Jump to content

Recommended Posts

ஆரியர் 'யக்ஞமும்' தமிழரின் 'வேள்வி'யும் - குறள் ஆய்வு-3 -பகுதி3

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

தொல்லியல் அறிஞர் முனைவர் நாகசாமி அவர்களின் "Thirukkural - An Abridgement of Sastras"  என்னும் நூலுக்கு முறையான பதில் விளக்க நூலின் பகுதிகளையே யாழ் இணையத்தில் கட்டுரைகளாக வெளியிட்டு வருகின்றேன். உலகத் தமிழர்களின் பின்னூட்டத்தைப் பெற்று, முழுமையான நூலாக மேம்படுத்தும் என் முயற்சிக்கு உறுதுணையாக விரிவான பின்னூட்டம் அளித்த தேவப்பிரியா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. விரிவான தங்கள் கருத்துக்கு நான் எழுதிய பதிலின் பின்பகுதியை குறள் ஆய்வு-3ன் பகுதிக் மூன்றாம் கட்டுரையாக வெளியிடுகின்றேன். தொடர்ந்து பின்னூட்டக் கருத்துக்கள் எழுத தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் வேண்டுகின்றேன்.

கடந்த கட்டுரையில் குறித்தவாறு, சங்க இலக்கியங்களும், திருக்குறளும் பார்ப்பான், அந்தணன் என்றே பெரும்பாலான இடங்களிலும், ஐயர் என்று அரிதாகவும் குறிப்பிடப்படும் சொற்களுக்குத் தற்காலத்தில் பிராமணன் என்ற பொருள் கொள்ளவே ஆரியர்கள் பெரும்முயற்சி எடுக்கிறார்கள்.  

தமிழ்ப் பார்ப்பனர்களும் ஆரியப் பிராமணர்களும் ஒன்றல்லர்

ஆரியப் பிராமணர்கள் தமிழகத்தில் வாழ்ந்துவந்தாலும் அவர்கள் ஆரியப் பிராமணர்களே தவிர, தமிழ் அந்தணர்களோ, பார்ப்பனர்களோ ஒருக்காலும் ஆக முடியாது என்று தேவப்ரியா உள்ளிட்ட அன்பர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மரபை அழிக்க பார்ப்பனர்களைக் கருவியாக்கும் ஆரியப் பிராமணர்கள்

தமிழ்ப் பார்ப்பனர்களும், அந்தணர்களும் வேள்விக்காக உயிர்க்கொலையில் ஈடுபடாது, மாஉருண்டை போன்றவை மட்டுமே அவிர்பாகமாகத் தந்து ஆரியவேதங்கள் ஓதி வேள்வி இயற்றும், கொல்லாமை கைக்கொள்ளும் தமிழர்கள். ஆதியில் இவர்கள் அறியாமையின் விளைவாக, எவ்வாறு கொலைவேள்வி இயற்றும் ஆரியவேதத்தால் கவரப்பட்டார்களோ, அவ்வாறே, தற்காலத்தில் தம்மைப் பிராமணன் என்று அழைப்பதைப் பெருமையாகக் கருதுவதும், பார்ப்பனன், பார்ப்பான், அந்தணன் என்றழைப்பதை இழிவாகவும் கருதும் போக்கிலும் உள்ளனர். ஆனால், ஆரியப் பிராமணர்களோ, தமிழ் மரபையே செரித்து விழுங்கும் தமது செயலுக்குத் தமிழ்ப் பார்ப்பனர்களைக் கருவியாக்குகின்றார்கள்.

கொல்லாமையே வள்ளுவரின் அறத்திற்கு ஆணிவேர்

வள்ளுவர் கொல்லாமையை 'நீத்தார்' என்னும் துறவிகளுக்குத்தான் சிறப்பாகக் கூறினாரே தவிர, ஏனையோர்க்கு கொல்லாமை பொதுநிலையில்தான் கூறப்பட்டது என்று கூறியுள்ளீர்கள். இது வள்ளுவரின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறானது. கொல்லாமையே வள்ளுவர் வலியுறுத்தும் 'அறத்தின்' ஆணிவேர். இதுகுறித்து விரிவாக எழுத உள்ளேன்.

'யாகம்' என்னும் ஆரியயக்ஞமும் குறள் கூறும் 'வேள்வி'யும் முற்றிலும் வேறானவை!

துறவுநிலை அடையாத ஒருவனுக்கு இறைவனை அடையும் வழி வேள்விகள் செய்தலே என்று கூறி, அதற்குச் சான்றாக விருந்தோம்பல் அதிகாரத்திலிருந்து குறட்பாக்களை காட்டியுள்ளீர்கள். விருந்தோம்பல் என்னும் திருக்குறள் அதிகாரத்தில் வரும் குறட்பாக்களில் சொல்லப்படும் வேள்வி வேறு; ஆரிய வேதமுறையில் 'யக்ஞம்' என்னும் வேள்வி வேறு என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும்.

வைதீகம் என்னும் ஆரிய வேதவேள்விகள் கடவுளரை மகிழ்வித்து உலகியல் பலன்கன் பெறுவதன் பொருட்டே நிகழ்த்தப்படுவன என்பதை அறிதல் நலம். அவ்வேள்விகள் மூலம் சுவர்க்கம் என்னும் இந்திரலோக சுகங்களே உச்சத்தில் பேசப்படுவன. இக்குறைபாட்டைப் போக்கவே 'வேதத்தின் முடிவு' என்னும் 'வேதாந்தம்' உருவானது. வேதவேள்விகள் 'பரம்பொருள்' என்னும் 'இறைவனை' அடைய உதவாது.

வேள்வி-தோற்றப்பிழையும் கருத்துப்பிழையும்

வள்ளுவர் ஆரியவேள்விகளைச் சிறப்பித்துக் கூறுவதாகத் தோன்றுவதெல்லாம் தோற்றப்பிழையே! அங்ஙனம் கருதுவதும் கருத்துப்பிழையே! 'வேள்வி' என்பது ஆரியச் சார்பற்ற சொல், தூய தமிழ்ச்சொல். விருந்தோம்பல் அதிகாரத்தில் வரும் முதற் குறளைக் காண்போம்:

இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு - திருக்குறள்:81

மேற்கண்ட திருக்குறளுக்குப் பொருள் கொள்ளும் முறை, 'இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம், விருந்து ஓம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு' என்பதாகும். அதாவது, இல்லறத்தில் மனைவி, மக்களைப் பேணிக் காத்து அவர்களுடன் வாழ்வதே, விருந்தினர்கள் தம் இல்லத்துக்கு வரும்பொழுது, அவர்களையும் விரும்பிப் பேணி உதவுதல் பொருட்டேயாகும் என்பதே.

இக்குறளில் வரும் 'வேளாண்மை' என்னும் சொல் விரும்பிப் பேணுதல் - உதவுதல் என்னும் பொருளில் வரும். வேளாண்மை = வேள்+ஆண்மை; வேள் = விருப்பம்; ஆண்மை = ஆளும் தன்மை; வேளாண்மை என்பது விருப்பத்தை ஆளும் தன்மை. எப்படி? விருப்பம் கொண்டவரைப் பேணுதல், உதவுதல், துனையிருத்தல் முதலியவற்றால் ஆளுதல் தன்மை.

'முருகவேல்' வேறு!  'முருகவேள்' வேறு!

'முருகவேல்' என்றால் முருகப்பெருமானின் கையிலுள்ள வேல் என்று பொருள்; 'முருகவேள்' என்றால் 'விரும்பத்தக்க அழகுடையோன்' என்பது பொருள். 'முருகு' என்றால் அழகு என்றும், 'வேள்' என்றால் 'விரும்பத்தக்க' என்றும் பொருள்.

தமிழில் 'வேள்' என்ற சொல்லுக்கு 'மண்' என்னும் பொருளும் உண்டு.
வேள் - மண்; வேளாண்மை - மண்ணை ஆளுதல் என்பது, மண்ணை நன்செய் ஆக்கி, வித்திட்டுப் பயிர்செய்து, உலகோர்க்கு அளிப்பது.; பயிர் செய்பவர் வேள் + ஆள்பவர் = வேளாளர்;
வேளாண்மை என்னும் சொல் மண்ணை உழுது ஆளும் தன்மைக்கும், விரும்பிப் பேணி உதவும் தன்மைக்கும் இணைப்பாகச் சொல்லப்படுவதால், உழவரது இயல்பாகவே 'வேளாண்மை' என்ற சொல் வழங்குகின்றது. 'வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்' (திரிகடுகம் பாடல்-12, வரி-2) என்னும் நல்லாதனார் வழங்கிய பழமொழி ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

'வேள்வி' - 'வேள்' என்னும் சொல்லின் அடியாகத் தோன்றிய தூய தமிழ்ச்சொல்

'வேள்வி' என்னும் சொல் 'வேள்' என்னும் இச்சொல்லின் அடியாகத் தோன்றிய சொல். விருப்பத்துடன் கொடுத்தல் என்பதும் விருப்பத்துடன் கொடுத்து உதவுதல் என்பதும் தமிழ் வேள்வி; ஆரியர்கள் ஆரியமுறையில், 'யக்ஞம்' என்னும் 'உயிர்க்கொலை யாகத்'தைத் தமிழரிடையே எதிர்ப்பு வாராமல் செய்வதற்கு, 'வேள்வி' என்னும் தமிழ்ப் பெயரைத் தேர்ந்து எடுத்துக்கொண்டனர்; ஆரியரின் 'உயிர்க்கொலை யக்ஞம்' 'கடவுள் வேள்வி' என்ற பெயர் மாற்றம் பெற்றது; ஆரியரின் 'வேதக்கல்வி'க்கு பிரம்மவேள்வி' என்று பெயர்மாற்றமும், 'வாயச பலி' (காக்கைக்குப் படையல் வைப்பது) முதலான  'பூதயக்ஞம்' என்பதற்கு 'பூதவேள்வி' என்று பெயர் மாற்றமும் செய்தனர்.

விருந்தோம்பல் பயன்கருதாத் தமிழ் 'அறம்'! - 'அதிதி யக்ஞம்' பலன்பெறும் நோக்குடன் நிகழ்த்தும் ஆரியரின் சமயக்கூறு!

தமிழர்கள் செய்யும் விருந்தோம்பல் பயன்கருதா 'அறம்' சார்ந்த தமிழரின் இல்லறவியல் கூறு; ஆரியரின் 'அதிதி யக்ஞம்' பலன்பெறும் நோக்குடன் நிகழ்த்தும் சமயக்கூறு 'அதிதி வேள்வி' என்று பெயர் மாற்றம் பெற்றது. தமிழரின் விருந்தோம்பல் என்னும் பயன்கருதாப் பண்பாட்டுக்கூறு, ஆரியரின் பலன்பெறும் நோக்குடன் நிகழ்த்தப்பெறும் 'அதிதிவேள்வி'யுடன் செரிமானம் ஆகிப் போனது. இப்போது, தமிழனுக்கு விருந்தோம்புதல் என்னும் பண்பாட்டைக் கற்றுக்கொடுத்தவன் ஆரியனே என்னும் வாதம் வலுவாகிவிட்டது. ஆரியப் பிராமணர்களின் பண்பாட்டுப் படையெடுப்பால் தமிழர் பண்பாடு தன்னிலை கெட்டது இப்படித்தான் என்று அறிக.

'தென்புலத்தார்' தமிழர் மூதாதையர்!

கழக(சங்க) இலக்கியங்கள் கூறும் தமிழரின் மூதாதையர் வாழ்ந்த இடங்களான  'குமரிக்கண்டம்', 'பஃறுளியாறு', 'குமரியாறு', கடல்கோள் என்பவை தற்போதுள்ள தமிழ் மண்ணுக்கும் தென்புலத்தில் உள்ளது. தம் தென்புலத்துக் குமரிக்கண்டத்து முன்னோர்களை நினைந்து, விருப்பமுடன் படையலிட்டு, தமிழர்கள் நிகழ்த்திவந்த நினைவேந்தல் பயன்கருதா நன்றி சொல்லும்'தென்புலத்தார் வேள்வி' ஆகும்.  ஆரியரின் 'பிதுரர்-யக்ஞம்' திட்டமிட்டுத் 'தென்புலத்தார் வேள்வி' என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு, தமிழரின் பண்பாட்டு மரபு செரிக்கப்பட்டுவிட்டது.

தமிழர்கள் மேற்கண்ட ஐந்துவகைப் பண்பாட்டு மரபுகளையும் இயல்பாகப் பயன்கருதா 'இல்லற அறம்' என்ற வகையில் கடைப்பிடித்து வந்தனர். மேற்கண்ட ஐவகைத் தமிழர் பண்பாட்டு மரபுகளும் இப்போது ஆரியரின் சமயக்குறியீடான 'பஞ்சயக்ஞம்' என்னும் ஐந்து சமய வேள்விகள் என்னும் ஆரியசமயப் பண்பாடாக உருமாற்றம் பெற்றுவிட்டது. வள்ளுவர் காலத்தில் சமயம் கருதாத, இல்லறம் சார்ந்த இப்பண்பாட்டு மரபுகளுக்கு உரையெழுதும் உரையாசிரியர்கள் ஆரியச்சார்பு கொண்டு உரையெழுதி, தமிழர் பண்பாட்டு மரபுகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள். ஆனால், அறம் என்னும் உண்மை என்றும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல்திறன் பெற்றது என்பதை ஆரியர்கள் மறந்துவிட்டார்கள்.  

தமிழக மக்களிடம் தங்கள் ஆரிய வேதவேள்வி வணிகத்தைத் திறம்பட விளம்பரப்படுத்திச் சந்தைப்படுத்திய ஆரியப்பிராமணர்கள், வேள்விகள் செய்வதன் மூலம் ஒருவன் 'இன்னென்ன பலன்கள்' பெற முடியும் என்று மூளைச்சலவை செய்து பெரும் பொருள் ஈட்டி ஏமாற்றிவந்தனர். இப்போது தாங்கள் குறிப்பிட்ட குறட்பாக்களுக்குத் தமிழில் பொருள் காண்போம்.

விருந்தோம்பிய 'அன்னமிட்ட கை'

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். - குறள்: 87

'வேள்விப் பயன் இனைத் துணைத்து என்பது ஒன்று இல்லை; விருந்தின் துணைத் துணை' என்று பொருள் காணவேண்டும். விருந்தினரைப் பேணுதல்(உபசரித்தல்) என்னும் வேளாண்மையின் பயன் இவ்வளவு பெறும், இவ்வகையில் சேரும் என்று ஓர் அளவோ, மதிப்பீடோ செய்ய இயலாத அளவு உயர்ந்தது. பேணப்படும் விருந்தினரின் தன்மை, தகுதி ஆகியவற்றை நோக்காது, அவர்க்குப் படைக்கப்பெறும் விருந்தின் தன்மையையும், சிறப்பையும் பொறுத்தது, விருந்தோம்பிய வேளாண்மையினால் வரும் நன்மை.என்கிறார் வள்ளுவர்.

மேனாள் தமிழக முதல்வர் பாரத்ரத்னா. ம.கோ.ரா.(எம்ஜியார்) பொருளீட்டத் தொடங்கிய இளமைக்காலம் தொட்டு, விருந்தினர் தகுதி நோக்காது, பயன்கருதாது, சிறப்புடன் விருந்தோம்புதலில் தலைசிறந்தவர் என்று தமிழகமெங்கும் புகழ் பெற்றவர். அக்காரணம்பற்றியே 'வள்ளல்' என்றும், 'கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்', 'அன்னமிட்ட கை' என்றும் தமிழர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர். பின்னாளில், அவர் அரசியல் புகுந்தபோது, அவர் பெற்ற நிலைத்த செல்வாக்குக்கு அவர் வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்த பயன்கருதா  விருந்தோம்பல் பண்பு அரணாக இருந்ததை நாம் கண்கூடாகக் கண்டோம். இப்பயனே 'விருந்தின் துணைத்துணை' என்றார் வள்ளுவர்.

விருந்தோம்பாதார் தனிமரமாவார்!

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார். குறள்: 88

'விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார், பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர்' என்று பொருள் கொள்க. விருந்தோம்புதல் என்னும் வேளாண்மை அறம் செய்யாமல், பணம், பொருள் ஈட்டிப் பாதுகாத்துத் தாமே தனியராய் வாழ்பவர், 'ஓர் ஆதரவும் இல்லாதவராக ஆகிவிட்டோமே' என்று பிற்காலத்தில் வருந்துவர். விருந்தோம்புதல் சமூக அறம் மட்டுமன்று; மனநலனையும் குணநலனையும் பேணும் தனிமனித அறம்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு. குறள்: 86

'செல்விருந்து ஓம்பி, வருவிருந்து பார்த்திருப்பான், வானத்தவர்க்கு நல்விருந்து' என்று பொருள் கொள்க. தம் இல்லத்திற்கு வந்த விருந்தினரை நன்கு பேணியும், அவர் சென்றபின், மீண்டும் தன் இல்லத்துக்கு வரமாட்டார்களா என்று எதிர்பார்த்துக் காத்திருப்பவனைக் கண்டு, இத்தகையவன் நம் இல்லத்திற்கு விருந்தினனாக வரவேண்டும் என்று வானத்தவர்கள் காத்திருப்பார்கள் என்கிறார் வள்ளுவர். வானத்தவர் அல்லது தேவர் என்னும் கற்பனை வழக்கு ஆரியவியல் கற்பனையால் தமிழ் நூல்களிலும் வள்ளுவர் காலத்திலேயே வந்திருக்கவேண்டும். 'வானத்தவர்' என்னும் ஆரியர்களின் கற்பனை வழக்கை இங்கு உயர்வு நவிற்சி கருதி கையாளுகின்றார் திருவள்ளுவர்.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல். குறள்: 84

'முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் அகன் அமர்ந்து செய்யாள் உறையும்' என்று பொருள் கொள்க. முகத்தில் மகிழ்ச்சியுடன் தகுதியுடைய நல்-விருந்தினரைப் பேணுபவன் இல்லத்தில் மன மகிழ்ச்சியுடன் செய்யவள்(செல்வத்தின் தெய்வ உருவகம்-இலக்குமி) வீற்றிருப்பாள். இங்கு, செல்வத்தின் இறைவடிவத்தை 'செய்யாள்' - அதாவது, செயலை(முயற்சி) அடிப்படையாகக் கொண்டு, அதனால் விளையும் செல்வநிலையைக் குறித்தார் வள்ளுவர்.

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. - குறள்: 413
.

'இப்புவியில், செவிக்கு உணவாகிய கேள்விச்செல்வம் மூலம் அறிவுபெறும் வாய்ப்பு உடையவர்கள், அவியுணவு பெறும் ஆன்றோரான வானவர்களுக்கு ஒப்பாவர்' என்கிறார் வள்ளுவர்.   இவ்வாறு எடுத்துக்காட்டுகள் தந்து, வேள்விக்கொலைச் செயலிலிருந்து தமிழர்களைக் காக்க இக்குறள் முனைகின்றது என்பதே செய்தி. வள்ளுவர் காலத்தில் தமிழர் பண்பாட்டுத்தளங்களில் படையெடுப்பு நிகழ்த்தி, வெற்றிகரமாக ஆரியவேள்விப் பழக்கங்களையும், நம்பிக்கையையும் தமிழர்களிடையே ஆழமாக புகுத்தி இருந்தனர் ஆரியர்கள் என்பதை அறிவிக்கின்றது இக்குறட்பா.

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்!

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல், ஆரியப்பழக்க வழக்கங்களை உவமையாகக் காட்டியே, தமிழ் மக்களிடமிருந்த ஆரியப்பித்தை நீக்கும் அருமருந்தாகத் திருக்குறள் செயல்பட்டது, செயல்பட்டு வருகின்றது என்பதையே இக்குறள் தெரிவிக்கின்றது.

இக்காலத்திலும் கூட, 'அன்பு செலுத்துங்கள்' என்ற அறிவுரையைக் கேட்காமல் செல்லும் மக்களை, 'அன்பு வேள்வி செய்யுங்கள்' என்று ஆரிய உவமை சொல்லி அழைத்து, மக்களை மடைமாற்றம் செய்வது எளிது. இந்த உத்தியைத்தான் கைக்கொள்ளுகின்றார் திருவள்ளுவர்; அவ்வளவே. வேள்வி என்னும் சொல்லைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து விட்டதால், 'உயிர்க்கொலை வேள்வியை' வள்ளுவர் ஏற்றுக்கொண்டார் என்று கருதுவது அறியாமை. இக்குறட்பாக்களில் 'வேள்வி' என்னும் சொல் ஆகுபெயராய், உவமையாய்  வந்தன என்பதை அறிக.

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

குறளறம் தொடர்ந்து பேசுவோம்!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.