Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர்கள் மீதான விசாரணையும் நீதி தவறிய நீதியரசரும்

Featured Replies

அமைச்சர்கள் மீதான விசாரணையும் நீதி தவறிய நீதியரசரும்

 

 

இலங்கை வரலாற்றில் முதலாவது வடக்கு மாகாண சபைக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் வாரியத்தை சட்டத்திற்கு முரணாக கூண்டோடு நீக்கி வடக்கு அரசியலில் மட்டுமல்ல ஒட்டுமொத்த சிறிலங்காவிலும் பூகம்பத்தை ஏற்படுத்தியவர் வடக்கு மாகாண முதலமைச்சர் முன்னாள் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள். 2017ம் ஆண்டின் அவரது சாதனையாக இதனை கருதமுடியும்.

2009 இறுதி யுத்தத்தில் சர்வதேச மனிதஉரிமை சட்டங்களை புறந்தள்ளி இனப்படுகொலையை முன்னெடுத்த இராசபக்சவின் தலைமையிலான சிறிலங்கா அரசு 2009 வைகாசி திங்கள் 19ம் நாளுடன்; தனது வெறியாட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து தமிழர்களின் தாயக பிரதேசத்தை தனது இராணுவ வல்லாதிக்கத்திற்குள் கொண்டு வந்தது. இந்த நிலையில் தாயக உறவுகள் எதிலிகளாக முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்த வேளை சர்வதேச நெருக்குதல்காரணமாக பிரிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் ஒருமாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முன்வந்தது. ஒருவாறாக 2013ம் ஆண்டு புரட்டாதி திங்கள் 21ம் நாள் வடக்கு மாகாணத்தில் தேர்தலொன்று நடைபெற்றது.

பாரிய மனித பேரவலத்திற்கு பின்னரான காலப்பகுதியில் சர்வதேசத்தின் கழுகுப்பார்வை சிறிலங்கா மீது இருந்தவேளை சர்வதேசத்தையும், சிங்கள இனவாதிகளையும் சமாளிக்ககூடிய சமூகத்தில் நன்மதிப்புடைய, குறிப்பாக தென்சிறிலங்காவுக்கு பரீட்சியமான புதிய முகம் ஒன்று வடக்கு மாகாண சபையின் முதல்வராக நியமிக்கப்படுவதற்கு தேவைப்பட்டது. அந்த உயரிய சிந்தனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இருந்தது. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான பழம்பெரும் அரசியல்வாதியான இரா சம்பந்தன் அவர்களின் இராஜதந்திர நகர்வாகவே இவ்வாறான முடிவு எடுக்கப்பட்டது. கட்சிக்குள் பலதரப்பட்ட எதிர்ப்புகள் இருந்தபோதும் அவற்றை சமாளித்து தனது முடிவில் உறுதியாக செயற்பட்டார்.

அதன்விளைவாக வடக்கின் அரசியல் களத்திற்குள் தென்சிறிலங்காவில் இருந்து புதிதாக இறக்குமதி செய்யப்பட்டவர்தான்; தற்போதைய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள். நீண்டகாலமாக தென்சிறிலங்காவில் வசித்தவர், பெரும்பான்மையினத்தவருடன் தொழில் முறையிலும், குடும்பஉறவுமுறையிலும் நெருக்கமாக பழகியவர், மூன்று மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவர். சட்டத்துறையில் அதி உயர்பதவியான நீதியரசராக பணியாற்றியவர். சமய, மொழி, கலாசார விழுமியங்களில் ஈடுபாடுடையவர். இதனால் அன்றைய அரசியல் அக, புறச்சூழ்நிலையில் இவரது தெரிவு மிகச்சரியானதாகவே இருந்திருக்கும். இவ்வாறானவர் மத்திய சிறிலங்கா அரசுடன் நல்லுறவைப் உறவைப்பேணி மனிதப்பேரவலத்தை சந்தித்த மக்களை கைதூக்கிவிட சாத்தியமான நிவாரண, புனர்வாழ்வு விடயங்களை மாகாண சபையினூடாக செய்வார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்ததில் தவறேதும் இல்லை.

அனைவரும் எதிர்பார்த்தது போல வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் வாழ்ந்த தமிழ்மக்கள் இராசபக்ச அரசின்மீது இருந்து கோபத்தையும், நீண்டகாலம் போரினால் துவண்டிருந்தவர்களுக்கு ஆறுதலைக்கொடுக்ககூடிய தமிழர் அரசு வடக்கில் உதயமாகவேண்டும் என்ற பேருவகையினாலும் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்குகளை அள்ளி வழங்கினர். பொதுவாக ஒரு மக்கள் மன்றத்தில் ஐம்பத்தொரு விழுக்காடு பெரும்பான்மை இருந்தாலே அது போதுமென்ற சனநாயக மரபிற்கு அப்பால் ஐந்தில் நான்கு பெரும்பான்மையென்ற அதிகூடிய பெரும்பான்மை ஆளும் த.தே.கூட்டமைப்பிற்கு கிடைத்தது. ஏறக்குறைய எழுபது விழுக்காடான ஆசனங்கள் கூட்டமைப்பின் வசமானது. இந்த இமாலய வெற்றிக்காக கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தலைவர்கள், தென்சிறிலங்காவின் தமிழ்தேசிய நேசக்கட்சிகள், புலம்பெயர் பிரதிநிதிகளென பலரும் வடக்கில் முகாமிட்டு சூறாவழிப்பிரசாரங்களை மேற்கொண்டனர்.

மக்கள் எதிர்பார்த்ததுபோல ஐப்பசி திங்கள் 11ம் நாள் வடக்கில் தமிழர் அரசொன்று சட்பூர்வமாக
நிறுவப்பட்டது. அதன் பிரதானியாகவும் அமைச்சர் வாரியத்தின் தலைமை அமைச்சருமாக ஓய்வு பெற்ற நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் வடக்கின் முதலாவது முதலமைச்சராகவும், நான்கு துறைசார்ந்த அமைச்சர்களும் நியமிக்கப்பட்டார்கள். முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளரும் சிறிலங்கா கல்விநிர்வாக சேவையைச் சேர்ந்தவருமான தம்பிராசா குருகுலராசா வடக்கின் முதலாவது கல்வி அமைச்சராகவும், மருத்துவரும், மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியும், முன்னாள் மாவட்ட பொது வைத்தியசாலையின் அத்தியட்சகருமான மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் வடக்கின் முதலாவது சுகாதார அமைச்சராகவும், சூழலியலாளரும், உயிரியல் விஞ்ஞான ஆசிரியருமான பொன்னுத்துரை ஐங்கரநேசன்; வடக்கின் முதலாவது
விவசாய அமைச்சராகவும், பிரபல சட்டவாளரும், சமூக சேவகருமான பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் வடக்கின் முதலாவது மீன்பிடி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் வடக்கில் வாழ்ந்த அனைத்து தரப்பினரும் புதிய தமிழர் அரசின்மீது நம்பிக்கை வைத்தனர். கொடியபோரின் றணங்களை சுமந்த உறவுகள் தங்களுக்கு ஆறுதல் கிடைக்குமென நம்பினர். தமக்கான அரசொன்று நிறுவப்பட்டதாக இறுமாப்பு கொண்டனர். தேர்தல் முடிவுகள் வெளிவந்து சிலநாட்களில் மக்களின் நம்பிக்கையில் முதலாவது இடி விழுந்தது. அதுதான் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் சத்தியப்பிரமாணத்தை த.தே.கூட்டமைப்பின்; தலைவரின் முன்னிலையில் செய்யமாட்டார்கள் என்ற செய்தி. தனது சகோதரனுக்கு (தற்போதைய கல்வி அமைச்சர்) அமைச்சுப்பதவி வழங்கவேண்டுமென்று அடம்பிடித்த அப்போதைய த.தே.கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ் முதலில் போர்கொடி தூக்கியது. அவரது கட்சி சார்ந்த அனைத்து உறுப்பினர்களும் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளாது புறக்கணித்தனர்.
அதனை தொடர்ந்து ரெலோ அமைப்பின் ஒருசில உறுப்பினர்களும் அதே பாணியில் நிகழ்வை
புறக்கணித்தனர். இந்த நிலையில் சத்தியப்பிரமாண நிகழ்வில் உரையாற்றிய (எழுதிவாசித்த) முதலமைச்சர் விக்னேஸ்வரன் கட்சியொன்றின் தலைவர் தன்னிடம் தனது சகோதரருக்கு அமைச்சர் பதவி வழங்குமாறு கோரியதாகவும் அதைதான் நிராகரித்ததாகவும் பல்லை இழித்துக்கொண்டு தன்னிடம் வருபவர்கள் தொடர்பில் தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென நையாண்டியாக பேசியிருந்தார். கடைசியில் தமக்கு விருப்பமான இடங்களில் இவர்கள் சத்தியப்பிரமாணம் செய்தமையும் ஈழத்தமிழினத்தின் இரத்தக்கறை படிந்த, தனிநாட்டுக்காக களமாடிய வீரமறவர்களை சர்வதேச சதியால் தோற்கடித்து அடிமைசாசனம் எழுதப்பட்ட புனிதப்பிரதேசமான முள்ளிவாய்க்காலில் “சிறிலங்கா அரசின் அரசியலமைப்பை பரிபூரணமாக
ஏற்றுக்கொண்டு நாட்டை பிளவுபடுத்தாது ஒருமித்த சிறிலங்காவிற்கு விசுவாசமாக இருப்பேன்” என்று சத்தியப்பிரமாணம் செய்தவர்களும் உண்டு.

இந்த நிலையில் மாகாண சபையின் பிரதானி ஒருபடி மேலே சென்று இரத்தக்கறைபடிந்த இராசபக்சவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கைலாகும் கொடுத்தார். இதன்போது முதலமைச்சரின் சிங்கள சம்மந்திகளும், சிங்கள மருமக்களும் உடனிருந்தமை யாவரும் அறிந்த உண்மை. (சிங்களத்துடன் கைகோர்த்து தனது இராஜதந்திர நகர்வை ஆரம்பித்துள்ளதாக அப்போது முதலமைச்சர் கூறியது ஞாபகம் இருக்கும்). இவ்வாறாக சிறியஅளவிலான சலசலப்புகள் மத்தியில் ஒருவாறாக மாகாண சபை இயங்கத்தொடங்கியது. புதிதாக அமைக்கப்பட்ட முதலாவது வடக்கின் மாகாண சபை என்பதாலும், மாகாண சபையை கொண்டு நடாத்துவதில் முன்னனுபவம் அற்றவர்களாக இருந்தமையினாலும், பெரும்பாலான அதிகாரங்கள் சட்டமாக இருந்ததேயன்றி அவை நடைமுறைச்சட்டங்களாக (நியதிச்சட்டங்களாக) மாற்றப்படாது இருந்தமையினாலும், அடிப்படையான வளப்பற்றாக்குறைகள் இருந்தமையினாலும் மாகாண சபையின் வேகம் ஆரம்பத்தில் சற்று மெதுவாகவே நகரதொடங்கியது. இதனை விட ஆரம்பத்தில் பிரதம செயலாளர் மாகாண சபையுடன் ஒத்துழையாமையும், இராணுவ பின்புலத்தைக்கொண்ட மாகாணத்தின் ஆளுனரின் அதீத தலையீடும் மாகாண சபையை கொண்டுசெல்வதில் பாரிய தடைக்கற்களாக விளங்கின.

எனினும் புதிய பிரதம செயலாளர் நியமிக்கப்பட்டதுடன் மாகாணத்தின் ஆளுனராக சிவில் அதிகாரியும் நியமிக்கப்பட்ட நிலையில் மாகாண சபையின் இயங்குநிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. அமைச்சர்கள்; தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்தார்கள். மக்களின் எதிர்பார்ப்பிற்கும் மாகாண சபையின் இயலுமைக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்பட்டபோதும் அமைச்சுக்கள் தங்களது பணிகளை செவ்வனே செய்தன. எனினும் “புதையல்தோண்ட பூதம் வெளிவந்த கதையாக”; நான்கு அமைச்சர்கள் மீதான அதிகாரதுஸ்பிரயோக குற்றச்சாட்டுகளும் அதன்மீதான விசாரணையும் கிளம்பியது. முதலில் ஆளும்கட்சியைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் ஒருவரால் குறிப்பிட்டவொரு மாகாண அமைச்சருக்கு எதிராகவே அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் முறைப்பாடுகள் முதலமைச்சரின் கவனத்திற்கு (இரகசியமானமுறையில்) கொண்டுவரப்பட்டது. துஸ்பிரயோகம் தொடர்பில்
சில ஆதாரங்களையும் முறைப்பாட்டாளரான மா.ச. உறுப்பினர் முதலமைச்சரிடம் சமர்ப்பித்திருந்தார்.

எனினும் குறிப்பிட்ட முறைப்பாடு தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைளும் முதலமைச்சரால்
நீண்டகாலமாக முன்னெடுக்கப்படாமையினால் முதலமைச்சர்மீது நம்பிக்கையிழந்த குறிப்பிட்ட
முறைப்பாட்டாளரான மா.ச.உறுப்பினர் மாகாண சபை அமர்வொன்றில் பகிரங்கமாக தனது
முறைப்பாட்டை வெளிப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கத்தவறியமை பற்றி தனது ஆதங்கத்தை
தெரிவித்தார்.

குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் முதலமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவர்மீதான குற்றச்சாட்டை உரியமுறையில் விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்காத முதல்வர் சபை நடைபெற்ற மறுநாளே பொது நிகழ்வொன்றில் உரையாற்றியபோது குற்றம்சாட்டப்பட்ட அமைச்சரின் பெயரைக்குறிப்பிட்டு “பனங்காட்டு நரி சலசலப்புகளுக்கு அஞ்சாது” என்று ஏளனமாக தெரிவித்து நீதிநெறிமுறையிலிருந்து தவறினார். நாட்கள் உருண்டோடின. முறைப்பாட்டாளரும் விட்டபாடில்லை. இறுதியில் நீதியரசர் விக்னேஸ்வரன் உறுதிமொழியொன்றை வழங்கினார். அதாவது நான்கு அமைச்சர்களைப்பற்றியும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அனைவரையும் விசாரிக்க வேண்டும் என்று. ஒருவர் மீதான அழுத்தத்தின் தாக்கத்தை ஐதாக்க (Dilution) முதல்வர் போட்ட திட்டம் அது என பின்நாளில் தெரியவந்தது. ஓய்வுபெற்ற இலங்கை நிர்வாக சேவையைச்சேர்ந்த ஒருவரின் தலைமையிலான விசாரணைக்குழுவொன்றை தானே நியமித்தார். அதன் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற நீதியரசர், சட்டவாளர்களையும் தானே நியமித்தார். இதற்கான செலவுகளை மேற்கொள்வதற்கான நிதியை பெறுவதற்கு மட்டும் சபையின் ஒப்புதலைக் கேட்டார்.

விசாரணைக்குழு நியமிக்கப்பட்ட நிலையில் குறிப்பிட்டவொரு அமைச்சரைத்தவிர ஏனையவர்களுக்கு எதிராக எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் கிடைக்கப்பெறவில்லை. இந்த நிலையில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும்; அலுவலகமொன்றை பிரதம செயலாளரின் பணிமனையில் திறந்தார். எனினும் எதிர்பார்த்தவாறு முறைப்பாடுகள் கிடைக்கவில்லை. இறுதியில் பத்திரிகையில் விளம்பரம் ஒன்றை அறிவித்தார் முதலமைச்சர். அதாவது அமைச்சர்கள் மீது ஏதாவது குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்க விரும்பினால் குறிப்பிட்ட பணிமனையில் சமர்ப்பிக்கலாமென்று. ஆனாலும் அவர் எதிர்பார்த்தவர்கள் தொடர்பில்
குற்றச்சாட்டுக்கள் கிடைக்காமையினால் ஏமாற்றமடைந்த முதல்வர் முறைப்பாடுகளை ஏற்கும்
முடிவுத்திகதிகதி மேலும் இரண்டுவாரங்கள் நீடிக்கச்செய்தார்.

(பொதுவாக அரசாங்க தனியார் நிறுவனங்களுக்கு ஆட்களை வேலைக்கு ஆட்சேர்ப்பு செய்யும்போது தகுதியானவர்கள் விண்ணப்பிக்காதவிடத்து இவ்வாறான நடைமுறைகள் நடைபெறுவதுண்டு) கடைசியில் முடிவுத்திகதிக்கு முதன்நாள் அவசரஅவசரமாக முதலமைச்சருக்கு நெருக்கமான சில மாகாண சபை உறுப்பினர்களால் பொய்யான குற்றச்சாட்டுக்கள் புனையப்பட்டு விசாரணை பணிமனையில் கையளிக்கப்பட்டன. இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் பெரும்பாலான முறைப்பாடுகள் ஆளும் த.தே.கூட்டமைப்பின் சகமாகாண சபை உறுப்பினர்களாலேயே சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இதுதொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர்; ஊடகசந்திப்பொன்றில் இவ்வாறு கூறியிருந்தார்.

அதாவது, பொதுமக்களால் எந்தவிதமான முறைப்பாடும் எனது அமைச்சுக்கு எதிராக
கையளிக்கப்படவில்லையென்றும் மா.சபை உறுப்பினர் ஒருவரே முறைப்பாட்டை கையளித்தாகவும். இவ்வாறாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டது. சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் அதிகாரிகளை விசாரணை செய்தது. அமைச்சின் அலுவலகங்களில் உள்ள ஆவணங்களை பரிசோதித்தது. முறைப்பாடு கொடுத்த பொதுமக்களையும் விசாரணை செய்தது. ஈற்றில் குற்றம்சுமத்தப்பட்ட 04 அமைச்சர்களையும் யாழ்ப்பாணம் நூலகத்தில் அமைக்கப்பட்ட விசேட விசாரணை மன்றிற்கு அழைத்து விசாரணை செய்தது. இந்த விசாரணையின்போது முறைப்பாட்டாளர்களையும்; அழைத்தது. இந்த விசாரணைகளுக்கு அமைச்சர்கள் தங்களது பூரணமான ஒத்துழைப்பை வழங்கியதாக பின்னர் வெளியான விசாரணைக்குழுவின் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் விசாரணைக்கு முறைப்பாடு கொடுத்த சிலமாகாண சபை
உறுப்பினர்கள் ஆஜராகவில்லை என்பது பின்னர் தெரியவந்தது.

விசாரணை முடிந்தது. விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் ஆணைக்குழுவால் கையளிக்கப்பட்டது. எனினும் முதலமைச்சர் மௌனமாக இருந்தார். அறிக்கை தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் அவர் வெளியிடவில்லை. மீண்டும் சபையில் உறுப்பினர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு கோரப்பட்டது. அறிக்கையை வெளியிடாமல் முதலமைச்சர் மௌனம் காத்தமைக்கான காரணம் பின்னர் வெளியானது. அதாவது முதலமைச்சருக்கு நெருக்கமான அமைச்சர்மீதான குற்றச்சாட்டுக்கள் மட்டுமே நிருபிக்கப்பட்டுள்ளதாகவும் அவரை பதவியில் இருந்து விலக்குவதற்கு விசாரணைக்குழு பரிந்துரைசெய்ததுமே காரணமாகும்.

இதனால் ஏமாற்றமடைந்தார் முதல்வர் விக்கி. தான் எதிர்பார்த்தவர்கள் மீதான (புனையப்பட்ட)
குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்படாமையும் தனக்கு நெருக்கமானவரை பதவியில் இருந்து நீக்குமாறு பரிந்துரைத்தமையும் முதல்வரை மேலும் குழப்பத்திற்கு உள்ளாக்கியிருந்தது. செய்வதறியாது நிலைதடுமாறிய முதல்வர் குத்துக்கரணம் அடித்தார். ஏனைய அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்படாவிடினும் ஒட்டுமொத்தமாக நான்கு அமைச்சர்களையும் பதவிநீக்கவேண்டுமென்று சபையில் அறிவித்தார். அத்துடன் அமைச்சர்கள் மீது மீண்டுமொரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்படல்வேண்டும். அதுவரை அமைச்சர்கள் கட்டாய விடுப்பில்; வீட்டுக்கு செல்லவேண்டுமென்றார்.

இவரது சட்டத்திற்கு முரணான தீர்ப்பு நீதியரசர் மீதிருந்த நன்மதிப்பை கேள்விக்குறியாக்கியது. இந்த நிலையில் முதல்வர்மீது நம்பிக்கையிழந்த பெரும்பான்மையான மாகாண சபை உறுப்பினர்கள் முதல்வரின் முடிவை ஏற்றுக்கொள்ளாது சபை அமர்வுகளிலிருந்து வெளிநடப்பு செய்தனர். எனினும் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் சபையில் தொடர்ந்தும் அமர்ந்திருந்தனர். இவர்களில் சிலரே அமைச்சர் வாரியத்தை மாற்றவேண்டுமென்பதற்காக அமைச்சர்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை விசாரணைக்குழுவுக்கு சமர்ப்பித்தவர்கள். அமைச்சர்வாரியத்தை மாற்றுவதினூடாக தங்களிற்கு அமைச்சர் பதவிகிடைக்குமென்று கனவு கண்டவர்கள். (தற்போது அது நனவாகிவிட்டது).

முதல்வர்மீது நம்பிக்கை இழந்த உறுப்பினர்கள் முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் த.தே.கூட்டமைப்பின் தலைவரின் தலையீட்டையடுத்து அப்பிரேரணை பின்னர் பின்வாங்கப்பட்டது. எனினும் அமைச்சர் வாரியத்தை முற்றாக மாற்றியமைக்கவேண்டுமென்ற முதல்வரின் அழுங்குப்பிடிகாரணமாக தமிழ் அரசுக்கட்சித்தலைவரின் முடிவுக்கு கட்டுப்பட்டு நிரபராதிகளென விசாரணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார, கல்வி அமைச்சர்கள் தமது பதவியை தாமாக இராஜினாமா செய்தனர். விசாரணைக்குழவின் பரிந்துரைக்கமைய
முதல்வருக்கு நெருக்கமானவரும் தனது பதவியை இராஜினாமா செய்தார். ஒருவர் மட்டும் முரண்டுபிடித்து இறுதியில் இராஜினாமா செய்தார். தற்போது முதலமைச்சருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கொன்றையும் தொடுத்துள்ளார். இந்த நிலையில் தமிழ் அரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்காலத்தில் அமையவுள்ள அமைச்சர்வாரியத்தில் தாங்கள் அங்கம் வகிக்கபோவதில்லையென்றும் ஆனாலும் சபையின் நடவடிக்கைகளை குழப்பாது பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அறிவித்தனர். அதன்படி அறுதிப்பெரும்பான்மையை இழந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான சிறுபான்மை மாகாண சபை கடந்த 08 மாதங்களாக எந்தவிதமான இடையூறகளுமின்றி நடைபெற்றுவருகின்றது.

தவறுசெய்தோர் யாராக இருந்தாலும் தண்டனைக்கு உட்பட்டே ஆகவேண்டும். இதில் அமைச்சர்கள் என்போர் விதிவிலக்கானவர்கள் அல்ல. ஆனாலும் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உண்மையான நோக்கம் அதுவாக இருந்திருந்தால் இதுபற்றி கேள்விகேட்க யாருக்கும் அருகதையில்லை. ஆனாலும் முதல்வரின் நோக்கம் உண்மையானதல்ல, நீதியின்பாலானதல்ல, நீதியான அரசாட்சி நடாத்தவேண்டுமென்பதற்கானதல்ல. விசாரணைக்குழு அறிக்கை வெளிவந்த பின்னர் அவர் முன்னுக்கு பின்னராக முரண்பாடாக நடந்துகொண்டமை இதற்கு சான்று. முதன்முதலில் குறிப்பிட்டவொரு அமைச்சருக்கு எதிராக முறைப்பாடொன்றை மாகாண சபை உறுப்பினர் முதல்வரிடம் ரகசியமாக கொடுத்தபோது அதுதொடர்பில் ஏன் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. நடவடிக்கை எடுக்காது மௌனமாக ஏன் இருந்தார்?. அதனைதொடர்ந்து சபை அமர்வில் இதுதொடர்பில் பகிரங்கமாக கேள்வி எழுப்பியபோது மௌனமாக இருந்தவர் அடுத்தநாள் நடைபெற்ற பொது நிகழ்வில்
பனங்காட்டு நரி சலசலப்புகளுக்கு அஞ்சாது என்று ஏன் நையாண்டி செய்தார். இதன்மூலம்
குற்றம்சாட்டப்பட்ட குறிப்பிட்ட மாகாண சபை உறுப்பினரை விசாரணை செய்யாமல் நையாண்டி
செய்ததன்மூலம் அவருக்கு சார்பாக இருந்தமை வெளிப்படை.

குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை பாதுகாக்க குற்றமிழைக்காத ஏனைய மூன்று அமைச்சர்களையும்
விசாரிக்கவேண்டுமென ஏன் கூறினார். அவ்வாறு விசாரிக்க சுயாதீன விசாரணைக்குழுவை
நியமித்தபோதும் ஏனைய அமைச்சர்கள்மீதான முறைப்பாடுகள் ஏன் கிடைக்கப்பெறவில்லை?
அதனால்தானே பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார். அதனாலும் பலன்கிடைக்காமையினால் காலநீடிப்புச் செய்தார்.

சரி விசாரணை நடைபெற்றது. விசாரணைக் குழு தனது அறிக்கையை முதலமைச்சரிடம் கையளித்தவுடன் அதுதொடர்பில் உடனடியாக ஏன் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அவரால் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவின் சிபார்சை ஏன் நடைமுறைப்படுத்த முயற்சிக்கவில்லை. மாறாக விசாரணைக்குழுவின் அறிக்கையில் நிரபராதிகளாக தீர்ப்பு வழங்கப்பட்ட ஏனைய மூன்று அமைச்சர்களையும் ஏன் மீளவிசாரிக்கவேண்டும். அதற்காக அவர்கள் கட்டாய விடுப்பில் வீடுசெல்லவேண்டுமென்று ஏன் கூறினார். தனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுமென்ற அச்சம் நீங்கியதும் மீண்டும் ஏன் நான்கு அமைச்சர்களும் பதவியை இராஜினாமா செய்யவேண்டுமென்ற அழுத்தத்தை கொடுத்தார். உண்மையில் வடக்கு மாகாண சபையில் நீதியான ஆட்சியை வழங்கவேண்டுமென்ற உண்மையான நோக்கம் இருந்திருந்தால் ஆறுமாதங்கள கடந்தும் பதவி
விலகிய முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக இன்றுவரை ஏன் புதிய விசாரணைக்குழுவை
நியமிக்கவில்லை. அதற்கான காரணம் இதுதான். புதிதாக விசாரணைக்குழு நியமிக்கப்படவேண்டுமென்றால் அது மாகாண தெரிவுக்குழுவாகவே இருக்கவேண்டுமென்பது பெரும்பான்மையான மாகாண சபை உறுப்பினர்களின்; பிந்திய நிலைப்பாடு. அவ்வாறு மாகாண தெரிவுக்குழு அமைக்கப்படுமிடத்து ஐந்து அமைச்சுக்களையும் விசாரிக்கவேண்டுமென்பது நியதி. அவ்வாறாயின் முதலமைச்சரின் அமைச்சும் விசாரணைக்கு உட்படும். இவை அனைத்துமே நீதியரசர் நீதிநெறியிலிருந்து விலகிச்சென்றுள்ளதை பறைசாற்றி நிற்கின்றதல்லவா. அப்படியாயின் ஏன் இவ்வாறு இவர் நடந்துகொண்டார் என்றால் பலகாரணங்கள் பலராலும் முன்வைக்கப்படுகின்றன.

சட்டத்துறையை தவிர வேறு எந்தவிதமான நிர்வாக, அரசியல், நிதியியல் நடைமுறைகளில் பரீட்சியமில்லாத முதல்வரால் வடக்கு மாகாண சபையை சரியான திசையில் கொண்டுசெல்ல முடியவில்லை. தலைமை அமைச்சர் என்ற வகையில் அமைச்சர்வாரியத்தையும் ஏனைய உறுப்பினர்களையும் சரியான பாதையில் வழிநடாத்துவதற்கு அவரால் முடியவில்லை. அத்துடன் வடக்கு மாகாணத்தில் வசிக்காத இவரால், போர்சூழ்நிலைகளில் வாழ்ந்து கஸ்ரங்களை அனுபவித்த சாதாரண மக்களின் அடிப்படையான பிரச்சனைகளை புரிந்துகொண்டு அதற்கான உடனடி தீர்வுகளையும் வழங்கமுடியவில்லை. தனது வாழ்க்கையில் பெரும்பாலான காலத்தை தென்சிறிலங்காவின்; மேல்தட்டு வர்க்கத்துடன் கழித்த முதல்வரால் மாகாணத்திற்கான சிறந்த தலைமைத்தவத்தை வழங்க முடியவில்லை. இதுவே படிப்படியாக இவரது தன்னம்பிக்கையை சிறிதுசிறிதாக சிதைக்க ஆரம்பித்தது. தன்னால் முடியாத விடயத்தை நியாயப்படுத்த அவர் கையில் எடுத்த ஆயுதம்தான் முரண் அரசியல். குறிப்பிட்டகாலம் பிரதம செயலாளரால் தடை ஏற்படுவதாக கூறினார். பின்னர் ஆளுனரால் தடை ஏற்படுவதாக கூறினார். கடைசியில் மத்திய அரசு எதனையும் செய்வதற்கு தன்னை அனுமதிப்பதில்லை என்று புலம்பத்தொடங்கினார்.
நடைமுறைச்சாத்தியமான விடயங்களை மக்களுக்கு செய்வதை தவிர்த்து அசாத்தியமான
கொள்கைரீதியிலான விடயங்களுக்கு முன்னுரிமைகொடுத்து கட்டுரைகள் எழுதி வாசிக்கத்தொடங்கினார். இன்றுவரை அதனை சிறப்பாக செய்துவருகின்றார்.

நடைபெற்று முடிந்த தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் கூட்டமைப்பை எதிர்ப்பதற்கு ஒருகுரல் தேவைப்பட்டது. அதை அவர்கள் கச்சிதமாக செய்துவருகின்றார்கள். அதனால்தான் தமிழ்த் தேசியத்தை தலைமைதாங்கும் மாற்றுத்தலைமையாக விக்னேஸ்வரனை விம்பப்படுத்த முனைந்தார்கள். 1987ல் மாகாண சபைமுறைமை அறிமுகப்படுத்தப்பட்டபோதே விடுதலைப்புலிகளால் நிராகரிக்கப்பட்ட ஆட்சிமுறை. அது 2013ல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட கூட்டமைப்பிற்கும் நன்கு தெரியும். அதன்சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட விக்னேஸ்வரனுக்கும் தெரியும். ஆதை தெரிந்துகொண்டுதான் அரசியலில் இறங்கினார்.

தான்வெற்றிபெற்றாலும் எதனையும் தமிழ் மக்களுக்கு செய்தவிடமுடியாதென்பது அவருக்கும் தெரியாமல் இருக்கவாய்ப்பில்லை. 1987ல் மாகாண சபைமுறைமைக்கு வழங்கப்பட்ட பல அதிகாரங்கள் பின்னர் மத்திய அரசால் மீளப்பெறப்பட்டு மிகக்குறைந்த அதிகாரத்துடனேயே 2013 தேர்தல் நடாத்தப்பட்டது. எனினும் அதனை சவாலாக ஏற்றுக்கொண்ட கூட்டமைப்பு அப்போதைய களச்சூழ்நிலையில் தேர்தலில் போட்டியிட்டதுடன் சிறிலங்கா அரசின்மீதான நம்பிக்கையீனத்தை சர்வதேசத்திற்கு பறைசாற்ற தமிழ் மக்களின் வாக்கு பலத்தை பயன்படுத்தியது. ஐந்தில் நான்கு பெரும்பான்மையுடன் அரியாசனம் ஏறிய வடக்கு மாகாண சபையை சாமானிய மக்கள் மாகாண அரசாகவே பார்த்தனர். தமக்கான தமிழ் அரசொன்று நிறுவப்பட்டதாக உணர்ந்தனர்.

நீண்டகால யுத்தத்தினால் பின்நோக்கிபோன தங்களின் வாழ்க்கையை கைதூக்கிவிடும் என்று நம்பினர். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் மாகாண சபையின் இயலுமைக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்பட்டது. அன்றாடம் மக்கள் தங்களின் தேவைகளை எடுத்துக்கொண்டு
மாகாண அமைச்சர்களிடமும், உறுப்பினர்களிடமும் சென்றனர். மக்களின் அனைத்த தேவைகளையும் பூர்த்திசெய்யாவிடினும் ஓரளவிற்கேனும் சாத்தியமானவற்றை செய்யவேண்டுமென்று அமைச்சர்கள் விரும்பினர். தலைமை அமைச்சர் தங்களை வழிப்படுத்தாமையினால் தாங்களாகவே மத்திய அரசோடும், புலம்பெயர் அமைப்புகளோடும், சர்வதேச நிதிவழங்கும் நிறுவனங்களோடும் தொடர்புகளை பேணி மக்களுக்கான அடிப்படை கட்டுமானங்களை பெறுவதற்காக முயற்சிகளை மேற்கொண்டனர். அதனால்
பலனும் கண்டனர்.குறிப்பாக போரிற்கு பின்னரான ஒரு தேசத்தின் அபிவிருத்திக்கு தேவைகள்
தொடர்பிலான தரவுகளும், அதற்காக முன்மொழியப்படும் திட்ட அறிக்கைளும் இன்றியமையாதது. இது சர்வதேச ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் பொறிமுறையாகும். இதனை முதலமைச்சரின் அமைச்சை தவிர ஏனைய நான்கு அமைச்சுக்களும் செய்தன. குறிப்பாக அமைச்சு பொறுப்பை ஏற்றுக்கொண்ட உடனேயே வடக்கின் கல்விசார் தேவைகள் பற்றிய ஒரு தேவைப்பகுப்பாய்வை மாகாண கல்வி அமைச்சு செய்தது. இதற்காக புலம்பெயர் துறைசார் நிபணர்களின் பங்களிப்பு பெறப்பட்டது. அத்துடன் இனங்காணப்பட்ட தேவைகளை பெற்றுக்கொள்ள மத்திய கல்வி அமைச்சுடனும் சந்திப்புக்களை அப்போதைய கல்வி அமைச்சர் மேற்கொண்டிருந்தார்.

வடக்கின் சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக நீண்டகால உபாயத்திட்டமொன்று வடக்கு சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டது. 17 துறைசார் உபகுழுக்களை நியமித்து தறைசார்
நிபுணர்களின் பங்களிப்புடன் பங்கேற்பு முறையிலான நவீன திட்டமிடலை மேற்கொண்டார் அப்போதைய சுகாதார அமைச்சர். திட்டத்தோடு நின்றுவிடாமல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வளங்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்த பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார். இதனால் கைமேல் பலனும் கிடைத்தது. நெதர்லாந்து அரசின் நியயுதவியிலான பாரிய சுகாதார அபிவிருத்தி திட்டம் வடக்கு மாகாணசபைக்கு கிடைத்தது. மீன்பிடி, விவசாய அமைச்சுக்களும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டன. வடக்கு மாகாணத்திற்கான 1000 கி.மீ காப்பற் வீதி திட்டம் (ஐறோட்) இதற்கு சிறந்த உதாரணமாகும்.

எனினும் இவ்வாறு தாங்களாகவே முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களை ஏனைய நான்கு
அமைச்சர்களும் செய்தபோது முதலமைச்சர் செய்வதறியாது அமைதியாக இருந்தார். இதற்கு சிறந்த உதாரணம் முதலமைச்சரின் அமைச்சின் கீழிருந்த புனர்வாழ்வு, பெண்கள் விவகார திணைக்களங்கள். வெறும் கடிதலைப்பிலும், பெயர்ப்பலகையிலும் இயங்கிய இந்த இரண்டு திணைக்களங்களின் முக்கியத்துவத்தைக் கூட முதலமைச்சரால் பரிந்துகொள்ளமுடியாதது துரதிஸ்ரவசமானது. 30 வருட உள்நாட்டுப்போரில் பாதிக்கப்பட்ட ஒரு தேசத்தின் உடனடி நிவாரண, புனர்வாழ்வு பணிகளை முன்னெடுக்க மிகவும் அவசியமான பிரிவுகளான புனர்வாழ்வு திணைக்களம், பெண்கள் விவகாரத் திணைக்களம் என்பனபற்றி முதலமைச்சர் அலட்டிக்கொள்ளவே இல்லை. போரினால் கணவனை இழந்த பெண்கள், புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளுக்கான பொருளாதார நலத்திட்டங்கள் எதனையும்
முதலமைச்சரின் அமைச்சு செய்யவில்லை. இவர் உண்மையாக மக்கள் மீது அக்கறையுடையவராக இருந்திருந்தால் ஐக்கியநாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் நிதியுதவியிலான பாரிய அபிவிருத்தி திட்டத்தை தனது நெருங்கிய உறவினரை திட்டத்திற்கு பொறுப்பாக நியமிக்கவேண்டுமென்ற நிபந்தனையை முன்வைத்ததால் இழந்திருக்க மாட்டார். இலங்கையின் சதந்திரத்திற்கு பின்னர் முதன்முறையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பாரதப்பிரதமரிடம் வடக்கு மாகாண சபை சார்பாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான எந்தவிதமான வாழ்வாதார, பொருளாதார நலத்திட்டங்களையும் முன்வைக்காது பாலியல் குற்றச்சாட்டில் கைதாகி தமிழ்நாட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பாலியல் சாமி பிறேமானந்தாவின் கைக்கூலிகளை விடுவிக்கோரி கடிதம் கொடுத்திருப்பாரா? அதுவும்
வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ கடிதத்தலைப்பில் கொடுத்ததன்மூலம் அதற்கான பெறுமதியை இழிவுபடுத்தினார்.

எனினும் புனர்வாழ்வு, பெண்கள் விவகாரத் திணைக்களங்கள் சுகாதார அமைச்சின்கீழ் கொண்டுவரப்பட்டபின்னர் சுகாதார அமைச்சர் மருத்துவர் சத்தியலிங்கத்தின் வழிகாட்டலின்கீழ் மாகாணத்திற்கான மீள்குடியேற்றக்கொள்கை தயாரிக்கப்பட்டது, பெண்கள் விவகாரத்திணைக்களத்தினால் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்டன, போரினால் காயமடைந்த சிறப்புத் தேவையுடையோரிற்கான மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன, சுயமாக நடமாடமுடியாதவர்களுக்கான சிறப்பு வைத்திய பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. அவர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட மலசலகூடங்கள் அமைப்பதற்கான நிதியுதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. சதா எதிர்ப்பு அரசியலை நடாத்தி காலத்தை விணடித்து அறிக்கைகளை எழுதிவாசித்து காலத்தை கடத்திய முதலமைச்சருக்கு மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, அவர்களின் தேவைகளை முன்னுரிமைப்படுத்தி
இருக்கும் அதிகாரங்களையும், மட்டுப்படுத்தப்பட்ட வளங்களையும் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட
மக்களுக்கான உடனடி தேவைகளை வினைத்திறனுடன் செய்த நான்கு அமைச்சர்களுடன் ஈடுகொடுக்க முடியாது போக அவர்கள்மீது கொண்டிருந்த காள்ப்புணர்ச்சி அதிகாரதுஸ்பிரயோகத்திற்கு எதிரான விசாரணை களம் அமைத்துக்கொடுத்தது அவர்களை பழிவாங்குவதற்கு.

புராண இதிகாச உதாரணங்களையும், எதிர்ப்பு அரசியலையும் மட்டுமே நம்பி நடைமுறைக்கு உதவாத வெட்டிஅறிக்கைகளை இரவோடுஇரவாக எழுதி அதை கூட்டங்களிலும் பொது நிகழ்வுகளிலும் வாசிக்கும் பழக்கத்தையுடைய முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் நேரடியாக கேட்கப்படும் ஊடகங்களின் கேள்விகளுக்கு தடுமாற்றத்துடன் முன்னுக்கு பின்முரணான பதில்களை வழங்குவது வழமையானது. இதைத்தான் அமைச்சர்வாரியம் மீதான ஒழுக்காற்று விசாரணை தொடர்பிலும் கையாண்டார். இரகசியமானமுறையில் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை முதலமைச்சர் அலுவலகத்தால் சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கு நேரடியாக கையளிக்கப்பட்டது. எனினும் அறிக்கை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படமுன்னதாகவே பிராந்திய பத்திரிகையொன்றில் செய்தி கசியவே தனக்கு பிடிக்காத அந்தநாட்களில் வெளிநாட்டில் தங்கியிருந்த அமைச்சர் ஒருவருடாகவே செய்தி கசிந்ததாக
ஊடகங்களுக்கு தெரிவித்தார். பின்னர் அதை தான் சொல்லவில்லை என்று மறுத்தார். விசாரணை முடிந்து அறிக்கை வெளியிடப்பட்டதும் குறிப்பிட்டவொரு அமைச்சின் ஆவணகாப்பகத்திலிருந்து முக்கிய ஆவணங்கள் களவாடப்பட்டதாக கூறினார். எவ்வாறு உங்களுக்கு தெரியவந்தது என்று ஊடகங்கள் கேட்டபோது யாரோ சொன்னார்கள். எனக்கு ஞாபகம் இல்லை என்றார். அதுமட்டுமல்ல மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய துறைசார்ந்த மத்திய அமைச்சர்களுடன் மாகாண அமைச்சர்கள் கலந்தரையாடியதை மத்திய அரசுடன் தொடர்புகளை பேணுவதாகவும் இதனால் தன்னை தூசிப்பதற்கு அவர்கள் தயங்குவதில்லையென்றும் மாகாண சபைஅமர்வில் பகிரங்கமாக கூறினார்.

சுயபுத்தியின்றி சொல்புத்தியில் மற்றவர்களால் இயக்கப்பட்ட விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் அவர் மாகாணத்தின் தலைமை பதவிக்கான பொறுப்புகளிலிருந்து விலகிச்செல்ல ஆரம்பித்தபோதே கூட்டமைப்பின் தலைமை அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். அவ்வாறு செய்திருந்தால் எந்தக்குற்றமும் இழைக்காத அப்பாவி அமைச்சர்கள் மூவரும் பலிக்கடாக்களாக ஆக்கப்பட்டிருக்கமாட்டார்கள். இதுவே வடக்கு மாகாண சபையின் வினைத்திறனற்ற நடவடிக்கைகளுக்கு காரணமாகும். பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் உருவாக்கப்பட்ட வடக்கு மாகாண சபை மக்கள் எதிர்பார்த்த பலவிடயங்களை செய்யாது தனது பதவிக்காலத்தை எதிர்வரும் ஐப்பசிமாதத்துடன் நிறைவுசெய்யப்போகின்றது. இருக்கும் சொற்ப அதிகாரத்தையும் கிடைத்த வளங்களையும் பயன்படுத்தி போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யவேண்டிய பலவற்றை செய்யாது வெறும் வெட்டிப்பேச்சுகளாலும், வெறும் காகிதங்களில் நிiவேற்றப்பட்ட தீர்மானங்களைமே மக்களுக்கு விட்டுச்செல்லப்போகிறது இந்த மாகாண சபை. இதற்கு தலைமை அமைச்சராக பொறுப்பை வகித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் மட்டுமல்ல அவரை தெற்கிலிருந்து இறக்குமதி செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் பொறுப்பேற்கவேண்டும்.

http://www.newsuthanthiran.com/2018/03/28/அமைச்சர்கள்-மீதான-விசாரண/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.