Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரத்தில் ஏறி தமிழக விவசாயிகள் தற்கொலை முயற்சி: டெல்லியில் பரபரப்பு

Featured Replies

மரத்தில் ஏறி தமிழக விவசாயிகள் தற்கொலை முயற்சி: டெல்லியில் பரபரப்பு

 

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் தொடர்ந்து 12-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளில் மூன்றுபேர் இன்று பிற்பகல் மரத்தின்மீது ஏறி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 
 
 
 
மரத்தில் ஏறி தமிழக விவசாயிகள் தற்கொலை முயற்சி: டெல்லியில் பரபரப்பு
 
புதுடெல்லி:

வார்தா புயல், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகத்தில் ‘ஹைட்ரோ கார்பன்’ எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதந்தோறும் பென்‌ஷன் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தென்னிந்திய நதிகள் இணைப்புக் குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 100 விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறார்கள்.

மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தினமும் விதவிதமாக போராடுகிறார்கள். உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா உள்பட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். எனினும், மத்திய அரசு விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் உள்ளது.

இந்த நிலையில், இன்று விவசாயிகள் 12 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மூன்று விவசாயிகள் அங்கிருந்த மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போரட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க சென்ற நடிகர்கள் விஷால் மற்றும் குழுவினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர்கள் இறங்கி வந்தனர்.
 
454CBFBD-4013-4433-9BC4-10FF7F3352A6_L_s

மேலும், ஒருவர்  இறந்தது போல் படுத்து கிடந்தார். அவருக்கு இறுதி சடங்கு நிகழ்த்துவது போல் போராட்டம் நடத்தினர். இதனால் தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

http://www.maalaimalar.com/News/National/2017/03/25131437/1075941/TN-farmers-attempts-suicide-in-Delhi.vpf

  • தொடங்கியவர்

டெல்லியில் விவசாயிகள் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்திய விஷால் அணியினர்

 

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் தற்கொலை முயற்சியை விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.

 
 
201703251414196976_Vishal-and-team-to-st
 
தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அமைதியான முறையில் நடைபெற்று வரும் இவர்களது போராட்டத்துக்கு மத்திய அரசு செவி கொடுக்காமல் இருந்து வருகிறது.  இந்நிலையில், நேற்று டெல்லி சென்ற தமிழ் நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ், பாண்டியராஜ் உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு ஆதரவு  தெரிவித்தனர்.

1ADF209D-738B-41B8-B2D0-2D22C744C2DA_L_s

மேலும் அவர்களது கோரிக்கையை மத்திய அமைச்சர்களை சந்தித்து எடுத்துரைப்பதாகவும் விவசாயிகளிடம் உறுதி அளித்தனர்.  அதனைத்தொடர்ந்து மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து நதிகள் இணைப்பு குறித்த கோரிக்கையை  அளித்தனர். மேலும் இன்று காலை அருண் ஜேட்லியையும் சந்தித்து விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காணும்படி விஷால் அணியினர்  வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு செவிமடுக்காத மத்திய அரசைக் கண்டித்து ஜந்தர் மந்தரில் போராட்டத்தில்  ஈடுபட்டிருந்த, விவசாயிகளில் இருவர் மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

CE199FA0-8E8E-46CA-8A77-1BB06C96FF1B_L_s

விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இருவரும் தற்கொலை மிரட்டல்  விடுத்தனர். அதனைத்தொடர்ந்து, தற்கொலை செய்ய முயன்ற விவசாயிகளை கீழே இறங்குமாறு பலரும் கேட்டுக்கொண்டனர்.  அந்தநேரத்தில் விஷால் அணியினரும் அங்கு இருந்ததால் விவசாயிகளை கீழே இறங்கச் சொல்லி அவர்களும் வேண்டிக் கொண்டனர்.  பலரது வேண்டுகோளை ஏற்று மரத்தில் இருந்து இரு விவசாயிகளும் கீழே இறங்கி தற்கொலை முயற்சியை கைவிட்டனர்.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/03/25141419/1075960/Vishal-and-team-to-stops-the-suicide-attempt-by-farmers.vpf

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் காலத்திலும் தாக்குப் பிடிக்கக் கூடிய விவசாயிகளுக்கு இப்படி ஒரு நிலை வந்தது ரொம்ப வருத்தமாக உள்ளது.

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

விவசாயிகள் கோரிக்கைகளுக்காக, நிதியமைச்சர் அருண்ஜேட்லியை நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ் மற்றும் இயக்குநர் பாண்டியராஜ் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். அதுகுறித்து, விஷால் பேட்டி.

 

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிதியமைச்சர் அருண்ஜேட்லியிடம் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஷால், ரமணா மற்றும் இயக்குநர் பாண்டியராஜ் ஆகியோர் எடுத்துரைத்தனர். அதன்பிறகு, விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்து அதுகுறித்து விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர். பின்னர், பிரகாஷ் ராஜ், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.

 

டெல்லியில் தமிழக விவசாயிகள் நூதன போராட்டம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 12 நாட்களாக டெல்லியில், அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் இன்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜந்தர் மந்தர் பகுதியில், நடுரோட்டில் விவசாயி ஒருவரைப் படுக்க வைத்து, அவரை, சடலம் போல சித்தரித்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • தொடங்கியவர்

 

டெல்லியில் தமிழக விவசாயிகளை திரட்டி 2 வாரங்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் அய்யாக்கண்ணு யார்?

  • தொடங்கியவர்

நேற்று எலி; இன்று பாம்பு! டெல்லியை அதிரவைக்கும் தமிழக விவசாயிகள் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் 16வது நாளாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் இன்று வாயில் பாம்புக்கறியுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Farmers protest
 

கடந்த 14-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாகண்ணு தலைமையில்  காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் தொடர் போராட்டத்தில் முதல் நாள் சுமார் 100 விவசாயிகள் கலந்துகொண்டனர். தற்போது பிறமாநில விவசாயிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது. காவிரி மேலாண்மை அமைப்பது, விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்தல் , நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வித்தியாசமான முறையில் போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

மண்டை ஓடு, மண் சட்டி, தூக்கு கயிறு உள்ளிட்டவற்றை வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நேற்று வாயில் எலியை வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று வாயில் பாம்புக்கறியை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு  ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர் நேரில் வந்து ஆதரவளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், “விவசாயிகளின் போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துகள். விவசாயிகளால் தான் இந்தியா வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றார். 

http://www.vikatan.com/news/tamilnadu/84861-tamil-nadu-farmers-protest-in-delhi-continues-for-15th-day.html

  • தொடங்கியவர்

வாடிய வயிற்றில் வெடித்த டில்லி எழுச்சி! தொடரும் விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள்

ந்தியாவின் முதுகெலும்பு விவசாயிகள்’ என்றார் மகாத்மா காந்தி. அந்த முதுகெலும்பை முறிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன மத்திய-மாநில அரசுகள். அதைத் தடுத்து நிறுத்தி, விவசாயிகளைக் காக்கும் எங்கள் போராட்டம் இலக்கை அடையாமல் ஓயாது”. தலைநகர் டெல்லியில் மண்டையோடுகளோடு போராடிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டு விவசாசியகளிடம் இருந்து வெளிப்பட்ட உறுதியான-உஷ்ணமான வார்த்தைகள் இவை. 

வறட்சி நிவாரணத்தை உயர்த்தவேண்டும்; பயிர்க்கடன் உள்ளிட்ட விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொருநாளும் ஒருவிதமான போராட்டம் என்று நடத்தி பொதுமக்களின் கவனத்தைப் பெற்று வருகின்றனர் தமிழ்நாட்டு விவசாயிகள். சென்னையில் தொடங்கிய மெரீனா போராட்டம்  தமிழகத்தில் எப்படி எழுச்சியை உண்டாக்கியதோ, அதுபோல டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் அகில இந்தியளவில் புதிய விவசாய எழுச்சியை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றன. உ.பி, அரியானா உள்ளிட்ட வேறுபல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அதை உறுதி செய்கிறது. 

இந்த நிலையில், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் தெய்வசிகாமணியிடம் பேசினோம். “தமிழ்நாட்டில் 89 லட்சம் விவசாய குடும்பங்கள் இருக்கின்றன; இதில் 11.50லட்சம் குடும்பங்கள் மட்டுமே கூட்டுறவு வங்கியில் கடன் வைத்துள்ளனர்; மீதி  77.50 லட்சம் விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் நிலுவை வைத்துள்ளனர்; வறட்சியினாலும், கடன் சுமையாலும் விவசாய குடும்பங்கள் தவிக்கின்றன; எலிக்கறி சாப்பிடும் நிலைக்கு பல லட்சம் குடும்பங்கள் தள்ளப்பட்டுள்ளன; சாரை சாரையாக தற்கொலைகள் நிகழ்கின்றன; கடந்த 141 ஆண்டுகள் காணாத வறட்சி நிலவுவதாக பாரதிய ஜனதாவின் தமிழிசை சவுந்தரராஜனே கூறுகிறார். ஆனால், இது எதையும் கருத்தில்கொள்ளாமல் மேலும் மேலும் விவசாயிகளைக் கசக்கிப்பிழிந்து அவர்களை தற்கொலை செய்யத் துண்டுவதைத்தான் செய்கின்றன மத்திய-மாநில அரசாங்கங்கள். 

 

விவசாயிகள்

ஆனால், 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வைத்துள்ள 17 கார்பரேட் வங்கிகளின் பெயரைக்கூட மத்திய அரசாங்கம் வெளியிட மறுக்கிறது. காரணம் அந்நிறுவனத்தின் மரியாதை கெட்டுவிடுமாம். திருச்செங்கோட்டில் கூட ஒரு கார்பரேட் நிறுவனம் 242 கோடி ரூபாய் வங்கி கடன் வைத்துள்ளது. அதன் பெயரைக்கூட அரசாங்கம் வெளியில் சொல்லவில்லை. ஆனால், அனைவரின் வயிற்றுப் பசியைப்போக்கும் விவசாயி பெற்ற கடனை செலுத்தத் தவறினால், அவர் போட்டோவைப்போட்டு விளம்பரம் செய்து, அடமானம் வைத்த நகைகளை ஏலம் விட்டு அவமானம் செய்கின்றன அரசாங்கங்களும் வங்கிகளும். நகை அடமானம் வைத்து வாங்கிய விவசாய கடனை வறட்சியினால் திருப்பி செலுத்தமுடியவில்லை. மனைவி உயிரோடு இருக்கவே அவரின் தாலி கொடியை ஏலத்தில் இழக்கும் நிலையில் விவசாயிகள் உள்ளனர். கடனை வசூலிக்கும்வரை ஒரு விவசாயியின் நகையை ஏலம்விடக்கூடாது என்றுகூட மத்திய பா.ஜ.க அரசால் உத்தரவிட முடியவில்லை.

வறட்சி நிதியாக தமிழ்நாடு அரசு கேட்பது 39 ஆயிரத்து 565 கோடி ரூபாய். மத்திய அரசு கொடுத்தது வெறும் ஆயிரத்து 748 கோடி ரூபாய். தமிழ்நாடு அரசு கொடுத்தது 2 ஆயிரத்து 472கோடி ரூபாய் மட்டுமே. தமிழ்நாட்டின் முழு கடன் விடுதலை என்பது 86 ஆயிரம் கோடி ரூபாய். இதை மாநில அரசு நினைத்தால் சரி செய்ய முடியும். பக்கத்து மாநிலமான ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மாநில அரசு நிதியில் இருந்தே 82 ஆயிரம் கோடி ரூபாய் கட்டி கடனை அடைத்தார். டெண்டர் விட்டு நமது அணைகளை தூர்வாரி, அந்த மண்ணை விற்றாலே நமக்கு சுமார் ஐந்து லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைக்கும். இது ஒரு உதாரணம். ஆக அரசு நினைத்தால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து அவர்களே கடனை அடைத்து விவசாய குடும்பங்களை துயரில் இருந்து மீட்க முடியும். ஆனால் அரசுகள் அதை செய்வதில்லை.

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வருகிறார்; தமிழ்நாட்டு எம்.பிக்கள் வருகிறார்கள்; போராட்டத்தில் பேசுகிறார்கள்; எங்களிடம் போராட்டத்தை ‘வாபஸ்’ வாங்குங்கள் என்கிறார்கள்; யதார்த்த நிலையை கெடுக்கிறார்கள்; எங்களை யாரோ தூண்டிவிடுவதாக கூறுகிறார்கள்; ஏன் எங்களுக்கு சுய அறிவு இல்லையா? எங்கள் வாழ்க்கைக்காக போராடுவது இவர்களுக்கு வேடிக்கையாகிவிட்டதோ!

பொன்.ராதாகிருஷ்ணன் ‘‘விவசாயிகள் மரத்தில் ஏறி, கீழே குதித்து உயிரை விடுவோம் என்று மிரட்டி நாடகமாடுகின்றனர்’’ என்கிறார். அதன்மூலம் அவர் என்ன சொல்லவருகிறார்.... “மரத்தில் ஏறி நின்று சும்மா மிரட்டிக் கொண்டிருக்காதீர்கள்.... கீழே விழுந்து செத்துவிடுங்கள்” என்கிறாரா? அவரால் மருந்துக்குக் கூட ‘எனது இணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என்று சொல்லமுடியவில்லை. இப்படிப்பட்டவர்தான் எங்களைக் கேலி பேசுகிறார். இப்படி எங்களுக்கு எதிரான அரசுகள் இருக்கும் நிலையில், அய்யாக்கண்ணு போராட்டம் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. நானும் டில்லி போராட்டத்தில் பங்கேற்றேன். பாமர ஜனங்கள் தேடி வந்து ஆதரவு தருகின்றனர். நிச்சயம் எங்கள் போராட்டம் வெல்லும்’ என்றார் நம்பிக்கையோடு.

விவசாயிகள்


தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில செயலாளர் சண்முகம் பேசும்போது, ‘மத்திய பா.ஜ.க அரசு மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது குறைந்த நிதியைத்தான் தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது. பக்கத்துக்கு மாநிலமான ஆந்திரா உள்பட வேறு சில மாநிலங்களில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும்தான் வறட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகம் ஒட்டுமொத்தமாக வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்புரிந்து கொள்ளாமல் நிதி ஒதுக்கி உள்ளனர். இதற்கு முன் வி.பி.சிங் காலத்திலும், 2007-ல் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியிலும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட வரலாறு உண்டு. கடந்தாண்டு 15மாநிலங்களும், இந்தாண்டு தென் மாநிலங்களும் கடுமையாக வறட்சியில் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அரசு நினைத்தால் முழு கடனையும் தள்ளுபடி செய்ய இயலும். மேலும் விவசாயிகள்-விவசாயக் கூலிகள் என இரு பிரிவும் இணைந்ததுதான் வேளாண் சமூகம். கூலி விவசாயிக்கு குறைந்தது 10 ஆயிரமாவது ஊதியம் கிடைக்க வேண்டும். அதற்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந்தநிலையில் அய்யாக்கண்ணு நடத்தும் போராட்டம் நாடு தழுவிய ஈர்ப்பை உண்டாக்கியுள்ளது. இது முதல் வெற்றியாகும். இதையொட்டி நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமில்லாமல் கூலி விவசாயிகளின் பிரச்சனைகளையும் உள்ளடக்கி  வருகிற மார்ச் 31-ம் தேதி, தமிழகம் முழுக்க போராட்டம் நடத்த உள்ளோம். ஏப்ரல் 3-ம் தேதி கருப்புக்கொடி போராட்டம் அறிவித்துள்ளோம்.” என்றார் உணர்வுப்பூர்வமாக. 

டில்லியில் விவசாயிகளுக்காக தீவிரமாக போராடிவரும் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் கூட்டு இயக்க அவை தலைவர் அய்யாகண்ணு, ‘எங்கள் போராட்டத்துக்கு கிடைக்கும் ஆதரவைப் பொறுக்க முடியாத  மத்திய பா.ஜ.க அரசு, பொய்களை அவிழ்த்துவிட்டு எங்கள் மீது அவதூறு பரப்புகிறது. நான் நூறு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் பணக்காரன் என கதை கட்டுகிறது. நேர்வழி நியாயத்தை உணராமல் எங்கள் போராட்டத்தை குறுக்குவழியில் ஒடுக்க நினைக்கின்றனர். எங்களை யாரோ போராட தூண்டிவிடுகின்றனர் என்கிறார்கள். அப்படியென்றால் விவசாயிகளுக்கு புத்தி இல்லை என்று கருதுகிறீர்களா? எங்கள் கோரிக்கைகளை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, நிதி மற்றும் வேளாண்மைத்துறை மந்திரி ஆகியோரிடம் தெரிவித்தோம். பொறுமையாக கேட்டுள்ளனர். ஆக, எங்களுக்கு முழுமையான வறட்சி நிதி வராமல் போராட்டத்தை கைவிடமாட்டோம்.” என்றார் உறுதியாக.

2015-2016 நிதியாண்டில் 5 லட்சத்து 2 ஆயிரத்து 068 கோடி ரூபாய் வாராக்கடனாக இருந்துள்ளது. 2016 டிசம்பரில் அது சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து 6 லட்சத்து 6 ஆயிரத்து 911 கோடி ரூபாய் வாராக்கடனில் நிற்கிறது. இதில் பெரும்பகுதி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து வரவேண்டிய தொகை. அதோடு ஒப்பிடும்போது விவசாயக்கடன் சிறு துகளைப்போன்றது. கார்ப்பரேட் நிறுவனங்களின் மலையளவு கடனை வசூலிக்காமல், விவசாயிகளின் துகள் அளவு கடனை வசூலிக்க மத்திய-மாநில அரசுகள் கொடுமையான வழிகளைப் பின்பற்றினால் விளைவுகள் கடுமையாக இருக்கும். இந்தத் துகள்கள் ஒன்றுசேர்ந்து பெரும் கோட்டையைத் தகர்த்துவிடும். வறட்சியால் காய்ந்த நிலங்களும், அதனால் வாழ்விழந்த விவசாயிகளும், அவர்களுடை பசித்த வயிறுகளும் கோட்டைகளைத் தகர்கும் குண்டுகளாக மாறும். எனவே, விவசாயிகளின் கோரிக்கையை விரைவில் மத்திய அரசு தீர்த்து வைக்கும் என்று நம்புகிறோம்.

http://www.vikatan.com/news/coverstory/84850-tn-farmers-protest-continues-at-jantar-mantar.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25.3.2017 at 6:45 PM, ஈழப்பிரியன் said:

எந்தக் காலத்திலும் தாக்குப் பிடிக்கக் கூடிய விவசாயிகளுக்கு இப்படி ஒரு நிலை வந்தது ரொம்ப வருத்தமாக உள்ளது.

விவசாயிகளின் வயிற்றெரிச்சலின் பயனை வெகுவிரைவில் சுமப்பார்கள்.tw_angry:

  • தொடங்கியவர்

கலங்கடிக்கும் போராட்டங்கள்... கலங்காத தீர்க்கம்... டெல்லியை அதிரச்செய்யும் அய்யாக்கண்ணு இவர்தான்!

டெல்லி போராட்டத்தில் விவசாயிகள்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் டெல்லியில் 18-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக விவசாய சங்கங்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன. விவசாயிகள் தேசிய வங்கிகளில் பெற்றக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.

தூக்கு கயிறு மாட்டி போராட்டம்

பதினெட்டு நாட்களாகத் தலைமையேற்று போராட்டத்தை நடத்தியது, நிதியமைச்சர் அருண்ஜெட்லியுடன் சந்திப்பு, ஹரியாணா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பு என டெல்லியை அதிரவைத்தவர்  தென்னிந்திய நதிகள் இணைப்பு பாதுகாப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு என்ற விவசாயிதான்.

யார் இந்த அய்யாக்கண்ணு?... திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 72. ஆரம்ப காலக்கட்டங்களில் ஒரு வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கியவர். இவருக்குச் சொந்தமாக 20 ஏக்கர் நிலம் உள்ளது. இவரது தந்தை பெயர் பொன்னுசாமி, அய்யாக்கண்ணு திருச்சி மாவட்டத்தில் பிரபலமான விவசாயியும் கூட... ஆரம்ப காலங்களில் தனது வழக்கறிஞர் பணியினைத் தொடர்ந்தாலும், 1985-ம் ஆண்டு முதல் அப்பாவின் வழிவந்த பரம்பரைத் தொழிலான விவசாயத்தை கையிலெடுத்தவர்

ஆரம்பத்தில் ரசாயன உரங்களை அள்ளிப் போட்டு விவசாயம் செய்தவர், பின்னர் தன் தந்தை வழியில் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தார். ஓராண்டுக்கு முன்பு வரை முசிறி பகுதியில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் கூட்டத்தை நடத்தி விவசாயிகளைப் பற்றியும், அவர்கள் விவசாயம் செய்யும் முறைகளை பற்றியும் குழுவாக விவாதிப்பது இவர் வழக்கம். அந்தக் கூட்டத்துக்கும் தலைமை தாங்குபவர், விவசாயி அய்யாக்கண்ணுதான். இவருக்கு மனைவி சந்திரலேகா, துணைவி ரேவதி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்களுமே வழக்கறிஞர்கள்.

திருச்சியில் போராட்டத்தின்போது

இவர் 1977-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பாக முசிறி தொகுதியில் எம்எல்ஏ பதவிக்குப் போட்டியிட்டுள்ளார். அதன்பிறகு ஜனதா தளத்தில் இணைந்து, இறுதியாக அந்தக் கட்சிகளிலிருந்து விலகி, தேசிய விவசாயிகள் சங்கத்தை தொடங்கினார். பின்னர் பாரதிய கிசான் சங்க மாநில பொதுச்செயலாளர் மற்றும் மாநில துணைத்தலைவர் எனப் பொறுப்பு வகித்து விவசாயிகளுக்காகப் பல போராட்டங்களை நடத்தியவர்தான் இந்த அய்யாக்கண்ணு. ஆனால் மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அய்யாக்கண்ணுவை போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என பாரதிய கிசான் சங்கம் எச்சரித்தது. பதவியை உடனே தூக்கியெறிந்துவிட்டு 2015-ம் ஆண்டில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை தொடங்கி தலைவராக செயல்பட்டு வருகிறார்.

விவசாயிகளுக்கு ஒரு பாதிப்பு என்றால் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒலிக்கும் குரல்களில் இவர் குரல் முதன்மையானது. 72 வயதிலும் விவசாயிகளுக்குத் தலைமையேற்று சுட்டெரிக்கும் வெயிலிலும் தனது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். அய்யாக்கண்ணு மற்ற விவசாய சங்க போராட்டங்களில் இருந்து வேறுபட்டு எலிக்கறி உண்பது, மண்டை ஓட்டுடன் போராட்டம் எனச் சற்று நூதனமான போராட்டங்களால் தன்னைத் தனித்து காட்டுபவர். தற்போது டெல்லியிலும், விவசாயியைச் சடலமாக கிடத்தியும், விவசாயிகள் அனைவரும் அரை நிர்வாணமாகவும், மண்சட்டியை ஏந்தியும் மற்றும் எலிக்கறி உண்ணுதல் ஆகிய வித்தியாசமான போராட்டங்களால் இந்திய விவசாயிகளைத் தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். பல அரசியல் தலைவர்கள் இவரின் போராட்டத்தை கைவிடப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரையும், விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் வரைக்கும் தனது போராட்டம் தொடரும் என அவர்களுக்குப் பதிலடி கொடுத்தவர்.

டெல்லி போரட்டத்தின்போது

கோவைக்கு சிலை திறக்க பறந்து வரும் பிரதமர் மோடி, டெல்லியில் போராட்டம் நடத்தும்போது சந்திக்காமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறார். இதுபோதாது என்று பா.ஜ.க-வை சேர்ந்த ஹெச்.ராஜா, செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர்கள் விவசாயிகளை சந்திக்கணுமா?.. என சிரித்துக்கொண்டே கேள்வி கேட்கிறார். உணவளிக்கும் விவசாயிகளை எப்படியெல்லாம் வஞ்சிக்கிறார்கள், இந்த அரசியல்வாதிகள்? இன்று விவசாயிகள் கையேந்துகின்றனர், காரணம் நாளை நாம் கையேந்தக்கூடாது என்பதற்காகத்தான். இந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்துவது அய்யாக்கண்ணு என்ற ஒற்றை ஆள்தான். ஆனால், அங்கு இருக்கும் ஒவ்வொரு விவசாயியுமே அய்யாக்கண்ணுதான்.

http://www.vikatan.com/news/agriculture/85044-background-of-delhi-protest-farmer-ayyakkannu.html

  • தொடங்கியவர்

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகக் களமிறங்கிய ராகுல் காந்தி!

டெல்லி ஜந்தர் மந்தரில், 18-வது நாளாகப் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக,  காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேரில்சென்று ஆதரவளித்தார்.

RahulGandhi
 

கடந்த 14-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் தொடர் போராட்டத்தில் முதல் நாள் சுமார் 100 விவசாயிகள் கலந்துகொண்டனர். ஆனால், தற்போது பிற மாநில விவசாயிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது. காவிரி மேலாண்மை அமைப்பது, விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன்களைத் தள்ளுபடிசெய்தல், நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வித்தியாசமான போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். 

மண்டை ஓடு, மண் சட்டி, தூக்குக் கயிறு போன்றவற்றை வைத்துப் போராட்டம் நடத்திய விவசாயிகள், வாயில் எலிக் கறி, பாம்புக் கறியை வைத்தும் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவளிக்க, ராகுல்காந்தி ஜந்தர் மந்தருக்கு வருகைதந்தார். அங்கு, விவசாயிகளுடன் அமர்ந்து, அவர்கள் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல்காந்தி,”தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் மக்கள் இல்லையா?, விவசாயிகளுக்கு மோடி அரசு உதவ மறுப்பது ஏன்?" என்று கேள்விகளை எழுப்பினார். 

http://www.vikatan.com/news/india/85040-congress-vp-rahul-gandhi-meets-tn-farmers-at-jantar-mantar.html

  • தொடங்கியவர்

அரைமொட்டை அடித்து போராட்டத்தை தொடரும் விவசாயிகள்

டெல்லி ஜந்தர் மந்தரில் 20 நாள்களாக போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று அரைமொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  விவசாயக்கடன் தள்ளுபடி என அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் உறுதியாக அறிவித்துள்ளனர்.

Delhi Farmers protest
 

கடந்த 14-ம் தேதி டெல்லி ஜந்தர்மந்தரில்  தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், அச்சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது. காவிரி மேலாண்மை அமைப்பது, விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்தல் , நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வித்தியாசமான போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பிற மாநில விவசாயிகளும் ஆதரவளித்தனர். அரசியல் தலைவர்கள் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி உள்ளிட்டோர் நேரில் சென்று தங்கள் ஆதரவை அளித்தனர். 

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று இயக்குனர் கவுதமன் விவசாயிகளுக்கு ஆதரவாக வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். மேலும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதி வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விவசாயிகள் சிலர் சந்தித்து மனு அளித்தனர். முதல்வரை சந்தித்தபின் பேட்டி அளித்த விவசாயிகள், ”விவசாயக்கடன் தள்ளுபடி என்று மத்திய அரசு அறிவிக்கும் வரை டெல்லி போராட்டம் தொடரும். போராட்டத்தை கைவிடுமாறு முதல்வர் எங்களை வலியுறுத்தவில்லை”, என்றனர்.

http://www.vikatan.com/news/india/85194-tamil-nadu-farmers-protesting-at-jantar-mantar-get-heads-tonsured.html

  • தொடங்கியவர்

20 நாட்களாக டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லிவாழ் தமிழ் இளைஞர்களும், பொதுமக்களும் போராட்டம் நடத்தினார்கள். பிரதமர் நரேந்திர மோதி, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர்.

 

டெல்லியில் விவசாயிகளின் நூதன போராட்டம்....நேரலை.

  • தொடங்கியவர்

தரையில் உருண்டு மோடியிடம் விவசாயிகள் கோரிக்கை: தலைவர் அய்யாகண்ணு மயக்கம் அடைந்ததால் பரபரப்பு

 
 
தரையில் உருண்டு கோரிக்கை வைக்கும் விவசாயிகள்.
தரையில் உருண்டு கோரிக்கை வைக்கும் விவசாயிகள்.
 
 

டெல்லி போராட்டத்தில் தரையில் உருண்டு பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக விவசாயிகள் இன்று கோரிக்கை விடுத்தனர். இவர்களில் 60 வயதுக்கு அதிகமானவர்களும் சுட்டெரிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் வெறும் தரையில் உருண்டதால் சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு உட்பட இருவர் மயக்கம் அடைந்தனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் டெல்லியில் 23-ம் நாளாகப் போராட்டம் தொடர்கிறது. அச்சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையிலான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தமிழகம் மற்றும் தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வந்து தம் ஆதரவைத் தெரிவித்தபடி உள்ளனர். சமூக மற்றும் மாணவர்கள் அமைப்புகளாலும் கிடைக்கும் ஆதரவால் தமிழக விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக மற்ற விவசாய சங்கங்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

இதனால், மேலும் தீவிரம் அடைந்துள்ள போராட்டத்தை அன்றாடம் வித்தியாசமாக தமிழக விவசாயிகள் செய்து வருகின்றனர். இந்தவகையில் இன்று, விவசாயிகள் தரையில் உருண்டு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தனர். தங்கள் கைகள் மற்றும் கால்களை கயிற்றால் கட்டிக் கொண்டு அவர்கள் உருண்டனர்.

தற்போது டெல்லியில் கொளுத்தும் வெயிலில் ஜந்தர் மந்தரின் பந்தலுக்குள் அமர்வதும் முடியாமல் உள்ளது. இந்தநிலையில், தரை விரிப்புகள் இல்லாத வெறும் சாலையில் விவசாயிகளில் சிலர் உருண்டு போராட்டம் நடத்தினர். இதை பார்த்த டெல்லிவாசிகள் சில நிமிடங்கள் நின்று அதிர்ச்சியுடன் பார்வையை செலுத்திச் சென்றனர்.

போராட்டத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு உட்பட 60 வயதிற்கும் அதிகமானவர்களும் தரையில் உருண்டு போராட்டம் நடத்தினர். இதில், 72 வயதான அய்யாகண்ணு மற்றும் 74 வயது பழனிசாமி ஆகிய இருவரும் திடீர் என மயக்கம் அடைந்தனர். இதனால், அவர்கள் அவசரமாக அருகிலுள்ள ராம் மனோகர் லோகியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

http://tamil.thehindu.com/india/தரையில்-உருண்டு-மோடியிடம்-விவசாயிகள்-கோரிக்கை-தலைவர்-அய்யாகண்ணு-மயக்கம்-அடைந்ததால்-பரபரப்பு/article9616853.ece?homepage=true

  • தொடங்கியவர்

புதுதில்லி ஜந்தர் மந்தரில் மோதிக்கு ஒப்பாரி வைத்து விவசாயிகள் போராட்டம்

ரத்தத்தால் கால்களை கழுவி போராட்டம்

டெல்லியில் தமிழக விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ரத்தத்தால் கால்களை கழுவி போரட்டம் நடத்தினர்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் மீது போலீசார் தடியடி

பதிவு: ஏப்ரல் 07, 2017 16:11

 
 

டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் மீது டெல்லி போலீசார் தடியடி நடத்தி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 
 
 
 
டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் மீது போலீசார் தடியடி
 
புதுடெல்லி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது. விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு இந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வருகிறார். தங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று கைகளை அறுத்து ரத்தம் சிந்தும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கையை, மோடி போன்ற முகமுடி அணிந்த விவசாயி காலில் ரத்தத்தை ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

201704071611204332_f._L_styvpf.gif

பின்னர் ரிசர்வ் வங்கியை முற்றுகையிடுவதற்காக புறப்பட்டுச் சென்றனர். தேசிய வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், விவசாயிகள் தொடர்ந்து முன்னேறினர். இதனையடுத்து அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் விவசாயிகள் காயமடைந்தனர்.

அத்துடன் விடாமல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/07161120/1078699/Police-lathi-charge-on-tamil-nadu-farmers-in-new-delhi.vpf

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

'பாடை கட்டி' போராட்டம் செய்யும் விவசாயிகள்!

டெல்லியில் 27-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள், பாடை கட்டி நூதன முறையில் போராடி வருகின்றனர்.

Delhi farmers protest

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அவர்கள் போராடி வருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். 

இன்று 27-வது நாளாக தொடரும் போராட்டத்தில், விவசாயிகள் பாடை கட்டி, சங்கு ஊதி பிணத்தை சுடுகாட்டுக்கு எடுத்து செல்வது போல் நூதன போராட்டம் செய்தனர்.

TN delhi farmers protest

கடந்த மாதம் 14-ம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடங்கிய இந்தப் போராட்டத்துக்கு பலதரப்பட்ட அரசியல் தலைவர்களிடம் இருந்து தொடர் ஆதரவு வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.vikatan.com/news/india/85870-farmers-protest-at-delhi-continues-for-27th-day.html

  • தொடங்கியவர்

அய்யாக்கண்ணு ஆடி கார் வைத்திருந்தால்தான் என்ன பிரச்சினை?

 

 
ayyakannu_3151744f.jpg
 
 
 

தமிழ்நாடு சம்பந்தமான கோரிக்கைகளோடு, டெல்லியிலுள்ள அரசப் பிரதிநிதிகளை இங்குள்ளோர் சந்திக்கச் செல்கையில், எங்கள் டெல்லி செய்திப் பிரிவைத் தொடர்புகொண்டு “கொஞ்சம் விசேஷ கவனம் கொடுங்கள்” என்று கேட்டுக்கொள்வது வழக்கம். டெல்லி செய்தியாளர் ஷஃபி முன்னா, விவசாயிகளைப் பொறுத்தமட்டில் கூடுதலான அக்கறை எடுத்துக்கொண்டு உதவக் கூடியவர். அவர்களுடனான அனுபவங்களை அவர் சொல்லும்போது மிகுந்த வலி உண்டாகும்.

“டெல்லி நிலவரம் அரசியல் கட்சிக்காரர்களுக்கு நன்றாகத் தெரியும். அதற்கேற்ப சூதானமாக நடந்துகொள்வார்கள். விவசாயிகளின் நிலைமை அப்படி அல்ல. இவ்வளவு பெரிய நகரத்தில், பல்லாயிரக்கணக்கில் கூடாமல், தேசியக் கட்சிகள், ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பது சுலபமல்ல. நாடாளுமன்ற வளாகம், பிரதமர் அமைச்சர்கள் வீடுகள், காங்கிரஸ், பாஜக அலுவலகங்கள் அமைந்திருக்கும் ‘லூட்டியன்ஸ் டெல்லி’ பகுதியில் பலத்த பாதுகாப்பு இருக்கும். கையில் கொடியுடனோ, பதாகைகளுடனோ போராட்டக்காரர் தோரணையில் யாராவது தென்பட்டாலே, சாலையில் வரிசையாக நிற்கும் பாதுகாப்புப் படையினர் அவர்களைப் பிடித்து ஜந்தர் மந்தருக்கு அனுப்பிவிடுவார்கள். ஜந்தர் மந்தர் சூழல்தான் உங்களுக்குத் தெரியுமே, அங்கே போனால், அங்குள்ள சூழலைப் பார்த்து வெறுத்துப் போய் ஊருக்குத் திரும்பும் மனநிலை தானாக வந்துவிடும். பாவம் எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில்தான் இங்கே வந்து போராடுகிறார்கள்” என்பார் ஷஃபி முன்னா.

ஆர்ப்பாட்டக்காரர்களின் பிராந்தியம் ஜந்தர் மந்தர். கடும் வெயிலுக்கும் மழைக்கும் பனிக்கும் அஞ்சாமல், கூடாரம் போட்டு வருடக்கணக்கில் கோரிக்கைகளோடு உட்கார்ந்திருக்கும் போராட்டக் குழுக்கள் அங்கு உண்டு. யாரையும் யாரும் அவ்வளவு சீக்கிரம் கண்டுகொள்ள மாட்டார்கள். ஒருகட்டத்தில் போராட்டமே வாழ்க்கையாகி, மனம் பிறழ்ந்து, வாழ்க்கை தொலைத்து கசந்த கண்களோடு பத்து பதினைந்து வருடங்களாக உட்கார்ந்திருப்பவர்களையெல்லாம் நான் சந்தித்திருக்கிறேன். இந்திய ஜனநாயகம் தன்னுடைய போராடும் மக்களுக்கு அப்படியொரு இடத்தைத்தான் இன்று ஒதுக்கியிருக்கிறது.

இது ஒருபுற சவால். இன்னொருபுற சவால் இப்படிப் போராட்டத்துக்கு என்று கூட்டிவரும் ஆட்களைப் பராமரிப்பது. ஒரு கூட்டத்தை அழைத்துச் சென்றால், அழைத்துச் செல்பவரே பெரும்பாலும் எல்லாச் செலவுகளையும் சமாளிக்க வேண்டும். “போராட்டம் முடிஞ்சு கடைசி நாள் டெல்லியைச் சுத்திப் பார்த்துட்டு வரலாம், அப்படியே ஆக்ரா போய்ட்டு வரலாம்... இப்படியெல்லாமும் சொல்லிதான் ஆளுங்களைத் திரட்ட வேண்டியிருக்கு. பத்து பதினைஞ்சு நாள், அதுவும் சிறையில பிடிச்சுப்போயிட்டாலும் அஞ்சாம டெல்லியில தாக்குப் பிடிக்கணும்கிற சூழல்ல துணிஞ்சு வர்றவங்க குறைச்சல். என்ன கஷ்ட நஷ்டம்னாலும் ஊருல போராடுறதோடு முடிச்சுக்குவோம்னு நெனைக்கிறவங்கதான் ஜாஸ்தி. ஆனா, ஊருல போராடிப் பெரிய பிரயோஜனம் இல்ல. எல்லா அதிகாரத்தையும் டெல்லில குவிச்சுட்டு, ஊருல போராடி என்ன பயன்? பெரிய கஷ்டங்களுக்கு மத்தியிலதான் இப்படிப் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கு” என்று சொல்லாத விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் இல்லை.

வறட்சி நிவாரணம், வங்கிக் கடன் ரத்து என்றெல்லாம் மேலோட்டமாகக் கூறினாலும், விவசாயிகளின் உண்மையான உளக்கிடக்கை வேறு. ‘நாளுக்கு நாள் நொடித்துக்கொண்டிருக்கும் இந்தத் தொழிலை எப்படியாவது நிமிர்த்திவிட முடியாதா, அரசாங்கத்தை ஒரு பெரிய கொள்கை மாற்றத்துக்குத் திருப்பிவிட முடியாதா?’ எனும் பெரிய ஏக்கத்தை அடிப்படையாகக் கொண்டது அது.

நான் கிராமப்புறங்களுக்குச் செல்லும்போதெல்லாம், விவசாயிகளிடம் பேசுவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அவர்கள், பெரும் நிலவுடைமையாளர்கள் ஆகட்டும், சிறு, குறு விவசாயிகள் ஆகட்டும்; அவர்களுடைய ஆதாரப் பிரச்சினை வெறுமனே இன்றைய சிக்கல்கள் மட்டும் அல்ல. இரவில் நீளும் விவசாயிகளுடனான பல உரையாடல்கள் அவர்களுடைய எதிர்காலம் குறித்த கேள்வியிலும் பயத்திலுமே போய் முடிந்திருக்கின்றன. பெருந்துயரம், மனச்சஞ்சலத்தினூடே படுக்கைக்குத் திரும்பும் சூழலுக்கே பல உரையாடல்கள் தள்ளியிருக்கின்றன.

உங்களிடம் நிலம் இருக்கிறது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை. அதற்கென்று பொருளாதார மதிப்புகூட உண்டு. ஆனால், அது எத்தனை நாளுக்கு உங்கள் பிழைப்புக்குச் சாரமாக இருக்கும்? தெரியாது. உங்களுடைய பிள்ளைகளின் படிப்புக்கோ, தொழிலுக்கோ, திருமணத்துக்கோ அது நிச்சயமாக உதவுமா? தெரியாது. உங்களுடைய இறுதிக்காலம் எப்படியிருக்கும்? தெரியாது. நிலத்தை விற்றுவிடலாம். அடுத்து பிழைப்புக்கு என்ன செய்வது? தெரியாது. எந்த நகரத்துக்குச் செல்வது, திரும்பவும் எப்போது ஊர் திரும்புவது? தெரியாது. இப்படி நூற்றுக்கணக்கான பதிலற்ற கேள்விகளின் வெளிப்பாடு ஒரு விவசாயியின் போராட்டம்.

இதுதான் வாழ்க்கை என்று முடிவெடுத்து வந்துவிட்ட பின் பாதிப் பயணத்தின் நடுவில் பாதை மூடிக்கொள்கிறது. இருள் சூழ்ந்துகொள்கிறது. நடுத்தர வயதில் என்ன முடிவு எடுக்க முடியும்? சாமனிய மக்கள் மீது முடிவெடுக்கும் முடிவைத் திணிக்க முடியாது. அரசாங்கம்தான் முடிவெடுக்க வேண்டும். தொலைநோக்கிலான திட்டங்களை யோசிக்க வேண்டும். ஆனால், இன்றைய அரசாங்கத்தில் விவசாயிகளைப் பற்றி யோசிக்க யார் இருக்கிறார்கள்?

டெல்லியிலிருந்து இந்த வாரம் வெளியாகியிருக்கும் எல்லாப் பிரதான செய்திப் பத்திரிகைகளிலும் தமிழக விவசாயிகளின் போராட்டம் வெளியாகியிருக்கிறது. மும்பையிலிருந்து செய்தியாளர்களை அனுப்பி காவிரிப் படுகை விவசாயிகளின் பிரச்சினையைப் பிரசுரித்திருக்கிறது ஒரு பத்திரிகை. டெல்லி தொலைக்காட்சிகள் ‘பெரிய மனதோடு’ ஆளுக்கு அரை மணி நேரம் தமிழக விவசாயிகள் பிரச்சினையை விவாதித்க ஒதுக்கியிருக்கின்றன. போராட்டக் களத்துக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வந்து சென்றிருக்கிறார்.

இவை எல்லாமே அய்யாக்கண்ணு தன் போராட்டத்தின் மூலமாகச் சாதித்திருப்பவை. இவையெல்லாம் இன்று எவ்வளவு பெரிய விஷயங்கள் என்பது போராட்டச் சூழலில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும்.

நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டவுடன் மது வியாபாரிகளின் அழுத்தத்தையடுத்து, அடுத்த சில மணி நேரங்களில் இந்த உத்தரவை எப்படி எதிர்கொள்ளலாம் என்று கூடி விவாதித்து முடிவெடுத்த பிரதமர் மோடி, இருபத்தைந்து நாட்களாகப் போராடிவரும் தமிழக விவசாயிகளை இதுநாள் வரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இப்போது அய்யாக்கண்ணு மீது கொடூரமான தனிநபர் தாக்குதல்கள் தொடங்கியிருக்கின்றன.

போராட்டத்துக்குத் தலைமை தாங்குபவரைத் தனிப்பட்ட வகையில் கேவலப்படுத்துவது என்பது போராட்டங்களைக் குலைக்க ஆளும் அரசமைப்பு காலங்காலமாகக் கையாளக்கூடிய ஆயுதங்களில் ஒன்று. அதிலும், மோடி அரசு இதை ஒரு தொடர் உத்தியாகவே கையாள்கிறது. ஆளும் பாஜகவின் தேசியச் செயலர் ஹெச்.ராஜா, “அய்யாக்கண்ணு ஆடி கார் வைத்திருக்கிறார், அவர் மணல் அள்ளுவோருக்கு வக்காலத்து வாங்கினார், அவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி” என்றெல்லாம் பேசியிருப்பது ஆச்சரியம் அளிக்கவில்லை. எதிர்க்கட்சிகளில் தொடங்கி யாரெல்லாம் இந்த அரசின் விமர்சகர்களோ அவர்கள் குறித்த இழிவான கதையாடல்களை உருவாக்குவது, சமூக வலைதளங்களில் அதைப் பரப்பிவிடுவது என்பது அக்கட்சி கையாளும் தாக்குதல் முறைகளில் ஒன்று. ஆனால், சாமானியர்கள், முக்கியமாகப் படித்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் இதுகுறித்த செய்திகளில் மாய்ந்துபோவதும், அதே மாதிரியான கேள்விகளை உருவாக்குவதும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

ஃபேஸ்புக்கில் ஒரு பதிவைப் பார்த்தேன். அய்யாக்கண்ணுவின் வயிற்றுப் பகுதியை வட்டமிட்டு, “இப்படி தொப்பை வைத்திருப்பவர் எப்படி ஒரு ஏழை விவசாயியாக இருக்க முடியும்?” என்று கேள்வி கேட்டது அந்தப் பதிவு. பகிர்ந்திருந்தவர் ஒரு ஆசிரியர். நம் மனம் இன்று வந்தடைந்திருக்கும் சமூக வக்கிர நிலைக்கு ஒரு உதாரணமாக இதைச் சொல்லலாம். நேற்று காலை ஊடகத் துறை நண்பர்கள் இருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். “அய்யாக்கண்ணு வசதியானவர்னு சொல்றாங்களே சார்!” என்ற தொனியில் அவர்கள் பேச ஆரம்பித்தபோது, ‘பிரச்சினை பிரச்சாரம் அல்ல; சதிகளை நம்பக் காத்திருக்கும் நம் மனம்’ என்று தோன்றியது.

அய்யாக்கண்ணுவை நான் பார்த்ததில்லை. ஆனால், அவரைப் பற்றி எங்கள் திருச்சி செய்தியாளர் கல்யாணசுந்தரம் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். “மனிதர் நூதனமான போராட்டங்களுக்குப் பேர் போனவர். கவன ஈர்ப்பாளர். யாருமே கண்டுகொள்ளாத விவசாயிகளின் பிரச்சினைகளை நோக்கி ஊடகங்களின் கவனத்தைத் திருப்பிவிடுவார். அதேபோல, எந்த ஒரு விவசாயி அவரிடம் பிரச்சினை என்று போனாலும், உடனே கிளம்பிவிடுவார். வெவ்வேறு தருணங்களில் அவரால் உதவிகள் பெற்றவர்கள்தான் அவர் பின்னால் இப்போது அணிதிரண்டு நிற்கிறார்கள். கொஞ்சம் வசதி உண்டு. ஆனால் ‘ஆடி கார் வைத்திருக்கிறார்’ என்பதெல்லாம் புரட்டு” என்று சொன்னார் கல்யாணசுந்தரம்.

அய்யாக்கண்ணு ஆடி காரே வைத்திருந்தாலும், அதில் என்ன தவறு என்று எனக்குத் தோன்றுகிறது. ஒரு விவசாயி விவசாயத்தில் ஈடுபட்டதால், இந்நாட்டின் மோசமான விவசாயக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர் அதன் நிமித்தம் அரசிடம் நிவாரணம் கேட்பதற்கும் அவருக்கு வசதி இருக்கிறதா, இல்லையா என்பதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ரூ. 6 லட்சம் கோடி வங்கிக் கடன்களை வாராக் கடன் என்று அறிவித்தது இந்த அரசு. பெரும்பாலான கடன்கள் பெருநிறுவன முதலாளிகள் வாங்கியவை. யாருடைய வசதி பற்றியாவது இங்கே கேள்வி வந்ததா? அமெரிக்காவில் முன்னாள் அதிபர் புஷ்ஷுக்குச் சொந்தமான விவசாயப் பண்ணையும் அரசு மானியத்தில்தான் இயங்குகிறது, கேள்வி கேட்பவர்களுக்குத் தெரியுமா? எது விவசாயிகளைப் பரதேசியாகவே நம்மைப் பார்க்கச் சொல்கிறது, அவர்கள் மீது பல் போட்டு பேசச் சொல்கிறது?

அய்யாக்கண்ணு எப்படிப்பட்டவர் என்பதல்ல, அவருடைய கோரிக்கைகளின் சாத்தியம் என்ன என்பதல்ல, இன்றைக்கு யாராலும் பொருட்படுத்தப்படாத இந்நாட்டின் விவசாயிகளை நோக்கி அவர் சிறு கவனத்தையேனும் திருப்ப முயற்சிக்கிறார் என்பதே முக்கியம். ஒரு முதியவர், நாம் ஒவ்வொரு வேளையும் சாப்பிட்டில் கை வைக்கக் காரணமான ஒட்டுமொத்த விவசாயிகளுக்காகவும் ஒரு போராட்டத்தை முன்னெடுக்கிறார். கோவணம் கட்டிக்கொண்டு, கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிக்கொண்டு, கையில் மண்டை ஓடுகளை ஏந்திக்கொண்டு, வாயில் எலிகளைக் கவ்வியபடி வேகிற வெயிலில் ஒரு விவசாயி நின்றால்தான் நாம் அவரைத் திரும்பிப் பார்ப்போம் என்றால், இவ்வளவு மோசமான நிலைக்கு நம்முடைய விவசாயிகளைத் தள்ளியிருக்கும் இந்த அரசாங்கத்தைத்தான் கேள்வி கேட்க வேண்டும்; நாம்தான் வெட்கப்பட வேண்டும்.

நேற்றிரவு தொலைக்காட்சியில் போராட்டத்தைக் காட்டியபோது, “எப்படிப்பா வாயில எலியைச் சகிச்சு வெச்சிக்கிட்டிருக்காங்க?” என்று கேட்டான் மகன். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. நெடுநேரம் தூக்கம் இல்லை. ஹெச்.ராஜாக்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. அவர்களிடம் எல்லாவற்றிற்கும் பதில் இருக்கும்!

சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/opinion/columns/அய்யாக்கண்ணு-ஆடி-கார்-வைத்திருந்தால்தான்-என்ன-பிரச்சினை/article9621464.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.