Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

#தமிழ்தேசியம்: தேசியமா? தமிழ் தேசியமா? எது காலத்தின் கட்டாயம்?

Featured Replies

#தமிழ்தேசியம்: தேசியமா? தமிழ் தேசியமா? எது காலத்தின் கட்டாயம்?

 

(தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இந்த நிலையில், தமிழ் தேசியம் தொடர்பாக பல்வேறு ஆர்வலர்களின் கருத்துக்கள், இங்கே தொடராக வெளியிடப்படுகின்றன. இது, அந்தத் தொடரின் ஆறாவது பாகம். இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

தமிழ் தேசியம்படத்தின் காப்புரிமைSAJJAD HUSSAIN

அண்மைக் காலமாக "தமிழ் தேசியம்" என்ற சொல் தமிழக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் வெகுவாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ் தேசியம் என்பது தேசியத்திற்கு மாறானது என்று பொருள்படும் வகையில் திராவிடக் கட்சிகளும், ஜாதி அரசியல் செய்யும் கட்சிகளும் தினந்தோறும் பரப்பிவருகின்றனர். இவர்களோடு கைகோர்த்து சில பிரிவினைவாதிகளும், இடதுசாரி சித்தாந்தவாதிகளும் "தேசியம் - எதிர் - தமிழ் தேசியம்" என்ற விவாதத்தை தங்களது ஊடக நண்பர்களின் துணையோடு தினந்தோறும் தொலைகாட்சி விவாதங்களில் திணிக்க முயன்றுவருகின்றனர்.

முதலில் தமிழ்த் தேசியம் என்ற சித்தாந்தத்தை திணிக்கும் இவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் - தமிழ் மொழியை ஹிந்தி மொழியிலிருந்து காக்கவேண்டும் மற்றும் ஜாதி திணிப்பை ஊக்குவிக்கும் வலதுசாரி இயக்கங்களை அழிக்கவேண்டும் - என்றே அமைகின்றது. ஆனால், இந்த இரண்டு விளக்கங்களிலும் உள்ள முரண்பாட்டை அவர்கள் ஏனோ உணரவில்லை.

நிலப்பரப்பா? மக்கள் பரப்பா?

வடக்கே காஷ்மீர் தொடங்கி தெற்கே குமரி வரையிலும், கிழக்கே அருணாச்சல பிரதேசம் தொடங்கி மேற்கே குஜராத் வரையிலும், மற்றும் அந்தமான் - நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய துணைக் கண்டத்தில் தமிழ்த் தேசியம் என்ற சொல் தமிழ்நாடு என்ற ஒரு சிறு நிலப்பரப்பை குறிக்கிறதா? அல்லது தமிழ் என்ற மொழியை குறிக்கிறதா? என்ற தெளிவு இவர்களிடம் இல்லாமல் இருப்பது துரதிஷ்டவசமே.

தமிழ் தேசியம் என்பது நிலப்பரப்பை மட்டுமே குறிக்கும் என்றால், தமிழ் பேசும் தமிழர்கள் வாழும் கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மற்றும் டெல்லி உள்ளிட்ட வட இந்திய தமிழர்களை இவர்கள் தங்கள் தமிழ் தேசியக் குடிமக்களாக ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா? என்பது முதல் கேள்வி. தமிழ்நாடு என்ற மாநிலத்தின் எல்லையை மட்டுமே தங்கள் தமிழ் தேசத்தின் எல்லை என்று வரையறுத்து கொள்ளும் பட்சத்தில் மேற்குறிப்பிட்ட தமிழ் மக்களுக்கும் இவர்களுக்கும் இருக்கும் உறவு எத்தககைய உறவாக இருக்கவேண்டும் என்பதையும் இவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

ஆசீர்வாதம் ஆச்சாரிபடத்தின் காப்புரிமைFACEBOOK

தமிழ் தேசியம் என்பது நிலப்பரப்பை அல்லாது தமிழ் மொழி பேசும் மக்கள் அனைவரையும் கொண்ட இனத்தின் தேசம் என்பது உங்களது வாதமாக இருக்கும்பட்சத்தில், தமிழ்நாடு என்ற நிலப்பரப்பில் பல்வேறு நூறாண்டுகளையும் கடந்து வாழும், அதே சமயம் தமிழ் அல்லாத பிற மொழிகளாகிய கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, துளு, உருது, பிரெஞ்சு (புதுச்சேரியின் சில பகுதிகள் உள்ளடக்கிய) ஆகிய மொழிகளை பேசும் மக்களை உங்கள் தேசத்தின் குடிமக்களாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா? சரியான விளக்கத்தை தேடியபோது, அண்மையில் திரு. தொல். திருமாவளவன் அவர்களது கட்டுரையை படிக்க நேரிட்டது. தமிழ்த் தேசியம் என்பது தேசியத்திற்கு நேர் எதிரானது என்றும், அது ஜாதியத்தை ஊக்குவிப்பதும், ஹிந்தி மொழியை திணிப்பதும் ஆகிய இரண்டு கொள்கைகளுக்கு எதிரானது என்றும் பொருள் கொள்ளக்கூடிய வகையில் அவரது கட்டுரை அமைந்துள்ளது. இது அவரது தேசியம் குறித்த புரிதலின் மீது கேள்வியை எழுப்புகின்றது.

தமிழ் தேசியமாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

திருமாவளவன் பொதுத் தொகுதியில் போட்டியிடுவாரா?

தேசியம் என்பது ஜாதியை ஊக்குவிப்பது என்பது அவர் கூற்று. எனவே, ஜாதியை அறவே ஒழிக்கும் வகையில் தமிழ் தேசியம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறும் திரு. திருமாவளவன் தனது கட்சிக்கு கொடுத்துவரும் ஜாதி சாயத்தை துடைக்க முன்வருவாரா? எந்த ஜாதியற்ற சமுதாயம் குறித்து பேசுகிறாரோ அதே ஜாதி அரசியலைத் தான் அவர் கையில் எடுத்துள்ளார். அவரிடம் கேட்டால், 'ஒடுக்கப்பட்ட என் இனத்தை காப்பாற்றத் தான் ஜாதி அரசியலை கையில் எடுக்கிறேன்" என்று பதில் வரக்கூடும். நீங்களே உங்களை உங்களது ஜாதி சாயத்தில் இருந்து விலக்கி, பொதுவான ஜாதி அல்லாத ஒரு அரசியல் களத்தை உருவாக்க முடியாமலா போய் விட்டது?

ஒவ்வொரு தேர்தலிலும், தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்ட தனித் தொகுதிகளிலேயே போட்டியிடும் நீங்கள் எப்பொழுதாவது பொதுத் தொகுதி ஒன்றில் போட்டியிடலாம் என்று எண்ணியது உண்டா?

நீங்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடத் தவிர்ப்பதற்கான காரணம் தோல்வி பயமே. அதே சமயம், உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி தொடர்ந்து அனைத்து தொகுதிகளிலும் (தனித் தொகுதிகள் உட்பட) தனது வேட்பாளர்களை நிறுத்தி அதிகபட்சமாக பொதுத் தொகுதிகளில் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யவில்லையா?

ஜாதி அற்ற சமுதாயத்தை உருவாக்கவேண்டுமெனில், முதல் முயற்சிக்கு கை நீட்ட உங்களது கையும் முன் வரவேண்டும் என்பது திரு. திருமாவளவன் அவர்களுக்கு தெரியாமல் போய் இருக்க வாய்ப்பில்லை. தோல்வி பயத்தை விடுத்து, ஜாதி அரசியல் செய்யாமல், தனது "வாக்காளர்களின் துயர் துடைப்பேன்" என்ற ஒரே உறுதிமொழியோடு களமாடுங்கள். உங்களை ஜாதிப் பாகுபாடு இல்லாமல், அனைவரும் தழுவிக்கொள்ள முன்வருவர்.

தமிழ் தேசியமாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அக்கட்டுரையில். ஜாதியைப் புகுத்துவது வட இந்தியாவின் மதவாத சக்தி என்னும் பொருள்பட எழுதியுள்ளார். அவர் யாரை நோக்கி ஆட்காட்டி விரலை உயர்த்துகிறார் என்பது தெரியாமல் இல்லை. தேசியம் மற்றும் தேசியவாதம் குறித்து பேசுவது நாட்டிலேயே ஒரு பிரிவினர் தான் என்று அனைவருக்கும் தெரியும்.

வலதுசாரி இயக்கத்தினரும், சங் பரிவார் அமைப்புகளும் தேசியத்தை மக்கள் மனதில் விதைப்பதை ஒருபொழுதும் இழுக்காக நினைக்கவில்லை. மாறாக பெருமையாகத்தான் நினைக்கின்றோம். ஏனெனில், எங்களது சங் பரிவார் அமைப்புகளில் ஜாதி என்ற அரசியலே இல்லை. தினந்தோறும் நடைபெறும் ஷாக்காவுக்கு வரும் ஸ்வயம் சேவர்களின் ஜாதி என்ன என்பது கூட பிறருக்கு தெரியாது. எங்களுக்கு தெரிந்தது எல்லாம், நாம் அனைவரும் பாரதத் தாயின் மைந்தர்கள் என்பது மட்டுமே.

ஜாதியம் என்ற பட்டகத்தை (prism) வைத்து நீங்கள் பார்ப்பதால் தான், தேசியம் உங்களுக்கு எதிரியாகத் தெரிகிறது. அதைவிட்டு வெளியே வாருங்கள். 1526ஆம் ஆண்டு முதல் 1857ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த இஸ்லாமியன் விட்டுச் சென்ற மதமும், 1857ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த ஆங்கிலேயன் விட்டு சென்ற மதமும் தான் உங்களுக்கு முக்கிய மதங்களாக தெரிகின்றன என்றால், தேசியம் குறித்த சரியான புரிதல் உங்களுக்கு இல்லை என்றே தெரிகின்றது.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ஹிந்து மதத்தைத் துறந்து பெளத்தம் தழுவியபொழுது கூட, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தவர் நீங்கள் அன்றாடம் வசை பாடும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவர் குருஜி கோல்வால்கர். ஹிந்து மதத்தை விட்டு விட்டு, அந்நியன் கொண்டுவந்த இஸ்லாத்தையோ அல்லது கிறிஸ்தவத்தையோ தழுவாமல், நமது தாய் மண்ணில் உதித்த புத்தன் வழங்கிய பெளத்த மதத்தை தழுவியது ஆறுதல் தரும் விஷயம் தான் என்றார் குருஜி. பல ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்படும் ஹிந்து மதம் "வாழ்க்கையின் நடைமுறை" என்று தெளிவாக தெரிந்தும், அந்த நடைமுறைக்கு மதச் சாயம் பூசுவது சரியா?

மொழி என்பது ஒரு மனிதன் மற்றொரு மனிதனுடன் தகவலையும், எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளும் ஒரு ஊடகம். சைகை பாஷைகள் போய், வார்த்தைப் பிரயோகங்கள் உருவாகி, காலப் போக்கில் அவை உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு மொழிகளாக உருவெடுத்து, காலப்போக்கில் அப்பகுதிகளில் வசிக்கும் மனித குலத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உள்வாங்கி செழித்து வளர்ந்தது மொழி.

அம்மொழிகளுக்கிடையில் உயர்வு தாழ்வு கற்பிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு மொழியும் தனக்கென சிறப்பம்சம் கொண்டவை.

தமிழ் தேசியமாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஒருவர் மற்றொருவர் மொழியை ஏசுவதோ, அல்லது பிறர் மேல் தனது மொழியை திணிப்பதோ அவசியம் அற்றது. போட்டிகள் மிகுந்த இன்றைய இயந்திர வாழ்க்கையில், மனிதன் தான் வாழத் தேவையான புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளத் தயங்காதே கிடையாது. எது தனக்கு வேலை வாய்ப்பை தரும் என்று நினைக்கிறானோ அதை கற்றுக்கொள்ள முன்வருகின்றான்.

இங்கு திணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. மனிதனின் வாழ்க்கை வலியது வாழும் (Survival Of The Fittest) என்ற சித்தாந்தத்தை உண்மையாக்கிருகிறது. அமெரிக்காவின் நாசா நிறுவனம், நம் மனித இனத்தைப் போல இந்த பேரண்டத்தில் வேறு ஏதாவது உயிர் உள்ளதா? அப்படி இருந்தால் அந்த உயிர் மனிதரா அல்லது வேறு ஏதாவது ஒன்றா? அவர்களது குரலை கேட்க முடியுமா? அந்தக் குரல் எப்படி இருக்கும்? என்று ஆய்வு செய்துகொண்டிருக்கும் இந்த விஞ்ஞான உலகில், தமிழர்கள் மேல் ஹிந்தி மொழி திணிக்கப்படுகின்றது என்று கூறுவது வியப்பாக உள்ளது.

இன்று ஹிந்து மொழியை கற்றுக்கொள்ள தமிழக மாணவர்கள் எத்தனை பேர் போட்டி போட்டுக்கொண்டு முன்வருகிறார்கள் என்பது இந்த தமிழ்த் தேசிய வாதிகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சார சபாவின் வகுப்புகளில் எத்தனை ஆயிரம் பேர் சேர்ந்து படிக்கின்றார்கள் என்பதை நேரில் சென்று பார்த்தால் உண்மை விளங்கும். ஹிந்தியை ஒரு மொழியாக, வாழ்க்கைப் போராட்டத்திற்கான ஒரு ஆயுதமாகத் தான் பார்க்கவேண்டுமே ஒழிய, அதைவிடுத்து அம்மொழியை பழித்துப் பேசுதல் அவசியம் அற்ற ஒன்று.

அதே சமயம், வலது சாரி சிந்தனையாளர்கள் ஹிந்தி மொழியை தமிழர்கள் மேல் திணிப்பது போன்று ஒரு பிரம்மையை உருவாக்குவது தவறு. யாரும் யாரையும் ஒரு மொழியை கட்டாயம் கற்கவேண்டும் என்று திணிக்க முடியாது. அவ்வாறு திணிக்கப்பட்ட மொழியை யாராலும் கற்று அதில் பாண்டித்தியம் அடைய முடியாது. மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை தமிழகத்தில் சரியான முறையில் பின்பற்றப்படுகிறது என்பது தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு தெரியும்.

ஆங்கிலேயன் வழங்கிய ஆங்கிலம் கற்றுக்கொண்டு நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவதை பெருமையாகக் கொள்ளும் தமிழ் தேசிய வாதிகள், இந்திய மண்ணின் ஒரு மொழியான ஹிந்தியை கற்கக் கூடாது என்று இன்றைய தலைமுறைக்கு கடிவாளம் போடுவது அவர்கள் தங்கள் தலைமுறைக்கு மாபெரும் கெடுதல் விளைவிக்கிறார்கள் என்றே பார்க்கத் தோன்றுகிறது.

இறுதியாக, தமிழ் தேசியம் பேசும் நண்பர்கள், முதலில் தமிழ் தேசியத்திற்கான சரியான ஒரு வரையறையை உருவாக்குங்கள். அதற்குப் பிறகு அது பற்றி தெருவெங்கும் பேசுங்கள். அதுவரை, தேசியம் குறித்து குறை கூறுவதை நிறுத்திவிட்டு, நாம் அனைவரும் இந்தியர்; நாம் அனைவரும் பாரத அன்னையின் மைந்தர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். தேசியத்திற்கு வழி விடுங்கள்.

https://www.bbc.com/tamil/india-43867150

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.