Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க ஜனாதிபதியை ஈர்த்த இந்திய விவசாயி!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடிவாடா நாகரத்தினம் நாயுடு,
அமெரிக்க ஜனாதிபதியை ஈர்த்த இந்திய விவசாயி!!!

ஒரு விவசாயிடம் பேட்டி எடுப்பதற்காக 1,200 கிலோ மீட்டர் தூரம் நான் பயணிப்பது இதுதான் முதல் முறை. நானென்ன நான்..! ஒரு மாநில முதல்வரே இவரது பண்ணை விஜயத்தை ஒரு நாள் நிகழ்ச்சியாக வைத்திருக்கும் போது; ஆந்திர அரசு இவரைப் பற்றிய பாடத்தை ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு சேர்த்திருக்கும் போது; அமெரிக்க ஜனாதிபதியே இவரை தேடி இந்தியா வந்திருக்கும் போது நான் எம் மாத்திரம்..!

பள்ளிப் பாடமாக நாகரத்தினம் நான் ஹைதராபத்தில் இறங்கிய போது அவர் அங்கு இல்லை. டெல்லியில் இருந்தார். தேசிய அளவில் நடைபெறும் சாதனை விவசாயிகள் மாநாட்டின் சிறப்பு விருந்தினராக அவருக்கு அன்று பாராட்டும் 10 லட்சம் பணமும் ரொக்கமாக அளிக்கப்படுகிறது. அந்த நிகழ்சிக்காக அவர் அங்கு போயிருக்கிறார். திரும்பி வர இரண்டு நாட்கள் ஆகும் என்றார்கள். இரண்டு நாட்களாக ஹைதரபாத்தை சுற்றி திரிந்தேன். மூன்றாவது நாளில் அவர் வீட்டில் போய் நின்றேன். வசதியான வீடு..!

செழிப்பான பணத்தில் கட்டியது என்பதை வீட்டின் தோற்றமே காட்டியது. காலிங் பெல்லை அழுத்தி காத்திருந்தேன். நான் யாருக்காக இத்தனை கி.மீ. பயணித்து வந்தேனோ அவர்தான் கதவை திறந்தார். அந்த மாமனிதரின் பெயர் குடிவாடா நாகரத்தினம் நாயுடு.

இந்த பெயர்தான் மதுரையிலிருந்து ஹைதராபாத் வரை என்னை அழைத்துக் கொண்டு போனது. தில்சுக் நகரில் உள்ள கெளதம் நகர் காலனியில் அவர் வீடு இருந்தது. வீடு முழுவதும் விருதுகள் அலங்கரித்து நின்றன. 336 விருதுகள், 9 சர்வதேச விருதுகள் என்று வீடு கொள்ளா பெருமைக்கு சொந்தக்காரர் அவர்.

தென்னாப்பிரிக்காவில் கொடுத்த விருது என்னை வரவேற்ற அவர் முதலில் அவரது வீடு முழுவதையும் சுற்றிக் காண்பித்தார். பாத்ரூம் பிட்டிங்க்ஸ் கூட எங்கிருந்து வரவழைத்தது என்று சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்கு இதையெல்லாம் செய்கிறார் என்று தெரியவில்லை.

"வீட்ட முழுசா பாத்துட்டீங்களா..! எப்படி இருக்கு..?"

"ஒரு டாக்டரோட வீடு மாதிரி 'ரிச்'சா இருக்கு..!"

"அதுக்காகத்தான், வீட்ட சுத்தி காண்பிச்சேன். ஒரு விவசாயி, டாக்டர் மாதிரியோ என்ஜினியர் மாதிரியோ ஏன் வாழ முடியாது? அவர்களும் வசதியாக வாழ முடியும் என்பதுதான் எனது கான்செப்ட். இதை மற்ற விவசாயிகளுக்கும் புரிய வேண்டும் என்பதற்காகத்தான், உங்களுக்கு வீடு முழுவதும் சுத்திக் காண்பிச்சேன். இந்த வீடு கூட என்ஜினியர் உதவியில்லாமல் நானே டிசைன் செய்து வடிவமைத்து கட்டியதுதான்" என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக கொடுத்தார்.

அவர் சொன்ன மாதிரியே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் குடி இருக்கும் கௌதம் காலனி கூட வசதியானவர்கள் வாழும் இடம் தான். மேற்கொண்டு அவர் பேசியதிலிருந்து...

"நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டம் பாலகிருஷ்ணபுரத்தில்தான். எனது தாய் தந்தையரும் விவசாயிகள்தான். பள்ளிப்படிப்பை எனது சொந்த ஊரில் முடித்து விட்டு கல்லூரி படிப்பிற்காக சென்னை ரயிலேறினேன். அங்கு 'டிப்ளமோ இன் எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங்' படித்து முடித்தேன். அதன்பின் அண்ணா சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் இரண்டு வருடம் வேலை பார்த்தேன். நல்ல வேலை, நல்ல சம்பளம். ஆனாலும் என் மனம் நிலை கொள்ளவில்லை. என் நாட்டமெல்லாம் விவசாயமாகவே இருந்தது.

மனைவி மகளுடன் நாகரத்தினம்
விவசாயத்தில் ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னை தூங்க விடாமல் செய்தது. இரண்டு வருடங்களில் வேலையை விட்டு விட்டு ஹைதராபாத் வந்தேன். அதற்குள் திருமணமும் முடிந்தது. கையில் சேமித்து வைத்திருந்த பணத்திற்கு ரெங்காரெட்டி மாவட்டத்தில் தரமதி பேட்டை என்ற இடத்தில் 17 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். கரடுமுரடான பாறைகள் நிறைந்த அந்த இடம் விவசாயத்திற்கு ஏற்றதல்ல என்று ஒதுக்கி வைத்திருந்தார்கள். துணிந்து வாங்கினேன். என்னிடம் இருந்த பணத்திற்கு அப்படிப்பட்ட நிலம்தான் கிடைத்தது. முழுவதும் தரிசாக கிடந்த அந்த நிலத்தை வளமாக்கி விளைவிக்க போராடினோம்.

நாகரத்தினத்தின் பசுமையான வயல்
“நான், எனது மனைவி சத்யவதி, எனது தாயார் மூவரும் இரவு பகலாக கடினமாக உழைத்து தரிசு நிலத்தை தங்கம் விளையும் பூமியாக மாற்றினோம். இப்போது எனது நிலத்தில் ஊட்டி, கொடைக்கானலில் வளரும் பூச்செடிகளையும், காபி செடிகளையும் கூட வளர்க்க முடிகிறது. அந்தளவிற்கு வளமிக்க மண்ணாக நிலம் மாறியுள்ளது. விவசாயி என்பவன் எதையும் வெளியில் காசு கொடுத்து வாங்கக் கூடாது என்பதுதான் எனது எண்ணம்.

அவனுக்கு வேண்டிய உணவை அவனே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். நான் விவசாயத்திலே சம்பாதித்து, அதிலே சாப்பிட்டு, அதிலே வருமானமும் பார்க்கிறேன். நான் ஒரே வகையான பயிர்களை நிலம் முழுவதும் வளர்ப்பதில்லை. கலப்பு பண்ணை முறையில் இயற்கை வேளாண்மை செய்து வருகிறேன்.

'திருந்திய நெல் சாகுபடி' முறையில் நெற்பயிர்கள்
2003-ம் ஆண்டு இந்தியாவில் 'திருந்திய நெல் சாகுபடி' முறையை முதன்முதலாக பயன்படுத்தி ஒரு ஹெக்டேருக்கு 15.4 டன் நெல்லை உற்பத்தி செய்து சாதனைப் படைத்தேன். இதுநாள் வரை இதுதான் அதிக விளைச்சலுக்கான சாதனையாக உள்ளது. என்னை பின்பற்றி அடுத்த ஆண்டு ஆந்திராவில் உள்ள 10,500 விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையில், பயிரிட்டார்கள். இதற்காக பல இடங்களுக்கு சென்று பேசினேன். வெளிநாடுகளில் இருந்தும் என்னை அழைத்தார்கள்.

இந்த நிலையில்தான் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி எனக்கொரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தார். அதற்காக எனது நிலத்துக்கு அருகில் தற்காலிக ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைத்து, எனது பண்ணையில் ஒருநாள் முழுவதும் இருந்தார். ஒரு சாதாரண விவசாயியை தேடி மாநில முதல்வர் வந்தது அதுதான் முதல் முறை.

அந்த நிகழ்ச்சிக்கு பி.பி.சி., சி.என்.என்.தொலைக்காட்சி முதற்கொண்டு இந்தியாவின் முன்னணி பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் ஒரு மாதத்திற்கு நீங்கள் எவ்வளவு சம்பாதித்தீர்கள்? என்று கேட்டார். இதன்மூலம் தனது ஆட்சியில் விவசாயிகள் மிக நன்றாக இருப்பதாக பத்திரிகையாளர்கள் மூலம் நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதுதான் அவர் எண்ணம்.

நான் வருமானத்தை சொல்லவில்லை. மாநிலத்திலே மிக அதிகமாக சம்பளம் வாங்கும் அரசு அதிகாரியை விட நான் அதிகமாக சம்பாதிக்கிறேன். நிம்மதியாக இருக்கிறேன் என்றேன்.

அதற்கடுத்த ஆண்டு 2006-ல் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தார். அவர் தனது நிகழ்ச்சியில் என்னை சந்திப்பதையும், ஒரு நிகழ்ச்சியாக வைத்திருந்தார். எனது விவசாய முறையை அறிந்த அவர், ஒரு விவசாயி, ஒரு விஞ்ஞானியை விட மேன்மையானவர் என்றார். என்னை அமெரிக்கா வரும்படி அழைத்தார். 'எனது சேவை எனது தாய் நாட்டுக்கே' என்ற கொள்கையில் உறுதியாக இருந்த நான் அந்த வாய்ப்பை மறுத்து விட்டேன்.

இந்த அலங்கார மலர் ஒன்றின் விலை ரூ.250
நான் பிழைக்க முடியாமல், பிழைக்கத் தெரியாமல் விவசாயத்திற்கு வரவில்லை. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே விவசாயத்திற்கு வந்தேன். இந்த 17 ஏக்கர் நிலத்தை ரூ. 3.4 லட்சத்திற்கு வாங்கியபோது என்னிடம் வேறு எந்த பணமும் இல்லை. இன்றைக்கு எனது சொத்தின் மதிப்பு 17 கோடி ரூபாய். விவசாயம் மூலமே இந்த வருமானம் வந்தது. என்னால் முடியும்போது மற்ற விவசாயிகளாலும் முடியும். என் சொத்து மதிப்பை பகிரங்கமாக வெளியிடுவதற்கு காரணமே, விவசாயம் நஷ்டம் தரும் தொழில் என்று விவசாயிகளே நினைக்கிறார்கள். திட்டமிட்டு பயிரிடுங்கள் பூமித்தாயைப் போல் அள்ளிக் கொடுப்பவள் யாரும் இல்லை. அதற்கு நானே உதாரணம்.

இயற்கை ஒத்துழைத்தால் உணவு உற்பத்தி செய்வது வெகு சுலபம். பெரும்பாலான விவசாயிகள் விளைவிப்பதோடு தங்களின் கடமை முடிந்ததாக நினைக்கிறார்கள். இங்கு சந்தைப்படுத்துவதுதான் கடினம். அதை சரியாக செய்தாலே போதும். விவசாயம் பணம் கொட்டும் ஒரு தொழிலே தான்.

வாட்டி எடுக்கும் வெயிலில் கூட காப்பி செடி
எனது நிலத்தில் இதுவரை செயற்கை உரங்கள். பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தியது இல்லை. அதனால் மண் வளம் மிக நன்றாக இருக்கிறது. எந்த வகை செடியையும் என்னால் இதில் வளர்க்க முடியும். விளைபொருட்களை நேரடியாக மக்களிடம் விற்கிறேன்.

வசதியானவர்கள் திருமணத்தில் தோரணமாக தொங்கவிடப் படும் அலங்கார மலர் 
எனது பொருட்களின் உற்பத்தியைவிட தேவை அதிகம் இருக்கிறது. அதனால் 20 கிலோ அரிசி கேட்பவர்களுக்கு 10 கிலோதான் கொடுப்பேன். இயற்கையான முறையில் விளைவித்த பொருள் என்றால் மார்க்கெட்டில் விலை அதிகம். நான் அதிக விலைக்கும் விற்பதில்லை. ஒரு கிலோ அரிசி ரூ.45 என்றால், எனது விலை ரூ.47 ஆகத்தான் இருக்கும். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்வதால் இதுவே எனக்கு நல்ல லாபம். ஆர்கானிக் முறையில் விளைந்த பொருள் சாதாரண விலைக்கே கிடைப்பதால் வாடிக்கையாளருக்கும் லாபம்.

பெரும்பாலான விவசாயிகள் ஒரே தடவையில் பணக்காரர் ஆகவேண்டும் என்று பயிரிடுகிறார்கள். ஒரே பயிர் பயிரிடக்கூடாது. விவசாயி பலவகை பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும். நான் 75 வகையான பொருட்களை உற்பத்தி செய்கிறேன். மாங்காய் மரங்களில் மட்டும் 35 வகைகள் உள்ளன. பெரிய இடத்து திருமணங்களில் பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த அலங்கார மலர்களில் 40 வகையை இங்கு பயிரிட்டுள்ளேன். இந்த வகை மலர் ஒன்று ரூ.250 வரை விலை போகும். முகூர்த்த காலங்களில் இதன் விற்பனை நல்ல லாபத்தை தரும். இதுபோக மலர்களை பொக்கே செய்து அனுப்புவேன். இது சீஸன் வருமானம். தேங்காயை அப்படியே விற்றால் லாபம் குறைவு. அதனால் தேங்காய் எண்ணெய் எடுத்து அதை விற்றால் லாபம் அதிகம். தேங்காய் நாரை உரமாக போட்டு விடுகிறேன். இதனால் இரட்டிப்பு லாபம். இது மாத வருமானம்.

எனது பண்ணையில் 12 பசுமாடுகள் வைத்துள்ளேன். எந்த மாட்டிற்கும் நோய் வந்து ஊசியோ மருந்தோ கொடுத்ததில்லை. இயற்கையாக அது எவ்வளவு பால் கொடுக்குமோ அதை மட்டும் நாம் எடுத்துக் கொண்டாலே போதும். மாடுகளில் மற்ற மருத்துவ செலவுகள் எதுவும் வராது. பால் மூலம் தினசரி வருமானம் வரும்.

பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் நாகரத்தினம்
ஒரு விவசாயிக்கு தினசரி வருமானம், வார வருமானம், மாத வருமானம், 6 மாதத்திற்கு ஒரு முறை வருமானம், ஆண்டு வருமானம் என்று ஐந்து வகையான வருமானங்கள் உண்டு.

அதை சரியாக திட்டமிட்டு செய்தாலே போதும். யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை. நான் வங்கிக் கடனாகவோ அரசாங்க மானியமாகவோ ஒரு பைசா கூட பெற்றதில்லை. இது சுயமரியாதை அதிகம் கொண்ட தொழில். விவசாயி பிச்சைக்காரனில்லை. ஒரு டாக்டர், என்ஜினீயரைவிட விவசாயி என்று சொல்வதில் பெருமையடைகிறேன்” என்று கூறி தனது தோட்டத்துக்கு என்னை அழைத்துப் போனார். அங்கு பள்ளி மாணவ-மாணவிகள் இவருக்காக காத்திருந்தார்கள்.

உணவு உற்பத்தியாகும் இடத்தை பார்வையிடும் மாணவிகள்
“மாணவர்களுக்கு விவசாயம் சம்பந்தமான விழிப்புணர்வு தருவதை எனது கடமையாக வைத்துள்ளேன். இதுவரை 35 ஆயிரம் மாணவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். நகரத்தில் வளர்ந்த இன்றைய தலைமுறையினரிடம் அரிசி எங்கிருந்து வருகிறது? என்று கேட்டால் சூப்பர் மார்க்கெட் என்று பதிலளிப்பார்கள். அவர்களுக்கு அரிசி உருவாகும் இடத்தையும், ஒரு விவசாயி எத்தனை சிரமப்பட்டு அதை உருவாக்குகிறான் என்பதும் தெரிந்தால்தான் விவசாயத்தின் அருமை தெரியும். வருங்காலத்தில் அதை அழியவிடாமல் பாதுகாப்பார்கள்" என்று கூறும் நாகரத்தினம் பற்றி ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் ஒரு பாடமாக ஆந்திர அரசு வைத்துள்ளது.

தலைவர்களைப் பற்றி தான் பள்ளிக்கூட மாணவர்கள் படிப்பார்கள். ஆனால் விவசாயம் அதைவிட முக்கியம் என்று உணர்ந்த அரசு இதைச் செய்திருக்கிறது. பாடப்புத்தகத்தில் இடம் பெற்றதாலே ஏராளமான மாணவர்கள் நாகரத்தினத்தை நேரில் வந்து சந்தித்து செல்கிறார்கள். வாழும்போதே மற்றவர்களுக்கு பாடமாக வழிகாட்டியாக அமையும் அதிர்ஷ்டம் சிலருக்கு மட்டுமே கிடைக்கும். அந்த அதிர்ஷ்டம் நாகரத்தினத்திற்கும் கிடைத்திருக்கிறது.

வைர வியாபாரியின் மகன் யுவேஷ்
நாகரத்தினத்தைப் பற்றி தெரிந்த பலரும் அவரை விவசாயத்திற்கான மானசீக குருவாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள் அப்படி ஒருவர்தான் யுவேஷ். ஹரியானாவைச் சேர்ந்தவரான இவரது குடும்பத் தொழில் வைர வியாபாரம். இவர் நாகரத்தினத்தைத் தனது தந்தை என்றே சொல்கிறார். அவர் மூலம் விவசாயத்திற்கு ஈர்க்கப்பட்ட யுவேஷ் பகலில் விவசாய வேலைகளையும், மாலையில் தனது குடும்பத் தொழிலான வைர வியாபாரத்தையும் பார்த்து வருகிறார். இப்படி பலருக்கும் மாபெரும் உந்து சக்தியாக நாகரெத்தினம் நாயுடு இருந்து வருகிறார் என்பது விவசாயத்துக்கே பெரிய விஷ­யம்தான்.

நாகரத்தினத்தின் மார்கெட் உத்தி மிகவும் வித்தியாசமானது. தனது தோட்டத்தில் விளையும் வெண்டைக்காய், கத்திரிக்காய், முருங்கைக்காய் முதலியவற்றை தினமும் பறித்து வந்து தனது வீட்டு வாசலில் வைத்து விடுகிறார். அதன் அருகே ஒரு பேப்பரில் காய்கறிகளின் விலையை எழுதி வைத்து, பக்கத்திலே ஒரு உண்டியலையும் வைத்து விடுகிறார். வேண்டியவர்கள் அவற்றை எடுத்துக் கொண்டு அதற்கான தொகையை உண்டியலில் போட்டு விடுகிறார்கள். இதற்காக ஆட்கள் யாரும் இருப்பதில்லை.

எல்லாமே இயற்கை முறையில் விளைவிப்பதால் 10 கி.மீ. தொலைவில் இருந்து கார் எடுத்து வந்து வாங்கிப்போகும் வாடிக்கையாளர்களும் இவருக்கு உண்டு. இவரது பண்ணையில் இருந்து வரும் பால் ஆர்கானிக் என்பதால் அதற்கும் வரவேற்பு மிக அதிகம்.

எல்லோர் மனதிலும் தோன்றும் கேள்வியே எனக்கும் தோன்றியது. "உண்டியலில் விற்ற பொருளுக்கு சரியாக பணம் வந்துவிடுகிறதா..?" என்று கேட்டேன். "நாம் அவர்களை நேர்மையாளர்களாக நம்பினால் அவர்களும் அப்படியே நடந்து கொள்ளவார்கள். இங்கு நம்பிக்கைதான் முக்கியம்!" என்றார்.

இவரைத் தேடி ஒரு மாநில முதல்வர் வந்ததற்கும் அமரிக்க ஜனாதிபதி வந்து அவர் நாட்டுக்கே அழைத்ததற்கும் காரணம் இப்போதுதான் தெரிந்தது.

நாகரத்தினம் பெரிய கோடீஸ்வரர். அவர் நினைத்தால் பி.எம்.டபிள்யு. காரையே வீட்டு முன் நிறுத்தலாம். ஆனால், அவரிடம் ஒரு டூவீலர் கூட கிடையாது. எங்கு போவது என்றாலும் பொது வாகனத்தையே பயன்படுத்துகிறார். ஏனென்று கேட்டால், "அவைகள் சுற்றுச்சூழலை பாழ் படுத்துகிறது. கூடுமான வரை நான் பூமி மாசு படுவதை தள்ளிப் போடப் பார்க்கிறேன்." தீர்க்கதரிசியாக கூறினார்.

ஒரு மாபெரும் மனிதரை சந்தித்த திருப்தியோடு அவரிடமிருந்து விடைப்பெற்றேன்.

மென்மேலும் சாதனை சிகரங்களை எட்ட நாமும் வாழ்த்துவோம்!

விவசாயம் குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு நாகரத்தினத்தை தொடர்பு கொள்ளலாம். தமிழிலேயே பதிலளிப்பார்.

குடிவாடா நாகரத்தினம் நாயுடு, ஹைதராபாத்.
மொபைல் : 094404-24463.

http://senthilmsp.blogspot.com/2015/05/blog-post_29.html

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப் போன்றவர்கள் வழி நடத்தும் பட்சத்தில் விவசாயிகளின் வாழ்க்கை சிறக்கும் என்பதில் ஐயமில்லை.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.