுகிறார் டயட்டீஷியன் பத்மினி... ``கஞ்சி ஆரோக்கிய உணவு. நோயாளிகளுக்கு மருந்தும்கூட. பொதுவாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அரிசி அல்லது நொய்க் கஞ்சி வைத்துக்கொடுப்பது நம் வழக்கம். அரிசிக் கஞ்சியில் உள்ள கலோரிகள் உடலுக்கு அபாரமான சக்தியை வழங்கக்கூடியவை. காலையில் எழுந்து கஞ்சி குடித்தாலே அன்றைக்கு முழுமைக்குமான சக்தி நம் உடலுக்குக் கிடைத்துவிடும். 

இதில் உள்ள நார்ச்சத்து மலமிளக்கியாகச் செயல்படும்; மலச்சிக்கலைத் தவிர்க்கும். இதில் இருக்கும் மாவுச்சத்து நம் வயிற்றுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டி, செரிமானத்தைச் சீராக்கும். கோடை காலத்தில் உடல் அதிகம் வியர்க்கும்; நா வறட்சி ஏற்படும். அரிசிக் கஞ்சித் தண்ணி அருந்துவது இதற்கு மாற்றாக அமையும். உடல் இழக்கும் சத்துகளை மீட்க உதவும். ஏதாவது ஒரு நோய்த்தொற்று காரணமாக ஜுரம், வாந்தி வரும்போது, அவற்றின் காரணமாக ஏற்படும் நீர் இழப்பைத் தடுக்கும். அதனால்தான் ஜுரம் வந்தவர்களுக்கு இதைக் கொடுக்கச் சொல்கிறார்கள். ஜுரத்தில் இருந்து விரைவாக மீள்வதற்கும் இது உதவும். 

வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு சிறந்த ஆகாரம் கஞ்சித் தண்ணீர்தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் இது பயனளிக்கும். வயிற்றுப்போக்கு வந்த குழந்தைகளை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால், அவர்கள் மிக மோசமான நிலைக்கு ஆளாகிவிடுவார்கள். கஞ்சித் தண்ணீர், குழந்தைகளின் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும், அதில் இருந்து மீண்டு வருவதற்கும் உதவும். அரிசிக் கஞ்சி மட்டுமல்ல... சாதம் வடித்த கஞ்சிகூட பல பயன்களைத் தரக்கூடியது. சருமம், கூந்தல் அழகு தொடர்பான விஷயங்களுக்கும் இது உதவும்.  உடலுக்கு ஊட்டம் கொடுக்கும். கிராமங்களில் இதைக் குடித்துவிட்டு வயல் வேலைக்குப் போகிறவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். இது, உடல் வெப்பத்தை சீரான அளவில் பராமரிக்கும். அதனால்தான் கோடை காலத்தில் கஞ்சி குடிக்கச் சொல்லிப் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். இது, அல்சீமர் போன்ற மறதி நோய் வராமல் தடுக்கும். அரிசி மட்டுமல்ல, பார்லி, கம்பு, கேழ்வரகு, சோளம், ஓட்ஸ்... என எதிலும் கஞ்சி தயாரித்துக் குடிக்கலாம். கஞ்சி, பக்கவிளைவுகள் ஏற்படுத்தாதது; உடலுக்கு ஆரோக்கியம் தருவது!’’

பிறகென்ன... ஒவ்வொரு நாளும் காலையில் ஒருவாய் கஞ்சியைக் குடித்துவிட்டு வேலையை ஆரம்பிக்கலாம்தானே! 

http://www.vikatan.com/news/health/85425-health-benefits-of-gruel.html

  • தொடங்கியவர்

மலச்சிக்கல் முதல் புற்றுநோய் வரை மருந்தாகும் பேரீச்சம்பழம்!


`நாள் ஒன்றுக்கு மூன்று பேரீச்சம்பழங்களாவது சாப்பிட வேண்டும்’ என்று சிலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம். காரணம், அந்த மூன்று பேரீச்சையே நமக்கு அதிக ஆற்றலைத் தரக்கூடியது. பேரீச்சம்பழம் ரத்தசோகையைப் போக்குவதற்கும், முடி உதிர்வைத் தடுப்பதற்கும் உதவக்கூடியது. அதோடு, ஏராளமான பலன்களையும் அளிக்கக்கூடியது. ரம்ஜான் நோம்பின்போது, நாள் முழுவதும் சாப்பிடாமல் மாலை வேளையில் இரண்டு பேரீச்சம்பழத்தை முதலில் சாப்பிட்டுவிட்டு, பிறகு விரதத்தை முடிப்பார்கள். ஏன் தெரியுமா? வெறும் வயிற்றில் அதிகச் சத்துள்ள இதைச் சாப்பிடுவதால், நம் உடல் எந்தவிதத் தடையுமின்றி அனைத்துச் சத்துக்களையும் முழுவதுமாக கிரகித்துக்கொள்ளும். அத்துடன் அதிக அளவு உணவை சாப்பிட வேண்டும் என்கிற நிலையை ஏற்படுத்தாமல், ஒரு நிறைவுத்தன்மையைத் தந்துவிடும்.

இதில், கால்சியம், சல்ஃபர், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு உறுதி அளிக்கக்கூடிய  ரிபோஃப்ளாவின், நியாசின், ஃபோலேட், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே போன்ற அனைத்துச் சத்துக்களும்கொண்ட ஒரே பழம் பேரீச்சம்பழம்தான். சரி... இனி நாம் பேரீச்சம்பழம் உடலுக்கு என்னென்னப் பலன்களைத் தருகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

பேரீச்சம்பழம்


* `பேரீச்சம்பழத்தைச் சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படும்’ என்கிற பொதுவான கருத்து ஒன்று உண்டு. அது உண்மை அல்ல. மலமிளக்கி உணவுகளில் ஒன்றாக இதனைச் சேர்த்துள்ளனர் நம் முன்னோர். மலச்சிக்கலைப் போக்க, முதல் நாள் இரவு மூன்று பேரீச்சம்பழங்களை தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும். காலையில் இந்தப் பேரீச்சம்பழச் சாற்றைப் பருகலாம். கரையக்கூடிய நார்ச்சத்து இதில் நிறைந்துள்ளதால், குடல் இயக்கங்கள் ஆரோக்கியமாக இருக்கும்; மலச்சிக்கலும் நீங்கும்.


* செலினியம், மாங்கனீஸ், தாமிரம், மற்றும் மக்னீசியம் போன்றவை பேரீச்சம்பழத்தில் நிறைந்துள்ளதால், எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும்  துணைபுரியும். அத்துடன் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட எலும்பு தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கும். குறிப்பாக, எலும்பு தேய்மானத்தால் பெரிதும் அவதிப்படும் வயதானவர்கள் இதைச் சாப்பிடுவது நல்லது.


* பேரீச்சம்பழத்தில் இருக்கும் நிகோட்டின் அளவு குடலில் இருக்கும் நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, குடல் கோளாறுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். இதில் அமினோ அமிலம், கரையாத மற்றும் கரையக்கூடிய நார்சத்து நிறைந்துள்ளதால் செரிமானக் கோளாறுகளைச் சீராக்குகும்.


* இது, இரும்புச்சத்து குறைபாட்டைச் சரிசெய்ய சிறந்த சாய்ஸ். தாதுக்களின் அளவு அதிகமாக இதில் உள்ளடங்கியிருப்பதால், நம் உடல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் துணைபுரியும். சோர்வு மற்றும் மந்தத்தன்மையைச் சரி செய்யும்; உடல் ஆற்றல் மற்றும் வலிமையை அதிகரிக்கச் செய்யும்.

பேரீச்சம்பழம்!


* பெரும்பாலான உணவுகளில் இல்லாத மகத்துவம் பேரீச்சம்பழத்தில் இருக்கிறது. கரிம சல்ஃபர். இது, உடலில் ஏற்படும் அல்ர்ஜிகள் மற்றும் பருவகால ஒவ்வாமைகளுக்குச் சிறந்த தீர்வு தரக்கூடியது.


* ஒரு கிலோ பேரீச்சம்பழத்தில் 3,000 கலோரிகள் நிறைந்துள்ளன. அதுமட்டுமல்ல, ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களையும் பேரீச்சம்பழமே தந்துவிடும். எடை அதிகரிக்க விரும்புபவர்கள் தினமும் 6 பேரீச்சம்பழம் வரை சாப்பிடலாம். உடல் எடையைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் பேரீச்சம்பழத்துடன் வெள்ளரிக்காயையும் சேர்த்துச் சாப்பிடலாம். 


*  குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கைச் சர்க்கரைகள் இதில் அதிகமாக உள்ளதால் ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் இதைச் சாப்பிடலாம். அதனால் உடலுக்குத் தேவையான ஆற்றல் உடனடியாக கிடைக்கும்.


* இதிலுள்ள வைட்டமின் மற்றும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் செயல்பாட்டையும் அதிகரிக்கச் செய்வதால், மூளை சுறுசுறுப்பாக இயங்கும். ஞாபக மறதியால் அவதிப்படுபவர்களுக்குச் சிறந்த நிவாரணம் தரும்.


* இரவில் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை காலையில் சாப்பிடுவதால், பலவீனமான இதயத்துக்கு நல்ல பலம் கிடைக்கும்.  இதிலிருக்கும் பொட்டாசியம், இதயம் தொடர்பான பிரச்னைகளின் வீரியத்தைக் குறைக்கும். கெட்ட கொழுப்பினாலும் இதயம் பாதிப்படைய வாய்ப்புள்ளது. கெட்ட கொழுப்பைக் குறைக்க ஆரோக்கியமான  மற்றும் சுவையான ஒரே வழி பேரீச்சம்பழம்தான்.


* பேரீச்சம்பழம் காது, மூக்கு, தொண்டை பிரச்னைகளைக் குணப்படுத்த பெரிதும் உதவும். தொடர்ந்து இதைச் சாப்பிட்டு வந்தால், மாலைக்கண் நோயையும்  குணப்படுத்த முடியும்.


* `பேரீச்சம்பழம் வயிற்று புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடியது’ என்பது சில ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.
இத்தனை நன்மைகளை அள்ளித்தரக்கூடிய பேரீச்சம்பழத்தை தரமானதாகப் பார்த்து வாங்கி, சாப்பிட வேண்டும். உண்பதற்கு முன்னர் நன்கு கழுவி, சுத்தம் செய்ய வேண்டும். மொத்தத்தில் இது நம் ஆரோக்கியத்துக்கு உதவும் அதிசயம்! 

http://www.vikatan.com/news/health/85456-amazing-benefits-of-dates.html

  • தொடங்கியவர்

அல்சர் ஆபத்திலிருந்து தப்பிக்க... சாப்பிட வேண்டியவை... தவிர்க்க வேண்டியவை..!

ணவுப் பழக்கத்தையும், வாழ்வியல் முறையையும் அலட்சியப்படுத்துவதால் ஏற்படும் பிரச்னை அல்சர். `நேரத்துக்குச் சாப்பிடணுமா... போங்க அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்கு?’ இதுதான் அல்சர் வருவதற்கான முதல் கட்டம். வேலைக்குச் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் பலர், காலை உணவைச் சாப்பிடத் தவறுவதால், பலரும் வயிற்றுப் புண் பிரச்னையால் அவதிப்படுகின்றனர். 

அல்சர் என்றால்... 

அல்சர் என்றால் வயிற்றில் உருவாகும் புண்கள். உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் முன்பகுதியிலிருக்கும் உட்சுவரில் உருவாகும் புண்களைக் குடல் புண் அல்லது வயிற்றுப்புண் என்கிறோம். 
* இரைப்பையில் ஏற்படுகின்ற புண்களை கேஸ்ட்ரிக் அல்சர் எனச் சொல்லலாம். 
* உணவுப்பாதையில் ஏற்படுகின்ற புண்களை ஈசோபேகல் அல்சர் என வகைப்படுத்தப்படுகிறது. 
* சிறுகுடலின் முன்பகுதியில் உள்ள புண்களை டியோடனல் அல்சர் எனச் சொல்லலாம். 

 

அல்சர்


காரணங்கள் என்னென்ன? 

பாக்டீரியா தொற்று (Helicobacter pylori) 
மன உளைச்சல் 
அதீத கவலை 
தவறான உணவுப் பழக்கம் 
சில வகை மருந்துகளை உட்கொள்வது 
அதிகமாகக் காபி குடிப்பது 
மசாலா, கார உணவுகளை அதிகமாக சாப்பிடுவது  போன்ற பல்வேறு காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது.


தவிர்க்க வேண்டிய உணவுகள்: 

* காபியில் உள்ள கெஃபைன், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிப்பதால், வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் காபியைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். கடுமையான வயிற்று வலி ஏற்படுவதோடு, நோயின் தீவிரத்தையும் அதிகமாக்கிவிடும். கெஃபைன் அதிகமாக இருக்கும் டீ, சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். 

காபி


* காரமான உணவுகள், மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதால், எதுக்களித்தல் பிரச்னை அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது, கடுமையான வயிற்றுவலி ஏற்படும். அதனால், மிளகாய், மிளகு, மிளகாய்ப் பொடி ஆகியவற்றை உங்கள் மெனுவில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. 


* பால் குடித்தால் வயிற்றுப் புண் குணமாகும், எரிச்சல் ஏற்படாது என்று சிலர் கூறுவார்கள். இது தவறாகும். பால் வயிற்றிலுள்ள அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. அது மட்டுமல்லாமல் பாலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் புரதம், நோய் குணமடைவதைத் தாமதப்படுத்துகிறது. 


* சோடா மற்றும் குளிர்பானங்களுக்கு முற்றிலுமாகத் தடைப்போடுங்கள். அதில் உள்ள சிட்ரிக் அமிலம் வயிற்றின் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. இதனுடன் செரிமானக் கோளாறுகளையும் உண்டாக்குகிறது. குறிப்பாக, மதுப்பழக்கம் உள்ளவர்கள், குடிப்பதை நிறுத்த வேண்டும். இந்தப் பழக்கம் நோயைத் தீவிரமாக்கும். அதுமட்டுமல்ல வயிறு மற்றும் சிறுகுடலில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, வீக்கம்கூட உண்டாகலாம். 


* ரெட் மீட்டை உணவில் சேர்த்துக்கொள்ளாதீர்கள். இதில் அதிக அளவில் புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளதால், உணவு செரிமானமாக நீண்ட நேரம் எடுக்கும். அதனுடன் நோயின் வீரியத்தையும் அதிகப்படுத்தும். 


சாப்பிட வேண்டிய உணவுகள்: 

* நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவதால் செரிமான மண்டலம் சீராகச் செயல்படும். உணவுகளும் எளிதாகச் செரிமானமாகும். நாள் ஒன்றுக்கு 2 கப் அளவுக்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் வராமல் பாதுகாக்கலாம். 

அல்சர்


* தயிரில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்கள், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுத்து, நோயைக் குணப்படுத்த உதவுகிறது. தயிரை வாரத்துக்கு மூன்று முறை சாப்பிட்டுவர, சிறந்த பலன்களைப் பெறலாம். 


* முட்டைக்கோஸில் உள்ள குளூட்டமைன் (Glutamine), வயிற்றுப்புண்களை எதிர்க்கும் தன்மையுடையவை. இதனால் வயிற்றுப்புண்கள் வராமல் தடுக்கலாம். 


* ஃபிரெஷ் திராட்சைப் பழங்களை ஜூஸாக செய்து, வாரத்துக்கு மூன்று முறை அருந்தலாம். 


* கல்யாண பூசணிக்காயின் சதைப்பகுதியை எடுத்து, அதனுடன் ஏலக்காய் ஒன்று, தேவையான பனங்கற்கண்டு சேர்த்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வர, நோய் குணமாகும் வாய்ப்புகள் அதிகம். 


* அவ்வப்போது புதினா ஜூஸ், புதினா துவையல், புதினா சாதம் என ஏதாவது ஒரு வகையில், புதினாவைச் சேர்த்துக்கொள்வது நல்லது. 


* வாரத்துக்கு மூன்று நாட்கள், ஒரு டம்ளர் அளவுக்கு வெறும் வயிற்றில் தேங்காய்ப்பால் குடித்து வரலாம். ஒரு பெரிய ஸ்லைஸ் தேங்காயை நன்றாக மென்று விழுங்குவது நல்லது. 


* மணத்தக்காளி கீரை சூப், மணத்தக்காளி கீரை, மணத்தக்காளி கூட்டு என ஏதாவது ஒருவகையில் கீரையைச் சேர்த்துக்கொள்வது நல்லது. 


* பாசிப் பருப்பு சேர்த்து கீரைக் கூட்டு செய்து, ஒரு கப் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வரலாம்.


* முள்ளங்கி, புடலைங்காய், பூசணிக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு, இளநீர் ஆகிய நீர்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. 

http://www.vikatan.com/news/health/85603-what-to-eat-and-not-to-eat-to-get-rid-of-ulcer.html

  • தொடங்கியவர்

உப்பு நல்லது.. எப்சம் உப்பு தரும் 8 மகத்தான பலன்கள்! #HealthTips

ப்சம் உப்பு (Epsom Salt), நாம் உணவில் பயன்படுத்தும் சாதாரண சோடியம் குளோரைடு அல்ல. இது மக்னீசியம், சல்பேட் போன்றவற்றின் கலவை. இதன் வேதியியல் அமைப்பின் காரணமாகவே `உப்பு’ எனப்படுகிறது.  மளிகைக்கடைகளில் கிடைக்காது; மருந்துக் கடைகளில்தான் கிடைக்கும்.  இங்கிலாந்தில் உள்ள எப்சம் என்ற ஊரில் கண்டறியப்பட்டதால், `எப்சம் உப்பு’ என்று அழைக்கப்படுகிறது. கணுக்கால் வலி முதல் மனஅழுத்தம் வரை பல பிரச்னைகளுக்குத் தீர்வு தருவது இந்த உப்பு. இதன் 8 மருத்துவப் பலன்கள் குறித்து யோகா மற்றும் இயற்கை மருத்துவர் குமரேசன் விவரிக்கிறார் இங்கே...

எப்சம் உப்பு

கணுக்கால் வலி
வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எப்சம் உப்பைக் கலந்து முழங்கால் வரை நீர் படும்படி முக்கி வைக்கவேண்டும். இதனால் கணுக்கால் வலி குறையும். தலைவலிக்கும் இது சிறந்த மருந்து. இதைத் தொடர்ந்து செய்தால்,  உடல் நரம்புகள் புத்துணர்வு அடைந்து நல்ல தூக்கம் கிடைக்கும். இயற்கை மருத்துவர் குமரேசன்

முகப்பரு
நமது முகத்தில் மிகச் சிறிய துளைகள் உள்ளன. இவற்றில் சேர்ந்திருக்கும் அழுக்கை அகற்ற, எப்சம் உப்பு பயன்படும். அரை டீஸ்பூன் எப்சம் உப்பை முகத்தை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் க்ரீமில் கலந்து முகத்தில் தேய்க்கவேண்டும். பிறகு இதைக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இது, முகப்பரு போக்க சிறந்த மருந்து. 

உப்புக் குவியல்

மனஅழுத்தம்
மூளையில் செரோடோனின் (Serotonin) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது நமது மனநிலையை சிறப்பாக வைத்திருக்க உதவும். இதைத் தேவையான அளவு உற்பத்தி செய்ய மக்னீசியம் தேவை. அதிகமான அட்ரினலின் (Adrenaline) சுரப்பு மற்றும் மனஅழுத்தத்தால் மக்னீசியம் உடலுக்கு கிடைக்காமல் போய்விடும். சிறிது எப்சம் உப்பை நீரில் கலந்து குளித்தால், இந்தப் பிரச்னையின் தீவிரம் குறையும். 

தேனீக் கடி
தேனீக் கடி, கொசுக் கடி போன்றவற்றால் ஏற்படும் வீக்கத்தை எப்சம் உப்பு குறைக்கும். இரண்டு டேபிள்ஸ்பூன் எப்சம் உப்பை ஒரு கப் குளிர்ந்த நீரில் கலக்கவேண்டும். இந்தக் கரைசலில் ஒரு பருத்தித்துணியை ஊறவைத்து அதைத் தேனீக் கடியால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிதுநேரம் வைத்து ஒத்தடம் கொடுத்தால், வீக்கம் குறையும்.  

உப்புப் பாத்திரம்

வறண்ட உதடுகள்
ஒரு டீஸ்பூன் எப்சம் உப்பை  பெட்ரோலியம் ஜெல்லியில் கலந்துகொள்ள வேண்டும். இதை உதட்டில் தடவிவந்தால், உதடு மென்மையாக மாறும். வறண்ட உதடுகள் எப்சம் உப்பால் சரியாகும். 

முடிப் பாதுகாப்பு
சிறிது எப்சம் உப்பை ஹேர் கண்டிஷனரில் கலந்து தலைக்குத் தேய்க்கவேண்டும். இதை இருபது நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்துவந்தால், முடியில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறும். உச்சந்தலை தூய்மையாகும். முடி வளர்ச்சி அதிகமாகும். 

உப்பு

வேனல்கட்டி
எப்சம் உப்பு, வீக்கத்துக்கு எதிராகச் செயல்படும் தன்மைகொண்டது. எனவே, இது வேனல்கட்டியைப் போக்க உதவும். இரண்டு டேபிள்ஸ்பூன் எப்சம் உப்பை ஒரு கப் நீரில் கலந்து வேனல்கட்டி உள்ள இடங்களில் தெளித்தால், பாதிப்புகள் குறையும். 

கால் வெடிப்பு
அரை கப் எப்சம் உப்பை இளஞ்சூடான ஒரு பக்கெட் நீரில் கலந்துகொள்ள வேண்டும். இதில் பத்து நிமிடங்கள் காலை முக்கி வைத்திருந்தால், கால் அரிப்பு, கால் துர்நாற்றம், கால் வெடிப்பு போன்றவை நீங்கும். 

தினமும் குளிக்கப் பயன்படுத்தும் துண்டை இரவில்  சிறிது எப்சம் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் முக்கி வைத்தால், அடுத்தநாள் காலையில் மென்மையாக மாறி இருக்கும்; இதைச் செடி, கொடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம்; குளியலறை டைல்ஸ்களைச் சுத்தமாக்கும்... இப்படி வேறு பல பயன்களையும் கொண்டிருக்கிறது எப்சம் உப்பு. மருந்துக் கடைகளில் கிடைக்கும் இந்த உப்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என அறிந்துகொண்டு, முறையாகப் பயன்படுத்துவது நல்லது; ஆரோக்கியமானது. 

http://www.vikatan.com/news/health/85754-health-benefits-of-epsom-salt.html

  • தொடங்கியவர்

அதிகாலை விழித்தெழுதல் நல்லனவெல்லாம் தரும்... துயிலெழ உதவும் 10 வழிகள்!

'திகாலை எழும் பறவை இரையோடுதான் திரும்பும்' என்பது வழக்குமொழி. `சீக்கிரம் தூங்கி, அதிகாலையில் விழித்தெழுவதுதான் ஒருவனை ஆரோக்கியமாகவும், திறமையானவனாகவும், புத்திகூர்மையுள்ளவனாகவும் வைத்திருக்கும்’ என்று சொல்லியிருக்கிறார் அமெரிக்க அறிஞர் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின். அதாவது, அதிகாலையில் எழுவதை வழக்கமாக்கிக்கொண்டால் நம் குறிக்கோளை எளிதாக அடைய முடியும் என்பதே உண்மை. வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்களில் பெரும்பாலானோர் இந்த வழக்கத்தைக்கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

அதிகாலை 

 

ஆனால், இன்றைய தலைமுறையிலோ, பலரும் நடு இரவுக்கு மேல் தூங்கச் செல்கிறார்கள்; காலையில் தாமதமாகத்தான் எழுகிறார்கள். இதனால் பல உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. அவசர அவசரமாகக் கிளம்பவேண்டியிருப்பதால், காலை உணவைத் தவிர்ப்பது தொடங்கி, கண்மூடித்தனமாக வாகனங்களை ஓட்டி விபத்துக்கு ஆளாவது வரை பல விபரீதங்கள்!

அதிகாலையில் எழுகிறவர்களோ பொறுமையாக, அவசரம் இல்லாமல் தாங்கள் செல்லவேண்டிய இடத்துக்குச் செல்லலாம். அவர்களுக்குக் கூடுதல் நேரம் இருப்பதால், பதற்றம் இல்லாமல் பணியைத் தொடங்கலாம். அதோடு அலுவல நெருக்கடி, மனச்சோர்வு, உடல் உபாதைகள், மனஅழுத்தம் போன்றவற்றிலிருந்து தப்பிக்கவும் முடியும். ஆனாலும், பலராலும் விடியற்காலையில் எழுந்திருப்பது என்பது முடியாத காரியமாகவே இருக்கிறது. அதற்கு உதவும் 10 வழிகள் இங்கே...

மதியத்தில் நீண்ட வாக்கிங்!

மதிய உணவு இடைவேளையில் ஒரு நீண்ட வாக்கிங் சென்று வரலாம். நண்பர்களுடன் பேசிக்கொண்டே நடப்பது நல்லது. இந்தப் பழக்கம், இரவில் ஆழ்ந்த தூக்கம் வருவதற்கு உதவும். 

நடைபயிற்சி 

மாலைப்பொழுதில் எக்சர்சைஸ்!

`காலை நேரத்தைவிட மாலை நேரங்களில் செய்யக்கூடிய உடற்பயிற்சிக்கு இரவில் தூக்கம் வரவழைக்கும் சக்தி அதிகம்’ என்கின்றன சில ஆராய்ச்சி முடிவுகள். எனவே, மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளலாம்.

டி.வி பார்க்கும் நேரத்தைக் குறைக்கலாம்!

இரவு நேரத்தில், தொலைக்காட்சித் திரையில் இருந்து வெளிப்படும் ஊதா நிற கதிர்கள், உடலில் `மெலட்டனின்’ ( Melatonin) என்ற தூக்கத்தை உண்டாக்கும் ஹார்மோன் சுரப்பைப் பாதிக்கும். எனவே, இரவு 8 மணிக்கு மேல் தொலைக்காட்சி பார்க்கும் வழக்கத்தைத் தவிர்க்கவும்.

தூக்கம் 

மணம் வீசும் விளக்கு உதவும்!

இரவில் தூங்கச் செல்லும்போது, அறையில் இரவு விளக்காக நறுமணம் வீசும் எண்ணெய் விளக்குகளை (Aroma Lamps) ஏற்றிவைக்கலாம். இவற்றிலிருந்து வெளிப்படும் வாசம், மனதை ரிலாக்ஸாக்கி, அழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும்; உடற்சோர்வை நீங்கவும் உதவும். 

இரவு உணவைக் குறைக்கவும்!

இரவில் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவு அல்லது குறைந்த அளவான உணவைச் சாப்பிடலாம். இதனால், அதிகாலையிலேயே பசியுணர்வு ஏற்பட்டுவிடும். அது, நம்மை எழுப்பிவிட்டுவிடும்.

அதிகாலை 

தூக்கத்தை வரவேற்கவும்!

தூக்கம் வரும் உணர்வு ஏற்பட்டால் மட்டும் உறங்கச் செல்வது என்பதை வழக்கமாக ஆக்கிக்கொள்ளுங்கள். இது படுக்கையில் படுத்தும் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதையும், தூங்குவதற்காக அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதையும் தவிர்க்கும்.

அறைக்குள் வரட்டும் ஆகாசக் காற்று!

இரவில் தூங்கும் அறையின் ஜன்னல்களை முடிந்தவரை திறந்து வைத்துத் தூங்குவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். ஏனென்றால், உறக்கத்தின்போது அதிக அளவில் கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுவோம். அது மூடிய அறைக்குள் சுற்றிச் சுற்றி வந்தால், மூச்சுவிட சிரமம் ஏற்படும். அதன் காரணமாகவும், தூக்கம் கலையலாம். இடையூறு இல்லாத தூக்கம்தான் காலையில் சீக்கிரத்தில் எழுந்திரிக்க அலாரம்நமக்கு உதவும்.

தட்டியெழுப்ப ரசனைக்குரிய பாடல்!

`அலாரம்வெச்சாலும் என்னால எந்திரிக்க முடியலை’ என்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள், அலார சத்தத்தை எழுப்பும் கடிகாரத்தையோ, செல்போனையோ உறங்கும் இடத்துக்கு அருகில் வைக்கக் கூடாது. சற்று தொலைவில், கேட்கும் தூரத்தில் வைக்க வேண்டும். அதாவது, அறைக்கு வெளிப்புறத்தில் அல்லது பக்கத்து அறையில் வைத்துவிடலாம். இதனால் ஒலி எழும்போது அதை ஆஃப் செய்வதற்காக எழுந்து செல்வோம்; தூக்கம் கலைந்து சுறுசுறுப்பு ஏற்படும். அலாரத்துக்காக வைக்கும் பாடல் நமக்கு பிடித்தமான பாடலாக இருப்பது நல்லது. அந்தப் பாடல் சத்தம் தொலைவில் இருந்தாலும், நம் மூளையை எளிதில் தூண்டி உறக்கத்தைப் போக்கிவிடும். 

சூரிய ஒளி உசுப்பிவிடும்!

மொட்டைமாடியில் தூங்குவது அல்லது படுக்கை அறை, சூரிய ஒளி ஊடுருவும் வகையில் அமைக்கப்பட்டிருந்தால் இன்னும் நல்லது. சூரிய ஒளியே நம்மை உசுப்பி எழுப்பிவிடும்; புத்துணர்வுடன் எழுந்துகொள்ள உதவும். 

இலக்கு

குறிக்கோள் முக்கியம்!

பொதுவாக எந்த நிர்பந்தமும், பெரிய அளவிலான தீர்மானமும் இல்லாதவர்கள் அதிகாலையில் எழுந்துகொள்வதில்லை. எனவே, திடமான குறிக்கோள்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். குறைந்த பட்சம், `காலையில் சீக்கிரம் எழுந்திரிக்க வேண்டும்’ என்ற தீர்மானத்தையாவது உறுதியாக எடுத்துக்கொண்டால், மூளையே அலாரம் அடித்து நம்மை எழுப்பிவிட்டுவிடும். உண்மையில், மூளையைவிடச் சிறந்த அலாரம் ஏதுமில்லை!

http://www.vikatan.com/news/health/85663-10-ways-to-wake-up-early-in-the-morning.html

  • தொடங்கியவர்

நம்புங்கள்... இதயம் காக்கும், புற்றுநோய் தடுக்கும், ஆயுளைக் கூட்டும்... சாக்லேட்!

 
 

சாக்லேட் ... நினைத்தாலே நாவிலும் மனத்திலும் ஊறும் சுவை. எல்லோருக்கும் இஷ்டமான ஒன்று. குறிப்பாக, குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஃபேவரைட். ஒரு குழந்தை அழுது, அடம்பிடித்து, ஆர்ப்பாட்டம் செய்கிறதா? பெரும்பாலும் அது சாக்லேட்டுக்காகத்தான் இருக்கும். இவ்வளவு ஏன்... பிறந்த நாள், திருமண நாள், முக்கிய வெற்றித் தருணங்கள் என  எல்லா கொண்டாட்டங்களிலும் இதற்கெனத் தனித்துவமான, தவிர்க்க முடியாத இடம் உருவாகிவிட்டது.   

சாக்லேட் 

குழந்தை, சிறுவர்கள் மட்டுமல்ல... காதலன் - காதலி, பெற்றோர்கள் - குழந்தைகள்... என அன்பைப் பறிமாறிக்கொள்ளும் அடையாளமாக சாக்லேட் இருக்கிறது என்றால், அது மிகையில்லை.  இப்படி, இதன் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். 

அதேநேரத்தில், `சாக்லேட் உடலுக்கு நல்லதல்ல. குழந்தைகளின் பற்களைச் சொத்தையாக்கும்; உடல் எடையைக் கூட்டும்’ என்பது பலரின் கருத்து. இதனாலேயே இதன் மீது ஈர்ப்பு இருந்தாலும், அதைக் கடந்து செல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் பலருக்கும் ஏற்படுகிறது. ஆனால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல ஆய்வுகள் இந்தக் கருத்தை மறுக்கின்றன. கூடவே, சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களைப் பட்டியல் இடுகின்றன. ‘என்னது..! சாக்லேட் சாப்பிடுறது ஆரோக்கியமானதா?’ என்று ஆச்சர்யப்படுகிறீர்களா? நிச்சயமாக. இது நல்லது எனப் பல்வேறு ஆய்வுகள் சொல்கின்றன. குறிப்பாக, டார்க்  சாக்லேட் நமக்கு அள்ளித் தரும் பலன்கள் ஏராளம். ஆனால், இதில் சாப்பிடும் அளவும் முக்கியம். அதாவது, ஒரு நாளைக்கு ஒரு துண்டு தான் சாப்பிடவேண்டும். அதைச் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

சாக்லெட் 

சருமத்தைப் பாதுகாக்கும்!

இதைச் சாப்பிடுவதால், முகப்பருக்கள் போன்ற சரும பாதிப்புகள் ஏற்படும் எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் டார்க் சாக்லேட், சருமத்துக்கு நன்மை தரக்கூடியது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்  சருமப் பாதிப்புகளுக்கு எதிராகப் போராடும் தன்மைகொண்டது. சூரிய ஒளியிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும். 
பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்!

கனடாவில்  மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் டார்க் சாக்லேட் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதாகத் தெரியவந்துள்ளது. 

இதய பாதிப்புகளைக் குறைக்கும்!

இது, இதயத்துக்கு ஏராளமான பலன்களைத் தரக்கூடியது. ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். இதனால்,  ரத்த நாளங்களில் ரத்தம் உறைதல் தடுக்கப்பட்டு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும். தினமும் 5 கிராம் (சின்ன துண்டு)  என்ற அளவில் டார்க் சாக்லேட் சாப்பிட்டால் அது, ரத்தம் தொடர்பான பிரச்னைகளைத் தடுக்கும்.

சாக்லெட் 

மூளைக்கு வலிமை தரும்!

டார்க் சாக்லேட்டில் ‘எபிகேட்டச்சின்’  (Epicatechin) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் இருக்கிறது. இது மூளை செல்களைப் பாதுகாக்கக்கூடியது. பக்கவாதத்தால் ஏற்படும் மூளை பாதிப்புகளில் இருந்தும் காக்கும் தன்மைகொண்டது. இதில் உள்ள தாவர ஊட்டச்சத்தான பிளாவனோல்ஸ் (Flavanols) வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதியைப் போக்கும். அதோடு விபத்து நிகழும்போது,  மூளையில் ஏற்படும் காயங்கள் குணமாவதற்கு இதில் உள்ள ஆன்டிஇன்ஃப்ளாமேட்டரி பொருட்கள் உதவும்.

உடல் எடையைக் குறைக்கலாம்!

உணவுக்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாக இதை சாப்பிடுவது சிறந்தது. இதனால், நம் உடலில் இருக்கும்  ஹார்மோன்கள் மூலம் `வயிறு நிரம்பிவிட்டது' என்ற செய்தி மூளைக்கு அனுப்பப்படும். இதன் காரணமாக, குறைந்த அளவு உணவையே சாப்பிடுவோம்.  உடல் எடையைக் குறைக்க டயட் மேற்கொள்ளுபவர்களுக்கு இது சிறந்தது.

கொழுப்பைக் குறைக்கும்!

இது, உடலில் உள்ள  கெட்ட கொழுப்பான எல்டிஎல்-ஐ (Low-density lipoprotein (LDL) குறைக்க உதவுகிறது. அதோடு உடலில் `நல்ல' கொழுப்பான ஹெச்.டி.எல் (High-density lipoproteins (HDL))அதிகரிக்கவும் உதவுகிறது.

தாதுச் சத்துகள் ஏராளம்!

இதில் உடலுக்குத் தேவையான துத்தநாகம், பொட்டாசியம், செலினியம் போன்ற அத்தியாவசியமான தாதுச் சத்துக்கள் நிரம்பியுள்ளன. குறிப்பாக இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது, நம் உடலில் ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவுகிறது. இதன் காரணமாக, ரத்த சிவப்பு அணுக்கள் நம் நுரையீரலுக்குத் தடையின்றி ஆக்சிஜனை எடுத்துச் செல்ல முடிகிறது.  

மனஅழுத்தம் போக்கும்!

சாக்லேட் சாப்பிடுவதால் மனநிலையை மேம்படுத்த முடியும். இதில் மனஅழுத்தத்தைக் குறைக்கும் செரடோனின் (Serotonin) அதிக அளவு உள்ளது. எனவே, மனஅழுத்தத்தைக்  குறைக்க தினமும் குறைந்த அளவில் டார்க் சாக்லெட் சாப்பிடலாம்.

சாக்லெட் 

புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்தும்!

இதில் சேர்க்கப்படும் கோகோவில் உள்ள  ஆன்டிஆக்ஸிடன்ட், புற்றுநோயை எதிர்த்துப் போராடக்கூடியது. இது, புற்றுநோய் செல்கள் பரவுவதைத் தவிர்க்கவும் உதவும்.

ஆயுளைக் கூட்டும்!

வாழ்க்கை முழுவதும் வாரம் ஒரு முறையாவது சாக்லேட் சாப்பிடுகிறவர்கள், இதை சாப்பிடாதவர்களைவிட சுமார் இரண்டு வருடங்கள் அதிகமாக வாழ்கின்றனர் என ஆய்வுகளில் சொல்லப்படுகின்றன.

கவனம்:

சாக்லேட்டில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், அளவோடு சாப்பிடுவதுதான் நல்லது. அதாவது ஒரு துண்டு. இதைச் சாப்பிட்டவுடன், தண்ணீரால் வாய் கொப்பளிப்பது நல்லது. இதன் மூலம் பற்சொத்தை ஏற்படுவதைத் தவிர்க்கலாம். 

http://www.vikatan.com/news/health/86090-health-benefits-of-dark-chocolate.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தலைவலி முதல் நெஞ்சுவலி வரை தீர்க்க மருந்தில்லா மருத்துவம்.!அக்குப்பிரஷர் பலன்கள்

 
 


சப்பான மருந்துகள்... வலி தரும் ஊசி... இவற்றைப் பார்த்தால் பலருக்கும் பயம்தான். அதுபோல கஷாயம், பத்தியச் சாப்பாடு இதையெல்லாம் முறையாகப் பின்பற்ற மெனக்கெடுவது வெகுசிலரே. `மருந்தும் வேண்டாம்; ஊசியும் வேண்டாம். ஆனால் நோய் தீரவேண்டும்’ என்பவருக்கான நற்செய்திதான் இந்த மருந்தில்லா மருத்துவம். வலி இல்லாத சிகிச்சை என்பது இனிப்பான தகவல். நமக்கு நாமே செய்துகொள்ளும் எளிய பயிற்சிதான் இந்த அக்குப்பிரஷர். 


இது, 5,000 ஆண்டுகாலப் பழைமையான சிகிச்சை முறைகளில் ஒன்று. உடல்நலக் கோளாறுகளைச் சரிசெய்வதற்கும் மனரீதியான டாக்டர் பாரதிபிரச்னைகளைக் குணப்படுத்துவதற்கும் பெரிதும் உதவுகிறது. `உடலில் ஏற்படும் சிறு சிறு பிரச்னைகளை நாமே சரி செய்துகொள்ளலாமா... அதை எப்படிச் செய்ய வேண்டும்?’ என்று பிரபல அக்குப்பிரஷர் நிபுணரான பாரதியிடம் கேட்டோம். 


குறிப்பிட்ட புள்ளிகளில், விரல்களால் மிதமாக அழுத்தம் கொடுக்க வேண்டும். இதுவே அக்குபிரஷர். இதனால் அந்தப் புள்ளிகள் தூண்டப்பட்டு, ரத்த ஓட்டம் அதிகரிக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல் உடலின் ஆற்றலைத் தூண்டி உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. சுயமாகச் செய்வதைவிட அக்குப்பிரஷர் நிபுணரிடம் செய்துகொள்வது மிகுந்த பலன்களை அளிக்கும். இருந்தாலும், நிபுணரின் வழிகாட்டுதலின்படி சில பிரச்னைகளுக்கு நாமே அக்குப்பிரஷர் செய்துகொள்வதால் உடனடி நிவாரணத்தைப் பெறலாம்.


முடி உதிர்வைத் தடுக்க...  

அக்குப்பிரஷர்


செய்முறை: பிடரியின் மத்தியப் பகுதியில், 15 முறை  மெதுவாக ஆழமாகச் சுவாசித்துக்கொண்டே அழுத்தம் கொடுக்க வேண்டும்.  தினமும் காலை, மாலை என இரண்டு முறை செய்யவேண்டும். தொடர்ந்து நான்கு வாரங்கள் இப்படி அழுத்தம் கொடுக்கலாம்.


பலன்கள்: முடி உதிரும் பிரச்னையைக் குறைக்கும். பின் தலைவலி, கழுத்து விறைப்பு (Stiffness), வலிப்பு, கவனமின்மை ஆகியவற்றால் அவதிப்படுபவர்கள் இதைச் செய்தால் நல்ல பலன்களைத் தரவல்லது.


மன உளைச்சல் நீங்க... 

மன உளைச்சல்


செய்முறை: உள்ளங்கையை விரித்து வைத்துக்கொள்ளுங்கள். படத்தை உள்ளபடி, கையின் மீது நான்கு விரல்களை வைக்கவேண்டும். ஐந்தாம் விரல் வைக்கும் இடத்தில் உள்ள புள்ளியில், 12 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த இடத்தில் இரண்டு நிமிடங்கள் வரை அழுத்தம் கொடுக்கலாம்.


பலன்கள்: 'பெரிகார்டியம்' எனப்படும்  இதய வெளியுறையுடன் இந்தப் புள்ளிகள் தொடர்புடையதால், எதிர்மறை உணர்வுகள் நீங்கி, மனம் தளர்வடையும். குமட்டல், வாந்தி, இரைப்பை மேற்பகுதியில் ஏற்படும் வலி ஆகியவை சரியாகும். 


உடல் சூட்டைத் தணிக்க... 

அக்குப்பிரஷர்


செய்முறை: படத்தில் இருப்பதுபோலக் கை மூட்டு அருகில்,  12 முறை ஆழ்ந்து சுவாசித்துக்கொண்டே மிதமாக அழுத்தம் கொடுக்க வேண்டும். காலை, மாலை என இரு வேளையும் அழுத்தம் தர வேண்டும். 


பலன்கள்: உடல் சூட்டைக் குறைக்கும். வெப்பத்தால் ஏற்படும் அரிப்பைத் தடுக்கும். தோல் சிவந்து போவதைச் சரிசெய்யும். இந்தப் புள்ளி பெருங்குடலுடன் தொடர்புடையதால், வயிற்றுப்போக்கையும் சரிசெய்யும்.


தொண்டை வலி குணமாக... 

தொண்டை வலி

செய்முறை: ஆழ்ந்து சுவாசித்துக்கொண்டே, தொண்டைக்குழியில் உள்ள புள்ளியில் (படம் பார்க்க),  மிதமாக 12 முறை ஆள்காட்டி விரலால் அழுத்தம் கொடுக்க வேண்டும். தினமும், இப்படி மூன்று முறை செய்தாலே போதுமானது.


பலன்கள்: தொண்டை வலி, தொண்டைப்புண்கள், இருமல், ஆஸ்துமா, விக்கல் ஆகியவை குணமாகும். 


ஆழ்ந்த தூக்கத்துக்கு...

தூக்கம்

செய்முறை: நடுவிரலின் நுனிப்பகுதியில், ஒரு நிமிடம் வரை ஆள்காட்டி விரலால் மிதமாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.


பலன்கள்: தூக்கமின்மைக்கு முக்கியக் காரணமே கவலைதான். இந்தப் புள்ளி பெரிகார்டியத்துடன் தொடர்புடையதால், இதயத்துக்குச் சீராக ரத்தம் செல்ல உதவுகிறது. அதனால், மனச்சோர்வு நீங்கி ஆழ்ந்த தூக்கம் வர உதவும். இதயம் தொடர்பான வலி, நெஞ்செரிச்சல், எரிச்சல் உணர்வு, நாக்கு வீக்கமடைதல் ஆகிய பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும்.


செரிமானப் பிரச்னைகள் சரியாக...

அக்குப்பிரஷர்

 


செய்முறை:  காலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விரல்களின் இடையில் உள்ள புள்ளியை (படம் பார்க்க),  20 முறை ஆழ்ந்து சுவாசித்துக்கொண்டே மிதமாக அழுத்தம் கொடுக்க வேண்டும். 


பலன்கள்: இந்தப் புள்ளி வயிற்றுப் பகுதியுடன் தொடர்புடையதால், வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, வயிற்றில் வீக்கம், வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் செரிமானக் கோளாறுகளைச் சரியாக்கும். 


கவனம்: சாப்பிடுவதற்கு முன்னரோ அல்லது  சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின்னரோதான் இந்த இடத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.


ஹார்மோன் குறைபாடுகளைச் சரி செய்ய... 

ஹார்மோன் குறைபாடு

 


செய்முறை:  கணுக்கால் பகுதியில், நான்கு விரல்களை வைக்க வேண்டும். ஐந்தாம் விரல் வைக்கும் இடைவேளிவிட்டு,படத்தில் உள்ளபடி அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறை என, ஒரு நிமிடத்துக்கு ஆழ்ந்து சுவாசித்துக்கொண்டே  இந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தாலே போதுமானது.


பலன்கள்: இந்தப் புள்ளி மண்ணீரலுடன் தொடர்புடையது. மாதவிடாய் வலி, பாலியல் தொடர்பான ஆர்வம் குறைதல்,  அதிக ரத்தப்போக்கு, தூக்கமின்மை, படபடப்பு, தலைசுற்றுதல், உயர் ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்னைகளுக்குத் தீர்வாகும்.


குறிப்பு: கருவுற்ற பெண்கள், கர்ப்பமாக திட்டமிடும் பெண்கள் ஆகியோர் இதைத் தவிர்க்கவும்.


தலைவலி சரியாக...

தலைவலி


செய்முறை:  பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலின் இடையில் உள்ள புள்ளி (படம் பார்க்க),  ஒரு நிமிம் வரை மிதமாக அழுத்தம் கொடுக்க வேண்டும். 


பலன்கள்: ஒற்றைத் தலைவலி, தலைச்சுற்றல், கண் வலி, சைனஸ், வயிற்று வலி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு ஆகியவற்றுக்குச் சிறந்த தீர்வாகும்.


குறிப்பு: கருவுற்ற பெண்கள், கர்ப்பமாக திட்டமிடுபவர்கள் இந்தப் புள்ளியில் அழுத்தம் கொடுக்கக் கூடாது. 


சுவாசக் கோளாறுகள் சீராக...

அக்குப்பிரஷர்


செய்முறை:  பெருவிரலின் நகப்பகுதியின் நுனியில் (படம் பார்க்க), ஆழ்ந்து சுவாசித்துக்கொண்டே 16 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். தினமும் ஒரு வேளை மட்டும் அழுத்தம் தந்தால் போதும்.


பலன்கள்: இந்தப் புள்ளி நுரையீரலுடன் தொடர்புடையது. மனஅழுத்தம், பதற்றம், கோபம் அதிகரிக்கும் நேரத்தில், இங்கே அழுத்தம் கொடுக்கவும். மயக்கம் வருவதுபோல இருந்தால், அருகில் இருப்பவரிடம் சொல்லி இந்த இடத்தில் மிதமாக அழுத்தம் கொடுத்தால் மயக்கம் தெளியும்.


நெஞ்சு வலியைக் குறைக்க... 

அக்குப்பிரஷர்


செய்முறை:  வலது உள்ளங்கையின் கீழே உள்ள புள்ளி (படம் பார்க்க), அந்த இடத்தில் 10 முறை மிதமாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.


பலன்கள்: இந்தப் புள்ளியை, `கடவுளின் வாசல்’ என சீன மருத்துவர்கள் கூறுவார்கள். இந்தப் புள்ளி இதயத்துடன் தொடர்புடையதால், இதயம் சம்பந்தமான அனைத்துப் பிரச்னைகளையும் மனஅழுத்தத்தையும் சரி செய்யும்.

http://www.vikatan.com/news/health/85802-most-popular-acupressure-points-and-their-benefits.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கற்றாழை, கோதுமைப்புல், திரிபலா..! பெருங்குடலை சுத்தம் செய்யும் இயற்கை உணவுகள் #ColonCleansers

 
 

சர்க்கரை நோயும் ரத்தஅழுத்தமும் கூட நோயல்ல. மலச்சிக்கல் பிரச்னை இருப்பதை நோய் என்பார்கள். கழிவுகளை வெளியேற்றினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். கழிவுகள் வெளியேறாமல் உடலுக்குள்ளேயே தங்கினால் அவை நோயை உருவாக்கும். சரியான உணவுமுறையைப் பின்பற்றாததும், வெந்தும் வேகாத உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதாலும், நார்ச்சத்துள்ள உணவுகளைப் புறக்கணிப்பதாலும் அஜீரணம், மலச்சிக்கல் போன்றவை ஏற்படுகின்றன. இந்தப் பிரச்னைகளால் பெருங்குடலில் நச்சுகள் சேர்ந்துவிடுகிறது. இவை பெருங்குடல் புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்குத் தொடக்கமாக அமைகின்றன. எனவே பெருங்குடலில் சேரும் நச்சுகளை உடனடியாக வெளியேற்றுவது முக்கியமாகும். இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதன்மூலம் பெருங்குடலை சுத்தம் செய்துகொள்ள முடியும். அதற்கு என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும் எனப் பார்ப்போம்.. 

உணவு 


ஆளிவிதை 
ஆளிவிதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன. இவை பெருங்குடலின் உட்புறச் சுவர்களில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வாக அமைகின்றன. பெருங்குடலில் ஏற்படும் கட்டி, வீக்கங்களைக் குறைப்பதோடு செரிமானத்துக்கும் இவை உதவுகின்றன. 

கற்றாழை 

கற்றாழை 
கற்றாழைச் சாறு, பெருங்குடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவும். செரிமானத்தை எளிதாக்கும். இது, தோல் நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படும்.  

கோதுமைப்புல் சாறு 
உடலில் அதிக ஆக்ஸிஜன் சேர கோதுமைப்புல் உதவும். பெருங்குடலில் உள்ள நச்சுகளை மிக எளிதில் நீக்கும். அதனுடன், புற்றுநோய் செல்கள் உருவாவதையும் தடுக்கும். 

பழங்கள் 
திராட்சை, அன்னாசிப் பழம், பப்பாளி, கிவி, ஆப்பிள், அவகேடோ ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இவை பெருங்குடல் கழிவுகளை எளிதில் வெளியேற்றும். 

பச்சைநிற உணவுகள் 
கீரைகள், வெண்டைக்காய், அவரைக்காய், தண்ணீர் விட்டான் கொடி, முட்டைக்கோஸ், பட்டாணி போன்றவற்றில் குளோரோபில் (Chlorophyll ) அதிக அளவில் உள்ளது. இது பெருங்குடலில் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுப்பதோடு, ஏற்கெனவே உள்ள பாக்டீரியாக்களையும் வெளியேற்றுகிறது. 

பச்சை நிற உணவுகள்

தண்ணீர் 
தொடர்ச்சியான நீர்ச்சத்துக் குறைபாடு (Dehydration), மலச்சிக்கல், உடலில் நச்சு சேர்தல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். 2-3 லிட்டர் தண்ணீரை தினமும் குடித்துவர கழிவுகள் எளிதில் வெளியேறும். பெருங்குடல் சுத்தமாகும். இதனுடன், ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது கடல்உப்பை சேர்த்துக்கொள்வது நல்லது. 

முளைவிட்ட பயறுகள் 
இவற்றில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. எனவே இது பெருங்குடலை சுத்திகரிக்க மிகச்சிறந்த உணவு. 

பூண்டு 
பூண்டு, பாக்டீரியா மற்றும் குடற்புழுவுக்கு எதிரான தன்மை கொண்டுள்ளது. இது பெருங்குடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. செரிமானத்தை எளிதாக்குவதோடு செரிமானப் பாதையில் வீக்கம், கட்டி முதலியவை உருவாவதையும் இது தடுக்கிறது. 

தானியங்கள் 

முழு தானியங்கள் 
முழு தானியங்களில் செய்யப்பட்ட பிரெட் (Bread), சாலட் போன்றவற்றில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இவற்றில் கலோரி, கொழுப்பு போன்றவை குறைவு. இவை எளிதில் செரிமானமாக உதவுவதோடு , பெருங்குடலையும் சுத்தமாக்கும். 

கிரீன் டீ 
பெருங்குடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதோடு உடல் எடையையும் குறைக்க வேண்டுமென்றால் அதற்கு கிரீன் டீதான் சரியான வழி. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி பெருங்குடலை சுத்தம் செய்ய உதவுகின்றன. 

கிரீன் டீ 

எலுமிச்சை சாறு 
சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்த எலுமிச்சை, ஆன்டிசெப்டிக் ஆகச் செயல்பட்டுப் பெருங்குடலில் நுண்ணுயிரிகள் உருவாவதைத் தடுக்கிறது. தினமும் காலையில் சிறிதளவு நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடிக்கப் பெருங்குடல் சுத்தமாகும். 

மீன் 
ஆளிவிதையைப் போல மீனிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை பெருங்குடலை சுத்தப்படுத்துகின்றன. செரிமானத்துக்கும் நல்லது. 

இஞ்சி 

இஞ்சிச் சாறு 
பெருங்குடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, அதைச் சிறப்பாகச் செயல்பட வைக்க இஞ்சிச்சாறு உதவும். உடலில் தங்கியிருக்கும் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்ற உதவும் இஞ்சி, நச்சுப்பொருட்களையும் வெளியேற்றும். ஒரு டீஸ்பூன் இஞ்சிச்சாற்றை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை குடித்துவர பெருங்குடல் பிரச்னைகள் தீரும். இஞ்சியை டீ போட்டும் குடிக்கலாம். கர்ப்பிணிகள், தாய்ப்பாலூட்டுபவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. 

தயிர் 

தயிர் 
தயிரில் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் ஆகியவற்றைத் தடுக்கும். 

திரிபலா 
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் கலந்த கலவையே திரிபலா எனப்படுகிறது. இதில் வைட்டமின் சி, பயோஃபிளேவனாய்டு (Bioflavonoid) போன்ற சத்துகளும் போஸ்போலிபிட்ஸ் (Phospholipids) எனப்படும் நன்மை செய்யும் கொழுப்பும் உள்ளன. இவை பெருங்குடலை சுத்தம் செய்ய உதவுகின்றன. 

திரிபலா  பொடி 

இந்த உணவுப்பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் பெருங்குடல் சுத்தமாகும். பெருங்குடல் சுத்தமாவதால் மலச்சிக்கல் குறையும். எளிதில் செரிமானமாகும். கவனக்குறைவு ஏற்படாது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும். நல்ல தூக்கம் கிடைக்கும். பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். வைட்டமின்கள் உடலால் எளிதில் உறிஞ்சப்படும். ஒட்டுமொத்தத்தில் பெருங்குடல் சுத்தத்தின் மூலம் முழு உடலும் நன்றாக இயங்கும் என்பதால் இந்த உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வது நல்லது. 

http://www.vikatan.com/news/health/85961-amazing-foods-for-cleansing-your-colon-naturally.html

  • தொடங்கியவர்

பார்வைத் திறனை மேம்படுத்தும் திராதகா பயிற்சி..! #Trataka

 
 

`ண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல’ என்றார் வள்ளுவர். அதையே ’கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சுக் கலப்பில் காதல்தான் கருவாச்சு’ என்றார்கள் நம் திரைப் பாடலாசிரியர்கள். கண்கள்தான் உலகின் அத்தனை அழகையும் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றன. வாயால் சொல்லிவிடமுடியாத உணர்வுகளைக்கூடக் கண்கள் எளிதில் வெளிப்படுத்திவிடும். அதனால்தான் கண்ணுக்கும் மூளைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. 

திராதகா 

தாயின் வயிற்றில் நாம் கருவாக உருவாக ஆரம்பித்த சில நாட்களிலேயே கண்ணுக்கும் மூளைக்குமான தொடர்பு ஆரம்பித்து விடுகிறது. கருத்தரித்த இரண்டு வாரங்களுக்குள் கண்கள் வளர ஆரம்பிக்கின்றன. பார்வை நரம்பும், விழித்திரையும் மூளையிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன. விழித்திரை என்பது உண்மையில் மூளையின் ஒரு பகுதிதான். எனவே மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் பயிற்சிகள் கண்களுக்கு நன்மை செய்பவையாக உள்ளன. 

கண்கள் 

பினியல் சுரப்பி (Pineal gland) என்பது நமது மூளையின் நடுப்பகுதியில் உள்ள ஒரு மிகச்சிறிய சுரப்பி. உடலின் வெளிப்புறத்தில் இருந்து பார்க்கும்போது இது நெற்றியின் நடுவே அமைந்துள்ளது. இது மூன்றாவது கண் என்றும் சொல்லப்படுகிறது. பினியல் சுரப்பியிலிருந்து சுரக்கும் மெலட்டோனின் (Melatonin) ஹார்மோன் தூக்கத்தை வரவழைப்பது, தூக்கத்திலிருந்து எழுப்புவது என நமது உறக்க சுழற்சியைக் கையாள்கிறது. பிரான்ஸ் மெய்யியல் அறிஞர் ரெனே டேக்கார்ட் (Rene Descartes) பினியல் சுரப்பியை ‘ஆன்மா அமர்ந்திருக்கும் இருக்கை’ என்கிறார். இந்திய மெய்ஞ்ஞான முறைகளில் மூன்றாவது கண், ஞானத்தை அடையும் வழியாகக் கருதப்படுகிறது. மூன்றாவது கண்ணின் செயல்பாட்டை மேம்படுத்த திராதகா (Trataka) என்ற யோக முறை பின்பற்றப்படுகிறது. கண்களை மூடிக்கொண்டு புருவ மத்தியில் அழுத்தத்தை உணரும் தியானமாகவும் இது செய்யப்படுகிறது. ஒரு மிகச்சிறிய பொருளை, கருப்புப் புள்ளியை, மெழுகுவர்த்திச் சுடரை கவனத்தை வேறு எங்கும் சிதறவிடாமல், கண்களை இமைக்காமல் சிறிது நேரம் உற்றுப்பார்ப்பதுவே திராதகா யோக முறையாகும். திராதகா பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய நமது கண் பார்வை தெளிவாகும். அது மட்டுமல்லாமல் இது பினியல் சுரப்பிச் சார்ந்த பயிற்சி என்பதால் தூக்கமின்மை, மனஅழுத்தம், கவனக்குறைவு போன்றவற்றுக்கும் தீர்வு தரும். 

திராதகா பயிற்சிகள் 

மிக எளிதில் செய்யக்கூடிய சில திராதகா பயிற்சிகளைப் பார்ப்போம்.. 

மலர் :

மலர்

உள்ளங்கையில் பாதி அளவு இருக்கக்கூடிய ஒரு மலரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அதைக் கண் இமைக்காமல் சில நிமிடங்கள் உற்றுப்பார்க்க வேண்டும். மிகவும் வெளிச்சமான அறையில் இந்தப் பயிற்சியைச் செய்யும்போது சிவப்பு, ஊதா போன்ற அடர் நிறத்தில் உள்ள மலரைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அறையில் வெளிச்சம் குறைவாக இருந்தால் மஞ்சள், வெண்மை போன்ற நிறங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

புகைப்படம் :
கடவுள் அல்லது உங்களுக்குப் பிடித்த, தெய்வத்தன்மை உடைய ஒரு புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். ஒரு வெள்ளைத்தாளை எடுத்துக்கொண்டு புகைப்படத்தில் உள்ள முகத்தை மட்டும் விட்டுவிட்டு மற்ற எல்லாப் பகுதிகளையும் மறைத்து விடவும். இந்தப் புகைப்படத்தை உங்கள் கண்களிலிருந்து இரண்டு அடி தூரத்துக்கு அப்பால் வைக்க வேண்டும். கண்களை இமைக்காமல் இந்தப் புகைப்படத்தைச் சில நிமிடங்கள் பார்க்கவேண்டும். இதைத் தொடர்ந்து செய்யக் கண்பார்வை தெளிவாகும். 

மெழுகுவர்த்திச் சுடர் :
 

மெழுகுவர்த்தி

இருட்டு அறையில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்க வேண்டும். கண்களை இமைக்காமல் ஐந்து முதல் பத்து நிமிடத்துக்கு இதைப் பார்க்கவேண்டும். கண்பார்வை குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இது மிகச் சிறந்த பயிற்சி. ஒருநாள் கூட இடைவெளி விடாமல் காலை, மாலை என இரு வேளையும் இதைச் செய்யவேண்டும். கண்புரை, கிட்டப்பார்வை, வலிப்பு உடையவர்கள் இந்தப் பயிற்சியைச் செய்யக்கூடாது. 

இருட்டு அறை :

இருட்டான அறையில் அமர்ந்து ஐந்து முதல் பத்து நிமிடத்துக்குக் கண்களை இமைக்காமல் இருளைப் பார்க்கவேண்டும். 

வானம் :

நீல நிறத்தில் பரந்து விரிந்திருக்கும் வானத்தை வைத்த கண் மாறாமல், கண் இமைக்காமல் பார்க்கவேண்டும். 

வெற்றிலை :

ஒரு வெற்றிலையை எடுத்துக்கொண்டு அதன் நடுவில் வட்டமாகக் கறுப்பு மையைப் பூசிக்கொள்ள வேண்டும். அந்த இலையை ஒரு அட்டையில் ஒட்டி வைக்க வேண்டும். கண்களிலிருந்து இரண்டு அடிக்கு அப்பால் இதை வைத்துக்கொண்டு கண் இமைக்காமல் ஐந்து நிமிடத்துக்கு இதை உற்றுப்பார்க்க வேண்டும். 

ஊசி :

சுவற்றில் ஒரு நூலைக் கட்டி அதில் ஊசியைத் தொங்கவிட வேண்டும். வேறு எங்கும் கவனத்தைச் சிதறவிடாமல், கண் இமைக்காமல் ஊசியைச் சில நிமிடங்களுக்கு உற்றுப்பார்க்க வேண்டும். 

மூக்கின் முனை :

மூக்கின் முனையை உற்றுப்பார்ப்பது, புருவத்துக்கு இடைப்பட்ட இடத்தை உற்றுப்பார்ப்பது ஆகியவையும் கண் பார்வையைத் தெளிவாக்கும். 

இந்தப் பயிற்சிகளைச் செய்யும்போது கண்களை இமைக்கவோ, உருட்டவோ கூடாது. ஆனால் கண்களை இமைக்கக்கூடாது என்பதற்காகக் கண்களைக் கஷ்டப்படுத்தக்கூடாது. பயிற்சியின் தொடக்க நிலையில் பத்து நொடிகள் கண்களை இமைக்காமல் இருந்தால்கூடப் போதுமானது. தொடர் பயிற்சியின் மூலம் இந்தக் கால அளவை அதிகரிக்க முடியும். யோக ஆசிரியரிடம் உரிய பயிற்சி பெறாதவர்கள், பத்து நிமிடங்களுக்கு மேல் இதைச் செய்ய முயற்சிக்க வேண்டாம். இது எளிய பயிற்சி என்பதை மனதில் கொண்டு செயல்பட்டால் பலன்கள் கிடைக்கும். 

http://www.vikatan.com/news/health/86020-improve-the-vision-of-eyes-with-trataka.html

  • தொடங்கியவர்

கொலஸ்ட்ரால் பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்ளலாமா?

‘கொலஸ்ட்ரால்’ என்றாலே இன்று எல்லோருக்கும் பீதிதான். உடனிருந்தே கொல்வது இது. கொலஸ்ட்ரால் பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்ளலாம்.

 
கொலஸ்ட்ரால் பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்ளலாமா?
 
‘கொலஸ்ட்ரால்’ என்றாலே இன்று எல்லோருக்கும் பீதிதான். உடனிருந்தே கொல்வது இது.

கொலஸ்ட்ரால் பற்றி சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாமா?

நமது உடல், கொலஸ்ட்ராலை தன்னிலிருந்தே உற்பத்தி செய்துகொள்கிறது. நம் கல்லீரல் தினமும் சுமார் ஆயிரம் மில்லிகிராம் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது.

கல்லீரலும் மற்ற செல்களும் சேர்ந்து ரத்தத்தின் மொத்த கொலஸ்ட்ரால் அளவில் 75 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றன.

பொதுவாக 25 சதவீத கொலஸ்ட்ரால், நாம் உட்கொள்ளும் உணவு வகைகளான முட்டைக் கரு, மாமிசம், கோழி இறைச்சி, பால் மற்றும் பால் பொருட்களில் இருந்து கிடைக்கிறது.

கொலஸ்ட்ரால் உயிர் அபாயத்தை ஏற்படுத்தும் ஒன்றாக வளர்வதற்கு நாமே காரணமாக இருக்கிறோம் என்பதுதான் உண்மை. அதாவது, கொழுப்பு நிறைந்த உணவை உண்பது, இறைச்சி வகைகளை அதிகம் உண்பது, அதிக உடல் எடை, உடல் இயக்கத்தைக் குறைத்து ‘சும்மா’வே இருப்பது, உடற்பயிற்சி இல்லாதது, அதிக தூக்கம், மது, புகைப்பழக்கம், மனஅழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகம் மற்றும் தைராய்டு சுரப்பி நோய்களுடன், கருத்தடை மாத்திரைகள் கூட கொலஸ்ட்ராலுக்குக் காரணமாகின்றன.

201704151105114393_cholesterol._L_styvpf

பெற்றோருக்கு அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் அதற்குக் காரணமான ஜீன்களை வாரிசுகளும் பெற்றிருக்கக்கூடும்.

ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான வெளிப்படையான அறிகுறி எதுவும் தெரிவதில்லை. அதனால்தான் இது ‘சைலண்ட் கில்லர்’ எனப்படுகிறது.

ஒல்லியாக இருப்பவர்களுக்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் இருக்காது என்று கருத முடியாது. எனவே யாராக இருந்தாலும் ரத்தப் பரிசோதனை மூலம்தான் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு, 12 மணி நேரம் ஏதும் உட்கொள்ளாத நிலையில் காலையில் மேற்கொள்ளப்படும் ரத்தப் பரிசோதனையில் இருந்து கணக்கிடப்படுகிறது.

‘லிபோபுரோட்டீன் புரொபைல்’ ரத்தப் பரிசோதனை, நம் ரத்தத்தில் கவலைப்படத்தக்க அளவில் கொலஸ்ட்ரால் இருக்கிறதா இல்லையா என்று கூறிவிடும்.

http://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2017/04/15110509/1080029/May-I-know-a-few-things-about-cholesterol.vpf

  • தொடங்கியவர்

மாத்திரை, மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்கவேண்டிய உணவுகள்! #HealthTips

 
 

ஆரோக்கியம் குறித்த விழிப்புஉணர்வு இன்று அதிகமாகிவிட்டது... உண்மை! உடல்நலம் குறித்த அக்கறையோடு பார்த்துப் பார்த்து காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து, அளவு பார்த்துச் சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்களேகூட ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுவிடுவார்கள். அது, மாத்திரை, மருந்துகள் சாப்பிடும் தருணம். `இவற்றில் சிலவற்றை உட்கொள்ளும்போது, சில உணவுகளைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிடும்போது, மாத்திரை, மருந்தின் தன்மை பாதிக்கப்படும்; அவற்றின் பணி தடைப்படும்; சில நேரங்களில் நோய்க்கு மருந்தாவதற்கு பதிலாக, ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்.  

மாத்திரை

அதேபோல காபி, குளிர்ப்பானங்களைக்கூட மாத்திரை சாப்பிடும் நேரத்தில் அருந்தக் கூடாது. அதனால், மாத்திரை பயனற்றதாகிவிடும்; சில நேரங்களில் பக்கவிளைவுகள் ஏற்படும்’ என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படி, எந்தெந்த உணவுகளுடன் எந்தெந்த மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது என்பது குறித்து பொதுநல மருத்துவர் எம்.அருணாச்சலம் விவரிக்கிறார்.டாக்டர் அருணாச்சலம்

ஆன்டிபயாடிக் மாத்திரைகள் - பால் பொருள்கள்
பாக்டீரியா தொற்றுக்காக உட்கொள்ளும் பென்சிலின் (Penicillin) டெட்ராசைக்லின் (Tetracycline), சிப்ரோஃப்ளாக்ஸின் (Ciprofloxacin) போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளுடன், பால் மற்றும் பால் பொருள்களைச் சாப்பிடக் கூடாது.  இவை மருந்து செயல்படும் தன்மையை குறைத்துவிடக்கூடியவை.

வலி நிவாரணி மருந்துகள் - குளிர்ப்பானங்கள்
தலைவலி, தசைபிடிப்பு,  தசை வீக்கத்துக்காக உட்கொள்ளும் இபுப்ரோஃபென் (Ibuprofen) மருந்தை உட்கொள்ளும்போது, கண்டிப்பாக சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்ப்பானங்களைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் அமிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், மருந்தை உடல் உறிஞ்சுக்கொள்ளும் தன்மையைப் பாதிக்கும். மேலும், நச்சுச்தன்மை அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தையும் பாதிக்கக்கூடும்.

அதே போல வலிநிவாரணிகளுடன் (NSAID- Nonsteroidal Anti-inflammatory Drugs) ரத்த அழுத்திற்காக சாப்பிடக்கூடிய மாத்திரைகளை (HTN drugs- Blood Pressure) உட்கொண்டாலும் அதன் செயல் திறனை குறைத்துவிடும்.

குளிர்ப்பானம் 

நுரையீரல் பாதிப்பு தொடர்பான மருந்துகள் - காஃபின் பானங்கள்
ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி (Broncities) மற்றும் நுரையீரல் பிரச்னைக்கு  தியோபைலின் (Theophylline), அல்புட்ரால் (Albuterol) போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது, குளிர்ப்பானங்களை குடிக்கக் கூடாது. இவற்றில் உள்ள 'காஃபின்' நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது. 

சிறுநீரகக் கோளாறு மருந்துகள் - வாழை, கீரை, தக்காளி, சோயா
சிறுநீரகக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் கேட்டோப்ரில் (Captopril), எனாலாப்ரில் (Enalapril), ராமிப்ரில் (Ramipril) போன்ற மாத்திரைகளுடன் வாழைப்பழம், சோயா, தக்காளி, கீரைகளைச் சாப்பிடக்கூடாது.  இவற்றில் பொட்டாசியம் அதிகம் என்பதால், ரத்தத்தில் பொட்டாசியம் அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்திவிடும். மருத்துவர் ஆலோசனையுடன் மருந்துகளை உட்கொள்வது நல்லது.

இதய பிரச்னை 

இதயநோய் தொடர்பான மருந்துகள் - மதுப்பழக்கம்
ஐசோசோபைடு டினிட்ரேட் ( Isosorbide dinitrate), நைட்ரோகிளிசரின் (Nitroglycerine) போன்ற மாத்திரைகளை, கார்டியாக் அரெஸ்ட், இதயத் துடிப்பில் பாதிப்பு போன்ற இதயநோய் பிரச்னைகளுக்காக கொடுக்கப்படுபவை. 'ஆன்டி ஆர்த்திமிக் மருந்து' என்னும் இந்த வகை மருந்துகளை மது அருந்திய பிறகு உட்கொண்டால், குறைந்த ரத்த அழுத்த நிலையை உருவாகும். இந்த நிலை ஆபத்தான சூழ்நிலைகளைதலைவலி மாத்திரை உருவாக்கலாம். இந்த மாத்திரைகள் மட்டுமல்ல எந்த மாத்திரையை உட்கொண்டாலும் மது அருந்துவதை அவசியம் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து உணவுகளையும் சாப்பிட்டிருந்தாலும், மருந்தின் செயல்படும் தன்மையைக் குறைக்கும். எனவே, நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ சாப்பிடலாம்.

கொழுப்பைக் குறைக்கும் மருந்து - திராட்சைப்பழம்
கொழுப்பைக் குறைப்பதற்கு உட்கொள்ளும் ஆட்ரோவாஸ்டேட்டின்,(Atorvastatin) ஃப்ளூவாஸ்டட்டின் (Fluvastatin) லோவஸ்டட்டின் (Lovastatin), சிம்வஸ்ட்டட்டின் (Simvastatin), ரோசுவஸ்டட்டின் (Rosuvastatin), ப்ராவஸ்டாட்டின் (Pravastatin) போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது, அவற்றுடன் திராட்சைப்பழ ஜூஸ் சாப்பிடக் கூடாது; சிட்ரஸ் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த மருந்துகளை உட்கொள்ளும்போதும் மருத்துவர் ஆலோசனை அவசியம்.

தைராய்டு ஹார்மோன் சுரக்கும் மருந்துகள் - சோயா, நார்ச்சத்துகள்
தைராய்டு பிரச்னைகளுக்காக உட்கொள்ளும் லிவோதைராக்ஸின் (Levothyroxine) போன்ற உணவுகளுடன் சோயா மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால், உடல் மருந்தை உறிஞ்சிக்கொள்ளும் தன்மையை பாதிக்கும்.

மீன்

மனஅழுத்த மருந்துகள் - பாலாடைக்கட்டி, மீன், இறைச்சி, கொத்தமல்லி 
`மோனோஅமைன் ஆக்சிடேஸ் தடுப்பான்கள்’ (Monoamine oxidase inhibitor) என்றழைக்கப்படும் டிரானில்சைப்ரோமின் (Tranylcypromine), பினில்ஸைன் (Phenelzine), நிலாமைடு (Nialamide) போன்ற மருந்துகளுடன் கொத்தமல்லி, பாலாடைக்கட்டி, மீன், இறைச்சி போன்றவற்றை உண்ணக் கூடாது.  

ரத்தம் தொடர்பான நோய்கள் - பூண்டு, இஞ்சி, மசாலா
ரத்தம் உறைதல் போன்ற ரத்தம் தொடர்பான நோய்களுக்கு வார்ஃபாரின் (Warfarin) மருந்துகளை உட்கொள்ளும்போது, பூண்டு, இஞ்சி மற்றும் சில மசாலாப்  பொருள்கள்  (சிவப்பு மிளகு, பட்டை, மஞ்சள்) சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணக் கூடாது.
அதேபோல வைட்டமின் கே சத்துள்ள கீரை, முட்டைக்கோஸ் மற்றும் புரோக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்ளக் கூடாது. இவை மருந்தின் வீரியத்தை குறைத்துவிடும். 

மாத்திரை

பொதுவாக நோய்க்காக மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளும்போது, சாப்பிடக் கூடாதவை...
* பழச்சாறு, சோடா கலந்த பானம், காஃபின் கலந்த குளிர்பானத்துடன் மாத்திரை சாப்பிடுவதைத் தவிர்த்து, தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.
* மருந்து, மாத்திரை உட்கொள்ளும்போது, மது அல்லது புகை பிடித்தல் கூடவே கூடாது.
*  மருந்தை, உணவு சாப்பிடும் முன்னர் சாப்பிட வேண்டுமா அல்லது உணவுக்கு பிறகு சாப்பிட வேண்டுமா என்பது குறித்த மருத்துவர்களின் அறிவுரைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

http://www.vikatan.com/news/health/86444-foods-which-need-to-be-avoided-while-consuming-medicines.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.