Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரதம் தந்த பரிசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாரதம் தந்த பரிசு

சேரன்

ஈழத்தில் இந்தியப்படை, இந்திய சமாதானம் காக்கும் படை (Indian Peace Keeping Force-IPKF) என்ற பெயரில் வந்திறங்கியதும் இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்ற ஆவணத்தில் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியும் இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் கையெழுத்திட்டதும் முப்பதாண்டுகளுக்கு முன்பு.

1987 ஜூலையிலிருந்து 1990 மார்ச் வரை ஒரு லட்சம் இந்தியப் படையினர் ஈழத்தின் வடகிழக்கில் தமிழ்மக்களும் முஸ்லிம்மக்களும் வாழ்கிற பகுதிகளில் முகாமிட்டிருந்தார்கள். அந்தக் காலப் பகுதியில் நடந்த அவலங்கள், படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள், வதைகள் பற்றிய வாய்மொழிக் கதைகளும் வாக்குமூலங்களும் இருந்தாலும் எழுத்துப் பதிவுகளும் ஆவணங்களும் மிக அதிகமாக இல்லை. தகவல்கள், செய்தி அறிக்கைகள், இலக்கியப் பதிவுகள் பல உள்ளன. எனினும் இவை ஒழுங்காகத் தொகுக்கப்பட்டு இன்னும் ஆவணப்படுத்தப்படவில்லை. இணையத்தில் தேடுபவர்களுக்குக் கிடைக்கக் கூடிய விவரங்கள் ஆச்சரியம் தரும் வகையில் சொற்பமே. இந்தியப் படையினர் ஈழத்திலிருந்த காலத்தை அப்படியே மறைத்துவிடுகிற முயற்சி எடுக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகமும் எழுகிறது. இந்தியாவில் வெளியாகும் ஆங்கில நாளேடுகளில் அக்கால கட்டத்துப் பதிவுகளைத் தேடிப் பார்ப்பவர்களுக்கு அவையெல்லாம் பெருமளவுக்கு இந்திய அரசினதும் படையினரதும் தகவல்களையும் எண்ணங்களையும் திருப்பித்திருப்பித் தருவதாகவே இருப்பது தெரியவரும்.

இந்தச் சிறப்புப் பகுதி, மாபெரும் வரலாற்றுத் துயரத்தின் ஒரு சில கண்ணீர்த்துளிகளை மட்டுமே நினைவெழுத லூடாகவும் கவிதைகளூடாகவும் காட்டுகிறது. மறக்க நினைக்கும் அவலங்கள் மறுபடிமறுபடி மேலெழுவது அஞரின் (Trauma) விளைவு.

இந்தக் காலகட்டத்தை மறந்தும் விடுதலைப் போராட்டத் தைக் கைவிட்டும் ஈழத்தில் வாழும் தமிழர்கள் வேறு முன்னேற்றப் பாதைகளுக்குச் சென்றுவிட்டார்கள். புலம்பெயர்ந்த, நாடு கடந்த, தாயகம் கடந்த தமிழர்கள் தான், இன்னும் நெருப்பைக் காவிக்கொண்டு, நொறுங்கிய இதயங்களோடு வெறுப்பையும் இந்திய எதிர்ப்பையும் ஈழக்கனவையும் வளர்க்கிறார்கள் என்ற கருத்து நிலையே இலங்கை அரசினதும் இந்திய அரசினதும் கொள்கை வகுப்பாளர்கள், ஆலோசகர்கள், கல்விப்புலத்தைச் சேர்ந்த பலரினதும் கருத்தாக உள்ளது. வரலாற்று அறிஞர் ரோமிலாதாப்பர்கூட இத்தகைய ஒரு கருத்தைத்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு கொழும்புவில் சொல்லியிருந்தார். புலம்பெயர்ந்தோரையும் நாடுகடந்த நிலையில் வாழ்வோரையும் (Diasporic and Transnational communities) அவர்களது அரசியல், அனுபவங்கள், உறவுகள் என்பவற்றை ஒற்றைப்படையாகப் பார்க்கிற இந்தப் பார்வை இப்போது பொருந்தாது. தொலைவு பொறுப்பின்மையையும் தரலாம், பொறுப்பையும் தரலாம் என்கிற நுட்பமான பார்வை நமக்கு அவசியம். தென்னாபிரிக்காவில்ஆபிரிக்க தேசிய காங்கிரசுக்கும் இனவெறி அரசுக்கும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்த வேளை, “கடந்த காலத்தை மறப்போம்; வன்முறையை மறப்போம்” என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டது. கடந்த
காலத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? தீர்வும் முடிவும் நிறைவும் இல்லாவிட்டால் கடந்த காலம் திருப்பித்திருப்பி எழுதப்படும் அல்லவா?

ஈழத்தில் இந்தியப் படைக்காலம் பற்றி இரண்டு வகையான வெளியீடுகள் வந்துள்ளன. ஒன்று, இந்தியப் படையின் உயர் தளபதிகளாகப் பணியாற்றியவர்கள், இராஜதந்திரிகளின் அனுபவங்களும் ஆய்வுகளும். மற்றது, தமிழில் வெளியான ஆவணங்கள், வாக்குமூலங்கள், இலக்கியப் பதிவுகள், நூல்கள். தமிழில் இருப்பவை பல இப்போது நூலகம் நிறுவனத்தின் வலைத்தளத்தில் எண்ணிம வடிவில் கிடைக்கின்றன (www.noolaham.org) இந்தியப் படைக் கால கட்டத்தைப் பற்றி மேலும் அறிய விரும்புபவர்களும் அந்த வரலாற்றுத் துயரத்தின் வேர்களையும் ஊற்றுக்களையும் கண்டறிய முனைவோரும் பின்வருவனவற்றைத் தேடலாம்: இது முழுமையான பட்டியல் அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான நாளிதழ்கள்.

2. சரிநிகர் இதழ்கள் (1990-2001)

3. தூண்டில் இதழ்கள். ஜேர்மனி.

5. திசை, வார வெளியீடு. யாழ்ப்பாணம்.

6. 1989 காலகட்டத்துக் கொழும்புப் பத்திரிகைகள்.

7. ‘சிங்கத்தின் நகங்களும் அசோகச்சக்கரமும்’ (ஈழம் - காலச்சுவடு பதிவுகள்: 1988-2008)

8. அனுபவப்பதிவுகளாக, ‘வில்லுக்குளத்துப் பறவைகள்’, ‘அம்மாளைக்கும்பிடுறானுகள்’ ஆகிய நூல்கள். ஆய்வுகளும் தகவல்களுமாக, ‘முறிந்த பனை’, ‘வல்வைப்படுகொலை.’

ஆங்கிலத்தில் வெளியானவற்றில் பின்வருவன தேவையானவை.

1. Saturday Review, Sri Lanka, இதனுடைய கடைசி இதழ் ஒக்டோபர் 17, 1987 வெளியானது.

2. Amnesty International அறிக்கைகளும் செய்திகளும்.

3. New Saturday Review, Colombo. 1987-1988; 1990-1991.

4. ‘University Teachers for Human Rights’ (Jaffna) ÜP‚¬èèœ: http://www.uthr.org/Reports/Report3/chapter 8.htm

5. Tamil Times. London. UK.

   6. ‘Memorial for IPKF – Innocent People Killing Force.’

இலங்கையில் மிக உயர் பதவியில் இருந்து இளைப்பாறியவர் கலாநிதி சோமசேகரம். அவருடைய நினைவுக் குறிப்புகள்.

7. ‘In the Name of Peace:  IPKF Massacres of Tamils in Sri Lanka.’

‘Northeast Secretariat on Human Rights’ (NESoHR)

திரட்டிய ஆவணங்களின் நூல் வடிவம் தில்லித் தமிழ் மாணவர் சங்கத்தால் வெளியிடப்பட்டது. இது இந்தியப் படையினர் புரிந்த படுகொலைகளில் பன்னிரண்டை ஆவணப்படுத்தி உள்ளது.
இந்தியப் படைத் தளபதிகள், அதிகாரிகள் எழுதியுள்ள நூல்களும் அவசியமானவை. இவை இந்தியப்படைத் தரப்பின் வாதங்களையும் கருத்துக்களையும் முன்வைக்கின்றன. இந்த நூல்களில் இந்தியப் படையினர் புரிந்த அநியாயங்கள், படுகொலைகள் பற்றிப் பேசப்படவில்லை. “தவிர்க்க முடியாத பக்க விளைவு,” என்றும், “புலிகளையும் பொதுமக்களையும் வேறுபடுத்தி அறிய முடியாததால் பொதுமக்களையும்  கொலைசெய்ய வேண்டியிருந்தது,” என்றும் “போர்ச் சூழலில் மக்கள் கொலைகள் தவிர்க்க முடியாதவை,” என்றும் காலங்காலமாகப் படைத்தரப்புகளும் அரசுகளும் சொல்கிற போலி நியாயங்கள் தரப்படுகின்றன. கூடவே சில நூல்களில் இந்திய அரசு, படைத் தரப்பின் குழப்ப நிலை, ஈழக்கள நிலவரம் பற்றி உரிய, போதுமான புலனாய்வுத் தகவல்கள் இல்லாமை போன்ற விமர்சனங் களும் இடம்பெறுகின்றன. அதிகாரிகள், படைத் தளபதிகள், அரசியல்வாதிகளுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளும் அகங்கார, ஆளுமைப் பிரச்சினைகளும்கூட இந்த நூல்களில் பேசப்படுகின்றன.

8. ‘Intervention in Sri Lanka .  The IPKF Experience Retold’ by Maj. Gen. Harikirat Singh. 2007.

ஹரிகிரத் சிங்தான்இந்தியப்படைகளின்கட்டளைத் தளபதியாக இருந்தவர். 1987 செப்டெம்பர் மாதம் பிரபாகரனைச் சுட்டுக் கொல்லுமாறு ஜே.என். தீக்ஷித் உத்தரவிட்டதாகவும் அதனைச் செய்ய மறுத்ததால் இலங்கையை விட்டுத் தான் 1988 ஜனவரி மாதம் வெளியேற்றப்பட்டதாகவும் இந்த நூலில் எழுதுகிறார் ஏ.ஜீ. நூரானி. இந்தியத் தளபதி சுந்தர்ஜியையும் தீக்ஷித்தையும், : அகங்காரமும் ஆடம்பரமும் மிக்கவர்கள்’ என்று தனதுகட்டுரையொன்றில் விமர்சிக்கிறார். ஹரிகிரத் சிங்கின் வெளியேற்றத்துக்கு அவர்கள் இருவருமே பொறுப்பு என்கிறார்.

9. ‘Assignment Jaffna’  by Lt. Gen. S.C. Sardeshpande. (Lancer Publishers, 1991)

யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பாக இருந்த படைத் தளபதியின் நினைவுகள். ஒப்பரேஷன் பவான் (Operation ‘Pawan’) என்ற படை நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்தவர். இந்த நடவடிக்கை யாழ் பல்கலைக்கழக விளையாட்டுத் திடலில் இந்தியக் கொமாண்டோக்களை இறக்க முயற்சி செய்த நடவடிக்கை. இந்தத் தாக்குதலைப் புலிகள் முறியடித்தார்கள். 39 இந்தியக் கொமாண்டோப் படையினர் கொல்லப்பட்டனர். இந்த நூலில் நாகாலாந்து, மிஸோராம் ஆகிய இடங்களில் இந்தியப்படையினரின் நடவடிக்கைகளையும் யாழ்ப்பாண நடவடிக்கைகளையும் ஒப்பிடுகிறார்.

10. ‘The IPKF in Sri Lanka by Lt. Gen. Depinder Singh (Trishul Publications, Noida, 1991)

இந்திய உளவு சேவையான RAW பற்றிய காட்டமான விமர்சனங்களை இந்த நூலில் காணலாம்.

11. ‘India’s Vietnam’  by Col. John Taylor (rediff.com)

இணையத்தில் கிடைக்கிறது.

12. ‘Assignment Colombo’, J.N. Dixit.1988.

நெருக்கடி மிக்க காலத்தில் இலங்கையில் இந்தியத்தூதராகப் பணியாற்றிய ஜே.என். தீக்ஷித்தின் நூல். மிக முக்கியமான அனுபவங்களைப் பதிவு செய்கிறார்.
அக்காலத்தில் சில ஆண்டுகள் இந்தியாவின் வெளியுறவுத்துறைச் செயலாளராகப் பணியாற்றிய ரொமேஷ் பண்டாரியுடனான அனுபவம் ஒன்றை தீக்ஷித் பின்வருமாறு விவரிக்கிறார்: தமிழ்க் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் எமது அனுசரணையுடன் நிகழ்ந்த வேளை தில்லி திரும்புமுன் கொழும்பு விமான நிலையத்தில் வைத்து என்னிடம் இரு முக்கியமான ஆவணத்தை பண்டாரி தந்தார். “இதனைத் தமிழ்த் தலைவர் செல்வநாயகத்திடம் சேர்ப்பித்து விடுங்கள் என்று சொன்னார். ஆச்சரியத்துடன் செல்வநாயகம் எப்போதோ செத்துப்போய் விட்டாரே,” என்று நான் சொன்னேன்.

“சரி, அப்போ அமிர்தலிங்கத்திடம் கொடுத்துவிடுங்கள். இந்தத் தென்னிந்தியப் பெயர்கள் எல்லாமே எனக்கு எப்போதும் குழப்பமாக இருக்கிறது,” என்றார் பண்டாரி.

13. ‘Sri  Lanka Misadventure: India’s Military Peace-keeping Campaign, 1987-1990’ by Gautam Das, and MrinalK.Gupta Ray

இந்திய அரசையும் படையையும் விமர்சனரீதியாக அணுகுகிற நூல்.

14. ‘Operation ‘Pawan’ by Kuldip Singh Ludra. 1999.

யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற இந்திய ராணுவம் மேற்கொண்ட படையெடுப்பை விவரிக்கிறது.

India’s My Lai: Massacre at Valvettithurai: வல்வைப் படுகொலை நூலின் விரிவாக்கிய ஆங்கிலப் பதிப்பு. பல வாக்கு மூலங்களும் சத்தியக்கடதாசிகளும் (Affidavits) இணைப்பில் தரப்பட்டுள்ளன.

Indo-LTTE war: http://www.sangam.org/2007/11/Indo_LTTE_War_Anthology.php?uid=2643-?iframe=true&width=100% & height=100%
போர் தொடர்பான ஊடகச் செய்திகள் அனைத்தையும் தொகுத்து தனது முற்குறிப்புகளுடன் பல பாகங்களாக நியூயோர்க் இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார் பேராசிரியர் சச்சிசிறீகாந்தா.

India Today இந்தியப் படையினரின் யுத்தங்கள் தொடர் பான தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் விடுதலைப் புலிகளுக் கும் இந்தியப்படைகளுக்கும் இடையான போர் பற்றிய பல பாகங்கள் உள்ளன. Guns and Glory  என்ற இத் தொடர் யூட்யூபில் கிடைக்கிறது. இந்தியப் படையினரின் ‘சாகசங்க’ளையும் ‘சாதனை’களையும் சொல்லும் பாணியிலேயே இவை உள்ளன.

இந்த நூல்களுக்கும் ஆவணங்களுக்கும் கொள்கை வகுப்புக் கோப்புகளுக்கும் அப்பால், கண்ணீரும் தசையுமான நமது நினைவுகளை முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீள எடுத்துப் பார்க்கிறபோது இந்தக் காயங்களின் வலி எப்போதுமே ஆறாதது என்பது துலக்கமாகத் தெரிகிறது.

இந்தச் சிறப்புப் பகுதியைத் தொகுக்க எனக்கு உதவிய நண்பன் மஜேந்திரன் ரவீந்திரனுக்கும் தமது பெயரை வெளியிட விரும்பாத வேறிரு நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
பாரதம் தந்த பரிசு- எனும் தலைப்பு எனது தமிழாசிரியர் செ. கதிரேசர் பிள்ளையின் புகழ்பெற்ற புராண நாடகங்களின் திரட்டு நூல் ஒன்றின் தலைப்பாகும். அவருக்கும் அவரது தலைமுறைக்கும் பாரதமும் காந்தியும் சுபாஷ் சந்திர போசும் நெஞ்சுள் நிறைந்தவை. இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு ஈழத்தின் வடக்கிலும் கிழக்கிலும் நிதி சேர்த்து வழங்கியது அவரது தலைமுறை. அந்த வரலாற்றின் அடியே தெரியாதவர்கள் கையில் இப்போது இருக்கும் பாரதம் வேறு. இந்தப் பாரதம் நமக்குத் தந்த பரிசு பற்றியதே இந்தச் சிறப்புப் பகுதி. இது எமது ‘ஆறாவடு’வின் ஒரு சிறிய சஞ்சலப் படம். அழிய மறுக்கும் குருதிக் கோடு.

 

http://www.kalachuvadu.com/archives/issue-215/பாரதம்-தந்த-பரிசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அகழல்

சேரன்
 
46-1.jpg

 

*அவர்களின் அகத்தில் நிலம் இருந்தது. அகழ்ந்தனர்.
 -போல்  செலான்.
1987ஜூலை மாதத்தின் இறுதி நாட்கள். இந்தியப் படை யினர் பெருங்கவச வாகனங்களில் பல்லாயிரக்கணக்காக வடக்கு நோக்கி வந்துகொண்டிருந்தபோது யாழ்ப் பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி நான் சென்றேன். என்னைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றவர்கள் Saturday Review வார இதழின் ஆசிரியர் காமினி நவரத்னவும் இன்னொரு நெருங்கிய நண்பரும் (அவருடைய பெயரை இப்போதைக்குத் தவிர்த்துவிடுகிறேன்.) காமினி நவரத்ன இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர்; 1983 ஜூலைப் படுகொலைகளின்போது தடைசெய்யப்பட்டிருந்த சற்றர்டே றிவியூ இதழ் மறுபடியும் ஒழுங்காக வெளிவரக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர். பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பை ஏற்கப் பலரும் தயங்கிய வேளை துணிவுடன் அதனை ஏற்றுக்கொண்டவர். பத்திரிகைத் துறையில் எனது வழிகாட்டி; சிங்களவர்.

கொழும்புவில் மகரகமவிலிருந்த காமினியின் வீட்டில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்தபோது இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு எதிரான தீவிரமான போராட்டம் வெடித்தது. ஜே.வி.பியும் அதனோடு இணைந்த பலரும் மகரகம சந்தியில் இலங்கை அரசுக்குச் சொந்தமான பல வாகனங்களுக்குத் தீ வைத்தபோது நானும் காமினியின் மைத்துனரும் மகரகம சந்தியிலிருந்து காமினியின் வீட்டுக்குச் செல்லும் சிறு தெருவில் ஓட்டோவுக்காகக் காத்திருந்தோம். நான்கு பிக்குமார் அந்த அழிப்பில் முன்னணி வகித்தார்கள். கடைகள் சிலவும் கொளுத்தப்பட்டன.
மகரகம பாதுகாப்பில்லை என உணர்ந்த காரணத்தால் குமாரி ஜயவர்த்தனவின் ஏற்பாட்டில் ஹெந்தல எனும் இடத்தில் அமைந்திருந்த அவரது கடலோர வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தேன்.
அந்த நாட்களில்தான் யாழ்ப்பாணத்தில் நான் பணிபுரிந்து வந்த சற்றர்டே றிவியூ அலுவலகத்துக்கு இந்தியப் படையின் உயரதிகாரிகள் சிலர் ‘நல்லெண்ண விஜயம்’ மேற்கொண்டிருந்தார்கள். ஆசிரியர் காமினி நவரத்னவும் நானும் அங்கிருக்கவில்லை என்பதால் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான கனக ராஜநாயகத்தை அவர்கள் சந்தித்தார்கள். அவர் துணிச்சலானவர். அவரை ‘ஆடு’ என்றுதான் ஏ.ஜே. அழைப்பார். அந்தச் சந்திப்பு நல்ல அறிகுறி அல்ல என்பது நமது நிறுவனத்தினருக்கு அப்போதே தெரிந்துவிட்டது. எமது அச்சகம், அலுவலகம், எம்மிடம் இருந்த கோப்புகள் எல்லாவற்றையும் அவர்கள் பார்வையிட்டார்கள். எமது கருத்தியல் என்ன என்று கேட்டார்கள். ‘சேரன் ருத்ரமூர்த்தியைக் கட்டாயம் பார்க்க வேண்டும். அழைத்து வர முடியுமா?’ என்று பணிப்பாளரைக் கேட்டார்கள். நல்ல காலம். அப்போது நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிவிட்டேன்.

பத்திரிகை ஆசிரியர் குழுவில் பலருக்கும் அதன் நிர்வாகத்தைக் கவனித்து வந்த விஸ்வலிங்கத்துக்கும் பல காலமாக நல்லுறவு இருக்கவில்லை. எனவே பத்திரிகை தொடர்பான முக்கியமான தீர்மானங்கள் எடுப்பதில் எப்போதும் முரண்பாடுகளும் குழப்பங்களும் ஏற்படும்.

ஆகஸ்ட் இரண்டாம் வாரம் நான் இலங்கையை விட்டு வெளியேறி நெதர்லாந்துக்குச் சென்றேன். ஓரிரு மாதங்களில் மறுபடியும் போர் ஆரம்பமாகிவிடும் என்பதையும் ஊகித்திருந்தேன். இப்படி ஊகிப்பதற்கு நுண்ணறிவு எதுவும் அன்று தேவைப்பட்டிருக்கவில்லை. ஆகஸ்ட் 22, 1987இல் நயினாதீவிலும் முல்லைத்தீவிலும் தமிழ் மக்கள்மீது இலங்கைப் படையால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பூநகரியில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் எங்கள் பத்திரிகை, செய்தி வெளியிட்டது. ‘Accord Runs into Snags?’ என்று தலைப்பிட்டு ஏ.ஜே. எழுதியிருந்தார். ஆகஸ்ட் 18, 1987 அன்று ஜே.ஆர். ஜயவர்த்தன மீதும் அவரது அமைச்சரவை மீதும் நடத்தப்பட்ட கைக்குண்டு வீச்சில் மாவட்ட அமைச்சர் கீர்த்தி அபேவிக்கிரம கொல்லப்பட்டார். பிரேமதாச, லலித் அதுலத்முதலி ஆகியோர் காயமடைந்தனர். ஒப்பந்தத்தை எதிர்த்த தென்னிலங்கைக் கட்சிகளின் ஆதரவாளர்கள், உறுப்பினர்களுள் சிலரே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமாக இருந்த என் நண்பர்கள் சிலர், “சண்டையைத் தவிர வேற வழி இல்லை. ஆனால் எப்ப மூளும் என்றுதான் சொல்ல முடியாமல் இருக்கிறது,” என்று சொன்னார்கள்.

பிற்பாடு திலீபன் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தமை, இடைக்கால நிர்வாக அமைப்பை வடக்குக் கிழக்கில் ஏற்படுத்துவதற்கு ஜே.ஆர். அரசு ஏற்படுத்திய நெருக்கடிகள், குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பிற உறுப்பினர்கள் கடலில் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட சிக்கலும் அவர்கள் தற்கொலை செய்தமையும், ஒப்பந்தம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் அவநம்பிக்கை, இந்திய உளவுச் சேவை மற்றைய இயக்கங்களுக்கு ஆயுதங்களும் பயிற்சியும் வழங்க ஆரம்பித்தமை, ஜே.என். தீக்ஷித்தின் அகங்காரம் மிக்க செயற்பாடுகள் எனப் பல்வேறு காரணங்களால் இந்தியப்படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அக்டோபர் 11, 1987 போர் மூண்டது.

சற்றர்டே றிவியூ வெளிவருவது சாத்தியமில்லை என்பது ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் ஒக்டோபர் 17 அன்று வரை பத்திரிகை வெளியாகியது. இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட கொக்குவில், தலையாழிப் படுகொலைகள், பிரம்படிப் படுகொலைகள் போன்றவற்றை விவரமாக வெளியிட முடிந்திருந்தாலும் ஈழமுரசு, முரசொலி ஆகிய நாளிதழ்களையும் விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி ‘நிதர்சன’த்தின் ஒளிபரப்புக் கோபுரத்தையும் வெடிவைத்துத் தகர்த்ததுபோல சற்றர்டே றிவியூ தகர்க்கப்படவில்லை. எல்லாவற்றையும் மூடிவிட்டுச் சென்றுவிட வேண்டும் அல்லது வெடிவைப்போம் என்ற எச்சரிக்கை மட்டுமே விடப்பட்டது. போர் உக்கிரமாக நிகழ்ந்தபோதும் இந்தியப் படையினர் நிகழ்த்திய படுகொலைகள் பற்றிய தகவல்களும் விவரங்களும் கொழும்பு ஊடகங்களில் வரவில்லை அல்லது அவற்றுக்கு முற்றாகத் தெரிந்திருக்கவில்லை. அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் தங்கிநின்று சற்றர்டே றிவியூக்கு எழுதிக்கொண்டிருந்த டி.பி.எஸ். ஜெயராஜ் கொழும்புவுக்குத் தப்பிச் சென்று அங்கே விவரமாகக் கட்டுரைகளை வெளியிட ஆரம்பித்தபோதுதான் இந்தியப்படையின் படுகொலைகளும் தாக்குதல்களும் பற்றிய விவரங்கள் பரவலாகத் தெரிய ஆரம்பித்தன.

அக்டோபர் 21, அன்று யாழ் மருத்துவமனைப் படுகொலைகள் நிகழ்ந்த பிற்பாடு கொழும்புவிலிருந்து காமினி நவரத்தின New Saturday Review என்று ஒரு பத்திரிகையை வெளியிடத் தொடங்கினார். அது  போட்டோகாப்பி  (xerox) வடிவத்திலேயே முதலில் வெளியிடப்பட்டது. அதன் முதலாவது இதழிலேயே படுகொலைகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன.

New Saturday Reviewஇதழ்களைக் காமினி நவரத்தின உடனுக்குடன் நெதர்லாந்திலிருந்த எனக்கு அனுப்பிவைப்பார். அங்கே அவ்விதழ்களின் இன்னொரு பதிப்பை நானும் அங்கு படித்துக்கொண்டிருந்த சித்திரலேகா மௌனகுருவும் வெளியிட்டு ஐரோப்பாவிலுள்ள செய்தி நிறுவனங்களுக்கும் மனித உரிமை அமைப்புகளுக்கும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் அனுப்பிவந்தோம். இந்த வெளியீட்டைச் செய்ய எம்முடன் பணிபுரிந்தவர்கள் பேரா. றேச்சல் கூரியன், பேரா. அம்ரிதா சாச்சி, யான் பிரெண்ஸ்மா ஆகியோர். இவர்கள் அனைவரும் நெதர்லாந்தில் நான் கல்விகற்ற Institute of Social Studies என்ற பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தவர்கள். அங்குதான் நானும் சித்திரலேகாவும் சுனிலா அபேசேகராவும் படித்துக்கொண்டிருந்தோம்.

றேச்சல் கூரியன் என்னுடைய ஆய்வு நெறியாளராக இருந்தவர். இலங்கை மலையக மக்களின் குடியுரிமைச் சிக்கல்கள், கூலி உழைப்பின் நெருக்கடிகள் பற்றிய பல ஆய்வுகளைச் செய்தவர். இந்து ராம், கலாநிதி நீலன் திருச்செல்வம் போன்ற ஆளுமைகள் றேச்சல் கூரியனின் நண்பர்கள். நெதர்லாந்து வந்தால் அவர்கள் றேச்சல் கூரியனின் வீட்டில் தங்குவது வழமை. எங்களுடைய இலக்கிய, அரசியல் ஒன்றுகூடல்கள் பலவும் அவரது வீட்டிலேயே நடைபெறுவது வழக்கம். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நா. சண்முகதாசன், Saturday Review / TRRO நிறுவனர் கந்தசாமி ஆகியோர் நெதர்லாந்து வந்திருந்தபோதும் றேச்சல் கூரியன் வீட்டிலேயே ஒன்றுகூடல்கள் நிகழ்த்தியிருந்தோம்.

1987 நவம்பர் மாதம் முதல் வாரம் என்று நினைவு. இந்து ராம் நெதர்லாந்து வருகிறார் என்று றேச்சல் கூரியன் சொன்னார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தினதும் இந்தியப் படைகளதும் தீவிரமான ஆதரவாளராக அவர் இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. எனினும் இந்தியப் படைகளின் படுகொலைகள், அண்மைக்கால நிகழ்வுகள் பற்றி அவருடன் கலந்துரையாடலாம் என றேச்சல் கூரியன் கருதினார். இரவுநேரச் சிறு ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்தார் அவர்.

New Saturday Reviewவின் இரண்டு இதழ்களை அப்போது வெளியிட்டிருந்தோம். யாழ். மருத்துவமனைப் படுகொலைகள், பிரம்படிப் படுகொலைகள், யாழ். பல்கலைக்கழக வளாகத்திலும் நூலகத்திலும் இந்தியப் படையினர் பலர் மலங்கழித்து மாசாக்கிய அவலம் பற்றிய விரிவான செய்திகள் அவற்றில் வெளிவந்திருந்தன.

இந்து ராமுடனான உரையாடல் தொடக்கத்தில் இணக்கமாக இருந்தாலும் இந்தியப் படையினரின் படுகொலைகளைப் பற்றிப் பேசியபோது கடினமாக மாறிவிட்டது. ‘ஒரு கையைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டுதான் அவர்கள் போர் புரிகிறார்கள்; மிகப் பண்பட்ட படையினர் அவர்கள். நீங்கள் சொல்கிற மாதிரி எத்தகைய படுகொலைகளையும் அவர்கள் புரிந்திருக்கமாட்டார்கள்,’ என்று உணர்ச்சிவசப்பட்டார்New Saturday Review இதழ்களை அப்போது அவருக்குக் கொடுத்தேன். அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. ‘இவையெல்லாம் புலிகளின் பொய்ப் பிரச்சாரம். இவற்றையெல்லாம் நீங்கள் ஏன் காவிக்கொண்டு திரிகிறீர்கள்?’ என்று மிகவும் காட்டமாக எங்களைக் கேட்டார்.

‘இல்லை. இது காமினி நவரத்தின வெளியிடுவது. அவர் உங்களது நண்பர்தானே. அவரும் புலியா? இதனை நானும் றேச்சலும் இங்கே இருக்கிற மற்றை நண்பர்களும்தான் இங்கே வெளியிடுகிறோம்,’ என்று அவருக்குச் சொல்லும்போதே அவர் கோபத்துடன் எழுந்து தன்னுடைய அறைக்குப் போய்விட்டார். இந்தியப் படையினர் எத்தகைய அநியாயமும் புரியாதவர்கள், அவர்கள் இலங்கை வரும்போது ஒருகையைப் பின்புறம் வைத்துக்கொண்டு மறுகையில் காந்தியின் ‘சத்தியசோதனை’ நூலை ஏந்திக்கொண்டுதான் வந்தார்கள் என்று தீவிரமாக நம்புகிறவர்கள் இப்போதும் பலர் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் தருவதல்ல.

யாழ். பல்கலைக்கழக நூலகத்தில் ஏராளமான இந்தியப் படையினர் மலங்கழித்தமை பற்றிப் பெயர் குறிப்பிடாமல் ஏ.ஜே. கனகரத்தினா New Saturday Reviewவில் எழுதியிருந்த கட்டுரை இந்திய, இந்தியப் படை ஆர்வலர்கள் பலரது கோபத்தைக் கிளப்பியிருந்தது. அந்தக் கட்டுரையில் நோபல் பரிசுபெற்ற எழுத்தாளரான வி.எஸ். நைப்பால் எழுதிய ‘An area of Darkness’ (1964) என்ற இந்தியப் பயண நூலில் இருந்து ஏ.ஜே. மேற்கோள் காட்டியிருந்தார். நைப்பால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். ட்ரினாட் (Trinidad)டில் பிறந்து வாழ்ந்தவர். அவர் முதல் தடவையாக இந்தியாவுக்குச் சென்ற அனுபவப் பண்பாட்டு அதிர்ச்சி பற்றியதே அந்த நூல். இந்தியா எங்கிலும் பொது இடங்களில் மக்கள் மலம் கழிப்பது சாதாரணமாக இருந்தமையைக் கண்ணுற்ற நைப்பால், இந்தியாவைப் போகுமிடமெங்கும் சுரணையற்று மலங்கழிக்கும் ஒரு மிகப்பெரிய கூட்டமாக உருவகப்படுத்தி இருந்தார். அதற்காக நிறைய விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.

‘இந்தியர்கள் எல்லா இடங்களிலும் மலம் கழிக்கிறார்கள்; பெரும்பாலும் ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் மலம் கழிக்கிறார்கள்; கடற்கரையில் மலம் கழிக்கிறார்கள்; ஆற்றங்கரைகளில் மலம் கழிக்கிறார்கள்; தெருக்களில் மலம் கழிக்கிறார்கள்; அவர்களுக்கு ஒளிவுமறைவு தேவையே இல்லை,’ என்று நைப்பால் குற்றம்சாட்டியிருந்தார். இத்தகைய பின்னணியில் யாழ். பல்கலைக்கழக வளாகத்திலும் பல்கலைக்கழக நூலகத்திலும் இந்தியப் படையினர் மலங் கழித்ததில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்பதே கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
புலிகளுக்கும் இந்தியப்படைகளுக்கும் யாழ்ப்பாணத்தில் உக்கிரமான சண்டை நிகழ்ந்த வேளை காயப்பட்ட பொதுமக்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றவர்களையும் இந்தியப் படையினர் பல சந்தர்ப்பங்களில் கொன்றனர். காயமுற்றவர்களையும் கொல்வதென்பது இந்தியப் படையினரின் நடைமுறையாக இருந்தது. இந்தியப் படையினரின் எறிகணைத் தாக்குதல்களின்போது கோவில்களில் தஞ்சமடைந்திருந்த மக்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. எனது அம்மம்மாவின் சகோதரி மகளான ராணி அக்காவும் அவர் குடும்பமும் சண்டிலிப்பாயில் இருந்தனர். எறிகணை வீச்சு மோசமாக இருந்ததால் அவர்களும் கோவிலில் தஞ்சம் அடைந்திருந்தனர். மோசமாகக் காயப்பட்டிருந்த ஒரு வயோதிபரை ஒருவரும் கவனிக்காத நிலையில் ராணி அக்காவின் கணவர் மருத்துவமனைக்குக் காரில் அழைத்துச் சென்றார். இடையில் இந்தியப் படையினர் காரை மறித்து, காரோடு அனைவரையும் எரித்தார்கள்.

1989 மே மாதம் நெதர்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் திரும்பினேன். சுன்னாகம் ரயில் நிலையத்திலிருந்து அளவெட்டிக்கு நானும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலாச்சாரக் குழுவில் ஒன்றாகப் பணியாற்றிய ஞானசேகரனும் வந்தோம். அளவெட்டி தலைகீழாக மாறியிருந்தது. எங்களுடைய வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் மூன்று இந்தியப் படை முகாம்கள் இருந்தன. அவர்களுடைய காவலரண்களையும் முகாம்களையும் கடக்காமல் எங்குமே போகமுடியாமல் இருந்தது. நான் ஊர் சேர்ந்த மறுநாள் இந்தியப் படையினர் வீட்டைச் சுற்றி வளைத்துவிட்டனர். ஊரில் புதிதாக யார் வந்தாலும் அவர்களுக்கு எப்படியோ விவரம் தெரிந்துவிடுகிறது என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டேன். ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் நாட்டில் இல்லாமல் இருந்தேன் என்பதை எனது கடவுச்சீட்டைப் பார்த்து உறுதிசெய்த பிற்பாடு அவர்கள் திரும்பிச் சென்றனர்.

யாழ்ப்பாணத்தில் எனக்கு வேலை எதுவும் இருக்கவில்லை. சற்றர்டே றிவியூ வெளியீட்டாளர்களான நியூ ஈரா நிறுவனத்தினர் திசை என்னும் வார இதழை அப்போது வெளியிட்டு வந்தார்கள். மு. பொன்னம்பலம் ஆசிரியராக இருந்தார். அ. யேசுராசா முக்கிய பொறுப்பில் இருந்தார். இருவாரத்துக்கொருமுறை ‘ஏகாந்தன்’ என்ற பெயரில் ‘அங்கிங்கெனாதபடி’ என்று ஒரு பத்தி எழுத ஆரம்பித்தேன். எனினும் அரசியல் கட்டுரைகள் எதுவும் எழுத முடியவில்லை. கலை, பண்பாடு சார்ந்தே எழுத முடிந்தது. நிலைமை அவ்வளவு மோசமாக இருந்தது.
அளவெட்டியிலிருந்து யாழ் நகர் வரும் போதெல்லாம் பல இந்தியப் படை முகாம்களில் சைக்கிளை விட்டு இறங்கி நடந்து போக வேண்டும். இது ஆரம்பத்தில் எனக்குத் தெரியாதபடியால் தெல்லிப்பழையில் மகாஜனக் கல்லூரியின் சிற்பி என அழைக்கப் படும் அதிபர் தெ.து. ஜயரத்தினம் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த படைமுகாமில் இருந்த படையினர் எனது தலைக்கு மேலால் சுட்டார்கள். அன்றிலிருந்து, “சைக்கிள் சிற்; யூ வோக்” (Cycle sit; You walk!) என்ற அவர்கள் கட்டளை எனக்குத் தாரக மந்திரமாகிவிட்டது.

அந்த முகாமிலிருந்தவர்களும் அளவெட்டியிலிருந்த முகாம்களில் இருந்தவர்களும் பாடசாலைக்கு மாணவர்கள் செல்லும் நேரம் வரிசையாகத் தெருவால் நடந்துபோவார்கள். வேலிகளில் இருக்கும் பூவரசு, கிளுவை மரங்களில் கிளைகளை ஒடித்து அவற்றால் சைக்கிளில் செல்லும் பாடசாலை மாணவிகளுக்கு அடிப்பதை அவர்கள் வழமையாகக் கொண்டிருந்தார்கள். சிலர் தெருவின் குறுக்கே நின்று மாணவிகளின் மார்பகங்களையும் பிடிப்பார்கள். இவற்றையெல்லாம் வெறுப்போடும் கோபத்தோடும் பார்த்துக்கொண்டுதான் நான் செல்ல வேண்டியிருந்தது.
அளவெட்டியில் எமது பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கடைக்கு அருகாமையிலிருந்த இந்தியப் படை முகாம் சித்திரவதை முகாமாகவே பெரும்பாலும் இயங்கியது. எங்கள் ஊரில் இந்தியப் படையால் பிடிக்கப்பட்டு அங்கு கொண்டுசெல்லப்பட்டவர்களின் தாய், தந்தையர் சிலரோடு நான் மொழிபெயர்ப்பாளனாக அங்கு செல்லவேண்டியிருந்தது. அங்கிருந்த ஓர் அதிகாரிக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது. வதைக்கூடத்துக்குப் பொறுப்பாக ஒரு தமிழர் இருந்தாலும் அவர் பேசுவதற்கோ உதவுவதற்கோ வரவில்லை.

இக்காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் சிறுசிறு குழுக்களாக எல்லா இடங்களிலும் திரிந்தார்கள். இரவுகளில் திடீரென யாராவது வீட்டுக்குச் சென்று அன்றிரவு அங்கே தங்குவார்கள். அதிகாலையில் சென்றுவிடுவார்கள். இந்தத் தகவல் இந்தியப்படைக்குத் தெரிந்துவிட்டால் வீட்டுக்காரர்களைச் சுடுவார்கள்; இப்படியாகக் கொல்லப்பட்டவர்கள் ஏராளம் பேர். எனது பாடசாலை நண்பன் நிர்மலன், கொல்லப்பட்டதும் இப்படித்தான். அவனுடைய சாவீட்டுக்குக்கூட என்னால் போக முடியவில்லை. இந்தியப் படையோடோ அல்லது அவர்களுடன் இணைந்து இயங்கிய தமிழ் இயக்கங்களோடோ தொடர்பு வைத்திருந்தவர்கள், பழக நேர்ந்தவர்களை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றுவிடுவார்கள்.

இந்தியப் படையுடன் இணைந்திருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவர்களில் ஒருவரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தபோது ஏன் மாறிமாறி இத்தகைய படுகொலைகளில் ஈடுபடுகிறீர்கள் எனக் கேட்டேன். “நாங்கள் இருப்பதற்காகக் கொல்கிறோம். புலிகள் கொல்வதற்காக இருக்கிறார்கள் - அதுதான் வித்தியாசம்” என்றார். (அவர் சொன்னது ஆங்கிலத்தில்: We kill in order to exist; They exist in order to kill!)

யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த நாடக அரங்கக் கல்லூரியைச் சேர்ந்தவர்களும் நடிகர்கள் - நெறியாளர்களுமான வீ.எம். குகராஜாவும் ஜெயகுமாரும் இக்காலப் பகுதியிலேயே இந்தியப் படைகளால் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் இணைந்து நாடக அரங்கக் கல்லூரிக்காக அரங்கம் என்ற இதழை நடத்திவந்தனர். தெரு நாடகங்கள் நிகழ்த்துவதிலும் மிக்க ஈடுபாட்டோடு பணியாற்றியவர்கள். எனது நீண்ட நாள் நண்பர்கள். அவர்களுடைய சா வீடு முடிந்த ஒரு சில நாட்களிலேயே ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான இறைகுமாரனின் தாயாரும் இந்தியப் படைகளால் எங்கள் ஊரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இறைகுமாரனும் அவருடைய நெருங்கிய நண்பர் உமைகுமாரனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) அமைப்பினரால் 1982இல் சுட்டுக்கொல்லப் பட்டனர். இது பற்றியும் தமிழ்ப் போராளிகளது உட்கொலைகள், சகோதரப் படுகொலைகள் பற்றியது மான என்னுடைய கவிதை ‘யுத்த காண்டம்’ என்ற தலைப் பில் வெளியாகியிருக்கிறது (பார்க்க: ‘நீ இப்பொழுது இறங்கும் ஆறு’, சேரன் கவிதைகள் ஒரு நூறு. ‘காலச்சுவடு பதிப்பகம்’, 2000).

இந்தியப் படையாலும் விடுதலைப்புலிகளாலும் மற்றைய தமிழ் இயக்கங்களாலும் இந்தக் காலத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் பெயர்களும் முகங்களும் வாழ்வும் எமக்கு முழுமையாகத் தெரியாது. இந்தத் தகவல்களையும் கதைகளையும் சொல்லவும் தரவுமே இன்றும் பலர் அஞ்சுகின்றனர். தம்மால் முடிந்த அளவுக்கு விவரங்களை மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்) தமது அறிக்கைகளில் பதிவு செய்திருக்கிறார்கள். அவை இணையத்தில் கிடைக்கின்றன.

1989 நடுப்பகுதியில் எனது தங்கையின் திருமணப் பேச்சு வார்த்தைகள் தொடர்பில் மட்டக்களப்பு செல்ல நேர்ந்தது. அப்போதுதான் ‘தமிழ்த் தேசிய இராணுவத்துக் கான’ கட்டாய ஆட்சேர்ப்பில் இந்தியப்படையுடன் சேர்ந்தியங்கிய இயக்கங்கள் இறங்கியிருந்தன. வாகனங்களை இடைமறித்து இளைஞர்களையும் மாணவர்களையும் கடத்திச்செல்வது, வீடுகளுக்குள் புகுந்து கடத்திச்செல்வது என மிகத் தீவிரமாக ‘ஆள்பிடி’ நடந்த நேரம் அது. மட்டக்களப்பு செல்லும் வழியில் வவுனியாவில் என்னையும் கட்டாயமாக வாகனத்திலிருந்து இறக்கிப் ‘பயிற்சி’ முகாமுக்கு இழுத்துச் சென்றார்கள். என்னுடைய எந்த நியாயத்தையும் அவர்கள் கேட்பதாயில்லை. என்னுடைய தலைமயிரையும் குறுகத் தறித்துவிட்டார்கள்!
முகாமுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் ஒருவரையும் என்னால் அடையாளம் காணமுடியவில்லை. அவர்கள் பிடித்துவைத்திருந்தவர்களில் நான்தான் வயது சற்றுக் கூடியவனாக இருந்தேன். இரவு எங்களை வேறு ஓர் இடத்துக்கு மாற்றுவதாக இருந்தது. எங்களை அழைத்துச் செல்ல வாகனங்கள் வந்த வேளையில் தற்செயலாக எங்களோடு பல்கலைக்கழகத்தில் படித்த நண்பன் கணேசமூர்த்தியைக் கண்டேன். அவன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவன். கலைத்துறைப் பட்டதாரி. ‘மாயமான்’ என்ற எமது வீதி நாடகத்தை 1985இல் பல இடங்களில் நிகழ்த்த உதவியவன். நான் பிடிபட்டிருந்த முகாம் அவர்களுடைய இயக்கத்தினது அல்ல. எனினும் என்னை மீட்டு மட்டக்களப்புவரை தனது வாகனத்தில் கொண்டுவந்து சேர்த்தான். பின்னர் சில வாரங்களில் அவனையும் அவனோடு இருந்த வேறு சிலரையும் மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள் கொன்றுவிட்டார்கள் என்ற சேதி என்னை வந்தடைந்தது.

நினைவில் அழியாத இப்படியான நிகழ்வுகள் தந்த அதிர்ச்சி, துயரம், கையறு நிலை, கோபம், ஆற்றாமை எல்லாவற்றினதும் பிரதிபலிப்பாகவும் சாரமாகவும் இந்தியப் படைகளின் காலத்தில் நான் எழுதிய கவிதைகளின் தொகுதிதான், ‘எலும்புக்கூடுகளின் ஊர்வலம்.’ அப்போது இதனை யாழ்ப்பாணத்திலும் வெளியிடமுடியவில்லை; கொழும்புவிலும் வெளியிட முடியவில்லை. இந்தியாவிலும் வெளியிட முடியவில்லை. நண்பரும் கவிஞரும் திசை ஆசிரியருமான மு.பொ. கவிதைகள் ஒரு சிலவற்றையேனும் திசை இதழில் வெளியிடத் தயங்கினார். கருத்துச் சுதந்திரத்தின் நிலை அப்படி! எனினும் எனது நீண்டகால நண்பர் வேலு (ஜெயமுருகன்) எப்படியாவது இந்தத் தொகுதியை வெளியிட்டுவிடுவோம் எனத் தீர்மானித்தார். அவர் ஒரு கலை ஆர்வலர். வேலு, ஈரோஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஈழ மாணவர் பேரவையின் வடமராட்சிப் பொறுப்பாளராக இருந்தவர். ஓவிய நண்பரொருவர் பொருத்தமான அட்டைப்படம் ஒன்றையும் வரைந்து தந்திருந்தார். கவிதைகள், அட்டைப்படம், எனது முன்னுரை எல்லாவற்றையும் சேர்த்து நூலின் மாதிரி வடிவமைப்புடன் அச்சகத்துக்கு எடுத்துச்செல்லும் வழியில் இந்தியப் படைகளுடன் ஒத்தாசையாக வேலை செய்துவந்த ஈழ மக்கள் விடுதலை முன்னணியினர் (EPRLF) வேலுவைக் ‘கைது’ செய்தார்கள். யாழ்ப்பாணத்தில், ‘எலும்புக்கூடுகளின் ஊர்வல’த்தின் முடிவு அப்படியாயிற்று. வேலுவை யாழ்ப்பாணம் அசோகா ஹோட்டல் முகாமுக்குக் கொண்டுசென்றனர். எனினும் ஈரோஸ் தலைவர் பாலகுமாரன் தலையீட்டால் வேலு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். ‘எலும்புக்கூடுகளின் ஊர்வலம்’ பிற்பாடு, ‘தேடகம்’ நண்பர்களால் 1990இல் கனடாவில்தான் வெளியிடப்பட்டது.

1989 பிற்பகுதியில் அப்போது நாட்டின் அதிபராக இருந்த பிரேமதாச, புலிகளுடன் இணக்கத்துக்கு வந்து இந்தியப் படையினரை வெளியேறச் சொன்னார். 1990 மார்ச் மாத முடிவுக்குள் இந்தியப் படையினர் வெளியேறிவிடுவதாக உடன்பாடு எட்டப்பட்டது. பிற்பாடு நான் கொழும்பு வந்து சேர்ந்தேன். அப்போதுதான் புதிய சற்றர்டே றிவியூ என்பதைத் திருப்பியும் கொண்டுவருவோம் என காமினி நவரத்ன சொன்னார். சில நண்பர்கள் நிதியுதவி செய்தனர். பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது.

மார்ச் மாதம் 1990இல் இந்தியப்படைகள் வெளியேறியபோது அவர்களுக்குப் ‘பிரியாவிடை’ கொடுக்க நானும் நண்பர் குகமூர்த்தியும் ஜேர்மன் ஊடகவியலாளர் வால்டர் கெல்லரும் திருகோணமலை சென்றோம். துறைமுகத்துக்குள் போக அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. வரிசையாக உள்ளே சென்றுகொண்டிருந்த இந்தியப் படையினரிடம், ‘நேரே காஷ்மீருக்குத்தான் போகிறீர்களா?’ என்று வால்டர் கெல்லர் புன்சிரிப்புடன் கேட்டார். நல்ல காலம். எங்களைக் கடந்துசென்ற இந்தியப் படைக் குழுவுக்கு இந்தியைவிட வேறு மொழி தெரிந்திருக்கவில்லை என்பதால் தப்பித்தோம். இன்னும் இரண்டு மாதங்களில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் மூண்டுவிடும் என்பது தெரிந்திருக்கவில்லை. எனினும் இலங்கைச் சூழலில் சமாதானம் ஆயுள் குறைவானது என்பது எப்போதும் போலவே அப்போதும் எனக்குத் தெரிந்திருந்தது. இது இப்போதும் உண்மைதான்.

இந்தக் கட்டுரையின் சுருக்கமான வடிவம் கனடா தாய்வீடு ஜூலை மாத இதழில் வெளியானது.

http://www.kalachuvadu.com/archives/issue-215/நினைவு-அகழல்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாக்குமூலங்கள்

 

வல்வை ந. அனந்தராஜ், யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். இப்போது வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சில் பணிப்பாளராக இருக்கிறார். யாழ்ப்பாணத்தில் கல்லூரி அதிபராகப் பல பள்ளிக்கூடங்களிலும், கல்வி அதிகாரியாகவும் பணியாற்றியவர். கல்வித்துறைச் செயற்பாட்டாளர். ‘வல்வைப் படுகொலை /
India’s Mai Lai: Massacre at Valvettithurai’ நூலை எழுதியவர், அதற்கு முன்பாகவே இலங்கைப் படையினர் வல்வையில் நடத்திய ஊறணிப் படுகொலைகள் பற்றியும் ஆவணப்படுத்தியவர். இந்தியப் படையினர் யாழ்ப்பாணத்திலிருந்தபோது வல்வெட்டித்துறைப் பிரஜைகள் குழு என்னும் சிவில் சமூக நிறுவனத்தை உருவாக்கித் தமிழ் மக்களுக்கும் இந்தியப் படைகளுக்கும் முரண்பாடுகள் எழுகிறபோதெல்லாம் சமாதானத்தை உருவாக்கப் பாடுபட்டவர். இந்தியப் படையினரின் முக்கியமான தளபதிகள் இவரை அறிந்திருந்தார்கள். எனினும் இந்தியப் படையினரால் கைது செய்யப்பட்டு மோசமாகச் சித்திரவதைக்குள்ளானார். அந்த அனுபவத்தை விவரமாகவே எழுதியுள்ளார். இவரது கண் முன்னாலேயெ இவரது மாணவர்கள் பலர் இந்தியப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர் எழுதிய ‘முல்லைத்தீவுச் சமர்’, ‘வல்வைப் புயல்’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தபோது எடுத்த படமே மேலுள்ளது.

இலங்கையில் இந்திய இராணுவத்தினரின் குரூரத்தைப் பதிவு செய்யும் ஆவணம் இது. காலப் பொருத்தம் கருதி நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளன.

அங்கு நின்ற சீக்கியச் சிப்பாய், பெருத்த அட்டகாசத்துடன் கருவிக்கொண்டி ருந்தான். அவன் அப்படிச் சொன்ன அதே கையோடு, அந்தக் கூட்டத்திலிருந்து எழுந்தமானமாக, ஆறுபேரைப் பிடித்து இழுத்துக்கொண்டுபோய்ச் சுடுவதற்கு ஆயத்தப்படுத்தினான். அப்பொழுது தூரத்தே வல்வெட்டித்துறைப் பக்கத்திலிருந்து ஒரு இராணுவ ஜீப் வண்டி வருவதைக் கண்டதும் அவனுடைய கவனம் திசைதிருப்பப்பட்டதால், அங்கிருந்து விலகிச்சென்றான்.

அந்த ஜீப் வண்டியிலிருந்து சுமார் ஆறு, இராணுவ பொலிசார் இறங்கினார்கள்.

அதிலிருந்து இறங்கிய ஒருவனுடைய உத்தரவைத் தொடர்ந்து, அங்கு ஏற்கெனவே நின்ற இராணுவத்தினர் ஜங்ஷனை நோக்கி நடக்கத்தொடங்கினார்கள். அப்பொழுதுதான் அங்கிருந்தவர்களுக்குப் போன உயிர் திரும்பிவந்தது.

இந்தச் சம்பவம் நடந்துகொண்டிருந்த அதே நேரத்தில், வல்வெட்டித்துறை ஜங்ஷனுக்கும் ஊறணிக்கும் இடையிலுள்ள கொத்தியால், காட்டுவளவு ஆகிய சந்துகளில் பல நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருந்தனர்.

அங்கு ஒரு மரணவீட்டில், துக்கம் கொண்டாடு வதற்காக இருந்த ஆண்கள் அனைவரையும் வயது வேறுபாடின்றி வெளியே இழுத்துவந்து வரிசையாக நிற்கவைத்தார்கள்.

“நீங்கள் எல்லாரும் எல்.ரீ.ரீ.ஈ உங்கள் எல்லாரை யும் சுட வேணும்...” அங்கு நின்ற சிப்பாய் வெறிபிடித்தவன்போல் கத்தினான். அங்கே மரண வீட்டிலிருந்த பெண்கள் எல்லோரும் வெளியே ஓடிவந்து, மூர்க்கத்தனமாக நின்று கொண்டிருந்த சிப்பாய்களின் காலில் விழுந்து அழுதார்கள்.

கருங்கல்லை இளக வைக்கலாம், இந்தக் கயவர்களை இளகவைக்கமுடியுமா?

அந்த இராணுவத்தினர், தாங்கள் கைது செய்தவர்களை இழுத்துக்கொண்டு ஜங்ஷனை நோக்கி நடந்தார்கள். அவர்களின் பின்னால், அழுது கூக்குரலிட்டுக்கொண்டே ஓடிவந்த பெண்களைச் சப்பாத்துக்காலினாலும் ரைபிள் பிடியினாலும் ஓங்கி அடித்தார்கள். அந்தச் சிப்பாய்களில் ஒருவன், தனது கையிலுள்ள ரைபிளினால் குறிவைத்துக்கொண்டு நின்றதும், அந்தப்பெண்களின் வேகம் தடைப்பட்டது.

அவர்களுடன் சுமார் முப்பது பொதுமக்கள்வரை கூட்டிச்செல்லப்பட்டனர். வல்வெட்டித்துறை ஜங்ஷனை அடைந்ததும், அவர்களை நடுச்சந்தியிலுள்ள தார்ரோட்டில் இருக்க வைத்தார்கள்.
முதல்நாள் சுடப்பட்டவர்களின் சடலங்கள் ஊதிப் பொருமல் அடைந்துபோய் இருந்தன.

சில நிமிடங்களில் ஒரு சிப்பாய், அவர்களுக்கு அருகில் வந்து, அங்கிருந்தவர்களில் சிலருடைய மயிரைப் பிடித்துத் தூக்கி இழுத்துக் கொண்டுபோய்ச் சந்தியின் எதிர்ப்புறமாக உள்ள எரிந்த கடை ஒன்றின் முன்னால் நிற்க வைத்தான்.

அங்கிருந்தவர்களின் முகங்கள் பேயறைந்ததுபோல் இருந்தன; கண்கள் இமைக்க மறுத்தன... என்ன நடக்குமோ என்ற ஏக்கம் எல்லோரையும் கதிகலங்க வைத்துக்கொண்டிருந்தது.

எதுவுமே நடந்துவிடக்கூடாது என்று நினைத்துப் பார்ப்பதற்கு முன்னரே, அங்கு நின்ற ஜவான் ஒருவன், அந்த ஆறுபேரையும் ‘படபட’ வென்று சுட்டுத்தள்ளிவிட்டுத் தன்கையில் வைத்திருந்த செலவ் லோடிங் ரைபிளை (SLR)திருப்பிக்கொண்டு அப்பால் சென்று கொண்டிருந்தான்.

அவர்கள் அந்த ஒரு கணத்திலேயே விழுந்து கால்களைத் தரையுடன் அடித்துத்துடித்துக்கொண்டிருந்தார்கள்.

ஒருமுறை ஜே.என். தீக்ஷித் இலங்கைக்கான தூது வராக இருந்தபொழுது, யாழ்ப்பாணம் அன்னையர் முன்னணியைச் சேர்ந்த பெண்கள் குழுவொன்று கொழும்புவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் அவரைச் சந்தித்தபொழுது இடம்பெற்ற சுவையான சம்பாஷணை இந்த இடத்தில் நினைவு கூரப்பட வேண்டும்.

தூதுக்குழுவில் சென்ற ஒரு பெண், யாழ் நகரில் இந்திய இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட முப்பது இளம்பெண்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரமாண வாக்குமூலங்களைத் தூதுவர் தீக்ஷித் அவர்களிடம் கொடுத்து, “மேன்மைக்குரிய தூதுவர் அவர்களே!... இப்படியான செயல்களை உங்கள் படைவீரர்கள் தொடர்ந்தும் செய்யாது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்... அவர்களுடைய இந்த நடவடிக்கைகள் பாரம்பரியமிக்க பாரதத்திற்குத்தான் களங்கத்தை ஏற்படுத்தும்...”

அந்தப் பெண், தீக்ஷித்திடம் தனது மன உணர்வுகளை வெளிப்படுத்தி, அவர் என்ன சொல்லப்போகின்றார் என்பதைக் கேட்கும் பாவனையில் நின்றார்.

“என்ன சொல்கிறீர்?... எங்களுடைய ஜவான்கள் ஒருபோதும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இவ்வாறான செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.”

அவருடைய தன்மானம் அவரைச் சுட்டெரித்திருக்க வேண்டும். தனது ஜவான்கள், தனிமையில் இருந்தால்கூட இவ்வாறான பாவச்செயல்களைச் செய்யமாட்டார்கள் என்று அடித்துப்பேசினார்.

“ஓ... அப்படியென்றால் உங்களுடைய இந்திய ஜவான்களுக்கு ஆண் உறுப்புக்கூட இல்லாமல் போய்விட்டதோ?” சிரிக்காது, முகத்தில் எந்தவிதமான மாறுதலுமின்றி அந்தப் பெண் சொன்னதும் தூதுவர் முகத்தில் ஈயாடவில்லை. இந்தியப்படையினர் நடத்திய காமவெறியாட்டங்கள்பற்றி ஆதாரங்களுடன் கொடுத்த புகார்களை அலட்சியம் செய்த தீட்சித்தின் மீது ஆத்திரமுற்ற அந்தப் பெண்மணி அவ்வாறு கேட்டாள்.

36 வயதான, உடுப்பிட்டி, வீரபத்திரர் கோயிலடியைச் சேர்ந்த இந்திரா என்ற பெண், அன்று தனது வீட்டில் ஆறு வயது மகனுடன் தனித்தே இருந்தாள். அந்தச்சம்பவம் பற்றிக் குறிப்பிடும்பொழுது, “எனது கணவர் யாழ்ப்பாணத்தில் வேலைக்குப் போனவர், ஊரடங்குச் சட்டத்தினால் வீட்டிற்குத் திரும்பவில்லை. நானும் எனது மகனும் வீட்டில் இருந்தபொழுது இந்திய அமைதிப்படையைச் சேர்ந்த நான்கு சீக்கியர்கள் எனது வீட்டிற்குள் வந்து, வீட்டைச் சோதனையிடப் போவதாகக் கூறினார்கள். நான், உடனே வீட்டைவிட்டு வெளியே வந்து முற்றத்தில் நின்றேன். அப்பொழுது ஒரு சிப்பாய் எனது முதுகில் துப்பாக்கியினால் தள்ளிப்பிடித்தபடி அறைக்குள் போகுமாறு கூறித்தள்ளினான். எனது ஆறுவயது மகன் பயத்தினால் வெளியே ஓடிப்போய் அழுதுகொண்டு நிற்க மற்றைய சிப்பாய் அவனைப்பிடித்து இழுத்துவந்து ஒரு மூலையில் உட்காரவைத்தான். இரண்டு சீக்கியர்கள் என்னைப் பிடித்து அறைக்குள் இழுத்தார்கள். ஒருவன், நான் சத்தமிடாதபடி என் வாயை அமுக்கிப்பிடித்தான்; மற்றவன் எனது ஆடைகளைக் கழற்றி மானபங்கப்படுத்தினான். எல்லாம் முடிந்து போகும்பொழுது, அந்த வெறிபிடித்த சிப்பாய், என் அருகில் வந்து இதுபற்றி எவரிடமாவது முறையிட்டால் உங்கள் எல்லோரையும் குடும்பத்துடனேயே சுட்டுத்தள்ளிவிடுவேன் என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.”

கண்ணீரின் மத்தியில் கூறிக்கொண்டிருந்த அந்தப்பெண் குலுங்கிக்குலுங்கி அழுதாள்.

“நான் மற்றைய பெண்கள் மாதிரி தற்கொலை செய்யவோ மூடி மறைக்கவோ போவதில்லை. அந்த வெறிநாய்கள் இங்கே அமைதிப்படை என்ற பெயரில் வந்துசெய்கிற அட்டூழியங்களை நாளை உலகுக்கு அம்பலப்படுத்தத்தான் போகிறேன்.”

சூரியன் மெல்லமெல்ல மேற்கே இறங்கிக் கொண்டிருந்தான்!

வல்வெட்டித்துறைச் சந்தியில் தடுத்துவைக்கப் பட்டவர்களும் காயம்பட்டிருந்தவர்களும் அதே இடத்திலேயே நீண்ட நேரமாக வைக்கப்பட்டிருந்தனர்.

எவ்வித மருத்துவ உதவியுமின்றி, இரத்தம் ஓடிய நிலையில் மணிக்கணக்காக இருந்தவர்களை அந்த இராணுவத்தினரில் ஒருவனாவது ஏனென்றுகூடத் திரும்பிப் பார்க்கவில்லை.

இந்தப் படுகொலைகளையடுத்து பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில் சேவை செய்யும் பிரெஞ்சு வைத்தியர்குழு வல்வெட்டித்துறைக்கு வரமுயற்சித்தபொழுது, பொலிகண்டி இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களால் திருப்பி அனுப்பப் பட்டதால், அவர்களால்கூட அந்தக் காயப்பட்ட அப்பாவி மக்களுக்கு உதவி செய்ய முடியாது போய்விட்டது.

சந்தியில் நின்ற காரிலிருந்து சுட்டுக்கொல்லப்பட்ட பிரேம்ராஜ், சலவைத் தொழிலாளியான சிவபாக்கியம் ஆகியோரின் சடலங்களை அங்கிருந்தவர்களின் உதவியுடன் சந்தியிலிருந்து மேற்கே செல்லும் சிறிய சந்தினுள் கொண்டுபோய் வைக்கச் சொன்னார்கள். அதிலிருந்து சிறிது தூரத்தில் தங்கராஜா என்ற வயோதிகரின் சடலம் வெள்ளை வேட்டியினால் மூடப்பட்டிருந்தது.

அந்த வீடுகளில் கொழுந்துவிட்டெரிந்த தீயை அணைத்துக்கொண்டிருந்த அனந்தராஜாவைத் தூரத்தே வந்துகொண்டிருந்த சீக்கிய இராணுவத்தினன் ஒருவன் கண்டுவிட்டான்.

அவனைக்கண்டதும் அவர் ஓட முயற்சிக்கவில்லை. இராணுவத்தினரைக் கண்டால் ஓடுவது ஆபத்து என்பதாலும் ஏற்கெனவே பல இராணுவத்தினரும் அதிகாரிகளும் தெரிந்தவர்களாக இருந்ததாலும் அந்த இடத்தைவிட்டு ஓட முயற்சிக்கவில்லை.

அருகில் வந்த அந்தச் சிப்பாய், அவரது கன்னத்தில் பலமாக ஓங்கி ஒரு அறை கொடுத்து நேரே தங்களுடன் வரும்படி கூறினான். அவர்கள், ஏற்கெனவே தங்களுடன் மேலும் எட்டுப் பொதுமக்களையும் கூட்டி வந்துகொண்டிருந்தனர்.

அவர்களின் பின்னால் சுமார் 22 வயதுள்ள, உடுப்பிட்டி முகாமைச் சேர்ந்த கப்டன் பறிக், கடுகடுத்த முகத்துடன் நடந்துவந்துகொண்டிருந்தான். திரு ந. அனந்தராஜாவுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமானவன்தான் கப்டன் பறீக். அந்த அறிமுகத்தினால், அவனுக்கு அருகில் சென்று பேச வாய் எடுத்ததும், “ஒன்றும் பேச வேண்டாம்,” என்று அவன் கூறிவிட்டுத் தன்னிடம் இருந்த ரைபிளை அவருக்கு நேரே பிடித்தான்.

வல்வெட்டித்துறை ஜங்ஷனில் ஏற்கெனவே தடுத்துவைக்கப்பட்ட சுமார் 50 பேரையும் வரிசையாக நிறுத்தி அவர்களிலிருந்து 34 பேரை உடுப்பிட்டியை நோக்கிப் போகுமாறு பணித்துவிட்டு, அங்கு நின்ற இராணுவ வாகனம் ஒன்றில் சிறிது காயம்பட்ட நிலையிலிருந்த அ. மதிவர்ணன், ஆ. பரம்சோதி என்ற இரு மாணவர்களையும் ஏற்றினார்கள். ஏனையவர்களை வீடுகளுக்குப் போக அனுமதித்த இந்தியப்படையினர் மற்றைய 34 பேரையும் வரிசையாக முன்னே நடக்கவிட்டு அவர்களுக்குக் காவலாக இருபக்கங்களிலும் தானியங்கி ரைபிள்களை நீட்டிப்பிடித்தபடி நடந்துகொண்டிருந்தனர்.

அவர்களின் பின்னால் சென்றுகொண்டிருந்த கேப்டன் பறீக், அனந்தராஜாவைக் கூட்டிக்கொண்டு நடந்தான். உடுப்பிட்டி இராணுவ முகாம் நெருங்கியதும், பொறுப்பதிகாரி கேணல் சர்மாவிடம் கூட்டிச் செல்லாது பின்புறமாக உள்ள சேர் வழியாக அவரையும் மற்றையவர்களையும் கொண்டுசென்றான். ஒரு திறந்த வகுப்பறைக் கட்டடத்தினுள், விடுதலைப்புலிகளுடனான மோதலில் இறந்த இராணுவத்தினரின் சடலங்கள் எரிந்து கொண்டிருந்தன. அங்கே நூற்றுக்கணக்கான ஜவான்கள் நின்றனர். அவர்களில் முன்னர் பொலிகண்டி இராணுவ முகாமில் இருந்த கப்டன் கோபால கிருஷ்ணமேனன், முகத்தில் கோபக்கனல் தெறிக்க நின்றான்.

அவனின் முகத்தில் பொதுவாகவே, புன்முறுவலைக் காண்பது அரிது... அன்றோ அவனது முகம் இன்னும் கடுகடுப்பாக இருந்தது. அவனுடன், கப்டன் சுக்ளா, கப்டன் சிகாரி, கப்டன் டாக்டர் சௌத்ரி ஆகியோரும் நின்றனர். அங்கு கொண்டுவரப்பட்ட, அந்த அப்பாவிப் பொதுமக்களை ஒவ்வொருவராகப் பிடித்துத் தனது பூட்ஸ் காலால் உதைத்தும் கன்னத்தில் அடித்தும் ஒரு அறைக்குள் அனுப்பிக்கொண்டிருந்தான். அந்த அறையின் வாசலில் குண்டர்கள்போல் ஆறு ஏழு சீக்கியர்கள் உருளைக் கம்புகளினால் அடித்தும் குத்தியும் ஒவ்வொருவராக அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

அந்த அறை முழுவதும் “ஐயோ!... அம்மா!” என்ற அவலக் குரல்கள், அந்தப் பிரதேசத்தையே அதிரவைத்துக்கொண்டிருந்தன. அதற்கு அடுத்த சுவரை அடுத்துள்ள, கூடாரத்தின் கீழிருந்த கேணல் சர்மா எதுவுமே தெரியாதவர்போல், யாருடனோ டெலிபோனில் பேசிக்கொண்டிருந்தார். ஒரு இராணுவ முகாமில் நடைபெறுகின்ற ஒவ்வொரு விஷயமும் அந்த முகாமின் பொறுப்பதிகாரி தெரிந்திருக்கவேண்டும்; அல்லது அவரது உதவி இராணுவ அதிகாரிகள் அவரது கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

இவை இரண்டுமே இல்லாவிட்டால் அவர்களை ஒரு கட்டுக்கோப்பான இராணுவம் என்று எப்படி அழைக்க முடியும்? கேணல் சர்மா, தனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்வது மிகவும் வேடிக்கை! உலகின் நான்காவது பெரிய இராணுவம், இப்படியா செயல்படுகிறது? அங்கிருந்த 34 அப்பாவிகளையும் அந்த அறையினுள் தள்ளிவிட்டு, தமது வழமையான சித்திரவதைப் பரிசோதனைகளை நடத்திக் கொண்டிருந்தனர்.

அவர்களுடைய சித்திரவதைகள் நவீன, இஸ்ரேல் மொசாட் படையினரையும் மிஞ்சும். சில சித்திரவதைகள் நம்பமுடியாமல்கூட இருக்கலாம். ஆனால் அதிலிருந்து தப்பிவந்தவர்கள் கூறும் கண்ணீர்க் காவியங்களோ ஏராளம்.

ஆண் உறுப்பில் மின்சாரத்தைச் செலுத்துவது, ஆள் அளவு குழி தோண்டி, அதனுள் நிற்கவைத்துக் கழுத்துவரை மண்ணால் மூடிவிட்டு இரண்டு, மூன்று நாட்கள் வரை நீர் கூட இல்லாது விடுவது,  தலைகீழாகத் தொங்கக் கட்டிவிட்டுக் காய்ந்த மிளகாய்ப் புகை பிடிப்பது, கைகளையும் கால்களையும் நைலோன் கயிற்றினால் கட்டிவிட்டு வாயினுள்ளும் மூக்கினுள்ளும் தொடர்ச்சியாகத் தண்ணீரை விடுவது!...

நான்கு, ஐந்து பேரை ஒன்றாகப் பிணைத்து அவர்களது கண்களைக் கட்டிவிட்டு ஓடவிடுவது, ஓடி விழுந்தால் அடி போடுவது!... சித்திரவதை செய்வதற்கென்றே தாம் பயிற்றுவிக்கப்பட்டதாக கேப்டன் சுக்ளாவும் கேப்டன் சிகாரியும் சொன்னதைப் பார்த்த அனந்தராஜாவினால் அவர்களது அழுகுரலைக் கேட்டதும் நெஞ்சே வெடிப்பதுபோல் இருந்தது.

படம் சொல்லும் சேதி
இந்தியப் படை யாழ்ப்பாணம் வந்தபோது அதனை மாலை சூடி வரவேற்றவர்கள் தமிழர்கள். இந்தப் படத்தில் உள்ள பதாகை- Thanks to India’s Humanity-
- என்பது யாழ்ப்பாணப் பட்டினத்துள் நுழைய முன்பு வரும் சாவகச்சேரி எனும் இடத்திலிருக்கும் சந்தை அருகேயுள்ள மின்கம்பம் ஒன்றில் தொங்கவிடப்பட்டிருந்தது. ஜூலை இறுதி நாள். இந்தப் படத்தை எடுத்தவர் ஜேர்மன் ஊடகவியலாளர் / ஒளிப்படக் கலைஞர் வால்ட்டர் கெல்லர். 1987 அக்டோபர் மாதம் 29 அன்று இந்தச் சந்தையில் பொதுமக்கள் கூடியிருந்தபோது இந்திய விமானப் படையின் ரஷ்யத் தயாரிப்பான மிக் ஹெலிகொப்டர்கள் தாக்குதலை நடத்தின. 21 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். சந்தைக்கு அருகே விடுதலைப் புலிகளின் வீடொன்று இருந்தது எனப் ‘புலனாய்வுத் தகவல்கள்’ தெரிவித்தமையால் இந்த வான் தாக்குதலை நாம் நிகழ்த்தினோம் என இந்திய அரசு தெரிவித்தது. அப்போது புலனாய்வுக்குப் பொறுப்பாக இருந்தவர் கேர்ணல் ஹரிகரன். தமிழரென்றும் யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் தனக்கு இருந்தனர் என்றும் நேர்காணல்களில் தெரிவித்தவர்.

27 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டார்கள் என இந்திய அரசின் வெளி ‘உத்தியோகபூர்வமான’ அறிக்கை இந்தத் தாக்குதலைப் பற்றித் தெரிவித்தது. எனினும் இந்தத் தாக்குதலைப் பற்றி அபூர்வமாகச் செய்தி வெளியிட்ட UPI செய்தி நிறுவனம் (1987/10/29/Indian-helicopters-reportedly-kill-20-civilians/4529562482000/)- கொல்கத்தா டெலிகிராஃப் நாளிதழின் சுமிர் லால் என்னும் செய்தியாளரை மேற்கோள் காட்டியது. சுமிர் லால் தாக்குதல் இடம் பெற்ற இடத்தில் இருந்தவர். தப்பிப் பிழைத்தவர். இரண்டு இந்திய வான்படை ஹெலிகொப்டர்கள் ஐந்து மணி நேரம் தாக்குதல் நடத்தின எனவும் தாக்குதலிலிருந்து தப்புவதற்காகத் தான் பதுங்கு குழிக்குள் ஒளித்திருந்ததாகவும் சொல்கிறார். கடைகள் எரிந்தன எனவும் 15 உடல்களை எரிந்த நிலையில் சந்தையிலும் மேலும் ஐந்து உடல்களை மருதுவ மனையிலும் தான் பார்த்ததாக அவர் சொல்கிறார். Le Figaro என்னும் பிரெஞ்சு நாளிதழின் செய்தியாளரும் அந்த இடத்தில் இருந்தார். சோவியத்தயாரிப்பான மிக் -24 ஹெலிகொப்டர்களே தாக்குதல் நிகழ்த்தியதாகவும் தான் பார்த்த உடல்களெல்லாம் முதியோரதும் குழந்தைகளதும் எனத் தெரிவித்தார். மருத்துவ மனையில் அப்போது கடமையாற்றிய வெளிநாட்டு மருத்துவத் தொண்டர்களே குண்டு வீச்சிலும் தாக்குதல்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கை, கால் அறுக்கும் சிகிச்சையைச் செய்து வந்தனர்.அவர்களில் ஒருவர் நியூசிலாந்தைச் சேர்ந்த எச்.டி.டிக் ரோசன். சாவகச்சேரித் தாக்குதலில் காயம்பட்டு வந்தவர்கள் அனைவருமே பொதுமக்கள் எனவும் அவர்களில் சிகிச்சை பலனளிக்காமல் மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர் எனவும் அவர் தனது வாக்குமூலத்தில் சொல்லியுள்ளார்.

தாக்குதல் முடிந்து பல மாதங்களின் பின்பும் “இந்தியாவின் மனிதாபிமானத்துக்கு நன்றி / Thanks to India’s Humanity” என்கிற பதாகை மின்கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

 

http://www.kalachuvadu.com/archives/issue-215/வாக்குமூலங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கொலைகள் செய்த   இந்தியபடைக்கும் நினைவிடங்கள் தமிழர்பகுதியில் வந்தாச்சு, கொலைகள் செய்த   இலங்கைப்படைக்கும் நினைவிடங்கள் வடகிழக்கில் வந்தாச்சு,  கொல்லப்பட்ட தமிழர்களுக்கு மட்டும் நினைவிடங்கள் அமைக்க தடை! கொன்றவனை நினைவு கூரலாம், கொல்லப்பட்டவர்களை நினைத்தும்கூட பார்க்ககூடாது என்பது இலங்கை புத்தரும்,இந்திய காந்தியும் போதிக்கும் நவீன காருண்யம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.