Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெல்சன் மண்டேலா 100: எதை நினைவுகூர்வது?

Featured Replies

நெல்சன் மண்டேலா 100: எதை நினைவுகூர்வது?
 
 

வரலாறு, நாயகர்களை எவ்வாறு மதிப்பிடுகிறது என்பது மிகவும் சுவையான வினா.   

வரலாறு மிகப் பெரிய ஆசான் என்பது மட்டுமல்ல, அது மிகப்பெரிய விமர்சகனும் கூட. எந்தப் பெரிய ஆளுமையும் அதன் கண்களில் இருந்து தப்பிவிட முடியாது.   

வெறுமனே தியாகம் மட்டும் ஒருவரை மதிப்பிடும் அளவுகோலாகாது. தியாகம் உயர் மதிப்புக்குரியது. ஆனால், தியாகிகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களல்ல.   

அண்மையில், தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரப் போராட்ட வீரருமாகிய நெல்சன் மண்டேலாவின் 100ஆவது பிறந்தநாள், உலகக் கவனம் பெற்றது.  

 இதன்போது, மண்டேலாவின் அறவழிப் போராட்டத்தின் முக்கியத்துவமும் மன்னிப்பின் மாண்பும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டன. ஆனால், மண்டேலாவை எவ்வாறு நினைவுகூர்வது.   

தென்னாபிரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கெதிராக, அமைதியான போராட்டங்களில் தொடங்கி, பின்னர் ஆயுதப் போராட்டத்தின் மூலமே அது சாத்தியமெனக் கண்டு, அதைப் பரிந்துரைத்து, அதில் ஈடுபட்டு, தென்னாபிரிக்க விடுதலையைச் சாத்தியமாக்கிய மனிதராக, நெல்சன் மண்டேலாவை நினைவு கூர்வதா?  

இல்லாவிடின், நீண்ட சிறைவாசத்தின் பின்னர் விடுதலையடைந்த மனிதராக, தனது மக்களுக்குரிய தேவைகளை நிறைவேற்றத் தவறியதோடு, மேற்குலக நலன்களுக்குப் பலியாகி, சமரசப் பாதையில் பயணித்த ஒருவராக அவரை நினைவுகூர்வதா?  

தென்னாபிரிக்க விடுதலை இயக்கத்தின் முக்கியமான தலைவரான நெல்சன் மண்டேலாவை, ஒருகாலத்தில் ‘பயங்கரவாதி’ என்று வெறுத்தொதுக்கிய மேற்குலகு, இன்று அவரைக் கொண்டாடுகிறது.  
 ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அமைப்பின், முக்கிய தலைவராயிருந்த மண்டேலா, அரசாங்கத்துக்கு எதிராக, ஆயுதச் சதி செய்தாரென்று, 1964இல் அவருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அது மட்டுமன்றி, அவர் தப்பிச் செல்லவோ, வெளி உலகுடன் தொடர்பு வைக்கவோ இயலாதவாறு, ‘ரொபென்’ தீவில், கடும் பாதுகாப்புடன் சிறை வைக்கப்பட்டார்.   

அவர் சிறையில் இருந்த 27 ஆண்டுகளில், அவரால் ஆபிரிக்க தேசிய காங்கிரஸை வழிநடத்த இயலவில்லை. ஆனால், ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் பிற முக்கியமான தோழர்களும், தென்னாபிரிக்க நிறவெறிக்கு எதிராகவும் விடுதலை வேட்கை கொண்டு வீரத்துடனும்  போராடிய, தென்னாபிரிக்க கொம்யூனிஸ்ட் கட்சியும் தென்னாபிரிக்க நிறவெறி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள்.   

இன்று மண்டேலாவின் பெயரால், அந்த வீரம்செறிந்த ஆயுதப் போராட்டமும் அதில், தென்னாபிரிக்க கொம்யூனிஸ்ட் கட்சியின் பங்கும் மறுக்கப்படுகின்றன. அவ்வாறு மறுக்கப்படுகின்ற இன்னொரு பெயர் ஸ்ரிவ் பிகோ (Steve Biko). நிறவெறிக்கெதிராக, வீரம் செறிந்த போராட்டத்தை முன்னெடுத்து, தனது 30ஆவது வயதில், பொலிஸ் காவலில் கொலை செய்யப்பட்டிருந்தார்.    

இன்னொரு முக்கியமான பெயர் ஒலிவர் தம்போ (Oliver Tambo). மண்டேலா சிறையிலிருந்த போது, ஆபிரிக்க தேசிய காங்கிரஸுக்குத் தலைமையேற்று, ஆயுதப் போராட்டத்தை வழிநடத்தியவர் இவர்தான்.   

இன்று, இவையெல்லாம் மறக்கடிக்கப்பட்ட பெயர்கள். மண்டேலாவை மேற்குலகு கொண்டாடுவதற்குக் காரணம், அவர்மீது அஹிம்சாவதி என்ற கருதுகோள் பதிக்கப்பட்டிருக்கிறது.   

தென்னாபிரிக்க விடுதலை, அஹிம்சையால் சாத்தியமாகவில்லை. அதை மறைக்கும் கருவியாக, மண்டேலா என்ற அஹிம்சாமூர்த்தி இருக்கிறார். அதனால் அவர் கொண்டாடப்படுகிறார்.   

தென்னாபிரிக்க விடுதலை எவ்வாறு சாத்தியமாகியது என்பதை விளங்குவது முக்கியமானது. மண்டேலாவைச் சிறைவைத்தாலும், பிற ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்களை வேட்டையாடியதாலும், தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டத்தை முடக்க இயலவில்லை.   

ஆபிரிக்கா கண்டத்தில், 1970களில் ஆயுதப் போராட்டங்கள் முனைப்புற்று, முன்னைய போர்த்துக்கேயக் கொலனிகள் மூன்றும், 1974இல் போர்த்துக்கலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையொட்டி விடுதலை பெற்றன. இந்நிலைமை, ஆபிரிக்க கொலனியத்துக்கும் தென்னாபிரிக்கா, சிம்பாவே ஆகிய நாடுகளின் வெள்ளை நிறவெறி ஆட்சிகளுக்கும் ஓர் அதிரடியாயிற்று.   

முன்னாள் போர்த்துக்கல் கொலனியான அங்கோலாவில், மேற்குலக ஆதரவுடன், தென்னாபிரிக்கா உள்நாட்டுப் போரை ஆதரித்து, நேரடியாகவும் குறுக்கிட்டது. கியூபப் படையினரின் உதவியுடன், உள்நாட்டுப் போரும் தென்னாபிரிக்கக் குறுக்கீடும் முடிவுக்கு வந்தன.   

தென்னாபிரிக்க அரசாங்கம் சர்வதேச ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்ட சூழலில், இவ்வாறான தோல்விகளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் போன்ற அமைப்புகளின் தொடரான ஆயுதப் போராட்டங்களும் மக்கள் எழுச்சிகளும், நிறவெறி அரசாங்கத்துடன் அடையாளப்படுவது அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் கேடாகும் நிலையை உருவாக்கி, தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சிக்கு முடிவுகட்டுவதை ஏற்குமாறு அவற்றைக் கட்டாயப்படுத்தின.  

தென்னாபிரிக்காவின் கனிம மூல வளங்களை ஏகாதிபத்தியம், மலிவான கூலி உழைப்பை சூறையாட, நிறவெறி ஆட்சி உதவியது. தொடர்ந்தும் சூறையாட, நிறவெறி ஆட்சியின் தொடர்ச்சி தடையாகும் என்ற நிலையில், சூறையாடலைத் தொடரப் புதியதொரு சூழலை அவர்கள் நாடினர்.  

இந்த அடிப்படையிலேயே ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைமையுடனும் மண்டேலாவுடனும் இரகசியப் பேச்சுகள் நடந்தன. அவற்றின் விளைவாக, மண்டேலாவின் விடுதலையும் நிறப் பாகுபாட்டுச் சட்டங்களை நீக்குவதும் சர்வஜன வாக்குரிமையின் அடிப்படையிலான தேர்தல்களும் உடன்பாடாயின.   

எவ்வாறெனினும், இந்த மாற்றத்தை ஏற்பது, நூற்றாண்டு காலமாகக் கறுப்பினத்தவரை அடிமைகள் போல் நடத்திப் பழகிய ஒரு வெள்ளையர் சமூகத்துக்கு எளிதல்ல. எனவே, பலவாறான சமரசங்கள் தேவைப்பட்டன.   

எனினும், அவை அனைத்தினதும் முக்கியமாக, ஏகாதிபத்தியமும் சில முக்கிய நிபந்தனைகளை விதித்தது. ஏகாதிபத்தியத்தைப் பொறுத்தவரை, தென்னாபிரிக்கா மீதான அதன் பொருளாதாரச் சுரண்டல், தடையின்றித் தொடர்வதற்கு உத்தரவாதங்கள் இல்லாமல், அங்கு நிலையான கறுப்பின ஆட்சியை அது ஏற்காது.  

 1980களில் பலவீனப்பட்ட சோவியத் ஒன்றியம், 1991இல் உடைந்து, ரஷ்யாவில் மேற்குலகுக்குச் சாதகமான ஒர் ஆட்சி ஏற்பட்ட நிலையில், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மீது கடும் நெருக்குவாரங்களைச் செலுத்தியது. அவர்களுக்கு தேவையான உத்தரவாதங்கள் வழங்கப்பட்ட பின்னரே, மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.   

இரண்டு முக்கிய உறுதிமொழிகளைச் சிறையிலிருந்த போது மண்டேலா வழங்கினார். உண்மையில், அவரது விடுதலைக்காகச் சமரசங்கள் செய்யப்பட்டன.   

சிறையிலிருந்து விடுதலையாவதற்கு முன், 1990 ஜனவரியில் தனது ஆதரவாளர்களுக்கு எழுதிய குறிப்பில், இரண்டு உறுதிமொழிகளை மண்டேலா மக்களுக்கு வழங்கினார்.   

முதலாவது, ‘வங்கிகள், சுரங்கங்கள், பாரிய தொழிற்சாலைகள் ஏகபோக வியாபாரங்கள் யாவும் தேசியமயமாக்கப்படும். கறுப்பர்கள், தங்கள் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப இவை தவிர்க்கவியலாவை’.   

இரண்டாவது, ‘நிலச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு, நிலமற்றவர்களுக்கு நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படும்’. இரண்டையும் இறுதிவரை மண்டேலா நடைமுறைப்படுத்தவில்லை.   

இப்பின்புலத்திலேயே, மண்டேலா ‘அஹிம்சாவாதி’யாக, ‘ஆபிரிக்காவின் காந்தி’யாகச் சித்திரிக்கப்படுகிறார். தென்னாபிரிக்காவின் நிறவெறி அரசாங்கத்துக்கெதிராக, போராட்டம் வெற்றியடைந்தது ஆயுதப் போராட்டத்தாலாகும்.    

இதை மறைத்து, அதற்கு ஓர் அஹிம்சை முகத்தை வழங்க வேண்டிய தேவை, மேற்குலகுக்கு உள்ளது. இதனாலேயே அவர் கொண்டாடப்படுகிறார்.   

1994இல் நெல்சன் மண்டேலாவின் விடுதலையோடு, தென்னாபிரிக்க நிறவெறி ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, மண்டேலா தலைமையிலான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆட்சிபீடம் ஏறியது.   

இந்த அதிகார மாற்றம், 1990களில் மிகச் சிறந்ததாக மெச்சப்பட்டது. மோதலின் பின்னரான வன்முறைகள் எதுவுமற்று, நிலைமாற்றம் நடந்த தேசமாகத் தென்னாபிரிக்கா போற்றப்பட்டது.   

வேறுபாடுகளை இனங்கண்டு, எல்லோரையும் அரசமைப்பின் வழியாக உள்வாங்கிய தேசமாகையால், அது, ‘வானவில் தேசம்’ எனப்பட்டது.   

அத்துடன், நவதாரளவாதத்தை முழுமையாக உள்வாங்கி, வளர்ந்த ஒரு நாடாக அது, இன்று காட்டப்படுகிறது. ஆனால், உண்மை நிலைவரமோ வேறுமாதிரி உள்ளது.   

குறிப்பாகக், கடந்த பத்தாண்டுகளில் அபிவிருத்தி எனும் பெயரால் செய்யப்பட்டவை, எவ்வாறு மக்களுக்கு விரோதமானவையாக மாறியுள்ளன என்பது கவனிப்புக்குரியது.   

இன்று, தென்னாபிரிக்காவில் அரைவாசிக்கும் அதிகமானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழுகிறார்கள். 2010இல், கால்பந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டியை தென்னாபிரிக்கா நடாத்தியபோதும், அவ் வருடம் மட்டும், 1.5 மில்லியன் தென்னாபிரிக்கர்கள் தங்கள் வேலைகளை இழந்தார்கள்.   

தாராளமயமாக்கல், தென்னாபிரிக்காவுக்குப் பரிசாகக் கொடுத்திருப்பவை இவை மட்டுமல்ல. இன்று, தென்னாபிரிக்காவில் எல்லாம் தனியார்மயமாகி விட்டன. தண்ணீர், மின்சாரம், வீட்டுக்கான வரி என்பன மிக அதிகமான விலையில் மக்களுக்கு விற்கப்படுகின்றன. அதனால் மக்களால் அவற்றுக்கான விலையைக் கொடுக்க முடிவதில்லை. ஆண்டொன்றுக்குச் சராசரியாக, 1.5 மில்லியன் தென்னாபிரிக்கர்களுக்கு நீர் வழங்கல் துண்டிக்கப்படுகிறது. இது இன்றைய தென்னாபிரிக்க நிலைவரம்.  

அதே வேளை, உலக ஊடகங்கள் தொடர்ச்சியாக இருட்டடிப்புச் செய்யும் நிகழ்வுகள், தென்னாபிரிக்காவில் நிகழ்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில், நாளொன்றுக்குச் சராசரியாக மூன்று அரச எதிர்ப்புக் கூட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ நடைபெற்றுள்ளன.  

இவை தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டங்களாகவும் எதிர்ப்பு ஊர்வலங்களாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மக்களுக்கு அடிப்படை வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடனேயே, இவை நடாத்தப்படுகின்றன.  

இதற்கும் மண்டேலாவுக்கும் என்ன தொடர்பு என நீங்கள் வினவக் கூடும். 1980களின் இறுதியில், நிறவெறிக் கொடுமைக்கு எதிரான, கருப்பின மக்களின் வீரம்செறிந்த போராட்டத்தால், தென்னாபிரிக்க நிறவெறி அரசாங்கம், உலக அளவில் அம்பலப்பட்டதோடு, சோவியத் ஒன்றியமும் அதன் ஆதரவு நாடுகளும் அணிசேரா நாடுகளும் தென்னாப்பிரிக்காவைத் தனிமைப்படுத்திப் பொருளாதாரத் தடைகளையும் விதித்திருந்தன.   

இந்நிலையில், தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டத்தையும் மண்டேலா அங்கம் வகித்த ஆபிரிக்க தேசிய காங்கிரஸையும் ஆதரித்து வந்த சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி முக்கிய காரணியானது.  

இதைத் தொடர்ந்து, ‘ஜனநாயகம்’ என்ற தனது ஆட்சிமாற்றக் கொள்கையை, உலகெங்கும் அமெரிக்கா முன்தள்ளியது. பல்வேறு நாடுகளில் ஆட்சிமாற்றங்கள், ‘ஜனநாயகத்தின்’ பெயரால் நிகழ்ந்தன.   

தென்னாபிரிக்க நிறவெறிப் பாசிச ஆட்சியை மேற்கொண்டிருந்த போத்தாவின் ஆட்சி மாற்றப்பட்டு, ‘ஜனநாயகம், மனித உரிமை’ என்ற முற்போக்கு முகமூடியணிந்த டி கிளார்க்கின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மண்டேலாவுடன் சமரசப் பேச்சுகள் நடந்தன.   

வீரம் செறிந்த விடுதலைப்போராட்டங்களை இணைந்து மேற்கொண்ட தென்னாபிரிக்கக் கொம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் ஆகியன பிரிந்தன.   

மண்டேலா தலைமையேற்ற ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸூடன் மேற்குலகு சமரச உடன்பாட்டுக்கு வந்தது. அச்சமரசமே, அவரது ஆட்சியின் தூணாகவும் மேற்குலக நலன்களின் காவல் அரணாகவும் இருந்தது.   

பொதுப்போக்குவரத்து, மின்சாரம் முதலான அரசதுறைகள், மண்டேலாவின் ஆட்சிக் காலத்திலேயே தனியார் மயமாக்கப்பட்டன. உலக வங்கியின் ஆலோசனைப்படி, தண்ணீர் கூட தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டது.   

அவரது ஆட்சியிலேயே, முற்பணம் கட்டி மீற்றர் பொருத்தினால்தான், தண்ணீர் தரப்படும் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.   

பன்னாட்டு நிறுவனங்கள் அதிக விலைக்கு நீரை விற்கத் தொடங்கியதால், கொலரா நோய் ஏற்பட்டபோது, பாதுகாப்பான குடிநீர் இல்லாமல், நோய் பரவி மக்கள் இறந்தனர்.   

தனியார்மயத்தின் சுதந்திர தாண்டவம், அரசாங்கத்தை ஊழல்மிக்கதாக மாற்றியது. மண்டேலாவின் ஆட்சியில் வேலையின்மை தீவிரமானது. குறிப்பாக, சுரங்கத் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் வேலையிழந்தனர்.   

மறுபுறம், மண்டேலா புகுத்திய தனியார்மய, தாராளமயக் கொள்கையால் ஏகபோகங்களுடன் கூட்டுச் சேர்ந்து, புதியவகை கருப்பின தரகு முதலாளிகள் உருவாகினர்.   

ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவர்கள் சிலர் கோடீஸ்வரர்களானார்கள். முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமா, தற்போதைய தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா ஆகியோர் இதற்குச் சாட்சிகளாக உள்ளனர்.  

பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் கொள்ளை விலையிலான மருந்துகளை வாங்க முடியாமல், எய்ட்ஸ் நோயால் தென்னாப்பிரிக்கா பரிதவித்தபோது, இந்தியா போன்ற நாடுகள், மலிவு விலையில் மருந்து கொடுக்க முன்வந்திருந்தன.   

இந்நிலையில், அதை மேற்குலகும் அதன் பன்னாட்டு நிறுவனங்களும் ‘காட்’ ஒப்பந்தத்தின் அறிவுசார் சொத்துரிமை விதிகளைக் காட்டித் தடுத்தபோது கூட, மனிதாபிமானமற்ற இக்கொள்ளையர்களை மண்டேலா எதிர்க்கவில்லை.   

எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட்டு, மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் நாசமாக்கியதோடு, பன்னாட்டு ‘ஷெல்’ எண்ணெய் நிறுவனம் அடக்குமுறையையும் கட்டவிழ்த்து விட்டிருந்தது. இதற்கு எதிராகப் போராடிய, பிரபல மனித உரிமைப் போராளியும் கவிஞருமான கென் சரவீவோவாவை, நைஜீரிய சர்வாதிகார அரசு 1995இல் தூக்கிலிட்டுக் கொன்றது. இதன்போது, அதற்கெதிராகக் கண்டனம் தெரிவிக்கக்கூட மண்டேலாவுக்குத் திராணியிருக்கவில்லை.   

1960களில் கொங்கோவில், பெல்ஜிய கொலனியாதிக்கத்தை எதிர்த்து, பாட்ரீஸ் லுமும்பாவும் கென்யாவில் பிரிட்டிஷ் கொலனியாதிக்கத்தை எதிர்த்து ஜோமோ கென்யட்டாவும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் வெற்றியை ஈட்டிய கதையை மண்டேலா அறியாதவரல்ல.   

அவர் சிறையிலிருந்த காலத்திலும், விடுதலையான காலத்திலும் கினியா பிசாவ், அங்கோலா, மொசாம்பிக் முதலான நாடுகளில் கொம்யூனிஸ்டுகளும் நாட்டுப்பற்றாளர்களும் இணைந்து, ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக நின்று, ஆயுதப் போராட்டப் பாதையில் முன்னேறி, அதில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டிய நிலைவரங்களையும் அவர் அறிந்திருந்தார்.   

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான பொறுப்பும் கடமையும் இருந்தபோதிலும், மண்டேலா அதை அறிந்தே அவற்றைத் தவிர்த்தார்.   

அவரது சமரசத்தையும் மறுகொலனியாதிக்கத்துக்கு அவர் தென்னாபிரிக்காவைத் திறந்துவிட்டதையும் இதனடிப்படையில் விளங்க முடியும்.   

தென்னாபிரிக்கா இயற்கை வளங்கள் நிறைந்த நாடு. அங்கு சுரங்கங்களில் மிகக் கொடுமையான நிலைமைகளில், ஏழைத் தென்னாபிரிக்கர்கள் வேலை பார்க்கிறார்கள்.   

அவர்களது உழைப்பு மிகையாகச் சுரண்டப்படுகிறது. ஆனால், அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பெதையும் கறுப்புத் தென்னாபிரிக்காவின் காவலர்கள் எனப்படுகிற, ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் அரசாங்கம் செய்துகொடுக்கவில்லை.   

மாறாகத், தாங்களும் தங்களுக்கு முந்திய வெள்ளை நிறவெறி ஆட்சியாளர்களைப் போல, அல்லது அதற்கும் மேலாக மக்களைச் சுரண்டவும் கொடிய அடக்குமுறையின் மூலம் எதிர்ப்புகளைக் கட்டுப்படுத்தவும் வல்லவர்கள் என்பதைக் கடந்த பத்தாண்டுகளில், தனது நடவடிக்கைகளின் ஊடாக, ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் தென்னாபிரிக்க அரசாங்கம் காட்டியுள்ளது.   

1994இல் மண்டேலா ஆட்சியில் அமர்த்தப்பட்ட போது, முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் நலன்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்ற உறுதிமொழியை அவர் அளித்தார்.  

அதைத் தவறாமல் இன்றும் அவரது ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் பேணுகிறது. எந்த மக்களுக்காக அவர் போராடினாரோ, அவர்களது வாழ்க்கையையும் அவர்களது எதிர்கால சந்ததியின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கினார்.

இப்போது, உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள், உங்களது பிள்ளைகளுக்கு, நீங்கள் மண்டேலாவை எவ்வாறு நினைவுகூர்வீர்கள்?   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நெல்சன்-மண்டேலா-100-எதை-நினைவுகூர்வது/91-219602

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.