Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தானா சேர்ந்த கூட்டம் திரை விமர்சனம்

Featured Replies

தானா சேர்ந்த கூட்டம் திரை விமர்சனம்

 

தானா சேர்ந்த கூட்டம் திரை விமர்சனம்
 
 

தானா சேர்ந்த கூட்டம் திரை விமர்சனம்

 

சூர்யா தன் திரைப்பயணத்தின் மிக முக்கியமான இடத்தில் இருக்கின்றார். ஆம் அஞ்சான், மாஸ் என படுதோல்வி படங்களில் இருந்து 24, சிங்கம் 3 என சுமார் வெற்றியை ருசித்த இவருக்கு தற்போது மெகா ஹிட் ஒன்று தேவைப்படுகின்றது. அதற்காக நானும் ரவுடி தான் வெற்றி பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இவர் கைக்கோர்த்த படம் தான் தானா சேர்ந்த கூட்டம். இந்த படம் இவருக்கு எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுத்ததா? இதோ பார்ப்போம்.

கதைக்களம்

பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிப்பில் செம்ம ஹிட் அடித்த படம் ஸ்பெஷல் 26. அப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கே இந்த தானா சேர்ந்த கூட்டம்.

சூர்யா அவருடைய நண்பர் கலையரசன் அரசாங்க வேலைக்காக போராடி வருகின்றனர். இதில் சூர்யா CBIக்கும் போலிஸ் வேலைக்கு கலையரசனும் முயற்சி செய்து வர, ஒரு சில ஊழல், மேலதிகாரிகள் சதியால் இருவருக்குமே வேலை கிடைக்காமல் போகின்றது.

அதை தொடர்ந்து கலையரசன் தற்கொலை செய்துக்கொள்ள, சூர்யா தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு அரசாங்கத்தில் இருக்கும் குள்ளநரிகளை எப்படி ஓட ஓட விரட்டுகின்றார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

முதல் வார்த்தையே விண்டேஜ் சூர்யா இஸ் பேக் என்று தான் சொல்ல வேண்டும். தனக்கென்று ஒரு ஸ்டைல் வைத்துக்கொண்டு மௌனம் பேசியதே, அயன், சிங்கம் என கலக்கி வந்த சூர்யா சில நாட்களாக தடுமாறி வர, அவரை மீட்டுக்கொண்டு வந்து விட்டார் விக்னேஷ் சிவன். லோக்கலாகவும் சரி, தன் மைனஸ் என்று சொல்லப்படும் உயரத்தை கூட வெளிப்படையாக பேசி கடைசியில் அதற்காகவே ஒரு பன்ச் வைக்கும் இடத்திலும் சரி சூர்யாவின் அவுட் ஆப் கிரவுண்ட் சிக்ஸர் தான் இந்த தானா சேர்ந்த கூட்டம்.

சூர்யா தனக்கென ஒரு போலி CBI கும்பலை வைத்துக்கொண்டு அரசாங்கத்தை ஏமாற்றுபவர்களையும், அரசாங்க வேலைகளில் இருந்து வேலை செய்யாமல் லட்சம் வாங்குவோர்களையும் ஓட விடுகின்றார். அதற்கு உறுதுணையாக ரம்யாகிருஷ்ணன், செந்தில், சத்யன் என ஒரு கூட்டம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் காமெடியிலும் கலக்கியுள்ளார். அதைவிட சீனியர் சீனியர் தான் என செந்திலும் கடைசி வரை தன் கெத்தை விடாமல் நம்மை சிரிக்க வைத்துள்ளார். அதிலும் கிளைமேக்ஸில் போலிஸிடம் நெஞ்சை நிமிர்த்தி நான் ஜோக்கர் இல்லை என்று ஆங்கிலத்தில் பேசும் காட்சி கைத்தட்டல் பறக்கின்றது.

படத்தின் முதல் பாதி நண்பனின் இழப்பு அதற்காக சூர்யா எடுக்கும் முயற்சி, கீர்த்தியுடன் காதல் என கலகலப்பாகவே செல்கின்றது. அதிலும் இடைவேளையில் நவரச நாயகன் கார்த்தியிடம் சவால் விட்டு போனை வைக்க, இரண்டாம் பாதி பட்டையை கிளப்ப போகின்றது என தோன்ற வைக்கின்றது.

இந்த மாதிரி வேலைகளை தற்போது செய்தால் இரண்டு செகண்டில் கண்டுப்பிடித்துவிடுவார்கள், அதற்காக கதையை 80களில் நடப்பது போல் காட்டியுள்ளது புத்திசாலித்தனம். அதிலும் ஒவ்வொரு காட்சிக்கு ஏற்றார் போல் தில்லு முல்லு, சபதம், நாயகன் பட போஸ்டர்கள் இருப்பது சூப்பர்.

இத்தனை ப்ளஸ் விஷயங்கள் படத்தில் இருந்தாலும் கிளைமேக்ஸ் ஏதோ படத்தோடு ஒன்றவே இல்லை. இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவே முடித்திருக்கலாம் என்று தோன்றுகின்றது, படம் முடிந்துவிட்டதா? என கேட்கும் நிலையில் உள்ளது.

க்ளாப்ஸ்

சூர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில் என அனைவரின் நடிப்பும் கவர்கின்றது. சில நிமிடம் வரும் ஆனந்த்ராஜில் இருந்து ஆபிஸராக வரும் கார்த்தி, சுரேஷ் மேனன் வரை அசத்தியுள்ளனர்.

படத்தின் முதல் பாதி விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை, அனிருத்தின் துள்ளலான இசை, தினேஷின் கலர்புல்லான ஒளிப்பதிவு.

படத்தின் வசனம்

பல்ப்ஸ்

ஜாலியாகவே சென்றாலும் இரண்டாம் பாதி குறிப்பாக கிளைமேக்ஸ் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மொத்தத்தில் சூர்யாவின் ‘அன்பான’ தானா சேர்ந்த கூட்டத்திற்கு(ரசிகர்களுக்கு) மட்டும் விருந்து.

http://www.cineulagam.com/films/05/100907?ref=reviews-feed

  • தொடங்கியவர்

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ – சினிமா விமரிசனம்

 

 
Thaana_new1_(23)

 

சிபிஐ அதிகாரி பணியைத் தன்னுடைய கனவாக வைத்திருக்கும் ஒருவனுக்கு அத்துறையில் நிகழும் ஊழல் காரணமாக அந்த வாய்ப்பு தரப்படுவதில்லை. எனவே தானே ஒரு போலி அதிகாரியாக மாறுகிறான். ‘ரெய்ட்’ என்கிற பெயரில் ஊழல்வாதிகளிடமிருந்து பணத்தைக் கொள்ளையடித்து நல்லவர்களுக்குத் தருகிறான். ராபின்ஹூட், காக்கிச்சட்டை, ஜென்டில்மேன் போன்ற திரைப்படங்களின் அதே வகை ‘கரு’ தான்.

நீரஜ் பாண்டே இயக்கத்தில் 2013-ல் வெளிவந்த ‘Special 26’ என்கிற ஹிந்திப்படத்தின் தமிழ்வடிவம்தான் இது. ஹிந்தியில் இருந்த நம்பகத்தன்மையும் குற்றத்தின் அழகியலும் தமிழில் பெரும்பான்மையாகச் சிதைந்திருப்பது சோகம்.

**

சிபிஐ அலுவலகத்தில் கடைநிலை ஊழியராகப் பணிபுரிந்தவர் தம்பிராமையா. அதே அலுவலகத்தில் தன்னுடைய மகன் சூர்யாவை ஓர் அதிகாரியாக்கிப் பார்க்க வேண்டுமென்பது அவருடைய ஆசை. அது நிறைவேறுவதில் ஒரு பெரிய தடை இருக்கிறது. அங்கு உயர் அதிகாரியாக இருக்கும் சுரேஷ் மேனன் வாங்கும் லஞ்சத்தை, தம்பி ராமையா மொட்டைக் கடிதத்தின் மூலம் காட்டிக் கொடுக்க முயல, அதிகாரியால் பழிவாங்கப்பட்டு பணியை இழக்கிறார்.

தன்னுடைய நேர்காணலிலும் அந்த அதிகாரி சிக்கலை ஏற்படுத்துவார் என்று சூர்யா யூகிக்கிறார். நினைத்தபடியே நடக்கிறது. இதே போன்ற ஊழலால் காவல்துறையில் பணி கிடைக்காமல் இறக்கும் தன் நண்பனின் மரணம் வேறு சூர்யாவிற்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. ஊழலின் காரணமாக தகுதியுள்ளவர்கள் வேலை கிடைக்காமல் அவதிப்படுவதும் தகுதியற்றவர்கள் முன்னேறும் சூழலை எதிர்க்க நினைக்கிறார்.

எனவே சிபிஐ அதிகாரிகளின் அடையாளத்தில் ஒரு போலியான குழுவை அமைத்து ஊழல்களின் மூலம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ரெய்டுகள் மூலம் கைப்பற்றுகிறார். தங்கள் துறையின் பெயரால் நிகழும் தொடர் மோசடிகளைக் கண்டு ஒரிஜினல் சிபிஐ பதறுகிறது. குற்றவாளிகளை மோப்பம் தேடி அலைந்து கிட்டத்தட்ட நெருங்கி விடுகிறது.

இந்நிலையில் தன் கூட இருப்பவர்களுக்காக ஒரு பெரிய அளவிலான கொள்ளையில் ஈடுபட நினைக்கிறார் சூர்யா. அவர்களைச் சுற்றி வளைக்க சிபிஐ தயாராக நிற்கிறது.

பிறகு என்னவானது என்பதை விறுவிறுப்பு குறைவாக சொல்லியிருக்கிறார்கள்.

**

நச்சினார்க்கினியன் என்கிற அழகான பெயர் சூர்யாவிற்கு. ‘இவர்களுக்கு வயசே ஆகாதோ” என்று நினைக்க வைக்கும் நாயகர்களில் முதன்மையானவராக இவரைச் சொல்லலாம். விசையுறு பந்தினைப் போல திரையெங்கும் பாய்கிறார். படத்தின் துவக்கத்தில் வரும் துள்ளலிசைப் பாடல் உட்பட அனைத்து பாடல்களிலும் ரகளையாக நடனம் புரிகிறார். படத்தின் பெரும்பான்மையான சுமை இவர் மீது இருப்பதால் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார். சிபிஐ அதிகாரியாக இவரது தோரணைகள் கம்பீரம்.

ஏறத்தாழ சூர்யாவிற்கு இணையாகக் கலக்கியிருப்பவர் சுரேஷ் மேனன். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையில் எதிர்நாயகனாக அட்டகாசம் செய்திருக்கிறார். (இயக்குநர் கெளதம் மேனனின் குரல் இவரது பாத்திரத்திற்குப் பெரிய பலம்). ஒரு பக்கம் மிக அநாயசமாகவும் தெனாவெட்டாகவும் தன்னுடைய அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதும், இன்னொரு புறம் மூத்த அதிகாரியிடம் பணிந்து பதறுவதும் என சிறப்பான பங்களிப்பு. ‘உத்தமன்’ என்று இந்தப் பாத்திரத்திற்கு பெயர் சூட்டியிருப்பது குறும்பு.

குறிஞ்சிவேந்தன் என்கிற இன்னொரு அழகான தமிழ் பெயரில் உள்ள பாத்திரம் கார்த்திக். சிபிஐ உயர் அதிகாரி. இவரையும் நீண்ட காலத்திற்குப் பிறகு திரையில் பார்ப்பதால் சற்று ஆச்சரியம் தோன்றுகிறது. அவ்வளவே. ஓய்ந்து போன வயசான கார்த்திக்கைப் பார்க்க சங்கடமாக இருக்கிறது.

ரம்யா கிருஷ்ணன், செந்தில், தம்பி ராமையா, நந்தா, கலையரசன், சத்யன், ஆனந்தராஜ் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. ‘எனக்கு எதிரியே என் வாய்தான்’ என்கிற ஆர்.ஜே.பாலாஜி சிறிது புன்னகைக்க வைக்கிறார். ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ என்கிற பழைய கிளாசிக் காமெடியை நினைவுகூர வைப்பது போல் பெட்ரோமாக்ஸ் லைட்டை பார்க்கும் போதெல்லாம் ‘மேன்டிலை’ செந்தில் உடைப்பதை வேறு வழியின்றி நகைச்சுவை என்று நினைத்துக் கொள்ளலாம். சிறிது நேரம் வந்தாலும் ஆனந்தராஜ் ரசிக்க வைக்கிறார்.

Thaana_new1_(10).jpg

முதல் பாதியில் விறுவிறுப்பாக நகர்கிற திரைப்படம், இரண்டாம் பாதியில் இடையூறாகத் துவங்கும் ‘டூயட்’ பாடலுடன் நொண்டியடிக்கிறது.

பொதுவாக விக்னேஷ் சிவனின் திரைப்படங்களில் ‘ப்ளாக் ஹியூமரின்’ தேசலான சாயல் இருக்கும். இதிலும் சில இடங்களில் தென்படுகிறது. தன் தந்தையான தம்பி ராமையா தற்கொலை செய்து கொண்டாரோ என்று சூர்யா பதறியழும் போது நடக்கும் திருப்பம் சிரிக்க வைக்கிறது. சிபிஐ அதிகாரிகளுக்கான நேர்காணலில் ‘நான் ஊழல்வாதிகளைப் பிடித்துச் சிறையில் தள்ளுவேன்’ என்று ஆவேசமாக சொல்பவரின் பெயர் ‘சசிகலா’. இரட்டை அர்த்த தொனி கொண்ட நகைச்சுவைகளும் இருக்கின்றன.

‘சொடக்கு மேல சொடக்குப் போடுது’, ‘நானா தானா’ ஆகிய பாடல்களுக்குப் பார்வையாளர்கள் அதிஉற்சாகம் கொள்ளும்படி ரகளையாக இசையமைத்திருக்கிறார் அனிருத். பரபரப்பான காட்சிகளுக்கேற்றபடி விறுவிறுப்பான பின்னணி இசையையும் தரத் தவறவில்லை.

இத்திரைப்படத்தின் முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாக கலை இயக்குநரின் பணியைச் சொல்ல வேண்டும். எண்பதுகளில் நடக்கும் சம்பவங்கள் என்பதால் அந்தக் காலக்கட்டத்தின் சினிமா சுவரொட்டிகள், கட்அவுட்கள், பழைய மாநகரப் பேருந்துகள், கோல்ட் ஸ்பாட் குளிர்பானம், பியட், அம்பாசிடர் கார்கள். பஜாஜ் ஸ்கூட்டர் என்று பின்னணியின் நம்பகத்தன்மைக்காக அசாதாரணமான
உழைப்பைத் தந்திருக்கிறார்.

தினேஷ் கிருஷ்ணனின் காமிரா, ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் போன்ற நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு படத்திற்குப் பலமாக அமைந்திருக்கின்றன.

**

நீரஜ் பாண்டே இயக்கிய ஹிந்தி வடிவத்தோடு (special 26) தமிழ் வடிவத்தை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஹிந்தி திரைப்படத்தில் நிகழும் ரெய்டுகள் நம்பகத்தன்மையுடன் அமைந்திருக்கும். பூனை-எலி விளையாட்டில் அமைந்த திரைக்கதை, அக்ஷய் குமார், அனுபம் கேர், மனோஜ் பாஜ்பாய் போன்ற அற்புதமான நடிகர்களின் பங்களிப்பு என்று பெரும்பாலான அம்சங்கள் நிறைவாக அமைந்திருக்கும். குறிப்பாக ஹிந்தியில் மிக இயல்பாக அமைந்த  கிளைமாக்ஸ் காட்சி தமிழில் அதீதமாகிச் சிதைந்திருக்கிறது. தமிழ் வடிவத்தில் வணிக அம்சங்கள் தூக்கலாக இருக்கின்றன.

‘தானா சேர்ந்த கூட்டம்’ என்கிற தலைப்பு இத்திரைப்படத்திற்கு எப்படி பொருந்துகிறது என்பது அந்த ‘சிவனுக்கே’ வெளிச்சம். 

http://www.dinamani.com/cinema/movie-reviews/2018/jan/12/thaanaa-serndha-koottam-tsk-movie-review-2843651.html

 

  • தொடங்கியவர்

சினிமா விமர்சனம்: தானா சேர்ந்த கூட்டம்

சினிமா விமர்சனம்

1987ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி மும்பை பத்திரிகை ஒன்றில் 'புத்திசாலி அதிகாரிகள் தேவை' என விளம்பரம் ஒன்று வெளிவந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடிய அந்த காலகட்டத்தில், பலரும் இந்த வேலைக்காக விளம்பரத்தில் குறிப்பிட்ட இடத்தில் அடுத்த நாள் குவிந்தனர்.

அங்கிருந்த மான் சிங் என்ற 'அதிகாரி' இவர்களில் 26 பேரை 'அதிகாரி'களாகத் தேர்வுசெய்தார். அடுத்த நாள், அதாவது மார்ச் 19ஆம் தேதி சோதனை ஒன்றுக்குச் செல்லப்போவதாக அவர்களை வரச்சொன்னார்.

மான் சிங்கும் புதிதாக சேர்ந்த அதிகாரிகளும் சோதனைக்குச் சென்ற இடம், மும்பையில் உள்ள திரிபுவன்தாஸ் பிம்ஜி பவேரி அண்ட் சன்ஸ் என்ற மிகப் பெரிய நகைக்கடையின் ஒபேரா ஹவுஸ் கிளை. அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை நிறுத்தச் சொன்ன மான் சிங், நகைக் கடையிலிருந்து தங்கத்தின் தரத்தைப் பரிசோதிப்பதற்காக என்று கூறி, பல நகைகளை எடுத்துக்கொண்டார். இவற்றின் மதிப்பு 30 முதல் 35 லட்ச ரூபாய் இருக்கும்.

பிறகு தன்னுடன் வந்த அதிகாரிகளை அங்கேயே நிறுத்திவிட்டு, அடுத்த சோதனைக்கு புறப்பட்டார். வெகு நேரம் கழித்து சுதாரித்த நகைக்கடை உரிமையாளர், காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அப்போதுதான் மான் சிங் ஒரு போலி அதிகாரி என்பது தெரியவந்தது. திருவனந்தபுரம், துபாய் என பல இடங்களில் தேடியும் தற்போதுவரை மான் சிங் அகப்படவில்லை. இந்திய குற்றவியல் வரலாற்றில் தீர்க்கப்படாத வழக்குகளில் இதுவும் ஒன்று.

சினிமா விமர்சனம்

இந்த சம்பவத்தைப் பின்னணியாக வைத்து 2013ஆம் ஆண்டில் அக்ஷய் குமார், காஜல் அகர்வால் நடிப்பில் நீரஜ் பாண்டே இயக்கி, இந்தியில் Special 26 என்ற படம் வெளிவந்தது. அந்தப் படத்தின் ரீமேக்தான் 'தானா சேர்ந்த கூட்டம்'.

80களின் பிற்பகுதியில் நடக்கிறது கதை. வேலை இல்லாத் திண்டாட்டம் உச்சகட்டத்தில் இருக்கும் காலகட்டத்தில் மயில்வாகனத்திற்கும் (சூர்யா) அவரது நண்பர்களுக்கும் வேலை கிடைக்கவில்லை. அதில் ஒரு நண்பர் தற்கொலைசெய்துகொள்கிறார். சிபிஐ அதிகாரியாக வேண்டுமென நினைக்கும் மயில்வாகனத்திற்கு உயரதிகாரி உத்தமனால் (சுரேஷ் மேனன்), அந்த வேலை கிடைக்காமல் போகிறது. இதனால், ஆத்திரமடையும் மயில்வாகனம் வேறு சிலரை (ரம்யா கிருஷ்ணன், செந்தில், சத்யன், கீர்த்தி ரெட்டி) சேர்த்துக்கொண்டு சிபிஐ அதிகாரிகளைப் போல நடித்து, போலி சோதனைகளை நடத்தி பணத்தைத் திருடுகிறார். இதைச் செய்வது யார் என கண்டுபிடிக்க முயல்கிறார் உத்தமன். திருடிய பணத்தை மயில்வாகனம் என்ன செய்கிறார், சிபிஐயால் இதைக் கண்டுபிடிக்க முடிந்ததா என்பது மீதிக் கதை.

சினிமா விமர்சனம்

லாஜிக் எதையும் பார்க்காமல் விறுவிறுப்பாக படத்தை நகர்த்த வேண்டுமென்பதை மட்டுமே மனதில் வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன். அதற்கேற்றபடி முதல் பாதியும் விறுவிறுப்பாகவே நகர்கிறது. ஆனால், இரண்டாவது பாதியில், கார்த்திக்கை பெரிய பின்னணியுடன் அறிமுகப்படுத்திவிட்டு, ரொம்பவும் சொதப்பலாக முடித்திருக்கிறார்கள் படத்தை.

சி.பி.ஐ. அதிகாரிகளைப் போல வேடமிட்டு ஒன்றிரண்டு போலி சோதனைகளை நடத்தி, அதை காவல்துறையும் சிபிஐயும் கண்டுபிடித்ததும் படம் ஒரு இடத்தில் முடங்கிவிடுகிறது. இதில் ஈடுபட்டவருடைய வீடும் தொலைபேசி எண்ணும் தெரிந்த பிறகும் சிபிஐ அதை வேடிக்கை பார்ப்பது, அடுத்த போலி சோதனைக்கு ஒத்துழைப்பது என தொடர்ந்து நம்ப முடியாத காட்சிகள். டெரரான அதிகாரியாக வரும் கார்த்திக், நடந்துகொண்டே சில யோசனைகளைச் சொல்கிறார். ஏதோ திட்டமிட்டு, கதாநாயகனின் கும்பலைப் பிடிக்கப்போகிறார் என்று பார்த்தால் அப்படி ஏதும் இல்லை.

சினிமா விமர்சனம்

படத்தின் உச்சகட்டக் காட்சி, அதாவது 1987ல் நகைக் கடையில் போலி அதிகாரியாக நடித்து நகைகளைத் திருடிய காட்சி எப்படி வந்திருக்க வேண்டும்? ஆனால், எந்தப் பரபரப்பையும் அக்காட்சி ஏற்படுத்தவில்லை. நகைக் கடையிலிருந்து பாதுகாப்பாக நகையை எடுத்துச்செல்லும் போலீஸ்காரர் நாயகனின் ஆளாக மாறிவிடுவது, கடைசியில் சிபிஐ அதிகாரியை போலீஸ்காரர்களே சுடுவது, டெரர் அதிகாரியான கார்த்திக், சிபிஐயை இவ்வளவு நாளாக ஏமாற்றிக்கொண்டிருந்த நபருக்கே வேலைவாங்கித் தருவதாகச் சொல்வது என 80களில் எடுக்கப்பட்ட படத்தைப் போலவே முடிகிறது 'தானா சேர்ந்த கூட்டம்'.

இதற்கு நடுவில் 'நான் வெறும் ஆம்பள இல்லை, ஆம்பள சிங்கம்', 'இது சேர்த்த கூட்டம் இல்ல, தானா சேர்ந்த கூட்டம்' என பஞ்ச் வசனங்கள் வேறு.

சினிமா விமர்சனம்

அனிருத்தின் இசையில் 'சொடக்கு மேல', 'ஒரு பட்டாம் பூச்சியாம்' பாடல்கள் இந்த ஆண்டின் ஹிட் பாடல்கள் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுவிட்டன. அதேபோல ஒளிப்பதிவும் துல்லியம்.

ஆனால், இந்தப் படத்தில் பாராட்டப்பட வேண்டியவர் கலை இயக்குனர் கரண். நாளிதழ்கள், கடைகளில் விற்கும் லாட்டரி டிக்கெட்கள், அந்தக் கால வாகனங்கள் என 80களை நெருடாமல் கண் முன் கொண்டுவருகிறார். அதிலும் 80களின் சென்னை மவுண்ட் ரோட்டை திரையில் கொண்டுவந்திருப்பது அட்டகாசம்.

சினிமா விமர்சனம்

படம் முழுக்க சூர்யாவே (ரொம்பவும் பிரஷ்ஷாக இருக்கிறார்) ஆக்கிரமிக்கும் நிலையில், இந்தப் படத்தில் துண்டு துண்டாக ஆங்காங்கே வந்து போகிறார் நாயகி கீர்த்தி் சுரேஷ். ரம்யா கிருஷ்ணன், சுரேஷ் மேனன் ஆகியோருக்கு இது குறிப்பிடத்தக்க படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில்வரும் கார்த்திக், பெரிய அளவில் சோபிக்கவில்லை.

Special 26 ரொம்பவுமே சுவாரஸ்யமான, கலகலப்பான மசாலா திரைப்படம். அதை அப்படியே எந்த மாற்றமுமின்றி ரீ மேக் செய்திருந்தால், சூர்யாவுக்கு மிகப் பெரிய ஹிட் கிடைத்திருக்கும்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-42662158

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.