Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"எப்போது தோற்றார் மகிந்த ராஜபக்சே?"

Featured Replies

"எப்போது தோற்றார் மகிந்த ராஜபக்சே?" 

 

ராஜபக்சே

ட்டுமொத்த இலங்கை உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் கூட்டணிக் கட்சி பெரும்பான்மை வெற்றிபெற்றது. பெப்ரவரி பத்தாம் திகதியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும்  தென்னிலங்கையின் அரசியல் காட்சிகள் களேபரக் கைகுலுக்கல்களோடு தோன்றத்தொடங்கிவிட்டன.  “நல்லிணக்க அரசு” என்றழைக்கப்படும் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன அணியினரின் ஆட்சி கவிழ்க்கப்படலாம் எனவும் எதிர்வுகூறல்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. போதாதற்கு அரசியல் அவதானிகள் சிலர் மஹிந்தவின் மீள் எழுச்சி அரசியல் காலமாக இதனைக் கருதினர். ஆனால், உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளையடுத்து அரங்கேறும் காட்சிகள் யாவும் ஓராயிரம் மணித்துளிகள் ஒத்திகை பார்க்கப்பட்டவை. சிங்கள ஆட்சியாளர்கள் எல்லா நொடிகளிலும் ஜனநாயகவாதிகளாக உலகிற்கு பாவனை செய்கிறார்கள்.

 

தென் இலங்கை ஒரு நாடகமேடை, இனியெப்போதும் இங்கு கதாநாயகப் பாத்திரம் மஹிந்த ராஜபக்சவுக்கு என்பதே மறுக்கப்படமுடியாத உண்மை. அரசியல் என்பது அதிகாரம் சம்பந்தப்பட்ட விடயம். அதிகாரமே அதிகார பீடத்தை உருவாக்கும் வல்லமை கொண்டது. அதிகாரபீடமானது இன்றைய யுகத்தில் மக்களின் ஆதரவிலிருந்தே தோன்றுகிறது. அதாவது மக்களைத் தன்வயப்படுத்திவிட்ட ஒருவனிடமே அதிகாரபீடம் இருக்கும்.முப்பதாண்டுகளாக மாறிமாறி ஆட்சிசெய்த எந்தவொரு சிங்கள ஆட்சியாளர்களாலும் முடியாதவொரு கனவை மகிந்த ராஜபக்சேவே கண் முன் நிஜமாக்கினார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்த யுத்தத்தில் பெற்ற வெற்றியின் மூலம் சிங்களர்களின் ஆயுட்கால தலைவராக ஆகியிருப்பதோடு தமிழர்களின் காப்பியநாயகனாக போற்றப்பட்ட பிரபாகரனையே போரில் வென்ற சிங்களர்களின் காப்பியநாயகனாகவும் மஹிந்தவே நிலைபெற்றுள்ளார். 

கடந்த தேர்தல்களிலும் சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சவிற்கு அதிகமான வாக்குகள் விழுந்தன. அவரின் தோல்வியைத் தீர்மானித்தது  தமிழர்களின் வாக்குகளே. ஆனாலும் தமிழர்களுக்கு வாய்க்கும் சிங்கள ஆட்சியாளர்கள் அனைவரும் மகிந்த ராஜபக்சக்களே.

தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட யுத்தம், திட்டமிடப்பட்ட ஓர் இனப்படுகொலை. இதனை உலகத்தின் பல்வேறு மனிதஉரிமை ஆர்வலர்களும், தீர்ப்பாயங்களும் தாமதமாகவேனும் வெளிப்படுத்தத் தொடங்கியமை சிங்கள ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. தமது மக்களான சிங்களவர்கள் மத்தியில் புலிகள் இயக்கத்தை அழித்த கம்பீரத்தோடு மஹிந்த ராஜபக்ச உட்பட்ட ஆட்சியாளர்கள் இருந்தார்கள். ஆனால், அதே காரணமே இவர்களை மின்சார நாற்காலிக்கு அருகிலும் கொண்டு போய்சேர்த்தது. மின்சார நாற்காலி உண்மையாக இல்லையெனினும் மஹிந்த ராஜபக்சவுக்கு பீதியை அது ஏற்படுத்தியது.

இலங்கை

மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா என போர்க்குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்டிருந்த மின்சார நாற்காலி ஆபத்தைக் களைவதற்கு அரசாங்கத்தில் இடைமாறு நிலையை சிங்கள சிந்தனைக் குழாம் வடிவமைத்தது. தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக உலகத்தின் பல்வேறு நாடுகள் குரல் எழுப்பி இலங்கையை நெருக்கடிக்குள் கொண்டுவருவதனை உணர்ந்த சிங்கள சிந்தனைக் குழாமினர் மஹிந்த ராஜபக்சவைக் காப்பாற்ற வகுத்த தந்திரோபாயமே ஜனாதிபதி தேர்தல் தோல்வி. இந்தத் தேர்தலில் மஹிந்தவை தோற்கடிக்க வேண்டுமென தமிழர்தரப்பின் அரசியல் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னிறுத்திய மைத்திரிபால சிறிசேனாவை தமிழ் மக்கள் தமது வாக்குகளால் வெல்லச்செய்தனர். சர்வதேச அளவில் எழுந்த மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான போர்குற்றச்சாட்டுக்கள் வெகுவாகக் குறையத்தொடங்கின. தமிழர் விரல்களைக் கொண்டே தமிழர்களின் கண்களை குத்தினர் சிங்களர்கள்.

“நல்லிணக்க அரசு” என்கிற இடைமாறு அரசாங்கத்தை மைத்திரியும்-ரணிலும் நிர்வகித்தாலும் ராஜபக்சவின் நிபந்தனைக்கு உட்பட்டுத்தான் அரசாங்கம் இயங்கியது. மேலும், தனது குடும்ப ஆதிக்கத்திற்கு எதிராக மைத்திரி அரசு மேற்கொண்ட கைதுகளையும், விசாரணைகளையும் கூட மஹிந்தவினால் கட்டுப்பாட்டுக்குள் இன்றுவரை வைத்திருக்க முடிகிறது. தனது அரசு பின்பற்றிய வெளியுறவுக் கொள்கைகளையே பின்பற்றுமாறு வெளிப்படையாகவே நல்லிணக்க அரசை வலியுறுத்தினார். காணாமல்போனவர்கள் தொடர்பான விவகாரங்களில் மகிந்தவின் பதிலே மைத்திரியின் பதிலாகவும் இருக்கிறது. மகிந்தவின் கொள்கை நடைமுறைகளுக்கும் செயற்திட்டங்களுக்கும் கையொப்பமிடும் அரசை நல்லிணக்க அரசாக இவ்வுலகிற்கு அறிவுப்பு செய்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும் அனைத்துப் பொறுப்புக்களும் உள்ள த.தே.கூட்டமைப்பு, சிங்கள ஆட்சியாளர்களை தெரிந்தே     காப்பாற்றிக்கொண்டே இருக்கிறது. 

இலங்கையின் செயல்பூர்வ ஜனாதிபதியாக (de facto President) இருந்துவரும் மகிந்தவின் கைகளிலேயே இந்துமா கடலின் அரசியல் பலத்துடன் இருக்கிறது. பலம்வாய்ந்த ஆசிய பேரரசுகளோடு தொடர்புகளை வளர்த்து மேற்குலகின் அழுத்தங்களில் இருந்து தப்புவதற்கு இதனைப் பயன்படுத்துகிறார். இந்தநிலையில் இவர் பெற்றிருக்கும் உள்ளூராட்சி தேர்தல் வெற்றியினால் நாடாளுமன்றம் கலைக்கப்படுமென்பதெல்லாம் அரசியல் அர்த்தத்தில் பகல் கனவுக்கு ஒப்பானது. தெளிவாக இன்னும் இரண்டரை ஆண்டுகள் இந்த நாடாளுமன்றம் நீடிக்க முடியும். 341 உள்ளூராட்சி சபைகளில் 234 சபைகளை கைப்பற்றியிருக்கும் மஹிந்தவினால் அரசைக்கவிழ்க்க முடியுமென்ற போதிலும் அதனை இப்போது செய்வதற்கு முன்வரமாட்டார். ஏனெனில் மேற்குலகத்தின் நெருக்கடிக்குள் உள்ளாவதில் அவருக்கு நிறையைச் சிக்கல்கள் உண்டு. அவருக்கு இப்போதும் மின்சார நாற்காலி பீதியும் சர்வதேசே விசாரணை அழுத்தமும் இருக்கச் செய்கிறது. ஆனால், இந்தவிடயத்திலிருந்து இலங்கையையும் சிங்கள அரசின் கீர்த்தியையும் காப்பாற்றக் கூடிய வலுபொருந்திய தலைவராக மேற்குலகின் ஆசிர்வாதம் பெற்ற ரணிலே இப்போது இலங்கையிடம் இருக்கும் ஒரேயொருவர் என்பதை மஹிந்த அறிவர். நல்லிணக்க அரசின் மீதமிருக்கும் இரண்டு ஆண்டுகளில் போர்க்குற்ற மற்றும் மனிதப்படுகொலைக்கான குற்றச்சாட்டுக்களிலிருந்து சிங்கள ஆட்சியாளர்கள் அனைவரையும் காப்பாற்றும் திட்டத்தில் ரணில் சிறப்பாகச் செயற்படுவார். ஆனால், தமிழ்தேசியக் கூட்டமைப்பு இந்த தந்திரங்களைப் புரிந்துகொள்ளாமல் இந்த அரசுக்கு நற்சான்றிதழ்களை வழங்கிக்கொண்டே இருக்கிறது. இனப்படுகொலைக்கு உள்ளான மக்களுக்கு நீதி கேட்கும் போராட்டத்தை மழுங்கச்செய்யும் பணியையே த.தே.கூட்டமைப்பு செய்துவருகிறது. “வரலாற்றுக்கு தெரியாததென்று ஒன்றுமில்லை, மன்னிக்கத் தெரியாததைத் தவிர” என்கிற வரிகளை தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் உணர்த்துவார்கள். 

ராஜபக்சே

இன்றைக்கு இலங்கையை ஆட்சிசெய்துவரும் ஐக்கியதேசியக் கட்சியும், இலங்கை சுதந்திரக் கட்சியும் இந்தத் தேர்தலில் கண்டிருக்கும் தோல்வியின் பின்னணியில் தமிழர்களுக்கு எதிரான சிங்கள கூட்டுஉளவியல் மிளிர்கிறது. இலங்கையின் முக்கியமான மூன்று பவுத்த நிகாயங்களும் இரண்டு பீடங்களும் மகிந்த ராஜபக்சவிற்கே தமது ஆதரவைத் தெரிவித்தனர்.”இராமன் இருக்குமிடம் அயோத்தி”என்பதைப் போல மகிந்த இருக்குமிடமே சுதந்திரக் கட்சியாக ஆகிவிட்டது. இலங்கையின் நாடாளுமன்றில் ஆணைப் பெண்ணாக்க முடியாததைத் தவிர  இப்போது எதனையும் செய்யமுடியும் வல்லமை மஹிந்தவிற்கு உண்டு. மஹிந்த சொல்லுவதற்கு பணிவதைத் தவிர வேறு எந்தத் தெரிவுகளும் தென்இலங்கை அரசியலுக்கும் நல்லிணக்க அரசுக்கும் இல்லை.

இனிவரும் காலங்களில் ஐ.நாவில் தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் பற்றி கேள்வி எழுப்பப்படும். இதனை எதிர்கொள்ளவே இந்த உள்ளூராட்சி களேபரங்களை கொழும்பு மேடையில் நிகழ்த்தினார்கள். மகிந்தவின் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் தமிழர்களுக்குத் தீர்வுத் திட்டத்தை முன்வைத்தோமானால் ராஜபக்ச ஆதரவாளர்கள் நல்லிணக்க அரசினை கவிழ்த்துவிடுவார்கள் என ரணில் ஐ.நாவிற்கு பதில் சொல்லக் கூடும். மேலும், தீர்வுத்திட்டம் பற்றி இப்போது பேசவேண்டாம் என உலகின் வாய்க்குப் பூட்டுபோட்டும் விடுவார்கள். நல்லிணக்க அரசை காப்பாற்ற தீர்வுத்திட்டத்தை கைவிடுங்கள் என உலகிற்கு சொல்வார்கள். உள்ளூராட்சி தேர்தலின் மூலம் ஐ.நாவையே சாமாளிக்கும் உபாயங்களை சிங்களச் சிந்தனை குழாம் கட்டியெழுப்பிவிட்டது. 

தமிழர்களுக்கு நேர்ந்த அநீதிகளுக்கு எதிராக நீதி கேட்கும் இன்றைய நாளில் அவற்றை எதிர்க்கவல்ல தேர்தல்களையும், ஆட்சியாளர்களின் மோதல்களையும் கொழும்பு நடத்திக்கொண்டே இருக்கும். இலங்கையில் இருப்பது ஜனநாயகமல்ல, இனநாயகம். அதில் தமிழர்களுக்கு எப்போதும் குரலில்லை.

https://www.vikatan.com/news/coverstory/117293-analysis-about-mahinda-rajapaksa-and-team-recently-won-the-local-body-elections-in-srilanka.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.