Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்ணை தொடாத மழைத்துளி!

Featured Replies

 
 
 
மண்ணை தொடாத மழைத்துளி!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
E_1522390048.jpeg
 
 

எல்லாம் முடிந்து விட்டது; கால்கள் துணியாய் துவள, அந்த பருத்த மரத்தின் மீது சாய்ந்து நின்றாள், மீனாட்சி. அனிச்சையாக விழிகள் நீரை சிந்தின. துடைக்க வேண்டும் என்ற உணர்வு கூட இல்லை. சில பார்மாலிட்டிகளை முடிக்க, வக்கீலுடன் அப்பா போய் விட, தனியே நின்றாள், மீனாட்சி.
'மிச்சமிருக்கிற வாழ்க்கை மொத்தமும் தனியாத்தான் நிற்கணுமா...' உள்ளே ஏதோ புரண்டு வந்தது. எதிர்பார்த்த முடிவு தான் என்றாலும், ஆற்றமாட்டாமல் அடிவயிறு குழைந்தது.
ஆசை ஆசையாய், தொங்கத் தொங்க தாலிச் சரடுடன், வலது காலை எடுத்து வைத்து, அந்த வீட்டினுள் நுழைந்தது, நேற்று போல் இருந்தது.
மீனாட்சி - சுந்தரேசன்! இந்த பெயர் பொருத்தத்திற்கே, ஊரும், உறவும் பேசிப் பேசி மாய்ந்தது. திருமணமான முதல் இரண்டு ஆண்டுகளும், மீனாட்சிக்கு வாழ்க்கை, திகட்டத் தான் செய்தது. மூன்றாம் ஆண்டு துவக்கத்தில், ஊரும், உறவும் குழந்தையின்மையை பற்றி லேசுபாசாய் பேச ஆரம்பித்தது. கோவிலை சுற்றினாள், விரதமிருந்தாள், பூஜைகள் செய்தாள், மீனாட்சி. பின், மருத்துவமனை சென்றாள். அது, இது என்று இழுத்தடித்து கடைசியாக, 'தாயாகவே தகுதியில்லை' என்று சம்மட்டியை இறக்கியது.


ஒன்றுக்கு இரண்டாய் மருத்துவர்களை பார்த்தும், சொல்லி வைத்தாற் போல, எல்லாரும் ஒரே பதிலைத் தர, மீனாட்சியும், அவள் பெற்றோரும் இடிந்து போயினர்.
அப்போது தான், சுந்தரேசனிடம் லேசாய் விலகல் தெரிந்தது. அவனுக்கு குழந்தை ஆசையை விட, உலகத்தின் முன், தன்னை அப்பாவாக காட்டிக்கொள்ளும் ஆசைதான் ஆட்டி படைத்தது. உலகம் என்னவோ, இவனுக்கு குழந்தையில்லை என்பதையே தலை போகிற பிரச்னையாக எடுத்து, இவனையே சுட்டிக் காட்டி பேசுவது போல் எண்ணி எண்ணி, குமைந்தான்.
உல்லாசமும், கும்மாளமும் குமிழியிட்ட வீட்டில், அமைதியும், துக்கமும் அதிகமாயிற்று.
இந்நிலையில் தான், மீனாட்சியின் உறவுக்காரர் வீட்டு திருமணத்திற்காக, அவளது ஊருக்கு வந்த போது, சில நாட்கள் இங்கேயே இருக்கட்டும் என்று, அவர்கள் வீட்டில் விட்டு வந்து விட்டான், சுந்தரேசன்.

 


சுந்தரேசனுக்கு அம்மா மட்டும் தான்; அவரும் கிராமத்தில் தோட்டம், துரவு என்று இருந்தார். தன் அம்மாவை தேடி ஓடினான்; மடியில் விழுந்து அழுது புரண்டான்.
தாய் மனசு பதறியது; தன் வம்சம் இப்படியே நின்று விடுமோ என்று தவித்தது. வாரிசு வளர வேண்டும் என்ற எண்ணத்தில், அது தந்த பதற்றத்தில், மகனிடம், இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளும்படி யோசனையையும் சொன்னது. ஏற்கனவே, குழம்பிக் கிடந்தவன், அம்மா சொன்னது சரியே என்று எண்ண ஆரம்பித்தான்.
தாராள மனதுடையவன் போல, மீனாட்சியிடம், 'தான் இரண்டாம் திருமணம் செய்து கொண்டாலும், நீ இங்கேயே இருக்கலாம்...' என்று, தன் எண்ணத்தை வெளியிட்டான்.
ஊரிலிருந்து வந்த மாமியாரும் ஒத்து ஊதவே, வெறுத்து விட்டாள், மீனாட்சி.
கோர்ட் படிக்கட்டிலிருந்து இறங்கி, அப்பா தன்னை நோக்கி வருவதை கண்டதும், வேகமாக, கைப்பையில் இருந்து, தண்ணீர் பாட்டிலை எடுத்து, முகத்தை கழுவி, புடவை தலைப்பால் துடைத்தாள்.
அப்பா அருகில் வந்ததும், ''முடிஞ்சுதாப்பா, கிளம்பலாமா...'' என்றாள்.
''கிளம்பலாம்மா,'' என்றார் பெருமூச்சுடன்!


இருவரும் இரண்டடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டார்கள், ''ஒரு நிமிஷம்,'' என்ற குரல் தடுத்தது.
விகாரமான சிரிப்புடன் அங்கு வந்த சுந்தரேசன், ''வர்ற வெள்ளிக்கிழமை எனக்கு கல்யாணம்... என்ன திகைச்சு போயி பாக்கறீங்க... என்னடா இது, இப்போதுதானே தீர்ப்பே வந்தது, அதுக்குள்ளாற இவன் கல்யாண பத்திரிகையோடு வந்து நிக்கிறானேன்னு ஆச்சரியமா... அது ஒண்ணுமில்ல, எப்படியும், எனக்கு சாதகமாத்தான் தீர்ப்பு வரும்ன்னு தெரியும். எதுக்கு நேரத்தை, 'வேஸ்ட்' பண்ணிகிட்டு... அதான், சட்டுபுட்டுன்னு பொண்ணு பாத்து, நிச்சயம் பண்ணி, பத்திரிகையும் பிரின்ட் பண்ணிட்டேன். கண்டிப்பா வந்துடணும் மீனு குட்டி... மாமா நீங்களும் தான்,'' என்று பத்திரிகையை நீட்டினான்.
அவனை வெறித்துப் பார்த்தாள், மீனாட்சி.


''மீனு குட்டி... பொண்ணு யாருன்னு கேட்க மாட்டியா... சரி... நானே சொல்றேன்... அவ பேரு சாரதா; நான், செல்லமா சாரான்னு கூப்பிடுவேன். எங்க ஆபிஸ் இருக்கில்ல, அதே பில்டிங்ல, 3வது மாடியில இருக்கா... பெரிய ஆபீசர்... என்னை பத்தி எல்லாமும் சொன்னேன்; மனப்பூர்வமா ஏத்துக்கிட்டா... ஜாதகமும் பொருந்திடுச்சு. எனக்கு ஜாதகத்துல நம்பிக்கை இல்லன்னு வச்சுக்கோ... நமக்கு பத்து பொருத்தம் இருக்குன்னு சொன்னாங்க... கடைசியில கோர்ட் வாசல்ல நிற்கிறோம்... சாராவுக்கு என் மேல ஒரே லவ்... என் மேல உயிரையே வச்சிருக்கா,'' அவன் பேசப் பேச, கடுப்பாகி போன அப்பா, மீனாட்சியின் கையை பற்றி இழுக்காத குறையாக வேகமாக நகர்ந்தார்.
''மாமா... மீனா... இன்விடேஷனை வாங்காமலே போறீங்களே...'' என்ற குரலும், சிரிப்பும் அவர்களை துரத்தியது.
ஓர் ஆண்டு ஓடி விட்டது; அப்பாவின் நண்பருடைய பதிப்பகத்தில் வேலைக்கு சேர்ந்தாள், மீனாட்சி. புதிய இடம், மனிதர்கள், சூழல் மற்றும் புத்தகங்கள் என்று வாழ்க்கை மெல்ல, தன் போக்கிற்கு மாறியது.
ஒருநாள், திடீரென்று போன் செய்த சுந்தரேசன், 'மீனு குட்டி... இன்னும் ஏழே மாசம், உன் புருஷன் அப்பாவாகப் போறான்...' என்றான். மறுநாளே, அந்த, மொபைல் சிம்மை துாக்கியெறிந்தாள், மீனாட்சி.


'எப்படியெல்லாம் மாறி விட்டான்... இவளிடம் தான் குறை என்று தெரிந்ததுமே, மாதக் கணக்கில் வீட்டுக்கு வராமலேயே அழிச்சாட்டியம் செய்ததும், கொஞ்சம் கூட மனுஷ தன்மையின்றி, நீயும் இங்கேயே இருக்கலாம் என்றானே...' குபுக்கென கண்ணீர் வந்தது.
அன்று, மீனாட்சி - சுந்தரேசன் கல்யாண நாள் -
அவனிடமிருந்து போன் வந்ததுமே, வெட்கம் கெட்ட மனது, ஒரு துள்ளு துள்ளியது; கல்யாண நாளுக்குதான் வாழ்த்து தெரிவிக்கப் போகிறான் என்று!
என்ன மடத்தனம்... ரத்தாகிப் போன கல்யாணத்துக்கு, கல்யாண நாள் கொண்டாட்டம் ஒரு கேடா...
குழந்தை ஒன்றை தத்தெடுத்துக் கொள்ளலாமே என்றதும், 'எவனோ பெத்து போட்டதை நான் வளக்கணுமா... நான், ஒரு பிள்ளைக்கு தகப்பனாக கையாலாகாதவன்னு உலகத்துக்கு டமாரம் அடிக்கணுமாக்கும்...' என்று பிளிறியவன், அடுத்த மாதமே விவாகரத்து நோட்டிசை அனுப்பியும் விட்டான்.
'ச்சே... இதெல்லாம் யோசிச்சு என்ன பயன்... ஆனால், மனசிலிருந்து எதையுமே கழற்றி எறிய முடியவில்லையே...' என்று சிந்தித்து கொண்டே மெதுவாக வீட்டுப் படியேறினாள்.


'திக்'கென்றிருந்தது. சாவதானமாக சோபாவில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தான், சுந்தரேசன். கறுத்து, மிகவும் மெலிந்து போய், ஆளே அடையாளம் தெரியாமல் இருந்தான்.
ஒரே பார்வையில் இத்தனையையும் கிரகித்துக் கொண்டவள், உள்ளே போய் முகம், கை, கால் அலம்பி வந்து உட்கார்ந்தாள்.
''மீனு குட்டி... உனக்காகத்தான் காத்துட்டு இருக்கேன்.''
முகத்தை துடைத்தவளாய், 'என்ன விஷயம்...' என்பது போல் ஏறிட்டாள்.
''என்ன மீனு குட்டி... உன் புருஷன் வந்திருக்கேன்; வான்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா...''
''எனக்கு புருஷன்னு இப்போதைக்கு எவனும் இல்ல; எதிர்ல இருக்கிறது, யாரோ சாராங்கிறவங்களோட புருஷன்,'' என்றாள்.
''என் மீனு குட்டிக்கு கோபத்த பாருடா... நான், இப்போ சாராவோட புருஷனா வரல கண்ணு... உன் புருஷனாதான் வந்திருக்கேன்,'' என்றான் சிரித்துக் கொண்டே!
''இதென்ன புது டிராமா...'' என்றாள் சுள்ளென்று!
''டிராமா இல்ல மீனும்மா,'' என்றவனை இடைமறித்து, ''இங்க பாருங்க மிஸ்டர்... முதல்ல இப்படி மீனுன்னு பேசறத நிறுத்துங்க; நான், மீனாட்சி.''
அடிபட்டாற் போல் பார்த்தான்,
சுந்தரேசன். மறு நொடியே தோளை குலுக்கி, ''சாரி மீனாட்சி... ஏதோ பழைய பழக்கத்துல கூப்பிட்டுட்டேன்,'' என்றவன், ''நானே, ரொம்ப நொந்து போய் வந்துருக்கேன்; நீயும் என்னை நோகடிக்காதே...'' என்றான்.


அம்மா, காபியை மீனாட்சியிடம் கொடுத்தாள். ''மிஸ்டர் சுந்தரேசன்... என்ன விஷயம்ன்னு சொல்லிட்டு கிளம்பினா நல்லாயிருக்கும்... இல்ல, சொல்லாமலே கிளம்பினாலும் நல்லாத்தானிருக்கும்,'' என்றவள், காபியை குடிக்க ஆரம்பித்தாள்.
மீனாட்சியின் தாய், தனக்காக ஏதேனும் பேச மாட்டாளா என்ற எதிர்பார்ப்புடன், சுந்தரேசன் அவளைப் பார்க்க, அவளோ, காய வைத்த துணிகளை தீவிரமாக, மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.
தொண்டையை கனைத்து, ''மீனாட்சி... எனக்கு, நீ வேணும்; உன்னை கையோட கூட்டிட்டு போகதான் வந்திருக்கேன்...'' என்றான், சுந்தரேசன்.
இமை விலகாமல் அவனை உறுத்துப் பார்த்தாள், மீனாட்சி.
''வந்து... இப்போ சாரா என் கூட இல்ல; அவ, வீட்டை விட்டு போயிட்டா... ஆனா, அவதான் உன் அருமைய புரிய வச்சா... நீ, எனக்கு எல்லாத்தையும் பாத்து பாத்து செஞ்சே... அவ, 'பாதி வேலை நீதான் செய்யணும்'ன்னு சட்டம் பேசுறா... ஆனாலும், அவ உண்டானதும், தலையிலே வச்சு தாங்கினேன். ஆனா, அவ என்ன செய்தா தெரியுமா... அவ ஆபீசுல, அவளுக்கு புரமோஷன் குடுத்து, 'ஹாங்காங்' அனுப்புறாங்களாம்... அதுக்கு, 'பிரக்னென்ஸி' தடையாயிருக்கும்ன்னு என்கிட்டே கூட சொல்லாம கலைச்சுட்டு வந்துட்டா.
''கேட்டா... 'குழந்தைய எப்போ வேணும்ன்னாலும் பெத்துக்கலாம்; ஆனா, கேரியர்ல வாய்ப்பு ஒரு தடவை தான் வரும். இதையெல்லாம் உன்கிட்ட எதுக்கு சொல்லணும்... குழந்தை எப்போ பெத்துக்கணும்ன்னு நான்தான் தீர்மானிக்கணும். அம்மா ஆகிறத விட, நம்பர் ஒன் ஆபீசர் ஆகிறது தான் எனக்கு முக்கியம்'ன்னு அவ பேச, நான் பேச, கடைசியில தாலியை கழட்டி எறிஞ்சுட்டு போயிட்டா,'' என்றான், அழுகையை விழுங்கியபடி!
அவள் அமைதியாக அவனைப் பார்த்தாள்.
''என்னை மன்னிச்சு, தயவு பண்ணி ஏத்துக்கோ!''

 


இதேபோல் அவனிடம் தான் மன்றாடியது நினைவிலாடியது. என்னவோ தான் பிள்ளை பெற மாட்டேன் என்று மறுப்பது போல புரியாமல் பேத்தியவனிடம், இயற்கை வஞ்சித்த கொடுமையை எடுத்துச் சொல்லியும், 'வெளியே போ...' என்றானே...
''மீனா... என்னால தனியா இருக்க முடியலம்மா... அம்மாவுக்கும் வயசாயிருச்சு; வீடு, வீடாவே இல்ல. நீ வந்தால் தான் எல்லாமே சரியாகும்... என்னை மன்னிச்சு, என்னோட வா...'' என்றான்.
மெல்ல நகைத்த மீனாட்சி, ''மிஸ்டர் சுந்தரேசன்... நான், இப்பவும் பிள்ளை பெத்துக்க முடியாதே...'' என்று சொல்லி, உரக்க சிரித்தாள்.
''அதான் சாரி சொல்றேனே மீனா... மன்னிச்சுட்டு, கிளம்பி வா... உனக்கு வாழ்க்கை தர நானிருக்கேன்.''
ஏதோ சொல்ல வாயெடுத்தாள். அப்போது, வெள்ளிச் சலங்கை சத்தம் கேட்கவே, திரும்பிப் பார்த்தாள். பக்கத்து வீட்டு குழந்தை, தளர் நடையிட்டு வந்து மீனாவின் மடியில் ஏறியமர்ந்தாள்.
''மிஸ்டர் சுந்தரேசன்... இப்போ கூட உண்மையா நீங்க மனசு திருந்தி கூப்பிடலங்கிறது உங்க வார்த்தையிலயே தெரியுது. மந்திரம் சொல்லி சேத்து வச்ச உறவ, சட்டம் பேசி அறுத்து விட்டாச்சு. இப்ப, நான் எந்த உறவு நிலையிலே உங்க கூட வர்றது... வேலைக்காரியாகவா, சமையற்காரியாகவா, படுக்கையில தாசியாவா...'' என்றாள், சலனமற்று!
திகைப்புடன், அவளைப் பார்த்தான், சுந்தரேசன்.
அம்மா கூட திடுக்கிட்டு, நிமிர்ந்தாள்.

 


''நீங்க என்னை மனுஷியாவும் நடத்தல; மனைவியாவும் நடத்தல. எதை நம்பி உங்க கூட வாழ வரச் சொல்றீங்க... பசு போல இருந்த அந்த மீனாட்சி எப்பவோ செத்துட்டா... இந்த மீனாட்சி புதுசா பிறந்திருக்கிறவ; முதல்ல பெண்ணை மதிக்க கத்துக்குங்க... நீங்க போகலாம்,'' என்றாள்.
சுந்தரேசன் அவளையே பார்த்தான்; பின், தலை குனிந்தான்.
''ஒரு விஷயம்... இதோ இந்த குழந்தையோட அப்பாவை தான் கல்யாணம் செய்துக்க போறேன்... அடுத்த மாசம் வெளிநாட்டிலிருந்து அவர் வந்ததும், கல்யாணம். அவர், என்னை பிள்ளை பெத்துக்க முடியாதவள்ன்னு விவாகரத்து பண்ண மாட்டார்; தாயில்லாத இந்த குழந்தையையும், தாயாக முடியாத என்னையும், இந்த பந்தம் கட்டிப் போட்டுருக்கு. இன்விடேஷன் அனுப்பி வைக்கிறேன்... கண்டிப்பா வந்து வாழ்த்திட்டு, சாப்பிட்டுட்டு போங்க... இப்ப கிளம்புங்க,'' என்று, வாசலை காட்டினாள்.
மன வருத்தத்துடன் வாசலை நோக்கி சென்றான், சுந்தரேசன்.
அவன் போவதை பார்த்தபடி அமர்ந்திருந்தவளின் தலையை, மெதுவாய் வருடிய அம்மா, ''மீனா... நீ இப்போ சொன்னது மட்டும் உண்மையாயிட்டா... நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்,'' என்றாள்.
தாளமாட்டாதவளாய் தாய் மீது சரிந்து, அழ ஆரம்பித்தாள், மீனாட்சி!

http://www.dinamalar.com

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்துல துணையின்றி இருக்கும் ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ ஒரு துணை அவசியம் போல இருக்கு....இல்லையா....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.