Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரசொலி: திராவிட முரசு!

Featured Replies

முரசொலி: திராவிட முரசு!

 

10CHVCMEDIT2-KARUNA
logo
10CHVCMEDIT2-KARUNA

தி

முகவின் கட்சி இதழான ‘முரசொலி’ தனது 75-வது ஆண்டில் அடியெடுத்துவைத்திருக்கிறது. 60 ஆண்டு காலம் ஒரு நாள் விடாமல் தினசரி இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. கட்சியின் தலைவரான மு.கருணாநிதி தான் இந்தப் பத்திரிகையின் நிறுவனர். அச்சு ஊடகம் வழியாக அரசியல்ரீதியாகக் குரல் கொடுப்பதென்பது நவீன யுகத்தில் அமெரிக்காவில் வெளியான ‘ஃபெடரலிஸ்ட் பேப்பர்ஸ்’ கட்டுரைகளின் மூலம் குறிப்பிடத் தகுந்த விதத்தில் தொடங்கியது. 1861-ல், பிற்பாடு பிரான்ஸின் பிரதமராக ஆகவிருந்த ஜோர்ஜ் க்ளமான்ஸோ தனது இடதுசாரிக் கருத்தியலைப் பரப்புவதற்காக ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து 1900-ல் லெனின் ‘இஸ்க்ரா’ என்ற பெயரில் கம்யூனிஸ இயக்கத்துக்கான பத்திரிகையைத் தொடங்கினார். இந்தியாவில், தொழிற்சங்கத்திலும் கம்யூனிஸத்திலும் முன்னோடியான சிங்காரவேலர் 1923 வாக்கில் மாதம் இருமுறை வெளியாகும் இதழைத் தொடங்கினார். தனது சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்புவதற்காக பெரியார் ‘குடிஅரசு’ இதழை 1925-ல் தொடங்கினார். 1953-ல் திமுக நிறுவனர் அண்ணா ‘நம் நாடு’ என்ற இதழை திமுகவுக்காக நிறுவினார்.

 

முதல் குழந்தை

மு.கருணாநிதி தனது வழிகாட்டிகளான பெரியார், அண்ணா ஆகியோரின் பாணியை அச்சு ஊடகத்தில் பின்பற்றினார்; ஆழமாக வேரூன்றியிருந்த சமூக நடை முறைகளுக்குச் சவால் விடுப்பதையும், தமிழ் கலாச்சார தேசியத்தை உயர்த்திப் பிடிப்பதையும் முக்கால் நூற்றாண்டாக அவர் செய்துவந்திருக்கிறார். 90 வயதைக் கடந்தவரான கருணாநிதி ‘முரசொலி’யைத் தனது ‘முதல் குழந்தை’ என்று அடிக்கடி குறிப்பிட்டதில் எந்த ஆச்சரிய மும் இல்லை. திராவிட இயக்கம், திமுக ஆகியவற்றின் லட்சியங்களுக்குப் பயன்படும் விதத்திலான தனது எழுத்துவன்மையை கருணாநிதி ‘முரசொலி’யில் பறைசாற்றினார்; இவ்விதத்தில், ‘முரசொலி’யில் கருணாநிதி யின் எழுச்சிமிகு பேனா வெளிப்படுத்திய சாதுரியமான கவர்ச்சியை அவருடைய எதிரிகளால்கூட அவ்வளவு எளிதில் புறம்தள்ளிவிட முடியவில்லை.

 

தொண்டர் படையும் அறிவுஜீவிக் குழுவும்

இந்திய அரசியல் வரலாற்றிலேயே திராவிட இயக்கத் தின் அளவுக்கு மேடைப் பேச்சையும் எழுத்துத் திறனை யும் பயன்படுத்திய கட்சி வேறு எதுவும் இல்லை. மேடை நாடகங்களும் திரைப்படங்களும் பெருவாரியான மக்களைச் சென்றடைவதற்கான களத்தைக் கொடுத்தன என்றால், கட்சிப் பத்திரிகைகள் கொள்கைரீதியிலான அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்தன. மக்களிடமும் தொண்டர்களிடமும் வாசிப்பை ஒரு இயக்கமாகக் கொண்டுசெல்ல ஆரம்ப நாட்களில் திமுகவின் படிப்பகங்கள் மிகவும் துடிப்புடன் செயல்பட்டன. வேலை நேரம் முடிந்த பிறகு, மாலைப் பொழுதுகளில் தொண்டர்கள் ஒன்றுகூடி பத்திரிகைகளை வாசித்தனர். பத்திரிகைகளில் வெளியாகும் கட்டுரைகள், தலையங்கங்கள், கவிதைகள், நாடகங்கள், அறிக்கைகள், சிறுகதைகள் என்று எல்லாவற்றைப் பற்றியும் விவாதிக்க இந்தப் படிப்பகங்களே களம் அமைத்துக்கொடுத்தன. இயக்கத்தில் இருந்தவர்களே ஏராளமான பத்திரிகைகளையும் கொண்டுவந்தனர். இந்தப் பத்திரிகைகளின் மூலம் தங்களுக்கு விசுவாசமாக இருக்கும் தொண்டர் படைகளையும், கூடவே அறிவுஜீவிகளின் அணியையும் கட்டியெழுப்பி, கட்சிக்கு அமைப்புரீதியான ஒரு அரணை உருவாக்கியது இயக்கம்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட வெவ்வேறு காலச் சூழல் மாற்றங்களால் அந்தப் படிப்பகங்களெல்லாம் இன்று கடந்த கால நினைவுகளாக ஆகிவிட்டன; திராவிட இயக்கத்தாரால் கொண்டுவரப்பட்ட ஏராளமான பத்திரிகைகள் நின்றுவிட்டன என்றாலும், சில பத்திரிகைகள் காலத்தில் நங்கூரம் பதித்து நீடித்து நின்றன. அவற்றில் தனித்துயர்ந்து நின்றது ‘முரசொலி’. தனது தொடக்கக் காலத்தில் விசுவாசமிக்க தொண்டர்களைத் தன்னகத்தே ஈர்த்துவைத்துக்கொண்டு, கட்சியின் செயல்திட்டங்கள் குறித்த உறுதிப்பாட்டைப் பல்லாயிரக்கணக்கானோரிடம் ஏற்படுத்தியதன் மூலம் காலம் செல்லச் செல்ல, திமுகவினர் மத்தியில் ‘முரசொலி’ வாசிப்பு ஒரு பழக்கமாக, அதாவது அன்றாடச் சடங்கு போல ஆகிவிட்டது. இன்றும் பல திமுக குடும்பங்களில் ‘முரசொலி’ ஒரு அடையாளமாகவே நீடிக்கிறது.

 

‘அன்புள்ள உடன்பிறப்பே..’

ஒவ்வொரு பத்திரிகையும் தனக்கே உரித்தான சில பிரத்யேக அடையாளங்களைப் பெற்றிருப்பதுபோல, ‘முரசொலி’யில் வாசகர்கள் முதல் கவனத்தை ஈர்ப்பது சமீப காலம் வரை கருணாநிதி தன்னுடைய உடன்பிறப்புகளுக்கு எழுதிவந்த கடிதங்கள்தான். விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் உள்ள புனித பவுலின் கடிதங்கள்போல, முரசொலியின் நீண்ட கடிதங்கள் ஒரே நேரத்தில் போதனை செய்யக்கூடியவையாகவும் விவாதிப்பவையாகவும் இருப்பதால், வாசகரைப் பொறுத்தவரை அந்தக் கடிதங்கள் பிரத்யேகமாக அவர்களுக்கென்றே எழுதப்பட்டவை என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

தமிழர்களின் நலன்கள், தமிழ் மொழி - பண்பாடு, சமூகநீதி, இந்தித் திணிப்பு, மாநில சுயாட்சி, விவசாயிகளின், தொழிலாளர்களின் உரிமைகள், பெண்கள் முன்னேற்றம், நிலச் சீர்திருத்தங்கள், சமூக, பொருளாதாரச் சீர்த்திருத்தங்கள், உழைக்கும் வர்க்கம், தேசிய, சர்வதேச நிகழ்வுகள், கட்சியின் நிகழ்ச்சிகள் என்று ஏராளமான விஷயங்களைப் பற்றி அந்தக் கடிதங்கள் விவாதித்தன. திமுக ஆட்சியில் இருந்தபோது, கட்சியின் சாதனைகளை ‘முரசொலி’ பறைசாற்றியது; மதுவிலக்கை நீக்கியது உள்ளிட்ட விஷயங்களில் கட்சியின் நிலைப்பாட்டை அது நியாயப்படுத்தியது; ஆட்சியைக் குறித்தும் திமுகவைக் குறித்தும் எதிர்க் கட்சியினர் செய்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தது. கட்சியை விட்டுப் பிரிந்து சென்ற முன்னாள் பொதுச்செயலாளர் இரா. நெடுஞ்செழியனைக் கட்சிக்குத் திரும்பி அழைத்துகூட 1978-ம் ஆண்டு ‘திறந்த மடல்’களை கருணாநிதி எழுதியதுண்டு.

அரசியல் கனம்மிக்க இதுபோன்ற நீண்ட கடிதங்கள் ‘முரசொலி’யில் 1954 வாக்கிலேயே தொடங்கிவிட்டன. கடிதங்களின் சக்தியைக் கண்டுகொண்டது கருணாநிதி யின் வழிகாட்டியான அண்ணாதான். 1955-ல் அவர் தனது கடிதப் பகுதியைத் தொடங்கினார்; ‘அன்புள்ள தம்பி’ என்று அவரது கடிதங்கள் ஆரம்பிக்கும். அந்தக் கடிதங்களெல்லாம் தொண்டர்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தின கூடவே, தொண்டர்களைப் போய்ச்சேர்வதற்கான கட்சியின் மிகப் பிரபலமான வழிமுறை அந்தக் கடிதங்கள்தான். அண்ணாவின் அகால மரணம் அவரது கடிதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கருணாநிதி ஆரம்பத்தில் ‘நண்பா’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார்; 1971-லிருந்து ‘உடன்பிறப்பு’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். அதுநாள்வரை அந்தச் சொல் சபை வழக்கில்கூடப் பெரிய புழக்கத்தில் இல்லை. அதுதான் கருணாநிதியின் புத்திக்கூர்மை.

மூப்பின் காரணமாக கருணாநிதி ஒதுங்கிக்கொண்டபோது, கட்சிக்கு ‘முரசொலி’யும் கடித மரபும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தவராகவே கருணாநிதியின் மகனும் கட்சியின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் அந்தப் பணியைத் தொடர்பவரானார். அண்ணா, கருணாநிதியின் மரபைப் பின்பற்றிக் கடிதங்கள் எழுதத் தொடங்கியிருக்கும் ஸ்டாலின், தனது கடிதங்களில் தன்னை ‘உங்களில் ஒருவன்’ என்று குறிப்பிட்டுக்கொள்வதன் மூலம், தொண்டர்களுடன் மேலும் நெருக்கமாக்கிக்கொள்ள முனைகிறார்.

 

முரசொலியும் எம்ஜிஆரும்

திமுக தொண்டர்களுடன் உயிரோட்டமாகத் தன் உறவை வைத்துக்கொள்ள கருணாநிதி ‘முரசொலி’யை எப்படிப் பயன்படுத்தினார் என்பது ஒருபுறமிருக்க, மறுபுறம் கீழே தொண்டர்களும் அடுத்தடுத்த கட்டங்களுக்குத் தன்னை உயர்த்திக்கொள்ள விரும்பிய கீழ்நிலைத் தலைவர்களும் ‘முரசொலி’யை எப்படி ஒரு பாலமாகப் பயன்படுத்திக்கொண்டனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. தங்கள் பெயர் வராதா என்ற ஏக்கம் எப்போதுமே கட்சிக்குள் இருந்தது. 1954-லிருந்து கட்சிக் குள் எம்ஜிஆரைச் சக்திவாய்ந்த தலைவராக வளர்த்ததில்கூட ‘முரசொலி’க்கும் ஒரு பங்கு இருந்தது என்று சொல்லப்படுவதிலிருந்து ‘முரசொலி’யின் செல்வாக்கு எவ்வளவு பெரியது என்பது புரியும். அந்தக் காலகட்டத்தில் எம்ஜிஆரின் தர்ம காரியங்கள், சமூக, அரசியல் செயல்பாடுகள் ஒவ்வொன்றைப் பற்றியும் ‘முரசொலி’யில் செய்திகள் வெளியாகின.

நீண்ட காலமாகவே திமுகவினரின் நெருக்கமான பத்திரிகையாக இருந்தாலும், 1969 முதலாகவே திமுகவின் அதிகாரபூர்வ ஏடாக ‘முரசொலி’ செயல்படத் தொடங்கியது (அண்ணாவின் மறைவுக்குப் பிறகு அப்போதுதான் கட்சியின் தலைவராகி இருந்தார் கருணாநிதி). கட்சிக்குள் நடைபெறும் நியமனங்கள், கட்சி நிர்வாகிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகள் போன்றவற்றை வெளியிடுவதன் மூலம் அரசியல்வாதிகளை உருவாக்குவதிலும் வளர்த்தெடுப்பதிலும் காணாமலடிப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதானது. கட்சியினர் இடைநீக்கமோ நீக்கமோ செய்யப்படும்போது ‘முரசொலி’யில் கட்டம்கட்டி வெளியாகும் செய்தி மரபே பின்னாளில் ‘கட்டம்கட்டு’ என்ற அரசியல் சொல்லாடலுக்கான காரணமாகயிருந்தது என்று சொல்பவர்கள் உண்டு.

 

நெருக்கடிநிலையின் நெருப்பாற்றில்…

பொதுச் சமூகத்தில் ‘முரசொலி’ பெரிய கவனத்தை ஈர்த்ததும் அதன் நெடிய வரலாற்றில் மிக காத்திரமான பங்களிப்புமானது நெருக்கடிநிலைக் காலகட்டத்தின்போது, அடக்குமுறைக்கு எதிராக ‘முரசொலி’ காட்டிய தீவிர எதிர்ப்புநிலை! அதன் 75 ஆண்டு கால வரலாற்றின் உச்சம் அது. இந்த எதிர்ப்பையும் சாதுர்யமாகவே அது மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஏனென்றால், நெருக்கடிநிலையின் மூர்க்கத்தனமான தணிக்கை எல்லாவற்றிலும் கத்தரியை வைத்தது. பத்திரிகையை மூடுவதற்கான சாத்தியங்களைத் தேடிக்கொண்டிருந்தது. அரசியல்ரீதியிலான எழுத்துகளை நோக்கி நெருக்கடிகால இந்திரா அரசு கோபப் பார்வை வீசியதால், ‘வெண்டைக்காய் வழவழப்பாய் இருக்கும்’, ‘விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்’ என்றெல்லாம் தலைப்பிட்டு கடிதங்களை வெளியிட்டார் கருணாநிதி. அப்போது மிசா சட்டத்தின் கீழ் திமுகவினர் கைதுசெய்யப்பட்டனர். இந்தச் செய்தியை நேரடியாக வெளியிட்டால் தணிக்கையில் சிக்கிவிடும் என்பதற்காக பிப்ரவரி 3, 1976 அன்று, அதாவது அண்ணா வின் நினைவு நாள் அன்று, வெளியிட்ட செய்தியின் தலைப்பு இதுதான்: ‘அண்ணா நினைவிடம் சென்று மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல்’.

 

இடர் கால ஆபத்பாந்தவன்

ஆட்சியிலிருந்தாலும் சரி, எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் சரி; ஒரு பேரிடரை நாடு எதிர்கொள்ளும்போது நிவாரணத்தில் தன்னை உடனடியாக ஈடுபடுத்திக்கொள்வது ‘முரசொலி’யின் மரபு. வாசகர்களிடம் நிதி திரட்டி அரசுக்கு அளித்துவிடும். ‘முரசொலி’ மீதான விமர்சகர்களின் விமர்சனங்களில் முதன்மையானதும் தொடர்ச்சியானதும் எதுவென்றால், எதிராளிகள் மீதான கொச்சையான விமர்சனங்களை வெளியிடுவதும் தரக்குறைவான மொழியைத் தேர்ந்தெடுப்பதும்.

தனது 75-வது ஆண்டிலும், தொழில்நுட்பத்தின், தகவல் தொடர்பின் யுகத்திலும் காலத்திற்கேற்ப ‘முரசொலி’ மாற்றமடைந்திருப்பதுபோல் தோன்றுகிறது. சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பராமரிப்பு சார்ந்தும், மரம் நடுதல், மாசுபாடு போன்றவை சார்ந்தும் கட்சியினரின் செயல்பாடுகளைப் பற்றி ‘முரசொலி’ தனது பக்கங்களில் கவனப்படுத்துகிறது. மேலும், தமிழ்க் கலாச்சார தேசியம் தொடர் பான தனது அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ளாமல் இந்த நவீன காலத்துச் சவால்களை எதிர்கொள்வது குறித்தும் ‘முரசொலி’ தனது பக்கங்களில் கவனப்படுத்துகிறது. தமிழ்ப் பெருமிதத்தின் மீதும் தமிழின மேன்மையின் மீதும் தீவிரமான பிடிப்பு கொண்டிருப்பதுபோல் சிறப்பான அரசு நிர்வாகம், சேவைகள் மக்களைச் சென்றடைதல், வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், பசுமையான எதிர்காலம், வளம் போன்றவற்றின் மீதும் பிடிப்பு கொண்டிருப்பதால், வருங்காலத்திலும் ‘முரசொலி’ மிக முக்கியமான கட்சி இதழாக நீடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- ஆர்.கண்ணன், இராக்குக்கு உதவுவதற்கான ஐ.நா.வின் குழுவின் தலைவர், அண்ணா,

எம்.ஜி.ஆர், ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியவர்.

தமிழில்: ஆசை

http://tamil.thehindu.com/opinion/columns/article19462450.ece

  • தொடங்கியவர்

முத்துவுக்கு முன் பிறந்த ’முத்து’... முரசொலி எனும் காலக்கண்ணாடி!

 
 

karunanithi

ன்றைய தஞ்சை மாவட்டம், திருவாரூரில் பிறந்த தட்சணாமூர்த்தி தன் பள்ளிக்காலம் முதலே திராவிட இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். அரசியல் ஆர்வத்தோடு எழுத்துப்பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர் 1940-ம் ஆண்டு தன் 16 வயதில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்ற நிதிக்காக முதன்முதலாக 'பழனியப்பன்'  நாடகத்தை எழுதி அரங்கேற்றினார். அரங்கேற்றம் நடந்த அன்று பெரு மழையின் காரணமாக கூட்டம் வரவில்லை. 

நாடகத்துக்காக 200 ருபாய் செலவிட்டிருந்த நிலையில் வசூலானது வெறும் 80 ரூபாய் மட்டுமே. மீதி 120 ரூபாய்க்காக நாடகம் நடந்த அன்றே கடன்காரர்கள் நாடக கொட்டகையை முற்றுகையிட்டு பிரச்னை கிளப்ப , சிக்கலிலிருந்து அவரை திராவிட நடிகர் கழகத்தினர்  காப்பாற்றினார்கள். தங்கள் மன்றத்திற்காக 'பழனியப்பன்' நாடகத்தின் உரிமையை நுாறு ரூபாய் விலை கொடுத்து பெற்று 'சாந்தா' என்ற பெயரில் தொடர்ந்து அவர்கள் நடத்த ஆரம்பித்தனர். இதனால் தொடர்ந்து தட்சணாமூர்த்திக்கு நாடகத்தின் மூலம் வருவாய் கிடைக்க ஆரம்பித்தது. இந்த நாடக வருவாய் அவருக்கு எழுத்துப்பணியின் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. தொடர்ந்து நாடகங்களை எழுத தலைப்பட்டார். 'பழனியப்பன்' என்ற அந்த நாடகம் 'நச்சுக்கோப்பை' என்ற பெயரில் பல வருடங்கள் நடத்தப்பட்டது. தட்சணா மூர்த்திக்கும் நாடக உலகில் நல்ல பெயரையும் புகழையும் தந்தது. இப்படி சிக்கல்களை உளியாக்கிக்கொண்டு தானே சிலையாக உருவாகியவர் அந்த இளைஞர். அவர் வேறுயாருமல்ல; கலைஞர் மு.கருணாநிதி. கருணாநிதியின் அரசியல் வரலாற்றில் அவரது எழுத்துக்கேடயமாக இருந்து அவரை பாதுகாத்தது முரசொலி இதழ்.

வயதில் நுாற்றாண்டைக்கடக்கவிருக்கும் அவரோடு அவரின் முதல் குழந்தையான முரசொலியும் முக்கால் நுாற்றாண்டை கொண்டாடுகிறது. எந்த எழுத்தாளனுக்கும் கிடைக்காதபேறு!   

முரசொலிமுரசொலி கட்சிப்பத்திரிகை என்றாலும் அது ஒரு வரலாற்றை எதிரொலிக்கும் காலப் பெட்டகம். கட்சிப்பத்திரிகையாக அதன் பார்வையில் நிறை, குறைகள் இருக்கலாம். ஆனால் அது தமிழகத்தின் 75 ஆண்டுகால வரலாறு என்பதை எவரும் மறுக்கமுடியாது. முரசொலியைப்பார்க்காமல் கலைஞரின் பொழுது புலராது. முத்துவுக்கு முன் கருணாநிதி பெற்றெடுத்த முத்து முரசொலி. 

இந்தி எதிர்ப்பை எதிர்த்திருக்கிறது. நேருவை எச்சரித்திருக்கிறது. அண்ணாவை அரவணைத்திருக்கிறது. அரிதார அரசியலை ஒரு காலத்தில் ஆதரித்திருக்கிறது. மற்றொரு காலத்தில் அதை அடித்துத் துவைத்திருக்கிறது. முரசொலி கருணாநிதியின் மனசாட்சி. அவரது அரசியல் நடவடிக்கைகளின் அந்தரங்கக் காதலி. விருப்பங்களின் காதலன். வீறுகொண்ட அவரது அரசியல் கோபத்திற்கு வடிகால். கருணாநிதியின் வாழ்க்கையை எடுத்துச்சொல்லும் கண்ணாடி. இத்தனை நீளம் தேவையில்லை; கருணாநிதி என்றால் முரசொலி. முரசொலி என்றால் கருணாநிதி, அவ்வளவுதான். 

முரசொலி பற்றிய மேலும் சுவாரஸ்யங்கள்...

1942-ம் ஆண்டு“முரசொலி வெளியீட்டுக் கழகம்” என்ற பெயரில் பதிப்பகம் துவங்கிய கருணாநிதி, அதே ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி 'முரசொலி' என்ற மாத இதழை துவக்கினார். மாத இதழ் என்றாலும் அது ஒரு துண்டறிக்கை போன்றே வெளியிடப்பட்டது. 'சேரன்' என்ற பெயரில் புரட்சியான பல கட்டுரைகள் எழுதினார் கருணாநிதி. உலகப் போர் நடந்த காலகட்டம் என்பதால் நல்ல தாளில் கூட அச்சடிக்க முடியாத நிலையில் பெரும்பாலும் கிராப்ட் தாள்களில் அச்சிடப்பட்டன. 

முரசொலியில் வெளியான சேரன் கட்டுரைகள் அண்ணாவுக்கு கருணாநிதியின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படக் காரணமானது. அண்ணா நடத்திவந்த 'திராவிட நாடு' இதழில் 'இளமைப் பலி' என்ற கட்டுரையை எழுதி அனுப்பியிருந்தார் கருணாநிதி. அது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூரில் நபிகள் நாயகம் விழாவுக்கு வந்த அண்ணா 'இளமைப்பலி' எழுதிய எழுத்தாளரை காண விரும்பி, அவரை அழைத்து வரச் செய்தார். நடு வகிடெடுத்து வாரிய தலை, அரும்புமீசை, கண்களில் ஓர் கனல், பேச்சில் தெளிவு இந்த தோற்றத்துடன் தன் முன் வந்து நின்ற கருணாநிதியை உச்சிமோந்து பாராட்டினார் அண்ணா. 

28.5.1944 அன்று திருவாரூர் சுயமரியாதைச் சங்க ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வந்த பெரியார், அதில் நடத்தப்பட்ட  ‘பழனியப்பன்’ நாடகத்தை பார்வையிட்ட பின் கருணாநிதியையும் முரசொலி ஏட்டையும் பாராட்டியதோடு 'மிகச்சிறந்த பணி' என்று கருணாநிதியைத் தட்டிக்கொடுத்தார். பெரியாருடன் நட்பு ஏற்படக் காரணம் முரசொலி. இதன் எதிரொலியாக குடியரசு பத்திரிகையில் அவரை உதவி ஆசிரியராக பணிக்குச் சேர்த்துக்கொண்டார். 

கருணாநிதி 1946-ம் ஆண்டின் மத்தியில் குடியரசு பத்திரிகையில் பணியாற்றியபோதுதான் பெரியாரின் நண்பரான  இயக்குநர் ஏ.எஸ்.ஏ சாமியுடன் பழக்கம் உருவானது. இதுதான் 'ராஜகுமாரி' படத்தில் உதவி வசனகர்த்தாவாக வாய்ப்பு பெற்றுத்தந்தது. 
முரசொலியின் தலைப்பின் மீது  ஆரம்ப நாள்களில் ‘V’ என்று போடப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். உலகப் போர் நடந்து கொண்டிருந்ததால் வெற்றிக்கு அறிகுறியாக Victory என்ற சொல்லின் முதலெழுத்தைப் போட்டு முரசொலி துண்டறிக்கைகள் அச்சிடப்பட்டு வந்தன. 

திராவிட இயக்கங்களால் காலம் முழுவதும் விரட்டப்பட்ட கட்சி காங்கிரஸ். அந்தப் பேரியக்கத்தை வீழ்த்தித்தான் தி.மு.க அரியணை ஏறியது. ஆச்சர்யம் என்னவென்றால்  ஆரம்ப நாள்களில் முரசொலி துண்டறிக்கையை அச்சிட்டது, திருவாரூரைச் சேர்ந்த கிருஷ்ணா பிரஸ் உரிமையாளர் கூ.ழு. நாராயணசாமி என்பவர். இவர் ஒரு தீவிர காங்கிரஸ்காரர். 

karunanithi

கருணாநிதியின் நண்பரான தென்னன் செயலாளராக இருந்து முரசொலி வெளியீட்டுக்கழகம் சார்பில் நிதித் திரட்டப்பட்டு முரசொலி வெளியானது. நிதிக்கேற்ப நூறு முதல் ஆயிரம் பிரதிகள் வரை அச்சிடப்பட்டன.

சிதம்பரத்து தீட்சதர்களைப் பற்றி கருணாநிதி எழுதிய ஒரு கட்டுரையால் சிதம்பரத்தில் அவர் நுழையத் தடை விதிக்கப்பட்டது. அப்படி ஓர் பரபரப்பை ஏற்படுத்தியது அக்கட்டுரை. 

நாடக ஆர்வத்தினால் கருணாநிதி கொஞ்சநாள் முரசொலியில் கவனம் செலுத்தாததால் சில காலம் முரசொலி சரிவர வெளியாகவில்லை. 14-1-1948 முதல் மீண்டும் வெளிவந்தது. 

‘பெரியார் ஆண்டு’ என காலத்தை கணக்கிடும் முறையை அறிமுகப்படுத்தியது முரசொலிதான். மாத இதழாக இருந்து வார இதழாக ஆனபோது 8 பக்கங்களுக்கு ஓரணா விலை நிர்ணயிக்கப்பட்டது. சிறப்பு இதழாக சில சமயங்களில் 12 பக்கங்கள் ஒன்றரை அணா விலையில் வெளியிடப்பட்டு வந்தது.

முரசொலியில் அன்றைய திராவிட இயக்க முன்னோடிகள் பலரும் எழுதினர். இயக்கம் சாராத விஷயங்களையும் கருணாநிதி அவ்வப்போது துணிச்சலாக எழுதிவிடுவார். இதனால் அண்ணாவுக்கும் அவருக்கும் சிறுசிறு மனக்கசப்புகள் வந்ததுண்டு. 1948 துாத்துக்குடி மாநாட்டின்போது  அப்போது கட்சியில் எழுந்த ஒரு பிரச்னைக்காக நடிகர் எம்.ஆர். ராதா அறிஞர் அண்ணா அவர்களை கடுமையான தொனியில் தாக்கிப் பேசினார். அதைக்கேட்டு ஆத்திரமடைந்த கருணாநிதி, எம்.ஆர்.ராதாவை தாக்கி எழுதினார். அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. 

sivaji

முரசொலியில் கலைஞரின் எழுத்தாணி பதில்கள், பொன்முடிக்கு கடிதம், சுழல் விளக்கு போன்ற பகுதிகள் தொண்டர்கள் மத்தியில் பெரும் உணர்ச்சிகளைத் துாண்டும். சேரன் என உணர்ச்சிமிகு கட்டுரைகள் எழுதுவார். கரிகாலன் என்ற பெயரில் கேள்வி- பதில் எழுதுவார். எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஊழல் விவகாரங்கள் மற்றும் ஆட்சியாளர்களை ஆட்டம் கொள்ளச்செய்யும் விஷயங்களை 'சிலந்தி' என்ற பெயரில் எழுதுவார். சிலந்திக்கட்டுரைகள் முரசொலியில் இடம்பெற்றால் அது அன்றைய அரசியலில் பரபரப்பை உருவாக்கிவிடும். 

மிசா காலத்தில் பத்திரிகைகளுக்கு தணிக்கை முறை அமலில் இருந்தது. குறிப்பாக முரசொலியை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுப்பார்த்தார்கள் அதிகாரிகள். அப்போது மிசாவில் கட்சிக்காரர்கள் யார் யாரெல்லாம் கைது ஆனார்கள் என்ற தகவல்கள் சரிவரத் தெரியாமல் குழம்பிக்கிடந்தனர் தொண்டர்கள். கருணாநிதி ஓர் உபாயம் செய்தார். முரசொலியில்'அண்ணாவின் நினைவு அஞ்சலிக்கு வர இயலாதவர்கள்" என சூசகமாக மிசாவில் கைதானவர்களின் பட்டியலை அதில் வெளியிட்டார். இதழ் வந்தபின் 'வடைபோச்சே' என அதிகாரிகள் அதிர்ச்சியாகி நின்றனர். 

முரசொலியை தொண்டர்கள் தி.மு.க-வின் கெஸட் என்பார்கள். அந்த அளவுக்கு தி.மு.க பற்றிய தகவல்களுக்கு முரசொலியை அதிகாரபூர்வ ஆவணமாக கருதுவார்கள். 

முரசொலி

பெரியார் தொண்டர்களை 'நண்பர்களே' என்றார். அண்ணா, 'தம்பி' என்றார். இவர்களுக்கு ஒருபடிமேல் சென்று 'உடன்பிறப்பே' என்றார் கருணாநிதி. முரசொலியில் 'உடன்பிறப்பே' என அவர் தீட்டும் கடிதங்கள் தி.மு.க தொண்டர்களுக்கு அத்தனை நெகிழ்ச்சியைத் தரும். அந்தக் கடிதங்களை தொண்டர்கள் வாய்விட்டு கருணாநிதியின் பாணியிலேயே ஏற்ற இறக்கத்துடன் சத்தம்போட்டுப் படிப்பதில் அலாதி இன்பம் காண்பார்கள். 

1972-ல் எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து வெளியேறிய பின் கிட்டதட்ட அவரது மரணம் வரை அவருக்கு எதிராக ஒரு எழுத்துப்போரையே நடத்தினார் கருணாநிதி. ஆச்சர்யமாக இந்த காலகட்டத்தில் 2 முறை எம்.ஜி.ஆர் குறித்து கருணாநிதி உருகி எழுதியதுண்டு. அது 1984-ல் எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சமயம். 'நலம் பெற்றுவாருங்கள் முதல்வரே' என எம்.ஜி.ஆருடனான தனது 40 ஆண்டுகால நட்பை சிலாகித்து எழுதினார். அடுத்து எம்.ஜி.ஆர் மரணம் அடைந்தபோது உருக்கமாக இரங்கல் எழுதினார். ஆனால், இவையிரண்டுமே வாக்குகளை குறிவைத்து கருணாநிதி நடத்திய அரசியல் என விமர்சனம் எழுந்தது. 

annadurai

ஒருமுறை எம்.ஜி.ஆர் கொடுத்த ஊழல் புகாரின் அடிப்படையில் கருணாநிதி மீது விசாரணை நடத்த சர்க்காரியா கமிஷன் நியமிக்கப்பட்டது. இதன் அலுவலகம் சென்னையில் 'காஞ்சி இல்லம்' என்ற இல்லத்தில் இயங்கியது. அப்போது கருணாநிதியை வழக்கில் சிக்கவைக்க நீதிபதி சர்க்காரியாவிடம் ஒருசிலர் பேரம் பேசுவதாக கருணாநிதிக்கு தகவல் வந்தது. மறுநாள் வந்த முரசொலியில் 'காஞ்சி'யில் 'நீதிதேவன் மயக்கம்' என அரைப்பக்கம் விளம்பரம் வெளியானது. நீதி தேவன் மயக்கம் என்பது அண்ணாவின் புகழ்பெற்ற நாடகம். ஆச்சர்யம் என்னவென்றால் அன்று காஞ்சிபுரத்தில் அப்படி ஒரு நாடகம் கிடையாது. முன்னாள் அமைச்சரும் கருணாநிதியின் நண்பருமான காஞ்சி சி.வி.எம். அண்ணாமலை குழப்பத்துடன் கருணாநிதியை தொடர்புகொண்டு.“ என்னங்க அப்படி ஒண்ணு நடக்கறதா தகவல் இல்லையே விளம்பரம் வந்துருக்கே“ என்றாராம். அப்போது விஷயத்தைச் சொல்லி சிரித்த கருணாநிதி, “விளம்பரம் போட்டாச்சு...வேற வழியில்லை. இன்னிக்கு சொன்ன டயத்துல நாடகம் நடத்துங்க” என்று சிரித்தபடி போனை வைத்தாராம்.. 

கருணாநிதி நினைவுடன் இருந்தவரையில் அவரது  அனுமதியின்றி முரசொலியில் ஒரு வார்த்தையும் அச்சில் ஏறாது. அத்தனை கவனமாக ஒவ்வொரு விஷயங்களையும் அவர் கூர்ந்துகவனிப்பார். வெளி ஊர்களில் இருந்தாலும் அவரது கவனம் முரசொலி மீது இருக்கும். முக்கிய விஷயங்களைப் படித்துக்காட்டச்சொல்லி திருத்தங்கள் சொல்வார். முக்கிய கட்டுரைகளை ஒன்றுக்கு இருமுறை படித்து திருத்தம்போடுவார். 

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நேரம். அந்த  அமைப்பின்  தலைவர்களில் ஒருவரான தமிழ்ச்செல்வன் மரணமடைந்தார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அதை தாங்க முடியாமல் முரசொலியில் இரங்கல் கவிதை எழுதினார். முதல்வராக இருந்துகொண்டு தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் தலைவருக்கு இரங்கல் எழுதுவது சட்டவிரோதமாகிவிடும். அது ஆட்சியை பலிவாங்கிவிடும் என பலர் அச்சுறுத்தியபோதிலும் தன் மனதுக்குப் பட்டதை உடனே செய்தார் கருணாநிதி. அப்படி எந்த விபரீதமும் நிகழவில்லை. அத்தனை துணிச்சல்காரர் கருணாநிதி.
 
மிசா காலத்தில் தணிக்கை முறையைக்கொண்டுவந்த மத்திய அரசைக் கண்டிக்கும்விதமாக வெண்டைக்காய் மூளை வளர்ச்சிக்கு நல்லது. மோர் உடற்சூட்டைக் குறைக்கும் என பரபரப்பான அரசியல் பத்திரிகையில் பகடி செய்திருந்தார். 

karunanithi

முரசொலியில் இன்றும் கட்சிக்காக உழைத்த தொண்டர்களின் உழைப்பை போற்றும்வகையில் அவர்களின் நினைவுநாளில் கருணாநிதியின் இரங்கல் இடம்பெறும். தி.மு.க-வின் தென்மாவட்ட பிரமுகர் ஒருவர், கருணாநிதிக்கு முன் தான் இறந்துவிடவேண்டும். அப்போதுதான் அவர் கையால் எனக்கு இரங்கற்பா எழுதும் வாய்ப்பு கிடைக்கும் என ஒரு மேடையில் உருகினார். கருணாநிதிக்கும் முரசொலியும் தொண்டர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் அது!

“கல்கி”யில் சக்கரவர்த்தி திருமகன் எனும் பெயரில் இராஜாஜி  ராமாயணத் தொடரை எழுதி வந்தார். இத்தொடருக்கு எதிர்வினையாக கருணாநிதி ‘மூக்காஜி’  என்ற பெயரில் முரசொலியில் ‘சக்கரவர்த்தியின் திருமகன்’ எனும் தலைப்பில் கடும் விமர்சனம் எழுதினார். நகைச்சுவை இழையோடிய இந்தத் தொடரை அந்நாளில் ரசிக்காதவர்கள் இருக்கமுடியாது.

கருணாநிதி என்கிற படைப்பாளி தன் அத்தனை திறமைகளையும் வெளிப்படுத்திய களம் முரசொலி. கட்டுரைகள், கேள்வி-பதில், சிறுகதைகள், கடித இலக்கியம், கவிதைகள், சமூகக் கதைகள், வரலாற்றுக் கதைகள், ஓரங்க நாடகங்கள், பெரும் நாடகங்கள், திரைப்படங்கள் என அவர் சாதித்த அத்தனை விஷயங்களுக்கும் முரசொலியே முன்னோடி.

karunanithi

எம்.ஜி.ஆர் கருணாநிதியோடு பெரும் மனவருத்தத்தில் இருந்த ஒரு நேரம், தம் வீட்டிலும் அலுவலகத்திலும் முரசொலியை வாங்கக்கூடாது என அதிரடி உத்தரவு போட்டிருந்தார். ஒருமுறை வெளி ஊர் சென்றுவிட்டு தி.நகர் அலுவலகத்துக்கு திரும்பிவந்தார். அப்போது அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் முகரசொலியைப் படித்துக்கொண்டிருந்தார். கோபமான எம்.ஜி.ஆர் அந்த ஊழியரை அந்த நிமிடமே வேலையை விட்டு அனுப்ப உத்தரவிட்டார். ஆனால் 3 மாதங்களுக்குப்பின் மீண்டும் அவரை அழைத்துக்கொண்டது வேறு கதை. 

ஒரு கட்சிப்பத்திரிகை கட்சியின் தொண்டர்களோடு இத்தனை உணர்வுபூர்வமான பந்தத்தில் இருந்திருக்குமா என்பது சந்தேகமே. முரசொலியில் வெளியாகும் 'உடன்பிறப்பே' என்ற கலைஞரின் கடிதம் எத்தனை மோசமான நோயிலிருந்தும் தொண்டரை எழுந்து போராட்டக்களத்துக்கு வரவழைத்துவிடும் சக்தி வாய்ந்தது.

தன் கொள்கைகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சென்று சேர்த்துவிடவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் கருணாநிதி. 60 களில் அண்ணா தன் திராவிட நாடு கொள்கையை கைவிட்டபோது, அதற்கான நியாயமான காரணங்களை அன்றைய பொதுக்குழு ஒன்றில் எழுதிப்பேசினார். கிட்டதட்ட 200 பக்கம் கொண்ட அந்தப் பேச்சினை கிட்டதட்ட 40 ஆண்டுகள் கழித்து 2003-ம் ஆண்டு முரசொலியில் வெளியிட்டார்.  அண்ணாவின் கைப்பட எழுதிய பிரதியின் போட்டோ நகலோடு அது வெளியானது. பின்னர் அதை நுாலாகவும் வெளியிட வைத்தார். அன்றைய தலைமுறை திராவிட நாடு கொள்கையில் அண்ணாவின் நிலைப்பாட்டை நேர்மையாக புரிந்துகொள்ளவேண்டும் என்ற ஒரு தலைவரின் பொறுப்பான ஒரு செயல் அது.

வயதும் உடல்நிலையும் கருணாநிதியை தொண்டர்களிடம் இருந்து தனிமைப்படுத்தியிருக்க 12 பக்க முரசொலிதான் இன்றைக்கும் அவர்களின் உள்ளத்தில் கருணாநிதியின் நினைவை எழுதிக்கொண்டிருக்கிறது!

http://www.vikatan.com/news/tamilnadu/98621-the-journey-of-dmk-mouth-piece-murasoli-daily.html

  • தொடங்கியவர்

"திருமண பத்திரிகை அடிக்கும் வயதில் முரசொலி பத்திரிகை அடித்தவர் கலைஞர்"

 

முரசொலி பத்திரிகையின் 75 வது ஆண்டு பவளவிழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. 

0a4ee365-39a7-41ae-810e-aaa0357ce085_103

முரசொலி' பத்திரிகையின் காட்சி அரங்கத்தை, இன்று காலை, இந்து என்.ராம் தொடங்கிவைத்தார். இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள இந்த விழாவில் பத்திரிகையாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தி.மு.க தலைவர் கருணாநிதியால் முரசொலி நாளிதழ் தொடங்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. அதை முன்னிட்டு, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பவள விழாவுக்கு ஏற்பாடுசெய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பார்வையாளராகக் கலந்துகொண்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தனராகப் பங்கேற்றுள்ளார். இவர்கள் தவிர, கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரபு மற்றும் பல அரசியல் பிரமுகர்களும்  கலந்துகொண்டுள்ளனர். விழா தொடங்கியதும், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களால், முரசொலி நாளிதழின் முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

 

முரசொலி விழாவில் பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விழாவில், விகடன் குழும தலைவர் ஸ்ரீநிவாசன், இந்து ஆசிரியர் ராம், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், தினத்தந்தி தலைமைப் பொது மேலாளர் சந்திரசேகரன், நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
 இந்த விழாவில் பங்கேற்று பேசிய கவிஞர் வைரமுத்து, "முரசொலி பவளவிழாவுக்கு யாரை அழைத்தால் சரியாக இருக்கும் என்பதை சரியாக உணர்ந்து இந்த விழாவில் பத்திரிகையாளர்களை அழைத்திருக்கிறார். அதற்கு எனது பாராட்டுகள். திருமண பத்திரிகை அடிக்கும் வயதில் முரசொலி பத்திரிகை அடித்து அதை சுமந்தவர் கலைஞர்" என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/98698-rajinikanth-in-murasoli-75th-year-celebration.html

 

 

 

"திராவிடத்தை அழிக்க முயன்றால்..!" - எச்சரிக்கும் கமல்

முரசொலி பத்திரிகையின் 75 வது ஆண்டு பவளவிழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பார்வையாளராகக் கலந்துகொண்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தனராகப் பங்கேற்றுள்ளார். இவர்கள் தவிர, கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரபு மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளனர். 

kamal rajini in murasoli

 

பவள விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன், "நான் ரசித்த முதல் தமிழ் சிவாஜியுடையது. அதன் பின்னர், அந்தத் தமிழுக்குச் சொந்தக்காரர் கலைஞர் என்று தெரிந்தது முதல் நான் அவரின் ரசிகன். இந்த விழாவில் என்னை அழைத்தபோது, ரஜினி இந்த விழாவுக்கு வருகிறார பேசுகிறாரா? என்று கேட்டேன். அவர் பேசவில்லை என்றதும், நானும் பார்வையாளராக கலந்துகொள்ளலாம் என்று நினைத்தேன். இப்போது தற்காப்பு முக்கியமில்லை, தன்மானமே முக்கியம். இந்த விழாவில் கலந்து கொள்கிறேன் என்றதுமே, நீங்க கழகத்தில் சேரப் போகிறீர்களா? என்று கேட்கிறார்கள். சேருவது என்றால் 1989-ல் கலைஞர் அழைத்தபோதே சேர்ந்திருப்பேன். அரசியல் பேசுவதற்கான மேடை இது இல்லை. 
ஒருவரை ஒருவர் கிண்டல் செய்பவர்கள் இங்கு ஒரே மேடையில் இருக்கிறார்கள். இந்தக் கலாசாரத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்றுதான் நான் இங்கு வந்தேன். திராவிடம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமோ தென்னிந்தியாவில் மட்டுமோ இருப்பது இல்லை. சிந்து நாகரிகம் முதலே திராவிடம் உள்ளது. 'ஜனகனமன'யில் திராவிடம் உள்ள வரை திராவிடம் இருக்கும் திராவிடம் என்பது வாக்குகளின் எண்ணிக்கை இல்லை. திராவிடம் என்பது மக்கள் சக்தி. திராவிடத்தை யாராலேயும் அழிக்க முடியாது" என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/98721-no-one-can-destroy-dravidam--kamalhaasan.html

  • தொடங்கியவர்

நீங்கள் ஏன் திமுகவில் சேரக்கூடாது? 1983-ல் என்னை அழைத்தார் கருணாநிதி: பவளவிழாவில் கமல் பேச்சு

 

நீங்கள் ஏன் திமுகவில் சேரக்கூடாது? என்று 1983-ம் ஆண்டிலே தந்தியடித்து தன்னை கருணாநிதி அழைத்தார் என முரசொலி பவளவிழாவில் நடிகர் கமல் பேசியுள்ளார்.

 
 
201708102347529947_Karunanithi-called-me
 
சென்னை:

சென்னையில் முரசொலி பவளவிழா கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், பிரபு, உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

விழாவில் நடிகர் கமல் பேசியதாவது:

ரஜினி இந்த விழாவிற்கு வருகிறாரா என்று ஒரு கேள்வி கேட்டேன். ஆமாம் வருகிறார் என்றார் ஸ்டாலின். அவரும் பேசுகிறாரா என்றேன். இல்லை, மேடைக்கு கீழே அமர்ந்து பார்வையாளராக இருப்பதாக சொல்லிவிட்டார் என்றார். அப்படியானால் நானும் கீழேயே அமர்ந்துகொள்கிறேன் என்றேன். எதுவும் சொல்லவந்தால் கையை பிடித்து இழுத்துக்கொள்வார் ரஜினி என்ற தைரியம் இருந்தது.

விழாவுக்கு அழைத்துவிட்டு ஸ்டாலின் சென்றபிறகு கண்ணாடியில் என்னை பார்த்துக்கொண்டேன். அடேய் முட்டாள் எவ்வளவு பெரிய வாய்ப்பை இழக்கிறாய். இந்த விழா எப்படிப்பட்டது என்பதை முதலில் புரிந்துகொள் என்றது. தற்காப்பு முக்கியம் அல்ல; தன்மானம்தான் முக்கியம். ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் இந்த மேடையில் அமர்ந்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

201708102347529947_1_nr4iw3aq._L_styvpf.

அந்த மேடையில் அமர்ந்து கழகத்தில் சேரப்போகிறீர்களா என்று டுவிட்டரில் கேள்வி கேட்கிறார்கள். சேருவதாக இருந்தால் 1983ல் கலைஞர் டெலகிராம் மூலம் அழைப்பு விடுத்தபோதே சேர்ந்திருப்பேன். கலைஞரின் பெருந்தன்மை என்னவென்றால் அதன்பிறகு இதுவரையிலும் அதுபற்றி கேட்கவில்லை. அந்த மரியாதை இந்த மேடையிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன்.

201708102347529947_2_tevuhagt._L_styvpf.

விகடன் பா.சீனிவாசன் பேசும்போது பூனூல் பத்திரிகை என்று கலைஞர் விமர்சனம் செய்ததை சொன்னார். அவரே இந்த விழாவுக்கு மகிழ்வோடு வந்திருக்கும்போது பூனூலே இல்லாத கலைஞானி இந்த விழாவுக்கு வருவதில் என்ன ஆச்சரியம்? ஏன் இப்படி பதறுகிறீர்கள்? அரசியல் பற்று விமர்சனம் செய்வீர்களா என்றால் அதற்கு இதுவா மேடை. அந்த அறிவு எனக்காவது இருக்க வேண்டாமா?

இது ஒரு பத்திரிக்கையின் வெற்றி விழா. அரசியல் விமர்சனம் செய்ய இதுவா மேடை. அந்த அறிவு எனக்காவது இருக்க வேண்டாமா. வெவ்வேறு கருத்துடையவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்துள்ளேன்.

இதோடு முடிந்தது திராவிடம் என்று பேசி வருகிறார்கள். தேசிய கீதத்தில் திராவிட என்ற வார்த்தை இருக்கும் வரை திராவிடம் இருக்கும். திராவிடம் என்பது நாடு தழுவியது.

திராவிடம் என்பது தமிழகம் தென்னகத்தோடு முடிந்தது அல்லது தொல்லியல் துறையின் படி அது நாடு தழுவியது. சிந்துசமவெளி தொடங்கி தற்போது தென்னகத்தோடு சுருங்கி உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.
 

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/08/10234747/1101637/Karunanithi-called-me-in-1983-itself-as-Why-you-should.vpf

  • தொடங்கியவர்

`கருணாநிதி என்ற ஆளுமையின் அம்சமாக விளங்கிய முரசொலி'

 
முரசொலி நிறுவனராக கருணாநிதி படைத்த சாதனைகள்

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அந்த நாளிதழின் இத்தனை ஆண்டுகாலப் பயணத்தை விளக்கும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கும் கண்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் பல்லாவரத்தைச் சேர்ந்த நந்தகோபாலின் கண்கள் கண்ணீரால் நிறைந்திருக்கின்றன.

"கிட்டத்தட்ட 40 வருஷமா படிக்கிறேன் சார். அப்பல்லாம் சொந்தமா வாங்க வசதியில்ல. மன்றத்திலதான் படிப்பேன். எல்லாரோடையும் சேர்ந்து படிக்கிறது ஒரு சந்தோஷம்" என்கிறார் நந்தகோபால்.

நந்தகோபால் Image caption''மன்றத்திலதான் படிப்பேன். எல்லாரோடையும் சேர்ந்து படிக்கிறது ஒரு சந்தோஷ'': நந்தகோபால்

இதுபோல, நூற்றுக்கணக்கன தி.மு.க. தொண்டர்கள் உணர்ச்சிகரமான முகங்களுடன் அந்தக் கண்காட்சியைப் பார்த்துச் சென்றுவருகின்றனர். பலர் தங்கள் மனைவியுடன் அங்கு வந்திருப்பதைப் பார்க்க முடிந்தது.

"ஒரு நல்ல இயக்கத்தில் அதன் தலைவருக்கு ஒரு பார்வையும் லட்சியமும் இருக்கும். அவற்றைத் தொண்டர்களுக்குச் சொல்வது மிக முக்கியம். அதைச் சொல்லும் விதத்தில், அந்த லட்சியங்களைத் தொண்டர்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதை திராவிட இயக்கத்தில் முரசொலி செய்தது" என்கிறார் மூத்த பத்திரிகையாளரும் ஃப்ரண்ட் லைன் இதழின் ஆசிரியருமான விஜய் ஷங்கர்.

முரசொலி நிறுவனராக கருணாநிதி படைத்த சாதனைகள்

முரசொலி துவங்கப்பட்டபோது, தி.மு.கவின் பத்திரிகையாக துவங்கப்படவில்லை. மு. கருணாநிதியின் இதழாகவே துவங்கப்பட்டது. அவர் அந்த இதழைத் தீவிரமாக நடத்த ஆரம்பித்தபோது, 10க்கும் மேற்பட்ட திராவிட இயக்க இதழ்கள் வெளிவந்துகொண்டிருந்தன. இருந்தபோதும், எல்லாவற்றையும் மீறி எழுந்து நின்ற முரசொலி, தற்போது 75 ஆண்டுகளை எட்டிப்பிடித்திருக்கிறது.

முரசொலி துவக்கத்தில் ஒரு துண்டுப் பிரசுரமாகத்தான் வெளியிடப்பட்டது. கருணாநிதிக்கு வெறும் பதினெட்டு வயதாக இருந்த காலகட்டத்தில், அதாவது 1942 ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று ஒரு துண்டுப் பிரசுரமாக முரசொலியைப் பிரசுரித்தார் கருணாநிதி. 1944ஆம் வருடம் வரை துண்டுப் பிரசுரமாகவே முரசொலி வெளிவந்தது. அப்போது பள்ளிக்கூட இறுதித் தேர்வு முடிவுகள்கூட வரவில்லையென்பதால், சேரன் என்ற புனைப் பெயரில்தான் படைப்புகளை எழுதிவந்தார் கருணாநிதி.

முரசொலி நிறுவனராக கருணாநிதி படைத்த சாதனைகள்

1943ல் முரசொலியின் முதலாம் ஆண்டு விழாவை கருணாநிதி நடத்தியபோது, அந்த விழாவில் பிற்காலத்தில் திராவிட இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டதாக பின்னாளில் நினைவுகூர்ந்தார் கருணாநிதி.

1944 காலகட்டத்தில் கருணாநிதியின் ஆர்வம் நாடகங்களின் பக்கம் திரும்பியதால் இதழ் வெளிவருவது தடைபட்டது. அதற்குப் பின், 1948ஆம் ஆண்டு பொங்கல் நாளிலிருந்து மீண்டும் வெளிவர ஆரம்பித்தது முரசொலி. துண்டறிக்கை வடிவிலிருந்து மாறுபட்டு, 'க்ரவுன்' வடிவத்தில் வெளிவர ஆரம்பித்த முரசொலி சுமார் 25 இதழ்கள் வெளிவந்திருக்கலாம் என கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் சங்கொலி திருநாவுக்கரசு. இதற்குப் பிறகு மீண்டும் தடைபட்டது.

முரசொலி நிறுவனராக கருணாநிதி படைத்த சாதனைகள்

அதன் பிறகு, 1954 முதல் சென்னையிலிருந்து வார இதழாக வெளியாக ஆரம்பித்தது. 1960 வரையில் வார இதழாகவே வெளிவந்த முரசொலி, அண்ணா சாலையில் ஒரு கட்டடத்தில் இருந்து நிலையாக செயல்பட ஆரம்பித்தது.

1960ஆம் வருடம் ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து முரசொலி தினசரியாக வெளியாகும் என கூறப்பட்டாலும் செப்டம்பர் 17ஆம் தேதியிலிருந்துதான் தினசரியாக வர ஆரம்பித்தது (அந்த காலகட்டத்தில் தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடாக 1953ல் துவங்கப்பட்ட நம்நாடு இதழே இருந்துவந்தது).

முரசொலி நிறுவனராக கருணாநிதி படைத்த சாதனைகள்

1960க்குப் பிறகு, தடையின்றி தற்போதுவரை தொடர்ந்து வெளியாகிவருகிறது முரசொலி. சென்னையிலிருந்து மட்டும் பதிப்பிக்கப்பட்ட இந்த நாளிதழ், 80களின் இறுதியிலிருந்து மதுரையிலிருந்தும் அச்சாக ஆரம்பித்தது.

"வாசிப்பதை ஒரு முக்கியமான செயல்பாடாக கொண்டிருந்தது திராவிட இயக்கம். தி.மு.கவின் தலைவரான சி.என். அண்ணாதுரையின் சிலை, படங்கள் எல்லாவற்றிலும் அவர் கையில் ஒரு புத்தகத்தை வைத்திருப்பதுபோலவே இருக்கும். அழுத்திவைக்கப்பட்டிருந்த சமூகம், வாசிப்பின் மூலமாகவே மேலே வரமுடியும் என்பதையே அது சுட்டிக்காட்டியது. அந்த மனப்போக்கின் ஒரு பகுதிதான் முரசொலி" என்கிறார் விஜயசங்கர்.

முரசொலி நிறுவனராக கருணாநிதி படைத்த சாதனைகள்

முரசொலியின் முதுகெலும்பைப் போன்ற அம்சம், தி.மு.க. தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதிவரும் கடிதம். தி.மு.கவின் நிறுவனர் சி.என். அண்ணாதுரை, நம் நாடு இதழில் எழுதிவந்த "தம்பிக்கு கடிதம்" இதற்குத் தூண்டுதலாக அமைந்தது,

ஆனால், கருணாநிதி இந்தக் கடிதங்களை எழுதத் துவங்கியபோது 'உடன்பிறப்பே' என துவங்கவில்லை. முதலில் 'பொன்முடிக்குக் கடிதம்' என்றுதான் இது துவங்கியது என்கிறார் சங்கொலி திருநாவுக்கரசு. அதற்குப் பிறகு, 1954 மே 18ஆம் தேதியிலிருந்து 'நீட்டோலை' என்ற பெயரில் இந்தக் கடிதங்கள் வெளியாக ஆரம்பித்தன. பிறகு, சில காலம் மறவன் மடல் என்று எழுதினார் கருணாநிதி. "அதற்கு வெகுகாலத்திற்குப் பிறகு, அதாவது 1971 ஏப்ரலில்தான் உடன்பிறப்புக்கான கடிதங்கள் துவங்கின" என்கிறார் சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதிய ஆர். கண்ணன்.

முரசொலி நிறுவனராக கருணாநிதி படைத்த சாதனைகள்

1954ல் துவங்கி, 2016ல் உடல்நலம் குன்றும்வரை, கிட்டத்தட்ட 62 ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்தக் கடிதங்களை தன் கட்சித் தொண்டர்களுக்காக எழுதி வந்திருக்கிறார் கருணாநிதி.

  •  

"கட்சிகள் பல இதழ்களை நடத்தினாலும் கட்சித் தலைவரே அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து சுமார் 62 ஆண்டுகள் தொண்டர்களுக்கு எழுதி வந்தது உலகில் வேறு எங்கு இல்லாதது" என்கிறார் கண்ணன்.

முரசொலி நிறுவனராக கருணாநிதி படைத்த சாதனைகள்

தி.மு.கவின் அரசியல் நிலைப்பாடுகள், கொள்கைகள், லட்சியங்கள் போன்றவற்றை தொண்டர்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்ததில் முரசொலியின் பங்கு மிகமிக முக்கியமானது என்கிறார் அவர்.

இவையெல்லாவற்றையும்விட முரசொலியின் மிக முக்கியமான பங்களிப்பு, இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது அதனைத் தீவிரமாக எதிர்த்து நின்றது. கடுமையான தணிக்கை முறை அந்த காலகட்டத்தில் அமலில் இருந்தபோதும் பல புதுமையான வழிகளில் தொண்டர்களிடம் சொல்லவேண்டியதைச் சொன்னது முரசொலி.

முரசொலி நிறுவனராக கருணாநிதி படைத்த சாதனைகள்

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தி.மு.கவினர் பலரும் கைது செய்யப்பட்ட நிலையில். 1976 பிப்ரவரி 3ஆம் தேதி, அண்ணாவின் நினைவு தினத்தன்று வெளியான இதழில், "அண்ணாவின் நினைவிடத்திற்கு வரமுடியாதவர்களின் பட்டியல்" என கைதானவர்களின் பட்டியல் வெளியானது.

அப்போது அமலில் இருந்த தணிக்கை முறையைக் கடுமையாக கிண்டல் செய்யும் வகையில், முரசொலியின் தலைப்புச் செய்திகளாக, "விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்: வைத்தியர் வேதாந்தைய்யா அறிவிப்பு", "வெண்டைக்காய் உடலுக்கு நல்லது" என தலைப்புச் செய்திகள் வெளியிடப்பட்டன. நெருக்கடி நிலை காலகட்டம் நெடுக, அதற்கு எதிராக முரசொலி குரல்கொடுத்து வந்தது.

முரசொலி நிறுவனராக கருணாநிதி படைத்த சாதனைகள்

கேள்வி - பதில் பகுதிகள், கருத்துச் சித்திரங்கள், கார்ட்டூன்கள், இருவருக்கு இடையிலான உரையாடல்கள் என வெவ்வேறு சுவாரஸ்யமான வடிவங்களில் தி.மு.கவின் கருத்துகள் தொண்டர்களைச் சென்றடைந்தன.

நெருக்கடி நிலை காலகட்டத்தைப் போலவே, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது முரசொலி அலுவலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதனால் ஒரே ஒரு நாள் மட்டும் நாளிதழ் வெளியாகவில்லை. அடுத்த நாளிலிருந்து மீண்டும் வெளியாகத் துவங்கியது முரசொலி.

முரசொலி நிறுவனராக கருணாநிதி படைத்த சாதனைகள்

ஆனால், தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் எதிரிகளின் மீது முரசொலி கடுமையாக தாக்குதல் தொடுத்திருக்கிறது. கருணாநிதி மீது விமர்சனங்களை வைத்தவர்கள், முரசொலியால் கேலிக்குள்ளாக்கப்பட்டனர், தூற்றப்பட்டனர். ஆனால், அதே நபர்கள் தேவையான தருணங்களில் பாராட்டவும்பட்டனர்.

"நெருக்கடி நிலையை அமல்படுத்திய இந்திரா காந்தியை தி.மு.க. ஆதரித்தபோது, அதனைச் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லி தொண்டர்களிடம் கொண்டு சேர்த்ததும் முரசொலிதான்" என்கிறார் விஜயசங்கர்.

முரசொலி நிறுவனராக கருணாநிதி படைத்த சாதனைகள்

கட்சியின் நிலைப்பாடுகள் மாறுபோது, கட்சித் தொண்டர்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்துவதில், பிற கட்சிகளின் தொண்டர்களுக்கு பதிலளிப்பதற்கான வாதங்களை முன்வைப்பதற்கு முரசொலி மிக முக்கியமான பங்கை வகித்தது என்கிறார் விஜயசங்கர்.

முரசொலி நாளிதழில் கருணாநிதி எழுதிவந்த பகுதிகள், சின்னக் குத்தூசியால் எழுதப்பட்ட கட்டுரைகள் ஆகியவை தி.மு.கவின் தொண்டர்களால் மிகவும் விரும்பப்பட்டவை. தற்போது இந்த இரு பகுதிகளுமே இல்லாத நிலை. கருணாநிதி என்ற மாபெரும் ஆளுமையின் ஓர் அம்சமாகவே முரசொலி இருந்து வந்திருக்கிறது. இனியும் அப்படியே தொடர முடியுமா?

முரசொலி நிறுவனராக கருணாநிதி படைத்த சாதனைகள்

"தற்போது மு.க. ஸ்டாலின் அதில் எழுதுகிறார். தற்கால நிலைமைக்கு ஏற்ப கட்டுரைகள் அதில் இடம்பெறுகின்றன. சுற்றுச்சூழல் சார்ந்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தி.மு.கவினர் மத்தியில் அதன் முக்கியத்துவம் தொடரக்கூடும்" என்கிறார் கண்ணன்.

 

http://www.bbc.com/tamil/india-40896073

  • தொடங்கியவர்

கமல் கருத்தால் வெடித்தது சர்ச்சை

யாருக்கில்லை தன்மானம்: நடிகர் கமல் ஹாசன் கருத்தால் வெடித்தது சர்ச்சைபடத்தின் காப்புரிமைFACEBOOK

தி.மு.கவின் அதிகாரப்பூர்வ இதழான முரசொலி இதழின் பவளவிழாவில் தற்காப்பு அல்ல, தன்மானமே முக்கியம் என கமல்ஹாசன் பேசிய குறித்து சமூக வலைதளங்களில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டுவருகின்றன.

முரசொலி நாளிதழின் பவளவிழா வியாழக்கிழமையன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தில் வெளியாகும் நாளிதழ்களின் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இவர்கள் தவிர, நடிகர் கமல் ஹாசனும் இந்த விழாவில் கலந்துகொண்டார்.

விழாவில் அனைவரும் பேசி முடித்த பிறகு இறுதியாக பேச அழைக்கப்பட்ட கமல், "விழா அழைப்பிதழை என்னிடம் கொடுத்தபோது, விழாவுக்கு ரஜினியும் வருகிறாரா என்று கேட்டேன். அவர் பார்வையாளராக அமர்கிறார் என்று சொன்னார்கள். ரஜினி வந்தால் அவர் கையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிடலாம்; வம்பில் மாட்டிக்கொள்ளமாட்டோம் என்று நினைத்தேன். அதற்குப் பிறகுதான், எவ்வளவு பெரிய வாய்ப்பை இழக்கிறாய், இந்த விழா எப்படிப்பட்ட விழா என்பதை முதலில் புரிந்துகொள் என்று தோன்றியது. தற்காப்பு முக்கியமல்ல; தன்மானம்தான் முக்கியம்" என்று குறிப்பிட்டார்.

யாருக்கில்லை தன்மானம்: நடிகர் கமல் ஹாசன் கருத்தால் வெடித்தது சர்ச்சைபடத்தின் காப்புரிமைFACEBOOK

மேலும் பேசிய கமல், இந்த விழாவுக்கு வருவதால் தான் தி.மு.கவில் சேரப் போகிறேனா என்று பலரும் கேட்பதாகவும், சேர்வதாக இருந்தால் 1983ல் கருணாநிதி தனக்கு தந்தி மூலம் கட்சியில் சேர்கிறாயா என்று கேட்டபோதே சேர்ந்திருப்பேன் என்றும் தெரிவித்தார்.

ஆனால், அந்தத் தந்திக்கு இதுவரை தான் பதிலளிக்கவில்லையென்றும், அவரும் அதற்குப் பிறகு அதைப் பற்றிக் கேட்கவில்லையென்றும் கமல் கூறினார்.

ஆனந்த விகடன் இதழை பூணூல் பத்திரிகை என முரசொலி கிண்டல் செய்திருப்பதாக அந்த இதழின் ஆசிரியர் பா. சீனிவாசன் பேசியதைச் சுட்டிக்காட்டிய கமல், அவரே விழாவுக்கு வந்திருக்கும்போது பூணூலே இல்லாத தான் விழாவுக்கு வருவதில் என்ன ஆச்சரியம் என்று கேள்வியெழுப்பினார்.

"இதோடு முடிந்தது திராவிடம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஜன கன மன பாட்டில் திராவிடம் என்ற சொல் இருக்கும்வரை இது இருக்கும். திராவிடம் என்பது இங்கே தமிழகம், தென்னகத்தோடு முடிந்துவிட்டது என்று நினைப்பவர்களுக்கு கொஞ்சம் தொல்பொருள் ஆராய்ச்சி பற்றியும், மானுடவியல் பற்றியும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நாடு தழுவியது இந்த திராவிடம்" என்று குறிப்பிட்டார் கமல்ஹாசன்.

இந்த விழாவில் பார்வையாளராக ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.

யாருக்கில்லை தன்மானம்: நடிகர் கமல் ஹாசன் கருத்தால் வெடித்தது சர்ச்சைபடத்தின் காப்புரிமைFACEBOOK

தற்காப்பு அல்ல; தன்மானம் என கமல்ஹாசன் குறிப்பிட்டது ரஜினிகாந்தை சுட்டிக்காட்டித்தான் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

கமல் முரசொலி மேடையேறியதுதான் தற்காப்பு; ரஜினி கீழே அமர்ந்தது தன்மானம் என்று ரஜினி ரசிகர்கள் கூறிவருகின்றனர். வேறு சிலர், இருவரும் நீண்ட கால நண்பர்கள், அதனை பிரிக்க வேண்டாம் எனக் கூறுகின்றனர்.

இதற்கிடையில், வியாழக்கிழமையன்று இரவில் தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் தெரிவித்துள்ள கருத்துகள் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

"விம்மாமல் பம்மாமல், ஆவன செய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனயே, ஓடி எனைப்பின்தள்ளாதே, களைத்தெனைத்தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம்" என்றும், "பரிந்தவர் புரியாதோர்க்குப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே. மூப்பெய்தி மாளும் முன். சுதந்திரம் பழகு. தேசியமும் தான்" என்று கமல் கூறியுள்ள கருத்துகளுக்கு பலரும் சமூக வலைதளங்களில் விளக்கங்களை எழுதிவருகின்றனர்.

http://www.bbc.com/tamil/india-40896066?ocid=socialflow_facebook

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.