Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காட்டை ஒற்றை மனிதராக ஆர்யா காப்பாற்றலாம்... படத்தை?! - கடம்பன் விமர்சனம்

Featured Replies

காட்டை ஒற்றை மனிதராக ஆர்யா காப்பாற்றலாம்... படத்தை?! - கடம்பன் விமர்சனம்

 
 
 

காட்டை காப்பாற்ற நினைக்கும் நாயகனின் போராட்டமே கடம்பன்.

மேற்கு தொடர்ச்சி மலையின் கடம்பவனத்தை தன் அன்னையாக நினைத்து வாழ்கிறது சில குடும்பங்கள். தலைவர் சூப்பர் சுப்பராயன், அவரது மகன் கடம்பன் (ஆர்யா), இன்னும் சில குடும்பங்கள் அந்த வனத்தில் கிடைக்கும் வளங்களை வைத்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். தொங்கு பாறையில் தொங்கிக் கொண்டே தேன் எடுப்பது, நண்பர்களுடன் கேலி பேசுவது, நாயகி கேத்ரின் தெரஸாவுடன் காதல் என நகரும் கதையில் ஃபாரஸ்ட் ரேஞ்சரால் சில சட்ட விரோத செயல்கள் நடக்கிறது. அவர்களை அங்கிருந்து காலி செய்ய பல பிரச்னைகளைக் கொடுக்கிறார். ஆர்யாவும் அவர் இடத்தினரும் அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே கடம்பன்.

கடம்பன்

உடலை பயங்கரமாக முறுக்கேற்றி, தோற்றத்தில் கம்பீரம் காட்டுகிறார் ஆர்யா. மலை உச்சியில் இருந்து குதிப்பது, சரசரவென மரம் ஏறுவது, ஓடுவது, தாவுவது என காட்டில் வசிக்கும் ஆளாக நம்பவைக்கும் படியான செய்கைகளை, ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாவற்றையும் நிறைவாகவே செய்கிறார். இடத்தை அபகரிக்க வருபவர்களிடம் கோபப்படுவது, கேத்ரின் தெரஸாவுடனான ரொமான்ஸ் என சில எக்ஸ்பிரஷன்களில் இன்னும் மெருகேற்றி நடித்திருக்கலாம். ஆர்யா தவிர படத்தில் கொஞ்சம் நடிப்பது சூப்பர் சுப்பராயன் மற்றும் ஆடுகளம் முருகதாஸ் மட்டுமே. மற்ற அனைவரும் எல்லா ஃப்ரேமிலும் கும்பல் கும்பலாக அட்மாஸ்பியரில் நிற்கிறார்களே தவிர மனதில் நிற்கும் பர்ஃபாமென்ஸ் கொடுக்கவில்லை.

காடு சார்பாக காட்டப்படும் எந்த டீட்டெய்லிங்கையும் அப்படியே ஏற்றுக் கொண்டு கதையுடன் ஒன்ற முடியவில்லை. காட்டில் கிடைக்கும் ஒருவகைக் காயை, ஃபுட்பாலாக உதைத்து எதிரிகளின் ஜே.சி.பிக்களை துவம்சம் செய்வது, டயர்களைக் கொண்டே வில்லன்களைத் துரத்துவது என்று காட்சிப்படுத்திய எதிலும் நம்பகத்தன்மை ஜீரோ! தொலைந்து போனவர்கள் ஊ ஊ என ஒலி எழுப்பி சேர்ந்து கொள்வதெல்லாம் ‘அன்பு மலர்களே.. நம்பி இருங்களே’ டைப் பாஸ்!  அதிலும் ஆர்யா-கேத்ரின் தெரஸா ரொமான்ஸுக்கு கூட ஒரு சவுண்ட் கொடுத்திருப்பதெல்லாம்... எதுக்க்க்க்க்கு!

Kadamban

'அவ்ன் மட்டும் என் கைல கடிக்கட்டும்' எனத் தமிழைத் தாறுமாறாகப் பேசும் அந்த போலீஸை எங்க பாஸ் புடிச்சீங்க? அதை விட வில்லனாக நடித்திருக்கும் தீப்ரஜ் ரானா கதாபாத்திரம் பரிதாபம். 'காட்ட அழிக்க நினைக்கறது, உன் ஆத்தாளோட கர்பப் பையில் இருந்துகிட்டு அவளோட வயித்த கிழிக்கிறது மாதிரிடா, அதனால சாகப் போறது உன் அம்மா மட்டும் இல்ல நீயும் தான்டா' என ஆர்யா பேசும் வசனம் கேட்டுவிட்டு அவர் கையால் அடிவாங்கி சாகிறார்.

ஆடுகளம் முருகதாஸ் செய்யும் காமெடிகளுக்கு சிரிப்பதா, ஐயோ பாவம் இவங்களுக்கு காமெடி வரலையே எனப் பரிதாபப்படுவதா எனத் தெரியவில்லை. அதிலும், மாமியாரை வைத்து செய்யும் ஏ ஜோக்குகள் எல்லாம், கொடூரம். யுவன் இசையில் ஒற்றைப் பார்வையில் பாடல் மட்டும் ஓகே. மற்ற பாடல்கள்.. ம்ஹும்.  பின்னணி இசை ஓரளவு படத்தைக் காப்பாற்றுகிறது.  எஸ்.ஆர்.சதீஸ்குமார் ஒளிப்பதிவில் அருவி சம்பந்தப்பட்ட காட்சி.. அருமை. க்ளைமாக்ஸில் அத்தனை யானைகளுக்கு நடுவே வரும் அந்த சண்டைக்காட்சி பிரமிப்பு. மற்றவை அத்தனை எடுபடவில்லை.   கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் ஆஹா ஓஹோ இல்லை என்றாலும்.. ஏமாற்றவில்லை. 

 
 

இயற்கையைக் காக்க வேண்டும் என இன்றைக்கு முக்கியமான பிரச்னையை கையில் எடுத்ததற்காகவும், காட்டை சார்ந்து வாழும் மனிதர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த என்ன விஷயங்கள் எல்லாம் பிரயோகிக்கப்படும் என தைரியமாகக் காட்சிபடுத்தியதற்காகவும் இயக்குநர் ராகவா பாராட்டுக்குரியவர். ஆனால், அதை சொன்ன விதம் தான் மிகப் பழைய டைப். காட்டில் நடக்கும் கதை, பல காட்சிகளுக்கு க்ரீன் மேட் பயன்படுத்தியிருக்கிறார்கள், அது அப்படியே துருத்திக் கொண்டு தெரிவதில் துவங்கி, படம் நகரும் விதம், முடியும் போது வரும் ட்விஸ்ட் வரை எல்லாவற்றையும் யூகிக்க முடிவது எனப் படம் முழுக்க அவ்வளவு பிரச்னைகள். நல்ல விஷயத்தை எடுத்திருந்ததைப் போல, அதை காட்சிகளாக மாற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் வென்றிருப்பான் கடம்பன்.

http://www.vikatan.com/cinema/movie-review/86521-kadamban-movie-review.html

  • தொடங்கியவர்

சினிமா விமர்சனம் - கடம்பன்

 
 
கடம்பன் இசை: யுவன் ஷங்கர் ராஜா; ஒளிப்பதிவு: எஸ்.ஆர். சதீஸ்குமார்
நடிகர்கள்: ஆர்யா, கேத்தரீன் தெரசா, ஒய்.ஜி. மகேந்திரன், சூப்பர் சுப்பராயன், தீப்ராஜ் ராணா, ஆடுகளம் முருகதாஸ்; இயக்கம்: என். ராகவன்

காட்டில் வசிக்கும் பழங்குடியின மக்கள் எப்படி அந்த வனத்தின் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள் என்பதை சொல்ல வருகிறது கடம்பன்.

கடம்பன் - திரைப்பட காட்சி

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கடம்பவனம் பகுதியில் நாயகன் கடம்பன் (ஆர்யா) தன் கூட்டத்துடன் வசித்து வருகிறான். அந்த மலைப் பகுதியில் உள்ள சுண்ணாம்புக் கற்களுக்காக இவர்களைக் காலி செய்ய விரும்புகிறது ஒரு சிமெண்ட் நிறுவனம். அதைத் தடுக்கும் முயற்சியில் பல உயிர்களை இழந்தாலும், கடைசியில் காட்டைக் காப்பாற்றுகிறார்கள் நாயகனும் அவரது கூட்டத்தினரும்.

இந்தப் படத்திற்காக பல மாதப் பயிற்சியின் மூலம் உடலை மெருகேற்றியிருக்கும் ஆர்யாவுக்கு காதல் காட்சிகளில் ரொமான்ஸ் வரவில்லை என்றாலும் மலை உச்சியிலிருந்து குதிப்பது, வேரைப் பிடித்துத் தொங்குவது, ஓடுவது என படம் முழுக்க வரும் சர்க்கஸ் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். கேத்தரின் தெரசா, சிறப்பாகவே நடிக்க முயற்சி செய்திருந்தாலும் மலை கிராமத்தில் வசிக்கும் பெண் பாத்திரத்திற்கு சுத்தமாகப் பொருந்தவில்லை. ஆடுகளம் முருகதாஸின் காமெடி, பல சமயங்களில் சிரிப்புக்கு பதிலாக எரிச்சலையே மூட்டுகிறது. ரேஞ்சராக நடித்திருப்பவர் படத்தில் மலைவாழ் மக்களைக் கொடுமைப்படுத்துவதோடு, வசனங்களில் தமிழையும் கடித்துத் துப்புகிறார்.

 

கடம்பன் - திரைப்பட காட்சி

இந்தப் படத்தின் முக்கியமான பலம் ஒளிப்பதிவு. தாய்லாந்தின் காடுகள், சண்டைக் காட்சிகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம், அட்டகாசம். ஆனால், பல காட்சிகளில் கிராஃபிக்ஸ் கைவிட்டிருப்பதால் சற்று செயற்கையாகத் தென்படுகிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் ஒரே ஒரு பாடலும் ரசிக்கும்படியாக இருக்கின்றன.

 

கடம்பன் - திரைப்பட காட்சி

இம்மாதிரி இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதைப் பற்றிய படங்களில் வரும் முக்கியமான பிரச்சனை, மக்கள் எதிர்கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் பிரதான கதையோடு முடிச்சுப்போட்டு சொல்ல முயல்வது. கடம்பனில் அந்தத் தொல்லை இல்லை. நேர்கோட்டில் செல்கிறது கதை. படத்தின் முதல் பாதியில், கடம்பவன மக்களுக்கும் காட்டிற்கும் உள்ள பிணைப்பு, அவர்கள் அவ்வப்போது எதிர்கொள்ளும் சிக்கல், நாயகன் - நாயகி காதல் என்று போகிறது படம். ஆனால் இடைவேளைக்குப் பிறகு, சூப்பர் ஹீரோ படமாகிவிடுகிறது.

கடம்பன் - திரைப்பட காட்சி

இருபது பேர் சேர்ந்து நவீன எந்திரத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டேயிருக்க ஹீரோ மீது ஒரு குண்டுகூட படாமல் இருப்பது, திருவோட்டுக் காயை கால்பந்தைப் போல உதைத்து லாரிகள், ஜேசிபி எந்திரங்களை உடைப்பது, டயர்களை உருட்டிவிட்டு எதிரிகளை துவம்சம் செய்வது என தொடர்ந்து நம்ப முடியாத காட்சிகள் அணிவகுக்கின்றன.

சுரங்கத் தொழிலுக்காக காடுகள் அழிக்கப்படுவது என்பது தீவிரமான, தற்போதும் தொடர்ந்து கொண்டேயிருக்கும் பிரச்சனை. அரசு, காவல்துறை, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு புறமும் எளிய வனவாசிகள் மறுபுறமும் இருக்கும் நிலையில், உண்மையிலேயே இந்தப் பிரச்சைனையை எப்படி தீர்க்க முடியும் என விவாதித்திருக்க வேண்டும். எப்படி இந்த விவகாரத்திற்கு எளிய மக்களின் சார்பாக ஒரு தீர்வு இருக்க முடியும் என்று சொல்லியிருக்கலாம். ஆனால், கொடூரமான வில்லன் VS சக்திவாய்ந்த நாயகன் என குறுக்கிவிட்டார் இயக்குனர் என்பதுதான் ஏமாற்றம்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-39609007

  • தொடங்கியவர்

திரை விமர்சனம்: கடம்பன்

 

kadambanreview_3154792f.jpg
 
 
 

காட்டைத் தங்கள் தாயாகக் கருதும் மக்களுக்கும், காட்டின் வளத்தைச் சட்ட விரோதமாகச் சுரண்டிக் கொழுக்க நினைக்கும் பெரு நிறுவனத்துக்கும் இடையே நடக்கும் போராட்டமே ‘கடம்பன்’.

தேனி மாவட்டத்தின் மலைக் கிராமங்களில் ஒன்று கடம்பவனம். தேன் எடுத்தல், வேட்டையாடுதல், இயற்கையாகக் கிடைக்கும் உணவு வகைகள் ஆகியவற்றைக் கொண்டு அந்த ஊர் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அந்த ஊரிலும் அந்த ஊரைச் சுற்றியுள்ள சில பகுதிகளிலும் சிமென்ட் தயா ரிக்கத் தேவைப்படும் சுண்ணாம்புக் கற்கள் அதிகமாக உள்ளன. இதை அறிந்துகொண்ட சிமென்ட் நிறு வனம் ஒன்று அந்தப் பகுதியை வளைத்துப்போடப் பார்க்கிறது. அதற்கு கடம்பவன மக்கள் தடை யாக இருக்கின்றனர். அவர்களை அகற்றத் திட்டமிடுகிறது சிமென்ட் நிறுவனம். அதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராகிறது. இந்த இரு பிரிவினர் இடையே நடக்கும் மோதலில் யார் வென்றார்கள் என்பதே கதை.

பேராசை கொண்ட நிறுவனங் கள், அவர்களுக்குத் துணை போகும் அரசு அமைப்புகள் என எடுத்துக்கொண்ட கதைக் களத் துக்காக இயக்குநர் ராகவாவைப் பாராட்டலாம். ஆனால், திரைக் கதை தட்டையாக உள்ளது. சிமென்ட் நிறுவன அதிபரின் தம்பியைப் பிடித்துவைப்பது, இயந்திரத் துப்பாக்கி வைத்திருக்கும் வில்லன் ஆட்களைக் காட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தயா ரிக்கப்பட்ட‌ ஆயுதங்களை வைத்து விரட்டி அடிப்பது ஆகியவற்றைக் காட்சியாக்கியதில் நிறைய இடங் களில் லாஜிக் ஓட்டைகள். ஊர் மக்களை அங்கிருந்து விரட்ட, அந்த இடத்தைப் புலிகள் காப்பகமாக அறி விக்கச் சொல்லி வனச்சரக அதிகாரி யிடம் உத்தரவிடுகிறார் வில்லன். ஆனால் சாதாரண வனச்சரக அதி காரி ஒருவருக்கு, ஒரு இடத்தைப் புலிகள் காப்பகமாக அறிவிக்க அதிகாரம் இருக்கிறதா என்ன?

சமவெளிப் பகுதிகளில் இருந்து மலைக்கு வரும் மக்கள் செய்யும் அட்டகாசங்களால் அங்கு வாழும் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், பழங்குடி மக்களை ஏமாற்றும் தொண்டு நிறுவன நடவடிக்கைகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தியதில் சபாஷ் போட வைக்கிறார் இயக்குநர்.

கட்டுமஸ்தான உடலும், ஆக் ரோஷ நடிப்புமாக ஆர்யா அசத்து கிறார். சண்டைக் காட்சிகளில் இருக்கும் துடிப்பு, காதல் காட்சி களில் காணவில்லை.

கடம்பனைச் சுற்றிச் சுற்றி வரும் பொன்வண்டாக கேத்தரீன் தெரசா. ஆனால் பாவம் அதைத் தவிர அவருக்கு வேறு வேலையில்லை. தவிர, காதல் காட்சிகள் மிகவும் செயற்கையாக இருக்கின்றன.

ஆர்யாவின் தந்தையாக சூப்பர் சுப்பராயன், நண்பனாக ஆடுகளம் முருகதாஸ், சிமென்ட் நிறுவன அதிபராக தீப்ராஜ் ராணா, தொண்டு நிறுவனத் தலைவராக ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் தங்கள் பணியைச் சரியாகச் செய்திருக் கின்றனர்.

‘வாழ்க்கைத் தரம்கிறது வாழ்ற முறைலதான் இருக்கு’, ‘காட்டை அழிக்க உன்னைப் போல ஆயிரம் பேர் வந்தா, காட்டைக் காப்பாத்த என்னைப் போல நூறு பேர் வருவாங்க’ என்று சில வசனங்கள் மட்டும் ஈர்க்கின்றன.

பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் ஆங்காங்கே யுவன் ஷங்கர் ராஜா தெரிகிறார். தேனி, கொடைக்கானல் பகுதியின் காடு கள், மலைகள், அருவிகளை அழ காக அள்ளி வந்திருக்கிறது எஸ்.ஆர். சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு. கிளை மாக்ஸ் காட்சிகளில் தேவா இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

கதையாக, காட்சிகளாக, ‘கடம்பன்' செழுமை. ஆனால் திரைக்கதையில் வறட்சி.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-கடம்பன்/article9642076.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.