Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1987 உலகக் கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும்! Gentleman to CommonMan மினி தொடர்

Featured Replies

1987 உலகக் கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும்! Gentleman to CommonMan மினி தொடர் பாகம் 1

 
 

உலகக் கோப்பை 1987

அப்போது எந்த கிரிக்கெட் விமர்சகரும் சேத்தன் ஷர்மா ஹாட்ரிக் எடுப்பார் என்றோ, நவ்ஜோத் சித்து தொடர்ந்து நான்குமுறை 50 ரன்கள் அடிப்பார் என்றோ கணிக்கவில்லை. அந்த உலகக் கோப்பை தொடங்கும் முன்பும் முடிந்த பின்பும் கிரிக்கெட் அல்லாத ஒரு விஷயத்தை பற்றிதான் அதிகம் பேசினார்கள். அது டேவிட் பூனின் மீசை. இப்படி பல விஷயங்களுக்கு அச்சாரமாக இருந்த 1987 உலகக் கோப்பையைப் பற்றிய கம்ப்ளீட் ரீவைண்ட் இதோ...

1987 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முதன்முறையாக கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்துக்கு வெளியே நடக்கப்போகிறது என்றதுமே கிரிக்கெட் உலகிற்கு ஆச்சர்யம். 1975,1979 மற்றும் 1983 என மூன்று உலகக்கோப்பைப் போட்டிகளுமே இங்கிலாந்தில்தான் நடந்தன. அப்போது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஏழு நாடுகளுக்கு மட்டுமே டெஸ்ட் விளையாடும் அந்தஸ்து இருந்தது. தென் ஆப்பிரிக்க அணி (நிறவெறி காரணமாக) அதிகாரபூர்வ கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ சி சி)  தடைவிதித்திருந்த காலகட்டம் அது.

மேற்கு நாடுகளுக்கு தெற்காசிய நாடுகள் என்றாலே ஒரு இளக்காரம். ‘இங்கிலாந்திற்கு அடிமைப்பட்டு கிடந்த நாடுகள்தானே...’ என்றுதான் பார்ப்பார்கள். ஏழை நாடுகள், படிப்பறிவில்லாத நாடுகள் என்றும் எண்ணிக்கொள்வார்கள். இந்தியா, பாகிஸ்தானிலாவது மைதானங்கள் உண்டு. இலங்கையில் இரண்டே மைதானங்கள்தான்.

முதல் இரண்டுமுறை சாம்பியனாக, கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக இருந்த மேற்கிந்திய தீவுகளில் பெரிய உள்கட்டமைப்பு வசதிகள் கிடையாது. மிகப்பெரும் ஸ்டார் கிரிக்கெட் பிளேயர்களுக்கு கூட சம்பளம் கிள்ளித்தான் கொடுப்பார்கள். விளையாட்டு வீரர்களுக்கும் சரி, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கும் சரி, விளம்பரத்தால் கிடைக்கும் வருமானம் சொற்பம். ஆனால் பேஸ்பால், பேஸ்கட் பால் போன்றவற்றிற்கு அங்கு கூடுதல் கவனிப்பு உண்டு. அவர்களின் ஸ்டார் விக்கெட் கீப்பரான ஜெஃப் துஜான் கிரிக்கெட் போட்டி நடக்காத காலங்களில் மருந்து கம்பெனி பிரதிநிதியாக வேலை பார்ப்பார் என்றால் பார்த்துக் கொள்ளலாம்.

உலகக் கோப்பை

கணிதத்தில் படிக்கும் அறுங்கோணம், எண்கோணம், இணைகரம் போன்ற வடிவங்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும்படி மைதானங்களை வைத்திருப்பது நியூசிலாந்து. அவர்களாலும் தனியாய் ஒரு உலக்கோப்பைப் போட்டிகளை நடத்த முடியுமா என்பதும் சந்தேகம். எனவே மீதம் இருப்பது ஆஸ்திரேலியாதான். 

இங்கிலாந்திற்கு நிகராக சொல்லப்போனால் கூடுதலாகவே மைதான உள்கட்டமைப்பு, ஒளிபரப்பு வசதிகள் கொண்ட ஆஸ்திரேலியாவில் தான் 1987 உலக்கோப்பை போட்டிகள் நடத்தப்படும் என்ற கருத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே பரவலாக இருந்தது. ஆனால், 1985 உலக தொடர் கோப்பையை (World Championship of Cricket) ஆஸ்திரேலியா நடத்தியதாலோ அல்லது இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு முக்கிய நாடுகள் இணைந்து போட்டியை நடத்த ஐ.சி.சி-யிடம் கேட்டுக் கொண்டதாலோ ,1987 உலக்கோப்பையை நடத்தும் வாய்ப்பு இந்தியா-பாகிஸ்தானுக்கு கிடைத்தது. 

1983 உலக கோப்பையை வென்ற பின்னர்தான் இந்தியாவில் சிறு நகரங்கள், கிராம மக்களுக்கு கிரிக்கெட்டின் மீது ஒரு பிடிப்பு வந்தது. அதற்கு முன்புவரை, டெஸ்ட் மேட்சுகளே பரவலாக விளையாடப்பட்டு வந்தன. இரண்டு இன்னிங்ஸ், ஃபாலோ ஆன், தோற்காமலும் இருக்கலாம், அதுக்குப் பேரு டிரா என வழவழாவென இருக்கும் விதிமுறைகள் அவர்களைக் கவரவில்லை. ஆனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருக்கும் இத்தனை ஓவர், எவ்வளவு முடியுதோ அவ்வளவு அடிக்கணும், அதைத் திருப்பி அடிச்சா வெற்றி, இல்லைன்னா தோல்வி என்ற விதிமுறை அவர்களுக்கு நெருக்கமாக இருந்தது. சொல்லப் போனால் 1983 வெற்றிவரை கிரிக்கெட் மேட்டுக்குடி மக்களுக்கான விளையாட்டாகவே பார்க்கப்பட்டது. ஜென்டில்மேன் கேம் என்கிற அடையாளம் வேறு.

மக்களுக்கு ஒரு விளையாட்டு பிடித்தால் அதை விளையாடிப் பார்க்கத் தோன்றும். இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை விளையாடிப் பார்க்க வேண்டுமென்றால் ஸ்டிக் போன்ற குச்சி, குறைந்த பட்சம் நாலு பேர்,  இடவசதி தேவை. டென்னிஸ், கால்பந்து, கூடைப்பந்து என எதற்கும் உபகரணமோ, இடவசதியோ வேண்டும். அப்படி இல்லாமல் விளையாடினால் அது போரடித்துவிடும். ஆனால் கிரிக்கெட்டுக்கு ஒரு கட்டை, பந்து போன்ற ஒரு பொருள் இருந்தால் போதும். இரண்டு பேர் ஒரு பள்ள மேடான முட்டுச் சந்தில் விளையாடினால் கூட சுவராஸ்யம் குறையவே குறையாது.  இன்னும் சிலர் மழைபெய்தால் வீட்டுக்குள், பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் இல்லா நேரங்களில் புக் கிரிக்கெட் கூட விளையாடுவார்கள். 

இப்படி இந்தியாவில் கிரிக்கெட் மக்கள் மனதில் எளிதாக ஒட்டிக் கொண்டது. கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து போன்ற விளையாட்டுக்களில் இரண்டு அணிகளும் ஏறக்குறைய சமமாக இருந்தால்தான் ஆட்டம் சுவராஸ்யமாக இருக்கும். இல்லாவிட்டால் ஆட்டம் ஒருபக்கச் சார்பாகவே இருக்கும். ஆனால் கிரிக்கெட்டில் ஒரு அணி சாதாரணமாக இருந்தாலும் அந்த அணியில் ஒரு நபரின் ஹீரோயிசத்தால் அன்றைய போட்டியில் வென்றுவிடலாம் என்ற காரணி இயல்பாகவே நாயக ஸ்துதி கொண்ட நாட்டிற்கு உவப்பாக இருந்தது. இந்தியர்கள் பெரும்பாலும் தங்கள் வாழ்வில் மலையேற்றம், வனம் புகுதல் போன்ற  அட்வெஞ்சர்கள் எதிலும் ஈடுபடுவதில்லை. அதிகபட்சம் ஓடும் பேருந்தில் ஏறுவதும், பைக்கை விரட்டுவதும்தான். எனவேதான் அவர்கள் ஆப்ரேஷன் தியேட்டரில் கூட மசாலா கேட்கிறார்கள். கிரிக்கெட்டில் நிலவும் இந்த நிலையற்ற தன்மையும் அவர்களை இயல்பாக கவர்ந்திருந்தது.

உலகக் கோப்பை

எனவே இந்தியா, பாகிஸ்தானில் 1987 உலக கோப்பைப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதும் இரண்டு நாட்டிலுமே மக்களிடையே ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டது . ‘அங்க நடந்த போட்டியவே ஜெயிச்சாச்சு. இப்ப நம்ம ஊர்லயே நடக்குது’ என இந்திய மக்களும், ‘போன வருஷம் இந்தியால போயி அவங்களயே புரட்டிட்டு வந்தோம், நமக்கென்ன...’ என பாகிஸ்தான் மக்களும் மகிழ்ந்தார்கள். ஏற்கனவே அரசியல்வாதிகளால் மனதளவில் பகையுண்டு கிடந்த இருநாட்டு மக்களுக்கும் யார் இந்த கோப்பையை வெல்வது என்பதில் கௌரவ பிரச்னையும் இருந்தது. 

இப்போது போல பகல் - இரவு ஆட்டங்கள் நடத்த மின்னொளி மைதானங்கள் அதிகம் இல்லாத காலகட்டம். 90 சதவிகிதத்திற்கும் அதிகமான போட்டிகள் பகல் ஆட்டமாகவே நடத்தப்படும். ஒருநாள் போட்டிகளை அப்போது லிமிடெட் ஓவர் மேட்ச் என்றுதான் அழைப்பார்கள். காரணம் 50 ஓவர், 55 ஓவர், 60 ஓவர் என நாட்டிற்கு ஏற்றவாறு அங்கு சூரிய ஒளி கிடைக்கும் கால அளவைக் கொண்டு நடத்தப்படும். இங்கிலாந்தில் வெயில் காலத்தில் சூரிய ஒளி அதிகநேரம் வரை நீடிக்கும். அங்கே அனாயாசமாக 60 ஓவர் போட்டிகள் நடத்தலாம். எனவே அதற்கு முந்தைய உலக கோப்பைப் போட்டிகள் எல்லாம் 60 ஓவர் கொண்டதாக நடத்தப்பட்டன. இந்தியா போன்ற நாடுகளில் சூரிய வெளிச்சம் 4.30 மணிக்கு மேல் குறைய ஆரம்பித்து விடும்.  எனவே இந்தியாவில் ஆட்டங்கள் 50 ஓவர்கள்தான் நடக்கும்.  

ஐ சி சி விதிமுறைகளின் படி டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகள் உலக கோப்பைப் போட்டிகளில் நேரிடையாக கலந்து கொள்ளலாம்.  டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளின் எண்ணிக்கை ஒற்றைப் படையாய் இருந்தால் குரூப் பிரிக்க உப்புக்குச் சப்பாணியாக ஒரு நாட்டைச் சேர்த்துக் கொள்வார்கள். இதன் மூலம் அந்த நாட்டில் கிரிக்கெட் ஆர்வம் தூண்டப்படும் என்பது ஐ.சி.சி-யின் திட்டம். அதன்படி உறுப்பு நாடுகளிடையே ஐ.சி.சி சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி, ஜிம்பாப்வே அதில் வெற்றி பெற்று எட்டாவது அணியாக உள்ளே வந்தது.  

குரூப் ’ஏ’ வில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகளும், குரூப் ’பி’ பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளும் இடம்பெற்றிருந்தன. இந்தியாவும் பாகிஸ்தானும் அவரவர் போட்டிகளை அவரவர் நாட்டிலேயே விளையாடிக் கொள்ளலாம். முடிந்தால் அரை இறுதிப் போட்டிகளைக் கூட அவரவர் நாட்டில் விளையாடிக்கொள்ளலாம் என்ற சலுகையும் கிடைத்தது. ஈடன் கார்டனில் ஃபைனல்.

அதற்கு முந்தைய உலக்கோப்பைப் போட்டிகளையெல்லாம் புருடென்ஷியல் என்ற காப்பீட்டு நிறுவனம் ஸ்பான்சர் செய்திருந்தது. இந்த உலகக்கோப்பையை ரிலையன்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்ய முடிவு செய்தது. இன்று வேண்டுமானால் ரிலையன்ஸ் இந்திய மக்களின் அன்றாட வாழ்வில் நேரிடையாக பங்குபெறும் ஒரு நிறுவனமாக இருக்கலாம். ஆனால் 80களில் அவர்கள் மக்களுடன் நேரடி வணிகத்தில் இல்லை. அப்போது தொழிலதிபர்கள் என்றாலே டாட்டா பிர்லா தான். ‘ஆமா... இவரு பெரிய டாட்டா பிர்லா’ என ஒருவரை கிண்டல் செய்ய பயன்படும் வார்த்தைகள் இப்போது ‘ஆமா... இவர் பெரிய அம்பானி’ என மாறுவதற்கு ஒரு காரணமாய் இருந்தது இந்த ஸ்பான்சர்ஷிப். இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் ‘அதென்ன ரிலையன்ஸ்’ எனக் கேட்கப்பட்டு ‘ஓ அப்படி ஒரு கம்பெனியா?’ என மக்களிடையே பெரிய அறிமுகம் கிடைத்தது. 

தமிழகத்தில் 85ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் தமிழிலும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது. நடுத்தர வர்க்கத்தினரிடையே டிவி வாங்கும் ஆர்வமும் அதிகரித்தது.  இந்த உலக்கோப்பைப் போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பாவதால் கிரிக்கெட் ஆர்வம் உடைய வீடுகளில் டிவி எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கியது. எனவே டிவி விற்பனை களைகட்டியது.  லட்சக்கணக்கான மக்களை இந்தப் போட்டிகள் நேரிடையாகச் சென்றடையும் என்பதால் விளம்பரதாரர்களும் அதிகம் வந்தனர்.  

ஊடகங்களும் மக்களிடையே அதீத ஆர்வத்தை தூண்டத் தொடங்கியது. பல பத்திரிகைகள் 1983 உலக கோப்பை வெற்றி அணியில் இருந்தவர்களிடம் இருந்து கட்டுரைகள் வாங்கி தொடர்ச்சியாக பிரசுரித்தன. ‘ஆல் தி வே ஃபார் போர்’ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் வந்தன. அப்போது ஸ்ரீகாந்த்துக்கு பயங்கர டிமாண்ட். கட்டுரை, பேட்டி என சுற்றிக்கொண்டிருந்தார். ஒரு நல்ல டோர்னமெண்ட் நடப்பதற்கு உண்டான எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்தேறின என்றே சொல்லவேண்டும்.

அடுத்ததாக, போட்டியில் பங்கேற்கவிருக்கும் அணிகளின் வீரர்கள் பட்டியல் வெளியானது. மேற்கிந்திய தீவு அணியில் கார்டன் கிரினீட்ஜ், மால்கம் மார்ஷல் இல்லை. முதல் அதிர்ச்சி. இங்கிலாந்து அணியில் இயன் போத்தமும், டேவிட் கோவரும் இல்லை. இது அடுத்த அதிர்ச்சி. நியுசிலாந்து அணியில் ரிச்சர்ட் ஹேட்லியும் இல்லை. இப்படி அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள்.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. கவாஸ்கர் – ஸ்ரீகாந்த்  தொடக்க ஆட்டக்காரர்கள்,  வெங்சர்க்கார், அசாருதீன் மிடில் ஆடர்டர் பேட்ஸ்மேன்கள். கபில்தேவ், ரவிசாஸ்திரி ஆல்ரவுண்டர்கள். சேட்டன் சர்மா, ரோஜர் பின்னி மற்றும் மனோஜ் பிரபாகர்  வேகப்பந்து வீச்சுக்கு. கிரன் மோர், சந்திரகாந்த் பண்டிட் விக்கெட் கீப்பிங்கை கவனித்துக்கொள்வர். சுழற்பந்துக்கு மனீந்தர் சிங், சிவராமகிருஷ்ணன். ஒரே புதிய முகம் நவ்ஜோத் சிங் சித்து மட்டும். ஆனாலும் அவர் ஏற்கனவே டெஸ்ட் அணியில் அவ்வப்போது இடம்பிடித்திருந்தார். எல்லோரும் டெல்லியைச் சேர்ந்த ராமன் லம்பாதான் மிடில் ஆர்டருக்கு தேர்வு செய்யப்படுவார் என நினைத்திருந்தபோது சித்து இடம்பிடித்தார். அப்போது உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக அவர் கலக்கி வந்தார். ராமன் லம்பா கிடைத்த வாய்ப்புகளை வீணடித்ததும் இதற்கு ஒரு காரணமாய் அமைந்தது. 

இந்த 87 காலகட்டமானது பெரிய அளவில் டீம் ஸ்ட்ரேட்டர்ஜிகள், கோச்சுகள், அனாலிசிஸ்கள் இல்லாமல், அவர்களுக்கு என்ன வருகிறதோ அதை அப்படியே களத்தில் வெளிப்படுத்திய காலம். ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் அகடாமிகள் இருந்தன. இங்கிலாந்திலும் கவுன்டி அணிகளில் பயிற்சியாளர்கள் இருந்தனர். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்திய தீவுகளில் எல்லாம் பயிற்சியாளர்கள் என்பவர் சீனியாரிட்டி, சிபாரிசு அடிப்படையில் நியமிக்கப்பட்ட காலம். கோச் என்ற பதம் கூட அப்போது புழக்கத்தில் இல்லை. மேனேஜர் என்றுதான் சொல்வார்கள். எனவே அணி தேர்வானதும் மேனேஜரும் கேப்டனும் எப்படி விளையாடலாம், யாரை எடுக்கலாம் என பேசிக்கொள்வார்கள். 

இப்போதுபோல, அடுத்து மோத இருக்கும் அணி வீரர்களின் பலம்/பலவீனத்தை எல்லாம் வீடீயோவில் பார்த்து அதற்கேற்ப வியூகம் வகுப்பதெல்லாம் புழக்கத்தில் இல்லாத காலம். முதல் 40 ஓவர் வரை மூன்று விக்கெட்டுகளுக்கு மேல் விழக்கூடாது. கடைசி 10 ஓவரில் அடித்துக் கொள்ளலாம் என்பதுதான் வியூகமாகவே இருக்கும். பந்து வீசும் அணியினரும் முதல் 10 ஓவரை வீசும் இருவரை கடைசி 10 ஓவருக்கும் வைத்துக் கொள்வார்கள். மீதமிருக்கும் முப்பதை மற்ற மூவர் பங்கிட்டுக் கொள்வார்கள். ஃபீல்டிங் பொஸிஷனையும் பெரிய அளவில் மாற்றமாட்டார்கள். முதலில் பேட்டிங் பிடித்து 260 ரன்களைக் கடந்துவிட்டால் போதும் பந்துவீச்சாளர்கள் கூட மெத்தனமாகத்தான் பந்து வீச வருவார்கள். 

இப்படித்தான் 87 உலக்கோப்பை ஆட்டங்கள் தொடங்கின.

 

விக்கெட் விழும்!

http://www.vikatan.com/news/sports/92219-1987-world-cup-series-part-1.html

  • தொடங்கியவர்
 

கடைசி ஓவர்களில் கலங்கிய இந்தியா! - 1987 உலகக் கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும்! Gentleman to CommonMan மினி தொடர் பாகம் 2

கிரிக்கெட்

 

இன்றைக்கு இத்தனை கேமராக்கள், தேர்ட் அம்பயர், உடனடி அனாலிஸிஸ் என்று பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ள கிரிக்கெட்டின், இந்த மாற்றங்களுக்கான ஒரு புள்ளியாக அமைந்தது 1987 உலகக்கோப்பை. அதைப் பற்றிய ஒரு ரீவைண்ட்! 
 

 

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் இரண்டுமுறை மோதவேண்டும். முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தேர்வாகும். ஏ பிரிவில் நடந்த ஆட்டங்களில் பெரிய சர்ப்ரைஸ் என்று எதுவும் இல்லை. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சமபலம் வாய்ந்த அணிகள். நியூசிலாந்து இந்த இரண்டு அணிகளையும் விட பலம் குறைந்த அணி. ஜிம்பாப்வே மூன்றையும் விட பலம் குறைவு. ஜிம்பாப்வே அணிதான் விளையாடிய எல்லா போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.

நியூசிலாந்து, ஜிம்பாப்வேயுடன் மற்றும் வெற்றி பெற்று  ஆறுதல் பட்டுக்கொண்டது. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தங்களுக்கிடையேயான போட்டிகளில் ஆளுக்கு ஒரு வெற்றியைப் பெற்றன. ரன் ரேட் அடிப்படையில் இந்தியாவிற்கு முதலிடமும் ஆஸ்திரேலியாவிற்கு இரண்டாம் இடமும் கிடைத்தது.

’பி’ பிரிவைப் பொறுத்தவரை பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மூன்றும் சமபலத்தில் இருந்தன. இலங்கை மட்டும் அவர்களோடு ஒப்பிட்டால் சுமாரான அணி. எனவேதான் விளையாடிய ஆறு போட்டிகளிலும் தோல்வி அடைந்து வெளியேறியது. சென்றமுறை கோப்பையைத் தவறவிட்டதால் இந்தமுறை கலக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் இலங்கையை இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தானை ஒரு போட்டியிலும் மட்டும் வென்று டோர்ணமெண்டை விட்டு வெளியேறியது.  இங்கிலாந்து அணி, மேற்கிந்திய தீவுகள், இலங்கை இரண்டையும் அனைத்துப் போட்டிகளிலும் வென்றது. பாகிஸ்தானிடம் இரண்டு போட்டிகளிலும் தோற்று இரண்டாம் இடம் பெற்றது. பாகிஸ்தான் மேற்கிந்திய தீவுகளிடம் ஒரு போட்டியில் மற்றும் தோற்று மீதமிருந்த ஐந்து போட்டிகளையும் வென்று முதலிடம் பிடித்தது.

இந்த லீக் பிரிவு ஆட்டங்களை எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் எதிர்பார்த்த முடிவுகளே கிடைத்தது. பெரிய அளவில் பரபரப்பான ஆட்டங்கள் என்று எடுத்துக்கொண்டால் நான்கைந்து ஆட்டங்கள் மட்டுமே. மொத்த லீக் ஆட்டங்களிலும் சேர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி மட்டுமே ஒரே ஒரு முறை 300 ரன்களைக் கடந்தது. அதுகூட மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் விவியன் ரிச்சர்ட்ஸின் தனிப்பட்ட திறமையால். அவர் 183 ரன்களைக் குவித்தார்.

Viv Richards

இரண்டு நாட்டிலும் இருந்த ஆடுகளங்கள் எல்லாமே பேட்டிங்கிற்கு சாதகமானவையே.ஆஸ்திரேலிய மைதானங்கள்போல் பரந்து விரிந்தவையும் அல்ல. ஒப்பீட்டளவில் சிறிய மைதானங்களே. பீல்டிங்கும் இப்போது இருப்பது போல எந்த அணியிலும் சிறப்பானதாக இல்லை. ஆஸ்திரேலிய அணியின் பீல்டிங் மட்டும் மற்ற அணிகளை விட சிறப்பாக இருக்கும். பளீரென்ற வெள்ளைச் சீருடையில் பீல்டிங் செய்ய இறங்கும் ஆட்டக்காரர்களில் பலர் மடிப்புக் கலையாமல்,துளி அழுக்குப்படாமல் ஆட்டம் முடிந்து வந்ததும் உண்டு. 

ஆஸ்திரேலியாவின் டீன் ஜோன்ஸ், இந்தியாவின் முகமது அசாருதீன், இலங்கையின் ரோஷன் மகனாமா, பாகிஸ்தானின் சலீம் மாலிக், மேற்கிந்திய தீவுகளின் ரோஜர் ஹார்பர் ஆகியோரே சிறந்த பீல்டர்களாக அப்போது அறியப்பட்டு இருந்தார்கள். இப்போதைய அணிகளின் பீல்டிங் தரத்துடன் 1987 அணிகளின் பீல்டிங் தரத்தை ஒப்பிட்டால் குறைந்தது 30 முதல் 40 ரன்கள் வரை அப்போதைய பீல்டர்கள் அதிகம் கொடுத்ததாகவே எடுத்துக் கொள்ளலாம். தங்கள் கைகளுக்கு பந்து வந்தால் மட்டுமே பீல்டிங் செய்ய வேண்டும் சில அங்குலம் தள்ளிப் போனாலும் குனிந்தோ,விழுந்தோ பிடிக்கக் கூடாது, அப்படிப் பிடித்தால் உங்கள் மண்டை ஆயிரம் சுக்கல்களாய் வெடித்துச் சிதறிவிடும் என ஏதோ ஒரு வேதாளம் சாபம் கொடுத்திருப்பது போலவே நடந்து கொள்வார்கள். தங்களைக் கடந்து போகும் பந்தை பழைய காதல் பாடல்களில் ஹீரோயினை ஸ்லோ மோஷனில் ஹீரோ துரத்திப் போவதைப் போலவே ஓடுவார்கள். 

| 1992ல் ஜாண்டி ரோட்ஸ் செய்த பீல்டிங்தான் மற்ற அணிகளின் பீல்டிங்கில் ஒரு பெரிய மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தது எனலாம். |

அடுத்த உலக கோப்பையான 1992ல் ஜாண்டி ரோட்ஸ் செய்த பீல்டிங்தான் மற்ற அணிகளின் பீல்டிங்கில் ஒரு பெரிய மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தது எனலாம். பாயிண்ட் திசையில் நின்று ஒற்றை ஆளாக மேட்சுக்கு 30 ரன்கள் வரை எதிரணி எடுப்பதை அவர் தடுத்ததைப் பார்த்துதான் கிரிக்கெட் உலகமே சரியாக பீல்டிங் பண்ணாதவர் நல்ல பிளேயர் இல்லை என்ற எண்ணத்திற்கு வந்தது. அதற்கு முன் வரை, பிரபல ஆட்டக்காரர்கள் பீல்டிங் பிராக்டீஸ்க்கு வருவதைக் கூட கௌரவக் குறைவாக எண்ணிய காலம் கூட உண்டு. எனவே நல்ல பேட்டிங் பிட்ச், சிறிய மைதானம், சராசரியான பீல்டிங், கம்ப்யூட்டரில் அனலைஸ் செய்து பேட்ஸ்மெனின் வீக்னெஸை கணித்து அதற்கு ஏற்ப பந்து வீசாத பவுலர்கள். இத்தனை அட்வாண்டேஜ் இருந்தும் 250ஐயே எல்லா அணிகளும் தங்களின் டார்கெட்டாக வைத்திருந்தன.

கோவில்களில் யானை ஓரிருமாதக் குட்டியாக இருக்கும் போது சின்ன சங்கிலியால் கட்டிப் போட்டிருப்பார்கள். அப்போது அதனால் அதனால் விடுபட முடியாது. யானை நன்கு வளர்ந்த பின்னும் அதே சங்கிலியால்தான் கட்டி இருப்பார்கள். ஆனால் சங்கிலியில் இருந்து விடுபடும் முயற்சியை யானை கைவிட்டு இருக்கும். அந்தச் சங்கிலியில் இருந்து விடுபட அந்த மனத்தடையை உடைக்க வேண்டும்.

1970களில் ஒரு நாள் கிரிக்கெட் ஆரம்பமானதில் இருந்து 200 ரன்கள் என்பது மரியாதைக்குரிய இலக்காக ஆட்டக்காரர்கள் மனதில் இருந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாய் மாறு 80களின் மத்தியில் 250 ஆனது. ஸ்ரீகாந்த், கிரேட் பாட்ச் போன்ற ஆட்டக்காரர்கள் ஆரம்ப ஓவர்களில் அதிரடியாக ரன் குவிக்க ஆரம்பித்து, பின்னர் 96ல் ஜெயசூர்யா, கலுவித்தரன இணை துவக்கத்தில் அதிரடியாக ஆடி, 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் 300 ரன்கள் என்பது ஆட்டக்காரர்களுக்கு ஒரு மனத்தடையாகவே இருக்கிறது.   

லீக் முடிந்த நிலையில் முதல் அரை இறுதி ஆட்டம் பி பிரிவில் முதல் இடம் பிடித்த பாகிஸ்தானுக்கும் ஏ பிரிவில் இரண்டாம் இடம் பிடித்திருந்த ஆஸ்திரேலியாவிற்கும் பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. அடுத்த அரை இறுதி ஆட்டம் ஏ பிரிவில் முதல் இடம் பிடித்திருந்த இந்தியாவிற்கும் பி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்திருந்த இங்கிலாந்திற்கும் இடையே அப்போதைய பம்பாயில்.

இறுதிப்போட்டி கல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க இருந்தது. அரை இறுதிப் போட்டிகள் தொடங்கும் முன்னரே இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் போட்டிகளில் வெற்றி பெற்று ஈடன் கார்டனில் மோதுவார்கள் என இரண்டு நாட்டினருமே எதிர்பார்த்திருந்தார்கள். கல்கத்தாவில் போட்டிக்கான டிக்கெட்டுகள் புயல் வேகத்தில் விற்றுத்தீர்ந்தன. 

முதல் அரை இறுதி ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஆலன் பார்டர் டாஸ் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 84ஆம் ஆண்டு வரை டென்னிஸ் லில்லி, ஜெஃப் தாம்சன், கிரேக் சாப்பல், இயன் சாப்பல் என ஜாம்பவான்களுடன் இருந்து வெற்றி மேல் வெற்றி பெற்றுக்கொண்டு இருந்த ஆஸ்திரேலிய அணிக்கு அவர்கள் ஓய்வு பெற்றதும் சிக்கல் தொடங்கியது. ஆலன் பார்டர் மட்டும்தான் அந்த பழைய அணியில் அதிக நாள் ஆடியவர். மற்றவர்கள் எல்லாம் ஒன்றிரண்டு ஆண்டுகள் மட்டுமே அனுபவமுள்ளவர்கள். புது முகங்களால் ஆன அணியை பார்டர் வழிநடத்திக் கொண்டு இருந்தார். துவக்க ஆட்டக்காரர்களான டேவிட் பூன் மற்றும் மார்ஷ் ஓரளவு அனுபவமுள்ளவர்கள், ஸ்டீவ் வாவ், டீன் ஜோன்ஸ், ஓடோனில் என துடிப்பான இளைஞர்கள் அணியில் இருந்தார்கள். மெக்டர்மெட் மற்றும் ரீட் வேகப்பந்து வீச்சை கவனித்துக் கொண்டார்கள்.

ஆட்டம் பாகிஸ்தானில் நடப்பதாலும், இம்ரான்கான், மியாண்டாட், வாசிம் அக்ரம், அப்துல் காதிர் போன்ற பாகிஸ்தானின் ஆல் டைம் லெவன் எடுத்தால் அன்னபோஸ்டாக இடம் பெறுகிற பிளேயர்கள் இருந்ததாலும் பாகிஸ்தான் தான் ஜெயிப்பார்கள் என்று இந்தியாவே நம்பியது. போதாக்குறைக்கு சலிம் மாலிக், இஜாஸ் அகமது, ரமீஸ் ராஜா போன்ற கன்சிஸ்டெண்டான ஆட்டக்காரர்கள் வேறு. 

ஆஸ்திரேலியா துவக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளம் கொடுக்க அந்த அணி 267 ரன்களை எடுத்தது. அப்போது குவித்தது என்றுதான் சொல்வார்கள். ஏனென்றால் 250 தானே மக்கள் மனதில் இருக்கும் டார்கெட். பாகிஸ்தானின் இன்னிங்ஸ் தொடங்கியது. முப்பத்தெட்டு ரன்களுக்குள்ளேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. களத்தில் மியாண்டாட் நிற்க இறங்கினார் கேப்டன் இம்ரான்கான். இந்த உலக கோப்பையுடன் அவர் ஓய்வு பெறப்போகிறார் என்ற செய்திகள் வேறு வந்திருந்தது. இருவரும் சேர்ந்து அணியை வெற்றிக் கோட்டை நோக்கி அழைத்துச் சென்றுகொண்டிருந்த நிலையில் அலன் பார்டர், இம்ரானின் விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனை அளித்தார். இது இவரின் கடைசிப் போட்டியாக இருந்து விடுமோ என்று பலரும் பதைபதைத்தாலும், மியாண்டாட் இருந்ததால் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால் மெக்டர்மெட் தொடர்ந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி தன் அணியை வெற்றிபெற வைத்தார். பாகிஸ்தானில் கலவரம் ஏற்படாத குறைதான். 

ஆனால் இந்திய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இங்கிலாந்தை ஜெயித்து விடலாம். நாம் ஏற்கனவே வென்றிருந்த ஆஸ்திரேலியாதான் பைனலுக்கு. எளிதில் வென்று விடலாம் என மகிழ்ச்சியுடன் தூங்கப் போனார்கள் அடுத்த நாள் ஆட்டத்தைப் பற்றிய பெருங்கனவுகளோடு.

அடுத்த நாளும் வந்தது. இந்தியா டாஸ் ஜெயித்து பீல்டிங் கேட்டது. முதல் இரண்டு விக்கெட்டுகள் 80 ரன்களுக்குள் போக, கேப்டன் கேட்டிங் உள்ளே வந்து துவக்க ஆட்டக்காரர் கிரஹாம் கூச்சுடன் கைகோர்த்தார். இந்த ஜோடி ஸ்கோரை 200 வரை கொண்டு போனது. பின்னர் வந்த லாம்ப் ஆடி 254க்கு எண்ணிக்கையை கொண்டு சென்றார். எளிதான இலக்குதான்.

கவாஸ்கர், ஸ்ரீகாந்த், சித்து, அசாருதீன் ,ரவி சாஸ்திரி, கபில்தேவ் என  எல்லோருமே பார்மில் வேறு இருந்தார்கள். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் வித்தை காட்ட முடியாத ஆடுகளம் வேறு. சுழற்பந்து வீச்சாளர் ஜான் எம்புரி இருந்தாலும் அவரை அனாயாசமாக ஆடுபவர்கள் நம் ஆட்டக்காரர்கள். விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தாலும் 40 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி. வெறும் 53 ரன்கள் தான் தேவை. 10 ஓவர்கள் 5 விக்கெட் கைவசம். இருந்தும் 219 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது இந்தியா. கடைசி 15 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. முதல் நாள் பாகிஸ்தான் சோகக்கடலில் மூழ்கியது என்றால் அடுத்த நாள் இந்தியா. 

இந்த மேட்ச் என்றில்லை. இந்தியா 80களிலும் 90களிலும் ஆடிய பல மேட்சுகளில் கடைசி விக்கெட்டுகளை 15 ரன்னுக்கு 20 ரன்னுக்கு இழந்து தோற்றது உண்டு. கையில் இருக்கும் நகங்கள் எல்லாம் பத்தாமல் கால் விரல் நகங்களையும் கடிக்கும் அளவிற்கு டென்ஷன் ஆக்கிவிடுவார்கள் இந்திய கடைசி வரிசை ஆட்டக்காரர்கள். அதனால் தான் மகேந்திர சிங் தோனி கடைசி கட்டத்தில் மேட்சுகளை வெற்றிபெற்றுத்தருவதால் இந்திய கிரிக்கெட்டின் மறக்க முடியாத ஆளாக மாறியிருக்கிறார்.     

 


-விக்கெட் விழும்

http://www.vikatan.com/news/sports/92344-1987-cricket-world-cup-series---gentleman-to-commonman---part-2.html

  • தொடங்கியவர்

கவாஸ்கரை வெறுத்த கொல்கத்தா ரசிகர்கள்..! 1987 உலகக் கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும்! Gentleman to CommonMan மினி தொடர் பாகம் 3

 
 

1987 உலகக் கோப்பை

 

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 1970களில் விளையாடிய இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரரும், பின்னர் வர்ணனையாளராக மாறியவருமான ஜெஃப்ரி பாய்காட் இப்படி சொல்லுவார். ‘80,000 பேருக்கு மேல் காலரியில் உட்கார்ந்திருப்பார்கள். இந்தியா பந்துவீசும்போது, பவுலரோ, கீப்பரோ அப்பீல் செய்தால், உட்கார்ந்திருக்கும் அனைவரும் சேர்ந்து அப்பீல் செய்வார்கள். ஒரு பேரலையாக அந்தச் சத்தம் எழுந்து அடங்கும். அடுத்த நிமிடம் இன்னொரு அப்பீல் சத்தம் பேரலையாகக் கேட்கும். மைதானத்துக்கு உள்ளே இடம் கிடைக்காமல், கையில் ட்ரான்சிஸ்டருடன் வெளியே கூட்டமாய் நின்று கமென்ட்ரி கேட்டுக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களின் குரல்தான் அது.’

அந்த அளவுக்கு கிரிக்கெட்டின்மீது பற்றுக்கொண்டவர்கள் கொல்கத்தா வாழ் ரசிகர்கள். 1984-85 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது கவாஸ்கர் நம் அணிக்குக் கேப்டன். இங்கிலாந்து அணிக்குக் கேப்டன் டேவிட் கோவர். டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் கபில்தேவ் நன்கு ஆடியும் கொல்கத்தாவில் நடைபெற்ற மூன்றாம் டெஸ்டில் கபில்தேவை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை கவாஸ்கர். 

Sunil Gavaskar

அதனால் கவாஸ்கரின் மீது பயங்கர வெறுப்பில் இருந்தனர் கொல்கத்தா ரசிகர்கள். கவாஸ்கர் மைதானத்துக்கு உள்ளே வரும்போதும் வெளியே செல்லும்போதும், பேட்டிங் பிடிக்கும்போதும் வெறுப்பில் அவரை நோக்கி கத்திக்கொண்டே இருந்தார்கள். இங்கிலாந்து இந்தப் போட்டியில் வென்றதும் கொல்கத்தா ரசிகர்கள் மாலையை எடுத்துக்கொண்டு மைதானத்துக்குள்  ஓடி இங்கிலாந்து கேப்டன் டேவிட் கோவரின் கழுத்தில் போட்டு அவரைத்தூக்கிக் கொண்டு மைதானத்தை வலம் வந்தார்கள். கவாஸ்கரின் முகம் தொங்கிப் போய்விட்டது. அகில உலகத்திலும் எதிரி நாட்டு கேப்டனின் வெற்றிக்கு மாலை மரியாதை செய்தவர்கள் கொல்கத்தா ரசிகர்கள்தான் என்று வரலாற்றில் பதியப்பட்டது. அதன்பின்னர் கொல்கத்தாவில் விளையாடுவதில்லை என்று கவாஸ்கர் சபதமெடுத்துக் கொண்டதாகச் சொல்வார்கள். அதற்கேற்ப 86ல் நடந்த பாகிஸ்தான் அணியின் இந்திய சுற்றுப்பயணத்தின்போது கொல்கத்தாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் கவாஸ்கர் பங்கேற்கவில்லை. பிரசித்தி பெற்ற இந்தக் கொல்கத்தா டெஸ்டில்தான் முகமது அசாருதீன் அறிமுகமானார். இந்த டெஸ்ட் தொடங்கி அடுத்துவந்த இரண்டு டெஸ்டுகளிலும் அவர் தொடர்ந்து சதமடித்தார். 

எனவே, இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்துடன் வெற்றிபெற்றால் கொல்கத்தா போய் விளையாட வேண்டுமே என்ற குழப்பத்தாலேயே கவாஸ்கர் அரை இறுதியில் விரைவில் ஆட்டமிழந்ததாகக் கிண்டலாகக் கூறுவார்கள்.  

இந்த அளவுக்கு கிரிக்கெட்மீது பற்றுக்கொண்ட கொல்கத்தா ரசிகர்கள், இந்தியாதான் இறுதிப்போட்டிக்கு வரும் என்று டிக்கெட்டுகளை நம்பிக்கையோடு வாங்கி வைத்திருந்தார்கள். ஆனால் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா என்று முடிவானதும் தளர்ந்து போனார்கள். ஆனாலும் மைதானத்தை நிறைத்தார்கள்.

ஆஸ்திரேலியா டாஸில் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. டேவிட் பூன் நிதானமாக ஆடி 75 ரன்கள் அடித்தார். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 253 ரன்கள் எடுத்திருந்தது. மத்திய வரிசை ஆட்டக்காரர் வெலட்டா 31 பந்துகளில் 45 ரன் எடுத்தது திருப்புமுனையாக அமைந்தது இல்லாவிட்டால் 230-235 தான் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கோராக இருந்தது.  இங்கிலாந்து நம்பிக்கையுடன் ஆட்டத்தைத் தொடங்கியது. கேப்டன் மைக் கேட்டிங்கும் பில் ஆதேவும் சீராக ஆட்டத்தைக் கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள்.

இன்னும் 119 ரன் தேவை, 8 விக்கெட்டுகள் உள்ளன. 20க்கும் மேல் ஓவர்கள் உள்ள நிலையில் எல்லோரும் ‘அப்பாடா... ஒரு வழியா இங்கிலாந்து கப் வாங்கிடுவாங்க. மூன்று முறை அவர்கள் நாட்டில் நடத்தி வாங்க முடியாததை இங்கு வந்து வாங்கப் போகிறார்கள்’ என்று நினைத்துக் கொண்டார்கள். அப்போதுதான் கிரிக்கெட் கடவுள் சிரித்தார். அலன் பார்டர் வீசிய ஒரு சாதாரண பந்தை தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி கேட்ச் கொடுத்து வெளியேறினார் மைக் கேட்டிங். அதற்கு முன், அதற்குப் பின் எத்தனையோ பேர் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி இருந்தாலும் சரித்திரத்தில் இடம் பிடித்தது இந்த ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்தான். இது ஆஸ்திரேலியா கிரிக்கெட்டுக்கே ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அடுத்து யாரும் நிலைத்து ஆடாத நிலையில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இங்கிலாந்து.

ஆஸ்திரேலியாவிற்கும் மைக் கேட்டிங்குக்கும் அப்படி ஒரு பந்தம். எப்படி கேட்டிங்கின் விக்கெட்டை எடுத்த பின்னால் பல ஆண்டுகளுக்கு உலக கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா கோலோச்சியதோ அதே போல 93ல் ஷேன் வார்னே முதன் முதலாக இங்கிலாந்து மண்ணில் வீசிய பந்து ‘நூற்றாண்டின் பந்து’ எனக் கிரிக்கெட் விமர்சகர்களால் புகழப்பட்டது. அந்தப் பந்தை சந்தித்து ஆட்டமிழந்து வெளியேறியவர் இதே கேட்டிங் தான். அன்றிலிருந்து ஷேன் வார்னேயின் புகழ் குறையவே இல்லை.  

Sunil Gavaskar

87 உலகக் கோப்பை போட்டிகள் ஒரு மாதம் இந்தியாவில் நடந்தது. அது இந்தியாவில் பல மாற்றங்களை, முக்கியமாக இந்திய விளையாட்டு அரங்கிலும், சமூகத்திலும் ஏற்படுத்தியது. விளையாட்டைப் பொறுத்த வரையில் இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தாலும் மக்களின் தேசிய விளையாட்டாக கிரிக்கெட் மாறியது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்ற அலங்கார வார்த்தையை ஏகப்பட்ட விஷயங்களுக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால் உண்மையிலேயே இந்தியர்கள் உணர்வொத்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஐக்கியமான விஷயம் கிரிக்கெட். இதற்கு 87 உலக்கோப்பைப் போட்டிகள் ஆணிவேராக இருந்தன. 

ஹாக்கி, பேஸ்கட் பால், வாலி பால், பேட்மிட்டன் போன்ற விளையாட்டுக்களின் மீதான ஆர்வம் படிப்படியாக இந்திய மக்களிடமிருந்து குறையத் தொடங்கியது. மற்ற விளையாட்டுகளில் இருந்து கிரிக்கெட்டை நோக்கி மக்கள் வரத்தொடங்கினார்கள். இந்தியர்களுக்கு அரட்டை அடிக்கும் மனோபாவம் இயல்பிலேயே உண்டு. மற்ற விளையாட்டுகளை விட இதில் சிலாகிக்க, அரட்டை அடிக்க ஏராளமான விஷயங்கள் இருந்தன. கிரிக்கெட் மட்டையை கையால் தொட்டுப்பார்க்காதவர் கூட நான்கு ஆட்டங்களைப் பார்த்தால்போதும் விற்பன்னர் போல் பேச ஆரம்பித்து விடலாம். இது இந்தியர்களுக்கு வாகாய் அமைந்தது. மக்களின் நேர் பேச்சுக்களில் அரசியல், சினிமாவுக்கு அடுத்து மூன்றாம் இடத்தைக் கிரிக்கெட் பெறத் தொடங்கியது. சில நட்பு வட்டாரங்களில் சினிமா, அரசியலையும் விஞ்சி முதல் பேசுபொருளாகக் கிரிக்கெட் இடம் பிடித்தது. வீட்டிலேயே கிரிக்கெட் பார்க்கப்படுவதால், பேசப்படுவதால் அடுத்த தலைமுறையினரும் கிரிக்கெட் ஆர்வலராக மாறினார்கள். 

இந்த உலக்கோப்பை கொண்டுவந்த இன்னொரு விஷயம் நுகர்வுக் கலாச்சாரம். தொலைக்காட்சி வீட்டில் இடம்பிடித்த ஆரம்ப வருடங்கள் அவை. ராமாயணம் ஒளிபரப்பப்பட்டு நாடு முழுவதும் பார்த்தார்கள். அதில் பொருள்களை விளம்பரப்படுத்த கடும் போட்டி இருந்தது. ஆனால், அது அதிகபட்சமாக ஒரு மணி நேர நிகழ்ச்சி. 52 வாரம் மட்டும். மேலும், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில்தான் விளம்பரங்கள் போட முடியும். ஆனால் உலக்கோப்பைப் போட்டியைப் பொறுத்த வரை அக்டோபர் 8 முதல் நவம்பர் 8 வரை ஒரு மாதம் நடந்தது. தினமும் எட்டு மணி நேரம். ஓவருக்கு ஒரு முறை விளம்பரம் போடலாம். விக்கெட்டுகள் விழுந்தாலும். இது போக ஹைலைட்ஸ் சமயத்திலும் விளம்பரங்கள் நிறையப் போடலாம். எனவே நிறைய பொருள்களுக்கான விளம்பரங்கள் தொலைக்காட்சியில் வந்தன. அவை வாங்கும் சக்தியுடையோரை சென்றும் அடைந்தன. ரெப்ரிஜிரேட்டரெல்லாம் ஆடம்பரப் பொருள் என்ற கேட்டகிரியிலிருந்து அத்தியாவசியப் பொருள் கேட்டகிரியில் சேருவதற்கெல்லாம் இந்த விளம்பரங்கள்தான் துணை நின்றன. 

Sunil Gavaskar

உலகக் கோப்பை போட்டிகள் முடிவடைந்த பின்னர் எல்லா அணிகளிலும் சில மாற்றங்கள் வந்தன. 30 ஆண்டுகள் கழித்து இந்த 2017 ஆம் ஆண்டில் பார்த்தால் இரண்டு அணிகள் தங்கள் நிலையிலிருந்து பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளன. அவை இலங்கையும், மேற்கு இந்திய தீவுகள் அணியும். தான் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறிய இலங்கை அணி, அடுத்த சில ஆண்டுகளிலேயே கிரிக்கெட் உலகின் முக்கிய அணிகளுள் ஒன்றாக மாறியது. உச்சமாக 1996 உலகக் கோப்பையையும் கைப்பற்றியது. டெஸ்ட் அரங்கிலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றது. இதனோடு ஒப்பிட்டால் மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடர்ந்து தேய்ந்து கொண்டே வருகிறது. பிரையன் லாரா, அம்புரோஸ் என அவ்வப்போது துருவ நட்சத்திரங்கள் அதன்பின்னர் தோன்றினாலும் ஒரு வலிமையான அணியாக மேற்கிந்தியத் தீவுகளை உணருவது குறைந்து கொண்டே வருகிறது. இந்த சாம்பியன்ஸ் டிராபி 2017ல் அதனால் தகுதி பெறக்கூட முடியாமல் போனது. இத்தனைக்கும் மேற்கிந்தியத் தீவின் ஆட்டக்காரர்கள் ஐ பி எல், பிக்பாஷ் போன்ற 20-20 டோர்னமென்டுகளில் பெரும் கிராக்கி உள்ளவர்கள். 

ஒரே வித்தியாசம்தான். கிரிக்கெட் வாரியம். இலங்கையின் கிரிக்கெட் வாரியம் தன்னுடைய அணி வெற்றி பெறும் அணியாக இருக்க வேண்டும் என நினைத்தது. டேவ் வாட்மோர் முதல் டாம் மூடி வரை, இப்போது கிரஹாம் போர்ட் எனத் தொடர்ந்து நல்ல வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமித்து தன் அணிக்குப் பயிற்சியளிக்க வைத்தது. வீர்ர்களுடன் நல்ல உறவைப் பேணியது. அரசியல் செல்வாக்குடன் அவர்கள் வளைய வர அனுமதித்தது. மாறாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீர்ர்களுக்கு முறையான சம்பளம் வழங்கக் கூட யோசித்தது. அப்புறம் எங்கே உலகத்தரம் வாய்ந்த பயிற்சியாளர்கள்? கிரிக்கெட்டில் உலகத்தரம் என்பதே முதலில் மேற்கிந்தியத் தீவுகளில் சென்று டெஸ்ட் தொடரை வென்று வருவதுதான் என்று இருந்தது. ஆனால் ஆட்டக்காரர்கள் வேறு பயிற்சியாளர்கள் வேறு. 

இலங்கையும், மேற்கிந்தியத் தீவுகளும் பொருளாதார ரீதியாக பெரிய நாடுகள் இல்லை. இருந்தும் அந்த நாடு கிரிக்கெட்டுக்குக் கொடுத்த முக்கியத்துவம் அணியை பலமுள்ளதாக்கியது. அமைப்பு சரியில்லாததால் திறமையான வீரர்கள் இருந்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணி தள்ளாடி வருகிறது.

விக்கெட் விழும்!

http://www.vikatan.com/news/sports/92551-1987-world-cup-series-part-3.html

  • தொடங்கியவர்

காலங்காலமாக நியூசிலாந்து கறுப்புக்குதிரைதான்..! 1987 உலகக் கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும்! Gentleman to CommonMan மினி தொடர் பாகம் 4

 
 

 

1987 உலகக் கோப்பை

 

1987ஆம் ஆண்டு நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பை முடிவடைந்து 30 வருடங்கள் ஆகப்போகின்றன. தமிழ்நாட்டில் இருந்த பெரும்பாலான பழக்க வழக்கங்கள் ஒரு சுற்றுச் சுற்றி வந்துவிட்டன.  ‘அந்த வீட்டில ரொம்ப மார்டன். அவங்க பொண்ணுக்கு சுடிதார் வாங்கிக் கொடுத்திருக்காங்க’ என்பதில் இருந்து ‘அந்தக் குடும்பம் ரொம்ப கட்டுப்பெட்டியானது. பொண்ணுக்கு சுடிதார் தவிர வேறு எதுவும் வாங்கித்தரமாட்டாங்க...’ என்று மாறிவிட்டது. ‘எங்க வீட்ல விசேஷம். அதனால தியேட்டருக்குப் போகாம முதன் முறையா டிவி டெக் வாடகைக்கு வாங்கிப் படம் பார்த்தோம்’ என்பது ‘வீட்ல விசேஷம், அதனால குடும்பத்தோட எல்லோரும் சினிமா தியேட்டருக்குப் போனோம்’ என்று மாறிவிட்டது. ஆனால் மாறாதது ஒன்று. அதுதான் இங்கிலாந்து அணி. தன்னுடைய முதல் மற்றும் உலகின் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி விளையாடி 140 ஆண்டுகள் ஆகின்றன. அன்றிலிருந்து இன்றுவரை இங்கிலாந்து நாட்டில் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு பஞ்சமே இருந்ததில்லை.

அதற்குக் காரணம் அங்கு உள்ள தொழில்முறை கிரிக்கெட் அணிகள். இந்தியாவில் ஐ பி எல் ஆரம்பித்து10 ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனாலும் 20-20 ல் ஏராளமான திறமைகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் கவுன்ட்டி கிளப்கள் என அழைக்கப்படும் தொழில் முறை அணிகள் நூறு ஆண்டுகளுக்கு மேலாகவே இருந்து வருகின்றன. அந்த அணிகளின் உரிமையாளர்கள் தங்கள் அணி வெல்ல வேண்டுமென்பதற்காக வெளிநாட்டு ஆட்டக்காரர்களை தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்வார்கள். விசேஷ பயிற்சிகள் அளிப்பார்கள். எனவே இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களிலிருந்து பந்துவீச்சாளர் வரை தேர்ந்தெடுக்க ஏராளமான சாய்ஸ்கள் இருக்கும்.

இத்தனை ஆண்டுகளில் எந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்து அணியை எடுத்துக் கொண்டாலும் அது எல்லா நாடுகளுடனும் போட்டி போடும் அணியாகவே இருக்கும். சிஸ்டம் சரியானதாக இருந்தால் அதில் இருந்து சரியானவை தொடர்ந்து கிடைக்கும் என்பதற்கு இது உதாரணம். ஆனால் இங்கிலாந்து எல்லா அணிகளை விடவும் மேன்மையான அணி என்ற  பட்டத்தை இந்த 140 ஆண்டுகளில் பெற்றதே இல்லை. அதற்கு காரணமும் இந்த சிஸ்டம் சரியாக இருப்பதுதான். ஒரு நல்ல சிஸ்டம் சிறந்தவற்றை தொடர்ச்சியாகத் தரவல்லது. ஆனால் மிகச் சிறந்தவற்றை, மேன்மையானதை அதனால் தர முடியாது.  ஏனென்றால் அது குறிப்பிட்ட வரையறைக்குள் நடத்தப்படுவது. கலையிலும், விளையாட்டிலும் வரையறைக்குள் நடத்தப்படுபவற்றில் இருந்து மேன்மையை எதிர்பார்க்க முடியாது. 

உலகக் கோப்பை

இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் தொடர்ச்சியாக தொழில்முறைப் போட்டிகளில் ஆடுவதால் தங்களின் தேசிய அணிக்கு ஆடும்போது கிரிக்கெட்டில் வெற்றிக்குத் தேவையான “கில்லர் இன்ஸ்டிங்ஸ்”இல்லாமல் விளையாடுவார்கள், நாளை இன்னொரு நாளே என்பதைப் போலத்தான் அவர்கள் மனநிலை இருக்கும். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் வேண்டுமென்றால் அவர்கள் கூடுதல் உற்சாகத்துடன் ஆடுவார்கள். ஒருமுறை இங்கிலாந்தில் ஆஷஸ் தொடர் நடந்து கொண்டிருக்கும்போது இரண்டு டெஸ்ட் ஆட்டங்களுக்கு இடையே ஒரு வாரம் இடைவெளி இருந்தது. தேசிய அணியில் இருந்த நான்கைந்து ஆட்டக்காரர்கள் தங்கள் கவுன்ட்டி அணிக்காக மூன்றுநாள் போட்டிக்கு  விளையாடப் போனார்கள். இப்படி ஓய்வே இல்லாமல் விளையாடினால் எப்படி முக்கிய போட்டிகளை வெல்லமுடியும்? இதனால்தான் இன்னும் அவர்களால் உலக கோப்பையை ஒருமுறைகூட வாங்க முடியவில்லை. 

இங்கிலாந்து அணியைப் போலவே ஆஸ்திரேலிய அணியுடன் போட்டி மனப்பான்மையில் இருக்கும் அணி நியூசிலாந்து. இந்த அணியும் கடந்த 30 ஆண்டுகளாக அதே நிலைமையில்தான் இருக்கிறது.

முப்பது, நாற்பது ஆண்டுகளாகவே ஒரு அணியை, இந்த அணி ஒரு எதிர்பாராத ஆச்சர்யங்களை நிகழ்த்தக்கூடிய கறுப்புக்குதிரை, இந்தத் தொடரை வெல்லும் வாய்ப்பு இதற்கு உண்டு என்று குறிப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்றால் அது நியூசிலாந்து அணிதான். எந்த அணியுமே இத்தனை ஆண்டுகள் கறுப்புக் குதிரையாக இருந்ததே இல்லை. அலுவலகமாக இருந்தாலும் சரி, கிரிக்கெட் போன்ற குறைந்த பட்சம் ஒரு சிறு குழுவாவது ஒழுங்காக ஆடி ஜெயிக்கும் ஆட்டமாக இருந்தாலும் சரி. அதன் தலைமையை நோக்கிய ஒரு ஈர்ப்பு கீழ் உள்ளவர்களிடம் இருக்க வேண்டும். அது அந்த மேலாளர் அல்லது கேப்டனுடைய தனித்திறமையாக இருக்கலாம், அல்லது இவர் நமக்கு நல்லது செய்வார் என்ற எண்ணமாக இருக்கலாம். அல்லது இவருடன் இருந்தால்தான் நமது பிழைப்பு ஓடும் என்ற சர்வைவல் காரணமாகவும் இருக்கலாம். ஒரு கடினமான வேலை வரும்போது அந்த மேலாலளருக்கு மற்றவர்கள் தங்கள் பணியை செய்தாலும், அவருக்கு நெருங்கிய குழு அந்த நேரத்தில் தன் தலைமேல் அந்தப் பணியை போட்டுக்கொண்டு வேலை செய்யும். இது நல்ல நடைமுறையா எனத் தெரியவில்லை. ஆனால் இது பல சமயம் வெற்றிகளைக் கொடுத்துள்ளது.

நியூசிலாந்து அணியின் சரித்திரத்தை எடுத்துக் கொண்டால் இதுபோல அணித்தலைவருக்கு அணுக்கமான குழு என்று ஒன்று அமைந்தது மிகக்குறைவு. 1992 உலக்கோப்பையில் மார்ட்டின் குரோவின் தலைமையில் அவர்கள் ஆடும்போது கிரேட் பாட்ச், தீபக் பட்டேல், ஆண்ட்ரு ஜோன்ஸ் என அவருக்கு அணுக்கமான சிலர் இருந்தார்கள். மற்றபடி நியூசிலாந்து வீரர்களிடையே ஒரு குழுவாக இணைந்து அடுத்தவருக்கு உதவி விளையாடும் சூழல் குறைவாகவே இருந்து வருகிறது. மற்ற நாட்டு அணிகளுக்கும் ஆசிய நாட்டு அணிகளுக்கும் இடையே இருக்கும் முக்கிய வித்தியாசங்களில் இதுவும் ஒன்று.  இம்ரான் கான், அர்ஜுனா ரணதுங்கா, சவ்ரவ் கங்குலி, மகேந்திர சிங் தோனி என ஆசியாவின் மிகச்சிறந்த கேப்டன்களை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு அணுக்கமான ஒரு குழு எப்போதும் உடன் இருக்கும் அல்லது அணியில் உள்ள எல்லோருமே அணித்தலைவரின் மீது ஒரு பிரியத்தில் இருப்பார்கள். 

வெள்ளையர்களிடம் அது போல தனி மனித ஸ்துதி இருக்காது என்பதால் அவர்கள் இயல்பாகவே ஆசிய அணி வீரர்கள்போல இருக்க மாட்டார்கள். ஆனால், ஒரு பந்தில் ஆட்டம் தலைகீழாக மாறிப் போய் விடுகிற கிரிக்கெட் போன்ற ஆட்டத்துக்கு அணி வீரர்களிடையே ஒரு அணுக்கமான சூழல் அவசியம். எல்லோரும் சிறப்பாக ஆடும் ஆஸ்திரேலியா போன்ற அணியில், சிக்கலான கட்டங்களில் யாராவது ஒருவர் தேவையான திருப்புமுனையைத் தந்துவிடுவார். ஆனால், நியூசிலாந்து போன்ற அணியில் அனைவரிடமும் ஒரு ஒருங்கிணைப்புத் தேவை. அது அங்கே அமையவே இல்லை. அதனால்தான் எந்த கோப்பைக்கான போட்டியிலும் நியூசிலாந்து  வீரர்களின் பட்டியலைப் பார்க்கும்போது ‛நல்லாத்தானே இருக்கு...’ எனத்தோன்றும். எனவே வல்லுநர்களும் இந்த கோப்பையில் நியூசிலாந்து கணிக்க முடியாத அணி. கோப்பையை வென்றாலும் வென்று விடும் என்பார்கள். ஆனால் அது பெரும்பாலும் வெறுங்கையுடனே திரும்பும். சர் ரிச்சர்ட் ஹேட்லி, ஜெப் குரோ, மார்ட்டின் குரோ, ஜான் ரைட் என வலுவான ஆட்டக்காரர்கள் இருக்கும்போது கூட அந்த அணியால் உலக அளவில் எதையும் பெரிதாகச் சாதிக்க முடியவில்லை. 

இங்கிலாந்து, நியூசிலாந்தைப் போலவே 30 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும் இன்னொரு அணி ஜிம்பாப்வே. பொதுவாக சில வீடுகளில் விசேஷங்கள் நடக்கும் போது சில உறவினர்களைப் பற்றி இப்படிச் சொல்வார்கள். “அவங்க வந்தா சந்தோஷம் வராட்டி ரொம்ப சந்தோஷம்” என்று. அது போலத்தான் ஜிம்பாப்வே அணியையும் போட்டி நடத்துபவர்கள் எண்ணிக் கொள்வார்கள். அவர்கள் உள்ளே வருவதால் போட்டித்தொடரில் எந்த சுவராஸ்யமும் கூடப்போவதில்லை. பார்வையாளர்களும் அதிகரிக்கப் போவதில்லை. அவர்கள் நாட்டில் நிலவும் பிரச்னைகளும் இதற்கு முக்கிய காரணம். ஆனாலும் பிரச்னைகள் உள்ள இடங்களின் மக்கள் தங்கள் ஆற்றாமையைத் தீர்த்துக்கொள்ள கலை, இலக்கியம், விளையாட்டு என்றுதான் திசை திரும்புவார்கள். ஆனால், ஜிம்பாப்வேயில் என்னவோ பெருவாரியான மக்களின் ஆதரவு கிரிக்கெட்டின் பக்கம் திரும்பவில்லை. 

Philip DeFreitas 1987 உலகக் கோப்பை

பட்டிமன்ற நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து ஆடீயோ கேசட், சிடிக்களாக வெளியிட ஒரு நிறுவனம் முடிவு செய்தது. பட்டிமன்றங்களில் நேரடியாக பதிவு செய்தால் ஒலியமைப்பு துல்லியமாக இருக்காது என்று, பேச்சாளர்களை அழைத்து  தனி அறையில் பதிவு செய்ய தீர்மானித்தது. அவர்களுக்கு நன்றாக பேசவே வரவில்லை. பின்னர் ஒரு பத்துபேரைக் அழைத்து வந்து,  இடை இடையே கைதட்ட வைத்தார்கள். பேச்சாளர்களும் நன்றாகப் பேச ஆரம்பித்தார்கள். எந்த ஒரு கலையானாலும் சரி, விளையாட்டானாலும் சரி, பார்வையாளர்கள் இல்லாவிட்டால் அது மேன்மையுறாது. அப்படி யார் பாராட்டாமலும் ஒருவர் தொடர்ந்து சிறப்பான படைப்புகளை வழங்கிக் கொண்டேயிருக்கிறார் என்றால் அவர் மிகப்பெரும் ஆளுமையாக இருப்பார். ஜிம்பாப்வே மற்ற நாடுகளில் விளையாடும் மேட்சுகளை விடுங்கள், அவர்கள் நாட்டில் விளையாடும் ஆட்டங்களிலேயே மைதானங்கள் காலியாகத்தான் இருக்கும். அருமையான கவர் டிரைவ் அடித்து நிமிர்ந்தாலோ, அட்டகாசமான அவுட் ஸ்விங்கரை வீசி பேட்ஸ்மெனை திணறடித்த பின்னாலோ யாராவது கைதட்டினால் தானே அது முழுமை அடையும். அடுத்த உச்சத்துக்கு மனம் ஆசைப்படும். ஆனால் அது எதுவுமே ஜிம்பாப்வே பிளேயர்களுக்கு பெரும்பாலும் நடக்கவே இல்லை.

இதே சூழ்நிலையை வங்கதேசத்துக்குப் பொருத்திப் பார்க்கலாம். அங்கே அவர்கள் சாதாரணமாக விளையாடினாலும் ரசிகர்கள் ஆரவாரிக்கிறார்கள். வெற்றி பெற்றுவிட்டாலோ உற்சாகத்தின் எல்லைக்கே சென்று விடுகிறார்கள். அவர்கள் உலக்கோப்பையெல்லாம் வாங்கிவிட்டால் அந்த நாட்டிற்கு காலவரையற்ற விடுமுறை கூட அறிவித்து விடுவார்கள். அந்த நாடு தப்பித்தவறி அமெரிக்கவை போரில் வென்றுவிட்டால் கூட அவ்வளவு சந்தோஷம் அடையமாட்டார்கள். இந்த அளவுக்கு ரசிகர்களின் ஆதரவு இருப்பதாலேயே அவர்கள் நன்றாக விளையாட வேண்டும் என நினைக்கிறார்கள். தோற்றால் கன்ணீர் சிந்த நமக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்ற நினைப்பே ஆட்டக்காரர்களுக்கு பெரும்பலம் தரும். இம்மாதிரி ஜிம்பாப்வே அணிக்கு ஒரு ஆதரவுத்தளம் அமையவில்லை என்பது அந்த அணிக்கு ஒரு இழப்பே.

http://www.vikatan.com/news/sports/92800-gentleman-to-commonman-1987-world-cup-series-part-4.html

  • தொடங்கியவர்

அப்போதிலிருந்து பாகிஸ்தான் முன்னேறாதது இதில்தான்! - 1987 உலகக் கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும்! Gentleman to CommonMan மினி தொடர் பாகம் 5

 
 

1987 உலகக் கோப்பை

 

1987 உலகக் கோப்பையில் வெற்றி பெற்று கிரிக்கெட் உலகின் கவனத்தைத் தன் மேல் குவித்த ஆஸ்திரேலிய அணி அந்தப் பெருமையிலேயே காலத்தைக் கழிக்கவில்லை. அடுத்து என்ன? அடுத்து என்ன? என தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருந்தது. கிரிக்கெட்டுக்கான உள் கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்தவரையில் தன்னிகரற்று விளங்கிய ஆஸ்திரேலியா, பொதுவாகவே விளையாட்டுச் சம்பந்தமான மற்ற துறைகளிலும் வல்லுநர்களையும்,கட்டமைப்புகளையும் கொண்டிருந்தது. விளையாட்டு மருத்துவம் என்ற துறை சிறந்த வளர்ச்சி கொண்டிருந்த முக்கியமான நாடு ஆஸ்திரேலியாதான். மூட்டு வலி, முதுகு வலி என எந்த மாதிரியான பிரச்னை ஆனாலும் சிகிச்சைக்கு உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் முதல் புகலிடமாக ஆஸ்திரேலியாதான் இருந்தது. 

தன்னுடைய சேனலில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்காக கேட்டு, அது கிடைக்காததால் உலக தொடர் கோப்பை ஒன்றைத் தானே நடத்த முன்வந்தார். அப்போது கிரிக்கெட் வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் என்பது குறைவு. இவர் அவர்கள் எதிர்பார்த்திராத ஒரு தொகையைக் கொடுக்கவும், பல நட்சத்திர ஆட்டக்காரர்களும் தங்கள் நாட்டுக்காக விளையாடுவதை விட்டுவிட்டு கெர்ரி பேக்கர் சீரிஸ் ஆடவந்தார்கள். 1977ல் தொடங்கி 79 வரை நடந்த அந்தத் தொடரை ஐ சி சி அங்கீகரிக்காவிட்டாலும், அந்தத் தொடரால் கிரிக்கெட் உலகில் பல மாற்றங்கள் நடந்தன. வண்ண சீருடைகள், இரவு பகல் ஆட்டம், மஞ்சள் பந்துகள் என கெர்ரி பேக்கர் கிரிக்கெட்டிற்கு பல அறிமுகங்களைச் செய்தார். அந்தத் தொடர் நிறுத்தப்பட்டாலும் அதற்கு இணையாக தன்னுடைய நிர்வாகத்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுக்கு இருந்தது  .

உலகக் கோப்பை

எனவே கிரிக்கெட் அகாடமிகளில் ஆர்வம் காட்டியது. திறமைகளை வளர்த்தெடுக்க சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நிறைய அகாடமிகளைத் திறந்தது. அது மட்டுமல்லாமல் விளையாட்டை முன்னேற்ற பல ஆய்வுப்பணிகளையும் மேற்கொண்டது முக்கியமாக ஃபீல்டிங்கில். எடுத்துக்காட்டாக ஒரு ஃபீல்டர் வலது கைப் பழக்கம் உடையவராக இருந்தால் அவர் வலது கையால்தான் பந்தை எடுப்பார். பந்து அவரின் இடப்புறமாகச் சென்றால் அவர் அதை எடுக்க தன்னைத் திருப்பி எடுக்க வேண்டும். ஆனால் இரு கைகளையும் சமமாகப் பயன்படுத்த முயன்றால் ஃபீல்டிங்கில் இன்னும் அதிக எபிசியன்ஸி கிடைக்கும். இது ஸ்லிப் கேட்சுகள் மற்றும் அருகே நின்று ஃபீல்டிங் செய்யும்போதும் மிக உதவிகரமாக இருக்கும். இது மாதிரியான பயிற்சி கொடுக்கும் முயற்சிகளை எடுத்தது. இது 100%பயனளிக்கவில்லை என்றாலும் ஆஸ்திரேலிய அணியின் ஃபீல்டிங் முன்னேற வாய்ப்பளித்தது.   

ஆஸ்திரேலிய அணியின் பெரும் பலமே தொடர்ச்சியாக அவர்களது உள்ளூர் போட்டிகளிலும், பயிற்சி அகாடமிக்களில் இருந்தும் சிறந்த வீரர்கள் உருவாகி வருவதே. இங்குதான் இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்குமான வேறுபாடு உள்ளது. ஆஸ்திரேலிய அணி தன்னுடைய தேசிய அணி ஆட்டங்களுக்குத்தான் அதிக முன்னுரிமை கொடுக்கும். முக்கிய ஆட்டக்காரர்கள் ஐ பி எல் போன்ற தொடர்களில் பங்குபெறக்கூடத் தடை விதிக்கும் அளவுக்குக் கவனம் செலுத்தும். அதேபோல எவ்வளவு பெரிய ஆட்டக்காரராக இருந்தாலும் விதிமுறைகளைத் தளர்த்துவதோ, கூடுதல் மதிப்புக் கொடுப்பதோ இருக்காது.

1987 உலகக் கோப்பைக்கு ‛ஆடுவாங்க ஆனா கோப்பையை வாங்குவது கஷ்டம்’ என்ற நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 1992  உலகக் கோப்பைக்கு ‛ஹாட் பேவரைட்டாக’ இறங்கியது. புக்கிகள் ஆட்டம் தொடங்கும் முன் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதாக பந்தயம் கட்டினால் ஒரு ரூபாய்க்கு ஒரு ரூபாய் 10 காசுகள் தான் தருவதாகவே சொன்னார்கள். ஆனால் இந்திய அணிக்கெல்லாம் ஒரு ரூபாய்க்கு நான்கு ரூபாய் முதல் ஏழு ரூபாய் வரை தருவதாகச் சொன்னார்கள். அந்த உலக்கோப்பையில் தோற்றாலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் யாராலும் வீழ்த்த முடியாத அளவுக்கு பரிணமித்தது. 15 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அந்தஸ்தில் இருந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியை அவர்கள் நாட்டிலேயே சென்று வென்றது. அதன்பின்னர் 1999, 2003, 2015 உலகக் கோப்பை, வெற்றிகள், டெஸ்ட் அரங்கில் பல ஆண்டுகள் முன்னணியில் இருந்தது என இன்றுவரை கிரிக்கெட் உலகின் தலைசிறந்த அணியாகவே கருதப்பட்டு வருகிறது. 

உலகக் கோப்பை 1987

ஆஸ்திரேலியா அளவிற்கு இல்லாவிட்டாலும் இன்றுவரை உலகக் கிரிக்கெட் அரங்கில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருந்து வருவது பாகிஸ்தான் அணி. 1987 உலகக் கோப்பை அரை இறுதியில் தோல்வி அடைந்ததும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் இம்ரான்கான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்தார்.ஆனால் அதன்பின்னர் அணி சரியாக விளையாடாத நிலையில் அவரையே மீண்டும் அணிக்கு வந்து தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னது. 1992 உலகக் கோப்பையை வென்று கொடுத்து அவர் ஓய்வு பெற்றுக் கொண்டார். 

அதன்பின்னரும் அவர்கள் அடிக்கடி சொல்லிக்கொள்ளக்கூடிய அளவுக்கு வெற்றிகளைப் பெற்றுக்கொண்டே வந்திருக்கிறார்கள்.

அதற்கு முக்கிய காரணமே அங்கு தொடர்ச்சியாக உருவாகி வரும் உலகத்தரமான வேகப்பந்து வீச்சாளர்கள்தான். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் நன்றாக விளையாடிய காலகட்டத்தில் அவரை எல்லோரும் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்டாட் ஒரு பேட்டியில் பாகிஸ்தானில் தெருவிற்கு நான்கு இர்பான் பதான் இருப்பார்கள் என்று கூறினார். அது ஒரு நிச்சயமான உண்மை. அதற்கு பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர்களும் அவர்களின் லெகசியுமே காரணம். 

இதை இந்திய அணியின், ஏன்... இந்திய கிரிக்கெட்டின் பேட்ஸ்மேன் செண்ட்ரிக் மனநிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். இந்திய அணியானாலும் சரி, உள்ளூர் அணிகளானாலும் சரி அவை அனைத்தும் பேட்ஸ்மெனை மையப்படுத்தியே இயங்கிவருகின்றன. ஒரு நல்ல பேட்ஸ்மெனுக்குக் கிடைக்கும் மரியாதை அவரைவிட ஒரு நல்ல பவுலருக்குக் கிடைப்பதில்லை. 1970கள் வரை பேட்ஸ்மேன் பண்ணையார் மனோபாவத்துடன்தான் நடந்துகொள்வார்கள். அதன்பின்னர் கபில்தேவ் வந்தாலும் அவருக்கு டிரஸ்ஸிங் ரூமில் கூட உரியமரியாதை கிட்டியதில்லை. பேட்ஸ்மேன்கள் தங்களுக்குள் ஒரு குழுவாக இருந்துகொண்டு அணியின் நன்மை,தீமைகளை நிர்ணயிப்பவர்களாக இருந்து வருகிறார்கள். இது இன்றுவரை கூட மாறவில்லை. பந்துவீச்சாளர்கள் என்பதைக்கூட ஒரு சப்போர்டிங் ஸ்டாப்பாக பார்க்கும் முறையே இருந்து வருகிறது. தெரு கிரிக்கெட் முதல் இருந்தே இந்தியாவில் பேட்ஸ்மேனை தங்கத்தாம்பாளத்தில் வைத்துத் தாங்கும் பழக்கம் இருக்கிறது.

இதை இந்திய மனோபாவம் என்றும் சொல்லலாம். இதற்கு நேர் மாறான மனோபாவம் பாகிஸ்தானில். அங்கே பவுலர்களுக்கு இயல்பாகவே ஒரு மதிப்பு இருக்கும். பாகிஸ்தான் பேட்ஸ்மேன் விளையாடிக்கொண்டிருக்கும் போது பவுலர்கள் பெவிலியனில் உட்கார்ந்து பேட்ஸ்மேன் விளையாடும் ஸ்டைலை கிண்டல் செய்துகொண்டிருப்பார்கள். பவுலர்கள் ஒரு யூனிட்டாகவே எங்கும் செல்வார்கள். பேட்ஸ்மென் கேப்டனாக இருந்து அவர்களுக்கு ஒத்துழைக்காவிட்டால் வேலையைக் காட்டிவிடுவார்கள். தேவையான நேரத்தில் சரியாக பந்துவீசாமல் கழுத்தறுத்து விடுவார்கள். எனவே இயல்பாகவே பாகிஸ்தான் வீரர்களுக்குப் பந்துவீச்சாளர் ஆகவேண்டும் என்ற எண்ணமே முதலில் இருக்கும். அதற்கு அவர்கள் உடல்வாகு, உணவுப் பழக்கவழக்கங்களும் காரணம்.

எந்த இடத்தில் இருந்தால் மரியாதை கிடைக்கிறதோ அந்த இடத்தில் இருக்கத்தானே அனைவரும் விரும்புவார்கள்?

1987 அணிக்குப் பின்னால் பாகிஸ்தானுக்குக் கிடைத்த மிகச்சிறந்த பேட்ஸ்மேனை விரல்விட்டு எண்ணிவிடலாம். சயீத் அன்வர். இன்சமாம் உல் ஹக், முகமுது யூசுப், யூனிஸ் கான் என மிகச்சிலரே தொடர்ந்து விளையாடி சாதித்தவர்கள். அதிலும் கடந்த 20 வருடங்களில் எந்த பேட்ஸ்மேனாவது உங்கள் டீமுக்குப் பாகிஸ்தானிலிருந்து வேண்டுமா என்று கேட்டால், மார்க்கெட் இழந்த ஹீரோவை புக் செய்யத் தயங்கும் தயாரிப்பாளர்களைப் போலவே அனைவரும் யோசிப்பார்கள்.  இன்சமாம் உல் ஹக் மட்டுமே சச்சின் டெண்டுல்கர், பிரயின் லாரா, மார்க் வாவ் ரேஞ்சிற்கு சிலாகிக்கப்பட்டவர். எந்தப் பாகிஸ்தான் பேட்ஸ்மேனின் ஆட்டத்தை உங்கள் ஓய்வு நேரத்தில் பார்த்து ரசிக்கலாம் என நினைக்கிறீர்கள் எனக் கேட்டால் உடனடியாக யாரும் எந்தப் பதிலையும் சொல்லாமல் யோசிக்கத் தொடங்கிவிடுவார்கள்.  

இப்போது கூட விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் என ஒப்பீட்டளவில் பேசுகிறார்களே, அதில் எந்த பாகிஸ்தான் பேட்ஸ்மேனாவது இடம்பெற்றிருக்கிறாரா? மக்கள் சேர்ப்பதில்லை. ஆனால் அங்கே சிறந்த பேட்ஸ்மென் உருவாக ஏராளமான வாய்ப்புகள் உண்டு. சிறுவயதிலிருந்தே உலகத்தரமான பந்து வீச்சாளர்களை விளையாடிப் பழகும் வாய்ப்பு அவர்களுக்கு உண்டு.

இன்னொரு விஷயத்திலும் பாகிஸ்தான் அணி 1987 உலகக் கோப்பைக்குப் பின்னால் முன்னேறவே இல்லை என்று சொன்னால் அது ஃபீல்டிங் தான். இன்றுவரை கூட அங்கே உலகத்தரமான அவுட் ஃபீல்டரோ, ஸ்லிப் கேட்சரோ உருவாகவில்லை. 

அதனால்தான் ஆடுகளம் பேட்ஸ்மேனுக்கு மட்டுமே சாதகமாக இருந்தாலும் சரி, பேட்ஸ்மென் செட்டில் ஆகி இருந்தாலும் சரி, ஃபீல்டர்கள் கேட்சை விட்டுக்கொண்டிருந்தால் கூட நினைத்த நேரத்தில் விக்கெட்டை அனாயாசமாக எடுக்கக்கூடிய பந்துவீச்சாளர்கள் நிறைந்திருந்தாலும் அதிகளவில் அவர்களால் வெற்றிகளைப் பெறமுடியவில்லை.

அடுத்தபடியாக இருக்கும் அணி நமது அணி. நிச்சயமாக 1987ல் இருந்ததை விட உள்கட்டமைப்பிலும் ஆட்டக்காரர்களிலும் சிறப்பாகவே இருக்கிறது. இதற்கு 1987 உலகக் கோப்பை என்ன விதமான காரணியாக இருந்தது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

http://www.vikatan.com/news/sports/93052-gentleman-to-commonman-1987-world-cup-series-part-5.html

  • தொடங்கியவர்

சித்து ‘சிக்ஸர் சித்து’ ஆன கதை... 1987 உலகக் கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும்! Gentleman to CommonMan மினி தொடர் பாகம் 6

 
 

உலகக் கோப்பை

 

1987 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிதான் கோப்பையை வெல்லும் என்ற எண்ணத்தில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு, அணி அரை இறுதியில் தோற்றது பெரும் ஏமாற்றத்தை தந்தது. சாதாரணமாக நாம் விரும்பிய அணி தோற்றாலோ அல்லது நமக்குப் பிடித்த நடிகர் நடித்த திரைப்படம் சரியில்லாமல் போனாலோ சில நாட்கள் அதுபற்றிப் பேசாமல், அது குறித்த தகவல்கள் வரும் இடங்களுக்குச் செல்வதை தவிர்ப்பது இந்திய மனோபாவம். எனவே பொது இடங்களில் கிரிக்கெட் பற்றிப் பேசுவது சிறிது குறைந்தது. மைதானங்களில், தெருவில் கிரிக்கெட் ஆடுவதில் ஒரு விரக்தி நிலவியது. ஆனால் அதெல்லாம் ஒருவாரம் தான். மீண்டும் மக்கள் ஆர்வமாக விளையாட ஆரம்பித்தார்கள். அந்த அளவுக்கு மக்கள் மனதில் ஒரு அழியாத இடத்தை சில ஆண்டுகளிலேயே பிடித்திருந்தது கிரிக்கெட். 

இந்த 1987 உலகக்கோப்பை இந்திய அணியில் கொண்டுவந்த முக்கிய மாற்றம் அணித்தலைமை. கவாஸ்கருக்கும் கபில்தேவுக்கும் இடையில் மாறி மாறி சென்று கொண்டிருந்த தலைமைப் பதவிக்கு அடுத்து யார் என்று ஒரு கேள்வி எழும்பியது. ஏனென்றால் கவாஸ்கர் ஏற்கெனவே தன் ஓய்வை அறிவித்திருந்தார். நோய்க்கூறுகளை ஆராய்ந்து பார்க்காமல் முரட்டு வைத்தியம் பார்ப்பது போல பெரிய போட்டிகளில் தோற்றால், அணியின் தலைமையை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும் என்ற கொள்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டிருந்தது. 

எனவே, கபில்தேவின் கேப்டன் பதவி நிச்சயம் பறிபோகும் அடுத்து யார் என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது. அடுத்த கேப்டனாக திலீப் வெங்சர்க்கார் நியமிக்கப்பட்டார். அவர் சில தொடர்களை இழந்ததும் ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டார். பின்னர் அசாருதீன், டெண்டுல்கர், கங்குலி, ட்ராவிட், தோனி, கோலி என சென்றுகொண்டிருக்கிறது. 

எத்தனை கேப்டன்கள் வந்தாலும் இந்திய அணியின் ஃபார்முலா மாறாமலேயே இருக்கிறது. அருமையான பேட்ஸ்மேன்கள், இரண்டு ஸ்பின்னர்கள், அவ்வப்போது கிடைக்கும் ஒரு வேகப்பந்து வீச்சாளர். இந்த வேகப்பந்து வீச்சாளர்கள் என்னும் இனம்தான் இந்திய அணிக்கு மிகப்பெரும் குறையாகவே இருந்துவருகிறது. நூறாண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் ஆடிவரும் ஒரு நாட்டில், 1987உலகக்கோப்பைக்குப் பின் 30 ஆண்டுகளாக கிராமம் வரை கிரிக்கெட் ஆடும் ஒரு நாட்டில் எண்ணி மூன்றே மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள்தான் உலகத் தரத்தில் கிடைத்திருக்கிறார்கள் என்பது எவ்வளவு யோசிக்க வேண்டிய விஷயம்? கபில்தேவ், ஸ்ரீநாத், ஜாகிர் கான் ஆகிய மூவரை மட்டுமே உலகத்தரமான பந்து வீச்சாளர்கள் கேட்டகிரியில் சொல்ல முடியும், அதிலும் கபில்தேவ் மட்டுமே தொடர்ந்து விளையாடினார். ஸ்ரீநாத், ஜாகிர்கான் அடிக்கடி காயங்களால் அவதிப்பட்டு முக்கிய தொடர்களில் விளையாடாமலும் இருந்திருக்கிறார்கள்.  

உலகக் கோப்பை

தொடக்க காலத்தில் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீச வருபவர்கள் கூட சில ஆண்டுகளில்130க்கு இறங்கி விடுகிறார்கள். பலர் ஸ்விங் பவுலர் ஆகிவிடுகிறார்கள். வெறும் வேகப்பந்து வீச்சைவிட ஸ்விங் பண்ணினால்தான் விக்கெட் கிடைக்கும் என்றாலும், வேகம் இல்லாத ஸ்விங் ஆனது விஷம் இல்லாத பாம்பைப் போலத்தான். எளிதில் அடித்துவிட முடியும். மேலும், மணிக்கு 140 கிலோமீட்டருக்கு மேல் வேகத்தில் வீசும்போதுதான் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகும் வாய்ப்பும் இருக்கும். 

1987 உலக்கோப்பையில் நாம் தோல்வி அடையக் காரணங்களில் ஒன்று நல்ல வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது. கபில்தேவ் தன்னுடைய பொற்காலத்தில் அப்போது இல்லை. இரண்டு பேட்ஸ்மேன்கள் செட்டாகி விளையாடிக் கொண்டிருக்கும்போது அவர்களின் விக்கெட்டை தன் திறமையால் எடுக்கும் வேகப்பந்து வீச்சாளர் அப்போது இல்லை. ஏன் இப்போதும் கூட இல்லை. வழக்கமான சுழற்பந்து வீச்சாளர்களை பந்து வீசச் சொல்லி விக்கெட் விழுகுமா என வேடிக்கைதான் பார்த்துக்கொண்டு இருக்க முடிந்தது.

1987ல் அடைந்த தோல்வியைப் பரிசீலனை செய்துதான் இந்தக் குறையைப் போக்க சென்னையில் எம் ஆர் எஃப் பேஸ் பவுண்டேசன் துவக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லி தலைமை கோச்சாகவும், தற்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த டி ஏ சேகர் போன்றோர்கள் உறுதுணையாகவும் இருக்க இந்த அகாடமி ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் நமக்கு போதிய அளவில் வேகப்பந்து வீச்சாளர்கள் கிடைக்கவில்லை.

நமக்கு ஆரம்பகட்டத்தில் இருந்தே வேகப்பந்து வீச்சாளர்கள் கிடைக்காததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கிய காரணம், இங்கு உள்ள பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளங்கள். இதில் விக்கெட் எடுக்க திணறி தங்கள் பாதையை சுழற்பந்து வீச்சாளர்களாகவோ அல்லது பேட்ஸ்மேனாகவோ மாற்றிக்கொண்டோர் அதிகம். ஆனால் இறுதிவரை முயல்பவராக இருப்பவர்கள் இங்கே குறைவு. இதை நம் நாட்டு ஆராய்ச்சியாளர்களுடன் ஒப்பிடலாம். ஏற்கனவே இருக்கும் ஒரு தொழில்நுட்பத்தில் வேலை பார்ப்பது என்பது எளிது. ஆனால் ஒரு புதிய தொழில்நுட்பத்தையோ, புதிய பொருளையோ உருவாக்குவது கடினம். அதிகமான உழைப்பு தேவைப்படும். அந்த அதீத உழைப்புக்கு அஞ்சியே தமக்கு சாதகமான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் நம் ஆட்கள்.

உலகக் கோப்பை

ஹாக்கி முன்னாட்களில் இயற்கையான மைதானங்களில் விளையாடும்போது ஒரு வீரரருக்கு முக்கியமான தேவையாக நுணுக்கமான ஆட்டத்திறனே இருந்தது. அதற்கடுத்து தான் உடல்வலு தேவை. அதுவரை இந்தியா ஹாக்கியில் அசைக்கமுடியா இடத்தில் இருந்தது. ஆனால் ஹாக்கி செயற்கை ஆடுகளங்களில் விளையாட  ஆரம்பித்த உடன் ஆட்டத்திறனும், உடல்வலுவும் சரிவிகிதத்தில் தேவைப்பட தொடங்கியது. இந்த இடத்தில் தோன்றியது இந்திய ஹாக்கியின் சரிவு. இதேபோல் தான் இப்போது கிரிக்கெட்டிலும் உடல் வலுவிற்கான முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிரிக்கெட் மைதானங்களின் விட்டமானது பொதுவாக 120 மீட்டர் முதல் 160மீட்டர் வரை இருக்கிறது. எனவே சிக்ஸர் அடிக்க 60 முதல் 80 மீட்டர் வரை பந்தை பறக்கச் செய்தால் போதும். உடல் வலுவான கிரிக்கெட் நுணுக்கத்துடன் கூடிய ஆட்டக்காரர் சராசரியாக 80 மீட்டருக்கு மேல் பந்து பறந்துசெல்லும் வகையில் அடித்தால் அவருக்கு ஃபீல்டிங்கே செட் செய்ய முடியாமல் போய்விடும்.

1992 உலக்கோப்பைப் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக இறங்கி விளையாடி அதிரடியாக ரன்குவித்த கிரேட் பாட்ச் இப்படிச் சொல்வார், “எந்த பந்துமே ஆடுகளத்தில் விழாத வரையில் அது புல் டாஸ் தான். எனவே நான்கு அடி இறங்கி பந்தை சந்தித்தால் எங்கும் அடிக்கலாம்’’ என்பார். அவர் அப்படி ஒருமுறை இறங்கி அடித்தது சாதாரண பந்துவீச்சாளரை அல்ல, 90களின் தலைசிறந்த வேகப்பந்து  வீச்சாளராக விளங்கிய கர்ட்லி அம்புரோஸை. அதுபோல இப்போது ஒருநாள் போட்டிகளிலும், 20-20 போட்டிகளிலும் ஏன் டெஸ்ட் மேட்சுகளில் கூட அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இம்மாதிரியான பேட்ஸ்மேன்கள் பெருகும்போது அவர்களைக் கட்டுப்படுத்த வலுவான வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை. இல்லாவிட்டால் இந்திய அணி எப்படி ஹாக்கி உலகில் தன் பெருமையை இழந்ததோ அதுபோல் கிரிக்கெட் அணியும் இழக்க நேரிடலாம்.

1987 உலகக் கோப்பையில், பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மெக்டர்மட் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக முதல் இடம்பிடித்தார். இரண்டாம் இடத்தை இம்ரான் கான் பிடித்தார். இம்ரான் கானாவது இந்தப் பகுதி வீரர், அனுபவமிக்கவர். ஆனால் மெக்டர்மெட் அப்போதைய நிலையில் இளம் ஆட்டக்காரர் இருந்தாலும் உயிர் இல்லாத இந்திய, பாகிஸ்தான் ஆடுகளங்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இந்திய அணியில் அப்போதைய வேகப்பந்து வீச்சாளரான சேட்டன் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் எடுத்தார். எனவே கடுமையாக முயற்சி செய்தால் இந்தியாவிலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகலாம்.

எப்படி யாரும் எதிர்ப்பார்க்காத மெக்டர்மெட் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் பிடித்தாரோ,அதே போல் பேட்டிங்கில் யாரும் எதிர்பார்க்காவண்ணம் சிறப்பாக ஆடி அனைவரையும் கவர்ந்தவர் இந்திய அணியின்  ஆட்டக்காரர் நவ்ஜோத் சிங் சித்து. 

இந்த 1987 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த முதல் ஐவரில் இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இல்லை. கூச் முதலிடத்தைப் பிடித்தார். பூன், மார்ஷ், ரிச்சர்ட்ஸ் மற்றும் கேட்டிங் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருந்தார்கள். இந்திய அணியின் பேட்டிங் ஹீரோவாக இந்தத் தொடரில் திகழ்ந்த நவ்ஜோத் சிங் சித்து. தொடர்ந்து நான்கு அரை சதங்களை அடித்தது மட்டுமல்லாமல் ஒன்பது சிக்ஸர்களையும் விளாசினார். கலந்து கொண்ட 7 போட்டிகளில் ஒன்பது சிக்ஸர்கள் என்பது அந்த நேரத்தில் பெரும் சாதனை. ஏனென்றால் ஒரு ஆட்டத்திற்கே அதிகபட்சம் நான்கைந்து சிக்ஸர்கள்தான் அடிக்கப்படும். இதனால் இவருக்கு “சிக்ஸர் சித்து” என்ற அடைமொழி கிடைத்தது.

sidhu_11054.jpg

இந்த 1987 உலகக் கோப்பை எப்படி பல ஆட்டக்காரர்களுக்கு முடிவுரையாக அமைந்ததோ அதுபோல ஏராளமான ஆட்டக்காரர்களுக்கு ஒரு முன்னுரையாக அமைந்திருந்தது. ஜிம்பாப்வே அணியின் டேவ் ஹவுட்டன் அதில் ஒருவர். அப்போதைய ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ட்ரைகாஸ் 43 வயதானவர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனான டேவ் ஹவுட்டன் தான் ஐசிசி நடத்திய உறுப்பு நாடுகளுக்கு இடையேயான போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று உலகக் கோப்பை ஆட காரணமாக இருந்தவர். லீக் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக ஒற்றை ஆளாக போராடி 143 ரன்களைக் குவித்து வெற்றிக்கு அருகேயே ஜிம்பாப்வே அழைத்துச் சென்றார். இந்த உலகக் கோப்பைக்குப் பின் அவர் ஜிம்பாப்வே அணித்தலைவராகவும் ஆனார். 

இதுபோக இரண்டு ஆட்டக்காரர்கள் இந்த உலகக் கோப்பையில் விளையாடினார்கள். அதில் ஒருவரை அவர் ஆடிய அணிக்கு கேப்டனாக எதிர்காலத்தில் வருவார் என கணித்திருந்தனர். ஆனால் அவர் கேப்டனாக வருவார், அந்த அணிக்கு ஏராளமான வெற்றிகளைப் பெற்றுதருவார், முத்தாய்ப்பாக உலக கோப்பையையும் பெற்றுத்தந்து அணியை வலிமையாக மாற்றிவிட்டுப் போவார் என்றெல்லாம் கணிக்கவில்லை. ஆனால் அவர் அப்படிச் செய்துவிட்டுப் போனார். அவர்தான் இலங்கை அணியின் அர்ஜுனா ரணதுங்கா.

இன்னொரு ஆட்டக்காரர். அவர் ஆல்ரவுண்டர். அவர் அந்த அணிக்கு தலைவராவார் என்றோ, அணியை யாராலும் வீழ்த்த முடியாத அணி என்ற நிலைமைக்கு கொண்டு செல்வார் என்றோ, பின்னாட்களில் பேட்ஸ்மேனாக மட்டுமே அறியப்படுவார் என்றோ யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்தான் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாஹ்.

உலகக் கோப்பை 

இவர்களைப் போல மிகச்சிறந்த கேப்டன் என்ற புகழைப் பெறாவிட்டாலும் நல்ல கேப்டன் என்னும் பெயரைப் பின்னாட்களில் பெற்ற ஒருவரும் இந்திய அணியில் ஆடினார். கிரிக்கெட் உலகே ஏன் அவரே கூட நினைத்து இருக்க மாட்டார் அடுத்த மூன்று உலகக் கோப்பைகளுக்கு தன் தலைமையில் தான் இந்திய அணி களமிறங்கும் என்று. அவர்தான் முகமது அசாரூதீன்.

http://www.vikatan.com/news/sports/93471-1987-world-cup-series-part-6.html

  • தொடங்கியவர்

அந்தப் பொன்னான தருணம் நிகழ்ந்தது 1987-ல்தான்! - 1987 உலகக் கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும்! Gentleman to CommonMan மினி தொடர் இறுதிப்பாகம்

 
 

1987 உலகக் கோப்பை

 

1987 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும், கிரிக்கெட் வாரியங்களுக்கும் ஒரு செய்தியை அறிவித்தது. இனி டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் குறைந்து கொண்டேதான் வருவார்கள். மைதானத்திலும் சரி, தொலைக்காட்சியிலும் சரி இனி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைத்தான் பார்ப்பார்கள் என்பதுதான் அது. அதற்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த வாரியங்கள் ஒரு நாள் போட்டிகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தன. விளம்பரதாரர்கள் ஒரு நாள் போட்டித்தொடர்களுக்கே பணக்கொடையளிக்க முன் வந்தார்கள். எனவே ஒருநாள் போட்டிகளை நடத்துவதிலும், அதற்கு அதிக பார்வையாளர்களைத் திரட்டுவதிலும் கிரிக்கெட் வாரியங்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தன. 

முதலாவதாக, கிரிக்கெட் போட்டிகளில் தங்கள் அபிமான அணி ரன் குவிப்பதைப் பார்க்கவே ரசிகர்கள் விரும்புகிறார்கள், அவர்களின் ஸ்டம்புகள் வீழ்வதை அல்ல என உணர்ந்துகொண்டார்கள். எனவே, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை முழுக்க முழுக்க பேட்ஸ்மென்களுக்கு சாதகமானதாக ஆக்க முனைந்தார்கள். 

பொதுவாகவே ஒருநாள் ஆட்டங்கள் பேட்ஸ்மெனுக்கு சாதகமானவைதான். பந்து வீச்சாளருக்கு இத்தனை ஓவர்தான் வீச வேண்டும் என்ற கட்டுப்பாடு, உள் வட்டத்தில் இத்தனை பீல்டர்கள்தான் நிற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு என. இருந்தாலும் போதாது என இன்னும் பேட்ஸ்மெனுக்கு சாதகமாகவே ஒருநாள் கிரிக்கெட் விதிமுறைகளை மாற்ற முனைந்தார்கள்.

முதலாவதாக ஒருநாள் போட்டிக்கான ஆடுகளங்கள், பெரும்பாலும் பேட்ஸ்மென்களுக்கு சாதகமாக இருக்கும்படியே அமைக்கப்பட்டன. அடுத்ததாக பவர்பிளே. முன்னர், பேட்ஸ்மென்கள் அதிக ரன் குவிக்க உதவியாக பீல்டிங் கட்டுப்பாடு முதல் 15 ஓவர்களுக்கு மட்டும் இருக்கும். பின்னர்  அது 20 ஓவர்களாக மாற்றப்பட்டு மூன்று பிரிவுகளாக எடுத்துக்கொள்ளலாம் என வரையறுக்கப்பட்டது. இதனால்தான் 300க்கும் அதிகமான ரன்களை இப்போது ஆடுபவர்களால் எளிதாக எடுக்க முடிகிறது. மேலும், லெக் திசையில் ஒரு மில்லி மீட்டர் போனாலும் வைட், நோபாலுக்கு ப்ரி ஹிட் என ஒரு அணியை எவ்வளவு ரன் அடிக்கவைக்க முடியுமோ அந்த அளவுக்கு ரன் அடிக்க வைக்கிறார்கள்.

இவை ரசிகர்களை ஆட்டத்தை பார்க்க வைக்க செய்த உத்திகள் என்றால் போட்டிகளை துல்லியமான முடிவுகளுடன் நடத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கினார்கள். எனவே 1987 உலக்கோப்பை ஆட்டங்களை இப்போது பார்த்தால் நமக்கு ஏராளமான வித்தியாசங்கள் தோன்றும். இந்த உலக்கோப்பையில் ஆட்டத்தின் முடிவுகள் முழுவதும் அம்பயரின் கையில்தான் இருந்தன. ரன் அவுட் மற்றும் ஸ்டம்பிங்கில் அம்பயரின் தீர்ப்பே இறுதியானது. தற்போது மூன்றாவது அம்பயர் திரையில் ஆட்டத்தை ஒவ்வொரு பிரேமாகப் பார்த்து முடிவை அறிவிக்கிறார். அப்பொழுது சிக்கலானதாகத் தோன்றினால் மட்டும் பேட்ஸ்மெனுக்கு சாதகமாகத் தீர்ப்பை வழங்குவார்கள். விக்கெட் கீப்பர் கேட்சுகள், பவுண்டரி லைனில் பிடிக்கப்படும் கேட்சுகள் ஆகியவற்றையும் உத்தேசமாகத்தான் முடிவு சொல்வார்கள். 

மேக்ஸ்வெல்

இப்போது பிடிக்கிறார்களே, காற்றில் பறந்து பவுண்டரி லைனுக்கு மேல் சென்று கேட்ச் பிடித்ததும் உள்நோக்கி எறிந்து மீண்டும் பவுண்டரி லைனுக்கு உள்ளே வந்து..  அப்போது அப்படியெல்லாம் கிடையாது. அப்படி என்ன வித்தை காட்டியிருந்தாலும்  பேட்ஸ்மெனுக்கு சாதகமாகவே தீர்ப்பை எழுதியிருப்பார்கள் அம்பயர்கள். பெரும்பாலும் பவுண்டரி லைன் அருகே சறுக்கிக் கொண்டே போய் பீல்டிங் செய்வதெல்லாம் குறைவு. தப்பித்தவறி அந்த பீல்டர் பந்தைத் தடுத்துவிட்டால் அவர் சொல்வதையே வேதவாக்காக எண்ணி முடிவை அறிவிப்பார்கள் அம்பயர்கள். மேலும் டி ஆர் எஸ் எனப்படும் டிசிசன் ரிவியூ சிஸ்டமும் அப்போது கிடையாது. எனவே, எல் பி டபுள்யூவெல்லாம் அம்பயர் நினைத்தால் கொடுக்கலாம் என்ற அளவில் இருந்தது. அப்பொழுது மொத்தமே இரண்டு கேமராக்கள், அதிக பட்சம் நான்கு கேமராக்கள். இப்போதுதான் அம்பயரின் தொப்பி, ஸ்டம்ப் என எல்லா இடத்திலும் கேமரா வைத்தாகிவிட்டது. 

மழை வந்து குறுக்கிட்டாலும் ஆட்டத்துக்கு முடிவு வேண்டும் என்று முன்னர் சில விதி முறைகளை வைத்திருந்தார்கள்.  அப்போது மழையால் ஆட்டம் தடைப்பட்டால், அடுத்து ஆடிய அணி, முதலில் ஆடிய அணி ஆடிய ஓவர்களில்  50% ஆவது விளையாடியிருக்க வேண்டும். அப்படி ஆடினால் இரண்டு அணியின் ஸ்கோரையும் ஒப்பிட்டு ஆவரேஜ் ரன் ரேட் எதற்கு அதிகம் எனப்பார்த்து வெற்றி தோல்வியை அறிவிப்பார்கள். எத்தனை விக்கெட் என்பதெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இப்போது டக்வொர்த் லீவிஸ் விதிமுறைகளின் படி ஓரளவுக்கு அதுவரை விளையாடியதில், விக்கெட் இழந்தது போன்ற சாதக பாதகங்களை வைத்து வெற்றி/தோல்வியை அறிவிக்கிறார்கள். ஆனால், 1987 உலகக்கோப்பையில் எந்த ஆட்டமும் மழையால் தடைபடவில்லை. அதேபோல் ஆட்டம் இருதரப்பிலும் சமமாக முடிந்தால் ஆளுக்கு ஒரு புள்ளியை கொடுத்து முடித்துக்கொள்வார்கள், சூப்பர் ஓவர் என்ற விதிமுறையும் கிடையாது. 

தற்போது கிரிக்கெட் ஆட்டத்தில், வெற்றி மட்டுமே குறிக்கோள். ரசிகர்களை எப்பாடு பட்டாவது பார்க்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே நடத்தப்படுகிறது. வீரர்களும் அடுத்த ஆட்டத்தில் நாம் இடம் பிடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் ஆக்ரோஷமாக ஆடுகிறார்கள்.  அதனால் கிரிக்கெட் என்றாலே நினைவுக்கு வரும் ‘ஜெண்டில்மேன் கேம்’ என்ற பதத்தையே நாம் மறக்க வேண்டிய நிலை வந்திருக்கிறது.

வால்ஷ்

இந்தச் சூழ்நிலையை வைத்துப் பார்த்தால் 1987 உலகக் கோப்பையில் ஒரு பொன்னான தருணம் நிகழ்ந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் கோர்ட்னி வால்ஷின் பெருந்தன்மைதான் அது.  மேற்கிந்திய தீவுகளுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த லீக் போட்டி அது. அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமடையும். இந்தச் சூழ்நிலையில் முதலில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆடியது. அவர்களது இலக்கை சேஸ் செய்த பாகிஸ்தான் அணி முதலில் திணறியது. ஆனாலும், பின்னர் சுதாரித்து இலக்கை நெருங்கியது. பரபரப்பான கடைசி ஓவர். இரண்டு ரன்கள் வேண்டும் பாகிஸ்தான் அணிக்கு ஒரு விக்கெட் தான் மீதம் இருக்கிறது. வால்ஷ் கடைசிப்பந்தை வீசுகிறார். அதற்கு முன்னம் இருந்தே வால்ஸ் பந்தை வீசுவதற்குள்  ரன்னர் எண்டில் நிற்கும் பேட்ஸ்மென் நான்கைந்து தப்படிகள் ஓடிவிடுவார். வெறுப்புற்ற வால்ஷ் பவுலின் கோட்டருகே வந்து நின்று, பந்தை வீசாமல் நின்றுவிட்டார். பேட்ஸ்மென் வழக்கப்படி கால்வாசி தூரத்தை கடந்துவிட்டார். நின்றவர் திரும்பிப்பார்த்தால், வால்ஷ் பந்தை எறியாமல் நின்று கொண்டிருப்பதை கவனிக்கிறார். வால்ஷ் நினைத்திருந்தால் அவரை எளிதில் ரன் அவுட் செய்திருக்கலாம். மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றிருக்கும். அரையிறுதி வாய்ப்பும் பிரகாசம் அடைந்திருக்கும். யார் கண்டது கோப்பையைக்கூட வென்றிருக்கலாம். 

ஆனால், வால்ஷ் அதைச்செய்யவில்லை. அப்படிச் செய்தாலும் கிரிக்கெட் விதிகளின் படி சரியே. ஆனால் ஒரு ஜெண்டில்மேனாக, அவர் அப்படிச் செய்யவில்லை.  அந்த பேட்ஸ்மெனை ஒரு பார்வை பார்த்தார். அவர் மீண்டும் கிரீஸுக்குள் வந்து நின்றுகொண்டார். ஆனால், அடுத்து வால்ஷ் வீசிய பந்தில் பாகிஸ்தான் அணி இரண்டு ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. 

இன்றைக்கு ஆயிரம் கேமராக்கள் வைக்கலாம். ஒவ்வொரு பிரேமையும் அனலைஸ் செய்து முடிவைச் சொல்லலாம். ஆனால் இவை எதுவும் இல்லாத காலத்தில் சில பேட்ஸ்மென்கள் தங்கள் பேட்டில் பந்து உரசிச் சென்று விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்து விட்டாலே அம்பயரின் முடிவுக்கு ஏன் எதிர் அணியின் அப்பீலுக்கு கூட முன்னாலே கூட நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள். எத்தனையோ பீல்டர்கள் தாங்கள் பிடித்த கேட்ச் தரையில் பட்டு பிடித்திருந்தால், பேட்ஸ்மென் நாட் அவுட் என சொல்லி விடுவார்கள்.

ஆலன் டொனால்டுக

இவ்வளவு ஏன் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் அலன் டொனால்ட் வீசிய அபாரமான இன் கட்டர், குட் லெங்தில் விழுந்து உள்ளே வந்தது. அதை ஆட முயன்று முடியாமல் தன் காலில் வாங்கினார் இந்திய அணியின் ஆட்டக்காரர் விக்ரம் ரத்தோர். அது எல் பி டபிள்யூ என அவருக்கு மனதில் தோன்றிய கணமே நடக்க ஆரம்பித்து விட்டார். பொதுவாக எல் பி டபிள்யூவிற்கு அம்பயர் அவுட் கொடுத்தால்தான் யாருமே நடக்க ஆரம்பிப்பார்கள்.

இதுபோன்ற நிகழ்வுகளால்தான் கிரிக்கெட்டை ஜெண்டில்மேன் கேம் என்று அழைத்தார்கள். விஞ்ஞான வளர்ச்சியினால் முடிவுகளை இப்போது துல்லியமாக சொல்ல முடிகிறது. அப்போது பேட்ஸ்மென் அல்லது பீல்டர் நினைத்தால் ஏமாற்றலாம். தங்கள் அணியின் வெற்றிக்காக கூட அதுமாதிரி செய்யாமல் நியாயமாக விளையாடுவதால்தான் அது ஜெண்டில்மேன் கேம் எனப்பட்டது,

எதிரணி வீரர் சதமடித்தால் ஏன் ஒரு அற்புதமான ஷாட் அடித்தால்  வீர்ர்கள் கைதட்டிப் பாராட்டும் வழக்கம் முன்னாட்களில் இருந்தது. அது இப்போது குறைந்து வருகிறது. வர்த்தக ரீதியான நிர்ப்பந்தங்களால் இப்போது கிரிக்கெட்டில் ஜெண்டில்மென் தனம் குறைந்துகொண்டே வருகிறது. தொழில்நுட்பம் அதிகரிக்க அதிகரிக்க கிரிக்கெட்டில் ஜெண்டில்மேன் தன்மை தேவைப்படாமல்தான் போகும்.

அணி தன்னால் தோற்றாலும் அது பற்றி கவலைப்படாமல் சென்ற வால்ஷும், அவரைத் தட்டிக்கொடுத்து பாராட்டிய அணியினரையும் கண்டதுதான் 1987 உலகக் கோப்பையின் உன்னத தருணம். எவ்வளவு ரன் குவித்தாலும், எத்தனை விக்கெட் எடுத்தாலும் பெருந்தன்மையாக நடந்துகொள்வதுதான் எல்லோர் மனதிலும் நிற்கும், அதுதான் கிரிக்கெட்டின் ஆதார குணம், அதுதான் அந்த விளையாட்டை காலம் கடந்து நிற்க வைக்கும் பார்ப்பவர்களையும் நல் வழிப்படுத்தும். போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் கிரிக்கெட்டைப் பார்த்து வளரும் தலைமுறையின் மனதில் பெருந்தன்மையை வளரச் செய்வது போட்டிகளை வெல்வதை விட பெரிதல்லவா!

 


மேட்ச் ஓவர்!

http://www.vikatan.com/news/sports/93853-1987-world-cup-series---part-7-final.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.