Jump to content

முத்தப்பா என்கிற உளவாளி – சயந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

முத்தப்பா என்கிற உளவாளி – சயந்தன்

இயக்கத்திலிருந்து தப்பிச் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த உயர்ந்த வேலியடைக்கப்பட்ட முகாமிலேயே முத்தப்பாவை முதன்முதலாகக் காண நேர்ந்தது. அதற்கு சிலமணி நேரங்களின் முன்பாகக் கீழ்வரும் சம்பவங்கள் நிகழ்ந்திருந்தன.

நான் காட்டின் ஒற்றையடிப் பாதையிலிருந்து வெளியேறி கிரவல் தெருவிற்கு வந்திருந்தேன். அப்பொழுது நள்ளிரவு தாண்டியிருந்தது. பகலென்றால் புழுதி பறக்க இரைச்சலில் அலறும் தெரு இரவில் முகக்குப்புற கவிழ்ந்ததைப் போல அடங்கிக் கிடந்ததைப் பரிதாபத்துடன் பார்த்தேன். கலங்கலான நிலவின் வெளிச்சம் அந்தரமான ஓர் உணர்வை ஏற்படுத்திற்று. இங்கிருந்து இடது புறத்திலிருக்கிற மாங்குளம் சந்திக்கு இரண்டு இரண்டரை மணி நேரத்தில் நடந்து சென்றால் காலையில் முதலாவது பஸ்ஸைப் பிடிக்கலாம். சற்று நடந்து தலையைத் திருப்பி, பின்னால் பார்த்தேன். தெருவிலேறிய ஒற்றையடிப் பாதை சட்டென்று உருமறைத்துக் கொண்டதைப் போல அடர்த்தியான மரங்களுக்கிடையிலும் புதர்களுக்கிடையிலும் காணாமற் போயிருந்தது. யாருக்கும் தெரியாமல் தப்பித்து வந்திருந்தாலும் காட்டிலிருக்கிற முகாமிற்கும் எனக்குமிடையில் ஓர் இழையைப் போலிருந்த பாதையிலிருந்து துண்டிக்கப்பட்டதாய்த் தோன்றிய போது அச்சமும் தனிமையுணர்வும் பீடித்தன. தொடைகளைச் சுற்றி மேலேறுகிற சர்ப்பத்தைப் போல குளிர்  இடுப்பு, நெஞ்சு, கழுத்தென அளையத் தொடங்கியது. அப்பொழுது வெறும் சாறம் மட்டும் கட்டியிருந்தேன். உள்ளாடை அணியவில்லை. சாறத்தை சற்று மேலேற்றி குறுக்குக் கட்டாகக் கட்டிக்கொண்டேன்.

மாங்குளம் சந்தியில் நான்கைந்து தேநீர்க் கடைகளைக் கண்ட ஞாபகமிருந்தது. காலையில் அவர்கள் கடையைத் திறக்கும் போது கொஞ்சம் சில்லறைக் காசும் ஒரு பழைய சேர்ட்டும் பிச்சையாகக் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்த போதே முணுக் என்று கண்ணீர் முட்டிவிட்டது. அப்படியெல்லாம் கேட்டுப் பழக்கமிருக்கவில்லை. கண்களைத் துடைத்து விட்டேன். தலை இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் மொட்டையடிக்கப்பட்டிருந்தது. ஓர் அனாதைச் சிறுவனைப் போல தோன்றிய கற்பனைகள் கழிவிரக்கத்தை ஏற்படுத்தின. ‘வீட்டுக்குப் போக வேணும்’ என்று கேவலாக முணமுணுத்தேன். ‘துண்டு கொடுத்து விலகாமல் இருந்தியெண்டால் பெரிய நிலைக்கு வருவாய்’ பொறுப்பாளருடைய குரல் நினைவுக்கு வந்தது. அவர் நேற்று முன் தினமும் ‘இயக்கத்திற்கு விசுவாசமாக இருப்பதென்பது உனக்கு நீயே விசுவாசமாக இருப்பதுதான்’ என்று சொல்லியிருந்தார். இப்பொழுது திரும்பி நடந்தாலும் யாருக்கும் அரவமில்லாமல் சென்று பெடியங்களோடு பெடியங்களாகப் படுத்துவிடலாம். ஒரு கெட்ட கனவைப் போல எல்லாவற்றையும் மறந்து விட்டு நாளைக்கு காலையிலிருந்து மறுபடியும் பொறுப்பாளரிடம் “எப்பொழுது என்னைப் பயிற்சிக்கு அனுப்புவியள்” என்று தொணதொணக்கலாம். ஒருவேளை இரவுச் சென்ரியில் இருப்பவர்களிடம் கையும் மெய்யுமாகச் சிக்கவும் கூடும். ‘தப்பியோட முற்பட்டவர்’

நெஞ்சில் சிலுவைக் குறியிட்டு ‘மாதாவே’ என்று முணுமுணுத்தேன். காற்று கூவுவதைப் போல ஒரு சத்தம் கேட்டது. காதைக் கூர்மையாக்கினேன். கிளைகளை உலுப்புகிற இரைச்சல். சட சடவென கொப்புகள் முறிந்தன. முள்ளந்தண்டை உருவுமாற் போல தேகம் கூசியது. ‘யானையாயிருக்குமோ..’ சின்னக் கண்களுடைய ஒரு கரிய யானை வலிய மரக்கிளைகளை தும்பிக்கையால் வளைத்து முறித்துத் துவசம் செய்தது. நான் பிடரியில் குதிக்கால் பட ஓடத் தொடங்கினேன். சாறம் இடறி இடறித் தடுக்கியது. தலைக்கு மேலால் உருவி கைகளில் சுற்றியவாறு ஓடினேன். அழுகை பீறிட்டபடி வந்தது. “என்ரை அம்மா” என்று விம்மினேன். ஓடிக் கொண்டிருக்கும் போதே விடிந்துவிடும் என்று தோன்றியது. தெருவின் இருபுறத்திலும் நிற்கின்ற மனிதர்கள் கண் கொட்டாது என்னைப் பார்க்கிறார்கள். சிரிக்கிறார்கள். மனம் கறுவிக் குமைந்தது. யானையை மறந்து கைகளை முழந்தாளில் ஊன்றி மூச்சு வாங்கினேன். தொண்டை வறண்டிருந்தது. நடுத்தெருவில் குந்தியிருந்தேன். சாறத்தை ஒரு பந்தைப் போல சுற்றி கையில் பிடித்தபடி இருட்டை வெறித்துப் பார்த்தேன். இன்னொரு முறை யானை துரத்துமென்றால் உரலைப்போல கீழிறங்குகிற அதன் பாதத்தை நேர்கொண்டு பார்த்தே தீருவதென்ற நெஞ்சுரம் அந்தப் பொழுதில் உருவாகிற்று.

ஓடி வந்த திசையிலிருந்து தெரு மத்தியில் ஓர் ஒளிப்பொட்டு உருவாகி மெல்ல மெல்ல பிரகாசமாகுவதைக் கண்டேன். இருளை விழுங்கி விழுங்கி பின்னால் துப்பியவாறு அது முன்னேறியது. மோட்டார் சைக்கிள். அதனுடைய உறுமலின் தொனியும், அந்த அகால வேளையும் அது யாராயிருக்கக் கூடுமென்ற அனுமானத்தை ஏற்படுத்தினாலும் அமைதியாக எழுந்து சாரத்தை அணிந்தவாறு ஓரத்திற்கு நகர்ந்து நின்றேன். ஒளிந்து கொள்வதற்கு ஏதுவாக பெரிய மரமும் புதரும் பக்கத்தில் இருந்தன. நானோ வீதியில் பேருந்திற்கு காத்திருப்பவனைப் போல நின்றேன். மோட்டார் சைக்கிள் வேகத்தைக் குறைத்து அருகாகி நின்றது. “என்ன அய்யா, இந்த நேரத்தில்” என்று தான் அதிலிருந்தவன் முதலில் கேட்டான். அவன் கண்ணாடி அணிந்திருந்தான். கழுத்தில் தொங்கிய வெள்ளிச் சங்கிலியின் இரு முனைகளும் கண்ணாடியோடு இணைக்கப்பட்டிருந்தன. தடித்த உருவம். நான் இலக்கத் தகட்டைப் பார்த்தபடி நின்றேன். சற்று நேரத்தில் அவன் “முன்னால் வா” என்ற போது இனி நானாக எதையும் சொல்லத் தேவையில்லை என்று தோன்றியது. ஒளி விழும் படியாக நின்றேன். ஒட்ட நறுக்கிய தலை, ஒட்டிய கன்னம், வெற்றுத்தேகம், பழுப்பேறிய சாறம். “பின்னால் ஏறு” என்றான். சாறத்தை மடித்துக் கட்டிவிட்டு காலைத் தூக்கி ஏறி உட்கார்ந்தேன். மோட்டார் சைக்கிள் வேகமெடுத்தது. சில இடங்களில் உதறியது. அப்போதெல்லாம் அவனுடைய தோளைப் பிடித்துக் கொண்டேன். மாங்குளச் சந்தியிலிருந்து வலது புறத்தில் திருப்பினான். இடது புறத்தில் எட்டுக் கிலோ மீற்றர் தூரத்தில் என்னுடைய வீடு இருந்தது.

வானம் கருநீல நிறத்திற்கு மாறத் தொடங்கிய வேளையில் மண்ணெண்ணெய் பரல் தகரங்களால் காற்பனை உயரத்திற்கு வேலியடைக்கப்பட்டிருந்த காணியின் அகன்ற வாசலுக்கு வந்து சேர்ந்தோம். வாசலில் துப்பாக்கியோடு சென்ரிக்கு இருந்தவன் கதவைத் திறந்து விட்டபோது சங்கேதமான ஒரு சிரிப்பை உதிர்த்தான். மோட்டார் சைக்கிள் உள்ளேயும் சற்று தூரத்திற்கு ஓடிய பிறகு ஒரு கொட்டிலின் அருகாக நின்றது. கண்ணாடிக்காரன் “இறங்கு” என்றான். சாறத்தை ஒதுக்கிக் கொண்டு இறங்கி நின்றேன். “உள்ளே இரண்டு மூன்று மேசைகள் இருக்கு. ஏறிப்படு. விடியட்டும்” நான் சரியென்று தலையாட்டினேன். இருட்டுக்குள் துழாவி நுழைந்து, இடுப்பில் முட்டுப்பட்ட மேசை விளிம்பில் துள்ளியேறிப் படுத்துக் கொண்டேன். நித்திரை வரவில்லை. நினைவுகளின் அலைச்சலாயிருந்தது. வெளிச்சத்தைக் கண்டபோது புதருக்குள்ளேயோ, மரத்தின் பின்னாலேயோ பதுங்கியிருக்கலாம் அல்லது தப்பியோட முயற்சித்திருக்கவே கூடாது. அது ஒரு சடுதியான நினைவாகத் தான் தோன்றியது. இருட்டுக்குள் சலம் கழிக்கப்போன போது ‘வீட்டிற்குப் போகலாம்’ என்று தோன்றவும் புறப்பட்டு விட்டேன். அடர்த்தியான இருளுக்குள்ளும், காட்டிற்குள்ளும் அசுமாத்தமின்று நடந்து வெளியேறி தெருவிற்கு வருவதென்பது இலேசானதல்ல. பிறகு மொக்குத் தனமாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு எதற்காக நின்றேன் என்று தெரியவில்லை. யானை துரத்திய பிறகு தான் நடப்பது நடக்கட்டும் என்ற விட்டேத்தியான மனநிலை உருவாகியிருக்க வேண்டும். இப்பொழுது அது யானை அல்ல, குரங்குகள் என்று தோன்றுகிறது. பெரும்பாலும் இன்று காலை மறுபடியும் என்னைக் கொண்டு போய் முகாமில் விடுவார்கள். அவமானத்தில் மனம் சுருங்கியது. ‘தப்பியோடியவர்.’

வெளிச்சம் தயங்கித் தயங்கி நுழையத் தொடங்கியிருந்தது. விழிப்பதற்கு சற்று முன்பாக நான் துாங்கியிருக்கக் கூடும். இடுப்பிலிருந்து நழுவி கால்களில் கிடந்த சாறத்தை இழுத்து முடிந்தவாறு எழுந்து உட்கார்ந்தேன். வார்னீஸ் பூசிய உறுதியான மேசையைத் தடவிப் பார்த்தேன். அடுத்த மேசையில் முத்தப்பா படுத்திருந்தார். அப்போது தான் கவனித்தேன். காக்கி நிறத்தில் காற்சட்டையும் வெள்ளை பனியனும் அணிந்திருந்தார். நாற்பத்தைந்து வயதிருக்கலாம். காதோரங்களில் நரை. ஒழுங்கீனமான தாடி. கையை மடித்து அணையாக்கி நித்திரையிலிருந்த கோலம் பரிதாபமாயிருந்தது. அவருடைய நித்திரையைக் குழப்பிவிடக் கூடாதென்று அவதானத்தோடு இறங்கவும் விழித்துக் கொண்டார். பெரியதொரு கொட்டாவியோடு வாயைத் தேய்த்து கண்களில் பூளையை உருட்டியெடுத்தார். “இடப்பக்கமாக இருக்கிற கொட்டிலில் தேத்தண்ணி தருவாங்கள். போய் வாங்கிக் குடி” என்றவர் மறுபடியும் மறுபுறமாகத் திரும்பி உறங்கத் தொடங்கினார். நான் வாயிலோடு சாய்ந்து நின்று கொண்டேன்.

நாற்புறமும் உயர்ந்த தகரங்களுக்கிடையில் காணி மூடுண்டு கிடந்தது. கிடுகினால் வேயப்பட்ட மூன்று நான்கு கொட்டகைகள் இருந்தன. நடுவில் சிமெந்தாலான வீடு. அருகில் நான்கைந்து மோட்டார் சைக்கிள்கள், ஒரு பச்சை நிற பஜிரோ வாகனம். கிணற்றடியைச் சுற்றி பனையோலையால் வேலி அடைத்திருந்தார்கள். கயிற்றுக் கொடியில் நீளக் காற்சட்டைகளும், ‘டாங் டாங்’ சேர்ட்டுகளும் காய்ந்தன. பத்து பதினைந்து நபர்களுடைய நடமாட்டமிருந்தது. முத்தப்பா மேசையிலிருந்து குதித்துக் கீழிறங்கினார். அவருக்கு குள்ள உருவம். “நீ தேத்தண்ணி குடிக்கப் போகேல்லயா” என்றவாறே தலையைக் கோதிச் சரி செய்தார். ‘இல்லை’ என்று தலையசைத்தேன். “தின்று குடித்துத் தெம்பாக இருந்தால் தான் உடம்பு வலியைத் தாங்கும்” காற்சட்டையை ஒரு கயிறால் இறுக்கி இடுப்பில் முடிந்தார். “சரி, பிறகு களத்தில் சந்திப்போம்” என்று விட்டு என்னை விலத்தியவாறு இறங்கி நடந்தார். தண்டனை காலத்துப் பாரதுாரமான வேலைகளைத் தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருக்க வேண்டும்.

காலைச் சாப்பாட்டிற்குப் பின்னர் என்னை விசாரணைக்கு அழைத்தார்கள். பொதுவான உரையாடல் போலத்தான் இருந்தது. கண்ணாடிக்காரனும் உடனிருந்தான். பருப்புக் கறியில் பாணைத் தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். “நீ காதல் தோல்வியிலா இயக்கத்திற்கு வந்தாய்” என்று எடுத்து எடுப்பிலேயே கேட்டான். நான் எச்சிலை விழுங்கிக் கொண்டேன். மனம் கூனியது. மெல்ல நிமிர்ந்தேன். “இங்கே அப்படியும் தான் வருகிறார்கள். அதனாலென்ன?” என்றான். சற்று தீவிரத்தோடு “அற்பமான காரணங்களைச் சொல்லிக் கொண்டு வந்தவங்கள் பிறகு அற்புதமான காரியங்களைச் செய்தாங்கள். நீ என்ன செய்யப் போறாய்?” என்று கேட்டான்.

“நான் வீட்டுக்குப் போகப் போறேன்”

“எப்ப சேர்ந்தாய்?”

“மூன்று மாசத்துக்கு முதல், இன்னும் என்னைப் பயிற்சிக்கு அனுப்பவில்லை.” வீட்டிற்கு செல்வதற்கு இந்த மேலதிக தகவல் உதவக்கூடும் என்பதைப் போலச் சொன்னேன். என்னைப் பற்றி ஒரு முடிவெடுப்பதற்கு அலுத்துக் கொள்வதைப் போல அவர்களுடைய முகபாவங்கள் இருந்தன. நல்ல சேதி ஒன்றைச் சொல்வார்கள் என்பதைப் போல ஒவ்வொரு முகங்களையும் பார்த்துக் கொண்டு நின்றேன். ஒருகட்டத்தில் கை கூப்பிக் கெஞ்சிக் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தேன். திரும்பவும் கண்ணீர் துளிர்த்து வடிந்தது.

“எத்தனை வயதடா உனக்கு?”

“பதினேழு” புறங்கையால் கண்ணைத் துடைத்து மூக்கை உறிஞ்சிவிட்டுக் கொண்டேன். ஒரு தெளிவு பிறந்ததுபோல இருந்தது. “என்னை திரும்பவும் கொண்டு போய் என்ர முகாமில் விடுங்கோ. நான் வீட்டிற்குப் போகவில்லை” என்று திடுமென்று சொன்னேன்.

“இவனுக்கு ரோசம் பொத்துக்கொண்டு வந்திட்டுது” என்று சிரித்தார்கள். “ஒழுங்கா விசுவாசத்தோடு இருப்பாயா” என்ற போது  சரியென்று தலையசைத்தேன். கண்ணாடிக்காரன் யோசித்தான். “வேண்டாம், நீ முதல்ல இங்கயிருக்கிற முத்தப்பாவின் இயக்கத்தில் சேர்ந்து அவருக்கு விசுவாசமாக நடந்து காட்டு, பிறகு பார்ப்பம்” என்றான்.

முத்தப்பா மூன்று மாதங்களுக்கும் மேலாக தண்டனைக் காலத்தை அனுபவித்து வருவதாகச் சொன்ன போது தேகத்தின் இரத்தமெல்லாம் ஆவியாகி வெளியேறியதைப் போல நிறையத் தளர்ந்து போனேன். அவருடைய உருக்குலைந்த தேகத்தில் கடந்த தொண்ணூறு நாட்களும் அச்சாக வரையப்பட்டிருந்தன. முழந்தாளிற்கு கீழே நாள முடிச்சுகள் புடைத்திருந்தன. முதுகு கூன் விழுந்திருந்தது. குழிக்குள் செத்த கண்கள். “அடிச்சவங்களா..” என்று மெதுவாகக் கேட்டேன். “அடிச்சது, நெரிச்சது, உருட்டினது, பிரட்டினது.. எல்லாமும் தான்” முத்தப்பா வற்றிய குரலில் சொன்னார்.

“நீங்கள் இயக்கத்திற்குப் போயிட்டுத் தப்பியோடினீங்களா?”

“இல்லை, ஆமிக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சாமான் வாங்கப் போயிட்டு திரும்பி வந்தன். நாட்டிற்கு விசுவாசமில்லையென்று சொல்லி பிடித்து விட்டார்கள்”

முத்தப்பா செய்யாத தொழில்கள் இல்லை என்றார். முதலில் ஒரு சைக்கிள் திருத்தும் கடை வைத்திருந்தார். பிறகு காட்டுக்குள் மரம் தறித்து விற்றார். சற்று காலம் தேநீர்க்கடை. பிறகு கோயில்களுக்கு வர்ணம் பூசும் தொழில். தொடர்ந்து கோழி வளர்ப்பு. கடைசியாகத் தான் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று பொருட்களை வாங்கி வந்து விற்கத் தொடங்கினார். ஆறாவது மாதத்தில் இராணுவத்துடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் அவரைக் கைது செய்திருக்கிறார்கள்.

நேற்றோ முன்தினமோ பேய் மழை பெய்திருக்க வேண்டும். முத்தப்பா ஆளுயரக் குழிக்குள் குதித்து “மண்ணைக் கோலி கடகத்தில தாறன். சுமந்து கொண்டு போய் கொட்டிட்டு வா. இரண்டடி உயரத்திற்கு தரையை எழுப்ப வேணும். இப்படி இன்னமும் நான்கு கொட்டில்களுக்கு மண் நிரவ வேணும்” என்றார்.  ஈர மண் பேய்ப்பாரமாகக் கனத்தது. ஒருவாறு கடகத்தைத் தோளில் பொருத்தி நடந்த போது சாறம் தடுக்கியது. தோளிலிருந்து தலைக்கு ஏற்றினால் இலகுவாயிருக்கும். பெத்தம்மா நிவாரண அரிசிக் கடகத்தை தலையில் ஏற்றிவிட்டு கைகளை வீசிக் கொண்டே நடப்பாள். அவளுடைய சுருட்டு வாசத்தை நினைவில் முகர்ந்தேன். அடையாளக் குறி இடப்பட்ட நிலத்தில் கடகத்தை கவிழ்த்துக் கொட்டினேன். இடறிக் கொண்டிருந்த சாறத்தை உருட்டி ஒரு கோவணத்தைப் போல செருகிக் கொண்டேன். வெயிலின் சூடு பரவத் தொடங்கியிருந்தது. மண் அளைந்த கையால் வியர்வையைத் துடைத்தேன். கசகச என்றிருந்தது. கடகத்தில் கட்டெறும்புகள் ஊர்ந்தன. எரிச்சலில் நிலத்தில் அடித்து உதறினேன். முத்தப்பா குழிக்குள் நின்று கத்தினார்.

“சோம்பேறிப் பயலே, அலமலாந்தாமல் கெதியாக வா”

சுர்ரென்று தலை கொதித்தது. ‘நீயொரு உளவாளி.. நீயொரு துரோகி’ என்று பல்லை நருமினேன். கடகத்தை குழிக்குள் வீசினேன். அவர் இரண்டாவது கடகத்தில் மண்ணைக் குவித்து தயாராக வைத்திருந்தார்.

மதிய உணவிற்காக இருபது நிமிடம், பின்னேரத் தேநீருக்காகப் பத்து நிமிடம் தவிர்த்து இரவு ஏழு மணி வரையும் முத்தப்பா என்னை விரட்டி விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தார். பசிக்களையிலும் தோள் வலியிலும் துவண்டு போயிருந்தேன். திடீரென்று கண்ணாடிக்காரன் வந்து “உன்னை மறுபடியும் இயக்கத்தில் சேர்த்துக் கொள்கிறோம். நீ எங்களோடு நில்” என்று சொல்வதைப் போலவும் அக்கணத்திலேயே கடகத்தை முத்தப்பாவின் மூஞ்சியில் விட்டெறிந்து விட்டு “வேகமாக மண்ணைக் கோலி நிரப்புங்கள்” என்று கட்டளையிடுவதைப் போலவும் அடிக்கடி கற்பனை செய்து கொண்டேன். ஆனால் முத்தப்பா ‘ஒரு சின்னப்பெடியன்’ என்றுகூட என்னில் பரிதாபம் காட்டவில்லை.

இரவு ஏழரை போல இரண்டு பேரும் ஒன்றாகக் கிணற்றடிக்குப் போனோம். ஒரு மரத்தின் கிளைகளை முறித்துப்போட்டது போல இரண்டு கைகளும் துவண்டிருந்தன. “நான் தண்ணி அள்ளித் தாறன். குளி” என்றார் முத்தப்பா. நான் பிடிவாதமாக மறுத்து விட்டு அருகில் நின்ற தென்னையில் சாய்ந்து நின்றேன். இங்கிருந்த எவருமே, இன்றைக்கு முழுவதும் இந்த இரண்டு சீவன்களையும் ஏனென்று கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. மத்தியானச் சாப்பாட்டு நேரத்தில் கண்ணாடிக்காரனைக் கண்டேன். கண்டும் காணாதவனைப் போல சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ஒரு வார்த்தை ‘நாயே’ என்று திட்டினாலாவது அதுவொரு அங்கீகாரமாயிருக்கும். நானிருந்த முகாம் பொறுப்பாளர் இவர்களைப் போன்றவர் அல்ல. அவருக்கு சிரித்த செந்தளிப்பான முகம். நாங்கள் தலைக்கு ஒழுங்காக எண்ணெய் வைப்பதிலிருந்து உள்ளாடைகளைத் தோய்த்துப் பயன்படுத்துவது வரை அக்கறையாக கவனித்துக் கொள்வார். “நாளைக்கு நீங்கள் போற இடத்தில, தென்னவன் வளர்த்த வளர்ப்பு என்று என்னையல்லவா பழி சொல்லுவார்கள்.” அவருக்கு ஒரு கையும் ஒரு காலும் இல்லை.

தேகத்தில் படிந்திருந்த மண்ணாலேயே நன்றாக ஊத்தை உருட்டி தலைக்குக் குளித்தேன். ஓரிரண்டு வாளி நீரை ஊற்றிய போதே உடலில் அசதி வெட்டுப்பட்டது. முத்தப்பா கண்ணாடிக்காரனிடம் கேட்டு வாங்கியதாக தோய்த்து மடித்த ஒரு பழைய சாரமும், பெனியனும் கொண்டு வந்து தந்தார். சாறத்தால் தலையைத் துவட்டி அதையே அணிந்து கொண்டேன். ஈரமானதை முறுக்கிப் பிழிந்து கிணற்றடி வேலியில் காய விரித்தேன்.

இரவு பசிக்கவில்லை. நிறையைத் தண்ணீரை மட்டும் குடித்து வயிற்றை நிரப்பிவிட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டேன். கையிலும் காலிலுமாக நுளம்புகள் கடித்தபடியிருந்தன. அனிச்சையாக ஒவ்வொன்றாக அடித்து உருட்டி வீசினேன். செய்தியறிக்கையின் முகப்பொலி கேட்டது. இரவு எட்டரை. முத்தப்பா சாப்பிட்டுவிட்டு வந்தார். மேசையில் ஏறி மல்லாந்து படுத்து சாறத்தின் கீழ்விளிம்பை காற்பெருவிரலால் கவ்விக்கொண்டேன். நுளம்புகள் காதுக்குள் ‘ஙீ’ என்றன. அப்பொழுது முத்தப்பா யாருக்கோ சொல்வதைப்போல “நேற்று என்ர மூத்த பெண் பிள்ளை முத்துவின் சாவீட்டுத் திதி.. மூன்றாவது வருசம்” என்றார். நான் ஏற்கனவே தெரிந்த கதையைக் கேட்டதைப் போல “ம்” என்றேன்.

“தேத்தண்ணிக் கடையில நின்றவளை பொழுது இருட்டிவிட்டது, வீட்டுக்குப் போ என்று நான்தான் துரத்தினேன். அவள் வெளிக்கிட்ட கொஞ்ச நேரத்தில் கிபிர் சத்தம் கேட்டது. பிறகு குண்டுச் சத்தம் கேட்டது. பிறகு.. பிறகு இருட்டுக்குள் எல்லோரும் இதுதான் அவளின்ரை சைக்கிள் கரியர், இதுதான் அவளின்ரை செருப்பு, இதுதான் அவளின்ரை உள்சட்டை என்று அடையாளம் காட்டுகினம். ஆனால் அவளை கடைசி வரையிலும் நான் காணவில்லை..”

முத்தப்பாவுடைய சிறுவயது ஞாபகமென்றால் அவரால் பசியைத் தவிர வேறெதையும் நினைவுபடுத்த முடியவில்லை. அதுவொரு சுவாலையாக அவருடைய வயிற்றை எரித்திருக்க வேண்டும். ஊரைவிட்டு ஓடிப் போனவர் நகரத்தில் சாப்பாட்டுக் கடையொன்றில் “எனக்குப் பசிக்குது, சாப்பாடு தருவியளா?” என்று கேட்டபோது அவரை அங்கேயே வேலைக்கு வைத்துக் கொண்டார்களாம். அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும். இரவு பதினொன்று போல நித்திரை கொள்ளலாம். அப்போது அவருக்குப் பன்னிரெண்டு வயது நடந்து கொண்டிருந்தது. இருபதாவது வயதில் ஜீவிதத்தைக் கண்டபோது அவர் பசியை மறந்த ஓர் அரிதான கணமாக அதைச் சொன்னார். “அதனாலேயே அவளை எனக்கு நிறையப் பிடித்தது”

மூன்றாவது மாதம் இரண்டு பேருமே ஊரை விட்டு ஓடிப்போனார்கள். ‘பெரியாத்தையின்’ சூலத்தை சாட்சியாகக் கொண்டு ஜீவிதத்தின் கழுத்தில் முத்தப்பா தாலி கட்டினார். இப்பொழுது பசியை இரண்டு பேருக்குப் பங்கிட வேண்டியிருந்தது. இரண்டாவது வருடத்தில் மூன்று பேருக்கு.. ஐந்தாவது வருடத்தில் நான்கு பேருக்கு..

“எதைத் தொட்டாலும் துலங்கவில்லை. நாளாக நாளாக நான் ஒன்றுக்கும் உதவாதவன் என்ற நினைப்புத்தான் பெருகிச்சுது” முத்தப்பாவின் சொற்கள் இருட்டுக்கு பயப்படுவதைப் போல அடங்கி வெளியேறின. “இனி நான் எவனோடயாவது படுத்துத்தான் இந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்று ஜீவிதம் ஒவ்வொரு நாளும் கத்தினாள். அப்படிச் சொல்லாதே அம்மா என்று நான் ஒவ்வொரு நாளும் கெஞ்சினேன்”

முத்து செத்த பிறகு தேநீர்க் கடையை கைவிட்டு விட்டார். ஒரு நாடோடியைப் போல அலைந்து திரிந்தார். ஜீவிதம் இரண்டாவது மகளை பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்தி விட்டு தென்னந்தோட்டத்திற்கு வேலைக்கு கூட்டிச்சென்றாள். அவர்களுடைய சம்பாத்தியத்தில் கை நனைக்க வெட்கப்பட்டுக் கொண்டு வாசக சாலை கட்டிடங்களிலும், கோயில் மடங்களிலும் முத்தப்பா படுத்துக் கிடந்தார். பசியைத் தாங்க முடியாதபோது “பசிக்கிறது, பாணும் வாழைப்பழமும் தருவியளா” என்று கடைக்காரர்களிடம் சென்று கேட்டார். இரண்டாவது மகள் ஐந்தாறு தடவைகள் அவரை வீட்டுக்கு வருமாறு வந்து கெஞ்சினாள். “நானொரு கையாலாகதவன் என்று உன்ர அம்மாட்டைப் போய்ச் சொல்லு, போ” என்று அவளைத் துரத்தினார். “போகிற வழியில் சாப்பிட ஏதாவது வாங்கித்தந்து விட்டுப் போ”

அன்றைக்கு இரவு ‘ஜீவிதத்தை நான் கண்டிருக்கவே கூடாது. அவள் பாவம்’ என்று தோன்றியது. நினைவுகளின் தொடர்ச்சியாக சட்டென்று ‘நல்லவேளையாக முத்து செத்துப் போனாள். அல்லது இரண்டு பிள்ளைகளோடு ஜீவிதத்திற்கு இன்னமும் கஸ்ரம்” என்று தோன்றவும் விதிர்த்துப் போய் எழுந்தவர் குந்தியிருந்து கேவிக் கேவி அழுதார். அப்பொழுது தான் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் சென்று பொருட்களை வாங்கி வந்து விற்பதென்று முடிவு செய்தார்.

முத்தப்பா குண்டும் குழியுமான கிரவல் வீதிகளில் மாடு போல மூசி மூசி சைக்கிள் உழக்கினார். ஆமிப் பிரதேசத்திற்குள் போகவும் வரவுமென பதினாறு பதினேழு மணித்தியாலங்களைத் தின்ன வேண்டியிருந்தது. தடை செய்யப்பட்ட பொருட்களைக் கடத்திக்கொண்டு வந்தால் நல்ல விலைக்கு விற்கலாம் என்றாலும் முத்தப்பா பயந்த சுபாவம் உள்ளவர். பொதுவான பொருட்களில் கிடைக்கின்ற ஓரளவு லாபம் அவருக்கு போதுமாயிருந்தது. வியாபாரத்தைத் தொடங்கிய இரண்டாவது மாதம், விற்பனைக்கு வரி விதித்த இயக்கம் ஆறாவது மாதத்தில் அவரை கைது செய்தது.

அன்றைக்கு இரண்டு பகுதியினருக்கும் இடையிலிருக்கின்ற சூனியப் பிரதேசத்தை சைக்கிளை உருட்டியவாறு கடந்த முத்தப்பா இயக்கக் கட்டுப்பாட்டு நிலத்தின் நுழைவில் தனக்கான அனுமதியை காண்பித்தார். சைக்கிளின் முன்னும் பின்னுமாக கொக்கோகோலா, வெற்றிலை, பாக்கு, ஆப்பிள் பழங்கள், சைக்கிள் ரயர், ரியூப் என ஊரிப்பட்ட பொருட்கள் நிறைந்திருந்தன. அவருடைய அனுமதியை பரிசோதித்தவன் “இதில கொஞ்சம் காத்திருங்கள் அய்யா” என்று தன்மையாகச் சொன்னான். முத்தப்பா அவரிடமிருந்த சகல ஆவணங்களையும் அவனுடைய மேசையில் பரப்பினார். “எல்லாம் சரியாத்தானே இருக்குது தம்பி” என்றார். அவன் “அடுத்த ஆள் வாங்கோ” என்று இவருக்குப் பின்னால் நின்றவரை அழைத்தான்.

இரண்டு மணி நேரம் காத்திருந்த பிறகு முத்தப்பாவையும் அவருடைய சைக்கிளையும் ஒரு ரக்டரில் ஏற்றினார்கள். “எதுவாக இருந்தாலும் இதுகளைக் கொண்டுபோய் வித்துக் காசாக்கி விட்டு நீங்கள் எங்கை வரச் சொன்னாலும் வாறன் தம்பிமார்” என்று முத்தப்பா கெஞ்சினார். அவருடைய குரலை வெட்டிக் கொண்டு ரக்டர் கடாமுடா என்றபடி ஓடத் தொடங்கியது. நீண்ட நேரத்திற்குப் பிறகு ஓர் இருண்ட காட்டுப்பாதையில் நுழைந்து பெரிய முகாமிற்கு முன்னால் நின்றது. முத்தப்பா ரக்டரிலிருந்து அவராகவே இறங்கினார். அவருக்குத் தண்ணீர்ப் போத்தலை நீட்டிய ஒருவன் “நாங்களாக எதையும் கேட்க மாட்டோம். நீங்களாகவே எல்லாத்தையும்  சொல்ல வேணும்” என்றான். சொல்வதற்கு எதுவும் இல்லையே தம்பி என்பதைப் போல தண்ணீரை வாங்கிக் குடித்தார்.

அன்றைக்கு இரவு முழுவதும் முட்கம்பிகளாலான ஓர் ஆளுயர குறுகலான கூட்டிற்குள் முத்தப்பாவை அடைத்து வைத்தார்கள். உட்கார முடியாது. நிறைய சாப்பிட்டிருந்ததால் தன்னால் நிற்க முடியும் என்று நினைத்தவர் நேரம் செல்லச் செல்ல கண்கள் துஞ்சி சரியத் தொடங்கினார். கம்பிகள் குத்திக் குத்தி நொடிக்கொரு தடவை அவரை விழிக்கச் செய்தன. இரண்டாவது இரவு அவரை ஒரு பதுங்குக் குழிக்குள் மாற்றினார்கள். கெதியில் விடிந்து விடும் என்ற நம்பிக்கையில் மூலைக்குள் குந்தியிருந்தார். அடிவயிற்றில் பசி சுவாலையைப் போல கிளம்பிற்று. கொஞ்ச நேரம் நித்திரை கொள்ள முயற்சித்தார். நிசப்தம் அவருக்கு எரிச்சலை மூட்டியது. தனக்குள் எதையோவெல்லாம் கதைக்கத் தொடங்கினார். சலம்பலாக யோசித்தார். “விடிந்தால் வெளிச்சம் வரும்” என்று தனக்குத்தானே ஆறுதல் சொன்னார். ஆனால் இரண்டு நாட்களைத் தாண்டியும் பதுங்குக் குழிக்குள் வெளிச்சம் வரவேயில்லை. தான் சாப்பிடுவது இரவுக்கா பகலுக்கா என்று தெரியாதபடிக்கு முத்தப்பா குழம்பிப் போயிருந்தார். இருட்டுக்கு பாரமேறி அவருடைய தலையைப் பிடித்து அழுத்தியது. பற்களால் நாக்கைத் துண்டாடுவதைப் போல கடித்தார். தலையைச் சிதற வேண்டும் போலிருந்தது. சாப்பாட்டை நிறுத்தியிருந்தார்கள். அடிவயிற்றில் பரவத்தொடங்கிய சுவாலை அவருடைய பன்னிரண்டு வயதுக்காலத்தை இழுத்து வந்தது. அழுகையைத் துடைத்து விட்டார். “எனக்குப் பசிக்குது. சாப்பாடு தாறியளா” என்று கீச்சிட்ட கேவல் குரலில் கத்தினார்.

மூன்றாவது நாள் காலை முத்தப்பாவை மேலே ஏற்றியபோது வெளிச்சத்திற்கு பயப்படுவதைப் போல கண்கள் கூசி மூடிக்கொண்டன. முகத்தைப் பொத்திக்கொண்டு முத்தப்பா தேம்பி அழுதார். இப்பொழுதும் தண்ணீர்ப் போத்தலை நீட்டிக்கொண்டே “நீங்கள் என்ன செய்திருக்கிறியள் தெரியுமா” என்று கேட்டவன்,  “நாட்டை காட்டிக் கொடுத்திருக்கிறியள்” என்று பதிலையும் சொன்னான். முத்தப்பா தண்ணீரை வாங்கி முகத்தை கழுவிக்கொண்டார். அவனை கலங்கலாகத் தான் தெரிந்தது.

“தம்பி, பெஞ்சாதிக்கும் பிள்ளைக்கும் ஒரு நேர வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றினதைத் தவிர நான் வேறு எதையும் செய்யவில்லை” என்றார். அவருடைய சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்தார்கள். சைக்கிளில் கட்டியிருந்த பொருட்களைக் காணவில்லையென்று ஏக்கத்தோடு பார்த்தார்.

“அய்யா, நீங்கள் சைக்கிள் கடை வைச்சிருந்தவர் தானே, உங்களுடைய சைக்கிளை உங்களுடைய கையாலேயே ஒருமுறை கழுவிப் பூட்ட வேண்டியிருக்குது. கழற்றுங்கள்”

முத்தப்பா அதற்கென்ன என்பதைப்போல சாவிகளை வாங்கி ஒவ்வொரு பாகமாகக் கழற்றத் தொடங்கினார். சைக்கிளின் இரும்புக் குழாய்களிலிருந்து பென்டோர்ச் பற்றரிகளும், கற்பூரப் பைக்கற்றுகளும், சிறிய எரி திரவக் குப்பிகளும், சம்பூ பைக்கற்றுகளும் உதிர்ந்து விழுந்தன. கிறீஸ் களி நிரவப்பட்ட ரென்னிஸ் பந்துகளை இருக்கைக்கு அடியிலிருந்து எடுத்தார். அவற்றை ஒரு வியாபாரிக்குரிய லாவகத்தோடு நிலத்தில் பரவி வைத்தார். “இந்தச் சாமான்களுக்கு நீங்கள் நிறையை வரி வாங்குவீர்கள் என்பதால் இதுகளை ஒளித்து களவாகக் கொண்டு வந்தேன்” முத்தப்பா சொல்லி முடிக்கவில்லை, அருகில் நின்றவன் தண்ணீர்ப் போத்தலை வீசி எறிந்து விட்டு அவருடைய செவிட்டைப் பொத்தி ஓங்கி அறைந்தான்.

“அவனுக்கு என்ரை மூத்த பெண் பிள்ளையின் வயதுதான் இருக்கும்”

முத்தப்பா முழுக்கதையையும் சொல்லிவிட்டவர் போல நிறுத்தினார். நான் “ம்” என்றேன். ஒரு கனத்த மௌனம் இரண்டு பேருக்குமிடையில் நிலவத் தொடங்கியது. சற்று நேரத்தில் அவர் நித்திரையாகி விட்டார் என்று நினைத்தேன். அப்போது மௌனத்திற்குள் சொற்களை மெதுவாகச் செருகுவதைப் போல முத்தப்பா சொல்லத் தொடங்கினார் : “ஒருநாள் நான் வவுனியாவில் சாமான் வாங்குகிற தமிழ்க் கடைக்காரன் ‘வீட்டில நிறையக் கஸ்ரமோ அய்யா’ என்று கேட்டான். அன்றைக்குப் பின்னேரமே என்னை இன்னொரு வெள்ளைச் சேட்ர்டு போட்ட தடிச்ச சிங்கள ஆளிட்டை கூட்டிக்கொண்டு போனான். அவன் என்னுடைய கையிற்குள் அய்யாயிரம் ரூபாத் தாள்களை வைச்சபடி ‘நீங்க நல்ல சந்தோசமா பெஞ்சாதி பிள்ளைகளோட இருக்கத் தானே வேணும்..’ என்றான். ஒரு பிள்ளை செத்துப் போய்விட்டதை நான் சொல்லவில்லை. அவன்ரை முகத்தை நிமிர்ந்து பார்த்தேன். ‘நான் உங்களுக்கு என்ன செய்ய வேணும்’ என்று கேட்டேன்..

முத்தப்பா தொடர்ந்து சொன்னார். இரவு திடீரென்று குளிர்வது போலிருந்தது. அவரை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டேன்.

இரண்டாவது நாள் காலையிலிருந்து மழை மெலிதாகத் துாறிக் கொண்டிருந்தது. மழைக்காலத்துச் சோகத்தை தூறல்கள் பரப்பியபடியிருந்தன.. மதியம் போல முத்தப்பாவை முகாமிலிருந்து வெளியே அழைத்துச் சென்றார்கள். முன்னதாக கூரை வேய்ந்து கொண்டிருந்தவரை இறங்கித் தயாராகச் சொன்னார்கள். முத்தப்பா தலைக்கு நீர் வார்த்துக் குளித்தார். அபூர்வமாகத் தாடியைச் சவரம் செய்து மீசையை கத்தையாக ஒதுக்கினார். தோய்த்த நீலக் கட்டங்களிட்ட சாறமும் முழுக்கை சேர்ட்டும் அணிந்தார். ஈரம் காயாத தலைமயிரை வாரி இழுத்தார். அவருடைய ஒவ்வொரு செய்கையின் போதும் நான் பக்கத்திலேயே நின்றேன். ஆனால் என்னோடு ஒரு வார்த்தையும் பேசவில்லை. கண்ணாடிக்காரனையும் இன்னுமொருவனையும் தேடிச் சென்று “நான் போட்டுவாறன்” என்று சொன்னார். பஜிரோ வாகனம் வீதியில் இரைந்தபடி நிற்கின்ற சத்தம் கேட்டது. இரண்டு பேர் முத்தப்பாவை அழைத்துச் சென்றார்கள்.

காற்பனை உயரத்திற்கு தகரங்களால் அடைத்த வேலியின் வாசலைத் தாண்டிய போது நின்று திரும்பி என்னைப் பார்த்து வெறுமையாகப் புன்னகைத்த முத்தப்பா “உனக்கும் என்ர மூத்த பெண் பிள்ளையின் வயதுதான் இருக்கும்” என்றார்.

 

http://tamizhini.co.in/2018/12/15/முத்தப்பா-என்கிற-உளவாளி/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஹா! சயந்தனின் கதையில்  இப்படி ஒரு முடிவை எதிர் பார்க்கேல்ல 😞

  • 3 weeks later...
Posted

ஊத்தப்பாவை அழைத்துக் கொண்டு சென்றது மரண தண்டனை கொடுப்பதற்கா?
 

On ‎12‎/‎19‎/‎2018 at 3:40 PM, ரதி said:

ஆஹா! சயந்தனின் கதையில்  இப்படி ஒரு முடிவை எதிர் பார்க்கேல்ல 😞

ஏன்???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, நிழலி said:

ஊத்தப்பாவை அழைத்துக் கொண்டு சென்றது மரண தண்டனை கொடுப்பதற்கா?
 

ஏன்???

Quote

அவன் என்னுடைய கையிற்குள் அய்யாயிரம் ரூபாத் தாள்களை வைச்சபடி ‘நீங்க நல்ல சந்தோசமா பெஞ்சாதி பிள்ளைகளோட இருக்கத் தானே வேணும்..’ என்றான். ஒரு பிள்ளை செத்துப் போய்விட்டதை நான் சொல்லவில்லை. அவன்ரை முகத்தை நிமிர்ந்து பார்த்தேன். ‘நான் உங்களுக்கு என்ன செய்ய வேணும்’ என்று கேட்டேன்..

முத்தப்பா தொடர்ந்து சொன்னார். இரவு திடீரென்று குளிர்வது போலிருந்தது. அவரை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டேன்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, நிழலி said:

ஊத்தப்பாவை அழைத்துக் கொண்டு சென்றது மரண தண்டனை கொடுப்பதற்கா?
 

ஏன்???

சில எழுத்தாளர்கள் மாதிரி புலிகளை மட்டும் குறை சொல்லுவார் என்று எதிர் பார்த்தேன் ...முத்தப்பாவும் பிழை செய்து இருக்கிறார் என்று எழுதியது நான் எதிர் பாராதது 

Posted
21 hours ago, கிருபன் said:

 

உங்களின் மேகோளின் படி, அவரை மரண தண்டனை கொடுக்க கூட்டிச் செல்கின்றனர் என சொல்ல வருகின்றீர்கள் என நம்புகின்றேன்

புலிகளால் இராணுவத்தினருக்காக ஒருவர் வேலை செய்கின்றார் என பிடிக்கப்பட்டால் கொடுக்கப்படும் தண்டனைகள் கடுமையானவை. அத்துடன் இப்படி மூன்று மாசம், ஆறு மாசம் எல்லாம் வைத்து இருக்க மாட்டார்கள். மரண தண்டனை விரைவாக கொடுத்து விடுவர். எனவே எப்படி முத்தப்பாவை இவ்வளவு காலம் வைத்து இருந்து விட்டு இறுதியில் மரண தண்டனைக்காக அழைத்து செல்கின்றனர் என புரியவில்லை.

அல்லது கதை சொல்லியை விட்டு அவரது வாயை கிளறி உண்மையை அறிந்த பின் அவருக்கு மரண தண்டனை கொடுக்கின்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும், கதை சொல்லி கட்டிப் பிடித்த விடயம் உறுத்துகின்றது.

1 hour ago, ரதி said:

சில எழுத்தாளர்கள் மாதிரி புலிகளை மட்டும் குறை சொல்லுவார் என்று எதிர் பார்த்தேன் ...முத்தப்பாவும் பிழை செய்து இருக்கிறார் என்று எழுதியது நான் எதிர் பாராதது 

முத்தப்பாவை கதை சொல்லி கட்டிப் பிடித்தபடியால் ஓரினச் சேர்க்கை நடந்து இருக்குமோ என்ற ரீதியில் உங்கள் கேள்வி அமைந்து இருக்குமோ என நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, நிழலி said:

 கதை சொல்லியை விட்டு அவரது வாயை கிளறி உண்மையை அறிந்த பின் அவருக்கு மரண தண்டனை கொடுக்கின்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும், கதை சொல்லி கட்டிப் பிடித்த விடயம் உறுத்துகின்றது

கதைசொல்லிதான் போட்டுக்கொடுத்தார் என்று நினைக்கின்றேன். அதுதான் போகும்போது கதைசொல்லிக்கு  விடைபெறாமல் போனார்.

கதைசொல்லி ஏன் கட்டிப்பிடித்தார் என்று சயந்தன்தான் சொல்லவேண்டும்!

Posted
On 12/18/2018 at 3:03 PM, கிருபன் said:

கண்ணாடிக்காரன் யோசித்தான். “வேண்டாம், நீ முதல்ல இங்கயிருக்கிற முத்தப்பாவின் இயக்கத்தில் சேர்ந்து அவருக்கு விசுவாசமாக நடந்து காட்டு, பிறகு பார்ப்பம்” என்றான்.

 

On 12/18/2018 at 3:03 PM, கிருபன் said:

காற்பனை உயரத்திற்கு தகரங்களால் அடைத்த வேலியின் வாசலைத் தாண்டிய போது நின்று திரும்பி என்னைப் பார்த்து வெறுமையாகப் புன்னகைத்த முத்தப்பா “உனக்கும் என்ர மூத்த பெண் பிள்ளையின் வயதுதான் இருக்கும்” என்றார்.

முற்பகுதி முஸ்தப்பாவுக்கு புலி சொல்லும் கதை பிற்பகுதி முஸ்தப்பா புலிக்கு சொல்லும் கதை. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது எனப்படுகின்றது. 

அந்தந்த இடம் காலம் சூழலில் நிகழும் நம்பிக்கை தியாகம் துரோகம் தண்டனைகள் சார்ந்த கதை. 

இணைப்பிற்கு நன்றி . 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.