Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டப்படி சசிகலா பொதுச் செயலாளர் ஆக முடியாது!

Featured Replies

சட்டப்படி சசிகலா பொதுச் செயலாளர் ஆக முடியாது!

 

p22.jpg

2011 டிசம்பர் மாதம் சசிகலாவை போயஸ் கார்டனில் இருந்து அனுப்பிவிட்டார் ஜெயலலிதா. சசிகலாவோடு அவரது உறவுகளையும் கட்சியில் இருந்து ஜெயலலிதா கட்டம் கட்டினார். எல்லாம் மூன்று மாதங்கள்தான். 2012-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி சசிகலாவிடம் இருந்து அதிரடியாக வந்தது ஓர் அறிக்கை. ‘‘என் உறவினர்கள் அக்காவுக்கு துரோகம் செய்தது எனக்குத் தெரியாது. அக்காவுக்கு எதிரான சதித் திட்டங்களும் தீட்டப்பட்டன. துரோகம் செய்தவர்களுடன் தொடர்புகளைத் துண்டித்து விட்டேன். எனக்கு அரசியல் ஆசையும் கிடையாது’’ என்றெல்லாம் சசிகலா வெளியிட்ட அந்த அறிக்கையை அரசியல் மேகங்கள் மாறியிருக்கிற சூழலில், 5 ஆண்டுகள் கழித்து இப்போது படித்தால் சிரிப்புதான் வருகிறது. அந்த அறிக்கை அப்படியே இங்கே ரீப்பீட்டு...

‘பத்திரிகைகளில் என்னைப் பற்றி பலவிதமான செய்திகள் வந்து கொண்டிருப்பதால் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 1984-ல் முதல் முறையாக அக்காவை சந்தித்தேன். பின்னர் எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. அவர் என்னை தங்கையாக ஏற்றுக்கொண்டார். 1988-ல் இருந்து அக்காவின் போயஸ் கார்டன் வீட்டில் அவருடன் வசித்து வந்தேன். அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்கும் அக்காவின் பணிச்சுமையை ஓரளவாவது குறைக்கும் வகையில் உதவியாக இருந்தேன். அப்போது வெளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து எனக்கு முழு விவரம் தெரியாது. 24 ஆண்டுகள் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்த நான், கடந்த டிசம்பரில் (2011-ல்) அக்காவை பிரிந்து வெளியேவந்து வேறு இடத்தில் வசிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. பிறகுதான் அதுவரை வெளியில் என்ன நடந்தது என்ற உண்மைகள் எனக்கு தெரிய வந்தன.

அக்கா எடுத்த ஒழுங்கு நடவடிக்கைகளுக்குப் பிறகுதான் அதற்கு என்ன காரணம், அதன் பின்னணி என்ன என்பதெல்லாம் புரிந்தது. என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்ததை சாக்கிட்டு, என் பெயரைப் பயன்படுத்தி விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர்; அதனால் கட்சிக்குப் பாதிப்புகள் ஏற்பட்டன; பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன; அக்காவுக்கே எதிரான சதி திட்டங்களும் தீட்டப்பட்டன என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். வேதனை அடைந்தேன். இவை எல்லாம் எனக்கே தெரியாமல் நடந்துள்ளன. அக்கா நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு வினாடியும் நான் நினைத்திருக்கிறேன். கனவிலும் அக்காவுக்குத் துரோகம் நினைத்ததில்லை. என் உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம். அவர்கள் யாராக  இருந்தாலும் எனக்கு வேண்டாத
வர்கள்தான். அவர்களுடன் தொடர்புகளை  துண்டித்து விட்டேன். இனிமேல் அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை.

அரசியலில் ஈடுபட வேண்டும், கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் ஆகவேண்டும், அமைச்சர் பதவியை அடைய வேண்டும், ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்ற எந்த ஆசையும் எனக்கு கிடையாது. அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே விரும்புகிறேன். என் வாழ்க்கையை ஏற்கனவே அக்காவுக்கு அர்ப்பணித்துவிட்டேன். இனியும் அக்காவுக்கு உதவியாக இருக்கவே விரும்புகிறேன்.’ - இதுதான் சசிகலா வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது.

p22a.jpg

சசிகலா அறிக்கைக்கு ஜெயலலிதா காட்டிய ரியாக்‌ஷன் என்ன? அதையும் பார்ப்போம். 2012 மார்ச் 31-ம் தேதி ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் என்ன சொல்லியிருந்தார்? 

‘திருமதி. வி.கே.சசிகலா எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதே பொருள் கொண்ட ஒரு அறிக்கையினையும் அவர் வெளியிட்டுள்ளார். வி.கே.சசிகலா அளித்துள்ள விளக்கத்தினை நான் ஏற்றுக் கொள்கிறேன். 19.12.2011 அன்று வி.கே.சசிகலா மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. அதே சமயத்தில் 19.12.2011 அன்று எம்.நடராஜன், திவாகர், டி.டி.வி. தினகரன், வி.பாஸ்கரன், வி.என். சுதாகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன், ராவணன், அடையாறு மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், டி.வி.மகாதேவன், தங்கமணி ஆகியோர் மீதும், 22.12.2011 அன்று கலியபெருமாள், எம்.பழனிவேல் ஆகியோர் மீதும், 26.1.2012 அன்று தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி, சந்தான லட்சுமி சுந்தரவதனம், சுந்தரவதனம், வைஜெயந்தி மாலா ஆகியோர் மீதும் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. அந்த நடவடிக்கை அப்படியே தொடரும். எனவே கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று அறிக்கையில் தெரிவித்திருந்தார் ஜெ.

‘அக்காவுக்குத் துரோகம் செய்த உறவுகளின் தொடர்புகளைத் துண்டித்து விட்டேன். அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை’ என சொன்ன சசிகலாதான், ஜெயலலிதா உடலுக்குப் பக்கத்தில் மன்னார்குடி  உறவினர்களுடன் சேர்ந்து அரண் அமைத்திருந்தார். ‘எனக்கு அரசியல் ஆசையும் கிடையாது’ என்றவர்தான் ஜெயலலிதா இறந்தபிறகு சமாதியின் ஈரம் காய்வதற்குள் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

‘அரசியல் ஆசை இல்லை’ என்று சொன்ன சசிகலாவுக்கு இப்போது ஆசைகள் துளிர் விட்டிருக்கின்றன. ‘‘கட்சியை சின்ன அம்மாதான் வழி நடத்த வேண்டும்’’ என கட்சிக்காரர்கள் எல்லாம் கதறிக் கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. பொதுக்குழு கூடும்போது சசிகலா பொதுச் செயலாளர் ஆக்கப்படலாம். ஆனால் அது  முடியுமா? அ.தி.மு.க. சட்ட விதி என்ன சொல்கிறது?

p22c.jpg

எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அ.தி.மு.க-வின் சட்ட திட்ட விதிகளில் திருத்தங்கள் செய்து வரப்பட்டன. ‘அ.தி.மு.க. பொதுச் செயலாளர், கட்சியின் அனைத்து அடிப்படைப் பொது உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’ என்கிறது கட்சியின் சட்ட திட்ட விதி 20, பிரிவு- 2. அதன்படிதான் கடந்த 2014-ம் ஆண்டு 7-வது முறையாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஆனார் ஜெயலலிதா. கடந்தமுறை அப்படி பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்ட பிறகுதான் அ.தி.மு.க-வின் உட்கட்சித் தேர்தலே தொடங்கியது. 2014-ல் உட்கட்சித் தேர்தல் பல கட்டங்களாக நடத்தப்பட்டன. அது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் ஒரு முக்கியமான விஷயம் இடம்பெற்றிருந்தது. உட்கட்சி தேர்தலில் போட்டியிடுகிறவர்களின் தகுதிகள் என்ன? என்பதையும் குறிப்பிட்டிருந்தார்கள் ‘கட்சியின் சட்ட திட்ட விதி 30, பிரிவு -5ன் படி உட்கட்சித் தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும்’ என சொல்லியிருந்தார்கள். இதற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்றால் அந்த அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு மட்டுமே இருக்கிறது என அ.தி.மு.க. சட்ட திட்ட விதி சொல்கிறது.

இதன்படி பார்த்தால் 2011 டிசம்பரில் சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்டு 2012 ஏப்ரல் 1-ம் தேதிதான் ஜெயலலிதாவால் மன்னிக்கப்பட்டார். அன்றோ அல்லது அதற்கு பிறகோதான் சசிகலா கட்சியில் மீண்டும் இணைந்திருக்க முடியும். ஐந்தாண்டுகள் கட்சியில் இருந்திருக்க வேண்டும் என்கிற அ.தி.மு.க. சட்ட திட்ட விதி கணக்குப்படி அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு (2017-ம் ஆண்டு) பிறகுதான் சசிகலாவால் கட்சியின் பொதுச் செயலாளராக முடியும். ஆனால், இந்த சட்ட திட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வர முடியுமா என்கிற கேள்விகளும் எழுகிறது. அதற்கும் பொதுக்குழுவின் ஒப்புதல் பெற வேண்டும். அது சாத்தியமா?

‘ஆண்டுக்கு  ஒரு முறை கட்சியின் பொதுக் குழுவை கூட்ட வேண்டும்’ என்பது கட்சியின் சட்ட திட்ட விதி. அதன்படி டிசம்பர் 31-ம் தேதிக்குள் அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட வேண்டும். இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் விரைவில் பொதுக்குழு கூடும் தேதி அறிவிக்கப்படலாம். அதில் பொதுச் செயலாளராக யாரைத் தேர்வு செய்கிறார்கள் என்கிற சஸ்பென்ஸ் உடையும்.

p22b.jpg

தேர்தல்களில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு கட்சியின் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்குத்தான் இருக்கிறது. அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கச் சொல்லி தேர்தல் கமிஷனுக்கு அளிக்கப்படும் ஃபார்ம் பி-யில் இதுவரை ஜெயலலிதாதான் கையெழுத்து போட்டு வந்தார். அப்போலோவில் இருந்தபோது நடந்த இடைத் தேர்தலில் கைநாட்டு வைத்தார். இந்த அதிகாரம் இனி யாருக்கும் போகும் என்பதும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படலாம்.

‘‘கட்சியைவிட்டு நீக்கப்பட்ட பின்பும் நாங்கள் மீண்டும் உள்ளே சென்ற பிறகு உங்களைப் பழி வாங்குவோம் என தலைமை மீது சந்தேகம் வருமளவுக்கு பேசுவோருக்கும் அவர்கள் பேச்சை நம்பி செயல்படும் கழகத்தினருக்கும் மன்னிப்பே கிடையாது’’ - 2011 பொதுக் குழுவில் ஜெயலலிதா இப்படி கர்ஜித்தார். அதாவது சசிகலா கட்சியை விட்டு நீக்கப்பட்ட 12-வது நாள் நடந்த பொதுக்குழுவில்தான் இந்த அஸ்திரத்தை ஜெயலலிதா வீசினார். அப்படிப்பட்ட சசிகலாவும் அவருடைய உறவுகளும் ராஜாஜி ஹாலில் சூழ்ந்திருந்தது போல பொதுக்குழுவிலும் கோலோச்சுவார்களா?

அப்படி கோலோச்சுவதற்கு எதிராக யாராவது நீதிமன்றத்தை நாடுவார்களா என்பதே அ.தி.மு.க-வில் நடக்கப் போகும் அடுத்தடுத்த காட்சிகள்!

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

'இப்படியும் பொதுச் செயலாளர் ஆகலாம்!' -சசிகலாவின் புது வியூகம்

sasi_garden1_12213.jpg

.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்யும் வேலைகள் தொடங்கிவிட்டன. 'கட்சியின் சட்டவிதிகளைப் பயன்படுத்தி, பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.கவின் அடுத்தகட்ட தலைமையை தீர்மானிக்கும் வேலைகள் வேகம் பெற்றுள்ளன. செங்கோட்டையன், ராஜ கண்ணப்பன், மதுசூதனன் உள்பட கட்சியின் சீனியர்கள் அனைவரும் ஒருமனதாக, சசிகலாவை பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னிறுத்தியுள்ளனர். ' கட்சிக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சின்னம்மாவால் மட்டுமே ஈடுகட்ட முடியும்' எனவும் அவர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில், ' 2011-ம் ஆண்டு ஜெயலலிதாவால் கார்டனில் இருந்தும் கட்சியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார் சசிகலா. அப்படிப் பார்த்தால் கட்சியின் உறுப்பினராக, தொடர்ந்து ஐந்தாண்டுகளை அவர் நிறைவு செய்யவில்லை. கட்சி விதிப்படி அவர் பொதுச் செயலாளர் ஆக முடியாது' என சசிகலா எதிர்ப்பாளர்கள் பேசி வந்தனர். 

" அ.தி.மு.க பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவும் சசிகலாவுக்கு இருக்கிறது. இதுவரையில் அவருக்கு எதிராக நின்றவர்களையும் ஆதரவாளர்களாக மாற்றிவிட்டார். சட்டரீதியாக தொடரப்படும் வழக்குகளை எதிர்கொள்வதற்கும் அவர் தயாராக இருக்கிறார். இப்படியொரு சூழலால் எதிர்க்கட்சிகள் பலம் பெற்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை உள்பட அனைவரும் சசிகலா பெயரை முன்னிறுத்தியுள்ளனர்" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், உள்கட்சி நிலவரத்தை தொடர்ந்து விவரித்தார்... "சசிகலாவால் கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சீனியர்கள் சிலர், வெளியில் உள்ள ஆட்களைத் தூண்டிவிட்டுச் செயல்படுகின்றனர். முந்தைய காலகட்டங்களில் ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் சசிகலாவால் ஓரம்கட்டப்பட்டனர். அதன் விளைவாக, தற்போது அவர் முன்னிறுத்தப்படுவதை சிலர் விமர்சிக்கின்றனர். கட்சி விதி எண் 20 மற்றும் 30-ன் படி பார்த்தால், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் பதவிக்கு, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் சசிகலா காத்திருக்க வேண்டும். கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று திரண்டு சசிகலா தலைமையை ஏற்றுக் கொள்வார்கள் என்பதையும் எதிர்பார்க்க முடியாது. அதேநேரம், கட்சிக்கு நெருக்கடியான சூழல் ஏற்படும்போது, பொதுக் குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி, புதிய பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யலாம். இதற்கு கட்சியின் சட்டவிதிகள் இடம் இருக்கிறது. பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவை அறிவித்தால், கட்சி விதிப்படி வெளியில் உள்ள யாரும் எதுவும் செய்ய முடியாது. சட்டரீதியாகவும் செல்லும் என்பதால் மன்னார்குடி தரப்பினர் உற்சாகத்தில் உள்ளனர்" என்றார் விரிவாக.  

thamduraiovvc1_12402.jpg

 

"பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கும் புகார்கள் சென்றுள்ளன. அதில், 'கட்சியின் பொதுச் செயலாளர் தேர்வு எவ்வாறு நடக்கிறது என்பதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும்' எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்திலும் சசிகலாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட இருக்கிறது. அதேபோல், பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கட்சியின் உறுப்பினர்கள் ஒன்று திரண்டும் பொதுச் செயலாளரை தேர்வு செய்யலாம். இதை ஒரு வாய்ப்பாக வைத்துக் கொண்டு, அந்தந்த மாநிலங்களில் சசிகலாவுக்கு எதிராக வழக்கு தொடரும் வேலைகளும் நடந்து வருகின்றன. பொதுக் குழு கூடுவதை சட்டரீதியாக தடுக்கும் வேலைகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள கட்சிக்காரர்கள் வழக்கு தொடர்ந்தால், தேவையற்ற சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால், வெளிமாநில அ.தி.மு.கவினர் முன்வைத்து காய்கள் நகர்த்தப்படுகின்றன. நீதிமன்றமும் புதிய பொதுச் செயலாளர் தேர்வுக்குத் தடை விதித்தால், சசிகலா தேர்வு செய்யப்படுவது தாமதமாகலாம்" என்கின்றனர் சசிகலா எதிர்ப்பு அணியைச் சேர்ந்தவர்கள். 

சட்ட நெருக்கடிகளையும் தாண்டி, பொதுக்குழுவுக்கான நேரத்தைக் கணிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர் கார்டன் வட்டாரத்தில். 

http://www.vikatan.com/news/tamilnadu/74961-general-secretary-post-sasikala-natarajans-new-strategy.art

  • தொடங்கியவர்

தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவராக சசிகலா இருப்பார், எப்படி?

 

 
sasi_3103604f.jpg
 
 
 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பை யார் ஏற்கப்போகிறார் என்பதுதான் இன்றைய பேசுபொருள். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி கட்சியின் மூத்த, முன்னணி நிர்வாகிகள் பலரும் சசிகலாவே பொதுச்செயலாளராக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். நேரடியாகப் பார்த்தால், வெறும் கட்சிப் பதவிபோலத் தோற்றம் அளித்தாலும், ஆளும்கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் என்பவர் மறைமுகமாக தமிழகத்தின் கடைக்கோடி நிர்வாகம் வரை தீர்மானிக்கும் வல்லமை படைத்தவர். எப்படி?

அதிமுக தொடர்பான அத்தனை நிர்வாக நடவடிக்கைகளுக்கும் பொறுப்பேற்கக்கூடிய பொதுச்செயலாளர் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களால் மட்டுமின்றி, கட்சியின் அடிப்படைத் தொண்டர்களின் பங்களிப்போடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அதிமுகவின் அடிப்படை விதி. மற்ற கட்சிகளில் இல்லாத விதிமுறை இது. பொதுச்செயலாளர் தேர்தலில் தமிழ்நாட்டுக் கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி, கட்சியின் கிளைகள் இருக்கின்ற புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, அந்தமான் என அனைத்து மாநில அடிப்படை உறுப்பினர்களும் தேர்தலில் வாக்களித்து அல்லது ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நிர்வாகிகளை நியமிக்கும் அதிகாரம்

கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந் தெடுக்கப்படும் பொதுச்செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களிலிருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைப் பொதுச் செயலாளர்கள், பொருளாளர், தலைமைக் கழகச் செயலாளர்களை நிர்வாக வசதிக்கேற்ப நியமித்துக்கொள்ளலாம். கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை உருவாக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கே உண்டு. அவற்றைக் கூட்டுகின்ற உரிமையும் அவருக்கே உண்டு. கட்சி யின் துணை அமைப்புகளுக்கான நிர்வாகிகளை நியமிக்கும் அதிகாரம் பெற்ற பொதுச்செயலாளர், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவின் வழிகாட்டுதலோடு கட்சிக்கான கொள்கைகளை உருவாக்குவது, செயல்திட்டங்களை வகுப்பது ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.

பொதுச்செயலாளர் விரும்பினால், கட்சியின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரத்யேகத் துணைச் செயலாளரை நியமிக்கலாம். அதேபோல, இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்களையும் நியமித்துக்கொள்ளலாம். ஒருவேளை, கட்சி நிர்வாகப் பதவிகளில் மூன்றில் ஒரு பங்கு இடம் பெண்களுக்குக் கிடைக்கப்படாத பட்சத்தில், அதை ஈடுசெய்யும் வகையில், குறிப்பிட்ட பொறுப்புகளில் பெண்களை நியமிக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. வெறுமனே பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தைத் தாண்டி, இந்த ஷரத்தை நோக்கினால், உள்ளர்த்தம் விளங்கும்.

நிதி சார் கணக்கு வழக்கு அதிகாரம்

கட்சியின் ஒட்டுமொத்த வரவு செலவுக் கணக்கையும் நிர்வகிக்கும் அதிகாரம் பெற்றவர் பொதுச்செயலாளர். குறிப்பாக, கட்சியின் தலைமை அலுவலகம் மட்டுமின்றி, அதன் இதர அசையும், அசையாச் சொத்துகளை நிர்வகிக்கும் அதிகாரமும் அவருக்கே. அந்தச் சொத்துகள் தொடர்பாக எழுகின்ற சட்டரீதியான சிக்கல்களை எதிர்கொள்ளும்போது, கட்சியின் பிரதிநிதியாகச் செயல்பட்டு, கட்சியின் சொத்துகளைக் காப்பாற்றும் பொறுப்பும் அவருக்கே உண்டு.

கட்சிக்கான பணத்தை எந்தவொரு சட்டபூர்வ வங்கியிலும் பாதுகாப்பாக வைப்பதற்கும், அந்தப் பணத்தை எடுத்து, கட்சி வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்குமான அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. முக்கியமாக, கட்சியின் சொத்துகளை மேற்குறிப்பிட்ட வங்கிகளில் அடகுவைத்துக் கடன் பெற்று, அந்தப் பணத்தையும் கட்சி வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம். பொதுச்செயலாளரின் அனுமதியோடு, இந்த விவகாரங்களைக் கட்சியின் பொருளாளரே செய்ய முடியும்.

ஒழுங்கு நடவடிக்கை அதிகாரம்

கட்சியின் விதிமுறைகள், கொள்கைக் கோட்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராகச் செயல்படுவோர், கட்சி நலனுக்குக் குந்தகம் விளைவிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. ஒழுங்கு நடவடிக்கை விஷயத்தில் இறுதிமுடிவு எடுக்கும் உச்சபட்ச அதிகாரம் பொதுச்செயலாளருடையது அல்லது அவர் எடுப்பதுதான் இறுதி முடிவு.

முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றங்கள் நிகழும்போது, கட்சியின் நிர்வாகக் குழுக்களைக் கூட்டுவதற்குப் போதுமான கால அவகாசம் இல்லாதபோது, முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. அந்த முடிவுக்கு அடுத்த பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்றுக்கொள்ளலாம். பொதுச்செயலாளர் விரும்பினால், கட்சி நிர்வாகிகளின் கருத்துகளைக் கடிதம் வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

தேர்தல் சார் அதிகாரம்

கட்சியின் உட்கட்சித் தேர்தல்களை நடத்தும் அதிகாரமும் பொதுச்செயலாளருக்கே உண்டு. அதில் போட்டியிடுவதற்குச் சில விதிமுறைகள் இருக்கின்றன. குறிப்பாக, ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு நிபந்தனைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றைத் தளர்த்திக்கொள்ளும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு.

உள்கட்சித் தேர்தலைத் தாண்டி, சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வுசெய்வது ஆட்சிமன்றக் குழுவுக்கு உண்டு. ஆனால், அவர்களுக்குக் கட்சியின் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய பொதுச்செயலாளரின் கையெழுத்து அவசியம். ஆட்சிமன்றக் குழு கூடுவதற்குக் கால அவகாசம் இல்லாதபோது, வேட்பாளர் தேர்வு விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு.

அதிகார எல்லை

கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகமும் பொதுச்செயலாளரின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. ஒருவேளை, அதுவிஷயமாகப் பொதுச்செயலாளரை எதிர்த்து ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைக்குச் செல்லும்பட்சத்தில், உடனடியாக அவர் தனது அடிப்படை உறுப்பினர் பதவியை இழந்துவிடுவார். கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடியும். ஆனால், அது பொதுச்செயலாளர் பதவிக்கும் பொருந்துமா என்பது கட்சியின் விதிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

மாற்று ஏற்பாடு

கட்சியின் பொதுச்செயலாளர் பதவி காலியாக இருக்கும்பட்சத்தில், புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, முந்தைய பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட செயற்குழு, பொதுக்குழு, ஆட்சிமன்றக் குழு உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் கட்சியை வழிநடத்துவர்.

எல்லாம் சரி, சசிகலா இப்போது பொதுச் செயலாளராக வர முடியுமா?

கட்சியின் நிர்வாகப் பதவிக்குப் போட்டியிடக் கூடியவர், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு, எவ்வித இடைவெளியுமின்றி உறுப்பினராக நீடித்திருக்க வேண்டும் என்கிறது கட்சியின் விதி 30 பிரிவு 5. கடந்த 19 டிசம்பர் 2011 அன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா, பிறகு மன்னிப்புக் கடிதம் கொடுத்து, 1 ஏப்ரல் 2012 அன்று மீண்டும் கட்சியில் சேர்ந்துகொண்டார். அதன்படி பார்த்தால், அவர் கட்சியில் மீண்டும் சேர்ந்து ஐந்தாண்டுகள் நிறைவடைய இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன. ஆகவே, அவர் பொதுச்செயலாளராக வர முடியாது என்கிறார்கள் சிலர். தவிரவும், பொதுச்செயலாளர் நினைத்தால், இந்த நிபந்தனையைத் தளர்த்த முடியும். ஆனால், இங்கே பொதுச்செயலாளர் பதவியே காலியாக உள்ளதால், அதற்கும் வாய்ப்பில்லை என்று சொல்லி, சசிகலா பொதுச்செயலாளராக வர கட்சியின் சட்ட விதிகளில் இடமில்லை என்கிறார்கள்.

ஆனால், மேற்கண்ட விதியின் உட்பிரிவுகளை நுணுக்கமாக ஆய்வுசெய்தால், இன்னொரு அம்சம் காணக் கிடைக்கிறது. மேலே சொல்லப்பட்ட ‘ஐந்தாண்டு நிபந்தனை’ தேர்தல்களில் கட்சி யின் அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டதற்காகக் கட்சியிலிருந்து நீக்கப் பட்டு, பிறகு சேர்த்துக்கொள்ளப்பட்ட உறுப்பினர் களுக்குத்தான் பொருந்தும். ஆனால், சசிகலா நீக்கப்பட்டது வேறு காரணங்களுக்காக. ஆகவே, அவருக்கு இந்த ஐந்தாண்டு நிபந்தனை பொருந்தாது. ஆகவே, அவர் கட்சியின் பொதுச்செயலாளராக ஆவதற்குக் கட்சி விதிகள் குறுக்கே நிற்கவில்லை என்பதுதான் யதார்த்தம்.

சசிகலாவே இனி தீர்மானிப்பவராக இருப்பார்

ஆக, அதிமுக விதிகளைப் பொறுத்த அளவில் சர்வ வல்லமை மிக்க பதவி பொதுச்செயலாளர் என்பதாலேயே சசிகலா அப்பதவி நோக்கி நகர்கிறார். அதிமுகவின் முதல்வர், அமைச்சரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களில் தொடங்கி உள்ளாட்சியின் வட்ட உறுப்பினர்கள் செயல்பாடுகள் வரை - பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் - இனி சசிகலா தீர்மானிப்பவராக இருப்பார்!

- ஆர். முத்துக்குமார், எழுத்தாளர். ‘தமிழக அரசியல் வரலாறு’ முதலான நூல்களின் ஆசிரியர்.

http://tamil.thehindu.com/opinion/columns/தமிழகத்தின்-எதிர்காலத்தைத்-தீர்மானிப்பவராக-சசிகலா-இருப்பார்-எப்படி/article9425880.ece

  • தொடங்கியவர்

'சட்டப்படியும் சசிகலா வாரிசாக முடியாது!'  -கார்டனில் நடந்த அதிரடி ஆலோசனை 

sasi_garden2_12165.jpg

'சிகலா பெயரில் ஏழு லட்ச ரூபாய் டெபாசிட் செய்திருக்கிறார் ஜெயலலிதா. எனவே, அவரது சட்டப்படியான வாரிசு சசிகலா மட்டும்தான்' என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்தார். ' ஜெயலலிதாவின் வாரிசு என்ற உரிமையை சட்டப்படியாகவே சசிகலாவால் உரிமை கொண்டாட முடியாது' என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். 

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. இதற்கு அக்கட்சியின் சீனியர்கள் அனைவரும் ஆதரவு அளித்துள்ளனர். இதையடுத்து, கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டுவது தொடர்பான ஆலோசனையில் இறங்கியிருக்கிறார் சசிகலா. நேற்று ஜெயலலிதாவின் மறைவின் 11-ம் நாள் காரியத்தை கார்டனில் நடத்தியுள்ளனர். அமைச்சர்கள் உள்பட கட்சியின் சீனியர்களுக்கு கார்டனில் சாப்பாடு வழங்கப்பட்டது. அதேநேரம், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பேசும்போது, ' ஜெயலலிதாவின் மனசாட்சியாக சசிகலா செயல்பட்டார். நிர்வாகிகள் இடையே பிரச்னை வரும் போது, இரு தரப்பினரையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கும் பணியை சசிகலாவிடம் ஒப்படைத்திருந்தார். தனக்கு அடுத்தபடியான வாரிசாக சசிகலாவைத்தான் முன்னிறுத்தினார். ஸ்ரீராம் இன்வெஸ்டார் நிறுவனத்தில், 1991-ம் ஆண்டு ஏழு லட்சம் ரூபாயை சசிகலா பெயரில் டெபாசிட் செய்தார். அந்தப் பணத்திற்கு வாரிசாக சசிகலாவைத்தான் நியமித்துள்ளார். அவரே வாரிசு என கையெழுத்திட்டுள்ளார் ஜெயலலிதா' எனத் தெரிவித்தார். 

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் குமாரதேவனிடம் பேசினோம். " ஒருவர் பெயரில் பணத்தை டெபாசிட் செய்தால், அவர் அந்தப் பணத்திற்கு உரிமை கொண்டாடலாம். ஆனால், பணத்தை முதலீடு செய்தவரின் நேரடி வாரிசு என உரிமை கொண்டாட முடியாது. மரணம் அடைந்தவரின் சொத்துக்களுக்கு அவரது ரத்த சம்பந்தமுள்ளவர்கள் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியும். வங்கிகளில் டெபாசிட் செய்தவர் இறந்துவிட்டாலே, அந்தப் பணம் அவரது குடும்ப சொத்தாகிவிடுகிறது. அந்தப் பணத்தை அவரது சட்டப்படியான வாரிசுதாரர் மட்டுமே அனுபவிக்க முடியும்.  வாரிசு உரிமை சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் பணத்தை கையாள முடியும். அப்படி யாரும் இல்லாதபட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களின் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி ஆகியோர் உரிமை கொண்டாடலாம். அப்படி இல்லாத நேரத்தில், அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள், இரண்டாம் வாரிசுதாரர்களாக உரிமை கொண்டாட முடியும். இறந்தவர் ஏதேனும் உயில் எழுதி வைத்திருந்தால், அந்த அடிப்படையில் அவருடைய சொத்துக்களை வேறொரு நபர் அனுபவிக்கலாம். சொத்துக்கள் சென்னை நீதிமன்ற எல்லைக்குள் இருந்தால், உயிலை நிறைவேற்ற மனு அளிக்க வேண்டும். அதில் எதிர்ப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உயில் எழுதப்பட்ட நேரத்தைக் கணக்கிட்டு ஏற்படும் சந்தேகத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம். எப்படிப் பார்த்தாலும், ரத்த சம்பந்தமில்லாதவர்கள் சட்டப்பூர்வ வாரிசாக முடியாது" என்கிறார். 

'சட்டப்படியான வாரிசு சசிகலா மட்டும்தான்' என ஊடகங்களில் ஆணித்தரமாக வாதிட்டு வருகின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். மறுபுறம், ' பொதுச் செயலாளர் பதவிக்கு கட்சி விதிப்படி ஐந்து ஆண்டுகளை சசிகலா நிறைவு செய்யவில்லை' எனக் கூறி வழக்குத் தொடர்ந்தார் சசிகலா புஷ்பா எம்.பி. ' கட்சி உறுப்பினராக இல்லாத சசிகலா புஷ்பா வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது. உள்கட்சி விதிப்படி, கட்சி உறுப்பினர்கள் வழக்குத் தொடர்ந்தாலே உறுப்பினர் தகுதியை இழந்துவிடுகிறார்கள்' என அதிர வைத்தார் அ.தி.மு.க தரப்பு வழக்கறிஞர். இதையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கும் சசிகலாவுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார் நீதியரசர் கல்யாண சுந்தரம். வழக்கின் இறுதிக்கட்டத்துக்காக காத்திருக்கிறார்கள் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள்.

" டிசம்பர் 31-ம் தேதிக்குள் பொதுக்குழுவை நடத்தி முடிக்காவிட்டால், தேர்தல் ஆணையத்துக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதால், அடுத்துச் செய்ய வேண்டிய உடனடி காரியங்கள் பற்றித்தான் ஆலோசித்து வருகிறார் சசிகலா. கட்சியின் சட்ட விதிகளைப் பற்றியும் அவரிடம் விரிவாகவே எடுத்துக் கூறியுள்ளனர். சட்ட சிக்கல்களை எதிர் கொள்வது ஒருபுறம் இருந்தாலும், பொதுமக்கள் மத்தியில் சசிகலாவுக்கான ஆதரவைப் பெருக்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியமான அசைண்மென்ட். மாவட்டம்தோறும் சுவரொட்டிகள் ஒட்டுவது, நலத்திட்டப் பணிகளை வேகப்படுத்துவது என மாவட்ட நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டிசம்பர் 24 அன்று எம்.ஜி.ஆர் நினைவு நாளையொட்டி, எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை போடும் நிகழ்வில் சசிகலா பங்கேற்பார். அதன்பின்னர், கட்சி அதிகாரம் தொடர்பான விஷயங்கள் படிப்படியாக அரங்கேறும்" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

http://www.vikatan.com/news/tamilnadu/75190-sasikala-can-never-become-jayalalithaas-legal-heir-says-law-experts.art

  • கருத்துக்கள உறவுகள்
Quote

சட்டப்படி சசிகலா பொதுச் செயலாளர் ஆக முடியாது!

இது எங்களுக்கு தெரியாதா..!  சந்தில் திருடுபவர்கள் சட்டபடி ஆக முடியாதுதான் !!

டிஸ்கி :


எம்.ஜி.ஆர் ரூம்  போட்டு யோசித்து வகுத்த ரூல்ஸ் அன்ட் ரெகுலேசன் அப்படி !

  • தொடங்கியவர்

சசிகலா பொதுச் செயலாளரானால் இதுதான் நடக்கும்! சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் அலர்ட்

 

sasikala-_poes_garden_14370.jpg

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்படும். எனவே சசிகலா, பொதுச் செயலாளராகக் கூடாது என்று சட்டபஞ்சாயத்து இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது தோழி சசிகலா பொதுச் செயலாளராக வேண்டும் என்று கட்சியின் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவும், எதிர்ப்புகளும் கிளம்பிய நிலையில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் பகிரங்கமாகவே சசிகலாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ கூறுகையில், "கால் நூற்றாண்டு காலம் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக கோலோச்சியவர் ஜெயலலிதா. ஒரு அரசியல் இயக்கத்தை கட்டுகோப்புடன்  வழி நடத்தியவர் அவர். ஜெயலலிதாவின் மரணம் தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அ.தி.மு.க.வில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகி உள்ளது. அ.தி.மு.க.வின் அடுத்த பொதுச்செயலாளராக சசிகலாதான் வரவேண்டும், அவரை விட்டால் அந்த கட்சியை யார் வழிநடத்த முடியும் என திட்டமிட்டு செயற்கைதனமாக அந்தக்கட்சியிலும், தமிழக மக்கள் மத்தியிலும் கருத்து உருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. சசிகலாவுக்கு கட்சிக்குள் எதிர்ப்பே இல்லாதது போல ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். யார் வந்தால் என்ன? அது அ.தி.மு.க.வின் உட்கட்சி பிரச்னை என்று ஒதுங்கி வேடிக்கை பார்க்க முடியாது. ஏனெனில் யார் இந்த கட்சியை வழிநடத்த முன்வருகிறார்களோ அவரின் கட்டுப்பாட்டில் தான் தமிழக அரசும் இயங்கும். அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தமிழக மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.  அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றால் நாளை அவர் முதல்வராகவும் வாய்ப்புள்ளது. இது நடந்தால் தமிழக அரசு மிகவும் மோசமான நிலைக்கு வந்துவிடும். அது அனைத்து தமிழக மக்களையும் பாதிக்கும் என்பதால்தான் சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்க கூடாது என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் எச்சரிக்கிறது. இதற்கு சில காரணங்களையும் சொல்கிறோம்.

* சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றால் தமிழக அரசு சசிகலாவின் கட்டுப்பாட்டில் இயங்கும். அதனால் சசிகலாவின் உறவினர்களின் சொல்படிதான் தமிழக அரசு இயங்கும். அரசு நிர்வாகத்தில் பல அதிகார மையங்கள் உருவாகி ஊழலில் தமிழக அரசு சிக்கித் தவிக்கும். ஏனெனில் ஜெயலலிதாவால் துரோகிகளாக கண்டறியப்பட்டு கட்சியை விட்டு விரட்டப்பட்டவர்களை கொண்டு கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்கள். இது கட்சிக்கும், ஆட்சிக்கும் நல்லதல்ல.

* வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். இன்று அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஊழலில் சொத்து சேர்த்து தண்டனை பெற்றவர் ஊழல் இல்லா ஆட்சியை எப்படி கொடுக்க முடியும்?

* ஜெயலலிதாவுக்கு எதிராக துரோக சதிவலை பின்னியதில் சசிகலாவுக்கும் பங்குண்டு என்பதால் சசிகலா உட்பட 14  பேரை கட்சியை விட்டு 19/12/2011ல் ஜெயலலிதா நீக்கினார். பிறகு சசிகலா 28/03/2012ல் ஜெயலலிதாவுக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்தார்.

அந்த கடிதத்தில் சசிகலா கூறியது, "அக்கா எடுத்த ஒழுங்கு நடவடிக்கைக்கு பின்புதான் அதற்கான காரணம், பின்னணி, வெளியில் என்ன நடந்தது என்ற உண்மைகள் எனக்கு தெரிய வந்தன. அக்காவுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். வேதனை அடைந்தேன். இவை எல்லாம் எனக்கு தெரியாமலேயே நடந்துள்ளன. அக்காவுக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம். இனிமேல் அவர்களுடன் எனக்கு எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை. அரசியலில் ஈடுபட வேண்டும், கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும், அமைச்சர் பதவியை அடைய வேண்டும், ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்ற எந்த ஆசையும் எனக்கு கிடையாது. அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே விரும்புகிறேன்" என்ற மன்னிப்பு கடிதம் கொடுத்த பிறகு தான் 31/03/2012ல் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் சசிகலாவை மட்டும் கட்சியில் சேர்த்துகொள்வதாகவும் மற்ற துரோகிகளான எம்.நடராஜன், திவாகர், டி.டி.வி.தினகரன், வி.பாஸ்கரன், வி.என்.சுதாகரன், டாக்டர்.என்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன், ராவணன், அடையாறு மோகன், குலோத்துங்கன், பி.வி.மகாதேவன், தங்கமணி உள்ளிட்டோரும் மேலும் அடுத்த அறிக்கையில் கலியபெருமாள், எம்.பழனிவேல், வி.கிருஷ்ணமூர்த்தி, சந்தானலட்சுமி சுந்தரவனம், சுந்தரவனம், வைஜெயந்திமாலா, ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தொடரும் என்று தெரிவித்திருந்தார். இன்று வரை மேற்கண்ட 19 பேரும் ஜெயலலிதாவின் துரோகிகள் பட்டியலில் தொடர்கிறார்கள். இந்த துரோகிகளை வைத்துக்கொண்டு சசிகலா, ஜெயலலிதாவின் இறுதி சடங்கில் சகுனி ஆட்டம் ஆடியதை நாடே அறியும். ஜெயலலிதாவால் துரோகிகளாக விரட்டப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டு இன்று சசிகலா, கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றத் துடிக்கிறார். நீக்கப்பட்ட தன் உறவுகளுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொன்ன சசிகலா, அரசியல் ஆசை இல்லை என்று சொன்ன சசிகலாதான் இன்று மீண்டும் ஜெயலலிதாவின் ஆத்மாவுக்கு துரோகம் செய்துவிட்டு கட்சியை தன் வசப்படுத்த காய்களை நகர்த்துகிறார். இதை தடுக்கத்தான் சட்ட பஞ்சாயத்து இயக்கம் களம் இறங்குகிறது.

* யார் யாருக்கோ கட்சி பதவி கொடுத்து அழகு பார்த்த ஜெயலலிதா, தனது உடன் பிறவா சகோதரியாக அறிவிக்கப்பட்ட சசிகலாவுக்கு ஏன் கட்சியில், ஆட்சியில் பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கவில்லை என்று எண்ணிப்பார்க்க வேண்டும். 30 ஆண்டு காலம் உடனிருந்து உதவிய சசிகலாவுக்கு அவ்வாறான தகுதிகள் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் அவருக்கு எந்த பொறுப்பையும் ஜெயலலிதா கொடுக்கவில்லை. அவரை பொறுத்தவரை சசிகலா நல்ல உதவியாளர், உடன்பிறவா சகோதரி அவ்வளவு தான். வேலைக்காரரை குறுக்கு வழியில் எஜமானியாக்க துரோகிகள் கூட்டம் முயற்சி செய்வதை தடுக்க வேண்டும். தகுதியானவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

* யாரெல்லாம் சசிகலாவை பொதுச் செயலாளராக ஆதரவு அளிக்கிறார்கள் என்று பார்த்தால் ஜெயலலிதாவால் துரோகிகளாக கண்டறியப்பட்டு கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்கள். மேலும், ஜெயலலிதாவால் தண்டிக்கப்பட்ட கட்சியின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் உயர் அரசு அலுவலர்கள். கொள்ளையடிக்க நினைக்கும், உள்ளாட்சி பொறுப்பாளர்கள், எம்பி, எம்எல்ஏ, அமைச்சர்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள். இந்த மூன்று பிரிவினர் தான் சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என அரசியல் சடுகுடு வேலையில் இறங்கி உள்ளார்கள்.

உண்மையான கட்சி தொண்டர்களும், அதிமுக விசுவாசிகளும் ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட மன்னார்குடி துரோகிகளை விரட்ட வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். இதுதான் ஜெயலலிதாவுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். எனவேதான் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க கூடாது என எச்சரிக்கை செய்கிறது.

ஜெயலலிதாவின் ஆத்மாவுக்கு துரோகம் செய்துவிட்டு கட்சி பொறுப்பையும், ஆட்சி பொறுப்பையும் ஏற்றுக்கொண்டால், இந்த துரோகச் செயலை மக்களிடத்தில் எடுத்து சென்று மக்களை திரட்டி ஊழல் ஆட்சியை துரோக அரசியலை அகற்றி ஊழலில்லா மக்கள் வளர்ச்சிக்கான நல்லாட்சி அமைய சட்ட பஞ்சாயத்து இயக்கம் களமிறங்கும் என துரோகிகளை இதன் மூலம் எச்சரிக்கிறோம்" என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/75197-this-is-what-will-happen-if-sasikala-becomes-general-secretary.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.