Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

Featured Replies

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
 

அடுத்த வருடத் தீபாவளியை (2018) நல்லதொரு தீர்வுடன், மன நிம்மதியாகத் தமிழ் மக்கள் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது என, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த, தீபாவளிப் பண்டிகை, அலரிமாளிகையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு, உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.   

தமிழ் மக்களின் தற்போதைய தலைவர் என்று கூறப்படும் சம்பந்தன் அவர்களின், மிக அண்மைய கண்டுபிடிப்பு இது ஆகும். இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு, தலைவர் கொளுத்திய பெரும் ‘மத்தாப்பு வெடி’ எனக் கூறினாலும் ஆச்சரியமில்லை.  

உண்மையில், மைத்திரி - ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை, இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்கள், மிகப் பாரிய எதிர்பார்ப்புகளோடும் கனவுகளோடும் ஆட்சியில் அமர்த்தினார்கள்.   

தம் வாழ்வின் அவலக் காட்சிகள் கலையட்டும் என ஆட்சி மாற்றத்தை மானதார, மானசீகமாக விரும்பினார்கள்.   

ஆனாலும், அம்மக்களது எதிர்பார்ப்புகள் மைத்திரியின் ஆட்சிக் காலத்தில் நிறைவேறுமா என்பது, கானல் நீராகவே உள்ளது.   

இன்று ஆட்சிபீடத்திலுள்ள அரசாங்கம் மீது, 2015 ஜனவரியில், தமிழ் மக்கள் கொண்டிருந்த பெரிய நம்பிக்கைகள் தற்போது சிதைந்து, தேய்ந்து வருவது கண்கூடு.   

ஏனெனில், தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கம் மட்டுமல்ல, நாட்டின் கடந்த கால எல்லா அரசாங்கங்களுமே, சிங்கள மக்களுக்குத் தங்கத் தட்டிலும் தமிழ் மக்களுக்கு தகர தட்டிலும் அன்னமிட்டு, வெகு நாட்களாக பழக்கப்பட்டுவிட்டன.   

வெகு சீக்கிரமாக, ஏன் சில வேளைகளில் நீண்ட காலம் சென்றாலும்கூட, இவர்கள் நடு நிலையாகப் பக்கம் சாராமல், உத்தம புத்திரர்களாகத் தோற்றம் பெறுவார்கள் என நினைக்க முடியாது.   

புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னரான, இரண்டுக்கும் மேற்பட்ட வருட காலப்பகுதியில், தமிழர் வாழ்வில் பெரிதாக குறிப்பிட்டுச் சொல்லும் படியாக, ஒன்றும் சிறப்பான ஏற்றங்கள் நடைபெறவில்லை.  

தமிழ் மக்களுக்குச்  சொற்களால் மட்டும் வாக்கை வழங்கி, அவர்கள் வாக்குகளைப் பெற்றபின்னர், சிங்கள மக்கள் மனம் குளிரும் படியாகத் தம் செல்வாக்கை உயர்த்துவதே, இவர்களது நீண்ட கால மரபு, பாரம்பரியம் ஆகும்.   

வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டு, சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ்க் கைதிகளது நிலை, வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான மரணப் போராட்டமாக உள்ளது.   

அவர்களது கோரிக்கைகள், தொடர்ச்சியாக எள்ளளவும் கருத்தில் கொள்ளாது, நல்லாட்சி என்று சொல்லப்படும் அரசாங்கத்தால் கூட, நிராகரிக்கப்பட்டே வரப்படுகின்றது.   

தற்போது கூட, அவர்கள் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கவில்லை. மாறாக, வவுனியாவில் நடைபெறும் வழக்கு விசாரணையை, அநுராதபுரத்துக்கு மாற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.   

இவர்களது கோரிக்கைகளுக்கு ஆதரவாக, தமிழர் தாயகப் பகுதிகளில் போராட்டங்களும் கடை அடைப்புப் போராட்டங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதேவேளை, “இவ்வாறான போராட்டங்களை நடத்துவதால், ஆகப்போவது ஏதும் இல்லை” என நல்லாட்சி அரசாங்கத்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.   

இலங்கை இனப்பிரச்சினையின் தோற்றுவாய்களாக, இரண்டு முக்கிய காரணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முதலாவது, தமிழ் மக்களினது மொழி உரிமை மீறப்பட்டமையும் இரண்டாவது, அவர்களது நிலம் அபகரிக்கப்பட்டமையும் ஆகும்.   

இந்நிலையில், திருகோணமலையில், சலப்பையாறு பகுதியில் அநுராதபுரம் மாவட்டத்திலிருந்து அழைத்து வரப்பட்டு, 650 க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன.   

தமிழ் மக்களினது பூர்வீகப் பிரதேசமான குமரேசன்கடவை இப்போது கோமரங்கடவை எனச் சிங்கள நாமம் சூட்டப்பட்டு, கல்லப்பத்தை பிரதான வீதியை அண்டி, இக்குடியேற்றம் நடைபெறுகின்றது.   

அதுவும் வேறு மாகாணங்களைச் சேர்ந்த சிங்கள மக்களை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடியேற்றும் இலங்கை அரசாங்கங்களின் நீண்ட கால நிகழ்ச்சி நிரல்திட்டம், இன்னமும் தடையின்றித் தொடர்கின்றது. அதனூடே தமிழர் பிரதேசத்தில், தமிழ் மக்களது இனப்பரம்பலும் இருப்பும் சிதைக்கப்படுகின்றது; கேள்விக் குறியாக்கப்படுகின்றது.  

பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களை, மூன்று தசாப்தங்கள் கடந்தும் ஒரு தடவை கூட, ஆசையாகப் பார்க்க அனுமதிக்காத நிலை காணப்படுகின்றது. இது தொடர்பில் இன்னும் கடும் போக்குடன் செயற்படுகின்றது நல்லாட்சி அரசாங்கம். நாட்டின் ‘தேசியப் பாதுகாப்பு’ என்பது சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிரான போராட்டங்களுக்குத் தடைவிதிக்கும் வகையில் சூட்டிய அழகான திருநாமம் ஆகும்.   

இலங்கை அரசாங்கத்தின் பூரண ஆசீர்வாதம் மற்றும் அனுசரணையுடன், நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரின் முழுமையான பங்களிப்புடன் கிழக்கை விழுங்கும் திட்டம் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றது.   

அல்லைத்திட்டம், கந்தளாய்த்திட்டம், பதவியாத்திட்டம், மொறவெவாத்திட்டம், மகாதிவுள்வௌதிட்டம் என விவசாய விரிவாக்கல் திட்டங்கள் என்ற கோதாவில், திருகோணமலையைக் கபளிகரம் செய்யும் பொருட்டு, காலத்துக்குக் காலம் சிங்கள ஆட்சியாளர்களால் நிலப்பறிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   

ஆனால், தற்போது நல்லாட்சி என வாய் கூசாமல் கூறிக்கொண்டு, இத்தகைய திட்டங்கள் கனகச்சிதமாக, காதும் காதும் வைத்தது போல நடந்தேறுகின்றன.  

தனது வீட்டு முற்றத்தில் (சொந்த மாவட்டத்தில்) இவ்வாறாக நல்லிணக்கத்தை, ஒருமைப்பாட்டை வேரோடு சாய்க்கும் திட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. இதற்கு எதிராக, வெறும் எதிர்ப்பு அறிக்கை அரசியல் கூட, தமிழ் அரசியல்வாதிகளால் இதுவரை செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.  இதே போக்கு, உண்மையில் சம்பந்தன் கூறும் அடுத்த தீபாவளிக்குள், திருக்கோணமலையின் மொத்த சனத்தொகையில் பாதிப்பேர் பெரும்பான்மை இனத்தவராகப் பரிணமிப்பர் என்பதே உண்மை. இந்நிலையில் சம்பந்தன் அவர்களோ, நல்லாட்சி மனநிறைவை தருகின்றது என எவ்வகையில் கூறுகின்றார்.   

அடுத்ததாக, வவுனியா வடக்கில் கொக்கச்சான்குளம் என்ற தமிழ்க் கிராமம் ‘கலாபோகஸ்வெவ’ எனச் சிங்களப் பெயர் சூட்டி, சிங்கள மக்கள் கடந்த ஆட்சி காலத்தில் குடியேற்றப்பட்டனர். அங்கு, நாமல்புர என்ற உபகிராமமும் படையினரால் உருவாக்கப்பட்டது.  

நிலைமை இவ்வாறிருக்க, சட்ட விரோதமான முறையில் தமிழ் மக்களது விருப்பத்துக்கு முற்றிலும் மாறாக, கடந்த ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட கிராமத்துக்கு, நடப்பு ஆட்சியாளர்கள் சட்ட அங்கிகாரம் வழங்கி உள்ளனர். சாட்டுக்காக, சில தமிழ்க் கிராமத்தவர்களுக்கும் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.  

ஆம்! இவற்றுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு, அண்மையில் (21.10.2017) வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.  

image_9ea15ecbe5.jpg

இந்நிகழ்வில் ஐனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய கொழும்பு அமைச்சர்கள் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்படிப்பட்ட காணி உறுதி வழங்கும் அந்த மேடையை, மேலும் அழகுபடுத்தியவர்கள் நாடாளுமன்றத் தமிழ் பிரதிநிதிகளான எம். ஏ சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோராவர்.   

தேர்தல் கால பரப்புரைகளில், அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்துக்கு எதிராக வலுவான எதிர்ப்புக் குரல் கொடுப்போம் என வலிந்து கூறியவர்கள், எவ்வித வலியும் இன்றி, மேடையில் முன் வரிசையில் வீற்றிருந்தனர்.   

போதாக்குறைக்கு எதிர்க்கட்சித் தலைவரால் அந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் அவரது வாழ்த்துச் செய்தியை (காணி அபகரிப்பு, தமிழ் மக்களின் துயரச்செய்தி) அவரின் பிரதிநிதியாகக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் வாசித்தளித்தார்.  

தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்தின் பங்காளியாக இணையவில்லை. ஆனால், அரசாங்கத்தின் பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு (தமிழர் காணியை சிங்கள மக்களுக்கு உறுதி மாற்றி வழங்கியமை) ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது. 

இவ்வாறாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களது பிரதிநிதிகள் மூலமே, தமிழ் மக்களது காணியைத் தாரை வார்க்கும் (தமது கைகள் மூலம், தங்கள் கண்களைத் தோண்டி எடுத்தல்) திட்டத்தை நல்லாட்சி நலமாகக் கொண்டு செல்கின்றது. இதுவே சிங்கள ஆட்சியாளர்களின் இராஜதந்திரம். சட்டத்தில் பட்டம் பெற்றவர்கள், அவர்களின் திட்டத்தில் விழுந்தது வெளிப்படை. ஏன் இவர்களால் இவற்றுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட தெரிவிக்க முடியாமல் போனது? 

நாட்டின் தற்போதைய தலைவர்கள், கடந்த ஆட்சியாளர்களின் ஆட்சி எல்லைகளுக்குள்ளேயே இன்னமும் ஆட்சியை அலங்கரிக்கின்றனர். இவர்கள் வெளியே வர சிங்கள இனவாதம், பௌத்த மதவாதம் இம்மியளவும் இடம் கொடுக்காது.   
இந்த நிலையிலேயே தமிழ் மக்கள், இந்நாட்டில் தமக்கான நிரந்தர, நியாயமான தீர்வுக்கான வெளிச்சம் தூரத்திலும் தென்படவில்லை என்ற அங்கலாய்ப்புடனும் ஏக்கத்துடனும் அச்சத்துடனும் நாட்களை ஓட்டுகின்றனர்.   

இவ்வாறு நடப்பு நிலைவரங்கள் யாவுமே கவலை அளிப்பதாகவும் தலைக்கு மேலே எல்லை மீறிப்போவனவாகவும் மிகவும் மோசமான நிலையே காணப்படுகின்றது.  தம் மீதான விரோத நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் பெரும் உள நெருக்கடியில் மீளாத்துயரில் உள்ளனர்.   

இதற்கு மேலாக, தமிழ்த் தலைமைகளின் தலைமைத்துவ வறுமை, தமிழ் மக்களை வெறுமை நிலைக்குள் தள்ளி விட்டுள்ளது. சிங்கள ஆட்சியாளர்கள் தமது ஆட்சி, தமிழ் மக்களுக்கு மன நிறைவை தந்துள்ளது எனக் கூறலாம். ஏனெனில், அது அவர்களின் அரசியல். ஆனால் அதையே சம்பந்தன் சொல்வது?   

இவ்வாறாக, நம் ஊர்களில் மாலை வேளைகளில் ஆலடியிலும் அரசடியிலும் வேம்படியிலும் அரசியல் அலசும் நம்மவர்கள் தமக்குள் பேசிக் கொள்கின்றனர். எத்தனை காலம் தான்.......?     

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/எத்தனை-காலம்-தான்-ஏமாற்றுவார்-இந்த-நாட்டிலே/91-206359

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.