Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புகை( ப் )படம்

Featured Replies

புகை( ப் )படம்

 

 
k13

செல்லமாய்ச் சிணுங்கியது இவனது செல்பேசி. மாலைக் குளியலில் சுகங்கொண்டிருந்த விசுவநாதன் உள்ளிருந்தவண்ணம் உரத்துக் குரல் கொடுக்கிறான் : "ஜானகி, ஃபோனை எடும்மா !'' 
முழு நிலவென மஞ்சள்முகங் காட்டும் உப்பிய பூரியும், கொதித்து மணத்துத் தளதளக்கும் உருளை மசாலாவிலும் கவனங்கொண்டிருந்த ஜானகி , அடுப்புச் சூட்டைக் குறைத்து, வேகமாக வந்து, செல்பேசியை எடுத்துப் பேசுகிறாள்.


அம்முனைச் செய்தி கேட்டு ஜானகி , ஆனந்தக் குரலில் , " ஓ , அப்படியா ! ரொம்ப மகிழ்ச்சி . அவர் குளிச்சிட்டு வந்ததும் உடனே பேசச் சொல்றேன்'' என்றவள், பேசியவர் பெயர் , எண்ணைப் பாதுகாத்துக் கொள்கிறாள். " மும்பையிலிருந்துதானே பேசுறீங்க? அஞ்சு நிமிஷத்திலே பேசிடுவார்'' 
மடிக்கணினி, தொலைபேசி, செல்பேசிகள், அலாரம் கடிகாரம், குறிப்புப் புத்தகம், பேனா ஆகியவை அமர்ந்திருக்கும் சிறிய வட்ட மேசை சுவரோரம் . ஜானகிக்கு வீட்டில், சமையல் அறையில் எங்குமே எதுவுமே தேடும்படியாக இருக்கக் கூடாது; எவையுமே சுத்தமாகவும் இருக்கவேண்டும். சுத்தமே அழகின் முதற் படி என்பது ஜானகியின் கண்டுபிடிப்பு ! ஓராண்டுக்கு முன் ஜானகியின் கரம் பற்றிய பின்புதான் மாலைக் குளியல் முதல் பல விசயங்களை மேற்கொள்ள ஆரம்பித்தான் விசுவநாதன். 
தனது பொருளாதாரத்தில் குறிப்பான ஒரு சுயச்சார்பு நிலை கொண்ட பிறகே திருமணம் என்று இருந்தவன் சென்ற வருடம் ஜானகியை மணந்தான் . ஜானகியும் தன் இளைய சகோதரிகள் இருவரும் மணம் கொண்ட பின்பே தான் திருமணம் செய்துகொள்வதாக உறுதி கொண்டிருந்தாள். அவ்வாறே அதன் பிறகே விசுவநாதனைக் கரம் பற்றினாள். 


இருவர் குடும்பமுமே மத்திய தர வர்க்கக் குடும்பம் . விசுவநாதனின் தந்தை புகழ்பெற்ற கவிஞர் . கவி வேலாயுதம் என்ற பெயர் இதழ் , மேடை நாடகம் , சில திரைப் படங்கள் என்று பரவலாக அறியப்பட்ட பெயர்தான். எனினும் புகழ் கிட்டிய அளவு பணம் அவருக்கு கிடைக்கவில்லை. சிறிய குடும்பம் என்பதாலும் பெரிய ஆசைகள் இல்லாமையாலும் கவியின் வாழ்க்கை சுவையாகவே நகர்ந்தது. இருவர் குடும்பங்களும் குளித்தலை , முசிறியிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்த குடும்பங்கள்.
ஜானகி , செவிலி. விசுவநாதன் நிருபர், புகைப்படக் கலைஞர், தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் எனப் படிப்படியாக வளர்ந்து வருபவன். தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த ஜானகி , சில மாதங்களுக்கு முன் பணியிலிருந்து நின்றுவிட்டாள். தாயாகப் போகும் பெரு மகிழ்வு அவளுள் பொங்க, விசுவநாதனின் ஆலோசனைப் படி செவிலிப் பணிக்கு விடைகொடுத்தாள்.

 

குளித்து , உடை மாற்றி வெளிவந்த விசுவநாதனிடம் ஜானகி , " எங்கே , வாயைத் திறங்க, பார்ப்போம் !'' என, நாவில் ஒரு கரண்டி சர்க்கரையை உதிர்க்கிறாள் . 
" ஏனிந்த சர்க்கரை ? யாரு ஜானகி போன்லே ?'' 
" மும்பையிலேர்ந்து அகில இந்தியப் புகைப்படக் கழகக் கூட்டமைப்பிலேர்ந்து கிருஷ்ணன்ங்கிறவர் பேசினார். உங்களுக்கு இந்த ஆண்டின் சிறந்த புகைப்படக் கலைஞர்ங்கிற பரிசு தர்றாங்களாம் . அவுங்க ஃபோன் நம்பரைக் குறிச்சு வச்சிருக்கேன் . ஃபோன் பண்ணீடுங்க !''
" ஓ ! இப்பவே பண்றேன் ஜானு !'' என்றவன் , சற்றே குழம்பினான்''. நானேதும் போட்டிக்குப் படம் அனுப்பலையே ... எந்தப் படம் ? யார் அனுப்பியிருப்பாங்க?'' மும்பைக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டான் . 
"விசுவநாதன் ஹியர் ஃபிரம் சென்னை ... மே ஐ ...?'' 
இடைமறித்தது அம்முனைத் தமிழ்க் குரல் : 


"வணக்கம் விசுவநாதன் சார் . பெடரேஷன் ஆஃப் ஆல் இந்தியா ஃபோட்டோகிராபி அசோசியேஸன்ஸ்லருந்து துணைச்செயலாளர் கிருஷ்ணன் பேசறேன் . நமது அமைப்பு உங்களுக்கு இந்த வருட சிறந்த புகைப்படக் கலைஞர் விருது வழங்கத் தேர்வு செய்திருக்கு . விபரமா மெயிலும் அனுப்பியிருக்கோம் . வாழ்த்துக்கள்! பெரும்பாலும் அடுத்த மாதம் டில்லியில் பரிசளிப்பு விழா இருக்கும் . நீங்க உங்க இசைவை மட்டும் உடனடியா இப்பவே சொல்லீடுங்க . ஒரு மெயிலும் உடனே அனுப்பிடுங்க'' என்றவர் மவுனிக்கிறார் இவனது பதிலுக்காக . 
அண்ணாந்து பார்த்த விசுவநாதன், ஒரு நொடி இடைவெளிக்குப் பிறகு , " உங்கள் விருதை ஏற்பதில் மகிழ்கிறேன் ; நன்றி ! பதில் மெயிலும் அனுப்பிவிடுகிறேன்'' என்கிறான் . 


" நன்றி சார் ! உடனே மெயில் அனுப்பீடுங்க . இன்னும் பத்து நிமிஷத்திலே பிரஸ்சுக்கும் மீடியாவுக்கும் சொல்லிடுவோம் . உங்க தொடர்பு முகவரி, செல்பேசி விவரங்களையும் அவுங்களுக்குக் கொடுத்திடுவோம் . எங்க தலைவர் , செயலர் எல்லாரும் உங்களைத் தொடர்பு கொள்வாங்க. உங்க லாண்ட் லைன்
ஃபோன் , செல் ஃபோன்களைக் கொஞ்ச நேரம் ஃப்ரீயா வைச்சுக்குங்க . வேற எதுவும் பேசணும்னா எப்பவும் என்னைத் தொடர்புகொள்ளலாம். பேராவூரணிதான் என் சொந்த ஊர் . இங்கே காட்பரீஸ்லே இருக்கேன் . நன்றி சார் !'' - மூடாத குழாய் ! 
ஜானகி மடிக்கணினியில் இவனது அஞ்சல் பெட்டியைத் திறந்து வைத்துவிட்டாள் . ஜானகியின் கரம் பற்றித் தன் கரங்களுக்குள் புதைத்துத் தன் மகிழ்ச்சியை முகத்திலும் தெரிவிக்கிறான் விசு . " சந்தோஷமா இருக்குங்க ! ஒங்களோட புகைப்படப் பங்களிப்புல அகில இந்திய அளவிலே உங்களுக்கு அங்கீகாரம்ங்கிறது பெரிய விஷயம்ங்க ! என்னோட வாழ்த்துக்களும் உங்களுக்கு !'' 


"நெஜம்ந்தான் ஜானகி . அப்பா ஒரு கவிஞராக பிரபலமாகி இருக்காங்க . நான் விரும்பி ஏத்துக்கிட்டது இந்தப் புகைப்பட, ஒளிப்பதிவுத் துறை . ஒரு நிருபரா ஆரம்பிச்ச என் இந்த வாழ்க்கை இப்ப தொலைக்காட்சி ஊடகத்திலே ஒளிப்பதிவாளரா, நிகழ்ச்சித் தயாரிப்பாளரா உசந்திருக்கு . நான் எடுத்த பல படங்கள் பலவிதமான அனுபவங்களை எனக்குத் தந்திருக்கு ...ஆனா , எனக்கு ஒண்ணும் புரியலை . நானெடுத்த படங்கள் எதையும் நானாக இவங்களுக்கோ , வேற எந்தப் போட்டிக்கோ அனுப்பலை . இந்தப் பரிசும் அங்கீகாரமும் எந்தப் படத்துக்குன்னும் தெரியலை . மெயிலைப் பார்த்தா தெரிஞ்சிடும் . இதோ பார்க்கிறேன்''.
உள்அஞ்சலில் மேலாக வந்து நிற்கிறது மும்பை மெயில் ! அவசரமாகப் படித்துப் பதிலும் அனுப்புகிறான் . 
"ஜானகி! "தமிழ்க்குரல்' லே வெளிவந்திருந்த , நானெடுத்த படத்துக்குத்தான் இந்தப் பரிசும் பாராட்டும்!'' என்றவன், "நானந்தப் பத்திரிகைல வேலை செய்தப்ப, ஊடகப் பணி கிடைத்த தகவலைத் தெரிவிச்சு , பணிவிலகல் கேட்டவுடன், ஆசிரியர் மணி சார் வருத்தமும் சந்தோஷமும் ஒருசேரச் சொன்னது இன்னைக்குப் போல ஒலிக்கிது : 
"உங்க திறமைக்கும் உழைப்புக்குமான ஊதியத்தை எங்களால தர முடியலை. ஆனா , நீங்களும் உங்க வேலையை ஊதியக் கணக்குப் பார்த்துச் செய்யலை. ஈடுபாட்டுடனான அர்ப்பணிப்பு மிகுந்த பங்களிப்பு உங்களது. இதுதான் உங்களது வளர்ச்சிக்கான அச்சாணி. அதை எக்காரணங்கொண்டும் மாத்திக்கிடாதீங்க. அதோட நல்ல வாழ்க்கைக்குப் பொருளாதாரமும் அவசியம் . அது உங்களுக்கு அந்தத் தொலைக்காட்சிப் பணியில் கிடைக்கும். வாழ்த்துக்கள்
விசு' ன்னு சொன்னார் மணி சார் .'' 


தொடர்ந்து மும்பை தொலைபேசி அழைப்புக்கள். சங்கத் தலைவர், செயலர் என்று பேசி, வாழ்த்துக் கூறினர் . ஜானகி , தன் மாமனாருக்கும் தந்தைக்கும் தொலைபேசி வழி செய்தி பகிர்ந்தாள். தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் . இவன் தற்போது பணிபுரியும் "நிகழ்' தொலைக்காட்சித் தலைமைச் செய்தியாசிரியர் , அதன் உரிமையாளர் எனப் படையெடுக்கும் பாராட்டு மழை ! "தமிழ்க் குரல்' ஆசிரியர் மணி நிதானமான குரலில் பாராட்டுகிறார் . விசு எழுந்து நின்று பேசுகிறான் . ஜானகி இவனை விநோதமாகப் பார்க்கிறாள் . மணி அமைதியாகக் கூறுகிறார் : " விசு , நீ "தமிழ்க் குரலு' க்காக எடுத்த படங்களில் இரு படங்களை, நான்தான் தேர்ந்தெடுத்து, மும்பைக்கு அனுப்பி
வைத்தேன் . பணி ஒப்பந்தப்படி , நீ எடுத்துத் தந்த படங்களின் உரிமை இதழுக்குத்தான் என்கிற உரிமையில் நானே தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தேன் . உன்னைப் பற்றிய விவரங்களையும் உனது தற்போதைய பணியிடம், தொடர்பு முகவரி , செல்பேசி எண் எல்லாம் அனுப்பிவைத்தேன் . வாழ்த்துகள் விசு !'' என்ற மணியின் வார்த்தைகளில் உறைந்து போய் நிற்கிறான் விசு. இன்றைய உலகில் இப்படியும் ஒரு முதலாளி ! ஓர் ஆசிரியர் ! 
ஜானகி, தொலைக்காட்சியில் மாற்றி , மாற்றி செய்திச் சேனல்களைப் பார்க்கிறாள் . ஒலியைக் குறைத்தே வைத்திருக்கிறாள் . " நிகழ்' தொலைக்கட்சியில் விசுவநாதனின் புகைப்படத்தைக் காண்பித்துப் பரிசுச் செய்தியைக் கூறினர் . சைகையினாலேயே விசுவை அழைத்துத் திரையைக் காண்பிக்கிறாள் . 
புகைப்படத்தின் மீதான முதல் ஈர்ப்பும் காமிராவின் மீதான காதல் மலர்ந்த கணமும் இவனுள் குமிழிடுகின்றன . 

 

 

கவி வேலாயுதத்திடம் "மலர்க்கொத்து' இதழாசிரியர் மூர்த்தி , " நீங்கள் எங்கள் பத்திரிகைக்கு ஒரு சரித்திரக் கவிதை நாடகம் எழுதித் தர வேண்டும்'' எனக் கேட்க , " எழுதித் தர்றேன் . ஆனா கொஞ்ச நாள் அவகாசம் வேண்டும் . அதுவுமில்லாம நான் ராஜேந்திர சோழன் பற்றி எழுதப்போறேன் . தமிழகத்தில் தஞ்சையைச் சுற்றியும் வேறு பகுதிகள் சிலவற்றிலும் கள ஆய்வும் செய்யணும் . இயன்றால் இலங்கையும் சென்று வரவேண்டும் . இவற்றிற்கு உங்கள் உதவி தேவை''
" என்ன வேண்டும் , சொல்லுங்கள் செய்துவிடலாம். நீங்கள் எனது மகிழுந்தையே பயன்படுத்திக்கொள்ளுங்கள் . நமது ஓவியர் சர்மாவையும் நிர்வாகப் பிரிவு அலுவலர் ஒருவரையும் உடன் அனுப்புகிறேன் . ஒரு புதிய " யாஷிக' காமிராவையும் நிறையப் படச் சுருள்
களையும் உங்களுக்கு நானே பரிசாகத் தந்துவிடுகிறேன் . என்றைக்குக் கிளம்புகிறீர்கள் , சொல்லுங்கள் . உங்கள் வசதியை ஒட்டி மற்றவர்களைத் தயார்ப்படுத்துகிறேன்'' 
"அடடா ! மூர்த்தி சார் ... எள்ளுன்னா எண்ணைங்கிறீங்க... நான் ஒருவாரம் குறிப்பு எழுதிக் கொள்கிறேன் . பத்து நாளைக்குப் பிறகு என்றைக்கு வேண்டுமானாலும் கிளம்பலாம் !'' 

 

மறுநாள் மாலை , வேலாயுதம் வீட்டிற்கு ஆசிரியர் மூர்த்தி , ஒரு புத்தம் புதிய யாஷிகா காமிராவுடன் வந்து சேர்ந்தார். மலர்ந்த முகத்துடன் காமிராவை வேலாயுதத்திடம் தருகிறார் . 
வேலாயுதம் புன்சிரிப்புடன் , " ஒரே நிபந்தனை சார்! நீங்க இந்த காமிராவின் விலையை எனக்குக் கொடுக்கக் கூடிய சன்மானத்தின் இறுதிப் பகுதியில் கழித்துக் கொண்டு மீதிப் பகுதியைத் தர முன்வருவதானால் மட்டுமே நானிந்தக் காமிராவைப் பெற்றுக்கொள்கிறேன். தவறாகக் கருதக்கூடாது மூர்த்தி சார் . உழைக்காமல் எந்தப் பொருளையும் பெறவோ அனுபவிக்கவோ எனது தன்மானம் இடந்தருவதில்லை'' 
புன்னகைத்த மூர்த்தி , " உங்கள் மன நிலை எனக்குப் புரிகிறது ; பிடிக்கிறது . தங்கள் சித்தம் , என் பாக்கியம் கவிஞரே ! எனக்கு வேண்டியது நீங்கள் எழுதும் சரித்திரக் கவிதை நாடகம் ; அவ்வளவே ! இப்பவே இந்தப் புதுக் கமிராவிலே நாமிருவரும் சேர்ந்து அமர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வோம் . முதல் படமாக இது இருக்குமல்லவா ? நினைவில் என்றும் நிற்கும் அன்றோ ? ùஸல்ஃப் டைமர் இருக்கு , ஸ்டாண்ட் இருக்கு''
" ஓ , மூர்த்தி சாரின் அணுகுமுறைதான் அவரது வெற்றிக்கு மூல காரணம் ! நானே படம் எடுக்கிறேன் . பாடல் எழுதும் எனக்குப் படம் எடுக்கவும் தெரியும் சார் !'' 
பள்ளிச் சிறுவனாக வாசு தம் தந்தை அருகிருந்து கண்ட காட்சி இது . 


கவி வேலாயுதத்திற்கு எதையும் ஆவணப்படுத்திப் பாதுகாக்க வேண்டும் என்று ஒரு பழக்கம். பின்னர், கல்லூரி நாட்களில் ஒருமுறை வாசு, தன் தந்தையிடம் கேட்டான். " அப்பா , நீங்க எதையும் ஆவணப்படுத்தவேண்டும் என்கிற உந்துதலில் அந்தந்தத் தருணங்களை, நிகழ்வுகளை வாழ்ந்து பார்த்துவிடும் அனுபவத்தை இழக்கிறீர்களோ என்று நினைக்கிறேன் ...'' 
" இல்லப்பா வாசு .... இப்ப பாரு இந்த ஆல்பங்களை - கங்கைகொண்ட சோழபுரம் கோயில் படத்தை ... ராஜேந்திர சோழன், சிற்றம்பலச் சிற்பி - இவர்கள் வலம் வரும் நிகழ்வை உன்னால் உணர முடிகிறதல்லவா? நானெழுதிய திரையிசைப் பாடல் படமாக்கப்பெற்ற பொழுது தாஜ்மகாலைப் படமெடுத்தேன் ... இந்தப் புகைப்படங்களில் இங்கே ஷாஜஹான், மும்தாஜ் உலவுவதை நாம் மனக்கண்ணில் காண முடிகிறதல்லவா ?'' 
விசுவநாதனையும் சமமாகப் பாவித்துப் பதில் கூறித் தெளிவுபடுத்துகிறார் வேலாயுதம் . 
இப்படிப் பலப் பலப் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பங்கள் வீடு நிறைய ... இலக்கிய நிகழ்வுகள், இலக்கிய ஆளுமைகள் , குடும்பத்தினரின் மகிழ்ச்சிப் பொழுதுகள் ... ஆல்பங்கள் என்றால் விலை உயர்ந்த கறுப்புக் கெட்டித்தாள் மேல் வெண்ணைத்தாள் முக்காடிட்ட ஆல்பங்கள் அல்ல ; சாதாரண காக்கித் தாள் , குத்தித் தைத்த ஆல்பங்களே ! 


படத்தின் கீழே எடுத்த நாள் , இடம் , படம் பற்றிய குறிப்பு இவ்வளவும் கொண்ட ஆவணப் படுத்து
தலின் அடையாளங்கள் என அணிவகுத்து நிற்கும் ஆல்பங்களும் அதில் காணப்பெறும் உள்ளங்கை அளவே உள்ள அரிய கருப்பு வெள்ளைப் புகைப்படங்களுமே விசுவநாதனின் புகைப்பட ஆர்வத்தின் ஊற்றுக்கண் ! 
சரி, இந்த விசுவநாதனுக்குக் காமிராவின் மீது காதல் ஏற்பட்ட தருணம் ? 
வேலாயுதம் எழுதிய நாடகம் "இதய ஒலி'யை மேடை நாடகமாக இயக்கி நடித்தார் அமெச்சூர் நாடக சுந்தரம் . 
பம்பாய் சண்முகானந்தா அரங்கில் அந்த நாடகம் நிகழ்ந்த போது கவிஞர் வேலாயுதமும் அழைக்கப்பெற்றார் . ஆனால் , அலுவலகத்தில் விடுப்புக் கிட்டவில்லை . சுந்தரம், கவியிடம், அவரது காமிராவை இரவல் கேட்டார். மும்பை சென்று நாடக நிகழ்வைப் படம் பிடித்து வந்ததும் திருப்பித் தந்துவிடுவதாகக் கூறினார். " இல்லை " , " முடியாது " என்று சொல்லிப் பழக்கமில்லாத வேலாயுதம் சரி , நம்ம சுந்தரம் தானே கேட்கிறார் என இசைந்தார்; தந்தார் . 
நாடகம் முடிந்து சென்னை திரும்பிய சுந்தரம் , ஒரு உறையில் 500 ரூபாய்ப் பணத்தையும் பொன்னாடை ஒன்றையும் பவ்யமாய்க் கொண்டு வந்தார். "பம்பாய் சபாக்காரர்கள் கவிஞர் வேலாயுதத்திற்கு மேடையில் அறிவித்தளித்த அன்பளிப்பு இது'' என்று கூறித் தந்தார். 
" சரி , என் காமிரா எங்கே ?'' 

 


"இன்னும் கொஞ்சம் பிலிம் பாக்கி இருக்கு; ஒரு வாரத்திலே கொண்டுவந்து தந்துடறேன்'' என்றார் சுந்தரம் . 
நாட்கள் , வாரங்கள் வந்து சென்றன. காமிரா வரவில்லை . தந்தை கூறியபடி வாசுதேவன், திருவல்லிக்
கேணிக் குளத்தங்கரை அருகே இருக்கும் சுந்தரம் வீட்டிற்குச் சென்று கேட்டு வந்தான் . தந்தையின் " ராலி' சைக்கிளில் பயணம் சென்று வந்த மகிழ்ச்சி மட்டுமே மிஞ்சியது. வாரா வாரம் ஞாயிறு , சுந்தரம் வீட்டுப் பயணம் என்னவோ இனிக்கவே செய்தது - ராலி சைக்கிள் உபயத்தால் ; பலன்தான் கசந்தது . சுந்தரத்தின் பதில்கள் வெவ்வேறாய் வெளிப்பட்டன . சில சமயம் , தான் வீட்டில் இருந்துகொண்டே , இல்லையென்ற பதிலை மட்டுமே வீட்டார் வழி நல்கினார் சுந்தரம் . 
இறுதியாக ஒருநாள் , வேலாயுதம் விசுவிடம் ,
" விசு! நம்ம காமிராவை சுந்தரம் திருப்பித் தரலை . ஏன் தரலைன்னும் தெரியலை . ஒரு வேளை சுந்தரம் நம்ம காமிராவைத் தொலைச்சுட்டாரோ என்னவோ ... பரவாயில்லை . பின்னாடி , வாய்ப்புக் கிடைச்சா வேற ஒரு காமிராவை நாம வாங்கிக்கலாம்'' என்றார் . 
வேலாயுதத்தின் வேதனை லேசாய் வெளிப்பட்டது அத் தருணத்தில் . அப்போதுதான் விசுவநாதனுக்குள் காமிராக் கனவின் விதை விழுந்தது . 
வாசல் அழைப்பு மணி ஒலி விசுவநாதனை நடப்புலகிற்கு இழுத்து வந்தது . 

 

அழைப்பு மணியோசை கேட்டு எழுந்து சென்ற விசுவநாதன் கதவு திறக்கிறான் 
" நிகழ்' தொலைக்காட்சியிலிருந்து காமிரா, மைக் , லைட் சகிதம் உள் நுழைகின்றனர் நால்வர். எந்த வித அனுமதியுமின்றி விசுவநாதனைப் படம் பிடிக்கின்றனர் . தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துவிட்டு, வந்தவர்களை வரவேற்கிறான் விசு . வந்திருந்த காமிராமேன் டேனியல், ஜானகியிடம் திரும்பி, " மேடம் தினமும் பார்க்கிற எங்க சீனியரையே இன்னைக்கு நாங்க படமெடுக்க வேண்டிய கொடுமையாயிடுச்சு பாருங்க!'' என்று கேலி பேசியபடியே தன் வேலையைத் தொடருகிறார் . 
"சார் , கோவிச்சுக்காதீங்க . இப்ப ஒரு பத்து நிமிஷம் நான் சொல்றபடி நீங்க கேக்கணும் . ஓ கே ?'' என்ற
படியே வீட்டின் உள்ளே , சிறிய பின்பக்கத் தோட்டம், வாசல் என்று ஒரு சுற்றுச் சுற்றி வந்தவர், "சார் நாலைஞ்சு லொகேஷன்ஸ்ல ஷாட்ஸ் வச்சுக்கிறேன் . அப்பறம் நம்ம ஆபீஸ் கேமிராவில நீங்க ஷூட் பண்ற மாதிரி ஒரு ஷாட் .... அஞ்சாறு கேள்விங்க . அவ்வளவுதான்'' என்றவர் திடீரென நினைவு வந்தவராக, 
"நீங்க எடுத்த - இந்த அவார்டட் ஃபோட்டோ, மேலும் சில படங்கள் நீங்களே தேர்ந்தெடுத்துக் கொடுத்திடுங்க ...'' 
"ங்கப்பா டேனியல் , பழி வாங்காதே என்னை. எடிட்டுக்கப்புறம் மொத்தம் எத்தனை செகண்ட் அலாடட் ? அதச் சொல்லப்பா முதலில் ?'' 
" என்ன சார் நீங்க , இப்பிடிக் கேட்டுட்டீங்க . உங்க அவார்ட்னால இப்ப நம்ம சேனலுக்கும் பெருமை கூடுதில்ல ? டி ஆர் பி யும் கூடும்ல ? மொத்தம் பத்து நிமிஷம் வர்ற மாதிரி எடுத்துக்குறேன் சார் , ஓ.கே ?'' 
" ஜானகி , காபி கெடைக்குமாம்மா?'' 
" இதோ தர்றேன் ...'' 
" இப்ப காபி போதும் ; நீங்க அவார்ட் வாங்கீட்டு வந்தப்புறம் பார்ட்டி கொடுத்துடுங்க சார் !'' 
டேனியல் ஒளி , ஒலியமைப்பைச் சரிசெய்து , நேர்காணல் எடுக்க வந்துள்ள ராமுவிடம் , " ராமு சார், வாய்ஸ் டெஸ்ட் எடுத்துக்குறேன் ... கேளுங்க ...'' 
ராமு, " மொதல்ல அறிவிப்பு அறிமுகம் சொல்றேன் ... எடுத்துக்குங்க அகில இந்திய அளவில் இந்த ஆண்டின் சிறந்த புகைப்படக் கலைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த திரு .விசுவநாதன் அவர்களுடன் ஒரு சிறு சந்திப்பு இதோ !'' 
" ஓ கே ... ராமு . இப்போ நம்ம சீனியர் விசு சார் நீங்க கொஞ்சம் பேசுங்க ?'' 
" கொஞ்சம் போதுமா டேனியல் ?'' 
" ஓ கே சார் ... மேடம், டிவியை ம்யூட் பண்ணீட்டேன்; சாரி ... ஓகே சார் ... டேக் போலாம் ...'' 
" வணக்கம் சார் . இந்தப் பரிசுச் செய்தி உங்க கிட்ட ஏற்படுத்திய முதல் பிரதிபலிப்பு என்ன ?'' - ராமுவின் முதல் கேள்வி . 
" வேறென்ன , மனசு பொங்கிய வருத்தம்தான் !''


(அடுத்த இதழில்)

 

http://www.dinamani.com

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

புகை(ப்) படம்

 

 
kdr1

சென்ற இதழ்  தொடர்ச்சி

வாசுதேவனின் இந்தப் பதில் கேட்டுத் திடுக்கிட்டு  நிமிர்ந்து  பார்க்கின்றனர் அனைவரும் . அடுப்படியிலிருந்து காப்பியுடன்  வெளிவந்த ஜானகி  ஒன்றும் புரியாமல் வாசுவை நோக்குகிறாள். 

"" மனசு பொங்கிய வருத்தம்தான்'' என்கிற வாசுதேவனின்  பதிலைக் கேட்டுத் திடுக்கிட்ட டேனியல், ராமு இருவரும் ஒருவரை ஒருவர்  பார்த்துக் கொள்கின்றனர். வாசுவின் பதிலால்  திகைத்து நின்ற ஜானகி,  காபியை விருந்தினர்களுக்குக் கொடுத்த பின், வாசுவிடம் நீட்டுகிறாள்.  வாசுவிடம் ,  ஜானகியின் கவிபாடும் கண்கள், "" ஏன் வருத்தம் உங்களுக்கு ?'' எனும் கேள்வியில் நீந்துகின்றன. 
   
  இந்த  வினாவிற்குப்  பதில்,  வாசுவிடமிருந்து ஒரு மாதத்திற்குப் பின்,  புதுதில்லியில் பரிசளிப்பு விழா  முடிந்த  அன்றிரவு ,   ஓர் ஆங்கில ஊடக நேர்காணலில் கிடைக்கிறது:  

"" இந்தப் பரிசு  பற்றியும் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற உங்கள் புகைப் படங்கள் பற்றியும் உங்களது  உண்மையான கருத்து என்ன ?''  

"" ஒரு புகைப்படக் கலைஞனாக , ஒரு நிருபராக  இந்தப் படம் என்னுள்  ஒரு விழிப்பை  ஏற்படுத்தியது. பரிசுக்குத் தேர்வு செய்யப் பெற்றுள்ள படம் எடுக்கப் பெற்ற சூழல் பற்றிச் சொல்கிறேன். முன்னர்  நான் பணியாற்றிய "தமிழ்க் குரல்' நாளிதழ்  ஆசிரியர் மணி சார்  ஒரு வினோத நடைமுறையை மேற்கொள்வார்.  மாநிலத்தில்  எங்களுக்கு எங்கெங்கு  பதிப்புகள் உள்ளனவோ  அந்தந்தப் பதிப்பு  நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள் இவர்களை  ஆறு மாதத்திற்கோர் முறை  ஒரு வாரம் மட்டும்  வேறெந்தப்  பகுதிக்கோ அனுப்பி  அப்பகுதிச் செய்திகளைச்  சேகரிக்கச் செய்வார். நிருபர்களுக்கு அப்போதுதான் பலவித அனுபவங்கள் கிடைக்கும்; வாசகர்களுக்கும்  பல கோணங்களில் இருந்து விஷயங்கள் கிடைக்கும் என்பது அவரது அனுபவ பாடம்.  

அப்படித்தான்  நான் செல்வபுரம் சென்றேன். ஊரின் பெயரில்தான் செல்வமிருந்தது; வறண்ட பிரதேசம்; வளமில்லா மக்கள்; பச்சைப் பசும் விவசாய நிலம் . எனினும் மண்ணையும் விண்ணையும் நம்பி  சிறு பகுதியினர் குழாய்க் கிணற்றுப் பாசனம்  செய்தனர்.  

திங்கள்  காலை   பதினோரு மணி.  மக்கள்  கூட்ட  நெருக்கம் மிகுந்த அரசு அலுவலகம். உள்ளே  மக்கள்  குறை தீர்க் கூட்டம். பெரும்பாலானோர் கரங்களில் வெள்ளைத்தாளைக் கருப்பாக்கியிருந்த மனுக்கள். நடுவே மேசை. அதன் ஒரு பக்கம் நாற்காலிகளில் அதிகாரிகள். எதிர்ப்பக்கம்  மர  பெஞ்ச்சில் மனு நீட்டிய கரங்கள் கொண்ட ஊர் மக்கள். அதிகாரிகளைச்  சுற்றிப்  பாதுகாப்பு  அரண்போல் ஊழியர்கள் , தரகர்கள், கரை வேட்டிக்காரர்கள். என் காமிராவைத் தலைக்குமேல் உயர்த்தி  , கீழ் நோக்கி  மேஜைப் பகுதியைப் ஃபோகஸ்  செய்து ஏரியல் வ்யூவாகப் படங்கள் எடுத்தேன். பின்னர் , நேரெதிர்க் காட்சிகள் சிலவும் எடுத்தேன். மக்கள் சிலரிடம் அவர்கள் கோரிக்கைகள்  பற்றியும் கேட்டுக் குறிப்புகள் எடுத்துக்கொண்டேன். அவர்களில் சிலர்,   விடிவு கிடைத்துவிடும் எனும் மிகு நம்பிக்கையுடன்   என்னிடம் செய்தி பகிர்கின்றனர்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான  பிரச்னை. பெரும்பாலும் அரசுத் துறைகள் , பொதுத் துறைகள், வங்கிப் பிரச்னைகள், சட்டம் சார்ந்த தாவாக்கள், காவல் துறை,  கடன், வட்டி, மிரட்டல், உருட்டல் எனப் பலப் பலப் பிரச்னைகள். 

குறிப்பெடுத்துக் கொண்டபின் வாசல் படியிறங்கித்  தெருவோரம் வேப்பமர நிழல் நாடினேன். வழக்கம் போல்  இரை தேடி காமிரா கண்கள் அலை பாய்ந்தன.
  
 அலுவலகத்தின் உள்ளிருந்து  நசுங்கிக் கசங்கி  சிறுவனின் கரம் பற்றி  வெளியே வருகிறார் நாற்பது வயது மதிக்கத் தக்க  விவசாயி .  மறு  கையில்  ஒரு மஞ்சள் பை. உழைத்து உரமேறிய   கறுத்த உடல்வாகு . ஆனால் , முகமெங்கும்   சோகம் கப்பியிருந்தது . கண்களில் அயர்ச்சியும் விரக்தியும் அப்பியிருந்தன. 

 "சரி, தேநீர்  அருந்தி  வந்தபின்  இவரிடம்  இவரது விஷயம் பற்றிக் கேட்போம்'  எனக் கருதி  கடை அடைந்தேன். முறுக்கு டப்பா  மூடி மேல்  பத்து  ரூபாய்த் தாளை வைத்து  "" இதோ  பத்து ரூபா  வச்சிருக்கேன், டீ குடுங்க'' நுரை  பொங்கும்  டீயை நீட்டியபடியே, "" டீயக் குடிங்க சார் மொதல்லே . காசெங்கே ஓடிடப் போகுது ?'' என்றவர் , மீதிச்  சில்லறையைத் தந்தார். டீக்கடைக்காரரின்  சொற்களும்  சுவைத்தன.  ரசித்துக்  குடித்தேன்.  

நடுத் தெருவில் அலுவலக வாசல் எதிரே  திடீரென  ""ஐயோ! ஐயோ! நெருப்பு!'' என்ற அலறல் கேட்டு   அருகே ஓடினேன். இயல்பாகக் காமிராவின் லென்ஸில்  எனது  கை ஓடியது .  சற்று முன் நான் கண்ட அந்த நாற்பது வயது நபரும் அந்தச்  சிறுவனும்  உடலெங்கும்  தீ யுடன் அங்கும் இங்கும் ஓடுகின்றனர் ... "" வேண்டாம்  அப்பா  ! அப்பா  வேண்டாம்ப்பா'' என அலறும் சிறுவனின் குரல் ஓங்கி  ஒலிக்கிறது . 
நான் தரையில் படுத்து, மண்ணுக்கும் விண்ணுக்குமாய் அச்சிறுவன்  ஓடுவதைப்  படம் பிடிக்கிறேன்.  டில்ட் செய்கிறேன் ,   மேலும்  சில கோணங்களில் படம் எடுக்கிறேன்.  

அருகிருக்கும் மக்கள் சிலர் தெருவோர  மணலை அள்ளி அவ்விருவர் மீதும் வீசுகின்றனர் . டீக்கடைக்காரர் , தம் கடையிலிருந்து  நசுங்கிய அலுமினிய  வாளித் தண்ணீரைத் தூக்கிக் கொண்டு ஓடி வருகிறார் .  
சிறுவன்  அங்குமிங்கும்  ஓடி தரையில் சரிகிறான் . அருகே , அந்த நாற்பது  வயது நபர்  விழுகிறார் . 

நான் , எழுந்து  ஓரமாகச்  சென்று  108 க்குப்  ஃபோன் செய்கிறேன்; விவரம் கூறுகிறேன். 

அதன் பின் எனது ஆசிரியருக்குப் போன் செய்து  பதட்டத்துடன்  தகவல்  தருகிறேன்.  ஒருநாள் தங்கித்  தகவல்  சேகரித்து, மறுநாள்  சென்னை வரச்  சொல்கிறார் . பகல் ஒரு  மணிக்குள்  படமும்  செய்தியும்  உடனுக்குடன்    அனுப்பச் சொல்கிறார்.  

ஜீப்புகள், வேன்கள், ஆம்புலன்ஸ்  வருகின்றன.  சிறுவனும்  அவனது  தந்தையும் மருத்துவமனைக்கு  எடுத்துச் செல்லப்படுகின்றனர். நானும்  பின் தொடர்ந்து  மருத்துவமனை  செல்கிறேன் . ஊர்க்காரர்கள்  தந்த தகவல்கள் , காவல்துறை  தரும் தகவல்கள் எல்லாம் சேகரிக்கிறேன்.  

வாங்கிய  கடனில் பெரும்பகுதி  வட்டியுடன் அடைக்கப் பட்டுவிட, மீதமுள்ள  அசலும் வட்டியும் மூன்று  மாதங்களாகத்  தரப்படவில்லை. 
 
பொய்த்துப்போன விவசாயம் , கரும்பு  விற்பனை  நிலுவைத்  தொகை என ஒரு பக்கம் சுமை அழுத்தம், மறுபக்கம் வட்டி, வட்டிமேல் வட்டி கேட்டு  மிரட்டல், உருட்டல் அதிகரிக்க , அரசு அதிகாரிகளிடம்  முறையீடு, காவல்துறையினரிடம் முறையீடு, எந்தவித  ஆதரவான  அரசு  நடவடிக்கையுமில்லா  நிலையில்   மறு பக்க அழுத்தம் ...  

 இதற்கெல்லாம்  தீர்வாய் இந்தத் தீக்குளிப்பு  விடை கொடுக்கும் என  நைந்த மனசின் முடிவு .... 

""அதெல்லாம்  சரிங்க , அந்தப்  பச்சைப் புள்ளை , அது  என்ன பாவம்  பண்ணுச்சுங்க ?  அவனையுமில்ல  தீக்கிரையாக்கிப்புட்டான்  பாவிப் பய ...'' என்ற ஊர்க்காரர்கள்  புலம்பலும்  தொடர்ந்தது . 

பகலில் படமும் செய்தியும் சென்னைக்கு அனுப்பிவிட்டேன் . 

இரவில் உறக்கமின்றி எழுந்து நடந்தேன் ... 
மறுநாள்  பகல் , ஈருயிரும் விண்ணில் பறக்கக் கரிக்கட்டைகளாய்  அந்த உடல்கள் மட்டும் வீடு திரும்ப , அனைத்து நிகழ்வுகளையும்  புகைப்படப்  பதிவாக்கிக் கொண்டு  கனத்த இதயத்துடன் சென்னை   பயணப்பட்டேன் . 

வழக்கமாய் உற்சாகம்  தரும் ஜன்னலோரப்  பயணம் அன்று  நேர்மாறானது. விட்டில் பூச்சிகளாய் கரும் இருளில் தோன்றி மறையும் ஒளிப் பூக்களைக் காண மறுத்து  ஜன்னலை மூடிவிட்டேன் . மனசென்னவோ  புயலில் தலை விரித்தாடும்  பனைமரமானது ... 

அலுவலகத்தில்  பெரும் பாராட்டு ! மிகச் சிறப்பாக இருந்தது  நான்  எடுத்திருந்த சிறுவனின் படம்  என்பதாக  ஒவ்வொருவரும்  தனித் தனியே வந்து கை கொடுத்தனர் .  

 

ஆசிரியர்  மணி சார்  என்னைத் தனியாக அவர் அறைக்கு அழைத்தார். சென்றேன். என்  தோளணைத்துத்துக் கூறினார்  :  "" விசு  ! முதல்ல  எல்லோரது  பாராட்டுக்களையும்  மனசுல வாங்கிக்குங்க .  சொல்கிற வேலையைச்  செய்யும் வெறும் யந்திரமல்ல மனுஷன். அப்படியும்  பலபேர்  எல்லாத் துறையிலும் இருக்காங்க.  ஆனா,  நீங்க  ரொம்ப   இந்த விசயத்தால  பாதிக்கப் பட்டிருக்கீங்கன்னு  நினைக்கிறேன் .  
   
உண்மைதான். நிஜமான எந்தக் கலைஞனும்  இப்படித்தான்  இருப்பான்''.

நான் அவரை இடைமறித்தேன்: "" அதில்லை சார் ! ஒரு நிமிஷம்  நான் இந்தக் காமிராவைத் தூக்கிப்போட்டுட்டு ஓடிப்போய்  அந்தப்  பயலை மட்டுமாவது  காப்பாத்தி இருக்கலாமோன்னு  தோணுது . கண்ணு முன்னாடி ஓர் உயிர்  பறிபோகுது.  காப்பாத்த முயலாமே  அதைப்  படம் பிடிக்கிறது  என்ன நியாயம்னு  புரியலை சார் . மொதல்ல  ஒரு புகைப்படக்  கலைஞனாகத்தான் லோ  ஆங்கிள் ஷாட்டா  அந்தப்  பையனை  வானுக்கு உயர்ந்து  காண்பிக்கிற வகையில்  நான் தரையில்  படுத்தெல்லாம்  அந்தக் காட்சியைப்  படமெடுத்தேன் . அந்த நெருப்பின் சூடு  அந்தக்  கணத்தில் எனக்கு உறைக்கலை.  ஆனா, அந்தப்  பையன் அங்கே  இங்கே உயிருக்கு மன்றாடி  ஓடினப்போ  நான்  ஓடிப்போய், முடிஞ்சா  காப்பாத்தியிருக்கணுமேங்கிற  கடமையுணர்வுதான் என்னைக்  கொடையுது. சார், ராத்திரி  படுத்தா  தூக்கம் வரலை. கண்ணை மூடினா  அந்தப் பையன்  உயிருக்குப்  போராடின அந்தத்  தவிப்புத்தான்  நிழலாடுது ...'' 

"" உண்மைதான்  விசு ! கூடியிருந்த  மத்தவங்க ஓடிவந்து காப்பாத்த முயன்றது  எல்லாமும் அங்கே நடந்து தானே இருக்கு . மனுஷனா  நீ  உன்  கடமையைச் செய்யலைங்கிற  குற்ற உணர்வு  உனக்கு இனியும் வேண்டாம் .  நீயும் ஆம்புலன்சுக்குப்   ஃபோன் செய்திருக்கே ...'' 

"" என்ன சொன்னாலும் எனக்கு மனசு ஆறலை சார்  ...'' 

"" விசு , முதல்ல  தண்ணியைக் குடி .... இந்தா!  இத  பாரு , இப்ப நான்  சொல்றத  நிதானமாக் கேளு .  நீ  
எடுத்தனுப்பிய  புகைப்படங்களும் , சேகரித்தனுப்பிய செய்தியும்  எவ்வளவு  முக்கியமான  தகவலை  இந்த க்கள்கிட்டே கொண்டுபோய்ச்  சேர்த்திருக்கு  தெரியுமா ?  எந்த  ஒரு  படைப்பாளிக்கும் , எத்துறைக் கலைஞனுக்கும் , எந்த வழிச் செய்தியாளனுக்கும், ஊடகக் கலைஞனுக்கும்  இந்த மாதிரி  செய்திகளை விஷயங்களைப்  பதிவு செய்து  மக்கள்கிட்டே  பகிர்ந்துக்கறதுதான் முதல்  கடமை . சக  மனுஷனா  அங்கே நீ  செயல்படலையேங்கிற  குற்ற  உணர்வை  விட, அந்த விஷயங்களைப்  பதிவு செய்ஞ்சு  அதை ஊடகம்  வழியா  பொதுமக்களுக்கும்  உரிய  துறை  அதிகார வர்க்கத்துக்கும்  கொண்டு வந்து  தந்திருக்கேங்கிற  நிலையிலே  உன்  கடமையை  நியாயமாகவே, முழுமையாகவே  செய்திருக்கே  நீ .  இனியும்  இந்த  மாதிரி  அவலப்  போக்குகள் நடவாதிருக்க  இச்  செய்தியும்  படமும்  பயன்படும்ங்கிற  நம்பிக்கை உனக்கு வேணும் .  இது  ஒரு  வணிக  நோக்கமல்ல; சமூக அக்கறைங்கிற புரிதல்  உனக்கு  வேண்டும். இந்த  அவலங்களுக்குக்  காரணகர்த்தாக்களையும்  அடையாளங்  காட்டும்     உனது இந்தப் படங்கள் !''    
  
ஊசலாடிய என் மனசை ஒரு நிலைக்குக்  கொண்டுவர  உதவியது  மணி  சாரின்  பேச்சு. இயல்புக்கு   வர முயன்ற  நான்  அவரைத்  தலை நிமிர்ந்து  பார்த்தேன். அவரே  தொடர்ந்தார்: 

"" நீ தானே விசு ,  கொஞ்ச நாள்  முன்னாடி வேற ஒரு படமும் செய்தியும் தந்தாய் . பிறந்து சில மணி நேரமேயான ஒரு பச்சிளங்  குழந்தையை  ஒரு துணியில்  சுற்றி  குப்பைத்தொட்டி அருகே யாரோ  வைத்துச்  சென்றுவிட , அந்தக் குழந்தைக்கு  எந்தத் தீங்கும்  வந்துவிடாதிருக்க , நான்கைந்து  நாய்கள்  அந்தக்  குழந்தையருகே  காவலிருந்து  குரைத்து, மக்களின்  கவனத்தைக் கவர்ந்து அக்  குழந்தையைக்  காப்பாற்ற முயன்றதை  உன் புகைப்படங்கள் தானே  வெளியுலகிற்குக் காண்பித்தன ? அப்போது   நீயுந்தானே  அருகிருக்கும் காவல் நிலையத்திற்குத் தகவல் தந்து  அக் குழந்தையைப் பாதுகாப்பாக மருத்துவமனைக்கும், பின்னர் விடுதிக்கும்  அனுப்ப  உதவினே? நீ  எடுத்த அந்தப்  படமும் தந்த செய்தியும் எவ்வளவு கவனம் பெற்றன !'' 

ஆசிரியர்  மணி சார்  சொன்னதை  ஆமெனத் தலையசைத்து  ஆமோதித்துப்  பெருமூச்சு விட்டேன்.


* * *

   ""ஹ ம் ... ஆக , பிறப்பிலும்  இறப்பிலும் ஒரு கலைஞனாகவும்  மனிதனாகவும்  எப்படிச்  செயல்பட  வேண்டும் என்பதை எனக்கு உணர்த்திய  இந்த  இரு நிகழ்வுகளின்  படங்களையும் "தமிழ்க் குரல்' ஆசிரியர்  மணி சார் தான்  மும்பைக்கு அனுப்பிவைத்துள்ளார்!  இப்போது  இந்தப்  பரிசின்  அடிப்படையே  அவர்தான்! என் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்ததும்  என் மனதைப்  பக்குவப் படுத்தியதும் ஆசிரியர்  மணி  சார் தான்.  

தீயில் கருகிய சிறுவனின் புகைப்படமும் ,  நாய்கள்  புடை சூழ  புதரருகே  கிடந்த பச்சிளங்  குழந்தையின் புகைப்படமும் தான்  பரிசுக்கு  உரியவை  எனத் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளன.  இவையிரண்டுமே  இரு வேறு  நிலையில் எனக்கு வருத்தம் தந்தவை தானே !  இந்தப் பரிசும்  பாராட்டும்  எனக்கு மகிழ்ச்சி  அளித்தாலும்  அதற்குரிய  காரணிகளாக அமைந்த  இந்தச் சமூக நிலையும்  எனக்கு வருத்தம் தந்தவைதானே,  சொல்லுங்கள் ?''  

இந்தக்  கேள்வி கேட்கும்  விசுவநாதனின்  முகத்தில்  நேர்காணல் நிறைவு கண்டது ! கேள்விகள் மட்டும் கேள்விகளாகவே !

 

 

http://www.dinamani.com

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகள் சேகரிக்கும் நிருபரோ அல்லது புகைப்படக் கலைஞனோ கண்ணெதிரே நடக்கும் சம்பவங்களுக்கு ஒரு சாட்சியாகவே இருக்கின்றார்கள்  என்பதை இந்தக் கதை சொல்ல முயற்சிக்கின்றது.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞனின் மனதின் மகிழ்ச்சியையும் மீறி மனிதம் உயிர்பெற்றுள்ளதை இக்கதை அழகாகச் சொல்லியுள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.