Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் அதிகாரப் பரவலாக்கலும் பார்த்தசாரதியின் பங்களிப்பும்

Featured Replies

இலங்கையில் அதிகாரப் பரவலாக்கலும் பார்த்தசாரதியின் பங்களிப்பும் 

 

 
 

இலங்கை அரசியலிலும் இனங்களுக்கிடையிலான உறவுகளிலும் ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை இனவாத வன்செயல்களுக்கு ( கறுப்பு ஜூலை) பிறகு 35 வருடங்கள் கடந்தோடிவிட்டதை முன்னிட்டு கடந்த மாதம் கட்டுரைகளை எழுதிய அரசியல் ஆய்வாளர்கள், விமர்சகர்களில் அனேகமாக சகலருமே ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் அனுசரணையுடன் நாடு பூராவும் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அந்த மிலேச்சத்தனமான வன்செயல்களே இலங்கையின் இனமுரண்பாட்டுப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிடவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது என்பதையும் இறுதியில் 1987 ஜூலை 29 இந்திய --இலங்கை சமாதான உடன்படிக்கை்கு வழிவகுத்தது என்பதையும் குறிப்பிட்டிருந்தார்கள். அந்த உடன்படிக்கையின் விளைவாகவே, பிராந்தியங்களுக்கு அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடு எதையுமே ஒருபோதும் கொண்டிராத நவீன இலங்கையில மாகாண சபைகள் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

jr.jpg

ஆனால், அவர்களில் ஓரிருவர் மாத்திரமே கறுப்பு ஜூலைக்கு பிறகு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடந்த சிக்கலான பேச்சுவார்த்தைகளைப் பற்றியும் சிக்கல்களுக்கு மத்தியிலும் பொறுமையுடன் நிதானமாக கலந்தாலோசனைகளை பல தரப்பினருடனும் நடத்தி இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்துக்கான கோட்பாட்டு ரீதியான அத்திபாரத்தை போடுவதில் சூத்திரதாரிகளாக செயற்பட்டவர்களைப் பற்றியும் நினைவுபடுத்தியிருந்தார்கள்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமென்றால், அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடொன்று அவசியம் என்று தேசியப் பிரச்சினையின் சகல விவகாரங்களிலும் கடுமையான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தவரான ஜெயவர்தனவை நம்பவைப்பதில் இந்தியா அந்த நேரத்தில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியது. அவரை ஓரளவுக்கேனும் இணங்கவைத்ததில்  இந்தியத் தரப்பில் மூத்த இராஜதந்திரி கோபாலசுவாமி பார்த்தசாலதிக்கு பெரும் பங்கு இருந்தது என்பதை அந்தக் காலகட்டத்தின் அரசியல் நிகழ்வுப்போக்குகளை உன்னிப்பாக அவதானித்தவர்களுக்கு  நிச்சயமாகத் தெரியும்.

இந்தியாவுடனான சமாதான உடன்படிக்கையை அடுத்து மாகாணசபைகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு 30 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் கூட எமது தேசிய இனப்பிரச்சினைக்கு  முடிவுக்கு வரவில்லை . கறுப்பு ஜூலைக்கு பிறகு 35 வருடங்களும் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு 9 வருடங்களுக்கும்  கூடுதலான காலமும் கடந்துவிட்ட நிலையிலும் கூட இன்னமும் இனப்பிரச்சினைக்கான  அரசியல் தீர்வு குறித்து நாம் விவாதித்துக்கொண்டேயிருக்கிறோம். 

மாகாண சபைகளோ அல்லது அவற்றை அறிமுகப்படுத்துவதற்காக இலங்கையின் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தமோ தங்களது பிரச்சினைக்கு நிலைபேறான அரசியல் தீர்வைத் தரப்போவதிலலை என்று தமிழர்களும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  பிரதான தமிழ் அரசியல் கட்சிகளும் கூறிக்கொண்டிருக்கின்ற போதிலும், 13 ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடுகளை மேம்படுத்தவோ அல்லது அத்திருத்தத்தையாவது முழுமையாக நடைமுறைப்படுத்தச் செய்யவோ இலங்கையின் அரசாங்கங்களை இந்தியர்களினாலோ அல்லது தமிழர்களினாலோ வழிக்குக் கொண்டுவரமுடியவில்லை என்பதே யதார்த்தமாகும்.தற்போது மந்தகதியில் முன்னெடுக்கப்படுகின்ற அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளில் கூட, அரசியல் தீர்வு தொடர்பில் தென்னிலங்கையின் பிரதான அரசியல் சக்திகளின் மனநிலையில் ஆரோக்கியமான மாறறங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகளைக் காணமுடியவில்லை. இன்றும் கூட, இனப்பிரச்சினை  ஏதோ அண்மையில் தோன்றிய  ஒன்று என்பது போன்று அதன் மிகவும் அடிப்படையான அம்சங்கள் குறித்து தென்னிலங்கை அரசியல்வாதிகள் விவாதித்துக்கொணடிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

மாகாணசபைகள் முறையில் பங்கேற்கின்ற போதிலும், தமிழ் அரசியல் கட்சிகள் அரசியல் தீர்வுக்கான வழிவகையாக அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறிக்கொண்டிருக்கின்ற அதேவேளை, சிங்கள அரசியல் சமுதாயம் இந்தியாவின் தலையீட்டின் காரணமாகக் கொண்டுவரப்பட்டவை என்பதற்காக மாத்திரம் மாகாணசபைகளைப் பொறுத்துக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது.  இத்தகையதொரு நிலையில், மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை அதிகரிப்பதற்காக 13 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளில் மேம்பாடுகளைச் செய்யமுடியுமா? அதற்கான ஒரு நிலைக்கு தற்போதைய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளை வழிநடத்த முடியுமா? மாகாணசபைகளுக்கும் அப்பால் வேறு  அதிகாரப்பரவலாக்கல் அலகை உருவாக்க முடியுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.

இந்தக்கட்டத்தில் அதுவும் கறுப்பு ஜூலையின் 35 வருட நிறைவு நினைவுகூரப்படும் நிலையில் மாகாண சபைகள் முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு   இந்தியத் தரப்பில் முக்கிய கருவியாகச்  செயற்பட்ட பார்த்தசாரதியின் பங்களிப்பை நினைவு மீட்டிப் பார்ப்பது தருணப்பொருத்தமானதாக   இருக்கும். அத்துடன் கறுப்பு ஜூலை மற்றும் அதற்குப் பின்னரான அரசியல் நிகழ்வுப் போக்குகளுக்கு ஊடாக வாழ்ந்திராத வற்றை- தெரிந்திருக்கக்கூடிய வாய்ப்பைக்கொண்டிராத  இன்றைய இளஞ்சந்ததியின் பிரயோசனத்துக்காக இந்த நினைவுமீட்டல் அவசியமாகிறது.

 தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தலைசிறந்த அரசியலமைப்புச் சட்டநிபுணருமான காலஞ்சென்ற கலாநிதி நீலன் திருச்செல்வம் ஒரு தடவை பத்திரிகையொன்றுக்கு எழுதிய கட்டுரையில் ஜனாதிபதி ஜெயவர்தன ஒரு அரசியலமைப்பு நிபுணராக இருந்தபோதிலும் கூட அதிகாரப்பரவலாக்கல் கோட்பாட்டின் பயனுடைத்தன்மை மீது அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு பெரும் கஷ்டப்படவேண்டியிருந்தது என்று இலங்கை இனப்பிரச்சினையைக் கையாளுவதற்கு நியமிக்கப்பட்ட முதல் தூதுவர் பார்த்தசாரதி தன்னிடம் கூறியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை, அரசியல் ஆய்வாளரும் முன்னாள் இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜெயதிலக அண்மையில் எழுதிய கட்டுரையொன்றில்  பார்த்தசாரதி ஓய்வுபெற்ற பிறகு ஒரு தடவை புதுடில்லியில் உள்ள வாசஸ்தலத்தில் அவரை சந்தித்தபோது கறுப்பு ஜூலைக்குப் பின்னரான பேச்சுவார்தைகளின்போது எதிர்நோக்கவேண்டியிருந்த கஷ்டங்கள் குறித்து தன்னிடம் கூறியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். 1984 பேச்சுவார்த்தைகளின்போது  ஒரு கட்டத்தில் ஜனாதிபதி  ஜெயவர்தனவின் வேண்டுகோளின்பேரில் கண்டியில் உள்ள பிரதான கோயில்களில் மூத்த பௌத்த பிக்குமாரைச் சந்தித்ததாகவும் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வொன்றைக் காண்பது சாத்தியமில்லாத அளவுக்கு கடுமையானது  என்று தெரிந்துகொண்டதாகவும் அவர் தன்னிடம் கவலையுடன் தெரிவித்ததாக கலாநிதி ஜெயதிலக எழுதியிருக்கிறார்.

கறுப்பு ஜூலைக்குப் பிறகு அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி இலங்கையில் முரண்பட்டு நிற்கும் இரு தரப்பினருக்கும்  இடையே மத்தியஸ்தம் செய்வதற்கு இந்தியாவின்  நல்லெண்ண உதவிகளை வழங்க முன்வந்தார். இது இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான உறவுகளிலும் ஒரு முக்கிய திருப்புமுனையாக  அமைந்தது. சிக்கல் மிகுந்த மத்தியஸ்த முயற்சிகளை முன்னெடுப்பதற்கு ஆற்றல் வாய்ந்த விசேட தூதுவர் ஒருவரை நியமிக்கவேண்டியிருந்தது.அந்தத் தூதுவர் எமது பிராந்தியத்தின் பூகோள அரசியலை முறையாகப் புரிந்துகொண்ட இராஜதந்திரியாகவும் இலங்கையின் அரசியலமைப்பின் சிக்கலான தன்மைகளைப் புரிந்துகொண்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கக்கூடிய சட்ட நிபுணராகவும் இலங்கையின் ஒற்றையாட்சி வரையறைக்குள் சுயாட்சிப் பிரதேச அலகொன்றைச் செதுக்கக்கூடிய அரசியல் தந்திரோபாயம் தெரிந்தவராகவும் இருக்கவேண்டும். அத்துடன் இந்தியாவின் உள்நாட்டு அரசியலை விளங்கிக்கொண்டு தமிழ்நாடு மாநிலத்தின் அரசியல் சக்திகளின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவராகவும் இருக்கவேண்டும்.இந்த அளவுகோல்களுக்குப் பொருந்துபவராக இராஜதந்திர பதவிகள் பலவற்றை வகித்தவரும் முன்னாள் வெளியுறவுச் செயலாளருமான கோபாலசுவாமி பார்த்தசாரதியை  இந்திரா காந்தி கண்டார்.

இந்திரா காந்தியின் நம்பிக்கைக்கு பெரிதும் பாத்திரமானவர் பார்த்தசாரதி என்பது ஒரு மேலதிக அனுகூலமாகவும் இருந்தது. வெளிநாட்டுக் கொள்தையிலும் உள்நாட்டுக் கொள்கையிலும் சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தொடர்பில் அடிக்கடி அவருடன் திருமதி காந்தி ஆலோசனை கலப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேற்குலகில் கல்விகற்ற கொழும்பு மேல்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரின் தனிப்பட்ட நண்பராக பார்த்தசாரதி இருந்தார் என்பது பலருக்குத் தெரிவிந்திருக்கவில்லை.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவரின் கூட்டாளிகளாக இருந்தவர்களில் கம்யூனிஸ்ட் தலைவர் பீற்றர் கெனமன், இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தந்தையார் எஸ்மண்ட் விக்கிரமசிங்க , மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமியின் தந்தையார் ராஜு குமாரசாமி ஆகியோர் முக்கியமானவர்கள்.

தனது பணிக்கு முன்பாக இருந்த சிக்கல்களும் இடறுகுழிகளும் பாரதூரமானவை என்பதை பார்த்தசாரதி நன்கு விளங்கிக்கொண்டார்.  இரு சமூகங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தை  ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாக இருந்தன. அந்தளவுக்கு கறுப்பு ஜூலையின் அனர்த்தம் நிறைந்த நிகழ்வுகள் அதிர்ச்சி வேதனையையும் ஆழமான மனக்காயங்களையும் ஏற்படுத்தியிருந்தன.முதலில் அன்றைய காலகட்டத்தின் நிகழ்வுப்போக்குகளுக்கு  தன்னைப் பரிச்சயப்படுத்திக்கொள்ள   வேண்டிய தேவை பார்த்தசாரதிக்கு  இருந்தது.எந்தவொரு ஆலோசனையையும் வழங்குவதற்கு முன்னதாக அன்றைய அரசியல்வாதிகளுடனன்  அவர்  பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டியிருந்தது.

அரசாங்கத் தலைவர்களினதும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களினதும் அச்சங்கள், ஏக்கங்கள், பிரமைகள் மற்றும் எண்ணப்போக்குகளை மிகுந்த நிதானத்துடன் கிரகிக்கவேண்டியதே பார்த்தசாரதியின் முதல் பணியாக இருந்தது.இலங்கையின் பழைய இடதுசாரித் தலைவர்களுடன் அவரால் எளிதாகவே பழகிக்கொள்ளக்கூடியதாக இருந்தது. தமிழ்த் தரப்பைப் பொறுத்தவரை, அவர்களின் வேதனை, எதிர்பார்ப்புகள் மறறும் நம்பிக்கையின் குவிமையமாக அவர் விரைவாகவே மாறிவிட்டார்.தமிழ்த் தலைவர்களுக்கு அவர் ஆலோசனைகளை வழங்கினார்.அத்துடன் தங்களுக்கு இருக்கக்கூடிய அரசியல் தெரிவுகளின் மட்டுப்பாடுகளை புரிந்துகொள்ளுமாறு அவர் தமிழ்த் தலைவர்களை அடிக்கடி வற்புறுத்தினார். பேச்சுவார்த்தைச் செயன்முறைகள் தொடர்பில் அடிப்படைவாத நிலைப்பாடுகளில் பிடிவாதமாக இருந்தவர்களுக்கு ' போராடிக்கொண்டே பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுங்கள்' என்பதே அவரின் ஆலோசனையாக இருந்தது

பார்த்தசாரதியின் பணி மிகவும் சிரமங்கள் நிறைந்த ஒன்றாகவே இருந்தது.பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அடிக்கடி அவர் ஆலோசனை வழங்கிய அதேவேளை, தீவிரமடைந்துகொண்டிருந்த வன்செயல்களும் அவற்றின் விளைவாக சாதாரண குடிமக்கள் அனுபவித்த அவலங்களும் அவருக்குப் பெரும் கவலையை அளித்தன. தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர்களுடன் அவர் தவிர்க்கமுடியாத வகையில் விசேடமான உறவுமுறையொன்றை வளர்த்துக்கொண்டார். உணர்ச்சிகளுக்கு ஆட்படாத வகையில் அவர்களுக்கு அறிவுபூர்வமான  ஆலோசனகளை வழங்குவதில் அவர் கூடுதல் கவனம் செலுத்தினா ர்.  

பிராந்திய சபைகளுக்கு ( Regional Councils) அதிகாரப்பரவலாக்கலுக்கான ஒரு தொகுதி யோசனைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தியதே பார்த்தசாரதியின் தனித்துவமான பங்களிப்பாகும். அந்த யோசனைகளே 'இணைப்பு சி ' ( Annexure - C  ) என்று பிரபல்யமாக அழைக்கப்படுபவையாகும். 1983 ஆகஸ்ட் தொடக்கம் டிசம்பர் வரையான 4 மாத காலகட்டத்திற்குள் கொழும்பிலும் புதுடில்லியிலும் ஜனாதிபதி ஜெயவர்தனவுடன் நடத்திய சந்திப்புகளில் இந்த இணைப்பு 'சி' யைப் பூரணப்படுத்தும் செயற்பாடுகளை பார்த்தசாரதி நிறைவுசெய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் ஜெயவர்தன அரசாங்கத்துக்கும் இடையே மத்தியஸ்தம் வகிப்பதில் ஒரு முழுநிறைவான சமரசப்பேச்சுவார்த்தையாளருக்குரிய சகல திறமைகளையும் மதிநுட்பத்தையும் அவர் வெளிக்கொணர்ந்தார்

பார்த்தசாரதியினால் முன்வைக்கப்பட்ட திட்டத்தின் பல அம்சங்களை ஜெயவர்தன உடனடியாகவே இங்கிக்கொண்டார்.ஆனால், அதிகாரப்பரவலாக்கலுக்கான அடிப்படை அலகு ( Unit of Devolution  ) தொடர்பில் இணக்கப்பாடொன்றுக்கு வருவதென்பது தொடர்ந்துகம்கஷ்டமானதாகவே இருந்தது.ஒரு மாகாணத்திற்குள் இருக்கும் மாவட்டங்களை இணைத்து பெரியதொரு அலகாக்குவதற்கு அனுமதிப்பது என்பதே தமிழர்களுக்கு வழங்கக்கூடாத சலுகையாக நோக்கப்பட்டது.

பிறகு 1983 டிசம்பரில் ஜெயவர்தன புதுடில்லிக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது தனியொரு மொழிரீதியான பிராந்தியத்தை ( Single Linguistic Region ) அமைப்பதற்கான யோசனையை முன்வைப்பதற்கு திருமதி காந்தியின் ஆதரவை பார்த்தசாரதி பெற்றிருந்தார்.அத்தகைய யோசனைக்கு இணங்குவதன் மூலம் தனது ஆதரவுத் தளத்தை இழக்க ஜெயவர்தன விரும்பவில்லை.ஆனால், அவர் விட்டுக்கொடுப்பொன்றைச் செய்வதற்கு இணங்கினார்.இணைப்பு -- சி யில் பிராந்திய சபைகள் என்று இருந்ததை மாகாண மட்டத்துக்கு மட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.புதுடில்லி அஷோக் ஹோட்டலில் நடைபெற்ற அந்த பேச்சுவார்த்தைகளின்போது ஒரு கட்டத்தில் ஜெயவர்தன பார்த்தசாரதியை நோக்கி " நான் எங்கே கையெழுத்திடவேண்டும்.காட்டுங்கள் " என்று கேட்டாராம்.அதற்கு பார்த்தசாரதி " இது ஒரு உடன்படிக்கை அல்ல.கையெழுத்து ஒன்றும் தேவையில்லை" என்று பதிலளித்தாராம்.

1984  ஜனவரியில் கூட்டப்பட்ட சர்வகட்சி மகாநாட்டில் இணைப்பு -- சி சமர்ப்பிக்கப்பட்டது.சிங்கள அமைப்புகள், பௌத்த குழுக்கள் மற்றும் சில எதிர்க்கட்சிகளிடமிருந்து கிளம்பிய எதிர்ப்புக்கு மத்தியில் ஜெயவர்தன இணைப்பு 'சி' யில் இருந்து தன்னைத் தூரவிலக்கிக்கொண்டார். அதன் உள்ளடக்கங்களுக்கு தான் எந்தவகையிலும் பொறுப்பு இல்லை என்றும் அவர் கைகழுவிவிட்டார். அதனால் சர்வகட்சி மகாநாடு தோல்வியில் முடிந்தது.

இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு அவரின் மூத்த புதல்வன் ராகுல் காந்தி பிரதமராகப் பதவியேற்றதை அடுத்து 1985 முற்பகுதியில் புதுடில்லியில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டபோது பேச்சுவார்த்தைச் செயன்முறைகளில் பார்த்தசாரதியின் வகிபாகம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அதற்கு இரு காரணிகள் இருந்தன.தமிழ் அரசியல் தலைவர்கள் வழிகாட்டலுக்காகவும் ஆலோசனைக்காகவும் பெருமளவுக்கு பார்த்தசாரதி தங்கியிருப்பவர்களாக மாறியிருந்தார்கள். அதனால் சிங்களவர்கள் பார்த்தசாரதியின் வகிபாகத்தில் கொண்டிருந்த அபிப்பிராயம் மாறத்தொடங்கியது என்பது ஒரு காரணி.மற்றது புதுடில்லியில் அதிகாரமட்டத்திலும் இராஜதந்திர மட்டத்திலும் சூழ்ச்சித்தனமான நடவடிக்கைகளினால் அவருக்கு பாதிப்புகள் ஏற்பட்டன.

இந்த நிலைவரங்கள் பார்த்தசாரதிக்கு  பெரும் கவலையைக் கொடுத்தன. படிப்படியாக அவரின் வகிபாகம் அஸ்தமித்தது.அதன் விளைவாக புதுடில்லியின் தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறைகளில் பாரதூரமான விளைவுகளுடன் கூடிய பின்னடைவு ஏற்பட்டது. அதற்குப் பிறகு பல காரியங்கள் நடந்தேறிவிட்டன. இந்தியாவும் இலங்கையும் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. 1987 ஜூலை 29 உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு கொழும்புக்கு விஜயம் செய்த பிரதமர் ராஜீவ் காந்தியுடன் செல்வாக்குமிக்க அமைச்சர்கள், உயர்மட்ட இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய பெரிய தூதுக்குழு ஒன்று வருகைதந்தது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் ஆரம்பக்கட்டத்தில் தீர்க்கமான ஒரு பாத்திரத்தை வகித்து சமாதான உடன்படிக்கைக்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்த பார்த்தசாரதி  அந்ததூதுக்குழுவில் இல்லாதது ஒரு பிரகாசமான வெற்றிடமாகத் தெரிந்தது.

எது எவ்வாறிருந்தாலும்,  இலங்கையில் அதிகாரப்பரவலாக்கத்துக்கான கோட்பாட்டு அடிப்படையையும் பல இன அரசியல் சமுதாயமொன்றுக்கான அரசியலமைப்பு அத்திபாரத்தையும் ( Constitutional Foundation for a Multi ethnic  Polity )அமைத்த பெருமையில் பெரும்பகுதி பார்த்தசாரதிக்கே உரியது என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லை.

(வீ.தனபாலசிங்கம்)

http://www.virakesari.lk/article/38597

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.