Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

 
%25255BUNSET%25255D.png 
 
"மச்சான், ஆமி கிட்ட வந்திட்டுது,
நான் முன்னுக்கு போகப் போறன்,
என்ட பிள்ளைகளை பார்த்துக் கொள்ளடா"
 
ஆனந்தபுரம் சமரின் இறுதி நாளொன்றில், லண்டனில் இருக்கும் நண்பனொருவனை தொடர்பு கொண்ட சிவகுமரன் (சேரலாதன்) கூறிய கடைசி வசனங்கள் அவை. இறுதி யுத்தம் தொடங்கிய பின்னர் நண்பர்களோடு பலமுறை விரிவாக கதைத்திருந்த சிவகுமரனின் இந்த கடைசி  அழைப்பு,  ஓரிரு நிமிடங்களே நீடித்தது. 
 
----------------------------------------------------------------------------------------------------------------------
 
1984ல், பரி யோவானில் இணைந்த சிவகுமரன் எல்லோரோடும் பம்பலாக பழகுவான். தேவதாசன் மாஸ்டர் வகுப்பாசிரியராக இருந்த Grade 5Aல் தான் சிவகுமரன் அறிமுகமானான். எங்களது வகுப்பறை பிரின்ஸிபல் ஒஃபிஸிற்கு முன்னால் இருந்த கொட்டகையில் இருந்தது. இப்பொழுது அந்த வகுப்பறைகள் இடிக்கப்பட்டு புதிய கல்லூரி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. 
 
 
சிவகுமரனின் நட்பில் வாஞ்சை மிதமிஞ்சும், வஞ்சகம் எள்ளளவும் இருக்காது.  சிவகுமரன் விடும் குழப்படிகள்,  தானும் அடிவாங்கி மற்றவர்களுக்கும் அடிவாங்கிக் கொடுக்கும் தன்மை வாய்ந்தது. சிவகுமரனின் சொந்த ஊர் நயினாதீவு என்பதால், அவனுக்கு நைனா என்ற பட்டபெயர் ஒட்டிக் கொண்டது. சிவகுமரனின் நகைச்சுவை கலந்த பம்பல்களால், இலங்கை வானொலியின் பிரபல நகைச்சுவை கதாபாத்திரமான நானா மரிக்காரை நினைவில் வைத்து, நைனா மரிக்கார் என்ற பட்டப் பெயரையும் பெற்றான். 
 
 
சிவகுமரனிடம் சிக்கி கந்தசாமி மாஸ்டர், காசிநாதன் மாஸ்டர் போன்ற அப்பிராணி வாத்திமார் பட்ட அவஸ்தை சொல்லிலடங்காதவை. நைனா ஒரு சிறந்த ராஜதந்திரி, "பயங்கரவாத" வாத்திமாரிடம் தன்னுடைய வாலை சுருட்டிக் கொள்வான். இந்த பயங்கரவாத வாத்திமார் லிஸ்டில், தேவதாசன், கதிர்காமத்தம்பி, பிரபாகரன், தனபாலன், சரா தாமோதரம், டோனி கணேஷன் மாஸ்டர்மார் அடங்குவினம். சந்திரமெளலீசன் மாஸ்டரின் வகுப்புகளில் நைனா விடும் சேட்டைகளை அவரும் சேர்ந்து ரசிப்பதால் வகுப்பு கலகலப்பாகும். 
 
 
எங்கட வகுப்பிற்கு duty பார்க்க வாற prefectsஐயும் நைனா வாட்டி வதைப்பான். பத்தாம் வகுப்பில் "ஐசே ஏன் நிற்கிறீஈஈஈர்" நிருபனும்,  Lower VIல் "எடுவை" ஐங்கரனும் சிவகுமரனின் குழப்படிகளை கட்டுப்படுத்த முடியாமல் திக்கு முக்காடினார்கள். 
 
 
-------------------------------------------------------------------------------------------------------------------
 
1988ம் ஆண்டு பரி யோவான் மைதானத்தில், ஒரு சனிக்கிழமை, பற்றிக்ஸ் அணிக்கெதிரான u17 ஆட்டம் நடைபெறுகிறது. பரி யோவான் அணியின் தலைவர் சதீசன், அரைச்சதம் தாண்டி நூறு ஓட்டங்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். பழைய பூங்கா பக்கம் இருக்கும் பொன்னுத்துரை பவிலியனிலிருந்து சிவகுமரனோடு நானும் சில நண்பர்களும் மட்ச் பாரத்துக் கொண்டிருந்தோம். 
 
 
"மச்சான், காசை எடுங்கடா, சதீசன் செஞ்சரி அடிக்க சோடா குடுப்பம்" நைனா வினையை விலைக்கு வாங்க திட்டம் போட்டான். மைதானத்தில் மட்ச் நடக்கும் போது, மைதானத்திற்குள் ஓடுவது என்பது பரி யோவானின் கடும் ஒழுக்க விதிகளிற்கு முரணாணது, பாரிய குற்றம்.
 
 
"மச்சான், பிடிபட்டோமென்றா பிரின்ஸிபலிடம் தான் கொண்டு போய் நிற்பாட்டுவாங்கள்" எவ்வளவோ எச்சரித்தும், விடாப்பிடியாக சதீசன் செஞ்சரி அடிக்க சோடா கொடுப்பதில், நைனா உறுதியாக நின்றான்.
 
 
"டேய், நீங்க சோடா வாங்க காசு போடுங்கோ, நான் கொண்டு ஓடுறன்" என்றான் சிவகுமரன். பின்னாட்களில் வெளிநாடுகளிலிருந்து நாங்கள் காசு அனுப்ப, அவன் தாயகத்தில் களமாடப் போகும் வரலாற்றை கட்டியம் கூறுவதாக அந்த சம்பவம் அமையப் போகிறது என்று  அன்று நாங்கள் உணரவில்லை.
 
 
நைனா அடம்பிடிக்க தொடங்கினால் யாராலும் சமாளிக்க ஏலாது. வேண்டா வெறுப்பாக எல்லோரும் சேர்ந்து காசு போட்டு, செரில்ஸிற்கு போய் நெக்டோ வாங்கி வந்து, மீண்டும் பழைய பூங்கா பக்கத்தில் போய் மட்ச் பார்க்கத் தொடங்கினோம். 
 
 
சதீசன் நூறடிக்க, சிவகுமரன் மைதானத்திற்குள் ஓடிப் போய், நடுப் பிட்சில் வைத்து சதீசனிற்கு சோடா கொடுத்தான்.  "ஐசே, இப்படி செய்யக் கூடாது" என்று நடு பிச்சிலும் சதீசன் அன்பாக கண்டித்துவிட்டு, ஒரு மிடாய் சோடா குடித்தார்.
 
 
திரும்பி பழைய பூங்கா பக்கம் வராமல், டைனிங் ஹோல் பக்கம் தப்ப ஓடிய சிவகுமரனை ஏற்றிக் கொண்டு பிரின்ஸிபல் பங்களாவிற்கு செல்ல புவனரட்ணம் மாஸ்டர் சைக்கிளோடு தயாராக நின்றார். 
 
-----------------------------------------------------------------------------------------------------------------
 
Big Match வென்ற 1990 பரி யோவான் கிரிக்கெட் அணியில் சிவகுமரன் 12th man. சிவகுமரன் மிகச்சிறந்த fielder. Big Matchல் அணியில் விளையாடிய பதினொரு பேரிடமும் தன்னை எப்படியாவது field பண்ண விடுமாறு வலியுறுத்திக் கேட்டிருந்தான். 
 
 
இரண்டாம் நாள் மத்தியானம், இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய சென்ரலின்  எட்டாவது விக்கெட் விழுந்து, பரி யோவான் அணி வெற்றியின் விளிம்பில் நிற்க, மைதானத்திற்குள் நுழைந்த  பரி யோவான் பழைய மாணவர்கள், "கடைசி விக்கெட் விழுந்ததும் dressing roomற்கு ஓடுங்கடா, அடி விழும், கவனம்" என்று அணியை எச்சரித்தார்கள்.
 
 
இதைக் கேட்டு பயந்த விபீஷ்ணா, அடுத்த ஓவரே, கையை காட்டி, சிவகுமரனை கூப்பிட்டு field பண்ணவிட்டு விட்டு தான் மைதானத்திலிருந்து தப்பி வெளியேறினான். பின்னாட்களில் நண்பர்கள் நாட்டை விட்டுத் தப்பியோட, சிவகுமரன் தாய் மண்ணில் களமாடப் போகும் காலங்களை உணர்த்திய சம்பவமாக இதுவும் அமைந்தது.
 
-----------------------------------------------------------------------------------------------------------------
 
1990ம் ஆண்டு யாழ்ப்பாணக் கல்லூரிக்கெதிராக பரி யோவான் மைதானத்தில் இடம்பெற்ற ஆட்டத்தில் சிவகுமரன் பிடித்த கட்சை  கேர்ஷன் ஞாபகப்படுத்தினான். "மட்ச் முடியிற நேரம், யாரோ வெளியே வர,  சிவகுமரனை field பண்ண இறக்கினாங்கள். Water tank பக்கமிருந்த boundary லைனில் சிவகுமரன் ஓடிப் போய் ஒரு அந்த மாதிரி கட்ச் எடுத்தான்டா. இன்றைக்கும் என்ட கண்ணுக்குள் நிற்குது" என்றான் கேர்ஷன். 
 
 
அதே ஆண்டில் இடம்பெற்ற இரு வேறு ஆட்டங்களில் ஸ்லிப்ஸில் சிவகுமரன் எடுத்த கட்ச் பற்றி சிறிபிரகாஷும், சிவகுமரன் எடுத்த ரன் அவுட் ஒன்றைப் பற்றி அருள்மொழியும் நினைவுறுத்தினார்கள். 
 
 
இந்தாண்டு  நாங்கள் Big Match பார்க்கப் போகும் போது, Big Matchல்  Best Fielderற்கான விருதை சிவகுமரன் ஞாபகார்த்த விருதாக வழங்கப்பட SJC 92 லண்டன் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தது நெகிழ வைத்தது. 
 
---------------------------------------------------------------------------------------------------------------
 
1990ம் ஆண்டு நடுப்பகுதியில் யுத்தம் மீண்டும் தொடங்கியது, எங்களின் பரி யோவான் பாடசாலை வாழ்க்கையும் சிதைந்து போனது. இயக்கம் Open பாஸ் அறிவித்த நாட்களில் நாங்கள் கொம்படி வெளி கடந்து கொண்டிருக்க, சிவகுமரன் இயக்கத்தின் பாசறையொன்றில் போராளியாக மாறியிருந்தான். 
 
------------------------------------------------------------------------------------------------------------------
 
1994 டிசம்பரில், சந்திரிக்காவின் யுத்த நிறுத்த காலப்பகுதியில் மீண்டும் யாழ்ப்பாணம் சென்றிருக்கும் போது, நான் வந்திருப்பதை அறிந்து தேடி வந்து சந்தித்தான். பரி யோவான் மைதானத்தின் ஓரத்தில் தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, மைதானத்தின் புற்தரையில் அமர்ந்திருந்து  யசியோடும் என்னோடும் பழைய குழப்படிகளை இரை மீட்டான்.
 
 
இயக்கத்தில் சிவகுமரனின் வளர்ச்சி துரிதமாக நடந்தது. அந்தக் காலப்பகுதியில் கலை பண்பாட்டு கழகத்தின் துணை பொறுப்பாளராக செயற்பட்ட சேரலாதன், அடுத்த நாள் யசி வீட்டில் மத்தியான சாப்பாட்டிற்கும் எங்களோடு இணைந்து கொண்டான்.  தன்னுடைய கோப்பையிலிருந்து எடுத்து எங்களிற்கு சோறு ஊட்டிவிட்டு நட்பு பாராட்டிய அந்த கணங்களை மறக்கவே இயலாது.
 
--------------------------------------------------------------------------------------------------------------
 
2002 நவம்பரில், மாவீரர் நாளிற்கு சில நாட்களுக்கு முன்னர், சிவகுமரனை மீண்டும் கிளிநொச்சியில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பள்ளிக்கூட காலத்தில் மெல்லிய உருவமாக இருந்த சிவகுமரன், நல்லா கொழுத்து தடியனாக மாறியிருந்தான். இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவனாக, நிதர்சனம் தொலைக்காட்சி பொறுப்பாளராக செயற்பட்டுக் கொண்டிருந்த நண்பனை கண்டு பெருமைப்பட்டேன்.
 
 
"டேய் மச்சான், உன்னை இயக்கத்தில் இவ்வளவு காலம் எப்படிடா வச்சிருந்தவங்கள்" என்று பம்பலாக ஒரு  மூத்த தளபதி முன்னிலையில் கேட்க, அந்த மூத்த தளபதி சேரலாதனிற்கு இயக்கம் "காத்து கழற்றிய" கதையை சொல்லி சிரித்தார். சிவகுமரனும் சளைக்காமல் தனக்கேயுரிய இயல்பான நக்கலுடன் திருப்பி தாக்கி அந்த பொழுதை இனிமையாக்கினான்.  
 
------------------------------------------------------------------------------
 
2005 நவம்பர் மாதம் 1ம் திகதி
 
யுத்த மேகங்கள் சூழத்தொடங்கியிருந்த காலம், இயக்கம் யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட தனது அரசியல்துறை உறுப்பினர்களை வன்னிக்கு மீள அழைத்திருந்தது. திருமண நிகழ்வொன்றிற்கு யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளை, சிவகுமரனை சந்திக்க கிளிநொச்சி நோக்கி பயணமானேன். 
 
 
"முகமாலைக்கு வாகனத்தோடு ஆளனுப்புறன், நீ பாஸ் எடுக்காமல் வா" என்று அவன் சொல்லியும் கேட்காமல், முறையாக பாஸ் எடுத்து கிளிநொச்சி போய் சேர, "சொன்னா கேட்கமாட்டாய், போ..போய் நந்தவனத்தில் மினக்கிடு" என்று கடிந்து கொண்டான். 
 
 
நந்தவனத்தில் அன்று கடமையிலிருந்த தம்பி நாங்கள் படித்த காலத்தில் கொழும்பு இந்துக் கல்லூரியில் படித்தவர், சுணங்காமல் பாஸ் தந்து அனுப்பினார். அன்று சிவகுமரனோடு பாண்டியன் சுவையகத்தில் நாட்டுக் கோழிக் குழம்போடும் கணவாய்க் கறியோடும் மத்தியான சாப்பாடு சாப்பிட்டேன். 
 
 
மத்தியானம் சிவகுமரனின் வீட்டில் பழைய கதைகள் கதைத்துக் கொண்டே, இந்திய இலங்கை அணிகளிற்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்தோம். அன்றைய ஆட்டத்தில் ட்ராவிட்டும் தோனியும் இணைந்து கலக்கினார்கள். 
 
 
மட்சை பார்த்துக் கொண்டே "மச்சான் அவன் எங்க இருக்கிறானடா, மச்சான் இவன் எப்படி இருக்கிறான்டா, டேய், அந்த நாயை என்னை தொடர்பு கொள்ள சொல்லு" என்று எங்களோடு படித்த நண்பர்களை பற்றி சிவகுமரன் அக்கறையாக விசாரித்தான். 
 
 
தேத்தண்ணி குடித்துவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் என்னை ஏற்றிக் கொண்டு, அவனது அலுவல் நிமித்தம் தர்மேந்திரா கலையகத்திற்கு கூட்டிக் கொண்டு போனான். அங்கிருந்த போராளிகளை அதட்டினான், பின்னர் அவர்கள் தோள் மேல் கை போட்டு "என்னடா வெருண்டிட்டயளோ" என்று மறுமுகம் காட்டினான்.
 
 
முகமாலை மூடும் நேரம் நெருங்க, நான் விடைபெற ஆயத்தமானேன். என்னை இறுக்கிக் கட்டிப்பிடித்து தழுவி விட்டு, "இனி எப்ப சந்திப்பமோ தெரியாது மச்சான், நீ தொடர்பில இரு" என்று சிவகுமரன் சொன்ன சொற்களில் சோகம் குடிகொண்டிருந்தது. 
 
%25255BUNSET%25255D.png 

-------------------------------------------------------------------------------------------------------------
 
2009 ஏப்ரல் மாதம் 6ம் நாள்
 
நடுச்சாமம் Skype அலற, பதறியடித்து எழும்பினேன்.
"அண்ணா, எல்லாம் முடிஞ்சுது, உங்கட friend சேரலாதன் அண்ணாவும்..." எந்த செய்தியை கேட்கக் கூடாது என்று கர்த்தரை தினமும் மன்றாடினோ, அந்த செய்தி செவிப்பறைகளில் ஓங்கி ஒலித்து, இதயத்தை பிளந்தது.
 
------------------------------------------------------------------------------------------------------------------
 
ஊர் வாழ வேண்டுமென்றே,
உன்னத ஆர்வம் கொண்டோர்,
ஏராளமான துயர்,
எண்ணங்கள் தாங்கி நின்றோர்
 
மாவீரர் யாரோ என்றால்.....
 
----------------------------------------------------
 
 
 
 
 

நான் இஞ்சாலப் பக்கதால முகநூலூடாக ஜூட் பிரகாசிடம் (பொன்னுக்கோனிடம்) "டேய் நீ எங்கட 'நைனா' வைப் பற்றி எழுதியதை யாழில் பிரசுரிக்கவா என்று கேட்க அவனும் " டோய்... இப்படி கேட்டு என்னை அவமானப்படுத்தாதே போடுடா நாயே" என்று அன்பாக பதில் போட நான் சரி என்று யாழுக்குள் பிரசுரிக்க வந்தால் பகலவன் நீங்கள் என்னை முந்தி விட்டீர்கள்

------

சேரலாதனின் வகுப்பில் தான் நானும் படித்தேன். கலகலப்புக்கும் குறும்புக்கும் PhD முடித்தவன்/ர். 2002 இற்கு முதல் ஒரு முறையும் பின் இன்னொரு முறையும் பின் 2004 அளவில் கொழும்பிலும் சந்திக்க முடிந்தது. அவரின் அண்ணாவை நீண்ட நாட்களின் பின் இங்கு சந்தித்தேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான உத்தமர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்பதை தவிர, கொழும்பிலும், அவுஸ்ரேலியாவிலும், இன்னும் உலகெங்கிலும் நாம், கொம்படியூடாக கடத்தி வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அற்ப வாழ்க்கைக்கு ஒரு பெருமை இருக்கப் போவதில்லை.

4 ஏ எடுத்தாலும், வாழ்க்கையில் பல சிகரங்களை தொட்டாலும் ஜூட் பிரகாசாலோ, எம்போன்றவர்களாலோ நாம் தெரிந்தே வராலாற்றுகடமையை தவற விட்டோம் என்ற குற்ற உணர்ச்சியை மறக்கவியலாது.

விபிசணா கடுப்பாகக்கூடும், ஆனால் அந்த உதாரணம் எம் போராட்டத்தின் மாபெரும் உண்மையை பட்டவர்தனமாய் வெளிப்படுத்தி நிக்கிறது என்பதே உண்மை.

இதை எழுதிய ஜூட் பிரகாசுக்கு ஒரு ரோயல் சல்யூட்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.