Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும்

Featured Replies

நல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும்

 

 
 

நல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும்

நுஜிதன் இராசேந்திரம்-

இலங்கையில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தால் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளமையால் பல ஆண்டுகளாக அந்த காணிகளை நம்பி தமது வாழ்வாதரத்தை மேற்கொண்டு வந்த விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைத்து அவர்கள் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர். இத்தகைய செயற்பாடு நல்லிணக்க முயற்சிகளை வெகுவாகப் பாதித்துள்ளது மட்டுமன்றி, இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனங்களுக்கும் வழிவகுக்குத்துள்ளது. ஆனாலும் இலங்கையின் நிலைமாறுகால நீதி தொடர்பான கலந்துரையாடல்கள் சர்வதேசச் சட்டத்தின் கீழ் காணி அபகரிப்பின் பாரதூரமான தன்மையினை முழுவதுமாக அடையாளப்படுத்திக் கொள்ளத் தவறியுள்ளமை இங்கு கவனிக்கதக்கது.

உலக வரலாற்றில் ஆயுதப் போராட்டங்களின் போது பொது மக்களின் காணிகளை அபகரிப்பது என்பது பொதுவான ஒரு தன்மை மட்டுமன்றி சிறுபான்மை இனங்களுக்கு எதிரான பாகுபாட்டுக் கொள்கைகளின் ஒரு பகுதியாகவும் இருந்தாலும் கூட முள்ளியவாய்கால் பேரவலத்திற்கு பின்னரான காலகட்டத்திலோ அல்லது நிலைமாறுகால நீதிப்பொறுப்புக்கூறல் செயன்முறையின் போதோ இவை தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. உண்மை அறியும் ஆணைக்குழுக்கள் குறிப்பாக எல்சல்வடோர் நாட்டின் உண்மை அறியும் ஆணைக்குழுவானது காணிகளை அபகரிப்பதானது அனேகமாக ஆயுதப்போரின் நீடியகால விளைவுக்கான மூலாதாரக் காரணிகளுள் ஒன்றாக இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தது. இத்தகைய செயல்கள் சர்வதேசக் குற்றச்செயல்களாகப் பொதுவாகக் கருதப்படுவதில்லை. இவை குற்றவியல் வழக்குகளாக கருதப்படுவதும் இல்லை. இதனால் இதனைச் செய்பவர்களுக்கு தண்டனை வழங்காமை நிலவிவந்துள்ளது. ஆனால், அண்மைய விருத்தியாக்கங்களைப் பார்த்தால், காணியை அபகரிப்பது சர்வதேசக் குற்றச்செயலாகக் கருதப்படலாம் என்பதையிட்டதான வளர்ந்து வரும் ஏற்புடைமை உருவாகி வருவதாகத் தோன்றுகிறது. இந்த விடயமானது இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இடம்பெற்று வந்த செயற்பாடுகளின் விளைவாகும்.

முன்னர் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டிருந்த தனியார் காணிகளில் சில 2015 ஆம் ஆண்டு முதல் விடுவிக்கப்பட்டது போன்று காட்டிக் கொண்டாலும் கூட, வடக்கு -கிழக்கில் இராணுவம் அபகரித்துள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. எனவே, இலங்கையின் நிலைமாறுகால நீதிப் பொறிமுறையானது காணி அபகரிப்பு விடயம் தொடர்பில் சரியாக கையாள வேண்டும். அத்தகைய நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதையும், அந்தக் குற்றச்செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் அவற்றுக்கு பொறுப்புகூற வழியை ஏற்படுத்துவதையும் வெளிப்படையான நோக்கங்களாகக் கொண்டே அது இடம்பெறவேண்டும்.

ஆனாலும் கிட்டத்தட்ட 9,000 ஏக்கர் காணிகளை விழுங்கியிருக்கும் இலங்கை அரசாங்கம், மீள்குடியேற்றம் முற்றிலும் முடிவடைந்திருப்பதாக கூறுகிறது. ஆக்கிரமித்து வைத்துள்ள காணிகளை மீண்டும் வழங்கப்போவதில்லை என்ற தீர்மானத்தில் இலங்கை அரசும், அதன் இராணுவமும் இருப்பது போன்றே தோன்றுகின்றது. கேப்பாபிலவு, வலிகாமம், பலாலி, வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாம்கள் அமைந்திருந்த காணிகள், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் என பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்றும் படையினர் வசமே உள்ளன.

இந்நிலையில் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கையில் எந்தவித மாற்றத்தையும் அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை. சிறு சிறு சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு அவை பிரதான இராணுவ முகாமினுள் கொண்டு செல்லப்பட்டுள்ளனவே தவிர, பிரதான முகாம்கள் அகற்றப்பட்டு அந்த நிலங்கள் மக்களிடம் இன்று வரை கையளிக்கப்படவில்லை. அத்துடன் தமிழர் பகுதிகளில் இப்போது ஆக்கிரமிப்பாளர்களின் எண்ணிக்கையோ நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. இராணுவச் சிப்பாயாக இல்லாமல் தர்மத்தைப் போதித்த புத்தராகவும், அரசமரங்களாகவும் இந்த எண்ணிக்கை தமிழர்களின் பண்பாட்டு இடங்களில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போர் முடிந்த கையோடு தமிழ் மக்களை தோல்வியடைந்தவர்களாகப் பார்த்த இலங்கை அரசும், பௌத்த பீடங்களும் தமிழ் பேசும் மக்களை ஆக்கிரமித்து அடிமைகளாக, தங்களது கண்காணிப்பில் வைத்திருப்பதற்கான திட்டத்தை திட்டமிட்டு நன்கு மேற்கொண்டு வருகின்றது. இது கடந்த மஹிந்த அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பமாகிவிட்டது.

தமிழர் நிலப்பகுதியில் இராணுவத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமும், மக்களின் காணிகளில் பாரிய இராணுவ முகாம்களை நிறுவுவதன் மூலமும், தமிழர் காணிகளை அபகரிப்பதன் மூலமும், அவர்களது பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்வதன் மூலமும், சிவில் விடயங்களில் இராணுவம் தலையிடுவதன் மூலமும், தமிழ் மக்களை தமது கட்டுக்குள் வைத்திருக்கலாம் என தென்னிலங்கை கருதுகிறது. இந்தநிலையால் தமிழ் மக்கள் இன்னமும் இராணுவத்தின் முற்றுகைக்குள் இருப்பதாகவே உணர்கின்றனர்.

இராணுவக் கட்டமைப்பை பலப்படுத்தும் அதேவேளை அதனோடு சேர்ந்து ஆக்கிரமிப்பின் சின்னமாக புத்தரையும், பௌத்த விகாரைகளையும், சிங்கள குடியேற்றங்களையும் தமிழர் நிலப்பகுதிகளில் அரசாங்கத்துடன் இணைந்து இராணுவம் உருவாக்கி வருகிறது. தமிழர் பகுதிகளில் இராணுவத்தினர் அமைத்திருக்கும் ஒவ்வொரு இராணுவ முகாம்களிலும் 7 – 9 வயது கொண்ட அரச மரத்தின் கீழ் கெளதம புத்தர் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் இலங்கை அரசு திட்டமிட்டு வரலாற்றை மாற்றியமைக்க முயல்கிறது. அத்துடன், பிரதான பாதைகளின் இருமருங்கிலும், சிங்கள மக்களே வசிக்காத மற்றும் சிங்கள மக்கள் வசித்தனர் என்ற வரலாறே இல்லாத இடங்களில் இராணுவத்தினர் இருத்திய புத்தர் தனியாளாக அசையாமல் ஆட்சி செய்து வருகிறார். வடக்கு, கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான விகாரைகளும், புத்தர் சிலைகளும் இராணுவ பிரிகேட் பிரிவுகளால் நிறுவப்பட்டவை. எதிர்காலத்தில் இந்தப் பகுதிகளில் சிங்கள மக்கள் பூர்வீகமாக இருந்தார்கள் என்பதை காட்டுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றது. இராணுவச் சிப்பாய்கள் போரின் போது நடத்திய சாகசங்களை பார்ப்பதற்காக தென்னிலங்கையிலிருந்து வரும் மக்கள் தங்கிச் செல்லக்கூடிய வகையிலேயே தான் இதில் ஒரு சில விகாரைகள் கட்டப்பட்டிருக்கின்றன. தாங்கள் தான் இந்தப் பகுதிகளிலும் பூர்வகுடிகளாக இருந்தவர்கள் என்ற மனோநிலையை தென்னிலங்கையிலிருந்து வரும் மக்களுக்கு இந்த விகாரைகள் வழங்கியும் வருகின்றன.

இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும், தமிழர்களின் காணிகளை திட்டுமிட்டு கையகப்படுத்தும் செயற்பாடு வலுவடைந்து கொண்டுதான் இருக்கின்றது. தற்போதும் 2009 போரின் பின்னரான காலப்பகுதியில் மட்டுமன்றி ஆட்சி மாற்றத்தின் பின்னரும் கூட வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பெருமளவிலான பௌத்த விகாரைகள் தோற்றம் பெற்றுள்ளதுடன், சிங்களக் குடியேற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வடக்கில் கனகராயன் குளம், மாங்குளம், சேமமடு, கொக்கிளாய், திருக்கேதீஸ்வரம், நயினாத்தீவு, நாவற்குழி ஆகிய இடங்களில் பெளத்த விகாரைகள் புதிதாக முளைத்துள்ளன. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, இறக்ககாமம், மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பகுதிகளிலும் பௌத்த விகாரைகள் தோற்றம் பெற்றுள்ளமையை நாம் அவதானிக்க முடிகின்றது. அத்துடன் நையினாதீவில் 67 அடி உயரமான புத்தர்சிலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாவற்குழியில் ‘சிங்கள ராவய’ என்ற பெயரில் சிங்களக் குடியிருப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பௌத்த விகாரை அமைக்கும் பணியும் இடம்பெற்று வருகின்றது.

அத்துடன், வடக்கு- கிழக்கு பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து நிறுவப்பட்ட வண்ணம் உள்ளன. வடக்கிலுள்ள அரச காணிகளிலும், தமிழ் மக்களின் காணிகளிலும் சிங்கள மக்களை குடியேற்றும் நடவடிக்கை நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. அண்மையில் கொக்கச்சான்குளம் என்ற கிராமம் கலாபொபஸ்பெவே- 1, கலாபொபஸ்பெவே-2, நாமல்கம என மூன்று கிராமங்களாக சிங்களத்தில் பெயர் மாற்றப்பட்டு 3000 இற்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.

வவுனியா, கொக்குவெளியில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதுடன், கொக்குவெளி என்ற தமிழ் பெயர் சிங்களத்தில் கொக்கெலிய என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. தமிழர்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதுடன் நல்லிணக்க கிராமம் என்னும் பெயரில் புதிய குடியேற்றமும் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, கொக்கிளாய் மற்றும் நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களின் கரைவலைப்பாட்டுப் பகுதிகளில் சிங்கள மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாகபுர, சிங்கபுர, 13ஆம் கொலனி என்று முல்லைத்தீவின் எல்லையில் சில சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 13 ஆம் கொலனிப் பகுதியை அண்டி இப்பொழுது புதிதாக சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு அவை திருகோணமலையின் தென்னைமரவாடியை நோக்கி நகர்கின்றது. ஒதியமலையை அண்டிய வவுனியாவின் எல்லைக் கிராமங்கள் கஜபாகுபுர ஆக மாற்றப்பட்டுள்ளது. ஒதியமலை பகுதியை நோக்கி நாளுக்கு ஒரு வீடு என்ற வகையில் சிங்களக் குடியேற்ற முன்னேற்றங்கள் நடந்து வருகின்றன. வவுனியா மாவட்டத்தின் எல்லைப் புறம் முழுவதும் சிங்களக் குடியேற்றங்களால் சுற்றி வளைக்கப்படுகின்றது.

மன்னார் முசலிப் பகுதியிலும் சிங்களக்குடியேற்றம் நடைபெற்று வருகின்றது. மன்னாரில் நரிக்காடு என்ற இடத்தில் 50 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். மடுவில் நூறு சிங்களக் குடும்பங்கள் வரையிலும், மணலாற்றில் 2 ஆயிரம் சிங்களக் குடும்பங்கள் வரையிலுமாகக் குடியேற்றப்பட்டுள்ளார்கள். போரின் பின்னர் இடம்பெற்ற சட்டவிரோதக் குடியேற்றங்களே இவை. அத்துடன், யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, காங்கேசன்துறை பகுதியில் குமாரகோவில் காணப்பட்ட இடத்தில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் ‘கமுணு’ விகாரை என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்குள் குமாரகோவில் பிள்ளையார் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. வலி வடக்கு வீமன்காமம் பிள்ளையார் ஆலயம் அழிக்கப்பட்டு அவ்விடத்தில் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் 30 வருடங்களாக இருந்து வந்த பிள்ளையார் கோவிலின் காணியை கடந்த 8 வருடகாலமாக பௌத்த ஆக்கிரமிப்பாக மாற்றி விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்மையில் கிளிநொச்சி கனகாம்பிகை ஆலயத்தின் மூன்றாம் வீதியை ஆக்கிரமிக்கும் வகையில் சுவர் அமைக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

மஹிந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் தற்போதைய நல்லாட்சி எனக் கூறிக் கொள்ளும் மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் காலத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. கடந்த வருடம் வடமாகாணத்தில் மொத்தமாக 13 பௌத்த விகாரைகளே அமைக்கப்பட்டதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

எனவே வடக்கு கிழக்கில் மகிந்த ஆட்சியிலும் சரி, நல்லாட்சியிலும் சரி திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகள் தொடர்கிறது. இதனை தமிழ் மக்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடாகவே பார்க்க முடிகிறது. தமிழர்களுக்கான நியாயமான அரசியல் தீர்வு ஒன்று கிடைக்காத வரையில், பெரும்பான்மை இனத்தவர்களின் ஆதிக்கம், வட -கிழக்கு பகுதியில் அதிகரிக்கப்படும் என்பது மறுக்கப்பட முடியாத கசப்பான உண்மையாகும். தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த இடங்களில் தற்போது அவர்களுக்கு சொந்தம் என்று கூறிக்கொள்வதற்கு ஒரு அடையாளம் கூட இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் தோன்றத்தொடங்கியுள்ளது.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது பல உயிர்களையும், உடைமைகளையும் இழந்த தமிழ்மக்கள் தற்போது உரிமைகளையும் இழக்க தொடங்கியுள்ளனர். தற்போது மிச்சம் இருப்பது அவர்களின் பூர்வீகநிலங்கள் மட்டுமே. அவற்றையும் அவர்களிடமிடமிருந்து தட்டிப்பறிக்கும் செயற்பாட்டையே நல்லாட்சி என கூறிக்கொள்ளும் அரசாங்கமும், மகாநாயக்கபீடங்களும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. சொந்த நிலங்களை விட்டுவிடுமாறும், அதை மீட்டுத்தருமாறும் வடக்கிலும், கிழக்கிலும் எத்தனை போராட்டங்கள், எத்தனை ஆர்ப்பாட்டங்கள், எத்தனை சந்திப்புக்கள், 500 நாட்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்படுகின்றன. ஆனாலும் இவை இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் தமிழ் அரசியல் தலைமைகளிற்கும், சர்வதேசத்திற்கும் தெரிவதாக தெரியவில்லை. இவ்வாறு தொடரும் பட்சத்தில் மீண்டுமொரு இனமோதலிற்கே இவை இட்டுச்செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

வடக்கில் சிங்­களக் குடி­யேற்­றங்­களை தடுக்க வேண்டும் என்று வெளியே குரல் கொடுக்கின்ற அரசியல் கட்சிகள் அமைப்பு ரீதியாக ஒன்றிணைய வேண்டும். அதனைத் தடுப்பதற்கான ஆக்கபூர்வமான செயல்மு­றை­களை வரைய வேண்டும். ஆனால், வடக்கு கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதி­களால் கட்சி அரசியல், கொள்கை வேறுபாடுகளை மறந்து பொது நோக்கத்துக்காக ஒன்றி­ணைய முடியாதுள்ளமை இங்கு வேதனைக்குரிய விடயமாகும்.

சிங்கள பௌத்தமயமாக்கல் என்பது, நன்கு திட்டமிடப்பட்ட ஒரு மூலோபாயம். அந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு தமிழர் தரப்பும், நன்கு திட்டமிடப்பட்ட முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. சிறியளவிலான போராட்டங்களினால் மாத்திரம் இது சாத்தியப்படாது. அதற்கும் அப்பால் மக்கள் மற்றும் தமிழ் தலைமைகளின் ஒருங்கிணைந்த திட்டமிட்ட ஒரு முயற்சி தேவை. அந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு தமிழ் தலைமைகள் தயாராக இருக்கிறதா என்பதே தற்போதைய கேள்வி.

http://www.samakalam.com/செய்திகள்/நல்லாட்சியும்-பிரதான-அபி/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.