Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் என்னும் இசைக்கருவி - ஒரு பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கியங்களில் யாழ்

தொல்காப்பியத்தில் தொடங்கி, அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், மலைபடுகடாம் முதலிய இலக்கியங்களில் யாழ் வாசிப்பைப் பற்றியும், பல்வகை யாழ்களைப் பற்றியும், யாழின் உறுப்பமைதியைப் பற்றியும் குறிப்புகள் பல இருக்கின்றன. இசைக் களஞ்சியமாய் விளங்கும் சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதையில் யாழாசிரியனின் அமைதியும், கானல் வரி மற்றும் வேனிற் காதையில், யாழ் வகைகளும், யாழின் உறுப்புகள் பற்றியும், யாழ் நரம்புகளை பரிசோதித்து சுருதி கூட்டிப் பின்னர் யாழை எங்கனம் இசைப்பது என்பதற்கான இலக்கணங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணியில் காந்தர்வதத்தைக்கும் சீவகனுக்கும் இடையில் நடக்கும் யாழிசைப் போட்டி பற்றிய பாடல்களில், யாழுக்கு நேரக்கூடிய குற்றங்கள் பற்றியும், யாழுடன் சேர்ந்து பாடுவதற்கான இலக்கணமும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமுறையாசிரியர்களின் பதிகங்களில் யாழ் இறையாடலுக்குப் பயன்பட்ட வாத்தியமெனப் பல இடங்களில் குறிக்கிறார்கள். கல்லாடத்தில் யாழ் வகைகளைப் பற்றிய விரிவான தகவல்கள் உள்ளன.

சங்க இலக்கியங்களில் யாழைப் பற்றிய விரிவான தகவல்கள் இருப்பதை வைத்துப் பார்க்கும் பொழுது, சங்க காலத்துக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே யாழ் தோன்றியிருக்கும் என்று கொள்ளலாம். 1947-ஆம் ஆண்டு சுவாமி விபுலானந்தர் 'யாழ் நூல் என்னும் இசைத் தமிழ் நூல்' என்ற புத்தகத்தில் யாழைப் பற்றி பல விரிவான ஆய்வுகளைத் தொகுத்துள்ளார்.

யாழின் தோற்றமும் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

மலைவாழ் வேடர்கள் தங்கள் வில்லின் நாணை மீட்டிய பொழுது இனிய ஓசை எழுவதை உணர்ந்து, ஒரு இசைக்கருவியை அமைக்க முனைந்ததன் பயனாய் விளைந்ததே யாழ். இந்த யாழ் 'வில் யாழ்' வகையைச் சேர்ந்தது. நாணை மீட்டினால் பிறக்கும் ஒலியிலிருந்து எப்படி இசை பிறந்திருக்க முடியும் என்பதைச் சற்று பார்ப்போம். நரம்பிசைக் கருவியின் தந்தியை மீட்டும் பொழுது அதில் பிறக்கும் ஒலியின் சுருதியானது (pitch) தந்தியின் நீளம், தந்தியின் மீதுள்ள அழுத்தம் (tension), தந்தியின் பருமன் (diameter/thickness) ஆகிய மூன்றின் அளவால் மாறுபடும். தந்தியின் நீளம் குறையக் குறைய சுருதி அதிகமாகும். தந்தியின் பருமன் மிக சுருதி குறையும். தந்தியின் மீதுள்ள அழுத்தம் மிக சுருதி கூடும். ஒரு தந்தியை மீட்டும் பொழுது அதன் முழு நீளம் அசையும் பொழுதே அத்தந்தி இரண்டாகவும், மூன்றாகவும், நான்காகவும், ஐந்தாகவும் பிரிந்து அசையும். இவ்வாறு உருவாகும் பிரிவுகளை 'லூப்' (loop) என்பர். இவ்வாறு பிரிவுகள் ஏற்படும் பொழுது தந்தியின் நீளம் குறைவதால் (with respect to that mode of vibration), ஆதார சுருதியுடன் சேர்ந்து வேறு சில சுருதிகளும் ஒலிக்கும்.றைதனால்தான், ஒரு தம்புராவை மீட்டும் பொழுது, அத்தம்புராவில் உள்ள ப, ச, ச, ச என்ற நான்கு ஆதார ஸ்வரங்களைத் தவிர அந்தர காந்தாரம், சதுசுருதி ரிஷபம் ஆகிய சுவரங்களும் கேட்கிறது. (மோகமுள் நாவலில் ரங்கண்ணா இந்த அந்தர காந்தாரத்தில் இறைவன் இருப்பதாகக் கூறுவதை இங்கு நினைவு கொள்ளலாம்.) இவ்வாறு தோன்றிய ஸ்வரங்களில் சில ஸ்வரங்களைக் கோக்கும் பொழுது இனிய உணர்வு எழுவதை உணர்ந்து (ச - ப உறவு, ச -ம உறவு, ச -க உறவு போன்ற உறவுமுறைகளைப் பற்றி தமிழிலக்கியங்களும் இசைநூல்களும் விரிவாகப் பேசும்.) உருவாக்கப் பட்ட கருவியே யாழ். யாழ் மூலமே நரம்பாய்வுகள் நடந்து பாலைகள் (scales) பிறந்தன. பாலைகளிலிருந்து பல பண்கள் (இராகங்கள்) தோன்றி தமிழிசை வளர்ந்தது. (பழம் பண்களான 'பாலையாழ்', 'குறுஞ்சி யாழ்', 'மருத யாழ்', 'நெய்தல் யாழ்' என்பனவற்றில், 'யாழ்' என்னும் suffix, இப்பண்கள் யாழினின்று தோன்றியதைவுணர்த்தும்.)

இசையறிவு வளர்வதற்கேற்ப சில தந்திகள் கொண்ட வில் யாழும் பேரியாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ், சகோட யாழ் என்று பரிணாம வளர்ச்சியடைந்தது. (சங்க இலக்கியங்களில் வில் யாழ், பேரி யாழ், சீறி யாழ் பற்றிய குறிப்பே இருக்கிறது. சகோட யாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ் ஆகியவை சிலம்பிலும், மணிமேகலையும், சீவக சிந்தாமணியிலும் குறிப்பிடப்படுகின்றன. நாரதப் பேரியாழ், கீசகப் பேரியாழ் போன்ற யாழ்களைப் பற்றிய விரிவான தகவல்களை கல்லாடம் அளிக்கிறது) ஆதியில் தோன்றிய வில் யாழில் நுண் ஓசைகளான கமகங்களை வாசித்திருக்கச் சாத்தியமில்லையெனினும், படிப்படியாக வளர்ந்து சிலப்பதிகார காலத்தில் உச்சத்தை அடைந்து, பத்தல், வறுவாய், யாப்பு, பச்சை, போர்வை, துரப்பமை ஆணி, உந்து, நரம்பு, கவைக்கடை, மருப்பு, திவவு என்று பல உறுப்புக்களைப் பெற்று வளர்ந்த யாழில் கமகங்கள் வாசித்திருக்காவிடில்தான் அதிசயம்! (முன்னுரையில் குறிப்பிட்டுள்ள ஆய்வாளர்களின் கருத்துப்படி சம்பந்தர் கடினமான தாளத்தில் பாடியே திருநீலகண்ட யாழ்பாணரை தோற்கடித்தார், சம்பந்தர் பாடிய கமகங்களை யாழில் கொண்டுவர இயலவில்லை என்னும் பரவலான கருத்து தவறான ஒன்றாகும்.)

ஒற்றை வில் நாணில் தொடங்கி யாழில் நரம்புகளும் கூடிக் கொண்டே சென்றன. செங்கோட்டு யாழுக்கு ஏழு தந்திகளும், சகோட யாழுக்கு பதினான்கு தந்திகளும், மகர யாழுக்கு பத்தொன்பது தந்திகளும், பேரியாழுக்கு இருபத்தோரு தந்திகளும் இருந்ததாகப் பஞ்ச மரபு தெரிவிக்கிறது. நமது நாடுகளைப் போலவே மற்ற நாடுகளிலும் யாழினைப் போன்ற கருவியிருந்தது தெரிகின்றது. மகர யாழ் யவன தேசத்திலிருந்து எடுத்துவரப்பட்டதாக பெருங்கதையில் குறிப்பிருக்கிறது.

சிலப்பதிகாரத்தில் யாழை தெய்வம் போலவே தமிழர் வணங்கியது தெரிய வந்தாலும், காலப்போக்கில் யாழ் செல்வாக்கிழந்து இன்றைய நிலையில் வழக்கொழிந்தும் விட்டது. வீணையின் வரவே யாழின் செல்வாக்கையழித்தது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். யாழ் பல நூற்றாண்டுகள் உருவத்தில் முன்னேற்றம் அடைந்து வீணையாக மாறியது என்ற கருத்தையும் இவர்கள் தெரிவிக்கிறார்கள்.

யாழின் அமைப்பையும் வீணையின் அமைப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, யாழில் வெவ்வேறு நீளமுள்ள நரம்புகளை பூட்டுவதன் மூலம் பல ஸ்வரங்களை இசைத்திருப்பது தெரிகிறது. ஆக, மூன்று ஸ்தாயிகளில் வாசிக்க குறைந்த பட்சம் 21 நரம்புகள் தேவைப்படும் (this is for the case where a yazh has only 7 swaras in an octave). வீணையில் அமைந்திருக்கும் வீடுகளில் இடது கையை வைத்தழுத்தி வலக்கையால் தந்தியை மீட்டும் பொழுது, அதிர்வுக்குள்ளாகும் தந்தியின் நீளம், இடதுகை அழுத்தும் வீட்டின் இடத்தைப் பொருத்து மாறுபட்டு, அதற்கேற்றார் போல வெவ்வேறு ஸ்வரங்களில் ஒலிக்கும். இதனால், இரு தந்திகள் இருந்தாலே மூன்று ஸ்தாயியிலுள்ள அனைத்து ஸ்வரங்களையும் வாசித்துவிடலாம். யாழைக் காட்டிலும் வாசிப்பதற்குச் சுலபமான அதே சமயத்தில் ஒலிக்கும் நாதம் அற்புதமாகவும், நுண்ணொலிகளான கமகங்கள் இசைக்கவும் ஏதுவான வாத்தியம் வீணை என்பது தெளிவாகிறது.

சில நூற்றாண்டுகளுக்கு முன் வந்த வயலின், நமது இசையை வாசிக்க, வீணையைக் காட்டிலும் சுலபமான ஒன்றாக இருப்பதால், இன்று வீணையின் இடத்தைப் பிடித்துக் கொண்டது போலப் பல நூற்றாண்டுகள் கோலோச்சிய யாழின் இடத்தை வீணை பிடித்திருக்கும் என்று கோள்ளலாம். வீணையின் வரவு யாழின் செல்வாக்கைக் குறைத்தாலும், வீணையும் யாழும் சேர்ந்தே பல நூற்றாண்டுகள் இருந்திருக்கின்றன. பல்லவர் காலக் கோயில்களிலும், சோழர் காலக் கோயில்களிலும் வீணை மற்றும் யாழின் சிற்பங்களைக் காண முடிகிறது. முதலாம் இராஜாதிராஜர் காலத்தில் திருவரங்கம் கோயிலில் யாழ் வாசிக்கப்பட்டதாக நாழிகேட்டான் வாசலில் உள்ள கல்வெட்டொன்று கூறுகிறது

சிற்பங்களில் யாழ்

பல்லவர் காலக் கோயிலான (இராஜசிம்மன்) காஞ்சி கைலாசநாதர் கோயில் மற்றும் சோழர் காலக் கோயில்களான பொன்செய் நல்துணையீஸ்வரம் (பராந்தகன்), திருமங்கலம் (உத்தம சோழன்) கோயில்களில் கண்ட யாழ்ச் சிற்பங்களைப் பற்றிய குறிப்புகள் பின் வருமாறு:

காஞ்சி கைலாசநாதர் கோயில்

yazh01.jpg

இராஜசிம்மன் எழுப்பிய காஞ்சி கைலாசநாதர் கோயிலில், தென்புறச் சுவர் பகுதியில், தென் மேற்கு மூலையில், கின்னரம் ஒன்று யாழிசைத்தவண்ணம் காட்டப்பட்டிருக்கிறது. மனிதனைப் போன்று முகமும் உடலும் கொண்டு பறவையைப் போன்ற கால்களும் இறகுகளும் கொண்ட கின்னரம் புன்னகையுதிர்த்தவாரு யாழிசைக்கிறது. யாழின் அளவு சிறியதாக, கைக்குள் அடங்கும் வண்ணமிருக்கிறது. யாழின் மருப்பு (தண்டு) வளைந்து ஆய்த வட்டமாக (ellipse) இருக்கிறது. யாழின் நரம்புகள் தனித்தனியாகக் காட்டப்படவில்லை.

பொன்செய் நல்துணையீசுவரம்

பொன்செய் நல்துணையீசுவரம் கோயிலில் வடக்குப் பகுதியில், கொற்றவைக் கோட்டத்துக்கருகில் ஓர் அற்புதக் கையளவுச் சிற்பத்தில் யாழிசைப் போட்டியொன்று இடம் பெற்றுள்ளது. 1992-ஆம் வருடம் முனைவர் கலைக்கோவன், இச்சிற்பத்தை சீவக சிந்தாமணியில், காந்தருவதத்தைக்கும் சீவகனுக்கும் நடக்கும் யாழிசைப் போட்டியென அடையாளப்படுத்தியுள்ளார். ரங்கராமனுஜ ஐயங்காரின் புத்தகத்தில் இக்காட்சி விவரிக்கப்பட்டுள்ளது. அதன் தமிழாக்கம் பின்வருமாறு.

yazh02.jpg

பொன்செய் நல்துணையீசுவரத்தில் காட்டப்பட்டிருக்கும் சீவக சிந்தாமணி யாழிசைப் போட்டி

காந்தருவதத்தை என்னும் இசையில் தேர்ந்த பெண்ணை யாழிசைப்போட்டியில் வெல்வோற்கே அவளுரியவள் என்று நாடெங்கும் அறிவிப்பு வருகிறது. பல வல்லுநர்கள் போட்டி போட்டுத் தோல்வியைத் தழுவுகிறார்கள். இறுதியில், கதாநாயகனான சீவகன் போட்டியிட அவனது நண்பன் புத்திசேனனுடன் வருகிறான். போட்டி தொடங்குகிறது. காந்தருவ தத்தை ஒரு யாழை அவளது பணியாளரான வீணாபதி என்னும் பேடியிடம் கொடுத்தனுப்புகிறாள். சீவகன் அதனைச் சோதித்து அந்த யாழ் அதிக ஈரப்பதம் கொண்ட மரத்தால் செய்யப்படது என நிராகரித்துவிடுகிறான். அடுத்த வந்த யாழை தீ தாக்கிய மரத்தால் செய்ததென்றும், அதனைத் தொடர்ந்து வந்த யாழை மின்னல் தாக்கிய மரத்தால் செய்யப்பட்டதென்றும் மறுத்தலித்துவிடுகிறான். கடைசியில், காந்தருவதத்தை தனது யாழைக் கொடுத்தனுப்புகிறாள். அந்த மகர யாழைப் பலவிதமாய் பரிசோதித்து, நரம்புகளைக் சரியான சுருதியில் கூட்டி இசைத்து போட்டியில் வென்று காந்தருவதத்தையின் கரம் பிடிக்கிறான்.

பொன்செய் சிற்பத்தின் வலப்புறம் ஆடவர் மூவர் இருக்க, இடப்புறம் பெண்கள் காட்டப்பட்டிருக்கிறார்கள். இருவருக்குமிடையே திரை காட்டப்பட்டுள்ளது. இதைச் சீவகசிந்தாமணி சுட்டும் பளிக்கொளி மணிச்சுவர் எழினியாகலாம் என்கிறார் முனைவர் கலைக்கோவன். அவருள் யாழிசைப்பவரை சீவகனாகவும், மற்ற இருவருள் ஒருவரை சீவகனின் நண்பன் புத்திசேனனாகவும் கொள்ளலாம். காந்தருவதத்தை யாழிசைத்தபடியிருக்க, அவளுக்கருகே வீணாபதியும், இரு தோழியரும் காட்டப்பட்டிருக்கிறார்கள்.

சீவகன் இருக்கும் பகுதியில் சிமெண்ட் கலைவை ஆங்காங்கே திட்டுத் திட்டாய் படிந்து சிற்பத்தை பாழ் பண்ணியுள்ளது. காந்தருவதத்தை இருக்கும் பகுதி தெளிவாகயிருக்கிறது. காந்தருவதத்தை கையிலிருக்கும் யாழ் தெள்ளத்தெளிவாக இருக்கிறது. யாழின் மருப்பு (தண்டு) நன்கு வளைந்தும், மேல் பகுதியில் குருகியும், கீழ் பகுதியில் சற்றே பருத்தும் காணப்படுகிறது. யாழின் வடிவம், சீவக சிந்தாமணியில் குறிப்பிட்டிருப்பது போல, மகர வடிவிலில்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. யாழில் ஏழு நரம்புகள் தெரிகிறது. காந்தருவதத்தையின் இடது கையின் ஐந்து விரல்களும் யாழின் ஐந்து நரம்புகளில் வைத்து, அவள் இசைப்பதைப் போல மிக இயல்பாகக் காட்டப்பட்டுள்ளது.

திருமங்கலம்

yazh03.jpg

திருமங்கலம் கோயில் கையளவு சிற்பத்தில் காட்டப்பட்டிருக்கும் யாழ்

திருச்சியிலிருந்து லால்குடி செல்லும் வழியில், லால்குடிக்குச் சற்று முன்பு வரும் ஊர் திருமங்கலம். குழலூதி இறையெய்திய ஆனாய நாயனார் அவதரித்த இத்தலத்தில், ஓர் அற்புதமான சோழர்காலக் கோயில் இருக்கிறது. கோயிலின் வடபுறத்தில் ஓர் அரிய கையகலச் சிற்பம் சற்றே சிதைந்த நிலையில் காணப்படுகிறது. சிற்பத்தில், இரு உருவங்கள் காட்டப்பட்டிருக்கிறது. ஆவிருவரில் ஒருவர் யாழ் மீட்ட, அவ்விசைக்கேற்ப கஞ்சக் கருவியான தாளத்தை மற்றொருவர் இசைத்த வண்ணம் இருக்கிறார். சிதிலமடைந்திருக்கும் இச்சிற்பத்தில், யாழின் உறுப்புக்கள் தெளிவாகத் தெரியாவிடினும், யாழிசைப்பவரின் கை மற்றும் காலின் நிலைகள் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை.

முடிவுரை

யாழைப் பற்றி பல ஆய்வுகள் இருப்பினும், ஆய்வாளர்களிடையில் கருத்து வேறுபாடு அதிகம் காணப்படுகிறது. பல ஆய்வுகள் முடிவை உரைக்கின்றனவே தவிர, அம்முடிவை நாம் ஏன் ஏற்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் தெளிவுரக் கூறப்படவில்லை. முன்னுரையில் குறிப்பிட்டுள்ள புத்தகங்களைப் படித்தவுடன், சிலப்பதிகாரத்தையும், சீவக சிந்தாமணியும், சங்க இலக்கியங்களையும் படித்து சொந்தமாய் ஒரு முடிவிற்கு வருவதே உத்தமம் என்று தோன்றுகிறது. ஆய்வாளர்களின் கருத்தையும் உழைப்பையும் குறைத்து மதிப்பிட்டு இதைக் கூறவில்லை. ஒரு சாதாரணன் நான்கு புத்தகங்களின் ஒன்றிற்கொன்று முரணான கருத்துக்களைக் காணும் பொழுது எழும் குழப்பத்தால் இதைக் கூறுகிறேன்.

இலக்கியங்களில் படித்து தெரிந்து கொள்வதைவிட ஒரு சிற்பத்தைக் காண்பதன் மூலம் நிறைய அறிந்து கொள்ள முடியும். ஆய்வாளர்கள் யாழின் உறுப்பிலக்கணம் விளக்க, கற்பனையாய் ஒரு படம் வரைவதைவிட, பல நூற்றாண்டுகளாய் நிற்கும் கோயில் சிற்பங்களைத் துணை கொண்டு விளக்கினால் தவறான கருத்து பரவும் வாய்ப்புகள் குறைவு.

நன்றிகள்: லலிதா - வரலாறு இணையம்

--------------------------------------------------------------

சீவகசிந்தமணி சமணநூல் என்று பலர் சொன்னாலும், அவர் பற்றிய சிற்பம் இந்துக் கோவலில் தான் செதுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் சொல்வது போல," சிலப்பதிகாரத்தையும், சீவக சிந்தாமணியும், சங்க இலக்கியங்களையும் படித்து சொந்தமாய் ஒரு முடிவிற்கு வருவதே உத்தமம் என்று தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பதிவை இணைத்திருக்கிறீர். பயனுள்ள பல செய்திகள் உள்ளன.

ஆனால் வழக்கமான இந்து அடிப்படைவதத்துடன் முடிக்கிறீர். கவியரசர் கண்ணதாசன் தமிழரின் வாழ்வியல் தத்துவங்களை இந்து மதத்துடன் இணைத்து நூல் எழுதியது போல் நீரும் செயல் பட விரும்புகிறீர்.

விதண்டாவதம் கதைத்து இந்தப் பதிவையும் கெடுக்கவேண்டாம். நல்ல செய்திகளை மதத் தன்மைகள் அற்று தாரும். நாங்களும் படிக்க ஆவலாக உள்ளோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் வழக்கமான இந்து அடிப்படைவதத்துடன் முடிக்கிறீர். கவியரசர் கண்ணதாசன் தமிழரின் வாழ்வியல் தத்துவங்களை இந்து மதத்துடன் இணைத்து நூல் எழுதியது போல் நீரும் செயல் பட விரும்புகிறீர்.

இந்து மதக் கோவில் ஒன்றில், சீவகன் பற்றிய சிற்பம், ஒன்று செதுக்கப்பட்டிருப்பதை நினைவூட்டினேன். அவ்வளவே! மற்றும்படி நான் மற்றய மதங்களுக்கு எதிரானவன் அல்ல. சபேசன் கிறிஸ்தவமதத்தை விமர்சித்து கட்டுரை எழுத முனைந்தபோதும் அதைத் தடுத்தேன். கண்ணதாசர் சொன்ன அர்த்தமுள்ள இந்து மதம் நியாயமானதே!

மதக் கொள்கை என்பது, பொதுவாழ்வில் ஒன்றித்து அமைவது என்பது புதினமல்ல. ஆனால் அது காலத்துக்கு காலம் புதுப்பிக்க வேண்டியவை. பொதுவாழ்வில் ஒன்றிணைததால் தான், சமணக் கொள்கைகள் தோற்றுப் போயின. இந்து மதம் சமுதாயத்தில் ஒன்றித்து இருந்ததால் தான் அது இப்போதும் நிலைக்கின்றது. ஆனால் அவ்வாறு இல்லை என்று மாயத்தோற்றத்தை ஏற்படுத்ததத் தானே நீங்கள் முனைகின்றீர்கள்.

நல்ல பதிவை இணைத்திருக்கிறீர். பயனுள்ள பல செய்திகள் உள்ளன.

ஆனால் வழக்கமான இந்து அடிப்படைவதத்துடன் முடிக்கிறீர். கவியரசர் கண்ணதாசன் தமிழரின் வாழ்வியல் தத்துவங்களை இந்து மதத்துடன் இணைத்து நூல் எழுதியது போல் நீரும் செயல் பட விரும்புகிறீர்.

விதண்டாவதம் கதைத்து இந்தப் பதிவையும் கெடுக்கவேண்டாம். நல்ல செய்திகளை மதத் தன்மைகள் அற்று தாரும். நாங்களும் படிக்க ஆவலாக உள்ளோம்.

நீரை விட்டு பாலைக் குடிக்கும் அன்னம் போல் உமக்குத் தேவை இல்லத விடயங்களை விட்டு உமக்கு தேவயைனதப் படிகலமே......?

பாலிலே இருப்பது நீரா அல்லது ஒரு துளி விசமா என்பதுதான் இங்கு பிரச்சனை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலிலே இருப்பது நீரா அல்லது ஒரு துளி விசமா என்பதுதான் இங்கு பிரச்சனை

அருமையான வரி தோழரே!

நூற்றுக்கு நூறு உண்மை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலிலே இருப்பது நீரா அல்லது ஒரு துளி விசமா என்பதுதான் இங்கு பிரச்சனை

கலக்கின்ற நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.