Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் பேரவையின் முதலாம் ஆண்டு பூர்த்தியடைந்த இன்று இணைத்தலைவர் Dr.லக்ஸ்மன் உரை

Featured Replies

தமிழ் மக்கள் பேரவையின் முதலாம் ஆண்டு பூர்த்தியடைந்த இன்று இணைத்தலைவர் Dr.லக்ஸ்மன் உரை

Dr-Laxman.jpg

தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டு பூர்த்தியடைந்துள்ள இன்றையநாளில் , மீண்டும் ஒரு முறை நாம் இங்கு கூடியிருக்கின்றோம்.

எதுவித தனிப்பட்ட , சுய அரசியல் நலன்களை விடுத்து  இனத்தின் நலனை மட்டும் இலக்காக கொண்டு நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து இயங்கவேண்டிய காலத்தின் தேவைப்பாட்டை உணர்ந்து தமிழ் மக்கள் பேரவை 19/12/2915அன்று முதன்முறையாக தனது உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்டிருந்தது.

எனினும் , நீங்கள் அனைவரும் அறிந்த வகையில் , ஆயுதமோதல்களின் முடிவிற்கு பின்னரான சூழ்நிலையில் , எம் மத்தியில் நிலவிவந்த மற்றும் திட்டமிட்டே ஏற்படுத்தப்பட்ட  குழப்பகரமான சூழ்நிலைகள், தேர்தல் அரசியலுக்கு அப்பாலான, இப்படியான , கொள்கைவழி ஒன்றிணைவு ஒன்றின் அவசியத்தை வலியுறுத்திநின்றது.

அதற்கான முன்முயற்சிகள் ஏறத்தாழ நான்குவருடங்களாக பலமட்டங்களில் நடைபெற்று வந்து , கடந்த வருட இறுதியில் தமிழ் மக்கள் பேரவை செயற்பட ஆரம்பித்தது.

இந்த ஒன்றிணைவுக்காக உழைத்த அனைவருக்கும், இனத்தின் நலன்கருதி.  கொள்கைவழிப்பட்டு ஒன்றிணைந்த அனைவருக்கும், எமது நன்றிகள். 

எதிர்காலம்பற்றிய கேள்விக்குறியுடன் நின்றிருந்த மக்களுக்கு தமிழ் மக்கள் பேரவையின் தொடக்கமும் செயற்பாடுகளும் மிகுந்த நம்பிக்கையை கொடுத்திருக்கின்றன என்பது மக்களுடன் நிற்கும் அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு வெளிப்படையான விடயமாகும்.

அதே நேரம் மக்களின் இந்த எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையும் எமது கடப்பாடுகளையும் பொறுப்புகளையும் மேலும் உறுதிப்படுத்துகிறது.

மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றபடி, எமது இனத்தின் அபிலாசைகளை முன்னிறுத்தி, எமக்காக இழைக்கப்பட்ட அர்ப்பணிப்புகளை மனதில் கொண்டு, நாம்தொடர்ந்தும் மக்களுக்காக உழைப்போம் என இத்தருணத்தில் உறுதிகொள்ளுகிறோம்.

இத்தருணத்தில் கடந்த ஒருவருடத்தில் நாம் செய்தவைகளையும் மீள நினைவுபடுத்தல் அவசியமாகின்றது.

 

எமது அனைத்து செயற்பாடுகளும் எந்த ஒரு தனி மனிதருக்கோ அல்லது தனிஅமைப்புகளுக்கொ சொந்தமானதல்ல, எவரும் அப்படி உரிமை கோருவதும் இல்லை .  இவை அனைத்தும், எமது தேசத்தின் பெயரிலான அனைவரினதும் கூட்டுமுயற்சியே.உண்மையில் இப்படியாக எம்மத்தியில் தனி நபர்களையோ அமைப்புகளையோ முன்னிலைப்படுத்தாத , கோட்பாடுகளை மட்டும் முன்னிலைப்படுத்துகின்ற தேச நலன்சார்ந்த  ஒருகூட்டுமனோநிலையை உருவாக்கியதுதான் தமிழ் மக்கள் பேரவை ஆற்றிய மிகக்காத்திரமான பணி என நான் நம்புகிறேன்.

பேரவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு மிகக்குறுகிய காலத்தினுள் , இலங்கை இனப்பிரச்சினையின் தீர்வு குறித்தான தமிழர் தரப்பு தீர்வு வரைபு ஒன்று, துறைசார்நிபுணர்களினால் உருவாக்கப்பட்டு, மக்கள் கலந்துரையாடல் மூலம் செழுமைப்படுத்தப்பட்டு முன்வைக்கப்பட்டது. இப்படியாக மக்கள் பங்களிப்புடன் கூடிய தீர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்பட்டது எமது  வரலாற்றில் முதன்முறையாக நடந்த ஒருநிகழ்வாக பதியப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு எனும் பெயரில் எமது புதிய அரசியலமைப்பு ஒன்று முன்வைக்கப்பட இருக்கின்ற மிகவும் தீர்க்கமான சூழ்நிலையில், எமது தீர்வுவரைபானது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

அதனையொட்டி மக்களிடையே எழுந்த அரசியல் கலந்துரையாடல்களும் விழிப்புணர்வும் “எழுக தமிழ்” பேரெழுச்சியாக யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டம்பர் 24 அன்று வெளிப்பட்டிருந்தது.

ஜனநாயக ரீதியில், எமது அபிலாசைகளை மக்களாகவே எழுந்துவந்து, ஒன்றிணிணைந்து கூறியமை , எமது அரசியல் சார்ந்து உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டங்களில் பெரும் தாக்கத்த்தை ஏற்படுத்தியிருந்தது.

குறிப்பாக ஆயுதமோதல்களின் முடிவிற்கு பின்னரான கால்பகுதியில் ஏற்பட்ட தன்னெழுச்சியான இந்த எழுச்சிப்பேரணியானது, எமது அடிப்படைக்கோட்பாடுகள் மீது மக்கள் கொண்டிருக்கும் பற்றுறுதி குறித்து காத்திரமான செய்தி ஒன்றை வெளிப்படுத்தியிருந்தது .

அதன் தொடர்ச்சியாக , எம் தேசத்தின் மீதான இன அழிப்பில் மிகவும் பாதிக்கப்பட்டதும் ,எம் தேசத்தின் மிக முக்கிய பகுதியுமாகிய கிழக்கு மாகாணத்தில் “எழுக தமிழ்”  எழுச்சி நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 21 ம் திகதி இடம்பெற இருக்கின்றது.

இது தவிர எமது கலை கலாச்சரக்குழுவினால்  , அடையாளச்சிதைப்புக்குட்பட்டு வரும் எமது பாரம்பரிய கலைகளை அங்கீகரித்து மேம்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பில் மாபெரும் முத்தமிழ் விழாவொன்று நடத்தப்பட்டிருந்தது.

இவ்விழாவில் இலங்கையின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பல கலைஞர்கள் பங்குபற்றி அளிக்கை செய்திருந்தனர். அத்தோடு, எமது தேசத்தில் நடக்கவேண்டிய அபிவிருத்திப்பணிகள் , குறுகிய கால நலன்களுக்கும் அரசியல் லாபங்களுக்கும் அப்பால்,நீண்டகால நோக்குடன் தீர்மானிக்கப்படவேண்டும் என்ற நோக்கோடு பேரவையின் பொருண்மிய அபிவிருத்திக்குழு செயற்பட்டு வருகின்றது. 

இவை தவிர்ந்த கல்விக்குழு மற்றும் பொறுப்புக்கூறலுக்கான குழு என்பன விரைவில் தமது பணிகளை ஆரம்பிக்கும்.

இவற்றிற்கு மேலதிகமாக ,தமிழ் மக்களின் அரசியல் விருப்புகளையும், எமது மண்ணில் நடந்த நடக்கும் அநீதிகளையும் உண்மைத்தன்மையுடன் தென்னிலங்கை மக்களுக்கு தெரிவித்ததன்  மூலம்,எமது பிரச்சினை மற்றும் அதற்கான நியாயமான தீர்வு குறித்து தென்னிலங்கை மக்களுடன் நேரடியான ஒரு உரையாடலை ” வடக்கு தெற்கு மக்கள் கலந்துரையாடல்” எனும் தொனிப்பொருளில் ஆரம்பித்து வைத்துள்ளோம். இது பல்வேறு மட்டங்களிலும் மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ளதுடன் , பேரவை மீதும் அதன் செயற்பாடுகள் மீதும் திட்டமிட்டு புனையப்பட்ட அவதூறுகளையும் பெருமளவில் களைந்துள்ளது .

இப்படியாக, இலங்கைத்தீவில் உள்ள சகல சமூகங்களிலுமுள்ள முற்போக்கு சக்திகளுடன் இணைந்து எமது மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வுக்கான கலந்துரையாடல்களையும் ஆக்கபூர்வ முயற்சிகளையும் இனிவரும் காலங்களில் பேரவை தொடர்ந்தும் மேற்கொள்ளும்.

அத்தோடு, தமிழர்களின் பிரச்சினைகள் , தீர்வுக்கான தமிழர்களின் எதிர்பார்ப்புகள் என்பனபற்றியும் சர்வதேச சமூகத்தின் அங்கத்தவர்களுடன் தொடர்ந்தும் தொடர்புகளை பேணி விளக்கமளித்து வருகின்றோம்.

இந்நிலையில் , பேரவையின் செயற்பாடுகளில் உள்ள சில போதாமைகள் குறித்தும் நாம் இத்தருணத்தில் கவனம் செலுத்தவேண்டும்.

மக்களுக்கான அரசியலை மேலும் மக்கள் மயப்படுத்தி, மக்களுடன் இறங்கி வேலை செய்வதில் , மிகுந்த போதாமை இருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

அத்தோடு, தாயகத்தில் செயற்படும் ஏனைய மக்கள் அமைப்புகளையும் , பொது நோக்கில் , பொது வேலைத்திட்டத்தில் ஒன்றிணைக்கும் செய்ற்பாட்டைப்பொறுத்தவரையில் இன்னமும் பலபடிகள்முன்னேற வேண்டியிருக்கிறது.

அது போலவே, பேரவையில் பெண் பிரதிநித்துவத்தை அதிகரித்து ஒரு சமநிலைக்கு கொண்டுவர எடுத்த முயற்சிகளும் இன்னமும் பூரண வெற்றியை தரவில்லை .

தாயகத்தின் மக்கள் செயற்பாட்டாளர்கள் அனைவரும்  பேரவையுடன் இணைந்து செய்ற்படமுன்வருவதன் மூலமாகவே இக்குறைபாடுகளை முற்றாக இல்லாமல் செய்ய முடியும்.

இனி செய்ய வேண்டியவை:-

பேரவை செய்ய வேண்டிய செயற்பாடுகள் ஏராளம் இருப்பினும், இன்றைய அரசியல் சூழ்நிலையின் முக்கியத்துவம் கருதி, சில வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.

குறிப்பாக, 

  1.  புதிய அரசியலமைப்பு குறித்தும், எமது மக்களின் அபிலாசைகளின் அரசியல் விஞ்ஞான ரீதியான நியாயப்பாடுகள் மற்றும் சாத்தியப்பாடுகள் குறித்தும் , எம் தாயகப்பகுதியெங்கும் கலந்துரையாடல்கள் நடத்தப்படவேண்டும். 
  2. வெறுமனே அரசியல்விஞ்ஞான சொற்களை மாற்றுவதன் மூலமும் வார்த்ததை விளையாட்டுகள் மூலமும் மக்கள் பிழையான திசையில் வழைநடத்தப்படாதிருக்க , மக்களுக்கான அரசியல கலந்துரையாடல்கள் பரவலாக இடம்பெறவேண்டும்.
  3. பேரவையின் தீர்வுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மீண்டும் மக்கள் மத்தியில் பரவலாக  ஆரம்பிக்கப்படவேண்டும்.
  4. தாயகத்தின்  மக்கள் அமைப்புகள் தொழிற்சங்கங்களை எமது மக்களின்நலன் எனும் பொது நோக்கில் ஒன்றிணைக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவேண்டும்.
  5. எமது அபிலாசைகளை முன்வைத்து மக்கள் அணிதிரள்வுகளை தாயகமெங்கும் நடத்த வேண்டும்.
  6.  சர்வதேச அரங்குகளில் எமது பிரச்சினைக்கான நியாயமான தீர்வு எது என்பது பற்றியும் , மக்களின் ஜனநாயக விருப்புபற்றியும் நேர்மையுடன் வெளிப்படுத்தவேண்டும்.
  7. இலங்கையின் அனைத்து சமூகங்களுடன் புரிந்துணர்வின் அடிப்படையில் எமது பிரச்சினைகளினதும் தீர்வுகளினதும் நியாயப்பாடுகள் குறித்த கலந்துரையாடல்கள்  ஒழுங்கமைக்கப்படவேண்டும்.

இன்றைய சூழல், பேரவை உருவாகிய சூழலை விட தீர்க்கமானது.

எமது இனத்தின் இத்தனைகால அர்ப்பணிப்புகளும் மக்கள் எதிர்கொண்ட அத்தனை அவலங்களும் அர்த்தமிழந்து போகக்கூடிய வண்ணம் , சூழ்நிலைகள் கட்டியமைக்கப்படுகின்றமை வெளிப்படையாக தெரிகின்றது.

இனியும் , விவாத திறமையை வெளிக்காட்டும் பட்டிமன்றங்களாக , வார்த்தைவிளையாட்டுகள் மூலம் செய்யப்படும் அர்த்தமற்ற ஏமாற்று அரசியலில் திசைமாறாது , அதை மக்கள் நலன்சார்ந்த அரசியலாக மாற்ற நாம் அனைவரும் முன்வர வேண்டும் .

இது எந்த ஒரு அமைப்புக்கோ அல்லது இனத்துக்கோ எதிரானதோ அல்லது எந்தஒரு அமைப்புக்கோ ஆதரவான கோரிக்கையோ அல்ல.

எமது இனத்தின் நீதிக்கான குரல்.

இவ்வளவு காலமும்நாம் கடந்து வந்த அர்ப்பணிப்புகளுக்கான குரல், 

காலம்காலமாக ஏமாற்றப்பட்டு வந்த எமது மக்களிற்கான குரல்.

இதில், நாம் அனைவரும், மனச்சாட்சியின்படி ஒன்றுபட்டு  எமது மக்களின் நீதிக்காக ஒன்று சேர்ந்து உழைக்க முன்வருமாறு எமது மக்கள், மக்கள்செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகள் , ஊடகங்கள் என அனைவரையும் தமிழ் மக்கள் பேரவை உரிமையுடன் அழைக்கிறது.

நன்றி

19/12/16

http://globaltamilnews.net/archives/10853

  • கருத்துக்கள உறவுகள்

மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

அரசாங்கம் சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளைக் காற்றில் விட்டு விட இடமளிக்க முடியாது

wikky.jpg

தமிழ் மக்கள் பேரவை
முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி
யாழ் நூலக மண்டபத்தில்
19.12.2016 அன்று மாலை 5 மணிக்கு
இணைத்தலைவருரை

குருர் ப்ரம்மா…………….
எனதினிய இணைத்தலைவர் டாக்டர் இலக்ஷ்மன் அவர்களே, சமயப் பெரியார்களே,   எம்மோடு இணைந்திருக்கும் உறுப்பின சகோதர சகோதரிகளே,  எல்லோருக்கும் வணக்கம்.

பல பிரச்சனைகள் மத்தியிலும் எமது பேரவையின் ஓராண்டுப்பூர்த்திப் பெருங்கூட்டத்தில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இன்று கொழும்பில் இருப்பதாகவே இருந்தது. சென்ற வார வடமாகாண சபைக் கூட்டத்தை இந்த வாரம் ஒத்தி வைத்ததால் நான் கொழும்பில் ஆற்ற வேண்டிய பணிகளை சென்ற வெள்ளிக்கிழமையன்றே முடித்துக் கொண்டு நாளை வர வேண்டியவன் இன்றே வந்து விட்டேன். ஆனால் சீரற்ற காலநிலையால் மூன்று மணித்தியாலங்கள் தாமதமாகியே வந்தேன்.

இந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்பது தெய்வ சங்கற்பம் போன்று தோன்றுகின்றது. தமிழ் மக்கள் பேரவை உதயமாகியதே அவ்வாறான ஒரு இறை சங்கற்பமாகவே நான் கருதுகின்றேன். “அரசாங்கம் எது தந்தாலும் பரவாயில்லை, எம் மக்கள் நாம் கூறுவதை ஏற்றுக் கொள்வார்கள்” என்றிருந்த சூழலை மாற்றி “இது தந்தால்த்தான் எம்மக்கள் வரவேற்பார்கள், இல்லையேல் எம்மைப் புறக்கணித்து விடுவார்கள்” என்று கூறக்கூடிய சிந்தனை மாற்றங்களை உருவாக்கியூள்ளது தமிழ் மக்கள் பேரவை.

பாரம்பரியமாகத் தமிழ்ப் பேசும் மக்கள் காலாதி காலமாக வாழ்ந்து வரும் இடங்களை, அவ்வாறே தொடர்;ந்தும் அடையாளப்படுத்தும் விதத்தில் சட்ட ரீதியான அங்கீகாரத்துடன் நம்மை நாமே ஆளும் உரிமையூடன் நாம் வாழ வேண்டும் என்ற எண்ணக் கருவை மையமாக வைத்தே நாங்கள் எமது அரசியலமைப்பு ரீதியான முன்மொழிவூகளை அரசாங்கத்திடம் கையளித்தோம். முதன் முதலாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அடிமட்ட அபிலாஷைகளை அவையறிய நாம் அறிவித்தது இந்தத் தருணத்தில்த்தான். அந்தக் கணந் தொடக்கம் அடிமட்டத் தமிழ் மக்களின் கரிசனைகளை அரசாங்கம் அசட்டை செய்ய முடியாது என்ற கருத்தை நாம் வலியூறுத்தி வருகின்றௌம்.

போரின் பின்னர் தமிழ் மக்கட் பிரதிநிதிகளின் குரல்கள் சில காலம் ஓங்கி ஒலிக்கத் தவறிவிட்டன. போரில் தோற்று விட்டோமே நாம் எப்படி எமது உரித்துக்களைக் கேட்க முடியும் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு அவர்கள் ஆளாகியிருந்தார்களோ நானறியேன். ஆனால் மக்களின் மனோநிலை என்ன அவற்றைப் பிரதிபலிப்பது எமது கடமையல்லவா என்ற எண்ணத்தை அவர்கள் பலர் அடியோடு மறந்திருந்ததாகவே நான் உணர்ந்தேன். ஆங்கிலத்தில் அல்லது சிங்களத்தில் பெரும்பான்மையின மக்களின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டிய எமது மக்களின் அவலங்களை, அபிலாஷைகளை, அங்கலாய்ப்புக்களைப் பாராளுமன்றத்தில் எம் பிரதிநிதிகள் தமிழில் பேசி விட்டு வர அவர்கள் கூறியதை எவருமே கணக்கெடுத்ததாகத் தெரியவில்லை.

தாம் பேசியதைத் தமிழ்ப் பத்திரிகைகளில் இடம் பெறச் செய்தால் அதுவே போதும், அரசில் தீர்வூகள் எது கிடைத்தாலும் அதனை ஏற்கலாம், எங்களுக்குத் திருப்பிக் கேட்கும் உரித்து இல்லை என்ற எண்ணத்திலேயே தமிழ் மக்கள் பேரவை ஜனனமாகும் வரையில் எமது தலைமைத்துவங்கள் இருந்து வந்ததாகத் தெரிகின்றது. தற்போது எமது தலைமைத்துவங்கள் விழித்துக் கொள்ளவூம் தன்னம்பிக்கையுடன் முன்னேறவும் நீங்கள் வழி அமைத்துக் கொடுத்துள்ளீர்கள். இந்த ஒரு வருடத்தினுள் எமது தமிழ்த் தலைமைத்துவங்கள் தன்னம்பிக்கையூடன் முன்னேற நீங்கள் அடிகோலியூள்ளீர்கள். நாங்கள் எமது தலைமைத்துவங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களுக்குப் பக்க பலமாக நின்று மக்கட் பணியில் ஈடுபட்டு வருகின்றவர்களே நாங்கள் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளீர்கள்.

அடுத்து நாங்கள் இராணுவத்திற்குப் பயந்து, அரசாங்கத்திற்குப் பயந்து, பொலிசாருக்குப் பயந்து எமது எண்ணக்கருத்துக்களை எடுத்துரைக்க முடியாது பேசாமடந்தைகளாக இருந்த காலத்தை மாற்றி தமிழ் மக்களின் அவலங்களை, ஆசைகளை அகிலமறியப் பொங்கியெழுந்து ஆனால் பொறுமையாக எடுத்துரைத்தமையால் எமது மக்களின் தன்னம்பிக்கையை தளிர்த்தெழச் செய்துள்ளீர்கள். குட்டக் குட்டக் குனியூம் மக்கள் அல்ல நாங்கள். குடியூரிமை கேட்டால் குட்டவா பார்க்கின்றீர்கள் என்று குட்டியவனையே குறைகூறும் அளவிற்கு எம் மக்களுக்கு உற்சாகத்தை ஊட்டியவர்களும் நீங்கள் தான். தமிழ் மக்கள் பேரவை அதன் பொருட்டு பெருமைப்படலாம்.

மூன்றாவதாக நாங்கள் வடக்கு கிழக்கு மக்களை ஒன்று கூட்டும் வகையில் முத்தமிழ் விழாவென்றினை மட்டக்களப்பில் நடத்தி தமிழ் பேசும் வடக்கு கிழக்கு மக்களின் அடுத்திருக்கும் அண்மைத்துவத்தை உலகம்

பூராகவும் பறைசாற்றியூள்ளீர்கள். வடக்கு கிழக்கில் எத்தனை சிங்களவர்கள் வாழ்கின்றார்கள் என்பது அல்ல முக்கியம். வடக்கு கிழக்கு பாரம்பரியமாகத் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்ந்த, வாழ்ந்து வரும் இடங்கள் என்பதையே நாம் யாவருக்கும் உணர்த்த வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றௌம். சிங்களவர்களிடையே இருக்கும் தமிழர்கள் சிங்களம் பேசுவதும் தமிழ் பேசும் மக்களிடையே வாழும் சிங்களவர்கள் தமிழ் பேசுவதும் நாங்கள் எதிர்பார்க்கக்கூடிய ஒரு விடயந்தான். ஆனால் அடிப்படைகளில் நாங்கள் கண்ணுங் கருத்துமாக இருக்க வேண்டும். அதாவது தமிழ்ப் பேசும் மக்களைச் சிங்களம் பேசும் மக்களாக வேண்டுமென்றே மாற்ற எத்தனிப்பதும் அவர்கள் வாழ்ந்து வந்த இடங்களைப் பெயர்மாற்றம் செய்ய முற்படுவதும் இன அழிப்புக்குச் சமமானது என்ற கருத்தை நாங்கள் வலியூறுத்த வேண்டும். இதன் காரணத்தினால்த்தான் வடக்கு கிழக்கு தமிழ்ப் பேசும் மக்களின் கலை கலாச்சார ஒற்றுமைப்பாட்டை மக்களுக்கு உணர்த்துவிக்க முத்தமிழ் விழா ஒன்றை நடத்தி அதில் வெற்றியூம் கண்டீர்கள்.

தமிழ் மக்கள் பேரவை தொடங்கிய நாட்களில் எம்மிடையே இருந்த ஒருவித சந்தேக நிலை, மயக்க நிலை, மந்த நிலை, குழப்ப நிலை ஆகியன தற்போது மலையேறிவிட்டது என்றே கூறவேண்டும். எமது இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சிகளைக் கூடிய வலுவூடன் வீறு கொண்டு செயற்படுத்த வேண்டிய ஒரு தருணத்தை அடைந்துள்ளோம்.

அரசாங்கம் சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளைக் காற்றில் விட்டு விடவே கரவாக இயங்கி வருகின்றது. அதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது. எமது அரசாங்கம் சர்வதேசத்திடம் சம்மதம் தெரிவித்துக் கொண்ட சட்ட ஆவணங்கள் மூன்றை நாங்கள் எமக்குச் சாதகமாகப் பாவிக்குங் காலம் எழுந்துள்ளது. 2009 மே மாதத்தில் அப்போதைய இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துடன் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில் இனித் தாம் என்னென்ன செய்யவிருக்கின்றார்கள் என்பதை உலகறியச் சொன்னார்கள். அந்தக் கூட்டறிக்கையில் கூறியவை குறையின்றி எமக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை நாம் ஆராய்ந்து பார்த்து இலங்கை அரசாங்கத்தின் கடப்பாட்டை நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

அடுத்து இணக்க அடிப்படையில் ஜெனிவாவில் கொண்டு வந்து கைச்சாத்திட்ட பிரேரணையின் பிரிவூகளின் படி இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து விட்டதா? இல்லை என்றால் ஏன் அவ்வாறு செய்யவில்லை? எப்பொழுது செய்யப் போகின்றீர்கள் என்று சட்டரீதியாகக் கேட்டு இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடுகளை அதற்குணர்த்தி அது காலங் கடத்திச் செல்வதைக் கண்டித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கடமை எமக்குண்டு.  மூன்றாவதாக மேலும் ஒரு கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு இருப்பதை நாம் அவர்களிற்கு இடித்துக் கூறும் கடப்பாடொன்று எமக்கு உதயமாகியுள்ளது.

70 வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் பரிந்துரைகளுக்கு அமைவாக 2030ம் ஆண்டில் அடைய எதிர்பார்க்கப்படும் நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தி இலக்குகளை அதாவது Sustainable Development Goals என்ற இலக்குகளைக் கவனத்திற் கொண்டு எமது அபிவிருத்திப் பாதையை நிர்ணயிக்க வேண்டிய கடப்பாடு எமக்குண்டு என்பதை நாம் எமது இலங்கை அரசாங்கத்திற்கு எடுத்துரைக்கும் காலம் உருவாகியூள்ளது. அரசாங்கம் இப்பொழுதெல்லாம் SDGs பற்றிப் பெருமையாகப் பேசி வருகின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மறுவாழ்வூக்காகச் செய்யவேண்டிய கடப்பாடுகள் பல அவற்றுள் அடங்கியிருப்பதை நாம் அரசாங்கத்திற்கு உணர்த்த முன்வர வேண்டும். சர்வதேச எதிர்பார்ப்பின் படி எங்கள் அரசாங்கம் கைச்சாத்திட்ட அந்த ஆவணத்தின் அடிப்படைகளை அரசாங்கம் நிறைவூ செய்துள்ளதா என்ற கேள்விக்கு அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற நாங்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

வறுமை ஒழிப்பு, பசி ஒழிப்பு, நற்சுகாதாரம், தரமான கல்வி, பாலினச் சமத்துவம்,துhயநீரும் துப்புரவூம், மலிவான மின் போன்ற சக்தி வகைகள், கண்ணியமான வேலை வாய்ப்பும் பொருளாதார மேம்பாடும், கைத்தொழில், புத்தாக்கம் மற்றும் உட்கட்டமைப்புக்களை உருவாக்கல், சமூக ஏற்றத் தாழ்வுகளை அகற்றுதல், நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்களை உருவாக்குதல், பொறுப்புடைய உற்பத்தியும் நுகர்வும், காலநிலை நடவடிக்கை, நீர்வாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல், தரைவாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல், சமாதானம், நீதி கிடைக்கக் கூடிய உறுதியான சமூகங்களையூம் அமைப்புக்களையூம் உருவாக்கல் மற்றும் இலக்குகளை அடைய கூட்டுப்பங்காண்மையை உருவாக்கல் போன்ற 17 இலக்குகளை ஐக்கிய நாடுகள் அடுத்த 15 வருடங்களில் நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தி இலக்குகளாக அடையாளங் கண்டுள்ளது. எமது நாடு இந்த ஆவணத்திற்கு உடன்பட்டு கைச்சாத்திட்டுள்ளது என்ற அடிப்படையில் மேற்படி இலக்குகளை அடைவதில் எமக்கும் எமது நாட்டு அரசாங்கத்திற்கும் கூட்டுப் பொறுப்புள்ளது. 16வது இலக்கை எடுத்துப் பார்த்தோமானால் அது பின்வருமாறு கூறுகின்றது –

“நிலைத்த அபிவிருத்திக்காக சமாதானத்துடன் கூடிய எல்லோரையூம் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்கல் மற்றும் யாவருக்கும் நீதி கிடைக்கச் செய்தல், மேலும் தக்க உறுதியான அமைப்புக்களைச் சகல மட்டங்களிலும் உருவாக்கல் என்பன” என்று கூறுகின்றது. இவற்றை மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் மதித்து அவற்றை உருவாக்கும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டிய காலம் எம் அனைவரையூம் அண்டி வந்துள்ளது. இதனை நாங்கள் மத்திய அரசாங்கத்திற்கு வலியூறுத்த வேண்டிய தருணம் கனிந்து வந்துள்ளது.

வடமாகாணத்தில் 150000 இராணுவ வீரர்களை நிலைத்து நிற்க வைத்துவிட்டு சமாதானத்துடன் கூடியஇ எல்லோரையூம் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்க முடியாது. நீதி கிடைக்கச் செய்ய முடியாது. மாகாணத்திற்குரிய உறுதியான அமைப்புக்களை உருவாக்க முடியாது. ஆகவே தகுந்த காரணங்கள் இன்றி தொடர்ந்து இராணுவத்தினரை இங்கு நிலை பெற வைக்கின்றமை மேற்படி நிலையான அபிவிருத்திக்கான இலக்குகளுக்கு முரண்பாடுடையதானது. ஆகவே இராணுவத்தினரை வெளியேற்றுவது அரசாங்கத்தின் தலையாய கடப்பாடுகளில் ஒன்றாக அமைகின்றது. சர்வதேசம் எதிர்பார்க்கும் சட்டப்படியான கடப்பாடுகள் அரசாங்கத்திற்கு இருந்தால் அவற்றை வெளிக்கொண்டு வந்து “நீங்கள் உங்களிள் கடமைகளைச் செய்யவில்லை” என்று குற்றஞ் சாட்டுவது அவர்களுக்கு நெருக்குதல்களைக் கொடுப்பதாக அமைவன. எமக்குச் சுயநிர்ணயத்தைத் தாருங்கள் என்பதிலும் பார்க்க சட்டம் உங்களிடம் இவ்இவற்றை எதிர்பார்க்கின்றது என்று எடுத்துக் காட்டுவது கூடிய பலன் மிக்கதாக அமையூம். எனவே அடுத்து வரும் காலங்களில் அரசாங்கத்திற்கு சட்ட ரீதியான நெருக்குதல்களை ஏற்படுத்த தமிழ் மக்கள் பேரவை ஆயத்தமாக வேண்டும். அதுவூம் வரும் மார்ச் மாதம் 31ந் திகதிக்கு முன்னர் அவ்வாறான நெருக்குதல்களை ஏற்படுத்துவது நல்லது என்று எனக்குப்படுகின்றது. அந்த வகையில் விரைவில் மட்டக்களப்பில் நடைபெற இருக்கும் “எழுக தமிழ்” கூட்டம் சரியான திசையிலேயே அநைதிருக்கின்றது.

எமக்கேற்ற சாதகமான அரசியல் தீர்வொன்று எமக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது புத்திசாலித்தனமாக எனக்குப் படவில்லை. ஏதோ தந்ததை எடுப்போம் என்ற மனப்பாங்கு எமக்குப் பாரிய பின்னடைவூகளை வருங்காலத்தில் ஏற்படுத்தும். எமது நிலங்கள் பறிபோவன. எமது மொழி புறக்கணிக்கப்படும். தெற்கிலிருந்து வந்து வடக்குக் கிழக்கை ஆக்கிரமிக்கும் செயற்பாடு விரைவாக நடைபெறும். இதனால்த் தான் நாங்கள் வலுவான, நிலையான, நீதியான, பொறுப்பான அரசியல் தீர்வொன்றை எதிர் பார்த்திருக்கின்றௌம். இந்த நிலையில் தமிழ் மக்கள் பேரவை தொடர்ந்து தமிழ் மக்களின் கருத்துக்களின் காவலனாய் நிர்ணயங்களின் நிறைவேற்றாளனாகக் கடமையூடன் இயங்க இறைவன் அருள் புரிவானாக என்று பிரார்த்தித்து என் இணைத்தலைவருரையை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.
நன்றி. வணக்கம்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

http://globaltamilnews.net/archives/10858

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.