Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு பிளேயரை வாங்குறதுக்குள்ள...! ஐ.பி.எல் 2018... உள்ளே வெளியே என்ன நடக்கும்?

Featured Replies

ஒரு பிளேயரை வாங்குறதுக்குள்ள...! ஐ.பி.எல் 2018... உள்ளே வெளியே என்ன நடக்கும்? பகுதி - 1 #IPLAuction

 
 

IPL

2018 ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் முடிந்துவிட்டது. 8 அணிகளில் விளையாட 187 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 628.70 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. சில அணிகள் முழு பலத்துடன் கம்பீரமாக களமிறங்கவுள்ளன.  சில அணிகளுக்கு ஏதோ ஒரு டிபார்ட்மென்ட் பலவீனமாக இருக்கிறது. ஏலத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு எண்ணிலடங்கா கேள்விகள். ``ஏன் அந்த பிளேயருக்கு இத்தனை கோடி", ``அவரை ஏன் யாரும் வாங்கலை", ``காச செலவு பண்ணாத்தான் என்ன, அத வச்சு என்ன பண்ணப் போறாங்க", "அவனை ஏன் வாங்குனாங்க" என சோஷியல் மீடியாவில் புலம்பித் தள்ளினார்கள் கிரிக்கெட் வெறியர்கள்.

 

கேள்விகள் நியாயம்தான். ஆனால், அந்த ஏலம் ஒன்றும் சாதாரண வேலை கிடையாது. வீரரின் பெயரை வைத்துக்கொண்டு மட்டும் ஏலம் கேட்டுவிட முடியாது. Paddle உயர்த்தப்படும் அந்த ஒரு நொடியில் பல்வேறு விஷயங்களை யோசித்து அலசவேண்டும். வீரரின் ஃபார்ம், வயது, அணியின் கைவசம் மிச்சமிருக்கும் தொகை, அவர் பிளேயிங் லெவனில் எங்கு செட் ஆவார், எவ்வளவு தொகைவரை சென்றால் மற்ற வீரர்களை வாங்குவது பாதிக்காது, பேக் - அப் ஆப்ஷன்கள் போதுமா, வெளிநாட்டு வீரர்கள் தொடர் முழுதும் ஆடுவார்களா, ஐ.பி.எல் தொடரில் அந்த வீரரின் முந்தைய செயல்பாடு எப்படி என இத்தனை விஷயங்களும் அலசவேண்டும். போதாக்குறைக்கு புதிய வெளிநாட்டு வீரர் எனில் துணைக்கண்ட ஆடுகளத்தில் அவரது முந்தைய செயல்பாடுகளையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். இத்தனையும் அலசி வாங்கினால் RTM என்ற பெயரில் முந்தைய அணியே வாங்கிவிடும். அங்கும் சிக்கல்! இப்படிப் பல சிக்கல்கள் நிறைந்ததுதான் ஏலம்.

நாம் வாங்க நினைத்த வீரரை மற்ற அணி வாங்கிவிட்டால், அவருக்குப் பதில் யார் என யோசிக்கவேண்டும். அவரைத் தீர்மானித்த பிறகு... மேலே சொன்ன அத்தனை விஷயங்களையும் மீண்டும் அலச வேண்டும். இவை மட்டுமா பிரச்னை. 'வேற என்னதான்யா பிரச்னை, சும்மா அடிக்கிட்டே போற...' இருக்கு... நிறைய இருக்கு. அதையெல்லாம்தான் இந்த மினி தொடரில் பேசப் போகிறோம். ஏலத்தின் போக்கை நிர்ணயித்த காரணங்கள் பற்றிப் பேசுவோம். 

ஐ.பி.எல்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல முன்னணி வீரர்களும் விலைபோகாமல் இருந்ததன் காரணம் என்ன? ஹஷிம் அம்லா, லஷித் மலிங்கா, மோர்னே மோர்கல் உள்ளிட்ட அனுபவ நட்சத்திரங்கள் ஏலம் போகாததற்கு, வயதாகிவிட்டது என்பது பதில் என்றால், 35 வயதைத் தாண்டிய ஷேன் வாட்சன், பென் லாலின் போன்றவர்கள் ஏலம் போனார்களே... அது எப்படி? இதைப் பற்றியும் அலசுவோம். உனத்கட், கே.எல்.ராகுல், மனீஷ் பாண்டே போன்ற இந்திய வீரர்கள் 10 கோடிக்கும் மேல் ஏலம் போனார்கள். ``இவங்களே இவ்வளவு போறாங்களே, தோனி, கோலி-லாம் ஏலத்துக்கு வந்திருந்தா எவ்வளவு போயிருப்பாங்க" என்று ஆச்சர்யமடைந்தனர் ரசிகர்கள். இந்நிலையில், ரஹானே, தவான் போன்ற சீனியர்கள் குறைவாகப் போனது ஏன்? அதுவும் பேசுவோம்.

எதன் அடிப்படையில் அணிகள் வீரர்களைத் தேர்வு செய்தன? உள்ளூர் வீரர்கள் ஐ.பி.எல் அணிகளின் கவனத்தை ஈர்த்தது எப்படி? இவற்றை அறிந்துகொண்டால், அணிகளின் கேம் பிளேன் நமக்குக் கொஞ்சம் விளங்கும். உள்ளூரில் நடந்த டி-20 தொடர் மட்டுமல்லாது, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடந்த தொடர்கள் இந்த ஏலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. ரசிகர்களின் எதிர்பார்ப்பு, அணியின் முந்தைய இமேஜ் என இன்னும் பல விஷயங்கள் இந்த ஏலத்தில் மறைமுகமாக அங்கம் வகித்தன. 

பழைய அணியின் core பிளேயர்களை வாங்கவேண்டும் என்பது சில அணிகளின் நோக்கமாக இருந்தது. அதற்காக செய்த பிளான்கள், அதற்காக செய்த செலவுகள் மற்ற வீரர்களை வாங்குவதில் கொஞ்சம் சிக்கலை ஏற்படுத்தியது.  அதேபோல், முந்தைய ஏலங்களில் செய்த தவறுகளில் இருந்து சில அணிகள் பாடம் பயின்றுள்ளன. அந்தப் பாடம் இந்த ஏலத்தின்போதுதான் அவர்களுடைய திட்டத்தை பெரிய அளவில் மாற்றியுள்ளது. 

IPL auction

'இந்திய ஆடுகளங்கள் சுழலுக்குச் சாதகமாக இருக்கின்றன' என வெளிநாட்டு அணிகள் ஒருபுறம் புலம்ப, 'க்ரீன் பிட்ச்களில் இந்திய வீரர்களுக்கு ஆடத் தெரியவில்லை' என இந்திய அணியை நாம் ஒருபுறம் திட்ட, சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுகளங்களின் பங்களிப்பு என்பது இப்போதெல்லாம் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், சத்தமில்லாமல் ஒவ்வொரு அணியின் 'ஹோம் க்ரவுண்ட்'களும், ஏலத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. முந்தைய ஏலங்களிலும் சில அணிகள், தங்கள் ஆடுகளங்களுக்கு ஏற்றதுபோல் அணியை அமைத்திருந்தன. அதைப்பற்றியெல்லாம் பெரிய விவாதங்கள் நடைபெறவில்லை. அதனால், இன்னும் அந்த ஃபார்முலா தொடர்கிறது. இந்த முறையும் ஆடுகளத்துக்கு ஏற்ப சில அணிகள் வீரர்களை வாங்கியுள்ளன. 

Base price - கடந்த 10 ஆண்டுகளாக ஏலத்தின்போது இந்த வார்த்தையைச் சாதாரணமாகக் கடந்துவந்துள்ளோம். ஆனால், ஒரு வீரருக்கான ஏலம் தொடங்குவதில் மிகமுக்கியப் பங்கு வகிப்பது இந்த அடிப்படை விலைதான். இதனால் பலரின் ஐ.பி.எல் கனவும் பாழாகியுள்ளது. அடையாளம் இல்லாத சில வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் ஆடவும் இதுவே காரணம். இந்த அடிப்படை விலை, ஏலத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை அறிவதும் முக்கியம். இதுபோல் பற்பல காரணங்கள் ஏலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

RTM, அடிப்படை விலை, ஆடுகளத் தன்மை, வீரர்களின் வரிசை, சமகாலத்தில் நடந்த தொடர்கள் என இந்த ஏலத்தை நிர்ணயித்த காரணிகளைப் பற்றி இந்தத் தொடரில் விரிவாக அலசுவோம்!

https://www.vikatan.com/news/sports/115008-factors-that-determined-teams-plans-during-ipl-auction.html

  • தொடங்கியவர்

 

 

ஜனவரியில் ஏலம் நடந்தது நல்லது... ஏன்? ஐ.பி.எல் 2018... உள்ளே வெளியே என்ன நடக்கும்? பகுதி - 2 #IPLAuction

 
 

IPL

கடந்த சில ஆண்டுகளாக பிப்ரவரி மாதம் நடந்த ஐ.பி.எல் ஏலம், இந்தமுறை ஜனவரியிலேயே நடந்தது. ஏலத்துக்கே  இந்த மாற்றம் ஏன் என்றும், இது சரிதானா என்றும் கேள்விகள் எழுந்தன. ஆனால், உண்மையில் ஏலம் நடத்துவதற்கு இதைவிடச் சிறந்த நேரத்தை பி.சி.சி.ஐ-யால் தேர்ந்தெடுத்திருக்க முடியாது. வங்கதேசத்தில் முத்தரப்புத் தொடர், நியூசிலாந்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து தொடர், அதன் பக்கத்து நாட்டில்  இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் திண்டாட்டம், தென்னாப்பிரிக்காவில் இந்தியாவின் போராட்டம் என சர்வதேச அளவில் கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் இப்போது விளையாடி வருகின்றன. பிக்பேஷ் டி-20 தொடர் மற்றுமொரு தேடுதல் வேட்டையாக அமைந்தது. போதாக்குறைக்கு அண்டர் -19 உலகக்கோப்பை, இளம் வீரர்களின் திறமையை அடையாளம் கண்டெடுத்திருக்கிறது. இந்தத் தொடர்கள், ஏலத்தின்போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. #IPLAuction

 

டார்ஸி ஷார்ட் என்ற பெயர் திரையில் காட்டப்பட்டபோது, பெரும்பாலானவர்களுக்கு புதிதாகவே தெரிந்தது. அதுவரை சர்வதேச அரங்கில் கேள்விப்பட்டிடாத பெயர். கெய்ல், அம்லா போன்றவர்களெல்லாம் விற்கப்படாத நிலையில், இவரும் unsold பட்டியலில் சேர்வார்  என்றுதான் எதிர்பார்த்தனர். ரூ.20 லட்சம்தான் அடிப்படை விலை. சி.எஸ்.கே, சன்ரைஸர்ஸ் இரண்டு அணிகளும் எடுத்த எடுப்பில் போட்டி போடத் தொடங்கின. லட்சத்தில் இருந்து கோடிக்குச் சென்றது ஷார்ட்-ன் மதிப்பு. ஒருகட்டத்தில் அந்த இரு அணிகளும் ஒதுங்கிக்கொள்ள, ராஜஸ்தான், டெல்லி அணிகள் களம்புகுந்தன. ஒரு சர்வதேசப் போட்டியில்கூட விளையாடாத ஒரு வெளிநாட்டு வீரருக்கு 4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது ராஜஸ்தான். 

டார்சி ஷார்ட்

அம்லா - 2017 ஐ.பி.எல் தொடரில் 2 சதங்கள் அடித்திருந்தார். ஆனால், இம்முறை விலைபோகவில்லை. காரணம், அவர் அந்தச் சதங்கள் அடித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. டிசம்பர் மாதம் நடந்த தென்னாப்பிரிக்க டி-20 தொடரில் அவரது செயல்பாடு சுமார்தான். ஆனால், ஷார்ட்...? கடந்த ஒரு மாதமாக பிக்பேஷ் தொடரில் அவர்தான் டாப் ரன்ஸ்கோரர். 10 போட்டிகளில் 504 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 147.80, 22 சிக்ஸர்கள் என இந்த சீசனில் ராஜ்ஜியம் நடத்தி வருகிறார். அதனால்தான் அவ்வளவு போட்டி. 

அடுத்து, ஷிவம் தூபே - மும்பைக்காரர். உள்ளூர் அளவில் 18 போட்டிகளில் மட்டுமே விளையாடியவர். எந்த அணியும் paddle உயர்த்தவில்லை. தூபே விலைபோகவில்லை... அடுத்து ஜோஃப்ரா ஆர்சர்... லோயர் மிடில் ஆர்டரில் அதிரடி காட்டும் 'டிபிகல்' வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர். 20 முதல்தரப் போட்டிகளில் மட்டுமே விளையாடியவர். சூப்பர் கிங்ஸ், டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன், சன்ரைஸர்ஸ், ராஜஸ்தான் என பலமுனைப் போட்டி. ரூ.50 லட்சம் அடிப்படை விலையில் தொடங்கி ரூ.7.20 கோடியில் நின்றது ஆர்சருக்கான போர். அடையாளமில்லாத வீரர்களுக்கு அடையாளம் கொடுக்கும் ராஜஸ்தான் அணிதான் இவரையும் வாங்கியது. 10 பிக்பேஷ் போட்டிகளில் 15 விக்கெட்டுகள். இந்த 15 விக்கெட்டுகளுக்குத்தான் 7.20 கோடி!

வாட்சன் - IPL

8 போட்டிகள் - 71 ரன், 5 விக்கெட்...2017 ஐ.பி.எல் தொடரில் இதுதான் ஷேன் வாட்சனின் செயல்பாடு. 36 வயதாகிவிட்டது. அவரது ராயல் சேலஞ்சர்ஸ் டீம் மேட் கெய்ல் சற்று முன்னர்தான் unsold பட்டியலில் இணைந்திருந்தார். ஆனால், இவருக்கோ முடிவு பாசிடிவாக அமைந்தது. 4 கோடி கொடுத்து வாட்சனை வாங்கியது சூப்பர் கிங்ஸ்! காரணம்...? அதே பிக்பேஷ் தொடர். இந்த ஒரு மாதத்தில் இவர் அடித்த 331 ரன்களும் 3 விக்கெட்டுகளும்தான். இவர்கள் மட்டுமல்ல, ஆண்ட்ரூ டை 7.20 கோடி வரை ஏலம் போனதற்குக் காரணம் பிக்பேஷ்!  பென் லாலின், பில்லி ஸ்டான்லேக் போன்ற பெரிய அளவில் அறியப்படாத வீரர்கள் ஏலம் போனதற்கே பிக்பேஷ் தொடர்தான் காரணம்.

பிக்பேஷ் தொடர் ஒருபுறம் இவர்களுக்கான அடையாளத்தைக் கொடுக்க, அண்டர் 19 உலகக்கோப்பை இளம் வீரர்களை அடையாளப்படுத்தியது. ஒருவேளை இந்தத் தொடர் இப்போது நடக்காமல் இருந்தால், கேப்டன் ப்ரித்வி ஷா (டெல்லி டேர்டெவில்ஸ் - 1.20 கோடி) மட்டுமே ஏலம் போயிருப்பார். ஆனால், இப்போது 5 இந்திய வீரர்களும் 2 ஆப்கானிஸ்தான் வீரர்களும் ஏலம் போயுள்ளனர். தொடர்ந்து 140+ கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசிய அசத்திய கமலேஷ் நாகர்கோட்டி (கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - 3.20 கோடி), விளையாடிய 3 இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்து அசத்தியிருந்த சுப்மான் கில் (கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - 1.80 கோடி), நான்கு போட்டிகளில் 8 விக்கெட் வீழ்த்திய ஷிவம் மாவி (கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - 3 கோடி), 11 விக்கெட் வீழ்த்தியிருந்த ஸ்பின்னர் அனுகுல் ராய் (மும்பை இந்தியன்ஸ் - 20 லட்சம்) ஆகியோரும் ஐ.பி.எல் அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். 

சுப்மான் கில் - IPL

இந்திய அண்டர் 19 வீரர்கள் மட்டுமல்ல, ஆப்கானிஸ்தான் அண்டர் 19 வீரர்களும் ஏலத்தில் எடுக்கப்பட்டதுதான் இதன் சிறப்பு. பௌலர் ஜாஹிர் கான் - 60 லட்சத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அஃப் ஸ்பின்னர் முஜீப் ஜத்ரான் - டெல்லி, பஞ்சாப் அணிகள் கடும் போட்டி போட, 4 கோடிக்கு ஏலம் போனார் இந்தப் பதினாறு வயது இளைஞர். ஐ.பி.எல் ஏலத்தை தலைப்புச் செய்திகள் நிர்ணயிக்கும் என்பதற்கு இதுவே மிகச்சிறந்த உதாரணம். ஒருவேளை வழக்கம்போல பிப்ரவரி மாதம் ஏலம் நடந்திருந்தால், ஜத்ரான் இந்த அளவுக்கு ஏலம் போயிருப்பாரா என்று தெரியாது. அப்போது நடந்துகொண்டிருக்கும் தொடரில் சாதித்துக்கொண்டிருக்கும் ஒரு பௌலரை வாங்கத்தான் ஐ.பி.எல் அணிகள் போட்டி போட்டிருக்கும். 

 

 

728x150_20553.jpg

இவ்வளவு ஏன்... இரண்டு நாள் இடைவெளி, ஒரு வீரரின் வாய்ப்பைத் தட்டிப் பறித்துவிட்டது. இஷான் போரெல் - இந்த வீரரின் பெயரை ரிச்சர்ட் மேட்லி அறிவித்ததும், அமைதியே நிலவியது. அதுவரை அண்டர் 19 உலகக்கோப்பையில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தார் இஷான். 55 பந்துகள் மட்டுமே வீசியிருந்தார். விக்கெட் வீழ்த்தவில்லை. ஞாயிற்றுக்கிழமை அவர் விலைபோகவில்லை. செவ்வாய் அதிகாலை... பாகிஸ்தான் அணியுடனான அரையிறுதி. அந்த அணியின் முதல் நான்கு விக்கெட்டுகளையும் தான் வீசிய ஆறாவது ஓவரிலேயே வீழ்த்தி ஆட்டத்தை அப்போதே இந்தியாவுக்கு வென்று கொடுத்திருந்தார். நாகர்கோட்டி, ஷிவம் மாவி ஆகியோரைப் போல் வேகம் இல்லை. ஆனால், நன்றாக ஸ்விங் செய்யத் தெரிந்தது. பேட்ஸ்மேன் எப்போது பொறுமை இழப்பார் என்பதை அறிந்து, லூஸ் பால் வீசி விக்கெட் எடுக்கத் தெரிந்தது. ஆனால், இவரைப் பற்றி ஐ.பி.எல் அணிகளுக்குத் தெரியவில்லை. காரணம்...ஏலத்துக்கும் இந்தப் போட்டிக்கும் இடையே இருந்த 2 நாள் வித்தியாசம்!

Ish Sodhi - IPL

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடர் காலின் டி கிராந்தோம், மிட்சல் சான்ட்னர் ஆகியோருக்கு அணிகளைப் பெற்றுத் தந்தது. இஷ் சோதி - லெக் ஸ்பின்னர் வேறு. லெக் ஸ்பின்னர் என்பதனாலேயே இன்னும் அமித் மிஷ்ரா, பியூஷ் சாவ்லோ ஆகியோருக்கெல்லாம் கோடிகள் கொட்டுகிறார்கள். இவர் உலகின் நம்பர் 1 பௌலர் வேறு. ஆனால், ஏலம் போகவில்லை. காரணம்,  இந்த பாகிஸ்தான் டி-20 தொடர்.  இவர் பெயர் ஏலத்துக்கு வந்த 27-ம் தேதி, இந்தத் தொடரின் 2 போட்டிகள் முடிவடைந்திருந்தது. முழுமையாக 8 ஓவர்களும் வீசியவர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. 28-ம் தேதி மூன்றாவது டி-20 போட்டி. 47 ரன் கொடுத்து 2 விக்கெட் (எகானமி : 11.75) வீழ்த்துகிறார். அன்று நடந்த மறு ஏலத்தில் யாரும் இவரை வாங்க முன்வரவில்லை. உலகின் நம்பர் 1 டி-20 பௌலருக்கு, நம்பர் - 1 டி-20 தொடரில் இடமில்லை. ஒருவேளை இந்தத் தொடர் இப்போது நடக்காமல் இருந்திருந்தால், முந்தைய பெர்ஃபாமன்ஸ்கள் அடிப்படையில் நிச்சயம் சோதி ஏலம் போயிருப்பார். 

 
 

இப்படி, தற்சமயம் நடந்த ஒவ்வொரு தொடரும், ஏலத்தில் வீரர்கள் ஏலம் போனதற்கும் போகாததற்கும் முக்கியக் காரணமாக விளங்கின. இந்த சர்வதேசத் தொடர்கள் ஒருபுறம் தாக்கம் ஏற்படுத்த, ரஞ்சிக் கோப்பையிலேயே விளையாடாத 30 வயது வீரர் ஒருவர் ஐ.பி.எல் விளையாடக் காரணமாக அமைந்தது நம் உள்ளூர் தொடர் ஒன்று. அதைப்பற்றி... அடுத்த பாகத்தில்.

 

https://www.vikatan.com/news/sports/115136-the-change-in-ipl-auction-date-is-good-for-a-reason.html

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு கோடிகளைக் கொட்டி வீரர்களை எடுக்கிறார்கள் சரி. ஒரு அணி முதலாவதாக வருகின்றது என்று வைத்துக் கொண்டாலும் இவ்வளவு செலவையும் ஈடு செய்யுமளவுக்கு முதல் பரிசாக பில்லியன் அளவுக்கு கொடுப்பார்களா.....! பின் வரும் விளம்பரங்களால் வரும் பணம் அந்தந்த வீரருக்கு மட்டும்தானா அல்லது அதிலும் அவர்களுக்கு கமிஷன் உண்டா சொல்லுங்கள்.......! tw_blush:

கட்டுப்படியாகும் என்றால் அடுத்த வருடம் எனது பெயரையும் வீரர்கள் பட்டியலில் கொடுப்பது பற்றி பரிசீலிப்பேன்.....!  tw_blush:

 

 

  • தொடங்கியவர்

IPL 2017 Prize Money:

The total prize money pool for 2017 IPL season is set to be around $8 million (₹51 crore). The winners of 2017 IPL will get around $4 million (₹26 crore) while the losing finalists will take home as much as $2 million (₹12.9 crore). Other two teams in play-off will get ₹6.5 crore each.

Indian Cricket Premier League 2017 – Prize Money Breakdown
STAGE PRIZE MONEY
WINNERS  $4 million (₹25.8 crore)
Runners-up  $2 million (₹12.9 crore)
3rd Placed Team in Playoff  $1 million  (₹6.4 crore)
4th Placed Team in Playoff   $1 million  (₹6.4 cror
4 hours ago, suvy said:

இவ்வளவு கோடிகளைக் கொட்டி வீரர்களை எடுக்கிறார்கள் சரி. ஒரு அணி முதலாவதாக வருகின்றது என்று வைத்துக் கொண்டாலும் இவ்வளவு செலவையும் ஈடு செய்யுமளவுக்கு முதல் பரிசாக பில்லியன் அளவுக்கு கொடுப்பார்களா.....! பின் வரும் விளம்பரங்களால் வரும் பணம் அந்தந்த வீரருக்கு மட்டும்தானா அல்லது அதிலும் அவர்களுக்கு கமிஷன் உண்டா சொல்லுங்கள்.......! tw_blush:

கட்டுப்படியாகும் என்றால் அடுத்த வருடம் எனது பெயரையும் வீரர்கள் பட்டியலில் கொடுப்பது பற்றி பரிசீலிப்பேன்.....!  tw_blush:

 

 

 

2018 இலும் இதுதான் பரிசு தொகை

சில அணிகள் வீரர்களுக்கு ஒழுங்காக காசை நேரத்துக்கு கொடுப்பதில்லை  என்ற முறைபாடுகளும் கடந்த காலங்களில் இருந்தது.

கட்டுப்படியாகும் என்றால் அடுத்த வருடம் எனது பெயரையும் வீரர்கள் பட்டியலில் கொடுப்பது பற்றி பரிசீலிப்பேன்.....!  tw_blush:

ஆசை ரொம்பத்தான்..:grin:

 

பல பிரபல வீரர்களையே இந்த முறை ஏலத்தில் எடுக்கவில்லை. அதில் இங்கிலாந்து அணி தலைவரும் அடங்குவார்.

கெயிலை கூட கடைசி நேரத்தில் அடிப்படை விலையில் வாங்கினார்கள்

 

 

நம்புங்கள், இந்தப் பிரபல வீரர்களுக்கு ஐபிஎல்-லில் இடமில்லை!

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ரஞ்சி டு இந்தியன் டீம்... தூரத்தை அதிகரித்த முஷ்டாக் அலி! ஐ.பி.எல் 2018... உள்ளே வெளியே என்ன நடக்கும்? பகுதி - 3 #IPLAuction

 
 

IPL

ரஞ்சி டிராபி - இந்தியாவின் மிகப்பெரிய முதல்தர கிரிக்கெட் தொடர். 1934-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தொடர்தான், அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் இந்திய அணிக்குள் அடியெடுத்து வைப்பதற்கான நுழைவு வாயிலாக இருந்தது. ஒருநாள், டி-20 என கிரிக்கெட் காலத்திற்கு ஏற்ப மாற, விஜய் ஹசாரே, சேலஞ்சர் கோப்பை போட்டிகள் மூலம் சில வீரர்கள் இந்திய அணிக்குள் நுழையத் தொடங்கினர். அதன்பின் ஐ.பி.எல் - இந்த 10 ஆண்டுகளில் ஐ.பி.எல் மூலம்தான் அதிக வீரர்கள் தேசிய அணிக்குள் நுழைந்துள்ளனர். ஐ.பி.எல் தொடர் பிரபலமடைந்ததன் பிறகு, ரஞ்சிக் கோப்பைக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது. #IPLAuction

 

சமீப காலத்தில் இந்திய அணிக்குத் தேர்வான வீரர்களான வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், பரிந்தர் ஸ்ரண் போன்ற பலருமே ஐ.பி.எல் தொடரினால் அடையாளம் பெற்றவர்கள்தான். ஒருநாள், டி-20 போட்டிகளுக்குத்தான் இந்த நிலமையென்று பார்த்தால், டெஸ்ட் அணிக்கு அறிமுகமாகும் வீரர்களும் இன்று ஐ.பி.எல் தொடரினால் இந்திய அணிக்குள் நுழைந்தவர்களாகவே இருக்கிறார்கள். இந்தத் தென்னாப்பிரிக்கத் தொடரில் இந்திய அணிக்கு அறிமுகமான ஜஸ்ப்ரீத் பும்ரா, கடந்த ஆண்டு நடந்த இலங்கை அனியுடனான டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஹர்டிக் பாண்டியா இருவருமே மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜொலித்தவர்கள். அதற்கு முந்தைய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அறிமுகமான குல்தீப் யாதவ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் ஆடியபோது அடையாளம் காணப்பட்டவர். 

karun nair

இப்படி இன்று இந்திய அணிக்கான 3 ஃபார்மட்களுக்கும் ஐ.பி.எல் தொடர்தான் வீரர்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது. கருண் நாயர், பங்கஜ் சிங் போல் அவ்வப்போது ரஞ்சிக் கோப்பை பெர்ஃபாமன்ஸ் அடிப்படையில் வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைந்தாலும், அவர்களால் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடிவதில்லை. அப்படியெனில், இந்தியாவில் நடக்கும் உள்ளூர் முதல் தர மற்றும் லிஸ்ட் - ஏ போட்டிகள் முக்கியத்துவத்தை இழந்துவிட்டதா? இல்லை. இன்றைய சூழலில் ஐ.பி.எல் தொடருக்குள் நுழைவதற்கான நுழைவு வாயிலாக இருப்பது இந்தத் தொடர்கள்தான். 

ஆனால், அதிலும் ரஞ்சிக் கோப்பை முக்கியத்துவம் இழந்துவிட்டது. நடந்த முடிந்த 2018 ரஞ்சி சீசனில் சோபித்த பலரும் இந்த ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில் விலைபோகவில்லை. ரஞ்சிக் கோப்பை ஃபைனலில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி, விதர்பா அணி சாம்பியன் ஆனதில் முக்கியப் பங்காற்றியவர் ராஜ்னீத் குர்பானி. இந்த சீசனில், 6 போட்டிகளில் 39 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். அதுவும் 17.12 என்ற நல்ல சராசரியோடு. ஆனால், இந்த ஏலத்தில் அவர் விலைபோகவில்லை. அதேபோல் அசோக் திண்டா - 8 போட்டிகளில் 35 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த இந்த பெங்கால் வீரரை வாங்கவும் ஐ.பி.எல் அணிகள் முன்வரவில்லை. ஆக, ரஞ்சி தொடரில் ஜொலித்தவர்கள் பெரிய அளவில் கவனம் பெறவேயில்லை. 

rajneet gurbani

டொமஸ்டிக் கிரிக்கெட்டர் - நான்காவது டிவிஷனில் இருந்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடுபவர்கள்வரை அனைவரையுமே குறிக்கும் சொல். ரஞ்சி தொடர்தான் அதன் உட்சபட்ச தொடர் என்பதால், அதில் விளையாடும் வீரர்களுக்கு மதிப்பு அதிகமாக இருக்கும். ஏனெனில், இந்திய அணிக்குத் தேர்வாக அவர்களுக்கு வாய்ப்பு இருந்தது. அவர்களுக்கு மட்டும்தான் இருந்தது. அண்டர் 13, அண்டர் 15 எனத் தொடங்கும் கிரிக்கெட் பயணத்தில் எவ்வளவு சீக்கிரம் மாநில அணிக்கு விளையாடுகிறார்களோ, அந்த அளவுக்கு தேசிய அணிக்கான வாய்ப்பு நிலைத்திருக்கும். ஒரு வீரர் 27, 28 வயதுவரை ரஞ்சிக் கோப்பையில் விளையாடாவிட்டால் 'இனி அவ்வளவுதான்' என முத்திரை குத்தப்பட்டுவிடுவார்கள். அவர்களின் டொமஸ்டிக் கிரிக்கெட் வாழ்க்கையும் விரைவில் முடிந்துவிடும். ஆனால், இப்போது இதுவும் மாறியிருக்கிறது. 

அனிருத்தா ஜோஷி - கர்நாடகாவைச் சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட்டர். 24 வயதில் முதன்முதலாக கர்நாடக அணிக்காக சையத் முஷ்டாக் அலி கோப்பையில் பங்கேற்றார். அடுத்த 6 ஆண்டுகளில் அவர் மாநில அணிக்காக விளையாடியது வெறும் 19 போட்டிகள். அவையும் லிஸ்ட் ஏ போட்டிகள்தான். இன்னும் ரஞ்சி அணிக்காக அவர் ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை. வயதும் முப்பதைத் தொட்டுவிட்டது. இந்திய அணிக்கான கதவு நிரந்தரமாக மூடப்பட்ட தருணம்... இந்த ஆண்டின் சையத் முஷ்டாக் அலி கோப்பை அனைத்தையும் மாற்றிவிட்டது. ஜனவரி 21...பஞ்சாப் அணியுடனான முதல் போட்டியில், 19 பந்துகளில் 40 நாட் அவுட். ஜனவரி 23... ராஜஸ்தான் அணியுடனான இரண்டாவது போட்டியில், ஜனவரி 24... 45 பந்துகளில் 73 நாட் அவுட். ஜார்கண்ட் அணியுடனான அடுத்த போட்டியில் 10 பந்துகளில் 19 நாட் அவுட். 

அனிருத்தா ஜோஷி - IPL

நான்கு நாள்கள்... மூன்று இன்னிங்ஸ்... முப்பது வயதில் கிரிக்கெட் வாழ்க்கை மாறிவிட்டது. இரண்டு நாள் கழித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இவரை ஏலத்தில் எடுக்கிறது. முதல்முறையாக ஐ.பி.எல் தொடரில் விளையாடத் தயாராகிவிட்டார் ஜோஷி. யார் அறிவார்... 31 வயதில், இந்திய டி-20 அணிக்குள் அவர் அடியெடுத்து வைத்தாலும் வைக்கலாம். இவரைப் போலத்தான் பஞ்சாப்பைச் சேர்ந்த ஷரத் லம்பா. 28 வயதான லம்பா, பஞ்சாப் அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடியதில்லை. கடந்த 4 ஆண்டுகளில் 6 டி-20 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தார். 2018 சையது முஷ்டாக் அலி தொடரில், 27.5 என்ற நல்ல சராசரியோடு 110 ரன்கள் எடுக்க, மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். பெரிய அளவில் சோபிக்காவிட்டாலும், ஆல்ரவுண்டர் என்பதற்காகவே 27 வயது சித்திஷ் ஷர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். 

மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டிருக்கும் மயாங்க் மார்கண்டே, இந்த ஜனவரி வரையிலும் பஞ்சாப் அணிக்காக ஒரு போட்டியில்கூட விளையாடியதில்லை. இந்த ஜனவரி மாதம், சையது முஷ்டாக் அலி கோப்பையில் 4 போட்டிகளில் விளையாடினார். இப்போது ஐ.பி.எல் வாய்ப்பு. அந்தத் தொடரில் 13 விக்கெட் வீழ்த்தி அசத்திய 19 வயது உத்திர பிரதேச பௌலர் மோசின் கானும் மும்பை அணியால்தான் வாங்கப்பட்டுள்ளார். அவரும் இதற்குமுன் மாநில அணிக்காக எந்தப் போட்டியிலும் விளையாடியதில்லை. ஜம்மு காஷ்மீர் வீரர் மன்ஸூர் தார் கிங்ஸ் லெவன் அணியால் வாங்கப்பட்டதும் இந்தத் தொடரில் சோபித்ததால்தான். 

ranji trophy - IPL

 

ஆக, இந்த ஜனவரி மாதம் ஏலம் நடந்தது சையது முஷ்டாக் அலி தொடரில் சோபித்தவர்களுக்கெல்லாம் பம்ப்பர் அடித்துள்ளது.  பல உள்ளூர் வீரர்களும் இந்தத் தொடரில் விளையாடியதை வைத்துத்தான் அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். இவ்வளவு ஏன், இந்திய அண்டர் 19 அணிக்குத் தேர்வாகாத மஹிபால் லோம்ரார், சையது முஷ்டாக் அலி தொடரில் நன்றாக விளையாடியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இன்றைய நிலையில் கிரிக்கெட்டில் அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதில் ரஞ்சிக் கோப்பையைவிட, மற்ற உள்ளூர் தொடர்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்ற கசப்பான உண்மையும் இந்த ஐ.பி.எல் ஏலம் மூலம் புலப்படுகிறது.

https://www.vikatan.com/news/sports/115732-the-importance-of-ranji-trophy-is-being-reduced-by-the-advent-of-ipl-and-other-list-a-tournaments.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.