Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ட்ரம்பின் ஐ.நா உரை: பழைய பொய்களும் புதிய கதைகளும்

Featured Replies

ட்ரம்பின் ஐ.நா உரை: பழைய பொய்களும் புதிய கதைகளும்
 

கோவில் திருவிழாக்கள் ஆண்டு தோறும் நடப்பதுபோல, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்தக் கூட்டங்களும் மாறிவிட்டன. வெறுமனே ஒரு சடங்காக, உலகத் தலைவர்கள் உரையாற்றும் இடமாக, பொதுச்சபைக் கூட்டம் நடந்தேறுகின்றது.   

இன்று, எதையும் பயனுள்ள வகையில் செய்ய இயலாதுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கையறுநிலை, இதற்கான பிரதான காரணமாகும். ஐ.நா வலுவாகவும் உலக அலுவல்களில் முக்கிய சக்தியாகவும் திகழ்ந்தவொரு காலத்தில், பல வரலாற்றுச் சிறப்பு மிக்க உரைகளை இச்சபை கண்டுள்ளது.   

அவ்வுரைகள் காலத்தின் கண்ணாடியாக, உலக அலுவல்களின் நிகழ்நிலையைப் பிரதிபலிக்கும் விமர்சனங்களாக அமைந்தும் உள்ளன.   

செவ்வாய்க்கிழமை (19) இரவு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஆண்டுக்கூட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய உரை, பல்வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது.   

அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவர் ஐ.நாவில் ஆற்றுகின்ற முதலாவது உரை என்பதாலும், அவரது அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளைப் பொதுவில் எடுத்துரைக்கும் என்ற எதிர்பார்ப்பாலும் இவ்வுரை மிகுந்த கவனம் பெற்றது.  

இவ்வுரை, மூன்று அடிப்படை விடயங்களைச் தொட்டுச் சென்றது. அவை, அமெரிக்காவின் உலகப் பார்வையும், உலக அலுவல்களில் அமெரிக்காவின் அக்கறையும், ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழான அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் கவனக்குவிப்பையும் விளங்கிக் கொள்ள உதவுகின்றன.   

“பயங்கர ஆபத்து நம்மைச் சூழ்ந்திருக்கும் நேரத்தில், மகத்தான ஓர் உறுதிமொழியை ஏற்க வேண்டிய உன்னதமான நேரத்தில், நாம் அனைவரும் சந்தித்திருக்கிறோம்.   இந்த உலகத்தைப் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லப் போகிறோமோ அல்லது மீளத் திருத்தியமைக்க முடியாத ஓர் அதல பாதாளத்தில் தள்ளிவிடப் போகிறோமா என்பது நம் தீர்மானங்களைப் பொறுத்ததே” என்ற அறைகூவலுடன் தனது பேச்சை ட்ரம்ப் தொடங்கினார். 

உலகை ஆட்கொண்டுள்ள அச்சுறுத்தல்கள் பற்றிக் கருத்துரைத்ததோடு, அமெரிக்கா என்ன செய்ய விளைகிறது என்பதையும் அவர் விவரித்தார்.   

அவரது உரையின் முதலாவது அடிப்படை, வடகொரியா மீதான அவரது நேரடியானதும் வெளிப்படையானதுமான மிரட்டலாகும். இதுவரை, எந்த அமெரிக்க ஜனாதிபதியும் ஐ.நாவில் செய்யாததை ட்ரம்ப் செய்தார்.   

அவர், “வடகொரியா தன் அணு ஆயுத நோக்கங்களிலிருந்து பின்வாங்கவில்லையெனில், வடகொரியாவை முற்றிலும் அழிப்பதைத் தவிர, எங்களுக்கு வேறு வழியில்லை” என்றார். 

மேலும், வடகொரிய ஜனாதிபதியை ‘ரொக்கெட் மனிதன்’ என்று வர்ணித்ததோடு, அவர் தனது செயல்கள் மூலம், தற்கொலைக்கு முயற்சி செய்து வருகிறார் என்றார்.  

வடகொரியாவை சர்வாதிகார நாடென்றும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங்-உன், தனது சகோதரரை நச்சுவாயு பயன்படுத்திக் கொன்றார் என்ற கதையையும் சொன்னார். இக்கதையின் உண்மைத் தன்மை, இன்றுவரை கேள்விக்குட்பட்டதாகவே உள்ளது.  

கிம் ஜொங்-உன்னின் சகோதரர் இரசாயனத் தாக்குதலால் கொல்லப்படவில்லை என்பதை, இம்மரணத்தை விசாரிக்கும் மலேசிய அரசாங்கம் உறுதி செய்துள்ளது. எனவே, தமக்கு வாய்ப்பான ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வனூடு, பொதுப்புத்தி மனநிலையை, வடகொரியாவை ஒரு கொடிய வில்லனாகச் சித்திரிக்க ட்ரம்ப் முயல்கிறார்.   

வடகொரியாவிடம் உள்ள அணுசக்தி வல்லமையும், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளுமே, அமெரிக்காவின் பிரதான பிரச்சினையாக உள்ளது. உலக நாடுகள் அணுசக்தி ஆற்றலைக் கொண்டிருப்பது அமெரிக்காவின் விருப்புக்குரியதல்ல.   அதனால், வடகொரியாவின் அணுசக்தி முயற்சிகளைக் கண்டிக்கும் அமெரிக்காவின் அணு வரலாற்றை இங்கு நினைவூட்டல் தகும். 

உலகின் முதலாவது அணு ஆயுத வல்லரசு அமெரிக்கா. மக்களைக் கொன்றொழிப்பதற்காக அணு ஆயுதங்களை இதுவரை பயன்படுத்தியுள்ள ஒரே நாடும் அமெரிக்கா தான்.   

அது மட்டுமன்றி, அணு உலைகளிலிருந்து பெறப்பட்ட கதிரியக்கம் கொண்ட உலோகங்கள் கொண்ட ஏவுகணைகளை ஈராக்கில் பயன்படுத்தியதும் அமெரிக்கா தான். அதன் விளைவாகப் பத்தாயிரக் கணக்கானோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஆயிரக் கணக்கான குழந்தைகள் புற்றுநோய் உட்பட கடும் உபாதைக்கு உட்பட்டுள்ளார்கள்.   

கெடுபிடிக் காலத்தில் அணு ஆயுதக் குறைப்பு பற்றிய உடன்படிக்கைகள் ஏற்பட்ட போதும், பழைய ஆயுதங்களின் இடத்தில் புதிய, பாரிய ஆயுதங்கள் வந்தனவே ஒழிய, அணு ஆயுத வலிமை குறைக்கப்படவில்லை.   

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, கெடுபிடிப்போர் காலப்பகுதியில், சோவியத் ஒன்றியத்துக்குப் போட்டியாக அமெரிக்கா அணுஆயுதங்களை உற்பத்தி செய்தது. சோவியத் ஒன்றியம் உடைந்த பின்பும், அமெரிக்கா தனது அணு ஆயுத வல்லமையை மேலும் அதிகப்படுத்தி வந்துள்ளது.   

அது நிச்சயமாக, அமெரிக்காவின் பாதுகாப்புக்காக அல்ல. உலக நாடுகள் மீது, போர் மிரட்டல் தொடுத்து, தான் எண்ணியதைச் சாதிப்பதற்காக ஆகும். அணுஆயுதப் பரிகரணம் தொடர்பிலான சர்வதேச சமவாயங்களில் அமெரிக்கா இன்றுவரை கையொப்பமிடாமல் விலகியே வந்திருக்கிறது. இப்பின்னணியிலேயே வடகொரியாவின் அணுஆயுத முயற்சிகளுக்கான அமெரிக்காவினதும் மேற்குலகினதும் எதிர்ப்பை நோக்க வேண்டியுள்ளது.   

அணுஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகள் என்று அங்கிகரிக்கப்பட்ட ஏழு நாடுகளை (ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள், இந்தியா, பாகிஸ்தான்) தவிர பல ஐரோப்பிய நாடுகள் அணுஆயுதங்களைக் கொண்டுள்ளன.   

பெல்ஜியம், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, துருக்கி மற்றும் இஸ் ரேல் ஆகிய நாடுகள் அணுஆயுதங்களைக் கொண்டுள்ளன என்பது, சான்றாதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ள நிலையில், இதை யாரும் கேள்விக்குட்படுத்துவதில்லை. வடகொரியாவின் அணுஆயுத முயற்சிகளே, தொடர்ந்தும் விமர்சிக்கப்பட்டும், உலக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கிறது என்றும் சொல்லப்பட்டு வந்துள்ளது.   

வடகொரியா, உலகின் எந்த நாட்டின் மீதும் போர் தொடுத்தது கிடையாது; எந்த நாட்டுக்கும் படைகளை அனுப்பியது கிடையாது. எந்தவொரு நாட்டிலும், வடகொரிய இராணுவம் நிலைகொண்டிருக்கவில்லை.   

இவற்றின் அடிப்படையிலேயே, ட்ரம்பின் மிரட்டலை நோக்க வேண்டியுள்ளது. வடகொரியாவின் மீதான மிரட்டலின் பேரில், சீனாவை மறைமுகமாக அச்சுறுத்தும் பணிகளில் அமெரிக்கா இறங்கியுள்ளது.   

image_5e6f4f797a.jpg

கடந்த வாரம் கொரியத் தீபகற்பத்தில் அமெரிக்கா நிறுவிய கண்காணிப்பு பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் தாக்குதல் ஏவுகணைகள் சீனாவின் சினத்துக்கு ஆளாகியுள்ளன. ரஷ்யா மற்றும் சீனாவுக்குள் இலக்குகளைக் கண்காணிக்கவும், அடையாளம் காணவும், தாக்குதல் நடத்தவும் தென் கொரியாவில் அமெரிக்கா நிறுவும் ரேடார் மற்றும் ஏவுகணை அமைப்பைப் பயன்படுத்த முடியும்.   

இதை நன்கறிந்தமையால், “சீனா மற்றும் ஏனைய பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு நலன்களை மதிக்கவும், கண்காணிப்புச் செயல்பாட்டை உடனடியாக நிறுத்தவும், அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை நீக்கவும், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை நான் கடுமையாக வலியுறுத்துகின்றேன்” என்று சீன வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.   

மேலும், “கொரியத் தீபகற்பத்தை அணு ஆயுதமற்றதாக்குவதற்கு சீனா நிறைய முயற்சி செய்துள்ளது. இன்றுவரை அது அமைதியாக இருக்கிறது. அமைதியான தீபகற்பத்தைப் பார்க்க அமெரிக்கா விரும்பவில்லை. அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் மூலோபாய ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு, தவிர்க்க முடியாததொரு காரணத்தை வழங்குவதற்குத் தேவையான குழப்பமான சூழ்நிலையை உருவாக்க விளைகிறது” என்றும் அவர் மேலும் அமெரிக்காவை நேரடியாகக் குற்றச்சாட்டினார்.   

இதைத் தொடர்ந்து, ஜேர்மனிய அதிபர் அங்கெலா மேர்க்கேல், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ஆகிய இருவரையும் தொடர்பு கொண்ட சீன ஜனாதிபதி,  அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒருங்கிணையுமாறு பேசியதோடு, மேலும் இந்த நெருக்கடி ஒட்டுமொத்த உலகப் போராக வெடிப்பதில் இருந்து அதைத் தடுக்கவும் அவர்களிடம் கோரினார்.   

இதற்கு அவ்விருவரும் வழங்கிய சாதகமான பதில்கள், ஐரோப்பாவில் அதிகரிக்கும் சீனச் செல்வாக்கையும் அமெரிக்கச் செல்வாக்கின் சரிவையும் கோடி காட்டியுள்ளன.   
ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நெருக்கடியையும் பிரதிபலிக்கின்றன.   

அதிகரித்துவரும் அமெரிக்க-ஐரோப்பிய வர்த்தக அழுத்தங்களுக்கும் மற்றும், தங்கள் ஆயுதப் படைகளைக் கட்டமைக்க, பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்கச் செய்வதற்காக ஐரோப்பிய சக்திகள் மூலமான நகர்வுகளுக்கும் மத்தியில், முக்கிய ஐரோப்பிய சக்திகளுக்கும் வொஷிங்டனுக்கும் இடையேயான உறவுகள் ட்ரம்பின் தெரிவுக்குப் பின்னர் முறிந்துவிட்டன.  

இவை நடந்து ஒருவார காலத்துக்குள்ளேயே ட்ரம்பின் ஐ.நா உரை நிகழ்ந்துள்ளது. இது, அமெரிக்கா தவிர்க்கவியலாமல், ஒரு போரை விரும்புகிறது என்பதை விளக்குகிறது.  

 வடகொரியா மீது, அமெரிக்கா தாக்குதல் நடாத்தினால், வடகொரிய சார்பாக சீனா படைகளை அனுப்பும் என்பதை அமெரிக்கா நன்கறியும். இதனால், வடகொரியாவை ஆத்திரமூட்டச் செய்வதன் மூலம், வடகொரியா யாரையாவது தாக்கினால், அதைக் காரணம் காட்டி, வடகொரியாவைத் தாக்க அமெரிக்கா முனைகிறது.   

இன்னொரு வகையில் ஒரு போரை நிகழ்த்துவதற்கான காரணங்களை, அமெரிக்கா தேடி வருகிறது.

ட்ரம்பின் உரையில் கவனிப்புக்குள்ளாக வேண்டிய இரண்டாவது விடயம், ஈரான் குறித்த ட்ரம்பின் கருத்துகளாகும். பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு நாடாக ஈரானைச் சித்திரித்தார்.  

2005இல் ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக, அமெரிக்காவோடு எட்டப்பட்ட உடன்படிக்கையை மோசமானது என்றும் ஒருதலைப்பட்சமானது என்றும் விவரித்தார். இதன்மூலம், இவ்வுடன்படிக்கை முடிவுக்குக் கொண்டுவரப்படும் என மறைமுகமாக அறிவித்தார். ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை நீக்குவதில், அமெரிக்காவைக் காட்டிலும் ஐரோப்பிய நாடுகளே விருப்பம் காட்டின.  

image_502e0a27d0.jpg

 ஈரான்-அமெரிக்க உடன்படிக்கைக்கான ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவானது, அவர்களது பொருளாதார நலன் சார்ந்தது. ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள், எண்ணெய் வர்த்தகத்தில் நெருக்கடியை மறைமுகமாகத் தோற்றுவித்துள்ளன.  

 பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட முன், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான எண்ணெய் விநியோக்கத்தில் ஈரான் 42 சதவீதச் சந்தையைக் கொண்டிருந்தது. தடைகள் நீக்கப்பட்ட நிலையில் ஈரானுடனான வர்த்தகம் அதிகரித்துள்ளது.   

இது அமெரிக்காவின் மறைமுகக் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை இல்லாமல் செய்துள்ளது. எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகவும் சவூதி அரேபியாவின் கூட்டாளியாகவும் உள்ள அமெரிக்காவின் நலன்களுக்குப் பாதகமானது.   

தனது உரையில், ஈரான் மீது சவூதி அரேபியா வைக்கின்ற அதே குற்றச்சாட்டுகளை வார்த்தை பிசகாமல் ட்ரம்ப் உச்சரித்தார். பயங்கரவாதிகளுக்கு ஈரான் உதவுகிறது; ஜனநாயகமற்ற நாடாக ஈரான் திகழ்கிறது என்றெல்லாம் சொன்னார்.  

 இவை அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ள அமெரிக்க-சவூதி அரேபிய நெருக்கத்தின் விளைவிலானவை. ஈரான் பிராந்திய வல்லரசாக வளர்வதை அமெரிக்காவும் சவூதியும் விரும்பவில்லை. எனவே, அதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் முட்டுக்கட்டை போட அமெரிக்கா முனைகிறது. 

சிரிய யுத்தத்தில், இன்றுவரை பஷீர் அல்-அசாத்தின் ஆட்சியை நீக்க முடியவில்லை. சிரியா-ஈரான்-ஹிஸ்புல்லா கூட்டானது மத்திய கிழக்கில், அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிரான, பிரதான சக்தியாக உள்ளது. அதனாலேயே அசாத்துக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் ஆதரவளிக்கும் பயங்கரவாத நாடாக ஈரானை ட்ரம்ப் அழைத்தார். 

அடுத்த மாதத்துடன் நிறைவடையும் அமெரிக்க-ஈரான் உடன்படிக்கையை நீடிக்கப் போவதில்லை என அவர் தனதுரையில் அறிவித்ததன் மூலம், ஈரானுடனான இன்னொரு நெருக்கடிக்கு அவர் வழியமைக்கிறார் என்பது புலனாயுள்ளது.   

ட்ரம்பின் உரையில் கவனிப்புக்குள்ளாகிய மூன்றாவது விடயம், உலகப் பொருளாதார அமைப்புகளையும் அதன் சந்தை முறைகளையும் அவர் சாடியமையாகும். திறந்த சந்தை விதிகளும் சர்வதேச நிதிமூலதனமும் உலகமயமாக்கலும் அமெரிக்கர்களுக்குப் பாதமானதாக உள்ளது என அவர் சொன்னார்.   

“மிக நீண்ட காலமாகப் பெரும்பான்மையான அமெரிக்க மக்கள், பன்னாட்டு வர்த்தக ஒப்பந்தங்கள், சர்வதேச நீதிமன்றங்கள் மற்றும் சக்திவாய்ந்த உலகளாவிய நிதிமூலதனத்தின் அதிகாரம் ஆகியவை வெற்றிக்கான வழி என்று கூறின. ஆனால் அந்த வாக்குறுதிகள் பொய்யாக்கப்பட்டன. மில்லியன் கணக்கான வேலைகள் மறைந்துவிட்டன. மற்றும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மறைந்துவிட்டன; மற்றவர்கள் இந்த அமைப்பை அமைத்து, விதிகளை உடைத்து இலாபமீட்டினர். நமது, பெரிய நடுத்தர வர்க்கம் இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அவர்கள் இனி ஒருபோதும் மறக்கப்பட மாட்டார்கள்.  அமெரிக்கா மற்ற நாடுகளுடன் ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளை, அமெரிக்கர்களின் நலனே எமது அரசாங்கத்தின் முதல் கடமையாகும்” என்றார்.   

எந்த அமெரிக்கா, திறந்த சந்தையையும் உலகமயமாக்கலையும் முன்மொழிந்து வழிநடாத்தியதோ இன்று, அதே அமெரிக்காவே அதற்கு எதிரான திசையில் பயணிக்கிறது.   
2008 ஆம் ஆண்டு தொடங்கிய உலகப் பொருளாதார நெருக்கடி, ஒரு தசாப்த காலத்துக்குப் பின்னும், இன்னமும் முடிவுறாத நெருக்கடியே என்பதை இது உணர்த்துகிறது.   
ட்ரம்பின் உரை, அமெரிக்காவும் மேற்குலகும் கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலாக நடைமுறைப்படுத்தி வந்துள்ள திறந்த சந்தை, கட்டற்ற வர்த்தகம், தாராளவாதம், உலகமயமாக்கல், நிதிமூலதனத்தின் சுதந்திரமான பாய்ச்சல் ஆகியவற்றைக் கேள்விக்குட்படுத்துவதன் மூலம், முதலாளித்துவப் பொருளாதார முறைமையையே விமர்சித்து, அதன் தோல்வியை அறிவிக்கிறது.   

ட்ரம்ப், “அமெரிக்கர்களின் நலனை முதன்மைப்படுத்தல்” என்பதன் அடிப்படையில், அரசு கட்டுப்பாட்டை அதிகரித்து, நிதிமூலதனத்தைக் கட்டுக்குள் வைத்து, மூடிய பொருளாதார முறையை ட்ரம்ப் முன்மொழிகிறார். இது புதியது. ஆனால், முதலாளித்துவத்தின் தோல்வி தவிர்க்கவியலாதது என்பதை இது காட்டிநிற்கிறது.   

ட்ரம்பின் உரை, மொத்தத்தில் அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் எதிரான நாடுகளைச் சாடுவதற்கு பழைய பொய்களைத் திரும்பச் திரும்பச் சொன்னார். அமெரிக்கா எதிர்நோக்கியுள்ள சவால்களை எதிர்கொள்ளப் புதிய கதைகளையும் சொன்னார்.   

அவர் அமெரிக்காவை இன்னொரு போருக்குள் தள்ளுவதற்கான புதிய கதையாடலை உருவாக்க விளைகிறார். அதற்கு ‘அமெரிக்கா முதலில்’ என்ற கோஷத்தை முதன்மைப்படுத்துகிறார். 2001இல் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ அமெரிக்க நலன்களைக் காக்கும் உலகெங்கும் நடைமுறைப்படுத்தும் கருவியானது.  

 இன்று, ‘அமெரிக்கா முதல்’ என்ற கோஷம், ட்ரம்ப் கட்டமைக்கும் கதையாடலின் கருவியாகிறது. கருவிகள் மாறினாலும் பொய்கள் பழையன. அப்பழைய பொய்களைக் கொண்ட கதைகள் புதியன.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ட்ரம்பின்-ஐ-நா-உரை-பழைய-பொய்களும்-புதிய-கதைகளும்/91-204207

  • தொடங்கியவர்
குழப்பங்களைத் தந்துள்ள ட்ரம்ப்பின் ஐ.நா உரை
 

image_1d9457ebb6.jpg

-ஜனகன் முத்துக்குமார்

எந்தவோர் இடர்பாடுகள் மத்தியிலும், ஐக்கிய நாடுகளின் இருப்பானது, பாதுகாக்கப்படவேண்டியது அவசியமானதாகும். நாஸிஸமும் ஏகாதிபத்திய ஜப்பானும் தோல்வியடைந்த பின்னர், 1945இல் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையின் கீழ் நிறுவப்பட்ட ஐ.நா, உலகளாவிய ஒழுங்கின் மையத் தூணாக உள்ளது. 1930களில் அமைந்திருந்த சர்வதேச தேசங்களின் ஒன்றியத்துடன் ஒப்பிடும் போது, கடந்த 60 ஆண்டுகளாக, சமாதானம், சர்வதேச பாதுகாப்பு, மனித உரிமைகள் ஆகியவை சிறப்பாகப் பேணப்படவேண்டும் என்ற குறிக்கோளே, ஐ.நாவின் இருப்புக்கு அவசியமான காரணங்களாக அமைந்துள்ளன.

உலகளாவியரீதியில், அனைத்து தேசிய அரசுகளின் பிரதிநிதிகளும், நெருக்கடிகளையும் பொதுவான சவால்களையும் சந்திக்கும், அச்சவால்களை எதிர்கொள்ள முயல்வதற்கான தளமாகவே, ஐ.நா விளங்குகின்றது.

ஐ.நா பொதுச் சபை அமர்வில், ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முதலாவது உரையானது, மிகவும் அச்சுறுத்தலாகவே அமைந்திருந்தது. ஈரான், வடகொரியா ஆகியன மீதான அவரது கருத்துகள், கசப்பான விரோதத்தன்மையில் இருந்து மட்டுமன்றி, சர்வதேச பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவும் அமைந்திருந்தன. முழுமையாகவே இராஜதந்திர நகர்வுகளுக்கு வழிவிடாது, போர்ச்சூழ்நிலைக்கு, ஐ.அமெரிக்காவை மட்டுமன்றி மேற்கத்தேய நாடுகள் அனைத்தையும் தள்ளிவிடுவதாகவே, அவரது உரை அமைந்திருந்தது. வடகொரியாவுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு சபையால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம்,சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகளை மீறியமைக்கு எதிராக மேற்கொண்ட, ஒன்றுபட்ட நடவடிக்கையாகும்.

இதே போன்ற நிலை, ஈரானுக்கு எதிரான ஐ.அமெரிக்காவின் கொள்கைக்கு, பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்புரிமை உள்ள பிற நாடுகளாலும் ஜேர்மனாலும் உடன்பாடு வழங்கப்படும் என கருதப்பட முடியாதவொன்றாகும். ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பாராயின் அது, ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி தொடர்பான உடன்படிக்கையை, எதேச்சையாக மீறும் செயலாக அமைவதுடன், அந்நிலையில் ஐ.அமெரிக்கா தனிமைப்படுத்தப்படுமே அன்றி, ஏனைய நாடுகளின் உதவியைப் பெற இயலாமல் போகும் என்பதே, இப்போதைய நிலைப்பாடாகும். பாதுகாப்புச் சபையின் ஏனைய நாடுகள், ஈரானுடன் ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கை வலுவாகப் பேணப்பட வேண்டும் என்னும் கொள்கையில் இருக்கும் இந்நிலையில், ஈரானுக்கு எதிரான ஜனாதிபதி ட்ரம்ப்பின் உரையானது, ஐ.அமெரிக்காவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அவரின், “அமெரிக்காவை முன்னிலைப்படுத்தும்” நிகழ்ச்சிநிரலின் ஒரு பகுதியாகவே, குறித்த உரை அமைந்திருந்த போதிலும், அவ்வுரையானது வலுவான, இறையாண்மைமிக்கை சுயாதீனமான நாடுகள் மீது, எந்த அமெரிக்க தேசியவாத சித்தாந்தத்தையும் பூசிவிடுவதாக அமைய முடியாது.

ஒபாமா நிர்வாகம் கையெழுத்திட்ட உடன்பாட்டிலிருந்து ஐ.அமெரிக்கா வெளியேறக்கூடாது என்று, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா, சீனா ஆகிய உடன்படிக்கையில் கையொப்பமிட்ட மற்றைய நாடுகள் உறுதிபடத் தெரிவித்துள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது. ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன், “ஐ.அமெரிக்கா, குறித்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறக்கூடாது என்பதை, நாம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றோம்” எனக் கூறியிருந்தார்.

சவூதி அரேபியா, இஸ்‌ரேல் ஆகிய நாடுகள், ஜனாதிபதி ட்ரம்ப்பின் உரையை, மறுபுறத்தே வரவேற்றிருந்தன. சவூதி வெளிவிவகார அமைச்சர் அடேல் அல்-ஜுபீர், ஈரான், குறித்த உடன்படிக்கையில் தங்கியிருப்பதாக சவூதி நம்பவில்லை எனவும், “சர்வதேச சமூகம் எவ்வாறாயினும் ஈரான் மீது தடைகளைக் கொண்டிருக்கவேண்டும் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று தெரிவித்திருந்தார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனும், ஜேர்மனிய சான்செலர் அங்கெலா மேர்க்கலும், வெளியேறக்கூடாது என்ற நிலைப்பாட்டைக் குறிப்பிட்டிருந்தனர். வடகொரியா, அணுவாயுதப் பயன்பாட்டைத் தவிர்த்து, சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தைக்கு வரும் பட்சத்தில், ஈரானுடன் சர்வதேச சமூகம் மேற்கொண்ட ஒப்பந்தமானது, முன்மாதிரியானதோர் ஒப்பந்த வரைவாக அமையும் எனவும், அவ்வொப்பந்த அடிப்படையிலேயே சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ளமுடியும் எனவும் மேர்க்கெல் முன்மொழிந்திருந்தமை, அவரது ஈரான் ஒப்பந்தம் தொடர்பான ஈடுபாட்டைக் காட்டுவதாகவே அமைவதாக அவதானிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதி ட்ரம்ப்பின் உரை, எவ்வாறான தாக்கங்களை, சர்வதேச அரசியலில் மேலதிகமாக ஏற்படுத்தப்போகின்றது என்பது, இன்னுமே புலப்படாத ஒன்றாக - ஆனால் குழப்பம் மிக்கதாகவே - அமையப்போகின்றமை, சர்வதேச பாதுகாப்பை எவ்வாறான ஒரு மறுதளத்துக்கு இட்டுச்செல்லும் என்பதே, இப்போதைய சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் பிரதான கேள்வியாகும்.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/குழப்பங்களைத்-தந்துள்ள-ட்ரம்ப்பின்-ஐ-நா-உரை/91-204413

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்! மாலைதீவுக்கே ஜனாதிபதியாக வர உலக அரசியல் அறிவில்லாத சுத்த சூனியம். அமெரிக்காவின் பெயர் கெட்டுப்போகக்கூடாது என்பதற்காக இவரை கட்டிப்பாதுகாக்கிறார்கள் போலிருக்கு...tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.