Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்

மழைக்கோப்பை

 
கவிதை: சுகுணா திவாகர் - ஓவியம்: ஹாசிப்கான்

 

58p1_1531737422.jpg

கோப்பை நிறைய தேநீரும்
கோப்பை நிறைய மழையும்
மேஜையின் எதிரெதிரே வைத்தேன்.
நீ மழைக்கோப்பையை எடுத்துக்கொண்டாய்.
புன்னகையுடன் உறிஞ்சத்தொடங்கினாய்.
ஒவ்வொரு துளியும் மழை...
ஒவ்வொரு துளியும் காலம்...
`மழையைக் கண்ணீரோடு ஒப்பிடுவதில்
உடன்பாடில்லை எனக்கு' என்றபடி
கோப்பையை வைத்தாய்.
பிரார்த்தனையும் வாழ்த்துகளுமாய்
இரு பூக்கள் முளைத்திருந்தன.
காலிக் கோப்பை பூந்தொட்டியாகியிருந்தது.
`மழை ஒரு மந்திரச்சொல்' என்றபடி விடைபெற்றாய்.
மழையின் கால்களுக்கு இரண்டு கொலுசுகள்.
வலதுகால் வைத்து வரும்போது மண்வாசம் கிளர்த்துகிறது.
மழை திரும்பிச்செல்லும்போது
எல்லாவற்றையும் ஈரப்படுத்திவிடுகிறது
நம் பாதைகளை...
நம் ஆடைகளை...
நம் பிரார்த்தனைகளை...
நம் வாழ்த்துகளை...
நம் கண்களை...
மழைவாசம் மெல்லப் பரவுகிறது.
பூத்திருக்கும் இரு மலர்கள் அசைகின்றன
உன் கண்களென.

https://www.vikatan.com

  • Replies 212
  • Views 55.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

எச்சரிக்கை

தர்கா வாசலில் யானை
முடியை விலைக்குக் கேட்டு
பாகனைச் சூழ்ந்திருந்தது
வட மாநில சுற்றுலாக் கூட்டம்
வாலிலிருந்து ஒவ்வொரு
முடியாகப் பிடுங்கி
பணம் பண்ணிக்
கொண்டிருக்கிறான் பாகன்
அது அவனுக்குக்
கொஞ்சம் அபினாகும்
மிச்சமிருந்தால்
படிப்படியாக
ஃபுல், ஆஃப், குவார்ட்டர்
எனவும் மாறும்
மறுநாள் வசூலில்
தன் தும்பிக்கையை
உயர்த்தவேயில்லை யானை
பாகன்தான் யாசகனாகி
கை நீட்டிக்கொண்டிருக்கிறான்
நீங்கள் யானைமுடி
மோதிரத்துடனோ
தங்கக் காப்புடனோ
தர்காவிற்கு வந்திருந்தால்
பாகன் அருகில்
சென்றுவிடாதீர்கள்
வலியை உங்களிடம்
காட்டிவிடக்கூடும் யானை.
 

- வலங்கைமான் நூர்தீன்


6.jpg
குளியல்

சாக்கடைகள் கடந்து
வந்த ஆறு
கடலைச் சேர்ந்தவுடன்
முதல் வேலையாக
உப்பு நீரில்
உடல் தேய்த்து
ஒரு குளியல் போடுகிறது.

http://www.kungumam.co.in

  • தொடங்கியவர்

யாசகன்

 
 

மௌனத்துக்கு அனுமதியில்லை
எனக்கும் அவளுக்குமான
பயணங்களில்

பிரபஞ்சம் வியாபித்த என்னை
இறுக்கி அணைத்த உங்கள்
இடைவெளிகளிலிருந்து மட்டும்
பிரித்து விடாதீர்கள் என
காற்று எங்களிடம்
யாசகம் கேட்கிறது

கழற்றி வைக்கப்பட்ட
அவள் பாதணிகள்
பிரிவு துயர் தாளாமல்
காவு கொள் என்னை என
கடலிடம் யாசிக்கிறது

பளிங்கு பாதங்களை
அலை கழுவி போனதால்
கடலோடு முரண்பட்டு
ஆலய வாசல் யாசகர்களாய்
கரையேறி கிடக்கிடக்கின்றன- அவள்
பாதம் பட்ட மணல் துகள்கள்.

நீண்ட நேரம்
தீண்டப்படாமையால்
ஒருமுறையேனும் சிணுங்கு என
கை தொலைபேசியிடம்
யாசகம் கேட்கிறது- அவள்
ஸ்பரிசத்துக்காய் தவமிருக்கும்
என்னவளின் கைப்பை

காத்திருந்து களைத்துப்போன
அத்தனையும்; ஒருசேர
என்னை பார்க்கின்றன
எம்மையெல்லாம் புறந்தள்ளி
இத்தனை நாழியும்
கொஞ்சுகிறாயென
கோபத்தை உமிழ்கின்றன

பாவம் அவைக்கு
எப்படி தெரியும்
இவ்வளவு நேரம் அவளின்
ஒற்றை முத்தத்தை
வேண்டி யாசிக்கும் நானும்
அவர்களில் ஒருவன்தான் என

http://athavannews.com

  • தொடங்கியவர்

சொல்வனம்

 
ஓவியம்: செந்தில்

 

சூத்திரம்

பள்ளிக்கூடத்தில்
ஸ்கேல் இல்லாமல்
நேர்க்கோடு இழுப்பது
எங்களுக்கெல்லாம்
ஒரு சாகசமாக இருந்தது...
என் தாத்தனின் ரகசியச் சூத்திரப்படி
நான் நேர்க்கோடு வரைந்து
பள்ளியில் வெற்றிபெற்றேன்.
தாத்தன்கள் இல்லாதவர்களுக்கு
வெற்றி அவ்வளவு சுலபமாயிருக்கவில்லை.
வளர்ந்த பிறகுதான் புரிந்தது
நான் வரைந்து வெற்றிபெற்ற
நேர்க்கோடுகளிலெல்லாம்
வளைவுகள் இருந்தன.
வளைவுகளின் மேல் வெயில் விழுந்து
கானல்நீராய்
நேர்க்கோடு தெரிந்தது
தெரிந்தபோது
என் பேரனுக்கு நேர்க்கோடு வரையும் சூத்திரத்தை
ஏற்கெனவே சொல்லிக்கொடுத்துவிட்டிருந்தேன்!


 - ராம்பிரசாத்


காட்சி

விளையாட்டின்போது
காணாமல்போன பந்தைத்
தேடிக்கொண்டிருந்தார்கள்
சிறுவர்கள்...
தொலைந்துபோன குளத்தில்!


- சாமி கிரிஷ்


20p1_1531735075.jpg

மாறும் வட்ட நிலவு

வட்ட நிலவைக்
கால்பந்தாக்கி விளையாடுகிறான்
விளையாட்டு வீரன் ஒருவன்

கறுப்பழகி ஒருத்தி
யாருக்கும் தெரியாமல் நெற்றிப்பொட்டென இட்டு
கண்ணாடியில் அழகு பார்க்கிறாள்

தன் அப்பளத்திற்கு அளவெடுக்கிறான்
வியாபாரி ஒருவன்

தாமதமாகி, பசியோடு வீடு திரும்புபவன்
வட்டலாக்கி எடுத்துக்கொண்டு
அவசரமாய் வீட்டுக்குள் நுழைகிறான்

சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிட்ட பிச்சைக்காரன்
திருவோடாக்கிக் கைகளில் ஏந்துகிறான்

நூறு ரூபாய்த்தாளை வைத்துக்கொண்டு
தேநீர் குடிக்க நினைப்பவன்
நாணயமாக மாற்றுகிறான்

புதிதாய் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போனவன்
ஊரிலிருக்கும் அம்மாவின் முகம் பார்க்கும்
கண்ணாடியாக்குகிறான்

புதிதாய்க் காதலிக்கத் தொடங்கியவன்
தன் காதலிக்குத் தூதனுப்பும்
வெள்ளைப் புறாவாக்குகிறான்

படிக்காமல் கணிதத் தேர்வெழுதிய
படிப்பேறாத ஒருவன்
வாங்கப்போகும் மதிப்பெண்ணாய்ப் பார்க்கிறான்

உணவு கிடைக்காத மூதாட்டியொருத்தி
பசி மிகுதியில்
அவசர அவசரமாய்ப் பிய்த்துத் தின்கிறாள்!


- சௌவி

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

வெண்புகையின் ரூபம் இதுவென - துர்க்கை

 
ஓவியம்: மணிவண்ணன்

 

p83a_1530164898.jpg

ரணம் சட்டென
ஓர் உடலில்
அதனை நிகழ்த்திவிடுவதில்லை
அது விதவிதமான வலிரூபங்களில்
நம்முன் சர்ப்பம்போல் நடனமாடுகிறது
நாம் சாவகாசமாகப்  பழகிக்கொள்ளும்படி
ரணங்களை ஏவிவிட்டு
முன்னோட்டம் பார்க்கிறது
பின்னொரு சமயம்
பெரும் மகிழ்ச்சியோடு
அணைத்து விலகுகிறது
சாமத்தில்
தூங்கும் கட்டில் கால்களைப்போல
அமைதியாக அருகில் ரூபத்தோடு நிற்கிறது
உறவில் ஆர்வமில்லை
சோம்பேறிக் காதலியைப்போல
படர்கிறது என்மீது
பின் கசிகிறது தன் வெண்புகையை.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஆம்... முகமழிந்துதான் போனது!

 
கவிதை: டேவிட் எக்ஸிம் - ஓவியம்: வேலு

 

வெளியில் பேய்மழை.
உள்ளிருப்பவர்கள் குடைகளை
மடக்கி வைத்திருக்கிறார்கள்.
இரவல் கேட்பவர்களின் குரல்கள் கேட்காவண்ணம்
கதவுகளை இறுக மூடிக்கொள்கிறார்கள்.

முகமூடி அணிந்திருப்பவர்கள்
தெறித்துவிழும் திவலைகளை வெறிக்கிறார்கள்.
அவர்கள் கண்களில் நனைதலின் பீதி.

99p1_1532414900.jpg

முக்காடிட்டுக் கடக்கும் மனிதர்களுக்கு
முகங்கள் இருந்தனவா என்று உற்றுப்பார்க்கிறார்கள்.
வாழ்வாதாரக் கவலைகள் அற்றவர்கள் முகங்களை
வண்ணங்கள் பூசி மறைத்துக்கொள்கின்றனர்.
என்றோ இறந்தவர்களின் முகங்கள்
கல்லறைகளில் நனைந்தபடி கரைந்துபோகின்றன.

தொடர்ச்சியாய் வரைந்துகொண்டிருக்கும் அந்த ஓவியன்
முகம் வரையும்முன் நிதானித்து
பிராந்தியை ஒரு மிடறு பருகிக்கொள்கிறான்.
வீடு நுழைந்து முகமூடி களைபவர்கள்
நிலைக்கண்ணாடியில் முகம் காணாமல் பதைத்துப் பின்
படுக்கையறையில் கண்டெடுத்துப் பொருத்திக்கொள்கின்றனர்.

அதோ அந்தப் பெட்டிக்கடையின் பின் நின்று
அழுக்காய் வானம் பார்த்துப் புகைப்பவனைப்போல்
மூடிகள் அவசியமில்லாத
ஒழுங்காய் சவரம் செய்யப்படாத
முகமுடையவர்கள் அரிதாய்த் தென்படுகின்றனர்.
அநேகமாய் அவர்கள்
அருகிவரும் இனத்தின்
பிரதிநிதிகளாய் இருக்கக்கூடும்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ரெய்டு!

வீட்டில் ஒரு பொருள்
காணாமல்போனதும்
முதல்
ரெய்டு நடத்தப்படுவது
குழந்தைகள் அறையில்தான்!
அதில் பல
கிடைத்தும்விடுவதுண்டு
அப்பாவின் பேனா
தண்ணீர் பாட்டில் மூடி
அம்மாவின் சீப்பு
புதுசாய் வாங்கிய ரிப்பன்
தாத்தாவின் மூக்குக்கண்ணாடிப்பெட்டி
டி.வி ரிமோட்
காலையில் வந்த பேப்பர்
செல்போன் சார்ஜர்
பாட்டியின் ஜோதிடப் புத்தகம்
என நீளும் பட்டியலில்
குழந்தை தொலைத்த எதுவும்
அங்கு
காணக்கிடைப்பதில்லை
என்பது மட்டும்
இன்றுவரை
அவிழாத புதிர்!

- ப்ரணா

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

உரு

குழந்தையின்
பல் பதிந்த இடத்தில்
வெள்ளையாய்ச் சிரிக்கிறது ஆப்பிள்.                                   

- ந.சிவநேசன்

நொதி

மகளின் தற்கொலைக்குப்
பிறகான நாளொன்றில்
வாடகை வீட்டைக்
காலிசெய்ய வந்தவள்
யாரும் பார்த்திராத
ஒரு கணநேரத்தில் எடுத்துப்
பத்திரப்படுத்திக்கொள்கிறாள்
வெடித்த கழுத்து நரம்புகளின்
நொதி வாசனை அப்பியிருக்கிற
தூக்குக்கயிற்றை!

- வே.முத்துக்குமார்

ஒரு ராத்திரி, அப்பாவின் அழுகை

நிச்சயமாக அப்பா அழுவதை எனது
இருபத்தேழு வயதில் காண்பதென்பது
அதிர்ச்சி பொதிந்த ஆச்சர்யம்தான்!
தாத்தா இறந்தப்போ வராத அழுகை
நேற்று இரவு ஏன் வந்தது
வீட்டுச் சுவர்களே நீங்கள் நிச்சயமாக
அறிந்துவைத்திருக்க முடியும்
அந்த இரவிடம் பேசிப்பயனில்லை
அது மௌனமாக நிற்கிறது.
அம்மா, சாப்பாட்டில் உப்பு சேர்க்கவில்லை
அப்பா, சாப்பாட்டைக் குறைகூறவுமில்லை.
பாட்டி, வெற்றிலையைச் சப்பி தன் கடைவாயில்
வழியும் எச்சிலைத் துடைக்க மறந்து பேசுகிறார்.
நடக்கும் தரையில் சிந்திய எச்சிலை மிதித்த அப்பா
பாட்டியைக் கோபிக்கவேயில்லை.
அழுகை எதற்காக என்பது மர்மமாகவே இருக்கு
அப்பாவின் நாளாந்தச் செயலில் மாற்றமில்லை.
அப்போ அழுகைக்கும் அப்பாவுக்குமான உறவுதான் என்ன?
அம்மாவிடம் நான் கேட்டுடப்போறேன்
`அப்பா புன்னகைக்க உன்னிடம் ஏதாவது
வழி இருக்கா?’ என்று.

- ஜே.பிரோஸ்கான்

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

93p1_1532347145.jpg



ஒரு ராத்திரி, அப்பாவின் அழுகை

நிச்சயமாக அப்பா அழுவதை எனது
இருபத்தேழு வயதில் காண்பதென்பது
அதிர்ச்சி பொதிந்த ஆச்சர்யம்தான்!
தாத்தா இறந்தப்போ வராத அழுகை
நேற்று இரவு ஏன் வந்தது
வீட்டுச் சுவர்களே நீங்கள் நிச்சயமாக
அறிந்துவைத்திருக்க முடியும்
அந்த இரவிடம் பேசிப்பயனில்லை
அது மௌனமாக நிற்கிறது.
அம்மா, சாப்பாட்டில் உப்பு சேர்க்கவில்லை
அப்பா, சாப்பாட்டைக் குறைகூறவுமில்லை.
பாட்டி, வெற்றிலையைச் சப்பி தன் கடைவாயில்
வழியும் எச்சிலைத் துடைக்க மறந்து பேசுகிறார்.
நடக்கும் தரையில் சிந்திய எச்சிலை மிதித்த அப்பா
பாட்டியைக் கோபிக்கவேயில்லை.
அழுகை எதற்காக என்பது மர்மமாகவே இருக்கு
அப்பாவின் நாளாந்தச் செயலில் மாற்றமில்லை.
அப்போ அழுகைக்கும் அப்பாவுக்குமான உறவுதான் என்ன?
அம்மாவிடம் நான் கேட்டுடப்போறேன்
`அப்பா புன்னகைக்க உன்னிடம் ஏதாவது
வழி இருக்கா?’ என்று.

- ஜே.பிரோஸ்கான்

மாரல் ஆஃப் தி ஸ்டோரி

அந்த யானை அவ்வளவு
ஒல்லியாக இருந்தது
கரடிக்குக் கன்னம்
கொஞ்சம் அதிகம்தான்
சிறுத்தை, சற்று
நிறம் மாறி இருந்தது
நரி மறந்த வசனத்தை
நேரம் தவறி மான் பேசியது
நகைப்புக்குரியது
மற்றபடி சிங்கத்துக்குக் குரல் மட்டுமே இருந்தது
எவ்வளவு நேரம் படுத்தேயிருப்பது
பாம்பு அவ்வப்போது நின்றுகொண்டது
வாழ்வென்பது நம்பிக்கைகளால் ஆனது
பேசிய ஓநாய்க்குத் திக்குவாய்
திரை மூடிய பிறகும்
வழியெல்லாம் அரங்கேறிக்கொண்டிருந்தது
குழந்தைகளின் மாரல் ஆஃப் தி ஸ்டோரி!

- கவிஜி

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

பூ

சாலையோரப்
பூக்களோடு
தானும் ஒன்றென
நினைத்திருந்தது
அன்று பூத்த
தண்டவாளப்
பூவொன்று,
அந்த ரயில்
கடந்து
செல்லும் வரை.
 

- கிருத்திகா தாஸ்

10.jpg
தனித்திருந்த இரவு


அரபிக்கடல் இவ்விரவில்
யாருக்கும் தெரியாமல்
இம்மாநகருக்குள் நடந்து
என் அறை வந்து
கதவு தட்டுகிறது
அறைக்கதவு திறந்ததும்
உள் நுழையும் கடல்
கட்டிலில் பக்கத்தில் அமர்ந்து
கண்களைத் துடைத்து விடுகிறது
எனக்காக சில மீன்களையும்
யாரோ செய்து
விட்டுவிட்டுப்போன
சில காகிதக்கப்பல்களையும்
தந்துவிட்டு
என் தனிமைகளை
எடுத்துக்கொண்டு
வந்த வழியே
திரும்ப நடக்கிறது
சட்டென நதியென மாறி
கடல்போன திசையில்
ஓடத்துவங்குகிறேன்
 

- சௌவி

http://www.kungumam.co.in

  • தொடங்கியவர்

அழைப்பு மணி - கவிதை

 
தமிழச்சி தங்கபாண்டியன் - சிற்பம்: ராஜ்குமார் ஸ்தபதி

 

திகாலைக் கனவொன்றில் வந்த
ரயில்வண்டி அப்பாவை இறக்கிவிடுகின்றது.
எக்மோரிலிருந்து அண்ணாநகருக்கு
ஆட்டோவில் பலசரக்கு அட்டைப்பெட்டிகளுடன்
அன்று வந்திறங்கிய அப்பாவுக்காக
இன்று நீலாங்கரையில் காத்திருக்கிறேன்.

தீக்கொன்றைப் பூக்கள் கொட்டிக்கிடக்கின்ற
இந்தச் சாலையில்
இரண்டு வேப்பம்பழங்களோடு
மல்லாங்கிணற்று வெக்கையைக் கொண்டுவந்து
போட்டுப் போகின்றதொரு காக்கை.

வாலாட்டிச் சோம்பல் விலக்கி
முட்டி உரசுகிற தெருநாய்
அப்பாவின் ஆசை மணியேதான்.
ரொட்டித்துண்டுகளோடு தோட்டத்துக்கு
லூனாவில் போகும் அப்பாவை
அருகே கொண்டுவந்து நிறுத்துகிறார்
வேட்டியை மடித்துக் கட்டாமல்
சைக்கிளில் சுக்குக்காபி விற்கும் அண்ணாச்சி.

96p1_1533106791.jpg

கீரையை நிறம் மாறாமல் சமைத்தால்
கண்ணகல விரும்பிச் சாப்பிடும்
அப்பாவின் எச்சிலை
முத்தமெனத் தந்துவிட்டுப் பறக்கிறாள்
மூத்த மகள்.

கோமாளிக் கன்னம் வைத்தபடி
தொப்பையைக் குலுக்கிச் சிரிப்புக்காட்ட
எதிர்ப்படும் சின்ன மகளுக்காக
அப்பா அடிக்கும் மணியை
யாரோ அழுத்தி
``சார் இருக்காரா?” என்கிறார்.

வந்தவரது வெண்ணிறச் செருப்புகளின் துலக்கம்
அப்பாவின் நகங்கள் சீராக்கப்பட்ட
பாதங்களை நிழலாட்டுகிறது.
``சார் இருக்கார்.
ஆனால், பார்க்க முடியாது” என்ற என்னை
புரியாமல் வெறிக்கும்
அவரது சட்டைக் கைமடிப்பில்
அப்பாவின் நேர்த்தி குறைவுதான்.
அவர் ஏறிச் சென்ற வெள்ளை நிற அம்பாசிடர்
அப்பாவின் செல்லமான முயல்குட்டியேதான்.

நின்றிருப்பது நீலாங்கரை என
இன்னோர் அழைப்பு மணி நினைவூட்டுகிறது.

எக்மோரிலிருந்து இனி வரவே வராத
அந்த ஆட்டோவும் அப்பாவும்
ரயில் புகையாய் மேலெழுப்பிப்
பவளமல்லிப் பூக்களாய் கீழுதிர்கிறார்கள்.

அழைப்பு மணியை அகற்றுகிறேன்.
அத்தனை பேர் கைரேகையிலும்
அப்பாவுடையது இல்லையெனும்போது
அது எதற்கு இனி?

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

 

 

26p1_1533107189.jpg

பயணம்

ஒரு கடல் தாண்டி
மறுகரையை அண்மித்துவிட்டேன்.
இதுவரை வழிநடத்தி வந்த பறவை
ஏனோ எனக்கான பயணத்தைத்
தொடர விருப்பமின்றி அமர்ந்திருக்கிறது கரையில்.
நெருங்கி `தொடரலாமா?’ என்றேன்.
`மிகவும் சோர்ந்துபோயுள்ளேன். என்னால் இனிமேல் உனக்கு உதவ முடியாது
என்னை மன்னிப்பது சிறந்தது’ என்கிறது.
`நான் இந்தக் கடலையும் கடந்தாகணும்’ என்றேன்.
யோசித்த பறவை.
`அப்போ,
என் சிறகுகளை எடுத்துக்கொள்’ என்றது.
மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டு புறப்படுகிறேன்.
பறவை என் கைகளை வைத்துக்கொண்டு
எப்படி அந்த இருப்பிடத்தை அடையுமோ!

 - ஜே.பிரோஸ்கான்

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

26p2_1533107200.jpg

பூத்தல்

தினமும்
கடந்து செல்லும் வழியில்
தனிமையில் இருந்த
அந்தச் செடியிடம்
ஓரிரு வார்த்தை அவசரமாகப்
பேசிவிட்டுச் சென்றேன்.
மாலையில்
திரும்பி வரும்போது
எனக்காக
அந்தச் செடியே
பூத்திருந்தது.
ஏதேனும் ஒரு பெயருக்குள்ளும்
ஏதேனும் சில வண்ணங்களுக்குள்ளும்
சிறைப்படாமல்!

- தோழன் பிரபா


26p3_1533107212.jpg

ஈரம்

ஓரத்தில் உடைந்த 
எட்டுக்கண் பாலத்தில்
எழுதிவைத்து...
பன்னெடுங்காலமாய்
வேகாத வெயிலில்
காய்ந்து
சருகாய்ப்போய்க் கிடந்த
அந்த ஜோடியின் பெயரை
ஆசை தீர
தழுவிச் சென்றது
ஆற்றுவெள்ளம்!

- பழ.அசோக்குமார்


26p4_1533107230.jpg

நவீன மனிதர்கள்...

எதற்கெடுத்தாலும்
கோபப்படுகிறார்கள்...
பொசுக்கென அழுதும்விடுகிறார்கள்...
யார்மீதும் எளிதில்
பொறாமைகொள்கிறார்கள்...
ஆனால்,
பதாகைகளில் மட்டும்
சிரிக்கப் பழகியிருக்கிறார்கள்.

- சாமி கிரிஷ்


26p5_1533107243.jpg

மயக்கம்

எனது தோள்பட்டை
நிழலின் மீது
புழு ஒன்று ஊர்கிறது
புழுவின் நிழல்மேல்
ஊர்வது யார்?

- கிருபா

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பிடுங்கப்பட்ட பூர்வீகக் கனவு - கவிதை

 

p48a_1533560453.jpg

பிடுங்கப்பட்ட நிலத்தின் நினைவோடு அங்கிருந்து புறப்படுகிறோம்
அப்பாவின் முதுகில் கிணறு தொங்குகிறது.
அதனுள் ஆமையும் மீன்களும் நீந்துகின்றன
அம்மாவின் விரலில் களிமண் ஒட்டியிருக்கிறது.
அதன்மீது நெல்லும் கரும்பும் நடப்பட்டுள்ளன
அண்ணனின் தோள்களில் மாடு மேய்கிறது.
அதன் காம்பைக் கவ்வியுள்ளன கன்றுக்குட்டிகள்
அக்காவின் கழுத்தில் ஆடு தொங்குகிறது.
அதன் கால்களைப் பற்றியுள்ளன குட்டிகள்
தங்கையின் இடுப்பின்மீது அடிகுழாயும் நீர்பொங்கும் பானைகளும்
தம்பியின் சட்டைப்பையில் பூனையும் டவுசரில் கோழிகளுமாக...
எல்லோர் தலையிலும் சமமாகப் பகிர்ந்து சுமக்கிறோம்
பாட்டன் கட்டிய வீட்டை...

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

 

 

p30a_1533643922.jpg

வனம் உருவாக்குதல்

ரையை
அலகுகளால் நழுவவிட்டபடி
பறந்து செல்லும் பறவைகள்
சத்தமில்லாமல்
சந்ததிகளுக்கான ஒரு
வனத்தை
உருவாக்குகின்றன.

 - பிரபு

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

p30b_1533643940.jpg

பதில் விளக்கு

னது நிறுத்தம் வந்துவிட்டது.
மேல்மூச்சு வாங்குகிறது.
அடுத்த அடியின் தாகத்தோடு
பாதங்கள் வழியோடு விழுந்துவிட்டன.
எங்கேதான் முடியவிருக்கிறதோ
இந்தப் பாதை.
வரும் வழியில் சற்றுமுன்தான் பார்த்தேன்
சொல்லாமல்போன வார்த்தைகளின் சாயலாய்
புரண்டு கிடக்கின்றன உன்மீது கேந்திப் பூக்கள்.
சரி போகட்டும்,
உனது மாடத்தில்
கடைசிச் சொட்டில் பரிதவிக்கும்
அகல்விளக்கின் பாஷைகளை
எனது
`ம்’ எனும் பதிலாகப் புரிந்து,
இன்னும் நிம்மதியாய்த் தூங்கு.

- இயற்கைசிவம்

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பச்சைக் கிளி! - கலைஞரின் கவிதை 

 

 
k2

சுரைக்காய்ப் பிஞ்சின் தலையில் மிளகாய்ப்
 பழத்தைச் செருகி இடையில் மல்லிகை
 இலைகள் சிறகாய்ப் பின்புறம் தாழை
 மடலை வைத்தால் பச்சைக் கிளியே!
 உன்போல் படைப்பு! உன்போல் படைப்பு!
 வட்டத் தலையே! சிவப்பு மூக்கே!
 சின்ன இறகே! நீண்ட வாலே!
 கன்னற் கிளியே சொன்னது பிசகா?
 வர்ணனை கேட்க வாழ்த்த மறுப்பாய்
 புகழ்ச்சொல் கேட்டும் போற்றிட மாட்டாய்.
 காரணம் அறிவேன் சின்னக் கிளியே!
 கூண்டில் உன்னைப் போட்டத னாலே
 தூண்டிற் புழுவாய்த் துடிக்கிறாய் நீயும்
 சிறையில் உன்னை அடைத்து மகிழ்ந்தேன்
 இன்று தெரிந்தேன்-
 சிறைமிகக் கொடிது, சிறைமிகக் கொடிது!
 மன்னித் திடுவாய் மன்னித் திடுவாய்!
 பொன்மொழிப் பாவாய் மன்னித் திடுவாய்!
 என்சிறை முடிந்ததும் உன்சிறை உடைப்பேன்.
 சிறையின் கஷ்டம் சிறையால் உணர்ந்தேன்.
 அடிமைப் புள்ளே! அழகுக் கிள்ளாய்!
 அனுபவம் பெற்றேன்- அனுபவம் பெற்றேன்.
 வந்ததும் தருவேன் விடுதலை வாழ்வு!
 பறப்பாய், பறப்பாய், உயரப் பறப்பாய்!
 கட்டிய கால்கள் விடுபடும்; உடனே
 எட்டிய மட்டும் ஏறிப் பறப்பாய்!
 எழில்நிறப் பெண்ணே எங்கும் பறப்பாய்!
 கூண்டில் உன்னை அடைத்தேன் கிளியே!
 மன்னித்து விடுக! கூண்டின் கஷ்டம்
 புரிந்து கொண்டேன்; கூண்டின் கஷ்டம்
 புரிந்து கொண்டதால் கூண்டுக் கிளியுனைத்
 திறந்து விடுவேன். ஆனால் கிளியே
 கூண்டின் கஷ்டம் புரிந்தோர் இங்கு
 ஆண்டிட வந்தார்
 மாண்டிட எம்மைக் கூண்டினில் போட்டார்!
 ஏனோ கிளியே? ஏனோ கிளியே?
 பதிலும் சொல்வாய் பச்சைக் கிளியே!
 உன்னை நான் அடைத்ததால் என்னை அடைத்தார்
 என்றே சொல்வாய் நன்று கிளியே;
 நீ யாரை அடைத்ததால் நானுன்னை அடைத்தேனோ?

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

p30c_1533643962.jpg

அரண்

கோ
யில்,
கல்யாண மண்டபம்,
மருத்துவமனை
இப்படி வெளியே
கழற்றிவிட்டுப் போகும்
எல்லா இடங்களிலும்
அம்மாவின்
பெரிய காலணிக்குள்
பத்திரமாய்
ஒளிந்துகொள்கிறது
உடன் செல்லும்
குழந்தையின்
பிஞ்சுப் பாதங்கள்!

- பழ.அசோக்குமார்

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 


p30d_1533643988.jpg

குறியீடு!

வீ
ட்டுவாசலில்
குழந்தை
போட்ட கோலத்தை
அழித்து விரைகிறது
துரிதமாய்ச் செல்ல
குடியிருப்புகள் தெருவில்
நுழைந்த
பள்ளிப் பேருந்து ஒன்று!

- ப்ரணா


p30e_1533644010.jpg

ஜங்கிள் புக்

யா
னையும் அங்குசமில்லாமல்
அடங்கிக்கிடக்கிறது
அங்கோர் ஒரமாய்...
வெறி நாயும் கடி வாங்கி
ஓடி ஒளிகிறது
பீரோவிற்குப் பின்னே...
சிங்கத்தின் பல்லுக்கும் வைத்தியம் பார்க்கப்பட்டுகிறது
சாப்பாடு மேஜை மேலே...
புலியின் தோலும் நிறம் மாற்றப்பட்டு
பதுங்கிக்கொண்டிருக்கிறது
பூனையைப்போலவே...
கரடி மட்டுமே பிடித்ததாய்
பக்கத்தில் படுத்துறங்குகிறது
கட்டிலின் மேலே...
பூனைக்குட்டி இப்படியும் அப்படியும்
நடமாடுகிறது பேசும் தோழனாய்
கூடவே...
குழந்தைகள் இருக்கும்
ஒவ்வொரு வீடும் இப்பொம்மைகளைக்கொண்ட
ஜங்கிள் புக்காகவே மாறி விடுகிறது
எப்பொழுதுமே...

- கௌந்தி மு 

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

ஞாயிறு என்பது! - கவிதை

 

 

p38a_1534327507.jpg

முதல் வீட்டில் திருமணம்
இரண்டாம் வீட்டில் வீடுபுகும் நாள்
மூன்றாம் வீட்டில் ஊருக்கு போயிருக்கிறார்கள்
நான்காம் வீட்டில் வழக்கமான சண்டை
ஐந்தாம் வீட்டில் பெண் காதல் பிரச்னை
ஆறாம் வீட்டில் புதுப்படம் ஓடுகிறது
ஏழாம் வீட்டில் பிரியாணி வாசம்
எட்டாம் வீட்டில் பெரும் மரணம்
வீதி ஏதோ ஒரு கிழமையில் இருக்கிறது
இன்று ஞாயிறில்.....!

பெரியம்மா வீட்டு ஞாயிறு
சித்தப்பா வீட்டு ஞாயிறு
மாமா வீட்டு ஞாயிறு
பாட்டி வீட்டு ஞாயிறு
அண்ணன் வீட்டு ஞாயிறு
தங்கை வீட்டு ஞாயிறு
ஆளுக்கொரு ஞாயிறுகளால்
நிரம்பி இருக்கிறது ஞாயிறு...
எங்கே போனதென்று
தெரியவில்லை
எல்லாரும் நிரம்பியிருந்த 
எங்கள் வீட்டு ஞாயிறு...?

தெரு முழுக்க
குறுக்கும் நெடுக்குமாக
பூனையாகிறது ஞாயிறு...

கவிஜி - ஓவியம்: ரமணன்

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இருந்தார்கள் இல்லாமல்! - கவிதை

 

 

p69a_1534242462.jpg

குளக்கரைப் பூங்காவொன்றில்
ஒளிந்து கொண்டவர்களை
ஒளித்துக் கொண்டவள்
கண்டறிந்த தருணம்
எழுந்தது பேரொலி.

கேட்டுக்கொண்டிருந்த தலைவனின்
பாடலை மிஞ்சியதால்
திட்டித் தீர்த்தார்
எரிச்சலுற்ற காவலாளி
பின்னிசையாக
ஒன்றே குலமென்று பாடுவோம்...

புங்கைப் பூக்கள்
மிதந்த நிலம் நின்றவள்
அலைபேசியைத் தடவியபடி நுழைவு
வாயிலைப் பார்த்திருந்தாள்.

இருந்தாற்போல் எதிர்ப்பட்டான்
ஆடை சரிசெய்யும் சாக்கில்
துளிர்த்த நாண வியர்வையை ஒற்றினாள்.

பொய்யான கோபம் மாயமாகிட
அங்கிருந்தோர்களை இல்லாமலாக்கி
செல்லமும் சிணுங்கலுமாக
காட்சிகள் மாறிக்கொண்டிருந்தன.

காத்திருந்த சூரிய ஒளி
குளிர்ச்சியடைந்தது.
குளத்தில் பறவைகள் மிதந்தன.
செங்கொன்றை
பூக்களை உதிர்த்துக்கொண்டிருந்தது.
நடையிட்ட பேரிளம் பெண்
எங்கேடா தொலைந்தாய்
பேசியோடு சலித்தாள்.
கலி முத்திப் போச்சென்றோர் கடக்க
கனிவில் ததும்பியது காவலாளி முகம்
அவரின் சட்டை ஒலித்தது
நிலவு ஒரு பெண்ணாகி...

என்னுள்ளோ
புகுமுகம் புரிதல்
பொறிநுதல் வியர்த்தல்
நகுநயம் மறைத்தல்
தலைவனும் தலைவிக்குமான
அகத்திணைக் காட்சிகள்.

பெரியசாமி - ஓவியம்: வேலு

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

`மண்டே’வின் நீள் விசும்பல்!

ஞா
யிற்றுக்கிழமை இரவுகள்
குழந்தைகளை உறங்கவிடாமல் அலைக்கழிக்கின்றன.
இரண்டு நாள் விடுப்பும் பயணமும் காடுகளும்,
விளையாட்டும் நினைவுச் சருகாகித்
தலைக்குள் சரசரக்கின்றன
இரவு முழுக்க.

மறுபடியும் அதே மேத்ஸ் மிஸ்ஸும்,
சயன்ஸ் மிஸ்ஸும்
`டெஸ்ட் நோட் எடுங்க...’ எனும் அதட்டலோடு
க்ளோசப்பில் முகம் காட்டி பயமுறுத்துகிறார்கள்.

அடுத்த விடுமுறைக்கு
இன்னும் ஐந்து முழு நாள்கள்
இருப்பதாகக் காட்டிய நாட்காட்டி,
கண்களில் நீர்முட்டவைக்கிறது.

அவர்களது கனவில் `மண்டே’,
தலைகுனிந்து குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது.
`மண்டே’வை ஒருமனதாகச் சாடுகிறார்கள் குழந்தைகள்.
அந்த நாளே தங்களுக்கு வேண்டாமெனச்
சிறையிலடைக்கும்படி வாதிடுகிறார்கள்.

பல நூற்றாண்டுக்காலக்
குழந்தைகளின் சாபம் சுமக்கும் `மண்டே’,
அவர்களின் மன்னிப்பைப் பெறும்பொருட்டு
ஒரு பெரும் விசும்பலை உதிர்க்கிறது.

அந்நீள் விசும்பல் இரவைக் கடந்து
இன்னும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.
இப்போது குழந்தைகளும் விசும்பத் தொடங்குகிறார்கள்!

- விக்னேஷ் சி செல்வராஜ்

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

 

p94a_1534322657.jpg

விடுப்பு

மு
தல்முறை
தயக்கத்துடன் அழைத்து
இரண்டாம் முறை
சிறிது தைரியத்துடன் கூப்பிட்டு
மூன்றாம் முறை
கோபத்தைக் கொஞ்சம் சேர்த்து
இறுதியாய்... ஒருவழியாய்
அழைப்பினை எடுத்ததால்
தயங்கியபடி விடுப்புவேண்டினேன்
நீண்டநேரம் பேசிவிட்டு
அனுமதித்தார் மேலாளர்.
கடன் கேட்பதைவிடவும்
கொடுமையானது
திங்கட்கிழமை விடுப்பு கேட்பது!

- மணிகண்டபிரபு


விழுதுகளின் வலி!

ந்திசாயும் நேரத்தில்
ஆலமரம்
விழுதைத் தேடுகிறது
நள்ளிரவு தாண்டியதில்
விழுதுகளின்
ஊசலாட்டம்
பின்னிரவுச் சாமத்தில்
பனிகொண்ட நடுக்கம்
மரத்தை உலுக்குகிறது
அதிகாலை விழித்தலில்
கைக்குழந்தையோடு
கழுத்திறுகித் தொங்கிக்கொண்டிருந்தாள்
ஒருத்தி
ஆலமரம் இனி
பெயர் மாறும்
அழுதழுது சடங்கானாள்
செத்தவளின் தங்கை!

- கவிஜி

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

மொழி

நான் சூடாத பூக்களும்
வாடிடும் வேளைகளில்
மிஞ்சியிருக்கும்
மெளனம்
எங்கோ இடறி
விழுந்துவிட்டது
கோயில் மணி சத்தத்திலும்
கடல் அலைகளின்
ஓலத்திலும்
குழந்தையின்
அழுகையிலும்
வண்டுகளின்
ரீங்காரத்திலும்
கண்டெடுத்த
பெரு மெளனங்களை
காலத்தில் புதைந்துபோன
காதலுக்கெல்லாம்
பரிசளித்துவிட்டேன்
கொஞ்சம் வார்த்தைகள் கொடு
தொலைந்த
என் மெளனத்தைத்
தேடிக்கொள்கிறேன்.
 

- நவீனா

24.jpg
காத்திருப்பு


இப்போது பெய்த
மழையின்
இறுதித் துளியைக்
காட்டி
இதோ என்
காதல் என்கிறாய்
நான் என்
காதலைக் காட்ட
அடுத்து
பெய்ய இருக்கும்
மழையின்
முதல் துளிக்காகக்
காத்திருக்கிறேன்.

http://www.kungumam.co.in

  • தொடங்கியவர்

தன்னிலை மாறா இரவு

ரவின்மீது
விளக்குகளை ஏற்றி வெளிச்சமாக்குகிறார்கள்
இரவின் மௌனத்தின் மீது
பாடல்களை நிரப்பி மௌனம் கலைக்கிறார்கள்
தள்ளுவண்டியில் காய்ச்சிய தேநீரால்
இரவின் குளுமையைச் சூடாக்குகிறார்கள்
சாலையோரக் கடைகள்
ஆவி பறக்கும் உணவுகளோடு
இரவின் பூரணத்தில் பசியைக் கிளப்புகின்றன
மைதானங்களில் பகல்களை உருவாக்கிப்
போட்டிகள் நடத்துகிறார்கள்
விரையும் வாகனங்கள்
தங்கள் இயந்திரக் குரல்களைச் சற்றே உயர்த்திப்பேசி
இரவின் அமைதியில் கல்லெறிகின்றன
நாயொன்று தொடர்ச்சியாக எழுதுகிறது
தன்குரலால் மனிதர்களின் மீதான புகாரொன்றை
அத்தனை லாபம் வேண்டுமென உற்பத்தி ஆலைகள்
தங்கள் பற்களால் இரவைக் கடித்துக் குதறுகின்றன
வெட்டப்பட்ட மரங்களிலிருந்த கூடுகளை இழந்த பறவைகள்
அகதிகளாக அழுதபடி இரவு வானத்தில்
அலைந்துகொண்டிருக்கின்றன வேறிடம் தேடி
இரவைக் கத்தியால் குத்துகிறார்கள்
இரவை அரிவாளால் வெட்டுகிறார்கள்
இரவை நகங்களால் கிழிக்கிறார்கள்
இரவை நெருப்பு வைத்து எரிக்கிறார்கள்
என்னென்ன செய்தபோதும்
இரவு இரவாகவேயிருக்கிறது

- சௌவி

https://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.