Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிக நீண்ட நாட்களின் ஆரம்பம்! - ஜீ உமாஜி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிக நீண்ட நாட்களின் ஆரம்பம்! (ஜீ உமாஜி)

pro 
Created: 31 October 2016

பத்து வருடங்களுக்கு முன்பு வரை எங்கள் வீட்டில் அந்த நாட்காட்டி அப்படியே இருந்தது. ‘30-10-95’ திகதியில் ஆரம்பித்து, கிழிக்கப்படாத தாள்களையும் நினைவுகளையும் சுமந்துகொண்டு. ஒரு நினைவுச் சின்னமாக! ஒட்டுமொத்தமாக யாழ்ப்பாணம் இடம்பெயர்ந்த இன்றைய நாளைப் பத்திரப்படுத்தியிருக்க வேண்டும். தவறவிட்டுவிட்டேன். இன்னும் எத்தனை எத்தனையோ போல! சமயங்களில் நாட்காட்டிகளும் கதை சொல்லிகளே! 

வாழ்வின் மிக நீளமான ஆண்டு எது? அதை எப்படித் தீர்மானிப்பது? யோசித்துப் பார்த்தால் குறிப்பிடத்தகுந்த அனுபவங்களை, புதிய மனிதர்களை, புதிய இடங்களை, மறக்கமுடியாத பயணங்களை மேற்கொண்ட ஆண்டு மிக  நீளமானதாயிருக்கும்.  எனக்கு தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு மிக நீளமானதாயிருந்திருக்கிறது. தொடர்ந்து அடுத்த வருடமும்!

தொண்ணூற்று ஐந்தாமாண்டில் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக இரண்டு பாரிய இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முதல் இரண்டு தவணைகள் மட்டுமே பாடசாலை நடைபெற்றது. அதில் நான்கு விடுமுறைகள் வேறு. ‘முன்னேறிப் பாய்தல்’ நடவடிக்கை தோற்றதும், இராணுவத்தின் அடுத்த நடவடிக்கை 'ரிவிரச' ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஆவணி மாத பாடசாலை விடுமுறை அப்படியே விடுமுறையாகவே நீண்டது. அந்த முறை நல்லூர்த் திருவிழா வழக்கத்தைவிட வெகு விமர்சையாக நடந்ததாகத் தோன்றியது. அன்றைய தீபாவளியும் வெகு உற்சாகமாயிருந்தது. தீபாவளிக்கு முதல் நாளிரவு மிகப்பெரிய இடிமின்னலுடன் அப்படியொரு மழை. அது அதற்கு முன்னர் பார்த்திராதது!

 

அதன்பின்னரான மழைக் காலநிலையும் பனியுமாக தொடர்ந்து வந்த நாட்களின் காலைவேளைகளில் இராணுவ டாங்கிகளின் இரைச்சலைக் கேட்க முடிந்தது. மோட்டார்க் குண்டுகளின் சத்தம், ஷெல் சத்தம் அதிகரித்திருந்தது. அவ்வப்போது வீதியில் சைக்கிளை உருட்டிக்கொண்டு, மாட்டு வண்டிகளில், அபூர்வமாகக் கார்களில் இடம்பெயர்ந்து செல்லும் மக்களைக் காணமுடிந்தது. இது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. எப்போதும் இந்தக்காட்சியைக் காணமுடிந்தது. அன்றைய நாளின் மதியப்பொழுதில் தொடர்ச்சியாக ஒரு ஊர்வலம் போலவே சென்றுகொண்டிருந்தார்கள்.

சண்டை வலுத்துக் கொண்டிருப்பது புரிந்தது. வருமுன் காப்போம் நடவடிக்கையாக அருகிலிருந்த சிவராசா கடையிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை அதிகமாக வாங்கிகொண்டிருந்த அப்பாவுக்கு உதவியாக நானும் சென்றிருந்தேன். கடையிலிருந்து இரண்டாம் முறையாக வீட்டுக்குப் பொருட்களை எடுத்துச் சென்றுகொண்டிருந்தபோது, கடந்து சென்ற முச்சக்கரவண்டியில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி அறிவித்தது.  ‘அன்பார்ந்த தமிழீழ மக்களே! நாளை கடும் விமானத் தாக்குதல்கள், எறிகணை வீச்சுக்களுக்கிடையில் யுத்தம் நடைபெற இருப்பதால் எல்லாரும் உடனடியாக வெளியேறிப் பாதுகாப்பாக வடமராட்சி, தென்மராட்சி, வன்னிப் பகுதிகளுக்குச் செல்லுங்கள்!’

முதலில் ஒன்றும் புரியவில்லை. எல்லோரும் திகைத்துப் போய் அவரவர் வீட்டு வாசல்களில் நின்றிருந்தார்கள். அயலவர்களோடு கூடிக்கதைத்தார்கள். சற்றும் எதிர்பார்க்காத ஒன்று. 'எங்கட பெடியள் யாழ்ப்பாணத்த விடமாட்டாங்கள்' என்று நம்பிக்கொண்டிருந்த மக்களுக்கு அது பேரதிர்ச்சி. எதைக்கொண்டு போவது? என்பதில் எங்களுக்கு அவ்வளவு குழப்பமெல்லாம் இல்லை. தொண்ணூறாம் ஆண்டுக்குப் பிறகு எங்களுக்கு இது நான்காவது இடம்பெயர்வு! 

 

உடனே போவதிலெல்லாம் அப்பாவுக்கு அவ்வளவு உடன்பாடு இருக்கவில்லை. அக்கா அதிகமாகப் பயந்துகொண்டிருந்தாள். பொதுவாகவே அக்காக்கள்தான் அதிகமாகப் பதட்டப்பட்டதாகத் தெரிகிறது. எனக்கு 'அதெப்படி நாளைக்கு ஆமி குண்டுபோடும், ஷெல்லடிக்குமெண்டு இவங்கள் சொல்லுறாங்கள்?' என்று லொஜிக்கலாகக் கேள்வியெழுந்தது.

'நாட்டை விட்டு வெளியேறாதவர்கள் உளவாளிகளாகக் கருதப்படுவர். தண்டனை வழங்கப்படும்'. உறவினர்கள், அயலவர்கள் எல்லோரும் பீதியைக் கிளப்பியதில் எதற்கும் தயாராக இருந்துவிடலாம் என்று உடுப்புகள் உட்பட்ட பொருட்கள் தயாராக இருந்தன. எனது சைக்கிளில் ஓரளவு பெரியதும் சிறியதுமாக இரண்டு சூட்கேஸ்கள். 

அப்பா முக்கியமான 'ஆவணங்களை அழிக்கும்' இறுதிக்கட்டப் பணியில் ஈடுபட்டிருந்தார். இது மிக முக்கியமானது. வீட்டில்  வெளிச்சம், சாளரம் போன்ற புத்தகங்கள் சில இருந்தன. அதைவிட முக்கியமாக ஒரு கட்டாக சில பத்திரிகைகளின்  குறிப்பிட்ட சேகரிக்கப்பட்ட பக்கங்கள் இருந்தன. 'விடுதலைப் புலிகள்', 'ஈழநாதம்' பத்திரிகைகளில் போராளிகள் பற்றி வெளிவந்த அவர்களின் புகைப்படங்களுடன் கூடிய வாழ்க்கைக்குறிப்புக்கள் களமுனைச் சம்பவங்கள் பற்றியவை. ஒவ்வொரு தனிமனிதனது பிரத்தியேகமான கதைகளவை. யார் யார் சேகரித்ததோ என்னிடம் சேர்ந்திருந்தது. அவற்றை 'டம்ப்' பண்ணாமல் விட்டு வைத்தால் ஆமிக்காரன் அந்த வீட்டையே டம்ப் பண்ணிவிடலாம் என்கிற நம்பிக்கை பரவலாக இருந்தது. ஆகவே எரிக்க வேண்டியத்தை எரித்து ஆவணங்களை அழிக்கும் பணியை பொதுமக்கள் சரியாகவே செய்துகொண்டார்கள். சோகமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். 

 

ஏழுமணியளவில் இன்னொரு பயணம் ஆரம்பித்தது. வாழ்வு முழுமைக்கும் மறக்க முடியாத அனுபவங்களைக் கொடுத்துவிட்ட பயணம் அது!

வாகனங்கள் பிடிப்பதற்கு அவகாசமில்லை. கிடைக்கவுமில்லை. வீதியில் சனத்தொகை அடர்ந்திருந்தது. சைக்கிள்கள், மோட்டார்சைக்கிள்களை உருட்டியவாறே செல்லமுடிந்தது. யாழ் நகர மத்தியில் மாமாவின் கடையருகே நின்று பேசிக்கொண்டிருந்தது உறவினர் குழாம். இரவே செல்ல வேண்டிய அவசியமில்லை என சிலர். எனினும் 'நாளைக்காலை கடுமையான தாக்குதல்' என்பது பலரைப் பயமுறுத்தியது. மாம்பழம் சந்திக்குப் போகவேண்டும் என்றார்கள். அப்போதுதான் முதன்முதல் அந்தப்பெயரைக் கேட்கிறேன்.

செஞ்சிலுவைச்சங்க அலுவலகத்திற்கு அருகில் நகர்ந்து செல்லும்போது எட்டரை ஆகிவிட்டிருந்தது. இருளில் தவறிவிடாதிருக்க, அவ்வப்போது யாரோ யாரையோ பெயர்சொல்லி அழைத்துக் கொண்டார்கள். இரண்டு மூன்றடி எடுத்து வைப்பது, பிறகு அரைமணிநேரம் அப்படியே நின்றுகொண்டிருந்துவிட்டு பிறகு இரண்டடி! இந்த வேகத்திலயே நகர முடிந்தது. திடீரென மழை தூறத்தொடங்கியது. சற்று நேரத்தில் கடும்மழை. எவ்வளவு நேரம் என்றெல்லாம் தெரியாது. நகரமுடியாத நெரிசல். அப்படியே தெப்பலாக நனைந்து, நடுங்கி நின்றுகொண்டிருந்தேன். எப்போது மழைவிட்டது. உடைகள் உலர்ந்தது என்பதெல்லாம் தெரியாது. வாட்டும் குளிர் பொறுத்து விடிகாலையில்  ஒரு பிளேன் டீ. வாழ்வின் மிகச்சுவையானதொரு தேநீர் அது!

 

பயணங்கள் விதவிதமான மனிதர்களை அறிமுகம் செய்து வைக்கிறது. இக்கட்டான ஒரு பயணம் நம் கூடவே இருக்கும் மனிதர்களின் அதுவரை பார்க்காத ஒரே இன மக்களின், ஒரே ஊர் மக்களின் மாறுபட்ட முகங்களை இனங்காட்டிச் செல்கிறது. எவ்வளவு பேரானாலும் மறுப்பே சொல்லாமல் இடம்கொடுத்து ஆதரவளித்த சாவகச்சேரி மனிதர்களை, வந்தாரை வாழவைக்கும் வன்னி மக்களை அறிமுகச் செய்தது இந்தப்பயணத்தின் நீட்சியே!  

நெரிசலும், குழப்பமும் கூடவே குரல்களுமாக ஊர்ந்துகொண்டிருந்த அந்தப்பயணத்தில் காலை பத்துமணிக்கு அரியாலையை அடைந்துவிட்டோம். அப்பகுதிவாசிகளிடம் 'குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா' எனக் கேட்டபோது கிடைத்த பதில் புதுமையாக இருந்தது. ‘உலை வைத்து விட்டோம்!'

சோற்றுக்கு உலை வைத்துவிட்டால் தண்ணீர் கொடுக்கக்கூடாது என்பது ஒரு பாரம்பரியமாகவோ, சம்பிரதாயமாகவோ யாழ்ப்பாணத்தின் ஒருபகுதியில் இருந்திருக்கலாம். இன்னமும் இருக்கலாம். அல்லது எல்லோரும் இப்படிக் கேட்டால் கிணறு வற்றிப் போய்விடும் என்பதாலும் தவிர்க்கக் கூறியிருக்கலாம். ஆச்சரியமாக இருந்தது. இன்னும் பலருக்கும், பல வீடுகளில்  இதே அனுபவம் நேர்ந்தது. கூட்டத்தில் நின்றிருந்த ஒருவர் தரமான கெட்டவார்த்தையால் இதுகுறித்துப் பாராட்டிப் பேசிக்கொண்டிருந்தார். 

திடீரெனக் கவனித்ததில் அப்பா, அக்காவைக் காணவில்லை. இரவெல்லாம் ஒன்றாகவே வந்து பகல் நேரத்தில் தொலைந்துபோனோம். கண்ணுக்கெட்டிய தூரம்வரை இல்லை. பின்னே சற்றுத்தூரத்தில் அம்மா. அம்மாவும் நானும் தனித்திருந்தோம். அப்பா, அக்காவை எங்கே தேடுவது? புரியவில்லை. எப்படியும் நாளைக்காவது கண்டுவிடலாம். ஓர் ஓரத்தில் நம்பிக்கை இருந்தாலும் ஆற்றாமையும் ,கோபமும், இயலாமையும் அலைக்கழித்தது. வெய்யில் எரித்துக் கொண்டிருந்தது. தாகத்தில் தொண்டை வறண்டு பேச முடியவில்லை. கண் மங்கலாகுவது போலிருந்தது.  தலை சுற்றுமோ மயக்கம் வந்துவிடுமோ என்கிற யோசனையும் கூடவே வந்தது! நாவற்குழிப் பாலம் எவ்வவு தூரத்திலிருக்கிறது என்பதும் தெரியவில்லை. இந்தா வந்திட்டுது என இரண்டு மணிநேரமாக யார் யாரோ யாருக்கோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். 

சடுதியாக வானம் கிழித்துப் பெருமழை! அவ்வளவு அழகான மழை. மகிழ்ச்சியுடன் அப்படியே அண்ணாந்து ஆசை தீரப் பருகிக்கொண்ட அந்தத்தருணமே தூய நீரின் உண்மையான சுவையை உணர்ந்த அல்ல முதன்முறையாக நீரின் சுவையறிந்த பொழுதானது. என் முன்னால் நகர்ந்து கொண்டிருந்த ஒரு அண்ணன் தான் வைத்திருந்த குடையை விரித்துத் தலைகீழாகப் பிடித்து, அதில் தேங்கிய நீரை ஒரு கப்பில் சரித்து ஸ்டைலாகக் குடித்தார்.

மழை ஓய்ந்து மீண்டும் வெய்யில் எரிக்க, ஆடைகள் முற்றிலும் உலர்ந்து போயிருந்தது. தூரத்தில் சிறு மோட்டார் ஷெல்களின்  சூட்டுச் சத்தம் துல்லியமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. வரிசை நகர்ந்தபாடில்லை. பக்கத்தில் ஒரு அண்ணன். அவரது சாளி மோட்டார் சைக்கிளின் கூடைக்குள் ஒரு பொமரேனியன் நாய்க்குட்டி அமர்ந்திருந்தது. இப்படியொரு பயணத்தை, இவ்வளவு சனத்திரளைக் கண்டிருக்காததாலோ என்னவோ சுற்றுமுற்றும் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. அமைதியாகக் குறைக்காமல் இருந்தது பார்க்க ஆச்சரியமாக இருந்தது. இடையிடையே எஜமானனின் முகத்தையும் திரும்பிப் பார்த்தது. ஒருவேளை நிற்கிறாரோ இல்லையோ எனக் கலவரமடைந்திருக்கலாம்.நான் பார்ப்பதைக் கவனித்ததுபோலத் திரும்பிப் பார்த்தது. கண்களில் வியப்பைத் தெரிவிப்பதுபோல, ஆர்வமாக என முகத்தை நிமிர்ந்து பார்த்தது. நான் ஏதேனும் பேசுவேனோ என எதிர்பார்ப்பதைப்போல காத்திருந்தது. பின்  மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது.

 

நாவற்குழி ரயில் பாலம் தூரத்தில் தெரிந்து. மறுபுறம் இடப்பக்கமாக எங்களுக்குச் சமாந்தரமாக இன்னொரு வரிசை தூரத்தில் தெரிந்தது. அது நல்லூர் செம்மணி வீதியால் நகரும் மக்கள். பிரதான வீதி நிறைய சனத்திரள். வீதியின் இருமருங்கும் சடுதியாகச் சரிந்து வயல்வெளியும் சதுப்புநிலமுமாக இருந்தது. நீர் தேங்கியிருந்தது. சிலர் வீதியைவிட்டு சதுப்பு நிலத்தில் இறங்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். சதுப்பு நிலத்தில் யாரோ ஒரு முதியவர் மயங்கி விழுந்து இறந்துவிட்டதாகச் செய்தி கடத்தப்பட்டு வந்தது. சற்று நேரத்தில் நான்குபேர் இறந்துவிட்டதாகப் பேசிக் கொண்டார்கள். என் கைகளிருந்து ஐந்தாறுமுறை சைக்கிள் நழுவி சரிவில் வழுக்கி சதுப்புநீருக்குள் விழுந்தது. மீண்டும் மீண்டும் இழுத்து எடுத்து வைத்துக் கொண்டேன்.

இந்திய இராணுவத்தினரது போன்ற திறந்த ஜீப் ஒன்றில் இயக்க உறுப்பினர்கள் மூவர் சதுப்பு நிலத்தால் அடிக்கடி நம் வரிசைக்குச் சமாந்தரமாக சென்றுவந்தார்கள். தண்ணீர் தேங்கி மறைந்துக்கொண்டிருந்த வயல் வரப்புகள் மீது ஜீப் ஏறியிறங்கிக் குதித்துக் குதித்து ஓடிக்கொண்டிருந்தது. தண்ணீர் நாலா பக்கமும் பீய்ச்சியடிக்க, நம் மீதும் அவப்போது தெறிக்க நாமும் அப்படிச் சென்றால் எவ்வளவு நல்லாயிருக்கும் மனம் ஒருகணம் ஜீப் ஏறிப் பறந்தது. மக்களை ஒழுங்கு படுத்தவோ, உதவி  செய்யவோ இல்லை சும்மா வெறுப்பேற்றவே ஓடித்திரிகிறார்கள் என்று தோன்றி எரிச்சலடையவைத்தது!

‘ஷெல் அடிக்கிறாங்களோ தெரியேல்ல’ யாரோ ஒருவர் அச்சம் தெரிவித்தார். நல்ல வாய் முகூர்த்தம் அவருக்கு. சற்று நேரத்தில் பலாலியில் ஆர்ட்டிலறி அடிக்கும் சத்தம் கேட்டது. ‘ஆட்லறி குத்திட்டான். எல்லாரும் படுங்கோ!’ யாரோ ஒருவர் கத்தினார். ‘ஆக்களுக்கு அடிக்க மாட்டான்’ என இன்னொருவர் நம்பிக்கை தெரிவித்தார். அப்படியே எல்லாத்தையும் கைவிட்டு போட்டது போட்டபடி சிலர் சதுப்புநிலத்தில் இறங்க, சிலர் வீதிச்சரிவில் மறைந்து பொசிஷன் எடுக்க, ‘எது வந்தாலும் வரட்டும்’ என பலர் பாத்திருக்க புரோப்பலர் சத்தம் துல்லியமாகக் கேட்க, கடந்து போயின ஐந்தாறு ஷெல்கள். பின் அமைதியானது.

மாலை வெய்யில். எந்தச் சலனமுமில்லாத துல்லியமான வானம். கண்ணுக்கெட்டிய தூரம் பறந்து கிடக்கும் வெளி. தொலைதூரத்தில் பனை மரங்கள். கூட வந்தவர்களின் பேச்சுக்குரல்கள் ஒய்ந்திருந்தன. பசியும் தாகமும் கொடுத்த சோர்வும், பேசிப்பேசியே  களைப்படைந்தோ மென்சோகம் கலந்த மௌனம் அது. இதோ வந்துவிட்டது. இன்றைய ஒருநாள் பிரசித்திபெற்ற, இன்றைய ஒரு நாளின் உச்சகட்ட இலட்சியமான நாவற்குழிப் பாலம். அதில் நடக்கும்போது மட்டும் சற்று வேகமாக தொடர்ந்து நடக்க முடிந்தது. அவ்வளவுதான் சாதித்தாகிவிட்டது.

சந்திக்கு அருகாமையில் பரந்திருந்த வெளியில் ஆங்காங்கே திரள்திரளாக மக்கள் உட்கார்ந்திருந்தார்கள்.  தரையில் உரப்பை ஒன்றை விரித்து அம்மா உட்கார்ந்திருந்தார். இது எங்கே கிடைத்தது அம்மாவுக்கு? அம்மாவின் மடியில் தலை வைத்து அப்படியே கால்களை நீட்டிப் படுத்துக் கொண்டேன். இருட்டத்தொடங்கிவிட்டது. மழை வருமா? நேரம் ஆறுமணியை நெருங்கியது. கண்களை மூடிக்கொண்டேன். அது நீண்டதொரு வருடத்தின் மிக நீண்டநாளாக இருந்தது.

HFT235pO9kihX3wn247YXHuwpviHtm695VAOWzSD

 

http://www.4tamilmedia.com/special/yard/2703-2016-10-31-07-08-35

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் இடப்பெயர்வைப் பார்த்தது போலிருக்கு. ஒருவித ஆற்றாமையும் வந்துபோவதைத் தடுக்க முடியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.