Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசியல்வாதிகளே... போராட்டத்தைப் படியுங்கள்!

Featured Replies

தமிழக அரசியல்வாதிகளே... போராட்டத்தைப் படியுங்கள்!

 

 
 
 
படம்: ஷிவ கிருஷ்ணா
படம்: ஷிவ கிருஷ்ணா
 
 

தேசத்தையே திரும்பிப் பார்க்கவைத்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில், மிகுந்த விவாதத்துக்குரிய அம்சங்களில் ஒன்று, தமிழக அரசியல் கட்சிகளுக்கு இதில் செய்வதற்கு ஒன்றுமே இல்லாமல் போனது. நம்பகத்தன்மையிழப்பு. கண் முன்னே அரசியலில் ஒரு வரலாறு நிகழும்போது, சமகாலத்தில் களத்திலிருக்கும் ஒரு அரசியல்வாதிக்கும் அதில் எந்தப் பங்கேற்புக்கும் இடமில்லாமல் போவது எவ்வளவு பெரிய வீழ்ச்சி!

சில ஆயிரம் பேர் வசிக்கக் கூடிய அலங்காநல்லூர் போன்ற ஒரு சிற்றூருக்கு முதல்வர் பன்னீர்செல்வம் செல்கிறார். உள்ளூர் பிரமுகர்கள் அத்தனை பேருடனும் பேசுகிறார். முன்னதாக, அரசின் சர்வ பலமும் அங்கே இறங்குகிறது. கூடவே ஆளுங்கட்சியின் பலம், பண பலம், சாதி பலம், இன்னபிற பலங்களும் இறங்குகின்றன. போராட்டக்காரர்களோ புறக்கணிக்கிறார்கள். அலங்காநல்லூரில் மட்டுமல்ல; போராட்டங்கள் நடந்த அத்தனை இடங்களிலுமே அரசு சார்பில் நுழைய ஆட்சியாளர்கள் பயந்தார்கள். அமைச்சர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதுங்கினார்கள். “ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டுவருவதற்காகப் பிரதமரைச் சந்திக்கவிருக்கிறேன்.

டெல்லி செல்கிறேன். நிச்சயம் நல்லது நடக்கும். போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும்” என்று முதல்வர் கைப்பட எழுதிய அறிவிப்பை மெரினா கடற்கரையில் கூடியிருந்த மாணவர்களிடம் எடுத்துச்செல்ல ஆட்சியாளர்களால் முடியவில்லை. அதிகாரிகளும் தயங்கினர். ஒரு காவல் அதிகாரி அதை மாணவர்களிடம் வாசித்துக்காட்டும் நிலை ஏற்பட்டது. 1968 மொழிப் போராட்டத்தின்போது, அன்றைய முதல்வர் அண்ணா மாணவர்களுடன் ஐந்து இரவுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது நினைவுக்கு வருகிறது.

ஆளுங்கட்சித் தரப்பில் மட்டுமல்ல; எதிர்க்கட்சிகள் தரப்பிலும் ஒரு தலைவராலும் போராட்டக் களத்துக்குள் நுழைய முடியவில்லை. முன்னதாக, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவிக்கச் சென்றபோது, அதை ஏற்க மறுத்து அவரைத் திருப்பி அனுப்பினார்கள் மாணவர்கள். காங்கிரஸ், பாமக, விசிக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக எது ஒன்றின் தலைவர்கள், கட்சிக்காரர்களும் தங்கள் கட்சி அடையாளத்துடன் உள்ளே நுழைய முடியவில்லை. மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, அரசியல் கட்சிகள் அவர்களுடைய கோரிக்கையை முன்னிறுத்தி தனித்துப் போராட்டங்களை அறிவித்தபோது அதையும் சமூக வலைதளங்களில் கடுமையாகப் பகடியடித்தார்கள் மாணவர்கள். அத்தனை கட்சிகளையும் புறக்கணிக்கிறார்கள். அதேசமயம், ஆம் ஆத்மி கட்சிபோல தமக்கென ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கும் முயற்சிகளிலும் அவர்கள் இறங்கவில்லை.

ஜனநாயகத்தில் எந்த ஒரு பிரச்சினைக்குமான இறுதித் தீர்வையும் அரசியல் வழியேதான் சென்றடைய வேண்டும். இப்படிக் களத்திலுள்ள அத்தனை கட்சிகளையுமே முற்றுமுதலாக ஒதுக்கிவிட்டு, தனித்த குரலில் பேசுவது மாணவர்களை எங்கே கொண்டுபோய் சேர்க்கும் என்பது ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில் இதனால் கடுமையான அதிர்ச்சிக்கும், அதிருப்திக்கும் உள்ளாகியிருக்கும் தமிழக அரசியல்வாதிகளிடமே நாம் பேச வேண்டியிருக்கிறது. மாணவர்களில் பெரும் பகுதியினரின் மேலோட்ட முழக்கங்கள், லட்சியவாதப் பேச்சுகள், தூய்மைவாதப் பார்வை ஏற்கத்தக்கது அல்ல என்றாலும், இப்படி எல்லோரையும் ஒதுக்கும் இடத்தில் அவர்களைக் கொண்டுவந்து நிறுத்தியதற்கான பொறுப்பை அரசியல் கட்சிகளே ஏற்க வேண்டும் என்று தோன்றுகிறது.

நாலரை வருஷ மிச்ச வசூல் ஒன்றே இலக்கென ஒரு கட்சி எல்லாக் கூச்சங்களையும் உதிர்த்துவிட்டு, வெளிப்படையாக எதையும் அரங்கேற்றத் துணியும் அளவுக்குத் தமிழக அரசியல் தரங்கெட்டுவிட்ட நிலையில், இன்றைய அரசியல் மீதும் அரசியல்வாதிகள் மீதும் இளைய தலைமுறையினர் மத்தியில் இப்படி ஒரு ஒவ்வாமை சூழ்வதை எப்படித் தவறெனக் கொள்ள முடியும்? என்னளவில் தமிழக அரசியல் இன்று அடைந்திருக்கும் மிக மோசமான வீழ்ச்சியின் பிம்பமாகவே சசிகலாவைப் பார்க்கிறேன். அவருடைய கால்களில் முதல்வர் பன்னீர்செல்வம் விழுந்த தருணம் முதல்வர் பதவிக்கான எல்லா விழுமியங்களும் கீழே சாய்க்கப்பட்ட கணம்.

இந்த இரு பிம்பங்களின் மையத்திலிருந்துதான், இன்றைய இளைஞர்கள் தமிழக அரசியலைப் பார்க்கிறார்கள் என்று கருதுகிறேன். எதிர்க்கட்சித் தலைவர்கள் கேட்கலாம், “நாங்கள் எல்லாம் இல்லையா?” என்று. சசிகலாவோடும், பன்னீர்செல்வத்தோடும் எவரையும் ஒப்பிட முடியாதுதான். ஆனால், ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு வகைகளில் தனக்கே உரித்தான பள்ளங்களை வெட்டிவைத்துக் காத்திருக்கிறதே! ஜி.ராமகிருஷ்ணனும் பாலபாரதியும் மு.வீரபாண்டியனும்கூடத்தான் இங்கே இருக்கிறார்கள். இன்றைய தலைமுறையினர் எத்தனை பேரிடம் அவர்களுடைய கட்சிகள் அவர்களைக் கொண்டுபோய் சேர்த்திருக்கின்றன? இன்னமும் மனிதர்களைப் பார்த்துதான் இந்தியா ஆட்சியைத் தீர்மானிக்கிறது என்ற உண்மைக்கே அவர்கள் முகங்கொடுக்கத் தயாராக இல்லையே?

பிரதான எதிர்க்கட்சியான திமுக ‘தமிழர் அரசியல்’ எனும் விதையை இந்த மண்ணில் தேர்தல் அரசியலில் விதைத்த கட்சி. மாணவர்கள் போராட்டத்தின் வழியாகவே ஆட்சியில் அமர்ந்த கட்சி. சரியாக அரை நூற்றாண்டுக்குப் பின் மீண்டும் ஒரு வரலாற்றுப் போராட்டத்தைத் தமிழக மாணவர்கள் முன்னெடுக்கும்போது, அதில் திமுகவுக்குச் செய்வதற்கு இம்மிகூட இல்லை என்றால், அதற்கான காரணம் யார்? மாணவர்களா? திமுக தன்னையேதான் நொந்துகொள்ள வேண்டும். அதிமுகவுக்கு அரசியலற்ற அரசியல் புதிதல்ல.

பிம்ப அரசியலை அடித்தளமாகக் கொண்ட கட்சி அது. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களை அரசியலற்றவர்கள் ஆக்கும் முயற்சியில் அதிமுக ஈடுபட்டது இயல்பானது. பின்னாளில், திமுகவும் அதே பாதையைத் தேர்ந்தெடுத்தது சொந்த செலவில் வைத்துக்கொண்டு சூனியம். இரு கட்சிகளுமே கல்வியை வியாபாரமாக்கின. வியாபாரத்தில் கட்சிக்காரர்களும் பங்கேற்றனர். கல்வி நிறுவனங்களில் அரசியல் பேசாப்பொருளானது. அதன் விளைவுகளையே இன்று எதிர்கொள்கின்றனர்.

நேற்று திமுகவைச் சேர்ந்த இளந்தலைவர் ஒருவர் என்னிடம் பேசினார். ‘‘ஸ்டாலின் இந்த விவகாரத்தில் உண்மையான ஈடுபாட்டோடு இருக்கிறார். மாணவர்கள் திமுகவைப் புரிந்துகொள்ளவும் இணைத்துப் பார்க்கவும் மறுக்கிறார்கள்” என்றார். திமுகவை எப்படி அவர்கள் தம்முடன் இணைத்துப் பார்ப்பார்கள்? முதலில் அவர்களிடம் பேச திமுக எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறது? 62 வயதுக்காரரான கடலூர் புகழேந்தியை இன்னமும் மாணவரணிச் செயலாளராக வைத்திருக்கும் கட்சி அது. புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞரணிச் செயலாளர் வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு 52 வயதாகிறது.

ஸ்டாலின் தன்னுடன் யாரை உடன் அழைத்துச் செல்கிறார்? சேகர் பாபு, அன்பழகன், ஜெகத்ரட்சகன்... எப்படி மெரினா இளைஞர்கள் இந்த இளைஞர்களோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்வார்கள்? போராட்டம் என்றாலே ‘நாங்களும் இருக்கிறோம்’ என்று காட்ட நடத்தப்படும் ‘உள்ளேன் ஐயா அரசியல்’ என்றாகிவிட்ட காலம் இது. மாணவர்கள் அதற்குப் புதிய அர்த்தத்தை உருவாக்க முயல்கிறார்கள். உங்களுக்கு அங்கே எப்படி இடமிருக்கும்?

தமிழ்நாட்டின் கட்சிகள் எதுவாகினும் - அது காங்கிரஸோ, பாஜகவோ, கம்யூனிஸ்ட்டோ - அதன் ஆன்மாவும் மூளையும் ஒட்டுமொத்த தமிழர் நலன் சார்ந்து இயங்க வேண்டும்; முடிவுகள் தமிழர்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதையே அரை நூற்றாண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சி மீண்டும் மீண்டும் சொல்கிறது. தாங்கள் ஏன் விரட்டப்பட்டோம் என்பதற்கான பதிலை ஒவ்வொரு கட்சியும் இந்தப் புள்ளியிலிருந்து தேட முனைவதே சரியானதாக இருக்கும். தமிழக அரசியல்வாதிகள் உண்மையாகவே இந்த இளைய சமூகம் அரசியல் உணர்வு பெற்று நாளைய தமிழகத்தைத் தூக்கி நிறுத்த வேண்டும்; அவர்களுடைய பிரதிநிதிகளாக தாங்கள் இருக்க வேண்டும் என்று விரும்பினால், முதலில் தங்கள் ஈகோவை விட்டொழிக்க வேண்டும்.

இளைஞர்கள் எந்த ஆடம்பரத்தை, பிரம்மாண்டத்தை, ஊழலை, பன்மைத்துவத்துக்கு எதிரான தேசியத்தின் பெயரிலான திணிப்புகளை, சாதி மத ஓட்டரசியலை வெறுக்கிறார்களோ அவற்றிலிருந்து வெளியே வர வேண்டும். தங்கள் ஆள், அம்பு, சேனை, பரிவாரம், கட்சி சாயம் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு, தங்கள் பிள்ளைகள் எனக் கருதி இளைஞர்களைத் தேடிச் சென்று சரிக்குச் சமமாக உட்கார்ந்து பேச முனைய வேண்டும்.

நேற்றுவரை ‘தேர்தலை அன்றி மாற்றம் கொண்டுவர இந்த ஜனநாயகத்தில் வேறு வழி நம்மிடம் இல்லை’ என்றிருந்தவர்கள் ‘ஒரு களத்தில் ஒன்று சேர்ந்து உட்கார்ந்தாலே ஜனநாயகத்தில் மாற்றம் நிகழும்’ என்ற புரிதலை அடைந்திருப்பதே இந்தப் போராட்டத்தின் ஆகப் பெறுமானமான செய்தி. உண்மையான அரசியலில் அக்கறையுள்ளவர்கள் அடுத்த தலைமுறையினரிடம் பேசுவதற்கான வாசல் இப்போது திறந்திருக்கிறது. அவர்களுடன் பேச அவர்கள் மொழியைக் கற்க வேண்டும்!

http://tamil.thehindu.com/opinion/columns/தமிழக-அரசியல்வாதிகளே-போராட்டத்தைப்-படியுங்கள்/article9498138.ece?homepage=true&theme=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.