Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவூதி அரேபியா: ‘மிஷன் 2030’ நிர்வாண கனவுகள்

Featured Replies

சவூதி அரேபியா: ‘மிஷன் 2030’ நிர்வாண கனவுகள்
 

தேசங்களை மதம் ஆளுகிறதா அல்லது மதங்களைத் தேசங்கள் ஆளுகின்றனவா என்ற கேள்விக்குத் தெளிவான பதில் கூறுவது கடினம்.   

மதம், தேச அலுவல்களில் செலுத்தும் செல்வாக்கை நாமறிவோம். அதற்கு எந்த மதமும் விலக்கல்ல; பல தேசங்களுக்கு மதம் நல்லதொரு கவசமாகிறது.

image_fbcb984236.jpg  

 மறுபுறம், அவ்வாறு கவசமாதல், அம்மதம் அத்தேசங்களில் வரன்முறையற்று நடந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது. மதத்துக்கும் தேசத்துக்குமிடையிலான உறவைப் பல காரணிகள் தீர்மானிக்கின்றன.   

மதத்தின் பெயரால், நேற்று நிராகரித்ததொன்று, இன்று ஏற்கப்பட்டலாம்; நாளை அது மதத்தின் ஓர் அம்சமாகவும் மாறலாம். இவ்வாறு மதம் ஆட்சியாளர்களின் வசதிக்குரியதாகத் தொடர்கிறது. இதற்கும் எம் மதமும் விலக்கல்ல.   

இஸ்லாமியக் கடுங்கோட்பாட்டுவாதத்தின் முன்னுதாரணம் என்று தன்னை அறிவித்து, ஷரியாச் சட்டங்களின் அடிப்படையில், அடிப்படை மனித உரிமைகளை மறுக்கும், சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நாடு சவூதி அரேபியா.  

 குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான எண்ணற்ற கட்டுப்பாடுகள் உள்ளன. பெண்கள் வீட்டிலிருந்து வெளியே செல்வதும், குடும்பத்தில் உள்ள ஓர் ஆணின் துணையோடுதான் இயலும்.   

அத்துடன், சவூதிக்குள் வரும் அயல்நாட்டுப் பெண்கள் உடலை முற்றாக மூடும் உடை அணிய வேண்டும் என்கிற சட்டமும் நடைமுறையில் உள்ளது.   

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் சவூதி அரேபியாவின் புதிய முடிக்குரிய இளவரசராக நியமிக்கப்பட்ட முஹமது பின் சல்மான், சவூதிப் பொருளாதாரத்தை எண்ணெய் வர்த்தகச் சார்பிலிருந்து மீட்டு, மாற்றுப் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.   

அதன் ஒரு பகுதியாக, ‘மிஷன் 2030’ எனும் தலைப்பில் உருவாகியுள்ள திட்டத்தின் அங்கமாக, சவூதி அரேபியாவை உலகச் சுற்றுலா மையமாக வளர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.   

சவூதியின் மேற்குக் கடற்கரைப் பிரதேசத்தில் அமையவுள்ள கேளிக்கைத் தீவுகளுக்குச் ‘சர்வதேசத் தரமுடைய’ புதிய சட்டங்கள் உருவாக்கப்படும் என சவூதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியம் (Public Investment Fund) அறிவித்துள்ளது.   

அதாவது, இத்தீவுகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை சவூதியின் ஷரியா சட்டங்கள் கட்டுப்படுத்தாது; கேளிக்கைத் தீவுகளுக்கென உருவாகவுள்ள சட்டங்கள், பெண்கள் பிகினி (நீச்சலுடை) அணிய அனுமதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இவ்வறிவிப்பானது எண்ணிறந்த கேள்விகளை எழுப்புகிறது. அவற்றில் பிரதானமானது, பெண்கள் உடலை முற்றாக மூடவேண்டுவது ஷரியா சட்டமாயின், அச்சட்டங்கள் ஆள்வதாகச் சொல்லும் ஒரு நாட்டில், அதற்கு முரணான ஒரு சட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம்? இதை ஆராய, சவூதி வரலாற்றைக் கொஞ்சம் பார்க்க வேண்டும்.   

இன்று, 28 மில்லியன் சனத்தொகையுடைய சவூதி அரேபியா, 1932இல் ஓர் இஸ்லாமிய மன்னராட்சியாக முகிழ்ந்தது. 1938இல் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதால், பொருளாதார வளம் கண்ட சவூதி, உலகின் முதன்மையான எண்ணெய் ஏற்றுமதி நாடாக உருவானது.   

இன்னும் மன்னராட்சி தொடரும் நாடுகளில் ஒன்றான சவூதியின் பெரும்பகுதி, பாலைவனமாகும். இஸ்லாத்தின் முக்கியமான இரண்டு வணக்கத் தலங்களான மக்காவையும் மதீனாவையும் உள்ளடக்கிய நாடென்ற வகையிலும் இஸ்லாத்தின் பிரதானமான காவலனாக சவூதி தன்னை அறிவித்துக் கொண்டது.   

இன்று உலகுக்கு, இஸ்லாத்தின் அடிப்படைகளைப் போதிக்கும் சவூதி அரேபியா, ஷியா-சுன்னிப் பிரிவினரிடையேயான மோதலின் பிரதான காரணகர்த்தாவாகும்.   

சுன்னி இஸ்லாத்தைப் பின்பற்றும் சவூதி, ஷியா பிரிவினரை முஸ்லிம்களாக ஏற்க மறுக்கிறது. அதனால், வஹாபிய அடிப்படைவாதத்தை சவூதி உலகெங்கும் முன்தள்ளுகிறது.   

வஹாபிய அடிப்படைவாதம், பதினெட்டாம் நூற்றாண்டில் முஹம்மது இப்னு அல்-வஹாப் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. மிகக் குறைந்த மக்கள் தொகையும் மிகப் பரந்த பாலைவனமும் பொருளாதாரச் சிரமமுள்ள வாழ்வையும் கொண்டிருந்த அரபு தீபகற்பத்தில், மக்கள் இனக் குழுக்களாகப் பிரிந்து தமக்குள் சண்டையிட்டு வந்தனர்.   

image_325786603d.jpg

இதில், திரிய்யா எமிரேட் எனும் பகுதியின் இளவரசரான முஹம்மது இப்னு, சவூதியோடு கைகோர்தவரான வஹ்ஹாப், மதக் கடுங்கோட்பாட்டு வாத அடிப்படையில், இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்க முனைந்தார்.   

1744 இல் திரிய்யா எமிரேட், சவூதியின் அரசானதைத் தொடர்ந்து, இக் கூட்டணி பல்வேறு விரிவாக்கச் சண்டைகளில் இறங்குகிறது. ஏலவே, இப்பகுதியில் நிலவிய, தர்கா வழிபாடு உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற இஸ்லாமிய நம்பிக்கைகளை வாள் முனையில் ஒழித்துக் கட்டியது.   

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஒட்டோமன் சாம்ராஜ்ஜியத்தின், எகிப்தியத் தளபதி ஒருவர், சவூத் அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். அதன்பின், 1932 இல் சவூதி அரேபியா தோன்றும்வரை, ‘சவூத்’ அதிகாரம் அடங்கிக் கிடந்தது.  

ஒட்டோமன் பேரரசு, முதலாம் உலகப் போரின்போது, நேச நாடுகளுக்கு எதிராக ‘அச்சு’ நாடுகளோடு கூட்டுச் சேர்ந்தது. இந்நிலையில், ஒட்டோமன் பேரரசுக்குட்பட்ட அரேபிய பகுதிகளைச் சேர்ந்த சில குழுக்கள், ஒட்டோமன் சாம்ராஜ்ஜியத்திலிருந்து விடுபடும் நோக்கில், பிரித்தானியாவை ஆதரித்தனர்.   

அவர்களில் முதன்மையானவர், ‘சவூத்’ வம்சாவழியினரான இப்னு சவூத். வஹாபிய அடிப்படைவாதத்துக்கு ஆட்பட்டிருந்த பழங்குடியினர், அவருக்கு துணையாக நின்றனர்.   

இதுவே முதலாம் உலக யுத்த நிறைவின் பின், இப்னு சவூத், சவூதி அரேபியாவை உருவாக்க வழிவகுத்தது. அன்றிலிருந்து இன்று வரை வஹாப், சவூத் குடும்பங்கள் தம்மிடையான திருமண உறவுகள் மூலம், நெருங்க இணைந்துள்ளன. இவர்களே சவூதி அரசாங்கத்தின் பல்வேறு அடுக்குகளில் அமர்ந்து, அதிகாரம் செலுத்துகிறார்கள்.   

மத்தியகால பிரபுத்துவக் கொடுங்கோன்மையின் சமகால உதாரணமாக, சவூதி அரேபியாவின் பொருளாதாரத்தை, மன்னரின் குடும்பத்தினர் கட்டுப்படுதுகின்றனர்.   

எண்ணெய் வியாபாரத்தில் திரண்ட இலாபத்தின் ஒரு பகுதி, அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் முதலிடப்படுகின்றது. மிகுதி இலாபம், மத்திய கிழக்கு நாடுகளிலும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் வஹாபி பயங்கரவாத இயக்கங்களை வளர்க்கப் பயன்படுகிறது. அதனடிப்படையில் இஸ்லாமிய சர்வதேச வாதம் என்ற கோட்பாட்டை வளர்க்க சவூதி முனைகிறது.   

சவூதி ஒருபுறம், அமெரிக்காவின் மத்திய கிழக்கு, அடியாளாச் செயற்படும் அதேவேளை, யாரையெல்லாம் அமெரிக்கா பயங்கரவாதிகளாக அறிவித்து அவர்களுக்கு எதிராகப் போரிடுகிறதோ, அப்பயங்கரவாதிகளின் நிதிமூலமாகவும் அது இருக்கிறது. இந்த முரண், சவூதியை விளங்க ஓரளவு போதுமானது.   

சவூதி இளவரசரின், ‘பிகினி’ அறிவிப்பு, அடிப்படைவாத இஸ்லாமியக் கோட்பாட்டை நடுக்கியுள்ளது.   

கடந்த மாதம், சற்றுக் குட்டையாகப் பாவடை அணிந்ததற்காக ஒரு பெண் தண்டிக்கப்பட்டார்.   

ஆனால், செங்கடலை ஒட்டிய, சவூதி அரேபிய மேற்குக் கடற்கரை எல்லையை ஒட்டி, இயற்கையாக அமைந்துள்ள சிறு தீவுகளை உள்ளடக்கிய பகுதியில், ‘சர்வதேசச் சட்டங்களுக்கு இயைபான சட்டங்கள்’ நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அதன்படி பெண்கள் பிகினி அணிய அனுமதிபெறுவர் என்றும் முடிக்குரிய இளவரசர் அறிவிக்கிறார்.   
இவ்வறிவிப்பு, சவூதிச் சட்டங்கள் சர்வதேச தரத்தில் இல்லை என்பதை ஏற்பதோடு, இதுவரையும் மதத்தை முன்னிறுத்தி நிறுவிய சட்டங்களின் அடிப்படைகளையும் கேள்விக்குட்படுத்துகிறது.   

ஆனால், இதில் வியக்கவோ அதிரவோ எதுவும் இல்லை. ஏனெனில், சொல்லும் செயலும் முரண்படுமாறே சவூதியின் வரலாறு இருந்துள்ளது. இருந்தும், இன்றும் முஸ்லிம்கள் பலர் சவூதி அரேபியாவை இஸ்லாத்தின் காவலராயும் மீட்பராயும் காண்கிறார்கள்.   

20 ஆம் நூற்றாண்டில் மத்திய கிழக்கில் எண்ணெய் வளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஏகாதிபத்திய நாடுகளிடயே அதைக் கைப்பற்றும் போட்டி தீவிரமடைகையில், சவூதி அரச குடும்பம் நேரடியாக அமெரிக்காவிடம் சரணடைகிறது.   

எண்பதுகளில், ஆப்கானிஸ்தானில் களமிறங்கிய சோவியத் படைகளை விரட்டுமாறு, அமெரிக்கா நேரடியாக உதவிய முஜாஹிதின் குழுக்களுக்கு, அமெரிக்க வழிகாட்டலுக்கமைய ஆள் பலம் முதல், மதம் சார்ந்த தத்துவ அடிப்படை வரை வழங்கியோரும் இஸ்லாமிய மதவெறியை ஊட்டியோரும் சவூதியைச் சேர்ந்த வஹாபிகளே.  

 1979 முதல் 1989 வரை அமெரிக்க சி.ஐ.ஏ, ‘ சூறாவளி’ நடவடிக்கை (Operation Cyclone) என இரகசியப் பெயரிடப்பட்ட, திட்டத்தின் மூலம் ஜிகாத் போராளிகளுக்கும் முஜாஹிதின்களுக்கும் ஆயுதங்களையும் நிதி உதவிகளையும் வழங்கியது.   

அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்களுக்காக, மத்திய கிழக்கு நாடுகளில் நடத்திய ஈராக் போர் உள்ளிட்ட, பல்வேறு போர்களிலும், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நேசமிகு முரடனாகச் செயற்பட்ட இஸ் ரேலுக்கும், இன்று சவூதி நேரடி நட்பு நாடாகவும் உடந்தையாளாகவும் விளங்குகிறது.  

 ஈரான், சிரியா, லெபனான் என்று, ஒவ்வோரிடத்தும் முன்னின்று அமெரிக்காவின் துணைக்கு வருவது சவூதியும் அதன் வகாபிசமுமே. எந்த நாட்டை முஸ்லிம்கள், மீட்பர்களாகக் காண்கிறார்களோ அந்த நாடுதான் உலகெங்கும் அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவிக்கத் தன் எண்ணெய்ப் பணத்தால் வழியமைக்கிறது. அமெரிக்கா வேண்டுமாறு, முஸ்லிம்களை அரசியல் ரீதியாக இல்லாதொழிக்க சவூதி வஹாபிசம் உதவுகிறது.   

உலகின் எந்த மூலையிலும் அமெரிக்கா வீசும் குண்டுகளுக்குச் சிதறி விழும் முஸ்லிம் சடலங்களிலிருந்து வழியும் குருதி தரும் இலாபத்தில், சவூதி அரசாங்கத்துக்கும் பங்குண்டு. அப்பங்கிலிருந்து, கிள்ளிக் கொடுக்கும் சில கோடி டொலர்களில்தான், வஹாபிச மதரஸாக்களும் பள்ளிவாசல்களும் செழிக்கின்றன. இது துயரம் மிகுந்த ஒரு உண்மையாகும்.  

எண்பதுகளில் பாகிஸ்தானில் முஜாஹித்தின்களை வளர்க்க, அமெரிக்க உதவியுடன் உருவான மதரஸாக்கள், இன்று அமெரிக்காவுக்கு தலைவலியாகி இருப்பதாகச் சிலர் கணிக்கிறார்கள்.  

 ஆனால், தானே உருவாக்கிய, இக்கடும்கோட்பாட்டாளர்களின் நடவடிக்கைகளை, நாகரிக உலகத்துக்கு அச்சுறுத்தலெனப் பரப்புரை செய்து, அதையே தனது இராணுவ நடவடிக்கைகளுக்கு நியாயமாகவும் அமெரிக்கா முன்வைக்கிறது.  

இன்று, அமெரிக்காவும் மேற்குலகும் முன்னெடுக்கும் இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண், சவூதி அரேபியா ஆதரவளித்து முன்தள்ளும் வகாபிசம். ஆனால், சவூதி அரேபியா, இஸ்லாத்தின் மீது போர் தொடுக்கும் அமெரிக்காவுடன் ஒரு தயக்கமுமின்றி நெருங்கி உறவாடும் நம்பிக்கையான அடியாளாகச் செயற்படுகிறது.  

ஆட்சியாளர்கள் மதங்களின் பேரால், மனிதர் மனிதரை நீண்ட காலமாக அழிக்கவும் அடக்கியாளவும் முற்பட்டுள்ளனர். இது, பொதுவாக மதங்கள் மீது, ஆளும் அதிகார வர்க்கங்கள் செலுத்தும் ஆதிக்கத்தின் விளைபயனாகும்.   

மதச் சுதந்திரம், மதங்களிடையே ஐக்கியம் எனும் பெயர்களில் மக்களுக்கு விரோதமான, சமூகங்களுக்கிடையே ஒற்றுமையை சீரழிக்கும் விதத்திலான காரியங்கள் நடக்கின்றன.   
எந்த மதத்தையும்விட, மனித சமத்துவம் முக்கியமானது. ஆனால், இதை இல்லாதொழிக்கும் பணியை மதங்கள் பல்வேறு வழிகளில் செயற்படுத்துகின்றன.  

மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கவும் விதி, தெய்வசித்தம் என்றவாறான விளக்கங்களை ஏற்றுச் சமுதாயப் பிரச்சினைகளுக்கு உரிய இடத்தில் விடைகளைத் தேடாது, திசைதிருப்பவும் ஆளும் வர்க்கங்கள் மதத்தைப் பயன்படுத்தியுள்ளன.  

 நிஜ உலகில் வெறுமே வேதனை உணர்வைத் தவிர்க்க, அபின் எவ்வாறு பயன்பட்டதோ அவ்வாறே மதமும் பயன்பட்டமையை மார்க்ஸ் சுட்டினார். அதுவே ‘மதம் மக்களின் அபின்’ எனும் மார்க்ஸின் கூற்றாக அறியப்படுகிறது.   

சவூதி அரேபிய சனத்தொகையில், 20 சதவீதமானவர்கள் வறுமையில் வாடுகின்றனர். அதை அரசாங்கம் மறுத்து வருகிறது. அத்துடன், தென்னாசிய நாடுகளில் இருந்து சவூதிக்கு வேலைக்குச் செல்லும் பணியாட்கள், குறிப்பாகப் பணிப்பெண்கள், மோசமாக நடாத்தப்படுகிறார்கள்.   

இன்று, சவூதி அரேபியாவில் மன்னராட்சிக்கு எதிராகவும், அரசியல் சீர்திருத்தம் கோரியும் போராட்டங்கள் தொடங்கியுள்ளன.

 பெண்களும் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள்; இவை நல்ல அறிகுறிகள்.   
எண்ணெய் என்றென்றைக்குமல்ல; சவூதி அரேபியாவின் மன்னராட்சியும் அவ்வாறே. கடந்த பல ஆண்டுகளாகத் தொடரும் எண்ணெய் விலை வீழ்ச்சியின் பாதிப்புகள் சவூதி ஷேக்குகளைத் தாக்குகின்றன.  

 இலாபம் குறையாதிருக்க அவர்கள் எதையும் செய்யத் தயாராயிருக்கிறார்கள். அதில் ஒரு நகர்வு, இந்த உல்லாச விடுதித் திட்டம். அமெரிக்காவுக்காக எதையும் செய்ய ஆயத்தமான சவூதி அரேபியா, பெண்களுக்கான ஆடை விதிகளை தளர்த்துவதில் வியப்பில்லை.   

சவூதி இளவரசரின் அறிவிப்பைக் கேலிசெய்து, மத்திய கிழக்குப் பத்திரிகையொன்று இட்ட தலைப்புடன் இப்பத்தியை முடிக்கலாம், ‘நிர்வாணக் கனவுகள்’   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சவூதி-அரேபியா-மிஷன்-2030-நிர்வாண-கனவுகள்/91-202512

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஞ்ஞானிகள் எண்ணைக்கு மாற்றீடாக பலதை கண்டுபிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அச்சம் குடிகொள்ள ஆரம்பித்து விட்டது.

அரேபிய உலகம் உல்லாசத்திற்கு அடியெடுத்து வைக்கின்றதா?????


மொட்டாக்கை லேசாக விலக்குங்கள்....:cool:

பணமழை பொழியும்.....tw_blush:

தாய்லாந்தை ஒருகணம் எட்டிப்பாருங்கள். :grin:

  • தொடங்கியவர்

s12-4a5159fb26bcbadff61ddc5d4d1407be407f

  • கருத்துக்கள உறவுகள்

எத்தினை நாட்களுக்குத்தான் மொட்டாக்குடன் போட்டவும் வீடியோவும் எடுக்கிறது.அது தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.