Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் சூடான்: தனிநாடு பரிசளித்த பட்டினி

Featured Replies

தென் சூடான்: தனிநாடு பரிசளித்த பட்டினி
 

மூன்றாம் உலக நாடுகள் பலவற்றில், கடந்த நான்கு தசாப்தங்களாகத் தேசிய இனப்பிரச்சினை தீவிரமடைந்து, ஆயுதப் போராட்டங்களாக விருத்தி பெற்றுள்ளதைக் காணலாம்.   

தேசிய இனங்கள் மீதான, பெருந் தேசிய இன அகங்கார ஒடுக்குமுறையை, ஆளும் வர்க்கப் பெரும் தேசியவாதிகள் கட்டவிழ்த்து வந்துள்ளார்கள்.   

அதை எதிர்த்துப் போராடும் தரப்புகள், சுயாட்சிக் கோரிக்கைகளையும் அதற்கும் அப்பாலாகப் பிரிவினைக் கோரிக்கைகளையும் முன்வைத்து வந்துள்ளன.   

இத்தகைய, இன மதத் தேசிய முரண்பாடுகளையும் ஒடுக்குமுறைச் சூழலையும் தத்தமது நோக்கங்களுக்குத் தக்கதாக ஏகாதிபத்திய வல்லாதிக்கச் சக்திகள் பயன்படுத்தி வந்துள்ளன.   

எவரையும் நம்பச் சொல்கிறவர்கள், ஏன் நம்பச் சொல்கிறார்கள் என ஆராய்வது முக்கியம். அவர்கள் யாருக்காக அவ்வாறு நம்பச் சொல்கிறார்கள் என ஆராய்வதும் அதேயளவு முக்கியம்.  

2011ஆம் ஆண்டு, மேற்குலக ஆசீர்வாதத்துடன் சூடானில் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தென் சூடான், இன்று உள்நாட்டுப் போரினாலும் பட்டினியாலும் வாடுகிறது.

image_339e11ef41.jpg  

தென்சூடானின் கதை, தனிநாடு பற்றிய கனவில் இருப்போர் தெரிந்து கொள்ள வேண்டிய கதையாகிறது. இதை இங்கு குறித்துச் சொல்வதற்கு வலுவான காரணமுண்டு.   

2011இல் தென்சூடான், சூடானிலிருந்து பிரிந்து, தனிநாடாக அறிவிக்கப்பட்ட போது, அதைத் தமிழீழத்துக்கு இன்னொரு எடுத்துக்காட்டு என்று தமிழீழ ஆதரவாளர்களும் தமிழ்த் தேசியவாதிகளும் குதூகலித்தனர். வெளிநாடுகளிலிருந்து தமிழ் நாளிதழ்களில் எழுதுவோர், மேற்குலகின் ஆசிகளுடன் தென்சூடான் தனிநாடாக உருவெடுத்தது போல, தமிழீழமும் சாத்தியமாகும் என்று தொடங்கி, சூடானுக்குச் சீனாவின் நிபந்தனையற்ற ஆதரவினாலேயே அமெரிக்காவும் மேற்குலகமும் தென்சூடானைத் தனிநாடாக மாற்றின என்பதால், இலங்கையில் அதிகரிக்கும் சீன ஆதிக்கம் தமிழீழத்தைச் சாத்தியமாக்க உதவும் என்பதுவரை, தங்கள் ஆய்வுகளைப் பதிவுசெய்திருந்தனர்.   

அவர்களுக்குத் தென்சூடானின் உருவாக்கம், தனித் தமிழீழம் உருவாகுவதற்கான புதிய நம்பிக்கையைக் கொடுத்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன், தென்சூடானின் சுதந்திர விழா நிகழ்வில் பங்குகொண்டமையால் புலம்பெயர் தமிழர்களில் பலர் பூரித்தனர்.  

வாக்கெடுப்பின் மூலம், தென் சூடான் பிரிந்து தனிநாடாகியமை தொடர்பில் ‘நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகையில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ‘இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க வாக்கெடுப்பு, நீண்டகாலமாக செய்யப்பட்டு வந்த சுயநிர்ணயத்துக்கான ஒரு வழிமுறையாக உள்ளது. வெற்றிகரமாக முடியும் வாக்குப்பதிவு, கொண்டாடுவதற்குரிய காரணமாக இருக்கும் என்பதுடன், ஆபிரிக்காவின் நீண்ட காலப் பயணத்தில், இது ஜனநாயகம் மற்றும் நீதியை நோக்கிய ஒரு முன்னோக்கிய எழுச்சிமிக்க படியாக இருக்கும்’ என்று பாராட்டி எழுதியிருந்தார்.   

இன்று தென்சூடானின் நிலை என்ன? தூண்டிவிடப்பட்ட உள்நாட்டுக் குழப்பங்களாலும் மேற்குலக விருப்புகளுக்கு ஏற்றபடி பேரம்பேசுகையில் படிந்து போகாமையாலும், தென்சூடான் முழுமையான உள்நாட்டு யுத்தத்துக்கு ஆட்பட்டு நிற்கிறது. 3.6 மில்லியன் மக்கள், தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அதில் 2.1 மில்லியன் உள்நாட்டுக்குள் இடம் பெயர்ந்துள்ளனர். மிகுதிப்பேர் அண்டைநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். 10 தென்சூடான் அகதிகளில் 06 பேர் சிறுவர்களாவர். 5.1 மில்லியன் மக்களுக்கு உணவு உதவிகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன. 4.8 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள். தென்சூடானின் சுதந்திரம் இதைத்தான் மக்களுக்குப் பரிசளித்திருக்கிறது.   

ஆபிரிக்கக் கண்டத்திலும் மத்திய கிழக்கின் அரபுப் பிரதேசங்களிலும் நாடுகள் உருவாக்கப்பட்ட விதமானது, தேசங்களை அடையாளப்படுத்தக் கூடிய இன, மொழி, பண்பாடு, பொருளியல் அடிப்படை என எதையும் சார்ந்ததல்ல.   

அதைவிட, ஒரே இனக்குழுவைச் சேர்ந்த மக்கள், அக்கண்டத்தின் பெரும் நிலப்பரப்புகளில் பிற இனக்குழுவினருடன் அருகருகாக வாழ்வதையும் நிரந்தரமாக ஒரு பிரதேசத்தில் வாழாத, ஆனால் ஒரு பெரும் நிலப்பரப்பினுள் பருவத்துக்குப் பருவம் இடம்பெயர்ந்து வாழும் ‘மசாய்’ போன்ற மந்தை மேய்க்கும் இனக்குழுக்களையும் காணலாம்.  

 ஆபிரிக்காவில் கொலனிய ஆட்சி புகுமுன்பு, சில பகுதிகளில் பேரரசுகள் இருந்துள்ளன. அவற்றை மத்திய, தென்னமெரிக்கப் பகுதிகளில் இருந்து வந்த மாயா, அஸ்ற்றெக், இன்கா போன்ற சமூகங்களின் பேரரசுகளுடன் வேண்டுமானால் ஒப்பிடலாம்.   

ஆனாலும், முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் ஒட்டிய தேசங்களுடனும் தேச அரசுகளுடனும் அவற்றை எவ்வகையிலும் ஒப்பிட இயலாது. அவை ஆசியக் கண்டத்தில் தோன்றி மறைந்த பேரரசுகள் போன்றவையுமல்ல.  

பிரிவுக்கு முன், ஆபிரிக்காவின் அதிபெரிய நாடாக இருந்த சூடானில் இருநூற்றுக்கும் மேற்பட்ட தனித்துவமான இனக்குழுக்கள் இருந்தன. அரபு மொழியே, சூடானில் மிகப் பெரும்பாலானோரின் மொழியாயினும் பெரும்பான்மையினரான அராபியரின் தொகை, முழுச் சனத்தொகையின் காற்பங்கு மட்டுமே.   

அரபு மொழி பேசுவோரில், ஏகப் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். நாட்டின் வட பகுதியில் ஏகப்பெரும்பாலானோர் முஸ்லிம்களாயினும் அரபு மொழி பேசாதோரும் அவர்களிடையே உள்ளனர்.  

தென்சூடானில் பெரும்பான்மை மொழி என்றோ, இனம் என்றோ கூறக் கூடியதாக எதுவும் இல்லாவிடினும், கொலனி ஆட்சியில் கிறிஸ்தவர்களானோர் பெரும்பான்மையினர் ஆவர்.   

அவர்களுடன் ஒப்பிடத்தக்களவில் பழங்குடிகளின் வழிபாட்டு முறைகளை உடையோரும் உள்ளனர்; முஸ்லிம்களும் உள்ளனர். இது விளங்கினால், சூடானின் தேசிய இனப் பிரச்சினை, இலங்கையின் பிரச்சினையுடன் எவ்வகையிலும் ஒப்பிடத்தக்கதல்ல என விளங்கும்.  

எனினும் முஸ்லிம்களை ஏகப் பெரும்பான்மையினராகக் கொண்ட, அராபியர் எனத் தம்மைக் கருதுவோரையும் அராபியக் கலப்பினத்தவரையும் பெருமளவில் கொண்டவர்கள் வடக்குப் பிரதேசத்தில் வாழுகின்றார்கள் எனவும் பழங்குடியினர் உட்படப் பெருமளவு கறுப்பினத்தவராகத் தம்மைக் கருதுவோரைக் கொண்ட பிரதேசம் தெற்கு எனவும் ஒரு வேறுபாட்டைக் கூறமுடியும். இருந்தபோதிலும், தென் சூடான், இந்தியாவில் பழங்குடிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட சட்டிகார், ஜார்கண்ட் மாநிலங்களை விடச் சிக்கலான இன அடையாளம் கொண்டது.  

1978இல் தென்சூடானில் கண்டுபிடித்த எண்ணெய் வளம், அந்நியக் தலையீடுகளுக்கான சூழலை ஏற்படுத்தியது. சூடான் 1983இல் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அறிமுகப்படுத்திய பின்பு, தென் சூடானில் ‘சூடானிய மக்கள் விடுதலைப் படை’ என்ற ஆயுதக் குழு உருவானது.   

1993இல் ஒமார் அல்-பஷீர் ஜனாதிபதியாகிய பின்பு, பாலஸ்தீன விடுதலைக்குச் சார்பான நிலைப்பாட்டை சூடான் எடுத்தது. அதன் பின்பு அமெரிக்காவும் இஸ் ரேலும் சூடானைக் கடுமையாக இலக்குவைத்துத் தாக்கின.  

image_feff8d0ead.jpg

1995இல், எகிப்திய ஜனாதிபதியைக் கொல்ல முயன்றதாகக் கூறி, சூடான் மீது ஐ.நா வணிகத் தடை விதித்தது. 1998இல் மருந்துப் பொருள் உற்பத்திச்சாலை ஒன்றை, இரசாயன ஆயுத உற்பத்திச்சாலை எனக் கூறி, அமெரிக்கா அதைக் குண்டு வீசி அழித்தது.  

1999இல் சீனா, கனடா, சுவீடன் ஆகிய நாடுகளின் உதவியுடன் சூடான் எண்ணெய் ஏற்றுமதியைத் தொடங்கியது. சூடான் அரசாங்கமும் தென்சூடான் கிளர்ச்சியாளர்களும் 2001இல் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையிலும் 2002இல் ஓர் அமைதி உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டனர்.  

 பின்பும் இடையிடையே மோதல்கள் நடந்தாலும், உடன்படிக்கைகளின் பயனாக, அதிகாரப் பகிர்வு உடன்பாடொன்றும் பின்பு, அமைதியான முறையில் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் தென்சூடானின் பிரிவினை பற்றி முடிவெடுக்கலாம் என்ற உடன்படிக்கையும் ஏற்பட்டு, 2011இல் வாக்கெடுப்பின் அடிப்படையில் தென் சூடான் தனி நாடாகியது.   

சூடானின் எண்ணெய் வயல்களில் பெரும்பாலானவை தென்சூடானிலேயே உள்ளன. ஆனால், எண்ணெய்ச் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகள் யாவும் வட சூடானிலேயே உள்ளன. தெற்கு, தனிநாடான பின்னர், இவை மேலும் முரண்பாடுகளுக்குக் காரணமாகின.

image_128460a0b3.jpg  
இதற்கிடையே, தெற்கில் நடந்த போர் காரணமான, இடப்பெயர்வு டார்பூர் பகுதியில் புதிய சிக்கல்களை ஏற்படுத்தியது. அதைக் காரணமாக்கி, டார்பூரில் கிளர்ச்சியாளர்கள் தூண்டப்பட்டனர். அதில், இஸ் ரேலும் அமெரிக்காவும் முக்கியமான கருவிகள்.   

இப்போது, டார்பூரைத் துண்டாடுவதில் அமெரிக்காவும் இஸ் ரேலும் தீவிரமாக உள்ளன. டார்பூர் சிக்கலை சூடானிய அரசாங்கத்தின் இன ஒழிப்புப் போராகச் சித்தரிப்பதில் அமெரிக்க அக்கறையையும் அதில், அது கண்டுள்ள வெற்றியையும் தென் சூடானின் எண்ணெய் வளத்தில் சீனாவின் அதிகரித்துவரும் பங்கைக் குறைக்கும் அமெரிக்க நோக்கத்துடனும் சூடானைப் பலவீனப்படுத்தி, அரபு நாடுகளிடமிருந்து பாலஸ்தீன விடுதலைக்குக் கிடைக்கும் ஆதரவுக்கு ஆப்பு வைக்கும் இஸ் ரேலிய நோக்கத்துடனும் சேர்த்துக் கவனித்தல் தகும்.  

தென்சூடான் ஜனாதிபதி சல்வா கிர், உபஜனாதிபதி ரிக் மசாரைப் பதவி நீக்கியதிலிருந்து, தொடங்கித் தென் சூடானில் தற்போது அரங்கேறும் உள்நாட்டுக் கலகத்துக்குத் துணையான காரணிகள் பல.   

தென்சூடான் விடுதலைக்காக இணைந்து போராடிய இவ்விருவரும் இரு வேறு பழங்குடி இனத்தவர்களாவர். கிர் டின்கா இனக்குழுவையும் மசார் நுவர் இனக்குழுவையும் சேர்ந்தவர்கள்.   

இப்போது இவ்விருவருக்கும் இடையிலான அதிகார முரண்பாடும் இனக்குழுமங்களுக்கிடையிலான வேறுபாடுமே உள்நாட்டுப் போருக்குக் காரணம் போன்ற தோற்றம் காட்டப்படுகிறது.   

தென்சூடான், தனிநாடாகிய பின்னர், தனிநாட்டு உருவாக்கத்தை ஆதரித்த மேற்குலகு, அதன் உட்கட்டமைப்பு நிர்மாணத்துக்கு உதவவில்லை. சுகாதாரம், உணவு போன்ற அடிப்படைத் தேவைகளே நிறைவாகவில்லை. மேற்குலகுக்கு வேண்டியது மலிவு விலையில் எண்ணெய் மட்டுமே. ஆனால் நடந்ததோ வேறு.   

தென் சூடானை அங்கிகரித்துத் தனது பொருளாதாரத் தொடர்புகளைப் பேணத் தொடங்கிய சீனா, தென் சூடானில் பாரியளவில் முதலிட்டுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகள், அபிவிருத்தி உதவிகள் என்பவற்றைச் சீனா வழங்குகிறது.   

எண்ணெய்க் கிணறுகளைச் சீன நிறுவனங்கள் இயக்குகின்றன. தென் சூடானின் எண்ணெய் உற்பத்தியில் 80 சதவீதமானவையை சீனா வாங்குகிறது. மேற்குலகத் தேவைகளுக்காக மேற்குலக ஆசிகளுடன் உருவான ஒரு நாடு, இவ்வாறு செய்வது மேற்குலகுக்கு ஏற்புடையதல்ல. இதன் விளைவால் மசார், அரசாங்கத்துக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்டார்.   

மசாரின் இனக்குழுவினர், அரசுக்கெதிராகத் தொடங்கிய கிளர்ச்சி, இன்று முழுமையான உள்நாட்டு யுத்தமாக உருவெடுத்து நிற்கிறது. இதன் விளைவால் அரைவாசிக்கு மேற்பட்ட தென்சூடான் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.  

 2011ஆம் ஆண்டு, தென் சூடான் பிரிந்து தனிநாடாகியபோது, உலக ஊடகங்களின் கவனம் முழுவதும் தென் சூடானின் மேல் இருந்தது. இன்று ஆறு ஆண்டுகளின் பின்னர், உலகின் மிகவும் பின்தங்கிய வறுமையில் வாடுகின்ற, அரசியல் ஸ்திரமற்ற ஒரு நாடாகத் தென் சூடான் மாறியிருப்பது எவருடைய கண்களையும் எட்டவில்லை.   

விடுதலைப் போராட்டங்கள் தங்களை நம்பாது மற்றவர்களின் மீது நம்பிக்கை வைப்பதன் ஆபத்துகளைத் தென் சூடான் மீண்டுமொரு முறை வெளிப்படுத்தியுள்ளது.   

பங்ளாதேஷ் பிரிந்த போதும், கொசொவொ பிரிந்த போதும் தென்சூடான் பிரிந்த போதும் நம்மிடையே எழுந்த நம்பிக்கைகள், பிரிவினை இயல்பாகவே நிகழும் என்ற எதிர்பார்ப்பில் உருவானவையல்ல.  

 மாறாக, அங்கே பிரிவினைக்குக் கைகொடுத்தவர்கள் இங்கேயும் கைகொடுப்பார்கள் என்ற நப்பாசையால் மட்டுமே அவை உருவாகின. இன்னமும் மேற்குலகை நம்பிக் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ்ப் பெருங்குடி மக்களிடம் அவ்விதமான எதிர்பார்ப்பு மிகுதியாக உள்ளது.   

நாம் விளங்கிக்கொள்ள வேண்டிய உண்மையொன்றுள்ளது. தமிழ் மக்களின் எதிர்காலம் தமிழ் மக்களின் கைகளிலேயே உள்ளது. அது எந்த அரசியல் குடுகுடுப்பைக்காரர்களது கையிலும் இல்லை.  

முஸ்ஸிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சூடான், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் தென் சூடானை ஒடுக்கியதாலேயே அமெரிக்கா பிரிவினையை வென்றுகொடுத்ததாகக் கற்பிக்கப்படுகிறது.   

அவ்வாறாயின், கொசோவோவில் அமெரிக்கா ஏன் கிறிஸ்தவ சேர்பியர்களுக்கு எதிராக ஒரு முஸ்லிம் கொசோவோவை ஆதரித்தது?   

மேலாதிக்கத்தின் செயற்பாட்டை, மிகையாக எளிமைப்படுத்த இயலாது. அண்மைய உலக வரலாற்றில் எந்த ‘அடிப்படைவாத இஸ்லாமியப் பயங்கரவாதத்துக்கு எதிரான போரை’ அமெரிக்கா முன்னெடுக்கிறதோ, அதே அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கு அமெரிக்க உதவுகிறது. இவையெல்லாம் எமக்குச் சொல்லப்படுவதில்லை.   

நமக்கான முன் மாதிரிகளுக்கான ஒரே தகுதி, தோற்றப்பாடான வெற்றி மட்டுமே என எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறான வெற்றிகளுக்கான விலையென்னவென்றோ அவற்றின் பாதிப்புகள் என்னவென்றோ நாம் யோசிப்பதில்லை.   

அவற்றை ஆதாரமாகக் கொண்டு, பின்தொடரக் கூடாதோரைப் பின்தொடருமாறு தூண்டப்படுகிறோம். அது மிகக் கேடானது. தூண்டுவோரின் நோக்கங்களை ஆராயாமல் விடுவது ஆபத்தானது. 

ஒடுக்கப்படுகின்ற மக்கள் தொடர்ந்தும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவது தவிர்க்கவியலாதது. ஏனெனில், போராடாமல் எதையும் வெல்லமுடியாது. ஆனால், அமெரிக்காவினதோ, மேற்குலகினதோ இந்தியாவினதோ தோள்களில் தொங்குவதால் எந்த நலனும் கிட்டாது.   

ஏனெனில், விடுதலைகள் அவ்வாறு வெல்லப்படுவதில்லை. அவ்வாறு வெல்லப்படுவதற்கு கொசோவோ போல அல்லது தென்சூடான் போல ஆகும். விடுதலை என்பது சுதந்திரத்தையும் உரிமைகளையும் அடகு வைத்துப் பெறுவதல்ல; விடுதலை என்பது பேரம்பேசிக் கிடைப்பதல்ல; விடுதலைகள் எப்போதுமே போராடி வெல்லப்படுபவை.   

இவ்விடத்தில் சுயநிர்ணய உரிமையும் தனிநாடும் தொடர்பான சில விளங்கங்கள் தேசிய இனப் பிரச்சினையின் உள்ளார்ந்த இரட்டை அம்சங்களை விளங்க உதவும்.   

ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமக்கான சுயாட்சி உரிமைகளைக் கோருவது நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதுமான விடயமாகும்.   

அதேவேளை, மோதல் சூழலை வலிந்து உருவாக்கி, ஏகாதிபத்திய சக்திகளின் துணையுடன் அவர்களது உள்நோக்கங்களுக்கு ஏற்பப் பிரிவினையை இயலுமாக்க முன்னிற்பது, ஏற்கக்தகாத பிற்போக்கான விடமாகும்.   

இவ்விடத்தில்தான், தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்கு ஐக்கியப்பட்ட ஒரு நாட்டுக்குள் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சுயாட்சியா அல்லது துண்டாடப்படும் தனிநாடா என்பது சிந்தனைக்கு உரியதாகின்றது.   

இதை நாட்டு நலன், மக்கள் நலன், ஒடுக்கப்படும் வர்க்கங்களின் நலன், ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்வும் மேம்பாடும் என்பனவற்றின் அடிப்படையில் நோக்குதல் வேண்டும். அத்துடன், உலக மேலாதிக்கத்துக்கும் பிராந்திய மேலாதிக்கத்துக்கும் பேரவாக் கொண்டு அலையும் வல்லாதிக்க சக்திகளையும் கணக்கில் கொண்டே பிரிவினையா சுயாட்சியா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தென்-சூடான்-தனிநாடு-பரிசளித்த-பட்டினி/91-206875

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.