Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பலம் - நெற்கொழுதாசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்பலம் - நெற்கொழுதாசன்

 
netkolustory.jpg?fit=1600%2C950&ssl=1
Yulanie 

நீங்கள் புலிகளுக்காக வந்திருந்தால் திரும்பிச் சென்றுவிடுங்கள் என அனுராதபுரச் சிறையருகே வைத்து சிங்களம் மட்டும் பேசுகின்ற இளைஞர்களால் தமிழை மட்டும் பேசுகிறவர்களுக்கு கூறிய நாளில் இந்தக் கதையை எழுத ஆரம்பித்தேன். கதையை எழுதி முடித்த நாளில் பிரபாகரனோடு இயக்கத்தை தொடங்கி அதன் உபதலைவராகவும் இருந்த ராகவன், பிரபாகரனின் போராட்டம் அர்த்தமற்றது என்று ஒரு தொலைக்காட்சியில் சொல்லிக்கொண்டிருந்தார்.
0 0 0

கிணற்றை சுற்றி இருந்த வட்ட கல் கட்டினை முன்வைத்தே பிரச்சனை ஆரம்பமாகியிருந்தது. பொதுக் கிணறுகளுக்கே இப்படியான வட்டக்கல் கட்டினை காட்டுவதாக சொல்லிக்கொண்ருந்தார் பொன்னுசாமி. வத்தாக் கிணறு என்று பெயர்பெற்ற அந்தக் கிணற்றை தனது என சொல்லித்திரிந்த தில்லையம்பலம், பகிரங்கமாக உரிமை கோரத்தொடங்கிய அந்தநாள் ‘முடிந்தால் கிளிநொச்சியை இராணுவத்தினர் கைப்பற்றிப் பார்க்கட்டும்’ என அரசியல்துறைப் பொறுப்பாளராக்கப்பட்ட காவல்துறை நடேசன் அறிவித்தல் விடுத்த நாளாக இருந்தது.

கோடைகாலப் பருவ செய்கைகளுக்காக அரசநிதியில் இந்தக் கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், இதேபோல பல கிணறுகள் அன்றைய கமத்தொழில் அமைச்சரால் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் அமைக்கப்பட்டதாக பொன்னுசாமி அந்தக் கிணற்று மேட்டுநிலத்தில் நின்று ஊரவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். இந்த பொன்னுசாமிக்கு ஊரில் இன்னொரு பெயரும் இருக்கிறது அது ‘வந்தான் வரத்தான்’.

பொன்னுசாமியின் தந்தை திருக்கோணமலை பிரித்தானிய கடற்படை தளத்தில் வேலை செய்து வந்திருந்தார். அவர்கள் அந்த தளத்தை மூடிய போது வேறு போக்குகிடமின்றி தந்தையார் எட்டு வயதேயான அவருடன் இந்த கிராமத்தை வந்தடைந்திருந்தார். பொன்னுசாமியை பொறுத்தவரை அந்த ஊர்தான் அவரது ஊர். ஆனால் இன்றுவரை அவரால் அந்த ஊரவன் ஆகிவிட முடியவில்லை. அந்த ஊரவன் ஆகியிருந்தால், குறைந்த பட்சம் கோவிலிலோ, நூலகத்திலோ, பாலர் பாடசாலையிலோ ஒருமுறையாவது தலைவராக இல்லாவிடினும் ஒரு உறுப்பினராகவேனும் இருந்திருப்பார். ஆனால் இன்றுவரை ஊரின் பொது அமைப்புகளிலெல்லாம் ஒரு எடுபிடியாகவே இருந்து வருகிறார். சிரமதானத்துக்கும், பொது நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ் கொடுக்கவும், காசு சேர்க்கவும், கூட்டத்திற்கு சொல்லவும்தான் பொன்னுசாமி இன்றுவரை தேவையாக இருக்கிறார். அவரும் ஏதாவது நடந்து தனக்கும் ஒரு பதவி வந்துவிடாதா என்று ஒவ்வொரு முறையும் ஆலாப்பறந்து பார்த்தாலும் விடமாட்டார்கள். யாராவது ஒருவர் எதற்காவது அவர் என்று பெயரை பிரேரித்தாலும் இன்னொருவர் எப்படியோ எழுந்து அதற்கு வேறு ஒருவரை பிரேரிப்பார். வேறு வழியில்லாமல் அவரே மற்றையவரை முன்மொழிந்துவிட்டு அமைதியாக இருந்துவிடுவார்.

 

“சரணடைய முயன்ற மக்கள் மீது விடுதலைப்புலி பயங்கரவாதிகள் சூடு” என இலங்கை அரசு அறிவித்திருப்பதாக லண்டனை தலைமையகமாகக் கொண்டிருக்கும் பிபிசி தன் ஒன்பது பதினைந்து தமிழ்ச் செய்தியறிக்கையில் சொல்லி முடியவும், கருப்பு பெயின்ரையும் டோர்ச் லையிற்றையும் எடுத்துக்கொண்டு வயலை நோக்கி போனதை தில்லையம்பலத்தின் மனைவி ஒருகண் நித்திரையோடு கண்டாள். மறுநாள் வத்தாக் கிணற்றின் சுவரில் ‘ எதிர்வரும் 20/05 க்கு முன்னர் இந்தக் கிணற்றை பாவிக்கும் அனைத்து விவசாயிகளும் நீருக்கான ஒத்தியினை வழக்கறிஞர் எ.கே நடராஜாவிடம் கட்டி அதன் பற்றுச்சிட்டினை பெற்றுக்கொள்ளவும் இப்படிக்கு உரிமையாளர் என்று எழுதி இருந்ததைப் பார்த்தபோதுதான், இரவு கணவன் எழுந்து போன காரியம் புரிந்தது.

“அப்பா, உந்த கிணத்து வேலையெல்லாத்தையும் விடுங்கோ.. அம்மா வேற கவலைப்படுறா. ஊர் சனத்தோட பகைச்சுபோட்டு எக்கணம் ஆருமில்லாமல் தனியா கிடந்தது அந்தரிக்கப்போறியள்” என்று மகன் பாரிஸின் புறநகரான திரான்சியிலிருந்து அழைத்து சொன்னபோது, சிரித்த தில்லையம்பலம், “மகன் நீ என்னை ஆரெண்டு நினைச்சாய். என்ர அப்பன் அந்தக் கிணறு வரேக்கையே வளைச்சுப்போடப் பிளான் பண்ணித்தான் எல்லாம் செய்தவர். அப்புக்காத்துமாரோட திரிஞ்ச அரை அப்புக்காத்தடா என்ர அப்பன். செல்வநாயகம் சைன் வச்சிட்டு வர மாலை போட்டது ஆர் தெரியுமே. செல்வநாயகம் வைச்ச சைன் தான் செல்லாது. என்ர அப்பன் வைச்ச சைன் எல்லாம் எப்பவும் செல்லும் ஓமோ ….உது மட்டுமில்ல இன்னும் கணக்க கிடக்கு விளையாட்டு. இருந்துபார் இந்த காலத்துக்காகத் தான் நான் காத்திருந்தனான் இனிக் காட்டுறேன் தில்லை ஆரெண்டு.” என்றார். 

தில்லையம்பலம் கிணறு தன் காணியில்தான் இருக்கிறது என்று சாடைமாடையாகச் சொல்லிக்கொண்ட அந்த நாட்களில், சந்திரிக்கா பாலபட்டபென்டி தலைமையில் ஒரு பேச்சுவார்த்தைக் குழுவை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பியிருந்தார். உலகம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை அது. விடுதலைப்புலிகளின் “வட்டவை” செயலகத்தில் இருந்து வந்த பொடியன் திருச்சிற்றம்பலத்தின் கையாலேயே தேத்தண்ணி வேண்டிக்குடிச்சுக் கொண்டு “அய்யா கிணறு எல்லோரும் இறைக்கத்தான் கட்டினது. நீங்களும் இறையுங்கோ மற்றைவயளும் இறைப்பினம். எங்களுக்குள்ளையே ஒரு கிணத்துத் தண்ணிக்கு பிரச்சினைப்பட்டால், உங்கா பாருங்கோ பேச்சுவார்த்தை நடக்குது அப்பிடி இதுக்கும் இருத்திவைத்துப் பேசவா முடியும்.” என்றபடி கிளம்பிப் போனான். அவன் போனபின்னும் “பேசவா முடியும்” என்ற சொற்களின் சேர்க்கை ஒலி திருப்ப திருப்ப மூளைக்குள் கேட்டது. பெட்டிக்கோடு போட்ட சட்டை கண்ணுக்கை நின்றது. ‘உது நல்ல சாதியாக இருக்காது. கோதாரி விழுவாங்கள் ஆரோ அள்ளி வைச்சிட்டாங்கள். மாத்தையா இருந்தால் உவருக்கு ஒரு பாடம் படிப்பிச்சிருக்கலாம். சரி சரி போகட்டும்.’ தில்லையம்பலத்தின் இந்த புறுபுறுப்பை கேட்ட மனைவி ‘உந்தாள் இனிச் சரிவராது’ என்று மகனை அன்றைக்கே வெளிநாடு அனுப்பவென்று கொழும்பு கொண்டு சென்றார்.

தில்லையம்பலத்தார் உரிமை கோரிய வைத்தாக் கிணற்றிலிருந்து ஐம்பது ஏக்கருக்கு மேற்பட்ட மேட்டு, பள்ள விவசாய நிலங்களுக்கு நீர் பாச்சுவார்கள். மூன்று மிசின் ஒரே நேரத்தில் வேலை செய்யும். கிணற்றில் நீர்மட்டம் அசையாது. கற்கண்டு தண்ணி. தாகமெடுத்தால் வாய்க்காலில வறதண்ணியை குடிச்சுக் கொண்டே பயிருக்கு தண்ணி பாய்ச்சுவார்கள். எத்தனையோ தடவைகள் அந்த வயலினூடாக நடந்துபோன நான், அதைக் கவனித்திருக்கிறேன்.

பொன்னுசாமிக்கு உள்ளூரில்தான் கொஞ்சம் மரியாதைக் குறைவு. மனுசன் வெளியிடங்களில் பெயர் அடிபட்டவர். அவர் தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் மத்தியகுழு உறுப்பினர், அந்த இயக்கத்தின் தலைவரின் மெய்க்காப்பாளராகவும் இருந்தவர். வடமராச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஊர்வலம் போன ஆட்களை கடடைப்பிராய் சந்தியில் வைச்சு பொபிகுரூப் சுடேக்கை இவருடைய பெயர் சொல்லித் தேடினவங்கள் என்றும், ஊர்வலத்தில் போன மனுசன் விழுந்தடிச்சு வீடு மதில் எல்லாம் ஏறி விழுந்து ஓடி தப்பினார் என்றும் ஊரில் இப்பவும் சொல்லுவார்கள். அன்றைக்கு தான் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் கதைக்க என்று கூப்பிட்டு தாஸையும் இன்னும் நாலுபேரையும் சுட்டவர்கள். அப்பேர்ப்பட்ட பொன்னுசாமியே பொதுக்கிணறு என்று கதைத்துக்கொண்டு நிற்பதைப் பார்த்த சனத்துக்கு கொஞ்சம் புளுகம். உந்த தொடர்புகளால் பிறகு கொஞ்சகாலம் பொன்னுசாமி பொது அலுவல் ஒன்றுக்கும் திரியாமல் இருந்தததையும், பின்னர் யாழ்ப்பாணத்தை ஆமி பிடிச்ச பிறகு அவருடைய பழைய கூட்டாளியள் எலெக்சன் கேட்க வந்தபோது அவரை சந்தித்து திருப்ப இழுத்துவிட்டதையும் நானே கண்டிருக்கிறேன். புலியை ஏகபிரதிநிதி என்று அவையள் எல்லோரும் ஒப்புக்கொண்ட உடனே தன்ர இயக்கக்கத்தையே அழிச்ச, தன்னோட இருந்த தோழரை ரயர் போட்டு கொழுத்தியவங்களை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன் என்று சண்டை பிடிச்ச மனுசன் இன்றைக்கும் என்ர மதிப்பில் உயர்ந்துதான் நிற்கிறார்.

ஒரு கோட்டை சின்னக் கோடு ஆக்கணும் என்றால் அதற்கு பக்கத்தில ஒரு பெரிய கோடு போடணும் என்று நெடுக சொல்லுறவர் தில்லையம்பலத்தார். மனிசி கொழும்பால் வந்த முதல் வாரம், வாசிகசாலையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசுறவையளுக்கு தன்ர வீட்டிலதான் சாப்பாடு என்று அடிச்சு உறுதியாய் சொல்லியிட்டார். வடமராச்சி பொறுப்பாளர் இன்னும் சிறப்பு உரையாளர் என எல்லோரும் வந்த பெரிய கூட்டம் அது. சாப்பாட்டு நேரம் தில்லையம்பலம் சுழன்றுகொண்டு நிற்கிறார். செயலக பொடியன் பம்மிக்கொண்டு தலையை குனிந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார். தம்பியவை வடிவா சாப்பிடுங்கோ, இண்டைக்கு என்றில்லை எப்பவும் இந்த சிற்றம்பலத்தான்ர வீட்டுக்கதவு உங்களுக்கு திறந்துதான் இருக்கும் என்றபடி, வட்டவை பொடியனை பார்த்தார். அவன் அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு சாப்பாட்டை பிணைஞ்சு கொண்டு இருந்ததைப் பார்க்க தில்லையம்பலத்தாருக்கு சந்தோசம் பொங்கியது. அண்டைக்கு நடந்த கூட்டத்தில் தான் பொறுப்பாளர் ஒரு ” அஞ்சு லட்சம் பேர் வாங்கோ, ஒரு லச்சம் பேர் செத்தால்தான் உலகநாடுகள் எங்களைத் திரும்பிப் பார்க்கும். மிச்சம் நாலு லச்சம்பேர் உந்த பலாலி ஆமியை கல்லெறிஞ்சே கலைச்சுடலாம்” என்று அழைப்பு விடுத்தார்.

வத்தாக் கிணற்றுக்கட்டு மாற்றக் கிணறுகள் போல ஒடுங்கியதில்லை. நிலமட்டத்தில் இருந்து நாலடி உயரம். அகலம் இரண்டடி. வயல் கிணறு என்பதால் வத்தலோ தண்ணி அள்ள கப்பியலோ இல்லை. முன்பு சாதாரண கிணறுகளைப் போலத்தான் கட்டு இருந்தது. பின்னர் தில்லையம்பலம்தான் இவ்வளவு அகல உயரத்துடன் கட்டினைக் கட்டினார். அப்படிக் கட்டியதற்கு கூட ஒரு காரணம் இருக்கிறது. அவரின் வயலில் சம்பளத்திற்காக வெங்காயத்துக்கு தண்ணி கட்டிக்கொண்டிருந்தவன், சும்மா தன் பாட்டிலை போன ஹெலிக்கு மண்வெட்டியை தூக்கிக் காட்டி இருக்கிறான். நல்ல மத்தியானம். தண்ணிபட்டு மண்வெட்டி அலகு வெயிலுக்கு மினுங்கி இருக்கிறது. வல்வெட்டித்துறை காம்புக்கு வந்த ஹெலி அவன் தூக்கி காட்டியத்தைப் பார்த்து உயர்ந்து இன்னும் மேலேபோய் இறங்காமல் திரும்பி போய்விட்டது. அடுத்த ஒருமணித்தியாலத்தில் வந்து விழத்தொடங்கியது செல். தொண்டைமானாறு மான்பாஞ்சவெளியில் இருந்து ஒரே செல் வீச்சு. அதில தான் வத்தாக் கிணற்றின் கட்டும் சிதைந்து உடைஞ்சது. அதற்கு சரியாக ஒரு வாரம் முதல் தான் ஈபி ஆர் எல் எப் வல்வெட்டித்துறை முகாமை தாக்கி அழிக்க என்று வந்தார்கள். இது தமது கண்காணிப்பில் இருக்கும் முகாம் நீங்கள் அடிக்க விடமாட்டோம் என்று அப்பகுதிக்கு பொறுப்பாளராக இருந்த அங்கிள் என்கிற செந்தமிழ் அவர்களை திருப்பி அனுப்பி இருந்தார்.

உடைஞ்ச கிணத்துக்கட்டை எல்லோரும் காசு சேர்த்து கட்டுவம் என்றுதான் முதலில் பேசினார்கள். ஒரு சிலர் இப்ப என்ன அவசரம் காசுமில்லை, போகம் முடிய விளைச்சலை வித்துக் கட்டுவம் எனறு சொன்னபோதுதான், தில்லையம்பலம் குறுக்க எழுந்து “இல்லை அது என்ர வேலைக்காரன் செய்தவேலையால தானே உடைஞ்சது நானே கட்டுறன்” என்று பொறுப்பு எடுத்தார். மற்றவர்களும் தங்களின் கைக்காசு போடும் என்று ஒப்புக்கொடுத்திட்டினம். அதுக்குப் பிறகுதான் தில்லையம்பலம் அந்தக் கிணற்றுக்கட்டினை அகல உயரமாகக் கட்டினார். பழைய அடையாளங்களை அழித்து புதிய வடிவில் அதனை கட்டினார். அதுவும் காலமை, பின்னேரம் வயலுக்கு வந்து திரும்புகையில் இருந்து வெத்திலை போட்டுப்போக வசதியாகிப் போனது. காங்கேசன்துறையில் இருந்து இயக்கம் எடுத்துவந்த இரண்டு பௌசர்களை ஆலமர நிழலில் மறைத்து விட்டிருந்தார்கள். அந்த பௌசர்களில் ஒன்றில் இருந்த சீமெந்தை எடுத்துத்தான் தில்லையம்பலம் கட்டி முடித்தவர் என்பது தில்லையம்பலத்தாருக்கும் அவருடன் வேலை செய்தவர்களுக்கும்தான் தெரிந்த இரகசியம்.

கிணற்றினை சுற்றி பத்தடி தூரத்தில் இருக்கும் சிறிய கல் கட்டினை முன் வைத்து இது பொதுக் கிணறுதான் என்று உறுதிப்படுத்த பொன்னுசாமி வேறு ஊர்களில் இருக்கும் சில பொதுக்கிணறுகளை, அரசநிலத்தில் கட்டப்பட்டிருக்கும் நீரேந்து கேணிகளையும் உதாரணமாக காட்டினார். இந்த கிணற்று நீருக்கான ஒத்திப் பணம் கட்டுவதை விடுத்து பொதுக் கிணற்றுக்கு உரிமை கோருவதாக வழக்கினை போடுவம் என்று கூறிய அவர், தன் இயக்கத்தின் தற்போதைய மத்திய குழுத்தலைவர் நல்ல திறமையான வழக்கறிஞர் என்றும் இப்படியான வழக்குகளை தான் அவர் கையாளுவதாகவும் எடுத்துரைத்தார். கூடியிருந்தவர்கள் எல்லோரும் தலையசைக்க, தருமர் மட்டும் எழும்பி “பொறுடாப்பா பொண்ணு, நீ சொன்ன லோயர் உங்கை கோட்டிலே களவெடுத்தவங்களுக்கும் கஞ்சா கடத்துறவங்களுக்கும், காவாலியளுக்கும்தான் சார்பாக கதைக்கிறார் என்று பேப்பர்ல எழுதி இருந்தவர்கள் பிறகு தில்லையம்பலத்தான் காசு கூட குறைய விசுக்கினால் மாறமாட்டார்தானே. எதுக்கும் முன்னெச்சரிக்கை தேவை” என்று இழுத்தவரை, தருமண்ணை உங்களைப் பற்றி எனக்கு தெரியும் என்னைப் பற்றி உங்களுக்கு தெரியும் வாங்கோ அண்ணை ஒருமுறைக்கு இரண்டுதரம் நீங்களும் பேசிப்பாருங்கோ என்று தருமரின் தலையிலும் கட்டிவிட்டார் பொன்னுசாமி.

தருமர் அந்த காலத்திலேயே எஸ் எஸ் ஸி படிச்ச ஆள். அந்தக்காலத்தில் குடி அரசு பத்திரிக்கைக்கு சந்தா கட்டி எடுத்துப் படிச்சவர். ஆள் ஒரு போக்கு என்றுதான் சொல்லுவார்கள். இலங்கை வரலாற்றை திகதி ஆண்டு வாரியாக சொல்லுவார். 2001 ம் ஆண்டு எலக்சன் கேட்கவந்த கூட்டமைப்பினரை மறித்து “1976 இலை இருந்து பார்த்துவாறன் உங்கட கொள்கை என்ன” என்று கேட்டார். அடுத்தநாள் அவர்களுக்கு நாரந்தனையில் ஈபிடிபி வெட்டியதும் பெரியாஸ்பத்திரிக்கு சென்று இரத்தம் கொடுத்து அங்கேயே நின்று அவர்களுக்கு உதவி செய்த ஆள் . ‘தமிழரசுக் கட்சி என்னை வளைச்சுப்போட விதானையார் உத்தியோகம் எடுத்துத் தரல்லாம் என்று சொல்லிப் பார்த்தவை. தருமன் புறங்கையால் விலக்கிப் போட்டு போனவன்’ என்று நெடுக சொல்லுவார். அந்த விதானை பதவிதான் கணேசருக்கு கிடைச்சதாகவும் பேச்சுவாக்கில் மெதுவாக சொல்லுவார். 

உத்தரிச்ச சனமெல்லாம் தரவைக் கடலைக் கடக்கிற நேரத்தில் பின்னால் பெரு நெருப்பும் முன்னால் எக்காளத்தொனியும் தான் கேட்டதாக வவுனியா முகாமிலிருந்த நண்பன் கூறினான் என்றும் , வீணாக வெளிநாடு வந்திட்டன். உங்கை இருந்து நாட்டுக்காக போராடியிருக்கவேணும் பிழை விட்டுட்டன் என்றும் கூறிய மகனை நிமிர்ந்து ஸ்கைப்பில் பார்த்த தில்லையம்பலம் “தம்பி இஞ்சை பார், உனக்கென்ன விசரே, வாயிக்கும் வயித்துக்கும் இல்லாதுகளும், உந்த கழிஞ்ச சாதியளும் தானே இயக்கத்துப் போனதுகள். போய் தொலையட்டும் உவைக்கு இப்படித்தான் நடக்குமென்று எனக்கு அப்பவே தெரியும். நீர் உதையெல்லாம் விட்டுட்டு உழைச்சு கவுரவமா இருக்கிற வழியப் பார். எனக்கும் உங்கையொருக்கா வரணும் உன்னையும் பார்க்க, உந்த நாடுகளையும் பார்க்கத்தான் வேணும் இஞ்சை கொஞ்ச சோலி கிடக்கு முடிச்சிட்டு பாப்பம். பிறகு கொம்மாவோட பேசு” என்றபடி அழைப்பை துண்டித்தவர், “உவற்ற கதையும் ஆளும்.. அடிச்சு, செவிடு கிழிய குடுக்கவேணும். வெளிநாட்டில என்றாப்போல பேசாமல் இருப்பன் என்று எண்ணுறார் போல. எதுக்கும் முதல்ல கிணத்துக்கு ஒரு முடிவு எடுக்கணும்” என நினைத்தவர் நேரே பொன்னுசாமியின் வீட்டுக்குப் போனார்.

“இவனை மட்டும் இந்த விஷயத்தில இருந்து விலக்கியிடச் சொல்லு தங்கச்சி. ஒரு சிக்கலும் இல்லை. இவன் ஏன் இதுக்கை மூக்கை நுழைகிறான். உங்களுக்கு ஒரு காணியும் இல்லை வயலும் இல்லை கிணத்தாலையும் ஒரு பலனும் இல்லை எதுக்கு இப்படி திரியிறான் என்றே விளங்கவில்லை” என்று பொன்னுசாமியின் மனைவியிடம் நயமாக எடுத்து கூறினார். சமாதான காலத்தில் பொன்னுசாமிக்கு இயக்கத்தால் வந்த பிரசனைகளை செல்வாக்கை பயன்படுத்தி தீர்த்துவைத்தவைகளை நினைப்பூட்டியும் விட்டார். எல்லாத்துக்கும் மேலாக தனக்கு ஜே.பி பட்டம் எடுத்துத்தந்தவன் இப்படி செய்யலாமே பிள்ளை. நீயொருக்க சொல்லிவிடு இதுக்கு மேல என்ன கிடக்கு அவன் கேளாட்டி நான் உனக்கு அண்ணரும் இல்லை நீயும் என்ர வீட்டு வாசலுக்கு வராதே என்று ஒரே அடியாக இறக்கி வைத்தார்.

முன்சென்ற அநேக நாள்களில், தில்லையம்பலத்தின் மனைவி தங்கள் தோட்டத்தில் விளைகின்ற கத்தரிக்காய் பயிற்றங்காய் வெண்டிக்காய் போன்றவற்றில் சந்தைக்கு அனுப்பாதவற்றில் கொஞ்சம் பொன்னுசாமி வீட்டுக்கு எடுத்துவந்து கொடுப்பர். இது வாரத்தில் இரண்டு தடவையேனும் நடக்கும் ஒரு வழமையான நிகழ்வு. பொன்னுசாமி கிணற்று விடயத்தில் முழுதாக தலைப்போட்ட பின் மரக்கறி வருவது நின்றுபோனது. ஆனால் அதே கூடைமரக்கறி பொன்னுசாமி வீட்டை தாண்டி பக்கத்து வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தது. அதைப் பார்த்தவருக்கு நினைவுகள் தளம்பி நின்றது. அந்த நாளின் தொடர்சி உடலின் எங்கோ ஒரு மூலையில் இருந்து உயிர்த்து நெட்டுருகியது.

கிணறு ஊரை விலகி வயல்வெளியில் அமைந்திருந்தாலும் அதனைப் பயன்படுத்துபவர்கள் அந்த ஊரை சேர்ந்த வெள்ளாளர் தான். தங்களுக்குள் என்னதான் புடுங்குப்பட்டாலும் ஏனைய சாதியினர் அந்தக் கிணற்றை பயன்படுத்த வந்தால் எல்லோரும் ஒன்று கூடி சண்டைக்கு கிளம்பி விடுவார்கள். வேலை செய்பவர்கள் யாராவது வந்தால் தண்ணி அள்ளிக் கொடுக்கவென்று கிணற்றிடியில் தங்களின் ஆள் ஒருவரை நிறுத்தி வைத்திருப்பார்கள். ஓரு தடவை வேலைக்கு வந்தவர்கள் தண்ணி அள்ளியதாக பிரச்சனை வந்தபோது செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே இடைநிறுத்தி, அவர்களை அனுப்பிவிட்டு நவக்கிரியில் இருந்து ஆட்களை கொண்டுவந்து வேலை செய்தார்கள். தோட்ட வேலைக்கு வருபவர்களுக்கு பெட்டியிலும் போத்திலிலும் அலுமினிய தட்டத்திலும் தான் காலை, மதிய உணவை கொடுப்பார்கள். சில தடவைகள் இப்படியாக சாப்பாடு தேவையில்லை என்று அவர்கள் மறுத்தபோது, சாப்பாட்டை தோட்டத்திலேயே கொட்டிவிட்டு சாப்பாட்டுக்கான பணத்தினை சம்பளத்துடன் சேர்த்து கொடுத்திருக்கிறார்கள். அதன்பிறகு வேலைக்கு வேறு யாரையாவது அழைத்துவிடுவார்கள்.

அன்றும் அப்படித்தான் அலுமினியத்தட்டத்தில் தில்லையம்பலம் சாப்பாடு கொண்டுவர, கந்தன் உதில சாப்பிட ஏலாது அம்பலம் அண்ணை என்று சொல்லி விட்டான். “என்னடா சொல்லுறாய் கந்தா உன்ரசாதி ஆட்களுக்கு இப்படித்தானேடா கொடுக்கிறது சாப்பிடாட்டி விடு” என்றபடி திரும்பிய தில்லையம்பலத்தாரை பார்த்து மண்வெட்டியை தூக்கிப் போட்டுவிட்டு, நீ கள்ளு குடிக்க வா உன்னைக் கவனிக்கிறன்.. எங்கட வீட்டு வாசலில இருந்து கூழும் நண்டும் பொறிச்சு திண்ணேக்கை சாதி தெரியேல்லை… அங்கை உன்ர கொப்பனுக்கு பிள்ளை இருக்கு அதுக்கு சாதி தெரியேல்லை இப்ப நான் அலுமினியத்தில சாப்பிடமாட்டன் என்றவுடனே உனக்கு பத்திப் பிடிக்குதோ என்று கோபத்துடன் கூறினான். இதனை தில்லையம்பலம் எல்லோருக்கும் சொல்லிவிட, ஊர் கூடி கேள்வி கேட்டது. மிரட்டியது. ஒன்றுகூடிய அவர்களின் மிரட்டலால் ஒடுங்கிய கந்தன் புலிகளின் மக்கள் முன்னணியினரிடம் போனபோது அவர்கள் இது “சென்சிஸ்ரிவான பிரச்சனை மெதுவாக தான் சரி செய்ய இயலும். கொஞ்சம் பொறுங்கோ கூப்பிட்டு பேசுறம்” என கூறி திருப்பி அனுப்பியிருந்தனர். கந்தன் நேரே ஈபிஆர்எல்எப் இடம் போய் முறையிட்டர். அவர்கள் கந்தனை சாதி சொல்லி திட்டியவர்களில் முக்கியமான இளைஞர்களை அழைத்துச் சென்று மொட்டை அடித்து எச்சரித்து விடுவித்தனர். அது அவங்களின் சாதி இயக்கம் தானே அப்படித்தான் செய்யும் என்று கூறி, மறுநாள் ஊரில் இருந்த ஏனைய இளைஞர்களும் மொடடை அடித்துக்கொண்டனர். ஊர் பிரச்சனையில் மற்ற இயக்கம் தலையிட்டதாய் அறிந்த புலிகள் கந்தனையும், இளைஞர்களையும் அழைத்து பேசி ஒரு உடன்பாட்டுக்கு கொண்டுவந்தனர். அது, இனி வேலைக்கென்று வருபவர்களுக்கு சாப்பாடோ தண்ணியோ அவர்கள் விரும்பிய மாதிரித்தான் கொடுக்கவேண்டும் என்பதாக இருந்தது. இதை கேள்விப்பட்ட பொன்னுசாமி சந்தியில் நின்று “ஒத்தாராம் உடையார் இடுப்பில சலங்கை கட்டி இவங்களும் இவங்களோட தீர்ப்பும்” என்று திட்டிவிட்டு சென்றார். அன்றிலிருந்து இரண்டு வாரங்களின் பின், ஏனைய இயக்கங்களை தடை செய்வதாக புலிகள் “உத்தியோகபூர்வமாக” அறிவிப்பை செய்தார்கள். அன்றைக்கும் பொன்னுசாமிக்காக தில்லையம்பலம் பக்கத்து வீட்டுக்காரனாய் முன்வந்து பேசினவர்.

அது நோர்வே தலைமையில் சமாதான பேச்சுகள் நடந்த காலமாக இருந்தது. மக்கள் பெருமூச்சு விட முயன்றுகொண்டிருந்த ஒரு அவசரமான காலம். அரசுடன் பேச இலங்கை வரும் நோர்வே பிரதிநிதி அடுத்த கட்டமாக இந்தியா போவார் பின்னர்தான் வேறு எங்காவது இராஜதந்திர சந்திப்புக்களில் ஈடுபடுவார். அவர்கள் அவ்வளவு முக்கியத்துவத்தை இந்தியாவுக்கு கொடுத்திருந்தனர். அந்த நாள்களில் எப்போதாவது ஆங்காங்கே இனம் தெரியாதவர்களால் ஒரு சிலர் சுட்டுக்கொல்லப்படுவதும், இராணுவத்தினரால் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதுமாகவும் இருந்தது. இனம்தெரியாத என்ற போர்வையில் இருந்த இனம்தெரிந்தவர்கள் பொன்னுசாமிக்கும் முதலாவது எச்சரிக்கையை வழங்கினார்கள். தடைசெய்யப்பட்டவர்களோடு அவர் தொடர்பு கொண்டிருந்தார். அவர்களுக்காக வேலை செய்துகொண்டிருக்கிறார் என்பதையே காரணமாக கூறினார்கள். சம்பவத்தினை அறிந்த தில்லையம்பலம், பொன்னுசாமியை அழைத்துக்கொண்டு நேரே பொற்பதி முகாமுக்கு சென்றார். ஒரு மணிநேரத்தில் பொன்னுசாமியின் உயிருக்கு உத்தரவாதமும், இனி எதுவித தொந்தரவுகளும் வராது என்றும் தடைசெய்யப்பட்டவர்கள் என்று யாருமினி இல்லை என்றும் அவர்களும் இனி தமிழீழத்திற்கான போராட்டத்தில் பங்காளர்கள்தான். ஆகவே தொடர்ந்தும் ஆதரவாக இருப்பதோ இல்லாமல் விடுவதோ அவர் விருப்பம். என்றாலும் எங்களுக்கு நேரடியாக உதவி செய்வதே சிறந்தது இதை அண்ணைக்கு எடுத்து சொல்லுங்கோ என்று தில்லையம்பலத்தைப் பார்த்து பொன்னுசாமிக்கு கூறப்பட்டது. ‘அறுவார் கண்ணுக்கு முன்னாலை சுட்டுத் தள்ளிப்போட்டு என்னமாய் கதை சொல்லுறாங்கள்’ நினைத்த பொன்னுசாமி பேசாமல் எழுந்தார். அந்த நாளின் பின் நடைபிணம் போல எல்லாவற்றிலும் விலகி இருந்தாலும் எப்படியோ ஒன்றோடு ஒன்றாக ஒட்டியும் இருந்தார். இப்படியாக உயிரைக் கையில் பிடித்து வைத்திருந்த நாளிலெல்லாம் தில்லையம்பலம் உதவி செய்ததை நினைத்து பெருமூச்செறிந்தவர் அந்த நாள்களில்தான் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொங்குதமிழ் நிகழ்வில் பேசிய புதுவை இரத்தினதுரை யாழ்ப்பாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுக் காலத்தில் அறுநூற்று இரண்டு போராளிகள் வீரச்சாவடைந்தனர் என்றும், அவர்கள் அனைவரும் காட்டிக் கொடுக்கப்பட்டே கொல்லப்பட்டனர் என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தியதையும் தன் நினைவில் கொண்டுவந்தார்.

நாலுபேர் கூடுகின்ற இடங்களிலெல்லாம் தில்லையம்பலம் தன் பக்க நியாயங்களை எடுத்து சொல்லத் தொடங்கினார். “கிணற்றில் இறைக்கவோ தண்ணி எடுக்கவோ வேண்டாம் என்று சொல்லலை தண்ணி கொடுக்காத அளவு கேவலமான ஆள் நானில்லை. சும்மா ஒரு பதிவுக்காக தண்ணிக்கு ஒத்தி கட்ட சொல்லுறன். அதுவும் பெரிய தொகையே இல்லை. வெறும் இருபது ரூபா இரண்டு வருடத்திற்கு. இதுக்கு போய் கோடு, கச்சேரி, வழக்கு என்று லச்சக் கணக்காக செலவு செய்யப் போகினம். சொந்த காசையே விடுவினம் .. உங்களிட அஞ்சு தா பத்து தா என்று வருவினம் .. பேசாமல் இருபது ரூபாவை கட்டிவிட்டு உங்கட அலுவலைப் பார்க்கலாம்” என. இப்படியாக பேசினாலும் தில்லையம்பலத்தாரின் மனதுக்குள் கிணறு கைவிட்டுப் போய் விடுமோ என்று ஒரு சின்ன பயம் உருவாகித் தான் இருந்தது. தனக்குள் அதற்கும் ஒரு தீர்வை தயார்ப்படுத்தி வைத்திருந்தார்.

தாயின் தொடர் வற்புறுத்தலால் தந்தையை சில மாதங்கள் சுற்றுலா விசாவில் பாரிஸுக்கு அழைக்க தேவையான ஆவணங்கள் அனுப்பியிருந்தான். எல்லாவற்றையும் கொண்டு கொழும்புக்கு கிளம்பினார் தில்லையம்பலம். பாஸ்போட் எடுத்து விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு வீடு திரும்பி ஒரு மாதத்தில் உங்களது விசா நிராகரிக்கப்படுகிறது என்ற கடிதம் வீடு வந்து சேர்ந்தது. தில்லையம்பலத்தாரின் மனைவிதான் மிக ஏமார்ந்து போனார். “வெளிநாடுபோய் வந்தால் மனுஷன் கிணற்று பிரச்னையை விட்டுவிடும் என்று நினைச்சன். பார் என்ன நடந்திருக்கு என்று .. உந்த கருணாவே வெளிநாடுபோய் வந்துதானே போராட்டம், சண்டை எல்லாம் வேண்டாம் என்று சொன்னவன் என்று சொல்லுறாங்கள் இந்த மனுசனையும் அனுப்பி எடுத்தால் திருந்திவிடும் என்றெல்லோ நினைசன்” என வாய்விட்டே புலம்பித்தள்ளினார். 

வடமாகாணசபை தேர்தல் அறிவித்தநாளில் கிணற்று நீருக்கான வழக்கினை பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். நீதிபதியொருவர் அரசியல்வாதியாக மாறி மாகாணசபை முதல்வராக பதவி ஏற்ற நாளில் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு ஆரம்பமாயிற்று. வழக்கு முடியும் வரை கிணற்று நீரை எவரும் பாவிக்க கூடாது என தடையுத்தரவை கேட்டுப் பெற்றுக்கொண்டார் தில்லையம்பலம். அதேநாளில் இரணைமடுக்குளத்து நீரை யாழ்ப்பாணம் கொண்டுவருவதற்கான ஒரு பிரேரணையை வடமாகாணசபை நிறைவேற்றியது. கிளிநொச்சியில் மீண்டும் “யாழகற்றி சங்கம்” உருவாக்கப்பட வேண்டும் என்று தன் ஆதரவாளர்களிடம் தனியாகப் பேசத்தொடங்கினார் கிளிநொச்சி தமிழ் எம்பி.

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த வல்வெட்டித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி விஜயரட்னவின் குடும்பத்தினருக்கு மிகச்சிறந்த விருந்து ஒன்றினை ஏற்பாடு செய்தார் தில்லையம்பலம் . பரிஸிலிருந்து மகன் அனுப்பிய உயர்ரக சாராயமும், கொலோனும் மேசையில் பொதி செய்யப்பட்டுக் கிடந்தது. ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அதே மேசையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களிடம் சொன்ன அதே வார்த்தையை அட்சரம் பிசகாமல் மீள உதிர்த்தார் தில்லையம்பலம்.
000

மாத விடுமுறையை எனது நாட்டில் கழிக்கவென்று வந்திருந்த நண்பனையும் அழைத்துக்கொண்டு வத்தாக்கிணற்றினைப் பார்க்க சென்றேன். கிணற்று நீர் பாசி படர்ந்து கிடந்தது. கிணற்றுக் கட்டில் செடிகள் முளைத்து வேர்தள்ளி நின்றது. கிணற்றினைப் பார்த்துக்கொண்டு நிற்பதைக்கண்ட நண்பன், “டேய் இந்தக் கிணற்றையா நீ அம்பலம் என்ற கதையில் எழுதினனி” என்று கேட்டான். மெல்லியதாக புன்னகைத்தேன். அப்ப நீயும் அன்றைக்கு மொட்டை போட்டனியா என்று திருப்பிக்கேட்டான். தரிசாகக் கிடந்த வயல்வெளியை பார்த்துக்கொண்டே ஓம் என்றேன்.

 

 

https://eanil.com/?p=481

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெற்கொழுதாசனின் சிறுகதை பல குறிப்புக்களின் தொகுப்பாக இருக்கின்றது.  பல பாத்திரங்கள், வரலாற்றுச் சம்பவங்கள் வந்துபோகின்றன. தில்லையம்பலம் சில இடங்களில் திருச்சிற்றம்பலமாகின்றார்!

 

ஜெயமோகன் சிறுகதை எழுதுவதைப் பற்றி இப்படிச் சொல்கின்றார்.

சிறுகதையின் வடிவம் என்ன?
=====================

எல்லா கதைகளும் தங்கள் மையத்தை முன்வைப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கும். அதற்காகவே அக்கதைகளில் உள்ள எல்லா கூறுகளும் இயங்கும்.

அப்படி மையத்தை முன்வைக்க உதவாத விஷயங்களை ஒரு கதை சொல்லிக் கொண்டிருக்குமென்றால் ‘சரியான வளவளப்பு”என்று நாம் சொல்வோம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.