Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்!

Featured Replies

மே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்!

 
 

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் அரங்கேறிய மனிதப் பேரவலம் - ஈழத்தமிழர் இனப்படுகொலையானது, தமிழ் மக்கள் வசிக்கும் நிலமெல்லாம் இன்னும் மறக்கமுடியாத ஒரு துன்பியல் நிகழ்வு. நீளும் துயரமாக இலங்கைத் தீவில் இன்னும் ஈழத்தமிழருக்கு சகஜவாழ்வு கிடைக்காதநிலையில், மறக்கமுடியாத ’மே 16-18’ நாள்களின் நினைவுகளை இங்கே அசைபோடுகிறார், வன்னியில் பணியாற்றிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான இ.கவிமகன். 

முள்ளிவாய்க்கால் எனும் பெயரை அறியாத தமிழன் இல்லை என்று கூறுமளவுக்கு, ஒரு இனத்தின் மீதான அவலம் நிகழ்த்தப்பட்ட இடம். முல்லைத்தீவு மாவட்டத்தின் குறுகிய பிரதேசம், இன்று சர்வதேச அளவில் அறியப்பட்ட பகுதி!

 

முள்ளிவாய்க்கால்

இந்த இடத்தில் 2009-ம் வருடத்தின் மே 16,17,18 ஆகிய நாள்களில் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மனித அவலங்கள் எண்ணற்றவை. கொத்துக்குண்டுகள், ரசாயனக் குண்டுகள் என  வரையறையின்றி, காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை அரசப் படைகள் நடத்தின. அதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உடல் உறுப்புகளை இழந்து, உயிர்களை இழந்து, செல்லும் இடம் தெரியாமல் ஏதிலிகளாக நின்றார்கள். 

முள்ளிவாய்க்கால் பகுதியில் பதுங்குகுழிகளைக்கூட அமைக்கமுடியாத நிலையில் மக்கள் இருந்தார்கள். முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு வீதியின் ஒருபுறம் கடற்கரை மணலும் அதன் மறுபுறம் வறண்டகழியும் கொண்ட நிலப்பரப்பு. அதனால் பதுங்குகுழிகளை அமைப்பது சிரமமாக இருந்தது. துணிகளால் அல்லது சேலைகளால் மணல் பைகளை நான்கு பக்கமும் அடுக்கி அதற்குள் தங்கினார்கள். சில மக்கள் முடிந்தவரை கிடங்குகளைத் தோண்டி அதற்குள் தம்மைப் பாதுகாக்க முனைந்தார்கள்; ஆனாலும், ஒழுங்கான பதுங்குகுழிகள் இல்லை. அதனால் அதிகமான உயிரிழப்புக்கள் நடந்தன. 

இ.கவிமகன்இது ஒருபுறம் இருக்க மறுபுறம் காயம்பட்டவர்களுக்கு மருத்துவ வசதி இல்லாமலே இருந்தது.  மண் போட்டால் மண் விழாத அளவுக்கு காயப்பட்டவர்கள் நிறைந்துவழிந்தனர். ஆனாலும் அதைச் சமாளிக்கும் அளவுக்கு மருத்துவ ஊழியர்களோ, வைத்தியர்களோ மருந்துகளோ இருக்கவில்லை. 

மருத்துவமனையின் அமைதி காணாமல் போயிருந்தது; மக்களின் அலறல்ஒலி காதைப் பிய்த்துக் கொண்டிருந்தது. அந்த சோகத் தணல் மனதை என்னவோ செய்துகொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீராலும் ரத்தத்தாலும் மருத்துவமனை இயங்கிய இடம் நனைந்துகொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் ரத்தம் பெருக்கெடுத்து ஓட, குடல்கள் சரிந்தநிலையில் பெரும் வயிற்றுக்காயங்களும் முகம் சிதைந்தநிலையில் எரிகாயங்களும் என மக்கள் குவிந்துகிடந்தனர்.

யாரும் யாருக்கும் உதவமுடியாத நிலை. ஏனெனில், எல்லோருக்கும் உயிர் பறிபோகும் நிலை! அதனால் காயப்பட்டால்கூட ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த யாரும் இல்லாமல் பலர் இறந்து போனார்கள். விழுகிற ஆட்லறி எறிகணைகள் குடும்பம்குடும்பமாக உயிரெடுத்துக் கொண்டிருந்தன. நந்திக்கழி பகுதியில் (புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீதியில் நந்திக்கடல் பக்கமாக இருக்கும் பகுதி) மே 14-ம் தேதி இரவு மட்டும் நடந்த எறிகணைத் தாக்குதல்களில் பல குடும்பங்கள் ஒரே இடத்தில் பலியெடுக்கப்பட்டன. 

மே 15-ம் நாளன்று, மருத்துவமனை என இயங்கிய இறுதி இடமும் அரசப் படைகளின் தாக்குதல்களால் மூடப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட சுகாதார அதிகாரி வைத்திய கலாநிதி சந்தியமூர்த்தியின் பொறுப்பில், முள்ளிவாய்க்கால் அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலைக் கட்டடத்தில் இயங்கிவந்த அந்த மருத்துவமனையே, அரசபடைகளின் நேரடித் தாக்குதலுக்குள்ளாகி இருந்தது. மருத்துவமனையை ராணுவம் கைப்பற்றவிருந்த நிலையில், அங்கிருந்து மக்களுக்கான மனிதநேயப் பணியாற்றிய மருத்துவர்கள், விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவுப் போராளிகள் போன்றவர்கள் உள்பட அனைவரும் வட்டுவாகல் நோக்கி நகர்கின்றனர். அதனால் அங்கே மருத்துவமனையைத் தொடர்ந்து இயக்கமுடியாமல் போனது. 

RBG வகை உந்துகணை மற்றும் 60 MM எறிகணைகள் ஆட்லறி மற்றும் குறுந்தூரவீச்சு கொண்ட எறிகணைகள், மருத்துவமனை வளாகத்துக்குள் அதிகமாக வீழ்ந்து வெடிக்கின்றன. சர்வதேச விதிமுறைகளின்படி மருத்துவமனைக் கட்டடங்களின் கூரைகளில் சிகப்பு நிற (plus +) அடையாளம் இடப்பட்டிருந்தும், அரசப் படைகள் கண்மூடித்தனமாக மருத்துவமனை மீது தாக்குதலை மேற்கொள்கின்றனர். அதில், அங்கே அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்த மருத்துவர் இறையொளி கொல்லப்பட்டார். அதன் பின் அந்த மருத்துவமனையும் கைவிடப்பட வேண்டிய நிலைக்கு ஆளானது. 

முள்ளிவாய்க்கால்

அங்கே பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவப் போராளிகள், உதவியாளர்கள் மனிதநேயப் பணியாளர்கள் என அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டிவந்தது. அதனால் “எம்மைக் கைவிட்டுச் செல்லாதீர்கள்.. எங்களைக் காப்பாற்றுங்கள், ஆமி பிடிச்சா எங்களைச் சுட்டுப் போடுவான்...” என கதறி அழுதுகொண்டிருந்த காயப்பட்டவர்களைக் கைவிட்டு  வெளியேறினார்கள். காயப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் மருத்துவமனைக்குள்ளையே மீண்டும் காயப்பட்டார்கள். அதில் பலர் உயிரிழந்தனர். உயிர் தப்பியவர்கள் அரசப் படைகளால் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் கூறியபடி சுட்டுக் கொல்லப்பட்டார்களா இல்லையா என்பது அறியாத நிலை. 

வயிற்றில் காயப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, ராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றி அரற்றி மருத்துவமனையிலிருந்து வெளியேற முற்பட்டாள். அப்போது மருத்துவ உதவியாளன் ஒருவன், அந்தத் தாயை தூக்கிச் செல்ல ஓடி வந்தான். ஆனால், சிங்கள அரசப்படை ஏவிய எறிகணை அவர்களின் அருகில் விழுந்து இருவருமே அந்த இடத்திலேயே சாகடிக்கப்பட்டனர். இவ்வாறு சாவுகள் சாதாரணமாகி அந்த மருத்துவமனைக் கட்டடம் சிதைந்துபோனது. 

முள்ளிவாய்க்கால் பகுதி- உண்டியல் சந்தி முதல் வட்டுவாகல்வரையாக கிட்டத்தட்ட 3 ச.கி.மீ. பரப்புக்குள் முடக்கப்பட்டு, அங்கு வாழ்ந்த 3 லட்சத்துக்கும் அதிகமான மக்களால் திணறுகிறது. அங்கே சாதாரணமாக ஒரு கைக்குண்டு வெடித்தாலும் பல நூறு உயிர்கள் பிரியும்நிலையில் மக்கள் இருந்தார்கள். அதற்குள் விடுதலைப்புலிப் போராளிகளும் இருந்தார்கள். பெரும்பாலும் மக்கள் வாழ்ந்த இடங்களைத் தவிர்த்து அவர்கள் இருந்தாலும் குறுகிய நிலப்பரப்புக்குள் அது சாத்தியமற்று இரு பகுதியினரும் சேர்ந்து வாழவேண்டிய சூழல் உருவாகி இருந்தது. அதனால் அரசப் படைகள் புலிகள் மீதான இறுதித் தாக்குதல் அதிகரிக்கப்பட்டுள்ளது என பிரசாரத்தை முன்னெடுத்துக் கொண்டு மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தது. 

அதுவரை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் காயப்பட்டவர்களை திருகோணமலைக்கு கொண்டுசெல்வதற்கென வருகைதந்த கப்பல்கூட நின்றுபோனது. அதற்கும் அரசாங்கம் தடைவிதித்திருந்தது. அதற்கு முந்தைய நாள்களில் கப்பல் வந்துசெல்லும்போதுகூட அரசப் படைகளின் பீரங்கிப்பிரிவு கப்பல் தரித்து நின்ற இடத்தைச் சுற்றி கடலில் எறிகணைகளை ஏவினர். அதனால் காயப்பட்ட மக்கள் கப்பலுக்குச் சென்றால் இறந்துவிடுவோமோ என அஞ்சி கப்பலுக்குப் போக பயம்கொண்டனர். இது ஒரு புறம் இருக்க இப்போது கப்பலை முற்றுமுழுவதுமாக தடுத்துவைத்தது, இலங்கை அரசு. அதனால் முள்ளிவாய்க்கால் பகுதி முழுவதும் காயப்படுபவர்கள் செத்துக்கொண்டிருந்தார்கள். 

செத்தவர்களை அடக்கம்செய்யக்கூட முடியவில்லை. உயிரற்ற உடலங்கள் அப்படியே கிடந்தன. மனிதநேயப் பணியாற்றிய போராளிகளின் மருத்துவப்பிரிவு மருத்துவர்கள், நிர்வாக சேவை, தமிழர் புனர்வாழ்வுக் கழகம், காவல்துறை போன்ற பிரிவுகள் தொடர்ந்தும் தம்மிடம் இருந்த வளங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு மருத்துவம் பார்த்தனர். ஆனாலும் காயங்கள் அதிகமானதால் அவர்களால் எதையும் செய்யமுடியாத கையறு நிலைக்குச் சென்றனர். 

இந்நிலையில், உண்டியல் சந்தி முதல் கடற்கரைப் பக்கமாக உள்நுழைந்து கொண்டிருந்த அரசப் படைகள் நேரடித் துப்பாக்கித் தாக்குதல்களை தீவிரப்படுத்துகிறார்கள். அதனால் மக்கள் வட்டுவாகல் நோக்கி நகர்கிறார்கள். இன்னும் சுருங்கிக்கொண்டருந்த குறுகிய பிரதேசத்துக்குள் மக்களின் சாவுகள் அதிகரித்துக்கொண்டிருந்தன. வான்படை, கடற்படை என்ற வித்தியாசம் இன்றி வட்டுவாகலை நோக்கி போய்க்கொண்டிருந்தவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களைச் செய்கிறார்கள். 

முள்ளிவாய்க்கால்

இந்த நிலையில், 16-ம் தேதி மாலை நேரம் விடுதலைப்புலிகளின் காவல்நிலைகள் என்று எதுவும் இருக்கவில்லை. அவர்கள் சண்டைகளைத் தவிர்த்தார்கள். ஓரிரண்டு இடங்களில் இரு பகுதியும் சண்டையிட்டாலும் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் பெரும்பாலும் நின்றுபோயிருந்தன. ஆனாலும், அரசப்படைகள் தொடர்ந்து விடுதலைப்புலிகளைத் தாக்குவதாக அறிவித்தபடி, மக்களையே தாக்கிக்கொண்டிருந்தது. இனி எதுவும் இல்லை என்ற கையறு நிலை ஏற்பட்டுவிட்டது. 

அன்று இரவு முல்லைத்தீவைநோக்கி வட்டுவாகல் பாலத்தின் ஊடாக மக்கள் செல்லத் தொடங்குகின்றனர். ஆனாலும், இரவு நேரம் என்பதால் பாலத்தைத் தாண்டி உள்ளே செல்லும்போது, மக்களை விடுதலைப்புலிகளாகக் கருதி ராணுவம் தாக்கலாம் என அஞ்சி அங்கேயே விடியும்வரை நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். ஆனால், காத்திருந்த அந்த இடத்திலேயே பெரும் சேதத்தை விளைவிக்கக்கூடிய கொத்துக்குண்டு, ரசாயனக் குண்டுகளைப் போட்டு சிங்கள அரசு தாக்கியது. அங்கு எந்தப் பாதுகாப்பு அரணும் இல்லாமல் வீதியில் இருந்த மக்கள் பல நூறு பேர் கொல்லப்பட்டும் காயப்பட்டும் போனார்கள். ஆனாலும் போக்கிடம் வேறு ஒன்றும் தெரியாமல் மக்கள் மீண்டும் அங்கேயே காத்திருந்தனர். 

காலை 3 மணி முதல் 4 மணிவரை இருக்கும்... காட்டுக்குள் இருந்து திடீர் என்று வெளிவந்த ராணுவம், வீதியில் அமர்ந்திருந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இருப்பது மக்கள் எனத் தெரிந்தும் துப்பாக்கியால் சுட்டதில் முன்வரிசையில் இருந்தவர்கள் பலர் உயிரிழந்தார்கள். அதன் பின் ஒற்றை வரிசையில் வருமாறு சிங்கள மொழியில் கட்டளையிட, துப்பாக்கி சூட்டினால் சிதறி ஓடிய மக்கள் ஒற்றை வரிசையில் வட்டுவாகல் பாலத்தை நோக்கிக் கொண்டுசெல்லப்பட்டனர்.  முன்வரிசையில் இறந்தவர்களின் உடலங்களைக் காலால் நகர்த்திவிட்டு இறந்தவர்களின் உறவுகளே முன்னோக்கிச் சென்ற கொடுமை, தமிழின வரலாற்றில் நடக்காத ஒன்று. ஆனாலும் அன்று நடந்தது! 

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

அங்கிருந்து முல்லைத் தீவுக்குள் உள்நுழைய அனுமதிக்கப்படவில்லை. அதனால் வட்டுவாகல் பாலத்தில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள். அதிகாலை 5 மணியிருக்கும் முல்லைத்தீவு படை முகாமில் இருந்து ஆட்லறி எறிகணைகள் வீசப்பட்டன. வழமையைவிட அதிகமாக தாக்குதல் நடத்தப்படுகிறது. அதே நேரம் விடுதலைப்புலிகளும் சண்டையிடுவது புரிகிறது. நந்திக்கடல் பகுதி மற்றும் முள்ளிவாய்க்கால் - புதுக்குடியிருப்பு வீதி போன்றவற்றில்தான் சண்டை நடப்பதற்கான அறிகுறிகளை மக்கள் உணர்ந்துகொள்ள முடிந்தது. ஆனாலும் அதற்குள் என்ன நடக்கிறது என்பதை வட்டுவாகலில் இருந்த மக்களால் உணரமுடியவில்லை. அந்த வேளையில் திடீர் என்று வட்டுவாகல் பாலத்தை நோக்கி, முள்ளிவாய்க்கால் பக்கத்தில் இருந்து சிங்களப்படைகள் துப்பாக்கியால் சுடுகிறார்கள். அதிலும் பல மக்கள் காயப்பட்டு விழுகிறார்கள். அனைவரும் நிலத்தில் அமர்ந்திருந்ததால் பெரும்பாலான காயங்கள் கழுத்தில் அல்லது தலையிலே ஏற்பட்டன. சிலருக்கு பெருங்காயங்கள் ஏற்பட்டபோதும் அவர்களை மருத்துவத்துக்காக முன்னால் கொண்டு செல்ல ராணுவம் அனுமதிக்கவில்லை. காயப்பட்டவர்களுக்கு கட்டுவதற்கு எதுவுமற்ற நிலையில் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கிறது. தலையில் பலமாகக் காயப்பட்ட 25 வயது மதிக்கக் கூடிய இளைஞன் தன்  தாயின் முன்னே இறந்துபோனான். அவனைத் தூக்கிக்கொண்டு ராணுவத்திடம் அவனைக் காப்பாற்றும்படி கெஞ்சினார், அந்தத் தாய். ஆனால் ராணுவமோ அதற்கு அனுமதிதரவில்லை. 

காலை 8 மணியளவில் திடீரரென அரசப் படைகள் மக்களை ஒற்றை வரிசையில் உள்ளே வருமாறு பணித்தார்கள். உள்ளே நுழைந்த மக்கள், மிக நீண்ட வரிசையில் ஒரு வயல்வெளிக்குள் கொண்டு செல்லப்பட்டனர். அங்கே கம்பிகளால் சுற்றி அடைக்கப்பட்டிருந்த பெரு வெளிக்குள் அனைவரும் அடைக்கப்பட்டனர். கம்பி ஓரங்களில் காவலுக்கு நின்ற ராணுவச் சிப்பாய்கள் வந்துகொண்டிருந்த மக்கள் மீது தடிகளாலும் துப்பாக்கிப் பிடிகளாலும் அடித்துத் துன்புறுத்துவது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க. கம்பிக் கூட்டுக்குள் கொண்டுசெல்லப்பட்ட மக்கள் பெரும் துயரத்தை சந்தித்துக்கொண்டிருந்தார்கள். 

பல நாள்கள் உணவில்லாது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வந்திருந்த மக்களுக்கு இங்கும் அதே நிலை நீடித்தது. முள்ளிவாய்க்கால் களத்தில் நீரை அருந்தியாவது பசிபோக்கிய மக்கள் இங்கே நீர்கூட இல்லாது தவித்தார்கள். 

உண்மையில் மறக்க முடியாத கொடுமை. நிலத்தில் சிந்திக்கிடந்த கழிவு நீரில் ஒரு புறம் நாய் நீரைக் குடித்துக்கொண்டிருக்க.. சேறாய்க் கிடந்த அந்தத் தண்ணீரைத் துணிபோட்டு வடித்தெடுத்து  எம்மக்கள் அருந்திய கொடுமையும், மே 18-ல்தான் நடந்தது. குழந்தைகள் தாகத்தாலும் பசியாலும் வாடினார்கள். ராணுவம் உணவுப்பொதிகளை வழங்கினாலும் அதை எல்லோரும் பெறக்கூடியதாகவோ அல்லது தண்ணீரைச் சரியாகக் கொடுக்கவோ இல்லை. விலங்குகளுக்குத் தூக்கி எறிவதைப் போல அன்று உணவுப்பொதிகளைத் தூக்கி எறிந்துவிட்டு அதைப் பிரித்து உண்ணத் தொடங்கிய பலரை, அந்த இடத்திலேயே அடித்துத் துன்புறுத்தி உணவைப் பறித்தெறிந்த கொடுமையும் நடந்தது.

முள்ளிவாய்க்காலில் இருந்து மக்களோடு மக்களாக ராணுவத்திடம் சரண்டைந்த போராளிகள் பலர், இந்த பிரதேசத்தில் நின்றிருந்தார்கள். ஆனாலும் அவர்கள் அந்தப் பிரதேசத்துக்குள்ளேயே காணாமல் அடிக்கப்பட்டனர். அவர்கள் இன்று உயிருடன் உள்ளார்களா இல்லையா என்பது தெரியாதநிலையிலும், அவர்களைத் தனித்துவமாக மக்களை விட்டு பிரித்தெடுத்துக் கொண்டு சென்றதை கண்கூடாகக் கண்ட சாட்சிகள் பலர் உள்ளனர். பெற்றவர்களால், வாழ்க்கைத்துணைவர்களால் ராணுவத்திடம் கையளித்ததும் இந்த இடத்தில்தான்! ஆனாலும் இதுவரை அவர்களுக்கு என்ன ஆனது என்பது யாரும் அறியாத ஒன்றாகவே இருக்கிறது. 

மே 18 -ம் முள்ளிவாய்க்காலும் என்று அழியாத ரணமாகி, ஈழத் தமிழ் மக்களின் மனங்களில் கிடக்கிறது!

https://www.vikatan.com/news/coverstory/125138-mullivaikkal-remembrance-day.html

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.