Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் நியூசீலாந்து T20 தொடர் செய்திகள்

Featured Replies

இன்று தொடங்குகிறது டி20 கிரிக்கெட் தொடர் : முதல் வெற்றிக்காக இந்தியா-நியூஸிலாந்து மோதல்

 

 
india

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெறுகிறது.
இது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் இந்தியாவின் மூத்த பந்துவீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ராவுக்கு இது கடைசி ஆட்டமாகும். இந்த ஆட்டத்தை அவருக்கான பிரியாவிடை ஆட்டமாக வழங்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்திய அணியைப் பொருத்த வரையில், இதே நியூஸிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை சமீபத்தில் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ஆனால், டி20 வரலாற்றை கணக்கில் கொண்டால், கடந்த ஆண்டில் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டங்களில் இந்தியா தோல்வி கண்டுள்ளது. அதில், டி20 உலகக் கோப்பை போட்டியின் ஆட்டமும் அடங்கும்.
அணியின் பேட்ஸ்மேன்களைப் பொருத்த வரையில், கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா, கேப்டன் கோலி உள்ளிட்ட வீரர்கள் ரன் குவித்து தகுந்த ஃபார்மில் உள்ளனர். அவர்களுக்குத் துணையாக ஷிகர் தவன், எம்.எஸ்.தோனி ஆகியோர் இருக்கின்றனர்.

list.JPG
ஆல் ரவுண்டர் பிரிவில் ஹார்திக் பாண்டியா பலம் சேர்க்கிறார். வேகப்பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பூம்ராவும், சுழற்பந்துவீச்சில் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவும் அணிக்கு பலமாக உள்ளனர். விடைபெறும் வேகப்பந்துவீச்சாளரான நெஹ்ரா, தனது கடைசி ஆட்டத்தில் முத்திரை பதிக்க முயலுவார் என நம்பலாம்.
நியூஸிலாந்து அணியைப் பொருத்த வரையில், ஒருநாள் தொடரில் கண்ட தோல்விக்கு, டி20 தொடரில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களம் காணும். அணியின் பேட்டிங்கில் ராஸ் டெய்லர், கேன் வில்லியம்சன், டாம் லதாம் ஆகியோர் ரன் குவிப்பில் ஈடுபடலாம். இந்திய பேட்ஸ்மேன்களை திணறடிக்க டிரென்ட் போல்ட், மிட்செல் சேன்ட்னர் உள்ளிட்டோர் காத்திருக்கின்றனர்.
தரவரிசை: முதலிடத்தில் பூம்ரா
டி20 பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பூம்ரா முதலிடத்துக்கு வந்துள்ளார். முன்னதாக அந்த இடத்தில் இருந்த பாகிஸ்தானின் இமத் வாஸிம் ஓரிடம் இறங்கியதை அடுத்து, பூம்ரா முன்னேற்றம் கண்டுள்ளார். 
இதனிடையே, டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். அணிகளுக்கான தரவரிசையில் தற்போது 5-ஆவது இடத்தில் இருக்கும் இந்திய அணி, நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை 3-0 என கைப்பற்றினால், 2-ஆவது இடத்துக்கு முன்னேறும். அப்போது, முதலிடத்தில் இருக்கும் நியூஸிலாந்து 5-ஆவது இடத்துக்கு தள்ளப்படுவதுடன், 2-ஆவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் முதலிடத்துக்கு முன்னேறும். இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றாலும், பாகிஸ்தான் 
முதலிடம் பெறும்.

list1.JPG

http://www.dinamani.com/sports/sports-news/2017/nov/01/இன்று-தொடங்குகிறது-டி20-கிரிக்கெட்-தொடர்--முதல்-வெற்றிக்காக-இந்தியா-நியூஸிலாந்து-மோதல்-2799254.html

  • தொடங்கியவர்
முதல் 'டுவென்டி-20': இந்திய அணி 'பேட்டிங்'
  • தொடங்கியவர்

நியூசிலாந்து அணிக்கெதிராக இந்திய அணிக்கு முதல் வெற்றி!

 

நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

Chahal_22599.jpg

 

Photo Credit:ICC

 

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன், பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி, ரோகித் ஷர்மா – ஷிகர் தவான் சாதனை பாட்னர்ஷிப் உதவியால் 20 ஓவர்களில் 202 ரன்கள் குவித்தது. தவான், ரோகித் ஷர்மா இருவருமே தலா 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய கோலி 26 ரன்கள் எடுத்தார்.

203 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. தொடக்கவீரர்களான கப்தில் 4 ரன்களிலும், முன்ரோ 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் வில்லியம்ஸன் 28 ரன்களில் வெளியேறினார். போட்டியின் 13ஆவது ஓவரை வீசிய அக்ஸர் படேல் புரூஸ் மற்றும் கிராண்ட்ஹோம் ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்ய, நியூசிலாந்து அணியின் நம்பிக்கை தகர்ந்தது. எஞ்சியிருந்த நிகோலஸை துல்லிய த்ரோ மூலம் கோலி வெளியேற்றினார். அடுத்துவந்த சவுத்தியும் 8 ரன்களுடன் நடையைக் கட்டினார். இந்த போட்டியுடன் ஓய்வுபெற உள்ள ஆசிஷ் நெஹ்ரா போட்டியின் முதல் ஓவரையும், கடைசி ஓவரையும் வீசினார். 4 ஓவர்கள் பந்துவீசிய நெஹ்ரா 29 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

nehra_new_22363.jpg

Photo Credit:ICC

 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. சர்வதேச டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கெதிராக இந்திய அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதற்கு முன்னதாக நடந்த 5 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியையே சந்தித்திருந்தது. இந்திய அணி தரப்பில் சஹால், அக்ஸர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

http://www.vikatan.com/news/sports/106573-india-get-their-first-t20i-win-over-new-zealand.html

  • தொடங்கியவர்

பனிப்பொழிவினால் கேட்ச்கள் விடப்பட்டது என்பதை ஏற்க முடியாது: கேன் வில்லியம்சன் ஏமாற்றம்

 

 
kane%20willliamson

நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஏமாற்றம்.   -  படம். | ஏ.எஃப்.பி.

டெல்லியில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதற்கு ஒருவிதத்தில் நியூஸிலாந்து பீல்டிங்கும் காரணம், ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி ஆகியோருக்கு கேட்ச்கள் நழுவவிடப்பட்டது.

இந்நிலையில் கான்பூர் தோல்விக்குப் பிறகு வெற்றியை எதிர்நோக்கி ஆடிய நியூஸிலாந்து தோல்வியடைந்தது குறித்து அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கடும் ஏமாற்றமடைந்துள்ளார்.

“அனைத்துத் துறைகளிலும் நாங்கள் வீழ்த்தப்பட்டோம். பீல்டிங் உட்பட, பீல்டிங்தான் நியூஸிலாந்து அணியின் பெருமையாக இருந்து வருகிறது.

கேட்ச்கள் நழுவவிடப்பட்டதுதான் தோல்விக்கு முக்கிய காரணம். இதுதான் வேறுபாட்டை ஏற்படுத்தியது. இதனால் இந்திய வீர்ர்கள் 200 ரன்களைக் கடந்தனர், இந்த மைதானத்தில் இது மிகப்பெரிய ஸ்கோர்.

பனிப்பொழிவு இருந்தது உண்மைதான், ஆனால் எங்கள் அணியில் உள்ள அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது பனிப்பொழிவை கேட்ச் விட்டதற்குக் காரணமாக கூறுவதற்கில்லை.

இப்பகுதிகளில் மாலை வேளைகளில் ஆடும்போது பனிப்பொழிவு என்பது எப்போதும் உள்ளதே. எனவே அதனை ஒரு சாக்காக கூற முடியாது.

எங்கள் திறமைக்கு மிகத்தாழ்வாக ஆடினோம். மிகச்சிறந்த இந்திய அணி எங்களை அனைத்துத் துறைகளிலும் வீழ்த்தியது என்றே கூற வேண்டும்” என்றார் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்.

http://tamil.thehindu.com/sports/article19967054.ece

  • தொடங்கியவர்

பேட்டிங் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் ஷ்ரேயஸ் ஐயர்; இந்திய அணிக்கு பதிலடி கொடுக்குமா நியூசிலாந்து?

 

 
Newzealand%20team

ராஜ்கோட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட நியூஸிலாந்து அணி.   -  படம். | விவேக் பெந்த்ரே.

சனிக்கிழமை (4-11-2017) அன்று ராஜ்கோட்டில் நடைபெறும் 2-வது போட்டியில் இந்திய அணி தொடரை வெல்லும் என்ற ஆவலுடன், தன்னை வெளிப்படுத்தக் காத்திருக்கும் ஷ்ரேயஸ் ஐயருக்கு பேட்டிங் வாய்ப்பளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.

டெல்லி டி20 போட்டியில் தவண், ரோஹித், கோலி ஆகியோருக்கு கேட்ச்களை விட்டதோடு, பீல்டிங்கிலும் நியூஸிலாந்து சொதப்பினர், இதனால் தோல்வி ஏற்பட்டது. அந்தப் பிட்ச் 202 ரன்களுக்கான பிட்ச் அல்ல. இதனால் நியூஸிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் ஏமாற்றமடையுமாறு தோல்வி தழுவியது.

பினிஷர் பொறுப்பை யாரிடம் கொடுப்பது என்பதில் நியூஸிலாந்து தடுமாறி வருகிறது. ஹென்றி நிகோல்ஸ் ஒருநாள் போட்டிகளில் இதற்கு தான் தயார் என்று தன் ஆட்டம் மூலம் அறிவித்தார், ஆனால் கொலின் டி கிராண்ட்ஹோம் அந்த ரோலுக்கு தன்னை இன்னமும் தயார் படுத்திக் கொள்ளவில்லை, அதே போல் ராஸ் டெய்லரை மிடில் ஆர்டரில் கொண்டுவருவது பற்றியும் நியூஸிலாந்து பரிசீலிக்க வேண்டிய தேவையுள்ளது.

பேட்டிங்கில் நியூஸிலாந்து புவனேஷ் குமார், சாஹல், அக்சர் படேலை அடித்து ஆட முயற்சி செய்ய வேண்டும், அன்று கொலின் மன்ரோ புவனேஷை அடித்து ஆடி அதிரடி தொடக்கம் கொடுத்தார், அதே போல் ஆட வேண்டும், கெவின் பீட்டர்சன் போன்ற பேட்ஸ்மென்களிடமிருந்து கற்றுக் கொள்வது அவசியம், மெக்ரா, டேல் ஸ்டெய்ன் போன்றவர்களையே டெஸ்ட் போட்டிகளிலும் நடந்து வந்து ஆடக்கூடிய தைரியம் படைத்தவர் பீட்டர்சன், அவர் புவனேஷ் போன்ற பவுலர்களுக்கு கிரீசிலேயே நிற்கமாட்டார். அது போல் ஏதாவது செய்ய வேண்டும், அப்போதுதான் தோனி ஸ்டம்புக்கு அருகில் நிற்க புவனேஷ் குமார் ஷார்ட் ரன் அப்பில் குறைந்த வேகத்தில் வீசுவார், இதனை தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் நியூஸிலாந்து கேப்டன்.

காத்திருக்கும் ஷ்ரேயஸ் ஐயர்:

மும்பை வீரர் ஷ்ரேயஸ் ஐயர் இந்திய அணியில் அடுத்த வளர்ந்து வரும் நட்சத்திரமாவார், உள்நாட்டு கிரிக்கெட்டில் 100 ரன்கள் ஸ்ட்ரைக் ரேட்டுடன் தன் சதங்களை அடித்து வருபவர், டெல்லி போட்டியில் அவர் களமிறக்கப்படவேயில்லை, இது போன்ற முடிவு திறமையான வீரர்களையும் வலுவிழக்கச் செய்து விடும். புதிய வீரரை முயற்சி செய்தால்தான் மைதானத்துக்கு ரசிகர்களை அதிக அளவில் ஈர்க்க முடியும், இவர்களுக்குள்ளேயே ஆடினால் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் ‘அறுவை’யாகி விடும். ஷ்ரேயஸ் ஐயர் தன்னை வெளிப்படுத்த ஆயத்தமாகியுள்ளார், இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 4-ம் நிலையை உறுதி செய்ய இந்திய அணிக்கு வழிபிறக்கும் இது 2019 உலகக்கோப்பையில் பெரிதும் கைகொடுக்கும். காயமடைந்த வீரர்கள் இடத்தில் ஆடும் மாற்று வீரர் அல்ல ஷ்ரேயஸ் ஐயர். நிரந்தர இடத்தை வலியுறுத்தும் ஒரு வீரர். வாய்ப்பு கொடுத்து பார்ப்பதில் தவறில்லை.

இந்திய அணியில் ஆஷிஷ் நெஹ்ரா இடம் காலியாக இருப்பதால் ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் மொகமத் சிராஜுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலிக்குத் தேவை 12 ரன்கள்:

இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷான் டி20 கிரிக்கெட்டில் எடுத்த 1889 ரன்களை கடக்க விராட் கோலிக்கு 12 ரன்களே தேவைப்படுகிறது. பிரெண்டன் மெக்கல்லம் 2140 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார்.

யஜுவேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்த ஆண்டு டி20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆப்கன் வீரர் ரஷீத் கான், மே.இ.தீவுகளின் கேஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோருடன் இணைவார்.

ராஜ்கோட் அக்சர் படேலின் சொந்த ஊராகும். இந்தப் பிட்சில் பந்துகள் அதிகம் திரும்பாது, பவுன்ஸும் குறிப்பிடும்படியாக இருக்காது, பந்துகள் வழுக்கிக் கொண்டு செல்லும் என்று அக்சர் படேல் தெரிவித்துள்ளார். ஆட்டம் சனி இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது.

http://tamil.thehindu.com/sports/article19976085.ece

  • தொடங்கியவர்

முன்ரோ அசத்தல் சதம்! - நியூசிலாந்து அணி 197 ரன்கள் குவிப்பு

தொடக்கவீரர் முன்ரோவின் அசத்தல் சதத்தின்  உதவியால் ராஜ்கோட் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 196 ரன்கள் எடுத்தது. 

munro_20150.jpg

 

Photo Credit: ICC

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறும் இந்த போட்டியிலும் முதல் போட்டியைப் போலவே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸை இழந்தார். டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி தரப்பில் ஐ.பி.எல். போட்டிகளில் கலக்கிய முகமது சிராஜ் அறிமுக வீரராகக் களமிறங்கினார். 

 

நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸைத் தொடங்கிய மார்டின் கப்தில் மற்றும் காலின் முன்ரோ, அந்த அணிக்கு சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு நூறு ரன்களுக்கு மேல் சேர்ந்த இந்த ஜோடியை சுழற்பந்துவீச்சாளர் சஹால் பிரித்தார். நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 105-ஆக இருந்தபோது 45 ரன்கள் எடுத்திருந்த மார்டின் கப்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்ஸன், அறிமுக வீரர் முகமது சிராஜின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சர்வதேச டி20 போட்டிகளில் முகமது சிராஜ் வீழ்த்தும் முதல் விக்கெட் இதுவாகும். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் அதிரடி காட்டிய முன்ரோ, 54 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அவர் 109 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் சஹால் மற்றும் சிராஜ் ஆகியோர் தலா ஒருவிக்கெட் வீழ்த்தினர். அறிமுக போட்டியில் 4 ஓவர்கள் வீசிய சிராஜ் ஒரு விக்கெட் எடுத்ததுடன், 53 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 

http://www.vikatan.com/news/sports/106853-colin-munros-blistering-109-powers-india-to-1962-in-the-2nd-t20i.html

  • தொடங்கியவர்

2-வது டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வெற்றி

 

ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.

 
 
2-வது டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வெற்றி
 
ராஜ்கோட்:

ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் முகம்மது சிராஜ் புதுமுகமாக களமிறங்கினார். கப்தில் மற்றும் முன்ரோ தொடக்க ஆட்டக்காரர்களாக பேட்டிங் செய்தனர்.

201711042246227282_1_r2bttla9._L_styvpf.jpg

இருவரது அதிரடியை கட்டுபடுத்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். 11 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை கடந்தது. 12வது ஓவரை வீசிய சாகல் கப்திலை வெளியேற்றினார்.

இதனையடுத்து களமிறங்கிய வில்லியம்சன் 12 ரன்களில் புதுமுக பவுலர் சிராஜ் பந்தில் ரோகித் வசம் கேட்ச் கொடுத்தார். ஆனாலும் முன்ரோ சிக்சர்கள், பவுண்டரிகளுடன் 54 பந்துகளில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 196 ரன்கள் குவித்தது. முன்ரோ 109 ரன்களுடனும், ப்ரூஸ் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் சாகல், சிராஜ் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

201711042246227282_2_rff3okxs._L_styvpf.jpg

இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இறங்கினர். ஆனால் நியூசிலாந்து பவுலர்கள் 2-வது ஓவரிலேயே இருவரையும் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தனர். ரோகித் 5 ரன்னுடனும், தவான் ஒரு ரன்னுடனும் வெளியேறினர். 11 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்தது.

அதன்பின் களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயரும், விராட் கோலியும் ஓரளவு தாக்குப் பிடித்தனர். இந்த ஜோடி 53 ரன்கள் சேர்த்தது. ஷ்ரேயஸ் ஐயர் 23 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா ஒரு ரன்னில் வெளியேறினார். விராட் கோலி மட்டும் அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தோனியுடன் இணைந்து 56 ரன்கள் சேர்த்தார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய அக்சர் படேல் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோனி 37 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 49 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து 40 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. புவனேஷ்வர் குமார் 2 ரன்னுடனும், பும்ரா ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் போல்ட் அற்புதமாக பந்து வீசி 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார்.

இதன்மூலம் நியூசிலாந்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. மூன்றாவது போட்டி திருவனந்தபுரத்தில் வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/11/04224646/1126913/newzealand-beat-india-by-40-runs-for-second-t20-match.vpf

  • தொடங்கியவர்

நியூசிலாந்திடம் தோல்வி: பேட்ஸ்மேன்கள் மீது கோலி பாய்ச்சல

 

பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் தோல்வியடைந்தோம் என்று நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

 
 
நியூசிலாந்திடம் தோல்வி: பேட்ஸ்மேன்கள் மீது கோலி பாய்ச்சல
 
ராஜ்கோட்:

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 40 ரன்னில் தோற்றது.

ராஜ்கோட்டில் நடந்த இந்தப்போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்தது. தொடக்க வீரர் முன்ரோ சதம் அடித்தார். அவர் 58 பந்தில் 109 ரன்னும் ( 7 பவுண்டரி, 7 சிக்சர்), குப்தில் 41 பந்தில் 45 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இந்திய அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் 40 ரன்னில் தோல்வி அடைந்தது.

கேப்டன் விராட் கோலி 42 பந்தில் 65 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்), டோனி 37 பந்தில் 49 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். போல்ட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த தோல்வி குறித்து விராட் கோலி கூறியதாவது:-
 
201711051112596684_1_IND._L_styvpf.jpg


நியூசிலாந்து அணியின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. அவர்கள் எங்களுக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை. அந்த அணியின் ஆட்டத்தை பார்க்கும் போது 235 முதல் 240 ரன்கள் வரை குவித்துவிடும் என்று கருதினேன்.

பும்ராவும், புவனேஷ்வர் குமாரும் நேர்த்தியாக பந்துவீசி அந்த அளவுக்கு கொண்டு செல்லவிடாமல் பார்த்துக்கொண்டனர். இதற்காக அவர்களை பாராட்டுகிறேன்.

197 ரன் இலக்கு என்பது இந்த ஆடுகளத்தில் எளிதானது தான். ஆனால் பேட்டிங் மோசமாக இருந்தது. போதுமான ரன்களை எடுக்க முடியவில்லை. மிகப்பெரிய இலக்கு தேவைப்படும் போது ஒரு பேட்ஸ்மேன் அல்லது அனைத்து பேட்ஸ்மேன்கள் அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட வேண்டும். பேட்ஸ்மேன்கள் அவ்வாறு செய்யாததால் தோற்றோம்.

நானும் மிகவும் சிறப்பாக ஆட முயற்சித்தேன். டோனியும் கடைசி வரை நன்றாக பேட்டிங் செய்தார். ஆனால் தேவையான ரன்ரேட் அதிகமாகி விட்டதால் ஒன்றும் செய்ய இயலாமல் போனது.

இவ்வாறு அவர் கூறினார்.

வெற்றி குறித்து நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது:-
 
201711051112596684_2_NZ._L_styvpf.jpg


கடந்த போட்டியில் இருந்து எங்களது ஆட்டம் நன்றாக மேம்பட்டு உள்ளது. முன்ரோ சதம் அடித்தது சிறப்பானது. அவருக்கு குப்திலும், புருசும் உதவியாக இருந்தனர். எங்களது பந்துவீச்சும் மிகவும் அபாரமாக இருந்தது. கடைசி போட்டியிலும் இதே மாதிரி விளையாடினால் இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்று விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. டெல்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 53 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது .

இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் வருகிற 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/11/05111300/1126947/India-vs-New-Zealand-2017-Virat-Kohli-Blames-Poor.vpf

  • தொடங்கியவர்

தொடரை வெல்வது யார்?: இந்தியா-நியூசிலாந்து இடையே இன்று கடைசி டி20 கிரிக்கெட்

 

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.

தொடரை வெல்வது யார்?: இந்தியா-நியூசிலாந்து இடையே இன்று கடைசி டி20 கிரிக்கெட்
 
திருவனந்தபுரம்:

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. டெல்லியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதனால் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானதாகும்.

முதலாவது ஆட்டத்தில் அரைசதம் அடித்த தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் 2-வது போட்டியில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். விராட்கோலி (65 ரன்), டோனி (49 ரன்) ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் தாக்குப்பிடித்து நின்று ஆடினார்கள். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணியின் பந்து வீச்சும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. பீல்டிங்கிலும் இந்திய அணியினர் சொதப்பினார்கள்.

நியூசிலாந்து அணி கடந்த ஆட்டத்தில் நல்ல தொடக்கம் கண்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் கப்தில் (45 ரன்), காலின் முன்ரோ (ஆட்டம் இழக்காமல் 109 ரன்) ஆகியோர் அதிரடியாக ஆடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். காலின் முன்ரோ பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். சுழற்பந்து வீச்சாளர்கள் மிட்செல் சான்ட்னெர், சோதி ஆகியோரும் விக்கெட் கைப்பற்றினார்கள்.

முதல் ஆட்டத்தில் தோல்வி கண்டதால் தர வரிசை புள்ளியில் சறுக்கலை சந்தித்த நியூசிலாந்து அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து கொள்ள ஆர்வம் காட்டும்.

சொந்த மண்ணில் தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணி எல்லா வகையிலும் முழு முயற்சி மேற்கொள்ளும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

போட்டி நடைபெறும் கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியம் புதிதாக உருவாக்கப்பட்டதாகும். இதில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். 29 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக திருவனந்தபுரத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி அரங்கேற இருக்கிறது.

திருவனந்தபுரத்தில் நேற்று மழை பெய்தது. இதனால் ஆடுகளம் தார்ப்பாயால் மூடப்பட்டுள்ளது. இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இன்றைய போட்டி குறித்து கேரள கிரிக்கெட் சங்க செயலாளர் ஜெயேஷ் ஜார்ஜ் அளித்த பேட்டியில், ‘ஸ்டேடியத்தில் மழை நீர் வடிகால் வசதி சிறப்பாக உள்ளது. மழை பெய்தால் தண்ணீரை பிழிந்து எடுக்கும் சூப்பர் சோப்பர் எந்திரங்கள் மூன்று தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. தேவைப்பட்டால் முழு மைதானமும் தார்ப்பாயால் மூடப்படும். போட்டியின் போது மழை குறுக்கிட்டாலும், மழை நின்ற 15 நிமிடங்களில் மைதானத்தை தயார்படுத்திட முடியும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், டோனி, ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து: காலின் முன்ரோ, மார்ட்டின் கப்தில், கனே வில்லியம்சன் (கேப்டன்), டாம் புரூஸ், கிளைன் பிலிப்ஸ், ஹென்றி நிகோல்ஸ், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், டிரென்ட் பவுல்ட், ஆடம் மில்னே, சோதி.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-1 சேனல் மற்றும் தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/11/07092356/1127266/India-and-New-Zealand-T20-cricket-in-Thiruvananthapuram.vpf

  • தொடங்கியவர்

டி-20 தொடரை வென்றது இந்திய அணி..! 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை வென்றது.

27951_s_23406.jpg

 

இந்தியா நியூசிலாந்துக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டி திருவனந்தபுரம் கிரின்பீல்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இது என்பது குறிப்பிட்டத்தக்கது. மழையின் காரணமாக போட்டி தொடங்குவது தாமதமானது. அதனால் இரு அணிகளுக்கும் 8 ஓவராக குறைக்கப்பட்டது. டாஸ்வென்ற நியூசிலாந்து அணி இந்திய அணியை பேட் செய்ய பணித்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா 8 ரன்களிலும் ஷிகர் தவான் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

27933_ddf_23064.jpg

அடுத்து களிமிங்கிய விராத்கோலி 13 ரன்களும் மனிஷ் பாண்டியா 17 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 8 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் டிம் சௌத்தி மற்றும் ஈஷ் சோதி தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக மார்டின் குப்டில் 1 ரன்னிலும் கோலின் முன்ரோ 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் வில்லியம்ஸன், எட்டு ரன்கள் எடுத்திருந்தநிலையில் ரன்அவுட் ஆனார்.

27947_ds_23287.jpg

அதிரடியாக ஆடிய கொலின் டி கிரான்ஹாம் 17 ரன்கள் எடுத்தார். இருப்பினும் நியூசிலாந்து 8 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது. 

படங்கள்: BCCI

http://www.vikatan.com/news/sports/107111-india-won-new-zealand-by-6-runs.html

  • தொடங்கியவர்

ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியின் ஜான்டி!

திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த கடைசி டி20 போட்டியில், இந்திய அணியின் வெற்றிக்கு ஹர்திக் பாண்ட்யாவின் இரு அட்டகாசமான ரன் அவுட்களே காரணமாக அமைந்தது.

 

 

Hearty-Pandya_12022.jpg

முதலில் பேட் செய்த இந்தியா நியூஸிலாந்து அணிக்கு 68 ரன்கள் வெற்றி இலக்காக வைத்தது. அடுத்ததாக, நியூஸிலாந்து அணி பேட்டிங் தொடங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் ஜஸ்ப்ரீத் பும்ரா, யஸ்வேந்த்ரா சாச்சல், நேர்த்தியாகப் பந்து வீசினர். இந்தியாவின் ஃபீல்டிங்கும் அபாரமாக இருந்தது. இதனால்தான் 61 ரன்களில் நியூஸிலாந்தைச் சுருட்டி,  த்ரில்லான  ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்றுத் தொடரை கைப்பற்ற முடிந்தது. 

நேற்றைய ஆட்டத்தில், ஹர்திக் பாண்ட்யாவின் ஃபீல்டிங் சூப்பரோ சூப்பர் என்றே சொல்ல வேண்டும். கூலின் மன்ரோவை, ரோகித் சர்மா கேட்ச் செய்த விதமும் அற்புதம்.  ஐந்தாவது ஓவரின் மூன்றாவது பந்தில், ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன்கொண்ட வில்லியம்சனை மிட் விக்கெட்டிலிருந்து துல்லியமான டைரக்ட் ஹிட்டால் வெளியேற்றினார் பாண்ட்யா. அடுத்து 7-வது ஓவரில், டாம் ப்ரூஸை 4 ரன்களில் காலிசெய்தார். இந்த முறை கீப்பர் தோனியின் கைக்கு பந்தை வீச, டாம் ப்ரூஸின் விக்கெட் விழுந்தது. 

 

டெல்லியில் நடந்த முதல் டி20 போட்டியிலும் மார்ட்டின் கப்தில் அடித்த பந்தை அபாரமாக கேட்ச் செய்தார் ஹர்திக் பாண்ட்யா. நியூஸிலாந்து தொடரில் பேட்ஸ்மேனாக ஜொலிக்கவில்லை. முதல் ஆட்டத்தில் டக் அவுட், இரண்டாவது போட்டியில் ஒரு ரன்னில் அவுட்டானார். திருவனந்தபுரத்தில் 14 ரன்கள் எடுத்தார். ஆனால், ஃபீல்டிங்கில் ஜான்டி போல செயல்பட்டு, பெயரைத் தட்டிச் சென்றுள்ளார். 

http://www.vikatan.com/news/sports/107142-new-zealand-stun-by-hardik-pandyas-fielding.html

  • தொடங்கியவர்

8 ஓவர் போட்டியில் சாஹல், பும்ரா அபாரம்: டி20 தொடரை வென்றது இந்தியா

 

 
india

கோப்பையுடன் இந்திய அணி   -  படம். | ஏ.எஃப்.பி.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 3-வது, கடைசி டி20 போட்டி மழை காரணமாக 8 ஓவர் போட்டியாகக் குறைக்கப்பட்டது. இதில் இந்திய அணி நியூஸிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

டாஸ் வென்று கடினமான பிட்சில் கேன் வில்லியம்சன் முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி பேட் செய்து 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ரன்கள் எடுக்க, இலக்கை விரட்டிய நியூஸிலாந்து 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தாலும் 61 ரன்களுக்கு முடங்கியது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

கான்பூர் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணியின் உணர்வுபூர்வமான விரட்டலில் சாஹல், பும்ரா நியூஸிலாந்து அணிக்கு வெற்றியை மறுத்தனர். நேற்று திருவனந்தபுரத்திலும் எடுக்கக் கூடிய ஸ்கோரில் நியூஸிலாந்துக்கு தொடரை மறுத்தனர்.

இந்திய அணி பேட்டிங்கில் சாண்ட்னர், சவுதி, டிரெண்ட் போல்ட் ஆகியோரிடம் திணறியது. சாண்ட்னர் பந்துகள் நன்றாகத் திரும்பின. விராட் கோலி அருமையாகத் தொடங்கினார். இஷ் சோதி பந்தில் ஒரு பவுண்ட்ரி, ஒரு சிக்ஸ் அடித்தார், ஆனால் 13 ரன்கள் எடுத்து சோதி வீசிய பந்தில் டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனார்.

ஷார்ட் பிட்ச் பந்து கொஞ்சம் வேகமாக வந்தது சிக்ஸ் பந்து என்று அதனை தூக்கினார், ஆனால் ஷாட்டில் பவர் இல்லை, போல்ட் கேட்ச் எடுக்க கோலி 6 பந்துகளில் 13 ரன்களில் வெளியேறினார்.

சாண்ட்னரின் அருமையான கேட்ச்கள்:

ஷிகர் தவண் 6 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் சவுதி பந்தை மேலேறி வந்து அடிக்கப் பார்த்தார் பந்து சரியாகச் சிக்கவில்லை, பாயிண்டில் எழும்பியது பின்னால் ஓடிச்சென்று சாண்ட்னர் கேட்ச் எடுத்தார். இது அருமையான கேட்சாக அமைந்தது.

இதற்குள் ரோஹித் சர்மா பேட்டிங் முனைக்கு கிராஸ் செய்தார். சவுதியின் லெக் திசை ஆஃப் கட்டரை ரோஹித் புல் ஷாட் ஆடினார் இந்த ஷாட்டும் சரியாகச் சிக்கவில்லை டீப் ஸ்கொயர் லெக்கில் பந்து தரையிறங்கிக் கொண்டிருந்த போது ஓடி வந்த சாண்ட்னர் மிக அருமையாகப் பிடித்தார், கடினமான கேட்ச். அடுத்தடுத்து இரண்டு அபார கேட்ச்கள், இந்திய அணி தொடக்க வீரர்களை சவுதியிடம்... இல்லை...சாண்ட்னரிடம் இழந்தது.

பிறகு மணீஷ் பாண்டே (17) புல் ஷாட் ஒன்றை லாங் ஆனில் ஆட, சாண்ட்னர் கேட்சிற்காக ஓடி இருகால்களும் தரையிலிருந்து எழும்ப சமநிலை இழந்தார். ஆனாலும் பந்தை டி கிராண்ட்ஹோமுக்கு த்ரோ செய்தார். அவர் கேட்ச் எடுத்தார், உண்மையில் திகைக்க வைக்கும் ஒரு கேட்ச் உதவியைச் செய்தார் சாண்ட்னர். ஷ்ரேயஸ் ஐயர் 6 பந்துகளில் பவுண்டரி இல்லாமல் 6 ரன்களை எடுத்த நிலையில் இஷ் சோதி பந்தை மேலேறி வந்து தூக்கி அடிக்க நினைத்தார், பந்து லெக் ஸ்பின் ஆனதால் மட்டையில் சரியாகச் சிக்கவில்லை கப்தில் கேட்ச் எடுத்தார்.

மணீஷ் பாண்டே 11 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 17 ரன்களை அதிகபட்சமாக எடுக்க, ஹர்திக் பாண்டியா ஒரு சிக்சருடன் 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். தோனி 0 நாட் அவுட். இந்தியா 8 ஓவர்களில் 67/5 என்று முடிந்தது.

கொலின் மன்ரோ முதல் பந்திலேயே மேலேறி வந்து புவனேஷ்வர் குமாரை மிட்விக்கெட்டில் தூக்கி சிக்ஸர் அடித்து அதிர்ச்சியளித்தார். ஆனால் புவனேஷ்வர் குமார் விரலால் வீசும் பந்துகள் மூலம் வேகத்தைக் குறைத்து அதே ஓவரில் மன்ரோவைக் கட்டுப்படுத்தினார். அதே ஓவரில் கடைசி பந்தில் மார்டின் கப்தில் முன் காலை ஒதுக்கிக்கொண்டு லெக் திசையில் விளாச முயன்று தோல்வியடைந்தார். ‘யூ மிஸ், ஐ ஹிட்’ பந்து, பவுல்டு ஆனார் கப்தில் (1).

மன்ரோவுக்கு பும்ரா அருமையாக வீசினார். பந்தின் தையலைப் பயன்படுத்தி எழுப்பினார் பந்தை ஷார்ட் ஆஃப் லெந்தில் பிட்ச் செய்து மன்ரோவுக்குக் குறுக்காகச் செலுத்தினார், இரண்டு பந்துகள் ரன் வரவில்லை. இதற்காக மேலேறி வந்து ஆடிய மன்ரோ ஷார்ட் பிட்ச் பந்தை கிராஸ் பேட் போட்டார் பந்து மிட் ஆன் மேல் எழும்பியது ரோஹித் சர்மா அற்புதமான ஒரு கேட்சை எடுக்க அபாய மன்ரோ 7 ரன்களில் வீழ்ந்தார்.

சாஹல் பிட்சின் சாதகத்தை நன்றாகப் பயன்படுத்தினார், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் செய்தார். 2 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அவர் கொடுக்கவில்லை. குறைந்த இலக்கை வைத்துக் கொண்டு 2 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட கொடுக்காதது உண்மையில் அபாரத் திறமைதான்.

கொலின் டி கிராண்ட்ஹோம் மற்றொரு அபாய வீரர், இவர் குல்தீப் யாதவ்வை அபாரமாக ஒரு சிக்ஸ் அடித்தார். நியூஸிலாந்து அணிக்கு கடைசி 3 ஓவர்களில் 32 ரன்கள் தேவையாக இருந்த போது சாஹல் அருமையாக வீசி முதல் 2 பந்துகளில் கிராண்ஹோம் மட்டையைக் கடந்து செல்லுமாறு வீசினார். அந்த ஓவரில் 3 ரன்களையே கொடுத்தார். இந்த ஓவரில் சாஹல் சிக்ஸ் கொடுத்திருந்தால் ஒருவேளை நியூஸிலாந்துக்கு சாதகமாக ஆட்டம் திரும்பியிருக்க வாய்ப்புண்டு.

7வது ஓவரை பும்ரா வீசினார். வேகம் குறைந்த லெக் ஸ்டம்ப் ஆஃப் கட்டரை நிகோல்ஸ் ஃபைன்லெக் திசையில் கேட்ச் கொடுத்தார். பிறகு ஒரு ஃபுல்டாஸை வீச புரூஸ் அதனை ஸ்கொயர் லெக்கில் பவுண்டரிக்கு அனுப்பினார். அடுத்த பந்தை புரூஸ் மேலேறி வருவதைப் பார்த்த பும்ரா பந்தை லெக் திசையில் வீசினார், பந்து தோனி முன்பாக பவுன்ஸ் ஆனாலும் அவர் அதனை அருமையாகத் தடுத்தார் ஒரு ரன் ஓடியதால் ஒரு பை, ஒரு வைடு 2 ரன்கள் வந்தது, 3 ரன்களை தோனி தடுத்தார்.

அடுத்த பந்தில் புரூஸ் ரன் அவுட் ஆனார். கடைசி 6 பந்துகளில் நியூஸிலாந்துக்குத் தேவை 19 ரன்கள். பாண்டியா வீச தோனியிடம் பந்து செல்வதற்குள் சாண்ட்னர், கிராண்ட் ஹோம் ஒரு ரன் எடுத்தனர், கிராண்ட் ஹோம் அடுத்த பந்தை விளாச பாண்டியா அருமையாகத் தடுத்தார் ஆனால் சக்தி வாய்ந்த ஷாட் ஆனதால் வலியால் துடித்தார். ரன் இல்லை. அடுத்த பந்தை கிராண்ட் ஹோம் வேகம் குறைந்த பந்து என்று முதலிலேயே பார்த்து விட்டார், மிட்விக்கெட்டில் சிக்ஸ். இன்னொரு பந்து மெதுவான ஆஃப் கட்டர் அதனை சிக்ஸ் அடித்திருக்கலாம் ஆனால் கிராண்ட்ஹோம் ஷாட் டீப் ஸ்கொயர் லெக்கில் 1 ரன் ஆனது. 61/6 என்று முடிந்தது நியூஸிலாந்து.

இந்திய அணியில் பும்ரா 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், குல்தீப், புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்ற சாஹல் பவுண்டரி கொடுக்காமல் 2 ஓவர்களில் 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஆட்ட நாயகன், தொடர் நாயகன் இரண்டு விருதுகளைத் தட்டிச் சென்றார் பும்ரா. விராட் கோலி தலைமையில் இன்னொரு தொடரை வென்றது இந்திய அணி.

http://tamil.thehindu.com/sports/article20002233.ece?homepage=true

  • தொடங்கியவர்

வீசப்பட்டதோ 96 பந்துகள்! வருமானமோ ரூ.6.88 கோடி!

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டியை நடத்திய கேரள கிரிக்கெட் சங்கத்துக்கு ரூ.6.88 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

CRIC_18232.jpg

 


இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. மழையால் இந்தப் போட்டி பாதிக்கப்பட்டாலும், கேரள கிரிக்கெட் வாரியத்துக்கு பணமழையை அள்ளிக்கொடுத்திருக்கிறது இந்தப் போட்டி.

இரு அணிக்கும் சேர்த்து மொத்தம் 96 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட இந்தப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 
குறைந்த நேரமே போட்டி நடந்தாலும் வருமானம் கேரள கிரிக்கெட் சங்கத்துக்கு அதிகம்தான். இந்தப் போட்டிக்கான டிக்கட் விற்பனை மூலம் ரூ.2.91 கோடியும், மைதானத்தின் உள்ளே விளம்பரம் வைப்பதன் மூலம் ரூ.1.90 கோடியும் வருமானம் கிடைத்துள்ளது. மைதானத்திற்கு வெளியே விளம்பரம் வைக்க அனுமதித்தன் மூலம் ரூ.30 லட்சம் வந்துள்ளது. வங்கி மற்றும் மருத்துவ பார்ட்னர்ஷிப் மூலம் ரூ.27 லட்சம் கிடைத்துள்ளது. போட்டியை நடத்துவதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் அளிக்கும் பங்குத்தொகை மூலம் ரூ.1.5 கோடி வந்துள்ளது. ஆக மொத்தம் ரூ.6.88 கோடியை கல்லா கட்டியுள்ளது கேரள கிரிக்கெட் சங்கம். 55,000 பேர் நேரடியாக இந்தப் போட்டியை கண்டு ரசித்துள்ளனர்.

http://www.vikatan.com/news/sports/107339-indianew-zealand-final-match-kerala-cricket-association-gets-rs688-crore-income.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.