Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொடநாடு எஸ்டேட்டில் இப்போது என்ன நடக்கிறது?- நேரடி அனுபவம்! #SpotReport #VikatanExclusive

Featured Replies

கொடநாடு எஸ்டேட்டில் இப்போது என்ன நடக்கிறது?- நேரடி அனுபவம்! #SpotReport #VikatanExclusive

 

கொடநாடு

 

ர்மங்கள் புதைந்துகிடக்கிற இரும்புக் கோட்டையாக விளங்கும் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் அறைகளில் கொள்ளை அடிக்கப்பட்டதாக பரபரப்பு கிளம்பி இருந்த சூழலில், கொடநாடு எஸ்டேட்டுக்குள் நாம் ஊடுருவினோம்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து 27 கிலோ மீட்டர்  தூரம் கிழக்கு நோக்கிப் பயணித்தால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டை அடைந்து விடலாம். ஆனால், அங்குள்ள பல்வேறு தடுப்பு கேட்களையும், கண்காணிப்பு காவலர்களையும் கடந்து, அந்த எஸ்டேட்டுக்கு உள்ளே செல்வது அவ்வளவு சுலபமல்ல.

சுமார் 1000 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொடநாடு எஸ்டேட்டில், 200-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். குறிப்பாக, எஸ்டேட் முழுவதையும் இரவு பகலாகக் காவல் காக்கிறார்கள், நேபாள நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள். கடந்த 13 ஆண்டுகளாக, கொடநாடு எஸ்டேட்டின் 10 -ம் எண் கேட் பகுதியில் இரவு நேரக் காவலாளியாகப் பணியாற்றி வந்த ஓம் பகதூர் தாபா என்பவர்தான், கடந்த 24-ம் தேதி நள்ளிரவில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, கயிற்றால் கட்டப்பட்டு தலைகீழாகத் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவரோடு இணைந்து காவல் பணியில் ஈடுபட்டு வந்த கிருஷ்ணா பகதூர் என்பவர் முகத்திலும், கைகளிலும் வெட்டுக் காயங்கள். அவர் உயிர்பிழைத்து மயங்கிய நிலையில் கிடந்தார் என்று கூறப்பட்டது. விடிந்த பிறகு, இந்தத் தகவல் வேகமாகப் பரவ, காவல்துறை வந்து ஓம் பகதூரின் உடலை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது.

டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளைத் தவிர வேறு எவருக்கும் மருத்துவமனைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. சில மணி நேரம் கழித்து எஸ்டேட் மேனேஜர் வேகவேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார். அவரோடு சில உள்ளூர் அரசியல்வாதிகளும் நுழைந்தார்கள். அதன்பிறகுதான், கொலை செய்யப்பட்ட ஓம் பகதூரின் உறவினர்களையே உள்ளே அனுமதித்தார்கள். உடற்கூராய்வு முடிந்து மாலை 4:45 மணிக்கு மேல் ஓம் பகதூரின் உடல் எஸ்டேட் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

கொடநாடுஅப்போதுதான், கொடநாடு எஸ்டேட்டுக்கு உள்ளே சென்ற அங்கு என்னதான் நடக்கிறது என்பதை கண்டறிய முடிவுசெய்தேன். அந்த நேரத்தில், ஓம் பகதூரின் உடலுக்கு அவர்களின் சமய முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்வதற்காக, சிலர், கோத்தகிரியில் இருந்து எஸ்டேட்டுக்குச் செல்லப்போவதாக நமக்குத் தகவல் கிடைத்தது. அவர்களைப் பின்தொடர்ந்து பைக்கில் சென்றேன். கோத்தகிரியில் இருந்து சரியாக 27 கி.மீ பயணத்துக்குப் பிறகு கொடநாடு எஸ்டேட்டின்  நுழைவாயில் ஒன்று தென்பட்டது. ஓம் பகதூர் கொலைசெய்யப்பட்ட 19-ம் எண் கேட் என்பதால், அந்த நுழைவாயிலில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாங்கள் சென்ற நுழைவாயிலுக்கு அருகில் இருந்த மதில் சுவற்றின் ஓரத்தில் பைக்கை நிறுத்தினேன். அந்த நேரம் பார்த்து எஸ்டேட்க்குச் சொந்தமான வேன் ஒன்று வந்தது. சற்று நேரத்துக்கு முன்பாக, கோத்தகிரி மருத்துவமனையில் இருந்து கிளம்பிய நேபாள தொழிலாளர்கள் இருவர், கைகளில் ஊதுபத்தி, வாழைப்பழம் சகிதமாக அந்த வேனில் நின்றுகொண்டிருந்தார்கள். அந்த வேன், ஓம் பகதூர் வசித்த இடத்துக்குத் தான் செல்லப்போகிறது என்பது எனக்குப் புரிந்தது. நான், உடனடியாக ஓடிச் சென்று தாவி அந்த வேனில்  ஏறினேன். 
என்னோடு சேர்த்து வேனில் நான்கு பேர் இருந்தோம்.  இடையில் எந்தவொரு இடத்திலும் வேன் நிற்கவில்லை. படுவேகமாக எஸ்டேட்டில் அமைந்திருக்கும் தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே வளைந்து நெளிந்து சென்றது. பச்சை வண்ணத்தில், கூண்டு பொருத்தப்படாத இராணுவ வாகனம் போன்று நாங்கள் சென்ற வேன் காணப்பட்டது. வேன் கடந்துசென்ற வழியெங்கிலும் கட்டடங்களும், தடுப்பு வளைவுகளும் இருந்தன. தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே, ஒரு இராணுவத் தளம் போல அந்தப் பகுதி இருந்தது. ஒரு பெரிய  பங்களாவை வேன் கடந்தபோது, என் அருகில் நின்றுகொண்டிருந்த அந்த நேபாள நண்பர், "இது தான் ஜெயலலிதாம்மா தங்குற பங்குளா...  இன்னொரு சின்ன பங்குளா அந்த கடசில இருக்கு.. அங்க தான் அடுக்கடி போய் தங்கிருவாங்க. சூரியன் உதிக்கிறத அந்தம்மா ரொம்ப நேரத்துக்கு பார்த்துட்டு இருக்கும்னு தேயிலை பறிக்கப்போற லேடீஸ் எல்லாம் பாத்துட்டு வந்து சொல்வாங்க" என்றார். 

அடுத்து சில நிமிடங்களில் இன்னொரு நீளமான வீடு போன்ற கட்டடம் வர, அதை நம்மிடம் காண்பித்து, "இந்த ஆபிஸ்லதான் சென்னைக்காரங்க யாராது வந்தா மீட்டிங் நடக்கும். வேற யாருகூட மீட்டிங்னாலும் இங்கே வந்துதான் பேசுவாங்க. எஸ்டேட்டுக்கு உள்ளுக்க 20 கார்களுக்கு மேல இருக்கு. இங்கே இருக்குற ரோட்ல ஒரு மிஸ்டேக் இருந்தாலும் அவ்வளவுதான், சுப்பார்வைஸர்க்கு இங்கிலீஷ்லயே திட்டு உளுகும்” என்றார். 

கொடநாடு

 

பெரிய பங்களா உள்ளே யாரையும் விடமாட்டாங்களா என நான் கேட்க, அவரோ, கண்களை ஆச்சரியத்துடன் விரித்து, " இல்ல! அங்கல்லாம் உடவே மாட்டாங்களே" என்றார். அதன்பிறகு ஆங்காங்கே சின்னச் சின்ன ரூம்களும் அமைந்திருந்தன. அவர் காண்பித்த இடங்களை எல்லாம் செல்போனில் படம் எடுத்தேன். உங்களுக்கு தினகரனைத்  தெரியுமா என்று கேட்டேன். “அவரு பேர் ஆபிஸ்காரங்க பேசித்தான் கேட்டிருக்கேன். இவருதான்னு அடையாளமெல்லாம் தெரியாது” என்றார். சரி இங்கு தொழிலாளர்களுக்கு சம்பளம் எவ்வளவு தருகிறார்கள் ? எனக் கேட்டேன், சலித்துக்கொண்டவராக, தமிழுக்காரங்களுக்கு ஒரு சம்பளம், எங்களுக்கு ஒரு சம்பளம். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரி குடுப்பாங்கொ. எங்க ஆளுகளுக்கு இங்க வாட்ச்மேன் வேலை மட்டும்தான் கெடைக்கும். நான் இங்க பத்து வருஷத்துக்கு மேல வேலை பாத்தாச்சு, 2500 ரூபாய் சம்பளத்துல வேலைக்கி சேர்ந்தேன். கடைசியா வாங்குன சம்பளம் 4800 ரூபாய்.  வருஷத்துக்கு ஒரு தடவை 300 ரூபாய் சம்பளம் ஏத்தறதே சிரமொம். சாயங்காலம் 6 மணிக்கு கேட்ல வந்து நின்னா, அடுத்த நாள் காலை 7:30 மணிக்கு தான் திரும்பி போகணும். கேட் பகுதிகள்ல லைட்டே இருக்காது. டார்ச் லைட்டு வெச்சிக்கிட்டு நைட்டு முழுசும் காவல் காக்கணும் என்று தங்களுடைய பணியின் சிரமங்களைச் சொன்னார். 

 சிறிது நேரத்தில் நாங்கள் சென்ற வேன், ஒரு தேயிலை சேகரிக்கும் குடோனுக்கு அருகில் சென்று நின்றது. வேனில் ஏறுவதற்காக வெளியே சிலர் காத்திருக்க, வேனுக்குள் நம்மோடு பேசிக்கொண்டிருந்தவர், திடீரென வாகனத்தில் இருந்து கீழே குதித்து, வேகமாக நடக்க ஆரம்பித்தார். அவசர அவசரமாக நானும் எட்டிக் குதித்து அவர் சென்ற திசை நோக்கி வேகமாக ஓடினேன். நாங்கள் வந்த வாகனம், அங்கிருந்த ஆட்களை ஏற்றிக்கொண்டு மீண்டும் எஸ்டேட் நுழைவாயில் பகுதியை நோக்கிப் புறப்பட்டது.

ஓர் இறக்கத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று நின்றுகொண்டிருக்க, அதன் அருகிலேயே எஸ்டேட் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு பகுதியும் அமைந்திருந்தது. தேயிலை தோட்டத்துக்குள் புகுந்து, அங்கிருந்த கான்கிரீட் படிக்கட்டுகளின் வழியே கீழ் நோக்கி இறங்கினேன். பெரிய ஒரு மதில் சுவருக்கு அந்தப் பக்கம் எஸ்டேட் தொழிலாளர்களும், இறந்துபோன ஓம் பகதூரின் உறவினர்களும் என நிறையப் பேர் கூடியிருந்தனர்.  நான் அந்தக் கூட்டத்துக்குள் ஐக்கியமானேன்.  நீலகிரியின் ஆளுங்கட்சி முக்கியப் பிரமுகர்கள் சிலரும் அங்கு நின்றுகொண்டிருந்தார்கள். அங்கிருந்த ஒரு கம்பத்தில் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது போல், அழுக்குப் படிந்த நிலையில் அ.தி.மு.க கொடி பறந்துகொண்டிருந்தது.  

ஓம் பகதூரின் உடலுக்கு அவரின் உறவினர்கள் சடங்குகளை செய்துகொண்டிருக்க, எஸ்டேட்டில் பணியாற்றும் வயதான தமிழ் தொழிலாளி ஒருவர், ‘என்ன தான் இறந்தவர் வேறு நாட்டுக்காரராக இருந்தாலும், இந்த எஸ்டேட்டில் பல வருடங்களாக பணியாற்றி நம்மில் ஒருவராக வாழ்ந்திருக்கிறார். எனவே, கொடநாடு ஊர்(!) மக்கள் சார்பாக அவருக்கு மரியாதை செய்கிறோம்’ என அஞ்சலி செலுத்தினார். அதை கட்சிக்காரர்களில் சிலர் செல்போன்களில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவுசெய்துகொண்டிருக்க, நானும் எனது மொபைலில் அங்கு நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் பதிவு செய்துகொண்டிருந்தேன்.

 

கொடநாடு
 


திடீரென உள்ளூர் அரசியல்வாதி ஒருவர், எப்படியோ என்னைக் கண்டுபிடித்துவிட, என் அருகில் வந்து என் சட்டையைப் பிடித்து இழுத்து, நீங்கள் யார்? என்று கேட்டார். நான் விகடன் நிருபர் என்றேன். உங்களை யார் உள்ளே விட்டது? எப்படி எஸ்டேட்க்குள்ள வந்தீங்க என்றார் அவர்.  எஸ்டேட் காவலாளி மர்மமான முறையில் இறந்திருக்கார். நான் செய்தி சேகரிக்க வரக்கூடாதா? மீடியாவுக்கு எஸ்டேட்டுக்குள் அனுமதி இல்லைன்னு எங்காவது எழுதியிருக்காங்களா என்றேன். வெளியாட்கள் யாரும் உள்ளே வரக்கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா என அவர் கேள்வி எழுப்ப, வெளியாட்கள் வரக்கூடாது என்றால் உங்களுக்கும் எஸ்டேட்க்கும் என்ன சம்பந்தம்? என்னை இங்கு வரக்கூடாது என நீங்கள் அதிகாரம் செய்கிறீர்களே இந்த எஸ்டேட் கட்சியின் சொத்தா? என்று திருப்பிக் கேட்டேன். அதற்கு மேல் எதுவும் பேசாதவர், என்னை இழுத்துக்கொண்டுபோய் குழுவாக நின்றுகொண்டிருந்த கட்சியினரிடம் ஒப்படைத்தார். அவர்களில் ஒருவர் என்னுடைய பாக்கெட்டில் இருந்த எனது செல்போனையும், ஐ.டி கார்டையும் பிடுங்கிக்கொண்டு, ஆவேசமாக, இது யாரோட இடம்ன்னு தெரியும்ல..  வேற எதாவது மீடியா இங்க இருக்கா பாரு? நீ மட்டும் எந்த தைரியத்துல உள்ளே வந்த, அங்க கோத்தகிரி ஆஸ்பத்திரியிலேயே இவனை நோட் பண்ணேன் என்று மிரட்டும் தொனியில் பேச, இன்னொருவரோ, எத்தனை பிரச்னை இங்க போயிட்டு இருக்கு.. நீங்க உங்க இஷ்டத்துக்கு இவ்வளவு தூரம் உள்ளே வந்திருக்கீங்க என கூற, பின்னணியில் இருந்து "இவன சும்மா விடக்கூடாது என ஒரு குரல் ஒலிக்க, சற்று நேரத்துக்கு அந்த இடமே ரணகளமாய் காட்சியளித்தது. பின்னர், என்னுடைய செல்போனை மும்முரமாக பரிசோதித்தவர்கள், அதில் நான் எடுத்திருந்த படங்கள் அனைத்தையும் அழித்தார்கள். என் செல்போனில் வேறு என்னென்ன வைத்திருக்கிறேன் என்பதை தொடர்ந்து நோட்டமிட்டவர்கள், இந்த சம்பவம் தொடர்பாக நான் அன்று காலையில் இருந்தே எடுத்து மற்ற பைல்களில் சேமித்து வைத்திருந்த போட்டோக்கள், செய்திக் குறிப்புகள் என அனைத்தையும் அழித்து முடித்தார்கள். அதற்குப் பிறகும் தொடர்ந்து, எப்படி உள்ளே வந்தீர்கள், யாரைக் கேட்டு உள்ளே வந்தீர்கள்? என்று மீண்டும் மீண்டும் அதே விசாரிப்புகள். அப்போது தான் தெரிந்தது, இவர்கள் யாரோ ஒருவரின் கட்டளை கிடைப்பதற்காகத்தான் நம்மிடம் காலம் தாழ்த்திக்கொண்டிருக்கிறார்கள் என்று. சில நிமிடங்கள் கழித்து கூட்டத்துக்குள் ஒருவர் வந்தார், பிரச்னை ஏதும் பண்ண வேணாம், விட்டுவிட சொல்லிட்டார் என்று அவர்களிடம் கூறினார். யார் அப்படிச் சொன்னது என்பது அந்த ர.ரக்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

அதற்கடுத்து இனிமேல் ஒரு நிமிஷம் கூட  நீங்க இங்க இருக்கக்கூடாது. உடனே இங்கிருந்து கிளம்புங்க.. டேய்.. நம்ம வேன்லயே கூட்டிட்டுபோய் இவரை வெளிய விட்டுட்டு வாங்கடா! என ஒருவர் தெரிவிக்க, என்னோட செல்போனையும், ஐ.டி கார்டையும் குடுங்க என நான் கேட்டேன். அதெல்லாம் நாங்க தரமுடியாது. மேனேஜர்தான் முடிவெடுக்கணும். நாளைக்கு காலைல எஸ்டேட் ஆபிசுக்கு வந்து மேனேஜர்கிட்ட பேசி உங்க செல்போனை வாங்கிக்கோங்க என்றார். அதான் போன்ல இருந்த போட்டோஸ் எல்லாம் நீங்களே அழிச்சிட்டிங்களே, அப்பறம் என்ன? போனைக் குடுங்க நான் கிளம்பறேன் என விடாப்பிடியாக கேட்க, சார் இந்த இடத்தை பொறுத்தவரைக்கும் மேனேஜர்தான் எல்லாம். அவரைமீறி நாங்க ஒன்னும் பண்ணமுடியாது, அப்புறம் எங்களுக்குத்தான் பிரச்னை என ஒருவர் நம்மிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, என் செல்போன் ஒவ்வொருவரிடமாக கைமாறி, எங்கோ சென்று மறைந்தது.
மேலும் அங்கே காவலாளி ஓம் பகதூரின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், நம்மால் அதற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இனி வாக்குவாதம் செய்ய வேண்டாம். காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணியவாறு அங்கிருந்து புறப்பட்டேன்.  இறுதியாக எஸ்டேட்டுக்கு சொந்தமான வேனிலேயே அழைத்து வந்து கொடநாடு எல்லையில் இறக்கிவிட்டார்கள். இனி இந்தப் பக்கம் எல்லாம் வந்துராதீங்க என ஆலோசனை வேறு கூறிவிட்டுக் கிளம்பிய நிர்வாகிகள்,அங்கிருந்த கேட்டின் காவலாளியை சரமாரியாக திட்டிவிட்டுச் சென்றனர்.

பின்னர் நீலகிரியில் பணியாற்றும் மற்ற பத்திரிகை நண்பர்கள் உதவி செய்ய, அடுத்தநாள் காலையில் கொடநாடு எஸ்டேட் ஆட்கள், கோத்தகிரி பேருந்து நிலையத்துக்கு வந்து என் செல்போனையும், ஐ.டி கார்டையும் ஒப்படைத்தார்கள்.
கொடநாடு எஸ்டேட்டை வாங்கிய ஜெயலலிதா மறைந்துவிட்டார். எஸ்டேட்டை மறைமுகமாக ஆட்சி செய்து வந்த சசிகலாவும் ஊழல் குற்றவாளியாக ஜெயிலுக்கு சென்றுவிட்டார். அவருக்குப் பிறகு சென்னையில் இருந்தே கொடநாடு எஸ்டேட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தினகரனும் இப்போது கைதாகிவிட்டார். இத்தனை வருடங்களாக நாம் காவல் காத்த கொடநாடு எஸ்டேட்டுக்கு, இப்போது யார் முதலாளி என்பது கூட தெரியாமல் ஒரு வாட்ச்மேனும் கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்கிறார். 
மர்மம் நிறைந்த இந்த கொடநாடு எஸ்டேட்டையும் அதன் ஊழியர்களையும் இப்போது யார் யாரெல்லாமோ வந்து  ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழக அரசியல் மேகங்கள் அனைத்தும் இப்போது கொடநாடு காட்சிமுனையில் கூடியிருக்கிறது. சொத்துக் குவிப்பின் மூலம் வாங்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அரசு இப்போதாவது செயல்படுத்துமா?

http://www.vikatan.com/news/tamilnadu/88161-this-is-what-happening-in-kodanadu-spotreport.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.