Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீவிரவாதி -இளங்கோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீவிரவாதி -இளங்கோ

 
 
லங்கை இராணுவத்தின் ஒபரேஷன்-லிபரேஷன் தாக்குதல்இடைநிறுத்தப்பட்டதற்கும்இந்திய அமைதிப்படையோடுஇயக்கம் சண்டையைத் தொடங்குவதற்குமான இடையிலானமாதங்கள் சொற்பமே இருந்தபோதும்அந்தக் குறுகிய அமைதியைஎங்கள் ஊர் ஏதோ ஒருவகையில் வரவேற்கத்தான் செய்ததுஊர்வைரவர் கோயில் திருவிழா விமர்சிகையாகக்கொண்டாடப்பட்டதுபுளியமரத்தடியில் கிளித்தட்டும்பிள்ளையார் பேணியும் வயது வித்தியாசமின்றி குதூகலமாகவிளையாடப்பட்டது இப்படி இன்னும் பலவற்றில், ஊர் தன்உயிர்ப்பை மீளவும் கண்டுகொள்ளத்துடித்தது.
 
ஒருகாலத்தில் ஆடுகள் காவுகொடுக்கப்பட்டு வேள்விகள் நடந்தவைரவர் கோயிலில்இயக்கங்கள் பல்கிப்பெருகிக் காலத்தில்மார்க்ஸைப் படித்த  ஏதோ ஒரு இயக்கம் வேள்விகளுக்கு இனிதடை என்று உறுதியாய்ச் சொல்லியிருந்ததுஎனது காலத்தில்எந்த அடைபெயரும் இல்லாதிருந்த வைரவர், சிறி ஞானவைரவராகதிருமுழுக்குப் பெற்று சாந்த நிலையை அடைந்துமிருந்தார்அத்தோடு இந்த வைரவரைப் பற்றி அம்மாதமது சிறுவயதில்நடந்ததாய்ச் சொன்ன கதையொன்றும் எனக்குக் கொஞ்சம்திகிலூட்டியது.
 
அன்றையகாலத்தில் எங்கள் வீடு இப்படி கல்வீடாகஇருக்கவில்லைமேலே பனையோலையும்கீழே சாணமும்மெழுகப்பட்ட குடிசை வீடாக இருந்திருக்கின்றதுமாலை ஆறேழுமணிக்கே ஊரடங்குச்சட்டம் வந்ததுபோல ஊர்அமைதியாகிவிடுமாம்ஏதாவது இயற்கையின் உபாதையைத் தவிரஎவரும் குடிசையை விட்டு வெளியே போவதில்லைஅத்தோடுபக்கத்தில் இருந்த இந்த வைரவரும் சும்மா இருக்கவில்லை.வேள்விக்காக பலிகேட்கும் உக்கிர வைரவாக அல்லவாகொந்தளித்தபடி இருந்திருக்கின்றார்.
 
ஒருநாள் நள்ளிரவு அம்மாவின் அக்கா இயற்கை உபாதையிற்குவெளியில் போய்விட்டுத் திரும்பி வரும்போது ஒருவர் பக்கத்துக்காணியில் நடந்துபோவதைக் கண்டிருக்கின்றார்வெள்ளைக்கோவணத்துணியோடு நிலத்தில் கால் பாவாமல் அவர் நடந்துபோயிருக்கின்றார்அதுமட்டுமில்லாது அம்மாவின் அக்காவையும்அருகில் வரும்படியும் சைகையில் அழைத்துமிருக்கின்றார்
 
பயத்தோடு பெரியம்மா கிட்டபோய் பார்க்கும்போது ஒரு நாயும்பக்கத்தில் நின்றிருக்கின்றதுஎந்த அரிக்கன் லாம்பும்அவசியமில்லாமல், அவருடலிருந்து இயற்கையாகவே ஒளியும்பிரகாசித்துக்கொண்டிருந்திருக்கின்றது.
 
பெரியம்மாவிடம், 'என்னை யாரென்று தெரிகிறதா?' என நாய்வாலாட்டியபடி நிற்கக் கேட்டிருக்கின்றார். 'தெரியவில்லைஆனால் நான் இதுவரை சந்திக்காத ஒருவர் என மட்டும் நன்குபுரிகிறது’ என நா குழறியபடி பெரியம்மா சொல்லியிருக்கின்றார்.
 
'இப்போதெல்லாம் யாரும் என்னை ஒழுங்காய் கவனிப்பதில்லைபடையலும் நேரத்துக்கு வைப்பதில்லைஎன்னால் பட்டினி கிடக்கஇனியும் முடியாதுஅதுதான் இரவில் உணவு தேடிவெளிக்கிட்டுவிட்டேன்என அவர் கூறியிருக்கின்றார்.
 
பெரியம்மாவுக்கு அவ்வளவு நடுக்கத்துடனும்இது நமதுவைரவர்தான் என்பது நன்கு விளங்கிவிட்டதுஆனால் வைரவரைக்கண்டதிலிருந்து அவருக்கு காய்ச்சல் வந்துவிட்டதுபடுத்தபடியேவைரவர்’, ‘படையல் என்று திருப்பத் திருப்ப ஒன்றையேஉளறத்தொடங்கிவிட்டார்அம்மாவின் அய்யாவும்ஆச்சியும்அவரை இதிலிருந்து எப்படி விடுவிடுப்பதென தெரியாதுகுழப்பியிருக்கின்றனர்பிறகுதான் கோயில் பூசாரிஇது வைரவரின்திருவிளையாட்டுஅவருக்கு ஒரு படையலிட்டால் எல்லாம்சரியாகிவிடும் என்றிருக்கின்றார்.
 
பட்டினி கிடக்கும் வைரவரின் பசி, சர்க்கரைப் பொங்கலோடு மட்டும்அடங்காதென்றுஅன்று வீட்டில் நல்ல விலைக்கு விற்பதற்கெனவளர்த்துக்கொண்டிருந்த கிடாயை இந்த வைரவருக்கு காணிக்கைசெய்திருக்கின்றனர்அத்தோடு அவருக்குக் கொறிப்பதற்கெனபெரிய வடைமாலையும் சூலத்திற்குப் போடப்பட்டிருக்கிறதுஇப்படிப் படையலிட்டபின்தான் வைரவர் காய்ச்சல் பெரியம்மாவைவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகப் போயிருக்கிறது
 
கிடாய்களைத் தனது பட்டினிக்குக் காவு கேட்ட வைரவர்நாமெல்லாம் தூங்கும் இரவுகளில், சிவம் மாமாவின்கள்ளுக்கொட்டிலுக்குள் போய் கள்ளும் குடிப்பாரோ என, நான்அந்தக் கதையின் சுவாரசியத்தில் வாய் தவறி அம்மாவிடம்கேட்டுவிட்டேன். ‘உன்ரை அப்பாவைப் போல மோட்டுக்கதைகதைக்காமல் போய்ப் படு’ என்று அம்மா அன்று அதட்டிஅனுப்பியுமிருந்தார்.
 
 
1.jpg
ங்கள் ஊரில் போரின்நிமித்தம் அநியாயச் சாவுகள்பிறகுநடக்கத்தொடங்கியபோதுவைரவரின் வேள்வியைநிற்பாட்டிய அபசகுனந்தான்இவை நடப்பதற்குக்காரணம் என்றும் ஊர்ச்சனம்சொல்லிக்கொண்டும்திரிந்ததுஅந்தக் காலத்தில்தான்மார்க்ஸைப் படித்துவேள்வியைத் தடை செய்த இயக்கத்தைசோஸலிசத் தமிழீழம்அமைப்போமென்ற இன்னொரு இயக்கம்இனி களத்தில்இயங்கக்கூடாதென அவர்களைத் தடையும் செய்தது.
 
எங்கள் வைரவர் கோயிலிற்கு செல்லப்பா ஆச்சி தன் செலவில் ஒருமணிக்கூட்டுக்கோபுரம் கட்டிக்கொடுத்தார்மணிக்கூட்டுக்கோபுரம் எழ முன்னரே விசாலமான பரப்பில்மடப்பள்ளி இருந்ததுமடப்பள்ளிக்கு அருகில் சிவம் மாமாவின்கள்ளுக்கொட்டில் இருந்தது
 
மடப்பள்ளியில் பொங்கல் செய்து வைரவருக்குப் படைத்துவிட்டு,அய்யர் எங்களுக்கும் கொஞ்சம் கிள்ளித்தரும்போது சிலவேளைஅவ்வளவு ருசியாக இருக்கும்எல்லாவற்றையும் வித்தியாசமாகப்பார்க்கும் எனது நண்பன் கிரி ஒருநாள் சொன்னான், 'பொங்கல்ருசியாக இருக்கிற நாளில் அய்யர் தேங்காய்ப்பாலுக்குப் பதிலாகசிவம் மாமாவின் கள்ளை எடுத்துத்தான் பாவிக்கின்றவர்'.
 
எனக்கும் அது உண்மைதானோ என்பதில் கொஞ்சம் சந்தேகம்இருந்ததுசிவம் மாமாவின் கள்ளுக்கொட்டிலுக்குள் ஒருபோதும்போகவிடாத அம்மாஒரேயொரு விசயத்துக்காக மட்டும் என்னைஉள்ளே நுழைய அனுமதிப்பார்அது எப்போதென்றால்வீட்டில்அப்பம் சுடும் போதாகும். அதற்கு முதல்நாள் மா எல்லாம்குழைத்துவைத்துவிட்டு நொதிப்பதற்காய் சிவம் மாமாவிடம்கள்ளுக் கொஞ்சம் வாங்கிவர அனுப்புவார்அம்மாவின் அப்பம்இவ்வளவு உருசியாக இருப்பதற்கு சிவம் மாமாவின் கள்ளுத்தான்காரணம் என்பதை நேரடியாக அனுபவித்தவன் என்றபடியால்எனதுநண்பன் பொங்கல் சுவையாக இருக்கும் நாட்களில் கள்ளுச்சேர்த்திருக்கலாம் எனச் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான்செய்து.
 
அந்த வருடம் எங்கள் ஊர் வைரவர் கோயில் திருவிழா மேளச்சமாஇன்னிசைக்குழு என்று அமர்களப்படுத்தியதுஊரிலிருப்பவர்களும்வருடம் முந்நூற்று அறுபத்து மூன்று நாட்களும் தமதுபக்கத்துவிட்டுக்காரர்களோடு செய்யும் பிணக்குகள்கோள்மூட்டல்கள் என்பவற்றை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டுஇவை எதற்கும் தொடர்பு இல்லாதததுபோல அவ்வளவு சாந்தமானமுகங்களுடன் கோயிலடியில் கூடியிருந்தார்கள்ஒருபக்கத்தில்மேளச்சமா நடக்கமறுபுறத்தில் வந்திருப்பவர்களுக்குஅன்னதானம் கொடுப்பதற்கென பெரிய பெரிய அண்டாக்களில்சமையல் நடந்துகொண்டிருந்ததுவைரவர் வீதியுலா வரும்போதுதவில்க்காரர்கள் 'ஆயிரம் தாமரை மொட்டுக்கள்’, ‘ஆனந்தத்தேன்மழைபோன்ற பாடல்களை எல்லாம் வெகுசுதியாய்அடித்தார்கள்.
 
எங்களுக்கு ஒரே உற்சாகம்கூச்சலும் கும்மாளமாகஆடவும்செய்தோம்அந்த திருவிழாவின்போது கோயில் அய்யாகூட நல்ல மனோநிலையில் இருந்தார்மற்ற நேரத்தில் வைரவர்புளியமரத்தடியில் விளையாடும்போது கோயில் பூசையைக்குழப்புகின்றவங்கள் என்று எங்களைக் கோபத்தோடுகலைத்துவிடுகின்றவர், ‘இந்தமுறை திருவிழாவுக்கு நீதான் சங்குஊதுகின்றாய் என ஒரு கிழமைக்கு முன்னரே என்னிடம்சொல்லியும்விட்டிருந்தார்
 
சங்கில் நான் என்ன ஊதக்கிடக்கிறதுஅனேகமான வேளைகளில்  என்று ஊதினாலும் வெறும் காற்றுத்தான் வரும்சிலபெடியங்கள் நன்றாக ஊதுவாங்கள்ஆனால் ஒழுங்காய்ஊதத்தெரியுமோ இல்லையோ திருவிழாவின்போது அய்யா எனக்குஅந்த மரியாதையைத் தந்தது மகிழ்ச்சியாக இருந்ததுஉங்கள்ஒருவருக்கும் கிடைக்காத மதிப்பு எனக்குக் கிடைத்திருக்கிறதெனஇதை வைத்தே என் வயசுப்பெடியங்களிடையே என் மதிப்பைஉயர்த்திவிடலாம் என்றொரு இரகசியத் திட்டமும் என்னிடம்இருந்ததுசங்கு ஊத வரச்சொன்ன அய்யாவிடம்நான்அன்றைக்குக் குளித்துவிட்டு வரவேண்டுமா அல்லது இல்லையாஎன்று கேட்க மறந்ததும் பிறகு ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது.
 
மாலையில் வைரவர் கோயில் முன்றலில் சடைத்துக்கிடந்தபாதிரிப்பூ மரப்பக்கமாய் ஒரு மேடை போடப்பட்டுராஜன் கோஷ்டிபாடுவதற்காய் அழைக்கப்பட்டிருந்தனர்ராஜனோ அல்லது அவரதுநண்பரோ ஸ்டைலாக கிற்றாரைப் பிடித்தபடி இருந்ததைப்பார்த்துவிட்டுவளர்ந்தால் ஒரு கிற்றாரிஸ்டாக வரவேண்டுமெனவைரவரை வேண்டிக் கொண்டேன்.
 
மாலைச் சூரியன் மங்கவர்ணமயமான ரியூப் லைட்டுக்குள் ஒளிரஇசை எங்கள் ஊரை ஒரு நதியைப் போல சுற்றிச் சுற்றிப் போகத்தொடங்கியதுஇதற்குள்ளும் ஒரு கூட்டம் என்ன பாட்டு ராஜன்கோஷ்டி பாடுகின்றதென்று அக்கறையில்லாதுபாவாடையும்தாவணியும் கட்டிகையில் அணிந்த வளையல்களைப் போலசிணுங்கிக்கொண்டிருந்த பெண்களின் பின்னால் அலைந்தபடிஇருந்தது
 
வீடுகளில் இருக்கும்போது எண்ணெய் வழியும் முகத்தோடும்பாவாடை சட்டைகள் அணிந்தும் ஏனோ தானோவென்று இருக்கும்அக்காமார்கள், இவர்கள் எல்லாம் எங்கள் ஊரில்தான்இவ்வளவுநாளாய் இருந்தார்களோ என்று எண்ணுமளவிற்கு அழகுபொலிந்து மிளிர்ந்துகொண்டிருந்தார்கள்கச்சான் விற்கும்ஆச்சிமார்களுக்கும்வானில் வந்து ஜஸ்கிரிம் விற்கும் ரியோலிங்கன்காரர்களுக்கும் நல்ல விற்பனை அன்றுநடந்துகொண்டிருந்தது.
 
தாங்கள் காதலிக்கும் அல்லது காதலிக்க விரும்பும்பெண்களுக்காய்இந்த அண்ணாமார்கள் தமது காசைக்கச்சானுக்கும்ஐஸ்கிறிம்களுக்கும் கவலையின்றிசெலவழித்துக்கொண்டிருந்தார்கள்இதையெல்லாம் இசைநிகழ்ச்சியிடையே நன்கு அவதானித்த நானும்என் நண்பன்கிரியும்யாராவது அக்காவிற்கு எவராவது அண்ணா எதையாவதுவாங்கிக்கொடுக்க சமிக்ஞை கொடுத்து அவர்களைக்கூட்டிச்செல்லும்போதுநாங்களும் ஏதோ அந்த அக்காவிற்குநன்கு தெரிந்தவர்கள் போல கூடவே சேர்ந்துபோவோம்
 
வேறு வழியில்லாமல் அந்த அக்காவிற்கு வாங்கும் கச்சானையோஜஸ்கிறிமையோ எங்களுக்கு அவர்கள் வாங்கித்தரவேண்டியிருக்கும்நாங்கள் இந்த விளையாட்டை மிகுந்தஉற்சாகத்தோடு சில தடவைகள் செய்தோம்.
 
இடையில் ஒருமுறை யாரை இப்படி ஏமாற்றலாம் என உளவுபார்த்துக்கொண்டிருந்தபோதுஎங்கள் பெரியம்மாவின் மகன்சுரேஷ் அண்ணாஒரு அக்காவுக்கு சமிக்ஞை கொடுத்துக்கூட்டிக்கொண்டு போனார்.  அந்த அக்காவை யாரென்று என்னால்மட்டுக்கட்ட முடியவில்லைஎங்கள் ஊரைச் சேர்ந்தவர் இல்லைஎன்பது மட்டும் தெரிந்ததுஇந்தத் திருவிழாவுக்கு எங்கள்ஊரென்று இல்லாது மற்ற இடங்களிலிருந்தும் பலர் வருவார்கள்இந்த அக்காயாரேனும் எங்கள் ஊர் அக்காக்களோடுபாடசாலையில் படிக்கும் ஒருவராகவோ அல்லது சுரேஷ்அண்ணாவிற்காகவே இந்த திருவிழாவிற்கு அவர்வந்துமிருக்கலாம்
 
எனக்கு அது குறித்து பெரிதாக அக்கறை இருக்கவில்லைசுரேஷ்அண்ணாவின் இந்தக் கள்ளத்தைப் பிடித்துவிட்டால்வேறுவழியின்றி அவர் எனக்கும் ஜஸ்கிறிம் வாங்கித்தரத்தான் வேண்டும்என்பது மட்டும் உறுதியாய்த் தெரிந்தது.
 
நான் அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்து போகும்போதுஜஸ்கிறிம் வேன்கள் இருக்கும் பக்கமாய் செல்லாது இருவரும்மற்றத்திசையில் போகத்தொடங்கியதை அவதானித்தேன்இருவரும் மடப்பள்ளிக்கும்சிவம் மாமாவின்கள்ளுக்கொட்டிலுக்கும் இடையில் இருக்கும்ஓடைக்கிடையில்புகுந்து போனார்கள்ஏன் அவ்வளவு இருட்டைத் தேடிப்போகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க எனக்குள்ளும் சுவாரசியம்கூடிவிட்டது.
 
நான் ஓடைக்குள் பூனையைப் போல நுழையும்போது அவர்கள்இருவரும் அணைத்துக்கொண்டிருப்பது சாதுவான வெளிச்சத்தில்தெரிந்தது. ‘ இதுவா விஷயம் என்று நான் வந்தமாதிரியேதிருப்புகையில் அங்கே கிடந்த பனைமட்டையைமிதித்துவிட்டேன்சுரேஷ் அண்ணாவுக்கு அந்தச் சத்தம்கேட்டுவிட்டதுசுதாகரித்து, ‘யாரடா என ஓடிவந்துநான்சனத்துக்குள் ஓடி மறைவதற்குள் அவர் என்னைப் பிடித்துவிட்டார்.
 
'நீயா?' என்று அவருக்கு ஆச்சர்யம் ஒருபுறமும்மறுபுறமாக நான்பெரியம்மாவிடம் இந்த விவகாரத்தைச் சொல்லிவிடுவேனோ என்றுஅச்சமும் வந்துவிட்டது
 
நீ இப்போது பார்த்ததை எல்லாம் அம்மாவிடமோபெரியம்மாவிடமோ சொல்லக்கூடாது என சத்தியம் செய்யக்கேட்டார். 'நான் சத்தியம் செய்கிறேன்ஆனால் எனக்கு இப்போதுஜஸ்கிறிம் வாங்கித்தரவேண்டும்என்று எனக்கு வேண்டியதைகேட்டுப் பெற்றுக்கொண்டேன்.
 
இதன்பிறகுநான் பெரியம்மா வீட்டுக்குள் போய் நின்றுகொண்டு, 'பெரியம்மாஉங்களுக்கு ஒரு கதை தெரியுமா?' என்றுதொடங்கிவிட்டு சுரேஷ் அண்ணாவின் முகத்தைப் பார்ப்பேன்அவர்சொல்லாதே சொல்லாதே என்று சமிக்ஞையால் கெஞ்சுவார்அப்படியெனில் அடுத்தமுறை நீங்கள் வெளியில் போய்விட்டுவரும்போது இதையிதை வாங்கிக்கொண்டு வந்து எனக்குத்தரவேண்டுமென ஒரு பட்டியல் கொடுப்பேன்.
 
அன்று ஜஸ்கிறிமில் தொடங்கி பிறகு கச்சான் அல்வாதோடம்பழஇனிப்புமில்க் சொக்கிலேட் என்று அந்தப் பட்டியல் பிறகுநீண்டுகொண்டே போனது
 
 
சுரேஷ் அண்ணா விரும்புகிற அக்காவுக்கு, தேவகி என்ற பெயரெனபின்னர் அறிந்துகொண்டேன்இந்திய அமைதிப்படைமக்களுக்குஅகிம்சையைப் போதிப்பதிலிருந்து மக்களைக் கொல்லும்படையாக -அதாவது Indian Peace Keeping Forceல் இருந்துIndian People Killing Force ஆக- மாறியபின்னும் அவர்களின்இந்தக் காதல் தொடர்ந்தது

அமைதி குலைந்த நாட்களில் இளைஞர்கள் வெளியில் திரிவதேபெரும் சிக்கலாக இருந்துவீட்டை விட்டு வெளிக்கிடும்பெடியளை ஒருபக்கம் இந்தியன் ஆமி துரத்தித் துரத்திச் சுட்டதுஇன்னொருபக்கம் அவர்களோடு இயங்கிக்கொண்டிருந்த ‘three stars’ என்ற பெயரில் இயங்கிய குழு இளைஞர்களைப் பலவந்தமாகஇழுத்துக்கொண்டு தங்களோடு இணைத்தது.  இந்த இரண்டுதரப்பும் போதாது என்றுசோஷலிச தமிழீழம் பெற்றுத்தருவோமென்ற தியாகு அம்மானின் இயக்கமும்துரோகிகள் என்றுநாமம் சூட்டி அளவுகணக்கில்லாது  பலரைப் போட்டுத்தள்ளிக்கொண்டிருந்தது.
 
இவ்வளவு அவதிகள் இருந்தாலும்இயற்கையின்ஆற்றலுகளுக்கெல்லாம் எப்படி அணை கட்டுவதுஇதற்குள்ளும்ஊரிலிருப்பவர்கள் காதலித்துக்கொண்டிருந்தார்கள்பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டிருந்தார்கள்ஓரடி வேலியைமுன்னே போட்டதற்காய் காணியை முன்வைத்து பக்கத்துவீட்டுக்கார்ர்களுடன் சண்டையும் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
 
சுரேஷ் அண்ணா, ‘திரி ஸ்டார்காரரைச் சேர்ந்தபிள்ளைபிடிக்காரர்கள் தன்னையும் பிடித்துக் கொண்டு போய்அவர்களோடு பலவந்தமாய்ச் சேர்த்துவிடுவார்களோ என்றபயத்தில்தேவகி அக்காவைச் சந்திக்கும்போதெல்லாம்என்னையும் தன் சைக்கிள் பாரில் ஏற்றிக்கொண்டு போகத்தொடங்கினார்
 
கூட்டிக்கொண்டு போகும்போதுஎன்னுடைய ஊர் எதுவென்றுயாரேனும் கேட்டால்,  எங்கள் சொந்த ஊரின் பெயரைச்சொல்லாது ஏழெட்டுக் கிலோமீற்றர்கள் தூர இருக்கும் இன்னொருஊரொன்றின் பெயரைச் சொல்லச் சொல்வார்.
 
 
4.jpg
திரி ஸ்டார்காரர் தெருவில்மறித்தால்இந்தச்சின்னப்பையனைஇடைநடுவில் விட்டுவிட்டுநான் உங்கள் இயக்கத்துக்குவரமுடியாது என்று அவர்கெஞ்சினால்திரிஸ்டார்காரர் கேட்பார்கள்என சுரேஷ் அண்ணாவுக்குஒரு அசட்டு நம்பிக்கை இருந்ததுஇப்பிடிப் பிடிக்கும்போதுஎங்கள் ஊரின் பெயரைச் சொன்னால் பக்கத்தில்தானேஇருக்கிறதுஅவனாக நடந்துபோவான் என்றோ அல்லது தெருவில்போகும் எங்கள் ஊர்க்காரர் யாரிடமாவது என்னைக்கொடுத்துஅனுப்பிவிடுவார்களோ என்பதால்தான் எங்கோ தொலைவில்இருக்கும் ஒரு ஊரைச் சொல்லும்படி சுரேஷ் அண்ணா எனக்குக்கட்டளையிட்டிருந்தார்சின்னவயதிலேயே எப்படியெல்லாம்சுழித்து வளைத்து ஓடலாம் என்பதை இப்படி எங்களுக்குப் போர்கற்றுத் தரத்தொடங்கியிருந்தது.
 
சுரேஷ் அண்ணாவின் இந்த தியரி சிலமுறை உண்மையிலேவேலை செய்திருக்கிறதுஅப்படித் தப்பி பிழைத்துவந்தபோதெல்லாம்அண்ணா என்னை விசேசமாகக்கவனித்துக்கொள்வார்ஏதாவது உணவுக்கடைக்குக்கூட்டிக்கொண்டு போய் ரோல்ஸ்சையோபோண்டாவையோவாங்கித் தந்து நன்கு உபசரிப்பார்
 
 
நாட்டில் நிலைமைகள் விபரீதமாகப் போய்க்கொண்டிருக்கபெரியம்மா சுரேஷ் அண்ணாவை கொழும்புக்கு எப்பாடுபட்டேனும்அனுப்பவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார்அப்போது கொழும்புக்குப் போவதற்கான ஒரேவழிபலாலிவிமானநிலையத்தினூடு செல்வதுதான்அப்படி அனுப்பும்போதுஇந்தியன் ஆமியின் முகாங்கள்திரி ஸ்டார்களின்பிள்ளைபிடிப்புக்கள்தியாகு அம்மானின் இயக்கம் அதிகாலையில்வைத்திருக்கக்கூடிய கண்ணிவெடிகள் போன்றவற்றில் இருந்துமுதலில் தப்பியாகவேண்டும்கரணம் தப்பினால் மரணம்மாதிரித்தான் இந்த வழியனுப்பல்கள் அந்தக்காலங்களில்நிகழ்ந்துகொண்டிருந்தன.
 
சுரேஷ் அண்ணாவின் கொழும்புப் பயணம் ஒரளவுஉறுதியாகிவிட்டிருந்ததுஅண்ணாவும்போவதற்கு முன் தேவகிஅக்காவை அடிக்கடி பார்க்க விரும்பிக்கொண்டிருந்தார் பொருள்வயிற்றுப் பிரிவு போல இது போர்துரத்தும் பிரிவுஅப்போதுஎங்கள் பக்கத்துக்கிராமத்துத் துர்க்கையம்மனின் திருவிழாநடந்துகொண்டிருந்ததுஒருபக்கம் நாளாந்தம் உயிரோடுஇருப்பதே அதிசயமாக இருக்கும்போதுமறுபக்கத்தில்திருவிழாக்களும் அதன்போக்கில் நடந்துகொண்டிருந்தன.

அம்மன்கோயில் தேர்த்திருவிழாவின்போது சந்திப்பதென்று செய்திஇருவருக்குமிடையில் பரிமாறப்பட்டது.
 
வழமைபோல நானும் சுரேஷ் அண்ணாவின் சைக்கிள் பாரில்ஏறிக்குந்திக்கொண்டேன்அன்று தேர்திருவிழா என்பதால் சனம்கால் வைக்கவே இடமில்லாதபடி தேரோடு அலையலையாய்அள்ளுப்பட்டுக்கொண்டிருந்தது
 
இதற்கு முதல் வருடந்தான் இலங்கை இராணுவம் குண்டைவீசியதால் தேர் சேதமாகியிருந்ததுசனங்களைப் போலகடவுள்களும் வாழ்தலின் மீதான உயிர்ப்பை அவ்வளவு எளிதில்கைவிட மறுதலிப்பவர்கள் என்பதால்எரிந்துபோன தேர் விரைவில்திருத்தம் செய்யப்பட்டு தேர்த்திருவிழாவுக்குதயாராகிவிட்டிருந்தது.
 
நான் தேவகி அக்காவையும்சுரேஷ் அண்ணாவையும்கதைக்கவிட்டு சற்றுத்தள்ளி நின்று வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தேன்என்னுடைய அசட்டையீனமோஅல்லது அவர்களின் காதலின் ஆர்வக்கோளாறோ, நான் அவர்கள்இருவரையும் ஒருகட்டத்தில் தொலைத்துவிட்டிருந்தேன்.
 
அங்குமிங்குமாய் தேடு தேடென்று அவர்களைத் தேடிப்பார்த்துக்களைத்துவிட்டேன்சுரேஷ் அண்ணா இல்லாது எப்படி வீடு தனியேபோய்ச்சேர்வது என்ற பயத்தில் எனக்கு அழுகையும் வந்துவிட்டது.
 
அவ்வளவு கூட்டத்தில் நான் எப்படி இவர்களைத் தேடுவதுஇறுதியில் மலங்க மலங்க நின்ற என்னை கோயில்அறங்காவலர்கள் கண்டு, குழந்தைகள் தொலைந்தால்கண்டுபிடிக்கவென இருக்கின்ற இடத்தில் கொண்டுபோய்ச்சேர்த்துவிட்டார்கள்
 
அங்கேஒலிபெருக்கியில் தொலைந்துபோன பிள்ளையின்பெயரைச் சொல்லிப் பெற்றோரைத் தேடுவார்கள்நான்அவர்களுக்கு சுரேஷ் அண்ணாவோடு வந்தவன் என்று கூறினேன்அங்கே நின்ற ஒருவர், ‘தம்பி சுரேஷ் என்று நிறையப் பேர்கள்இருப்பார்கள்வேறேனும் விசேட அடையாளம் இருந்தால்சொல்லும்அதையும் சேர்த்துச் சொன்னால் எளிதாகக்கண்டுபிடிக்கலாம்’ என்றார்.
 
அப்படி ஏதேனும் வேறு விசேட அடையாளம் சுரேஷ் அண்ணாவுக்குஇருக்கிறதா என யோசித்துப் பார்த்தேன்அந்த ஐயாவிடம, 'வேண்டுமென்றால் தேவகி அக்காவோடு எப்போதும்பேசிக்கொண்டிருக்கும் சுரேஷ் அண்ணாஎன்று அறிவித்துப்பாருங்கள் என்று சொல்லிவிட்டேன்.
 
அந்த ஐயாவும்சுரேஷோடும்தேவகியோடும் வந்த இந்த ஊரைச்சேர்ந்த சிறுவன்தொலைந்துபோனவர்களைக் கண்டுபிடிக்கும்இடத்தில் இருந்து அவர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றார் எனஅறிவித்துவிட்டார்.
 
என்னைப் பிறகு சுரேஷ் அண்ணாவும்தேவகி அக்காவும்கண்டுபிடித்துவிட்டனர்ஆனால் நாங்கள் வீடு போய்ச் சேரமுன்னரேசுரேஷும் தேவகியும் காதலிக்கின்றார்கள் என்ற செய்திஊருக்குள் போய்ச் சேர்ந்திருந்தது
 
அன்று துர்க்கையம்மன் திருவிழாவுக்கு வந்த யாரோ ஊர்க்காரர்இந்த அறிவிப்பைக் கேட்டிருக்கின்றார்அம்மன், தாங்கள் கேட்டவரத்தைத் தருகின்றாரோ இல்லையோஇப்படி ஒரு சோடிகாதலித்துக்கொண்டிருக்கிறது என்பதை முதன்முதலாகக்கண்டுபிடிப்பதில்தானே ஒவ்வொரு ஊருக்கும் அதிக கிறக்கம்இருக்கிறது.
 
கொழும்பு போவதற்கு முன்னர் கோயிலுக்குப்போய்கும்பிட்டுவரத்தானே உன்னை அனுப்பினான்நீ என்னவெல்லாம்அங்கே செய்துகொண்டிருந்தாய்என்று பெரியம்மா சுரேஷ்அண்ணாவை நோக்கிப் பிரசங்கத்தைத் தொடங்கவும்நான்இந்தக்கதை எதையும் அறியாத ஒரு அப்பாவியைப் போலமெதுவாக நழுவி எங்கள் வீட்டுக்குள் புகுந்துகொண்டேன்.
 
 
திரி ஸ்டார்காரர்களிடமிருந்து தப்பும் சுரேஷ் அண்ணாவின் தியரிஒருபோது பிழைத்தபோது அது பெரும் சிக்கலாகிப் போயிருந்ததுஅன்று தேவகியக்காவை அவர்களின் ஊர் ஒழுங்கைக்குள் வைத்துச்சந்திப்பதற்காக நானும்  சுரேஷ் அண்ணாவும் சைக்கிளில்போய்க்கொண்டிருந்தோம்அநேகமான வேளைகளில்தேவையின்றி முக்கியமான தெருக்களுக்கோ -அதிலும்ஆமிக்காரனின் முகாங்கள் இருக்கும் சந்திகளுக்கோநாங்கள்போவதில்லைஇயன்றவரை ஒழுங்கைகளையும்குச்சொழுங்கைகளையும் பாவித்தே தேவகி அக்காவின்ஊர்ப்பக்கமாய் நாங்கள் போவோம்.
 
அன்று தியாகு அம்மானின் இயக்கம்திரி ஸ்டார்காரர்களில்இரண்டு பேரைப் போட்டுத்தள்ளியிருக்கின்றதுதிரிஸ்டார்காரர்கள் தியாகு அம்மானின் இயக்கத்தில், இரண்டுபேரையாவது போடாமல் வெறியை இறக்குவதில்லையென்று பிக் –அப்புக்களில் அங்கும் இங்குமாக ஆவேசமாக அலைந்துதிரிந்துகொண்டிருந்தார்கள்இதற்கிடையில் கைகளில் அகப்பட்டஅப்பாவிப்பெடியன்களையும் அடித்து உதைத்து, தங்களின்இயக்கத்தில் சேர்ப்பதற்காய் ஏற்றிக்கொண்டிருந்தார்கள்
 
3.jpg
இப்போதெல்லாம்ஊரிலிருக்கும் இளைஞர்கள்அதிபுத்திசாலியாகிமுக்கியமானதெருக்களையேபாவிப்பதில்லை என்பதைஊகித்தறிந்து நாங்கள்வழமையாகப் போகும்ஒழுங்கையொன்றின்முடக்கில் திரி ஸ்டார்காரர் தமது வாகனங்களோடு பதுங்கிநின்றனர். 'அண்ணேஅவங்கள் அந்த முடக்கில் நிற்கின்றாங்கள்என்று நான் சொல்லி, சுரேஷ் அண்ணா சுதாகரித்து சைக்கிளைத்திருப்பமுன்னர் அவர்கள் எங்களைக் கண்டுவிட்டனர்
 
இனித் திருப்பிச் சைக்கிளை வெட்டி எடுத்து ஓடமுடியாதுஓடினால்முதுகில் துவக்கால் சல்லடை போட்டுவிட்டு, ‘தப்பியோடிய தியாகுஅம்மானின் இயக்க ஆட்களில் இருவர் பலி’ என்று செய்தியைப் பரவவிட்டுவிடுவார்கள்அப்படி நடந்திருந்தால் என்னைப்பற்றியும்,தியாகு அம்மானின் இயக்கத்துக் குழந்தைத் தீவிரவாதி என்றுகொழும்பிலிருந்து வரும் ஏதேனும் பத்திரிகை சிறுபெட்டிச்செய்தியாக இந்தச் சம்பவத்தை வெளியிட்டிருக்கும். 
 
சுரேஷ் அண்ணா, 'நடப்பது இனி நடக்கட்டும்என்கின்றவிரக்தியான மனோநிலையில் அவர்களை நோக்கிச் சைக்கிளைநகர்த்தினார்வழமைபோல அவர் தன்னுடைய தியறியைப்பாவித்தார்என்னிடமும் திரி ஸ்டார்காரர் ஊரைக் கேட்டபோதுஎனக்கு புவியியல் வகுப்பு வைத்து சுரேஷ் அண்ணா சொல்லித்தந்ததையே பிசகின்றி ஒப்புவித்தேன்.
 
எல்லாத் தியறிகளுக்கும் விதிவிலக்குகள் உண்டு என்பதுபோலஅவை வேலை செய்வதற்கும் சில புறக்காரணிகளும்துணையிருக்கவேண்டும்இன்று அவ்வாறு நமது தியறி எளிதில்வெற்றி பெறாது என்பதை உறுமிக்கொண்டும்கெட்டவார்த்தைகளை அடிக்கடி பாவித்துக்கொண்டும் சிவந்தகண்ணோடும் நின்ற திரி ஸ்ரார்கார் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
 
சுரேஷ் அண்ணாவைப் பார்த்து, 'உந்த விசர்க் காரணத்தைச்சொல்லாதுநீ போய் அந்த பிக் அப்பில் ஏறடாஎன்றார்.
 
தியறி தோற்றுக்கொண்டிருப்பது உறுதியாய் எனக்கும் தெரிந்ததுசுரேஷ் அண்ணாவை இழந்துவிடுவேன் போலத் தோன்ற இன்னும்பயமாய் இருந்தது.
 
என்னிலிருந்து எப்படி ஓர் ஓர்மம் வந்ததெனத் தெரியாது. ‘சுரேஷ்அண்ணா இல்லாமல் நான் வீட்டை போகமாட்டேன் என்றுஉரத்தக்குரலில் கத்தி அழத்தொடங்கிவிட்டேன்நின்ற திரிஸடார்காரர்கள் எல்லோரும் ஒருகணம் சத்தம் வந்த என் திசையைநோக்கித் திரும்பிப் பார்த்தனர்சிவப்புக்கண் திரி ஸ்டார்காரர்எனக்கு முதுகில் அடித்து ‘பொத்தடா வாயை’ என்றார்.
 
நான் இன்னும் சத்தமாக அடிவயிற்றிலிருந்து கத்திஅழத்தொடங்கியதோடுஎனக்கு அப்போது கெட்டவார்த்தைகள்எனச் சொல்லித்தரப்பட்ட குஞ்சாமணி’,  சனியன்’, மூதேவி’, ‘கொட்டை போன்ற சொற்களைச் சொல்லித் திருப்பத் திரும்பக்கத்தினேன்அத்தோடு நிலத்தில் விழுந்து புழுதியில் புரண்டு புரண்டுஅழவும் தொடங்கிவிட்டேன். ‘அண்ணா இல்லாது எனது ஊருக்குப்போக வழி தெரியாது என்ற தியறியை அவ்வளவுஅழுகைக்கிடையிலும் மறக்காமல் தொடர்ந்துஒப்புவித்துக்கொண்டிருந்தேன்.
 
என்னதான் கொடுமைக்காரர்கள் என்ற ஒரு முகமூடியைஅணிந்திருந்தாலும்திரி ஸ்டார்காரர்களும் எங்களைப் போன்றசாதாரண மக்களாய் ஒருகாலத்தில் இருந்தவர்கள்தானேமக்களுக்காய் ஏதோ செய்யவேண்டும் எனத்தானே அவர்களும்புறப்பட்டவர்களாய் இருப்பார்கள்  என் கதறலோ அல்லது ஏதோஒன்று அவர்களின் மனத்தின் ஆழத்தைத் தொட்டிருக்கவேண்டும்.  
 
அங்கிருந்த தாடிவைத்த ஒருவர் எங்களை நெருங்கிவந்துசிவப்புக்கண்காரரிடம், 'இவங்கள் இரண்டு பேரையும் அனுப்பிவிடுஎன்று சொன்னார்.
 
சுரேஷ் அண்ணாவுக்குப் போன உயிர் திரும்பி வந்தமாதிரிஇருந்ததுநாங்கள் எங்கள் ஊரை நோக்கி சைக்கிளைஉழக்கத்தொடங்கினோம்
 
தன்னைக் காப்பாற்றியதற்காய் என்னை நன்றியுடன் பார்த்த சுரேஷ்அண்ணா, 'இப்படி நீ மண்ணில் விழுந்தெல்லாம் புரண்டுகத்திஆர்ப்பாட்டம் செய்வாய் என்று நான் ஒருபோதும்எதிர்பார்க்கவேயில்லை’ என்றார்.
 
எனக்குக் கூட எனக்குள் அப்படி ஒரு ஊற்று எங்கேஇருந்ததென்பதை நினைக்க வியப்பாகத்தான் இருந்தது.
 
'உங்களை அவங்கள் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள்என்பதைவிடதேவகி அக்கா பிறகு உங்களை இழந்து கதறிக்கதறிஅழக்கூடாது என்பதற்காகத்தான் அப்பிடிச் செய்தேன்என்றேன்.
 
அவருக்கு நான் இப்படிச் சொன்னது ஏதோ செய்திருக்கவேண்டும்சைக்கிள் ஓடிக்கொண்டிருந்த ஒரு கையை எடுத்து என் முதுகில்வாஞ்சையாகத் தடவிவிட்டார்அதற்குப் பிறகு நாங்கள் வீடுபோய்ச்சேரும்வரை சுரேஷ் அண்ணா எதுவுமே பேசவில்லை.

அன்று நாங்கள் தேவகி அக்காவைச் சந்திக்காமலேதிரும்பியிருந்தாலும்பிறகு தேவகி அக்காவுக்குநடந்ததையெல்லாம் விலாவாரியாக சுரேஷ் அண்ணாசொல்லியிருக்கின்றார்.

தேவகி அக்கா அடுத்தமுறை என்னைச் சந்தித்தபோது ஓடிவந்துஎன்னைக் குனிந்து அணைத்துக்கொண்டார். 'நீ நல்லாய்வருவாயடாஎன்று சொன்னபோது அவரது கண்கள் அப்படிக்கலங்கியிருந்தன.
 
 
சுரேஷ் அண்ணா கொழும்புக்குப் போவதற்கான ஆயத்தங்களில்மும்முரமாகிக்கொண்டிருக்கஒருநாள் தேவகி அக்காஅவரின்உறவினரின் சுகவீனம் காரணமாக யாழ் போதனாவைத்தியசாலைக்கு அந்த உறவினரோடு போகவேண்டியிருந்ததுஎப்போதாவது ஓடிக்கொண்டிருக்கும் தட்டிவானில் விடிகாலைபுறப்பட்டுஇன்னொரு பஸ்ஸெடுத்து அவர்கள் யாழ் பெரியஆஸ்பத்திரிக்குப் போயிருக்கின்றனர்.
 
அந்தக்காலை வழமைபோல யாழ் நகரத்தில் விடிந்திருக்கின்றதுபதினொரு மணியளவில் தியாகு அம்மானின் இயக்கம் இந்தியஇராணுவத்தோடு எங்கேயோ முட்டுப்பட்டு ஆஸ்பத்திரிப் பக்கமாகநுழையயாழ் கோட்டையில் இருந்து இராணுவம் ஆஸ்பத்திரியைநோக்கி செல்லடித்திருக்கின்றதுநிலைமை மோசமாகப் போகிறதுஎன்பதை விளங்கிய டாக்டர்கள் அருகில் நடமாடிக்கொண்டிருந்தஇயக்கக்காரர்களை ஆஸ்பத்திரியை விட்டு விலகிப் போகச்சொல்லவும்அம்மானின் இயக்கம் அந்த இடத்தை விட்டுப்போயிருக்கின்றது.
 
இப்படி நடந்தபிறகும் இந்திய இராணுவத்தின் கோபம்அடங்கவில்லைஆஸ்பத்திரி வளாகத்தைச்சுற்றிவளைத்திருக்கின்றதுபின்னேரம் இரண்டரை மணியளவில்ஆமி ஆஸ்பத்திரி வளாகத்தை நோக்கிச் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கின்றது. ஆஸ்பத்திரிக்குப் போன தேவகிஅக்கா உள்ளிட்ட அனைவரும் எப்படியாவது வெளியே தப்பிவந்துவிடவேண்டுமென அவதிப்பட்டிருக்கின்றனர்ஆனால்வெளியே போவதற்கான நிலைமை சுமூகமாகவில்லை.
 
ஆஸ்பத்திரிக்குள் நடந்த கோரதாண்டவத்தை அறிய அடுத்த நாள்மதியம் வரை நாங்கள் காத்திருக்கவேண்டியிருந்ததுஅந்த செய்திநமது ஊரை வந்தடைந்தபோது ஊரே அலறித்துடிக்கத்தொடங்கியிருந்ததுபெரியம்மாவும்அம்மாவும் குழறியதைப்பார்த்த பயத்தில் நான் சுவாமி அறையின் மூலையில் போய்பல்லியைப் போல ஒடுங்கினேன். என்ன நடந்ததென முழுதாய்அறியாமலேஎன் உடல் நடுங்கத் தொடங்கியிருந்தது.
 
சுரேஷ் அண்ணாவின் ஓலம் எங்கள் வீடுகளின் கதவுகளில் அறைந்துஎழும்பியபோதுமுதன்முதலாக பெரியவர்கள் உபயோகிக்கும்கெட்டவார்த்தையை வைரவருக்குச் சொல்லித் திட்டினேன்.
 
அன்று தேவகி அக்காவோடு நானும் கூடவே போயிருந்தால்ஒருமுறை திரி ஸ்டார்காரர்களிடமிருந்து சுரேஷ் அண்ணாவைநிலத்தில் விழுந்து புரண்டு அழுது காப்பாற்றியதுபோல தேவகிஅக்காவையும்சுட்டுக்கொன்ற இந்திய இராணுவத்தின் கால்களில்விழுந்தாவது காப்பாற்றியிருக்கலாம் என்று என் இயலாமையைநினைத்துநானும் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினேன்.
 
இவ்வாறுதான் இயக்கங்களில் இணைந்து ‘தீவிரவாதிகள் ஆகும்அநேக குழந்தைகளின் கதைகள் ஆரம்பிக்கின்றன.
 
……………………..
 
('அம்ருதா' - மார்கழி, 2018)
(புகைப்படங்கள்: ஜெயந்தன் நடராஜா)

 

 

http://djthamilan.blogspot.com/2018/12/blog-post_28.html?m=1

 

  • கருத்துக்கள உறவுகள்

போர் நடக்கும் பூமியில் பூத்த ஒரு மொட்டு மலரும் முன்பே கருக்கடிக்கப் பட்டு விட்டது......!  🙂 

எல்லாவற்றையும் ஒருமுறை கண்முன்னே கொண்டுவந்து சென்றுள்ளார். யதார்த்தமான எழுத்து நடை. இணைப்புக்கு நன்றி கிருபன்.

கதை போன்று தெரியும் கதையல்லாத கதை இது. முடிவு கலங்க வைத்துவிட்டது. குழந்தை போராளிகள் என்று சர்வதேசம் சொல்லிய குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் அவர்கள் ஏன் குழந்தை போராளிகள் ஆகின்றார்கள் என்பதையும் தொட்டுச் செல்கின்றது

இணைப்புக்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீவிரவாதி கதை பற்றிய மூன்று சிறுகுறிப்புகள்

நெற்கொழுதாசன்

தீவிரவாதி:

 இளங்கோ எழுதியிருக்கிறார். இளங்கோ எல்லோராலும் அறியப்பட்டஎழுத்தாளர். ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகஎழுதுகிறார். இவரது சிறுகதைகளை முதலும் வாசித்திருக்கிறேன். எப்படிஒருவர் தீவிரவாதி ஆக்கப்படுகிறார் என்ற கோணத்தில் பார்க்கப்படும்கதை. ஒவ்வொருவருக்கும் நிகழ்ந்த கதை. முன் சொன்ன கதையில் அகதிஉருவாகுவதும் இந்தக் கதையில் தீவிரவாதி உருவாகுவதும் ஒரு கம்பின்இரு முனைகள். இதிலும் வரலாற்று சம்பவங்கள் உண்டு. ஆங்காங்கேதமிழ் இயக்கங்களை அவற்றின் பாத்திரமாகவே எழுதுகிறார். அதிலும்சோஷலிச தமிழீழம் அமைப்போம் என்ற கோஷத்துடன் வருபவர்கள் பற்றியகுறிப்புக்கள் என ஒரு அமர்க்களமான கதை. காதலுக்கு தூது செல்வதும்அதன் மூலம் இனிப்புகள் முட்டாசி, ரொபி என வேண்டி சாப்பிடுவதும் ( எங்களுக்கெல்லாம் எள்ளுப்பாகு, ஏக்னா, கண்டோஸ் வேண்டிதாந்தாங்கள் ) அந்த சிறுபராயத்துக்கே அழைத்து செல்கிறது. இறுதியில்இந்திய இராணுவம் நிகழ்த்திய யாழ் போதனாவைத்தியசாலைபடுகொலைகளை பதிவு செய்தும் இருக்கிறது. பட்டிக்காட்டானுக்குமுட்டாசிக் கடை காட்டியது போல இப்பவும் சிலர் சொல்கிறார்கள்"தீவிரவாதியென "யென என்றும் சொல்லலாம். என்று முடிகிறது.

 

தளவாய் சுந்தரம்

இன்றுதான் உங்கள் கதையைப் படித்தேன். முதல் ஒன்றிரண்டு பாராக்கள்சுவாரஸியம் இல்லாததுபோல் நகர்ந்தாலும் விரைவிலேயே ஈர்க்கத்தொடங்கியது. பல இடங்களில் சிரித்தேன். கடைசியில் உங்கள் ‘ஹேமாஅக்கா’ கதை போலவே மனதைக் கனத்தது. 

ரொம்ப நாட்களுக்குப் பிறகு சிறுகதை எழுதுகிறீர்கள் எனநினைக்கிறேன். கதையைப் படித்து முடித்தபோது, அடிக்கடி எழுதும்படிஉங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தோன்றியது.

வேலைப்பளு காரணமாக நாவலைப் படிப்பதை தள்ளிப் போட்டுவிட்டேன். அதையும் உடனே படித்துவிடுகிறேன்.

 

மைக்கேல்

அற்புதமான கதை. அசோகமித்ரனின் இனிய ஆவி உங்களில் கவிந்திருப்பது, சிறுகதையின் தலையங்கத்தில் இருந்து உள்ளடக்கம்வரை புரிந்தேன். 

***

நிகழ்ந்து கனிந்த துயர வரலாற்றை இப்படித்தான் சொல்ல வேண்டும்.

................................

 

http://djthamilan.blogspot.com/2019/01/blog-post.html?m=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.